ponniyin celvan
of kalki, part 1B
(in tamil script, unicode/utf-8 format)
அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai,India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram,Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan,Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. VinothJagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USAThis webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
.In case of difficulties send an email request to pmadurai AT gmail.com
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devotedto preparation of electronic texts of tamil literary works and to distributethem free on the Internet. Details of Project Madurai are available atthe website
- http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this headerpage is kept intact.
பதினோறாம் அத்தியாயம்
திடும்பிரவேசம்
இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தலமகிமையையன்றி, 'குடந்தை சோதிடராலும் அது புகழ்பெற்றிருந்தது. குடந்தைக்குச் சற்றுத் தூரத்தில் தென்மேற்குத் திசையில் சோழர்களின் இடைக்காலத் தலைநகரமான பழையாறை, வானை அளாவிய அரண்மனைமாடங்களுடனும் ஆலய கோபுரங்களுடனும் கம்பீரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.
பழையாறை அரண்மனைகளில் வசித்த அரச குலத்தினர் அனைவருடைய ஜாதகங்களையும் குடந்தைசோதிடர் சேகரித்து வைத்திருந்தார். அப்படிச் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப் புரட்டித்தான்கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதகத்தை அவர் கண்டெடுத்தார். சிறிது நேரம் ஜாதகத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த பிறகு, சோதிடர் வானதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். திரும்பஜாதகத்தைப் பார்த்தார். இப்படி மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, வாயைத் திறந்துஒன்றும் சொல்லுகிற வழியைக் காணவில்லை.
"என்ன, ஜோசியரே! ஏதாவது சொல்லப் போகிறீரா, இல்லையா?" என்று குந்தவை தேவிகேட்டாள்.
"தாயே! என்னத்தைச் சொல்வது? எப்படிச் சொல்வது? முன் ஒரு தடவை தற்செயலாக இந்தஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன். என்னாலேயே நம்ப முடியவில்லை; இப்படியும் இருக்க முடியுமா என்றுசந்தேகப்பட்டு வைத்து விட்டேன். இப்போது இந்தப் பெண்ணின் திருமுகத்தையும் இந்த ஜாதகத்தையும் சேர்த்துப்பார்க்கும்போது, திகைக்க வேண்டியிருக்கிறது!"
"திகையும்! திகையும்! போதுமானவரை திகைத்துவிட்டு பிறகு ஏதாவது குறிப்பாகச் சொல்லும்!"
"இது மிகவும் அதிர்ஷ்ட ஜாதகம் தாயே! தாங்கள் எதுவும் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று சொல்கிறேன். தங்களுடைய ஜாதகத்தைக் காட்டிலும் கூட, இது ஒருபடி மேலானது. இம்மாதிரி அதிர்ஷ்ட ஜாதகத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை!"
குந்தவை புன்னகை புரிந்தாள்; வானதியோ வெட்கப்பட்டவளாய், "அக்கா! இந்த துரதிர்ஷ்டக்காரியைப் போய் இவர் உலகத்திலேயே இல்லாத அதிர்ஷ்டக்காரி என்கிறாரே! இப்படித்தான் இருக்கும் இவர் சொல்லுவதெல்லாம்!" என்றாள்.
"அம்மா! என்ன சொன்னீர்கள்? நான் சொல்வது தவறானால் என்னுடைய தொழிலையே விட்டுவிடுகிறேன்" என்றார் ஜோதிடர்.
"வேண்டாம், ஜோதிடரே! வேண்டாம் அப்படியெல்லாம் செய்துவிடாதீர். ஏதோ நாலுபேருக்கு நல்ல வார்த்தையாகச் சொல்லிக் கொண்டிரும். ஆனால் வெறுமனே பொதுப்படையாகச் சொல்கிறீரே தவிர, குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லையே? அதனாலேதான் இவள் சந்தேகப்படுகிறாள்!"
"குறிப்பாகச் சொல்ல வேண்டுமா? இதோ சொல்லுகிறேன்! நாலு மாதத்தற்கு முன்னால் அபசகுனம்மாதிரி தோன்றக் கூடிய ஒரு காரியம் நடந்தது. ஏதோ ஒன்று தவறி விழுந்தது; ஆனால் அது உண்மையில்அபசகுனம் இல்லை. அதிலிருந்துதான் இந்தக் கோமகளுக்கு எல்லா அதிர்ஷ்டங்களும் வரப்போகின்றன!"
"வானதி! நான் என்னடி சொன்னேன்? பார்த்தாயா?" என்றாள் குந்தவை தேவி.
"முன்னாலேயே இவருக்கு நீங்கள் சொல்லி வைத்திருகிறீர்கள் போலிருக்கிறது!" என்றாள் வானதி.
"பார்த்தீரா சோதிடரே, இந்தப் பெண்ணின் பேச்சை!"
"பேசட்டும் தாயே! இப்போது எது வேண்டுமானாலும் பேசட்டும்! நாளைக்கு மன்னர் மன்னனை மணந்துகொண்டு..."
"அப்படிச் சொல்லுங்கள். இளம் பெண்களிடம் கலியாணத்தைப் பற்றிப் பேசினால் அல்லவா அவர்கள்சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்?..."
"அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன், தாயே! திடுதிப்பென்று கலியாணப் பேச்சை எடுக்கக் கூடாது அல்லவா? எடுத்தால், இந்தக் கிழவனுக்குப் புத்தி கெட்டுவிட்டது" என்று சொல்லி விடுவார்கள்!"
"இவளுக்குப் புருஷன் எங்கிருந்து வருவான்? எப்போது வருவான்? அவனுக்கு என்ன அடையாளம்? ஜாதகத்திலிருந்து இதையெல்லாம் சொல்ல முடியுமா, ஜோதிடரே!"
"ஆகா! சொல்ல முடியாமல் என்ன? நன்றாய்ச் சொல்ல முடியும்!" என்று கூறிவிட்டு, ஜோதிடர் ஜாதகத்தை மறுபடியும் கவனித்துப் பார்த்தார்.
கவனித்துப் பார்த்தாரோ, அல்லது கவனித்துப் பார்ப்பது போல் அவர் பாசாங்குதான் செய்தாரோ நமக்குத் தெரியாது.
பிறகு, தலைநிமிர்ந்து நோக்கி, "அம்மணி! இந்த இளவரசிக்குக் கணவன் வெகு தூரத்திலிருந்துவரவேண்டியதில்லை. சமீபத்தில் உள்ளவன்தான்; ஆயினும் அந்த வீராதி வீரன் இப்போது இந்நாட்டில்இல்லை. கடல் கடந்து சென்றிருக்கிறான்!" என்றார் ஜோதிடர்.
இதைக் கேட்டதும் குந்தவை, வானதியைப் பார்த்தாள்.
வானதியின் உள்ளத்தில் பொங்கிய உவகையை வள் அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை, முகம் காட்டி விட்டது.
"அப்புறம்? அவன் யார்? என்ன குலம்? தெரிந்துகொள்ள ஏதாவது அடையாளம் உண்டா?"
"நன்றாக உண்டு இந்தப் பெண்ணை மணந்து கொள்ளும் பாக்கியசாலியின் திருக்கரங்களில்சங்கு சக்கர ரேகை இருக்கும், அம்மா!"
மீண்டும் குந்தவை வானதியைப் பார்த்தாள். வானதியின் முகம் கவிந்து பூமியைப் பார்த்துக்கொண்டிருந்தது.
"அப்படியானால், இவளுடைய கைகளிலும் ஏதேனும் அடையாள ரேகை இல்லாமற்போகுமா?"என்றாள் குந்தவைப் பிராட்டி.
"தாயே! இவளுடைய பாதங்களை எப்போதாவது தாங்கள் பார்த்ததுண்டா?.."
"ஏன் ஜோதிடரே! இது என்ன வார்த்தை! இவளுடைய காலைப் பிடிக்கும்படி என்னைச் சொல்கிறீரா?"
"இல்லை; அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை ஆனால் ஒரு காலத்தில் ஆயிரமாயிரம் மன்னர்குலப் பெண்கள், பட்ட மகிஷிகள், அரசிளங்குமரிகள், ராணிகள், மகாராணிகள், இந்தப் பெண்ணரசியின் பாதங்களைத்தொடும் பாக்கியத்துக்காகத் தவம் கிடப்பார்கள் தாயே!"
"அக்கா! இந்த கிழவர் என்னைப் பரிகாசம் செய்கிறார். இதற்காகவா என்னை இங்கே அழைத்துவந்தீர்கள்? எழுந்திருங்கள் போகலாம்!" என்று உண்மையாகவே பொங்கி வந்த போபத்துடன் கூறினாள் வானதி.
"நீ என்னத்துக்குப் பதறுகிறாயடி, பெண்ணே! அவர் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும்..."
"நான் ஏதாவது சொல்லி விடவில்லை; எல்லாம் இந்த ஜாதகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான்சொல்லுகிறேன். 'பாதத்தாமரை' என்று ஏதோ கவிகள் உபசாரமாக வர்ணிப்பார்கள். இந்தப் பெண்ணின்உள்ளங்காலைச் சிறிது காட்டச் சொல்லுங்கள். அதில் செந்தாமரை இதழ்களின் ரேகை கட்டாயம் இருக்கும்."
"போதும்! ஜோதிடரே இவளைப் பற்றி இன்னும் ஏதாவது சொன்னால் என்னைக் கையைப் பிடித்துஇழுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவாள். இவளுக்கு வாய்க்கப் போகும் கணவனைப் பற்றிக் கொஞ்சம்சொல்லுங்கள்..."
"ஆகா! சொல்கிறேன்! இவளைக் கைப்பிடிக்கும் பாக்கியவான் வீராதி வீரனாயிருப்பான்! நூறு நூறு போர்க்களங்களில் முன்னணியில் நின்று வாகை மாலை சூடுவான். மன்னாதி மன்னனாயிருப்பான்; ஆயிரமாயிரம் அரசர்கள் போற்றச் சக்கரவர்த்தியின் சிம்மாசனத்தில் பன்னெடுங் காலம் வீற்றிருப்பான்.
"நீர் சொல்வதை நான் நம்பவில்லை அது எப்படி நடக்க முடியும்?" என்று கேட்ட குந்தவைதேவியின் முகத்திலே ஆர்வமும் மகிழ்ச்சியும் ஐயமும் கவலையும் கலந்து தாண்டவமாடின.
"நானும் நம்பவில்லை. இவர் எதையோ நினைத்துக் கொண்டு பேசுகிறார். இப்படிச் சொன்னால் தங்களுக்குச் சந்தோஷமாயிருக்கும் என்று கூறுகிறார்!" என்றாள் வானதி.
"இன்று நீங்கள் நம்பாவிட்டால் பாதகமில்லை; ஒரு காலத்தில் நம்புவீர்கள் அப்போது இந்த ஏழைச் சோதிடனை மறந்து விடாதீர்கள்.."
"அக்கா! நாம் போகலாமா?" என்று மறுபடி கேட்டாள் வானதி.
அவளுடைய கரிய விழிகளின் ஓரங்களில் இரு கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.
"இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன். அதைக் கேட்டுவிட்டுப் புறப்படுங்கள், இந்த இளவரசியை மணந்து கொள்ளப் போகும் வீரனுக்கு எத்தனை எத்தனையோ அபாயங்களும், கண்டங்களும் ஏற்படும்; பகைவர்கள் பலர் உண்டு..."
"ஐயோ!"
"ஆனால் அவ்வளவு அபாயங்களும் கண்டங்களும் முடிவில் பறந்து போகும்; பகைவர்கள் படுநாசம் அடைவார்கள். இந்தத் தேவியை அடையும் நாயகன் எல்லாத் தடைகளையும் மீறி மகோன்னத பதவியை அடைவான்.... இதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு தாயே! நான் வயதானவன் ஆகையால் உள்ளதை ஒளியாமல் விட்டுச் சொல்கிறேன். இந்தப் பெண்ணின் வயிற்றை நீங்கள் ஒருநாள் பாருங்கள். அதில் ஆலிலையின் ரேகைகள் இல்லாவிட்டால் நான் இந்த ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்..."
"ஆலிலையின் ரேகையில் என்ன விசேஷம் ஜோதிடரே?"
"ஆலிலையின் மேல் பள்ளிகொண்ட பெருமான் யார் என்பது தெரியாதா? அந்த மகாவிஷ்ணுவின் அம்சத்துடன் இவள் வயிற்றில் ஒரு பிள்ளை பிறப்பான். இவளுடைய நாயகனுக்காவது பல இடைஞ்சல்கள், தடங்கல்கள், அபாயங்கள், கண்டங்கள் எல்லாம் உண்டு. ஆனால் இந்தப் பெண்ணின் வயிற்றில் அவதரிக்கப் போகும் குமாரனுக்குத் தடங்கல் என்பதே கிடையாது. அவன் நினைத்ததெல்லாம் கைகூடும்; எடுத்ததெல்லாம் நிறைவேறும், அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்; அவன் கால் வைத்த இடமெல்லாம் அவனுடைய ஆட்சிக்கு உள்ளாகும்; அவன் கண்ணால் பார்த்த இடமெல்லாம் புலிக்கொடி பறக்கும்.தாயே! இவளுடைய குமாரன் நடத்திச் செல்லும் சைன்யங்கள் பொன்னி நதியின் புது வெள்ளத்தைப் போல் எங்கும் தங்குதடையின்றிச் செல்லும். ஜயலக்ஷ்மி அவனுக்குக் கைகட்டி நின்று சேவகம் புரிவாள். அவன் பிறந்த நாட்டின் புகழ் மூவுலகமும் பரவும். அவன் பிறந்த குலத்தின் கீர்த்தி உலகம் உள்ள அளவும் நின்று நிலவும்!..."
இவ்வாறு ஜோதிடர் ஆவேசம் வந்தவர் போல் சொல்லி வந்தபோது குந்தவை தேவி அவருடையமுகத்தையே பார்த்துக் கொண்டு, அவர் கூறிய வார்த்தைகளை ஒன்றுவிடாமல் விழுங்குபவள் போல் கேட்டுக்கொண்டிருந்தாள்.
"அக்கா!" என்ற தீனமான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
"எனக்கு என்னமோ செய்கிறது!" என்று மேலும் தீனமாகக் கூறினாள் வானதி;
திடீரென்று மயங்கித் தரையில் சாய்ந்தாள்.
"ஜோசியரே! சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!" என்று குந்தவை சொல்லிவிட்டு, வானதியைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள்.
சோதிடர் தண்ணீர் கொண்டு வந்தார்; குந்தவை தண்ணீரை வாங்கி வானதியின் முகத்தில் தௌித்தாள்.
"ஒன்றும் நேராது, அம்மா! கவலைப்படாதீர்கள்..." ன்றார் ஜோதிடர்.
"ஒரு கவலையும் இல்லை; இவளுக்கு இது வழக்கம். இந்த மாதிரி இதுவரையில் ஐந்தாறு தடவை ஆகிவிட்டது! சற்றுப் போனால் கண் விழித்து எழுந்திருப்பாள், எழுந்ததும் இது பூலோகமா, கைலாசமா என்று கேட்பாள்!" என்றாள் குந்தவை.
பிறகு சிறிது மெல்லிய குரலில், "ஜோசியரே! முக்கியமாக ஒன்று கேட்பதற்காகவே உங்களிடம் வந்தேன்.நாடு நகரங்களிலே சில காலமாக ஜனங்கள் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களாமே? வானத்தில் சில நாளாக வால் நட்சத்திரம் தோன்றுகிறதே? இதற்கெல்லாம் உண்மையில் ஏதேனும் பொருள் உண்டா? இராஜ்யத்துக்கு ஏதாவது ஆபத்து உண்டா? மாறுதல் குழப்பம் ஏதேனும் ஏற்படுமா?" என்று இளையபிராட்டி கேட்டாள்.
"அதை மட்டும் என்னைக் கேட்காதீர்கள், தாயே! தேசங்கள், இராஜ்யங்கள், இராஜாங்க நிகழ்ச்சிகள் இவற்றுக்கெல்லாம் ஜாதகமும் கிடையாது; ஜோசியமும் சொல்ல முடியாது. நான் பயின்ற வித்தையில் அதெல்லாம் வரவில்லை. ஞானிகளும், ரிஷிகளும், மகான்களும், யோகிகளும் ஒருவேளை ஞான திருஷ்டியில் பார்த்துச் சொல்லலாம். இந்த ஏழைக்கு அந்தச் சக்தி கிடையாது. இராஜரீக காரியங்களில் நாள், நட்சத்திரம், ஜாதகம், ஜோசியம் எல்லாம் சக்தியற்றுப் போய்விடுகின்றன..."
"ஜோசியரே! மிக சாமர்த்தியமாகப் பேசுகிறீர்! இராஜாங்கத்துக்கு ஜாதகம் பார்க்க வேண்டாம். ஆனால் என் தந்தையைப் பற்றியும் சகோதரர்களைப் பற்றியும் பார்த்துச் சொல்லலாம் அல்லவா? அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தால் இராஜாங்க ஜாதகத்தைப் பார்த்ததுபோல் ஆகிவிடும் அல்லவா?"
"சாவகாசமாக இன்னொரு நாள் பார்த்துச் சொல்கிறேன், அம்மா! பொதுவாக, இது குழப்பங்களும் அபாயங்களும் நிறைந்த காலம். எல்லோருமே சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதான்..."
"ஜோசியரே! என் தந்தை, சக்கரவர்த்தி... பழையாறையை விட்டுத் தஞ்சாவூருக்குப்போனதிலிுந்து எனக்கு ஒரே கவலையாயிருக்கிறது."
"முன்னமே சொன்னேனே, தாயே! மகாராஜாவுக்குப் பெரிய கண்டம் இருக்கிறது. தங்கள் குடும்பத்துக்கும் பெரிய அபாயங்கள் இருக்கின்றன. துர்க்காதேவியின் அருள் மகிமையினால் எல்லாம் நிவர்த்தியாகும்."
"அக்கா! நாம் எங்கே இருக்கிறோம்?" என்று வானதியின் தீனக் குரல் கேட்டது.
குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைப்போல் கொட்டி மலர மலர விழித்தாள்.
"கண்மணி! இன்னும் நாம் இந்த பூலோகத்திலேதான் இருக்கிறோம்! சொர்க்க லோகத்துக்கு அழைத்துப் போக புஷ்பக விமானம் இன்னும் வந்து சேரவில்லை. எழுந்திரு! நம்முடைய குதிரை பூட்டிய ரதத்திலேயே ஏறிக் கொண்டு அரண்மனைக்குப் போகலாம்!" என்றாள் குந்தவை.
வானதி எழுந்து உட்கார்ந்து கொண்டு, "நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேனா?" என்றாள்.
"மயக்கம் போடவில்லை; அக்காவின் மடியில் படுத்துக் கொஞ்சம் தூங்கிவிட்டாய்! தாலாட்டுப்கூடப் பாடினேன் உன் காதில் விழவில்லையா?"
"கோபிக்காதீர்கள், அக்கா! என்னை அறியாமலே தலை கிறுகிறுத்து வந்துவிட்டது."
"கிறுகிறுக்கும், கிறுகிறுக்கும்; இந்த ஜோசியர் எனக்கு அப்படி ஜோசியம் சொல்லியிருந்தால் எனக்குக் கூடத்தான் கிறுகிறுத்திருக்கும்."
"அதனால் இல்லை, அக்கா! இவர் சொன்னதையெல்லாம் நான் நம்பிவிட்டேனா?"
"நீ நம்பினாயோ, நம்பவில்லையோ? ஆனால் ஜோசியர் பயந்தே போய்விட்டார்! உன்னைப் போன்ற பயங்கொள்ளியை இனிமேல் எங்கும் அழைத்துப் போகக் கூடாது."
"நான்தான் சோதிடரிடம் வரவில்லையென்று அப்போதே சொன்னேனே! நீங்கள்தானே..?"
"என் குற்றந்தான் எழுந்திரு, போகலாம் வாசல் வரையில் நாலு அடி நடக்க முடியுமா? இல்லாவிட்டால் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு போக வேணுமா?"
"வேண்டாம்! வேண்டாம்! நன்றாய் நடக்க முடியும்."
"சற்றுப் பொறுங்கள், தாயே! தேவியின் பிரசாதம் தருகிறேன், வாங்கிக் கொண்டு போங்கள்" என்று ஜோசியர் சொல்லி விட்டு ஓலைச்சுவடியைக் கட்டத் தொடங்கினார்.
"ஜோசியரே! எனக்கு என்னவெல்லாமோ சொன்னீர்கள்; அக்காவுக்கு ஒன்றுமே சொல்லவில்லையே?"என்று வானதி கூறினாள்.
"அம்மா! இளையபிராட்டிக்கு எல்லாம் சொல்லியிருக்கிறேன் புதிதாக என்ன சொல்ல வேண்டும்?"
"அக்காவை மணந்து கொள்ளப் போகும் வீராதி வீரர்"
"அசகாய சூரர்" என்று குந்தவை குறுக்கிட்டுச் சொன்னாள்.
"சந்தேகம் என்ன?..மகா பராக்கிரமசாலியான இராஜகுமாரர்..."
"முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தியவர்; புத்தியில் பிரகஸ்பதி; வித்தையில் சரஸ்வதி,அழகிலே மன்மதன்; ஆற்றலில் அர்ஜுனன்!"
"இளையபிராட்டிக்கு ஏற்ற அந்த ஸுகுமாரரான இராஜகுமாரர் எங்கிருந்து எப்போது வருவார்?.."
"வருகிறார், தாயே! வருகிறார்! கட்டாயம் வரப்போகிறார் அதி சீக்கிரத்திலேயே வருவார்."
"எப்படி வருவார்? குதிரை மேல் வருவாரா? ரதத்தில் ஏறி வருவாரா? யானை மேல் வருவாரா? கால் நடையாக வருவாரா? அல்லது நேரே ஆகாசத்திலிருந்து கூரையைப் பொத்துக் கொண்டு வந்து குதிப்பாரா!" என்று குந்தவைதேவி கேலியாகக் கேட்டாள்.
"அக்கா! குதிரை காலடிச் சத்தம் கேட்கிறது!" என்று வானதி சிறிது பரபரப்புடன் சொன்னாள்.
"ஒருவருக்கும் கேளாதது உனக்கு மாத்திரம் அதிசயமாய்க் கேட்கும்!"
"இல்லை, வேடிக்கைக்குக் சொல்லவில்லை இதோ கேளுங்கள்!"
உண்மையாகவே அப்போது வீதியில் குதிரை ஒன்று விரைந்து வரும் காலடிச் சத்தம் கேட்டது.
"கேட்டால் என்னடி? குடந்தைப் பட்டணத்தின் வீதிகளில் குதிரை போகாமலா இருக்கும்?" என்றாள் குந்தவை.
"இல்லை; இங்கே வருகிறது மாதிரி தோன்றியது!"
"உனக்கு ஏதாவது விசித்திரமாகத் தோன்றம் எழுந்திரு, போகலாம்!"
இச்சமயத்தில் அந்த வீட்டின் வாசலில் ஏதோ குழப்பமான சப்தம் கேட்டது; குரல் ஒலிகளும்கேட்டன.
"இதுதானே ஜோசியர் வீடு?"
"ஆமாம்; நீ யார்?"
"ஜோசியர் இருக்கிறாரா?"
"உள்ளே போகக் கூடாது?"
"அப்படித்தான் போவேன்!"
"விடமாட்டேன்"
"ஜோசியரைப் பார்க்க வேண்டும்"
"அப்புறம் வா"
"அப்புறம் வர முடியாது; எனக்கு மிக்க அவசரம்!"
"அடே! அடே! நில்! நில்!"
"சற்று! விலகிப்போ! தடுத்தாயோ கொன்றுவிடுவேன்..."
"ஐயா! ஐயா! வேண்டாம்! உள்ளே போக வேண்டாம்!"
இத்தகைய குழப்பமான கூச்சல் நெருங்கி நெருங்கிக் கேட்டது; படார் என்று வாசற் கதவு திறந்தது. அவ்வளவு பிரமாதமான தடபுடலுடன் ஒரு வாலிபன் உள்ளே திடும்பிரவேசமாக வந்தான். அவனைப் பின்னாலிருந்து தோள்களைப் பிடித்து இழுக்க ஒருவன் முயன்று கொண்டிருந்தான். வாலிபன் திமிறிக் கொண்டு வாசற்படியைக் கடந்து உள்ளே வந்தான். வந்த வாலிபன் யார் என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள் நமது வீரன் வந்தியத்தேவன் தான்!. வீட்டுக்குள்ளே இருந்த மூன்று பேருடைய கண்களும் ஏக காலத்தில் அவ்வீரனைப் பார்த்தன.
வந்தியத்தேவனும் உள்ளிருந்தவர்களைப் பார்த்தான். இல்லை; உள்ளேயிருந்தவர்களில் ஒருவரைத்தான் பார்த்தான். அதுகூட இல்லை; குந்தவை தேவியை அவன் முழுமையாகப் பார்க்கவில்லை.அவளுடைய பொன்முகத்தை மட்டுமே பார்த்தான். முகத்தையாவது முழுமையும் பார்த்தானோ என்றால், அதுவும் இல்லை!வியப்பினால் சிறிது விரிந்திருந்த அவளுடைய பவளச் செவ்வாயின் இதழ்களைப் பார்த்தான்; கம்பீரமும்வியப்பும் குறும்புச் சிரிப்பும் ததும்பியிருந்த அவளுடைய அகன்ற கண்களைப் பார்த்தான். கண்ணிமைகளையும்கரிய புருவங்களையும் பார்த்தான்; குங்குமச் சிவப்பான குழிந்த கன்னங்களைப் பார்த்தான். சங்கையொத்தவழுவழுப்பான கழுத்தைப் பார்த்தான். இவ்வளவையும் ஒரே சமயத்தில் தனி தனியாகப் பார்த்தான். தனித்தனியாக அவை அவன் மனத்தில் பதிந்தன.
