3221 |
மன்னும் புகழ்ச்சிவ ஞான வரோதய மால்களிற்றின் பன்னும் புகழ்த்துணைப் பாதாம் புயங்கண்மெய்ப் பத்தியுற்ற மின்னும் புகழ்த்தவ ரன்றிநன் னூல்விருப் பாளர்விழை முன்னும் புகழ்ச்சச்சி தானந்த மாலைக்கு முன்னிற்குமே. | 0 |
3222 |
பூமேவு நின்கழல் சார்ந்தாரை யன்பிற் பொருந்தியவர் தாமேவு மின்பமுற் றாரன்று மின்றுமத் தன்மையரே மாமேவு மிவ்விரண் டுள்ளேக மேனுமன் னேன்கதியென் றேமேவு காத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 1 |
3223 |
ஒன்று முளேமற் றிரண்டு முளேமொரு மூன்றுமுளே மென்று முளேமொன்றை யென்றடை வேமென றிரப்பவருக் கன்று முளேமென் றருள்வாயிப் பேருண்மை யாட்டைபல சென்று முளேந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 2 |
3224 |
மதிக்கும் பெருங்கள்வ னீயேயென் பார்மழு மான்முதலாப் பதிக்கும் பலவுங் கரந்தாயிங் குற்றுமொர் பாற்பசுக்கட் குதிக்கு முணர்வுங் கவர்வா யுணரினுள் ளேயொளிப்பாய் திதிக்குந் தருமைப் பதிச்சச்சி தானந்த தேசிகனே. | 3 |
3225 |
ஒன்றா வெனினன்றென் பாயிரண் டாவெனி னோமுரையா யென்றா வருநிலை யென்றிரப் பார்க்கிரு காலுடனே நன்றா வயங்கொரு கையையுங் காட்டுவை நன்றுனியல் சென்றாய் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 4 |
3226 |
மருந்து பிடகர் சுமப்பதெல் லாம்பிறர் மாட்டடைந்த வருந்து பிணிமுற் றொழிப்பதற் கேபிற வாருயிர்கள் பொருந்து வினையொழிப் பான்றனுத் தாங்குபு போந்தனைமெய் திருந்து புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 5 |
3227 |
நின்னைப் பணிபவர் நல்லாக் கறப்பவர் நீர்மையிலான் றன்னைப் பணிபவர் கல்லாக் கறப்பவர் தற்றெரிப்பான் பொன்னைப் பணிகொள் சடாமுடி யோடிங்குப் போந்தமர்வாய் தென்னைப் பொழிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 6 |
3228 |
யானுள போதுளை நீயுமென் றாய்சித்து நீயுமென்றாய் வானுள விச்சை முதன்முச் சொருபன்மன் னீயுமென்றாய் மீனுள வார்கட னானீ புனலென்று விண்டதெவன் றேனுள காத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 7 |
3229 |
தத்துவ முற்று மசத்தென்பை யென்னைச் சதசத்தென்பை யொத்துநிற் சத்தென்பை யிவ்வா றுரைக்கு முனைப்பெரியர் மெத்து மொருமொழி யாளனென் றோதலென் விள்ளுகண்டாய் சித்துரு வத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 8 |
3230 |
காண்பானுங் காட்சியுங் காணப் படுபொரு ளுங்கழித்தல் வீண்பான் மதிகழி யாமையும் வீணென்று விண்டதெவன் மாண்பா னிறைந்த சிவஞானச் செல்வ மலிதலினாற் சேண்பான் மிளிர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 9 |
3231 |
மெய்யோ துவையென்பர் மேதக்க யாருமம் மேதகுசொற் பொய்யோ புகலடைந் தாரிடந் தத்துவப் பொய்யுஞ்சொல்வா யையோ வெமர்சொற் றிடினொறுப் பாயழ கேநினக்குச் செய்யோ வருந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 10 |
3232 |
பாடிவந் தார்க்கென் பரிசளிப் பாயுட் படுமறையிற் கூடிவந் தாவ முறப்பேசி மூன்றையுங் கொள்ளைகொள்வாய் நாடிவந் தாருண் மகிழ்வள்ள லேபன் னகரினருந் தேடிவந் தார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 11 |
3233 |
