சொல்லின் கதை
(வானொலிப்பேச்சு)
மு.வரதராசன்
collin katai
(Dr. M. Varadarajan)
In tamil script, Unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing
a scanned images version of this work
The etext has been prepared via Distributed Proof-reading implementation
of Project Madurai and we thank the following volunteers for their help:
Sakthikumaran, Karunanidhi, S. Karthikeyan, Nalini Karthikeyan,
R. Navaneethakrishnan, V. Devarajan, S. Govindarajan and Subbu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சொல்லின் கதை
(வானொலிப்பேச்சு)
டாக்டர். மு.வரதராசன், எம்.ஏ.,எம்.ஓ.எல்., பி.எச்.டி.
தமிழ்த்துறைத் தலைவர்,பச்சையப்பன் கல்லூரி
பரமசிவ நிலையம்,
127, லாயிட்ஸ் ரோட், சென்னை-6.
விற்பனை உரிமை: பாரி நிலையம்
59, பிராட்வே, சென்னை-1, அணா 12
முதல் பதிப்பு : டிசம்பர் 1952
உரிமை ஆசிரியர்க்கு
சென்னை அரசாங்கத்தின் பரிசு பெற்ற நூல்கள்:
ஓவச்செய்தி (இலக்கிய ஆராய்ச்சி)
அரசியல் அலைகள் (கட்டுரைகள்)
கள்ளோ? காவியமோ? (புனைகதை)
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பெற்றவை :
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் (ஆராய்ச்சி)
மொழி நூல் (ஆராய்ச்சி)
விடுதலையா (சிறுகதைகள்)
சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை-14
நன்றியுரை
சென்னை வானொலி நிலையத்தாரின் ஏற்பாட்டின்படி "சொல்வன்மை"
என்னும் பொருள்பற்றிப் பள்ளி மாணவரக்காக, 1952 ஜூலை14,
28,ஆகஸ்ட் 11,25, செப்டெம்பர் 15 ஆகிய ஐந்து நாட்களில் ஐந்து
தலைப்பில் வானொலியில் பேச நேர்ந்தது. பேசியவற்றை நூல்வடிவில் வெளியிட
வானொலி நிலையத்தார் அனுமதி தந்தனர்.
அவர்கட்கு நன்றி கூறுகின்றேன்.
மு.வ.
உள்ளடக்கம்
1. சொல்லின் பிறப்பு
2. சொல்லின் வழக்கு
3. சொல்லின் இசை
4. சொல்லின் இலக்கணம்
5. இடப்பேச்சுக்களும் கொச்சைமொழிகளும்
1. சொல்லின் பிறப்பு
நாகரிகம் இல்லாத மிகப் பழங் காலத்தில் மனிதர்கள் வீடு கட்டத்
தெரியாமல் குகைகளில் வாழ்ந்தார்களாம். அந்தப் பழஙகாலத்தைக்
கற்காலம் என்று சொல்லுகிறோம். அந்தக் காலத்தில் மனிதர்கள்கையில்
என்னென்ன கருவிகள் இருந்தன தெரியுமா? துப்பாக்கி, பீரங்கி,
அணுக்குண்டு இவைகள் அப்போது இல்லை. வாள், வேல்,வில் முதலான
கருவிகளும் இல்லை. அந்தக் காலத்தில் இருந்த கருவிகள் எல்லாம்
கல்லால் செய்யப்பட்டவைகளே. கல்லால் செய்த அந்தக்கருவிகளும்
மழ மழ என்று செய்யப்படவில்லை; கரடு முரடாக இருந்தன.
அந்தக் காலத்து மனிதர்கள், வழியில் கிடைத்த கல்லை எடுத்து,
இப்படியும் அப்படியும் உடைத்துத்தீட்டி ஒரு வகையாகத் தங்கள்
தொழிலுக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள். கல்லால் செய்த அப்படிப்பட்ட
கருவிகளை வைத்துக்கொண்டே அவர்கள் மிருகங்களைக் குத்திக்
கொன்றார்கள்; அவைகளை அறுத்துத் தின்றார்கள். கல்லால் செய்த
அந்தக்காலத்துக் கத்தியை ஒரு புறம் நினைவில் வைத்துக்கொண்டு,
மற்றொரு புறம் நாம் இப்போது கையாளுகின்ற பளபளப்பான
இரும்புக்கத்தியை எண்ணிப்பாருங்கள். அதற்கும் இதற்கும் எவ்வளவு
வேறுபாடு? கற்காலத்துக் கருவிகள் படிப்படியாக மாறி, வளர்ந்து
முன்னேறி இந்தக் காலத்துக் கருவிகள் ஏற்பட்டுள்ளன.
சொற்களின் கதையும் இதுதான்.நாகரிகம் இல்லாத காலத்து மக்கள்
பேசிவந்த சொற்கள் திருத்தம் இல்லாமல், வடிவம் அமையாமல்,
இயற்கை ஒலிகளாக இருந்தன. ஆனால் இப்போது நாம் பேசும் சொற்கள்
திருத்தமானவை,வடிவம் அமைந்தவை, நாகரிக வளர்ச்சியால்
ஏற்பட்டவை. உதாரணமாக- மண், மரம் என்று சொல்கிறோம்.
இவைகள் எவ்வளவு சுருக்கமாக, திருத்தமாக இருக்கின்றன பாருங்கள்.
