பொன்மலைத் திருவிற் பன்னக நெடுநாண் மாயப் பகழித் தாயக் குரிசின் முரணமை யிருகால் திரள்மறைப் புரவி அலர்மரை வாழ்க்கை வலவத் தேரும் வழங்குதற் கமையா வண்மையின் இசைக்கும் | 5 |
பெருந்தகு பாடல் திருந்திசைப் புலவர் அறன்கடைக் ககலாப் பிறங்குதம் உளத்தில் சாலாக் கல்வி மாலார்க் ககலா வரன்மாண் டமைந்த வுரன்மாண் பலகையிற் தண்டா விருப்பின் எண்தோள் முதல்வனோடு | 10 |
ஆனாது பயிலிய அருமறைக் கேள்வி மாயிருந் தமிழ்க்கடல் வடமொழிக் கடலென்று ஆயிரு கடலும் ஆற்றலிற் கடையா ஐயம் திரிபெனும் அழல்விடம் படாது வெய்யசெம் பொருளெனும் மிளிர்தீஞ் சுதைத்திரள் | 15 |
ஆராக் காதலின் ஆராது கைப்பவும் மூன்றுவிரல் அழுந்தா துடல்தசை திணிந்து கான்றதேன் தெரியற் கருங்குழன் மகளிர்க்கு அணங்குளம் நிறீஇ ஆருயிர் கவர்க்கும் வளங்கவின் கொழிக்கும் விளங்குசீர் இளமையும் | 20 |
பல்வகைத் தொழிலும் பண்புற நவின்று சிந்தை வழிச்செலும் ஐந்துநிலை பெறீஇயர் அளவினைத் திறத்தின் அயரா யாக்கையும் அளகைக் கோமான் உளமழுக் கறுப்ப நிலந்தினக் கிடந்த நெடுநிதிச் செல்வமு | 25 |
நீடின் றிரியு நிலைமை நாடி ஏற்போர் அங்கைக் கொடைக்கடன் நிறுத்து நோற்போர் நோற்கும் நோன்மைசால் அறனெனும் உறுதி யாக்கம் ஒய்யெனக் கழலவும் வரைத்திரள் புரள்விற் றிரைத்தெழுந் திரைக்கணம் | 30 |
விலங்கின வழங்கும் விழுக்கலன் செறித்தும் ஒளிறுவேல் அழுவத் துருத்தெழுந்து அடர்த்துக் குளிறுவார் முரசும் பிளிறுமால் யானையும் வைத்தபல் படையும் வழாதுகைக் கொண்டு பராபவத் தெவ்வர் வரிசையி னிறுக்கும் | 36 |
திறைகேழ் உரிமை முறைநேர் நடாவியும் தத்தந் தொழிலில் தலைநின்று வளர்க்கும் பொருளெனும் வெறுக்கை போற்றாது நழுவவும் மிஞிறுந் தேனும் வெறிகவர் தும்பியும் கஞலிப் பட்குரல் கஞற்றுவ சுழலும் | 40 |
இருள்துஞ்சு மலர்ப்பொழின் மருள்சில் லோதிப் பூவார் சோலைப் புறத்தகப் படுத்து மேவரத் தடையிய விதுக்குறை கடுக்கும் திவளொளி மாண்ட குவவுநுதல் வாணுதல் தீங்கதிர் அமிழ்தத் திங்கட் பிளவின் | 450 |
நீங்குகார்க் கறையு நிலாத்தவழ் வெண்மையும் விராயுருக் கொண்டென மிளிர்மதர் மழைக்கட் செங்குமு தத்துச் சிறுமதி கிடந்தெனச் செவ்வாய் அகத்த செயிர்தீர் வெண்பல் விலங்குபாய் கதிர்க்குழை வீழ்ந்துசெகில் துயல்வர | 50 |
வள்ளையின் ஒழுக்கிய வள்ளெழிற் செஞ்செவி செவ்வாய் கவுள்துணைச் சேல்விழி நெற்றி இவ்வா யுறுப்பான் இன்சுவை யமிழ்த வுறுகொடை யாற்றி வறிதுகொடை காட்டும் வளைநிதி தன்னைக் குடுமிகைக் கொண்டவ் | 55 |
வளைமேல் கொண்டு வயங்கொளி தோற்றும் பதும மாநிதி யிதுவெனக் கவன்று தாவா வுறுவர் மேவா வுள்ளமும் ஓவப் படமென வுஞற்றுறு திருமுகப் பகுவாய்ப் பொற்குழை மகரமீ னாஅன்று | 60 |