நிறைமதி யாயென்று நிற்பேசி யின்ப நினைந்தடைந்தேன் மிறைமதி யாயிங்கு வம்மோவென் னாவிடின மேல்வெகுண்டு குறைமதி யாயென்று கூறிலென் னாவை குணத்தர்நல்கு திறைமதி யாய்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 12 |
3234 |
மாலார் தமக்கரி யாயென்ப ரன்றின்றும் வாய்மைமணக் கோலார் பகையுளை யன்றென்ப ரின்றுங் குலாயதது மேலா ருணைக்கண்டுங் காணரி யாயென்று விள்ளுவன்யான் சேலார் வயற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 13 |
3235 |
மூவா மதிமறைத் தாய்ஞான சம்பந்த மூர்த்தியெனத் தாவா நலப்பெயர் பூண்டா யஃது தகாதென்பன்யா னாவா விராகுத் தலையென்ப தெண்ணி யடங்கினன்மெய்த் தேவா புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 14 |
3236 |
ஒன்றனை யாற்ற லொழிதன்மற் றொன்றனை யாற்றலுளாய் முன்றனை நேரி லுனக்கின் றிலைகொன் மொழிவறிய வென்றனைப் பாக மிலாயென்ப தென்னை யெழிலிவந்து தென்றனை யார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 15 |
3237 |
அந்நாள் வினையைந் தெனக்கூ றுதலு மமைந்தநினக் கிந்நாள் வினையொன் றெனக்கூ றுதலு மெதிர்மறையை மின்னா ளறிஞர் வினையெனல் போலுமெய் யார்ந்துகற்பஞ் சின்னா ளெனுந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 16 |
3238 |
அத்து விதம்விசிட் டங்கே வலந்து விதஞ்சிவமிவ் வொத்து நிகழ்தலி றீர்சுத்த மேகொள்ளென் றோதினையாற் சத்து மிளிரவ் வவத்தையு மாக்கிற் றவாதடைவேன் சித்து மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 17 |
3239 |
நின்பார்வை யாலிரு ணீங்கிடு மாலிந் நெடுநிலத்திற் கென்பார் கதிர்மதி யாலிரு ணீங்குத லென்வியப்பு வன்பா ரகவிரு ளென்றே யுளத்து மதித்தனன்காண் டென்பா ரணித்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 18 |
3240 |
இயலார் பெயருஞ் சிறப்பார் பெயரு மியல்வழுவா வியலார் வழக்கிடை மாறுங்கொ லோதிரு மேனியைப்போ லுயலார்நின் னாமமு மாறிய தாலென் றுளத்துணர்ந்தேன் செயலார் மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 19 |
3241 |
வேலையி லாயத னாலல வோநம்பு மெய்யடியார் மாலை யுறாம லவாவேலை யாவையும் வாங்கிக்கொள்வாய் சோலை விராமது மாந்தி மயங்கித் துனைந்துவரால் சேலை விராந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 20 |
3242 |
நீயுநின் பேருமொன் றேயென்று தேர்ந்தன நிற்பழிச்சி லாயு நினைக்கொனின் பேரைக்கொல யாமடை வோமறைதி யேயு நினக்குந்நின் பேருக்கும் வேற்றுமை யில்லையறஞ் சேயும் புரிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 21 |
3243 |
மருவுநின் னாமங்க ளுக்கள வேயிலை மற்றவற்றுட் பொருவி லிரண்டவற றொன்றைந் தெழுத்தின் பொருளுணர்த்தி யிருவிமற் றொன்றைந் தெழுத்தின் பொருளு மியையவைத்தாய் திருவ மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 22 |
32443 |
பூதத்தை வாயுவைப் புந்தியை யைந்து பொறியைமற்றைப் பேதத்தை யாவியென் றேயுழ லாது பிறங்குவிந்து நாதத்தை யோவுநின் னுண்மை தெரித்தது நன்றுமலர்ச் சீதத்தை யார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 23 |
3245 |
தந்தை யிலார்பெறுந் தாயு மிலார்தமர் யாருமிலார் நந்தை யிலார்மனை யாதி யிலார்வெளி நண்ணினரே எந்தை யிலாநின் னடியடைந் தாரழ கேயமரர் சிந்தை யிலார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 24 |