இதெல்லாம் சில விநாடி நேரந்தான், உடனே சட்டென்று திரும்பிச் சோதிடருடைய சீடனைநோக்கி, "ஏனப்பா, உள்ளே பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று நீ சொல்லக் கூடாது? சொல்லியிருந்தால் நான் இப்படி வந்திருப்பேனா?" என்று கேட்டுக் கொண்டே சீடனை மறுபக்கம் தள்ளிக் கொண்டு வாசற்படியை மீண்டும் கடந்தான். ஆயினும் வௌியில் போவதற்குள் இன்னும் ஒரு தடவை குந்தவைதேவியைத் திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போனான்.
"அடே அப்பா! புயல் அடித்து ஓய்ந்தது போல் அல்லவா இருக்கிறது?" என்றாள் குந்தவைப் பிராட்டி.
"இன்னும் ஓய்ந்தபாடில்லை; அதோ கேளுங்கள்!" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.
வாசலில் இன்னமும் வந்தியத்தேவனுக்கும் சோதிடரின் சீடனுக்கும் தர்க்கம் நடந்து கொண்டிருந்தது.
"ஜோசியரே! இவர் யார்?" என்றாள் குந்தவை.
"தெரியாது, தாயே! யாரோ அசலூர்க்காரர் மாதிரி இருக்கிறது. பெரிய முரட்டுப் பிள்ளையென்று தோன்றுகிறது."
குந்தவை திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு கலகலவென்று சிரித்தாள்.
"எதற்காக அக்கா சிரிக்கிறீர்கள்?"
"எதற்காகவா? எனக்கு வரப்போகும் மணாளன் குதிரையில் வரப் போகிறானா, யானையில் வரப்போகிறானா, அல்லது கூரை வழியாக வந்து குதிக்கப் போகிறானா என்று பேசிக் கொண்டிருந்தோமே, அதைநினைத்துக் கொண்டு சிரித்தேன்!"
இப்போது வானதிக்கும் சிரிப்புத் தாங்க முடியாமல் வந்தது. இருவருடைய சிரிப்பும் கலந்து அலை அலையாக எழுந்தது.வௌியில் எழுந்த சச்சரவுச் சப்தங்கூட இந்த இரு மங்கையரின் சிரிப்பின் ஒலியில் அடங்கிவிட்டது.
சோதிடர் மௌன சிந்தனையில் ஆழ்ந்தவராய், அரச குமாரிகள் இருவருக்கும் குங்குமம்கொடுத்தார். பெற்றுக் கொண்டு இருவரும் எழுந்தனர்; வீட்டுக்கு வௌியில் சென்றனர். சோதிடரும் கூடவந்தார்.
வீட்டு வாசலில் சிறிது ஒதுங்கி நின்ற வந்தியத்தேவன், பெண்மணிகளைப் பார்த்ததும், "மன்னிக்க வேண்டும்.உள்ளே பெண்கள் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்திசாலி சொல்லவில்லை. ஆகையினால்தான் அப்படி அவசரமாக வந்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டும்!" என்று உரத்த குரலில் சொன்னான்.
குந்தவை மலர்ந்த முகத்துடன் குறும்பும் கேலியும் மிடுக்கும் ததும்பிய கண்களினால் வந்தியத்தேவனைஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தாள். ஒரு வார்த்தையும் மறுமொழி சொல்லவில்லை. வானதியை ஒருகையினால் பிடித்து இழுத்துக் கொண்டு ரதம் நின்ற ஆலமரத்தடியை நோக்கிச் சென்றாள்.
"குடந்தை நகரத்துப் பெண்களுக்கு மரியாதையே தெரியாது போலிருக்கிறது. ஏதடா ஒரு மனிதன்வலிய வந்து பேசுகிறானே என்பதற்காகவாவது திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பதில் சொல்லக்கூடாதோ?" என்று வந்தியத்தேவன் இரைந்து கூறியது அவர்கள் காதில் விழுந்தது.
ரதத்தில் குதிரையைப் பூட்டிச் சாரதி ஆயத்தமாக நிறுத்தியிருந்தான். இளவரசிகள் இருவரும் ரதத்தில் ஏறிக் கொண்டதும், ரத சாரதியும் முன்னால் ஏறிக் கொண்டான். ரதம் அரிசிலாற்றங்கரையை நோக்கி விரைந்து சென்றது. வந்தியத்தேவன் ரதம் மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான்.
பக்க தலைப்பு
பன்னிரண்டாம் அத்தியாயம்
நந்தினி
கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தைசோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா?
ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு நகரத் தொடங்கியதும்,வந்தியத்தேவனைப் பார்த்து, "தம்பி! உனக்காக் போனால் போகிறது என்று இவனை ஏறவிட்டேன். ஆனால்ஓடத்தில் இருக்கும் வரையில் இவன் அந்த எட்டெழுத்துப் பெயரைச் சொல்லவே கூடாது. சொன்னால், இவனைஇந்தக் கொள்ளிடத்தில் பிடித்துத் தள்ளிவிடச் சொல்லுவேன். ஓடக்காரர்கள் என்னுடைய ஆட்கள்!" என்றார்.
"நம்பி அடிகளே! தங்களுடைய திருச்செவியில் விழுந்ததா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால் நானும் எட்டெழுத்துத் திருநாமத்தைச் சொல்லவில்லை!" என்றார் ஆழ்வார்க்கடியான்.
"சாக்ஷாத் சிவபெருமானுடைய பஞ்சாட்சரத் திருமந்திரத்தைச் சொல்லக் கூடாது என்று இவன் யார் தடை செய்வதற்கு? முடியாது! முடியாது!
கற்றுணைப்பூட்டி கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே!" என்று சைவப் பெரியார் கம்பீர கர்ஜனை செய்தார்.
"நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னு நாமம்!" என்று ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான்.
"சிவ சிவ சிவா!" என்று சைவர் இரண்டு காதிலும் கைவிரலை வைத்து அடைத்துக் கொண்டார்.
ஆழ்வார்க்கடியான் பாட்டை நிறுத்தியதும், சைவர் காதில் வைத்திருந்த விரல்களை எடுத்தார்.
ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனைப் பார்த்து, "தம்பி!" நீயே அந்த வீர சைவரைக் கொஞ்சம்கேள். இவர் திருமாலின் பெயரைக் கேட்பதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறாரே? ஸரீரங்கத்தில்பள்ளிகொண்டிருக்கும் பெருமாளின் பாத கமலங்களை அலம்பி விட்டுத் தான் இந்தக் கொள்ளிட நதி கீழேவருகிறது. பெருமாளின் பாதம்பட்ட தீர்த்தம் புண்ணிய தீர்த்தம் என்றுதானே சிவபெருமான் திருவானைக்காவலில் அந்தக் தண்ணீரிலேயே முழுகித் தவம் செய்கிறார்?" என்று சொல்லுவதற்குள்ளே சைவப் பெரியார்மிக வெகுண்டு ஆழ்வார்க்கடியான் மீது பாய்ந்தார். படகில் ஓரத்தில் இரண்டு பேரும் கைகலக்கவே, படகுகவிழ்ந்துவிடும் போலிருந்தது. ஓடக்காரர்களும் வந்தியத்தேவனும் குறுக்கிட்டு அவர்களை விலக்கினார்கள்.
"பக்த சிரோமணிகளே! நீங்கள் இருவரும் இந்தக் கொள்ளிட வெள்ளத்திலே விழுந்து நேரேமோட்சத்துக்குப் போக ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இன்னும் இந்த உலகத்தில்செய்யவேண்டிய காரியங்கள் மிச்சமிருக்கின்றன!" என்றான் வந்தியத்தேவன்.
ஓடக்காரர்களில் ஒருவன், "கொள்ளிடத்தில் விழுந்தால் மோட்சத்துக்குப் போவது நிச்சயமோ, என்னமோ தெரியாது! ஆனால் முதலையின் வயிற்றுக்குள் நிச்சயமாகப் போகலாம்! அதோ பாருங்கள்!" என்றான்.
அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் முதலை ஒன்று பயங்கரமாக வாயைத் திறந்து கொண்டு காணப்பட்டது.
"எனக்கு முதலையைப் பற்றிச் சிறிதும் அச்சம் இல்லை; கஜேந்திரனை ரட்சித்த ஆதிமூலமானநாராயண மூர்த்தி எங்கே போய் விட்டார்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"எங்கே போய்விட்டாரா? பிருந்தாவனத்து கோபிகா ஸ்திரீகளின் சேலைத் தலைப்பில் ஒருவேளை ஒளிந்து கொண்டிருப்பார்!" என்றார் சைவர்.
"அல்லது பத்மாசுரனுக்கு வரங்கொடுத்துவிட்டு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடியது போல் சிவனுக்குஇன்னொரு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம்; அந்தச் சங்கடத்திலிருந்து சிவனைக் காப்பாற்றுவதற்காகத் திருமால்போயிருக்கலாம்" என்றான் நம்பி.
"திரிபுர சம்ஹாரத்தின் போது விஷ்ணு அடைந்த கர்வபங்கம் இந்த வைஷ்ணவனுக்கு ஞாபகம் இல்லை போலிருக்கிறது!" என்றார் சைவப் பெரியார்.
"சுவாமிகளே! நீங்கள் எதற்காகத்தான் இப்படிச் சண்டை போடுகிறீர்களோ, தெரியவில்லை! யாருக்கு எந்தத் தெய்வத்தின் பேரில் பக்தியோ, அந்தத் தெய்வத்தை வழிபடுவதுதானே?" என்றான் வந்தியத்தேவன்.
சைவப் பெரியாரும் ஆழ்வார்க்கடியானும் ஏன் அவ்விதம் சண்டையிட்டார்கள்? வீர நாராயணபுரததில்ஏன் இதே மாதிரியான வாதப் போர் நடந்தது என்பதைப் பற்றி வாசகர்களுக்கு இச்சமயத்தில் சொல்லிவிடுவது உசிதமாயிருக்கும்.
பழந் தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுநூறு வருஷ காலம் பௌத்த மதமும் சமண மதமும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்தச் செல்வாக்கினால் தமிழகம் பல நலங்களை எய்தியது. சிற்பம், சித்திரம், கவிதை, காவியம் முதலிய கலைகள் தழைத்தோங்கின. பின்னர், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றினார்கள். அமுதொழுகும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்களைப் பொழிந்தார்கள். வைஷ்ணவத்தையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்தார்கள். இவர்களுடைய பிரசார முறை மிகச் சக்தி வாய்ந்ததாயிருந்தது. சமயப் பிரசாரத்துக்குச் சிற்பக் கலையுடன் கூட இசைக் கலையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆழ்வார்களின் பாசுரங்களையும் மூவர் தேவாரப் பண்களையும் தேவகானத்தையொத்த இசையில் அமைத்துப் பலர் பாடத் தொடங்கினார்கள். இந்த இசைப் பாடல்கள் கேட்போர் உள்ளங்களைப் பரவசப்படுத்தி, பக்தி வெறியை ஊட்டின. ஆழ்வார்களின் பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலங்களும் மூவரின் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களும் புதிய சிறப்பையும் புனிதத் தன்மையையும் அடைந்தன. அதற்கு முன் செங்கல்லாலும் மரத்தினாலும் கட்டப்பட்டிருந்த ஆலயங்கள் புதுப்பித்துக் கற்றளிகளாகக் கட்டப்பட்டன. இந்தத் திருப்பணியை விஜயாலய சோழன் காலத்திலிருந்து சோழ மன்னர்களும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெகுவாகச் செய்துவந்தார்கள்.
அதே சமயத்தில் கேரள நாட்டில் ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. காலடி என்னுமிடத்தில் ஒருமகான் அவதரித்தார். இளம்பிராயத்தில் அவர் உலகைத் துறந்து சந்நியாசி ஆனார். வடமொழியிலுள்ளசகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டார். வேத உபநிஷதம், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம்,இவற்றின் அடிப்படையில் அத்வைத வேதாந்தக் கொள்கையின் கொடியை நாட்டினார். வடமொழியில்பெற்றிருந்த வித்வத்தின் உதவியினால் பாரததேசம் முழுவதும் திக்விஜயம் செய்து ஆங்காங்கு எட்டு அத்வைதமடங்களை ஸ்தாபனம் செய்தார். இவருடைய கொள்கையை அவலம்பித்த அத்வைத சந்நியாசிகள் நாடெங்கும்பரவிச் சென்றார்கள்.
இவ்விதம் தமிழ்நாட்டில் நம் கதை நடந்த காலத்தில் அதாவது சுமார் 980 வருஷங்களுக்கு (1950ல்எழுதப்பட்டது) முன்பு, பெரியதொரு சமயக் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தக் கொந்தளிப்பிலிருந்துதீங்கு தரும் அம்சங்கள் சிலவும் தோன்றிப் பரவின. வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களும் ஆங்காங்குமுளைத்தார்கள். இவர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சண்டையில் இறங்கினார்கள். இந்த வாதப்போர்களில் சில சமய அத்வைதிகளும் கலந்து கொண்டார்கள். சமய வாதப் போர்களின் சில சமயம் அடிதடிசண்டையாகப் பரிணமித்தன. அந்தக் காலத்து சைவ - வைஷ்ணவப் போரை விளக்கும் அருமையான கதை ஒன்றுஉண்டு.
ஸரீரங்கத்து வைஷ்ணவர் ஒருவர் திருவானைக்காவல் ஆலய வௌிச்சுவரின் ஓரமாகப் போய்க்கொண்டிருந்தார். தலையில் திடீரென்று ஒரு கல் விழுந்தது; காயமாகி இரத்தமும் கசிந்தது. வைஷ்ணவர்அண்ணாந்து பார்த்தார், கோபுரத்தில் ஒரு காக்கை உட்கார்ந்தபடியால் அந்தப் பழைய கோபுரத்தின் கல் இடிந்துவிழுந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். உடனே அவருக்குக் காயமும் வலியும் மறந்து போய் ஒரே குதூகலம்உண்டாகி விட்டது. "ஸரீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே! திருவானைக்காவல் சிவன் கோயிலைநன்றாய் இடித்துத் தள்ளு!" என்றாராம்.
அந்த நாளில் இத்தகைய சைவ - வைஷ்ணவ வேற்றுமை மனப்பான்மை மிகப் பரவியிருந்தது. இதைத் தெரிந்து கொள்ளுதல், பின்னால் இந்தக் கதையைத் தொடர்ந்து படிப்பதற்கு மிக்க அனுகூலமாயிருக்கும்.
ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "நீ நாசமாய்ப்போவாய்!" என்று கடைசி சாபம் கொடுத்து விட்டுத் தம் வழியே போனார்.
வந்தியத்தேவனுடன் வந்த கடம்பூர் வீரன் பக்கத்திலுள்ள திருப்பனந்தாளுக்குச் சென்று குதிரை சம்பாதித்து வருவதாகச் சொல்லிப் போனான். ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஆற்றங்கரையில் அரச மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள். அந்த மரத்தின் விசாலமான அடர்ந்த கிளைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மதுரமான கலகலத்வனி செய்து கொண்டிருந்தன.
வந்தியத்தேவனும், நம்பியும் ஒருவருடைய வாயை ஒருவர் பிடுங்கி ஏதாவது விஷயத்தைக் கிரஹிக்கவிரும்பினார்கள். முதலில் சிறிது நேரம் சுற்றி வளைத்துப் பேசினார்கள்.
"ஏன் தம்பி! கடம்பூர் மாளிகைக்கு என்னை அழைத்துப் போகாமல் விட்டு விட்டுப் போனாயல்லவா?"
"நான் போவதே பெரிய கஷ்டமாகப் போய்விட்டது நம்பிகளே!"
"அப்படியா? பின் எப்படித்தான் போனாய்? ஒருவேளை போகவேயில்லையோ?"
"போனேன், போனேன் ஒரு காரியத்தை உத்தேசித்து விட்டால் பின்வாங்கி விடுவேனோ? வாசற் காவலர்கள் தடுத்தார்கள்; குதிரையை ஒரு தட்டு தட்டி உள்ளே விட்டேன், தடுத்தவர்கள் அத்தனை பேரும் உருண்டு தரையில் விழுந்தார்கள். பிறகு அவர்கள் எழுந்து வந்து என்னைச் சூழ்ந்து கொள்வதற்குள் என் நண்பன் கந்தமாறன் ஓடிவந்து என்னை அழைத்துப் போனான்."
"அப்படித்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன் மிக்க தைரியசாலி நீ. சரி அப்புறம் என்னநடந்தது? யார், யார் வந்திருந்தார்கள்?"
"எத்தனையோ பிரமுகர்கள் வந்திருந்தார்கள், அவர்களுடைய பெயரெல்லாம் எனக்குத் தெரியாது. பழுவேட்டரையர் வந்திருந்தார்; அவருடைய இளம் மனையாளும் வந்திருந்தாள். அப்பப்பா! அந்தப் பெண்ணின் அழகை என்னவென்று சொல்வது?.."
"நீ பார்த்தாயா என்ன?"
"ஆமாம், ார்க்காமலா? என் நண்பன் கந்தமாறன் என்னை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான்; அங்கே பார்த்தேன். அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணிதான் பிரமாத அழகுடன்விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல்பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!"
"அடேயப்பா! ஒரேயடியாக வர்ணிக்கிறாயே? பிறகு என்ன நடந்தது? குரவைக் கூத்து நடந்ததா?"
"நடந்தது, மிகவும் நன்றாயிருந்தது அப்போது உம்மை நினைத்துக் கொண்டேன்."
"எனக்குக் கொடுத்து வைக்கவில்லை அப்புறம் இன்னும் என்ன நடந்தது?"
"வேலனாட்டம் நடந்தது தேவராளனும் தேவராட்டியும் மேடைக்கு வந்து ஆவேசமாக ஆடினார்கள்."
"சந்நதம் வந்ததா? ஏதாவது வாக்குச் சொன்னார்களா?"
"ஆகா! நினைத்த காரியம் கைகூடும்; மழை பெய்யும்; நிலம் விளையும்" என்றெல்லாம் சந்நதக்காரன் சொன்னான்.."
"அவ்வளவுதானா?"
"இன்னும் ஏதோ இராஜாங்க விஷயமாகச் சொன்னான்; நான் அதையொன்றும் கவனிக்கவில்லை."
"அடாடா! இவ்வளவுதானா? கவனித்திருக்க வேண்டும், தம்பி! நீ இளம்பிள்ளை; நல்ல வீரபராக்கிரமம் உடையவனாய்த் தோன்றுகிறாய். இராஜாங்க விஷயங்களைப் பற்றி எங்கேயாவது யாராவதுபேசினால் காதில் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும்."
"நீர் சொல்லுவது உண்மை. எனக்குக் கூட இன்று காலையில் அப்படித்தான் தோன்றியது."
"காலையில் தோன்றுவானேன்?"
"காலையில் கந்தமாறனும் நானும் பேசிக் கொண்டே கொள்ளிடக்கரை வரையில் வந்தோம். இராத்திரி நான் படுத்துத் தூங்கிய பிறகு கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்த விருந்தாளிகள் கூட்டம் போட்டு ஏதேதோ இராஜாங்க விஷயமாகப் பேசினார்களாம்."
"என்ன பேசினார்களாம்?"
"அது எனக்குத் தெரியாது; கந்தமாறன் ஏடாகூடமாகச் சொன்னானே தவிர, தௌிவாகச் சொல்லவில்லை. ஏதோ ஒரு காரியம் சீக்கிரம் நடக்கப் போகிறது அப்போது சொல்கிறேன் என்றான். அவன் பேச்சே மர்மமாயிருந்தது, ஏன் சுவாமிகளே! உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"
"எதைப் பற்றி?"
"நாடு நகரமெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களே? வானத்தில் வால்நட்சத்திரம்காணப்படுகிறது; இராஜாங்கத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது; சோழ சிம்மாசனத்தில் மாறுதல் ஏற்படும்;அப்படி, இப்படி, என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். தொண்டை மண்டலம் வரையில் இந்தப் பேச்சுஎட்டியிருக்கிறது. இன்னும் யார் யாரோ பெரிய கைகள் சேர்ந்து, அடிக்கடி கூடி, அடுத்த பட்டத்துக்கு யார்என்று யோசித்து வருகிறார்களாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அடுத்த பட்டத்துக்கு யார் வரக்கூடும்."
"எனக்கு அதெல்லாம் தெரியாது, தம்பி! இராஜாங்க காரியங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?நான் வைஷ்ணவன்; ஆழ்வார்களின் அடியார்க்கு அடியான்; எனக்குத் தெரிந்த பாசுரங்களைப் பாடிக் கொண்டு ஊர்ஊராய்த் திரிகிறவன்!"
இவ்வாறு ஆழ்வார்க்கடியான் கூறி, "திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று பாடத் தொடங்கவும், வந்தியத்தேவன் குறுக்கிட்டு, "உமக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், நிறுத்தும்!" என்றான்.
"அடடா! தெய்வத் தமிழ்ப் பாசுரத்தை நிறுத்தச் சொல்கிறாயே?"
"ஆழ்வார்க்கடியான் நம்பிகளே! எனக்கு ஒரு சந்தேகம் உதித்திருக்கிறது அதைச் சொல்லட்டுமா?"
"நன்றாய்ச் சொல்லு!"
"தடியைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டீரே?"
"உன்னையா? உன்னை அடிக்க என்னாலே முடியுமா?"
"உம்முடைய வைஷ்ணவம் பக்தி, ஊர்த்தவ புண்டரம், பாசுரப் பாடல், எல்லாம் வெறும் வேஷம் என்றுசந்தேகிக்கிறேன்."
"ஐயையோ! இது என்ன பேச்சு? அபசாரம்! அபசாரம்!"
"அபசாரமும் இல்லை உபசாரமும் இல்லை. உம்முடைய பெண்ணாசையை மறைப்பதற்காக இந்த மாதிரி வேஷம் போடுகிறீர். உம்மை போல் இன்னும் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். பெண்ணாசைப் பித்துப் பிடித்து அலைகிறவர்கள். அப்படி என்னதான் பெண்களிடம் காண்கிறீர்களோ, அதுதான் எனக்குத் தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வெறுப்பாகவே இருக்கிறது."
"தம்பி! பெண் பித்துப் பிடித்து அலைகிறவர்கள் சிலர் உண்டு. ஆனால் அவர்களோடு என்னைச்சேர்க்காதே, நான் வேஷதாரி அல்ல; நீ அவ்விதம் சந்தேகிப்பது ரொம்பத் தவறு."
"அப்படியானால் பல்லக்கில் வந்த அந்தப் பெண்ணிடம் ஓலை கொடுக்கும்படி என்னை ஏன் கேட்டீர்? அதிலும் இன்னொரு மனுஷன் மணம் புரிந்து கொண்ட பெண்ணிடம் மனதைச் செலுத்தலாமா? நீ கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டும் என்று சொன்னதும் அவளைப் பார்ப்பதற்குத்தானே? இல்லை என்று சொல்ல வேண்டாம்!"
"இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீ கூறிய காரணம் தவறு; வேறு தகுந்த காரணம்இருக்கிறது அது பெரிய கதை."
"குதிரை இன்னும் வரக்காணோம். அந்தக் கதையைத்தான் சொல்லுங்களேன்! கேட்கலாம்!"
"கதை என்றால், கற்பனைக் கதை அல்ல; உண்மையாக நடந்த கதை. அதிசய வரலாறு!கேட்டால் திகைத்துப் போவாய்! அவசியம் சொல்லத்தான் வேண்டுமா?"
"இஷ்டமிருந்தால் சொல்லுங்கள்!"
"ஆம், சொல்லுகிறேன் கொஞ்சம் எனக்கு அவசரமாய்ப் போக வேண்டும், இருந்தாலும் சொல்லிவிட்டுப்போகிறேன். மறுபடியும் உன்னிடம் ஏதாவது உதவி கோரும்படியிருந்தாலும் இருக்கும் அப்போது தட்டாமல்செய்வாய் அல்லவா?"
"நியாயமாயிருந்தால் செய்வேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்."
"இல்லையில்லை! உன்னிடம் கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். அந்த இரணியாசுரன் பழுவேட்டரையரின் இளம் மனைவி இருக்கிறாள், நான் ஓலை கொண்டு போகச் சொன்னேனே, அவள் பெயர் நந்தின. அவளுடைய கதையை நீ கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவாய். உலகில் இப்படியும் அக்கிரமம் உண்டா என்று பொங்குவாய்!" இந்த முன்னுரையுடன் ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பற்றி கதையை ஆரம்பித்தான்.
ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். அவனுடைய குடும்பத்தார் பரம பக்தர்களான வைஷ்ணவர்கள். அவனுடைய தந்தை ஒருநாள் நதிக்கரையில் உள்ளநந்தவனத்துக்குப் போனார். அங்கே ஒரு பெண் குழந்தை அனாதையாகக் கிடப்பதைக் கண்டார். குழந்தையைஎடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். குழந்தை களையாகவும் அழகாகவும் இருந்தபடியால் குடும்பத்தார் அன்புடன்போற்றிக் காப்பாற்றினார்கள்.நந்தவனத்தில் அகப்பட்டபடியால் நந்தினி என்று குழந்தைக்குப்பெயரிட்டார்கள். ஆழ்வார்க்கடியான் அப்பெண்ணைத் தன் தங்கை என்று கருதிப் பாராட்டி வந்தான்.
நந்தினிக்குப் பிராயம் வளர்ந்து வந்தது போல் பெருமாளிடம் பக்தியும் வளர்ந்து வந்தது. அவள்மற்றொரு 'ஆண்டாள்' ஆகிப் பக்தர்களையெல்லாம் ஆட்கொள்ளப் போகிறாள் என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள்நம்பினார்கள். இந்த நம்பிக்கை ஆழ்வார்க்கடியானுக்கு அதிகமாயிருந்தது. தந்தை இறந்த பிறகு அப்பெண்ணைவளர்க்கும் பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான். இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப்பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள். நந்தினி துளசிமாலை அணிந்து பக்திப் பரவசத்துடன் பாசுரம்பாடியதைக் கேட்டவர்கள் மதிமயங்கிப் போனார்கள்.