ஐதுமீக் கிடத்தலின் ஐங்கணைக் கிழவோன் வெய்துதன் னாணை விளக்கிய வுயர்த்த அணங்குதவழ் கொடியின் இணங்குபணை வேய்த்தோள் காம்புபுடை யடுத்த கதிர்மணிக் குன்றின் தோள்புடை யடுத்த சுடர்ப்பூட் கொங்கை | 65 |
குவிமுலைத் துணைக்கொள் சவிமணி மார்பில் தத்தமது ஏணி கடவாது தணிய நள்ளுநின் றுணர்த்துந் தள்ளாக் குறியின் அணிவயிற்று ஒழுகிய மணிமயிர் வல்லி நெடுகுமயிர் ஒழுக்கு நெடுவழிப் படர்ந்து | 70 |
கடுமுலைக் கோட்டுக் களிறுபட எடுத்த படுகுழி அனைய பயம்படு கொப்பூழ் நடுநின்று வாழ்வோர் நலத்தொடு முரண நடுநின்று தேய்ந்த விடுகுகொடி மருங்குல் வையகம் உயிர்த்தோன் மதிபுனைந்து இயற்றலின் | 75 |
கைபுனைந்து இயற்றுங் கதிர்மணித் திண்தேர் கடாதுருக் கொண்டோடுந் தடாதபே ரல்குற் கீழ்மே லாகக் கிளர்ந்தெழின் அத்தகு வாழையொடு பொரூஉம் வார்ந்தசெறி குறங்கின் வேற்றொரு தாமரை மேவந்து தொழில்செய | 80 |
வீற்றுஇருந் தருளும் விரைமல ரேய்க்கும் அலத்தக மலர்ந்த நலத்தகு சீரடி மயிலியன் மருளும் இயன்மட மாதரைச் சீலம் விழைவே செயல்குறி இவற்றான் நால்வகைப் பேதமும் மாலறத் தெரிந்து | 85 |
மருந்துமந் திரத்தும் திருந்துவிழை வேற்றித் தேயம் பயிற்சி சேட்டை இயல்பே இன்பத் துறையே இருவகைத் தொழிலே இங்கித வகையே இவைநனி நாடி இருவகைப் பொழுதொடும் ஏற்ப மருவிய | 90 |
மூன்று காலமு மூன்று வேகமும் ஒப்பக் கலவி உஞற்றுபே ரின்ப அவாவுளம் பொதிந்துகொண்டு அழற்றுவெம் படர்நோய் தவாதுபிறை போலத் தணிவின்றி வளர உவாமதி போல உருவே தபவும் | 95 |
கடவுட் பொங்கரும் தடமருப் பாவும் சிந்தா மணியு நந்தா நிதிகளும் கலன்முத லான வளம்பல கொழிப்ப பல்வகைக் கணமும் பணிந்தெழுந் தேத்த தெவ்வுத் தானவர் அவ்வித்து ஏங்க | 100 |
விரிகதிர்ப் பிழம்பும் அரிமான் தவிசிற் களிகூர் நெஞ்சாற் காவல் வைகும் ஒளிகூர் மகவான் உறுபதம் ஆதி எளிதினுய்த்து அளிக்கும் தெளிவினை போலாது | 105 |
பார்முதிர் புணரிப் பாயற் கடவுள் வார்மதுப் பொகுட்டு மரைமலர்ப் புத்தேள் என்றிவர் தமக்கும் எய்தற்கு அரிய சரியை கிரியை யோகத் தவநிலைப் பெயர்பொச் சாப்பப் பிறக்கணித்து உகவும் ஊன நாடகம் உஞற்றிய திருவருள் | 110 |
ஞான நாடகம் நவிலிய மாறலும் ஆனா மலப்பகை நோனாது கழலத் தானா னந்தத் தனியுயிர் மடங்கக் கண்காண் குருமுதற் கடவு ளாகி உயிரே யவத்தை யுணர்த்துந் தன்மை | 115 |
அருளின் இயல்பே அங்கதன் பயனே பெரும்பெயர்த் திறமே பெற்றவர் முறையென்று அனைவகை யேழும் அரில்தபத் தெரிப்பத் தாழாது கெட்டு வீழாது சிந்தித்து அங்கைக் கொண்ட அமிழ்தெனத் தெளிந்து | 120 |