நாம் இப்போது சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறு சிறு
பேனாக்கத்திகளைப் போல் இவைகள். ஆனால் மிகப்பழங்காலத்தில்
இதே சொற்கள் வெவ்வேறு வடிவமாக இருந்தன. கற்காலத்துக்
கத்திகளைப்போல் கரடுமுரடாக, நல்ல வடிவம் அமையாமல் இருந்தன.
இதிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? சொற்கள் முதல்முதலில்
தோன்றிய காலத்தில் திருத்தமான அமைப்புப் பெறாமலிருந்து,
காலப்போக்கில் நாகரிகம் வளர வளர மாறி நன்றாக அமைந்துள்ளன.
ஆங்கிலத்தில் 'had' என்று மூன்று எழுத்தில் ஒரு சொல் இருக்கிறது.
அதே சொல் சில நூற்றாண்டுகளுக்குமுன் பதினோரெழுத்துகளைக்
கொண்டதாக இருந்ததாம். 'Habededeima' என்று அந்தச் சொல்லுக்கு
வடிவம் இருந்ததாம். தமிழிலும் அப்படித்தான் பழங்காலச் சொற்கள்
வெவ்வேறு வகையாய் இருந்திருக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் சொற்களை எப்படி ஏற்படுத்தினார்கள்? தங்கள்
காதால் கேட்ட ஒலியையே திருப்பிச் சொன்னார்கள்; திருப்பிச் சொன்ன
ஒலியே சொல் ஆயிற்று. மரத்தில் கருநிறமான பறவை ஒன்று 'கா கா'
என்று கத்தியது. அதைப் பற்றிச் சொல்லும்போது, பழங்கால மனிதன்
தானும் 'கா கா' என்று கத்தினான். நாளடைவில் காக்கா என்ற ஒலியே
அந்தப் பறவைக்குப் பெயராயிற்று. இது பழங் காலத்தில் சொல் பிறந்த
வரலாறு. ஆனால் இந்தக் காலத்திலும் குழந்தையினிடம் இப்படி
ஒலியால் பெயர் வைக்கும் வழக்கம் இருக்கிறது. தெருவிலே நாய்
குலைக்கிறது. குழந்தை பார்க்கிறான். உள்ளே ஓடிப்போய், அம்மாவிடம்
'ளொள்,ளொள்' என்று சொல்கிறான். அது அவன் பேசுகின்ற மொழி.
அவனுடைய மொழியில் 'ளொள்,ளொள்' என்றால் நாய் என்று பொருள்.
இவ்வளவு ஏன்? இப்படி ஒலியைக் கேட்டுப் பெயர் வைக்கும் பழக்கம்
வளர்ந்த பெரியவர்களிடமும் இருக்கிறது. 'கிலு கிலு' என்று ஒலியுண்டாக்கும்
விளையாட்டுப் பொருளுக்குக் 'கிலுகிலுப்பை' என்றே பெயர் வைக்கிறார்கள்.
'கிண் கிண்' என்று ஒலி செய்யும் கால் அணிக்குக் 'கிண்கிணி' என்றே
சொல்லுகிறார்கள். ஒரு நாட்டில் உணவு என்பதைத் 'தின் தின்" என்றே
பெயர் சொல்கிறார்கள். சில உணவுப் பொருள்களைத் தின்னும்போது
'தின் தின்' என்ற ஒலி கேட்பதால் பொதுவாக உணவுக்கே 'தின்தின் என்று
பெயர் வைத்துவிட்டார்கள். அந்த நாட்டில் மட்டுமல்ல, நம் நாட்டிலும்
அப்படிப் பெயர் அமைந்திருக்கும் போல் தோன்றுகிறது. நாமும் தின்
என்றும் தீனி என்றும் சொல்கிறோம் அல்லவா?
காக்கை, கிலுகிலுப்பை, கிண்கிணி, தீனி இவற்றிற்கெல்லாம் இப்போது
காரணம் தெரிகிறது. வேறு பல சொற்கள் பொருள் தெரியாதபடி அவ்வளவு
மாறிவிட்டிருக்கின்றன. இப்போது குயில் என்று சொல்லுகிறோம். குயில்
கூவும் ஒலிக்கும், குயில் என்ற பெயருக்கும் இப்போது பொருத்தம் தெரியவில்லை.
ஆனால் யார் கண்டார்கள்? 'கூஊஇல்' என்பது போன்ற அதன் ஒலியே
நாளடைவில் குயில் என்று சுருக்கமாகத் திருந்திய வடிவு பெற்றிருக்கலாம்.
இப்படிப் பல சொற்களுக்கு இன்று காரணம் தெரியாவிட்டாலும் அவைகளின்
பிறப்பு இது போல்தான் இருந்திருக்க வேண்டும்.
அடுத்தபடியாக, வெறுப்பு, மகிழ்ச்சி, அச்சம் முதலான உணர்ச்சிகளால்
சிலவகை ஒலிகளை மனிதன் உண்டாக்குகிறான். வெறுப்பு அடைந்தபோது
'சே' என்கிறான். மகிழ்ச்சியாக உள்ளபோது 'ஓ ஓ', 'ஆ ஆ' என்கிறான்.
பயப்படும்போது 'ஆ', 'ஊ', 'ஐயோ' என்கிறான். இப்படி உணர்ச்சியால்
பிறக்கும் பல ஒலிகள் ஒவ்வொரு மொழியிலும் உள்ளன. இந்த ஒலிகள்
மாறாமலும் சொற்களாக உள்ளன; மாறியும் சொற்களாக வாழ்கின்றன.