ஒரு சமயம் ஆழ்வார்க்கடியான் திருவேங்கடத்துக்கு யாத்திரை சென்றான். திரும்பி வரக்காலதாமதமாகி விட்டது. அப்போது நந்தினிக்கு ஒரு விபரீதம் நேர்ந்து விட்டது. பாண்டியர்களுக்கும்சோழர்களுக்கும் இறுதிப் பெரும்போர் மதுரைக்கு அருகில் நடந்தது. பாண்டிர் சேனை சர்வ நாசம் அடைந்தது.வீரபாண்டியன் உடம்பெல்லாம் காயங்களுடன் போர்க்களத்தில் விழுந்திருந்தான். அவனுடைய அந்தரங்கஊழியர்கள் சிலர் அவனைக் கண்டுபிடித்து எடுத்து உயிர் தப்புவிக்க முயன்றார்கள். இரவுக்கிரவே,நந்தினியின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பாண்டியனுடைய நிலைமையைக் கண்டு மனமிரங்கி,நந்தினி அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால் சீக்கிரத்தில் சோழ வீரர்கள் அதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். நந்தினியின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு உட்புகுந்து வீரபாண்டியனைக் கொன்றார்கள். அங்கிருந்த நந்தினியின் அழகைக் கண்டு மோகித்துப் பழுவேட்டரையர் அவளைச் சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார்.
இது மூன்று வருஷத்துக்கு முன்னால் நடந்தது. பிறகு ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பார்க்கவேமுடியவில்லை. அன்று முதல் ஒரு தடவையேனும் நந்தினியைத் தனியே சந்தித்துப் பேசவும் அவள் விரும்பினால்அவளை விடுதலை செய்து கொண்டு போகவும் ஆழ்வார்க்கடியான் முயன்று கொண்டிருக்கிறான். இதுவரையில்அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை....
இந்த வரலாற்றைக் கேட்ட வந்தியத்தேவனுடைய உள்ளம் உருகிவிட்டது. கடம்பூர் மாளிகையில்பல்லக்கில் இருந்தது நந்தினி இல்லை என்றும், இளவரசன் மதுராந்தகன் என்றும் ஆழ்வார்க்கடியானிடம் சொல்லிவிடலாமா என்று ஒருகணம் யோசித்தான். பிறகு, ஏதோ ஒன்று மனத்தில் தடை செய்தது. ஒருவேளை இந்தக்கதை முழுதும் ஆழ்வார்க்கடியானின் கற்பனையோ என்று தோன்றியது. ஆகையால் கடம்பூர் மாளிகையில் தான்அறிந்து கொண்ட இரகசியத்தைச் சொல்லவில்லை. அப்போது சற்றுத் தூரத்தில், கடம்பூர் வீரன் குதிரையுடன்வந்து கொண்டிருந்தான்.
"தம்பி! எனக்கு நீ உதவி செய்வாயா?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
"நான் என்ன உதவி செய்ய முடியும்? பழுவேட்டரையர் இந்தச் சோழப் பேரரசையே ஆட்டுவிக்கும் ஆற்றல் உடையவர். நானோ ஒரு செல்வாக்குமில்லாத தன்னந் தனி ஆள். என்னால் என்ன செய்ய முடியும்?" என்று வந்தியத்தேவன் ஜாக்கிரதையாவே பேசினான்.
பிறகு, "நம்பிகளே! இராஜாங்க காரியங்களைப் பற்றி உமக்கு ஒன்றுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள்? சுந்தர சோழ மகாராஜாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், அடுத்தப் பட்டத்துக்கு உரியவர் யார் என்று உம்மால் சொல்ல முடியாதா?" என்றான்.
இப்படிக் கேட்டு விட்டு, அடியானுடைய முகபாவத்தில் ஏதாவது மாறுதல் ஏற்படுகிறதா என்று வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான், லவலேசமும் மாறுதல் ஏற்படவில்லை.
"அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி! குடந்தை ஜோசியரைக் கேட்டால் ஒருவேளைசொல்வார்!" என்றான் நம்பி.
"ஓஹோ! குடந்தை ஜோதிடர் உண்மையிலேயே அவ்வளவு கெட்டிக்காரர்தானா?"
"அசாத்திய கெட்டிக்காரர்! சோதிடமும் பார்த்துச் சொல்வார்; மனதை அறிந்தும் சொல்வார்; உலக விவகாரங்களை அறிந்து, அதற்கேற்பவும் ஆரூடம் சொல்லுவார்!"
"அப்படியானால் அவரைப் பார்த்து விட்டுப் போக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் மனத்தில் தீர்மானித்து கொண்டான்.
ஆதிகாலத்திலிருந்து மனிதகுலத்துக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் பிரமைஇருந்து வருகிறது. அரசர்களுக்கும் அந்தப் பிரமை உண்டு; ஆண்டிகளுக்கும் உண்டு. முற்றும் துறந்த முனிவர்களுக்கும் உண்டு; இல்லறத்தில் உள்ள ஜனங்களுக்கும் உண்டு; அறிவிற் சிறந்த மேதாவிகளுக்கும் உண்டு மூடமதியினர்களுக்கும் உண்டு. இத்தகைய பிரமை, நாடு நகரங்களைக் கடந்து பல அபாயங்களுக்குத் துணிந்து, அரசாங்க அந்தரங்கப் பணியை நிறைவேற்றுவதற்காகப் பிரயாணம் செய்து கொண்டிருந்த நம்முடைய வாலிப வீரனுக்கும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?
பக்க தலைப்பு
பதின்மூன்றாம் அத்தியாயம்
வளர்பிறைச் சந்திரன்
இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்த பிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். தம்முடைய ஆஸ்தான பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்னார்; அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
"தம்பி! நீ யார்? எங்கே வந்தாய்?" என்று கேட்டார், வந்தியத்தேவன் சிரித்தான்.
"என்னப்பா, சிரிக்கிறாய்?"
"இல்லை, தாங்கள் இவ்வளவு பிரபலமான ஜோதிடர் என்னை கேள்வி கேட்கிறீர்களே? நான் யார், எதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று ஜோதிடத்திலேயே பார்த்துக் கொள்ளக் கூடாதா?"
"ஓகோ! அதற்கென்ன? பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு நானே ஜோசியம் பார்த்துக் கொண்டால், தட்சிணை யார் கொடுப்பார்கள் என்றுதான் யோசிக்கிறேன்."
வந்தியத்தேவன் புன்னகை செய்து விட்டு, "ஜோதிடரே! இப்போது இங்கே வந்துவிட்டுப்போனார்களே? அவர்கள் யார்?" என்று கேட்டான்.
"ஓ! அவர்களா? நீ யாரைப் பற்றிக் கேட்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. தெரியும் தம்பி, தெரியும்! நீ என் சீடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது இங்கே இருந்தார்களே, அவர்களைப் பற்றித்தான் கேட்கிறாய், இல்லையா? ரதத்தில் ஏறிக் கொண்டு, பின்னால் புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு போனார்களே, அவர்களைப் பற்றித்தானே?" என்று குடந்தை சோதிடர் சுற்றி வளைத்துக் கேட்டார்.
"ஆமாம், ஆமாம்! அவர்களைப் பற்றித் தான் கேட்டேன்..."
"நன்றாகக் கேள். கேட்க வேண்டாம் என்று யார் சொன்னது? அவர்கள் இரண்டு பேரும் இரண்டுபெண்மணிகள்!"
"அது எனக்கே தெரிந்து போய்விட்டது; ஜோதிடரே! நான் குருடன் இல்லை. ஆண்களையும் பெண்களையும் நான் வித்தியாசம் கண்டு பிடித்து விடுவேன. பெண் வேடம் பூண்ட ஆணாயிருந்தால் கூட எனக்குத் தெரிந்து போய்விடும்."
"பின்னே என்ன கேட்கிறாய்?.."
"பெண்கள் என்றால், அவர்கள் இன்னார், இன்ன ஜாதி.."
"ஓகோ! அதையா கேட்கிறாய்? பெண்களில் பத்மினி, சித்தினி, காந்தர்வி, வித்யாதரிஎன்பதாக நாலு ஜாதிகள் உண்டு. உனக்குச் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் கொஞ்சம் பயிற்சிஇருக்கும் போலிருக்கிறது. அந்த நாலு ஜாதிகளில் இவர்கள் பத்மினி, காந்தர்வி ஜாதிகளைச்சேர்ந்தவர்கள்."
"கடவுளே!..."
"ஏன்? அப்பனே!"
"கடவுளை நான் கூப்பிட்டால், நீங்கள் 'ஏன்?' என்று கேட்கிறீர்களே?"
"அதில் என்ன பிசகு? கடவுள் சர்வாந்தர்யாமி என்று நீ கேட்டதில்லையா? பெரியவர்களுடைய சகவாசம் உனக்கு அவ்வளவாகக் கிடையாது போலிருக்கிறது! எனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான்; உனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான். நீ இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாயே அந்த என் சீடனுக்குள்ளே இருப்பவரும் கடவுள்தான்..."
"போதும், போதும், நிறுத்துங்கள்."
"இத்தனை நேரம் பேசச் சொன்னதும் கடவுள்தான்; இப்போது நிறுத்தச் சொல்வதும் கடவுள்தான்!"
"ஜோதிடரே! இப்போது இங்கேயிருந்து போனார்களே, அந்தப் பெண்கள் யார், எந்த ஊர், என்னகுலம், என்ன பெயர், என்று கேட்டேன். சுற்றி வளைக்காமல் மறுமொழி சொன்னால்.."
"சொன்னால் எனக்கு நீ என்ன தருவாய் அப்பனே!"
"என் வந்தனத்தைத் தருவேன்."
"உன் வந்தனத்தை நீயே வைத்துக்கொள். ஏதாவது பொன்தானம் கொடுப்பதாயிருந்தால் சொல்லு!"
"பொன்தானம் கொடுத்தால் நிச்சயமாய்ச் சொல்லுவீர்களா?"
"அதுவும் சொல்லக்கூடியதாயிருந்தால்தான் சொல்லுவேன்! தம்பி! இதைக் கேள். ஜோதிடன் வீட்டுக்குப் பலரும் வந்து போவார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. இப்போது போனவர்களைப் பற்றி உன்னிடம் சொல்ல மாட்டேன். உன்னைப் பற்றி வேறு யாராவது கேட்டால் அவர்களுக்கும் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேன்."
"ஆகா! ஆழ்வார்க்கடியான்நம்பி தங்களைப் பற்றிச் சொன்னது முற்றும் உண்மைதான்."
"ஆழ்வார்க்கடியாரா? அவர் யார், அப்படி ஒருவர்?"
"தங்களுக்குத் தெரியாதா, என்ன? ரொம்பவும் தங்களைத் தெரிந்தவர்போல் பேசினாரே? ஆழ்வார்க்கடியான் நம்பி என்று கேட்டதேயில்லையா?"
"ஒருவேளை ஆளைத் தெரிந்திருக்கும்; பெயர் ஞாபகம் இராது கொஞ்சம் அடையாளம் சொல்லு, பார்க்கலாம்!"
"கட்டையாயும் குட்டையாயும் இருப்பார், முன் குடுமி வைத்திருப்பார். இளந்தொந்தியில் வேட்டியை இறுக்கிக் கட்டியிருப்பார். சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார். சைவர்களைக் கண்டால் சண்டைக்குப் போவார். அத்வைதிகளைக் கண்டால் தடியைத் தூக்குவார். சற்றுமுன்னால் 'நீயும் கடவுள், நானும் கடவுள்' என்றீர்களே, இதை ஆழ்வார்க்கடியான் கேட்டிருந்தால் 'கடவுளைக் கடவுள் தாக்குகிறது!' என்று சொல்லித் தடியினால் அடிக்க வருவார்..."
"தம்பி! நீ சொல்லுவதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் திருமலையப்பனைப் பற்றிச்சொல்லுகிறாய் போலிருக்கிறது.."
"அவருக்கு அப்படி வெவ்வேறு பெயர்கள் உண்டா?"
"ஊருக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வார் அந்த வீர வைஷ்ணவர்."
"ஆளுக்குத் தகுந்த வேஷமும் போடுவாராக்கும்!"
"ஆகா! சமயத்துக்குத் தகுந்த வேஷமும் போடுவார்."
"சொல்லுவதில் கொஞ்சம் கற்பனையும் பொய்யும் கலந்திருக்குமோ?"
"முக்காலே மூன்றரை வீசம் பொய்யும் கற்பனையும் இருக்கும்; அரை வீசம் உண்மையும்இருக்கலாம்."
"ரொம்பப் பொல்லாத மனிதர் என்று சொல்லுங்கள்!"
"அப்படியும் சொல்லிவிட முடியாது. நல்லவர்க்கு நல்லவர்; பொல்லாதவர்க்குப் பொல்லாதவர்."
"அவருடைய பேச்சை நம்பி ஒன்றும் செய்ய மடியாது."
"நம்புவதும் நம்பாததும் அந்தந்தப் பேச்சைப் பொறுத்திருக்கிறது..."
"உதாரணமாக, தங்களிடம் போய்ச் சோதிடம் கேட்டால் நல்லபடி சொல்லுவீர்கள் என்று அவர்கூறியது..."
"அவர் பேச்சில் அரை வீசம் உண்மையும் இருக்கும் என்றேனே, அந்த அரை வீசத்தில் அதுசேர்ந்தது."
"அப்படியானால் எனக்கு ஏதாவது ஜோதிடம், ஆரூடம் சொல்லுங்கள்; நேரமாகிவிட்டது எனக்குப்போகவேண்டும், ஐயா!"
"அப்படி அவசரமாக எங்கே போக வேண்டும், அப்பனே!"
"அதையும் தாங்கள் ஜோதிடத்தில் பார்த்துச் சொல்லக் கூடாதா? எங்கே போகவேண்டும், எங்கே போகக் கூடாது, போனால் காரியம் சித்தியாகுமா என்பதைப் பற்றியெல்லாந்தான் தங்களைக் கேட்க வந்தேன்."
"ஜோதிடம், ஆரூடம் சொல்வதற்கும் ஏதாவது ஆதாரம் வேண்டும், அப்பனே! ஜாதகம் வேண்டும்;ஜாதகம் இல்லாவிடில், பிறந்தநாள், நட்சத்திரமாவது தெரிய வேண்டும்; அதுவும் தெரியாவிடில், ஊரும்பேருமாவது சொல்ல வேண்டும்".
"என் பெயர் வந்தியத்தேவன்!"
"ஆகா! வாணர் குலத்தவனா?"
"ஆமாம்."
"வல்லவரையன் வந்தியத்தேவனா?"
"சாட்சாத் அவனேதான்."
"அப்படிச் சொல்லு, தம்பி! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? உன் ஜாதகம் கூட என்னிடம் இருந்ததே! தேடிப் பார்த்தால் கிடைக்கும்."
"ஓஹோ! அது எப்படி?"
"என்னைப் போன்ற ஜோதிடர்களுக்கு வேறு என்ன வேலை. பெரிய வம்சத்தில் பிறந்தபிள்ளைகள் - பெண்கள் இவர்களுடைய ஜாதகங்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வோம்".
"நான் அப்படியொன்றும் பெரிய வம்சத்தில் பிறந்தவன் அல்லவே..."
"நன்றாகச் சொன்னாய்! உன்னுடைய குலம் எப்பேர்ப்பட்ட குலம்! வாணர் குலத்தைப் பற்றிக் கவிவாணர்கள் எவ்வளவு கவிகளையெல்லாம் பாடியிருக்கிறார்கள்! ஒருவேளை நீ கேட்டிருக்க மாட்டாய்."
"ஒரு கவிதையைத்தான் சொல்லுங்களேன், கேட்கலாம்."
ஜோதிடர் உடனே பன்வரும் பாடலைச் சொன்னார்:
"வாணன் புகழுரையா வாயுண்டோ மாகதர்கோன் வாணன் பெயரெழுதா மார்புண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு!"
ஜோதிடர் இசைப்புலவர் அல்லவென்பது அவர் பாடும்போது வௌியாயிற்று. ஆயினும் பாடலைப்பண்ணில் அமைத்து மிக விளக்கமாகவும் உருக்கமாகவும் பாடினார்.
"கவி எப்படியிருக்கிறது?" என்று கேட்டார்.
"கவி காதுக்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய கொடியை ஏதாவது ஒரு மாட்டின்கொம்பில் நானே கட்டி விட்டால்தான் உண்டு. அரசமரத்துக் கிளை மேல் ஏறி நின்றால்தான் அரசு என்அடியைத் தாங்கும்; அதுகூடச் சந்தேகம்தான். கனம் தாங்காமல் கிளை முறிந்து என்னையும் கீழே தள்ளினாலும் தள்ளும்!" என்றான் வந்தியத்தேவன்.
"இன்றைக்கு உன் நிலைமை இப்படி; நாளைக்கு எப்படியிருக்கும் என்று யார் கண்டது?" என்றார் ஜோதிடர்.
"தாங்கள் கண்டிருப்பீர்கள் என்று எண்ணியல்லவா வந்தேன்?" என்றான் வல்லவரையன்.
"நான் என்னத்தைக் கண்டேன், தம்பி! எல்லாரையும் போல் நானும் அற்ப ஆயுள் படைத்த மனிதன்தானே? ஆனால் கிரகங்களும் நட்சத்திரங்களும் வருங்கால நிகழ்ச்சிகளைச் சொல்லுகின்றன. அவை சொல்லுவதை நான் சிறிது கண்டறிந்து கேட்பவர்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவுதான்!"
"கிரஹங்களும் நட்சத்திரங்களும் என் விஷயத்தில் என்ன சொல்கின்றன ஜோதிடரே?"
"நீ நாளுக்கு நாள் உயர்வாய் என்று சொல்லுகின்றன."
"சரியாகப் போச்சு! இப்போதுள்ள உயரமே அதிகமாயிருக்கிறது. உங்கள் வீட்டில் நுழையும்போது குனிய வேண்டியிருக்கிறது! இன்னும் உயர்ந்து என்ன செய்வது? இப்படியெல்லாம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பாக ஏதாவது சொல்லுங்கள்."
"நீ ஏதாவது குறிப்பாகக் கேட்டால், நானும் குறிப்பாகச் சொல்லுவேன்."
"நான் தஞ்சாவூருக்கப் போகிற காரியம் கைகூடுமா? சொல்லுங்கள்."
"நீ தஞ்சாவூருக்கு உன் சொந்தக் காரியமாகப் போகிறதானால் போகிற காரியம் கைகூடும். இப்போது உனக்கு ஜயக்கிரகங்கள் உச்சமாயிருக்கின்றன. பிறருடைய காரியமாகப் போவதாயிருந்தால், அந்த மனிதர்களுடைய ஜாதகத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும்!"
வந்தியத்தேவன் தலையை ஆட்டிக் கொண்டு மூக்கின் மேல் விரலை வைத்து, "ஜோதிடரே! தங்களைப்போன்ற சாமர்த்தியசாலியை நான் பார்த்ததேயில்லை!" என்றான்.
"முகஸ்துதி செய்யாதே, தம்பி!" என்றார் ஜோதிடர்.
"இருக்கட்டும். கேட்க வேண்டியதைத் தௌிவாகவே கேட்டு விடுகிறேன். தஞ்சாவூரில்சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்புகிறேன், அது சாத்தியமாகுமா?"
"என்னைவிடப் பெரிய ஜோதிடர்கள் இருவர் தஞ்சாவூரில் இருக்கிறார்கள் அவர்களைதான் கேட்கவேண்டும்."
"அவர்கள் யார்?"
"பெரிய பழுவேட்டரையர் ஒருவர்; சின்ன பழுவேட்டரையர் ஒருவர்."
"சக்கரவர்த்தியின் உடல்நிலை மிக மோசமாகியிருப்பதாகச் சொல்கிறார்களே? அதுஉண்மையா?"
"யாராவது ஏதாவது சொல்லுவார்கள்! சொல்லுவதற்கு என்ன? அதையெல்லாம் நம்பாதே!வௌியிலும் சொல்லாதே!"
"சக்கரவர்த்திக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டம் யாருக்கு என்று சொல்ல முடியுமா?"
"அடுத்த பட்டம் உனக்குமில்லை; எனக்குமில்லை; நாம் ஏன் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டும்?"
"அந்த மட்டில் தப்பிப் பிழைத்தோம்!" என்றான் வந்தியத்தேவன்.
"உண்மைதான், தம்பி! பட்டத்துக்குப் பாத்தியதை என்பது சாதாரண விஷயம் அல்ல; மிக்க அபாயகரமான விஷயம் இல்லையா!"
"ஜோசியரே! தற்சமயம் காஞ்சியில் இருக்கிறாரே, இளவரசர் ஆதித்த கரிகாலர்."
"இருக்கிறார். அவருடைய சார்பாகத்தானே நீ வந்திருக்கிறாய்!"
"கடைசியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள்; சந்தோஷம் அவருடைய யோகம் எப்படி இரக்கிறது."
"ஜாதகம் கைவசம் இல்லை, தம்பி! பார்த்துத்தான் சொல்ல வேண்டும்."
"இளவரசர் மதுராந்தகரின் யோகம் எப்படி?"
"அவருடையது விசித்திரமான ஜாதகம். பெண்களின் ஜாதகத்தை ஒத்தது. எப்போதும் பிறருடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருப்பது..."
"இப்போதுகூடச் சோழ நாட்டில் பெண்ணரசு நடைபெறுவதாகச் சொல்கிறார்களே? அல்லி ராஜ்யத்தைவிட மோசம் என்கிறார்களே?"
"எங்கே தம்பி அப்படிச் சொல்லுகிறார்கள்?"
"கொள்ளிடத்துக்கு வடக்கே சொல்லுகிறார்கள்?"
"பெரிய பழுவேட்டரையர் புதியதாக மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் போலிருக்கிறது."
"நான் கேள்விப்பட்டது வேறு."
"என்ன கேள்விப்பட்டாய்?"
"சக்கரவர்த்தியின் திருக்குமாரி குந்தவைப் பிராட்டிதான் அவ்விதம் பெண்ணரசு செலுத்துவதாகச் சொல்கிறார்கள்!"
ஜோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார். சற்றுமுன் அந்த வீட்டிலிருந்துசென்றது குந்தவை தேவி என்று தெரிந்து கொண்டுதான் அவ்விதம் கேட்கிறானோ என்று முகத்திலிருந்து அறியமுயன்றார். ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.
"சுத்தத் தவறு, தம்பி! சுந்தர சோழ சக்கரவர்த்தி தஞ்சையில் இருக்கிறார், குந்தவைப்பிராட்டி பழையாறையில் இருக்கிறார் மேலும்..."
"மேலும் என்ன? ஏன் நிறுத்தி விட்டீர்கள்?"
"பகலில் பக்கம் பார்த்துப் பேச வேண்டும்; இரவில் அதுவும் பேசக் கூடாது. ஆனாலும் உன்னிடம் சொன்னால் பாதகமில்லை. இப்போது சக்கரவர்த்திக்கு அதிகாரம் ஏது? எல்லா அதிகாரங்களையும் பழுவேட்டரையர்கள் அல்லவா செலுத்துகிறார்கள்!"
இப்படி சொல்லிவிட்டுச் ஜோதிடர் வந்தியத்தேவனுடைய முகத்தை மறுபடியும் ஒரு தடவை கவனமாகப் பார்த்தார்.
"ஜோதிடரே! நான் பழுவேட்டரையரின் ஒற்றன் அல்ல; அப்படிச் சநதேகப்பட வேண்டாம். சற்றுமுன்னால் ராஜ்யங்களும் ராஜவம்சங்களும் நிலைத்து நில்லாமை பற்றிச் சொன்னீர்கள். நான் பிறந்த வாணர்குலத்தையே உதாரணமாகச் சொன்னீர்கள். தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள்; சோழ வம்சத்தின்வருங்காலம் எப்படியிருக்கும்?"
"உண்மையைச் சொல்கிறேன்; சந்தேகம் சிறிதுமின்றிச் சொல்கிறேன். ஆனி மாதக் கடைசியில் காவேரியிலும் காவேரியின் கிளை நதிகளிலும் புதுவெள்ளம் வரும். அப்போது அது நாளுக்கு நாள் பெருகப் போகும் புது வெள்ளம் என்பது காவேரி தீரத்தில் உள்ளவர்களுக்கு நன்றாய்த் தெரியும். ஆவணி, புரட்டாசி வரையிலும் வெள்ளம் பெருகிக் கொண்டுதானிருக்கும். கார்த்திகை, மார்கழியில் வெள்ளம் வடிய ஆரம்பிக்கும். இது வடிகிற வெள்ளம் என்பதும் காவேரிக் கரையில் உள்ளவர்களுக்குத் தெரிந்து போகும். சோழ சாம்ராஜ்யம் இப்போது நாளுக்கு நாள் பெருகும் புதுவெள்ளத்தை ஒத்திருக்கிறது. இன்னும் பல நூறு வருஷம் இது பெருகிப் பரவிக் கொண்டேயிருக்கும். சோழப் பேரரசு இப்போது வளர்பிறைச் சந்திரனாக இருந்து வருகிறது. பௌர்ணமிக்கு இன்னும் பல நாள் இருக்கிறது. ஆகையால் மேலும் மேலும் சோழ மகாராஜ்யம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.."
"இத்தனை நேரம் தங்களுடனே பேசியதற்கு இந்த ஒரு விஷயம் தௌிவாகச் சொல்லி விட்டீர்கள். வந்தனம், இன்னும் ஒரு விஷயம் மட்டும் முடியுமானால் சொல்லுங்கள். எனக்கு கப்பல் ஏறிக் கடற் பிரயாணம்செய்ய வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப நாளாக இருக்கிறது..."
"அந்த விருப்பம் நிச்சயமாகக் கைகூடும்; நீ சகடயோகக்காரன். உன் காலில் சக்கரம் இருப்பது போலவே ஓயாமல் சுற்றிக் கொண்டிருப்பாய். நடந்து போவாய்; குதிரை ஏறிப் போவாய்; யானை மேல் போவாய்; கப்பல் ஏறியும் போவாய்; சீக்கிரமாகவே உனக்குக் கடற் பிரயாணம் செய்யும் யோகம் இருக்கிறது."
"ஐயா! தென்திசைப் படையின் சேனாபதி, தற்சமயம் ஈழத்திலே யுத்தம் நடத்தும் இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றித் தாங்கள் சொல்லக் கூடுமா? கிரஹங்களும் நட்சத்திரங்களும் அவரைப் பற்றி என்ன சொல்லுகின்றன?"