3246 |
நிலையா வுடம்பு விளக்கங்கொண் டன்றி நிருவிகற்ப மலையாச் சவிகற்ப மிக்காட்சி யெய்துத லாகுங்கொலோ மலையா வதுதந்த நின்னருள் வாழ்கவம் மாதடம திலையார் முகற்றிரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 25 |
3247 |
அகர வுயிருந் தனிநிலை யாவது மக்கரமே நிகர வரிய வினையு மசைநிலை யம்பதமே மகர மரியா வொருநீயும் யானும் வயங்குசித்தே சிகர மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 26 |
3248 |
வளிதாழ் விசும்பைப் பைந்தோலிற் சுருட்டிட வல்லவனு மளிதாழ்நின் பேரரு டீர்ந்தின்ப மார்தற் கமைபவனு மொளிதாழ் புவனத்தி லொப்பரன் றோவுண ராதவர்க்குந் தெளிதாழ் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 27 |
3249 |
எல்லா மறைத்துஞ் சடையொன்று மேபுனைந் திங்கமர்ந்தாய் வல்லா வெமரு முணர்வர்கொ லோவல் லவருணர்வார் வில்லார்நற் றாலிபு லாகத்தின் மற்றும் விளங்குமென்று செல்லார் மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 28 |
3250 |
உற்ற வியாபகம் வெம்பாச மென்னி னொழிதலிலை மற்ற வியாப்பிய மென்னினெஞ் ஞான்று மயங்குகிலாய் சொற்ற வியாத்தியென் றாய்நீக்கு றாமையென் சொற்றிபொறி செற்றவர் சூழ்திரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 29 |
3251 |
நன்றாய்வெம் பாச மியற்கையென் றாலது நாசமுறா தொன்றா யிருக்குஞ் செயறகை யனாதி யதுவுமுண ரென்றா யழியுங்கொ லோவெனக் காரண மெஞ்சவென்றாய் தென்றாய் வளர்திரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 30 |
3252 |
கல்லான் மருவி யமர்ந்திங்கு மேவிக் கஞன்றமரு மெல்லா னறிஞர் சிகாமணி யாயினை யென்பனிந்தச் சொல்லான் முனிவு கொளேலுன்மை கூறினன் சூழ்ந்துகருஞ் செல்லான் மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 31 |
3253 |
புறத்து முதன்மை நமக்காக மேவிப் பொலிவகத்து நிறத்து முதன்மை நமக்காக வேயிது நீநினையென் றறத்து முதல்வசொற் றாய்சொற்ற வாபின்ன தாகிலையென் றிறத்து மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 32 |
3254 |
பின்னை யுருவி னிறைமதி யோனெனப் பெற்றபெயர் முன்னை யுருவிற் குறைமதி யோனென மூண்டபெயர் தன்னை மறைத்திடுங் கொல்லோ மறைக்கினுஞ் சாற்றுவல்யான் றென்னை வளத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 33 |
3255 |
சத்தாதி யைந்து வசனாதி யைந்து சதாகதிபத் தொத்தார் தருமிந் திரியம்பத் தந்தக் கரணமொர்நான் கத்தா புருட னொடுசாக் கிர நுத லார்வையென்றாய் சித்தா தருமைப் பதிச்சச்சி தானந்த தேசிகனே. | 34 |
3256 |
சொல்லும் புருவ நடுச்சாக் கிரத்துறச் சொற்றவற்று ளொல்லுந் தசவிந் திரியங் கழியமற் றுள்ளனவே புல்லுங் கனவிற் களத்திலென் றாயது போற்றிக்கொண்டேன் செல்லும் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 35 |
3257 |
பேரார் சுழுத்தி யிதயத் தமர்ந்து பிராணசித்த நாரார் புருட னொடுநிற்பை நீயென்று நாட்டினையீ தோரா ரொழிக வுணர்ந்தேன்மற் றோதுவ வோதுபெருஞ் சீரார் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 36 |
3258 |
பொற்ற துரியம் புகுவாய் பிராணன் புருடனொடு சொற்றநன் னாபி யதீதத்தின் மூலத்திற் றொக்கமர்வை யுற்ற புருடனொ டென்றாய் தெளிதர வுள்ளங்கொண்டேன் செற்ற வளத்தறு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 37 |
