3016 |
திருவளர் கபோல மதப்பெருக் குண்டு தெவிட்டுகார் வண்டின மெழுந்து, மருவளர் செய்ய சாந்தினுண் மறைந்த மத்தக மீதுதங் கிடுதல், கருவளர் மணிகள் பதித்தபொற் குடத்திற் கவின வீற் றிருந்தருள் கொழிக்கு, முருவளர் செல்வ விநாயகன் பொற்றாளுபயபங் கயமுடிக் கணிவாம். | 0 |
3017 |
பூமலி செய்ய பொலிமணித் தோடு புதுவெயி லெறித்து முண் மலர்ந்த, தேமலி யாம்பற் செய்யவாய் முளைத்த சிறுநகை யிளநிலா வெறித்து, மாமலி குழனின் றவர்முக மலர்கண் வளந்தர முன்புவந் தருள்வாய், காமலி வானும் புகழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 1 |
3018 |
வடதிசை யவனுஞ் சமழ்ப்புறக் கனகம் வாய்ந்துதென் றிசைநகத் தமருங், குடமுனி யவனுஞ் சமழ்ப்புறக் கல்வி கூர்ந்துமிக்குயர்ந்தவர் பலருந், தடமலர் புரைநின் முகத்திரு கடைக்கட் சார்பொருங் குற்றவ ரன்றோ, கடவுளர் மனம்புக் கமர்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 2 |
3019 |
விழிவிருந் துதவு நின்றிரு மணத்தில் விமலனார் கரமலர்மேற்கொண், டொழிவரு கருங்கன் மிசையுறு நின்றா ளுற்றவென்கரமலர் மேற்கொண், டிழிவற வடியேன் மனக்கலி னிடத்து மியைந்துறு மென்றுனைத் துதித்தேன், கழிநசை முனிவர் புகழ்திரு வானைக்காவகி லாண்டநா யகியே. | 3 |
3020 |
அடியனேன் கொடிய னென்றுமுன் வருதற் கஞ்சினை யென்னின்வெங் கூற்ற, மடியமுன் னுதைத்தான் றுணையடைந் தேனும் வருமதிமற் றதுநினக் கரிதோ, நெடியவன் பிரம னிந்திரன் முதலோர் நித்தமும் தாழ்ந்துசூழ்ந் தேத்திக், கடியவெவ் வினைதீர்ந் துயர்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 4 |
3021 |
பாவிநீ நின்முன் வருவது தகாதென் பரிசினுக் கென்பையேன் முன்ன, மாவிசூழ் மதுரை யகத்துமா பாவி யாயினா னொருவன்முன் முக்கட், கோவினோ டடைந்த குணத்திநீ யலையோ குலவதுமறந்தனை கொல்லோ, காவியங் கழனி சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 5 |
3022 |
பண்டுநீ பெருமா னருள்வழி புகலிப் பாலனுக் களித்தனை ஞான, மண்டுமற் றதனான் முழுப்புகழ் நினக்கே யாயதோ விரங்குபுநீயே, தொண்டுகொண் டடியேற் களித்தனை யாயிற் றூயநிற் கேமுழுப்புகழாங், கண்டுநேர் மொழியார் பயிறிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 6 |
3023 |
அளவறு பிழைகள் பொறுத்தரு ணின்னை யணியுருப் பாதியில் வைத்தான், றளர்பிழை மூன்றே பொறுப்பவ டன்னைச் சடைமுடி வைத்தன னதனாற், பிளவியன் மதியஞ் சூடிய பெருமான்- பித்தனென் றொருபெயர் பெற்றான், களமர்மொய் கழனி சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 7 |
3024 |
3024. பெரும்புக ழமைந்த நின்பதி யென்னும் பிரணவ குஞ்சர நின்கை, யரும்புவிற் கரும்பு விரும்புபு கவரு மடல்புரிந் தென்றுளங் குறித்தோ, வரும்புகர் முகங்கொ ளங்குச பாசம் வயங்குற வேந்தினை நாளுங், கரும்புய னிறத்தோன் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 8 |
3025 |
யானென தென்னுஞ் செருக்கிழந் தவர்மற் றிழப்புறார் நின்னையீ துண்மை, தானென மறைகண் முழங்கவு முணராச் சழக்கனே னினையிழந் துழல்வேன், மீனென வயங்குங் கண்ணினாய் கொடியேன் வினைக்குமோ ரிறுதியுண் டாங்கொல், கானென வரம்பைசூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 9 |
3026 |
விழியிடந் தப்பி மகவரிந் தூட்டி விருப்புறு தந்தைதா டடிந்து, பழியகன் மனையை யுதவிமற் றின்னும் பலசெயற் கரியசெய்தார்க்கே, மொழியுநின் கொழுந னருள்செய்வா னென்னான் முடிதராதென்றுனை யடைந்தேன், கழியுணர் வுடையார் புகழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 10 |
3027 |
வழிபடு மடிய ராயினார் தமக்கே வழங்குதுங் கருணைவேறாய, பழிபடு மவர்க்கு வழங்குறா மென்னிற் பயோதர மருதமு னன்றிப், பொழிசுவை நறுநீர் புல்லுவர் நிலத்தும் பொழியுமே புண்ணியப் பொருளே, கழிதலி றென்னங் காத்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 11 |
3028 |
கொடியவ னிவற்கு மருள்புரி யென்றுன் கொழுநனுக் கெனைக்குறித் துணர்த்த, முடிவிலின் னருளா லெண்ணினை யேலம் முதல்வனின் னூடலையுணர்த்த, வடிபணி பொழுதி லுணர்த்திடல் வேண்டு மஃதுடன் பலிக்குநீ யறிதி, கடிதலில் கழகஞ் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 12 |