"தம்பி! கப்பலில் பிரயாணம் செய்வோர் திசையறிவதற்கு ஒரு காந்தக் கருவியைஉபயோகிக்கிறார்கள். கலங்கரைவிளக்கங்களும் உபயோகப்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம்விட,நடுக்கடலில் கப்பல் விடும் மாலுமிகளுக்கு உறுதுணையாயிருப்பது எது தெரியுமா? வடதிசையில் அடிவானத்தில்உள்ள துருவ நட்சத்திரந்தான். மற்ற நட்சத்திரங்கள் - கிரஹங்கள் எல்லாம் இடம்பெயர்ந்து போய்க்கொண்டேயிருக்கும். ஸப்தரிஷி மண்டலமும் திசைமாறிப் பிரயாணம் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரம்மட்டும் இடத்தைவிட்டு அசையாமல் இருந்த இடத்திலேயே இருக்கும். அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்றவர்சுந்தர சோழ சக்கரவர்த்தியின் கடைக்குட்டிப் புதல்வரான இளவரசர் அருள்மொழிவர்மர். எதற்கும்நிலைகலங்காத திட சித்தமுடையவர். தியாகம், ஒழுக்கம் முதலிய குணங்களில் போலவேவீரபுருஷத்திலும் சிறந்தவர். கல்வியறிவைப் போலவே உலக அறிவும் படைத்தவர். பார்த்தாலே பசிதீரும் என்று சொல்லக் கூடிய பால்வடியும் களைமுகம் படைத்தவர்; அதிர்ஷ்ட தேவதையின் செல்வப் புதல்வர். மாலுமிகள் துருவ நட்சத்திரத்தைக் குறிகொள்வது போல், வாழ்க்கைக் கடலில் இறங்கும் உன் போன்றவாலிபர்கள் அருள்மொழிவர்மரைக் குறியாக வைத்துக்கொள்வது மிக்க பலன் அளிக்கும்."
"அப்பப்பா! இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றி எவ்வளவெல்லாம் சொல்கிறீர்கள்? காதலனைக்காதலி வர்ணிப்பது போல் அல்லவா வர்ணிக்கிறீர்கள்?"
"தம்பி! காவிரி தீரத்திலுள்ள சோழ நாட்டில் யாரைக் கேட்டாலும் என்னைப் போலத்தான் சொல்வான்."
"மிக்க வந்தனம் ஜோதிடரே! சமயம் நேர்ந்தால் உங்கள் புத்திமதியின்படியே நடப்பேன்."
"உன்னுடைய அதிர்ஷ்டக் கிரகமும் உச்சத்துக்கு வந்திருக்கிறது என்று அறிந்து தான் சொன்னேன்."
"போய் வருகிறேன் ஜோதிடரே. என் மனமார்ந்த வந்தனத்துடன் என்னால் இயன்ற பொன் தனமும் கொஞ்சம் சமர்ப்பிக்கிறேன்; தயவு செய்து பெற்றுக் கொள்ள வேணும்."
இவ்விதம் கூறி, ஐந்து கழஞ்சு பொன் நாணயங்களை வந்தியத்தேவன் சமர்ப்பித்தான்.
"வாணர் குலத்தின் கொடைத்தன்மை இன்னமும் போகவில்லை!" என்று சொல்லிக் கொண்டு ஜோதிடர் பொன்னை எடுத்து கொண்டார்.
பக்க தலைப்பு
பதினான்காம் அத்தியாயம்
ஆற்றங்கரை முதலை
குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவதுகாவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித்தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கேதான் வசதியான துறைகள் இருந்தன.
குடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன், முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான்.வழியில் அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் சோழ நாட்டைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்ததைக்காட்டிலும் அதிகமாகவே அவனைப் பிரமிக்கச் செய்தன. எந்த இனிய காட்சியையும் முதல் முறைபார்க்கும்போது அதன் இனிமை மிகுந்து தோன்றுமல்லவா? பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும்,கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை, கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும்,வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக்கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக்காட்சியித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள்ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்லஉரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரேலென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் மேலும்ஆழமாக உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே,இனிய கிராமிய பாடல்களைப் பாடினார்கள். கரும்புத் தோட்டங்களின் பக்கத்தில் கரும்பு ஆலைகள்அமைத்திருந்தார்கள்.சென்ற ஆண்டில் பயிரிட்ட முற்றிய கருப்பங்கழிகளை வெட்டி அந்தக் கரும்பு ஆலைகளில்கொடுத்துச் சாறு பிழிந்தார்கள். கரும்புச் சாற்றின் மணமும், வெல்லம் காய்ச்சும் மணமும் சேர்ந்து கலந்துவந்து மூக்கைத் தொளைத்தன.
தென்னந்தோப்புகளின் மத்தியில் கீற்று ஓலைகள் வேயப்பட்ட குடிசைகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன.கிராமங்களில் வீட்டு வாசலைச் சுத்தமாக மெழுகிப் பெருக்கித் தரையைக் கண்ணாடி போல்வைத்திருந்தார்கள். சில வீடுகளின் வாசல்களில் நெல் உலரப் போட்டிருந்தார்கள். அந்த நெல்லைக்கோழிகள் வந்து கொத்தித் தின்றுவிட்டு, "கொக்கரக்கோ!" என்று கத்திக் கொண்டு திரும்பிப் போயின.நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. "கோழிஅப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது?" என்று அலட்சியத்துடன் அக்குழந்தைகள் சோழியும்பல்லாங்குழியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிசைகளின் கூரைகளின் வழியாக அடுப்புப் புகை மேலே வந்துகொண்டிருந்தது. அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும்நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிசபட்சணிகளாகவேஇருந்தார்கள். ல்லவரையனும் அப்படித்தான்; எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன.
ஆங்காங்கே சாலை ஓரத்தில் கொல்லர் உலைக்களங்கள் இருந்தன. உலைகளில் நெருப்புத் தணல்தகதகவென்று ஜொலித்தது. இரும்பைப் பட்டறையில் வைத்து அடிக்கும் சத்தம் 'டணார், டணார்' என்று கேட்டது. அந்த உலைக் களங்களில் குடியானவர்களுக்கு வேண்டிய ஏர்க்கொழு, மண்வெட்டி, கடப்பாரை முதலியவற்றுடன்,கத்திகள், கேடயங்கள், வேல்கள், ஈட்டிகள் முதலியன குப்பல் குப்பலாகக் கிடந்தன. அவற்றை வாங்கிக்கொண்டு போகக் குடியானவர்களும் போர் வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு காத்திருந்தார்கள்.
சிறிய கிராமங்களிலும் சின்னஞ்சிறு கோவில்கள் காட்சி அளித்தன. கோவிலுக்குள்ளேசேமக்கலம் அடிக்கும் சத்தமும், நகரா முழங்கும் சத்தமும், மந்திரகோஷமும், தேவாரப் பண்பாடலும் எழுந்தன. மாரியம்மன் முதலிய கிராம தேவதைகளை மஞ்சத்தில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு பூசாரிகள் கரகம் எடுத்துஆடிக் கொண்டும் உடுக்கு அடித்துக் கொண்டும் வந்து நெல் காணிக்கை தண்டினார்கள். கழுத்தில் மணி கட்டியமாடுகளைச் சிறுவர்கள் மேய்ப்பதற்கு ஓட்டிப் போனார்கள். அவர்களில் சிலர் புல்லாங்குழல் வாசித்தார்கள்!
குடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத் தீர மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள்.அப்போது செம்மறியாடுகளைச் சண்டைக்கு ஏவிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். வீட்டுக் கூரைகளின்மேல் பெண் மயில்கள் உட்கார்ந்து கூவ, அதைக் கேட்டு ஆண் மயில்கள் தோகையைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஜிவ்வென்று பறந்துபோய் அப்பெண் மயில்களுக்கு பக்கத்தில் அமர்ந்தன. புறாக்கள் அழகிய கழுத்தைஅசைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றின. பாவம்! கூண்டுகளில் அடைபட்ட கிளிகளும் மைனாக்களும் சோககீதங்கள் இசைத்தன. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் களித்துக் கொண்டு வந்தியத்தேவன்குதிரையை மெல்ல செலுத்திக் கொண்டு சென்றான்.
அவனுடைய கண்களுக்கு நிறைய வேலை இருந்தது. மனமும் இந்தப் பல்வேறு காட்சிகளைப் பார்த்துமகிழ்ந்து கொண்டிருந்தது. ஆயினும் அவன் உள்மனத்திலே இலேசாகப் பனியினால் மூடுண்டது போல், ஒருபெண்ணின் முகம் தெரிந்து கொண்டேயிருந்தது. ஆகா! அந்தப் பெண் அவளுடைய செவ்விதழ்களைத் திறந்துதன்னுடன் சில வார்த்தை பேசியிருக்கக் கூடாதா? பேசியிருந்தால் அவளுக்கு என்ன நஷ்டமாகியிருக்கும்?அந்தப் பெண் யாராயிருக்கும்? யாராயிருந்தாலும் கொஞ்சம் மரியாதை என்பது வேண்டாமா? என்னைப்பார்த்தால் அவ்வளவு அலட்சியம் செய்வதற்குரியவனாகவா தோன்றுகிறது? அந்தப் பெண் யார் என்பதைச்சொல்லாமலே அந்தச் சோதிடக் கிழவன் ஏமாற்றிவிட்டார் அல்லவா! அவர் கெட்டிக்காரர்; அசாத்தியக்கெட்டிக்காரர். பிறருடைய மனத்தை எப்படி ஆழம் பார்த்துக் கொள்கிறார்? எவ்வளவு உலக அனுபவத்துடன்வார்த்தை சொல்லுகிறார்? முக்கியமான விஷயம் ஒன்றும் அவர் சொல்லவில்லைதான்! இராஜாங்க சம்பந்தமானபேச்சுக்களில் அவர் மிகவும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்லாமல் தப்பித்துக் கொண்டார். அல்லதுஎல்லோருக்கும் தெரிந்ததையே விகசித சாதுரியத்துடனே சொல்லிச் சமாளித்துக் கொண்டார். ஆனாலும்தன்னுடைய அதிர்ஷ்ட கிரகங்கள் உச்சத்துக்கு வந்திருப்பதாக நல்ல வார்த்தை சொன்னார் அல்லவா? குடந்தைஜோதிடர் நன்றாயிருக்கட்டும்...
இவ்வாறெல்லாம் சிந்தித்துக் கொண்டு வந்தியத்தேவன் சென்றான். அவ்வப்போது எதிர்ப்பட்டகாட்சிகள் இடையிடையே அவனைச் சிந்தனை உலகத்திலிருந்து இவ்வுலகத்துக்கு இழுத்தன. கடைசியில்அரிசிலாற்றங் கரையை அடைந்தான். சிறிது தூரம் ஆற்றங் கரையோடு சென்றதும், பெண்களின் கைவளைகுலங்கும் சத்தமும், கலகலவென்று சிரிக்கும் ஒலியும் கேட்டன. அவர்கள் இருக்குமிடம் தெரியாமல்அரிசிலாற்றங் கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. எங்கிருந்துஅப்பெண்களின் குரல் ஒலி வருகிறது என்று கண்டுபிடிக்க வந்தியத்தேவன் ஆற்றங்கரை ஓரத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே சென்றான்.
திடீரென்று, "ஐயோ! ஐயோ! முதலை! முதலை! பயமாயிருக்கிறதே!" என்ற அபயக் குரலையும் கேட்டான்.குரல் வந்த திசையை நோக்கிக் குதிரையைத் தட்டி விட்டான். அந்தப் பெண்கள் இருந்த இடம் இரு மரங்களின் இடைவௌி வழியாக அவனுக்குத் தெரிந்தது. அவர்களில் பலருடைய முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அதிசயம்! அதிசயம்! அவர்களிலே இருவர் ஜோதிடர் வீட்டிற்குள்ளே வந்தியத்தேவன் பிரவேசித்ததும் புறப்பட்டுச் சென்றவர்கள்தான். இதையெல்லாம் நொடி நேரத்தில் வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொண்டான். அதை மட்டுமா பார்த்தான்? ஓர் அடர்ந்த நிழல் தரும் பெரிய மரத்தின் அடியில், வேரோடு வேராக, பாதி தரையிலும் பாதி தண்ணீரிலுமாக ஒரு பயங்கரமான முதலை வாயைப் பிளந்து கொண்டிருந்தது. சமீபத்திலேதான் கொள்ளிட நதியில் ஒரு கொடூரமான முதலை வாயைப் பிளந்து கொண்டு வந்ததை வந்தியத்தேவன் பார்த்திருந்தான். முதலை எவ்வளவு பயங்கரமான பிராணி என்பதையும் கேட்டிருந்தான். ஆகவே இந்த முதலையைப் பார்த்ததும் அவன் உள்ளம் கலங்கி, உடல் பதறிப் போனான். ஏனெனில், அந்த முதலை சற்றுமுன் கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வெகு சமீபத்தில் இருந்தது. வாயைப் பிளந்து கொண்டு, கோரமான பற்களைக் காட்டிக் கொண்டு, பயங்கர வடிவத்துடன் இருந்தது. முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான். அந்தப் பெண்களின் கதி அதோகதியாகி விடும்! அந்தப் பெண்களோ, பின்னால் அடர்த்தியாயிருந்த மரங்களினால் தப்பி ஓடுவதற்கும் முடியாத நிலையில் இருந்தார்கள்.
வந்தியத்தேவனுடைய உள்ளம் எவ்வளவு குழம்பியிருந்தாலும் அவன் உறுதி அணுவளவும் குன்றவில்லை. தான் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் ஒரு கணத்துக்கு மேல் சிந்திக்கவில்லை. கையிலிருந்த வேலைக் குறி பார்த்து ஒரே வீச்சாக வீசி எறிந்தான். வேல் முதலையின் கெட்டியானமுதுகில் பாய்ந்து சிறிது உள்ளேயும் சென்று செங்குத்தாக நின்றது. உடனே நமது வீரன் உடைவாளை உருவிக்கொண்டு முதலையை ஒரேயடியாக வேலை தீர்த்துவிடுவது என்ற உறுதியுடன் பாய்ந்து ஓடி வந்தான்.
முன்போலவே, அந்தச் சமயத்தில் அப்பெண்கள் கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் காதுக்கு அது நாராசமாயிருந்தது. இத்தகைய அபாயகரமான வேளையில் எதற்காக அவர்கள்சிரிக்கிறார்கள்? பாய்ந்து ஓடி வந்தவன் ஒரு கணம் திகைத்து நின்றான். அப்பெண்களின் முகங்களைப்பார்த்தான். பயமோ பீதியோ அம்முகங்களில் அவன் காணவில்லை. அதற்கு மாறாகப் பரிகாசச்சிரிப்பின் அறிகுறிகளையே கண்டான்.
சற்றுமுன், "ஐயோ ஐயோ!" என்று கத்தியவர்கள் அவர்கள்தான் என்றே நம்ப முடியவில்லை.
அவர்களில் ஒருத்தி... ஜோதிடர் வீட்டில் தான் பார்த்த பெண் - கம்பீரமான இனிய குரலில், "பெண்களே! சும்மா இருங்கள், எதற்காகச் சிரிக்கிறீர்கள்?" என்று அதட்டும் குரலில் கூறியது கனவில் கேட்பது போல அவன் காதில் விழுந்தது.
முதலையண்டை பாய்ந்து சென்றவன் வாளை ஓங்கியவண்ணம் தயங்கி நின்றான். முதலையை உற்றுப்பார்த்தான்; அந்தப் பெண்களின் முகங்களையும் இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். அவன் உள்ளத்தை வெட்கிமருகச் செய்த, உடலைக் குன்றச் செய்த, ஒரு சந்தேகம் உதித்தது. இதற்குள்ளாக அந்தப் பெண்மணிமற்றவர்களைப் பிரிந்து முன்னால் வந்தாள். முதலைக்கு எதிர்ப்புறத்தில் அதைக் காப்பாற்றுகிறவளைப் போல்நின்றாள்.
"ஐயா! தங்களுக்கு மிக்க வந்தனம் தாங்கள் வீணில் சிரமப்பட வேண்டாம்!" என்றாள்.
பக்க தலைப்பு
பதினைந்தாம் அத்தியாயம்
வானதியின் ஜாலம்
இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தைநகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்னசெய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.
"அடியே, தாரகை!, இந்தக் கொடும்பாளூர்க்காரிக்கு வந்த யோகத்தைப் பாரடி! அவள் பேரில் நம் இளையபிராட்டிக்கு என்னடி இவ்வளவு ஆசை?" என்றாள் ஒருத்தி.
"ஆசையுமில்லை, ஒன்றுமில்லையடி, வாரிணி! நாலு மாதமாக அந்தப் பெண் ஒரு மாதிரிகிறுக்குப் பிடித்தவள் போல் இருக்கிறாள். அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து தொலைக்கிறாள். தாய்தகப்பனார் இல்லாத பெண்ணை நம்மை நம்பி ஒப்புவித்திருக்கிறார்களே என்று இளையபிராட்டிக்குக் கவலை. அதனால்தான், வானதிக்கு என்ன வந்துவிட்டது என்று கேட்கச் சோதிடரிடம் அழைத்துப் போயிருக்கிறார்!ஏதாவது பேய் பிசாசுகளின் சேஷ்டையாயிருக்கலாம் அல்லவா? அப்படியிருந்தால் ஏதாவது மந்திரம் கிந்திரம்போட்டு ஓட்ட வேண்டும் அல்லவா?" என்றாள் தாரகை.
"பேயுமில்லை, பிசாசுமில்லையடி! இவளை வந்து எந்தப் பிசாசு பிடிக்கப் போகிறது? இவளேநூறு பிசாசை அடித்து ஓட்டி விடுவாளே?" என்றாள் வாரிணி.
"வானதி மயக்கம் போட்டு விழுவது கூடப் பாசாங்குதானடி! இப்படியெல்லாம் செய்தால் மெதுவாக இளவரசரைத் தன் வலையில் போட்டுக் கொண்டு விடலாம் என்று அவளுடைய எண்ணம்!" என்றாள் இன்னொருத்தி.
"நிரவதி சொல்லுவதுதான் சரி! அது மட்டுமா! அன்றைக்கு தீபத் தட்டைக் கீழே போட்டாளே? அதுகூடத் தன்னை அவர் கவிக்க வேண்டுமென்பதற்காகச் செய்த காரியந்தான்! இரண்டு கையாலும் ஏந்திக் கொண்டிருந்த தட்டு அப்படித் தவறி விழுந்து விடுமா? அல்லது நம் இளவரசர் என்ன புலியா, கரடியா, அவரைப் பார்த்து இவள் பயப்படுவதற்கு?" என்றாள் வாரிணி.
"உடனே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டதாகப் பாசாங்கு செய்தாளே? அதற்கு எவ்வளவுகெட்டிக்காரத்தனம் வேண்டும்?" என்றாள் நிரவதி.
"அவள் செய்த ஜாலத்தைக் காட்டிலும் அந்த ஜாலத்தில் குந்தவைதேவியும் இளவரசரும் ஏமாந்து போனார்களே, அதுதான் பெரிய வேடிக்கை!" என்றாள் செந்திரு என்பவள்.
"பொய்யும் புனைசுருட்டும் ஜாலமும் மாய்மாலமும் செய்கிறவர்களுக்குத்தான் இது காலம்!" என்றாள்மந்தாகினி என்பவள்.
"யுத்தத்துக்குப் புறப்பட்டான பிறகு இளவரசர், திரும்பி வந்து இந்த வானதியைப் பார்த்துவிட்டுப் போனாரே, இதைவிட என்னடி வேண்டும்? அவளுடைய மாயாஜாலம் எவ்வளவு தூரம் பலித்து விட்டது பார்த்தாயா?" என்றாள் வாரிணி.
"அதெல்லாம் ஒன்றுமில்லை; இளவரசர் அவ்வளவு மேன்மையான குணமுள்ளவர். ஒரு பெண் மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் என்றால், அவளைப் பார்த்து விசாரியாமல் போவாராடி? அதிலிருந்து நீ ஒன்றும் அர்த்தம் கற்பிக்க வேண்டாம்!" என்றாள் தாரகை.
"இளவரசரைப் பற்றி நீ சொல்வது உண்மைதான். அவரைப் போன்ற குணசாலி இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் வேறு யார் இருக்க முடியும்? கதைகளிலும் காவியங்களிலும் கூடக் கிடையாது; ஆனால் நான் சொல்கிறது வேறு. இவள் - இந்த வானதி - மயக்கம் போட்டு விழுந்தாளே, அது என்ன மயக்கம் தெரியுமா? அதைக் கேட்கக் ஜோதிடரிடமே போயிருக்க வேண்டியதில்லை. என்னைக் கேட்டிருந்தால் நானே சொல்லியிருப்பேன்!" என்றாள் வாரிணி.
"அது என்ன மயக்கமடி? எங்களுக்குத்தான் சொல்லேன்!" என்றாள் செந்திரு.
வாரிணி செந்திருவின் காதோடு ஏதோ சன்னாள். "என்னடி இரகசியம் சொன்னாள்? எங்களுக்குத் தெரியக் கூடாதா?" என்று நிரவதி கேட்டாள்.
"அது சாதாரண மயக்கமில்லையாம்! மையல் மயக்கமாம்!" என்றாள் செந்திரு.
உடனே எல்லோரும் கலகலவென்று சிரித்தார்கள். அதைக் கேட்டு விட்டு நதிக் கரை மரங்களில் இருந்த பறவைகள் சடசடவென்று இறக்கையை அடித்துக் கொண்டு பறந்து சென்றன.
"நம் இளவரசர் இலங்கையிலிருந்து திரும்பி வந்தால் மறுபடியும் இவள் மாயப்பொடி போடப் பார்ப்பாள். அதற்கு நாம் இடங்கொடுத்துவிடாமல் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!" என்று சொன்னாள் நிரவதி.
"இளவரசர் திரும்பி வருவதற்குள் இந்த வானதி பைத்தியம் பிடித்துப் பிதற்ற ஆரம்பிக்காவிட்டால் என் பெயர் தாரகை இல்லை; பெயரைத் தாடகை என்று மாற்றி வைத்துக் கொள்ளுகிறேன்!" என்றாள் தாரகை.
"அது கிடக்கட்டுமடி! இளையபிராட்டி சொல்லிவிட்டுப் போன காரியத்தை அவர் வருவதற்குள் செய்து வைக்க வேண்டாமா? வாங்களடி" என்றாள் மந்தாகினி.
பிறகு அப்பெண்களில் இருவர் படகின் அடியில் ஏற்கெனவே சிறிது பெயர்ந்திருந்த ஒரு பலகையைப்பெயர்த்து எடுத்தார்கள். பெயர்க்கப்பட்ட இடத்தில் நீளமான பெட்டி போல் அமைந்த பள்ளத்தில் ஒரு முதலைகிடந்தது! அதாவது செத்துப்போன முதலையின் உடலைப் பதப்படுத்தி உள்ளே பஞ்சும் நாரும் திணித்துவைத்திருந்த பொம்மை முதலை. அதை எடுத்து வௌியில் வைத்துக் கொண்டார்கள். படகைச் சிறிது தூரம்செலுத்திக் கொண்டு சென்று, நதிக்கரை ஓரத்தில் பெரிய பெரிய வேர்கள் விட்டு வளர்ந்திருந்த ஒருபெருமரத்தின் அருகில் வந்தார்கள். அம்மரத்தின் ஓரத்தில் அத்தோல் முதலையை எடுத்து விட்டார்கள்.அதுமர வேர்களிலே பாதியும் நதி வெள்ளத்தில் பாதியுமாகக் கிடந்தது. பார்ப்பதற்கு நிஜ முதலையைப்போலவே பயங்கரமான தோற்றம் அளித்தது. வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடாமல் ஒரு சிறிய மணிக்கயிற்றை அதன் கால் ஒன்றில் கட்டி வேரோடு சேர்த்துப் பிணைத்தார்கள். கயிறு வௌியில் தெரியாதபடிநீருக்குள்ளேயே அமுங்கியிருக்கும்படி கட்டினார்கள்.
"ஏனடி, மந்தாகினி! எதற்காக இந்தப் பொம்மை முதலையை இப்படி மரத்தடியில் கட்டி வைக்கச்சொல்லியிருக்கிறார் இளையபிராட்டி?" என்று தாரகை கேட்டாள்.
"உனக்குத் தெரியாதா? வானதி மிக்க பயந்தாங்கொள்ளியாயிருக்கிறாள் அல்லவா? அவளுடைய பயத்தைப் போக்கித் தைரியசாலி ஆக்குவதற்குத்தான்!" என்றாள் மந்தாகினி.
"எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், வானதியை இளவரசருக்குக் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்றே குந்தவைதேவி உத்தேசித்திருக்கிறார் போலிருக்கிறது!" என்றாள் நிரவதி.
"அப்படி ஏதாவது பேச்சு வந்தால் நான் இந்த வானதிக்கு விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுகிறேன். பார்த்துக் கொண்டிரு!" என்றாள் பொறாமைக்காரியான வாரிணி.
"நீ இப்படியெல்லாம் எரிச்சல் அடைவதற்குக் காரணமே இல்லை. மானிய கேடத்து இரட்டைமண்டலச் சக்கரவர்த்தியும் வேங்கி நாட்டின் மன்னரும் கலிங்க தேசத்து ராஜாவும் வடக்கே வெகு தூரத்தில் உள்ளகன்னோசி சக்கரவர்த்தியும் கூட நம் இளவரசருக்குப் பெண் கொடுக்கக் காத்திருக்கிறார்களாம்! அப்படியிருக்கஇந்தக் கொடும்பாளூர் வானதியை யாரடி இலட்சியம் செய்யப் போகிறார்கள்!" என்றாள் மந்தாகினி.
"நீ சொல்லுகிறபடி அந்த அரசர்கள் காத்திருக்கலாமடி! ஆனால் நம் இளவரசருடைய விருப்பம் அல்லவா முக்கியம்? இளவரசர் 'நான் எப்போதாவது கலியாணம் செய்து கொண்டால் தமிழகத்துப் பெண்ணைத்தான் மணந்து கொள்வேன்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்! உங்களுக்கெல்லாம் இது தெரியாதா?" என்றாள் செந்திரு.