3259 |
நாலாறு தத்துவ மாயையென் றாய்நவி லேழனையுங் கோலாறு சாலும் புருடனென் றாய்குறி யைந்தனையு மேலாறு சூடிய வீசனென் றாயுள் விரித்துணர்ந்தேன் சேலாறு பாய்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 38 |
3260 |
கேவல மாணவ நீக்குமென் றாய்கிள ருஞ்சகல மாவல மாயையை நீக்குமென் றாய்நல மன்னுசுத்த நாவல வாவினை நீக்குமென் றாயுண்மை நானுணர்ந்தேன் சேவல வாதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 39 |
3261 |
ஒன்று சிதசித் தசித்துப் பலவொளிர் சித்துச்சில வென்று புகன்றனை யோர்முப்பத் தாறையு மெண்ணினன்யான் கன்று பிறரெங் ஙனமுணர் வார்தென்னை கற்பகத்தைச் சென்று பொருந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 40 |
3262 |
நீயே யருட்குறி யாய்க்குரு வாய்மெய் நிகழ்ச்சியரா யாயேக மாமல மாயை கரும மறப்புரிவாய் தாயே யனையநின் றண்ணளி யென்சொல்வ றண்கடப்பஞ் சேயே புகழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 41 |
3263 |
கரத்துச் சுடர்கொண் டிருடனை நேடல் கடுக்குநினை யுரத்துப் பதித்தறி யாமையை நேடுத லுத்தமனே வரத்துப் பொலிமெய்க் குரவர் சிகாமணி யேவளங்கூர் திரத்துப் பொலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 42 |
3264 |
மலையா நகரொரு மூன்றழித் தாயன்று வாழ்தரவின் றுலையா நகரொரு மூன்றையுங் காப்பைநின் னுண்மையெவர் நிலையாம் வகையுணர் வார்புணர் வார்கையி னீத்தசெம்பொற் சிலையாய் தமிழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 43 |
3265 |
ஒரூ ரிலானென் றுரைப்பார் நினையவ் வுரைமறையா வாரூர் முகலொரு மூன்றூ ரகத்தர சாட்சிகொண்டாய் நீரூர் நின்செய்கை நிரம்பநன் றாயிற்று நீடுபெருஞ் சீரூர் தமிழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 44 |
3266 |
நின்னூ ரகர நிகருமை நீரென நேருரைக்கு முன்னூ ரகரமை யீருற்று நின்றொரு மூன்றுமந்த மன்னூர் நடுவ கரவு கரத்தை மதிப்பவர்யார் தென்னூர் தமிழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 45 |
3267 |
ஒளிவார் விழியும் படையின் றலையு முதவுகின்ற களிவார் பதமுத்தி யுஞ்சத்தி யுங்கமம் புண்டரமு மளிவார் நின்சொல்லு ளமைந்தவும் போல வணிநகரோ தெளிவார் மகிழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 46 |
3268 |
அருளா ருலக மொருமூன்று மாடற் கறிகுறியாப் பொருளார் நகரொரு மூன்றாளு வாய்பெரும் புண்ணியனே வெருளார் பிறவிப் பிணிமருந் தேமத வேள்பகையே தெருளா ருறாத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 47 |
3269 |
மருவு நகர மொருமூன்று சேர்ந்து வயங்குதல்போற் பொருவில் பெயரு மொருமூன்று சேர்ந்து பொலிவையகத் திருவு மவர்க்கினி யாய்தனி யாய்தழைந் தெவ்வகைய திருவு மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 48 |
3270 |
கூடு நகர மொருமூன்று ளாய்க்குக் கொடுத்திடுவன் மூடு நகரமொன் றென்னது காணது முற்றுங்கொண்மோ சூடு நகரஞ் சிறப்புப் பொருளென்று சொல்லிவிடே றேடு நகர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 49 |
3271 |
