ஆனைமங்கலச் செப்பேடுகள்

An2aimangkalac ceppETukaL
(Leiden Plates)


Acknowledgements:
Etext - preperation, Keying, Proof reading, *.doc and Web versions
in TSCII & Unicode

N D Loga Sundaram & his sister N D Rani-Chennai. / PDF version
Dr K Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents Etext in Tamil script in Unicode To view the Tamil text correctly you need Unicode compliant Tamil fonts installed on your computer & the browser set to display webpages with "UTF-8" charset

© Project Madurai 1998 - 2009

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to praperation of electronic texts of tamil litrary works and and to distribute them free on the intrernet You are welcome to freely distribute this file, provided this header page is kept intact


ஆனைமங்கலச் செப்பேடுகள்

1 'லீய்டன் பெரிய செப்பேடு'

மாமன்னன் முதலாம் இராஜராஜன் (985-1014)
வழங்கிய ஓர் அறத்தினை
அவன் மகன் இராஜேந்திரன் (1012-1044)
தாமிரசாசனம் செய்ததை விளக்குவது

2 'லீய்டன் சிறிய செப்பேடு'

முதலாம் குலோத்துங்கன் (1070-1120)
அவ்வறத்தையே மீண்டும் உறுதி செய்து
மேலும் பிறவும் அளித்ததை விளக்குவது

1 லீய்டன் பெரிய செப்பேடு - நாகப்பட்டினத்தில், முதலாம் இராஜராஜன், தன்ஆட்சிக்கு உட்பட்ட, கடல்கடந்த தூர கிழக்கு நாடான, ஸ்ரீவிஜய நாட்டுத் தலைவனும், [இன்றைய சுமத்திரா-ஜாவா, Keddah] கிடாரத்தை ஆளும் சைலேந்திரகுல அரையனான மாற விஜயதுங்க வர்மன், தன் தந்தையின் பெயரால் எடுப்பிக்கின்ற, சூடாமணிபன்ம விகாரம் என்னும் பௌத்தர் வழிபாட்டுத் தலத்திற்கு, வேண்டும் நிவந்தங்களுக்கு க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டு ஆனைமங்கலம் எனும் ஊரில் நிலம் தொண்ணூற்றேழே இரண்டுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் மூன்றுமா முக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டு மாவினால் இறைகட்டின காணிக்கடன் நெல், எண்ணா யிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பது முக்கலனே இருதூணிக்குறுணி ஒருநாழியும், தன் ஆட்சியின் ஆண்டு 21 வது, நாள் தொண்ணூற்று ஆறில் தலைநகர் தஞ்சையில் இருந்த புரம்படிமாளிகை 'ராஜஸ்ரயன்' தெற்குமண்டபத்தில் எழுந்தருளி இருந்தவாறு, பள்ளிச்சந்த இறையிலியாக வரியிலிட்டுக் கொடுத்த தானம்அளி ஆணையை விவரிக்கும் ஆவணமாகும் ஆணைநிறைவேற 2 ஆண்டுகளும் 18 நாட்களும் கடந்தன இவ்வாணை அவன்மகன் இரோஜேந்திர சோழன் காலத்தில் தாமிரசாசனமும் செய்யப்பட்டுள்ளது.

2 லீய்டன் சிறிய செப்பேடு - முதலாம் குலோத்துங்க சோழன், மேற்கண்ட பௌத்தபள்ளிக்கு அளிக்கப்பட்ட தானத்தை அவன்காலத்தில் உறுதிசெய்யவும் மேலும் விரிவாக்கிய தானத்தை அளிக்கவும் அக்காலத்திருந்த மேற்படி கிடாரத்தரையனின் தூதன் ராஜவித்யாதர ஸ்ரீசாமந்தனும் அபிமானதுங்க ஸ்ரீசாமந்தனும் விண்ணப்பித்தபடி, மன்னன் தன் இருபதாவது ஆண்டில் தன் ஆயிரத்தளியான ஆகவமல்ல குலகாலபுரத்து கோயில் (அரசன் இல்லம்) உள்ளால் திருமஞ்சன சாலையில் பள்ளிபீடம் 'காலிங்கராய'னில் எழுந்தருளி இருந்தபோது சோழகுலவல்லி பட்டி னத்து (நாகப்பட்டினம்) இராஜராஜ பெரும்பள்ளி (மேற்படி விகாரம்) மற்றும் இராஜேந்திர பெரும் பள்ளிக்கு (இவர் காலத்து இராஜேந்திர சோழன் பெயரிலும் வேறு விரிவுற்றது போலும்) அளித்திட்டதை விவரிக்கும் ஆவணமாகும்.

தற்காலம் ஐரோப்பாவில் லீய்டன் (deg.52-10' N; 4-30' E - நெதர்லாந்து) நகரத்து காப்பகத்தில் இருப்பதால் இவை 'லீய்டன் செப்பேடுகள்' என குறிக்கப்படுகின்றன. முதல்ஆவணம், செப்பேடுகள் வழங்கும் அக்கால மரபிலேயே இருமொழிப்பகுதிகளாக உள்ளன முதல்வரும் வடமொழி பகுதியின் தமிழாக்கம் பாடல் பாடலாகவும் அடுத்து வரும் தமிழ் பகுதி செப்பேட்டில் [16 ஏடுகள்] உள்ளவாறே ஏடு-ஏடாக பக்கம்-பக்கமாக வரி-வரிகளாக எழுத்துக்களைப் பொறிக்கும் காலத்தில் வந்த சிறுபிழைகளுடனேயே கீழ்கண்ட பதிப்பில் கண்டபடி தரப்படுகின்றன இம்மன்னனின் தமிழ் மெய்க்கீர்த்தி 55 வது வரியிலிருந்து 62 வது வரிவரை இடையே வைக்கப்பட்டுள்ளளமை காண்க இரண்டா வதான குலோத்துங்கசோழன் ஆவணம் வடமொழிப்பகுதி இன்றி மன்னனின் தமிழ் மெய்க்கீர்த்தியுடனே தொடங்கி மூன்று ஏடுகளில் காணப்படுகின்றது.

இச்செப்பேடுகளின் நகல்கள்
பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் 'பௌத்தமும் தமிழும்' (1957)
மூன்றாம் பதிப்பினில் புதிதாக சேர்ந்த பிற்சேர்க்கையாக காண்பன அறிஞரும்
Epigraphica Indica Volume XXII பக்கங்கள் 213 >> 266 மற்றும்
Epigraphica Indica Volume XXII பக்கங்கள் 267 >> 281 களினின்று படைத்துள்ளார்

இ·து ஓர்தானத்தை விவரிப்பதாயினும் தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் எனக் கருதப்படும் இடைக்கால சோழ மன்னர்தம் ஆட்சியில் எத்துணை முன்னேற்றம் அடைந்திருந்த ஆளுமை நடைபெற்றது என்நன்கறிய உதவும் ஆவணமும் ஆகத்திகழ்கின்றது ஓர்அரசாணை எவ்வாறு வழங்கப்பட்டது, ஆட்சியில் உள்ள நாட்டினை ஆளுமைக் காக எத்தனைவிதமாக பகுத்தனர், எத்தனை நிலையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டனர், ஆணைகள் எத்துணை சீர்மையுடைய நடையில் எழுதப்பட்டன, அவை எவ்வெவ்வழியில் நிறைவேற்றப் பட்டன, சிற்றுர் அளவிலும் எத்தகைய நுண்ணிய குறிப்புகள் கையாளப்பட்டன, மன்னனும் எவ்வாறுதன் குடிகளையும், தன் ஆணையின் கீழ்வரும் குறுநில மன்னர்களையும், மற்றும் பல்வேறு சமயநெறிகளையும் சீர்மிக போற்றினான் எனவும் காணக்கிடைக்கின்றன.

நூ.த.லோகசுந்தரமுதலி

ஆனைமங்கலச் செப்பேடுகள் (1)
(லீய்டன்-பெரியது)

முலம்
(வடமொழியில் உள்ளதின் தமிழ் மொழிபெயர்ப்பு)

1 ஸ்வஸ்திஸ்ரீ திருமகளின், காஸ்மீரத்தைலம் பூசப்பெற்ற கொங்கைச்சுவடுகள் பொருந்திய மார்பும், சுழலுகின்ற உயர்ந்த மந்தரமலையுடன் உராயும் பொழுது மின்னுகின்ற பொன்னா லான, தோள்வளைகளையும், ஒளியினால் மின்னுகின்ற சார்ங்கம் முதலிய படைகளை ஏந்திய திருக்கைகளையும், நீலமேனியையும் உடைய மூன்று உலகங்களையும் காத்தருளுகிற, திருமால் மேன்மேலும் செல்வத்தை அருள்வானாக.

2 இளம்பிறை சூடிய சிவபெருமான் பெருமாட்டியுடன் கயிலாய மலையில் விளையாடிக் கொண்டிருக்கிற காலம் வரையிலும் திருமால் பாற்கடலிலே அரவணையிலே அறிதுயில் கொண்டிருக்கிற காலம் வரையிலும் உலகங்களுக்கெல்லாம் ஒரே ஒளியாக உள்ள பகலவன் உலகத்தில் இருளை ஓட்டிக் கொண்டிருக்கிற காலம் வரையிலும் சோழர் பரம்பரை துன்பங் களை நீக்கி உலகத்தைக் காத்தருள்வதாக.

3 உலகத்தின் ஒரே கண்ணாக விளங்கும் சூரியனிடமிருந்து அரசர்களில் முதல்வனாகிய மனு பிறந்தான் அதன்பிறகு அவன்மகன் அரசர்களின் மணிமுடிகள் தீண்டப்பட்ட கால்களை உடைய இக்ஷ¤வாகு பிறந்தான் அவன்குடியில் நற்குணங்களுக்கு உறைவிடமானவனும் பிரமனுக்கு நிகரானவனும் லோகாலோக மலை வரையில் உலகத்தை நீதியோடு அரசாண்ட மாந்தாத்தரி பிறந்தான்

4 அவன்மகன் வீரனான முசுகுந்தனாவான் அவனுக்கு அரசகுலத்தின் சூடாமணி போன்ற வளபன் பிறந்தான் அவன் குலத்திலே உலக முழுவதும் சிபி என்று புகழ் பெற்றவனும் மன்னர்களால் வணங்கப்பட்ட பாதங்களை உடையவனும் ஆன புகழ்வாய்ந்த அரசன் பிறந்தான்.

