ponniyin celvan
of kalki, part 2A
(in tamil script, unicode format)

அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்


இரண்டாம் பாகம் - சுழற்காற்று



நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை


Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai,India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram,Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan,Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. VinothJagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devotedto preparation of electronic texts of tamil literary works and to distributethem free on the Internet. Details of Project Madurai are available atthe website

http://www.projectmadurai.org/

You are welcome to freely distribute this file, provided this headerpage is kept intact.

இரண்டாம் பாகம் - சுழற்காற்று


முதலாவது அத்தியாயம் - பூங்குழலி
இரண்டாம் அத்தியாயம் - சேற்றுப் பள்ளம்
மூன்றாம் அத்தியாயம் - சித்தப் பிரமை
நான்காம் அத்தியாயம் - நள்ளிரவில்
ஐந்தாம் அத்தியாயம் - நடுக்கடலில்
ஆறாம் அத்தியாயம் - மறைந்த மண்டபம்
ஏழாம் அத்தியாயம் - "சமுத்திர குமாரி"
எட்டாம் அத்தியாயம் - பூதத் தீவு
ஓன்பதாம் அத்தியாயம் - "இது இலங்கை!"
பத்தாம் அத்தியாயம் - அநிருத்தப் பிரமராயர்



முதலாவது அத்தியாயம்
பூங்குழலி




அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது.கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கிஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் இரை தேடச்சென்ற பறவைகள் திரும்பி வந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது. அதற்குஅப்பால் வெகுதூரத்துக்கு வெகுதூரம் காடு படர்ந்திருந்தது.காட்டு மரங்களின் கிளை ஆடவில்லை; இலைகள்அசையவில்லை. நாலா பக்கமும் நிசப்தம் நிலவியது.செங்கதிர்த் தேவன் கடலும் வானும் கலக்கும்இடத்தைநோக்கி விரைந்து இறங்கிக் கொண்டிருந்தான். மேகத்திரள்கள் சில சூரியனுடைய செங்கதிர்களைமறைக்கப் பார்த்துத் தாங்களும் ஒளி பெற்றுத் திகழ்ந்தன.

கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது, கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள்அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவதுபோல மெள்ள மெள்ள அசைத்தன. அந்தப் படகில் ஓர்இளம் பெண் இருந்தாள். அவளைப் பார்த்ததும் சேந்தன் அமுதன் தன் மாமன் மகளைக் குறித்து வர்ணனை செய்ததுநமக்கு நினைவு வருகிறது. ஆம்; அவள் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். பெயருக்குத் தகுந்தாற் போல்இவள் கூந்தலில் ஒரு தாழம்பூவின் இதழ் அழகு பெற்றுத் திகழ்ந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டுவிழுந்து அவளுடைய கடைந்தெடுத்த தோள்களை அலங்கரித்தன. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும் சங்குகள்,சிப்பிகள் முதலியவற்றை ஆரமாக்கி அவள் அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் இவையெல்லாம் அவளுடையமேனியில் பட்டதனால் தாங்களும் அழகு பெற்றனவேயன்றி, அவளை அலங்கரித்ததாகச் சொல்ல முடியாது. அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்?

பூங்குழகு படகில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு பாடினாள். அவளுடைய கானத்தைக்கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல்மெள்ள மெள்ளத் தவழ்ந்து வந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களும் இலை அசையாமல் நின்றுஅவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன போலும்! வானமும், பூமியும் அந்தக் கானத்தைக் கேட்டு மதிமயங்கிஅசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்தக் கானத்தை முன்னிட்டே மூலைக் கடலை அடைந்து முழுகிமறையாமல் தயங்கி நிற்கின்றான் போலும்.

தேனில் குழைத்து, வானில் மிதந்து வந்த அப்பாடலைச் சற்றுச் செவி கொடுத்துச் கேட்கலாம்.
	"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? 	நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? 	காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே! 	வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே 	வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க 	மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்? 	வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும் 	காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?" 

அந்த இளமங்கையின் உள்ளத்தில் அப்படி என்ன சோகம் குடி கொண்டிருக்குமோ, தெரியாது!அவளுடைய தீங்குரலில் அப்படி என்ன இன்ப வேதனை கலந்திருக்குமோ, தெரியாது! அல்லது அப்பாடலில்சொற்களோடு ஒருவேளை கண்ணீரைக் கலந்துதான் பாடலை அமைத்துவிட்டார்களோ, அதுவும் நாம் அறியோம். ஆனால் அந்தப் பாடலை அவள் பாடுவதைக் கேட்கும் போது நமக்கு நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்றஉணர்ச்சி ஏனோ உண்டாகிறது.

பூங்குழலி கானத்தை நிறுத்தினாள். படகின் துடுப்பை நாலு தடவை வலித்தாள். படகு கரைஅருகில் வந்து சேர்ந்தது. பூங்குழலி படகிலிருந்து துள்ளிக் குதித்துக் கரையில் இறங்கினாள். படகைக்கரையில் இழுத்து போட்டாள். கரையில் சில கட்டு மரங்கள் கும்பலாகக் கிடந்தன. அவற்றின்மிது படகுசாய்ந்து நிற்கும்படி தூக்கி நிறுத்தினாள். சாய்ந்து நின்ற படகில் தானும் சாய்ந்து கொண்டு ஒரு முறைசுற்றுமுற்றும் பார்த்தாள்.

அதோ கலங்கரை விளக்கின் உச்சி மண்டபத்தில் தீ மூட்டியாகி விட்டது. தீ ஜுவாலைவிட்டுஎரிகிறது. இனி இரவெல்லாம் அந்த ஜோதி எரிந்து கொண்டிருக்கும். கடலில் செல்லும் மரக்கலங்களுக்குஅது 'அருகில் நெருங்க வேண்டாம்!' என்று எச்சரித்துக் கொண்டிருக்கும். கோடிக்கரை ஓரத்தில் கடலில்ஆழமே கிடையாது. கட்டு மரங்களும், சிறிய படகுகளும்தான் அந்தப் பகுதியில் கரை ஓரமாக அணுகிவரலாம்.மரக்கலமும் நாவாயும் நெருங்கி வந்தால் தரைதட்டி மணலில் புதைந்து விடும். வேகமாகத்தரையில் மோதினால் கப்பல் பிளந்து உடைந்தும் போய்விடும். ஆதலின், கோடிக்கரையில் உள்ள கலங்கரைவிளக்கம் கப்பல் ஓட்டிகளுக்கு மிகவும் அவசியமான உதவியைச் செய்து வந்தது. மற்றொரு பக்கத்தில் குட்டைமரங்கள் அடர்ந்த காட்டின் நடுவில் கோபுரம் ஒன்று தலை தூக்கி நின்றது. அதனடியில் கோடிக்கரைக் குழகர்,கோயில் கொண்டிருந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸரீ சுந்தர மூர்த்தி நாயனார் இந்தக் கோடிக்கரைக்கு வந்தார். காட்டின் மத்தியில் தன்னந்தனியே கோயில் கொண்டிருந்த குழகரைத் தரிசித்தார்.

"அந்தோ! இறைவா! இப்படி இந்தக் கடற்கரைக் காட்டின் மத்தியில் துணையின்றித் தனியேஇருந்தீரே? இருக்க வேறு இடமாயில்லை? பக்தர்கள் கூட்டங் கூட்டமாக உமது புகழைப் பாடிக்கொண்டிருக்கும்ஸ்தலங்கள் எத்தனையோ இருக்க, இந்தக் கோடிக்கு வந்து பயங்கரக் காட்டிலே தனியே கோயில்கொண்டிருப்பதேன்? இக்கொடியேனுடைய கண்கள் இந்தக் காட்சியையும் காண நேர்ந்ததே!" என்று மனமுருகிப்பாடினார்.
	"கதிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்	   குடிதானயலே இருந்தாற் குற்றமாமோ? 	 கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர் 	   அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே?" 	"மத்தம் மலிசூழ் மறைக்காடதன் றென்பால் 	   பத்தர் பலர் பாடவிருந்த பரமா! 	கொத்தார் பொழில் சூழ்தருகோடிக் குழகா 	   எத்தாற் றனியே யிருந்தாய்? எம்பிரானே!" 

ஸரீசுந்தரமூர்த்தி நாயனார் வந்து தரிசித்துவிட்டுப் போன இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும்கோடிக்கரைக் குழகர் அதே நிலையில்தான் இருந்தார்.(ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைக்கும்கோடிக்கரைக் குழகர் அதே தனிமை நிலையில்தான் இருந்து வருகிறார்!) சுற்றிலும் இன்னும் கொஞ்சம் காடுகள்மண்டிப் போயிருந்தன. அக்காடுகளில் மரப் பொந்துகளில் ஆந்தைகளும் கூகைகளும் குழறின.பார்ப்பதற்குப்பயங்கரமான வேடுவர்கள் சிலர்தான் காட்டின் மத்தியில் ஆங்காங்கு குடிசை போட்டுக் கொண்டு வசித்தார்கள்.


ஆம்; ஒரே வித்தியாசம் இருந்தது. ஸரீ சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்திருந்தபோதுகலங்கரை விளக்கம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, முதற் பராந்தகரின் காலத்திலேதான் அதுகட்டப்பட்டது. கலங்கரை விளக்கத்தில் பணிசெய்வோருக்கென்று சில ஓட்டு வீடுகள் அதைச் சுற்றிச்கட்டப்பட்டன. கோடிக்கரைச் குழகர் கோயிலில் பூஜை செய்யும் பட்டரும் அங்கே வந்து குடியேறினார்.

பூங்குழலி கடற்கரை ஓரத்தில் படகின்மீது சாய்ந்த வண்ணம் நாற்புறமும் பார்த்தாள். கலங்கரைவிளக்கத்தைப் பார்த்து அந்தப் பக்கம் போகலாமா என்று யோசித்தாள். பிறகு குழகர் கோயிலின்கோபுரகலசத்தை நோக்கினாள்.அச்சமயம் கோயிலில் சேமங்கலம் அடிக்கும் ஓசை கேட்கவே, பூங்குழலி ஒருதீர்மானத்துக்கு வந்தாள். அதற்குள் வீட்டுக்குப் போய் என்ன செய்வது? கோவிலுக்குப் போகலாம்! பட்டரைத்தேவாரம் பாடச் சொல்லிக் கேட்கலாம். பிறகு பிரசாதமும் வாங்கிக் கொண்டு வரலாம்.

இப்படி முடிவு செய்துகொண்டு பூங்குழலி கோயில் இருந்த திசையை நோக்கி நடந்தாள். ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் துள்ளிக் குதித்துக் கொண்டும் நடந்தாள். வழியில் மான் கூட்டம் ஒன்றைக்கண்டாள்.மான்கள் மணல் வௌியைத் தாண்டிக் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஏழெட்டுப் பெரியமான்களோடு ஒரு சிறிய மான் குட்டியும் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. மான் கூட்டத்தைப் பார்த்ததும்பூங்குழலிக்கு உற்சாகம் உண்டாயிற்று. அவற்றைப் பிடிக்கப் போவதுபோல் தொடர்ந்து குதித்து ஓடினாள். ஆனால் என்னதான் விரைவாக ஓடினாலும் மான்களோடு போட்டியிட முடியுமா? மான் கூட்டம் பூங்குழலியை முந்திக்கொண்டது.

முன்னால் சென்ற மான்கள் ஓரிடத்தில் நாலு கால்களையும் தூக்கி வானத்தில் பறப்பது போல் நீண்டதூரம் தாவிக் குதித்தன. அங்கே புதை சேற்றுக் குழி இருக்கிறதென்று பூங்குழலி ஊகித்துக் கொண்டாள். பெரிய மான்கள் எல்லாம் அக்குழியை ஒரே தாண்டலில் தாண்டி அப்பால் பத்திரமாய் இறங்கிவிட்டன. ஆனால்மான்குட்டியினால் முழுவதும் தாண்ட முடியவில்லை. அக்கரை ஓரமாக அதன் பின்னங்கால்கள் சேற்றுக் குழியில்அகப்பட்டுக் கொண்டன. முன்னங்கால்களைக் கரையில் ஊன்றி மான் குட்டி ஆன மட்டும் கரை ஏற முயன்றது. ஆனால் அதன் பின்னங்கால்கள் சேற்றில் மேலும் மேலும் புதைந்து கொண்டிருந்தன. தாய் மான் கரையில் நின்றுகுட்டியின் நிலையைக் கவலையுடன் நோக்கியது. அதனால் தன் குட்டிக்கு உதவி எதுவும் செய்ய முடியவில்லை.

இதையெல்லாம் ஒரு நொடியில் பார்த்து அறிந்து கொண்ட பூங்குழலி அந்தப் புதை சேற்றுக் குழிஎங்கே முடிகிறது என்பதைக் கண்டு தெரிந்து கொண்டாள்.புதைகுழி ஓரமாக ஓடிச் சென்று கெட்டியானஇடத்தின் வழியாகக் கடந்து எதிர்ப்புறத்தில் மான் குட்டி சேற்றில் அகப்படுக் கொண்டு தவித்த இடத்தைஅணுகினாள். தாய் மான் முதலில் அவளைக் கண்டு மிரண்டது. பூங்குழலிக்கு மானின் பாஷை தெரியும்போலும்! மிருதுவான குரலில் அவள் ஏதோ சொல்லவும் தாய் மான் பயம் நீங்கி நின்றது.பூங்குழலி புதைசேற்றுக் குழியின் கரை ஓரத்தில் முன்னங்கால்களை மடித்து உட்கார்ந்து, கைகளை நீட்டி மான் குட்டியைப்பற்றிப் பலமாக இழுத்துக் கரையேற்றினாள்.சில விநாடி நேரம் அந்த மான்குட்டியின் உடம்பு வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தது.தாய் மான் அதனருகில் நின்று முகர்ந்து பார்த்துத் தைரியம் கூறியதுபோலும்! அவ்வளவுதான்! அடுத்த விநாடி தாயும், குட்டியும் மீண்டும் பாய்ந்தோடின.

"சீ! கொஞ்சமும் நன்றியில்லாத மிருக ஜன்மங்கள்!" என்று பூங்குழலி தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். "ஆனால் மனிதர்களைவிட இந்த மான்கள் மட்டமாய்ப் போய்விட்டவில்லை!" என்று அவளேதேறுதலும் சொல்லிக் கொண்டாள்.

பிறகு மறுபடியும் குழகர் ஆலயத்தை நோக்கி நடந்தாள்.

மணல் வௌியைத் தாண்டியதும் மரஞ் செடிகள் அடர்ந்த காட்டு வழியில் போக வேண்டியிருந்தது. மேட்டில் ஏறியும், பள்ளத்தில் இறங்கியும் போக வேண்டியிருந்தது. அந்தக் காட்டை இயற்கையின்விசித்திரங்களில் ஒன்று என்றே சொல்ல வேண்டும். அங்கே கற்பாறைகளினால் அமைந்த மலைகளோ,குன்றுகளோ இல்லை. ஒரே மணல் வௌிதான். ஆங்காங்கு மணல் மேடிட்டு, மணல் மேட்டின்மீது செடிகளும்,மரங்களும் முளைத்ததினால் கெட்டிப்பட்டுக் குன்றுகளாகவே மாறிப் போயிருந்தன.குன்றுகளுக்குப் பக்கத்தில்பள்ளங்களும் இருந்தன.அத்தகைய காட்டில் வழி கண்டுபிடித்துப் போவது எளிய காரியமன்று. வெகுதூரம்நடந்துவிட்டது போலத் தோன்றும்; ஆனால் திரும்பத் திரும்பப் புறப்பட்ட இடத்துக்கே வந்து கொண்டிருப்போம்!

பூங்குழலி அந்தக் காட்டு வழியில் புகுந்து அதி விரைவாக நடந்து ஆலயத்தினருகே வந்துசேர்ந்தாள். கோவிலுக்கு வௌியிலும், உட்பிரகாரத்திலும் கொன்னை, பன்னீர் முதலிய மரங்கள் ஓங்கிவளர்ந்து மலர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தன. பூங்குழலி ஆலயத்துக்குள் போனாள்.பட்டர் அவளைப் பார்த்துமுகமலர்ந்தார். அந்தக் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவோர் அருமை. ஆதலின்அருமையாக வருகிறவரைப் பார்த்துப் பட்டர் மகிழ்வது இயல்புதானே?

தேங்காய் மூடியும், பிரசாதமும் கொண்டு வந்து பட்டர் கொடுத்தார். "அம்மா கொஞ்சம்காத்திருக்கிறாயா? நானும் இதோ சந்நிதியைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறேன்!" என்றார். இருட்டியபிறகு அந்தக் காட்டு வழியில் செல்வது கொஞ்சம் சிரமமான காரியந்தான். ஆனால் வழிகாட்டுவதற்குப்பூங்குழலி இருந்தால் கவலையே கிடையாது.

"இருக்கிறேன், ஐயா! எனக்கு அவசரம் ஒன்றுமில்லை. மெதுவாகக் கோயில் கைங்கரியங்களைமுடித்துக்கொண்டு புறப்படுங்கள்!" என்று பூங்குழலி கூறிவிட்டுக் கோயில் பிரகாரத்துக்கு வந்தாள். மரக்கிளைஒன்றைப் பிடித்துக் கொண்டு பிரகாரத்தின் மதில் சுவரின் மேல் தாவி ஏறினாள். மதில் மூலையில் நந்திபகவானுடைய பெரிய சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலைமீது சிறிது சாய்ந்த வண்ணம்மதில்மீது காலை நீட்டிப் படுத்தாள். தேங்காய் மூடியைப் பல்லினால் சுரண்டிச் சாப்பிடத் தொடங்கினாள்.


நாலாபுறமும் இருள் சூழ்ந்து வரும் விசித்திரத்தைப் பூங்குழலி பார்த்துக் கொண்டேயிருக்கையில்,குதிரையின் காலடிச் சத்தத்தைக் கேட்டாள். சத்தம் வந்த வழியே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரைக் காலடியின் சத்தம் அவளுடைய உள்ளத்தில் ஏதேதோ பழைய ஞாபகங்களை எழுப்பி அவளைக் கனவுலோகத்துக்குக் கொண்டு போயிற்று. எங்கிருந்தோ இனந் தெரியாத ஒரு துக்கம் வந்து நெஞ்சை அடைத்தது. வருகிறது யாராயிருக்கக்கூடும்? யாராயிருந்தால் நமக்கு என்ன கவலை? கொஞ்ச காலமாகப் புது ஆட்கள்வருகிறதும் போகிறதும் அதிகமாய்த் தானிருக்கிறது. இராஜாங்க காரியமாக வருகிறார்களாம்;போகிறார்களாம். நேற்றைக்குக் கூட இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்கேஅருவருப்பாயிருந்தது. அண்ணனைப் படகு வலிக்கச் சொல்லி ஈழத்துக்குச் சென்றார்கள். பணமும் நிறையக்கொடுத்தார்கள். அவர்களுடைய பணத்திலே இடி விழட்டும்! யாருக்குப் பணம் வேண்டும்! பணத்தை வைத்துக்கொண்டு இந்த நடுக் காட்டில் என்ன செய்வது? ஆனால் அண்ணனுக்கும் அண்ணிக்கும் பணம் என்றால் ஒரே ஆசை. எதற்கோ தெரியவில்லை! சேர்த்துச் சேர்த்துப் புதைத்து வைக்கிறார்கள்.

குதிரைக்காலடிச் சத்தம் இதோ அருகில் நெருங்கி வருகிறது. ஒரு குதிரை அல்ல; இரண்டுகுதிரைகள் வருவதுபோலத் தோன்றுகிறது. இதோ அவை தென்படுகின்றன. பள்ளத்திலிருந்து மெள்ள மெள்ளமேட்டில் ஏறி வருகின்றன. நெடுந்தூரம் பிரயாணம் செய்து களைத்துப் போன குதிரைகள். ஒவ்வொரு குதிரைமீதும் ஒரு ஆள் வருகிறான். முதலில் வருகிற குதிரை மேல் வருகிறவன் வாலிபப் பிராயத்தவன். பார்க்கஇலட்சணமாக இருக்கிறான்; வாட்டச்சாட்டமாகவும் இருக்கிறான் முகத்தில் கம்பீரம் இருக்கிறது. ஆனால்அவளுடைய இருதய அந்தரங்கத்தில் குடிகொண்டிருக்கும் அந்த இன்னொரு முகத்தின் அழகும், கம்பீரமும் எங்கே?இவனுடைய முகம் எங்கே? பார்க்கப் போனால் இவனுடைய முகம் மரப்பொந்தில் இருக்கும் ஆந்தை முகம்மாதிரியல்லவா சப்பட்டையாயிருக்கிறது?

குதிரைமேல் வந்த இருவரில் முதலில் வந்தவன் நமது பழைய நண்பனாகிய வல்லவரையன்வந்தியத்தேவன்தான்.பின்னால் வந்தவன் வைத்தியருடைய மகன். இருவரும் பழையாறையிலிருந்து இங்கே வந்துசேர்வதற்குள் இளைத்துக் களைத்துச் சோர்வுற்றுப் போயிருக்கிறார்கள். ஆயினும் வந்தியத்தேவனுடைய முகம்,கோயில் மதில்மேல் காலை நீட்டிச் சாய்ந்து கொண்டிருந்த பூங்குழலியைக் கண்டதும் சிறிது மலர்ந்தது. அவள்தன்னுடைய முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனுக்கு இயற்கையான உற்சாகமேபிறந்து விட்டது. அவனும் குதிரையே நிறுத்தி விட்டு அவளுடைய முகத்தை ஆர்வத்துடன் உற்றுப்பார்க்கலானான். தன் முகத்தை மரப்பொந்திலுள்ள ஆந்தையின் முகத்தோடு அவள் ஒப்பிடுகிறாள் என்று மட்டும்அவன் அறிந்திருந்தால் அவ்வளவு உற்சாகப்பட்டிருக்க முடியாது தான். ஒரு மனத்திலுள்ளதை இன்னொருவர் முழுதும்அறிய முடியாமலிருப்பது எவ்வளவு அநுகூலமாயிருக்கிறது?

குதிரைமேல் வந்தவன் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை பூங்குழலி அறிந்தாள். கையில் தான் தேங்காய் மூடிவைத்துக்கொண்டு பல்லினால் சுரண்டித் தின்று கொண்டிருப்பதையும் நினைத்தாள். உடனே எங்கிருந்தோ ஒரு நாண உணர்ச்சி வந்து அவளைப் பற்றிக் கொண்டது. பிராகார மதில்சுவரிலிருந்து வௌியே வெண் மணலில் குதித்தாள். மதில்சுவர் ஓரமாக ஓடத் தொடங்கினாள்.

அதைப் பார்த்த உடனே வந்தியத்தேவனுக்கும் குதிரை மேலிருந்து குதிக்கத் தோன்றியது. குதித்துப் பூங்குழலியைப் பின்தொடர்ந்து பிடிப்பதற்கு ஓட வேண்டும் என்று தோன்றியது. அவ்வாறே அவளைத்துரத்திக் கொண்டு ஓடினான். இந்த அர்த்தமற்ற செயலின் காரண காரியங்களை யார் கண்டுபிடித்துச் சொல்லமுடியும்? ஆயிரம் பதினாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த மனித குலத்தின் பரம்பரை இயற்கைதான்பூங்குழலியை ஓடச் செய்தது என்றும், அதுவே வந்தியத்தேவனைத் துரத்திப் பிடிக்கச் செய்தது என்றும் சொல்லவேண்டியதுதான்.


பக்க தலைப்பு



இரண்டாம்அத்தியாயம்
சேற்றுப் பள்ளம்




காட்டிலும் மேட்டிலும், கல்லிலும் முள்ளிலும் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து வந்தியத்தேவன் ஓடினான். ஒருசமயம் அவள் கண்ணுக்குத் தெரிந்தாள். மறு கணத்தில் மறைந்தாள். இனி அவளைப் பிடிக்க முடியாது என்றுதோன்றியபோது மறுபடியும் கண்ணுக்குப் புலப்பட்டாள். மாய மாரீசனைத் தொடர்ந்து இராமர் சென்ற கதைவந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. ஆனால் இவள் மாயமும் அல்ல; மாரீசனும் அல்ல இவளுடைய கால்களிலேமானின் வேகம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அம்மம்மா! என்ன விரைவாக ஓடுகிறாள்? 'எதற்காகஇவளைத் தொடர்ந்து ஓடுகிறோம், இது என்ன பைத்தியக்காரத்தனம்?' என்று எண்ணினான். உடனே அதற்கு ஒருகாரணமும் கற்பித்துக் கொண்டான். கோடிக்கரை நெருங்க நெருங்க, சேந்தன் அமுதன் வர்ணித்த மங்கையின்நினைவு அவனுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. இவள் அந்தப் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். இவளுடன்சிநேகம் செய்து கொண்டால் வந்த காரியம் நிறைவேறுவதற்கு அநுகூலமாயிருக்கும். அத்துடன் கலங்கரைவிளக்கத்துக்குப் போக வழி கேட்டும் தெரிந்து கொள்ளலாம். தொலைதூரத்தில் வரும்போதே அவர்களுக்குக்கலங்கரை விளக்கின் உச்சி தெரிந்தது. ஆனால் அதை நெருங்குவது எளிதாயில்லை. காட்டுக்குள் புகுந்ததும்கலங்கரை விளக்கு தெரியவேயில்லை. காட்டுக்குள்ளே சுற்றிச் சுற்றி வருவதாக ஏற்பட்டதே தவிர வழிஅகப்படவில்லை. இந்தச் சமயத்திலே தான் குழகர் கோயிலின் மதில் சுவரின் மேல் பூங்குழலியைவந்தியத்தேவன் கண்டான். அவளைப் பிடித்து வழி கேட்கலாம் என்று பார்த்தால், அவள் இப்படி மாய மானைப்போல் பிடிபடாமல் ஒடுகிறாளே? இவளை இப்படியே விட்டு விட்டுத் திரும்ப வேண்டியதுதான்? ஆனால் ஓட்டப்பந்தயத்தில் கூட ஒரு பெண்ணுக்குத் தோற்பது என்றால், அதுவும் மனத்துக்கு உகந்ததாயில்லை...