மோதும் வலைகொடு முன்படுத் தாயொர் முழுமகர மோது மருள்வலை கொண்டுகொ ளின்றெ னொருமகரம் போது மலியும்பொற் றாதுகுத் தேவெளி போநதியைச் சேதுசெய் காத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 50 |
3272 |
கரையு மவத்தை யொருமூன்று காரணங் காரியமோ விரையும் பதினைந் துடையானு நீயென்று விண்டனையால் வரையுந் தியபுனற் காவிரிப் பாலெழு வாளைமுகிற் றிரையும் வளத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 51 |
3273 |
அரிக்கு மயற்கு மடைவரிய தாகிய வானந்தந்தோம் பரிக்கு மெனெக்குங் கிடைக்குங்கொ லோவெனப் பையவுனை யிரிக்குந் திறமுளை யேற்பெறு வாயென் றியம்பினையென் றெரிக்குந் தமிழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 52 |
3274 |
அகார முலகம் பலவற் றையுமினி தாக்குமென்றா யுகாரமுண் டாய வுலக மனைத்து மொடுக்குமென்றாய் மகார மவைக்குள் ளொளியாய்ப் பிரேரித்து மன்னுமென்றாய் சிகார வுருத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 53 |
3275 |
பேசு மகார முகார மகாரம் பிரணவமீ தேசுத றீர்மறை வித்தா மசபை யிதனிடத்தே கூசுத லோவி யியங்குமென் றாயுளங் கொண்டனன்யான் றேசு மலிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 54 |
3276 |
நாட வரிய விகாரமுன் மூன்று நவிலிலிங்க பீட முயிரைந் தருந்து மதனிடம் பேசினின்னுங் கூட வருமண்ட பிண்டமு மாமென்று கூறினையே தேட மிளிர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 55 |
3277 |
பொறியொன்று பூதமொன் றந்தக் கரணம் புகலொருநான் கறியுங் கலாதியொ ரேழ்சுத்த மைந்து மறைந்தவிவை நெறியொன்றி னோர்புல னீநுகர் வாயென்று நீயுரைத்தாய் செறியும் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 56 |
3278 |
மூலமுன் மூவிரண் டற்குமொர் நான்கொரு மூவிரண்டு நாலமை யாறுமற் றாறிரண் டோர்பதி னாறிரண்டு சால விதழு மெழுத்துமென் றாயெவர் தள்ளுவர்செஞ் சேலமை நீர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 57 |
3279 |
ஆறு முணர்குள மேலால் விகசித்த வாயிரந்தோ டேறு மமல கமலத்தி லென்னைக்கண் டின்புறுதி வேறு முணர்த்தவும் வேண்டுங்கொ லோவென்று விண்டனையான் றேறும் வகைதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 58 |
3280 |
பரையே நயனந் திரோதை கருமணி பற்றுமிச்சை யுரையேயு ஞானங் கிரியை யதற்குள் ளொளிதெளியப் புரையே யிலாதெவை யுங்காண்பை நீதெளி புந்தியர்யார் திரையேய் தடத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 59 |
3281 |
நாதத்தில் விந்துவின் மவ்வி லுகரத்தி னாடுமவ்வி லோதச் சிறந்த சிகாரமுற் றோன்றுமென் றோதினையிப் போதத்தை யுற்றவ ரேதத்தை நீங்கிப் பொலிவரென்றாய் சீதப் புனற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 60 |
3282 |
கிரியை நிவிர்த்தி யிருமனு நூற்றெட்டுக் கேடில்புர மரிய வெழுத்தொன்று நாலேழ் பதமய னாற்புவியி னுரியநன் னாசி யுபத்த மதாற்பய னூட்டிடுவாய் தெரிய வருந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 61 |
3283 |
ஞானம் பிதிட்டை யிருமனுத் தத்துவ நாலைந்துமூன் றானவெண் மூவெழுத் துப்பத மேழ்மூன் றமைந்தபுர மானவெண் ணேழரி நீர்தாலம் பாயு வருத்திடுவாய் தீனரு றாத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 62 |
3284 |