3029 |
தாவருஞ் சிருக்கு மணிவடஞ் சங்கு சக்கரஞ் சூற்படை யிலைவே, லோவருஞ் சிறப்பின் வேறுவே றேந்து முண்மையா லொண்மல ரோன்முன், மூவரு மியற்று மூவகைத் தொழிற்கு மூலநீயென்பது தெரிந்தேன், காவரு மலர்நல் கிடுந்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 13 |
3030 |
தாயினைக் கொன்றுந் தந்தையைக் கொன்றுந் தவலரு மனைவியைக் கொன்றுஞ், சேயினைக் கொன்றுங் கடும்பினைக் கொன்றுஞ் சேர்ந்தவர்க் கருள்வனின் கொழுநன், வீயினைப் பொருவும் பதமடைந் தார்க்கே விருப்பினீ யருள்வதோர்ந் தடைந்தேன், காயினைச்சுமந்த பொழிற்றிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 14 |
3031 |
குற்றியை யடைந்த பசும்புலை யுழுநர் கொடியவன் னாஞ்சிலென் செயுமப், பெற்றியி னின்னை யடைந்தநா யேனைப் பிறையெயிற் றந்தகன் கரத்துப், பற்றிய தண்டப் படைசெய லென்னே பரவிய கருணைவா ரிதியே, கற்றிணி மதில்கள் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 15 |
3032 |
முடிமிசை யொருமந் தாகினி வாழ முதல்வன்வைத் திடுதலிற் சிறந்த, கொடியவ ளென்றி யார்நினைப் பவர்கா கோதர மெருக்கெலும் பாதி, படிதரு மிடத்திற் சற்றிட முடம்பிற் பாதியோ விடமருட் டாயே, கடிமலர்த் தடங்கள் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 16 |
3033 |
பெருவள னமைந்த நீருரு வாய பெருந்தகை நீருரு வாய, வொருகுல மகளை மலர்மிசைத் தேவு முணர்தராக் காட்டிடை மறைத்தா, னருகுநுண் ணிடைநிற் கஞ்சியே யன்றே லணியுருப் பாதிமற்றிலையோ, கருமுகி றவழு மதிற்றிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 17 |
3034 |
அலையடி யடைந்த வகத்தடி நிலையா தலையடியேற் கிரங்குபுபுன், றலையடி சூட்டிப் பிடியடி யென்பான் றடியடி விலக்கியாளிமய, மலையடி யுதித்து வளர்ந்துவெண் ணாவன் மரத்தடி வாழ்பவற் புணர்ந்தாய், கலையடி யுணர்ந்தார் புகழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 18 |
3035 |
இருவினைச் சிமிழ்ப்புண் டுழல்கொடி யவன்மற் றிவற்கரு ளென்றிரங் குபுநின், னொருமுத லவனுக் குணர்த்துதி வருத்த முன்னலுன் பரிசினுக் கடாது, வருபசுங் குழவிக் குறுபிணி தீர்க்கு மருந்தனை யன்றியார் நுகர்வார், கருமுகி லுறங்கு மதிற்றிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 19 |
3036 |
எடுப்பது பிச்சை யேந்துவ தோடாங் கியக்குவ தொற்றையே றரைக்க, ணுடுப்பது புன்றோன் மற்றிவர் மனையா யுற்றநீ யுயிர்வயிற் றழலா, யடுப்பது தவிர வூட்டுத லாதி யறமெலாம் வளர்ப்பையீ தழகே, கடுப்பது தவிர்ந்த மதிற்றிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 20 |
3037 |
முற்றவம் புரிந்து முழுமலந் துமித்த மோனமெய்ஞ் ஞானிய ரன்றி, மற்றவர் கவரப் படுங்கொனின் கருணை வானகத் தெழுமதிக் கதிரை, நற்றவம் புரிந்த சகோரமோ கொடிய நவில்கருங் காகமோ கவருங், கற்றவர் புகழ்ந்து சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 21 |
3038 |
தொண்டவாய் மனமா திகளொருங் குய்க்குந் தூயவ ரன்றிமற் றோரு, மண்டரா தியரு மணுகரு நின்றா ளடைவரோ வளவறு மேன்மை, கொண்டவான் கங்கை யடைவதோ திமமோ குரண்டமோ குணப்பெருங் குன்றே, கண்டவர் பவங்கா ணாத்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 22 |
3039 |
இடையறா வன்பின் மெய்கொடு துதிப்பா ரின்றுதி முன்னர்மெய்ந் நிழல்போற், புடையறா வினையேன் பொய்கொடு துதிக்கும் புன்றுதி யெங்ஙன மென்னி, னடையறாத் தேமாங் குயிற்குர லெதிரோ ரரிட்டமுங் கதறுதல் பொருவுங், கடையறா மரு தஞ் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 23 |
3040 |
மறைபல துதிக்கு நின்பெரும் புகழை வழுத்திய வான்றவர் நாவு, மறையுமோ மற்றைப் புல்லிய தெய்வத் தமைபுக ழறையுமே லினிமை, நிறைதரு கருப்பஞ் சாறவா வியநா நிம்பநெ யவாவுதல் போலுங், கறையறு வளமை மலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 24 |
3041 |