5 தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக வாழ்ந்த, நிறைந்த அறிவுள்ள அந்த அரசனுடைய குணங்களை கவிகளில் சிறந்த வியாசன் அல்லாமல் வேறுயார் கூறமுடியும்.

6 இந்தக் குலமாகிய கடலுக்கு முழுநிலா போன்றவனும் பதினாறு கலைகளோடு கூடிய முழுநிலாவைப் போல எல்லாக்கலைகளுக்கும் உறைவிடமானவனும் ஆன சோழன் என்பவன் பிறந்தான் இவனுக்குப் பின் இவன் குலத்திலே பிறந்தவர்கள் எல்லோரும் இவனுடைய சோழன் பெயரையே சூடிக்கொண்டார்கள்.

7 அதன்பிறகு எல்லாப் பகைவரையும் வென்ற ராஜகேசரி என்பவனும் அவனுக்குப் பிறகு பகை மன்னரின் நகரங்களை அழிப்பதில் ஊக்கமுள்ள பரகேசரி என்பவனும் பிறந்தார்கள்.

8 ராஜகேசரி பரகேசரி என்னும் பெயர்கள் இந்த அரசகுலத்தில் பிறந்தவர்களுக்கு மாறி மாறிச் சூடப்பட்டன.

9 இந்தக் குலத்திலே அரசர்க்கரசனும் பகைவர்கள் எல்லோரையும் வென்றவனும் சூரிய குலத்தின் கொடி போன்றவனும் வெல்ல முடியாத காலனையும் போரிலே வென்று பெறமுடியாத காலகாலன் எனும் பெயரைப் பெற்றவனுமாகிய சுரகுரு பிறந்தான்.

10 இவனுடைய குலத்திலே பகை மன்னராகிய யானைகளுக்கு சிங்கம் போன்றவனாகிய புலிக்கொடியோன் (வியாக்கிரகேது) பிறந்தான் இக்குலத்தில் வல்லமை உடைய மன்னன் இரவலர்க்கு கற்பகமரம் போன்ற பஞ்சபன் பிறந்தான்.

11 பகை மன்னர்களுக்குக் காலனைப்போன்ற கரிகாலன் என்னும் அரசன் இக்குலத்திலே பிறந்தான் இவன் காவேரி ஆற்றிற்கு கரைகளைக் கட்டினான்.

12 இந்தக் குலத்திலே நிலைபெற்ற புகழ் படைத்த கோச்செங்கணான் என்னும் அரசன் பிறந்தான் இவன் சிவபெருமானின் பாத தாமரையின் (தேனையுண்ணும்) வண்டு போன்றவன். இவன் குலத்திலே கோக்கிள்ளி என்னும் அரசன் நல்லறிவுள்ளவன், திருவின் செல்வன், மணிமுடி தரித்த மன்னர்களால் வணங்கப் பெற்ற பாதங்களை உடையவன், பிறந்தான்.

13 இந்தக் குலத்திலே மிக்க ஆற்றல் வாய்ந்த, வெற்றியுள்ள, விஜயாலயன் தோன்றினான். இவன் நிலஉலகம் முழுவதையும் வென்றான் இவனுடைய தாமரைபோன்ற பாதங்கள் இவனை வணங்கும் மன்னர்களின் முடியில் உள்ள மணிகளின் ஒளியினால் விளக்கம் அடைந்தன.

14 இந்த மலைபோன்ற அரசனிடமிருந்து சூரியன் போன்ற ஒளிமிக்க ஆதித்தியன் தோன் றினான் இவன் வெயில் போன்ற பேராற்றலினால் பகைவராகிய இருட்கூட்டத்தை அழித்தான்.

15 கணக்கற்ற மணிக் குவியல்களையும் ஏராளமான ஆற்றலை உடைய இவனிடமிருந்து பராந்தகன் எனும் அரசன் பிறந்தான் இவன் கணக்கற்ற மணிகளையும் மீன்களையும் உடைய பாற்கடலிலே வெண்ணிலா தோன்றியது போல முழுச்சிறப்புடன் உலகத்திற்கு நன்மை செய்யத் தோன்றினான்.

16 இவன் சக்ரவாளமலை வரையில் உள்ள உலகத்தை வென்று கலி என்னும் இருளை, ஓட்டி எல்லா உலகத்தையும் அமைதி நிலவ அரசாண்டு, வெண்மேகம் போன்ற தன் புகழை திசை எங்கும் பரப்பினான்.

17 சூரிய குலத்தின் கொடி போன்ற இவன் தன்னுடைய ஆற்றலினாலே எல்லா இடங் களையும் வென்று அவ்விடங்களிலிருந்து கொண்டு வந்த தூய பொன்னினாலே புலியூரில் சிவபெருமானுடைய விமானத்தை வேய்ந்தான்.

18 அரசர்கள் முடிதாழ்த்தி வணங்கப்பட்ட அடிகளை உடைய இந்த அரசனுக்கு இந்திரன் போன்ற செல்வமும் முத்தீ போன்ற ஒளியும் படைத்த மூன்று மக்கள் தோன்றினர் அவர்கள் இராஜாதித்தியனும் பேர் போன கண்டராதித்தயனும் ஆற்றல் வாய்ந்த அரிஞ்சயனும் ஆவர். இவர்கள் பெயர் மூ உலகத்திலும் புகழ் பெற்றவை.

19 பராந்தகன் தன்பகைவரின் சேனைகளை வென்று புகழ்கொண்டு அறநெறியில் நடந்து நீர்சூழ்ந்த நில உலகத்தைக் காத்து விண்ணுலகம் சென்ற பின்னர் அவன் மகன் இராஜாதித்தியன் ஆற்றல் வாய்ந்தவன், அரசர்களின் முடிகளால் தேயப்பெற்ற பாதங்களை உடையவன் அரசாண்டான்.

20 சூரிய குலத்தின் அணியாகிய அந்த வீரனான இராஜாதித்தியன், சிறந்ததோர் யானையின் மேல் அமர்ந்து தன் கூரிய அம்புகளை திசை எங்கும் எய்து, அஞ்சாத கிருஷ்ணராஜனையும் போர்க்களத்திலே அவன் சேனைகளுடன் கலங்கச்செய்து, அம்புகளால் மார்பு பிளக்கப்பட்டு, வானவூர்தி ஏறி மூவுலகும் புகழ வீரசுவர்க்கம் சென்றான்.

21 வீரம் மிக்க இராஜாதித்தியன் தாமரை போன்ற முகமுள்ள தெய்வ மகளிர்க்கு இன்பம்தரச் சென்றபிறகு அவனது ஆற்றலும் புகழும்வாய்ந்த தம்பி கண்டராதித்தியன் பகை என்னும் காரிருளை ஓட்டி உலகத்தை அரசாண்டான்.

22 மதுராந்தகன் என்னும் மகனைப் பெற்றுக் காவேரி ஆற்றின் கரைமேல் தன் பெயரினால் ஓர்ஊரை உண்டாக்கி கண்டராதித்தியன் விண்ணுலகம் சென்றான்.

23.அவன் விண்ணுலகம் சென்ற பிறகு பகை மன்னராகிய காட்டுக்குப் பெருந்தீ போன்ற வீரனாகிய அரிஞ்சயன் உலகத்தை அரசாண்டான்.

24.அரிஞ்சயனுக்குப் பராந்தகன் பிறந்தான் இவன் வீரத்தில் முப்புரம் எரித்தவனுக்கு நிகரானவன் பகைக் கூட்டங்களை அழித்தவன் தன் நல்ல குணங்களாலே குடிமக்களை மகிழ்வித்து நில உலகத்தை அமைதி நிலவ அரசாண்டான்.

25 இவன் சேவூரிலே கூர்மையான அம்புகளைத் தன்அழகான வில்லிலிருந்து திசைஎங்கும் எய்தும் கூர்மையான வாளை வீசியும் பகை மன்னருடைய மலை போன்ற யானைகளிலிருந்து இரத்த ஆறுகளைப் பாயச் செய்தான்.

26 இந்த அரசன் ஆதித்தியன் என்றும் கரிகாலன் என்னும் பெயருள்ள மகனையும் சூரிய குலத்தின் சூடாமணி போன்ற இராஜராஜன் என்னும் மகனையும் பெற்றான்.

27 பராந்தகன் தேவலோகத்தை ஆளச்சென்ற பிறகு ஆதித்தியன் உலகத்தை அரசாண்டான்.

28 இளைஞனான ஆதித்தியன் மனுகுலத்தின் ஒளி போன்றவன் மதங்கொண்ட யானைகளோடு சிங்கக் குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியனுடன் இவன் போர் செய்தான்.

29 இவ்வரசர் தலைவன் விண்ணுலகஞ் சென்றபிறகு கண்டராதித்தியனின் மகன் மகேந்திரன் போல் வல்லமை மிக்க மதுராந்தகன் உலகத்தை அரசாண்டான்.

30 இந்த அரசன் தேவர் உலகத்தை அரசாளச் சென்றபிறகு வீரம்மிக்க சோழர் குலத்தின் விளக்கு போன்றவன் தன்னை வணங்கும் அரசர்களின் மணிமுடிகளால் தேயப் பெற்ற கால்களை உடைய இராஜராஜன் ஆதிசேஷனை விட ஒளி உள்ள தோளின் மேல் ஆட்சிப் பொருப்பைத் தாங்கி உலகத்தை அரசாண்டான்.