"அப்படியானால் மிகவும் நல்லதாய்ப் போயிற்று. நாம் எல்லோரும் சேர்ந்ு தனித்தனியே நம் கைவரிசையைக் காட்ட வேண்டியதுதானே? இந்த வானதியினால் முடிகிற காரியம் நம்மால் முடியாது போய்விடுமா? அவளிடம் உள்ள மாயப் பொடி நம்மிடமும் இல்லையா, என்ன?" என்றாள் தாரகை.
இப்படியெல்லாம் இந்தப் பெண்கள் பேசியதற்கு ஆதாரமான நிகழ்ச்சி என்னவென்பதை நேயர்களுக்கு இப்போது தெரிவிக்க விரும்புகிறோம்.
பக்க தலைப்பு
பதினாறாம் அத்தியாயம்
அருள்மொழிவர்மர்
இன்றைக்குச் சுமார் (1950ல் எழுதப்பட்டது) 980 ஆண்டுகளுக்கு முன்னால் கோ இராசகேசரிவர்மர்பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கி வந்தார். நம் கதைநடக்கும் காலத்துக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் சிங்காசனம் ஏறினார். சென்ற நூறாண்டுகளாகச்சோழர்களின் கை நாளுக்கு நாள் வலுத்து வந்தது. சோழ சாம்ராஜ்யம் நாலா திசையிலும் பரவி வந்தது. எனினும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள்வலுப்பெற்றிருந்தார்கள். சுந்தர சோழருக்கு முன்னால் அரசு புரிந்த கண்டராதித்தர் சிவ பக்தியில்திளைத்துச் 'சிவஞான கண்டராதித்தர்' என்று புகழ்பெற்றவர். அவர் இராஜ்யத்தை விஸ்தரிப்பதில்அவ்வளவாகச் சிரத்தை கொள்ளவில்லை. கண்டராதித்தருக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த அவருடைய சகோதரர்அரிஞ்சயர் ஓர் ஆண்டு காலந்தான் சிம்மாசனத்தில் இருந்தார். அவர் தொண்டை நாட்டிலுள்ள 'ஆற்றூரில்துஞ்சிய' பின்னர், அவருடைய புதல்வர் பராந்தக சுந்தர சோழர் தஞ்சைச் சிம்மாசனம் ஏறினார்.
பேரரசர் ஒருவருக்கு இருக்க வேண்டிய எல்லாச் சிறந்த அம்சங்களும் சுந்தர சோழசக்கரவர்த்தியிடம் பொருந்தியிருந்தன. போர் ஆற்றல் மிக்க சுந்தர சோழர் தம் ஆட்சியின்ஆரம்பத்திலேயே தென் திசைக்குப் படையெடுத்துச் சென்றார். சேவூர் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும்பாண்டிய சைன்யத்துக்கும் பெரும் போர் நடைபெற்றது. அச்சமயம் மதுரை மன்னனாயிருந்த வீரபாண்டியனுக்குத்துணை செய்வதற்காகச் சிங்கள நாட்டு அரசன் மகிந்தன் ஒரு பெரிய சேனையை அனுப்பியிருந்தான். சோழர்களின் மாபெரும் வீர சைன்யம் பாண்டியர்களுடைய சேனையையும் சிங்கள நாட்டுப் படையையும் சேவூரில்முறியடித்தது. வீரபாண்டியன் படையிழந்து, முடியிழந்து, துணையிழந்து, உயிரை மட்டும் காப்பாற்றிக்கொண்டு போர்க்களத்திலிருந்து ஓடித் தப்பித்தான். பாலை நிலப் பகுதியொன்றின் நடுவில் இருந்த மலைக்குகையில் ஒளிந்து கொண்டு காலங்கழிக்கலானான். சேவூர்ப் போரில் ஈழத்துப் படை அநேகமாகநிர்மூலமாகி விட்டது. எஞ்சிய வீரர்கள் சிலர் போர்க்களத்தில் புகழையும் வீரத்தையும் உதிர்த்துவிட்டு,உயிரை மட்டும் கைக்கொண்டு ஈழநாட்டுக்கு ஓடிச் சென்றார்கள்.
இவ்விதம் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் நடக்கும் போர்களில் சிங்கள மன்னர்கள் தலையிட்டுப்பாண்டியர்க்கு உதவிப் படை அனுப்புவது சில காலமாக வழக்கமாய்ப் போயிருந்தது. இந்த வழக்கத்தைஅடியோடு ஒழித்து விடச் சுந்தர சோழ சக்கரவர்த்தி விரும்பினார். ஆகையினால் சோழ சைன்யம் ஒன்றைஇலங்கைக்கு அனுப்பிச் சிங்கள மன்னர்களுக்குப் புத்தி கற்பிக்க எண்ணினார். கொடும்பாளூர்ச் சிற்றரசர்குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச்சிங்களத்துக்கு அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக சோழர் படை சிங்களத்துக்கு ஒரே தடவையில் போய்ச்சேரவில்லை. அதற்குத் தேவையான கப்பல் வசதிகள் இல்லை. முதல் தடவை சென்ற சேனை முன்யோசனையின்றித் துணிந்து முன்னேறத் தொடங்கியது. மகிந்தராஜனுடைய தளபதி ஸேனா என்பவனின்தலைமையில் சிங்களப் படை எதிர்பாராதவிதத்தில் வந்து சோழப் படையின் பகுதியை வளைத்துக் கொண்டது.பயங்கரமான பெரும் போர் நடந்தது. அதில் சோழ சேனாதிபதியான பராந்தகன், சிறிய வேளான் தன்வீரப் புகழை நிலைநிறுத்திவிட்டு இன்னுயிரைத் துறந்தான்! ''ஈழத்துப் பட்ட பராந்தகன் சிறிய வேளான்'என்று சரித்திரக் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றான்.
இந்த செய்தியானது பாலைவனத்தில் மலைக் குகையில் ஒளிந்து கொண்டிருந்த வீரபாண்டியனுக்குஎட்டியதும் அம்மன்னன் மீண்டும் துணிவு கொண்டு வௌிவந்தான். மறுபடியும் பெருஞ் சேனை திரட்டிப்போரிட்டான். இம்முறை பாண்டிய சேனை அதோகதி அடைந்ததுடன், வீரபாண்டியனும் உயிர் துறக்க நேர்ந்தது.இந்தப் போரில் சுந்தர சோழரின் முதற் குமாரர் ஆதித்த கரிகாலர் முன்னணியில் நின்று பராக்கிரமச்செயல்கள் புரிந்தார்; 'வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டத்தையும் அடைந்தார்.
எனினும், சிங்கள மன்னன் மகிந்தனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்ற விருப்பம் சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு மட்டுமல்ல, சோழ நாட்டுத் தளபதிகள், சாமந்தகர்கள், சேனா வீரர்கள் எல்லாருடைய மனத்திலும் குடிக்கொண்டிருந்தது. படையெடுத்துச் செல்ல ஒரு பெரிய சைன்யமும் ஆயத்தமாயிற்று. அதற்குத் தலைமைவகித்துச் செல்வது யார் என்னும் கேள்வி எழுந்தது. சுந்தர சோழரின் மூத்த புதல்வர் -பட்டத்து இளவரசராகிய ஆதித்த கரிகாலர், அச்சமயம் வடதிசைக்குச் சென்றிருந்தார். திருமுனைப்பாடிநாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் சில நாளாக ஆதிக்கம் செலுத்தி வந்த இரட்டை மண்டலப் படைகளை(ராஷ்டிரகூடர்களை) முறியடித்து விரட்டி விட்டுப் புராதனமான காஞ்சி நகரைத் தமது வாசஸ்தலமாகச் செய்துகொண்டிருந்தார். மேலும் வடதிசையில் படையெடுத்துச் செல்லுவதற்கு ஆயத்தமும் செய்து கொண்டிருந்தார்.
இந்நிைமையில், ஈழமண்டலப் படைக்குத் தலைமை வகித்துச் செல்லச் சோழ நாட்டின் மற்றத்தளபதிகளுக்குள்ளே பெரும் போட்டி ஏற்பட்டது. போட்டியிலிருந்து பொறாமையும் புறங்கூறலும் எழுந்தன. பழந்தமிழ்நாட்டில் போருக்குப் போகாமல் தப்பித்துக் கொள்ள விரும்பியவரைக் காண்பது மிக அருமை. போர்க்களத்துக்குச் செல்வது யார் என்பதிலேதான் போட்டி உண்டாகும். அதிலிருந்து சில சமயம்பொறாமையும் விரோதமும் வளருவதுண்டு.
ஈழநாட்டுக்குச் சென்று மகிந்தனைப் பழிக்குப் பழி வாங்கிச் சோழரின் வீரப்புகழை நிலைநாட்டுவது யார் என்பது பற்றி இச்சமயம் சோழ நாட்டுத் தலைவர்களிடையிலே போட்டி மூண்டது. இந்தப் போட்டியை அடியோடு நீக்கி அனைவரையும் சமாதானப்படுத்தும்படியாகச் சுந்தர சோழ மன்னரின் இளம் புதல்வர் அருள்மொழிவர்மர் முன்வந்தார்.
"அப்பா! பழையாறை அரண்மனையில் அத்தைகளுக்கும் பாட்டிகளுக்குமிடையில் இத்தனை நாள் நான் செல்லப்பிள்ளையாக வளர்ந்தது போதும். தென் திசைச் சைன்யத்துக்கு மாதண்ட நாயகனாக என்னை நியமனம் செய்யுங்கள். ஈழப் போருக்குத் தலைமை வகித்து நடத்த நானே இலங்கை சென்று வருகிறேன்!" என்றார் இளங்கோ அருள்மொழிவர்மர்.
அருள்மொழிவர்மருக்கு அப்போது பிராயம் பத்தொன்பதுதான். அவர் சுந்தர சோழரின்கடைக்குட்டிச் செல்வப் புதல்வர்; பழையாறை அரண்மனைகளில் வாழ்ந்த ராணிமார்களுக்கெல்லாம் செல்லக்குழந்தை; சோழ நாட்டுக்கே அவர் செல்லப்பிள்ளை. சுந்தர சோழ மன்னர் நல்ல அழகிய தோற்றம்வாய்ந்தவர். அவருடைய தந்தை அரிஞ்சயர், சோழ குலத்துக்கு எதிரிகளாக இருந்த வைதும்பராயர் வம்சத்துப்பெண்ணாகிய கலியாணியை அவளுடைய மேனி அழகைக் கண்டு மோகித்து மணந்து கொண்டார். அரிஞ்சயருக்கும்கலியாணிக்கும் பிறந்த சுந்தர சோழருக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் பராந்தகர். அவருடையதோற்றத்தின் வனப்பைக் கண்டு நாட்டாரும் நகரத்தாரும் "சுந்தர சோழர்" என்று அவரை அழைத்து வந்தார்கள்அதுவே அனைவரும் வழங்கும் பெயராயிற்று.
அத்தகையவருக்குப் பிறந்த குழந்தைகள் எல்லோருமே அழகில் மிக்கவர்கள்தான். ஆனால்கடைசியில் பிறந்த அருள்மொழிவர்மர் அழகில் அனைவரையும் மிஞ்சி விட்டார். அவருடைய முகத்தில்பொலிந்த அழகு, மனித குலத்துக்கு உரியதாக மட்டும் இல்லை; தெய்வீகத்தன்மை பொருந்தியதாக இருந்தது. அவர் குழந்தையாக இருந்தபோது சோழ வம்சத்து ராணிமார்கள் அவரை முத்தமிட்டு முத்தமிட்டுக் கன்னம் கனியச்செய்து விடுவார்கள்.எல்லாரிலும் அதிகமாக அவரிடம் வாஞ்சையுடனிருந்தவள் அவருடைய தமக்கையாகியகுந்தவை.அருள்மொழிக்கு இரண்டு பிராயந்தான் மூத்தவளான போதிலும் தம்பியை வளர்க்கும் பொறுப்பு தன்தலைமேலேயே சுமந்திருப்பதாகக் குந்தவைப்பிராட்டி எண்ணியிருந்தாள். குந்தவையிடம் அருள்மொழியும்அதற்கிணையான வாஞ்சை வைத்திருந்தார். தமக்கை இட்ட கோட்டைத் தம்பி தாண்டுவது கிடையாது. இளையபிராட்டி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்; அதற்கு மாறாகப் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும்சேர்ந்து வந்து சொன்னாலும் அருள்மொழிவர்மர் பொருட்படுத்த மாட்டார். தமக்கையின் வாக்கே தம்பிக்குத்தெய்வத்தின் வாக்காயிருந்தது.
தம்பியின் முகத்தைத் தமக்கை அடிக்கடி உற்று நோக்குவாள். விழித்துக் கொண்டிருக்கும்போதுமட்டுமல்லாமல் அவன் தூங்கும் போது கூட நாழிகைக் கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பாள். "இந்தப்பிள்ளையிடம் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது! அதை வௌிப்படுத்திப் பிரகாசிக்கச் செய்ய வேண்டியதுஎன் பொறுப்பு!" என்று எண்ணமிடுவாள். தம்பி தூங்கும்போது அவனுடைய உள்ளங்கைகளை அடிக்கடி எடுத்துப்பார்ப்பாள். அந்தக் கைகளில் உள்ள ரேகைகள் சங்கு சக்கர வடிவாக அவளுக்குத் தோன்றும். "ஆகா!உலகத்தை ஒரு குடை நிழலில் புரந்திடப் பிறந்தவன் அல்லவோ இவன்!" என்று சிந்தனை செய்வாள்.
ஆனால், சோழ சிங்காதனத்தில் இவன் ஏறுவான் என்று எண்ணுவதற்கே இடமிருக்கவில்லை. இவனுக்கு மூத்தவர்கள் - பட்டத்துக்கு உரியவர்கள், இரண்டு பேர் இருந்தார்கள். பின், இவனுக்கு எங்கிருந்து ராஜ்யம் வரப்போகிறது! எந்தச் சிம்மாசனத்தில் இவன் ஏறப் போகிறான்? கடவுள் சித்தம் எப்படியோ, யார் கண்டது? உலகம் மிக்க விசாலமானது எத்தனையோ தேசங்கள், எத்தனையோ ராஜ்யங்கள் இந்நிலவுலகில் இருக்கின்றன. புஜபல பராக்கிரமத்தினால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாடு சென்று சிங்காதனம் ஏறி ராஜ்யம் ஆண்டவர்களைப் பற்றிக் கதைகளிலும் காவியங்களிலும் நாம் கேட்டதில்லையா? கங்கை நதி பாயும் வங்க நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட இளவரசன் படகிலேறி இலங்கைக்குச் சென்று அரசு புரியவில்லையா? ஆயிரம் வருஷமாக அந்தச் சிங்கள ராஜ வம்சம் நிலைத்து நிற்கவில்லையா?
இவ்விதமாகக் குந்தவைப்பிராட்டி ஓயாது சிந்தித்து வந்தாள். கடைசியாக, இலங்கைக்கு அனுப்பும்சைன்யத்துக்கு யார் தளபதியாகப் போவது என்பது பற்றி விவாதம் எழுந்த போது அதற்குரியவன்அருள்மொழிதான் என்ற முடிவுக்கு வந்தாள்.
"தம்பி, அருள்மொழி! உன்னை ஒருகணம் பிரிந்திருப்பதென்றாலும் எனக்கு எத்தனையோ கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆயினும் நானே உன்னைப் போகச் சொல்ல வேண்டிய சமயம் வந்து விட்டது. இலங்கைப் படையின் தலைவனாக நீதான் போக வேண்டும்!" என்றாள்.
இளவரசர் குதூகலத்துடன் இதற்குச் சம்மதித்தார். அரண்மனை வாழ்விலிருந்தும் அந்தப்புரமாதரசிகளின் அரவணைப்பிலிருந்தும் எப்போது தப்புவோம் என்று அருள்மொழிவர்மரின் உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது. அருமைத் தமக்கையே இப்போது போகச் சொல்லிவிட்டாள்! இனி என்ன தடை? குந்தவைதேவிமனம் வைத்து விட்டால் சோழ சாம்ராஜ்யத்தில் நடவாத காரியம் ஒன்றுமே கிடையாது! சுந்தர சோழசக்கரவர்த்திக்குத் தம் செல்வக் குமாரியிடம் அவ்வளவு ஆசை; அவ்வளவு நம்பிக்கை!
இளங்கோ அருள்மொழிவர்மர் தென்திசைச் சோழ சைன்யத்தின் மாதண்ட நாயகர் ஆனார். இலங்கைக்கும் போனார், அங்கே படைத் தலைமை வகித்துச் சில காலம் போர் நடத்தினார். ஆனால், போர்எளிதில் முடிகிறதாயில்லை. அவர் போர் நடத்திய முறைக்கும் மற்றவர்களின் போர் முறைக்கும்வித்தியாசம் இருந்தது. தாய்நாட்டிலிருந்து அவர் வேண்டியபடியெல்லாம் தளவாடங்களும் சாமக் கிரியைகளும்சரியாக வந்து சேரவில்லை. ஆகையால் இடையில் ஒரு தடவை தாய்நாட்டுக்கு வந்திருந்தார். தந்தையிடம்சொல்லித் தம் விருப்பத்தின்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டார். மறுபடியும் ஈழத்துக்குச் செல்லஆயத்தமானார்.
அருமைத் தம்பியைப் போர் முகத்துக்கு அனுப்புவதற்குக் குந்தவைதேவி பழையாறையின் பிரதானமாளிகையில் மங்கள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாள். அருள்மொழித்தேவர் புறப்பட்ட போதுஅரண்மனை முற்றத்தில் வெற்றி முரசுகள் முழங்கின; சங்கங்கள் ஆர்ப்பரித்தன; சிறு பறைகள் ஒலித்தன;வாழ்த்து கோஷங்கள் வானை அளாவின. சோழ குலத்துத் தாய்மார்கள் அனைவரும் அரண்மனையின் செல்லக்குழந்தைக்கு ஆசி கூறி, நெற்றியில் மந்திரித்த திருநீற்றை இட்டு, திருஷ்டி கழித்து வழி அனுப்பினார்கள்.
அரண்மனை வாசலின் முகப்பில், அருள்மொழிவர்மர் வீதி வாசற்படியில் இறங்க வேண்டியஇடத்தில், குந்தவைதேவியின் தோழிப் பெண்கள் கைகளில் தீபமேற்றிய தங்கத் தட்டுகளை ஏந்திக் கொண்டுநின்றார்கள். தோழிப் பெண்கள் என்றால், சாமான்யப்பட்டவர்களா? தென்னாட்டிலுள்ள புகழ்பெற்றசிற்றரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பழையாறை அரண்மனையில் செம்பியன் மாதேவிக்குப்பணிவிடை செய்வதையும் குந்தவைபிராட்டிக்குத் தோழியாக இருப்பதையும் பெறற்கரும் பாக்கியமாகக் கருதிவந்திருந்தவர்கள். அவர்களிலே கொடும்பாளூர் சிறிய வேளானின் புதல்வி வானதியும் இருந்தாள். இளவரசர் சற்றுத் தூரத்தில் வருவதைப் பார்த்ததும், அந்தப் பெண்கள் எல்லோருமே மனக்கிளர்ச்சிஅடைந்தார்கள். இளவரசர் அருகில் வந்ததும் கையில் ஏந்திய தட்டுகளைச் சுற்றி ஆலாத்தி எடுத்தார்கள்.
அப்போது வானதியின் மேனி முழுதும் திடீரென்று நடுங்கிற்று. கையிலிருந்த தட்டு தவறிக் கீழே விழுந்து 'டணார்' என்ற சத்தத்தை உண்டாக்கியது. "அடடா! இது என்ன அபசகுனம்!" என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் உண்டாயிற்று. ஆனால் தட்டு கீழே விழுந்த பிறகும் திரி மட்டும் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அனைவரும் நிம்மதி அடைந்தார்கள். 'இது மிக நல்ல சகுனம்' என்றே முதியவர்கள் உறுதி கூறினார்கள்.
எவ்விதக் காரணமும் இன்றிப் பீதியும் கலக்கமும் அடைந்து தட்டை நழுவவிட்ட பெண்ணைப் பார்த்துப்புன்னகை புரிந்துவிட்டு இளங்கோ அருள்மொழிவர்மர் மேலே சென்றார். அவர் அப்பால் சென்றதும் வானதியும்மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்து விட்டாள். 'ஆகா! இப்பேர்ப்பட்ட தவறு செய்து விட்டோமே' என்றஎண்ணமே வானதியை அவ்வாறு மூர்ச்சையடைந்து விழும்படிச் செய்து விட்டது. குந்தவையின் கட்டளையின் பேரில்அவளை மற்றப் பெண்கள் தூக்கிச் சென்று, ஓர் அறையில் மேடையில் கிடத்தினார்கள். குந்தவைப்பிராட்டி தம்சகோதரர் புறப்படுவதைப் பார்ப்பதற்குக் கூட நில்லாமல் உள்ளே சென்று வானதிக்கு மூர்ச்சை தௌிக்கமுயன்றாள். வாசலில் நின்றபடியே வானதி சுருண்டு விழுந்ததைப் பார்த்துவிட்ட அருள்மொழிவர்மர் தாம்குதிரை மீது ஏறுவதற்கு முன்னால், "விழுந்த பண்ணுக்கு எப்படியிருக்கிறது? மயக்கம் தௌிந்ததா?" என்றுவிசாரித்துவர ஆள் அனுப்பினார். விசாரிக்க வந்தவனிடம் குந்தவைதேவி, "இளவரசரை இங்கே சிறிதுவந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லு!" என்று திருப்பிச் சொல்லி அனுப்பினாள். தமக்கையின் சொல்லைஎன்றும் தட்டியறியாத இளவரசர் அவ்விதமே மீண்டும் அரண்மனைக்குள் வந்தார். வானதியைத் தம் தமக்கைமார்பின் மீது சாத்திக் கொண்டு மூர்ச்சை தௌிவிக்க முயன்று கொண்டிருந்த காட்சி அவருடைய மனத்தைஉருக்கியது.
"அக்கா! இந்தப் பெண் யார்? இவள் பெயர் என்ன?" என்று இளங்கோ கேட்டார்.
"கொடும்பாளூர்ச் சிறியவேளாரின் மகள்; இவள் பெயர் வானதி; கொஞ்சம் பயந்த சுபாவமுடையவள்!"என்றாள் குந்தவை.
"ஆகா! இப்போது இவள் மூர்ச்சையாகி விழுந்ததின் காரணம் தெரிந்தது. இந்தப் பெண்ணின் தந்தைதானே இலங்கை சென்று மீண்டும் வராமல் போர்க்களத்தில் மாண்டார்? அதை நினைத்துக் கொண்டாள்போலிருக்கிறது!" என்றார் இளவரசர்.
"இருக்கலாம், ஆனால் இவளைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்! நான் பார்த்துக் கொள்கிறேன்! இலங்கை சென்று விரைவில் வெற்றி வீரனாகத் திரும்பி வா! அடிக்கடி எனக்குச் செய்தி அனுப்பிக் கொண்டிரு!" என்றாள் இளையபிராட்டி.
"ஆகட்டும்; இங்கே ஏதாவது விசேஷம் நிகழ்ந்தாலும் எனக்குச் செய்தி அனுப்புங்கள்!" என்றார் இளங்கோ.
இச்சமயத்தில், இளவரசரின் இனிய குரலின் மகிமையினால்தானோ என்னவோ, வானதிக்குமூர்ச்சை தௌிந்து நினைவு வரத் தொடங்கியது. அவளுடைய கண்கள் முதலில் இலேசாகத் திறந்தன. எதிரில் இளவரசரைப் பார்த்ததும் கண்கள் அகன்று விரிந்தன; பின்னர் முகமும் மலர்ந்தது. அவளது பவழச்செவ்வாயில் தோன்றிய புன்னகையினால் கன்னங்கள் குழிந்தன. உணர்வு வந்ததும் நாணமும் கூட வந்தது,சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். பின்னால் திரும்பிப் பா்த்தாள்; தன்னை இளையபிராட்டி தாங்கிக்கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டு வெட்கினாள், நடந்ததெல்லாம் ஒரு கணத்தில் நினைவு வந்தது.
"அக்கா! இந்த மாதிரி செய்து விட்டேனே?" என்று கண்களில் நீர்மல்கக் கூறினாள்.
இதற்குக் குந்தவை மறுமொழி சொல்வதற்குள் இளவரசர், "அதற்காக நீ ஒன்றும் கவலைப்படவேண்டாம். வானதி! தவறுவது யாருக்கும் நேரிடுகிறதுதான். மேலும் உனக்கு அவ்விதம் நேருவதற்கு முக்கியக்காரணமும் இருக்கிறது; அதைத் தான் இளையபிராட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!" என்றார்.
வானதிக்குத் தான் காண்பது உண்மையா, கேட்பது மெய்யா என்ற சந்தேகமே வந்துவிட்டது. பெண்களைச்சாதாரணமாக ஏறிட்டுப் பார்க்காமலே போகும் வழக்கமுடைய இளவரசரா என்னுடன் பேசுகிறார்? எனக்கு ஆறுதல்மொழி கூறித் தேற்றுகிறார்? என் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? ஆகா! உடம்பு புல்லரிக்கிறதே!மறுபடியும் மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறதே!...
இளவரசர், "அக்கா! சேனைகள் காத்திருக்கின்றன, நான் போய் வருகிறேன். நீங்கள் எனக்குச் செய்தி அனுப்பும்போது இந்தப் பெண்ணுக்கு உடம்பு எப்படியிருக்கிறது என்றும் சொல்லி அனுப்புங்கள். தாய் தகப்பனில்லாத இப்பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.
