பதினாறாவது தமிழ் இணைய மாநாடு நிறைவு பெற்றது
உத்தமம் உலகெங்கிலும் உள்ள தமிழ் தகவல் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்களும் பயனர்களும் ஒன்றுகூடி கருத்துப்பரிமாற்றம் செய்வதற்க்காக ஆண்டுதோறும் தமிழ் இணைய மா நாடு ஒன்றை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 16ம் தமிழ் இணைய மா நாடு கனடாவில் ரொரண்டோ பல்கலைக் கழகத்தில் ஓகஸ்ட் 25-27 தேதிகளில் சிறப்பாக நடந்தேறியது.
முதல் நாள் (25 ஆகஸ்ட்) பாரம்பரிய முறைப்படி நிகழ்வில் மங்கல விளக்கு ஏற்றல், தமிழ் தாய் வாழ்த்து, கனடாவின் தேசிய பாடல்கள் பாடப்பட்டபின் செம்மொழி மாநாட்டின் மூலம் புகழ்பெற்ற நீராரும் கடலுடுத்த .. பாடலுக்கேற்ப நடனத்துடன் ஆரம்பமாகியது. உத்தமத்தின் சார்பாக உத்தமம் செயற்குழுவின் மூத்த உறுப்பினர் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களும் மாநாட்டு அமைப்புக்குழு சார்பாக தலைவர் பேரா. செல்வகுமார் அவர்களும் மாநாட்டிற்கு வருகைதந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பேராளர்களை வரவேற்றுப் பேசினார்கள்.
வட அமெரிக்கப் பகுதியில் தற்பொழுது நடக்கும் ஒரு முக்கிய முயற்சி புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியருக்கான ஒரு இருக்கை அமைப்பது. அதன் முக்கிய முன்னோடிகளில் இருவர். ஒருவர் ரோடு ஐலண்டு வாழ் மருத்துவர் சம்பந்தம், மற்றொருவர் டொரோண்டோ வாழ் தமிழ் எழுத்தாளரும் கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முக்கிய தலைவருமான திரு அ. முத்துலிங்கம். தமிழ் இணைய மாநாட்டுக்கு இவர்கள் இருவரும் சிறப்பு விருந்தினாராக வந்து சிற்றுரை வழங்கினார்கள். கனடாவில் தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் தமிழ்க் கணினித் துறையின் முன்னோடிகளுக்குச் சுந்தர இராமசாமி நினைவுப் பரிசு ஒன்றைக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து ஆரம்ப நிகழ்வில் கனடா ரொரண்டோ பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் பசுபதி அவர்களும் தமிழ்நாடு பாரத் பல்கலைக்கழக இணைவேந்தர் பேராசிரியர் பொன்னவைக்கோ அவர்களும் சிறப்புரை வழங்கினார்கள். கணினி மற்றும் இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு பற்றி வெவ்வேறு வளர்ச்சிகளைச் சுட்டிக் காட்டியும் இன்னும் செய்யவேண்டிய முக்கிய தேவைகளையும் விளக்கமாக எடுத்துக் காட்டினார்.
இணையம் தோன்றி 30 ஆண்டுகளே ஆனாலும் இந்தக் குறுகிய காலத்தில் இணையம் வழி சேர்க்கப்பட்டுள்ள தமிழுக்கான பலவகை செய்திகள், பல கோடிக்கணக்கான இணையத்தளங்கள் ஆகியன பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் என்னென்ன செய்திகள் உள்ளன, குறிப்பிட்ட செய்திகளையோ அல்லது விவரங்களையோ எப்படி வேகமாகவும் சுலபமாகவும் தேடிக் கண்டுபிடிப்பது பற்றி பல ஆராய்ச்சிமுறைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பெரிய அளவிலான தரவிலிருந்து தேடும் முயற்சிகளை ஆழக்கற்றல் என்று கூறுகிறார்கள். இவ்வாண்டின் தமிழ் இணைய மாநாட்டின் முக்கியக் கருத்தாக இந்த ஆழக் கற்றல் ஆய்வுதான் தேர்ந்தெடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துறையில் உலகலவில் பெரும்பெயர் பெற்றவர் கனடா வாடர்லூ பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆண்ட்ரூ வாங்க் என்பவர்.
முதல் நாள் நிகழ்வில் இவர் முதல் சிறப்புப் பேச்சாளராக வந்து ஆழக் கற்றல் பற்றிய வெவ்வேறு முக்கிய விவரங்களை நன்றாக எடுத்துக் காட்டினார். இரண்டு பயிற்சிப் பட்டறைகளில் இரு ஆராய்ச்சியாளர்கள் கூகுள், யாகூ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி இந்த ஆழக் கற்றல் முறைகளைக் கண்டுபிடிப்பதோடு அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்றும் விளக்கிக் கூறினார்கள்.