31 இவ்வரசன் பாண்டிய, துளுவ, கேரள நாடுகளையும் சிம்மளேந்திரன், சத்தியாஸ்ரன் முதலி யவர்களையும் தன் ஆற்றலினால் வென்று அவர்களுடைய யானைகளையும் குதிரைகளையும் மணிகளையும் அரசுகளையும் கைக்கொண்டு தன் புகழினால் பத்துத் திசைகளையும் விளங்கச் செய்தான்.

32 நாடுகளை எல்லாம் வென்று அரசர்களைத் தனக்கு கீழடக்கியபிறகு மன்னர்மன்னனாகிய இராஜராஜன் விண்ணுலகத்தில் இந்திரன் போன்று வீற்றிருந்தான்.

33 சூரியன் தோன்றுகின்ற உதயகிரி வரையிலும் தென்கடல் வரையிலும் அஷ்டமலை வரையிலும் சிவபெருமான் இருக்கிற இமயமலை வரையிலும் உள்ள தமது குடும்பத்தைக் காப்பாற்ற விரும்புகிற அரசர்கள் எல்லா இன்பங்களையும் துய்ப்பதற்காக நித்திய விநோதனுடைய தாமரை போன்ற பாதங்களை அடைக் கலம் புகுந்தனர்.

34 ஆற்றலுடையவனாயும் புகலிடமாயும் இருப்பதனாலே அவன் பாதங்களை அரசர்களும் உலகிலுள்ள நல்லவர்களும் அவ்வரசனை வரம் பெற்ற கொடை வள்ளல் ராஜாஸ்ரியன் என்று கூறுகிறார்கள்.

வரிகள் 73 முதல் 86 வரை பல நூல்களாகிய கடலின் கரைகண்டவனும் அரசர்களின் மணிமுடிகளிலிருந்து வீசும் ஒளியினாலேயே பொன்போல் விளங்கும் கால்மணை உடையவனும் ஆன இந்த அரசன் இராஜசேரிவர்மன் இராஜராஜன் தனது 21 ஆவது ஆண்டில் இதனை வழங்கினான்.

தன்னுடைய அறிவின் மேன்மையினாலேயே தேவகுருவை வென்றவனும் கற்றறிந்தார் என்னும் தாமரைக் காட்டிற்கு ஓர் சூரியன் போன்றவனும் இரவலர்களுக்கு கற்பகமரம் போன்றவனும் சைலேந்திர குலத்தில் பிறந்தவனும் ஸ்ரீவிஜயநாட்டின் தலைவனும் கடாஹாதேசத்தை ஆட்சி செய்பவனும் மகரமுத்திரை உடையவனும், அரசதந்திரம் எல்லாம்அறிந்த, சூளாமணிவர்மனின் குமாரனும்ஆன, புகழ்பெற்ற மாற விஜயயோத்துங்க வர்மன் என்னும்அரசன்,கோயில்களாலும் சத்திரங்களாலும் தண்ணீர்ப் பந்தல்களாலும் பூங்காவனங்களினாலும் மாளிகைகளினாலும் மகிழ்ச்சிக்குரியதாக விளங்கும் க்ஷத்திரியசிகாமணிவளநாட்டில், பட்டினக்கூற்றத்தில் உள்ள, உலகத்துக்குத் திலகம் போன்ற நாகப்பட்டினத்திலே, தன்உயரத்தினாலே கனககிரியையும் சிறிதாகச் செய்து, தன் அழகினால் வியப்படையச் செய்கிற, சூடாமணி விகாரை என்று,தன் தகப்பனார் பெயரால் அமைத்த, புத்தர் பெருமான் கோயிலுக்கு, [இராஜராஜன்] வழங்கினான். மேற்கூறிய நாட்டில் பட்டினக் கூற்றத்தில் பிடிசூழ்ந்து பிடாகை நடத்தி எல்லை அமைத்து யானைமங்கலம் என்னும் ஊரைத் தானமாக [இராஜராஜன்]வழங்கினான்.

35-36 ஆற்றல் வாய்ந்த அந்த அரசன் [இராஜராஜன்] தெய்வமான பிறகு அவனுடைய அறிவு வாய்ந்த மகன் மதுராந்தகன் சிம்மாசனம் ஏறித் தன் தந்தையாகிய சக்கரவர்த்தியினால் தானமாக வழங்கப்பட்ட ஊரை சாசனம் செய்து கொடுத்தான்

37 ஆதிசேஷன் இந்த உலகத்தைத் தாங்குகிற வரையிலும் இந்த விகாரைக்குக் கொடுக்கப் பட்ட இந்த தானம் நிலைபெறுவதாக.

38 நல்லொழுக்கத்திற்கு உறைவிடமான மிக்க ஆற்றல் வாய்ந்த இந்தக் கடாகதேசத்து அரசன் அதிர் காலத்து அரசர்களை இவ்வாறு வேண்டிக் கொள்கிறான் இந்த என்னுடைய அறச்செயலை எக்காலத்திலும் காத்தருளுங்கள்.

39 உலகத்தில் புகழ்பெற்ற கொட்டையூரில் உள்ள நல்லொழுக்கமுடைய குற்றமற்ற வசிஷ்ட குலத்தில் பிறந்த அறிஞர்களைப் பின்பற்றுகிற அநந்த நாராயணன் என்னும் பிராமணன் இந்தப் பிரகஸ்தியைப் பாடினான்.

40-42 நீதியோடு அரசாண்ட பகையரசர்களை வென்று ஆற்றல் வாய்ந்த அரசனுடைய உத்தியோகஸ்தனான காஞ்சிவாயில் என்னும் ஊரில் பிறந்தவன் இராஜராஜ மூவேந்த வேளான் என்னும் பெயர் படைத்த தில்லையாளி என்பவன் அரசன் ஆணைப்படி இந்தச் சாசனத்தை நன்றாக எழுதினான்.

43-44 கடாக தேசத்து அரசன் ஆணைப்படி ஸ்ரீமான் அடிகள் மகனான அடக்கமும் அறிவும் உள்ள துவவூரவான் அணுக்கன் என்பவன் இந்தச் சாசனத்தை எழுதச் செய்தான்.

45-48 ஹோவ்ய மரபின் திலகம் போன்று காஞ்சிபுரத்திலே பிறந்து எழுதுவதில் சித்திரகுப்த னுடன் போட்டி போடுகின்றவனான மிக்க அறிவு வாய்ந்து கிருஷ்ணனுக்குப் பிறந்து கிருஷ்ண (கரிய)ஒழுக்கமி இல்லத இராஜராஜ மகாசார்யன் என்னும் வாசுதேவனும் கிருஷ்ணனுடைய இரண்டுமக்களான கிருஷ்ணனுடைய திருவடித்தாமரையை மொய்க்கின்ற வண்டுகள் போன்ற ஸ்ரீரங்கனும் தாமோதரனும் வாசுதேவனின் மகனான தாமரை போன்ற கண்களை உடைய கிருஷ்ணனும் ஆராவமுதன் மகனான பேச்சுவன்மையுள்ள புருஷோத்தமனும் ஆகிய இவ்வை வரும் இந்தச் செப்பேட்டை எழுதினார்கள்.

வரி #
108 இந்தச் சாசனம் வெட்டினோம் ஜயங்கொண்ட சோ
109 ழ மண்டலத்து ஸ்ரீகாஞ்சிபுரத்து ஓவியச் சித்ரகாரி கிருஷ்ணன் வாசுதேவனான ராஜராஜப்பே
110 ராசார்யனேம் கிருஷ்ணன்திருவரங்கனும் கிருஷ்ணன்தாமோதரனும் வாசுதேவன்கிருஷ்ணனும்
111 ஆரவாமிர்து புருஷோத்தமன்னும்

தமிழ்ப்பகுதி
(16 ஏடுகள்: ஏடு-ஏடு, பக்கம்-பக்கம், வரி-வரியாக செப்பேட்டில் காண்பதுபோல்)

ஏடு-1 பக்கம்-1
001 ஸ்வஸ்தி ஸ்ரீ கோனேரின்மை கொண்டான் க்ஷத்ரிய சிஹாமணி வளநாட்டு
002 ப்பட்டனக் கூற்றத்து நாட்டார்க்கும் பிரமதேய கிழவர்க்கும் தேவதானப் பள்ளி
003 ச்சந்தக்கணி முற்றூட்டு வெட்டப் பெற்றூர்களிலார்க்கும் நகரங்களி லார்க்கும்
004 நமக்கு யாண்டு இருபத்தொன்றாவது நாள் தொண்ணூற்றிரண்டினால்
005 தஞ்சாவூர்ப் புரம்படி மாளிகை ராஜஸ்ரயனில் தெற்கில் மண்டபத்
006 து நாம் இருக்கக் கிடாரத்தரையன் சூளாமணிமன்னன் க்ஷத்ரிய சிஹா
007 மணிவளநாட்டுப் பட்டநக் கூற்றத்து நாகப்பட்டினத்து எடுப்பிக்கின்ற சூளா
008 மணிபன்ம விஹாரத்துப் பள்ளிக்கு வேண்டும் நிவந்தத்துக்கு க்ஷத்ரிய சிஹாமணி வ
009 ளநாட்டுப் பட்டநக் கூற்றத்து ஆனைமங்கலம் பள்ளிச்சந்தம் இறங்கலுள்பட அள
010 ந்தபடி நீங்கல்நீங்கி நிலன்தொண்ணூற்றேழே யிரண்டுமா முக்காணியரைக்கா