பொங்குபே ரின்பம் புணராது புணரும் நிட்டை கூட நிலையது நீங்கவும் பல்திறப் பகைஞர் படையொடு நேர்ந்தென வெல்திறங் காட்டாது வீற்றுவீற்று உடற்றும் பிணிக்கோட் பட்டுப் பேதுறு மனத்தான் | 125 |
முந்தையோர் ஈட்டும் முழுநிதிச் செல்வமும் பொய்ம்மை யாளர் புகழெனத் தேய நோய்ப்பகை யாளர்க்கு நொடிந்தென் சிதரிற் பல்வகை மருந்துக்குப் பகர்விலை தொலைச்சி அதுவென வெறுவியது அன்றுமற்று இதுவென | 130 |
முன்னைநாள் மருந்தை முறைமுறை இகழாப் பின்னைநாள் மருந்தைப் பெட்டுவாய் மடுத்துப் பண்டைநோய் மேலும் பருகுபல் மருந்தால் மண்டுநோய் வேறு மரீஇக்கிளர்ந்து உருப்ப உரைத்தஎன் மொழிவழி யொழுகினை அல்லைகொல் | 135 |
பெருத்துநோய் தெறும்என மருத்துவன் ஒழியத் தெய்வத் திறத்தால் தீர்வுகாண் பாம்என உள்ளூர் வயின்வயின் தெள்ளிதின் ஓங்கும் புரிமுறுக்கு அவிழ்க்கும் பூம்புனல் தீர்த்தமும் பல்வகைத் தெய்வப் பசும்பொற் கோட்டமும் | 140 |
படிந்தும் பணிந்தும் பயன்கா ணாமை அணிஅயல் புறநகர் மணிகெழு கோட்டமும் விரத நியதிப் பரவு கடனாதிப் பல்வேறு தொழிலொடு படர்ந்துபணிந்து ஏத்தியும் கவலை நெஞ்சம் கையறு பினையச் | 145 |
சேண்சென்று ஒராஅல் செய்தென வலித்து மிக்கநோய்க்கு இரங்கும் ஒக்கல்புறம் தழுவ வறுமைக் கவற்சியும் இறுகுறப் பிணிப்ப இல்லும் தமரும் இசைபயில் நாடும் மென்மெலக் கழீஇ விரிகதிர்ப் படையால் | 150 |
இருள்கால் சீக்கும் எழுபரித் தேரோன் கடுஞ்சினம் திருகிய கொடுமைகூர் அமயத்து முளிமுதல் முருக்கிய முழங்கழல் போழ்ந்து வளியுலாய்ப் புறத்தும் வழங்குநர்த் தெறூஉம் பைதரு கானத்துப் படர்நெறி ஒதுங்கலின் | 155 |
முந்துபரல் உழந்த வெந்துயர்க் கொப்புள் பிந்துபரல் உழத்தொறூஉம் பிளந்துநீர் உகுப்ப இயங்காச் செல்லல் இணைஅடி தாங்க வெயிற்பகை உழந்த வேர்ப்புற நனைப்பச் சூறை மாருதம் துறைத்துறை எடுத்த | 160 |
பூழி போர்த்த பொற்பறு மாசு கலுழ்நீர் அல்லது கயந்தலை இன்மையிற் கழுவுதல் புரியா முடைபயில் காயமோடு இலையின் மராத்த நிலையின் மென்னிழல் சேய்வரல் வருத்தம் சிதைபாக்கு அசைந்து | 165 |
நெட்டுயிர்ப்பு எறிந்து நினைதரும் இரவல ஆற்றா நின்னுளத்து அவலம்இனி ஒழிக புளிஞரும் அருளும் போக்கரும் சுரத்து வீற்றுவீற்று ஒழுகும் ஆற்றினில் திரியாது ஒருநெறி எதிர்ப்பாடு உற்றது முன்னைப் | 170 |
பழுதறு பெருந்தவப் பயனது போலும் விழும வெந்துயர் முழுதொரால் வேண்டின் பாணியாது இன்னே காணிய எழுமதி தோல்தேர்க் கோடும் திருகுகோட்டு இரலையின் நோய்ப்பகை என்ன வாய்ப்பிலாது அமையும் | 175 |