மூன்றாவது வகையாகப் பல சொற்கள் உள்ளன. அந்தச் சொற்கள் எப்படிப்
பிறந்தன என்று தெளிவாக அறிய முடியவில்லை. மணிக்கு ஓசை இயற்கையாக
அமைவதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சொல்
இயற்கையாகத் தோன்றியது என்று சிலர் கூறுவார்கள். அது பொருத்தமான
காரணம் அல்ல. முதல்முதலில் கண்ட அடையாளம் பலரிடமும்
பரவிவிடுவதுபோல், முதல்முதிலி ஏற்பட்ட ஒலி, அடையாளமாகப் பலரிடமும்
பரவி, அப்படியே சொற்களாகிவிட்டன. குழந்தை வாயை மூடியிருந்து,
திறந்து அழுகிறது. மூடிய வாய் திறந்து அழும்போது 'மா' என்ற ஒலி
உண்டாகிறது. அந்த ஒலியே தாய்க்கு அடையாளமாகி 'அம்மா' என்ற
சொல் ஏற்பட்டது. அடுத்தபடியாக, அதே முயற்சியில் காற்றை மூக்கின்
வழியாக விடாமல், முழுதும் வாயின் வழியாகவே விட்டால், 'பா' என்ற
ஒலி பிறக்கிறது. அதுவே 'அப்பா' என்ற சொல்லாகிவிட்டது. இப்படியே
வெவ்வேறு காரணம் பற்றி வெவ்வேறு சொற்கள் பிறந்துவிட்டன. காரணங்கள்
பல இன்று தெரியாமல் போய்விட்டன. ஆனால், இந்த வகையான சொற்கள்
பிறந்த கதை மட்டும் இதுதான்.
கற்காலத்துக் கருவிகள் அவ்வளவு திருத்தமாக, கைக்கு அடக்கமாக
அமையவில்லை என்று பார்த்தோம் அல்லவா? பழங்காலத்துச் சொற்களும்
சுருக்கம் இல்லாமல், திருத்தம் இல்லாமல் நீண்ட பெரிய சொற்களாக
இருந்திருக்கும். அடிக்கடி கையாண்ட கருவி கை பட்டுப் பட்டுத் தேய்ந்து
தேய்ந்து அழகாக விளங்குவதுபோல், பழங்காலத்து நீண்ட பெரிய சொற்கள்
பேச்சில் பழகிப் பழகிச் சுருங்கி அமைந்துவிட்டன. உதாரணமாகப் பாருங்கள்.
நான், நீ, நாம், நீர், யார், ஏன் முதலான சொற்கள் நம் பேச்சில் அடிக்கடி
வருகின்றன அல்லவா? அடிக்கடி வருவதால்தான் இவைகள் சிறுசிறு
சொற்களாக, ஓர் அசைச் சொற்களாக இருக்கின்றன. கரடி, கத்தரி, பருத்தி,
அகழி முதலிய சொற்கள் அடிக்கடி பேச்சில் வழங்குவதில்லை. அதனால்தான்
அவைகள் சுருக்கமாகவும் அமையவில்லை.
இப்படிப் பல சொற்கள் ஏற்பட்டுவிட்ட பிறகு, வேண்டியபோதெல்லாம்
அவைகளிலிருந்து புதிய சொற்கள் உண்டாக்கிக்கொள்ள முடிந்தது.
முதலில் சில கருவிகளைக் கண்டுபிடித்த பிறகு, அவைகளைக் கொண்டு
வேறு வேறு கருவிகளைச் செய்து கொள்ளலாம் அல்லவா? அதுபோல்,
முன்னமே பழகியுள்ள சொற்களை மாற்றியும் சேர்த்தும் புதிய சொற்களை
ஏற்படுத்திக்கொள்வது எளிமையாகும். விழு என்ற சொல் பழகிவிட்டபிறகு
விழுதல், வீழ்ச்சி, விழுது, வீழ்து முதலான சொற்களை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
நட என்ற சொல்லிலிருந்து நடத்தல், நடப்பது, நடை, நடக்கை, நடத்தை,
நடத்து, நடத்தல், நடப்பு முதலான சொற்கள் அமைந்ததும் இதுபோல்தான்.
ஆகவே, முதலில் நூறு சொற்களுக்குக் குறைவாக இருந்த நிலை மாறி மாறி,
ஆயிரக்கணக்கான சொற்கள் ஏற்பட்டுவிட்டன. ஒரே சொல் சிறிது மாறி
அமைந்து வேறு பொருள் உணர்த்தும் முறை இது. இரண்டு சிறு சொல்
ஒன்றாகச் சேர்ந்து, புதிய பொருள் உணர்த்துவதும் உண்டு. மரம் வேறு.
கால் வேறு. இரண்டும் சேர்ந்து 'மரக்கால்' என்றால் அது வேறு. புகை வேறு.
இலை வேறு. இரண்டும் சேர்ந்து 'புகையிலை' என்றால் தனியான ஒரு
பொருளை உணர்த்துகிறது. மரக்கால், புகையிலை போல எத்தனையோ
சொற்கள் பிறந்து வழங்குகின்றன.
மரக்கால் புகையிலை முதலிய சொற்கள் இப்போது இரண்டு சிறு சொற்கள்
சேர்ந்து அமைந்தவை என்பது தெரியுமாறு இருக்கின்றன. இவைகள் எல்லாம்
பிற்காலத்தில் தோன்றிய சொற்கள். அப்படியே எழுதி வைத்துவிட்டார்கள்.