ஏடு-1 பக்கம்-2
011 ணிமுந்திரிக்கீழ் மூன்றுமா முக்காணி முந்திரிகைக் கீழ் அரையே யிரண்
012 டுமாவினால் இறைகட்டின காணிக்கடன் நெல்லு எண்ணாயிரத்துத் தொள்ளாயி
013 ரத்து நாற்பது முக்கலனே இருதூணிக் குறுணி ஒருநாழியும் கடாரத் தரையன்
014 க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நாகப்பட்டனத் தெடுப்பி
015 க்கின்ற சூளாமணிபன்ம விஹாரத்துப் பள்ளிக்கு இருப்பதாக யாண்டு இருபத்
016 தொன்றவது முதல் பள்ளிச் சந்த இறையிலியாக வரiயிலிட்டுக் குடுக்க
017 வென்று நாம் சொல்ல நம் ஓலை எழுதும் நிக்கந்தவிநோத வளநாட்டு ஆ
018 வூர்க் கூற்றத்து விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தகாரன் எழத்தினாலும் நம்ஓ
019 லைநாயகன் உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தகச்சதுர்வே
020 திமங்கலத்து கிருஷ்ணன் இராமனான மும்மடிசோழ பிரஹ்மராயனும் நித்த

ஏடு-2 பக்கம்-1
021 வினோத வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்து அரைசூருடையான் ஈராயிரவன் பல்ல
022 வயனான மும்மடி சோழபோசனும் அருமொழி தேவ வளநாட்டு நென்மலி நாட்டுப் பரு
023 த்திக்குடையான் வேளான் உத்தமசோழனான மதுராந்தக மூவேந்த வேளானும்
024 ஒப்பினாலும் புக்க நந்தீட்டினபடியே வரியிலிட்டுக் கொள்க என்று
025 நம்கருமமாராயும் ஆரூரன் அரவணையானான பராக்கிரம சோழ மூவே
026 ந்த வேளானும் தத்தன் சேந்தனான செம்பியன் மூவேந்த வேளானு
027 ம் அருங்குன்றமுடையான் மாப்பேறன பொற்காரியும் நடுவிருக்கும் புள்ள
028 மங்கலத்துப் பரமேஸ்வரபட்ட சர்வ்வகிரதுயாஜியும் கடலங்குடி தாமோதர பட்டனு
029 ம் நம் கருமமாராயும் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுத் திருநரையூர் நாட்டுக் கற்குடை
030 யான் பிசங்கன் பாளூரான மீனவன் மூவேந்த வேளானும் அருமொழிதேவ வளநாட்டு

ஏடு-2 பக்கம்-2
031 ப் புரங்கரம்பை நாட்டு வங்கநகருடையான் சங்கரநாராயண அரங்கனும் நடுவி
032 ருக்கும் வெண்ணெய் நல்லூர் தம்மடி பட்டனும் பசலை தியம்பக பட்டனும் சொ
033 ல்லப் புரவுவரி கிளிநல்லூர் கிழவன் கொற்றன் பொற்காரியும் கழுமலமுடை
034 யான் சூற்றியான் தேவடியும் பழுவூருடையான் தேவன் சாத்தனும்
035 கள்ளிக்குடையான் அணையன் தளிக்குளவனும் வரிப்பொத்தகம் சா
036 த்தனூருடையான் குமரன் அரங்கனும் பருத்தியூர் கிழவன் சி·கன் வெ
037 ண்காடனும் இருந்து யாண்டு இருபத்தொன்றாவது நாள் தொண்ணூற்றா
038 றினால் பள்ளிச்சந்தம் இறையிலியாக வரியிலிட்டுக் குடுத்த தங்கானாட்டு பட்டன
039 க்கூற்றத்து ஆனைமங்கலம் அளந்தபடி நீங்கல் நீக்கி நிலன் தொண்ணூற்றே
040 ழேயிரண்டு மாக்காணி யரைக்காணி முந்திரிகைக் கீழ் மூன்றுமா முக்காணி
041 முந்திரிகை கீழரையே யிரண்டுமாவும் பிடிசூழ்ந்துபிடாகைநடப்பிப்பதாக கண்காணி நடு

ஏடு-3 பக்கம்-1
042 விருக்கும் வெண்ணெய்நல்லூர்த் தம்மடி பட்டனையும் பட்டன் க்ஷத்திரிய சிஹாமணிவ
043 ள நாட்டுத் திருநறையூர் நாட்டு ஸ்ரீதுங்கமங்கலமான அபிமான பூஷணச் சதுர்வே
044 திமங்கலத்து தூற்பில் ஸ்ரீதர பட்டனையும் இந்நாட்டு வேளநாட்டுத் திருநல்லூ
045 ர் பார்க்குளத்துப் பத்மநாப பட்டனையும் இவ்வூர் பேரேம புரத்து வெண்ணய
046 பட்டனையும் ராஜேந்திர சிம்ம வளநாட்டுகாரநாட்டுத் தனியூர் ஸ்ரீ வீரநாராய
047 ணச் சதுர்வேதி மங்கலத்து துவேதை கோமபுரத்து நந்தீஸ்வர பட்டனையும் புரவுவ
048 ரி கள்ளிக்குடையான் அணையன் தளிகுளவனையும் பேர்தந்தோன் தா
049 ங்களும் இவர்களோடு நின்று எல்லை தெரித்துப் பிடிசூழ்ந்து பிடாகைநடந்து கல்லு
050 ங் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து போத்தகலென்னும் வாசகத்தால் மந்திர
051 வோலை விளத்தூர்கிழவன் அமுதன்தீர்த்தகரன் எழுத்தினாலும் மந்திரவோலை நா

ஏடு-3 பக்கம்-2
052 யகன் கிருஷ்ணன் இராமனான மும்மடிசோழ பிரஹ்மராயனும் அரைசூருடையான் ஈ
053 ராயிரவன் பல்லவயனான மும்மடிசோழபோசனும் பருத்திக்குடையான்
054 வேளான் உத்தமச்சோழனான மதுராந்தக மூவேந்த வேளா
055 னும் ஒப்பினாலும் (மெய்கீர்த்தி) திருமகள் போலப் பெருநிலச் செல்வியு
056 ந் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்
057 ச்சாலை கலமறுத்தருளி வேங்கைநாடும் கங்கபாடியும் நு
058 ளம்ப பாடியுந் தடிகை பாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங்கலி
059 ங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமுந் திண்திறல் வென்றித் தண்
060 டாற்கொண்டு தன்னெழில் வளர் ஊழியூளெல்லா யாண்டுந் தொ
061 ழுதகை விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோவி

ஏடு-4 பக்கம்-1
062 ராஜராஜகேசரி வர்ம்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்றாவது நாட்டோ
063 முக்குத்திருமுகம்வர நாட்டோமுந் திருமுகங்கொண்டு எதிரெழுந்து சென்று தொழுதுவா
064 ங்கி தலைமேல் வைத்துப்பிடி சூழ்ந்து பிடாகை நடந்து எல்லைதீர்த்து கல்லு
065 ங் கள்ளியும் நாட்டி அறவோலை செய்தநிலத்துக்குக் கீழ்பாலெல்லை க்ஷத்ரி
066 ய சிஹாமணி வளநாட்டுப் பட்டினக் கூற்றத்துக் கோவூர் மேலெல்லை
067 கோவூர்த்தச்ச னிலத்துக்கும் கோவூர் காவிதியோடைக்கும் மேற்குந்
068 தெற்கின்னும் இவ்வூர்ப் புகையுண்ணி யென்னும் நிலத்துக்கு மே
069 ற்கும் தெற்கின்னும் இவ்வெல்லையே கிழக்கு நோக்கிப்போய் இன்னிலத்
070 துக்கு தெற்கின்னும் புகையுண்ணி யென்னும் நிலத்துக்கு மேற்கும் தெ
071 ற்கின்னும் மேற்கின்னும் புகையுண்ணிக்குப்பாயும் வாய்காலுக்காலின்மேலைய

ஏடு-4 பக்கம்-2
072 ரைக்காலில் நாற்றுக்காலாக அட்டிக்கிடந்த சிறுவரம்புக்கு வடக்கு இன்னும் இவ்வரை
073 க்காலில் போய் மேற்கு நாற்றுக் காலாக அட்டிக்கிடந்த சிறுவரம்புக்கு வடக்கும்
074 இந்நாற்றுக்காலுக்கேய் தெற்குவரம்பாக அட்டிக்கிடந்த சிறுவரம்புக்குவடக்கும் இன்னு
075 ம் இவ்வரைக்காலின் மேல்வரம்புக்கு மேற்கும் இன்னும் இவ்வரைக்கா
076 லின் தெற்கில்ப் புகையுண்ணியரைக்காலுக்கு மேற்கும் இன்னும் இத
077 ன் தெற்கில் கோவூர்குசவன் நிலன் ஒருமாவரைக்கு மேற்கும் இதன்தெற்கில்
078 ஒருமாவரைக்கு மேற்கும் இதன்தெற்கில் ஓடையில் நடுவுக்குத்தெற்கும் இன்
079 னும் இக்கோவூர் எல்லைக்கு மேற்கும்தெற்கின்னும் கோவூர் வெள்ளாளன் அ
080 ரைசூர் மறியாடி ஒருமாவுக்கு மேற்கும் இதன்தெற்கில் ஓடைநடுவுக்குத் தெற்கும் இ
081 வ்வோடையே தென்கிழக்கு நோக்கிப்போய் மேற்பள்ளவாய்க்கால் இவ்வவோ

ஏடு-5 பக்கம்-1
082 டைக்கேய் விழுந்த இடத்துக்கு மேற்கும் இன்னும் மேற்பள்ள வாய்க்காலின் தென்
083 கரைக்குத்தெற்கும் கோவூர் மேல்பள்ளத்து மேல்வரம்புக்கு மேற்கும் இவ்வூர்மே
084 ல் பள்ளத்து வெள்ளாளன் உறாப்பழிபாக்கரன் அரைக்காலில் வடவரம்புக்கு வ
085 டக்கும் இவ்வரைக்காலின் மேலை ஓடையின் நடுவுக்கும் வெள்ளாளன் ப
086 ரமேஸ்வரன் நறையூர் அரைக்காலுக்கு மேற்கும் இவ்வோடையின் நடு
087 வுக்கு மேற்கும் கோவூர் வெள்ளாளனைய்யாறன் சேந்தன் அரைக்காலின்
088 கொத்தத்து இவ்வோடைக்கே மேற்கும் இவ்வரைக்காலுக்குத் தெற்கு
089 ம் மேல் பள்ளநிலத்தின் கொத்தத்து இவ்வோடைக்கேய் மேற்கும் இவ்வோ
090 டைஇறிவட்டி வாய்க்காலுக்கேய் விழுந்தஇடந்த இடத்துக்கு மேற்கும் இவ்வேரி வட்டிவாய்க்கா
091 லுக்கேமேற்கும் இன்னும் இவ்வேரி வட்டிவாய்க்காலுக்கேய் தெற்கும் இவ்வே