அடுத்தடுத்து யானும் அலமரும் காலை ஊரூர் வைகிய சீர்கெழு மாந்தருள் உண்டி கலவி உறுதொழில் முதலா மண்டிய பகுப்பின் வரையறைப் படாது வேறுவே றுயிர்க்கும் வெம்பிணி யாளரும் | 180 |
கருவி போழ்ந்த பெரும்புண் உறுநரும் குட்டம் பெருநோய் முட்டிய வாதம் முயலகன் ஆதி மொய்ப்பிணி உழவரும் பாப்புக் கோள்ஆதிப் பலவகைக் கடிஞரும் பேய்கோட் படுநரும் பித்துமீக் கூர்நரும் | 185 |
உறுப்புக் குறைநரும் ஒண்குணம் இழநரும் இன்ன பல்றிறத்து எனைவரும் அன்றிக் கல்விவேட் டவருங் கான்முளை வீழ்நரும் செல்வம் வீழ்நரும் தேயம்நா டுநரும் அலர்முலை மடவார் கலவிகா முறுநரும் | 190 |
இரண்டறு கலப்பின் இன்பநச் சுநரும் இனையபல் வேறு நினைவினர் எவரும் வாட்டுவ தணப்பவும் வேட்டன மணப்பவும் மேற்கொண் டெழுந்து மேனாள் நேர்ந்த பொற்கிழித் திரளும் பூந்துகில் மூடையும் | 195 |
மணிப்பூண் பேழையும் வார்தரு கவரியும் பைம்பொற் கவிகையும் செம்பொற் சிவிகையும் ஊர்தியுங் கொடியும் வார்விசி முரசும் சூட்டுவா ரணமும் தோகைய மயிலும் தத்தமக் கியன்ற தழீஇயினர் போதும் | 200 |
ஓசைதிக்கு அதிர்க்கும் மாசனப் பெருக்கம் காண்டொறும் ஈண்டிய களியேன் உடங்குசென்று இருப்பான் ஒருப்பட்டு எழலும் துன்னிய விழுமநோய் தன்ன நீங்க உறுதுயர் யாக்கை சிறிதுவலி யெய்த | 205 |
ஒய்யெனக் கிளர்ந்த உவகைநெஞ் சத்துப் படர்பேர் ஊக்கம் பிடர்பிடித்து உந்த எழுந்தனன் இம்மென ஏகுதல் தொடங்கி அடிபெயர்த் தோறும் அஞர்ப்பிணி நழுவ உவரி நீரில் தவஎழு மகிழ்வால் | 210 |
அவல்மிசை பாடாஅ அனைத்து நெறியாகச் சென்றனன் அடுத்து மன்றல்நகர் நுழைதலும் வெருவுநோய் இருகூற்று ஒருகூறு விலங்கக் காட்சி ஆர்வம் கையிகந்து ஈர்த்தலின் நறுமணம் கமழும் நந்திநதி குடையாது | 215 |
எழுமுனி வரர்தம் எழுசுனை யாடாது அலைமலைப் பகைஞன் அருள்கயம் படியாது நாக வண்சுனை நன்புனல் தோயாது விண்டு தீர்த்தம் மேவரக் குளியாது அலரவன் இருஞ்சுனை அழிபுனல் முழுகாது | 220 |
எத்துயர்த் திரளும் அத்தினத்து அகற்றுஞ் சரவணப் பொய்கைத் தடம்புனல் துளைந்து மென்மெலக் குன்றம் மீமிசை இவர்ந்து காலைநண்பகல் மாலைமுப் போதும் வைகல் வைகல் மலர்மூன்று தெரிக்கும் | 225 |
நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது புரண்டனர் சூழும் பொற்பினர் மிடைதலின் அடியிடப் படாஅ ஆரிடை வீதி ஒதுங்குபு பைப்பய ஒருமுறை சூழ்ந்து தூவும்எள் நிலத்துத் தோயாதுவெறுத்த | 230 |
தேவர்கள் குழுவும் தேயத் தொழுதியும் தடைஇய வாயல் தடையாது நுழைந்தாங்கு ஒருவர்மெய் மணிப்பூண் ஒருவர்மெய் வடுச்செய நெருங்கிச் சென்று நித்தில வாள்நகை வள்ளி நாயகி மணத்தினை முடித்த | 235 |