இவற்றையெல்லாம் குந்தவைதேவியின் மற்றத் தோழிப் பெண்கள் மேல் மாடங்களிலிருந்துபலகணிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தார்கள். அவர்களுடைய உள்ளங்களில்பொறாமைத் தீ கொழுந்து விட ஆரம்பித்தது. அன்று முதல் குந்தவைப்பிராட்டி வானதியிடம் தனி அன்புகாட்டத் தொடங்கினாள். இணைபிரியாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தாள். தான் கற்றிருந்தகல்வியையும் கலைகளையும் அவளுக்கும் கற்பித்தாள். எங்கே போனாலும் அவளைத் தவாமல் கூட அழைத்துச்சென்றாள். அரண்மனை நந்தவனத்துக்கு வானதியை அடிக்கடி அழைத்துச் சென்று குந்தவைதேவி அவளிடம்அந்தரங்கம் பேசினாள். தன் இளைய சகோதரனுடைய வருங்கால மேன்மையைக் குறித்து, தான் கண்டு வந்தகனவுகளையெல்லாம் அவளிடமும் சொன்னாள்; அதையெல்லாம் வானதியும் சிரத்தையுடன் கேட்டாள்.
மேலே கூறிய நிகழ்ச்சிக்குப் பிறகு, வானதி இன்னும் நாலைந்து தடவை உணர்வு இழந்துமூர்ச்சையடைந்தாள். அப்போதெல்லாம் குந்தவைப்பிராட்டி அவளுக்குத் தக்க சிகிச்சை செய்து திரும்ப உணர்வுவருவித்தாள். மூர்ச்சை தௌியும்போது வானதி விம்மி விம்மி அழுது கொண்டே எழுந்திருப்பாள்.
"என்னடி, அசடே! எதற்காக இப்படி அழுகிறாய்!" என்று குந்தவை கேட்பாள்.
"தெரியவில்லையே, அக்கா! மன்னியுங்கள்!" என்பாள் வானதி.
குந்தவை அவளைக் கட்டிக் கொண்டு உச்சி மோந்து ஆறுதல் கூறுவாள். இவையெல்லாம் மற்றப் பெண்களுக்கு மேலும் மேலும் பொறாமையை வளர்த்துக் கொண்டிருந்தன. எனவே, குந்தவையும் வானதியும் ரதம் ஏறிக் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குப் போன பிறது அப்பெண்கள் மேற்கூறியவாறெல்லாம் பேசிக் கொண்டது இயல்பேயல்லவா?
பக்க தலைப்பு
பதினேழாம் அத்தியாயம்
குதிரை பாய்ந்தது!
ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிவர்மனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்றுகுந்தவை தீர்மானித்திருந்தாள்.ஆனால் வானதியிடம் ஒரே ஒரு குறை இருந்தது; அது அவளுடைய பயந்தசுபாவந்தான். வீராதி வீரனை மணக்கப் போகிறவள், உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் போகும்புதல்வனைப் பெறப் போகிறவள், இப்படி பயங்கொள்ளியாயிருக்கலாமா? அவளுடைய பயந்த சுபாவத்தை மாற்றிஅவளைத் தீரமுள்ள வீர மங்கையாக்க வேண்டுமென்று குந்தவை விரும்பினாள். அதற்காகவே இந்தப் பொம்மைமுதலை விளையாட்டை ஏ்படுத்தியிருந்தாள். ஆனால் அந்தச் சோதனையில் கொடும்பாளூர்க் குமாரிவெற்றியுடன் தேறிவிட்டாள்.
குடந்தை ஜோதிடர் வீட்டிலிருந்து குந்தவைதேவியும் வானதியும் திரும்பி வந்ததும் அன்னப் படகில்ஏறிக் கொண்டார்கள். படகு சிறிது தூரம் சென்றது; ஆற்றங்கரையின் இருபுறமும் மரமடர்ந்த ஓரிடத்தில்படகை நிறுத்திவிட்டு, குந்தவையும் அவளுடைய தோழிகளும் நீரில் இறங்கி விளையாடுவது வழக்கம். அந்தஇடத்துக்கே இன்றும் போய் அவர்கள் இறங்கினார்கள். எல்லாரும் இறங்கியானதும், அப்பெண்களில் ஒருத்தி,"ஐயோ முதலை!" என்று கூவினாள். அவர்கள் எந்தப் பெரிய மரத்தின் அடியில் இறங்கினார்களோ, அந்தமரத்துக்கு மறுபக்கத்தை அப்பெண் சுட்டிக்காட்டிக் கொண்டே, "முதலை! முதலை!" என்று அலறினாள். உடனேஎல்லாப் பெண்களும் சேர்ந்து, "ஐயோ! முதலை! பயமாயிருக்கிறதே!" என்றெல்லாம் கூச்சலிட்டுக் கொண்டுஓடினார்கள்.
ஆனால் பயந்த சுபாவமுள்ள வானதி மட்டும் அச்சமயம் சிறிதும் பயப்படவில்லை. திறந்த வாயுள்ளபயங்கர முதலையைத் திடீரென்று சமீபத்தில் கண்டும் அவள் பீதி அடைந்து விடவில்லை. மற்றவர்கள்எல்லாரும் குந்தவைதேவி கூறியிருந்தபடி மிகவும் பயந்தது போல் பாசாங்கு செய்தும் வானதி பயப்படவில்லை.
"அக்கா! முதலைக்குத் தண்ணீரில் இருக்கும்போதுதான் பலமெல்லாம்! கரையில் கிடக்கும்போது அதனால் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களைப் பயப்படாதிருக்கச் சொல்லுங்கள்!" என்றாள் கொடும்பாளூர்க் குமரி.
"அடி, பொல்லாத கள்ளி! 'இது நிஜ முதலையல்ல; பொம்மை முதலை' என்பது உனக்கு முன்னாலேயேதெரியும் போலிருக்கிறது! யாரோ உனக்குச் சொல்லியிருக்க வேண்டும்!" என்று மற்றப் பெண்கள்கூறினார்கள்.
"நிஜ முதலையாயிருந்தால் கூட எனக்குப் பயம் கிடையாது. பல்லி, கரப்பான் பூச்சிகளைக் கண்டால்தான் எனக்குப் பயம்!" என்றாள் வானதி.
இந்தச் சமயத்திலேதான் அப்பெண்களைப் பயங்கரமான முதலை வாயிலிருந்து காப்பாற்றுவதற்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். குதிரை மேலிருந்து ஒரே குதியாய்க் குதித்து ஓடி வந்து வேலையும் வீசினான்.
முதலைக்கு முன்புறத்தில் வந்து நின்று அந்தக் கம்பீரத் தோற்றமுடைய மங்கை பேசியதைக் கேட்டவல்லவரையனுக்கு உடம்பு புல்லரித்தது. அவள் தன்னோடு பேசவில்லையே என்று குடந்தை சோதிடர் வீட்டில்அவனுக்கு ஏற்பட்ட மனக்குறை தீர்ந்தது. ஆனால், அந்த முதலை - அவள் பின்னால் கிடந்த திறந்த வாயுடையபயங்கர முதலை - ஏனோ அது, அவனுக்கு மனச் சங்கடத்தை அளித்துக் கொண்டிருந்தது. முதலைக்கு முன்னால் இவள் வந்து நிற்கும் காரணம் என்ன? அதைப் பற்றிச் சிரமம் வேண்டாம் என்று இவள் சொல்வதின் பொருள் என்ன?இவ்வளவு நேரமும் அம்முதலை கிடந்த இடத்திலேயே கிடப்பதன் காரணந்தான் என்ன?
அந்த யுவதி மேலும் பேசினாள் "ஐயா! குடந்தையில் நீங்கள் அவசரப்பட்டுச் சோதிடர்வீட்டுக்குள்ளே வந்ததற்காக வருத்தம் தெரிவித்தீர்கள். அதற்கு மறுமொழி சொல்லாமலே நாங்கள் வந்துவிட்டோம். இதிலிருந்து சோழ நாட்டுப் பெண்களே மரியாதை அறியாதவர்கள் என்ற கருத்து உங்களுக்குஏற்பட்டிருக்கலாம். அப்படி நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டாம். என்னுடன் வந்த பெண்ணுக்குத் திடீரென்றுமயக்கம் வந்துவிட்டபடியால், என் மனம் சிறிது கலங்கியிருந்தது. ஆகையினால்தான் தங்களுக்கு மறுமொழிசொல்லவில்லை!..."
அடாடா! இது என்ன இனிமையான குரல்! இவள் பேசும் மொழிகளைக் கேட்டு என் நெஞ்சு ஏன்இப்படிப் பொங்குகிறது? தொண்டை ஏன் விக்கிக் கொள்கிறது? குழலும் வீணையும் மத்தளமும் போர்முரசுங்கூடஇப்படி என்னைக் களிவெறி கொள்ளச் செய்ததில்லையே? இப்படி என்னைக் குலுக்கிப் போட்டதில்லையே? இந்தமங்கையின் பேச்சில் குறுககிட்டு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று பார்த்தால், ஏன் என்னால் முடியவில்லை? ஏன்நாக்கு மேலண்ணத்தில் இப்படி ஒட்டிக் கொள்கிறது? ஏன் இப்படிக் காற்றோட்டம் அடியோடு நின்றுபோயிருக்கிறது? ஏன் இந்த அரிசிலாற்றின் வெள்ளம் ஓடாமல் நின்றிருக்கிறது? அப்புறம் இந்த முதலை!...இது ஏன் இப்படிச் சும்மா கிடக்கிறது.
வந்தியத்தேவனுடைய உள்ளம் இவ்வாறு தத்தளிக்கையில் அந்த மங்கையின் குரல் மேலும் கனவில்கேட்பது போலக் கேட்டது: "இப்போது கூட அபலைப் பெண்ணாகிய எங்களைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டுதான் இந்தக் காரியம் செய்தீர்கள்! முதலையின் மேல் வேலை எறிந்தீர்கள். இவ்வளவு வேகமாகவும் குறிதவறாமலும் வேல் எறியக்கூடிய வீரர்களைக் காண்பது அரிது!...."
மரத்தடியில் ஒதுங்கி நின்று கேட்டுக் கொண்டிருந்த பெண்கள் இப்போது மறுபடியும் கலீர் என்றுசிரித்தார்கள். அச்சிரிப்பினால் வந்தியத்தேவனுடைய மோகக் கனவு கலைந்தது. அந்த மங்கையின்பேச்சாகிய மாய மந்திரத் தளை படீர் என்று அறுபட்டது. முதலையை இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். எதிரேயிருந்த பெண்ணைச் சற்றும் பொருட்படுத்தாமல் விலகிச் சென்று முதலையின் சமீபம் அடைந்தான்.அதன்முதுகில் பாய்ந்திருந்த தன் வேலை அசைத்து எடுத்தான்! வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம்பீறிட்டுக் கொண்டு வரவில்லை! பின், என்ன வந்தது? கொஞ்சம் வாழைநாரும் பஞ்சும் வௌிவந்தன!
மறுபடியும் அந்தத் துஷ்டப் பெண்கள் சிரித்தார்கள். இம்முறை கெக்கலி கொட்டிப் பலமாகச்சிரித்தார்கள். வல்லவரையனுடைய உள்ளமும் உடலும் குன்றிப் போயின. இம்மாதிரி அவமானத்தை இதற்குமுன்அவன் எக்காலத்திலும் அடைந்ததில்லை. இத்தனை பெண்களுக்கு முன்னால் இப்படிப்பட்ட பேரவமானமா? இவர்கள்பெண்களா? இல்லை! இல்லை! இவர்கள் அரக்கிகள்! இவர்கள் பக்கத்திலேே நிற்கக் கூடாது! இவர்களுடையமுகத்தை ஏறிட்டும் பார்க்கக் கூடாது! சீச்சீ! என் அருமை வேலாயுதமே! உனக்கு இந்தக் கதியா நேர்ந்தது?இத்தகைய அவமானமா உனக்கு நேர்ந்தது? இதை எப்படி நிவர்த்தி செய்து உனக்கு நேர்ந்த மாசைத் துடைக்கப்போகிறேன்!...
இவ்வளவு எண்ணமும் சில கணநேரத்தில் வந்தியத்தேவனுடைய மனத்தில் ஊடுருவிச் சென்றன. அங்குநின்று சிரித்தவர்கள் மட்டும் ஆண் மக்களாயிருந்திருந்தால், அங்கேயே ஒரு போர்க்களம் ஏற்பட்டிருக்கும்!சிரிக்கத் துணிந்தவர்கள் அக்கணமே உயிரை இழந்திருப்பார்கள்! அரிசிலாற்றின் செந்நீர்ப் பிரவாகத்துடன்அவர்களுடைய இரத்தமும் கலந்து ஓடியிருக்கும்! ஆனால் இவர்கள் பெண்கள்! இவர்களை என்ன செய்ய முடியும்?இவர்களை விட்டு ஓடிப் போவது ஒன்றுதான் செய்யக்கூடிய காரியம்!
தன் உள்ளத்தை நிலைகுலையச் செய்த மங்கையின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல்வந்தியத்தேவன் பாய்ந்து ஓடி நதிக் கரை மீது ஏறினான். அங்கே நின்றிருந்த அவனுடைய குதிரையும்அச்சமயம் ஒரு கனைப்புக் கனைத்தது. குதிரையும் கூட அப்பெண்களுடன் சேர்ந்து தன்னைப் பார்த்துச்சிரிப்பதாகவே வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. எனவே தன் கோபத்தையெல்லாம் அக்குதிரையின் பேரில்காட்டினான். அதன் மேல் பாய்ந்து ஏறி உட்கார்ந்து தலைக் கயிற்றினால் 'சுளீர், சுளீர்' என்று இரண்டு அடிகொடுத்தான்! அந்த ரோஷமுள்ள குதிரை நதிக் கரைச் சாலையின் வழியாகப் பிய்த்துக் கொண்டுபாய்ந்தோடியது.
சிறிது நேரம் வரையில் குந்தவைப்பிராட்டி குதிரை போன திசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். குதிரை கிளப்பிய புழுதி அடங்கும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றாள்.
பின்னர், தோழிப் பெண்களைத் திரும்பிப் பார்த்து, "பெண்களா! உங்களுக்கு மட்டுமரியாதை இன்னும் தெரியவில்லை. நீங்கள் அப்படச் சிரித்திருக்கக் கூடாது. நாம் தனியாயிருக்கும்போது, எப்படி வேண்டுமானாலும் நீங்கள் சிரித்துக் கொம்மாளம் அடிக்கலாம். அன்னிய புருஷன் வந்திருக்கும்போது அடக்கமாயிருக்க வேண்டாமா? சோழ நாட்டுப் பெண்களைப் பற்றி அந்த வாலிபன் என்ன எண்ணிக் கொண்டு போவான்?" என்று சொன்னாள்.
பக்க தலைப்பு
பதினெட்டாம் அத்தியாயம்
இடும்பன்காரி
கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான்நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டுவந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம்.
வந்தியத்தேவன் குதிரை ஏறிக் குடந்தை நகர் நோக்கிச் சென்றதும், திருமலை அவன் போன திசையைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சொல்லிக் கொண்டான்.
"இந்த வாலிபன் மிகப் பொல்லாதவனாயிருக்கிறான்.நாம் தட்டியில் நுழைந்தால் இவன் கோலத்தில் நுழைகிறான். இவன் உண்மையில் யாருடைய ஆள், எதற்காக, எங்கே போகிறான் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடம்பூர் மாளிகையில் நடந்த சதிக் கூட்டத்தில் இவன் கலந்து கொண்டானா என்றும் தெரியவில்லை. நல்ல வேளையாகக் குடந்தை சோதிடரைப் பற்றி இவனிடம் சொல்லிவைத்தோம். நம்மால் அறிய முடியாததைக் குடந்தை சோதிடராவது தெரிந்து கொள்ளுகிறாரா பார்க்கலாம்!..."
"என்ன, சுவாமி! அரசமரத்தோடு பேசறீங்களா? உங்களுக்கு நீங்களே பேசிக்கிறீங்களா?"என்ற குரலைக் கேட்டு திருமலையப்பன் திரும்பிப் பார்த்தான்.
கடம்பூரிலிருந்து வந்த வந்தியத்தேவனுக்குக் குதிரை பிடித்துக் கொண்டு வந்த பணியாள் பக்கத்தில் நின்றான்.
"அப்பனே! நீயா கேட்டாய்? நான் எனக்கு நானே பேசிக் கொள்ளவும் இல்லை; அரச மரத்தோடு பேசவும் இல்லை. இந்த மரத்தின் மேலே ஒரு வேதாளம் இருக்கிறது; அதனோடு சிறிது சல்லாபம் செய்தேன்!" என்றான் திருமலையப்பன்.
"ஓஹோ! அப்படிங்களா! அந்த வேதாளம் சைவமா? வைஷ்ணவமா?" என்றான் அந்த ஆள்.
"அதைத்தான் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்குள்ளே நீ வந்து குறுக்கிட்டாய். வேதாளம்மறைந்து விட்டது; போனால் போகட்டும்! உன் பெயர் என்ன அப்பனே?"
"எதற்காக கேட்கிறீங்க, சுவாமி!"
"நடுக் கொள்ளிடத்தில் படகு கவிழாமல் காப்பாற்றினாயே! அப்படிப்பட்ட புண்ணியவானாகிய உன்னை நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டாமா?"
"என் பெயர்..என் பெயர்..இடும்பன்காரி, சுவாமி!" என்று இழுத்தாற்போல் சொன்னான்.
"ஓ! இடும்பன்காரியா? எப்போதோ கேட்ட ஞாபகமாயிருக்கிறதே!"
இடும்பன்காரி அப்போது ஒரு விசித்திரமான காரியம் செய்தான்.தன்னுடைய விரித்த கைகள்இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்றைக் குப்புறுத்தி வைத்துக் கொண்டு, இரு ஓரத்துக் கட்டை விரல்களையும்ஆட்டினான்; ஆட்டிக் கொண்டே திருமலையப்பரின் முகத்தைப் பார்த்தான். "அப்பனே! இது என்ன சமிக்ஞை?எனக்கு விளங்கவில்லையே?" என்றான் திருமலை. அப்போது இடும்பன்காரியின் கரிய முகம் மேலும் சிறிதுகருத்தது; கண் புருவங்கள் நெரிந்தன.
"நானா? நான் ஒன்றும் சமிக்ஞை செய்யவில்லையே?" என்றான்.
"செய்தாய் செய்தாய்! நான்தான் பார்த்தேனே? பரதநாட்டிய சாஸ்திரத்தில் திருமாலின் முதல் அவதாரத்துக்குஒரு அஸ்தம் பிடிப்பதுண்டு அதுமாதிரி செய்தாயே?"
"திருமாலின் முதல் அவதாரம் என்றால்? அது என்ன? எனக்குத் தெரியவில்லை சுவாமி!"
"விஷ்ணுவின் முதல் அவதாரம் தெரியாதா? மச்சாவதாரம்."
"மீனைச் சொல்லுறீங்களா!"
"ஆமாம், அப்பனே, ஆமாம்!"
"நல்லவேளை, சாமி! உங்கள் கண்ணே விசித்திரமான கண்ணாயிருக்கிறதே! வெறும் மரத்தின் மேலே வேதாளம் தெரிகிறது. என் வெறுங்கையிலே மச்சாவதாரம் தெரிகிறது! ஒருவேளை மீன் பேரிலே சாமியாருக்குக் கொஞ்சம் ஆசை அதிகோ?"
"சேச்சே! அந்த மாதிரியெல்லாம் சொல்லாதே அப்பனே! அது போனால் போகட்டும். நம்மோடு படகிலே ஒரு வீர சைவர் வந்தாரே, அவர் எந்தப் பக்கம் போனார் பார்த்தாயா?"
"பார்க்காமலென்ன? பார்த்தேன் நான் குதிரை வாங்கப் போன பக்கந்தான் அவரு வந்தார்;உங்களைப் பற்றித் திட்டிக் கொண்டே வந்தார்..."
"என்னவென்று என்னைத் திட்டினார்?"
"உங்களை மறுபடியும் அந்த வீர சைவர் பார்த்தால் உங்கள் முன் குடுமியைச் சிரைத்துத் தலையை மொட்டையடித்து..."
"ஓகோ! அந்த வேலை கூட அவருக்குத் தெரியுமா?"
"உங்கள் திருமேனியிலுள்ள நாமத்தையெல்லாம் அழித்து விட்டுத் திருநீற்றைப் பூசி விடுவாராம்!"
"அப்படியானால் அவரைக் கட்டாயம் நான் பார்த்தேயாக வேண்டும்; அவருக்கு எந்த ஊர் என்று உனக்குத் தெரியுமா?"
"அவருக்கு புள்ளிருக்கும் வேளூர் என்று அவரே சொன்னாருங்க!"
"அந்த வீர சைவரைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் மறு காரியம்.அப்பனே! நீ எங்கேபோகப் போகிறாய்? ஒருவேளை நீயும் அந்த வழி வரப் போகிறாயோ?"
"இல்லை, இல்லை நான் எதற்காக அங்கே வருகிறேன்?. திரும்பிக் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்குத்தான் போகிறேன். இல்லாவிட்டால் எஜமானர் என் கண்ணைப் பிடுங்கி விட மாட்டாரா?"
"அப்படியானால், உடனே திரும்பு அதோ படகு புறப்படப் போகிறது!"
இடும்பன்காரி திரும்பிப் பார்த்தபோது, ஆழ்வார்க்கடியான் கூறியது உண்மை என்று தெரிந்தது;படகு புறப்படும் தருவாயில் இருந்தது.
"சரி, சாமியாரே! நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் படகுத் துறையை நோக்கி விரைந்து சென்றான் இடும்பன்காரி.
பாதி வழியில் ஒரு தடவை திரும்பிப் பார்த்தான். அதற்குள் ஆழ்வார்க்கடியான் ஒரு விந்தையானகாரியம் செய்திருந்தான். மளமளவென்று அந்த அரச மரத்தின் மீது பாய்ந்து ஏறிக் கிளைகள்அடர்ந்திருக்கும் இடததுக்குப் போய் விட்டான். ஆகையால் இடும்பன்காரியின் கண்ணோட்டத்தில் அவன்விழவில்லை.
இடும்பன்காரி நதியின் பரிசில் துறையை அடைந்தான். படகோட்டிகளில் ஒருவன், "அக்கரைக்கு வருகிறாயா, அப்பா?" என்று கேட்டான்.
"இல்லை, அடுத்த படகில் வரப் போகிறேன்; நீ போ!" என்றான் இடும்பன்காரி.
"அடே! இவ்வளவுதானா? நீ வருகிற வேகத்தைப் பார்த்துவிட்டு அல்லவா படகை நிறுத்தினேன்!" என்று சொல்லி ஓடக்காரன் கோல் போட்டு ஓடத்தை நதியில் செலுத்தினான்.
இதற்குள் அரசமரத்தின் நடுமத்தி வரையில் ஏறி நன்றாக மறைந்து உட்கார்ந்து கொண்ட திருமலை,"ஓகோ! நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இவன் படகில் ஏறவில்லை; திரும்பித்தான் வரப்போகிறான். வந்த பிறகு எந்தப் பக்கம் போகிறான் என்று பார்க்க வேண்டும். இவனுடைய கைகள் மச்சஹஸ்த முத்திரை காட்டியதை நான் நன்றாகப் பார்த்தேன். அதன் பொருள் என்ன? மீன்! மீன்! மீன் சின்னம் எதைக் குறிக்கிறது? ஆ! மீன் பாண்டியனுடைய கொடியில் பொறித்ததல்லவா? ஒருவேளை, ஆஹாஹா!.. அப்படியும் இருக்குமோ! பார்க்கலாம்! சிறிது பொறுமையுடனே இருந்து பார்க்கலாம். பொறுத்தவர் பூமி ஆள்வார், பொங்கியவர் காடாள்வார்... ஆனால், இந்தக் காலத்தில் பூமி ஆள்வதைக் காட்டிலும் காடு ஆள்வதே மேலானது என்று தோன்றுகிறது! ஆனாலும் பொறுத்துப் பார்க்கலாம்!.." இவ்விதம் அரசமரத்திலிருந்த அருவமான வேதாளத்தினிடம் திருமலை சொல்லிக் கொண்டிருந்தான்.
விரைவில் அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது; படகு இடும்பன்காரியை ஏற்றிக் கொள்ளாமலேசென்றது.இடும்பன்காரி நதிக்கரையிலிருந்தபடி அரச மரத்தடியை உற்று உற்றுப் பார்த்தான். பிறகு நாலாதிசைகளிலும் துளாவிப் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் எங்குமில்லையென்பதை நன்கு தெரிந்து கொண்டுதிரும்பி அதே அரசமரத்தடிக்கு வந்து சேர்ந்தான். இன்னும் ஒரு தடவை சுற்றுமுற்றும் நன்றாய்ப் பார்த்து விட்டுஅந்த மரத்தடியிலேயே உட்கார்ந்து கொண்டான். எதையோ, அல்லது யாரையோ எதிர்பார்ப்பவன் போல்அவனுடைய கண்கள் நாலாபுறமும் சுழன்று நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால், மரத்தின் மேலே மட்டும் அவன்அண்ணாந்து பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் திருமலை நன்றாகத் தம் திருமேனியை மறைத்துக்கொண்டிருந்தபடியால் மரத்தின் மேல் அவன் உட்கார்ந்திருப்பது இடும்பன்காரிக்குத் தெரிந்திராது.
சுமார் ஒரு நாழிகை நேரம் இவ்விதம் சென்றது. திருமலைக்குக் கால்கள் மரதுப் போகத்தொடங்கின. இனி வெகு நேரம் மரத்தின் மேல் இருக்க முடியாதென்று தோன்றியது. இடும்பனோ,மரத்தடியிலிருந்து எழுந்திருக்கும் வழியாகத் தோன்றவில்லை. தப்பித்துப் போவது எப்படி! எவ்வளவுஜாக்கிரதையாக மரத்தின் மறுபக்கத்தில் இறங்கினாலும் ஏதாவது சத்தம் கேளாமல் இராது! கேட்டால்இடும்பன்காரி உடனே பார்த்து விடுவான். அவனோ இடுப்பில் ஒரு கூரிய கொடுவாளைச் செருக்கிக்கொண்டிருந்தான். அதைத் தன் பேரில் அவன் பிரயோகிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?