ஏடு-5 பக்கம்-2
092 றிவட்டி வாய்க்காலுக்கே மேற்கும் தென்பாற்கெல்லை இவ்வேறிவட்டிவா
093 ய்க்காலுக்கு வடக்கும் இவ்வேரிவட்டி வாய்காலே மேற்கு நோக்கிச் செ
094 ன்று இவ்வாக்காலை வூடுறுத்துத் தென்கரைக்கேயேரி தெற்கின்னு
095 ம் இவ்வானை மங்கலத்து பிரமதேயத்து படுகைவேலி நில
096 த்தின் மேலெல்லையே சென்று தென்வடலாய் கிடந்த ஓடைக்
097 கு மேற்கும் இவ்வெல்லையே தெற்கு நோக்கிச் சென்று மேற்கி
098 ன்னும் இவ்வோடைக்கேய் வடக்கும் இன்னும் இவ்வோடைக்கு
099 வடக்கு நோக்கி யேரிவட்டி வாய்க்காலுக்கேயுற்றதற்கு கிழக்கும் இவ்வேரி வட்டி
100 வாய்க்காலை யூடறுத்து வடகரையே யேறிஇவ்வாய்காலின் வடகரையே
101 மேற்கு நோக்கிச் சென்று இவ்வாய்க்காலுக்கு வடக்கும் இவ்வெல்லையேய்

ஏடு-6 பக்கம்-1
102 மேற்குநோக்கிச்சென்று இவ்வாய்கால்தான் கிடந்தவாறே மேற்குநோக்கி இந்நாட்டுப்
103 பட்டனக்கூற்றத்து பிரமதேயம் சீவளக்குடியில் நிலன் நான்மாவில் வடவரம் பேயுற்
104 று இவ்வரம்பே மேற்கு நோக்கிச்சென்று இவ்வழிக்கு வடக்கும் இவ்வெல்லை
105 யே மேற்கு நோக்கிச் சென்று பழவிளப்பான ஓடையேயுற்று இவ்வெல்லை
106 க்குவடக்கும் மேற்பாற்கெல்லை வடக்கு நோக்கி நாட்டுப் போக்குத்தலை
107 வாயர் வெட்டப்பேற்றுக் கிழக்கும் வடக்கின்னும் இன்னாட்டுப்பட்ட
108 னக்கூற்றத்து முஞ்சி குடிநிலத்தின் கீழெல்லையான ஓடையேற்று இவ்
109 வோடையின் நடுவேய் வடக்கு நோக்கிச்சென்று இவ்வோடையுள்ப்பட இவ்வோ
110 டைக்குக் கிழக்கும் இவ்வோடைதான் கிடந்தவாறேய் வடக்குநோக்கி இம்முஞ்சிக்கு
111 டி நிலமேயுற்று இம்முஞ்சிக்குடிக்குக் கீழெல்லையான ஓடையேயுற்று வடக்கின்

ஏடு-6 பக்கம்-2
112 னும் இவ்வெல்லைக்குக் கிழக்கும் இவ்வோடைதான் கிடந்த வாறேய் பலமுடக்கு மு
113 டொங்கி வடக்குநோக்கி இடம் முஞ்சிக்குடி நிலமேயுற்று இம்முஞ்சிக்குடிக்கு கீழெல்லையான
114 ஓடையே வடக்கின்னும் இவ்வெல்லைக்குக் கிழக்கின்னும் இவ்வோடை தான்கி
115 டந்தவாறேய் வடக்கு நோக்கிச்சென்று இதனைவிட்டு இம்முஞ்சிக்குடி வெள்ளாள
116 ன் இராமன் கோவின்தன் நான்மாவின்தென்வரம்பேயுற்று இவ்வெல்லையே வ
117 டக்கு நோக்கிச்சென்று இம்முஞ்சிக்குடி பிரமதேய நிலத்தின் தென்வரம்பே
118 யுற்று இதனுக்குத் தெற்கும் இதனுக்கேய் கிழக்கும் இன்னும் முஞ்சிக்குடி
119 பிரமதேயம் நிலத்துக்கேய் வடக்கும் இவ்வெல்லையே வடக்கு நோக்கிச் சென்று இ
121 வெல்லையே வடக்குநோக்கிச் சென்று வடமேற்கு நோக்கி முஞ்சிக்குடி ஊதாரி மய

ஏடு-7 பக்கம்-1
122 க்கலென்னும் நிலமேயுற்று இன்னிலத்தின் கீழ்வரம்புக்குக் கிழக்கும் இதன்வட
123 வரம்பேய் மேற்கு நோக்கிச்சென்று வடவரம்புக்கும் இச்செயின் மேலைப் ப
124 றையோடை வடக்குநோக்கிச்சென்று இவ்வோடைக்குக்கிழக்கும் இவ்வோடையே வட
125 க்கு நோக்கிச்சென்று இவ்வானைமங்கலத்துக்குப்பாயக் கல்லின ராஜ
126 ராஜன் வாய்க்காலேயுற்று இவ்வாய்காலை யூடுறுத்து வடகரைக்கே யேறி
127 இவ்வானைமங்கலத்து பிரமதேயத்துக் காலவாயென்னும் நிலத்தி
128 ன் கீழ்வரம்புக்குக் கிழக்கும் வடக்குநோக்கிச்சென்றும் கிழக்கு நோக்கிச் செ
129 ன்றும் இவ்வானைமங்கலத்து பிரமதேயத்துக்கிளான் கிளான் காற் செயின் தென்வ
130 ரம்பேயுற்றுத் தென்கிழக்கு நோக்கிச் சென்று இதினின்று வடகிழக்கு நோக்கியும்
131 கிழக்கு நோக்கியும் சென்ற எல்லைக்குத் தெற்கும் கிழக்கும் இதன் வடவரம்பேய்

ஏடு-7 பக்கம்-2
132 வடமேற்கு நோக்கிச்சென்று இதனுக்குவடக்கும் இன்னும் இவ்வானை மங்கலத்து
133 பிரமதேயத்து ஆரிதன்சிறியான் கடம்பன் மூன்று மாவின் கீழ்வரம்புக்குக் கிழக்கும் வ
134 டபாற்கெல்லை இச்செயின் தென்வரம்பே கிழக்கு நோக்கிச்சென்று இதனுக்குத் தெற்கு
135 ம் இந்நாட்டுப் பட்டினக்கூற்றத்து பிரமதேயம் பிரம்பில் கொட்டிலான நிலத்
136 தின் எல்லையே கிழக்கு நோக்கிச்சென்று இவ்வானைமங்கலத்து பிரமதேய
137 த்து வாச்சியன் பரமேஸ்வரன் பூவன் நிலத்தின் மேல்வரம்பேயுற்ற தற்குத்
138 தெற்கும் இந்நிலத்துக்கேய் மேற்கும் தெற்கும் கிழக்கும் இந்நிலத்து பிரதேயம்
139 பிரம்பில் கொட்டிலான நிலத்தின் கீழ்வரம்புக்குக் கிழக்கும் இவ்வரம்பேய் வடக்கு நோக்கிச்
140 சென்று விளப்பென்னும் ஆற்றின் தென்கரையேயுற்றுத் தென்கரைக்குத் தெற்கும் இக்கரை
141 யே கிழக்கு நோக்கிச்சென்று இவ்வானைமங்கலத்து தேவதானமாக ஓ

ஏடு-8 பக்கம்-1
142 ருமாவரையின் மேல்வரம்பேயுற்று இவ்வரம்புக்கு மேற்கும் இவ்வரம்பேய் தெற்கு
143 நோக்கி இத்தேவர் தேவதானமான முள்ளிவரவையின் மேல்வரம்பேயுற்று இ
144 வ் வரம்புக்கு மேற்கும் இவ்வரம்பே தெற்கு நோக்கியுங் கிழக்கு நோக்கியுஞ் செ
145 ன்று இத்தேவர் குளமேயுற்று இத்தேவர் குளத்துக்குப்பாயும் வாய்கா
146 லின் மேல்வரம்பே தெற்கு நோக்கிச்சென்று இத்தேவர் தேவதானங்க
147 ணவதிகாலான நிலத்தின் மேல்வரம்புக்கு மேற்கும் இக்கணவதிகாலான
148 தென்வரம்பே கிழக்கு நோக்கிச்சென்று இவ்வரம்புக்குத் தெற்கும் இத்
149 தேவர் தேவதானமான மெழுக்குப்புறம் ஒருமாவின் மேல்வரம்புக்கு மேற்கும் இவ்வொரு
150 மாவின் தென்வரம்பே கிழக்கு நோக்கிச்சென்று இவ்வரம்புக்குத் தெற்கும் இத்தே
151 வர் தேவதானம் முக்காணியின் தென்வரம்பே கிழக்கு நோக்கிச் சென்று பத்

