+65 97805920 ed@infitt.org

கட்டுரைகளுக்கான அழைப்பறிவிப்பு -2017 கனடா, தொராண்டோ பல்கலைக்கழகம்

16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017

தொராண்டோ, கனடா

மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம் 
அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017,  கனடாவில் தொராண்டோ (Toronto) மாநகரில், தொராண்டோ பல்கலைக்கழக சுகார்பரோ (Scarborough) வளாகத்தில்  ஆகத்து  மாதம்  25-27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இக்கருத்தரங்கு வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான நடுவத்தின் ஆதரவோடும், தொராண்டோ பல்கலைக்கழகம், சுகார்பரோவின் ஆதரவோடும் நடைபெறுகின்றது.  

தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  இவ்வாண்டு மாநாட்டுக்கருத்தரங்கில்  ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும்  (Deep Learning) என்பதும்  தமிழில் தரவு அறிவியல் (Data Science) என்பதுமாக இரண்டு  கருத்துமுழக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.   .

மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

  • இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன)
    எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு – Sentiment Analysis, ஆவண வகைப்படுத்தல் – Document Classification, உருப்பொருள் பிரித்தெடுத்தல் – Entity Extraction
  • இயந்திர மொழிபெயர்ப்பு,  தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு,  எழுத்துரை-பேச்சுரை மாற்றிகள், தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல் முதலியன.
  • மொழித்தொகுப்பு ஆய்வு (Corpus linguistics)
  • ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
  • கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்துதலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோசு)
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
  • தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
  • எண்ணிம ஆவணப் பாதுகாப்பு, எண்ணிமத்திரட்டுகள்
  • தொடர்புறு தரவுகள் (இணைப்புத் தரவு)- Linked Data,  தமிழில் பொருளுணர் வலை (semantic web); தரவுக் காட்சிப்படுத்தல் – Data Visualization
  • கற்றல் மேலாண்மை அமைப்புகள் (Learning Managements Systems), மெய்நிகர் கல்விச்சூழல் (Virtual Learning)
  • எண்ணிமப் பாதுகாப்பு – Digital Preservation,  எண்ணிம நூலகம் – Digital Library, எண்ணிம ஆவணகம் – Digital Archive, இணைப்புத் தரவு – Linked Data, மெய்ப்பொருளியம் – Ontology

மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை ஏ-4 (A4) தாள் அளவில் இரண்டு பக்கங்களில் ஏப்பிரல் 15 தேதிக்குள்  cpc2017@infitt.org என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கமானது குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத் திட்டப்பணியைப் பற்றிய முக்கியத் தகவல்கள் ஆய்வு முறைகள் ஆய்வடிப்படையில் கண்ட முடிவுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கொண்டிருக்க வேண்டும். தலைப்பை அறிமுகம் செய்யும் பொதுவான கட்டுரைச் சுருக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை மாநாட்டுக் குழு ஆய்வரங்கத்தில்  படிக்கவோ (oral presentation),   சுவரொட்டி காட்சிக்கட்டுரைகளாகவோ (poster presentation) ஏற்கும்.

கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறி (யூனிக்கோடு) அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு (TACE) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும்  தேவையறிந்து கலந்தோ நீங்கள் படைக்கலாம்.

மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு மே 15ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.

முழுக் கட்டுரையை 4 பக்கங்களுக்குக் குறையாமலும் 6 பக்கங்களுக்கு மிகாமலும்  ஒளியச்சுக்கு ஏற்றவாறு சூன் 15 ஆம் நாளுக்குள் அனுப்பவேண்டும்.

கட்டுரை எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரில் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்பதிப்புச் சீரெண்ணுடன் (ISSN)  வெளியிடப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும், உலகக் கணினிமொழியியல் ஆய்விதழ்களிலும் வெளியிடப்படும்.

முக்கியமான நாட்கள்

2-பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி நாள்: ஏப்பிரல் 15

ஏற்பு முடிவு  அறிவிப்பு :                                        மே 15

அச்சடிக்க இறுதி வடிவில் 4-6 பக்க
முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் :              சூன் 15

மாநாடு நடைபெறும் நாட்கள் : 2017 ஆகத்து மாதம் 25, 26, 27

தமிழிணைய மாநாடு 2017-இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2017@infitt.org என்ற  முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்

செ. இரா. செல்வக்குமார்,                                     இனிய நேரு                               சுகந்தி நாடார்
வாட்டர்லூ பல்கலைக்கழகம்                            செயல் இயக்குநர்                     தலைவர்
தலைவர், மாநாட்டு ஆய்வரங்கக்குழு,             உத்தமம்                                     உத்தமம்
தமிழினைய மாநாடு 2017.

மாநாட்டு ஆய்வரங்கக் குழு

  • முனைவர் ந. தெய்வசுந்தரம், சென்னைப் பல்கலைக்கழகம்
  • முனைவர் ச. இராசேந்திரன், அமிர்தாப் பல்கலைக்கழகம்
  • முனைவர் ஆ. க. இராமகிருட்டிணன். இந்திய அறிவியற்கழகம், பெங்களூர்
  • முனைவர் டி.வி. கீதா, அண்ணா பல்கலைக்கழகம்
  • முனைவர். த. நாகராசன், எசு.எசு.என் ( S. S. N.) பொறியியல் கல்லூரி, சென்னை
  • முனைவர் கிரீம் கிர்சுட்டு, தொராண்டோ பல்கலைக்கழகம், கனடா
  • முனைவர் கு. கல்யாணசுந்தரம், ஈ.பி.எப்.எல், இலூசான், சுவிட்சர்லாந்து
  • முனைவர் வாசு  அரங்கநாதன், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா
  • முனைவர் இரா. சிரீராம், கிரசண்டு பல்கலைக்கழகம், தமிழ்நாடு
  • முனைவர் வே. வெங்கடரமணன், தொராண்டோ பல்கலைக்கழகம், கனடா
  • முனைவர் கு. பொன்னம்பலம், வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா
  • முனைவர் சவிதா இராமசாமி, இன்ஃபோக்காம் ஆய்வுக் கழகம், சிங்கப்பூர்
  • முனைவர் செ. இரத்தினவேலு, இண்டராக்சன்சு கார்ப்பொரேசன், சிகாகோ, அமெரிக்கா
  • முனைவர்  மாலா நேரு, அண்ணா பல்கலைக்கழகம்
  • திரு. இல. கா. நற்கீரன், தொராண்டோ பல்கலைக்கழகம், கனடா

 

Comments are closed.