வேறு என்னதான் செய்வது? பேய் பிசாசைப் போல் பயங்கரமாகச் சத்தமிட்டுக் கொண்டு இடும்பனின்மேலேயே குதிக்கலாமா? குதித்தால் தன்னை வேதாளம் என்று நினைத்துக் கொண்டு அவன் பயத்தினால்மூர்ச்சையடைந்து விழலாம் அல்லவா? அல்லது தப்பித்து ஓடப் பார்க்கலாம் அல்லவா! அச்சமயம் தானும் தப்பிஓடிவிடலாம்!... இவ்விதம் திருமலை எண்ணிய சமயத்தில், அவனுடைய சோதனை முடிவடையும் எனத்தோன்றியது. ஓர் ஆள் தென்மேற்கிலிருந்து, அதாவது குடந்தைச் சாலை வழியாக வந்து கொண்டிருந்தான். அவனுக்காகத்தான் இடும்பன்காரி இத்தனை நேரமாய்க் காத்திருக்கிறான் என்று திருமலையின் உள்ளுணர்ச்சிகூறியது.
புது ஆள் வந்ததைப் பார்த்ததும் அசமரத்தடியில் உட்கார்ந்திருந்த இடும்பன் எழுந்து நின்றான். வந்தவன், முன்னால் இடும்பன் செய்த சமிக்ஞையைச் செய்தான். அதாவது ஒரு விரித்த புறங்கையின் மேல்இன்னொரு விரித்த கையை வைத்து, இரண்டு கட்டை விரல்களை ஆட்டி, மச்ச சமிக்ஞை பிடித்துக் காட்டினான்;அதைப் பார்த்த இடும்பனும் அதே மாதிரி செய்து காட்டினான்.
"உன் பெயர் என்ன?" என்று வந்தவன் கேட்டான்.
"என் பெயர் இடும்பன்காரி; உங்கள் பெயர்?"
"சோமன் சாம்பவன்!"
"உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்."
"நானும் உன்னைத் தேடிக் கொண்டு தான் வந்தேன்."
"நாம் எந்தத் திசையில் போக வேண்டும்?"
"மேற்குத் திசையில்தான்!"
"எவ்விடத்துக்கு?"
"பகைவனின் பள்ளிப்படைக்கு!"
"திருப்புறம்பயம் அருகில்..."
"இரைந்து பேசாதே! யார் காதிலாவது விழப் போகிறது" என்று சொல்லிச் சோமன் சாம்பவன்நாலாபக்கமும் பார்த்தான்.
"இங்கே ஒருவரும் இல்லை; முன்னாலேயே நான் பார்த்து விட்டேன்."
"பக்கத்தில் எங்கும் ஒளிந்திருக்கவும் இடமில்லையே?"
"கிடையவே கிடையாது!"
"அப்படியானால் புறப்படு எனக்கு அவ்வளவு நன்றாக வழி தெரியாது. நீ முன்னால் போ! நான் சற்றுப் பின்னால் வருகிறேன். அடிக்கடி நின்று நான் பின்னால் வருகிறேனா என்று பார்த்துப் போ!"
"ஆகட்டும். வழி நல்ல வழியல்ல; காடும் மேடும் முள்ளும் கல்லுமாயிருக்கும், ஜாக்கிரதையாகப் பார்த்து நடந்து வர வேண்டும்!"
"சரி, சரி, நீ புறப்பட்டுப் போ! காட்டு வழியாயிருந்தாலும் யாராவது எதிர்ப்பட்டால் மறைந்து கொள்ள வேண்டும் தெரிந்ததா?"
"தெரிந்தது, தெரிந்தது!"
இடும்பன்காரி கொள்ளிடக் கரையோடு மேற்குத் திசையை நோக்கிப் போனான். அவனுக்குச் சற்றுப் பின்னால் சோமன் சாம்பவனும் தொடர்ந்து சென்றான். இருவரும் கண்ணுக்கு மறையும் வரையில்ஆழ்ார்க்கடியான் மரத்தின் மேலேயே இருந்தான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும்இருந்தான்.
ஆஹா! காலம் பொல்லாத காலம்! எதிர்பாராத காரியங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. ஏதோ ஒரு பெரிய மர்மமான காரியத்தைத் தெரிந்து கொள்ளக் கடவுள் அருளால் சந்தர்ப்பம்கிடைத்திருக்கிறது.இனி நம்முடைய சாமர்த்தியத்தைப் பொறுத்தது விஷயத்தை அறிவது. கடம்பூர்மாளிகையில் அறைகுறையாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. இங்கே அப்படி ஏமாந்து போகக் கூடாது. திருப்புறம்பயம் - பள்ளிப்படையென்றால், கங்க மன்னன் பிரிதிவீபதியின் பள்ளிப்படையைத்தான்சொல்லியிருக்க வேண்டும். அந்தப் பள்ளிப்படையைக் கட்டி நூறு வருஷம் ஆகிறது. ஆகையால் பாழடைந்துகிடக்கிறது; சுற்றிலும் காடு மண்டிக் கிடக்கிறது; கிராமமோ சற்றுத் தூரத்தில் இருக்கிறது அங்கேஎதற்காக இவர்கள் போகிறார்கள்! இந்த இரண்டு பேரும் மட்டும் பேச வேண்டிய விஷயமாயிருந்தால், இங்கேயேபேசிக்கொள்ளுவார்கள். காட்டு வழியில் ஒரு காத தூரம் போக வேண்டியதில்லையே? ஆகையால், அங்கேஇன்னும் சிலரும் வரப் போகிறார்கள் என்பது நிச்சயம். எதற்காக? பிரிதிவீபதியின் பள்ளிப்படையைப்'பகைவனின் பள்ளிப்படை'யென்று இவர்களில் ஒருவன் சொல்வானேன்? பிரிதிவீபதி யாருக்குப் பகைவன்?ஆகா! நாம் நினைத்தது உண்மையாகும் போலிருக்கிறதே! எதற்கும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் கொள்ளிடக் கரையோடு போகிறார்கள். நாம் மண்ணிக் கரையோடு போகலாம். மண்ணிக்கரையில் காடு அதிக அடர்த்தியாயிருந்தாலும் பாதகமில்லை. காடும் மேடும் முள்ளும் கல்லும் நமக்கு என்னஇலட்சியம்? அவைதாம் நம்மைக் கண்டு பயப்பட வேண்டும்!...
இவ்வாறு எண்ணிக் கொண்டும் வாயோடு முணுமுணுத்துக் கொண்டும் திருமலை அரசமரத்திலிருந்துஇறங்கிச் சற்றுத் தெற்கு நோக்கிப போனான். மண்ணியாறு வந்தது அதன் கரையோடு மேற்கு நோக்கிநடையைக் கட்டினான். ஜன சஞ்சாரமில்லாத அடர்ந்த காடுகளின் வழியாக ஆழ்வார்க்கடியான் புகுந்து சென்றுசூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் திருப்புறம்பயம் பள்ளிப்படைக் கோயிலை அடைந்தான்.
பக்க தலைப்பு
பத்தொன்பதாம் அத்தியாயம்
ரணகள அரண்யம்
பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக்கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் 'நடுகற் கோயில்' என்றுவழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது'பள்ளிப்படை' என்று வழங்கப்படும்.
குடந்தை நகருக்கு அரைக்காதம் வடமேற்கில் மண்ணியாற்றுக்கு வடகரையில் திருப்புறம்பயம் என்னும்கிராமத்துக்கருகில் ஒரு பள்ளிப்படைக் கோயில் இருந்தது. இது அந்தப் பிரதேசத்தில் நடந்த ஒரு மாபெரும்போரில் உயிர் நீத்த கங்க மன்னன் பிரிதிவீபதியின் ஞாபகமாக எடுத்தது. உலக சரித்திரம் அறிந்தவர்கள் வாடர்லூர்ச் சண்டை, பானிபெத் சண்டை, பிளாசிச் சண்டை போன்ற சில சண்டைகளின் மூலம் சரித்திரத்தின் போக்கே மாறியது என்பதை அறிவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் திருப்புறம்பயம் சண்டை அத்தகைய முக்கியம் வாய்ந்தது. நமது கதை நடந்த காலத்துக்குச் சுமார் நூறு ஆண்டு காலத்துக்கு முன்னால் அச்சண்டை நடந்தது. அதன் வரலாறு தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
'கரிகால் வளவன்' பெருநற்கிள்ளி, இளஞ்சேட் சென்னி, தொடித்தோட் செம்பியன் முதலியசோழகுல மன்னர்கள் சீரும் சிறப்புமாக சோழ நாட்டை ஆண்டிருந்த காலத்துக்குப் பிறகு ஏறக்குறைய ஐந்நூறுஅறுநூறு வருஷ காலம் சோழர் குலத்தின் கீர்த்தியை நீடித்த கிரகணம் பிடித்திருந்தது. தெற்கேபாண்டியர்களும், வடக்கே பல்லவர்களும் வலிமை மிக்கவர்களாகிச் சோழர்களை நெருக்கி வந்தார்கள். கடைசியாக, சோழ குலத்தார் பாண்டியர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அவர்களுடைய நெடுங்காலத்தலைநகரமான உறையூரை விட்டு நகர வேண்டி வந்தது. அப்படி நகர்ந்தவர்கள் குடந்தைக்கு அருகில் இருந்தபழையாறை என்னும் நகருக்கு வந்து சேர்ந்தார்கள். ஆயினும் உறையூர் தங்கள் தலைநகரம் என்னும் உரிமையைவிட்டு விடவில்லை. 'கோழி வேந்தர்' என்னும் பட்டத்தையும் விட்டுவிடவில்லை.
பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர்.இவர் பற்பல யுத்த களங்களில் முன்னணியில் நின்று போர் செய்து உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களைஅடைந்தவர். 'எண்கொண்ட தொண்ணூற்றின் மேலுமிரு மூன்று புண்கொண்ட வெற்றிப் புரவலன்' என்றும், 'புண்ணூறுதன்றிருமேனியிற் பூணாகத் தொண்ணூறும் ஆறுஞ் சுமந்தோனும்' என்றெல்லாம் பிற்கால ஆஸ்தானப் புலவர்களால்பாடப் பெற்றவர். இவருடைய மகன் ஆதித்த சோழன் தந்தைக்கு இணையான பெரு வீரனாக விளங்கினான். இவனும் பல போர்களில் கலந்து கொண்டு புகழ்பெற்றான்.
விஜயாலய சோழர் முதுமைப் பிராயத்தை அடைந்து மகனுக்குப் பட்டங்கட்டி விட்டு ஓய்ந்திருந்தார். அச்சமயத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் பகைமை முற்றி அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்துப் பாண்டிய மன்னனுக்கு வரகுணவர்மன் என்று பெயர்; பல்லவ அரசனுக்கு அபராஜிதவர்மன் என்றுபெயர். இந்த இரண்டு பேரரசர்களுக்குள் நடந்த சண்டைகள் பெரும்பாலும் சோழ நாட்டில் நடைபெற்றன. யானையும் யானையும் மோதிச் சண்டையிடும்போது நடுவில் அகப்பட்டுக் கொள்ளும் சேவல் கோழியைப் போல்சோழ நாடு அவதிப்பட்டது. சோழ ாட்டு மக்கள் துன்புற்றார்கள். எனினும் இப்போர்களை விஜயாலய சோழர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு போரிலும் ஏதாவது ஒரு கட்சியில் தம்முடைய சிறிய படையுடன் போய்க் கலந்து கொண்டார். வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும் சோழ நாட்டில் போர்க்குணம் மிகுந்து வந்தது.
காவேரி நதியிலிருந்து பல கிளை நதிகள் பிரிந்து சோழ நாட்டை வளப்படுத்துவதை யாவரும்அறிவார்கள். அக்கிளை நதிகள் யாவும் காவிரிக்குத் தெற்கே பிரிகின்றன. கொள்ளிடத்திலிருந்துபிரிந்து காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் பாயும் நதி ஒன்றே ஒன்றுதான்; அதற்கு மண்ணியாறு என்றுபெயர். இந்த மண்ணியாற்றின் வடகரையில், திருப்புறம்பயம் கிராமத்துக்கு அருகில், பாண்டியர்களுக்கும்பல்லவர்களுக்கும் இறுதியான பலப்பரீட்சை நடந்தது. இரு தரப்பிலும் படைபலம் ஏறக்குறைய சமமாக இருந்தது.பல்லவ அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு பிரிதிவீபதி வந்திருந்தான். ஆதித்த சோழனும்அபராஜிதவர்மனுடைய கட்சியில் சேர்ந்திருந்தான்.
பாண்டிய சைன்யத்துடனும் பல்லவ சைன்யத்துடனும் ஒப்பிட்டால், சோழ சைன்யம் மிகச் சிறியதாகவேஇருந்தது.எனினும், இம்முறை பாண்டியன் வெற்றி பெற்றால், சோழ வம்சம் அடியோடு நாசமாக நேரும் என்றுஆதித்தன் அறிந்திருந்தான். ஆகையால், பெரிய சமுத்திரத்தில் கலக்கும் காவேரி நதியைப் போல்பல்லவரின் மகா சைன்யத்தில் தன்னுடைய சிறு படையையும் சேர்ந்திருந்தான்.
காத தூரத்துக்குக் காத தூரம் ரணகளம் பரவியிருந்தது. ரத, கஜ, துரக, பதாதிகள் என்னும்நாலுவகைப் படைகளும் போரில் ஈடுபட்டிருந்தன. மலையோடு மலை முட்டுவது போல் யானைகள் ஒன்றையொன்றுதாக்கிய போது நாலா திசைகளும் அதிர்ந்தன. புயலோடு புயல் மோதுவது போல் குதிரைகள் ஒன்றின் மீதுஒன்று பாய்ந்த போது கதிரை வீரர்களின் கையிலிருந்த வேல்கள் மின்வெட்டுகளைப் போல் பிரகாசித்தன. ரதத்தோடு ரதம் மோதிச் சுக்குநூறாகித் திசையெல்லாம் பறந்தன. காலாள் வீரர்களின் வாள்களோடுவாள்களும், வேல்களோடு வேல்களும் உராய்ந்த போது எழுந்த ஜங்கார ஒலிகளினால் திக்குத் திகாந்தங்கள்எல்லாம் நடுநடுங்கின. மூன்று நாள் இடைவிடாமல் சண்டை நடந்த பிறகு, ரணகளம் முழுவதும் ரத்தக் கடலாகக்காட்சியளித்தது. அந்தக் கடலில் செத்த யானைகளும் குதிரைகளும் திட்டுத் திட்டாகக் கிடந்தன. உடைந்தரதங்களின் பகுதிகள் கடலில் கவிழ்ந்த கப்பலின் பலகைகளைப் போல் மிதந்தன. இரு தரப்பிலும் ஆயிரம்பதினாயிரம் வீரர்கள் உயிரிழந்து கிடந்தார்கள்.
மூன்று நாள் இவ்விதம் கோர யுத்தம் நடந்த பிறகு பல்லவர் சைன்யத்தில் ஒரு பகுதிதான்மிஞ்சியிருந்தது. மிஞ்சியவர்களும் மிகக் களைத்திருந்தார்கள். பாண்டிய நாட்டு வீர மறவர்களோ,களைப்பையே அறியாத வரம் வாங்கி வந்தவர்களைப் போல், மேலும் மேலும் வந்து தாக்கினார்கள். அபராஜிதவர்மனுடைய கூடாரத்தில் மந்திராலோசனை நடந்தது. அபராஜிதன், பிரதிவீபதி, ஆதித்தன்ஆகிய மூன்று மன்னர்களுடன் படைத்தலைவர்களும் கலந்து ஆலோசித்தார்கள். இனி எதிர்த்து நிற்க முடியாதுஎன்றும், பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரைக்குச் சென்று விடுவதே உசிதம் என்றும் முடிவு செய்தார்கள்.
இப்படிப்பட்ட நிலைமையில் போர்களத்தில் ஓர் அதிசயம் நடந்தது. முதுமையினால் தளர்ந்தவனும்,உடம்பில் தொண்ணூற்று காயவடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும்சக்தியை இழந்தவனுமான விஜயாலய சோழன் எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான். பல்லவ சைன்யம்பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழ நாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்கமுடியாத என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்தவீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.
"ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!" என்றான்.
"நமது யானைப் படை முழுதும் அதமாகி விட்டது; ஒன்று கூடத் தப்பவில்லை" என்றார்கள்.
"ஒரு குதிரை, ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள்!" என்றான்.
"உயிருள்ள குதிரை ஒன்று கூட மிஞ்சவில்லை" என்று சொன்னார்கள்.
"சோழ நாட்டுச் சுத்த வீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்!" என்று விஜயாலயன் அலறினான்.
இருவருக்கு பதிலாக இருநூறு பேர் முன்னால் வந்தார்கள்.
"இரண்டு பேர் தோளில் வலியும் நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் என்னைத் தோள் கொடுத்துத்தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பின்னால் வந்து கொண்டிருங்கள். என்னைச்சுமக்கும் இருவர் விழுந்தால், பின்னால் வரும் இருவர் என்னைத் தூக்கி கொள்ளுங்கள்!" என்றான் அந்த வீராதிவீரன். அப்படியே இரண்டு பீமசேனர்கள் முன்னால் வந்து விஜயாலயனைத் தோளில் தூக்கிக் கொண்டார்கள்.
"போங்கள்! போர் முனைக்குப் போங்கள்!" என்று கர்ஜித்தான்.
போர்களத்தில் ஓரிடத்தில் இன்னமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தெற்கத்தி மறவர்கள்கீழைநாட்டாரைத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டே வந்தார்கள். இருவருடைய தோள்களில் அமர்ந்தவிஜயாலயன் அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக்கொண்டு திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக் கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான். அவனைத்தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்து சென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்துகொண்டேயிருந்தன.
ஆம்; இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காகப் பின்வாங்கிய வீரர்கள் பலரும் முன்னால் வந்தார்கள். விஜயாலயனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள். பிறகுஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு தாங்களும் போர்முனையில் புகுந்தார்கள். அவ்வளவுதான்; தேவிஜயலக்ஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பி விட்டது.
பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக்கைவிட்டார்கள். மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழப் போர்முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். கங்க மன்னன் பிரதிவீபதிஅன்றைய போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு, தன் புகழுடம்பை அப்போர்க்களத்தில்நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான். அத்தகைய வீரனுடைய ஞாபகார்த்தமாக அப்போர்களத்தில்வீரக் கல் நாட்டினார்கள். பிறகு பள்ளிப்படைக் கோயிலும் எடுத்தார்கள்.
அத்தகைய கொடூரமான பயங்கர யுத்தம் நடந்த ரணகளம் சில காலம் புல் பூண்டுகள் முளையாமல்கிடந்தது. அந்தப் பக்கம் மக்கள் போவதேயில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு அங்கே காடு மண்டஆரம்பித்தது. பள்ளிப்படைக் கோவிலைச் சுற்றிக் காடு அடர்ந்தது, புதர்களில் நரிகள் குடிபுகுந்தன. இருண்ட மரக்கிளைகளில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன. நாளடைவில் அப்பள்ளிப்படைக்கோயிலுக்கு யாரும் போவதை நிறுத்தி விட்டார்கள். எனவே, கோயிலும் நாளுக்கு நாள் தகர்ந்து போய்வந்தது. நமது கதை நடக்கும் காலத்தில் பாழடைந்து கிடந்தது.
இத்தகைய பாழடைந்த பள்ளிப்படைக் கோயிலுக்கு இருட்டுகிற நேரத்தில் ஆழ்வார்க்கடியான் வந்துசேர்ந்தான். அக்கோயிலின் மேல் மண்டப விளிம்பில் அமைந்த காவல் பூதகணங்கள் அவனைப் பயமுறுத்தப்பார்ததன. ஆனால் அந்த வீர வைஷ்ணவ சிகாமணியா பயப்படுகிறவன்? பள்ளிப்படைக் கோயில் மண்டபத்தின்மீது தாவி ஏறினான். மண்டபத்தின் மீது கவிந்திருந்த மரக்கிளையின் மறைவில் உட்கார்ந்து கொண்டான்.நாலாபுறமும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் அடர்த்தியான இருளைக் கிழித்துக்கொண்டு பார்க்கும் சக்தியைப் பெற்றிருந்தன. அவனுடைய செவிகளும் அவ்வாறே மிக மெல்லிய இசையையும்கேட்கக்கூடிய கூர்மை பெற்றிருந்தன.
இருட்டி ஒரு நாழிகை; இரண்டு நாழிகை; மூன்று நாழிகையும் ஆயிற்று. சுற்றிலும் சூழ்ந்திருந்தஅந்தகாரம் அவனை அடியோடு அமுக்கி, மூச்சுத் திணறச் செய்தது. அவ்வப்போது காட்டு மரங்களினிடையேசலசலவென்று ஏதோ சத்தம் கேட்டது. அதோ ஒரு மரநாய் மரத்தின் மேல் ஏறுகிறது! அதோ ஒரு ஆந்தைஉறுமுகிறது! இந்தப் பக்கம் ஒரு கோட்டான் கூவுகிறது! மரநாய்க்குப் பயந்து ஒரு பறவை சடசடவென்று சிறகைஅடித்துக் கொண்டு மேல் கிளைக்குப் பாய்கிறது. அதோ, நரிகள் ஊளையிடத் தொடங்கி விட்டன. தலைக்குமேலே ஏதோ சத்தம் கேட்டது. அண்ணாந்து பார்த்தான்; அணிலோ, ஓணானோ, அல்லது அத்தகைய வேறொருசிறிய பிராணியோ மரக்கிளைகளின் மீது தாவி ஏறிற்று.
மரக்கிளைகளின் இடுக்குகளின் வழியாக வானத்தில் ஒரு சிறு பகுதி தெரிந்தது. விண்மீன்கள்'முணுக்', 'முணுக்'கென்று மின்னிக் கொண்டு கீழே எட்டிப் பார்த்தன. அந்தத் தனிமை மிகுந்த கனாந்தகாரத்தினிடையே வானத்து நட்சத்திரங்கள் அவனுடன் நட்புரிமை கொண்டாடுவதுபோல் தோன்றின. எனவே, ஆழ்வார்க்கடியான் மரக்கிளைகளின் வழியாக எட்டிப் பார்த்த நட்சத்திரங்களைப் பார்த்து மெல்லியகுரலில் பேசினான்;
"ஓ! நட்சத்திரங்களே! உங்களை இன்றைக்குப் பார்த்தால் பூவுலக மக்களின் அறிவீனத்தைப் பார்த்துக் கேலி செய்து கண்சிமிட்டிச் சிரிப்பவர்களைப் போலத் தோன்றுிறது. சிரிப்பதற்கு உங்களுக்கு வேண்டிய காரணம் உண்டு. நூறு வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் நடந்த பெரும் போரையும், போர் நடந்த பிறகு இங்கே வெகு நாள் வரை இரத வெள்ளம் பெருகிக் கிடந்ததையும் பார்த்திருக்கிறீர்கள். மனிதர்கள் எதற்காக இப்படி ஒருவரையொருவர் பகைக்க வேண்டும் என்று அதிசயிக்கிறீர்கள். எதற்காக இப்படி மனித இரத்தத்தைச் சிந்தி வெள்ளமாக ஓடச் செய்ய வேண்டும் என்றும் வியக்கிறீர்கள் இதற்குப் பெயர் வீரமாம். "
"ஒரு மனிதன் இறந்து நூறு வருஷம் ஆகியும் அவனிடம் பகைமை பாராட்டுகிறார்கள்! இந்தப்பள்ளிப்படை பகைவனுடைய பள்ளிப்படையாம்! பகைவன் பள்ளிப்படைக்கு அருகில் கூடி யோசிக்கப்போகிறார்களாம். செத்துப் போனவர்களின் பெயரால் உயிரோடிருப்பவர்களை இம்சிப்பதற்கு! வானத்துவிண்மீன்களே! நீங்கள் ஏன் சிரிக்க மாட்டீர்கள்? நன்றாய்ச் சிரியுங்கள்!
"கடவுளே! இங்கு வந்தது வீண்தானா? இன்றிரவெல்லாம் இப்படியே கழியப் போகிறதா?எதிர்பார்த்த ஆட்கள் இங்கே வரப்போவதில்லையா? என் காதில் விழுந்தது தவறா? நான் சரியாகக்கவனிக்கவில்லையா? அல்லது அந்த மச்சஹஸ்த சமிக்ஞையாளர்கள் தங்கள் யோசனையை மாற்றிக் கொண்டுவேறிடத்துக்குப் போய் விட்டார்களா! என்ன ஏமாற்றம்? இன்றைக்கு மட்டும் நான் ஏமாந்து போனால் என்னைநான் ஒரு நாளும் மன்னித்துக் கொள்ள முடியாது!... ஆ! அதோ சிறிது வௌிச்சம் தெரிகிறது! அதுஎன்ன? வௌிச்சம் மறைகிறது; மறுபடி தெரிகிறது சந்தேகமில்லை. அதோ, சுளுந்து கொளுத்திப் பிடித்துக்கொண்டு யாரோ ஒருவன் வருகிறான்! இல்லை இரண்டு பேர் வருகிறார்கள் காத்திருந்து வீண் போகவில்லை!..."
வந்தவர்கள் இருவரும் பள்ளிப்படையைத் தாண்டிக் கொண்டு சிறிது அப்பால் போனார்கள். அடர்ந்தகாட்டுக்கு மத்தியில் சிறிது இடைவௌி இருந்த இடத்தில் நின்றார்கள். ஒருவன் உடகார்ந்து கொண்டான்;கையில் சுளுந்து வைத்திருந்தவன் சுற்றும்முற்றும் பார்த்து கொண்டிருந்தான். யாருடைய வரவையோ அவன்எதிர்பார்த்தான் என்பதில் சந்தேகமில்லை.சற்று நேரத்துக்கெல்லாம் இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இதற்கு முன் இந்த இடத்துக்கு வந்தவர்களாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இந்த இருளில், அடர்ந்த காட்டில், வழி கண்டுபிடித்துக் கொண்டு வர முடியுமா?