ஏடு-8 பக்கம்-2
152 தல் வாய்க்காலே யுற்றதற்கு தெற்கும் இப்பத்தல் வாய்க்காலின் மேல் கரையேவ
153 டக்கு நோக்கிச் சென்று விளப்பேயுற்றதற்கு கிழக்கும் இவ்விளப்பையூடறு
154 த்து வடகரைக்கேயேறி இந்நாட்டுப் பட்டனக்கூற்றத்து பிரமதேய மூங்கிற்
155 குடி எல்லையேயுற்று இவ்வெல்லையே வடக்கு நோக்கியுங்
156 கிழக்குநோக்கியுஞ் சென்று இதனுக்குக் கிழக்கும் தெற்கும் இன்
157 னும் மூங்கிற்குடி நிலத்துக்கேய் மேற்கும் இவ்வெல்லையே
158 தெற்குநோக்கி விளப்புக்கேயுற்று விளப்பையூடறுத்துத் தென்
159 கரைக்கேயேறித் தென்கரையே கிழக்குநோக்கிச்சென்று இந்நாட்டுக் கோவூ
160 ர்க் கணவதி மயக்கலான நலத்தின் மேல்வரம்பேயுற்றதற்கு தெற்கும் இக்க
161 ணவதி மயக்கலான நிலத்தின் மேல் வரம்புக்கு மேற்கும் இக்கணவதி மயக்க
162 லின் தென்வரம்பேய் கிழக்கு நோக்கிச்சென்று இந்நாட்டுப் பட்டனக் கூற்றத்து

ஏடு-9 பக்கம்-1
163 பிரமதேயம் நல்லூர்ச் சேரிக்குப் பாயும் வாய்காலையுற்றதற்கு தெற்கும் இவ்
164 வாய்க்காலின் தென்கரையேபோய் கிழக்குநோக்கிச் சென்று இந்நாட்டுக் கோவூர்
165 வெள்ளாளன் உருப்பழி பாக்கரனொருமாவின் தென்வரம்பேயுற்று இத்தென்
166 வரெம்பேய் கிழக்கு நோக்கிச்சென்று கோவூர் முன்றுடங்கின தச்சன்னிலத்துக் கேயு
167 ற்றதற்குத் தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநான்கெல்லையு மகப்பட்ட நீர்நிலனு
168 ம் புன்செயும் ஊரும் ஊரிருக்கையும் குளமும் ஸ்ரீகோயில்களும் பறைச்சேறி
169 யுங் கம்மாண்சேரியும்ஞ்சுடுகாடும் பெறுவதாகவும் இவ்வூர் மனையும் ம
170 னைப்படைப்பையும் கடையும் கடைத்தெருவும் மன்றுங் கன்றுமேய் பாழுங்கு
171 ளமுங் கொட்டகாரமும் கிடங்கும் கேணியும் புற்றும் தெற்றியும் காடும் பீலிகையுங்க
172 ளரும் உவரும் ஆறும் ஆறிடுபடுகையும் ஓடையும் உடைப்பும் மீன்பயில் பள்ளமுந்தேன்ப
173 யில் பொதும்பும் மேல்நோக்கிய மரமும் கீழ்நோக்கிய கிணறும் உள்ளிட்டு நீர்பூசி நெ

ஏடு-9 பக்கம்-2
174 டும் பரம்பெறிந்து உடும்போடியாடியாமை தவழ்ந்த தெவ்வகைப்பட்டதும் உண்ணிலமொ
175 ழிவின்றிக் காராண்மை மீயாட்சியும் மிகுதிக்குறையு மள்ளடங்க இப்படி பெற்றத
176 தற்குப் பெற்ற வியவஸ்தை இன்னிலத்துக்கு நீர்க்கீந்தவாறு வாய்கால் குத்திப்
177 பாய்ந்தவும் வாரவும் விடவும் பெறுவதாகவும் இன்னிலத்துக்கு
178 ப் பாயும் வாய்க்கால்கள் மேனடை நீர் பாயவும் வாரவும் பெறுவ
179 தாகவும் இவ்வாய்க்கால்கள் அன்னியர் குறங்கறுத்துக் குத்தவும்
180 விலங்கடைக்கவுங் குற்றேத்தம் பண்ணவும் கூடைநீரிரைக்கவும்
181 பெறாததாகவுஞ் சென்னீர்ப் பொதுவினை செய்யாததாகவும் அன்னீரடைத்துப் பா
182 ச்சப் பெறுவதாகவும் சுட்டோட்டால் மாடமாளிகை எடுக்கப்படுவதாகவுந்
183 துரவு கிணறு இழிச்சப் பெறுவதாகவுங் காவு தெங்கிடப்பெறுவதாகவுந் தமநக
184 மும் மருவுமிருவேலியும் சண்பகமுஞ் செங்கழுநீரும் மாவும் பலாவுங் கமுகும் பனை

ஏடு-10 பக்கம்-1
185 யுங் கொடியுமுள்ளிட்ட பல்லுருவில் பயன்மரமிடவுந் நடவும் பெறுவதாகவும் பெரு
186 ஞ் செக்கிடப் பெறுவதாகவும் இவ்வூர் நிலத்தை வூடறுத்துப் புறவூர்களுக்குப்போய்
187 நீர்பாயும் வாய்காகால்கள் மேனடை நீர்பாயவும் வாரவும் பெறுவதாகவும் புறவூர் நி
188 லத்தூடு போந்து இவ்வூர் நிலத்துக்குப்பாயும் வாய்க்கால்கள் மேன
189 டைநீர் பாயும் வாரவும் பெறுவதாகவும் இவ்வூரிட்ட தெங்கும் பனையும்ஈ
190 ழவரேறப் பெறாததாகவுந் தன்குடிக்கேற்ற வண்ணம் முரைசும் முப்படித்தோ
191 ரணமும் நாட்டப் பெறுவதாகவும் இப்படிபெற்றதற்குப் பெற்ற பரிஹாரந் நாடாட்சி
192 யும் ஊராட்சியும் வட்டிநாழியும் பிடாநாழியும் கண்ணாலக் காணமும் வண்ணாறப்பாறை
193 யுங்காசுக்காணமும் நீர்க்கூலியும் இலைக்கூலியுந் தறிப்புடைவையுந்
தரகுந்தட்டார்ப் பாட்ட
194 மும் இடைப்பாட்டமு மாட்டுக்கிறையும் நல்லாவுந் நல்லெருதுந் நாடுகாவலும்

ஏடு-10 பக்கம்-2
195 க்கும் விற்பிடியும் வாலமுஞ்சாடியும் உல்கும் ஓடக்கூலியும் மன்றுபாடும் மா
196 விரை அந்தீயெரியும் ஈழம்பட்சியும் கூத்திக்காலும் உள்ளிட்டுக் கோத்தொட்டுண்
197 ணப் பாலதெவ்வகைப்பட்டதுங் கோக்கொள்ளாதேய் பள்ளிச் சந்தத்துக்கே
198 ய் பெறுவதாகவும் இப்படிப்பெற்ற வியவஸ்தையும் பரிஹாரமும்
199 பெற்ற இந்நிலங் காராண்மை மீயாட்சியும் மிகுதிக் குறைமையுமுள்ள
200 டங்க பட்டனக்கூற்றத்து நாகப்பட்டினத்துக் கடாரத்தரையன் எடுப்பி
201 க்கின்ற சூளாமணிபன்ம விஹாரத்துப் பள்ளிக்கு பள்ளிச்சந்தமி
202 றையிலியாகக் குடுத்த இன்னாட்டு ஆனைமங்கலம் பள்ளிச்சந்த இறங்கலு
203 ள்பட யாண்டு இருபத்தொன்றாவது முதல் பிடிசூழ்ந்து பிடாகை நடந்து கல்லு
204 ங்கள்ளியும் நாட்டி அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வ

ஏடு-11 பக்கம்-1
205 ளநாட்டுப்பட்டனக்கூற்றத்து நாட்டோம்நாட்டோரோடும் உடனின்று பிடிசூழ்ந்து
பிடாகை நடந்து கல்
206 லுங் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து குடுத்தேன் புரவுவரி
கள்ளிக்குடையான் அணயன்
207 தளிக்குளவனேனிவை யென்னெத்தென்றும் இவ்வானைமங்கலம் பிடிசூழ்ந்
208 து பிடாகை நடக்கிறபோது ஆனையேறி இன்னாட்டாரோடும் உடனின்றேல்லை
209 தெரிந்து காட்டினேன் இவ்வானை மங்கலத்திருக்கும் வெள்ளாளன் கோன் புத்
210 தனேனிவை யென்னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பிடாகை நடந்து
211 அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரிய சிகாமணிவளநாட்டுப் பட்டனக்கூ
212 ற்றத்து பிரமதேயம் கடம்பனூர் சபையோம் இவர்கள் சொல்ல இவ்வூர் மத்யஸ்தன் முப்பத்திரு
213 வன் யஜ்ஞனான கற்பகாதித்தனேனிவை யென்னெழுத்தென்றும் இக்கடம்பனூரார் சொ
214 ல்ல இவ்வூர் வைகாநசன் நாராயணன் தாமோதரனேனிவையென்னெழுத்தென்

ஏடு-11 பக்கம்-2
215 றும் இப்படி பிடாகை நடந்து பிடி சூழ்ந்து அறவோலை செய்து குடுத்தோம்
216 க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக்கூற்றத்துப் பிரமதேயம் நாரணம
217 ங்கலத்து சபையோம் இவ்வூர் மத்யஸ்தன் இருநூற்றுவன் உத்தமனான பிர
218 ஹ்ம மங்கல்யனேனிவை யென்னெழுத் தென்றும் இப்படி பிடிசூழ்ந்து அறவோ
219 லை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணிவளநாட்டுப் பட்டனக்கூ
220 ற்றத்து வேலங்குடி வேலங்குடியான் நாராயணன் ஒற்றியேன்
221 இவையென்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அ
222 றவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக்கூற்ற
223 த்து பிரமதேயம் மூங்கிற்குடி சபையோம் இவ்வூர் மத்யஸ்தன் குணவன்ந
224 ந்தியான அலங்காரப் பிரியனேனிவை யென்னெழுத் தென்றும் இப்