அதனால் சொல்லின் உருவம் சிதையாமல் வழங்குகின்றன. ஆனால்
பழங்காலத்தில் வழங்கிய எத்தனையோ சொற்கள் உருவம்சிதைந்து மாறிவிட்டன.
அணில், கனல், வாழை, தென்னை முதலிய சொற்கள் பல அப்படிச் சிதைந்து
அமைந்த சொற்களே.
இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால், மனிதன் பேசத்தொடங்கிய
காலத்தில் சொற்கள் பல இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
இன்ரு, சென்னை நகரத்தில் உள்ள மாடமாளிகைகளையும், கட்டிட
நெருக்கத்தையும் பார்த்துவிட்டு, மனிதன் முதன்முதலில் பிறந்தபோதே
பல கட்டிடங்களோடு பிறந்தான் என்று சொல்ல முடியுமா? அதுபோல்
மனிதன் பேசத் தொடங்கிய காலத்தில் சொற்கள் இயற்கையாக அமைந்திருந்தன
என்றும் சொல்ல முடியாது. ஆனால் மனிதன் வாழத் தொடங்கிய பழங்காலத்தில்,
இயற்கையாக இருந்த மலைக்குகைகளைப் பயன்படுத்திக்கொண்டான்
அல்லவா? அதுபோல் மனிதன் முதல்முதலில் பேசத் தொடங்கிய காலத்தில்,
அவனுக்கு இயற்கையாக் இருந்த குரலில் ஒலியைப் பயன்படுத்திக்கொண்டான்.
குடிசை போடக் கற்றுக்கொண்டு, பிறகு மண்சுவர் வைக்கக் கற்று, அதன்பிறகு
ஓடு வேயக் கற்றுக்கொண்டு, அதன்பிறகு மச்சுவீடு கட்டவும், மாளிகை
கட்டவும் கற்றுக்கொண்டான் அல்லவா? இவ்வாறு கற்று வளர்வதற்குப்
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகவில்லையா? அதுபோலத்தான்,
இயற்கையான ஒலியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட மனிதன், எத்தனையோ
படிகளைக் கடந்து வளர்ந்து வளர்ந்து, இன்று உள்ள இலக்கியம் வளர்ந்த
மொழியைப் பேசக் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ காலம் பிடித்திருக்கும்.
இவ்வாறு எத்தனையோ தலைமுறைகளாகச் சொற்கள் ஏற்பட்டு ஏற்பட்டு,
மேன்மேலும் பெருகிக்கொண்டே வருகின்றன. இன்றும் புதிய சொற்கள்
ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இதை ஒட்டி இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்தக் காலத்துக்
கட்டிடத்தைப் பார்த்தால், இது தூண் என்றும், இது கழி என்றும், இது
சுவர் என்றும், இது சன்னல் என்றும்,இது கதவு என்றும், இது படி என்றும்
பிரித்தறிய முடியும். ஆனால், மிகப் பழங்கால வீடாகிய குகையைப் பார்த்தால்,
இந்தப் பாகுபாடு ஒன்றும் சொல்லமுடியாது. அதற்கு அடுத்த நாகரிகப்
படியில் உள்ள எளிய குடிசையைப் பார்த்தாலும் இத்தனைப் பாகுபாடுகள்
சொல்ல முடியாது. அதையும் பல வகையாய்ப் பிரித்தறிய முடியாது அல்லவா?
இந்த உண்மையையே சொற்களின் வரலாற்றிலும் காணலாம். இன்று,
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் என்று சொற்களைப் பிரிக்கிறோம்.
அவைகளையும் வெவ்வேறு வகையாய்ப் பாகுபடுத்துகிறோம். மிகப்
பழங்காலத்தில் இப்படிப்பட்ட பாகுபாடு இருக்கவில்லை. மலைக்குகை,
பிரிவுகள் இல்லாத வீடாக இருந்த நிலை போலவே, பழங்காலத்து
இயற்கையான குரல்ஒலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாக்கியமாக
இருந்தன. அந்த வாக்கியமே பெயர், அதுவே வினை என்று சொல்லக்கூடியவாறு
இருந்தன. அதனால்தான் காய்முதலான சொற்கள் இப்போது இரண்டிற்கும்
பொதுவாக உள்ளன. காய்கள் என்னும்போது பெயராகவும், காய்க்கும்
என்னும்போது வினையாகவும் வழஙகுகின்றது. மலர்,அடி, பிடி,எண்
முதலான பல சொற்கள் அப்படிப்பட்டவை. ஒருகாலத்தில் இவை ஒவ்வொன்றும்
ஒரு வாக்கியமாக இருந்த காரணத்தாலதான் இவைகள் பொருளின்
பெயராகவும் வழங்குகின்றன; தொழிலையும் உணர்த்துகின்றன. குகையில்
சுவருக்கும் கூரைக்கும் வேறுபாடு தெரிகிறதா? இல்லை. அதுபோல்தான்
இநதச் சொற்கள் வாக்கியமாக இருந்த பழஙகாலத்திலும், எந்தப்பாகுபாடும்
வேறுபாடும் இல்லாத நிலைமை இருந்தது.