ஆ! அதோ திறந்தவௌி வந்துவிட்டது. சற்றுத் தூரத்தில் நீலக்கடல் தெரிகிறது. விரிந்துபரந்து அமைதி குடிகொண்ட அந்தக் கடலின் தோற்றம் என்ன அழகாயிருக்கிறது! அதோ கலங்கரை விளக்கமும்தெரிகிறது. அதன் உச்சியில் இப்போது ஜோதி கொழுந்துவிட்டு எரிகிறது. அதன் செந்நிறக் கதிர்கள்நாலா பக்கமும் பரவி விழுந்து விசித்திர ஜால வித்தைகள் புரிகின்றன.

இந்த இடத்தில் இந்தப் பெண்ணைப் பின்தொடர்வதை விட்டுவிட்டுக் கலங்கரை விளக்கை நோக்கிப்போகலாமா? கூடாது!கூடாது! இந்தத் திறந்த வௌியில் இவளை ஓடிப் பிடிப்பது சுலபம். இங்கே அவ்வளவுமணலாகக் கூட இல்லை. கால் மணலில் புதையவில்லை. பூமியில் புல் முளைத்துக் கெட்டிப் பட்டிருக்கிறது. சில இடங்களில் சேறு காய்ந்து பொறுக்குப் படர்ந்திருக்கிறது. இங்கேயெல்லாம் தடங்கலின்றி ஓடலாம். அந்தப் பெண்ணை இலகுவாய்ப் பிடித்துவிடலாம்! மேலும் அவள் கடலை நோக்கியல்லவா ஓடுகிறாள்? எவ்வளவுஓடினாலும் முடிவில் கடலோரத்தில் சென்று அவள் நின்று தானே ஆக வேண்டும்! ஒருவேளை இந்த விந்தையானபெண் கடலிலேயே முழுகி மறைந்து விடுவாளோ! அடடா! குதிரையிலேயே ஏறி வராமற் போனோமே?அப்படி வந்திருந்தால் இந்தத் திறந்த வௌியில் ஒரு நொடியில் இவளைப் பிடித்து விடலாமே?

அதோ அவள் சற்றுத் தயங்கி நிற்கிறாள். நேரே கடலே நோக்கி ஓடாமல் வலதுபக்கமாகத்திரும்பி ஓடுகிறாள்! தன்னிடம் பிடிபடாமல் இருப்பதற்காக வலதுபுறத்தில் சற்றுத் தூரத்தில் தென்பட்டகாட்டை நோக்கி ஓடுகிறாள். காட்டுக்குள் அவள் புகுந்துவிட்டால் நிச்சயமாகப் பிடிக்க முடியாதுதான்!இத்தனை நேரம் ஓடியதும் வீண்! வந்தியத்தேவனுடைய கால்களும் அச்சமயம் கெஞ்ச ஆரம்பித்து விட்டது...

மீண்டும் அவளுடைய மனத்தை மாற்றிக் கொண்டு விட்டாள் போலும்! காட்டுக்குள் போகும் எண்ணத்தைவிட்டு விட்டாள் போலும்! பம்பரத்தைப் போல் ஒரு சுற்றுச்சுற்றித் திரும்பி ஓடி வருகிறாள். கலங்கரைவிளக்கின் அடிக்குப் போக நினைத்தாள் போலும். ஒரு நாலு பாய்ச்சல் பாய்ந்தால் அவளைப் பிடித்துவிடலாம். கைப்பிடியாக அவளைப் பிடித்து "பெண்ணே! ஏன் இப்படி என்னைக் கண்டு மிரண்டு ஓடுகிறாய்?உனக்கு உன் காதலனிடமிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறேன்!" என்று சொன்னால், எத்தனை அதிசயம்அடைவாள்! சேந்தன் அமுதன் அவனிடம் ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை என்பது உண்மைதான். அதனால் என்ன?ஏதாவது சொந்தமாகக் கற்பனை செய்து சொன்னால் போகிறது!...

வந்தியத்தேவன் மனத்திற்குள் தீர்மானித்தபடி தன் தேகத்தில் மிச்சமிருந்த வலிமையையெல்லாம்உபயோகித்துப் பாய்ந்து ஓடினான். திரும்பி ஓடிவந்து கொண்டிருந்த அவளை நாலே பாய்ச்சலில்பிடித்துவிடலாம் என்பதுதான் அவனுடைய உத்தேசம். திடீரென்று "ஐயோ!" என்றான். தனக்கு என்ன நேர்ந்துவிட்டது என்பது முதலில் அவனுக்கே தெரியவில்லை. பிறகு புலப்படத் தொடங்கியது. அவனுடைய கால்கள்இரண்டும் சேற்றில் புதைந்து கொண்டிருந்தன. முதலில் பாதங்கள் மட்டும் புதைந்தன. பிறகு கணுக்கால்புதைந்தது, முழங்கால் வரையில் சேறு மேலேறி விட்டது!

அடாடா! இந்த இடம் நம்மை எப்படி ஏமாற்றி விட்டது? மேலே பார்த்தால் நன்றாய்க் காய்ந்துபொறுக்குத் தட்டியிருக்கிறது. உள்ளே சேறு இன்னும் காயவில்லை. என்றுமே முழுமையும் காயமுடியாத புதைசேற்றுக் குழிகளைப் பற்றி வந்தியத்தேவன் கேள்விப்பட்டதுண்டு. ஆடுமாடுகள், குதிரைகள், யானைகள் கூடஅப்பள்ளங்களில் அகப்பட்டுக் கொண்டால் சிறிது சிறிதாக உள்ளே அமுங்கிக் கொண்டே போய்க் கடைசியில்முழுதுமே முழுகி மறைந்து விடுமாம்! அத்தகைய புதைகுழிதானோ இது? அப்படித் தான் தோன்றுகிறது. முழங்காலும் மறைந்து விட்டதே! மேலும் உள்ளே இறங்கிக் கொண்டேயிருப்போமோ? விரைவில் தொடைவரைக்கும் புதைந்து விடும் போலிருக்கிறதே! யானைகளையும் குதிரைகளையும் விழுங்கி ஏப்பம் விடும் புதைசேறு நம்மைச் சும்மா விட்டு விடுமா! ஐயோ! இதுவா நமது முடிவு? நாம் கண்ட எத்தனை எத்தனையோ பகற்கனவுகள் எல்லாம் இதிலேயே புதைந்து விட வேண்டியதுதானா? இந்த அபாய வேளையில் அந்த விசித்திரமானபெண் வந்து கை கொடுத்துக் காப்பாற்றினால்தான் உண்டு.தப்புதவதற்கு வேறு வழியில்லை.ஒரு பெருங்கூச்சல்போட்டுப் பார்க்கலாம். இவ்விதம் எண்ணிய வந்தியதேவன், 'ஐயோ! நான் செத்தேன்! சேற்றில் முழுகிச்சாகிறேன். எனக்குக் கைகொடுத்து உதவி செய்து காப்பாற்றுவார் யாரும் இல்லையா?" என்று கத்தினான்.

அந்தக் கூக்குரல் பூங்குழலியின் காதில் விழுந்தது. அவனுக்கு நேர் எதிரே சற்றுத் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த பூங்குழலி நின்றாள். ஒரு கணம் தயங்கினாள். வந்தியத்தேவனுடைய அபாயமான நிலையைப்பார்த்துத் தெரிந்து கொண்டாள்.

மறுகணம் அங்கே பாதி மணலிலும் பாதி சேற்றுக் குழியிலும் கிடந்த படகு ஒன்று அவள் கவனத்தைக்கவர்ந்தது. அக்குழியில் தண்ணீர் நிறைந்து ஆழமான நீரோடையாக இருந்த காலத்தில் அப்படகுஉபயோகப்பட்டிருக்க வேண்டும். அதில் இப்போது லாகவமாகக் குதித்து ஏறினாள். துடுப்பை எடுத்து இரண்டுதடவை வலித்தாள். அடாடா! இது என்ன அதிசயம்? அந்தப் படகு நீரில் அன்னப்பறவை செல்வது போல்அல்லவா சேற்றின் மேலே விரைவாக மிதந்து செல்கிறது? மிதந்து சென்று புதை சேற்றுக் குழியின்அக்கரையையும் அடைந்துவிட்டது. பூங்குழலி கெட்டித்தரையில் குதித்தாள். கரையில் கால்களை நன்றாய்ஊன்றிக் கொண்டு வந்தியத் தேவனுடைய கைகளைப் பற்றிக் கரையில் இழுத்து விட்டாள். அம்மம்மா! அந்தமெல்லியலாளின் கைகளிலே தான் எவ்வளவு வலிமை! தஞ்சைபுரிக்கோட்டைத் தளபதி சின்னப்பழுவேட்டரையருடைய இரும்புக் கைகளைவிட இவளுடைய கரங்கள் அதிக உறுதியாயிருக்கின்றனவே!

கரை ஏறியதும் வந்தியத் தேவன் கலகலவென்று சிரித்தான். அவனுடைய கால்கள் மட்டும் கொஞ்சம்நடுங்கிக் கொண்டிருந்தன.

"என்னைக் காப்பாற்றிக் கரைசேர்த்து விட்டதாக உனக்கு எண்ணம் போலிருக்கிறது!நீ வந்திராவிட்டால் நான் கரையேறி இருக்க மாட்டேன் என்று நினைத்தாயோ?" என்றான்.

"பின் எதற்காக அப்படி 'ஐயோ! ஐயோ!' என்று கத்தினாய்?" என்று பூங்குழலி கேட்டாள்.

"உன்னை ஓடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தான்!"

"அப்படியானால் மறுபடியும் உன்னைக் குழியிலேயே தள்ளி விடுகிறேன். உன் சாமர்த்தியத்தினால் நீயே கரை ஏறிக்கொள்!" என்று பூங்குழலி சொல்லித் தள்ள யத்தனித்தாள்.

"ஐயையோ!" என்று வந்தியத்தேவன் விலகி நின்று கொண்டான்.

"எதற்காக அலறுகிறாய்?"

"உயிருக்காகப் பயப்படவில்லை; சேற்றுக்குத்தான் பயப்படுகிறேன்! ஏற்கெனவே தொடை வரைக்கும்சேறாகிவிட்டது!"

பூங்குழலியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

"அதோ கடல் இருக்கிறது! போய் சேற்றை அலம்பிச் சுத்தம் செய்துகொள்!" என்றாள்.

"நீ கொஞ்சம் முன்னால் சென்று வழிகாட்ட வேண்டும்!" என்றான் வந்தியத்தேவன். இருவரும் கடற்கரையை நோக்கிநடந்தார்கள் சேற்றுப் பள்ளத்தைச் சுற்றிக் கொண்டு சென்றார்கள்.

"என்னைக் கண்டதும் எதற்காக அப்படி விழுந்தடித்து ஓடினாய்? என்னைப் பயங்கரப் பேய் பிசாசு என்று எண்ணி விட்டாயா?" என்று வல்லவரையன் கேட்டான்.

"இல்லை; பேய்பிசாசு என்று எண்ணவில்லை. ஆந்தை என்று எண்ணினேன். உன் மூஞ்சி ஆந்தை மூஞ்சிமாதிரியே இருக்கிறது!" என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.

வந்தியத்தேவனுக்குத் தன் தோற்றத்தைக் குறித்துக் கர்வம் அதிகம். ஆகையால் அவனை ஆந்தை மூஞ்சி என்று சொன்னது அவனுக்கு மிக்க கோபத்தை உண்டாக்கிற்று.

"உன்னுடைய குரங்கு முகத்துக்கு என்னுடைய ஆந்தை முகம் குறைந்து போய்விட்டதாக்கும்!" என்று முணுமுணுத்தான்.

"என்ன சொன்னாய்?"

"ஒன்றுமில்லை. என்னைக் கண்டு எதற்காக அப்படி ஓடினாய் என்று கேட்டேன்."

"நீ எதற்காக அப்படி என்னைத் துரத்தித் கொண்டு வந்தாய்?"
"கலங்கரை விளக்கத்துக்கு வழி கேட்பதற்காக உன்னைத் துரத்திக் கொண்டு வந்தேன்..."

"அதோ தெரிகிறதே விளக்கு! என்னை வழி கேட்பானேன்?"

"காட்டுக்குள் புகுந்த பிறகு தெரியவில்லை. அதனாலே தான்! நீ எதற்காக என்னைக் கண்டதும் அப்படி ஓட்டம் எடுத்தாய்?"

"ஆண் பிள்ளைகள் மிகப் பொல்லாதவர்கள். ஆண் பிள்ளைகளைக் கண்டாலே எனக்குப் பிடிப்பத்திலை!"

"சேந்தன் அமுதனைக்கூடவா?" என்றான் வல்லவரையன் கொஞ்சம் மெல்லிய குரலில்.

"யாரைச் சொன்னாய்?"

"தஞ்சாவூர் சேந்தன் அமுதனைச் சொன்னேன்."

"அவனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?"

"அவன் உன் அருமைக் காதலன் என்று தெரியும்."
"என்ன? என்ன?"

உன் பெயர் பூங்குழலி தானே?"

"என் பெயர் பூங்குழலிதான். சேந்தன் அமுதனைப் பற்றி என்ன சொன்னாய்? அவன் என்..."

"அவன் உன் காதலன் என்றேன்."

பூங்குழலி கலீர் என்று நகைத்தாள். "அப்படி யார் உனக்குச் சொன்னது?" என்றாள்.

"வேறு யார் சொல்வார்கள்? சேந்தன் அமுதன் தான் சொன்னான்".

"தஞ்சாவூர் வெகு தூரத்தில் இருக்கிறது. அதனாலே தான் அப்படிச் சொல்லித்தப்பித்துக் கொண்டான்!"

"இல்லாவிட்டால்...?"

"இங்கே என் முன்னால் சொல்லியிருந்தால் அந்தச் சேற்றுக் குழியில் தூக்கிப் போட்டிருப்பேன்."

"அதனால் என்ன? சேற்றை அலம்பிக்கொள்ளக் கடலில் ஏராளமாய்த் தண்ணீர் இருக்கிறதே!"

"நீ விழுந்த புதை சேற்றுக்குழியில் மாடு, குதிரை எல்லாம் முழுகிச் செத்திருக்கின்றன. யானையைக் கூட அது விழுங்கி விடும்!"

வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. அவனை அந்தப் படுகுழி கொஞ்சமாகக் கீழே இழுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட உணர்ச்சியை நினைத்துக் கொண்டான். இவள் மட்டும் வந்து கரையேற்றியிராவிட்டால், இத்தனை நேரம்... அதை நினைத்தபோது அவன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.

"சேந்தன் அமுதன் என்னைப்பற்றி இன்னும் என்ன சொன்னான்?" என்று பூங்குழலி கேட்டாள்.

" நீ அவனுடைய மாமன் மகள் என்று சொன்னான். உன்னைப் போன்ற அழகி தேவலோகத்திலே கூடக் கிடையாது என்று சொன்னான்..."

"தேவலோகத்துக்கு அவன் நேரிலே போய்ப் பார்த்திருப்பான் போலிருக்கிறது இன்னும்?..."

"நீ நன்றாகப் பாடுவாய் என்று சொன்னான். நீ பாடினால் கடலுங்கூட இரைச்சல் போடுவதை நிறுத்தி விட்டுப்பாட்டைக் கேட்குமாம்! அது உண்மைதானா?"

"நீயே அதைத் தெரிந்துகொள்! இதோ! கடலும் வந்து விட்டது!..." இருவரும் கடற்கரை யோரமாக வந்து நின்றார்கள்.


பக்க தலைப்பு



மூன்றாம் அத்தியாயம்
சித்தப் பிரமை




வானத்தில் விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. பிறைச் சந்திரன் நீலக் கடலில்மிதக்கும் வெள்ளி ஓடத்தைப் போலப் பவனி வந்து கொண்டிருந்தான். காற்றின் வேகம் அதிகமாயிருந்தது. கடல் குமுறியது; வெள்ளலைக் கைகளை நீட்டிக் கரையில் நின்றவர்களைத் தன்பால் இழுக்க முயன்றது.

"ஏன் நிற்கிறாய்? சீக்கிரம் சேற்றைக் கழுவிக் கொள்! வீட்டுக்கு உடனே போக வேண்டும். இல்லாவிட்டால் இன்று எனக்குச் சோறு கிடைக்காது. அண்ணி சோற்றுப் பானையைக் கவிழ்த்து விடுவாள்!"என்றாள் பூங்குழலி.

"இங்கே கடலின் ஆழம் அதிகமா?" என்று வந்தியத் தேவன் கேட்டான்.

"உன்னைப்போல் பயங்கொள்ளியை நான் பார்த்ததேயில்லை. இங்கே வெகுத்தூரத்துக்கு ஆழமே கிடையாது. அரைக்காத தூரம்கடலில் போனாலும் இடுப்பளவு தண்ணீர் தான் இருக்கும். ஆகையினாலே தான் ஒவ்வொரு நாள் இரவும் கலங்கரைவிளக்கு எரிய வேண்டியிருக்கிறது!"

வந்தியத்தேவன் தயங்கித்தயங்கி தண்ணீரில் இறங்கினான். சேற்றைக் கழுவிக் கைகால்களைச்சுத்தம் செய்து கொண்டு கரை ஏறினான். சற்றுத் தூரத்தில் வைத்தியருடைய மகன் குதிரை மேலேறி வருவதைக்கண்டான்.வந்தியத்தேவனுடைய குதிரையும் பக்கத்தில் வந்தது. "ஐயையோ! குதிரை சேற்றில் இறங்கிவிடப் போகிறதே!" என்றான் வந்தியத்தேவன்.

"இறங்காது; மனிதர்களைவிடக் குதிரைகளுக்கு விவேகம் அதிகம்!" என்றாள் பூங்குழலி.

"ஆனால் ஒரு குதிரையின் பேரில் மனிதன் இருக்கிறானே? அவள் என் குதிரையையும் பிடித்துஇழுத்துக் கொண்டு வருகிறானே?"

"அது கொஞ்சம் அபாயந்தான்! ஓடிப்போய் எச்சரிக்கை செய்!"
"நில்லு! நில்லு!" என்று கூச்சலிட்டுக் கொண்டே வந்தியத்தேவன் ஓடிப்போய்த் தடுத்து நிறுத்தினான்.

பூங்குழலியும் சற்று நேரத்துக்கெல்லாம் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள். மூவரும் கலங்கரைவிளக்கத்தை நோக்கி நடந்தார்கள். "நீ குதிரையில் ஏறிக்கொள்ளலாமே?" என்றாள் பூங்குழலி.

"இல்லை; உன்னுடன் நடந்தே வருகிறேன்."

பூங்குழலி குதிரையின் அருகில் சென்று அதன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள். அதனால்மகிழ்ச்சி அடைந்ததைப் போல் குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு சற்று இலேசாகக் கனைத்தது. "உன்னை என் குதிரைக்குப் பிடித்துவிட்டது! இது மிக்க நல்லது."

"என்ன விதத்தில் நல்லது?"

"நான் இலங்கைக்குப் போகவேண்டும். இந்தக் குதிரையை உன்னிடம் ஒப்புவித்து விட்டுப் போகலாம் என்று எண்ணுகிறேன்.பார்த்துக் கொள்கிறாயா?"

"ஓ! பார்த்துக் கொள்கிறேன். எல்லா மிருகங்களும் என்னிடம் சீக்கிரம் சிநேகமாகிவிடும். மனிதர்களுக்கு மட்டுந்தான்என்னைக் கண்டால் பிடிக்காது."

"என் அப்படிச் சொல்கிறாய்? சேந்தன் அமுதன் உன்பேரில்..."

"எனக்கும் மிருகங்களின் பேரில்தான் பிரியம்; மனிதர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது!"

"மனிதர்கள் அப்படி என்ன உனக்குச் செய்து விட்டார்கள்?"

"மனிதர்கள் பொல்லாதவர்கள். பொய்யும் புனை சுருட்டுமே அவர்களுக்கு வேலை!"

"எல்லோரையும் சேர்த்து அப்படிச் சொல்லிவிடக் கூடாது. சேந்தன் அமுதன் நல்லவன். இதோவருகிறானே, வைத்தியர் மகன், இவன் ரொம்ப நல்லவன்..."

"நீ எப்படி?"

"நானும் நல்லவன்தான். என் பெருமையை நானே சொல்லிக் கொள்ளக் கூடாது அல்லவா?"

"நீங்கள் இருவரும் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?"

"சக்கரவர்த்திக்கு உடம்பு குணம் இல்லை அல்லவா? அவருடைய நோயைக் குணப்படுத்தச் சிலமூலிகைகள் வேண்டியிருக்கின்றன.இந்தக் காட்டில் அபூர்வ மூலிகைகள் இருக்கின்றனவாமே? அதற்காகத் தான் வைத்தியர் மகனும், நானும் வந்திருக்கிறோம்..."

"சற்று முன் இலங்கைக்குப் போக வேண்டும் என்று சொன்னாயே?"

"இங்கே கிடைக்காத மூலிகைகளைஇலங்கையிலிருந்து கொண்டுவர வேண்டும். இலங்கையில் அனுமார் கொண்டு வந்த சஞ்சீவி பர்வதம் இன்னமும் இருக்கிறதாமே?"

"ஆமாம், இருக்கிறது. அதனாலேதான் அங்கே ஆயிரக் கணக்கான ஜனங்கள் விஷக்காய்ச்சலில்இப்போது செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள்..."

"அதுவும் அப்படியா? எனக்குத் தெரியாதே? எங்களை அனுப்பிய அரண்மனை வைத்தியருக்கும் அது தெரியாது..."

"ஆண்பிள்ளைகளைப் போல் பொய் சொல்லுகிறவர்களை நான் கண்டதேயில்லை. இரண்டு நாளைக்கு முன் இரண்டு பேர் இங்கே வந்தார்கள். அவர்களும் இப்படித்தான் ஏதோ பொய் சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னது கொஞ்சம் நம்பக் கூடிய பொய்யாக இருந்தது."

"அவர்கள் யார்? என்ன பொய் சொன்னார்கள்?"

"அவர்கள் தங்களை யாரோ மந்திரவாதி அனுப்பியதாகச் சொல்லிக் கொண்டார்கள். சக்கரவர்த்திக்கு ரட்சை கட்டுவதற்காகப் புலி நகமும், யானைவால் ரோமமும் வேண்டும் என்றும், அதற்காக இலங்கை போவதாகவும் சொன்னார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு என் அண்ணன் படகோட்டிக் கொண்டு இலங்கைக்குப் போயிருக்கிறான்..."

"ஓ! "ஓ! அதுவும் அப்படியா?" என்றான் வந்தியத்தேவன். அவனுக்கு ரவிதாசன் என்னும் பயங்கரமந்திரவாதியின் நினைவு வந்தது. இரவில் படுத்திருந்த பாழும் மண்டபத்தில் அடைந்த பயங்கர அநுபவமும் நினைவுக்கு வந்தது.

'கடவுளே! இந்த மாதிரி காரியங்களிலெல்லாம் ஏன் சிக்கிக் கொண்டோம்? போர்க்களத்தில் நேருக்கு நேர் பகைவனுடன் நின்று போர் புரிய வேண்டும்! அப்போது நம் வீரத்தையும், தீரத்தையும் காட்ட வேண்டும்.இந்த மாதிரி தந்திர மந்திர சூழ்ச்சிகளில் எதற்காக அகப்பட்டுக் கொண்டோம்?'

'நமக்கு முன்னாலேயே இலங்கைக்குப் படகில் சென்றிருப்பவர்கள் யாராயிருக்கக் கூடும்! இந்தப்பெண்ணை எவ்வளவு தூரம் நம்பலாம்? இவளும் ஒருவேளை அந்தச் சதிகாரக் கூட்டத்தில் சேர்ந்தவளாயிருக்கக்கூடுமோ!... இராது, இராது! இவள் கள்ளங்கபடம் அற்ற பெண். இவளை எப்படியாவது சிநேகிதம் செய்துவைத்துக் கொள்வது நல்லது.'

"பூங்குழலி! உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். சற்று முன் மூலிகை கொண்டு போகநான் வந்திருப்பதாகச் சொன்னேனே, அது பொய்தான்! மிக முக்கியமான இரகசியமான காரியத்துக்காகநான் இலங்கைக்குப் போகிறேன்.அதை உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்."

"வேண்டாம்! முக்கியமான இரகசியமான காரியங்களைப் பெண்களிடம் சொல்லக்கூடாது என்றுஉனக்குத் தெரியாதா? என்னிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம்..."

"சாதாரணப் பெண்களைப்பற்றித்தான் அப்படிச் சொல்லுவார்கள். உன்னிடம் இரகசியத்தைக் கூறினால் அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது." "நான் சாதாரணப் பெண் இல்லையென்று உனக்கு எப்படித் தெரிந்தது? என்னை நீ பார்த்து ஒரு நாழிகைகூட ஆகவில்லையே."

"பூங்குழலி! உன்னை அந்தக் கோவிலில் மதிலின்மீது முதன்முதலில் பார்த்த உடனேயே எனக்குப்பிடித்துப் போய்விட்டது. உன்னை ஒன்று கேட்கிறேன். அதற்கு உண்மையாக மறுமொழி சொல்கிறாயா?"


"கேட்டுப் பார்!"

"சேந்தன்அமுதன் உன்னுடைய காதலன் அல்ல என்பது நிஜமா? அவனை நீ மணந்து கொள்ளப் போவதில்லையா?"

"எதற்காகக் கேட்கிறாய்?"