மனைதொறு மிரப்புத் தொழில்கொடு புகுவார் மறலிதனாலயம் புகுவார், நினைதர முடியாக் கருக்குழி பலவு நிரம்புற வோடுபு புகுவா, ரினையவர் புகாநின் றிருப்பெருங் கோயி லேழையேன் புகவருள் புரிவாய், கனைகடல் வாவி சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 25 |
3042 |
எண்ணருங் கொடிய பாதகம் பலவு மியற்றுமா பாவியா னெனினு, நண்ணரு நினது திருவரு டோயி னண்ணுத லரிதுகொல் புனிதம், பண்ணருங் கொலைசெய் வாளும்பொன் னாமே பரிசனவேதிதீண் டுதலாற், கண்ணருங் கழனி சூழ்திரு வானைக் காவகி லாண் டநா யகியே. | 26 |
3043 |
முழுவதுங் குணமே நாடின்முற் றாது முகுந்தனா தியரிடத் தினுநீ, பழுதற வுணர்த்தா விடினுணர் வாரோ பரமனைப் பண்டவர் புரிதோ, மெழுதரி தவரு மின்னரே லம்ம வென்செயல் யாதெனப் புகல்கேன், கழுவிய மணியிற் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 27 |
3044 |
உலகிடை யழுத பிள்ளைபால் குடிக்கு முண்மையென் றுரைப்பதற் கேற்ப, விலகுசீ காழி மழவழ வளித்தா யின்முலைப் பாலழா விடினு, மலகற விரங்கி யளிப்பவ ரிலையோ வத்தகு மழவியா னருள்வாய், கலகமில் கழகஞ் சூழ்திரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 28 |
3045 |
அழுமழ வொன்றற் களித்தனன் றீம்பா லம்பலத் தாடிய பெருமான், பழுதற நீயு மளித்தனை தீம்பால் பசித்தழு மிளமழ வொன்றற், கொழுதரு மிவற்றா னினக்குறு புகழ்போ லெம்பிராற் குண்டுகொ லியம்பாய், கழுமணிச் சிகரி பொலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 29 |
3046 |
இடையறா வன்பு பெருக்கிநீ பூசை யியற்றிட வினிதுள முவந்து, சடையறா முடியோ னுறைதரப் பெற்ற தண்ணிழ னாவலந் தருவோ, புடையறா தமர ருறைதரப் பெற்ற பொலந்தரு வோசிறந் ததுகட், கடையறாக் கருணை யாய்திரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 30 |
3047 |
சிறுபிறைக் கொழுந்து வீற்றிருத் தலினாற் றேவதேவன்றிரு முடிமேன், மறுவிலச் சுவடு பொலிதரு மைய மருவுறா தஃதுமற் றெவர்க்கு, முறுமறைக் கரிய நின்னடி யகத்து மொளிருமச் சுவடுகா ரணமென், கறுவொழித் துரைப்பாய் புகழ்த்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 31 |
3048 |
எதிர்மலர் தொடுத்த மாரவே ளுடல மெரிக்குண வாக்கிய பெருமா, னதிர்வரு மெய்யிற் பாதிநீ கவர்ந்தா யமைதர முழுவதுங் கவர்ந்தா, லுதிர்தலி னினது திறமையா ருணர்வா ரோங்கவன் வியாப்பியப் படலாற், கதிர்படு மிதுவே யருடிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 32 |
3049 |
தவவலி யுடையோர் பலரையு மயக்கிச் சடைமுடி யோனெதிர் மயங்கி, யிவருமம் மயக்காற் புணர்ந்தொரு மகவு மீன்றமான் மோகினி தனித்துப், பவர்படர் வனம்புக் குறைதன்மற் றவன்மெய்ப் பாதிநீ கவர்ந்ததோர்ந் தன்றோ, கவலரும் வளமை மலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 33 |
3050 |
நீயெனப் பெருமான் விரும்பியோர் தினத்து நிகழ்தரப் பொலிவதும் புவிக்குத், தாயெனப் படுநீ யவனெனப் பொலியுந் தன்மையும் வேறலே மென்று, சேயெனப் படுபல் லுயிர்க்கெலா முண்மை தெரிப்பது போலுமீ தருளே, காயெனப் பவமுற் றகழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 34 |
3051 |
பரவுநங் கருணை வான்றவ முடையார் பாலலாற் புன்மையோர் பாலும், விரவுமோ வென்னி னெழுபெரு வெள்ளம் விரிதரு வாரிதி மட்டோ, வுரவுதீ ருறவி யளையினும் புகுமே யுவமையில கோமளக் கொழுந்தே, கரவுதீர் முனிவர் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 35 |
3052 |
சடையெனும் வனத்து வாழ்தருங் கங்கை தனித்துறை வாள்கொலென் றெண்ணி, விடைமிசைப் பெருமா னவளுயிர் வாழ்வான் மிலைந்தனன் கொன்றையாங் கன்னப், பெடையன நடையா யனையவன் றனைநீ பித்தனென் றெண்ணுதல் பிழையே, கடையுறா வளமை மலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 36 |
3053 |
பரவுறு முலகத் துயிரெலா மீன்று பருவர லவையுறா தோங்க, வுரவுறு கருணை யால்வளர்த் திடுநீ யொருமலை மகளென வுதித்து, விரவுறு புறவு கிளிமயில் பூவை விரும்புபு வளர்த்தவா றென்னே, கரவுறு மவர்கா ணாத்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 37 |
3054 |