2. சொல்லின் வழக்கு
ஒரு பையனுக்குக் கருப்பையா என்று பெயர்
வைக்கிறார்கள். அவனை எல்லோரும் 'கருப்பையா,
கருப்பையா' என்றே அழைக்கிறார்கள். அவன்
உண்மையாகவே கருப்பாக இருக்கிறான். அதனால்தான்
அவனுடைய பெற்றோர்கள் அவனுடைய
கருப்பு நிறம் பற்றிய அந்தப் பெயர் வைத்தார்கள்.
ஆனால் அவனைக் கருப்பையா என்று அழைக்கிறவர்கள்
அந்த நிறத்தை அடிக்கடி நினைக்கிறார்களா?
இல்லை, காரனத்தை நினைக்காமலே மற்றவர்கள்
கருப்பையா என்று அழைக்கிறார்கள். ஓர் ஊமைப்
பையனை நாவுக்கரசு என்று குறிப்பிடுகிறார்கள். பேச நாக்கு இல்லாதவனை
நாவுக்கரசு என்று சொல்லுகின்றோமே என்று யாரும் கவலைப்படுவதில்லை.
கோபாலன், முருகையன், முனிசாமி என்னும் பெயர்களைப் போல இந்தப்
பெயர்களும் ஒரு வகை அடையாளமாகவே வழங்குகின்ரன. துணி
வெளுப்பவர், ஒவ்வொருவருடைய துணிக்கும் ஒவ்வொருவகைக் குறி போடுகிறார்.
இன்னார் துணிக்கு இன்னகுறி என்று அடையாளமாக ஏற்படுகிறதே தவிர
வேறு ஒன்றும் இல்லை. அது போல் தான் சொற்களும் முதலில் காரணத்தோடு
ஏற்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும், நாளடைவில் அடையாளங்களாக
வழங்குகின்றன.
நாய் என்றால் ஒருவகை விலங்கு என்றும், பன்றி என்றால் மற்றொருவகை
விலங்கு என்றும் தெரிந்து கொள்கிறோம். ஆனால், அந்தப் பெயர்கள்
காரணத்தோடு ஏற்பட்டவை என்பதை நினைப்பதில்லை. நாய் என்றால் நாக்கும்
நினைவு வருவதில்லை. பன்றி என்றால் பல்லும் நினைவு வருவதில்லை.
பேசுவதை விட்டுவிட்டு, ஆராய்ச்சி செய்யும்போதுதான் நாயின்
நாக்கையும், பன்றியின் பல்லையும் நினைக்கிறோம்.
நாவை நீட்டித் தொங்கவிடுவதால் நா - நாய் என்றும்,
கோரைப்பல் இருப்பதனால் பல்-தி-பன்றி என்றும்,
பெயர் ஏற்பட்டதை அறிகிறோம். இவ்வாறு, சொல் எப்படிப் பிறந்திருந்தாலும்,
பேச்சில் வழங்கும்போது அடையாளமாகவே பயன்படுகிறது. நன்றாக ஆராய்ந்து
பார்த்தால், சொல் பிறந்த காரணத்தை மறந்துவிட்டதே நல்லது என்று
தெரிகிறது. அப்படி மறக்காமல் இருந்திருந்தால் சொற்களை வேகமாகப் பேசுவதற்கு
முடியாமல் போகும். 'நாய் பன்றியைக் கடித்தது' என்ற வாக்கியத்தைச்
சொல்லும்போது வேகமாகச் சொல்கிறோம்.
நா-ய் : நாய், பல்-தி : பன்றி என்ற ஆராய்ச்சியில்
இருந்தால் இவ்வளவு வேகமாகப் பேசவும் முடியாது; பொருள் தெரிந்துகொள்ளவும்
முடியாது. ஆகவே, சொற்களின் பிறப்புக் காரணத்தை மறந்து
அடையாளங்களாக அவற்றை வழங்குவதால்தான் நன்றாகப் பேச முடிகிறது,
உதாரணமாகப் பாருங்கள் : பென்சிலை எடுத்துப பேனாக் கத்தியால் தீட்டி வெள்ளைக்
காகிதத்தில் எழுதுகிறோம். கருவிகள் உடனே பயன்படுகின்றன.
எழுத்து வேலையும் உடனே முடிகிறது. பென்சில் செய்த தொழிற்சாலை, பேனாக்கத்தி
செய்த தொழிற்சாலை, காகிதம் செய்த தொழிற்சாலை இவை
எல்லாம் நினைவுக்கு வந்தால், பென்சிலை எடுத்துப் பார்ப்பதில் நேரம் செலவாகும்.
பேனாக் கத்தி எடுத்துத் தீட்டுவதற்குமுன் நேரம் செலவாகும்.
காகிதத்தை எடுத்து, அது செய்யப்பட்ட முறையை எண்ணுவதிலும் நேரம் செலவாகும்.
கடைசியில் எழுத்து வேலை நினைத்தபடி முடியாது.
தொழிற்சாலைகளை மறந்துவிட வேண்டும். செய்யப்பட்ட முறைகளையும் மறந்துவிட
வேண்டும். பென்சில், பேனாக்கத்தி, காகிதம் இவைகள் நம் வேலைக்குப் பயன்படும்
கருவிகள் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். அப்போதுதான்
நாம் எண்ணியபடி வேலை செய்து முடிக்க முடியும்.
சொற்களை வழங்கும் முறையும் இப்படித்தான். அவைகள் எப்படிப் பிறந்தன
என்பதை மறந்துவிட வேண்டும். என்ன பொருள் உணர்த்துகின்றன
என்பதை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்போதுதான் சொற்களைத் தெளிவாகவும் வேகமாகவும் பேச்சில் வழங்க முடியும்.