இச்சைநல் வித்தை யுருத்திரன் மாமனு வென்பதிணை வைச்ச பதமிரு பஃதேழு தத்துவம் வன்னமுமேழ் மெச்சு புவனமூ வொன்ப தழல்கண்கை மிக்கருள்வாய் செச்சை மலர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 63 |
3285 |
ஆதியஞ் சாந்தி மனுவிரண் டீச னறைபதினொன் றோதி யபதம்வன் னந்தத் துவமும்மூன் றொன்பதினை யேதில் புரந்துவக் குப்பதங் காலினி தூட்டிடுவாய் தீதிய லாத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 64 |
3286 |
பரையே யதீதமு மந்திர மொன்று பதந்தத்துவ முரையே யிரண்டெழுத் தீரெட்டு மூவைந் தொளிர்புவனம் வரையே சதாசிவன் முன்னிலை வான்செவி வாக்கினுய்ப்பாய் திரையேய் புனற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 65 |
3287 |
அருள்சிவ னாத முளமறைப் பச்சிந்தை யீசன்விந்து பொருளரன் மவ்வின் மனமழிப் புவ்விலொண் புத்திநின்று கருணிறன் காப்ப கரத்தகங் காரத்துக் கம்படைப்புத் தெருடியென் றாய்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 66 |
3288 |
அருளார் தருமப் பொழுதேமெய்ஞ் ஞானத்தொ டைந்தொழிலாம் பொருளார் தருமென்பர் நம்பற்க வைந்தெனப் போற்றுதொழி லிருளார் தருசிற் றறிவிற் கடாதென் றியம்பினையே தெருளார் தருதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 67 |
3289 |
குளிகை யடுத்தலுஞ் செம்புறு கோதழிந் தாங்கருளால் விளிகை மலத்திற் குறன்முத்தி யென்பதும் வீண்களிம்பி னொளிகை யுறாது மலநித்த மாதலி னோர்தியென்றாய் தெளிகை யுளார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 68 |
3290 |
இந்தனத் தங்கியின் மும்மல மேக விருஞ்சிவமு நந்தலி னீயுமொன் றாவையென் பாரது நாமுரையோ மந்த முதலொடு நீயேக மாத லடாதென்றியே செந்தமி ழார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 69 |
3291 |
நீரோடு நீர்புணர்ந் தாற்போற் சிவத்தொடு நீபுணர்வாய் பேரோடு மென்பர் மலனீ யமலன் பெருமுதல்வ னாரோடு கூறினும் பேசார் சமமென் றகற்றினையே சீரோடு வாழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 70 |
3292 |
இருக்குரை யேக மெனலா லிரண்டிலை யென்றுரைக்கிற் றருக்குரை யோயம் மொழிபதி மேற்றது சத்தியமே பெருக்குரை வேத மெவர்க்கோ தியதென்று பேசினையே திருக்குரை யாத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 71 |
3293 |
வேத முரைப்பது மேகமன் றோவதை விட்டுரைத்தல் போத மெனத்தரு மோவெனின் மீட்டுமப் பொய்யின்மறை யோத வுணர்ந்தனை யேநீ திரிபுடி யோதென்றியே சீத வயற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 72 |
3294 |
வேனி லடைபவர்க் கெல்லா நிழறரு மென்றருப்போ னானில மெங்கு மடைந்தார்க் கடிநிழ னல்குமெனிற் கானின் மரத்தி னசேதன னல்லன் கடவுளென்றாய் தேனில வுத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 73 |
3295 |
மறையத் துவித மெனவு மிரண்டெங்கு வந்ததெனிற் கறையற் றொளிரது வேறன்மை யேகட் டுரைத்ததுகா ணிறையத் தெரியென் றருளினை காவிரி நித்திலங்க டிறையிற் றருதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 74 |
3296 |
மொழியா தெனக்கு மொழிந்தது காணின்சின் முத்திரைக்கை கழியாது பாசங் கழிந்தது நின்னையுங் *காணவொல்லே னழியாத வானந்த வாரிதி யேயென் னரும்பொருளே செழியா வளர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. * 'காணவல்லேன்' என்றும் பாடம். | 75 |