கள்ள வேழக் கடவுளைப் பணியா வீரர்ஒன் பதின்மர் வார்கழல் தாழ்ந்துமற்று ஆவயின் வதியும் அமரரைத் தொழுது பூதப் பகுப்பும் பூதகா ரணமும் இந்தியக் கூட்டம் இரண்டுமுக் குணமும் | 240 |
நந்தும்ஆங் காரமும் நலத்தகு கரணமும் இறுவாய் மாயை எழுவாய் ஏழும் சுற்றம் என்னத் தோன்றிய ஐந்தும் விராய்நின்று இயக்கி மராதுநின்று ஒளிரும் ஆரா வின்பம் அருள்நிலை அம்ம | 245 |
தீரா மலப்பிணி தீர்த்தருள் கொழிப்ப அருள்திரு உருவுகொண்டு அவிர்மணித் தவிசின் ஞான சத்தியும் கிரியா சத்தியும் வானவர் கோமான் வளம்பயின் மகளும் கானவர் நலங்கூர் கன்னியும் என்ன | 250 |
இரண்டு பாலும் இருந்தனர் களிப்பக் கண்டமெய் யடியர் கலவினர் போற்றக் காணா விண்ணவர் கலவாது ஏத்தக் கண்கடை ஒழுகும் கருணை நோக்கமோடு இனிதுவீற்று இருக்கும் எழில்நேர் காண்டலும் | 255 |
எஞ்சுநோய் துவர இரியல் போக விஞ்சுநாற் பொருளும் மேவந்து துவன்ற ஆற்றாக் கடுந்துயர் அருநரகு உழப்பவர் நோற்றமுன் ஊழ்நனி நூக்கலும் நொடிப்பின் ஆயிடை நின்று மாயிரும் துறக்கம் | 260 |
புக்குழிப் பொலிவித்து ஒக்கதோற் றத்து விம்மித மகிழ்ச்சி மெய்தவ வீக்க ஒருகதி விட்டுமற்று ஒருகதி அடைந்தவர் மயங்கறிவு என்ன உயங்குமுன் உயங்கல் எய்யே னாகி இறுமாப்பு எய்தி | 265 |
செய்முறை தெரியாது திருமுன் நிற்ப இருமைப் பயனும் எளிதினுற்று அளிக்கும் பூதியும் திருவுருப் பூச்சுநன்கு அளித்திட்டு என்னைத் தன்வசம் ஆக்கிய உலகை என்வச மாக்கி என்றுமோர் இயல்பின் | 270 |
நின்றதன் நிலையின் நீங்காது இருத்தி விடாதுவிட்டு அருள மெய்யருள் மேற்கொண்டு ஒழியாது ஒழிந்து வழிவரு கின்றனன் அத்தகு பெருமான் அருள்விளை யாடலைச் சற்றிது கேண்மதி தவமேம் படுந | 275 |
விச்சொன்று இன்றி விளைவுமிக்கு ஆக்கியும் விச்சுமிக்கு கிருப்ப விளைவுமுழுது ஒழித்தும் ஒளிதலை வளர்ப்ப ஒளிகளைத் தணித்தும் அழுக்கினைக் கழுவ அழுக்கினை ஏற்றியும் உறுந்தொழி லாளர்க்கு உறாதுசேண் அகன்றும் | 280 |
வறுந்தொழி லாளர்க்கு உவந்துடன் கலந்தும் விதித்தநல் விதிகளை விலக்கென உவர்த்தும் விலக்கினை விதியென மேதக நயந்தும் இத்தகு தொழின்மை நித்தலும் இயற்றிப் பொற்றபே ரின்பருள் பெற்றியன் அதான்று | 285 |
இருமுது குரவர் எழுவாய்ச் சுற்றமொடு துயரிலங்கு உலகம் தோற்றுதற் பொருட்டுத் தந்தை என்ன ஐந்துமுகன் ஆகியும் அன்னை என்ன மனோன்மனி ஆகியும் முன்முறை தந்தையர் தாயர் என்ன | 290 |
நாதம் சிவமே நலத்தகு விந்து மேதகு சத்தி வேறுவே றாகியும் பின்முறை தந்தையர் தாய ரென்ன மகேசன் உருத்திரன் மகேசையுமை யாகியும் தமைய னென்னத் தந்திமுக னாகியும் | 295 |