இன்னொன்று பாருங்கள்: பல் இருப்பதனால் பன்றி என்று பெயர் இருப்பதை
அறிந்தோம். இதெபோல் பல்லின் காரணமாகப்பெயர் பெற்ற மற்றோர் உயிரும் உண்டு.
அதுதான் பல்லி. பன்றி, பல்லி ஆகிய இரண்டு சொற்கள் பிறப்பதற்கும்
பல்லே காரணமாக இருக்கிறது. ஆகவே, அந்தக் காரணம் நினைவில் இருந்தால்,
பேசும்போது என்ன ஆகும் தெரியுமா? இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல்
பன்றியைப் பல்லி என்று தவறிச் சொல்லி விடுவோம். பல்லியைப் பன்றி என்றும்
தவறாகச் சொல்லிவிடுவோம். கடைசியில் நன்றாகப் பேசத் தெரியாதவர்கள்
ஆகிவிடுவோம். ஆகவே, தெளிவாகவும், வேகமாகவும் சொற்கள்
வழங்கவேண்டுமானால், அவைகள் அடையாளங்களாகவே பயன் படவேண்டும்.
அடையாளங்களாக வழங்கும்போதும், இன்னொன்று கவனிக்க வேண்டும்
நேற்று ஒரு பொருளுக்கு அடையாளமாக இருந்த ஒரு சொல், இன்று கொஞ்சம் மாறி,
வேறு பொருளுக்கு அடையாளமாக வழங்கலாம். நேற்று மணியின் துணிக்கு
அடையாளமாக இருந்த குறி, இன்று கண்ணனுடைய துணிக்கு குறியாக மாறலாம்
அல்லவா? சொற்களும் காலப்போக்கில் இப்படிப் பொருள்மாறுவது உண்டு. மரத்தால்
செய்த ஓர் அளவு கருவிக்கு பழங்காலத்தில் ‘மரக்கால்' என்று பெயர். இப்போது,
இரும்புத் தகட்டால் செய்த கருவிக்கு அந்தப் பெயரைச் சொல்கிறோம். இரும்பால்
செய்த இந்தக் காலத்துக் கருவியைச் சொல்லும் போது
பழங்காலத்து மரக்காலை நினைப்பதால் பயன் இல்லை. மரக்கால் என்பதில்
உள்ள மரம் என்ற கருத்தையே மறந்துவிட வேண்டும்.
பழங்காலத்தில் எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு 'எண்ணெய்' என்று பெயர்.
இப்போது எண்ணெய் என்பது பொதுவான ஒரு பெயராக வழங்குகிறது. கடைக்கு
போய் ‘எண்ணெய் வேண்டும்' என்று கேட்டால், கடைக்காரனுக்கு ‘எள்ளின் நெய்'
என்ற பொருள் தெரியாது. ”என்ன எண்ணெய் வேண்டும்? விள்க்கெண்ணெய்யா,
கடலை எண்ணெய்யா, நல்லெண்ணெய்யா” என்று திருப்பிக்கேட்பான். பழங்காலத்தைப்
போல் கடலை நெய் வேண்டும், எள்ளின் நெய் வேண்டும் என்று சொன்னாலும்
அவனுக்கு விளங்காது. பசுவின் நெய்தான் என்று சொல்லிவிடுவான். ஒரு காலத்தில்
தைலப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருந்த நெய் என்ற சொல்,
இப்பொழுது பசுவின்நெய் அல்லது எருமைநெய்க்கு மட்டும் வழங்குகிறது. ஆகவே,
பேசுகின்றவர்களும் எழுதுகின்றவர்களும் பழைய பொருளை மறந்துவிட்டு,
இன்றைய வழக்கைமட்டும் கவனித்துப் பேசவேண்டும்; எழுத வேண்டும்.
இப்படியே பல சொற்கள் பொருள் மாறி வழங்குவது உண்டு. கோயில் என்ற சொல்
பழங்காலத்தில் அரசனுடைய அரண்மனையை உணர்த்தியது. இப்போது கடவுளை
வழிபடும் இடத்தை மட்டும் குறிக்கிறது. ஒரு காலத்தில் கோயிலுக்கு 'நகர்'
என்ற பெயர் இருந்தது. இப்போது 'நகர்' என்றால்
சென்னை போன்ற பெரிய நகரங்களையே குறிக்கும்.
பழங்காலத்தில் மரம் என்ற சொல், தேக்கு, பலா, மா முதலிய உள்ளே வைரமுடைய
மரங்களை மட்டும் குறித்து வந்தது. தென்னைமரம், பனைமரம்,
முதலியவற்றிற்கு உள்ளே வைரம் இல்லை என்பது
உங்களுக்குத் தெரியும். அதனால் அந்தக் காலத்தில்
தென்னை மரம், பனைமரம் என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். அவற்றை
மரம் என்று சொல்லுவதே பிழையாக இருந்தது. அவைகளை
எல்லாம் நம் முன்னோர்கள் புல் என்று சொல்லி
வந்தார்கள். தென்னையையும், பனையையும் பார்த்துப் 'புல்' என்று சொன்னால்
இந்தக் காலத்தில் எல்லோரும் சிரிப்பார்கள். உயரமாக வளராமல்,
தரையோடு உள்ள சிலவற்றை மட்டும்தான் இப்போது புல் என்று சொல்கின்றோம்.