3297 |
மாணா வுணர்தத் துவமசி யென்னு மறைப்பொருளைக் கோணா முதற்கும் பசுவிற்கும் வேறன்மை கூறியதே வீணா வுரைப்பர் தனிமையென் றேயதை விண்டிடென்றாய் சேணார் புகழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 76 |
3298 |
உயிர்கட் கிருளற மெய்யாதி சத்தியி னுய்த்தசைத்த லயிரற் றுணர்த லிலார்பதி மாயை யகப்பட்டெண்ணில் பெயருற்று முத்தி யுறுமெனல் பொய்யெனப் பேசினையே செயிரற் றவர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 77 |
3299 |
அந்தக் கரணங் கெடத்துன்பங் காணுத லற்றிருத்தல் சந்தப் பெருமுத்தி யென்னின் மரணந் தவாவுறக்க நந்தத் தருவுயிர் முத்திய வென்று நவின்றனைதோஞ் சிந்தப் புடைதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 78 |
3300 |
உலகாய்ப் பரிணமித் துச்சிவ மாருயி ராய்வினையுண் டிலகா வதீதத்திற் பேரொளி யாமென்ப ரீதும்பொய்யென் றலகா வுவப்பி னுணர்பாக் கியம்பினை யாரியர்தந் திலகா புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 79 |
3301 |
இருவினை யொப்பின் மலத்தைக் கருவியை யீடழித்தே யொருவி லறிவு மதன்முத லுந்தனை யும்மொருவிப் பொருவிலொன் றாயுவப் புந்தபல் வீணென்று போக்கத்தந்தாய் திருவினர் சேர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 80 |
3302 |
எழுவாய் புவிசிவ மீறா விருபதி னெட்டனையும் வழுவா வணமம் முறைமையிற் காண்டல் வருகருவி குழுவா கியதத் துவரூப மென்றனை கொண்டனன்யான் செழுவார் புனற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 81 |
3303 |
கூறிய தத்துவ மோர்முப்பத் தாறுங் குறிசடமென் றேறிய போதது தத்துவக் காட்சி யெனப்புகன்றாய் நாறிய நீற்றி னிருளற லானகு தானமென்றே தேறிய சீர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 82 |
3304 |
பூதமல் லேன்பொறி யல்லேன் புகலுங் கரணமல்லே னோதுங் கலாதிசுத் தங்களல் லேனென் றொருவுவதே போதங்கொ டத்துவ சுத்தியென் றாயது போற்றிக்கொண்டேன் சீதங்கொ ணீர்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 83 |
3305 |
உறந்த விருளை யொரீஇயவ் விடத்திலுண் டாகுகின்ற வறந்தவ றாதமெய்ஞ் ஞானத்தைத் தானென் றிறிவதுவே மறந்தவிர் ஞான வுருவமென் றாய்மறப் பேன்கொலிது சிறந்த புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 84 |
3306 |
நீகண்ட ஞானந் தனக்கே செயலன்றி நிற்கிலையன் றேகண்ட ஞானமு மோர்நீயு மாய்நிற்ற லேயருணூற் பாகண்ட வான்ம தரிசன மென்று பகர்ந்தனையே சீகண்ட னேதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 85 |
3307 |
பரையிற் பொருந்திநின் றன்மையென் போதப்பதைப் புங்கெட்டு விரையப் பொருளிற் பொருந்தித் தரிசித்து மெய்த்தவக்க ணுரையுற்ற தோற்ற மறநிற்றல் சுத்தியென் றோதினையே திரைநற் புனற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 86 |
3308 |
தாவாப் பரசிவ ரூபந் தரிசனம் யோகமற்று மேவாமெய்ப் போக மிவைமுறை யேவிரித் துத்தெரித்தா யாவா நினக்கென்ன கைம்மாறு செய்வ லருட்பெருமைத் தேவா திகழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 87 |
3309 |