பரிதிவந் துதய மெழமுறுக் குடையும் பங்கய மலர்மிசை யுறைவா, ரரிமறு மார்பு மயன்றிரு நாவு மமர்பவ ரென்பர்நின் முகமாம், விரிமலர்க் கமலத் துறவரென் றுணரார் மேதினி மடமையென் சொல்கேன், கரிசறு வளமை மலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 38 |
3055 |
விரும்புநின் செங்கை தாங்கலா லிரண்டாம் வேற்றுமை விரித்துரை செய்யா, தரும்புதா மரைதாங் குவாரென லான்மூன் றாவதும் படுசொலும் விரிக்கும், பெரும்புவி மலர்பூ மாதெனும் பெயர்கள் பெறும்வினைத் தொகைகுணத் தொகைப்பேர், கரும்புபைங் கமுகிற் பொலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 39 |
3056 |
நந்திய வறியா மையினினைத் துதிப்பே னாயினே னாயினுமதனான், முந்திய வினைமுற் றொழிதரா துறையு முறைமையென் மறவியி னேனு, முந்திய வழலைத் தொடிற்சுடா துறுங்கொ லொழிவருங் கருணைவா ரிதியே, கந்திதென் பொருவப் பொலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 40 |
3057 |
அங்கையேந் துறுபைங் கிள்ளையின் மொழியோ வறுமுகக் குழவிவாய் மொழியோ, சங்கையே குழையாக் கொண்டவ னூடறணித்திடப் புகலுமின் மொழியோ, மங்கைநின் செவிக்கு நாயினேன் புன்சொன் மற்றுநீ யிரங்கலெவ் வாறோ, கங்கைதாழ் பொன்னி சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 41 |
3058 |
ஒப்பினின் புகழே கேட்கவென் செவிகண் ணோங்குநின் னுருவமே காணத், தப்பினின் றனையே பாடிட வாய்கை தவாது நின் னடிப்பணி யாற்ற, விப்படி யுறுமேற் செங்கதி ருதய மெத்திசை யெழினுமற் றென்னே, கப்பிணர்த் தருக்கள் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 42 |
3059 |
ஓதுறு முறைமை யொன்றின்முன் மூன்று ளொருசிறி யேற்குநின் பதிக்கும், போதுறு குழனீ நடுப்பொலி தலினாற் புரிந்து நின் பதியொடு மெனைப்பின், றீதுறு மிரண்டி னீக்கியொன் றாக்குந் திறனினக் கன்றியார்க் குளது, காதுறு கண்ணார் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 43 |
3060 |
கோவண மறையாக் கொண்டனன் பெருமான் கொண்டனை நீயுமே கலையாத், தூவண வவன்மா தேவன்மா தேவி துதிக்குநீ யெனிற்றிரு நெடுமா, லேவண வவற்கு நீவியாப் பியமென் றிசைப்பதெங் ஙனமருட் டாயே, காவண மறுகு மலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 44 |
3061 |
பொறியரி தொடரு மருமலர்த் தாளோன் பொலியனந் தொடர்சடா முடியோ, னறியுநின் கொழுநன் பொறியரி தொடரு மலர்க்குழ லினைநடை யன்னஞ், செறிதரத் தொடர்மென் பதத்தினை யெனினீ தேவொடு மாறுளாய் கொல்லோ, கறிபயி லளிசூழ் பொழிற் றிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 45 |
3062 |
திருந்துறு தந்தை யாகிய வரையைத் திரிபுர மெரித்த நாட் குழைத்த, பெருந்திற லுணர்ந்தம் மலையுள மகிழப் பெருந்தகை நிறமுலைக் கோட்டாற், பொருந்துறக் குழைத்தாய் போலுநின்றிறமை புகலுதற் கடங்குமோ தாயே, கருந்துழாய் மார்பன் புகழ்திருவானைக் காவகி லாண்டநா யகியே. | 46 |
3063 |
மறைமுதல் பொருவ வேந்தினை நீயு மலர்புரை தருகையில் வன்னி, யுறைதரு மனையா னிறமுநின் னிறமு மொத்தன வாயினுமவன, தறைதரு மெழுநா வதுநின தொருநா வதுசெவி யவாமொழியதுதான், கறையற வெதுநீ புகறிரு வானைக் காவகி லாண்டநா யகியே | 47 |
3064 |
குடகட லொடுங்கு மிரவிதண் மதியங் குணகட லுதிக்குமென் றுரைக்கும், படவர வேந்து முலகநின் னொருகைப் பங்கயத் தொடுங்குநின் கொழுநன், றடமலர் வதனத் துதிக்குமென் றுணராத் தன்மையென் மென்மைசான் மயிலே, கடவுளர் பலருஞ் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 48 |
3065 |
பெருவழக் கெடுத்துப் பேரவை யேறிப் பேசுவ குறையறப் பேசி, யொருதிரு நாவ லூரனை யாண்டா னோங்குவெண் ணாவ லூ*ர*ண்ண, லருளொடு நீயு மத்தகு செயலொன் றாற்றினன் றென்றியா னினைந்தேன், கருளற வொளியின் மலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 49 |
3066 |
முதுபுக ழுடைநின் பதியிரு பாத முழுமலர்க் கருச்சனையாற்றின், மதுமல ரொன்று குறையினு மதற்கு மாறுகண் ணிடந்திடல் வேண்டு, மதுசெய மாயோ னல்லன்யா னின்பொன் னடியருச் சனைசெய்வான் புகுந்தேன், கதுமென வருள்செய் தருடிதரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 50 |
3067 |