ஏடு-12 பக்கம்-1
225 படி பிடிசூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகா
226 மணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நரிமன்றத்து ஊரோம் ஊரார் சொல்லஎழு
227 தினேன் இவ்வூர் மத்யஸ்தன் ஐம்பத்திருவன் விடேல்விடுகனேன் இவையென்
228 னெழுத்தென்றும் இப்படிபிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை
229 செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துச்
230 சாத்தமங்லத் தூரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர் வே
231 ட்கோவன் நெதிரன் சாத்தனான நானூற்றுவப் பெருங்கோவேளா
232 னேனிவை யென்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அற
233 வோலைசெய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணிவளநாட்டுப் பட்டனக்கூற்றத்
234 து பிரமதேயம் சந்நமங்கலத்து சபையோம் சபையார் சொல்ல எழுதினேன்

ஏடு-12 பக்கம்-2
235 இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் துருக்கன் கமுதனேனிவை யென்னெழு
236 த்தென்றும் இப்படிபிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோ
237 ம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக்கூற்றத்து பிரமதேயம் கொட்டாரக்குடி ச
238 பையோம் இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் ஊரன் சந்திரசேகர னான
239 பிரமமங்கல்யனேன் இவை யென்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து
240 பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணிவள
241 நாட்டுப் பட்டனக்கூற்றத்து கோவூர் ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன்
242 இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் ஐயனையனே னிவையென்னெழுத்தெ
243 ன்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரி
244 யசிகாமணிவளநாட்டுப் பட்டனக் கூற்றத்து உத்தூர் ஊரோம் ஊரார் சொல்ல

ஏடு-13 பக்கம்-1
245 தினேன் இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் நக்கன் முள்ளியே னிவையென்
246 னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்
247 தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேயம் நன்னி மங்க
248 லத்து சபையோம் சபையார் சொல்ல இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன்
249 கண்ணன் அலங்காரப் பிரியனெனிவை யென்னெழுத் தென்றும் இ
250 ப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரிய
251 சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேயம் பொருவனூர் சபை
252 யோம் சபையார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் வேட்கோவ
253 ன் மாதேவன் ஊரனேனிவை யென்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடா
254 கை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப்

ஏடு-13 பக்கம்-2
255 க்கூற்றத்து ஆளாங்குடி ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேனிவ்வூர்க் கரணத்தான் கா
256, ஸ்யபன் சூர்யனரங்கனேன் இவை என்யெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பி
257 டாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப்பட்டனக்கூ
258 ற்றத்து துறையூர் ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தா
259 ன் பாரத்வாஜி திரித்தி வைகுண்டன் எழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடா
260 கை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்
261 டனக்கூற்றத்து பிரமதேயம் பிரம்பில் சபையோம் இவ்வூர்க் கரணத்தான் மத்ய
262 ஸ்தன் குணவன் நந்தியான அலங்காரப் பிரியனேன் இவை யென்னெழுத் தென்று
263 ம் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் கடம்பங்குடி யூரோ
264 ம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் குணவன் நந்தி

ஏடு-14 பக்கம்-1
265 ங்காரப் பிரியனேன் இவை யென்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகைநடந்து அற
266 வோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணிவளநாட்டுப்பட்டனக்கூற்றத்துசேந்தமங்
267 கலத்து ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர் மத்யஸ்தன் ஊரான் ஐயனே
268 னிவை என்னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து பிடாகைநடந்து அறவோலை செ
269 ய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக்கூற்றத்துச் சிறுச்சேந்தமங்க
270 லத்து எட்டி வலஞ்சுழியான் சங்கனேன் இவை யென்னெழுத் தென்றும் இப்படிபிடி சூழ்
271 ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணிவளநாட்டு
272 ப் பட்டனக்கூற்றத்து குற்றாலத்தூரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க்கரணத்தான்
273 வேட்கோவன் தேவன் ஊரனேனிவை என்னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடா
274 கை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப்பட்டி

ஏடு-14 பக்கம்-2
275 னக்கூற்றத்து திருநாவூர் ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர் மத்யஸ்த
276 ன் சதுர்முக னரங்கத்தே னிவை என்யெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து
277 பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்
278 டுப் பட்டனக் கூற்றத்து பிரமதேயம் உவர்க்குடி சபையோம் சபையார் சொ
279.ல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் வேட்கோவன் மாநாகன் நா
280.ராயணனெ னிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பி
281 டாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாம
282 ணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து ஊரோம் ஊரார் சொ
283 ல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் வேட்கோவன் மாநாகன் கண்ணன்
284 னேனிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அ
285 றவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக்

ஏடு-15 பக்கம்-1
286.ருக்கண்ணங்குடி சபையோம் சபையார் சொல்ல வெழுதினேன் இவ்வூர்க்கரண்
287 தான் வேட்கோவன் அதிராமன் இருபத்து நால்வனாகிய முன்னூற்றுவனே
288 னிவை என்னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை
289 செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக்
290 கூற்றத்து கடம்பவல வாட்கை ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இ
291 வ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் ஊரானூரானே னிவை என்னெழு
292 த்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து
293 குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து
294 ப் பாளங் கொற்றங்குடி ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க்கரணத்தா
295 ன் மத்யஸ்தன் ஊரானூரா னிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடி சூழ்ந்
296 து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி

ஏடு-15 பக்கம்-2
297 ப்பட்டனக் கூற்றத்து வெண்கிடங்கில் ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கர
298 ணத்தான் மத்யஸ்தன் ஊரான் நக்கனேனிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடிசூழ்ந்து
299 பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம் இவ்வானை மங்கலத்து பிரமதே
300 யத்து ஆரிதன் சிறியான் கடம்பனே னிவை என்னெழுத் தென்றும் இப்பரிசுப்பட்டா
301 ய் நின்று பிடிநடப்பித்து அறவோலை செய்வித்தேன் க்ஷத்திரியசிகாம
302 ணிவள நாட்டு திருநறையூர் நாட்டு பிரமதேயம் ஸ்ரீதுங்கமங்கலத்து
303 த் தூற்பில் ஸ்ரீதரபட்டனே னிவை என்னெழுத் தென்றும் இப்பரிசுப் பட்டாய்
304 நின்று பிடிநடப்பித்தான் அறவோலை செய்வித்தேன் க்ஷத்திரியசிகாமணி வள
305 நாட்டு வேளா நாட்டுத் திருநல்லூர்ப் பார்க்குளத்துப் பற்பநாப பட்டனேனிவை என்
306 னெழுத் தென்றும் இப்பரிசுப் பட்டாய் நின்று பிடிநடப்பித்து அறவோலை செய்வித்தேன் க்ஷ
307 த்திரியசிகாமணி வளநாட்டு வேளாநாட்டுத் திருநல்லூர் பேரேமபுரத்து வெண்
308 ணைய பட்டனே னிவை யென்னெமுத் தென்றும் இப்பரிசுப் பட்டாய் நின்று பி
309 டிநடப்பித்து அறவோலை செய்வித்தேன் ராஜேந்த்ர சிம்மவளநாட்டு ஸ்ரீவீரநா

ஏடு-16 பக்கம்-1
310 ராயணச் சதுர்வேதி மங்கலத்து துவேதை கோமபுரத்து நந்தீஸ்வரபட்டனேனிவை
311 என்னெழுத் தென்றும் புகுந்த அறவோலைப் படியே வரியிலிட்டுக் கொள்கவென்று
நங்கரும மாரா
312 யும் மீனவன் மூவேந்த வேளானும் கொற்ற மங்கலமுடையானும் தேவன்குடையானும் ந
313 டுவிருக்குங் கடலங்குடித் தாமோதர பட்டனும் கொட்டையூர் பூவத்த பட்டனும்நங்கரும
314 மாராயும் பராக்ரம சோழ மூவேந்த வேளானும் செம்பியன் மூவேந்த வேளானும்சோழவே
315 ளானும் அரைசூருடையானும் நடுவிலிருக்கும் புள்ள மங்கலத்து பரமேஸ்வரபட்டசர்வ்வ
316 கிரது யாஜியுஞ் சொல்லப் புரவரி ஆலங்குடியான் கோதண்டன் சேனனும்பூ
317 தமங்கலமுடையான் இளவடிகள் நள்ளாறனும் ஆலத்தூருடையான் கற்பகஞ்
318.சோலையும் வரிப்பொத்தகம் பருத்தியூர் கிழவன் சிங்கன் வெண்காடனும்
319 முகவெட்டி கீழ்வாய் கணவதியும் முண்டனரங்கனுஞ் சையதனமலனும் தத்தன்
320 சீகிட்டனும் வரிப்பொத்தகக் கணக்கு மாதேவன் பூமியும் வரியிலிடு உருவூடையா
321 ன் தாழி வீரசோழனும் பட்டோலை பெருமானம்பலத்தாடியும் சீகண்டன்தேவனும்
322 மாகானரிஞசியும் நக்கன் மண்டகவனும் இருந்து யாண்டு இருபத்து மூன்றாவ

ஏடு-16 பக்கம்-2
323 து நாள் நூற்றுப்பத்து மூன்றினால் வரியிலிட்டுக் குடுத்தது வூவை உய்யக்கொண்டார்
324 வளநாட்டுத் திரைமூர் நாட்டு நாடார் கிழான் அரையன் அருமொழியான ராஜே
325 ந்த்ரசோழப் பல்லவரையன் எழுத்து உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு
326 க்கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து கிருஷ்ணன் ராமனான ராஜேந்த்ரசோழ
327 பிரம மாராயனுக்கும் ஒக்கும் நித்தவினோத வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்
328 து அரைசூருடையான் ஈராயிரவன் பல்லவயனான உத்தமசோழ பல்லவ
329 ரையனுக்கும் ஒக்கும் ராஜேந்த்ர சிம்ம வளநாட்டுக் குறுக்கைநாட்டுக்க
330 டலங்குடி துவேதை கோமபுரத்து தாமோதர பட்டனுக்கும் ஒக்கும் உய்யக்கொண்டா
331 ர் வளநாட்டு அம்பர் நாட்டுக் குறும்பில் கிழான் அரையன் சீகண்டனான மீனவன்மூவே
332 ந்த வேளானுக்கும் ஒக்கும்