முதலில் வந்தவர்களும் பின்னால் வந்தவர்களும் ஏதோ பேசிக் கொண்டார்கள். ஆனால்ஆழ்வார்க்கடியான் காதில் அது ஒன்றும் விழவில்லை. 'அடடா, இத்தனை கஷ்டப்பட்டு வந்தும் பிரயோஜனம்ஒண்ணும் இராது போலிருக்கிறதே! ஆட்களின் அடையாளம் கூடத் தெரியாது போலிருக்கிறதே!'
பிறகு இன்னும் இரண்டு பேர் வந்தார்கள்; முன்னால் வந்தவர்களும் கடைசியில் வந்தவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். கடைசியாக வந்தவர்களில் ஒருவன் கையில் ஒரு பை கொண்டு வந்திருந்தான். அதை அவன் அவிழ்த்து அதனுள் இருந்தவற்றைக் கொட்டினான். சுளுந்து வௌிச்சத்தில் தங்க நாணயங்கள் பளபளவென்று ஒளிர்ந்தன.
கொட்டிய மனிதன் பைத்தியம் பிடித்தவனைப் போல் சிரித்து, "நண்பர்களே! சோழ நாட்டுப்பொக்கிஷத்தைக் கொண்டே சோழ ராஜ்யத்துக்கு உலைவைக்கப் போகிறோம்! இது பெரிய வேடிக்கையல்லவா?"என்று சொல்லிவிட்டு மறுபடியும் கலகலவென்று சிரித்தான்.
"ரவிதாஸரே! இரைச்சல் போட வேண்டாம்; கொஞ்சம் மெதுவாகப் பேசலாம்" என்றான் ஒருவன்.
"ஆகா! இங்கு இப்படிப் பேசினால் என்ன? நரிகளும், மரநாய்களும், கூகைகளும் கோட்டான்களுந்தான் நம் பேச்சைக் கேட்கும்! நல்லவேளையாக அவை யாரிடமும் போய்ச் சொல்லாது! என்றான் ரவிதாஸன்.
"இருந்தாலும் கொஞ்சம் மெதுவாகப் பேசுவதே நல்லது அல்லவா?"
பிறகு அவர்கள் மெல்லப் பேசத் தொடங்கினார்கள். ஆழ்வர்க்கடியானுக்கு அவர்களுடைய பேச்சைக்கேட்டறியாமல் மண்டபத்தின் பேரில் உட்கார்ந்து இருப்பது வீண் என்று தோன்றியது. மண்டபத்திலிருந்துஇறங்கி கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் நின்று ஒட்டுக் கேட்டே தீர வேண்டும். அதனால் விளையும்அபாயத்தையும் சமாளித்துக் கொள்ள வேண்டும் - இவ்விதம் எண்ணி ஆழ்வார்க்கடியான் மண்டபத்திலிருந்து இறங்கமுயன்றபோது மரக்கிளைகளில் அவன் உடம்பு உராய்ந்ததால் சலசலப்புச் சத்தம் உண்டாயிற்று.
பேசிக் கொண்டிருந்த மனிதர்களில் இருவர் சட்டென்று குதித்து எழுந்து "யார் அங்கே"" என்றுகர்ஜித்தார்கள்.
ஆழ்வார்க்கடியானுடைய இதய துடிப்பு சிறிது நேரம் நின்று போயிற்று. அவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஓடினாலும் காட்டில் சலசலப்புச் சத்தம் கேட்கத்தானே செய்யும்! அவர்கள் வந்து தன்னைப் பிடித்து விடலாம் அல்லவா? அச்சமயத்தில், கோட்டான் ஒன்று சப்பட்டையை விரித்து உயர்த்தி அடித்துக் கொண்டதுடன் "ஊம் ஊம்" என்று உறுமியது.
பக்க தலைப்பு
இருபதாம்அத்தியாயம்
"முதற் பகைவன்!"
தக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான்.ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப்பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள்.
"அடே! இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்திவிட்டது! வெட்டுடா அதை!" என்றான் ஒருவன்.
"வேண்டாம்! உங்கள் கத்திகளை வேறு முக்கியமான காரியங்களுக்குப் பத்திரப்படுத்தி வையுங்கள். நம் பகைவர்களைப் பூண்டோடு ஒழிப்பதற்குக் கூராக்கி வையுங்கள்! ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல; அவை நம் சினேகிதர்கள்! மனிதர்ள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன!" என்றான் ரவிதாஸன் என்பவன்.
அவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே மெள்ள மெள்ள அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து திருமலையப்பன் ஒரு பெரிய மருதமரத்தின் சமீபத்தை அடைந்தான். நூறு வயதான அந்த மரத்தின் பெரிய வேர்கள் நாலாபுறத்திலும் ஓடியிருந்தன. ஓர் ஆணிவேருக்கும் இன்னோர் ஆணிவேருக்கும் மத்தியில் தரையிலும் இடைவௌியிருந்தது; மரத்தின் அடிப்பக்கத்திலும் நல்ல குழிவு இருந்தது. அத்தகைய குழிவு ஒன்றில் மரத்தோடு மரமாகச் சாய்ந்து கொண்டு ஆழ்வார்க்கடியான் நின்றான்.
"தஞ்சாவூர் இராஜ்யத்தின் பொக்கிஷம் இருக்கும் வரையில் நமக்கு வேண்டிய பொருளுக்குக் குறைவுஇல்லை. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய நெஞ்சுத் துணிவு வேண்டும். காரியம் முடிகிற வரையில்வௌியில் தெரியாதபடி இரகசியத்தைப் பேணும் சக்தி வேண்டும்! நமக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்துகொள்ள வேண்டும். ஒரு பிரிவினர் உடனே இலங்கைக்குப் போக வேண்டும் இன்னொரு பிரிவினர் தொண்டைமண்டலம் சென்று காரிய சித்திக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டுகாரியங்களும் ஒரே சமயத்தில் முடிய வேண்டும். ஒரு பகைவனை முடித்த பிறகு அவகாசம் கொடுத்தால், இன்னொரு பகைவன் ஜாக்கிரதையாகிவிடுவான்! அதற்கு இடமே கொடுக்கக் கூடாது. தெரிகிறதா? உங்களில்இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்?" என்றான் ரவிதாஸன்.
"நான் போகிறேன்!", "நான்தான் போவேன்!" என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டன.
"யார் போகிறது என்பதை அடுத்த முறை பாண்டிய நாட்டில் கூடித் தீர்மானிக்கலாம்! அதுவரைக்கும் இங்கே செய்ய வேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன!" என்றான் ரவிதாஸன்.
"ஈழத்துக்கு எந்த வழி போவது நல்லது?" என்று ஒருவன் கேட்டான்.
"கோடிக்கரை வழியாகப் போகலாம், கடலைக் கடப்பதற்கு அது நல்ல வழி. ஆனால் இங்கிருந்து கோடிக்கரை வரையில் செல்வது கடினம் நெடுகிலும் பகைவர்கள்; ஆங்காங்கே ஒற்றர்கள். ஆகையால் சேதுவுக்குச் சென்று அங்கே கடலைத் தாண்டி மாதோட்டத்துக்கருகில் இறங்குவதுதான் நல்லது. இலங்கை போகிறவர்கள் சமயத்தில் படகு வலிக்கவும், கட்டுமரம் தள்ளவும், கடலில் நீந்தவும் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். இங்கே யாருக்கு நீந்தத் தெரியும்?"
"எனக்குத் தெரியும்", "எனக்கும் தெரியும்" என்ற குரல்கள் எழுந்தன.
"முதலில், இலங்கை மன்னன் மகிந்தனைக் கண்டு பேசிவிட்டுப் பிறகு காரியத்தில் இறங்கவேண்டும்.ஆகையால் ஈழத்துக்குப் போகிறவர்களில் ஒருவருக்காவது சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும்.ஆ! நமது சோமன் சாம்பவன் இன்னும் வந்து சேரவில்லையே? யாராவது அவனை இன்றைக்குப் பார்த்தீர்களா?"
"இதோ வந்து கொண்டிருக்கிறேன்!" என்று ஆழ்வார்க்கடியானுக்கு மிக்க சமீபத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
அடியான் மேலும் மரத்தோடு மரமாக ஒட்டிக் கொண்டான். அடாடா! இந்தப் பாழும் உடம்பு இப்படிப்பெருத்துவிட்டது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது! புதிதாக இரண்டு பேர் அக்கூட்டத்தில் வந்து சேர்ந்துகொண்டார்கள். ஆழ்வார்க்கடியான் தன் முகத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே மரத்துக்கு வௌியே நீட்டிஎட்டிப் பார்த்தான். புதிதாக வந்தவர்கள் இருவரும் கொள்ளிடக் கரையில் அரசமரத்தடியில் சந்தித்துப்பேசியவர்கள்தான் என்று தெரிந்து கொண்டான்.
புது மனிதர்களைக் கண்டதும் ரவிதாஸன், "வாருங்கள்! வாருங்கள்! ஒருவேளை ஏதாவது உங்களுக்குஆபத்து வந்து விட்டதோ, வராமலே இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன்; எங்கிருந்து எந்த வழயாகவந்தீர்கள்?" என்றான்.
"கொள்ளிடக் கரையோடு வந்தோம், வழியில் ஒரு கூட்டம் நரிகள் வளைத்துக் கொண்டன. நரிகளிடம் சிக்காமல் தப்பித்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது!" என்றான் சோமன் சாம்பவன்.
"புலிக்கும், சிங்கத்துக்கும் பயப்பட்டால் பொருள் உண்டு. நரிக்குப் பயப்படுகிறவர்களால் என்னகாரியத்தைச் சாதித்துவிட முடியும்?" என்றான் அந்தக் கூட்டத்துக்கு முன்னமே வந்திருந்தவர்களில் ஒருவன்.
"அப்படிச் சொல்லாதே, அப்பனே! சிங்கம், புலியைக் காட்டிலும் நரி பொல்லாதது! ஏனெனில்,சிங்கமும் புலியும் தனித்தனியே பாய்ந்து வரும் விரோதிகள் அவற்றோடு சண்டையிட்டுச் சமாளிக்கலாம். ஆனால் நரிகளோ கூட்டங்கூட்டமாக வருகின்றன; ஆகையால், அவற்றுக்குப் பலம் அதிகம். சோழ நாட்டுநரிகள் பெருங்கூட்டமாக வந்ததினால்தானே நம் ஒப்பற்ற மன்னாதி மன்னன் தோற்கவும் உயிர் துறக்கவும்நேர்ந்தது? இல்லாவிட்டால் அவ்விதம் நேர்ந்திருக்குமா?"
"அந்த நரிக்குலத்தை அடியோடு அழிப்போம்! பூண்டோடு நாசம் செய்வோம்!" என்று ஆங்காரத்துடன் கூவினான் சோமன் சாம்பவன்.
"இதோ அதற்கு வேண்டிய உபகரணங்கள்!" என்று ரவிதாஸன் பொன் நாணயங்களின் குவியலைச் சுட்டிக் காட்டினான்.
சோமன் சாம்பவன் நாணயங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, "ஆ! ஒரு பக்கம் புலி!இன்னொரு பக்கம் பனை!" என்று சொன்னான்.
"சோழனுடைய பொன்; பழுவேட்டரையனுடைய முத்திரை. நான் சொன்னது சொன்னபடி நிறைவேற்றிவிட்டேன். உங்களுடைய செய்தி என்ன? நமது இடும்பன்காரி ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்க வேண்டுமே?" என்றான் ரவிதாஸன்.
"ஆம்; கொண்டு வந்திருக்கிறார்; கேளுங்கள்! அவரே சொல்லுவார்!"
இடும்பன்காரி சொல்லத் தொடங்கினான்; "தங்கள் கட்டளைப்படியே சம்புவரையர் மாளிகையில்பணியாளாக நான் அமர்ந்து வேலை பார்த்த வருகிறேன். அதனுடைய பலன் நேற்றிரவுதான் சித்தித்தது. நேற்று சம்புவரையர் மாளிகையில் ஒரு பெரிய விருந்து நடந்தது. பெரிய பழுவேட்டரையர், வணங்காமுடிமுனையரையர், மழபாடி மழுவரையர் முதலிய பலர் வந்திருந்தார்கள். குரவைக் கூத்தும் வேலனாட்டமும் நடைபெற்றன. வேலனாட்டம் ஆடிய தேவராளனுக்குச் சந்நதம் வந்து குறி சொன்னான். அவன் சொன்னது நம்முடைய நோக்கத்துக்கு அனுசரணையாகவே இருந்தது. பழுவேட்டரையருடன் வந்த மூடு பல்லக்கில் அவருடைய இளையராணி வந்திருப்பதாக எல்லாரும் எண்ணியிருந்தார்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு உடல்நலம் சரியாயில்லையென்றும் அதிக நாள் உயிரோடிருக்க மாட்டாரென்றும் பழுவேட்டரையர் தெரிவித்தார். எல்லாருமாகச் சேர்ந்து அடுத்தபடி பட்டத்துக்கு வரவேண்டியவர் ஆதித்த கரிகாலர் அல்ல, மதுராந்தகத் தேவர் என்று முடிவு செய்தார்கள். ஆனால் மதுராந்தகத்தேவர் இதற்குச் சம்மதிப்பாரா என்று சிலர் கேட்டார்கள். 'அவர் வாயினாலேயே அதற்கு மறுமொழி கூறச் செய்கிறேன்' என்று சொல்லிப் பழுவேட்டரையர் மூடு பல்லக்கின் திரையைத் திறந்தார். அதற்குள்ளிருந்து மதுராந்தகத் தேவர் வௌி வந்தார்! பட்டம் கட்டிக் கொள்ளத் தமக்குச் சம்மதம் என்று அவர் தெரிவித்தார்..."
"இப்படி பெண் வேஷம் போடும் பராக்கிரமசாலிக்கு முடி சூட்டப் போகிறார்களாம்! நன்றாய்ச்சூட்டட்டும்; எல்லாம் நாம் எதிர்பார்த்தபடியேதான் நடந்து வருகிறது. இம்மாதிரி சோழ நாட்டிலேயே ஒருகுழப்பம் ஏற்படுவது நம்முடைய நோக்கத்துக்கு மிக உகந்தது. எது நேர்ந்தாலும், என்ன நடந்தாலும், நம்மையாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா? இடும்பன்காரி! மிக முக்கியமான செய்தி கொண்டுவந்திருக்கிறீர். ஆனால் இதெல்லாம் எப்படித் தெரிந்து கொண்டீர்? இதற்குச் சந்தர்ப்பம் எப்படி வாய்த்தது?"என்று கேட்டான் ரிதாஸன்.
"நடு ராத்திரியில் அவர்கள் சபை கூடியபோது வேறு யாரும் அருகில் வராதபடி பார்த்துக் கொள்ளஎன்னைக் காவலுக்கு அமர்த்தியிருந்தார்கள். காவல் புரிந்து கொண்டே என் காதுகளையும் கண்களையும்உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்."
"அப்படி உபயோகப்படுத்தியதில் வேறு ஏதாவது தெரிந்ததா?"
"தெரிந்தது, அந்த நள்ளிரவுக் கூட்டத்தில் நடந்ததையெல்லாம் இன்னொரு வேற்று மனிதன் கோட்டை மதில் சுவர் மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான்!"
"ஆஹா! அவன் யார்?"
"முன் குடுமி வைத்திருந்த ஒரு வைஷ்ணவன்..."
"ஆகா! அவன்தானா? அப்படி நான் நினைத்தேன்! அவனை நீர் என்ன செய்தீர்? சம்புவரையரிடம் பிடித்துக் கொடுக்கவில்லையா?"
"இல்லை. ஒருவேளை அவன் நம்மவனாயிருக்கலாம் என்று நினைத்து விட்டேன். நீங்களே அனுப்பி வைத்தீர்களோ என்று எண்ணினேன்."
"பெரிய பிசகு செய்து விட்டீர்; அவன் நம்மவன் அல்ல. கட்டையாய்க் குட்டையாய் இருப்பான்; சண்டைக்காரன் பெயர் திருமலையப்பன்; 'ஆழ்வார்க்கடியான்' என்று சொல்லிக் கொள்வான்."
"அவனேதான். நான் செய்த பிசகை இன்று மத்தியானம் நானே உணர்ந்து கொண்டேன்; அவன் நம் ஆள் அல்லவென்று தெரிந்தது."
"அதை எப்படி அறிந்தீர்?"
"நேற்று இரவு கந்தன்மாறனின் பாலிய நண்பன் ஒருவனும் கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்தான். அவனுக்கும் பழுவேட்டரையர் கூட்டத்துக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென்று தெரிந்தது. அவன் அங்கேயே மூலையில்படுத்து, நிம்மதியாகத் தூங்கினான். இன்று காலையில் சின்ன எஜமானர் தம் சினேகிதனைக் கொண்டு விடக்கொள்ளிடக்கரை வரையில் வந்தார். அவர் வரப்போவதை அறிந்து அவர் முன்னால் அடிக்கடி நான் போய்நின்றேன்; என்னையும் வரச் சொன்னார். அவர் கொள்ளிடத்தின் வடகரையோடு திரும்பிவிட்டார். என்னைத்தென் கரைக்கு வந்து அவ்வாலிபனுக்கு ஒரு குதிரை சம்பாதித்துக் கொடுத்து விட்டுத் திரும்பும்படி சென்னார். அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். அதனால்தான் சந்தேகத்துக்கு இடமின்றி இங்கே வர முடிந்தது.
"சரிதான், சரிதான்! அந்த வீர வைஷ்ணவனைப் பற்றி எவ்விதம் தெரிந்து கொண்டீர்?"
"கொள்ளிடத்தில் படகு புறப்படும் சமயத்துக்கு அந்த வீர வைஷ்ணவன் வந்து படகில் ஏறிக் கொண்டான். அவன் கந்தன்மாறனின் சிநேகிதனோடு பேசிய சில காரமான வார்த்தைகளிலிருந்து எனக்குச் சிறிது சந்தேகம்உதித்தது, அவனும் நம்மைச் சேர்ந்தவனோ என்று. மேலும் கொள்ளிடத்தின் தென்கரையில் அவன் எனக்காககாத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன். ஆனால்அவன் புரிந்து கொள்ளவில்லை. அதன் பேரில் அவன் நம்மவன் அல்ல என்று தீர்மானித்தேன்..."
"நீர் செய்தது பெரும் பிசகு! முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையைச் செய்து காட்டக்கூடாது. நண்பர்களே! இதைக் கேளுங்கள்; நம்முடைய காரியம் காஞ்சீபுரத்தில் இருக்கிறது! இலங்கையிலும்இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நம்முடைய பரம விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள்இரண்டு பேரையும் காட்டிலும் நம்முடைய கொடிய விரோதி, முதன்மையான விரோதி, ஆழ்வார்க்கடியான் என்றுபொய்ப் பெயர் பூண்டு திரியும் திருமலையப்பன்தான். அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம்செய்யக்கூடியவன். நமக்கெல்லாம் இணையில்லாத் தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப்பார்க்கிறவன். அடுத்தபடியாக அவனை உங்களில் யாராவது எங்கே கண்டாலும், எந்த நிலைமையில்சந்தித்தாலும், கைகளில் உள்ள ஆயுதத்தை உடனே அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்று விடுங்கள். ஆயுதம்ஒன்றுமில்லாவிட்டால் கையினால் அனுடைய மென்னியைத் திருகிக் கொல்லுங்கள். அல்லது சூழ்ச்சியால்விஷத்தைக் கொடுத்துக் கொல்லுங்கள். அல்லது வெள்ளத்தில் தள்ளி முதலைப் பசிக்கு இரையாக்குங்கள். அல்லது ஏதாவது சாக்குச் சொல்லிப் பாறை உச்சிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பிடித்துத் தள்ளிக் கொன்றுவிடுங்கள். தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்று விடுங்கள்! துர்க்கா தேவிக்கோ, கண்ணகியம்மனுக்கோ பலி கொடுத்து விட்டால் இன்னும் விசேஷம். எப்படியும் அவன் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய நோக்கத்துக்கு இடையூறாகவே இருப்பான்!..."
"ரவிதாஸரே! நீங்கள் இவ்வளவு தூரம் வற்புறுத்திச் சொல்வதற்கு அவன் பெரிய கைகாரனாயிருக்க வேண்டும் அப்படிப்பட்டவன் யார்?"
"யாரா? அவன் பயங்கர ஆற்றல் படைத்த ஒற்றன்!"
"யாருடைய ஒற்றன்?"
"எனக்கே அது வெகு காலம் சந்தேகமாகத்தானிருந்தது. சுந்தர சோழரின் ஒற்றனோ, ஆதித்தகரிகாலனின் ஒற்றனோ என்று சந்தேகப்பட்டேன்; இல்லையென்று கண்டேன். பழையாறையில் இருக்கிறாளே, ஒரு கிழப் பாதகி, அந்தப் பெரிய பிராட்டியின் ஒற்றனாயிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கிறேன்."
"ஆகா! அப்படியா? சிவபக்தியில் மூழ்கி, ஆலயத் திருப்பணி செய்து வரும் அந்தச் செம்பியன் தேவிக்குஒற்றன் எதற்கு?"
"அதெல்லாம் பொய், இந்த முன் குடுமிக்காரனின் வீர வைஷ்ணவம் எப்படி வௌி வேஷமோ,அப்படித்தான் அந்த முதிய ராணியின் சிவபக்தியும். பெற்ற பிள்ளைக்கே பெரும் சத்துருவாயிருக்கும் பிசாசுஅல்லவா? அதனால்தானே, அவளுடைய சொந்தச் சகோதரனாகிய மழவரையன் கூட அவளுடன் சண்டை பிடித்துக்கொண்டு, பழுவேட்டரையன் கட்சியில் சேர்ந்திருக்கிறான்?"
"ரவிதாஸரே! அந்த முன் குடுமி வைஷ்ணவனைப் போல் இன்னும் யாராவது உண்டோ?"
"குடந்தையி் ஒரு சோதிடன் இருக்கிறான். அவன் பேரிலும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது.வருகிறவர் போகிறவர்களுக்கு ஜோசியம் சொல்லுவது போல் சொல்லி வாயைப் பிடுங்கிப் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறான். அவனிடம் நீங்கள் யாரும் போகவே கூடாது; போனால் எப்படியும் நிச்சயமாக ஏமாந்துபோவீர்கள்."
"அவன் யாருடைய ஒற்றன் என்று நினைக்கிறீர்கள்?"
"இன்னும் அதை நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை தற்போது இலங்கையில் இருக்கும் போலி இளவரசனுடைய ஒற்றனாக இருக்கலாம். ஆனால் ஜோசியனைப் பற்றி அவ்வளவு கவலை எனக்குக் கிடையாது. அவனால் பெரிய தீங்கு எதுவும் நேர்ந்து விடாது. வைஷ்ணவன் விஷயத்திலேதான் எனக்குப் பயம்! அவனைக் கண்ட இடத்திலே தேள், நட்டுவாக்களி, பாம்பை அடித்துக் கொல்வது போல் இரக்கமின்றிக் கொன்றுவிட வேண்டும்!"
இதையெல்லாம் மருத மரத்தின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுக்கு மெய்நடுங்கியது; உடம்பெல்லாம் வியர்த்தது. அந்த மரத்தடியிலிருந்து உயிரோடு தப்பித்துப் போகப் போகிறோமா என்றே அவனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது. போதும் போதாதற்கு அந்தச் சமயம் பார்த்து அவனுக்குத் தும்மல் வந்தது. எவ்வளவோ அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. துணியை வாயில் வைத்துஅடைத்துக் கொண்டு 'நச்'சென்று தும்மினான். அந்தச் சமயம் மேலக்காற்று நின்றிருந்தது; காட்டு மரங்களின்மர்மர சத்தமும் நின்று போயிருந்தது. ஆகையால் திருமலையப்பனின் அடக்கிய தும்மல் சத்தம் பக்கத்தில்பேசிக் கொண்டிருந்த சதிகாரர்களுக்குச் சிறிது கேட்டு விட்டது.
"அந்த மருத மரத்துக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்கிறது. சுளுந்தைக் கொண்டு போய்என்னவென்று பார்" என்றான் ரவிதாஸன்.
சுளுந்து பிடித்தவன் மரத்தை நாடி வந்தான். அவன் அருகில் வர வர, வௌிச்சம் அதிகமாகி வந்தது. ஆச்சு! இதோ மரத்தின் முடுக்கில் அவன் திரும்பப் போகிறான். திரும்பிய உடனே சுளுந்து வௌிச்சம் தன் மேல் நன்றாய் விழப் போகிறது. அப்புறம் என்ன நடக்கும்? தப்பிப் பிழைத்தால் புனர் ஜன்மந்தான்!
திருமலையப்பனின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. தப்புவதற்கு வழியுண்டா என்றுசுற்றுமுற்றும் பார்த்தான்; வழி காணவில்லை. அண்ணாந்து பார்த்தான்; அங்கே மரத்திலிருந்து பிரிந்து சென்றமரக் கிளையில் ஒரு ராட்சத வௌவால் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்து கொண்டிருந்தது! உடனே ஒருயோசனை தோன்றியது. சட்டென்று கைகளை உயர நீட்டி அந்த வௌவாலைப் பிடித்துக் கையில் ஆயத்தமாகவைத்துக் கொண்டான். சுளுந்துக்காரன் மரத்தைத் தாண்டி வந்ததும், வௌவாலை அவன் முகத்தின் மீதுஎறிந்தான். சுளுந்து கீழே விழுந்து வௌிச்சம் மங்கியது.
வௌவாலின் இறக்கையால் முகத்தில் அடிபட்டவன், "ஏ! ஏ! என்ன! என்ன?" என்று உளறினான். பலர் ஓடி வரும் சத்தம் கேட்டது. ஆழ்வார்க்கடியானும் ஓட்டம் பிடித்தான்; அடுத்தக் கணம் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து மறைந்தான். பலர் சேர்ந்து, "என்ன? என்ன? என்று கூச்சலிட்டார்கள். சுளுந்து ஏந்திய ஆள் வௌவால் தன்னைத் தாக்கியது பற்றி விவரம் கூறத் தொடங்கினான். இதெல்லாம் திருமலையப்பனின் காதில் கொஞ்ச தூரம் வரையில் கேட்டுக் கொண்டிருந்தது.
பக்க தலைப்பு
This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters of this website.