தருமமென் றுரைக்கு மளியமர் நின்கைத் தாமரை மலரின தலர்ச்சி, பெருமதி மலர்ச்சி மாற்றுமென் றுரையார் பெருமதி யவர்ச்சியே செழித்த, மருமலி கமல மலரின தலர்ச்சி மாற்றுமென்றுரைப்ப ரீதென்னே, கருணையங் கடலே யருட்டிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 51 |
3068 |
நீவினோ தத்தா னின்பதி முகக்க ணிகழ்கைசேர்த் தெடுத்திடுங் கால, மோவிய மனையாய் கணமுமின் றுனக்கஃ தும்பரா தியபல வுயிர்க்கு, மேவிய கோடி யுகம்பல வாமவ் விநோதநீ யாற்றுதறகாது, காவியங் கண்ணார் பயிறிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 52 |
3069 |
தென்னவன் புரிந்த பெருந்தவப் பேற்றாற் செழுந்தழ லகத்தொரு மகவே, யென்னநீ யுதித்த வாஞ்சையுட் குறித்தே யிறைநுதற் கண்புதை யாது, மன்னமற் றிருகண் புதைத்தனை நின்னை மதிக்குல மென்பதோர்ந் திலையோ, கன்னவி றோளார் பயிறிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 53 |
3070 |
அரும்புமோர் நின்கைக் கணிபல வணிந்துள் ளவாவொடு தாங்குமா தர்களை, விரும்புபு சுமக்கு மெல்லிதழ்க் கமல மெய்த்தவமுடையன வெனவே, யிரும்புவி புகன்றா லனையமா தர்கட மிருந்தவப் பெருமையென் புகல்கேன், கரும்புநேர் மொழியார் பயிறிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 54 |
3071 |
சிலம்பகத் துதித்த நின்னடி தற்சூழ் சிலம்பகத் துதித்தமா தரைவல், வலம்பகப் பொலியு முலையினா யங்கை மலரகத் துதித்தமா தென்ன, வுலம்பகப் பொருதோ ளரன்முடிக் கொளாமை யுணர்ந்தன்றோ வூடலிற் றாக்குங், கலம்பக முலாமுற் புனைதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 55 |
3072 |
பெரியவர்க் கிடுக்கண் புரிவதை யுணர்ந்து பெரும்புகழ்த் தந்தைதன் மரபென், றரியவர் சிந்தை யாலயம் புகுவா யயர்ந்துமெண் ணாமல்வண் குறிஞ்சிக், குரியவன் கரத்துப் புகூஉக்குரு குப்பே ரொருவரை கொன்றனை யழகே, கரியவன் பிரமன் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 56 |
3073 |
நினையுணர் மகடாய் மரபென வொருமா னெடுங்கையேந்தினன் பெம்மா னம்மான், றனையுணர் மகன்றாய் மரபெனக் கிள்ளை தன்னைநின் கையிலேந் தினையால், வினையுன ரார்சொன் னீயுநின் பதியும் விரும்புறு மாடலென் னுரைக்கேன், கனையுண ரளிசூழ் பொழிற்றிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 57 |
3074 |
பொலிதரப் பசந்து நீர்மழை யெங்கும் பொழியுமே புயலது போல, மலிதரப் பசந்து நீயும்வண் கருணை மழைபொழி குவைகொடு வினையான், மெலிதர லுற்ற வெனையொழித் திடுவான் விதியெவன் விமலமெய்ச் சுடரே, கலிதரு துயர்சா ராத்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 58 |
3075 |
நறையிலா மலரோ நயமிலா மொழியோ நயனமில் லாதவாண் முகமோ, பொறையிலாத் தவமோ மகவிலா மனையோ புனலிலா வோடையோ நீதி, முறையிலா வரசோ மதியிலா விரவோ மூடனேன் பத்தியில் பாடல், கறையிலா வளமை மலிதிரு வானைக் காவகிலாண்டநா யகியே. | 59 |
3076 |
குணமிலேன் மொழிபா நயமில தெனினுங் குறித்ததை யேற்றருள் செய்ய, விணர்மலி குழானிற் கேதகுஞ் சிலம்பி யியற்றுநூற் பந்தரு முவந்து, புணரருள் புரிந்தா னின்பதி யந்தப் புராணநீ யோர்ந்தனை யன்றே, கனமலி முனிவர் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 60 |
3077 |
வரிவிழிக் குடைந்த மானையு நுதற்கு மானுறாப் பிறையையு மல்குற், கிரிதரும் படவெவ் வரவையு மருங்குற் கிணைதராத் துடியையுஞ் சுமந்தான், றுரிசறு வனப்பார் நின்னுறுப் பினுக்குத் தோற்றறும் விசேடமென் றுணர்ந்தே, கரியகண் டத்தோ னருட்டிதரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 61 |
3078 |
பொறையரு ளடக்க மன்புப சாரம் பொலியுமா சாரநல் வாய்மை, யறைதரு மின்ன குறையுளே னெனினு மடிமையே நினக்கியா னுறுப்புக், குறையுடை யாரு மக்களென் றெடுத்துக் கூறுவருலகர்நீ யுணர்வாய், கறையற விளங்கு மருட்டிரு வானைக் காவகிலாண்டநா யகியே. | 62 |
3079 |
உரைசெய்வெண் ணாவனிழலுறை பெருமா னோங்கருண் முறைசெலுத் தியகோன், விரைசெய்பூங் கொன்றை யவனென நீயும் விருப்பொடு செலுத்திடல் வேண்டும், புரைசெயென் பாலே மற்றது செலுத்திற் பொருப்பின்மே லிடுசுடர் போலாங், கரைசெயா வளங்கண் மலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 63 |