"சேந்தன்அமுதன் என் சிநேகிதன், அவனுக்கு எதிராக ஒன்றும் நான் செய்யக் கூடாது. ஆனால் அவன் உன் காதலன் இல்லையென்றால்..."


"சொல்லு! ஏன் தயங்குகிறாய்!"

"அந்த ஸ்தானத்துக்கு நான் விண்ணப்பம் போடலாம் என்று பார்க்கிறேன். பூங்குழலி!காதலைப்பற்றி நீ குறைவாகப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. உலகத்தில் காதலைக் காட்டிலும்தெய்வீகமான சக்தி வேறு ஒன்றும் கிடையாது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் எல்லோரும் கடவுளைக்காதலனாகக் கொண்டு பாடியிருக்கிறார்கள். தொல்காப்பியரும், வள்ளுவரும், மற்றும் தமிழ்ப் பெரும்புலவர்களும் காதலைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். காளிதாஸன் காதலைப் பற்றிப் பாடியிருக்கிறான். பிருந்தாவனத்தில் கண்ணன் கோபியரின் காதலுக்கு வசப்பட்டான்..."

"ஐயா! நான் ஒன்று சொல்கிறேன். அதை நன்றாய்க் கேட்டு மனத்தில் வாங்கிக் கொள்ளும்!"

"அது என்ன?"

"எனக்கும் உம்மைக் கண்டால் பிடித்துத்தான் இருக்கிறது. இரண்டு நாளைக்கு முன் வந்தவர்களைப்பார்த்ததும் உண்டான வெறுப்பு உம்மிடம் உண்டாகவில்லை..."

"ஓ! ஓ! நான் யோகசாலிதான்!"

"ஆனால் காதல், கீதல் என்ற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம்!"

"ஏன்? ஏன்?"

"சேந்தன் அமுதன் என் காதலன் இல்லை. ஆனால் எனக்கு வேறு காதலர்கள் இருக்கிறார்கள்..."

"அடடா! அடடா! வேறு காதலர்களா? யார்? எத்தனை பேர்?"

"இரவு நடுநிசியில் நான் வீட்டிலிருந்து எழுந்து செல்வேன். என்னைப் பின்தொடர்ந்து வந்தால் அவர்களை உமக்குக் காட்டுவேன். நீரே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்!" இப்படிச் சொல்லிவிட்டுப் பூங்குழலி 'ஹாஹாஹா' என்று சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு வந்தியத்தேவனுடைய நெஞ்சை என்னமோ செய்தது. 'பாவம் இந்தப் பெண்ணுக்குச்சித்தப் பிரமை போலும்! நம்முடைய காரியத்துக்கு இவள் மூலமாக எந்தவித உதவியையும் எதிர்பார்ப்பதுவீண்! இவளிடம் ஒன்றும் சொல்லாமலிருப்பதே நலம்."

கலங்கரை விளக்கின் அருகிலிருந்த வீட்டை அவர்கள் நெருங்கினார்கள். வீட்டுக்குள்ளிருந்த ஒருபெரியவரும், வயது முதிர்ந்த ஸ்திரீயும் வௌியே வந்தனர். பூங்குழலியையும், மற்ற இருவரையும்,குதிரைகளையும் பார்த்துவிட்டுப் பெரியவர் திகைத்து நின்றார்.

"பூங்குழலி! இவர்கள் யார்? எங்கே இவர்களைப் பிடித்தாய்?" என்று கேட்டார்.

"நான் இவர்களைப் பிடிக்கவில்லை. அப்பா! இவர்கள்தான் என்னைப் பிடித்தார்கள்!" என்றாள் பூங்குழலி.

"எல்லாம் ஒன்றுதான்.'பொழுது போவதற்கு முன்னால் வீட்டுக்கு வந்துவிடு' என்று சொன்னால் நீகேட்பதில்லை. முந்தாநாள் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு வந்தாய். இன்றைக்கு இரண்டு பேரைஅழைத்துக்கொண்டு வந்திருக்கிறாய். இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்?"

"சக்கரவர்த்தியின் வைத்தியத்துக்காக மூலிகை கொண்டு போவதற்கு இவர்கள் வந்திருக்கிறார்கள், அப்பா!"

"ஏன் ஐயா, இந்தப் பெண் சொல்லுவது உண்மை தானா?" என்று அந்தப் பெரியவர் வந்தியத்தேவனைப் பார்த்துக் கேட்டார்.

"ஆம், பெரியவரே! இதோ சீட்டு!" என்று சொல்லி, வந்தியத்தேவன் இடையில் கட்டியிருந்த துணிச்சுருளிலிருந்துஓலை ஒன்றை எடுத்துப் பெரியவரிடம் கொடுத்தான்.

அதே சமயத்தில் இன்னொரு ஓலை தரையில் விழுந்தது. அதை அவசரமாகக் குனிந்து எடுத்துப்பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். "பெரிய மூடன் நான்! ஒரு தடவை காரியம் கெட்டும் புத்திவரவில்லை!" என்று வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டான்.

பெரியவர் அந்த ஓலையை வாங்கிக் கொண்டார். கலங்கரை விளக்கின் வௌிச்சத்தில் அதைக்கவனமாகப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது. தமது மனையாளை நோக்கி, "இளைய பிராட்டி ஓலைகொடுத்து அனுப்பியிருக்கிறாள்.இவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். உள்ளே சென்று உன் மருமகளிடம்சொல்லு! சோற்றுப் பானையைக் கவிழ்த்து உருட்டிவிடப் போகிறாள்!" என்றார்.


பக்க தலைப்பு



நான்காம்அத்தியாயம்
நள்ளிரவில்




இரவு போஜனம் ஆன பிறகு வந்தியத்தேவன், கலங்கரை விளக்கின் தலைவரைத் தனிப்படச்சந்தித்து இலங்கைக்குத் தான் அவசரமாகப் போக வேண்டும் என்பதைத் தெரிவித்தான். தியாகவிடங்கக்கரையர் என்னும் பெயருடைய அப்பெரியவர் தமது வருத்தத்தைத் தெரிவித்தார். "இந்தக் கரையோரத்தில்எத்தனையோ பெரிய படகுகளும், சிறிய படகுகளும் ஒரு காலத்தில் இருந்தன. அவையெல்லாம் இப்போதுசேதுக்கரைக்குப் போய் விட்டன. இலங்கையில் உள்ள நமது சைன்யத்தின் உதவிக்காகத்தான்போயிருக்கின்றன. எனக்குச் சொந்தமாக இரண்டு படகுகள் உண்டு. அவற்றில் ஒன்றில் நேற்று வந்த இரண்டுமனிதர்களை ஏற்றிக் கொண்டு என் மகன் போயிருக்கிறான். அவன் எப்போது திரும்பி வருவான் என்றுதெரியாது. என்ன செய்யட்டும்?" என்றார்.

"அந்த மனிதர்கள் யார்? அவர்கள் ஒருமாதிரி ஆட்கள் என்று தங்கள் குமாரி கூறினாளே?"

"ஆமாம்; அவர்களைக் கண்டால் எனக்கும் பிடிக்கவில்லை தான். அவர்கள் யார் என்பதும் தெரியவில்லை;எதற்காகப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பழுவேட்டரையரின் பனை இலச்சினை அவர்களிடம்இருந்தது.அப்படியும் நான் என் மகனைப் போகச் சொல்லியிருக்கமாட்டேன். ஆனால் என் மருமகள் மிகப்பணத்தாசை பிடித்தவள். பை நிறையப் பணம் கொடுப்பதாக அவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டுப் புருஷனைப்போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்..."

"இது என்ன ஐயா, வேடிக்கை? வீட்டில் உலக அநுபவம் இல்லாத ஒரு சிறு பெண் சொன்னால்,அதைத்தான் உங்கள் மகன் கேட்க வேண்டுமா?" என்றான் வந்தியத்தேவன். பிறகு சிறிது தயக்கத்துடன்,"மன்னித்துக் கொள்ளுங்கள், அது தங்கள் குடும்ப விருயம்!" என்றான்.

"அப்பனே! நீ கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. என் குடும்பத்திற்குச் சாபக்கேடு ஒன்று உண்டு. என் மகன்..." என்று தயங்கினார்.

வந்தியத்தேவன் அப்போது சேந்தன்அமுதன் இக்குடும்பத்தைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வந்தது.

"தங்கள் மகனால் பேச முடியாதா?" என்றான்.

"ஆம்; உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றார் பெரியவர்.

சேந்தன்அமுதனையும், அவன் தாயாரையும், அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்ததையும் பற்றி வந்தியத்தேவன்அவரிடம் கூறினான்."ஆகா! அந்த ஆள் நீதானா? உன்னைப் பற்றிச் செய்தி இங்கே முன்னமே வந்துவிட்டது.உன்னை நாடெங்கும் தேடுகிறார்களாமே?"

"இருக்கலாம்; அதைப்பற்றி எனக்குத் தெரியாது".

"நீ ஏன் இலங்கைக்கு அவசரமாகப் போக விரும்புகிறாய் என்று இப்போது எனக்குத் தெரிகிறது."

"பெரியவரே! தாங்கள் நினைப்பது சரியல்ல. என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகமட்டும் நான் இலங்கைக்குப் போகவில்லை. அங்கேயுள்ள ஒருவருக்கு மிக முக்கியமான ஓலை ஒன்று கொண்டுபோகிறேன். தாங்கள் வேண்டுமானால் அதைப் பார்க்கலாம்."

"தேவையில்லை. இளைய பிராட்டி உன்னைப் பற்றி எழுதியிருப்பதே எனக்குப் போதும். ஆனால்இச்சமயம் நீ கேட்கும் உதவி என்னால் செய்ய முடியவில்லையே!"

"இன்னொரு படகு இருப்பதாகச் சொன்னீர்களே?"

"படகு இருக்கிறது. தள்ளுவதற்கு ஆள் இல்லை. நீயும் உன்னுடைய சிநேகிதனும் தள்ளிக்கொண்டு போவதாயிருந்தால் தருகிறேன்..."

"எங்கள் இருவருக்கும் படகு ஓட்டத் தெரியாது. எனக்குத் தண்ணீர் என்றாலே கொஞ்சம் பயம். அதிலும் கடல் என்றால்..."

"படகு ஓட்டத் தெரிந்தாலும் அநுபவம் இல்லாதவர்கள் கடலில் படகு ஓட்ட முடியாது.கடலில் கொஞ்ச தூரம் போய்விட்டால் கரை மறைந்து விடும். அப்புறம் திசை தெரியாமல் திண்டாட வேண்டிவரும்."

"என்னுடன் வந்தவனை நான் அழைத்துப் போவதற்கும் இல்லை. அவனை மூலிகை சேகரிப்பதற்காகஇங்கே விட்டுப் போகவேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லி நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்."

"ஒரு வழி இருக்கிறது. அது எளிதில் நடக்கக் கூடியதன்று. நீயும் முயற்சி செய்து பார்! அதிர்ஷ்டம் உன்பக்கம் இருந்தால்..."

"நான் என்ன செய்ய வேண்டும்? பெரியவரே, சொன்னால் கட்டாயம் செய்கிறேன்" என்றான்வந்தியத்தேவன்.

"இந்தப் பகுதியிலேயே பூங்குழலியைப் போல் சாமர்த்தியமாகப் படகு தள்ளத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இலங்கைக்கு எத்தனையோ தடவை போய் வந்திருக்கிறாள். அவளிடம் நான் சொல்லுகிறேன்; நீயும் கேட்டுப்பார்!"

"இப்போதே கூப்பிடுங்களேன்; கேட்டுப் பார்க்கலாம்"

'வேண்டாம்; மிக்க பிடிவாதக்காரி. இப்போது உடனே கேட்டு 'முடியாது' என்றுசொல்லிவிட்டால், அப்புறம் அவளுடைய மனத்தை மாற்ற முடியாது. நாளைக்கு நல்ல சமயம் நோக்கி அவளிடம்நான் சொல்லுகிறேன். நீயும் தனியே பார்த்துக் கேள்!" இவ்விதம் தியாகவிடங்கக் கரையர் கூறிவிட்டுக்கலங்கரை விளக்கை நோக்கிச் சென்றார்.

அவருடைய வீட்டுத் திண்ணையில் வந்தியத்தேவன் படுத்தான். அவனுடன் வந்த வைத்தியர் மகன்முன்னமே தூங்கிப் போய்விட்டான். வந்தியத்தேவனுக்கு நீண்ட பிரயாணம் செய்த களைப்பினால் தூக்கம்கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது; விரைவில் தூங்கிப் போனான்.

திடீரென்று தூக்கம் கலைந்தது. கதவு திறக்கும் ஓசை கேட்டது. களைத்து மூடியிருந்தகண்ணிமைகளைக் கஷ்டப்பட்டு வந்தியத்தேவன் திறந்து பார்த்தான். ஓர் உருவம் வீட்டிற்குள்ளேயிருந்துவௌியேறிச் சென்றது தெரிந்தது. மேலும் கவனமாகப் பார்த்தான். அது ஒரு பெண்ணின் உருவம் என்றுகண்டான்.கலங்கரை விளக்கின் வௌிச்சம் அந்த உருவத்தின் மேல் விழுந்தது.ஆ! அவள் பூங்குழலிதான்!சந்தேகமில்லை. அவள் என்னமோ நம்மிடம் சொன்னாளே? "நடுநிசியில் என்னைத் தொடர்ந்து வா! என்காதலர்களைக் காட்டுகிறேன்!" என்றாள். அது ஏதோ விளையாட்டுப் பேச்சு என்றல்லவா அப்போதுநினைத்தோம்? இப்போது இவள் உண்மையிலேயே நள்ளிரவில் எழுந்து போகிறாளே? எங்கே போகிறாள்?காதலனையோ, காதலர்களையோ பார்க்கப் போவதாயிருந்தால் அப்படி நம்மிடம் சொல்லுவாளா? 'பின்தொடர்நது வந்தால், காட்டுகிறேன்' என்பாளா? இதில் ஏதோ மர்மமான பொருள் இருக்க வேண்டும்! அல்லதுஒரு வேளை...எப்படியிருந்தாலும், பின் தொடர்ந்து போய் ஏன் பார்க்கக் கூடாது? நாளைக்கு இவளிடம்நயமாக பேசி இலங்கைக்குப் படகு தள்ளிக் கொண்டு வரச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அதற்கு இப்போதுஇவளைத் தொடர்ந்து போவது உதவியாயிருக்கலாம். ஏதாவது இவளுக்கு அபாயம் வரக்கூடும்! அதிலிருந்துஇவளைக் காப்பாற்றினால் நாளைக்கு நாம் கேட்பதற்கு இணங்கக் கூடும் அல்லவா?

வந்தியத்தேவன் சத்தம் செய்யாமல் எழுந்தான். பூங்குழலி போகும் வழியைப் பிடித்துக் கொண்டேபோனான். சாயங்கலம் சேற்றுப் பள்ளத்தில் விழுந்த போது அடைந்த அனுபவம் அவனுக்கு நன்றாய் ஞாபகம்இருந்தது.அம்மாதிரி மறுபடியும் நேர்வதை அவன் விரும்பவில்லை.ஆகையால் பூங்குழலியை அவன்பார்வையிலிருந்து தவற விட்டுவிடக் கூடாது.

கலங்கரை விளக்கிலிருந்து கொஞ்ச தூரம்வரை வெட்ட வௌியாக இருந்தது. ஆகையால்பூங்குழலியின் உருவமும் தெரிந்துகொண்டிருந்தது. அவள் போன வழியே போவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை. அவள் அருகில் போய் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணி விரைவாக நடந்தான்.ஆனால் அதுசாத்தியப்படவில்லை. இவன் வேகமாய் நடக்க நடக்க அவளுடைய நடைவேகமும் அதிகரித்துக் கொண்டேஇருந்தது.இவன் பின் தொடர்ந்து வருவதை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.

திறந்த வௌியைக் கடந்ததும் காடு அடர்ந்த மேட்டுப் பாங்கான பூமி வந்தது. நேரே அதன்பேரில் ஏறாமல் பூங்குழலி அந்த மேட்டைச் சுற்றிக்கொண்டே போனாள். மேடும் காடும் முடிந்த முனை வந்தது.அந்த முனையை வளைத்து கொண்டு சென்றாள்.வந்தியத்தேவனும் விரைந்து சென்று அந்த முனை திரும்பியதும்சற்றுத் தூரத்தில் அவள் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். "நல்லவேளை!" என்று தைரியம் கொண்டான். ஆனால் அடுத்த கணத்தில் திடீரென்று அவளைக் காணவில்லை.

எப்படித் திடீரென்று மறைந்திருப்பாள்? இது என்ன மாயமா, மந்திரமா? அங்கே ஏதாவது பள்ளம்இருந்திருக்குமோ? ஓட்டமும் நடையுமாகப் போய்ச் சுமாராகப் பூங்குழலி எங்கே நின்று மறைந்தாள் என்றுதோன்றியதோ, அந்த இடத்துக்கு வந்தான் அங்கே நின்று நாலா பக்கமும் பார்த்தான். மூன்று பக்கங்களில்அவள் போயிருக்க முடியாது. போயிருந்தால் தன் கண்ணிலிருந்து மறைந்திருக்க முடியாது. அவ்விடத்தில்காலை ஜாக்கிரதையாக ஊன்றி வைத்துப் பார்த்துச் சேறு கிடையாது என்பதையும் நிச்சயப்படுத்திக்கொண்டான். ஆகையால், மேட்டின்மேல் ஏறிக் காட்டுக்குள்தான் போயிருக்கவேண்டும்.

இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்ததில், குத்துச் செடிகள் அடர்ந்த அந்த மேட்டில் ஏறுவதற்கு,ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பது தெரிய வந்தது. வந்தியத்தேவன் அதில் ஏறினான். ஏறும்போது திக் திக்என்று அடித்துக் கொண்டது. அங்கே கலங்கரை விளக்கின் மங்கிய வௌிச்சமும் வரவில்லை.மாலைப் பிறைமுன்னமேயே கடலில் மூழ்கி மறைந்துவிட்டது.மினு மினுத்த நட்சத்திரங்களின் வௌிச்சத்திலே வழியையும்கொஞ்ச தூரத்துக்கு அப்பால் காணவில்லை. குத்துச்செடிகளும் குட்டை மரங்களும் பயங்கர வடிவங்களைப் பெற்றன. அவற்றின் நிழல்கள் கரிய பேய்களாக மாறின. செடிகளின் இலைகள் ஆடியபோது நிழல்களும் அசைந்தன. ஒவ்வோர் அசைவும் வந்தியத்தேவனுடைய நெஞ்சை அசைத்தது. அந்தக் கரிய இருளிலும் நிழலிலும் எங்கே,என்ன அபாயம் காத்திருக்கிறதென்று யார் கண்டது? விஷ ஜந்துக்கள், கொடிய விலங்குகள் பதுங்கியிருந்ததுபாயலாம். அபாயம் மேலிருந்து வரலாம்; பக்கங்களிலிருந்தும் வரலாம்; பின்னாலிருந்தும் வரலாம். அடடா! இது என்ன, இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோம்? கையில் வேலைக்கூட எடுத்து வரவில்லையே?

அது என்ன சலசலப்புச் சத்தம்? அந்த மரத்தின்மேல் தெரியும் அந்தக் கரிய உருவம் என்ன? அந்தப்புதரின் இருளில் இரண்டு சிறிய ஒளிப் பொட்டுக்கள் மின்னுகின்றனவே, அவை என்னவாயிருக்கும்?வந்தியத்தேவனுடைய கால்கள் அவனை அறியாமல் நடுங்கின. சரி! சரி! இங்கே என்ன நமக்கு வேலை?எதற்காக இங்கு வந்தோம்? - என்ன அறிவீனம்? உடனே இறங்கிப் போய்விட வேண்டியதுதான்!

இறங்கலாம் என்று எண்ணித் திரும்ப யத்தனித்த தருணத்தில் ஒரு குரல் கேட்டது. நெஞ்சைப்பிளக்கும் குரல்; பெண்ணின் குரல். ஒரு விம்மல் சத்தம். பிறகு இந்தப் பாடல்:-

"அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் விம்முவதேன்?..."

வந்தியத்தேவன் அம்மேட்டிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் யோசனையை விட்டுவிட்டான். குரல்வந்த இடம் நோக்கி மேலே ஏறினான். விரைவில் மேட்டின் உச்சி தெரிந்தது. அங்கே அவள் நின்றுகொண்டிருந்தாள். பூங்குழலிதான் பாடியது, அவள்தான். வானத்தில் சுடர்விட்ட நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு பாடினாள். அந்த விண்மீன்களையே அவளுடைய பாட்டைக் கேட்கும் ரசிக மகாசபையாக நினைத்துக்கொண்டு பாடினாள் போலும்!

நட்சத்திரங்களில் ஒன்று தூமகேது. அதிலிருந்து கிளம்பிய கதிரின் கத்தை நீண்டதூரம்விசிறிபோல் விரிந்து படர்ந்திருந்தது. மேட்டின் உச்சியில் அப்பெண்ணின் நிழல் வடிவமும், அவளுடையகுரலும் கீதமும், வானத்தில் தூமகேதுவும் சேர்ந்து வந்தியத்தேவனைத் தன்வயமிழக்கச் செய்தன. அவனுடையகால்கள் அவனை உச்சிமேட்டில் கொண்டு போய்ச் சேர்த்தன.

பூங்குழலிக்கு எதிரில் நேருக்கு நேராக அவன் நின்றான். அவளுக்குப் பின்னால், வெகு தொலைவுஎன்று காணப்பட்ட இடத்தில், கலங்கரை விளக்கின் சிவந்த ஒளி தோன்றியது.அதையொட்டி விரிந்த கடல்பரந்து கிடந்தது. கடலுக்கு எல்லையிட்டு வரையறுத்தது போல் வெள்ளிய அலைக்கோடு நீண்டு வளைந்துசென்றது."வந்து விட்டாயா? திண்ணையில் கும்பகர்ணனைப்போல் தூங்கினாயே என்று பார்த்தேன்..."

"வீட்டுக்கதவு திறந்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். நீ விடுவிடு என்று நடந்துவந்துவிட்டாய்! திரும்பியே பார்க்கவில்லை. அம்மம்மா! உன்னைத் தொடர்ந்து ஓடி வருவது எவ்வளவுகஷ்டமாய்ப் போய் விட்டது?"

"எதற்காகத் தொடர்ந்து வந்தாய்?"

"நல்ல கேள்வி! நீதானே வரச் சொன்னாய்? மறந்து விட்டாயா?"

"எதற்காக வரச் சொன்னேன்? உனக்கு நினைவு இருக்கிறதா?"

"நினைவு இல்லாமல் என்ன? உன் காதலர்களைக் காட்டுவதாகச் சொன்னாய்! எங்கே உன் காதலர்கள்? காட்டு, பார்க்கலாம்!"

"அதோ உனக்குப் பின்னால் திரும்பிப் பார்!" என்றாள் பூங்குழலி.


பக்க தலைப்பு



ஐந்தாம் அத்தியாயம்
நடுக்கடலில்




வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன்மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக் கொண்டன. அவனுடையதேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள் அவன் தேகமெல்லாம்துளைத்தன - அத்தகைய பயங்கரக் காட்சி அவன் கண்முன்னே காணப்பட்டது.

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின.அவற்றிலிருந்து புகை இல்லை; வௌிச்சமும் இல்லை; கீழே விறகு போட்டு எரித்து உண்டாகும்தீப்பிழம்புகளும் அல்ல. வெறும் நெருப்புப் பிண்டங்கள். பூமியிலிருந்து எப்படியோ எழுந்து அவை நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன.

ஒரு பிரம்மாண்டமான கரிய இருள் நிறங் கொண்ட ராட்சதன், தனியாகத் தலை ஒன்று இல்லாமல்வயிற்றிலேயே வாய்கொண்ட கபந்தனைப் போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அல்ல;அநேக வாய்கள். அந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான்.திறக்கும்போது வயிற்றிலிருந்துதீயின் ஜ்வாலை வாய்களின் வழியாக வௌியே வந்தது. மூடும் போது மறைந்தது.

இந்தக் காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக்கால் வழியாகவும் அவனுடையஉடம்பின் ரத்தம் கசிவது போலிருந்தது. அப்படிப்பட்ட பீதி அவனை என்றைக்கும் ஆட்கொண்டதில்லை. பெரிய பழுவேட்டரையரின் பாதாள நிலவறையிலேகூட இல்லை. அவன் பின்னால் "ஹா ஹா ஹா!" என்ற ஒருசிரிப்புக் கேட்டது.திரும்பிப் பார்த்தான்.

பூங்குழலிதான்! வேறு ஒரு சந்தர்ப்பத்திலே யென்றால், அவளுடைய அந்தச் சிரிப்பே அவனுக்குஅளவிலாத பயங்கரத்தை உண்டாக்கியிருக்கும். இப்போது அதே சிரிப்பு தைரியத்தை அளித்தது. இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உள்ள பெண் ஒருத்தி அவன் பக்கத்தில் நிற்கிறாள் என்பது பெரும்அபாயத்தில் ஒரு பற்றுக்கோல் போல உதவியது. "பார்த்தாயா என் காதலர்களை?" என்று பூங்குழலிகேட்டாள். "இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகள்தான் என் காதலர்கள். இவர்களைப் பார்த்துச் சல்லாபம்செய்வதற்குத்தான் நள்ளிரவில் இந்த இடத்துக்கு நான் வருகிறேன்," என்றாள்.

இந்தப் பெண்ணுக்கு நன்றாகப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவளுடைய உதவியைக் கொண்டு இலங்கைக்குப் போகிறது நடக்கிற காரியமா? - இவ்வாறு வந்தியத்தேவன்எண்ணினான். அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வௌிவரப்போராடிக் கொண்டிருந்தது. அது என்ன? இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பற்றிய ஏதோ ஒரு ஒரு விஷயந்தான்.