இரும்பு மழலுமென் கோவுப்பு நீருமென் கோவிருடீர்த் தரும்பு கதிரும் விழியுமென் கோமுன்னை யாணவமும் விரும்பு முயிருமென் கோநீயு நானும் விரைசெலற்கோ டிரும்பு மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 88 |
3310 |
நீரு நிழலுமென் கோசுவைப் பாலுநன் னீருமென்கோ வேரும் பழமுஞ் சுவையுமென் கோபண் ணிசையுமென்கோ வாருங் கருதரு மோர்நீயு நானு மருளொளியே சேரும் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 89 |
3311 |
வானும் வளியுங்கொ லோசெங் கதிரு மதியுங்கொலோ வூனு முயிருங்கொ லோதில மும்முறு நெய்யுங்கொலோ யானுமொர் நீயு மருளிருள் காவல ரோடுசுவைத் தேனும் பொழிதரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 90 |
3312 |
ஒருவாநின் பேரருள் பெற்றேனெஞ் ஞான்று முரைக்கரிய பொருவாத வானந்த முற்றேன் கருணை பொழிமுகிலே மருவாவென் னாற்பெறு மாறெவ னீயருள் வாரிதியே திருவா புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 91 |
3313 |
உன்னை நினைக்க வுனையே வழுத்த வுனதுபணி தன்னை யியற்றப் பெறுவா னினிப்பெறத் தக்கதுவே றென்னை யருட்கட லேகரு ணாநிதி யேமுகிலார் தென்னை வளத்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 92 |
3314 |
இம்மா நிலத்தி லடியார் செயலொன்று மில்லவராய்ச் சும்மா விருந்து சுகமார் தரவைத்த சோதியனே யெம்மா தவர்க்கு மரசே கருணை யிரும்பொருப்பே செம்மா மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 93 |
3315 |
போக்கு வரவில் வெளிபோ னிறைந்தமெய்ப் போதநிலை நீக்க மறப்பொருந் தித்திருந் தித்தன் னினைப்புமறு பாக்கு மருளி லருளே செயும்பெரும் பண்ணவனே தேக்கும் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 94 |
3316 |
வருந்தி யிறந்து பிறந்துழ லாதுசன் மார்க்கநிலை பொருந்தி யகண்ட பரிபூ ரணநிலை புக்குமிக்கின் பருந்தி யடிய ரிறுமாக்க வைக்கு மருட்கடலே செருந்தி மலர்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 95 |
3317 |
பந்த மகல வருண்ஞான சம்பந்தர் பார்பரவா நந்த பரவசர் நற்சச்சி தாநந்தர் நாடினருக் கந்த மருளு மொருமா சிலாமணி யாரெனத்தோஞ் சிந்த வருடரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 96 |
3318 |
பயவிரு ஞானசம் பந்தர் திருவம் பலவரழ கியதிருச் சிற்றம் பலவர் கிளர்திரு நாவுக்கர சுயர்சிவ ஞான ரொளிர்சச்சி தாநந்த ராயுவந்த செயலுடை மெய்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 97 |
3319 |
பார்புகழ் முத்துக் குமாரர்நன் ஞானசம் பந்தரரு ளார்தரு கந்தப்ப ரம்மா சிலாமணி யாரிவராய்க் கூர்தரு மெய்யடி யாரைப் புரந்தருள் கூர்ந்துநின்றாய் சீர்தரு மெய்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 98 |
3320 |
ஒத்தே நிகழடி யாருளத் தேயொளி யாய்நிறைந்த முத்தே முழுமணி யேகரு காது முளைக்குமருள் வித்தேமெய்ஞ் ஞானத் திரளே மறைமுடி மேல்விளங்குஞ் சித்தே செழுந்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 99 |
3321 |
பூவேயப் பூவின் மணமேமெய்ப் போதப் பொலிவருளுங் காவேமெய்ஞ் ஞானக் கரும்பே யருள்கனி யுங்குரவர் கோவே யிருங்குணக் குன்றே பொதுவிற் குனித்தருளுந் தேவே திகழ்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே. | 100 |