தனைய னென்னத் தாமரை மருட்டு மூவிரு முகமும் முன்னான்கு கரமும் மருவிவீற் றிருக்கும் ஒருதா னாகியும் கடப்படும் இரண்டு கைகோள் இயங்க நான வார்குழல் நகையிழை யானையைக் | 300 |
கானவ ரரும்பெறற் காமரு மாதினைக் கற்பினிற் களவினிற் பொற்புற மணந்தும் பொருள்துறை முழுதும் புரையின்றி நடப்ப அண்டகோ டிகளும் அரைக்கணத் தளவையின் வறிதுநகை தோற்றி இறுவது புரியும் | 305 |
எறுழ்வலி ஆற்றல் எய்யான் போல மந்திரந் தூது செலவிகல் மற்று மாற்றிவெஞ் சூர்வலி காற்றிஉல கோம்பியும் எல்லாம் அறிந்தறி விக்கும்அவ் வியல்பைக் கண்கூ டாகக் காட்டுவன் அதாஅன்று | 310 |
மூவகை உருவாய் மூவுலகு உயிர்த்து மூவகை யுருவும் முயங்காப் பரம்பொருள் பந்தம் வீடு பல்லுயிர்க்கு அமைத்தும் பந்தம் வீடு படாத பெருந்தகை ஆருயிர்க்கு உயிராய் அமைந்தன நடாவியும் | 315 |
ஆருயிர் காட்சிக்கு அணுகா அருந்திறல் தானாய் நின்று தற்காண் தனிமுதல் அளிகளின் அளியா அளிகளூஉங் களியன் ஒளிகளின் ஒளியா ஒளிகளூஉங்கு ஒளியன் வெளிகளின் வெளியா வெளிகளூஉங்கு வெளியன் | 320 |
அளவினின் அளவா அளவினூஉங்கு அளவன் இன்னான் ஒருவனை முன்னுபு சென்றவன் பூங்கழற் சேவடி போற்றுதி யாயின் பேரஞர் உறுத்த பேதுறு நோயுங் காரண நோயும் கையிகந்து இரியக் | 325 |
கடைக்கணித்து அருளிக் கரையினாற் பொருளுங் கொடைக்கடன் நீயிர் குறித்த அளவையின் எண்மடங்கு ஆற்றி என்றும் தீரா அகம்படித் தொழின்மையின் அழுத்துவன் அன்றே ஆடகப் பசும்பொற் பாடகச் சீறடி | 330 |
நாடக மகளிர் நவிற்றிய ஆடற் சிலம்பு கிண்கிணி தீங்குழன் முழவம் முரசந் தூரி முழங்கொலி யானும் விண்டல முரிஞும் வியன்மணிப் புரிசைக் கொண்டல்கண் படுக்குங் கோபுர நிரைகள் | 335 |
ஆடுகொடி சுமந்த மாடநெடு மாளிகை இன்னன பிறவும் மன்னுத லானும் ஒலிதிரைக் கடலும் ஓங்குபல் வரையும் உடங்குதொக்கு அண்மி ஒண்துறை ஆடி இருபகுப் பினவாய் இருகரை மருங்கும் | 340 |
நோற்றன வதியும் பேற்றினைத் தெரிக்கும் மும்மையும் அளிக்கும் மூவா முழுமுதல் ஐம்முகன் ஆகி அமர்ந்தகீழ்க் கோட்டமும் பொன்னும் மணியும் புதுமலர்க் குவையும் | 345 |
திரைக்கயிற்று தூஉய்த் திளைத்தெழுந் தொழுகு நந்தி யாற்று நறும்புனன் மடுக்கும் குரங்குகதிர்ச் சாலியுங் கொழுந்தீங் கரும்பும் குலைப்பூங் கதலியும் கோள்தெங்கு இனமும் கோள்கள் மீப்பரிக்கும் பாளைக் கமுகும் | 350 |
வயின்வயிற் பொதுளி வளம்பல வுறந்த முருகலர்ப் பண்ணை ஒருபுறஞ் சூழ அவரை துவரை அரிக்கதிர் வரகு சாமை இறுங்கு ததைந்தன விளையும் கொல்லை முல்லை கோழிணர்ப் பூவையும் | 355 |