"உன்னுடைய சிநேகிதன் சேந்தன்அமுதனால் இத்தகைய காதலர்களோடு போட்டியிட முடியுமா?" என்றுபூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம்அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது.ஆ! கடைசியில் ஒரு பெரியபோராட்டம்; மனதிற்குள்ளேதான் இதோ ஞாபகம் வந்துவிட்டது...

கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் தண்ணீர் வெகுகாலம் தேங்கி நின்று சதுப்பு நிலமானால்,அத்தகைய இடங்களில் இரவில் இம்மாதிரி தோற்றங்கள் ஏற்படும். பூமிக்குள்ளேயிருந்து கந்தகம் கலந்த வாயுவௌியில் வரும் போது நெருப்புப் பிழம்பு வருவது போலிருக்கும். சில சமயம் நீடித்து நிற்கும். சிலசமயம் குப்குப் என்று தோன்றி மறையும். இந்த இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, அறியாத மக்கள்பயப்படுவார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு என்று பயங்கரப் பெயர் கொடுத்துப் பீதி அடைவார்கள்...

இப்படிப் பெரியோர் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்தது, ஞாபகத்துக்கு வந்தது. பிறகுஅவனுடைய அறிவுக்கும் பயத்துக்கும் போர் நடந்தது. அறிவு வெற்றி பெற்றது. ஆனால் அதையெல்லாம்இச்சமயம் இந்தப் பிரமை பிடித்த பெண்ணிடம் சொல்லிப் பயனில்லை. எப்படியாவது அவளுக்கு நல்ல வார்த்தைசொல்லி அழைத்துக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.

"பெண்ணே! உன் காதலர்கள் எங்கும் போய்விடமாட்டார்கள். இங்கேதான் இருப்பார்கள். நாளைக்கும் அவர்களை வந்து பார்க்கலாம் அல்லவா? வீட்டுக்குப் போகலாம், வா!" என்றான். அதற்குப்பூங்குழலி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; விம்மி அழத் தொடங்கினாள். 'இது என்ன தொல்லை?' என்றுவந்தியத்தேவன் எண்ணினான். பின்னர் சற்று நேரம் சும்மா இருந்தான். "பெண்ணே! நாம் போகலாமா?"என்று மீண்டும் கேட்டான். விம்மல் நிற்கவில்லை. வந்தியத்தேவனுக்கு அலுத்துப் போய்விட்டது.

"சரி; உன் இஷ்டம் போல் செய்! எனக்குத் தூக்கம் வருகிறது. நான் போகிறேன்" என்றுசொல்லிவிட்டு இறங்கத் தொடங்கினான். பூங்குழலி உடனே விம்மலை நிறுத்தினாள். மேட்டிலிருந்துஇறங்கத் தொடங்கினாள். நாலே பாய்ச்சலில் வந்தியத்தேவனுக்கு முன்னால் கீழே போய் நின்றாள்.

வந்தியத்தேவன் ஓடிப்போய் அவளைப் பிடித்தான்.

இருவரும் கலங்கரை விளக்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். 'இந்தப் பித்துப் பிடித்த பெண்ணை நம்பிப் படகில் ஏறுவதாவது? கடலைக் கடப்பதாவது?- ஆயினும் வேறு வழி இல்லையென்று தெரிகிறதே? ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்துகொள்ளப் பார்க்கலாமா?"

"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே! அதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்றுபூங்குழலி கேட்டாள்..

"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்!" என்றான் வந்தியத்தேவன்.

"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும்என்று சொல்கிறார்களே!"

"அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள்."

"நீ என்ன சொல்லுகிறாய்?"

" நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்."

சற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.

பிறகு பூங்குழலி, "சக்கரவர்த்திக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மைதானே?" என்றாள்.

'இவள் அவ்வளவு பித்துக்குளிப் பெண் அல்ல' என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டான். கொஞ்சம் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது.

"நானே என் கண்ணால் பார்த்தேன். சக்கரவர்த்தி படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். இரண்டுகால்களிலும் உணர்ச்சியே கிடையாது. ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. அவரைக் குணப்படுத்த மூலிகைகொண்டு வரத்தானே நான் வந்திருக்கிறேன். பெண்ணே! எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டான்.

அதற்கு மறுமொழி சொல்லாமல், "சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்க மாட்டார்,சீக்கிரத்தில் இறந்துபோய் விடுவார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்டாள் பூங்குழலி.

"நீ இச்சமயம் உதவி செய்யாவிட்டால் அப்படி நடந்தாலும் நடந்துவிடும். இலங்கையில் ஓர் அபூர்வசஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். அதைக் கொண்டு வந்தால் சக்கரவர்த்தி பிழைத்துக் கொள்வாராம்.நீபடகு தள்ளிக்கொண்டு இலங்கைக்கு வருவாயா?"

"சக்கரவர்த்தி ஒருவேளை இறந்து போனால் அடுத்தபடி யார் பட்டத்துக்கு வருவார்கள்?" என்றுபூங்குழலி கேட்டது வந்தியத்தேவனைத் தூக்கி வாரிப் போட்டது.

"பெண்ணே! எனக்கும், உனக்கும் அதைப்பற்றி என்ன? யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை?"

"ஏன் கவலை இல்லை? நீயும் நானும் இந்த ராஜ்யத்தின் பிரஜைகள் அல்லவா?"

'இந்தப் பெண் பித்துப் பிடித்தவளே அல்ல. இவளிடம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ளவேண்டும்.இவளுடைய விசித்திரமான செயல்களுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும்.'

"ஏன் பேசாமலிருக்கிறாய்?அடுத்த பட்டத்துக்கு யார் வருவார்கள்?" என்று பூங்குழலி மீண்டும் கேட்டாள்.

"ஆதித்த கரிகாலருக்குத்தான் யுவராஜா பட்டம் கட்டியிருக்கிறது. அவர்தான் நியாயமாக அடுத்தபட்டத்துக்கு வர வேண்டும்."

"மதுராந்தகர், - அவருக்கு உரிமை ஒன்றுமில்லையா?"

"அவர்தான் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லி விட்டாரே?"

"முன்னே அப்படிச் சொன்னார்:இப்போது ராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறாராமே?"

"அவர் சொன்னால் போதுமா? பிரஜைகள் எல்லாரும் ஒப்புக்கொள்ள வேண்டாமா?"

"பெரிய மனிதர்கள் பலர் அவர் கட்சியில் இருக்கிறார்களாமே?"

"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். இவ்வளவும் உன் காதுவரையில் வந்து எட்டியிருப்பதை நினைத்தால் எனக்கு மிகவும்ஆச்சரியமாயிருக்கிறது."

"சுந்தரசோழர் திடீரென்று இறந்துபோனால் என்ன ஆகும்?"

"தேசமெல்லாம் பெருங்குழப்பம் ஆகிவிடும். அதைத் தடுப்பதற்குத்தான் உன் உதவி இப்போது தேவையாயிருக்கிறது..."

"நான் என்ன உதவியைச் செய்ய முடியும்?"

"முன்னமேயே சொன்னேனே.நான் அவசரமாக மூலிகை கொண்டு வர இலங்கைத் தீவுக்குப் போக வேண்டும். அதற்கு நீ படகு வலித்துக் கொண்டு வரவேண்டும்."

"என்னை எதற்காக அழைக்கிறாய்? ஒரு பெண் பிள்ளையைப் படகு தள்ளும்படி கேட்கவெட்கமாயில்லையா?"

"வேறு யாரும் இல்லை என்று உன் தந்தை சொல்கிறார். உன் அண்ணன் கூட நேற்றுப்போய் விட்டானாமே?"

"அவன் போனால் என்ன? உனக்கு இரண்டு கைகள், உன்னோடு வந்தவனுக்கு இரண்டு கைகள் இல்லையா?"

"எங்களுக்குப் படகு வலிக்கத் தெரியாது..."

"படகு வலிப்பது என்ன மந்திர வித்தையா! துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது!"

"திசை தெரிய வேண்டும் அல்லவா? நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்...?"

"நடுக்கடலில் திசை தெரியவிட்டால் முழுகிச் சாகுங்கள்! அதற்கு நான் என்ன செய்யட்டும்!"

கலங்கரை விளக்கின் அருகில் அவர்கள் வந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் அத்துடன் பேச்சைநிறுத்தி விட விரும்பினான். மேலும் பேச்சை வளர்த்துப் பூங்குழலியின் மறுப்பை உறுதிப்படுத்திவிட அவன்விரும்பவில்லை. அவள் அவ்வளவு கண்டிப்பாக மறுமொழி சொன்ன போதிலும், அவளுடைய குரலும் பேச்சின்தோரணையும் அவனுடைய உள்ளத்தில் சிறியதொரு நம்பிக்கைச் சுடரை உண்டாக்கியிருந்தன.

இரண்டாம் முறை படுத்த பிறகு வெகு நேரம் வந்தியத்தேவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதேதோஎண்ணங்களினால் அவனுடைய உள்ளம் வெகுவாகக் குழம்பிக் கொண்டிருந்தது. நாலாம் ஜாமத்தின்ஆரம்பத்திலேதான் தூங்கினான்.

தூக்கத்தில் வந்தியத்தேவன் கனவு கண்டான். பாய்மரம் விரித்த சிறிய படகில் பூங்குழலியும்அவனும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள்.நாலாபுறமும் கடல்; எங்கு நோக்கினாலும் ஜலம். இனியபூங்காற்று; படகு அக்காற்றில் மிதப்பது போலப் போய்க் கொண்டிருந்தது. பூங்குழலியின் முகம் அழகேவடிவமாகப் பொலிந்தது. சுருண்ட மயிர் நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்புப்பறந்தது.எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் வந்தியத்தேவனுக்கு மறந்துபோய்விட்டது. பூங்குழலியுடன் படகில் போவதற்காகவே இத்தனை நாள் பிரயாணம் செய்து வந்ததாகத்தோன்றியது. ஒன்றே ஒன்று குறைவாயிருந்தது. அது என்ன? அது என்ன? ஆ! பூங்குழலியின் பாட்டு!சேந்தன்அமுதன் சொல்லியிருந்தான் அல்லவா? "பெண்ணே! உன் பவழ வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாடமாட்டாயா?" என்றான் வந்தியத்தேவன்.

"என்ன சொன்னாய்?" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள்.

ஆகா! அந்தப் புன்னகை ஏழு உலகமும் பெறாதா?

"உன் கனிவாயைத் திறந்து ஒரு கீதம் இசைக்க மாட்டாயா என்றேன்."

"கீதம் இசைத்தால் எனக்கு என்ன தருவாய்?"

"உன் அருகில் வந்து உன் அழகிய கன்னத்தில்..."

பூங்குழலி உடனே தன்மடியிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்துக்கொண்டாள்.கத்தி பிடித்த கையை ஓங்கினாள். "இதோபார்! அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன!" என்றாள்.


பக்க தலைப்பு



ஆறாம் அத்தியாயம்
மறைந்த மண்டபம்




மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் வந்தியத்தேவனைத் தட்டி எழுப்பின. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. அவன் மேல் விழுந்தது சூரியவௌிச்சமா அல்லது கலங்கரை விளக்கின் ஓளியா என்று தௌிவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. முதல்நாள்இரவு அனுபவங்களில் எது உண்மை, எது கனவு என்று எண்ணிப் பார்த்தபோது அவனுக்கு ஓரே குழப்பமாயிருந்தது. வீட்டிலே பெரியவரின் மனைவியும், அவருடைய மருமகளும் மட்டுமே இருந்தார்கள். பெரியவர் குழகர்கோயிலுக்குப் புஜ்ப கைங்கரியம் செய்வதற்காகப் போயிருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.பூங்குழலியைப்பற்றி அவர்களிடம் விசாரிக்க அவனுக்குத் தைரியம் வரவில்லை. அவர்கள் அளித்த காலை உணவைஅருந்திவிட்டுச் சுற்றுமுற்றும் கண்களைச் செலுத்தித் தேடிப் பார்த்தான். பூங்குழலி எங்கும் அகப்படவில்லை. ஆலயத்துக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போனான். அங்கே அவள் தந்தை இருந்தார். கோயிலைச்சுற்றியிருந்த மரங்களிலிருந்து பூஜைக்குரிய புஷ்பங்களைக் கொய்து கொண்டிருந்தார். மலர்களைத் தொடுத்துமாலையாக்குவதற்குச் சில நாள் பூங்குழலி வருவதுண்டு என்றும், ஆனால் இன்றைக்கு வரவில்லையென்றும் கூறினார்.


"எங்கேயாவது காட்டில் மான்களைக் துரத்திக் கொண்டிருப்பாள். அல்லது கடற்கரையோடு திரிந்துகொண்டிருப்பாள். அவளைத் தேடிப்பிடித்துக் கேட்டுப் பார்!" என்றார்.

"தம்பி! ஒரு விஷயத்தில் ஜாக்கிரதையாக இரு. அவள் பொல்லாதவள். தப்பர்த்தம் செய்துகொள்ளும்படியாக அவளிடம் எதாவது சொல்லிவிடாதே.காவியங்களில் படித்திருப்பதை நினைத்துக்கொண்டுசிருங்காரரசத்தில் இறங்கிவிடாதே! உடனே பத்திரகாளியாக மாறி விடுவாள். அப்புறம் உன் உயிர்உன்னுடையது அல்ல!" என்று எச்சரிக்கை செய்தார் பெரியவர்.

முதல்நாள் கனவை நினைத்துக் கொண்டு வந்தியத்தேவன் உடல் சிலிர்த்தான். பிறகு காட்டிற்குள்பூங்குழலியைத் தேடிக்கொண்டு போனான். காட்டிலே எங்கே என்று தேடுவது? சிறிது நேரத்துக்கெல்லாம்அவனுக்கு அலுத்துப் போய்விட்டது.காட்டிலிருந்து வௌியேறினால் போதும் என்று ஆகிவிட்டது. வௌியேறிய பின்னர் கடற்கரையை நோக்கிச் சென்றான். கடற்கரையோடு நீண்ட தூரம் அலைந்தும் பலன்ஒன்றும் இல்லை. பூங்குழலியைக் காணவில்லை. "எப்படியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவாள்அல்லவா? அங்குப் பார்த்துக் கொள்ளலாம்!" என்று திரும்பினாள். திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. அலையும் ஆட்டமும் அதிகமில்லாமல் அமைதியாக இருந்த அந்தக்கடலில் இறங்கிக் குளிக்க வேண்டும் என்ற ஆசைஉண்டாயிற்று. இந்தப் பக்கத்தில் கடலில் ஆழம் அதிகம் இல்லையென்று முன்னமே கேள்விப்பட்டதுண்டு. முதல்நாள் மாலையில் பூங்குழலியும் சொல்லியிருக்கிறாள். பின்னே, இறங்கிக் குளிப்பதற்கு என்ன தடை?கடல் விஜயத்தில் அவனுக்கிருந்த பயத்தைப் போக்கிக் கொள்வதும் அவசியம். படகிலும், கப்பலிலும் ஏறிப்பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. கடலைக் கண்டு பயப்பட்டால் முடியுமா? அந்தப்பயத்தைப் போக்கிக் கொண்டே ஆகவேண்டும்.

இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த சுருள் துணியையும் கத்தியையும் எடுத்துக் கடற்கரையில்வைத்துவிட்டுக் கடலில் இறங்கினான். மெள்ள மெள்ள ஜாக்கிரதையாகக் காலை வைத்து நடந்தான். போகப்போக முழங்கால் அளவு ஜலத்துக்கு மேல் இல்லை. சிறிய அலைகள் வந்து மோதிய போது ஜலம் இடுப்பளவுக்குவந்தது. அதற்கு மேலே இல்லை."அழகான சமுத்திரம் இது!அமிழ்ந்து குளிப்பதற்குக் கூடத் தண்ணீர்இல்லையே?" என்று சொல்லிக் கொண்டே இன்னும் மேலே சென்றான்.

'அடேடே! ஆழம் இல்லை என்று எண்ணிக் கொண்டே கரையிலிருந்து வெகுதூரம் வந்து விட்டோமே?திடீரென்று கடல் பொங்கினால்? அலைகள் பெரிதாகி மோதினால்?" இந்த எண்ணம் தோன்றிக் கரைப்பக்கம்திரும்பிப் பார்த்தான்.

'அதிக தூரம் கரையிலிருந்து வந்து விட்டது என்னமோ உண்மைதான்! ஆனால் அப்படியொன்றும் கடல்திடீரென்று பொங்கி விடாது!... ஓகோ! அதோ பூங்குழலி வருகிறாளே! கரையேறி அவளைப் பிடித்துக்கொள்ளவேண்டும். பிடித்துக் கொண்டு நயமான வார்த்தைகளினால் மறுபடி கேட்க வேண்டும். அவளும் நம்மைப்பார்த்து விட்டுத்தான் வருகிறாள் போலிருக்கிறது! நாம் இருக்கும் திசையை நோக்கியே வருகிறாள்! ஏதோநம்மைப் பார்த்து சமிக்ஞைகூடச் செய்கிறாளே!...'

ஓ! ஓ! இது என்ன? கரையில் குனிந்து அவள் என்ன பார்க்கிறாள். என்னத்தை எடுக்கிறாள்?நம்முடைய இடுப்பில் சுற்றும் சுருள் துணியையல்லவா எடுக்கிறாள்? பெண்ணே! அதை எடுக்காதே! அதுஎன்னுடையது... நாம் சொல்வது அவள் காதில் விழவேயில்லை! இந்தக் கடல் அலைகளின் இரைச்சல்!

'இதோ நம் குரல் அவளுக்குக் கேட்டுவிட்டது! நம்மைப் பார்த்து அவளும் ஏதோ சொல்கிறாள்!பூங்குழலி! அது என்னுடையது! எடுக்காதே!...' 'இந்தா! சொன்னால் கேட்க மாட்டாயா? உன் உடைமை போல்கையில் எடுத்துக் கொண்டு நீ பாட்டுக்குப் போகிறாயே, நில் நில்!...' வந்தியத்தேவன் கரையைநோக்கி ஓட ஆரம்பித்தான்! ஒரு தடவை பூங்குழலி அவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு அவளும் ஓடத்தொடங்கினாள். வீடும் கலங்கரை விளக்கமும் இருந்த பக்கத்துக்கு எதிர்பக்கமாகக் காட்டை நோக்கிஓடினாள்! 'ஆகா! இவள் துஷ்டப் பெண்! துஷ்டப் பெண்ணா? அல்லது வெறும் பைத்தியமா? இந்தப்பைத்தியத்தினிடமிருந்து நமது அரைச்சுருளை எப்படியும் வாங்கியாக வேண்டுமே...?'

இரண்டு தடவை கடலில் இடறி விழுந்து ஒருவாய் உப்புத் தண்ணீரும் குடித்துவிட்டு வந்தியத்தேவன்மெதுவாக கரையேறினான். பிறகு அந்தப் பெண்ணைத் தொடர்ந்து ஓடினான். ஓட ஓட, அவளுடைய ஓட்டத்தின்வேகம் அதிகமாயிற்று. சற்றுத் தூரத்தில் ஐம்பது அறுபது மான்களின் கூட்டம் ஒன்று ஓடியது.

'மான்கள் மிரண்டு, பாய்ந்து ஓடுவது - தாவித்தாவிக் குதித்து ஓடுவது என்ன அழகான காட்சி!ஏன்? இதோ இந்தப் பெண் குதித்துக் குதித்து ஓடுகிறாளே? இதுவும் அந்த மான்களின் ஓட்டத்தைவிட அழகில்குறைவாயில்லை! இம்மாதிரி இயற்கையாகவும் யதேச்சையாகவும் வாழும் பெண்களின் அழகே அழகுதான்!... ஆனால் இதையெல்லாம் அவளிடம் சொல்லக் கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போய்விடும்!பெரியவர்தான் எச்சரித்திருக்கிறாரே?... இருந்தாலும், இவள் எதற்காக இப்படி வீம்பு பிடித்துக் கொண்டுஓடுகிறாள்! காட்டில் புகுந்துவிட்டால் அப்புறம் அவளைக் கண்டுபிடிப்பது எப்படி?... இதோ காட்டிற்குள்புகுந்தே விட்டாள். காரியம் கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டது. நம்மைப் போன்ற மௌடீகன் உலகிலேயேவேறு யாரும் இருக்க முடியாது!... குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை திரும்பி வருமா?'

வந்தியத்தேவனும் சிறிது நேரத்தில் காட்டிற்குள் புகுந்தான். அங்குமிங்கும் அலைந்தான். அவசரத்தினாலும் பரபரப்பினாலும் செடிகளைச் சரியாக விலக்கி விட்டுக் கொண்டு நடக்காமல் உடம்பெல்லாம்முட்களால் கீறிக் கொண்டான். "பூங்குழலி பூங்குழலி!" என்று கூச்சல்லிட்டான். பிறகு, "மரமே!பூங்குழலியைக் கண்டாயோ?", "காக்காய்! பூங்குழலியைக் கண்டாயோ?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தான்.

'இது எது? நமக்கே பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே!' - என்று அவன் நினைக்கத்தொடங்கிய சமயத்தில், திடீரென்று மரத்தின் மேலிருந்து ஏதோ விழுந்தது! ஆ! அவனுடைய அரைத் துணிச்சுருள்தான்! மிக்க ஆவலுடன் அதை எடுத்துச் சுருளைப் பிரித்துப் பார்த்தான். ஓலை, பொற்காசுகள் எல்லாம்பத்திரமாயிருந்தன!

"பணம் பத்திரமாயிருக்கிறதா?" என்று ஒரு குரல் மேலேயிருந்து வந்தது. வந்தியத்தேவன்அண்ணாந்து பார்த்தான். பூங்குழலி மரக்கிளையில் உட்கார்ந்திருந்தாள்.

வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்த வந்தியத்தேவன் தன்னை மீறிய கோபத்தினால், "உன்னைப்போன்ற மந்தியை நான் பார்த்ததேயில்லை!" என்றான்.

"உன்னைப்போன்ற ஆந்தையை நான் பார்த்ததில்லை அம்மம்மா! என்ன முழிமுழித்தாய்?" என்றாள் பூங்குழலி.

"எதற்காக இப்படி என்னை அலைக்கழித்தாய்? உனக்குப் பணம் வேண்டுமென்றால்...'

"சீச்சீ! உன் பணம் இங்கே யாருக்கு வேண்டும்?"

"அப்படியானால், எதற்காக இதைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாய்?"

"அவ்விதம் நான் செய்திராவிட்டால் நீ காட்டுக்குள் வந்திருக்க மாட்டாய். எங்கள் வீட்டுக்கு திரும்பிப் போயிருப்பாய்!"

"போயிருந்தால் என்ன?"

"இந்த மரத்தின் மேல் ஏறிப் பார் தேரியும்!"

"என்ன தெரியும்?"

"பத்துப் பதினைந்து குதிரைகள் தெரியும்! வாள்களும், வேல்களும் மின்னுவது தெரியும்!"

அவளுடைய முகத் தோற்றத்திலிருந்து அவள் கூறுவது உண்மையாயிருக்கலாம் என்று தோன்றியது. ஆயினும் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள விரும்பி வந்தியத்தேவன் மரத்தின் மேல் ஏறினான். ஏறுவதற்கு முன்அரைச்சுற்றுச் சுருளைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டான். ஒருவேளை இவள் மரத்தின் மேலிருந்து அதைத் தவறிப்போட்டிருக்கலாம். இப்போது மறுபடியும் அதை அபகரிப்பதற்குச் சூழ்ச்சி செய்கிறாளோ, என்னமோ யார்கண்டது?

மரத்தின் மேலேறிக் கலங்கரை விளக்கின் பக்கம் நோக்கினான். 'ஆம் பூங்குழலி கூறியதும்உண்மைதான்' அங்கே பத்துப் பதினைந்து குதிரைகள் நின்றன. குதிரைகள் மீது வாள்களும், வேல்களும் பிடித்தவீரர்கள் இருந்தார்கள்.

'அவர்கள் யாராக இருக்கும்?...நம்மைப் பிடிப்பதற்கு வந்த பழுவேட்டரையரின் ஆட்கள்தான்!வேறு யாராயிருக்க முடியும்?' பூங்குழலி தன்னைப் பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றினாள். எதற்காக?என்ன நோக்கம் பற்றி? - இன்னும் சில விஷயங்களும் தௌிவாகவில்லை!

இருவரும் மரத்திலிருந்து கீழே இறங்கினார்கள். "பூங்குழலி என்னைப் பேராபத்திலிருந்துகாப்பாற்றினாய். உனக்கு மிக மிக நன்றி!" என்றான் வந்தியத்தேவன்.

"வெறும் பொய்! ஆண்பிள்ளைகளுக்கு நன்றிகூட உண்டா?" என்றாள் பூங்குழலி.

"எல்லாம் ஆண்பிள்ளைகளையும் போல் என்னையும் எண்ணி விடாதே!"

"நீ எல்லோரையும் போல் இல்லை; ஒரு தனி மாதிரிதான்?

"பெண்ணே! உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?"

"தாராளமாகக் கேட்கலாம்; மறுமொழி கூறுவது என் இஷ்டம்."

"என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று ஏன் எண்ணினாய்? என் பேரில் திடீரென்று தயவு பிறக்கக்காரணம் என்ன?" பூங்குழலி சும்மா இருந்தாள்.

அவள் சிறிது திகைத்துப் போனாள் என்பது முகத்திலிருந்து தெரிந்தது. அப்புறம் யோசித்துப் பார்த்து, "அசடுகளைக் கண்டால் எனக்கு எப்போதும் கொஞ்சம் பரிதாபம் உண்டு" என்றாள்.

"சந்தோஷம்; இந்த வீரர்கள் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பதை எப்படி அறிந்தாய்?"