3080 |
புண்ணிய வெள்ளை நாவலோ னாரம் பூண்டவ னெனும் பெயர் புனைந்தான், றண்ணிய குணத்து நீயுமென் பாட றழுவுபு பூணுவை யாயி, னண்ணிய பாடல் பூண்டவ ளெனுமோ ரரும்பெயர் நினக்குமுண் டாமே, கண்ணிய வரங்க டருதிரு வானைக் காவகிலாண்டநா யகியே. | 64 |
3081 |
தழைசெய்வெண் ணாவ னறுநிழ லுறைவான் றனிமுத லவனொரு பாகத், துழைசெயொள் விழியா யுறைகுவை நீமற் றுன்னடி நிழலிலெஞ் ஞான்றும், விழைசெயா னுறையப் புரிந்திடி னதனான் மிக்கபுண் ணியநினக் குண்டே, கழைசெய்பூங் கழனி பொலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 65 |
3082 |
பிரம்படி பட்டுங் கல்லடி யேற்றும் பிறைபொரு வில்லடி கொண்டு, நிரம்புற வருள்வா னோங்குவெண் ணாவ னிழலுறை பவனடி யார்பா, லுரம்பயி லவன்போ னீயவ்வா றேற்றின் புதவுந ளல்லண்மெல் லியனீ, கரம்பறு கழனி மலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 66 |
3083 |
பற்பல ரறியப் பித்தனென் றெள்ளிப் பனவபோ வென்றுளார் தமையும், பொற்பலர் பெருமான் விடாமென வாண்டு புரந்தன னங்ஙன மின்றி, வெற்பலர் மருந்தே துதித்துவா வென்னும் வினையினேன் றனைவிட விதியென், கற்பலர் நந்த வனத்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 67 |
3084 |
தேவியோ டினிது வந்தருள் புரிந்தான் சிவனடி யார்க்கென்ப தன்றி, யாவிநேர் கொழுந னோடுவந் தாண்டா ளம்மையென்பாரிலை யன்னே, மேவியச் சீர்த்தி நினக்குறா விதமென் விளம்பிட வேண்டுநா யேற்குக், காவியார் தடஞ்சூழ் தருதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 68 |
3085 |
அடியவர் குறிப்போர்ந் தாண்பனை காய்க்க வாற்றெதிர் செல்லவே டென்பின், பொடிமட வரலா கக்கராம் விழுங்கும் பொருடரச் செய்தனன் பரமன், கொடியனேன் குறிப்போர்ந் துன்னடிக் கன்பு கொளப்புரி வதுமுனக் கரிதோ, கடிமலர்த் தடங்கள் சூழ்திருவானைக் காவகி லாண்டநா யகியே. | 69 |
3086 |
அயனரி குலிச னமரருண் ணடுங்க வடர்ந்தெழுங் கொடுவிடம் வாங்கி, நயனமூன் றுடையா னுண்டனன் முன்ன நங்கைநின் பவளவா யமிர்தப், பயனுணர்ந் தன்றோ வலனெனி னனைய பரமனெவ் வாறுணத் துணிவான், கயன்மலர்த் தடங்கள் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 70 |
3087 |
ஒளிமிகு சம்பு லிங்கநா யகர்போ லுடையையா னுதல்விழி நீயு, மளிமிகு மனையார் மாரனை யெரித்தார் யாரைநீ யெரித்தனையம்மா, விளிமிகு நாயேன் வினையினை யெரித்தா லிரும்புக ழவரினு நினைக்காங், களிமிகு மமரர் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 71 |
3088 |
நெடுவலி கொடுமா மேருவிற் பிடித்தாய் நீயஃ துணர்குவன் யானு, மடுதிறற் சூலி பிடித்தன னென்பா ரவனியுட் சிலர்கருத்தென்னோ, விடுகிடை நீயு மவனும்வே ரல்லீ ரென்பதை யுணர்ந்தனர் கொல்லோ, கடுவிழி மடவார் பயிறிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 72 |
3089 |
அம்பலத் தாட வெடுத்ததா டுணையென் றறைவனோர் கான்மலை யரையன், வம்பலர் முன்றிற் றிருமணத் தம்மி வைத்ததா டுணையென்ப னோர்காற், செம்பொரு டுணியா னென்றனை யிகழே றேர்ந்தொரு வழிநின்றே னன்னாய், கம்பலர்த் தடஞ்சூழ் தருதிருவானைக் காவகி லாண்டநா யகியே. | 73 |
3090 |
எதிரறு பொதுவிற் குறட்பிணர் வெரிந்மே லியைத்திடறகாதென வுணர்ந்து, முதிருணர் வுடைய பரன்மறைச் சிலம்பார் மொய்வலத் தாணிறீஇ யிடத்தா, ளதிர்வர வெடுத்தான் வழுதியவ் வருமை யறிதரான் பிழைத்தனன் பொறுத்தாய், கதிரருட் கழகே யதுதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 74 |
3091 |
பரவுவெண் ணாவ னீழலோ னிடத்தாள் பற்றிய வென்முனங் குறுக, வுரவுசெய் தண்ட தரனுள நடுங்கு முதைத்ததத் தாளெனவுன்னி, விரவுமப் பதநின் பதமன்றோ வதனை மென்பத மென்பதென் விளம்பாய், கரவுறாப் புலவர் புகழ்திரு வானைக்- காவகி லாண்டநா யகியே. | 75 |
3092 |
ஒருகருங் கேழ லுருவெடுத் திணையி லுன்பதி யடிமலர் காண்பான், பெருநில மகழ்ந்த மாயவ னினது பிறங்குபே ராலயஞ்சூழ்ந்த, பொருவினீ றிட்டான் மகிலடி கண்டாற் போதுமே புண்ணியக் கொழுந்தே, கருள்கடிந் தொளியின் மலிதிரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 76 |
