புதுச்சேரியில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டையொட்டி மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் மாநாட்டு ஏற்பாட்டுகுழு செய்திருக்கின்றது. இதில் கணினி, இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பரிசுபெறலாம். போட்டிகளின் விவரம்
1. வலைப்பூ உருவாக்கும் போட்டி.
2. தமிழ்த்தட்டச்சுப் போட்டி
3. கணினி, இணையச் செயற்பாட்டளர்கள் போட்டி.
வலைப்பூ உருவாக்கும் போட்டி:
வலைப்பூ உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், உத்தமம் அமைப்புக்கு மின்னஞ்சல் வழியாக எந்தப் பெயரில் வலைப்பூ (பிளாக்) உருவாக்க உள்ளோம் என்பதைச் சூலை 1 முதல் ஆகஸ்டு 31 க்குள் தெரிவிக்க வேண்டும். தமிழ் மொழி, இனம், நாடு, மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம், தொழில்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை, கலைகள் சார்ந்த பொருண்மைகளில் உள்ளடக்கம் கொண்ட வலைப்பூக்களை உருவாக்க வேண்டும்.
போட்டிக்கு உட்பட்ட காலத்தில் குறைந்த அளவு பத்துப் பதிவுகள் ஒவ்வொரு வலைப்பூவிலும் இடம்பெறவேண்டும். ஒருவரே பல வலைப்பூக்களையும் உருவாக்கலாம்.சிறந்த வலைப்பூ உருவாக்கும் போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறும். அவை
1. பொதுமக்களுக்கான பிரிவு,
2. கல்லூரி மாணவர்களுக்கான பிரிவு,
3. பள்ளி மாணவர்களுக்கான பிரிவு.
பொதுமக்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கான பிரிவில்(10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம்) மூன்று பரிசுகளும் வழங்கப்படும். பரிசு பெறாத அதேநேரத்தில் சிறந்த வலைப்பூ உருவாக்கும் வலைப்பதிவர்க்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
பொதுமக்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்குப் புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்களின் பெயரில் அமைந்த விருதும், பத்தாயிரம் பணமுடிப்பும், சான்றிதழும் பரிசாக வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் சான்றிதழுடன் வழங்கப்படும்.
கல்லூரி நிலையிலான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்குக் கணிஞர் ஆண்டோபீட்டர் நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் முதல் பரிசும் வழங்கப்படும். இரண்டாம் மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் சிறந்த வலைப்பூ உருவாக்கி முதல்பரிசு பெறுவோருக்கு சிங்கப்பூர் ந. கோவிந்தசாமி நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
தமிழ்த்தட்டச்சுப் போட்டி:
மாநாடு நடைபெறும் நாளில் மக்கள் அரங்கில் உள்ள தன்னார்வலர்களின் முன்னிலையில் தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட சொற்களைப் பிழையின்றித் தட்டச்சுச் செய்துகாட்டி யாரும் நூல் பரிசுகளைப் பெறலாம். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் ஆர்வலர்களுக்கு முன்னணிப் பதிப்பகம் ஒன்று நூல்களைப் பரிசாக வழங்கும்.
கணினி இணையச் செயற்பாட்டாளர் போட்டி:
கணினி, இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இவற்றின் வழியாகத் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் சிறந்த செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வல்லுநர் குழு ஐந்து செயல்பாட்டாளர்களைத் தேர்வு செய்து அவர்களின் பெயரை மாநாட்டுக் குழுவிற்கு வழங்கும். அதன் அடிப்படையில் ஐந்துபேரும் புதுவைத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்படுவார்கள். தமிழ்க் கணினி, இணையச் செயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி இதுவாகும், ஆண்டுதோறும் தக்கவர்களை அடையாளம் கண்டு உத்தமம் அமைப்பு பாராட்டும்.
வலைப்பூ உருவாக்கும் போட்டி விதிமுறைகள்
1) உத்தமம் அமைப்பில் வலைப்பூத் தலைப்பு பதிவு செய்த பிறகு உருவாக்கும் வலைப்பூக்களே போட்டிக்கு உரியதாகக் கருதப்படும்.
2) Loc2014@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தாங்கள் உருவாக்க நினைக்கும் வலைப்பூ தலைப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
3) வலைப்பூக்கள் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில் இருக்க வேண்டும்
4) வலைப்பூவின் தலைப்பு தூய தமிழில் இருக்க வேண்டும்
5) வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள் படம், ஓவியம், காணொளி (வீடியோ), வண்ண எழுத்துகளைக் கொண்டு மேம்படுத்தப் பட்டிருப்பது விரும்பத்தக்கது.
6) தமிழுக்கும் தமிழர்களுக்கும் பயன்படத்தக்க செய்திகள் வலைப்பூ உள்ளடக்கமாக இருக்கலாம்.
7) சூலை 1 முதல் ஆகஸ்டு 31 தேதிக்குள் உருவாக்கப்பட்ட வலைப்பூக்கள் போட்டிக்கு உரியதாகக் கருதப்படும். முன்பே பதிவிட்ட பதிவுகள் போட்டிக்கு உரியவை ஆகா.
8) வலைப்பூ உள்ளடக்கச் செய்திகள் ஒவ்வொன்றும் இருநூறு சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
9) உத்தமம் உருவாக்கும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
10) மற்றவர்களின் படைப்புகளைத் தம் படைப்பாகத் தரும் போட்டியாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
11) பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் நிறுவனத்திலிருந்து சான்றிதழ் பெற்று அதனை, மின்வருடி மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தம்மை மாணவர்கள் என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
12) புதுச்சேரியில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டுக்குப் பரிசுபெற வருவோர் தம் சொந்த பொறுப்பில் வந்து செல்ல வேண்டும். பயணப்படிகள் தங்குமிடவசதிகள் பிரத்தியேகமாக இவர்களுக்கு வழங்கப்படமாட்டாது.
மேலதிக தகவல்களுக்கு Loc2014@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்