"உன்னைப் பார்த்தால் தெரியவில்லையா? - நீ தப்பி ஓடி ஓளிந்து கொள்ள வந்திருக்கிறவன்என்று நேற்றைக்கே ஊகித்தேன். இன்றைக்குக் காலையில் உன் சிநேகிதன். வைத்தியர் மகன் - மூலமாக அதுஊர்ஜிதமாயிற்று."

"அவன் என்ன உளறினான்?"

"காலையில் எழுந்ததும் காட்டிலே மூலிகை தேட வேண்டும்என்றான்.நான் அழைத்துப் போவதாகச் சொல்லி இங்கே அழைத்துக்கொண்டு வந்தேன். என்னிடத்தில் காதல்புரிய ஆரம்பித்தான். 'உன்னுடைய சிநேகிதன் உன்னை முந்திக் கொண்டு விட்டானே?' என்றுசொன்னேன்..."

"என்ன சொன்னாய்?"

"கொஞ்சம் பொறு; கேட்டுக் கொண்டு வா! நீ என்னிடம் காதல் புரியத் தொடங்கிவிட்டதாகச்சொன்னேன். அப்போதுதான் உன் பேரில் அவனுடைய சந்தேகத்தை வௌியிட்டான். ஏதோ இராஜதண்டனைக்குப் பயந்து நீ ஓடித் தப்பி வந்திருக்கிறாய் என்று அவனுக்கு வழியில் பல காரணங்களால் சந்தேகம்தோன்றியதாம்! 'அப்படிப்பட்டவனை நம்பி அநியாயமாய்க் கெட்டுப் போகாதே! என்னைக் கலியாணம் செய்துகொள்!' என்றான்.

'ரொம்ப அவசரப்படுகிறாயே? பெரியவர்களைக் கேட்க வேண்டாமா?" என்றேன்.

'பழந்தமிழ் மரபையொட்டிக் களவு மணம் புரிந்து கொள்வோம்!" என்று உன் அழகான சிநேகிதன் சொன்னான்.

"எப்படியிருக்கிறது கதை?"

"அட சண்டாளப் பாவி!" என்று கத்தினாள் வந்தியத்தேவன்.

"இதற்குள்ளே குதிரைகள் வரும் சத்தம் கேட்டது. நான் மரத்தின்மேல் ஏறிப் பார்க்கச்சொன்னேன். மரத்தின் மேலே நின்று பார்த்தபோது அவனுடைய கால்கள் வெட வெட வென்று நடுங்கியதைநினைத்தால் இப்போதும் எனக்குச் சிரிப்பு வருகிறது" என்று சொல்லி விட்டுப் பூங்குழலி சிரித்தாள்.

"விளையாட்டு இருக்கட்டும்; அப்புறம் என்ன நடந்தது?"

"அவன் மரத்தின் மேலேயிருந்து இறங்கி வந்தான். 'பார்த்தாயா? நான் சொன்னது சரியாகப் போயிற்று.அவனைப் பிடிப்பதற்கான் இராஜ சேவகர்கள் வந்திருக்கிறார்கள்!'என்றான்.

'அப்படியானால் அவனுடன் வந்த உன்னையும் பிடிப்பார்கள் அல்லவா? நீ ஓடி எங்கேயாவது ஒளிந்துகொள்!' என்றேன். 'அப்படித்தான் செய்ய வேண்டும்' என்றான். என்னை விட்டுப் பிரிந்து சென்றான்.நான்எதிர்பார்த்தபடியே நடந்தது..."

"என்ன? என்ன நடந்தது?"

"ஓடி ஒளிந்து கொள்வதாக என்னிடம் சொல்லி விட்டு நேரே அந்தக் குதிரைக்காரர்கள் இருந்த திசையை நோக்கிப் போய் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டான்..."

"ஐயோ! பாவம்!"

"அதிகமாகப் பரிதாபப்பட்டு விடாதே! கொஞ்சம் மிச்சம் வைத்துக்கொள்!"

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

'குறையும் கேள்! நீயே தெரிந்துகொள்வாய்! அவர்களிடம் நேரே போனான். அவர்கள் இவனைஅதிசயத்துடன் பார்த்தார்கள். உற்று உற்றுப் பார்த்து ஒருவரோடொருவர் இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். 'நீங்கள் யார்?'என்று இவன் கேட்டான்.

'நாங்கள் வேட்டைக்காரர்கள்! மான் வேட்டையாட வந்திருக்கிறோம்' என்று அவர்களில் ஒருவன்சொன்னான்.

'இல்லை நீங்கள் என்ன வேட்டையாட வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்' என்றான்இவன்.

அவர்கள் இன்னும் வியப்படைந்து இவனைத் தூண்டி விட்டார்கள்.

'வந்தியத்தேவனைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். அவன் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். என்னைச் சும்மா விட்டுவிடுவீர்களா?' என்று கேட்டான்.

அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள். இவன் அவர்களை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுப் பக்கம் போனான்...

"துரோகி, சண்டாளன்!..."

"அவர்கள் போன பிறகு நான் உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். நீ கடலில் இறங்கிக்குளித்துக் கொண்டிருந்தாய்..."

"என்னிடம் அங்கேயே இதையெல்லாம் ஏன் சொல்லவில்லை! இந்தத் துணிச்சுருளை எடுத்துக் கொண்டு ஏன் ஓடி வந்தாய்?"

"இல்லாவிட்டால், நீ அவ்வளவு வேகமாக ஓடி வந்திருப்பாயா? அந்த வேட்டைக்காரர்களை ஒருகைபார்க்கிறேன் என்று அவர்களைத் தேடிப் போயிருந்தாலும் போயிருப்பாய்! என் பேச்சையே ஒருவேளைநம்பியிருக்கமாட்டாய். இவ்வளவையும் சொல்லி உன்னை என்னுடன் வரும்படி செய்வதற்குள் அவர்கள் உன்னைஒருவேளை பார்த்திருப்பார்கள்..."

'ஆகா! இந்தப் பெண்ணையா நாம் பைத்தியக்காரி என்று எண்ணினோம்' என்று வந்தியத்தேவன்நினைத்து வெட்கம் அடைந்தான். 'இவளிடம் பூரண நம்பிக்கை வைத்தேயாக வேண்டும். இவளுடைய உதவிஇல்லாவிட்டால் நாம் கடலைக் கடந்து இலங்கை செல்ல முடியாது. இவ்வளவு தூரம் வந்ததும் வீணாகும். பழுவேட்டரையர்களிடம் திரும்ப அகப்பட்டுக் கொள்ளவும் நேரலாம்."

"பெண்ணே! நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறாய் என்பதைச் சொல்லி முடியாது. மிச்ச உதவியையும் நீதான் செய்யவேண்டும்..."

"என்ன செய்யவேண்டும் என்கிறாய்?" என்று கேட்டாள்.

"என் சிநேகிதனுடைய இலட்சணத்தைப் பார்த்து விட்டாய் அல்லவா? அவனை நம்பிப் பயன் இல்லையென்று தெரிந்துகொண்டாய் அல்லவா? நீதான் படகு வலித்து வந்து என்னை இலங்கையில் சேர்ப்பிக்க வேண்டும்!" பூங்குழலிமௌனமாயிருந்தாள்.

"நான் தப்புக் காரியம் எதுவும் செய்யக்கூடியவன் அல்ல என்று உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா?பெண்ணே! இலங்கைக்கு மிக முக்கியமான காரியமாக நான் உடனே போய்த்தீர வேண்டும். இந்த உதவிஎனக்கு நீ அவசியம் செய்தேயாக வேண்டும்..."

"செய்தால் எனக்கு என்ன தருவாய்?" என்று பூங்குழலிகேட்டாள். அவளுடைய முகத்தில் முதன் முதலாக நாணத்தின் அறிகுறி தென்பட்டது. கன்னங்கள் குழிந்தன;அவளுடைய முகத்தின் அழகு பன்மடங்கு அதிகமாகிச் சுடர்விட்டு ஒளிர்ந்தது.

முதலாவது நாள் இரவு கண்ட கனவில் இதே மாதிரி அவள் கேட்டது வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது.அதே வார்த்தைகள் மறுபடியும் அவன் நாவில் வருவதற்குத் துடித்தன. பல்லினால் நாவைக் கடித்துக் கொண்டுஅந்த வார்த்தை வராமல் நிறுத்தினான்.

"பெண்ணே! இந்த உதவி நீ எனக்குச் செய்தால் உயிர் உள்ள அளவும் மறக்க மாட்டேன்; என்றென்றும்நன்றி செலுத்துவேன்.உனக்கு நான் இதற்குப் பிரதியாகச் செய்யக்கூடியது எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. நீ ஏதாவது செய்யும்படி சொன்னால், கட்டாயம் செய்வேன்!"

பூங்குழலி சிந்தனையில் ஆழ்ந்தாள். சொல்ல எண்ணியதைச் சொல்லலாமா, வேண்டாமா என்றுதயங்கியதைப் போல் காணப்பட்டது.

"என்னால் உனக்கு ஆகக்கூடியா பிரதி உதவி ஏதேனும் இருந்தால் சொல்! நிச்சயம் செய்கிறேன்..."

"இது சத்தியமான வார்த்தைதானா?"

"சத்தியம்! சத்தியம்!"

"அப்படியானால், சமயம் வரும்போது சொல்லுகிறேன். அப்போது மற்ந்துவிட மாட்டாயே?"

"ஒரு நாளும் மறக்கமாட்டேன். நீ எப்போது பிரதி உதவி கேட்பாய் என்று காத்திருப்பேன்."
பூங்குழலி மீண்டும் சிறிது நேரம் சிந்தனை வயப்பட்டிருந்தாள்.

"சரி, என்னுடன் வா! இந்தக் காட்டில் ஓரிடத்துக்கு உன்னை நான் அழைத்துப் போகிறேன். அங்கேஇன்று பொழுது சாயும் வரையில் நீர் இருக்க வேண்டும். பட்டினியாகத்தான் இருக்க வேண்டும்..."

"அதைப் பற்றிக் கவலை இல்லை! காலையில் உன் அண்ணி பழைய சோறு போட்டாள். அவளுடையவயிற்றெரிச்சலைக் கிளப்புவதற்காகவே அதிகமாகச் சாப்பிட்டேன். இனி இராத்திரி வரையில் சாப்பாடுதேவையில்லை..."

இராத்திரி கூடச் சாப்பாடு கிடைக்கிறதோ, என்னமோ? கையில் கொஞ்சம் எடுத்துவரப்பார்க்கிறேன். நான் சொல்லும் இடத்தில் இருட்டும் வரை நீ இருக்க வேண்டும்! இருட்டிய பிறகு நான் திரும்பவந்து ஒரு சத்தம் செய்வேன். குயில் 'குக்கூ குக்கூ' என்று கூவுவதைக் கேட்டிருக்கிறாயா?"

"நன்றாய்க் கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்டிராவிட்டாலும் உன் குரலைத் தெரிந்து கொள்வேன்."

"நான் குரல் கொடுத்ததும் நீ அவ்விடத்திலிருந்து வௌி வர வேண்டும். இருட்டி ஒரு ஜாமத்திற்குள் படகில்ஏறி நாம் புறப்பட்டுவிட வேண்டும்."

"குயிலின் குரல் எப்போது வரும் என்று காத்திருப்பேன்."

காட்டின் மத்தியில் மணல் மேடு இட்டிருந்த ஓரிடத்துக்குப் பூங்குழலி வந்தியத்தேவனை அழைத்துப்போனாள். மேட்டின் மறு பக்கத்தில் மரஞ் செடி கொடிகள் மற்ற இடத்தைவிட அதிக நெருக்கமாயிருந்தன. அவற்றை லாவகமாகக் கையினால் விலக்கிக்கொண்டு ஒரு மரத்தின் வழியாகப் பள்ளத்தில் இறங்கினாள். வந்தியத்தேவனும் அவளைப் பின்பற்றி இறங்கினான். அங்கே ஒரு பழைய மண்டபத்தின் மேல் விளிம்புகாணப்பட்டது. இன்னும் உற்றுப் பார்த்ததில் இருளடைந்த மண்டபத்தின் இரு தூண்கள் தெரிந்தன. இவைஎல்லாவற்றையும் மரங்களும் செடி கொடிகளும் மறைந்திருந்தன. எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அந்த மண்டபம்அங்கே இருப்பது தெரியவே தெரியாது.

"இந்த மண்டபத்தில் ஒரு சிறுத்தை குடியிருந்தது. அது போனபிறகு நான் இதில் இருக்கிறேன். என்னுடைய சொந்தத் தனி வீடாக வைத்துக் கொண்டிருக்கிறேன். மனிதர்களைக் காணப்பிடிக்காத போதுஇவ்விடத்துக்கு நான் வந்துவிடுவது வழக்கம். சட்டியில் தண்ணீர் இருக்கிறது. இன்று பகலெல்லாம் இங்கேயேஇரு! நாலா புறமும் மனிதர்கள் குரல் கேட்டாலும் குதிரைகள் ஓடும் சப்தம் கேட்டாலும் வேறு என்ன தடபுடல்நடந்தாலும் நீ வௌியில் தலை காட்ட வேண்டாம். மேட்டில் மேல் ஏறிப் பார்க்க வேண்டாம்!" என்றுபூங்குழலி கூறினாள்.

"இருட்டிய பிறகும் இங்கேயே இருக்கச் சொல்கிறாயா? காட்டுமிருகம், புலி, சிறுத்தை ஏதாவதுவந்தால்?..." என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"புலி சிறுத்தை இங்கே ஒன்றும் இப்போது இல்லை. வந்தால் நரியும், காட்டுப் பன்றியும் வரும்.நரிக்கும் பன்றிக்கும் பயப்படமாட்டாயே!"

"பயம் ஒன்றுமில்லை. இருட்டில் வந்து மேலே விழுந்தால் என்ன செய்வது? கையில் வேல்கூட இல்லை.வீட்டில் வைத்துவிட்டேன்."

"இந்தா! இந்த ஆயுதத்தை வைத்துக்கொள்!" என்று பூங்குழலி மண்டபத்தில் கிடந்த ஓர் ஆயுதத்தைஎடுத்துக் கொடுத்தாள். அது ஒரு விசித்திரமான ஆயுதம். இருபுறமும் வாள் போல் கூர் கூரான முட்கள்இருந்தன.முட்கள் இரும்பைவிடக் கெட்டியாயிருந்தன. இந்திரனுடைய வஜ்ராயுதம் இப்படித்தான் இருக்கும்போலும்!

"இது என்ன ஆயுதம்? எதனால் செய்தது?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"இது ஒரு மீனின் வால்! இந்த மண்டபத்தில் குடியிருந்த சிறுத்தை என் மீது பாய வந்தபோது இதனால் அடித்துத்தான் அதைக்கொன்றேன்!" என்றாள் பூங்குழலி.


பக்க தலைப்பு



ஏழாம் அத்தியாயம்
"சமுத்திர குமாரி"




அன்று பகற்பொழுது வந்தியத்தேவனுக்கு எளிதில் போய்விட்டது. பாதி நேரத்துக்கு மேல் தூங்கிக்கழித்தான். விழித்திருந்த நேரமெல்லாம் பூங்குழலியின் விசித்திரய சுபாவத்தைப் பற்றி எண்ணுவதில்சென்றது.என்ன அதிசயமான பெண்? எவ்வளவு இனிய சரளமான பெயர்? ஆனால் சுபாவம் எவ்வளவுகடுமையானது? 'கடுமை' மட்டுந்தானா? அதில் இனிமையும் கலந்து தானிருந்தது! சிறுத்தையை அடித்துக் கொன்றகாரியத்தைப் பற்றி எவ்வளவு சர்வசாதாரணமாகக் கூறினாள்? இவ்வளவுடன் சில சமயம் உன்மத்தம் பிடித்தவள்மாதிரி நடந்து கொள்கிறாளே, அது ஏன்? இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஏதோ ஒரு கசப்பான சம்பவம்நடந்திருக்க வேண்டுமே! கசப்பான சம்பவமோ, அல்லது இனிப்பான சம்பவந்தானோ! இரண்டினாலும் இப்படி ஒருபெண் உன்மத்தம் பிடித்தவள் ஆகியிருக்கக் கூடும்! அல்லது ஒன்றுமே காரணமில்லாமல், பிறவியிலேயேஇத்தகைய இயற்கையுடன் பிறந்தவளோ? இவளுடைய பெற்றோர்களின் இயற்கையில் விசேஷம் ஒன்றையும்காணவில்லையே? இனிய, சாந்த சுபாவம் படைத்தவர்களாயிருக்கிறார்களே!... குணம் எப்படியாவதுஇருக்கட்டும். நம்மிடம் இவளுக்கு இவ்வளவு சிரத்தை ஏற்பட்டதன் காரணம் என்ன? பழுவூர் ஆட்களிடம் நாம்பிடிபடாமல் தப்புவிப்பதற்கு இவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கிறாளே? இலங்கைக்குப் படகு வலித்துக் கொண்டுவருவதாகவும் சொல்லியிருக்கிறாளே? இதிலெல்லாம் ஏதாவது ஏமாற்றம் இருக்குமோ?... ஒருநாளும் இல்லை.ஆனாலும் இவள் மனம் மாறியதன் காரணம் என்ன? நம்மிடம் இவள் எந்தவித பிரதி உபகாரத்தைஎதிர்பார்க்கிறாள்? பின்னால் கூறுவதாகக் கூறியிருக்கிறாளே? அது என்னவாயிருக்கும்?...'

இவ்வாறு வந்தியத்தேவன் சிந்தனை செய்து கொண்டிருந்த சமயங்களில், பூங்குழலி கூறியிருந்ததுபோலவே, அவனைச் சுற்றி நாலபுறங்களிலும் அடிக்கடி அமளிதுமளிப்பட்டது. குதிரைகளின் ஓட்டம்,மனிதர்களின் அட்டகாசம், சிறிய வன ஜந்துக்களின் பயம் நிறைந்த கூச்சல், பறவைகள் கிறீச்சிடுதல் -இவ்வளவும் சேர்ந்து சில சமயம் ஒரே அமர்க்களமாயிருந்தது. அடுத்தாற்போல் அமைதி குடிகொண்டுநிசப்தமாயுமிருந்தது. அமர்க்களப்பட்டதெல்லாம் தன்னைச் தேடிப் பிடிப்பதற்காகத்தான் என்று வந்தியத்தேவன்உணர்ந்தான். வைத்தியரின் மகன் செய்த துரோகமும் அவனுடைய மனத்தில் அடிக்கடி வந்து கொண்டிருந்தது!

'நிர்மூடன்! பூங்குழலியிடம் அதற்குள் மையல் கொண்டு விட்டதாக அவனுக்கு எண்ணம் போலும்!சிறிய குட்டையில் உள்ள தண்ணீர் வடவா முகாக்கினியின் மீது காதல் கொண்டது போலத் தான்! பெண்சிங்கத்தை ஒரு சுண்டெலி கல்யாணம் செய்து கொள்ள எண்ணிய கதைதான்! ஆனாலும் அவனுடைய அறிவீனத்தைஇந்தப் பெண் எப்படிப் பயன்படுத்திக் கொண்டு விட்டாள்! அவனுடைய மனத்தில் எவ்விதம் பொறாமைக் கனலைமூட்டிவிட்டாள்?... அரை நாழிகை நேரத்தில் அவனைத் துரோகியாக்கி விட்டாளே! பெண்மையின் சக்திஅபாரமானதுதான்!"

'வந்தியத்தேவா! ஒன்று மட்டும் நீ ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்! நீ உன்னை வெகுகெட்டிக்காரன் என்று எண்ணியிருந்தாய்! தந்திர மந்திர சாமர்த்தியங்களில் உனக்கு இணையாரும் இல்லை என்றுஇறுமாந்திருந்தாய்! ஆனால் இந்த நாகரிகமறியாத காட்டு மிராண்டிப் பெண் உன்னைத் தோற்கடித்து விட்டாள்!கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த உன்னை இந்த மறைந்த மண்டபத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவள்கையாண்ட யுக்தியை என்னவென்று சொல்வது? அப்படி அவள் உன் அரைச் சுற்றுச் சுருளை எடுத்துக்கொண்டுஓடியிராவிட்டால், இத்தனை நேரம் என்ன ஆகியிருக்கும்? புழுவூர் ஆட்களிடம் நீ சிக்கியிருப்பாய்!காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்கும்!... ஆம் இனி எப்போதும் இம்மாதிரி அஜாக்கிரதையாகஇருந்துவிடக் கூடாது.'

மேற்குக் கடலில் சூரியன் அஸ்தமித்தது. கோடிக்கரையில் இது ஓர் அற்புதமான காட்சி. அதுவரை தெற்கு நோக்கி வரும் கடற்கரை அந்த முனையில் நேர்கோணமாக மேற்கு நோக்கித் திரும்பிச்செல்கிறது. ஆதலின் கோடிக்கரையில் மேடான இடத்திலிருந்து பார்த்தால் கிழக்கு - மேற்கு - தெற்குஆகிய மூன்று திசைகளிலும் கடல் பரந்திருக்கக் காணலாம். சிற்சில மாதங்களில் சூரிய சந்திரர்கள்கிழக்குக் கடலில் ஜோதிமயமாக உதயமாவதையும் பார்க்கலாம். மேற்கே கடலைத் தங்கமயமாகச் செய்துகொண்டு முழுகி மறைவதையும் காணலாம். வந்தியத்தேவனுக்கு மண்டபத்தை மூடியிருந்த மணல்திட்டின் மேல் ஏறிச்சூரியன் கடலில் மறையும் காட்சியைப் பார்க்க ஆவல் உண்டாயிற்று.அதைப் பிரயத்தனப்பட்டு அடக்கிக்கொண்டான்.

நாலாபுறமும் அந்தகாரம் சூழ்ந்து வந்தது. மறைந்த மண்டபத்தில் முன்னமே குடி கொண்டிருந்த இருள்பன்மடங்கு கரியதாயிற்று. வந்தியத்தேவனால் அங்கே மேலும் இருக்க முடியவில்லை.வௌியேறி வந்தான். மண்டபத்தை மூடிய மணல் திட்டின் மீது நின்றான். வெகுதூரத்தில் கலங்கரை விளக்கின் ஒளி தெரிந்தது. வானத்தில் வைரமணிகள் சுடர்விட்டு ஜொலித்தன. காட்டில் பல விசித்திரமான ஒலிகள் உண்டாயின. பகலில் வனப்பிரதேசத்தில் கேட்கும் ஒலிகளுக்கும் இரவில் கேட்கும் ஒலிகளுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. இரவில் கேட்கும் ஒலிகள் மர்மம் நிறைந்து உள்ளத்தில் பீதியையும் உடலிலே சிலிர்ப்பையும் உண்டாக்கின. பகலில் எதிரே புலியைப் பார்த்தாலும் மனம் பதறுவதில்லை; பயமும் உண்டாவதில்லை. இரவில் ஒரு புதரில்சின்னஞ்சிறு எலி ஓடினாலும் உள்ளம் திடுக்கிடுகிறது!

இதோ குயிலின் குரல். 'குக்கூ!','குக்கூ!' அந்தக் குரல் தேவகானத்தைப் போல் வந்தியத்தேவன்காதில் ஒலித்தது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான். பூங்குழலி அங்கு நின்றாள். 'சத்தம்செய்யாமல் என்னுடன் வா' என்று சமிக்ஞை செய்தாள். அங்கிருந்து கடற்கரை வெகு சமீபம் என்று தெரியவந்தது.

கடற்கரையில் படகு ஆயத்தமாயிருந்தது. அதில் பாய் மரமும் பாயும் அதைக் கட்டும் கயிறும்சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. படகிலிருந்து இரண்டு கழிகள் நீட்டிக் கொண்டிருந்தன. அந்தக் கழிகளின்முனையில் ஒரு பெரிய மரக்கட்டை பொருத்திக் கட்டப்பட்டிருந்தது. படகைக் கடலில் இறக்குவதற்குவந்தியத்தேவன் உதவி செய்யப்போனான். 'நீ சும்மா இரு!' என்று பூங்குழலி சமிக்ஞை செய்தாள். படகைலாவகமாகத் தள்ளிக் கடலில் இறக்கினாள்.

சிறிதும் சத்தமின்றிக் கடலில் அப்படகு இறங்கியது.

வந்தியத்தேவன் படகில் ஏறிக்கொள்ள யத்தனித்தான். "உஷ்! சற்றுப் பொறு! கொஞ்ச தூரம் போன பிறகு நீ ஏறிக்கொள்ளலாம்!" என்று பூங்குழலி மெல்லிய குரலில் கூறிவிட்டுப் படகைப் பிடித்து இழுத்துக் கொண்டே போனாள்.

வந்தியத்தேவன் தானும் உதவி செய்ய எண்ணிப் படகைத் தள்ளினான். படகு நின்று விட்டது.

"நீ சும்மா வந்தால் போதும்!" என்றாள் பூங்குழலி.

கரை ஓரத்தில் அலை மோதும் இடத்தைக் தாண்டிய பிறகு "இனிமேல் படகில் ஏறிக்கொள்ளலாம்!"என்று சொல்லி, அவள் முதலில் ஏறிக் கொண்டாள். வந்தியத்தேவனும் தாவி ஏறினான். அப்போது படகுஅதிகமாக ஆடியது. அந்த ஆட்டத்தில் வந்தியத்தேவன் கடலில் விழுந்து விடுவான் போலத் தோன்றியது;சமாளித்துக்கொண்டு உட்கார்ந்தான். ஆயினும் அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

"இனிமேல் ஏதாவது பேசலாம் அல்லவா?" என்று கேட்டான்.

"நன்றாகப் பேசலாம். உனக்கு நடுக்கம் நீங்கியிருந்தால்பேசலாம்!" என்றாள் பூங்குழலி.

"நடுக்கமா? யாருக்கு நடுக்கம்? அதெல்லாம் ஒன்றுமில்லை."