ஒரு காலத்தில் இருந்த சொல்வழக்கு மற்றொரு காலத்தில்
இல்லாமல் போவதை இவைகள் தெரிவிக்கின்றன.
பேசுகின்ற மக்கள் எப்படி மதிக்கின்றார்களோ,
அப்படித்தான் சொல்லும் வழங்குகிறது. மக்கள்
எதை மதிக்கவில்லையோ, அது வழக்கில் இல்லாமல்
போகிறது. ஒன்று பாருங்கள். 'ஆண் யானை',
'பெண் யானை' என்று சொல்கிறோம். ஆனால்
ஆண்மாடு பெண் மாடு என்று சொல்வதில்லை.
பசு, எருது, மாடு என்று சொல்வதுதான் வழக்கமாக இருக்கிறது. 'பெண் மாடு',
'ஆண் மாடு' என்று சொன்னால் ஊர் சிரிக்கும். ஆனால் பெண்
கோழி, ஆண் கோழி என்று கூசாமல் சொல்கின்றோம். திருவள்ளுவர், ஔவையார்
இவர்கள் வாழ்ந்த காலத்தில் பெண்கோழி, ஆண்கோழி
என்று சொல்லமாட்டார்கள். பேடை, சேவல் என்றுதான் சொல்வார்கள். கிராமங்களில்
சிலர் இன்னும் இப்படித்தான் சொல்கிறார்கள். யானை முதலிய மிருகங்களிலும்
இப்படித்தான் பெண்ணுக்கும் ஆணுக்கும் வெவ்வேறு பெயர்கள் வழங்கியிருந்தன.
மிகப் பழங்காலத்தில் பெண்யானையைப் 'பிடி' என்று சொன்னார்கள். ஆண்யானையைக்
'களிறு' என்று சொன்னார்கள். பெண்யானை,
ஆண்யானை என்று சொல்வதே பிழையாக
இருந்த காலம் அது. இதுபோல் எத்தனையோ சொற்களுக்கு வழக்கு மாறிவிட்டது.
காலப்போக்கில் வளரும் நாகரிகமும் சொல்லின் வழக்கை
மாற்றிவருகிறது. சில சொற்களை உள்ளபடி வெளிப்படையாகப் பேசினால் நாகரிகம்
குறைவாகத் தெரிகிறது. அதற்காக அந்தச் சொற்களை மறைத்துவிட்டு, நாகரிகமான
வேறு சொற்களைச் சொல்வது உண்டு. 'கால் கழுவி வந்தான்',
'ஒன்றுக்கு இருந்தான்', 'சாணம் போட்டது' முதலிய வாக்கியங்களில் இதைக் காணலாம்.
செத்துப்போன ஒருவரைப் பற்றி, அவர் இறந்துவிட்டார் என்று சொல்லாமல்
'காலமானார்' என்று மாற்றிச் சொல்கிறோம். திருவடிநிழல் அடைந்தார், வைகுண்டம்
சேர்ந்தார், பரமபதம் அடைந்தார்,சிவலோகம் சேர்ந்தார் என்று சொல்கிறோம். செத்துப்
போனார் என்று சொன்னால் சொல்பவர்களுகும் நன்றாக இல்லை: கேட்பவர்களுக்கும்
நன்றாக இல்லை. அதனால், அதை மாற்றிக்கொஞ்சம் மங்கலமாகச் சொல்லுகிறோஓம்.
சொல் வழங்குவதில் மொழிக்கு மொழி வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில்
'அங்கிள்' என்ற ஒரு சொல் இருக்கிறது. அது, தாயோடு பிறந்த அம்மானையும்
உணர்த்துகிறது: தகப்பனோடு பிறந்த சிற்றப்பன், பெரியப்பனையும் உணர்த்துகிறது.
தமிழில் அதுபோல் ஒரு சொல் இல்லை. அதற்குத் தேவையும் ஏற்படவில்லை.
ஆங்கிலத்தில் 'பிரதர்' (சகோதரர்) என்ற சொல்லை மிகுதியாக வழங்குகிறார்கள்.
மூத்த சகோதரன் 'எல்டர் பிரதர்', இளைய சகோதரன் 'யங்கர் பிரதர்' என்ற
சொற்களை அவர்கள் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. தமிழில் அப்படி இல்லை.
அவர்களுக்கு நேர்மாறாகத் தமிழர்களாகிய நாம் பேசுகிறோம்.
உடன்பிறந்தான் என்ற சொல்லை வழங்காமல்
அண்ணன், தம்பி என்ற சொற்களையே அடிக்கடி வழங்குகிறோம்.
இவ்வாறு சொற்கள் வழங்குவதில் எவ்வளவோ
மாறுதல்களும் புதுமைகளும் உள்ளன. இவற்றை
எல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது, நம்மை
அறியாமலே ஒருவகையான சொல்நாகரிகம்
வளர்ந்துவருவதை உணர்கிறோம். சொற்களின்
உலகத்தில் ஒருகாலத்தில் நாகரிகமாய் இருந்தது
இப்போது நாகரிகம் இல்லாமல் போகின்றது. ஒரு
காலத்தில் செல்லாக் காசாக இருந்தது, இப்போது
மதிப்பையும் பெற்றுவிடுகிறது. ஒரு மொழியாருக்குப் பழக்கத்தில் உள்ள ஒன்று,
மற்றொரு மொழியாருக்குப் புதுமையாக இருக்கிறது. எழுதுகின்றவர்களும்
பேசுகின்றவர்களும் பெரும்பாலும் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்ப்பதேயில்லை.