பந்தர் மாதவி யுந்திய கோங்கும் பைங்காற் கொன்றை பசும்பொற் சுண்ணமும் வளிஉளர்ந்து எடுப்ப மறுபுல வரைப்பும் போர்த்தன கமழ்ந்து பொறிவண்டு அழைக்கும் அரும்புலப் புறவம் ஒருபுறஞ் சூழச் | 360 |
செருந்திமந் தாரங் குருந்துவழை பாடலம் கோங்கு சண்பகம் வேங்கைமகிழ் சந்தனம் குங்குமம் மரவம் கோழ்அழகில் கப்புரம் இல்லம் ஆவிரை வில்லம் பாங்கர் பிடர்ஞெமை நமையாண்டு அடர்வரை எகின்சே | 365 |
அசோகம் தேக்கே ஆத்தி சூதம் மருது போதி வஞ்சி காஞ்சி ஞாழல் புன்னை நரந்தை மாதுளை பொகுட்டரை இருப்பை பூஞ்சினைச் சரளம் முன்னம் பலாசு முருக்கை வருக்கை | 370 |
சோதி மாமரம் தொத்தின நாகம் அன்றி அனைத்தும் துன்றிய கறிக்கொடி மல்லிகை முசுண்டை மற்றும் பரித்து மணங்கமழ் காமர் வல்லி ஒன்றே இணங்குபூத் தரும்தன் நிகழ்ச்சியை நாடி | 375 |
வசைப்படத் தத்தம் இசைவிளக் குவபோல் பொறிவரிச் சுரும்பும் வெறிநுகர் தேனும் தோகைமா மயிலும் தொடிக்கண் பூவையும் கிள்ளையும் குயிலும் தெள்ளுகுரற் காட்டி வண்தளிர்ப் பொதும்பர் மருங்குகால் வளைஇ | 380 |
நுண்தளி நறுந்தேன் நோலாது திவளும் ததைமலர்ச் சினைய தருவந்து உடுத்த பொன்னகர் வறுமையை முன்னிநக் காங்கு வேரல் நரன்றுஉக்க வெண்மணிக் குப்பையும் பிறழ்பல் பேழ்வாய்ப் பின்முன் பார்வைச் | 385 |
சிங்கவல் ஏறு பொங்குசினம் திருகி எழுந்துதாய்த் துமிப்ப இருங்கடா யானை மத்தகம் பிளந்து மாஇருங் குன்றத்து வெண்புனல் அருவி வீழ்வன போலச் சலசல வுக்க தரளக் குவாலும் | 390 |
நிலவுராய்த் தவழ நெமிர்ந்தன மிளிரும் கவான்மலைப் புனத்துக் கதிர்த்தினை காக்கும் உவாமதி முகத்தார் ஓச்சினர் விடுக்கும் கவணையின் மணியோ கங்குற் கானவர் விலங்கினம் துரக்கும் இலங்குகூர்ங் கணையோ | 395 |
அலைத்தர விசும்பின் நிலைத்தரு கலன்கள் பல்வகை மின்கொடி ஒல்கிவீழ்ந் தென்ன வெல்வரை நிரையும் பில்குகதிர் மணிப்பூங் காழுந் தாமமுங் கவினத் ததைஇய மண்டப மேடை மாடமேல் நிலைகள் | 400 |
இயங்கா நிலைத்தேர் இயங்குமணிப் பல்தேர் விமானவூர் திகளும் வேற்றுமை தோற்றா வளம்பல தழீஇஎம் மருங்கும்மெய் யடியார் இடுமகில் தூமமும் எக்கரிற் குவைஇய படரொளி ஊட்ட பளிதக் குப்பை | 405 |
கான்றதீம் புகையும் கழுமிவிண் கெழுமி இமையார் நாட்டம் இமைப்பன செய்ய மல்லல் ஆவணம் மறுகும் வீதியும் நாள்தொறும் எழிலான் நவநவம் ஆகியும் இமைக்குநர் நாட்டம் இமையாமை செய்ய | 410 |
மண்டலம் விண்டலம் மாற்றியது என்ன இறும்பூது பயவா ஏர்குலாய்க் கிடந்த திசைகாப் பாளர் இசைநிறை தேவர் அலரவன் நெடுமால் ஆதிய கடவுளர் முதுக்குறை அன்பின் முறைமுறை பழிச்சச் | 415 |
சாறுநாள் அல்லது வேறுநாள் அறியாது உலகமுழு தோம்புபல் சிறப்பின் நிலைபெறு தணிகை மலைகிழ வோனே. |