"ஒன்றுமில்லாவிட்டால் சரி!"

"பாய்மரம் கட்ட வேண்டாமா?"

"பாய்மரம் கட்டினால் கரையில் உள்ளவர்கள் ஒருவேளை நம்மைப் பார்த்துவிடுவார்கள். ஓடி வந்து பிடித்துக் கொள்வார்கள்."

"இனி அவர்கள் வந்தால் ஒரு கை பார்த்து விடுகிறேன். நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம்!"என்று வந்தியத்தேவன் தன் வீரப்பிரதாபத்தைச் சொல்லத் தொடங்கினான்.

"இப்போது எதிர்க்காற்று அடிக்கிறது. பாய்மரம் விரித்தால் படகை மறுபடி கரையிலே கொண்டு போய் மோதும். நடுநிசிக்கு மேல்காற்றுத் திரும்பக்கூடும். அப்போது பாய்மரம் விரித்தால் பயன்படும்!" என்று பூங்குழலி கூறினாள்.

"ஓ உனக்கு இதெல்லாம் நன்றாய்த் தெரிந்திருக்கிறது;அதனாலேதான் உன்னை அழைத்துப் போகும்படி உன் தந்தைசொன்னார்."

"என் தந்தையா? யாரைச் சொல்லுகிறாய்?"

"உன் தகப்பனாரைத்தான் சொல்லுகிறேன். கலங்கரை விளக்கின் தியாகவிடங்கக்கரையரைச் சொல்லுகிறேன்."

"கரையில் இருக்கும்போதுதான் அவர் என்னுடைய தந்தை. கடலில் இறங்கிவிட்டால்..."

"தகப்பனார் கூட மாறிப் போய்விடுவாரா, என்ன?"

"ஆமாம்; இங்கே சமுத்திர ராஜன்தான் என் தகப்பனார்.என்னுடைய இன்னொரு பெயர் சமுத்திரகுமாரி. உனக்கு யாரும் சொல்லவில்லையா?"

"சொல்லவில்லை! அது என்ன விசித்திரமான பெயர்?"

"சக்கரவர்த்தியின் இளைய குமாரனைப் 'பொன்னியின் செல்வன்' என்று சிலர் சொல்லுகிறார்கள் அல்லவா!அது போலத்தான்!" இதைக் கேட்டதும் வந்தியத்தேவன் தனது அரைச் சுற்றுச் சுருளைத் தடவிப் பார்த்துக்கொண்டான்.

அதைக் கவனித்த பூங்குழலி, "பத்திரமாக இருக்கிறதல்லவா?" என்று கேட்டாள்.

"எதைப் பற்றிக் கேட்கிறாய்?"

"உன் அரைச் சுருளில் வைத்திருக்கும் பொருளைப் பற்றித்தான்."

வந்தியத்தேவனுடைய மனத்தில் "சொரேல்" என்றது. ஒரு சிறிய சந்தேகம் ஜனித்தது. அவனுடன் பேசிக்கொண்டே பூங்குழலிதுடுப்பை வலித்துக்கொண்டிருந்தாள். படகு போய்க் கொண்டிருந்தது.

"இலங்கைத் தீவுக்கு நாம் எப்போது போய்ச் சேரலாம்?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"இரண்டு பேராகத் துடுப்பு வலித்தால் பொழுது விடியும் சமயம் போய்ச் சேரலாம், காற்று நமக்கு உதவியாக இருந்தால்!"

"நானும் துடுப்பு வலிக்கிறேன்; உன்னைத் தனியாக விட்டுவிடுவேனா?"

வந்தியத்தேவன் தன் அருகிலிருந்த துடுப்பைப் பிடித்து வலித்தான். ஆ! படகு வலிப்பது இலேசானவேலையன்று. மிகவும் கடினமான வேலை. படகு 'விர்' என்று சுழன்று அடியோடு நின்று விட்டது.

"இது என்ன? நீ துடுப்பை வலித்தால் படகு போகிறது; நான் தொட்டவுடனே நின்றுவிட்டதே!"

"நான் சமுத்திரகுமாரியல்லவா? அதனாலேதான்! நீ சும்மா இருந்தால் போதும்! உன்னை எப்படியாவதுஇலங்கையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறேன்; சரிதானே?"

வந்தியத்தேவன் சிறிது வெட்கமுற்றான். சற்று நேரம் சும்மா இருந்தான்! சுற்றுமுற்றும்பார்த்தபோது, படகிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கழிகளும் கட்டைகளும் அவன் கண்களில் பட்டன.

"இந்தக் கட்டை என்னத்திற்கு?" என்று கேட்டான்.

"படகு அதிகம் ஆடாமல் இருப்பதற்காக."

"இதைக் காட்டிலும் படகு அதிகம் ஆடுமா என்ன? இப்போவேதான் வேண்டிய ஆட்டம் ஆடுகிறதே? எனக்குத் தலை சுற்றும் போலிருக்கிறது."

"இது ஒரு ஆட்டமா? ஐப்பசி, கார்த்திகையில் வாடைக் காற்று அடிக்கும் போதல்லவா பார்க்க வேண்டும்?"

கரையிலிருந்து பார்த்தால் கடல் அமைதியாகத் தகடு போல் இருப்பதாகத் தோன்றியது. ஆனால்உண்மையில் அவ்விதம் இல்லையென்பதை வந்தியத்தேவன் கண்டான். நுரையில்லாத அலைகள் எழும்பிவிழுந்துகொண்டு தானிருந்தன. அவை அப்படகைத் தொட்டில் ஆட்டுவது போல் ஆட்டிக்கொண்டிருந்தன.

"பெருங்காற்று அடிக்கும்போது இந்தக் காட்டை என்ன ஆகும்?"

"எவ்வளவு பெரிய காற்று என்பதைப் பொறுத்தது. சாதாரணமாய்ப் பெருங்காற்று அடித்தாலும் இந்தக் கட்டை படகைக் கவிழாமல் நிறுத்தி வைக்கும். ஒருவேளை சுழிக்காற்று அடித்து, படகு கவிழ்ந்து விட்டால் இந்தக் கட்டையைப் படகிலிருந்து அவிழ்த்து விட்டுவிடாமல், அதைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்புவதற்குப் பார்க்கலாம்.

"ஐயோ! காற்றில் படகு கவிழ்ந்துவிடுமா, என்ன?"

"சுழிக்காற்று அடித்தால் பெரிய பெரிய மரக்கலங்கள் எல்லாம் சுக்கு நூறாகிவிடும். இந்தச் சிறிய படகு எம்மாத்திரம்?

"சுழிக்காற்று என்றால் என்ன?"

"இதுகூடத் தெரியாதா?ஒரு பக்கமிருந்து அடிக்கும் காற்றும், இன்னொரு பக்கத்திலிருந்து அடிக்கும்காற்றும் மோதிக் கொண்டால் சுழிக்காற்று ஏற்படும். இங்கே தை, மாசி மாதங்களில் 'கொண்டல் காற்று'அடிக்கும்.அப்போது அபாயமே இல்லை. சுலபமாகத் கோடிக் கரைக்கும் இலங்கைக்கும் போய் வரலாம். 'இரவுக்கிரவே போய்விட்டுத் திரும்பலாம்.வைகாசியிலிருந்து 'சோழகக் காற்று' அடிக்கும். சோழகக்காற்றில் இங்கிருந்து இலங்கை போவது கொஞ்சம் சிரமம். இப்போது சோழகக் காற்றுக்கும்வாடைக்காற்றுக்கும் இடையில் உள்ள காலம். கடலில் சில சமயம் காற்றும், காற்றும் மோதிக்கொள்ளும். மத்தினால் தயிர் கடைவதுபோல் காற்று கடலைக் கடையும். மலை போன்ற அலைகள் எழும்பி விழும். கடலில் பிரம்மாண்டமான பள்ளங்கள் தென்படும். அப்பள்ளங்களில் தண்ணீர் கரகரவென்று சுழலும். அந்தச்சுழலில் படகு அகப்பட்டுக் கொண்டால் அரோகராதான்."

வந்தியத்தேவனுக்குத் திடீரென்று மனத்தில் ஒரு திகில் உண்டாயிற்று. அத்துடன் ஒரு சந்தேகமும்உதித்தது. "ஐயோ! நான் வரவில்லை! என்னைக் கரையிலே கொண்டு போய் விட்டுவிடு!" என்றுகத்தினான்.

"என்ன உளறுகிறாய்? பேசாமலிரு! பயமாயிருந்தால் கண்ணை மூடிக்கொள். இல்லாவிட்டால்படுத்தூங்கு!" வந்தியத்தேவனுடைய சந்தேகம் இப்போது உறுதிப்பட்டது.

"நீ பெரிய மோசக்காரி! என்னைக் கடலில் மூழ்க அடிப்பதற்காக அழைத்துப் போகிறாய். நான் தூங்கினால் உன் காரியம் மிகவும் சுலபமாகும் என்று பார்க்கிறாய்!"

"இது என்ன பைத்தியம்?"

"எனக்கு ஒன்றும் பைத்தியம் இல்லை! படகைத் திருப்புகிறாயா, இல்லையா? திருப்பாவிட்டால் கடலில் குதித்து விடுவேன்!"

"தாராளமாய்க் குதி! ஆனால் குதிப்பதற்கு முன்னால் பொன்னியின் செல்வனுக்கு நீ எடுத்துப் போகும் ஓலையை என்னிடம் கொடுத்துவிடு!"

"ஓ! அந்த ஓலையைப் பற்றி உனக்கு எப்படி தெரிந்தது?"

"உன் இடுப்பில் சுற்றியிருக்கும் சுருளை அவிழ்த்துப் பார்த்ததில் தெரிந்தது. நீ யார், எதற்காக இலங்கை போகிறாய் என்று தெரிந்து கொள்ளாமல் உனக்குப் படகு தள்ளச் சம்மதித்திருப்பேனா? காலையில் மரத்தின் மேல் உட்கார்ந்து உன் அரைச் சுருளை அவிழ்த்து ஓலையைப் பார்த்தேன்..."

"மோசக்காரி! உன்னை நம்பி வந்துவிட்டேனே! படகைத் திருப்புகிறாயா, மாட்டாயா?"

வந்தியத்தேவனுடைய திகிலும், வெறியும் பன்மடங்கு ஆயின. "படகைத் திருப்பு! படகைத் திருப்பு!" என்றுஅலறினான்.

"நான் மட்டும் இளைய பிராட்டி குந்தவையாக இருந்திருந்தால் இவ்வளவு முக்கியமான ஓலையைஉன்னைப் போன்ற சஞ்சல புத்திக்காரனிடம் கொடுத்து அனுப்பியிருக்க மாட்டேன்!" என்றாள் பூங்குழலி.

"ஓகோ! ஓலை கொடுத்தது யார் என்று கூட உனக்குத் தெரிந்திருக்கிறதே! நீ வஞ்சகி என்பதில்சந்தேகமில்லை. படகைத் திருப்புகிறாயா? கடலில் குதிக்கட்டுமா?"

"குதி! தாராளமாய்க் குதி!" என்றாள் பூங்குழலி.

வெறி கொண்ட வந்தியத்தேவன் தொப்பென்று கடலில் குதித்தான். கரையோரத்தில்இருந்ததுபோல் தண்ணீர் கொஞ்சமாக இருக்குமென்று எண்ணிக் குதித்தான். அதற்குள்ளே படகு நீச்சுநிலைகொள்ளாத ஆழமான கடலுக்கு வந்துவிட்டது என்பதை அவன் அறியவில்லை. கடலில் குதித்த பிறகுதான் அதைஅறிந்தான். அறிந்த பிறகு அலறித் தத்தளித்தான்.

இதற்குள் வந்தியத்தேவன் ஓரளவு நீந்தத் தெரிந்து கொண்டிருந்தான்.ஆனால் தண்ணீரைக் கண்டால்அவனுக்கு இயற்கையாக ஏற்படும் பயம், கை கால்களின் தெம்பைக் குறைத்தது. ஆற்றிலே குளத்திலே என்றால்,பக்கத்தில் உள்ள கரையைப் பார்த்துத் தைரியம் கொள்ள இடமிருந்தது; இதுவோ மாகடல். நாலாபுறமும்எங்கே பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயம். கடலில் அங்கே இலேசான அலைதான். எனினும் ஒரு சமயம் அவனைமேலே கொண்டு வந்தது, இன்னொரு சமயம் பள்ளத்தில் தள்ளியது. மேலே வந்தபோது படகு கண்ணுக்குத்தெரிந்தது. 'ஓ' என்று கத்தினான். பள்ளத்தில் விழுந்த போது படகு கண்ணுக்குத் தெரியவில்லை. சுற்றிலும் இருண்ட தண்ணீரின் சுவர் மட்டுமே தெரிந்தது.'ஓ' என்று அலறும் சக்தியைக் கூட அவனுடைய நாஇழந்துவிட்டது. மூன்றாவது முறை கடல் அலை அவனை மேலே கொண்டு வந்தபோது படகு முன்னைவிடத் தூரத்துக்குப்போய்விட்டதாகத் தோன்றியது.'அவ்வளவு தான் கடலில் முழுகிச் சாகப் போகிறோம்' என்ற எண்ணம் அவன்மனத்தில் உண்டாகிவிட்டது! நாம் முழுகுவது மட்டுமில்லை; நம்முடைய அரைக்கச்சும் அதில் உள்ள ஓலையும் முழுகப்போகின்றன! குந்தவை தேவியின் முகம் அவன் மனக் கண்ணின் முன்னால் வந்தது.

"இப்படி செய்து விட்டாயே?" என்று கேட்பது போல் இருந்தது. "ஆகா! என்னவெல்லாம் கனவுகண்டோம்? என்னவெல்லாம் மனக் கோட்டை கட்டினோம்? வாணர் குலத்துப் பழைய அரசு திரும்ப வந்து, இரத்தினகசிதமான சிங்காதனத்தில் பக்கத்தில் இளைய பிராட்டியுடன் வீற்றிருக்கப் போவதாக எண்ணினோமே?அவ்வளவும் பாழாகி விட்டது! இந்தப் பாவிப்பெண் கெடுத்துவிட்டாள்! இவள் ஒரு பெண் அல்ல; பெண்உருக்கொண்ட பேய்! பழுவேட்டரையர்களைச் சேர்ந்தவள். இல்லை, அந்த மோகினிப்பிசாசு நந்தினியைச்சேர்ந்தவள். நாம் கடலில் முழுகிச் செத்தாலும் பாதகமில்லை. இந்தப் பெண் பேய் மட்டும் இப்போதுநம்மிடம் சிக்கினால் இவள் கழுத்தை நெறித்து... சீச்சீ! இது என்ன எண்ணம்! சாகும் போது நல்லவிஷயமாக எண்ணிக் கொள்வோம்! கடவுளை நினைப்போம்! உமாபதி! பரமேசுவரா! பழனி ஆண்டவா!பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளே!...குந்தவை தேவி! மன்னிக்கவும் ஒப்புக்கொண்ட காரியத்தைமுடிக்காமல் போகிறேன்... அதோ படகு தெரிகிறது. அந்தப் பெண் மட்டும் இப்போது கையில்சிக்கினால்!'

வந்தியத்தேவன் கடலில் குதித்துச் சிறிது நேரம் வரையில் பூங்குழலி அலட்சியமாகவேஇருந்தாள். தட்டுத்தடுமாறி நீந்தி வந்து படகில் தொத்திக் கொள்வான் என்று நினைத்தாள். 'கொஞ்சம்திண்டாடட்டும்' என்ற எண்ணத்துடனே படகுக்கும் அவனுக்கும் இருந்த தூரத்தை அதிகமாக்கினாள்.விரைவில் அவள்எண்ணியது தவறு என்று தெரிந்து விட்டது. 'இவனுக்கு நன்றாக நீந்தத் தெரியவில்லை; அதோடு பீதியும்அடைந்து விட்டான்; 'ஆ!,' 'ஓ!' என்று அவன் அலறுவது விளையாட்டுக்கு அன்று; உண்மையானபயத்தினாலேதான். இன்னும் சற்றுப் போனால் உப்புத்தண்ணீரைக் குடிக்கத் தொடங்கி விடுவான்! முழுகியும்போய்விடுவான். பிறகு அவனுடைய உடலைக் கண்டுபிடிக்கவும் முடியாது. சேச்சே! தவறு அல்லவா செய்துவிட்டோம்? விளையாட்டு விபரீதமாக முடிந்துவிடும் போலிருக்கிறதே! அக்கரை போகும் வரையில் நாம்வாயை மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அவனுடைய இரகசியம் நமக்குத் தெரியும் என்று காட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அதற்குள்ளே அவசரப்பட்டு விட்டோம். ஆனாலும் இந்த முரடன் இப்படிச் செய்வான் என்றுயாருக்குத் தெரியும்? தண்ணீரைக் கண்டு இவன் இப்படி பயப்படுவான் என்று யார் கண்டது?'

அலையின் உச்சியில் வந்தியத்தேவன் அடுத்த தடவை தெரிந்த போது, பூங்குழலி படகை அவனைநோக்கிச் செலுத்தினாள். ஒரு நொடிப் பொழுதில் படகு அவனுக்கருகில் நெருங்கி விட்டது. "வா!வா. வந்து ஏறிக்கொள்!" என்றாள். ஆனால் அவன் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. விழுந்தாலும் படகைத்பிடித்து ஏறிக்கொள்ளப் போகிறவனாகத் தெரியவில்லை. கேட்கும் சக்தியோடும் பார்க்கும் சக்தியையும்இழந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால் அலறும் சக்தி மட்டும் இருந்தது. ஒரு கையை மேலே தூக்கி,தலையை மேலாக நிமிர்த்தி, 'ஓ' என்று ஒரு கணம் அலறினான். சகல நம்பிக்கையையும் இழந்து முழுகிச்சாகப் போகிறவனுடைய ஓலக்குரல் அது என்பதை பூங்குழலி அறிந்தாள். அவன் தலையை நிமிர்த்தியபோதுபிறைச் சந்திரனின் மங்கிய நிலா வௌிச்சத்தில் அவன் முகம் ஒரு கணம் தெரிந்தது. வெறி முற்றியபைத்தியக்காரனின் முகந்தான் அது! அவனாக வந்து படகில் ஏறிக் கொள்வான் என்று நினைப்பது வீண்!... நாம்தான் அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றியாக வேண்டும்! நல்ல சங்கடத்தை நாமாக வரவழைத்துக்கொண்டோம்! 'பெண்புத்தி பின்புத்தி' என்று சொல்லுகிறார்களே, அது சரிதான்!'

உடனே பூங்குழலி மிகப் பரபரப்புடன் சில காரியங்களைச் செய்தாள். படகில் கிடந்தபாய்மரம் கட்டுவதற்கான கயிற்றின் ஒரு முனையைப் படகிலிருந்து நீண்டிருந்த கட்டையில் சேர்த்துக் கட்டினாள்.இன்னொரு முனையைத் தன் இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள்; கடலில் குதித்தாள். வெகு லாவகமாகக்கைகளை வீசிப்போட்டு நீந்திக்கொண்டு போனாள். வந்தியத்தேவன் அருகில் சென்றாள்.கையினால்தாவிப் பிடிக்கக் கூடிய தூரத்தில் நின்று கொண்டாள்.

வந்தியத்தேவனும் அவளைப் பார்த்துவிட்டான். அவனுடைய முகத்திலும் கண்களிலும் பயங்கரமானகொலை வெறி தாண்டவமாடியது. பூங்குழலியின் உள்ளம் அதிவேகமாக இயங்கியது. நீந்தத்தெரியாதவர்களும் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகிறவர்களும் கடைசி நேரத்தில் என்ன செய்வார்கள்என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. தங்களைக் காப்பாற்றுவதற்காக யாராவது வந்தால், அப்படிவருகிறவர்களின் தோளையோ கழுத்தையோ கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுவார்கள். காப்பாற்றவருகிறவர்களும் நீந்த முடியாமல் செய்து விடுவார்கள்; உயிரின் மேலுள்ள ஆசையானது அச்சமயம் அவர்களுக்குஒரு யானையின் பலத்தை அளித்துவிடும். காப்பாற்ற வருகிறவர்களை இறுக்கிப் பிடித்துத் தண்ணீரில் அமுக்கப்பார்ப்பார்கள். அவர்களுடைய பயங்கர ராட்சதப் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ளவும் முடியாது; நீந்தவும்முடியாது.இரண்டு பேருமாகச் சேர்ந்து கடலுக்கு அடியில் போகவேண்டியதுதான்!

இதையெல்லாம் நன்கு அறிந்திருந்த பூங்குழலி மின்னல் வேகத்தில் சிந்தனை செய்தாள்; ஒருதீர்மானம் செய்து கொண்டாள். உயிருக்கு மன்றாடித் தத்தளித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனை மேலும்சிறிது நெருங்கினாள். அவனுடைய தலைப்பக்கமாக வந்தாள். ஒரு கையினால் நீந்திக்கொண்டு இன்னொருகையை இறுக மூடி ஓங்கினாள். வந்தியத்தேவனுடைய முகத்தை நோக்கிப் பலமாக ஒரு குத்துக் குத்தினாள். மூக்குக்கும் நெற்றிக்கும் நடுவில் அந்தக் குத்து விழுந்தது.படகு வலித்து வலித்துக் கெட்டிப்பட்டிருந்த அவளுடையகையினால் குத்திய குத்து வஜ்ராயுதம் தாக்கியது போல் வந்தியத்தேவனைத் தாக்கியது. அவனுடைய தலைஆயிரமாயிரம் சுக்கலாயிற்று. அவனுடைய கண்கள் பதினாயிரம் துணுக்குகள் ஆயின. ஒவ்வொரு கண்துணுக்கிற்கு முன்னாலும் ஒரு லட்சம் மின்பொறிகள் ஜொலித்துக்கொண்டு பறந்தன.ஒவ்வொரு மின்பொறியிலும்சமுத்திரகுமாரியின் முகம் தோன்றி 'ஹா ஹா ஹா ஹா' என்று பேய்ச்சிரிப்புச் சிரித்தது. ஆயிரம்,பதினாயிரம், லட்சம் பேய்களின் அகோரமான சிரிப்பின் ஒலியில் அவன் காது செவிடுபட்டது. அப்புறம்அவனுக்குக் காதும் கேட்கவில்லை; கண்ணும் தெரியவில்லை! நினைவும் இல்லை! முடிவில்லாத இருள்!எல்லையில்லாத மௌனம்!


பக்க தலைப்பு



எட்டாம் அத்தியாயம்
பூதத் தீவு




வானமாதேவி இருக்கிறாளே, அவள் புத்தி விசாலத்தில் மனித குலத்தை ஒத்தவள்தான் போலும்!பரஞ்சோதியாகிய இறைவனை மனிதர்கள் தங்கள் இதய ஆகாசத்திலிருந்து நழுவிச் செல்லவிட்டுவிடுகிறார்கள். பிறகு இருண்ட ஆலயங்களின் பிரகாரங்களிலும், கர்ப்பக் கிருஹங்களிலும் லட்சதீபம் ஏற்றிஅந்தப் பரஞ்சோதியைத் தேடுகிறார்கள்.

வானமா தேவியும் அத்தகைய புத்திசாலித்தனமான காரியத்தைத் தினந்தோறும் செய்கிறாள்!ஜோதிமயமான சூரிய பகவானைத் தன் வசத்திலிருந்து கடலில் நழுவ விட்டு விடுகிறாள்.பிறகு தன்நாதனைக் காணவில்லையே என்ற கவலை அவளுக்கு உண்டாகிவிடுகிறது. லட்சதீபம் ஏற்றிச் சூரியனைத்தேடுகிறாள்! லட்ச தீபம் மட்டுமா ஏற்றுகிறாள்? கோடானு கோடி தூங்கா விளக்குகளை ஏற்றி இரவெல்லாம்அவளும் தூங்காமல் சூரியனைத் தேடிக் கொண்டிருக்கிறாள்!

வந்தியத்தேவன் தனக்கு உணர்வு வந்து கண்ணைத் திறந்து பார்த்தபோது, தன் கண்முன்னே பல்லாயிரம்தீபச் சுடர்கள் மின்னுவதைக் கண்டான்; எந்தக் கோவிலிலே இவ்வளவு அலங்காரமாக லட்சதீபம்ஏற்றியிருக்கிறார்கள் என்று வியந்தான். பின்னர், அவை தீபங்கள் அல்லவென்றும் வானத்தில் சுடர்விடும்நட்சத்திரங்கள் என்றும் உணர்ந்தான். படகில் தான் அண்ணாந்து படுத்திருப்பதையும் தன் இடுப்பைச் சுற்றிஈரத்துணியின் மீது கயிறு ஒன்று கட்டியிருப்பதையும் அறிந்தான். ஜிலுஜிலுவென்று குளிர்ந்த காற்று அவன்உடல் மீது பட்டு அவனுக்கு எல்லையற்ற சுகத்தையும் அமைதியையும் அளித்தது. அமைதியான கடலில் எழுந்தஓங்கார நாதம் அவன் உள்ளத்தில் அபூர்வமான சாந்தியை உண்டாக்கியது.

அந்த நாதத்தினிடையே ஒரு கீதமும் கேட்டது. அது என்ன கீதம்? அதை அவன் இதற்கு முன்எங்கே, எப்பொழுது கேட்டிருக்கிறான்?
	"வாரிதியும் அடங்கி நிற்க மாருதமும் தவழ்ந்து வர 	காரிகையென் உள்ளந்தனிலே காற்று சுழன் றடிப்பதுமேன்? 	அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?" 