3093 |
உயன்மறந் தடருந் திரிபுரஞ் சிதைப்பா னொருவரை யெளிதினிற் குழைத்த, பயன்மதி முடித்த பாடல்சால் பெருமான் பாழியந் தடநெடுந் தோள்கள், வியன்முலைக் கோட்டாற் குழைத்தருணினக்கு மெல்லிய லெனும்பெயர் தகுமோ, கயன்மலர்த் தடங்கள் மலிதிரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 77 |
3094 |
மையவாண் மகனெள் ளெச்சிலுண் டாற்கு மகிழ்ந்தருள் செய்துநின் கொழுநன், மெய்யவாஞ் சீர்த்தி படைத்தன னெனக்கு விரும்பிநீ யருளுவை யாயி, னையபெண் மகளெள் ளெச்சிலுண் டானுக் கருளினா ளெனும்புகழ் நினக்காங், கையர்வந் தணுகற் கருந்திரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 78 |
3095 |
புனல்பயி றவளை முழங்கநின் கொழுநன் புகழ்ப்பெயருரைத்ததா வுணர்ந்து, மினல்பயில் கனகம் வீசினா னொருவன் மெய்ம்மையே நின்பெயருரைக்கு, முனல்பயில் குழாம்பு கேன்றொழேன்புகழே னுவந்திடே னெங்ஙன முய்வேன், கனல்பயின் மணிமாமதிற்றிரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 79 |
3096 |
மாவியல் பெருமான் மான்பிறை சுமந்தேன் வாமபா கத் தினி தமரு, நீவிளை யாடற் கென்பனம் பற்க நிகழஃ திடைமருதூரின், மேவியோ ரரசில் விழுங்கிய தாதி வெறுப்பன மறைப்பதற்கென்று, காவியங் கண்ணா யுணர்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 80 |
3097 |
அண்டகோ டிகளென் றுரைத்திடுஞ் சிற்றி லமைத்தமைத் தாடிடு வாய்நீ, துண்டவாண் மதியஞ் சூடிய சடிலச் சுந்தரனழித்தழித் தாடும், பிண்டநூ லென்றும் பேதைநீ யனையான் பித்தனென் றுரைப்பது மெய்யே, கண்டவா மொழியார் பயிறிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 81 |
3098 |
மகளென நினைந்து தாயென விளித்த மலையிறை மனையறி யாமை, புகரறு பிரமன் முதற்பல வுயிர்க்கும் பொருந்துதா யாமுனைக் கணேச, னகநகு முருகக்கடவுடா யென்று நவிலறி யாமையை யேய்க்குங், ககனமே லோங்கு மதிற்றிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 82 |
3099 |
இலங்கற முப்பத் திரண்டென வகுத்தாங் கிகலற வவையெலாம் வளர்த்து, மலங்குயிர் பலவும் புரக்குநீ கொடியேன் மாட்டருள் புரியினஃ தவற்றுட், டுலங்குமொன் றோடுசே ராதுகொ றனிப்பிற் சொற்றிமுப் பத்துமூன் றென்றே, கலங்கலில் வளமை மலிதிருவானைக் காவகி லாண்டநா யகியே. | 83 |
3100 |
இளைத்தடைந் தேனை யாடியென் றுனையா னிரந்திரந் தேத்தநீ யிரங்கி, வளைத்தபே ரருளா லாளுவ தனிலு மன்றநீ யேயருள் புரிந்தான், முளைத்தசீர் பரவ விடமிலை கேட்டோ முகின்மழை வழங்கிடுந் தாயே, களைத்தடஞ் சிகரி சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 84 |
3101 |
பிழைபல வுடையே னாயினு மவற்றைப் பேதைநீ யென்பதற் கிணங்கக், குழைமனத் தகற்றி யாளவே வேண்டுங் கூர்ந்தினி தாண்டிடா யென்னின், மழைமலர்க் கூந்தற் கங்கையைப் புகழ்வேன் வைவரே நொந்தவர் தாயே, கழைமலி கழனி சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 85 |
3102 |
சடைமிசை மாதை நோக்கியா ரெனினீ சங்கர னீரென்பான் முகமு, னிடைதெரி தரலென் னென்னினோக் குறுநின் னெழின்முக முதனிழ லென்ப, னுடையநா யகிநீ மறுத்திடிற் பிறராலுணரென்பா னுணரவல் லவர்யார், கடையுற லொழிந்த வளத்திருவானைக் காவகி லாண்டநா யகியே. | 86 |
3103 |
எனக்கருள் செயினின் கொழுநனைப் புகழ்வே னிமயநின்றந்தையைப் புகழ்வேன், மனக்கினி தாநின் மைந்தரைப் புகழ்வேன் மலரினின் றோழியர்ப் புகழ்வே, னினக்கினி யவரா மடியரைப் புகழ்வே னின்னையும் புகழுவேன் றாயே, கனக்கடி மதில்சூழ் தருதிருவானைக் காவகி லாண்டநா யகியே. | 87 |
3104 |
பூவண நகரிற் பொன்னனை யாளிற் புகுந்தனன் முன்புகாமாரி, தூவண வன்பி னைந்திணை யெனிநூல் சொற்றதை விளக்கின னென்னின், மாவணத் தளிர்நேர் மேனியா யுலக மாதுகொ னீவிடை யிதற்கென், காவண நிறைவீ தித்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 88 |
3105 |
பேயொடு நடிக்கும் பித்தனே யென்றோ பெருங்கதி யிலியிவ னென்றோ, தாயொடு தந்தை யில்லவ னென்றோ தம்பிரா னொருதிருமேனி, நீயொரு பாதி நின்முனோர் பாதி நிலவுறக் கொண்டது நன்றே, காயொரு வாத்தென் பொலிதிரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 89 |