ஆனைமங்கல செப்பேடுகள்-முதல் தொகுதி-மூலம் முற்றிற்று

குலோத்துங்க சோழன்-I
வழங்கிய

ஆனைமங்கல செப்பேடுகள் (2)
('லீய்டன்-சிறியது')

முலம்

ஏடு-1
001 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையாற்சிறந்த மணிமுடி சூ
002 டி வில்லவர் குலைதர மீனவர் நிலைகெட விக்களர் சிங்களர் மேல்கடல் பாயத்திக்கனைத்துந்தன் சக்கர நடாத்
003 தி வீரசிங்காசனத்துப் புவனமுழுதுடையாளடும் விற்றிருந்தருளிய கோவிராஜகேசரிபன்மரான சக்க
004 ரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது ஆயிரத்தளியாநஆஹவமல்ல
005 குலகாலபுரத்து §யிலுள்ளால்த் திருமஞ்சனசாலையில் பள்ளிபீடம் காலிங்கராஜனில்எழுந்தருளி இருக்கக் கிடாரத்
006 தரையன் கேயமாணிக்க வளநாட்டு பட்டனக் கூற்றத்து சோழகுலவல்லி பட்டனத்துஎடுப்பித்த ராஜேந்த்ர சோ
007 ழப் பெரும்பள்ளிக்கும் ராஜராஜப் பெரும்பள்ளிக்கும் பள்ளிச்சன்தமான ஊர்கள் பழம்படியந் தராயமும் வீர
008 சேஷையும் பன்மை பண்டைவெட்டியும் குந்தாலியும் சுங்க மோரமும் உள்ளிட்டனவெல்லாம் தவிர்ந்
009 தமைக்கும் முன்பு பள்ளிச்சந்தங்கள் காணியுடைய காணி ஆளைரைத் தவிர இப்பள்ளிச் சங்கத் தார்க்கே காணி
010 யாகப் பெற்றமைக்கும் தாம்ர சாசனம் பண்ணித்தர வேண்டுமென்று கிடாரத்தரையர்துதன் ராஜவி
011 த்யாதர ஸ்ரீசாமந்தனும் அபிமானேத்துங்க ஸ்ரீசாமந்தனும் விண்ணப்பம் செய்ய இபபடி சந்தி விக்ரஹி
012 ராஜவல்லபப் பல்லவரையனோடுங் கூட இருந்து தாம்ரசாசனம் பண்ணிக் குடுக்கஎன்று அதிகாரி
013 கள் ராஜேந்த்ரசிங்க மூவேந்தவேளார்க்குத் திருமுகம் ப்ராசதஞ் செய்தருளிவரத்தாம்ரசாசனம் செய்தபடி கடாரத்த
014.ரையன் கெயமாணிக்கவளநாட்டு பட்டனக்கூற்றத்து சோழகுலவல்லி பட்டனத்து எடுப்பித்த ராஜராஜப்பெரு ம்பள்ளி
015. க்கு பள்ளிச்சந்தம் கெயமாணிக்கவளநாட்டு பட்டனக்கூற்றத்து ஆனைமங்கலம் நிலம் தொண்ணூற் றேழே இரண்

ஏடு-2 பக்கம்-1
016 டு மாக்காணிஅரைக்காணியும் முன்புடைய காணியாளரைத்தவிர இப்பள்ளிச்சங்கத்தார்க்கே காணியாகவும்
இதுகாணிக்கடன்நெல்லு
017 எண்ணாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது முக்கலனே இருநூணிக் குறுணிமுன்னாழியினால் நிச்சயித்த
நெல்லு நாலாயிரத்
018 தைஞ்நூற்று கலமும் ஆனைமங்கலத்து பிமதேய நிலம் பன்னிரண்டே முக்காலினால்நெல்லு நானூற்றுக்கல
019 ம் நிச்சயித்தநெல்லுஐஞ் நூற்று அறுபதின் கலமும் இன்னாட்டு முஞ்சி குடிநிலம்இருப்தேழே முக்காலே
முக்காணி அ
020 ரைக் காணியினால் காணிக்கடன் நெல்லு இரண்டாயிரத்தெழு நூற்றெழுபத்தொன்பதின் கலனே தூணி
021 நாநாழி நிச்சயித்தநெல்லு ஆயிரத்தொண்ணுற்றுக் கலமும் திருவாரூர் கூற்றத்துஆமூர்நிலம்
022 நூற்றாறே மாகாணியில் காணிக்கடன் நெல்லுப் பதினாயிரத்தறு நூற்று கலனேஇருதூணிக்
023 குறுணி அறுநாழி நிச்சயித்த நெல்லு ஐயாயிரத்தெண்ணூற்றைம்பதின் கலமும்அளநாட்
024 டு கடகுடியான நாணலுர் நிலம் எழுபதே முக்காலே நான்மாவரையினால் காணிக்கடன் நெ
025 ல்லு ஆயிரத்தைஞ்நூற்றொருபத்து நாற்கலனே ஐங்குறுணி ஒருநாழி நிச்சயித்தநெல்லு இரண்டா
026 யிரத் தொண்ணூற்று நாற்பதின் கலமும் இன்னாட்டுக் கீழ்ச்சத்திரப்பாடி நிலம்பத்தே இரண்டு மாகாணி
027 அரைக்காணி முந்திரிகைக் கீழ்முக்காலினால் காணிக்கடன் நெல்லு ஆயிரத்தொருபத்திரு கலனே
ஐங்குறுணியும் இன்னா
028 ட்டுப் பாலையூர் பிரமதேயம் நிலம் அறுபதே முக்காலினால் நெல்லு ஆயிரக்கலம்நிச்சயித்த நெல்லு ஆயிரத்தை
029 ஞ்நூற்று கலமும் ஜயங்கொண்ட சோழ வளநாட்டுப்க் குறும்பூர் நாட்டுப் புத்தக்குடிநிலம் எண்பத்தேழே
030 காலினால் காணிக்கடன் நெல்லு எண்ணாயிரத்தெழு நூற்றிருபதின் கலனேதூணிநாநாழி நிச்சயித்த நெல்லு ஆ

ஏடு-2 பக்கம்-2
031 றாயிரத்தொருநூற்றெழு கலமும் விஜயராஜேந்திர சோழவளநாட்டு இடைக்கழிநாட்
032 டு உதையமார்த்தாண்ட நல்லூர் நிலம் மூன்றே மூன்று மாவினால் நெல்லு நூற்று
033 முப்பத்தைங்கலனே முக்குறுணி முன்னாழி இதுவரிசைப்படி இறை
034 க்கட்டுத் திருவாய் மொழிந்துருளினபடி நெல்லு எழுபத்தெண்கலனேய் ஐங்குறுணி
035 இதில் இப்பள்ளிக்குப் பாதியும் இவ்வூர்களில் பல பாட்டங்கள் உள்ளிட்ட அந்தராய
036 மும் பன்மை பண்டவெட்டியும் உட்படக்கடவ காசும் நெல்லும் இப்பள்ளிக்

ஏடு-3 பக்கம்-1
037 கு வேண்டும் நிவந்தங்களுக்கு இறுப்பதாக இறையிலி இட்டமைக்கும் இப்பள்ளி சந்தங்கள் முன்
038 புடைய காணியாளரைத் தவிரகுடி நீக்கி இப்பள்ளிச் சங்கத்தார்க்குக் காணியாக குடுத்தோமென்றும்
039 செயமாணிக்கவளநாட்டுப் பட்டனக்கூற்றத்துச் சோழகுலவல்லி பட்டனத்து ஸ்ரீசைலேந்த்ர சூடாமணிவ
040 ர்ம்ம விஹாரமான ராஜராஜப் பெரும்பள்ளிக்குப் பள்ளிநிலையும் பள்ளி விளாகமும் உட்பட்ட எல்லை கீழ்
041 பாற்கெல்லை கடற்கரையில் மணற்குன்றுபட மேற்கும் தென்பாற் கெல்லை புகை
042 உணிக்கிணற்றுக்கு வடக்கும் இதன் மேற்கு திருவீரட்டான முடைய மஹாதேவர் நிலத்து
043 க்கு வடக்கும் இதன் மேற்குப் பரவைக்குளத்து மாராயன் கல்லுவித்த குளத்தில் வடகரை மேற்கு நோ
044 க்கி காரைக்காற்ப் பெருவழியுற வடக்கும் மேல்பாற்கெல்லை காரைக் காற்ப்பெருவழிக்குக் கிழக்கும்
045 வடபாற்கெல்லை சோழகுலவல்லி பட்டினத்து நிலம் வடகாடன்பாடி எல்லைக்குத் தெற்கும் ஆகஇன்

ஏடு-3 பக்கம்-2
046 நான்கெல்லைக்குட்படப்பட்ட நிலம் முப்பத்தொன்றே முக்காலே இரண்டுமா முந்திரிகை இது அந்
047 தராயமும் பன்மை பண்டவெட்டியும் மற்றும் எப்பேர்ப்பட்டதும் உள்பட இப் பள்ளிக்கே இறையி
048 லி குடுத்தோம் இப்படி செய்து குடுக்க வென்று திருவாய் மொழிந்தருளித்த திருமுகம் பிரசாதஞ்செய்தரு
049 ளி வந்தது தாம்ர சாசனம் பண்ணிக்குடுக்க வென்று சந்துவிக்ரிஹகன் ராஜவல்லபப் பல்லவரையரும் அ
050 திகாரிகள் ராஜேந்திர சிங்க மூவேந்த வேளாரும் சொல்ல இத்தாம்ர சாசனம் எழுதி
051 னேன் உடக்கோடி விக்கிரமா பரணத் தெரிந்த வலவலங்கை வேளைக்காறரில் நிலையுடைய பணை
052 யான் நிகரிலி சோழன் மதுராந்தகனேன் இவைஎன் எழுத்து

ஆனைமங்கல செப்பேடுகள் - இரு தனித்தனி தொகுதிகளின் - மூலம் - முற்றிற்று