ஆகா! அந்த விசித்திரமான பெண்! பூங்குழலி! சற்று நிமிர்ந்து உட்கார்ந்து எதிரேபார்த்தான். ஆம், அவள்தான்! படகுதள்ளிக் கொண்டிருக்கிறாள்! அந்தச் சோக கீதத்தைப் பாடிக்கொண்டுபடகு வலிக்கிறாள்! காரிருளிலே ஒரு மின்னல் மின்னிப் பல பொருள்களை ஒருநொடிப் பொழுதில்காட்டிவிடுவது போல முன்னிரவில் நடந்ததெல்லாம் வந்தியத் தேவனுக்குப் பளிச்சென்று ஞாபகம் வந்தது. அதாவது, அவன் கடலில் தத்தளித்தபோது பூங்குழலியும் கடலில் குதித்து அவனை நோக்கி வந்ததுவரையிலேதான். பிறகு நடந்தது ஒன்றும் அவனுக்கு நினைவில் இல்லை. தன்னை அந்தப் பெண் காப்பாற்றிப்படகில் ஏற்றியிருக்க வேண்டும்.படகு அசையும்போதுதான் மீண்டும் கடலில் விழுந்து விடாமலிருப்பதற்காகஇடுப்பில் கயிற்றைச் சுற்றிப் படகின் குறுக்குக் கட்டையில் சேர்த்துக் கட்டியிருக்கிறாள். கயிறு உடம்பின்தோலில் பட்டு வலிக்காதபடி அரை ஆடையின் மீது சுற்றிக் கட்டியிருக்கிறாள். இடுப்புத்துணியைச்சுற்றியிருந்த அரைச் சுருளை வந்தியத்தேவன் தொட்டுப் பார்த்துக் கொண்டன். பணமும் ஓலையும்பத்திரமாயிருக்கக் கண்டான்.

'ஆகா! இந்தப் பெண்மீது தான் சந்தேகங் கொண்டது எவ்வளவு பெரிய தவறு! வேறு விதமானதுர்நோக்கம் இவளுக்கு இருந்தால் தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லையே? கை சளைத்துஉணர்விழந்த தன்னைக் கடலிலிருந்து படகில் ஏற்றுவதற்கு இவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும்? எப்படித்தான்தன்னந் தனியாகச் செய்தாளோ? அபூர்வமான நங்கை இவள்!"

'இதோ அவள் எழுந்திருக்கிறாளே, ஏன்? தான் விழித்து விட்டதைப் பார்த்து விட்டுத்தான் தன்னைநெருங்கி வருகிறாளோ? வந்து என்ன செய்யப் போகிறாள்? இல்லை! இல்லை! வேறு ஏதோ செய்கிறாள். ஆகா! பாய்மரத்தில் பாயைக் கட்டப் போகிறாள்! எவ்வளவு கடினமான வேலை! அதுவும் தன்னந்தனியாகச்செய்வது?' "பூங்குழலி! பூங்குழலி!"

"ஓகோ! விழித்துக் கொண்டு விட்டாயா?"

"என் கட்டை அவிழ்த்து விடு! நானும் உனக்கு உதவி செய்கிறேன்."

"நீ சும்மா இருந்தால் போதும்.அதுவே பெரிய உதவி. கயிற்றை அவிழ்க்க வேண்டுமென்றால்நீயே அவிழ்த்துக் கொள்ளலாம்.ஆனால் மறுபடியும் கடலில் குதித்துவிடாதே!"

வந்தியத்தேவன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டுக்கொண்டான். பூங்குழலி பாய் மரத்தைத் தூக்கி நிறுத்தினாள். அதில் பாயை விரித்துப் பறக்க விட்டாள்! படகு இப்போது உல்லாசமாகச் சென்றது; விரைவாகவும் சென்றது.

"சமுத்திரகுமாரி!"

"ஏன்?"

"தாகமாயிருக்கிறது!"

"உப்புத்தண்ணீர் குடித்திருக்கிறாய் அல்லவா? தாகமெடுக்காமல் என்ன செய்யும்?"

சுரைக் குடுக்கை ஒன்றை எடுத்துக் கொண்டு சமுத்திரகுமாரி வந்தியத்தேவன் அருகில் வந்தாள்.

"உனக்குச் சாப்பாடு கூடக் கொண்டு வந்தேன். நீ கடலில் குதித்த போது அதுவும்விழுந்துவிட்டது! நல்ல வேளையாக இந்தச் சுரைக் குடுக்கை தப்பிப் பிழைத்தது." இப்படிச் சொல்லிக்கொண்டே சுரைக் குடுக்கையை மூடியிருந்த தக்கையை எடுத்து விட்டுக் கொடுத்தாள். வந்தியத்தேவன் அதைவாங்கித் தண்ணீர் குடித்தான்.

தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு, "உன்னைப் பற்றித் தவறாக எண்ணிக் கொண்டுவிட்டேன்; அதற்காக வருத்தப்படுகிறேன்" என்றான்.

"அது ஒன்றும் பாதமில்லை. நீ யாரோ? நான் யாரோ? பொழுது விடிந்தால் பிரிந்துவிடப் போகிறோம்."

"இப்போது நேரம் என்ன?"

"வானத்தைப் பார்த்துத் தெரிந்து கொள். சப்த ரிஷிமண்டலத்தைப் பார்!" என்றாள் பூங்குழலி.

வந்தியத்தேவன் வட திசையில் அடிவானத்தைப் பார்த்தான். அவன் படகு ஏறும்போது பார்த்ததற்குஇப்போது சப்த ரிஷிகள் இடம் மாறிப் பாதி வட்டம் வந்திருந்தார்கள். அந்த அருந்ததி நட்சத்திரம்வசிஷ்டருடன் எப்படி ஓட்டிக் கொண்டே வருகிறது! அதிசயந்தான்! துருவ நட்சத்திரம் மட்டும் இருந்த இடம்விட்டு அசையவில்லை. வானவௌியும் மூலைக் கடலும் சேரும் அந்த இடத்தில் துருவ நட்சத்திரம் யுக யுகமாகநிலைத்து நின்று வருகிறது! எத்தனை எத்தனையோ கப்பல் மாலுமிகளுக்கு வழியும் திசையும் காட்டிக்கொண்டுவருகிறது. துருவ நட்சத்திரம்! அதை யாருக்கோ உதாரணமாகச் சொன்னார்களே? யார் சொன்னது? யாரைச்சொன்னது? ஞாபகம் வருகிறது; குடந்தை சோதிடர் சொன்னார். இளவரசர் அருள்மொழிவர்மருக்குவடதுருவத்தை உதாரணமாகச் சொன்னார். இளவரசரைப் பார்க்கும் பேறு நமக்கு உண்மையிலேயே கிடைக்கப்போகிறதா? இந்தப் பெண்ணின் உதவியினால் கிடைக்க போகிறதா?

பூங்குழலி தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். "நேரம் என்னவென்று தெரிந்ததா?மூன்றாம் ஜாமத்தில் பாதி நடக்கிறது. காற்றுத் திரும்பி விட்டது. பொழுது விடிய நாகத்தீவுக்குப்போய்விடுவோம்" என்றாள்.

"நாகத் தீவா?" என்று வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கேட்டான்.

"ஆமாம்; இலங்கையின் வடபகுதி ஓரத்தில் பல தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நாகத் தீவு. அதில்இறங்கினால் மறுபடியும் கடலைக் கடக்கும் அவசியமில்லாமல் கரை வழியாகவே இலங்கைத் தீவை அடைந்துவிடலாம்..."

"என்னை இறக்கிவிட்ட பிறகு நீ என்ன செய்வாய்?..."

"என்னை பற்றி உனக்கு என்ன கவலை?" என்றாள் பூங்குழலி.

"எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தாய் அல்லவா? உன்னிடம் நான் நன்றி செலுத்த வேண்டாமா?என்னிடம் ஏதோ பிரதி உபகாரம் கேட்கப் போவதாகச் சொன்னாயே, அது என்ன?" என்றான்.

"அந்த எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டு விட்டேன். உன்னிடம் ஒன்றும் நான் கேட்கப் போவதில்லை. நீ நன்றிஇல்லாதவன்."

அவள் அவ்விதம் குற்றம் சாட்டுவதற்குக் காரணம் உண்டு என்பதை வந்தியத்தேவன் உணர்ந்தான். மீண்டும் ஒரு தடவை அரைச்சுருளைத் தடவிப் பார்த்துக்கொண்டு ஓலை இருக்கிறது என்று உறுதி பெற்றான்.

"சமுத்திரகுமாரி! நேற்று முன் இரவில் உன்னைச் சந்தேகித்து நடந்து கொண்டதை நினைத்தால் எனக்குவெட்கமாயிருக்கிறது. அதற்காக என்னை மன்னித்துவிடு!"

"ஆகட்டும்; நீயும் அதை மறந்துவிடு! நடக்க வேண்டியதைப் பற்றி யோசி! இலங்கையில் உன்னை நான் இறக்கிவிட்ட பிறகு என்ன செய்வாய்? இளவரசர் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிப்பாய்?"

"இந்தக் கடலைக் கடப்பதற்கு எனக்கு உதவி செய்த கடவுள் அதற்கும் உதவி செய்வார்!"

"கடவுளிடம் உனக்கு மிக்க நம்பிக்கை போலிருக்கிறது. நம்மைப் போன்ற அற்ப மனிதர்களின் காரியங்களில் கடவுள் சிரத்தை கொள்கிறார் என்று நினைக்கிறாயா?"

"அவ்வளவு தூரம் நான் தத்துவ விசாரணை செய்ததில்லை. ஏதாவது கஷ்டமோ, அபாயமோ நேர்ந்தால் கடவுளைப் பிரார்த்திப்பேன்.கடவுளும் சமயத்தில் உதவி செய்வார். இந்தக் கடலில் எனக்குப் படகு தள்ளுவதற்காகக் கடவுள் உன்னை அனுப்பி வைத்தார் அல்லவா?"

"அவ்வளவு கர்வம் உனக்கு வேண்டாம். நான் உனக்காகப் படகு தள்ள வரவில்லை.என்னை உனக்குஉதவி செய்யும்படி கடவுள் கனவிலே சொல்லி அனுப்பவும் இல்லை..."

"பின் எதற்காக நேற்று என்னைத் தப்புவித்தாய்? எதற்காக இப்போது படகு தள்ளிக்கொண்டு வருகிறாய்!"

"அதைப்பற்றி நீ கேட்க வேண்டாம். அது என் சொந்த விஷயம்."

வந்தியத்தேவன் மௌன சிந்தனையில் ஆழ்ந்தான். அவனுடைய கர்வங் கொண்ட உள்ளத்தில் ஓர்எண்ணம் தோன்றியது. தன்னுடைய வீர சௌந்தரிய வடிவழகைக் கண்டு தன் பேரில் இப்பெண் மோகங்கொண்டுவிட்டாளோ என்று நினைத்தான். உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். இவளுடைய பேச்சும்நடவடிக்கைகளும் அம்மாதிரி எண்ண இடம் தரவில்லை. வேறு ஏதோ மர்மமான காரணம் இருக்கிறது. இவளுடைய வாயைப் பிடுங்கி அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

"ஒரு விஷயத்தை நினைத்தால் கொஞ்சம் எனக்குக் கவலையாகத்தான் இருக்கிறது..." என்றான்.

"அது என்ன? உனக்குக் கூடவா கவலையாயிருக்கிறது?"

"இலங்கையில் காடும் மலையும் அதிகம் என்று சொல்லுகிறார்கள்."

"இலங்கையில் பாதிக்கு மேலே காடும் மலையுந்தான்."

"காட்டு மிருகங்கள் அங்கே அதிகம் என்று சொல்கிறார்கள்"

"காட்டு யானைகள் மந்தை மந்தையாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். சில சமயம் காடுகளுக்கு வௌியிலும் யானைக் கூட்டம் வந்துவிடும்."
"இலங்கையில் உள்ளவர்கள் காட்டுமிராண்டி மக்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்."

"அது முழுப் பொய்."

"அப்படியானால் சரி; நீ சொன்னால் உண்மையாகத்தானிருக்கும். அப்படிப்பட்ட காட்டுப் பிரதேசத்தில் இளவரசர் அருள்மொழிவர்மர் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்."

"அது ஒன்றும் கஷ்டமில்லையென்று சற்று முன் சொன்னாயே?"

"ஆமாம்; சொன்னேன். சூரியன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பதில் என்ன கஷ்டம் இருக்க முடியுமென்று முதலில்நினைத்தேன்."

"இப்போது ஏன் வேறு விதமாக நினைக்கிறாய்?"

"சூரியனை மேகங்கள் மறைந்திருக்கலாம்; அல்லது கடலுக்கடியில் சென்றிருக்கலாம்."

"இந்தச் சூரியனை எந்த மேகமும், கடலும் மறைந்து விட முடியாது. பொன்னியின் செல்வரை மறைக்க முயலும் மேகமும் ஒளி பெறும்; கடலும் ஜொலிக்கும்!"

இளவரசரைப் பற்றிப் பேசும்போது இவளுடைய உற்சாகம் எப்படிப் பொங்குகிறது? சோழநாட்டுப்பிரஜைகள் பலரையும் போல இந்தப் பெண்ணும் அவரைத் தெய்வமாகக் கருதுகிறாள்! அருள்மொழி வர்மரிடம்அப்படிப்பட்ட வசீகர சக்தி என்ன இருக்கும்?- இவ்விதம் மனத்தில் எண்ணிக்கொண்டு,"அப்படியானால்இலங்கையில் இளவரசரைத் கண்டு பிடிப்பது கஷ்டமில்லையென்றா சொல்கிறாய்?" என்றான். "

சோழ சைன்யம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு போனால், இளவரசர் இருக்கும் இடம் தானே தெரிகிறது."

"அது எப்படி? இலங்கையில் பாதி அளவு சோழ சைன்யம் பரவி இருக்கிறது என்று கேள்விப்பட்டேனே"?

"ஆமாம்; மாதோட்டத்திலிருந்து புலஸ்திய நகரம் வரையில் சோழர் படை பரவியிருக்கிறது என்றுதான் நானும் கேள்விப் பட்டேன்..."

"பின்னே? அவ்வளவு பெரிய பிரதேசத்தில் இளவரசர் எங்கே இருக்கிறாரோ? காட்டு வழிகளில் தேடிச்சென்று அவரைக் கண்டுபிடிக்க அதிக நாள் ஆகலாம். இந்த ஓலையை உடனே அவரிடம் நான் சேர்ப்பித்தாக வேண்டும். நீ தான் ஓலையைப் பார்த்துவிட்டாயே? எவ்வளவு அவசரம் என்று உனக்குத் தெரிந்திருக்குமே?"

சமுத்திர குமாரி இதற்கு மறுமொழி எதுவும் சொல்லாமல் மௌனமாயிருந்தாள்.

"இளவரசர் இருக்குமிடம் நிச்சயமாகத் தெரிந்தால் வீண் அலைச்சல் அலையாமல் அவர் இருக்குமிடத்துக்கு நேரேபோய்விடலாம்" என்றான் வந்தியத்தேவன்.

"அதற்கு ஒரு வழி இருக்கிறது" என்றாள் பூங்குழலி.

"இருக்கும் என்று நம்பித்தான் உன்னைக் கேட்டேன்."

"காலையில் நாகத் தீவில் உன்னை இறக்கி விடுவதாகச் சொன்னேன் அல்லவா?"

"ஆமாம்!"

"நாகத் தீவுக்குப் பக்கத்தில் பூதத் தீவு என்று ஒன்றிருக்கிறது."

"தீவின் பெயரே கேட்கப் பயங்கரமாயிருக்கிறதே!"

"பயப்படாதே! ஆதியில் அந்தத் தீவின் பெயர் போதத் தீவு. புத்தபகவான் ஆகாச மார்க்கமாக இலங்கைக்கு வந்த போது முதன் முதலில் அந்தத் தீவிலேதான் இறங்கினாராம். அங்கிருந்த அரசமரத்தினடியில் வீற்றிருந்து புத்த தர்மத்தைப் போதித்தாரம். அதனால் போதத் தீவு என்றுபெயர் வந்தது."

பின்னால் அது 'பூதத் தீவு' என்று ஆகி விட்டதாகும்."

"ஆமாம்! 'பூதத் தீவு' என்றபெயரைக் கேட்டே உன்னைப்போல் பலர் பயங்கரமடைந்தார்கள். பிறகு அந்தத் தீவுக்குச் சாதாரணமாக யாரும் போவதில்லை. பூதத்துக்குப் பயப்படாதவர்கள்தான் போவார்கள்."

"அதாதவது உன்னைப் போன்ற தைரியசாலிகள். கொள்ளிவாய்ப் பிசாசுக்குப் பயப்படாதவள்அல்லவா நீ? சரி; பூதத் தீவைப்பற்றி என்ன சொல்ல வந்தாய்?"

"பூதத்தீவின் கரையில் ஒரு நாழிகை நேரம் நீ தாமதித்தால் பொன்னியின் செல்வர் இப்போது இலங்கையில் எங்கே இருக்கிறார் என்றுவிசாரித்துச் சொல்வேன்..."

"பூதத் தீவில் யாரை விசாரிப்பாய்...?"

"பூதத் தீவில் ஒரு பூதம் இருக்கிறது. அதை விசாரிப்பேன்.."

"அந்தப் பூதத்தை எனக்கும் காட்டுவாயல்லவா?"

"அதுதான் முடியாது. நீ என்னைத் தொடர்ந்து தீவுக்குள் வரக்கூடாது. கரையில் படகைப் பார்த்துக்கொண்டு காத்திருப்பதாகச்சத்தியம் செய்து கொடுத்தால் நான் போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்வேன்."

"சரி, அப்படியே ஆகட்டும்!" என்றான் வல்லவரையன்.

காற்று சுகமாக அடித்தது. பாய் மரத்தின் உதவியினால் படகுவிர்ரென்று கடலைக் கிழித்துக்கொண்டு சென்றது. கடலின் ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டே இருந்தது. வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. விழிப்பு நிலையிலிருந்து உறக்க நிலைக்கு இலேசாக நழுவிச் சென்றான்.


பக்க தலைப்பு



ஓன்பதாம்அத்தியாயம்
"இது இலங்கை!"




மறுபடியும் வந்தியத்தேவன் கண் விழித்தபோது, அவன் எதிரேயும் சுற்றிலும் தோன்றிய காட்சிஅவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். அங்கே கடல்உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதயகுமாரி தங்கப் பட்டாடை புனைந்து கொண்டுஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீலக் கடலாடைபோர்த்துக்கொண்டு விளங்கியது.

வலப்புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வர்ண பூமிப் பிரதேசம்காணப்பட்டது. அது நாலு புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாபித்துள்ள பூமிப்பிரதேசமா என்று நன்றாகத் தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில்அத்தகைய இன்னும் பல தீவுகள் பச்சை நிறத்தின் பல்வேறு வகைக் கலவைகளுக்கு உதாரணமாகத் தோன்றிக் கொண்டிருந்தன. படகிலிருந்தபடியே நாலுபுறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழுவித வர்ணங்களும்அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன.மொத்தத்தில் அந்தக் காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஓவியக் கலையில் தேர்ந்த அமர கலைஞன் ஒருவன், "இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்!" என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது.

இந்தக் காட்சியைக் கண்டு மெய்ம்மறந்து நினைவிழந்திருந்த வந்தியத்தேவனுடைய செவியில், "இதுசொர்க்கம் அல்ல; இது இலங்கை!" என்ற வார்த்தைகள் விழுந்து அவனை விழிப்படையச் செய்தன.

"ஆம்! இது சொர்க்கமோ என்று நான் சந்தேகித்தது உண்மைதான்!" என்றான் வந்தியத்தேவன்.

"இது சொர்க்க பூமி அல்ல; ஆனால் சொர்க்கம் போன்று பூமி. இந்த சொர்க்கத்தை நரகமாக்குவதற்கு மனித உருக் கொண்டஅசுரர்கள் வெகு காலமாகப் பிரயத்தனப் பட்டு வருகிறார்கள்" என்றாள் பூங்குழலி.

"யாரை அசுரர்கள் என்று சொல்லுகிறாய்?" என்றான்.

"உன்னைப் போல் யுத்தமே தொழிலாகக் கொண்டவர்களைத்தான்."

"பொன்னியின் செல்வர் கூடவா?"

"அவரைப் பற்றி என்னை எதற்காகக் கேட்கிறாய்?"

"இளவரசரைப் பற்றி விசாரித்துச் சொல்வதாகக் கூறினாயே?"

"அவர் இருக்கக்கூடிய இடத்தை விசாரித்துச் சொல்வதாகச் கூறினேன். அவர் மனிதரா, அசுரரா, தேவரா என்று கண்டுபிடித்துச் கூறுவதாகச் சொல்லவில்லையே?"

படகு தீவுகளை நெருங்கிக் கொண்டிருந்தது. கடல் நடுவே கேட்கும் ஓங்காரத் தொனிக்குப்பதிலாகக் கடல் அலைகள் கரையிலே மோதும்போது உண்டாகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

"என்ன சொல்கிறாய்? எதிரே தெரிகிறதே, அதுதான் பூதத்தீவு, வலப்புறத்தில் உள்ளது நாகத்தீவு. எங்கே போகட்டும் நாகத் தீவிலேயே உன்னைக் கொண்டுபோய் இறக்கி விட்டு விடட்டுமா? விசாரித்துக்கொண்டு போகிறாயா?"

"இல்லை; பூதத் தீவுக்கே போகலாம். கொஞ்ச நேரம் தாமதமானாலும் இளவரசர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு போவதுதான் நல்லது."

"அப்படியானால் சரி; நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி ஞாபகம் இருக்கட்டும்!"

சிறிய தீவின் கரையில் வந்து படகு நின்றது.படகைப் பார்த்துக்கொள்ளும்படி வந்தியத்தேவனிடம் சொல்லிவிட்டுப் பூங்குழலி அந்த மரகதத்தீவிற்குள்ளே சென்றாள். வந்தியத்தேவன் அவள் சென்ற திக்கைப் பார்த்தான்.பச்சை மரங்களுக்கிடையில்அவள் விரைவில் மறைந்து விட்டாள்.

போதத் தீவு, மக்களின் வாக்கில் மருவிப் பூதத்தீவாக மாறியது பற்றி வந்தியத்தேவன் முதலில் சிந்தித்தான். பிறகு அத்தீவுக்குள்ளே இப்போது குடியிருக்கும் பூதம் எப்படிப்பட்ட பூதமாயிருக்கும் என்று எண்ணமிட்டான்.பின்னர் இந்த அதிசயமான பெண்ணின் உள்ளத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்னவாயிருக்கும் என்று வியந்தான். பூங்குழலி கூறியபடி ஒரு நாழிகைக்குள் திரும்பி வந்தாள். படகில்ஏறிக்கொண்டு வந்தியத்தேவனையும் ஏறிக்கொள்ளச் சொன்னாள். நாகத்தீவை நோக்கிப் படகு சென்றது.

"விசாரித்து விஷயத்தைத் தெரிந்துகொள்ள முடிந்ததா?" என்று வல்லவரையன் கேட்டான்.

"முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் பொன்னியின் செல்வரைப் பார்ப்பதற்காக மாதோட்டத்துக்கு வந்திருக்கிறாராம். நேற்றைக்கு இளவரசரும் மாதோட்டத்துக்கு வந்திருக்க வேண்டும். எத்தனைநாள் மாதோட்டத்தில் இருப்பார் என்று தெரியாது. நீ அங்கே போய்த் தெரிந்து கொள்ளலாம்" என்றாள் பூங்குழலி.

"மாதோட்டம் இங்கிருந்து எத்தனை தூரம் இருக்கும்?"

"ஐந்து, ஆறு காத தூரம் இருக்கும். வழியெல்லாம் ஒரே காடு. கோடிக்கரைக் காடு மாதிரி இருக்கும் என்று நினைக்காதே. வானை எட்டும் மரங்கள் அடர்ந்தகாடு. பட்டப்பகலில் சில இடங்களில் இருட்டாக இருக்கும். யானைக் கூட்டங்களும், வேறு துஷ்ட மிருகங்களும் உண்டு. நீ ஜாக்கிரதையாகப் போய்ச் சேரவேண்டும்.

"காட்டில் வழி காட்டுவதற்கு உன்னைப்போல் ஒரு கெட்டிக்காரப் பெண்மட்டுமிருந்தால்...?" என்றுவல்லவரையன் பெரு மூச்சு விட்டான்.
"அப்போது நீ ஒருவன் என்னத்திற்காக! ஓலையை என்னிடம் கொடுத்துவிடு! நானே கொண்டுபோய்க் கொடுக்கிறேன்... இல்லை முடியாது! ஏதோ பைத்தியக்காரியைப் போலப் பேசுகிறேன். என்னால் முடியவே முடியாது. இளைய பிராட்டியிடம் ஒப்புக் கொண்டு வந்தாயல்லவா? அதை நீதான் செய்து முடிக்கவேண்டும்!" என்றாள்.

"ஆகட்டும் பூங்குழலி! நான் செய்துமுடிப்பேன். இன்னொருவர் கெஞ்சிக் கேட்டாலும் கொடுக்கமாட்டேன். நீ இவ்வளவு உதவி செய்தனையே? அதுவே போதும்!"

படகு நாகத்வீபத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. பூங்குழலியின் கைகள் துடுப்பை வழக்கம்போல் வலித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவளுடைய உள்ளம் வேறு எங்கேயோ கனவுலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது என்பது முகத்திலிருந்து தெரிந்தது.

"சமுத்திர குமாரி!" என்று வந்தியத்தேவன் அழைக்கவும், அவள் திடுக்கிட்டு இவ்வுலகத்துக்கு வந்தாள்.

"ஏன் கூப்பிட்டாய்?" என்று கேட்டாள்.

"ஏதோ என்னிடம் பிரதி உபகாரத்தை எதிர் பார்ப்பதாகச் சொன்னாயே? அதை இப்போது சொன்னால்தான் சொன்னது. இதோ கரை நெருங்கி வருகிறது."