இரண்டாம் நாளில் சிறப்புப் பேச்சாளராக தமிழ்க் கணினி வளர்ச்சியில் முன்னோடியாகவும் கணினி தமிழில் அடிப்படை அளவில் செயல்பட எழுத்துருக்கள், செயலிகள் செய்த கணினித்துறை வல்லுனர் திரு முத்து நெடுமாறன் கருவாக்கம், உருவாக்கம் மற்றும் செயலாக்கம் என்ற தலைப்புடன் சிறப்புரை வழங்கினார். வணிக அடிப்படையில் தமிழ்க் கணினி வளரவேண்டிய முக்கியத்தைச் சுட்டிக்காட்டி தமிழ் மென்பொருள் தயாரிப்போர் எப்படி தங்கள் படைப்புக்களை வணிக ரீதியில் தயாரிக்க வேண்டும் என்று விளக்கமாக எடுத்துக்காட்டினார்.
தமிழ் இலக்கியங்களை வரலாற்றுப் பார்வையில் காண வேண்டியதன் அவசியத்தையும் இலக்கியத் தரவுகளைப் பல கோணங்களில் காணும் வகையில் ஒரு முறையான அமைப்பில் தரவுத் தளங்களில் சேகரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்னும் நோக்கில் பல கட்டுரைகள் உத்தமம் 2017 மாநாட்டில் படைக்கப்பட்டன.
மதுரைத் திட்ட முன்னோடி பேராசிரியர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் மதுரைத் திட்ட இலக்கியங்கள் பற்றிய விரிவான விளக்கவுரை நிகழ்த்தினார். மதுரைத் திட்ட இலக்கியங்களைச் சேகரிப்பதற்காக எடுத்துக்கொண்ட வேவ்வேறு திட்ட முறைகள் பற்றி அவர்கள் விளக்கியது பல காலமாகத் தமிழ்க் கணினி ஆர்வலர்கள் பலர் செய்துவரும் தொண்டைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
லண்டனிலிருந்து வந்த திரு. சிவ சிவசுப்ரமணியம் மற்றும் செந்தில் ஆகியோரின் படைப்பு எப்படியெல்லாம் தமிழ் இலக்கியங்களைப் பல்வேறு கோணங்களில் காணலாம் என வலியுறுத்தியது. இவர்களின் “தமிழ் APIகள் மூலம் இணைப்பில் இல்லா இணையதளங்களை தமிழில் உருவாக்குதல், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் – ஓர் ஆய்வு” என்னும் கட்டுரை இம்மாநாட்டில் பேராசிரியர் அனந்தகிருட்டிணன் விருதைப் பெற்றது.
பேராசிரியர் வாசு அரங்கநாதனின், “தமிழ் இலக்கியங்கள் – ஒரு வரலாற்றுப் பார்வை” என்னும் படைப்பு மின்வடிவத் தமிழ் இலக்கியத் தரவுகளின் சிறந்த பயனைப் பற்றி விளக்கியது. இவரது முயற்சியில் உருவாக்கப் பட்ட தமிழ் இலக்கிய வரலாற்றுப் பார்வைக்கான பக்கத்தை http://sangam.tamilnlp.com/mp/json என்னும் வலைத்தளத்தில் இம்மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.
ரொரண்டோ பல்கலைக் கழகத்தைச் சார்ந்த திரு. நக்கீரன் அவர்கள் நூலகத் துறையில் தமிழ் இலக்கியங்களுக்கான நுழைவுச் செய்தி கொண்ட தரவு ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கியது தமிழ் இலக்கியங்களின் மின்வடிவத் தரவுகளின் பயன்பாட்டை மேன்மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமேதும் இல்லை.
திரு. முத்து அண்ணாமலை அவர்களின் தமிழ்த் திறவுநிலை நிரலிகள் பற்றியும் அதற்காகத் தமிழ்க் கணினி வல்லுனர்கள் பலர் எடுத்துவரும் முயற்சி பற்றி விளக்கியதும் மாநாட்டுப் பங்கேற்பாளர்களிடையே பல கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தியதோடு அம்முயற்சி தொடர பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பெங்களூருவிலிருந்து இந்திய அறிவியல் கழகத்தைச் சார்ந்த மூன்று மாணவர்கள் ஒளிக் காணல் வழித் தங்களின் படைப்புகளைப் படைத்து பேராளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறினர்.
பேராசிரியர் பொன்னவைக்கோ அவர்கள் மாநாட்டுத் துவக்க உரையையும் இறுதி நாளில் மாநாட்டு முடிவு உரையையும் ஆற்றி உத்தமம் வழித் தமிழ்க் கணினி முயற்சிகள் மேன்மேலும் தொடர வாழ்த்தினார்.
அடுத்த தமிழிணைய மாநாடு 2018ம் ஆண்டில் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் நடத்தப் படும் என உத்தமம் அமை்பினால் முடிவுசெய்யப்பட்டு இம்மாநாட்டின் நிறைவு விழாவன்று அறிவிக்கப்பட்டது
இம்மாநாடு சிறப்புற நடக்கப் பலவகையிலும் உதவிய உத்தமம் உறுப்பினர்கள், நிகழ்ச்சிக் குழு, பரிசுகள் குழு, வெளிநாட்டுக் குழு ஆகியோருக்கு மாநாட்டுப் பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
காணொளிகள்
ஊடகங்களில் எமது மாநாடு பற்றி…