3106 |
மோகினி யுருக்கொண் டொருதரம் புணர்நின் முன்னவன் றனக்குமோர் பாதி, யேகலி லெழினின் றனக்குமோர் பாதியெம்பிரான் மேனியி லென்றா, லாகியநீயே யவனெனத் தெரிந்தே னல்லையென் றாற்பொறுப் பாயோ, காகனஞ் சுமக்கும் வளத்திரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 90 |
3107 |
பல்லுல கீன்ற நின்றிரு வுதரப் பாலுள தென்னுநின் னிடைநே, ரொல்லுமா றிலதா யினுமொரு பக்க மொத்தலிற் சிருட்டியை யாற்றும், வெல்லுநா யகன்கைத் துடியெனி னின்றன் மெல்வ யிற் றிற்கது புகழோ, கல்லுமா மலத்தர் சூழ்திரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 91 |
3108 |
வண்படு கருப்புச் சிலைகொடு நெடிய வலிபடு மேருவிற்கொண்ட, தண்படு மதியஞ் சூடியைப் பொருது சயம்படு நகைபுரிந்துவப்பா, யொண்படு வலர்க்குப் பசும்புல்வன் படையென் றுரைப்பதை விளக்கினை தாயே, கண்படு மனச்செய் சூழ்திரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 92 |
3109 |
தேவிநின் னிடைதோ ளொத்திடு குணத்தாற் சிதம்பர தலத்தும்வேய் வனத்து, மேவிய நகைமுத் தணிமுலை யொக்கும் விதத்தினாற் றிருமுல்லை வாயில், பாவிய கயிலை யிடத்தும்வீற் றிருப்பன் பரன்றலை மதியனே யன்றோ, காவியன் ககன முறுந்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 93 |
3110 |
சுவைபடு கனிசெய் பனசநெட் டரம்பை சூதமா மலகம்வெண் ணாவ, லிவைமுதற் பலவான்றருநிழ லுறைவா னினியநின் மொழிச்சுவை யவாவி, நவைபடு கொடிய வச்சிர வனமு நயந்தனன் பித்தனா தலினாற், கவைபடு சூலி யெழிற்றிரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 94 |
3111 |
இறையவன் வாமத் துறையுநீ தொழில்செ யுமையவர் தருப்பணங் காட்ட, மறைவின்மற் றதனை நோக்கியவ் விறைவன் வலப்புறத் தொருமடக் கொடிநன், குறைவதென் னெனமற் றவனொடு பிணங்கே லுற்றுநோக் கிடிற்பிழை யில்லான், கறைமலி களத்தன் வனத்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 95 |
3112 |
கொடியது பிறத்த லதனினு மம்ம கொடியதே யிறத்தலிவ் விரண்டுந், தடிதர நினைந்தேன் றந்தைதா யில்லான் றறுகண்வெங் கூற்றுதைத் தாற்குன், னடியனென் றுணர்த்தி யருள்விலக் குவையே லகிலமீ தொருகதி யுண்டோ, கடிமலர்த் தடங்கள் சூழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 96 |
3113 |
தடியுண லென்றும் வனசரர் பெருமான் றருதடி மிசைந்தன னொழிக, மிடியிடை யவர்மா லென்றுநிற் களித்தான் மேனியிற் பாதியா தலினாற், படிவிதி விலக்கி லான்பர னென்னைப் பற்றியா டற்கவை குறியான், கடிதரா துணர்த்து நீதிரு வானைக் காவகி லாண்டநாயகியே. | 97 |
3114 |
வரக்கருங் கொண்மூ மழைபொழி யாதேன் மண்பயிருயும்வகை யுண்டோ, திரக்கடுங் கவலை சிதைதரப் பல்காற் செய்யும் விண் ணப்பநீ யுணர்ந்து, மிரக்கமில் லவள்போ லிருத்தியேற் கருணை யெங்கினி யிருப்பது தாயே, கரக்கரும் வளங்கண் மலிதிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 98 |
3115 |
மாயவ னாயோர் பாதியில் லவளாய் மற்றொர்பா தியுங்கவர்ந் தனையா, னாயகன் மேனி யெனினவன் வடிவ நாடொறு மறைந்ததா யிருக்கச், சேயமண் சத்தி மயமெனா தந்தோ சிவமய மென்பதென் னுரையாய், காயமீ தெழுந்த மதிற்றிரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 99 |
3116 |
பனிபடு நின்றாட் பங்கயம் பொங்கு பனிவரை யகநக நிகழுந், துனிபடு பொழுது பரன்முடி மதியந் துண்ணெனத் தாக்குநீர் வாவி, நனிபடு முட்டாட் பங்கயம் பெறுமோ நவின்றன விணையிலென் றுணர்ந்தேன், கனிபடு பொழில்விண் கமழ்திரு வானைக் காவகி லாண்டநா யகியே. | 100 |
3117 |
ஞான கேத்திரத் தமரகி லாண்டநா யகித னீன மில்பதத் தியற்றமிழ் மாலையொன் றியற்றி மான மார்ந்தமீ னாட்சிசுந் தரநன்னா வலவ னூன மோவுறப் புனைந்தன னுலகுவப் புறவே. | 1 |
3118 |
அன்ன மாலையைச் சோமசுந் தரப்பெய ரமைந்த நன்னர் மேவிய சுகுணனச் சியற்றிநல் கென்று பன்ன நன்றென்று தியாகரா சப்பெயர் படைத்த மன்னு நாவலன் பதிப்பித்து வழங்கினன் மகிழ்ந்தே. | 2 |