பூங்குழலி உடனே மறுதளிக்கவில்லை; சிந்திப்பதாகத் தோன்றியது. ஆகையால் வந்தியத்தேவன் தைரியம் கொண்டு மேலும் கூறினான்.
"நீ எனக்குச் செய்த உதவி மிகப்பெரியது. எனக்கு மட்டும் நீ உதவவில்லை; சோழ சாம்ராஜ்யத்துக்கே உதவி புரிந்திருக்கிறாய். சோழ சக்கரவர்த்தியின் குலத்துக்கு மாபெரும் உதவி புரிந்திருக்கிறாய். இதற்குப் பிரதியாக நான் ஏதாவது செய்யாவிட்டால் என் மனம் நிம்மதியடையாது" என்றான்.

"இதையெல்லாம் நீ உண்மையாகச் சொல்லுகிறாயா? அல்லது உலகத்திலுள்ள மற்ற ஆண் மக்களைப்போல் வஞ்சகம் பேசுகிறாயா?"

"சமுத்திர ராஜன் அறியச் சத்தியமாகச் சொல்கிறேன்."

"அதாவது தண்ணீரில் எழுதி வைக்கிறேன் என்கிறாயா?"

"ஆகாச வாணியும், பூமாதேவியும், அஷ்ட திக்குப் பாலகர்களும், சூரிய சந்திரர்களும் அறிய ஆணையிட்டுச் சொல்லுகிறேன்."

"உன்னுடைய சத்தியத்தையும் ஆணையையும் நம்பி நான் சொல்லவில்லை. பொய் சொல்லும்வஞ்சகர்கள் சத்தியத்துக்கும் ஆணைக்கும் மட்டும் பயந்து விடுவார்களா? உன்னை முதன்முதலாவது பார்த்தவுடனேயே நீநல்லவன் என்று எனக்குத் தோன்றியது. ஆகையினால் சொல்லுகிறேன்..."

"முதலில் தோன்றிய எண்ணந்தான் எப்போதும் மேலானது. அதை நீ மாற்றிக்கொள்ள வேண்டாம்."

"பொன்னியின் செல்வரைப் பார்த்து அவரிடம் ஓலையைக் கொடுத்த பிறகு, சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிப் பேச வேண்டியதையெல்லாம் பேசிய பிறகு, அவர் அவகாசத்துடன் இருக்கும்போது 'சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?' என்று கேள். "ஞாபகம் இருக்கிறது" என்று அவர் சொன்னால், 'அவள்தான் எனக்குப் படகு வலித்துக்கொண்டு வந்து இலங்கையில் இறக்கி விட்டாள்' என்று கூறு!"

"பூங்குழலி! அவ்வளவு உயரத்திலேயா நீ பறக்கப் பார்க்கிறாய்? சிட்டுக் குருவி ஒன்று ககன ராஜாவாகியகருடன் பறக்குமிடத்துக்கு நானும் போவேன் என்று பறக்கத் தொடங்கலாமா? இது உனக்கு நல்லதல்லவே?' -இவ்வாறு வந்தியத்தேவன் மனத்தில் எண்ணிக் கொண்டான்.

வௌிப்படையாக, "இதைச் சொல்லத்தானா, இவ்வளவு தயங்கினாய்? என்னமோ பெரியதாகக் கேட்கப் போகிறாய் என்று நினைத்தேன். இளவரசரிடம் கட்டாயம் நான் சொல்லுகிறேன்! அவர் கேட்காமற் போனாலும் நானே சொல்லுகிறேன்!..." என்றான்.

"ஐயையோ! அவர் கேட்காவிட்டால் நீயாக ஒன்றும் சொல்லவேண்டாம்!"

"அதெல்லாம் முடியாது; சொல்லித்தான் தீருவேன்."

"என்ன சொல்லுவாய்?"

"நடந்தது நடந்தபடிதான் சொல்லுவேன். 'இளவரசே! பொன்னியின் செல்வரே! சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஞாபகம் இல்லாவிட்டால், இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்! அவள்தான் என்னைப் பழுவேட்டரையரின் கொலைகார ஆட்களிடம் சிக்காமல் காப்பாற்றினாள். அவள்தான் தன்னந்தனியாகப் படகு தள்ளிக்கொண்டு வந்து என்னை இலங்கையில் சேர்த்தாள். கடலில் விழுந்து தத்தளித்த என்னை அவள்தான் காப்பாற்றிப் படகில் ஏற்றி விட்டாள். சமுத்திர குமாரியின் உதவியிராவிட்டால் நான் உயிருடன் வந்து உங்களைப் பார்த்திருக்க முடியாது. இந்த ஓலையும் உங்களுக்குக் கிடைத்திராது!" என்று சொல்லுவேன், சரிதானே?"

"இதுவரை சொன்னது சரிதான். மேலும் ஏதாவது சேர்த்துக் கொண்டுவிடாதே! இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லச் சொன்னதாகச் சொல்லிவிடாதே!"

"சேச்சே! என்னை முழுப் பைத்தியம் என்று நினைத்தாயா?"

"இளவரசர் அதற்கு ஏதேனும் மறுமொழி சொன்னால், அதை உள்ளது உள்ளபடி என்னிடம் சொல்லவேண்டும். கூட்டியோ, குறைத்தோ சொல்லக் கூடாது."

"உன்னைப் மறுபடி நான் எங்கே பார்ப்பது?"

"என்னைப் பார்ப்பதில் என்ன கஷ்டம்? கோடிக் கரையிலோ இந்தப் பூதத் தீவிலோ, அல்லது இரண்டுக்கும் மத்தியில் படகிலோ இருப்பேன்."

"ஊருக்குத் திரும்பும்போது இந்த வழியாக வந்தால் பூதத் தீவில் நீ இருக்கிறாயா என்று பார்க்கட்டுமா?"

"தீவுக்குள்ளே எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ வரக்கூடாது; வந்தால் விபரீதமாகும். இந்தப்படகு கடலோரத்தில் இருக்கிறதா என்று பார்!இருந்தால், ஏதாவது ஓர் அடையாளம் வைத்துக் கொண்டு சத்தம்செய்! நான் நேற்றுக் குயில் மாதிரி கூவினேனே, அந்த மாதிரி நீ கூவ முடியுமா?..."

"குயில் மாதிரி கூவ முடியாது? ஆனால் மயில் மாதிரி சத்தம் செய்வேன்.இதைக்கேள்!"

வந்தேயத்தேவன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு மயில் கத்துவது போன்ற அகோரமான குரலில்கத்திக் காட்டினான்.அதைக் கேட்டுப் பூங்குழலி கலகலவென்று சிரித்தாள். படகு நாகத் தீவின் கரையைஅணுகியது. இருவரும் படகிலிருந்து இறங்கினார்கள். வந்தியத்தேவன் கரையில் ஏறி விடைபெற்றுக்கொண்டான். பூங்குழலி படகைத் திருப்பினாள். வந்தியத்தேவன் சபலத்துடன் திரும்பிப் பார்த்தான்."உன்னுடன் வருகிறேன்" என்று சொல்லி, அவளும் வரமாட்டாளா? என்ற ஆசை அவன் மனத்தில் இன்னமும்கொஞ்சம் இருந்தது. ஆனால் பூங்குழலி அவனைக் கவனிக்கவேயில்லை. அதற்குள் அவள் கனவுலோகத்தில்சஞ்சரிக்கப் போய்விட்டாள் என்பதை அவள் முகம் எடுத்துக் காட்டியது.


பக்க தலைப்பு



பத்தாம் அத்தியாயம்
அநிருத்தப் பிரமராயர்




இந்தக் கதையின் ஆரம்ப காலத்திலேயே நமக்கு நெருங்கிப் பழக்கமான ஆழ்வார்க்கடியான்நம்பியைக் கொஞ்ச காலமாக நாம் கவனியாது விட்டு விட்டோம். அதற்காக நேயர்களிடமும், நம்பியிடமும் மன்னிப்புக் கோருகிறோம். முக்கியமாக நம்பியின் மன்னிப்பை இப்போது நாம் கோரியே தீரவேண்டும். ஏனெனில் ஆழ்வார்க்கடியான் இப்போது வெகு வெகு கோபமாயிருக்கிறான்! அவனுடைய முன் குடுமி இராமேசுவரக் கடற்கரையில் அடிக்கும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. அவனுடைய கைத்தடியோ தலைக்கு மேலே சுழன்றுகொண்டிருக்கிறது. அவனைச் சுற்றி ஆதி சைவர்களும், வீர சைவர்களும் பலர் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆர்ப்பாட்டம் பலமாக இருப்பதால், ஆழ்வார்க்கடியானுடைய கதி யாதாகுமோ என்று நமக்குக் கொஞ்சம் கவலையாகவுமிருக்கிறது. எனினும் நம்பியின் நரசிம்மாவதாரத் தோற்றமும், அவனுடைய கைத்தடி சுழலும் வேகமும் அந்தக் கவலையைப் போக்குகின்றன.

வந்தியத்தேவனும், இளையபிராட்டியும் பேசியதைக் ஒட்டுக் கேட்ட ஆழ்வார்க்கடியான்பழையாறையிலிருந்து அன்றைய தினமே புறப்பட்டான். வாயு வேக மனோ வேகமாகத் தென்திசையைநோக்கிச் சென்றான். வழியில் எங்கும் அவன் சைவ வைஷ்ணவச் சண்டையில் இறங்கவில்லை.காரியத்துக்குத்குந்தகம் வரக்கூடாதென்று மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வலுவில் வந்த சண்டைகளைக்கூட வேண்டாம் என்றுஒதுக்கித் தள்ளிவிட்டு நடந்தான். மதுரையில் சிறிது நேரம் தங்கினான். அங்கு அவன் அறிய விரும்பியசெய்தியை விசாரித்து அறிந்து கொண்டு இராமேசுவரத்துக்குப் புறப்பட்டான். வந்தியத்தேவன் பூங்குழலியின்படகில் சென்று இலங்கைத் தீவில் இறங்கிய அதே நாள் மாலையில் ஆழ்வார்க்கடியான் நம்பி இராமேசுவரம்வந்து சேர்ந்துவிட்டான்.

அந்தப் புண்ணிய பூமியை மிதித்த உடனே ஆழ்வார்க்கடியானுடைய மனத்தில் அத்தனை நாளும்அடங்கிக் கிடந்த வைஷ்ணவ ஆர்வம் கரையை உடைத்துக்கொண்டு பொங்கி விட்டது. இராமேசுவரத் தீவில்எங்கெங்கும் மொய்த்துக் கொண்டிருந்த வீர சைவ பட்டர்கள் அந்த ஆர்வத்துக்குத் தூபம் போட்டுவிட்டார்கள். அந்தப் புண்ணிய ஸ்தலத்துக்கு வரும் யாத்ரீகர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று பற்பல தீர்த்தங்களிலும்ஸ்நானம் பண்ணி வைப்பதும், ஆலயத்தில்- மூர்த்தி தரிசனம் செய்து வைப்பதும், அந்தந்தத் தீர்த்தம்- மூர்த்திவிசேஷங்களை எடுத்துச் சொல்வதுமே அவர்களுடைய அலுவல்கள். எனவே, புதிய யாத்ரீகர்களைக் கண்டதும்பட்டர்கள் பலர் சென்று சூழ்ந்து கொள்வார்கள். அவ்விதமே ஆழ்வார்க்கடியானையும் சுற்றி மொய்த்துக்கொண்டார்கள்.

"அப்பனே! வா! வா! இந்த ஸ்தலத்திலுள்ள அறுபத்து நான்கு தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து உன்தேகத்தில் தரித்திருக்கும் வைஷ்ணவப் பாஷாண்டமத சின்னங்களைக் கழுவித் துடைத்துக் கொள்! இராமரின்பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய ஸ்தலம் அல்லவா இது? வைஷ்ணவ பாஷாண்ட மதசின்னங்களை நீஅணிந்ததினால் ஏற்பட்ட பாவங்களையும் போக்கிக் கொள்ளலாம்!" என்று ஒரு பட்டர் விந்நியாசமாகப்பேசினார்.

இன்னொருவர் குறுக்கிட்டு, 'இராம தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம் ஆஞ்சநேய தீர்த்தம்,சுக்ரீவதீர்த்தம் இப்படி அறுபத்து நாலு தீர்த்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் அந்தந்த தீர்த்தத்தில்தலை மூழ்கி அவரவர்களுடைய தோஷத்தைப் போக்கிக் கொண்டார்கள். நீ என்னுடன் முதலில் ஆஞ்சநேயதீர்த்தத்துக்கு வா! வைஷ்ணவ சின்ன தோஷத்துக்குச் சரியான சங்கல்பம் பண்ணி வைக்கிறேன்!" என்றார்.

மற்றொரு பட்டர் "அப்பனே! இவர்கள் சொல்வதைக் கேளாதே! இராமர் இராவணனைக் கொன்ற பிரம்மஹத்திதோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சமுத்திர மணலைப் பிடித்து வைத்துச் சிவலிங்கமாக்கிப் பூஜித்தஇடத்துக்கு உன்னை நேராக அழைத்துப் போகிறேன்" என்றார்.

ஆழ்வார்க்கடியான் கண்ணில் தீப்பொறி பறக்க எல்லாரையும் ஒரு தடவை விழித்துப் பார்த்து,"நிறுத்துங்கள் உங்கள் அபத்தப் பேச்சை! முதலில் நீங்கள் சொன்ன தீர்த்தங்களினால் உங்களுடைய நாவைஅலம்பி உங்கள் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்!" என்றான்.

"ஓஹோ! இராமன், லக்ஷ்மணன் என்றெல்லாம் சொன்னதனால் எங்களுக்குப் பாவம் வந்திருக்கும் என்று நினைக்கிறாயா? அப்படி ஒன்றுமில்லை. இந்த க்ஷேத்திரத்துக்குப் பெயரே இராமேச்சுவரம்; இராமர் ஈசுவரனாகிய சிவபெருமானைப் பூஜை செய்து பாவத்தைப் போக்கிக் கொண்ட இடம். அத்துடன் இராமர் என்ற பெயரில் இருந்த தோஷமும் போய்விட்டது!" என்றார் ஒரு வீர சைவ பட்டர்.

"ஓ அஞ்ஞான சிரோன்மணிகளே! ஏன் இப்படித் தலைக்குத் தலை உளறுகிறீர்கள்? இந்த ஸ்தலப்பெயரின் அர்த்தம் இன்னதென்பதையே நீங்கள் தெரிந்துகொண்ட பாடில்லை!"

"நீதான் சொல்லேன், பார்ப்போம்!"

"பிரம்மாவினுடைய ஒரு தலையைப் பறித்ததினால் சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம்பிடித்துவிட்டது. திருமாலின் பூரண அவதாரமாகிய இராமபிரானுடைய பாதம் பட்டுப் புனிதமான இந்தஇடத்துக்குச் சிவன் வந்து அந்தப் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டார். இராமரை ஈசுவரன்பூஜித்த இடமானபடியால் இராமேசுவரம் என்ற பெயர் ஏற்பட்டது! தெரிந்து கொண்டீர்களா, மூடசிகாமணிபட்டர்களே!" என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜித்தான்.

"யாரடா! அவன் எங்களை மூட சிகாமணிகள் என்பது? அடே தடியா! நீ என்ன தலையில் கொம்புமுளைத்தவனா?" என்று ஒரு பட்டர் சீறினார்.

"இல்லை, ஐயா, பட்டரே! என் தலையிலே கொம்பு முளைக்கவில்லை; கையிலேதான் இந்தக் கொம்பு இருக்கிறது! என்னை யார் என்று கேட்டீர் அல்லவா? சொல்லுகிறேன். திருக்குருகூரில் அவதரித்து, வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின் அடியார்க்கு அடியான்!மற்றவர்கள் மண்டையில் நையப்புடைக்கும் கைத்தடியான்!" என்று தடியைத் தூக்கிக் காட்டினான்.

"ஆழ்வார்க்கடியார்க் கடியானே! நீ ஏன் உன் தலையில் முன்புறத்தில் குடுமி வைத்திருக்கிறாய்?அதையும் மழுங்கச் சிரைத்து விட்டாயானால், உன் மண்டையில் உள்ளும், புறமும் ஒன்றாயிருக்கும்!" என்றார் ஒருசைவர்.

"பட்டர்களே! இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்திலே வந்து என் முன் குடுமியை எடுத்து விடுவதாகவேஎண்ணியிருந்தேன். அதற்குள் நீங்கள் ஞாபகப்படுத்தினீர்கள்!..."

"அடே! நாவிதர் தெருவுக்குச் சென்று ஒருநாவிதனை அழைத்து வாருங்களடா! கத்தியை நன்றாய்த் தீட்டிக் கொண்டு வரச் சொல்லுங்கள்! இவனுடைய சிகையை ஆணி வேரோடு களைந்தெறியச் சொல்லலாம்!" என்றார் ஒரு பட்டர்.

"இதற்கு நாவிதனைக் கூப்பிடுவானேன்? நாமே அந்தக் கைங்கர்யம் செய்து விடலாமே? நல்லகூர்மையான கத்தியாகக் கொண்டு வாருங்கள்!" என்றார் இன்னொரு சைவர்.

"கொஞ்சம் பொறுங்கள்; இன்னும் ஒரு விஷயம் பாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் என் தலை முழுவதும் சிகை அடர்த்தியாக இருந்தது.ஒரு சைவனுடைய மண்டையை உடைத்து விட்டு என் சிகையிலிருந்து ஒரு ரோமத்தை வாங்கிவிடுவதென்று விரதம் எடுத்துக்கொண்டேன். அதன்படி முக்காலே அரைக்கால்வாசி சிகை தீர்ந்து விட்டது. இந்த ஊரில் என் முழுவிரதத்தையும் நிறைவேற்றிக் கடலில் ஒரு முழுக்குப் போடப் போகிறேன். எங்கே, ஒவ்வொருவராக உங்களுடைய மண்டையைக் காட்டுங்கள். பார்க்கலாம்!" என்று ஆழ்வார்க்கடியான் கைத்தடியை ஓங்கினான்.

"அடடே! இந்த வைஷ்ணவன் என்ன துடுக்காகப் பேசுகிறான்?" என்று சொன்னார் ஒருவர்.

"எங்கள் எல்லாருடைய மண்டையையும் உடைத்து விடுவாயா? உன்னால் முடியுமா?" என்று கூறினார் இன்னொருவர்.

"முடியாமலா முக்காலே அரைக்கால் பங்கு சிகையை எடுத்து விட்டிருக்கிறேன்?" என்று கூறி ஆழ்வார்க்கடியான்தடியை வேகமாகச் சுழற்றத் தொடங்கினான்.

"அடியுங்கள்! பிடியுங்கள்! கட்டுங்கள்! வெட்டுங்கள்!" என்று தலைக்குத் தலை கத்தினார்களே தவிர, அக்கூட்டத்தில் யாரும் ஆழ்வார்க்கடியானுக்கு அருகில் நெருங்கவில்லை. அச்சமயம் வெகு சமீபத்தில் எழுந்த ஒரு கோஷம் அவர்கள் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தது.
"திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரசோழ பராந்தகரின் மகாமான்ய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மாதி ராஜர்வருகிறார்! பராக்! பராக்!"

எல்லோரும் திகைத்துப் போய்க் கோஜம் வந்த திசையை நோக்கினார்கள். ஆழ்வார்க்கடியான்எல்லாரிலும் அதிகமாகத் திகைத்துத் தனது கைத் தடியைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு பார்த்தான். அவர்கள்நின்று சண்டையிட்ட இடம், இராமேசுவரக் கோயில் மதிலின் ஓரமான ஒரு முடுக்கு. அந்த முடுக்குத்திரும்பியதும் எதிரே விரிந்து பரந்தகடல். அக்கடலின் காட்சியோ கண்கொள்ளாத அற்புதக்காட்சியாயிருந்தது.பெரிய பெரிய மரக்கலங்கள், நாவாய்கள், சிறிய கப்பல்கள், படகுகள், ஓடங்கள்,வள்ளங்கள், வத்தைகள், கட்டுமரங்கள் ஆகியவை நெடுகிலும் வரிசை வரிசையாகக் கண்ணுக் கெட்டிய தூரம்காணப்பட்டன. பாய்மரங்களிலிருந்து படபடவென்று காற்றில் அடித்துக்கொண்டு பறந்த வெண்ணிறப் பாய்கள்,கடலையும் வானத்தையும் தூரத்திலே திட்டுத் திட்டாகத் தோன்றிய பல தீவுகளையும் பெரும்பாலும் மறைத்துக்கொண்டிருந்தன.

மேலே சொன்னவாறு கட்டியங் கூறிக்கொண்டு காவல் வீரர்கள் முன்னும் பின்னும் தொடர, சோழசாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற முதன் மந்திரி அன்பில் அநிருத்தப் பிரமராயர் ராஜ கம்பீரத்துடன் ஒருபடகில் வந்து கொண்டிருந்தார். கரையில், கோயில் மதில் ஓரமாக நடந்து கொண்டிருந்த சச்சரவை அவர்கவனித்தார். கூட்டத்தின் நடுவில் கக்கத்தில் தடியுடன் பரம சாதுவைப்போல் நின்ற ஆழ்வார்க்கடியானைக்கையினால் சமிக்ஞை செய்து அருகில் அழைத்தார். ஆழ்வார்க்கடியான் பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டுகடற்கரையோரம் சென்று நின்றான்.

"திருமலை! இது என்ன தெருக்கூத்து?" என்றார் அநிருத்தர்.

"குருவே! எல்லாம் கபட நாடக சூத்திரதாரியான அந்தக் கண்ணனின் திருக்கூத்துத்தான்! என் கண்களில் காண்பதை நான்நம்புவதா, இல்லையா என்றே தெரியவில்லை. நான் காண்பது கனவா? அல்லது எல்லாம் வெறும் மாயையா?..."

"திருமலை! உன்னைப் பரம வைஷ்ணவன் என்று நினைத்தேன். எப்போது பிரபஞ்சத்தை மித்தை என்றுசொல்லும் மாயாவாதியானாய்?"

"குருவே!பரம வைஷ்ணவ பரம்பரையில் அவதரித்த தாங்கள் சைவ சமயி ஆகும்போது நான் என் மாயவாதி ஆகக் கூடாது? என்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு ஸரீ சங்கர பகவத் பாதாச்சாரியாரின் அடியார்க்கடியான் ஆகிவிடுகிறேன்..."

"பொறு! பொறு! நான் சைவ சமயி ஆனதாக யார் சொன்னது?" "தங்கள் திருமேனியில் உள்ள சின்னங்கள் சொல்லுகின்றன!"
"ஆகா! திருமலை! நீ இன்னும் முன்போலவே இருக்கிறாய் புறச்சின்னங்களுக்கே முக்கியம் கொடுக்கிறாய்! நெற்றியில் இடுகிறசந்தனத்தைச் சாய்த்து இட்டால் என்ன? நிமிர்ந்து இட்டால் என்ன?"

"குருவே! நான் ஒன்றும் அறியாதவன்; எது முக்கியம், எது அமுக்கியம் என்று தெரியாதவன். தாங்கள்தான் என்னைத் தௌிவித்து ஆட்கொள்ள வேண்டும்."

"எல்லாம் தௌிவிக்கிறேன். நான் தங்கும் இடத்துக்கு வந்து சேர்! அதோ! கடலில் ஒரு சிறிய தீவு தெரிகிறது பார்த்தாயா? அங்கேயுள்ள மண்டபத்துக்கு வா."

"குருவே! இதோ இந்தச் சண்டைக்காரச் சைவர்கள் என்னை வரவிடவேண்டுமே?" என்றுஆழ்வார்க்கடியான் சொல்லிக் கையினால் அவர்களைச் சுட்டிக் காட்டினான். அதுவரை சும்மாயிருந்த வீரசைவர்கள் உடனே நெருங்கி வந்தார்கள்.
"பிரம்மாதி ராஜரே! இந்த வைஷ்ணவன் எங்கள் மண்டைகளை உடைத்து விடுவானாம்! இவனை தக்கபடி தண்டிக்கவேண்டும்!" என்று ஒருவர் ஆரம்பித்தார். மற்றவர்கள் தலைக்குத் தலை பேசலானார்கள்.

"இவனுக்குத் தண்டனை நான் கொடுக்கிறேன். நீங்கள் போகலாம்" என்றார் அநிருத்தர்.
இதனால் அவர்கள் திருப்தி அடையவில்லை.

"நாங்களே இவனுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாதா? இவனுடையமுன் குடுமியைச் சிரைத்து, இவனுடைய ஊர்த்வ சின்னங்களையெல்லாம் அழித்து, இவனைக் கிணற்றில் போட்டுமுழுக்காட்டி..." என்று அடுக்கினார் ஒருவர்.

"என்ன சொன்னீர்கள்?" என்று ஆழ்வார்க்கடியான் கண்களில் தீ எழத் திரும்பி நோக்கினான்.

அநிருத்தப் பிரம்மராஜர் அப்போது, "பட்டர் மணிகளே! இவன் பெரிய முரடன். இவனைத்தண்டிக்க உங்களால் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்.

பிறகு தம்மைத் தொடர்ந்து வந்த படகில் இருந்த அகப் பரிவார வீரர்களைப் பார்த்து, "உங்களின் எட்டுப்பேர் இறங்கி இவனை நம் இடத்துக்குக் கொண்டு வாருங்கள்!" என்றார். அவ்வளவுதான். மறுகணம் வீரர்கள் எட்டுப் பேர் கரையில் குதித்தார்கள்; ஆழ்வார்க்கடியானைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். படகு மேலே சென்றது. படை வீரர்கள் புடைசூழ ஆழ்வார்க்கடியானும் போனான். பட்டர்களும் மற்றவர்களும் அந்த வைஷ்ணவனுடைய முரட்டுத்தனத்தைக் குறித்துப் பலவாறு பேசிக்கொண்டு கலைந்து போனார்கள்.


பக்க தலைப்பு


This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmastersof this website.