பயிரிடும் குடியானவன் தாவரநூல் படிப்பதும்
இல்லை; அந்தப் போக்கில் ஆராய்ச்சி செய்வதும்
இல்லை. ஆனால், மரம் செடி கொடிகளை எப்படி
வளர்க்கவேண்டும், எப்படிப் பயிரிடவேண்டும்
என்பவற்றை மட்டும் தெரிந்துகொண்டிருக்கிறான்.
அது போதும். அது போலவே சொல் வழக்கில்,
மேலே கண்ட புதுமைகளையும் மாறுதல்களையும்
ஆராயாமல் இருக்கலாம். ஆனால் நம்மைச் சுற்றி
வாழும் மக்கள் எந்தெந்தச் சொற்களை எந்தெந்தப்
பொருளில் எவ்வெவ்வாறு வழங்குகின்றார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு,
அவர்களைப் பின்பற்றிப் பேசினால் அதுவே போதும். ஆனாலும்
குடியானவன் தாவரநூல் கற்றுக்கொண்டால்
விளக்கமும் சிறப்பும் ஏற்படுவதுபோல், சொல்வழக்கு இப்படிப்பட்டது என்று
ஆராய்ந்து தெரிந்து கொண்டால், மேலும் விளக்கமாகும்; தெளிவும் ஏற்படும்.
3.சொல்லின் இசை
முதன்முதலில் மனிதர்கள் பேசினார்களா,
பாடினார்களா? முதன்முதலில் பேசினார்கள் என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். அதன்
பிறகு பாடக்கற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்வீர்கள்.
ஆனால் உண்மை அது அல்ல. நீங்கள் பேசக் கற்றுக்கொண்டு நெடுங்காலம்
ஆனபிறகுதான் பாடக்கற்றுக்கொள்கிறீர்கள். அதனால் பழங்காலத்து மனிதர்களும்
அப்படியே முதலில் பேசவும் பிறகு பாடவும் கற்றுக்கொண் டிருப்பார்கள் என்று
எண்ணுகிறீர்கள். அது அவ்வளவு பொருத்தம் அல்ல. பாடுவது
என்றால், இராகமும் தாளமும் அமைத்து, இசை
இலக்கணப்படி பாடுவது மட்டும்் அல்ல. மனம்
போனபடி ஒலியை நீட்டி, ஆனால் இனிமையாக,
உருக்கமாகப் பாடினால் போதும். அதுவும் பாட்டுத்தானே? நாட்டுப்புறங்களில்
காட்டிலும் மேட்டிலும் ஓடி உழைக்கும் சிறு பிள்ளைகள் மனம் போனபடி
நீட்டி நீட்டிப் பாடுகிறார்கள். அவற்றை எல்லாம்
பாட்டு அல்ல என்று சொல்லிவிட முடியுமா? இசை
இலக்கணம் தெரியாத காரணத்தால், பாட்டும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது.
குயிலுக்கு இசை இலக்கணம் தெரியாது. ஆனால் அதன் ஒலியைப் பாட்டு
என்றுதானே சொல்கிறார்கள்.
இந்தக் கருத்தோடு பார்த்தால், உங்களுக்கும் இயற்கையாகப் பாட்டுத் தெரியும்
என்றுதான் சொல்லவேண்டும். நீங்கள் திருத்தமாகப் பேசியதற்கு முன்னமே
பாடியிருக்கிறீர்கள். நீங்கள் மூன்று நான்கு வயதுக் குழந்தையாய் இருந்தபோது,
உங்கள் அம்மாவிடம்போய், ஏதாவது வேண்டும் என்று
கேட்டீர்கள். அப்போது "அம்மா, கொடு" என்று
புத்தகத்தில் படிப்பதுபோல் கேட்கவில்லை. கைகால் ஆட்டிக்கொண்டும், கொஞ்சி
அழுதுகொண்டும், சொற்களை நீட்டி நீட்டி, 'அம்மா அஅ, கொடூ உஉ'
என்று கேட்டீர்கள். அவை எல்லாம் பாட்டுத்தான்.
இப்போது அந்தப் பாட்டை எல்லாம் மறந்துவிட்டீர்கள். பேசுவதிலே அக்கரையாக
ஈடுபட்டிருக்கிறீர்கள். அதனால் பாட்டை மறந்துவிட்டீர்கள். மிகப் பழங்காலத்து
மக்களும் அப்படித்தான். அவர்களும் சொற்களை நீட்டி நீட்டிப் பாட்டுப்போல்
ஒலித்துக் கொண்டிருந்தார்கள். நாகரிகம் வளர்ந்தபிறகு, அந்த வழக்கத்தை
விட்டுவிட்டு, ஒலிகளை அளவோடு நிறுத்திப் பேசத் தொடங்கினார்கள்.
ஆனாலும் இசையை அடியோடு துறந்துவிட மனிதனால் முடியவில்லை. காரணம்
என்ன? மனிதனுடைய செவி ஒழுங்கான நயமான ஒலியைக்
கேட்க விரும்புகிறது. அதற்குக் காரணம் மனிதனுடைய உடம்பே. உடம்பில்
இரத்த ஓட்டம், நுரையீரலின் வேலை, இதயத்தின் தொழில் முதலிய
எல்லாம் ஒருவகை ஒழுங்குமுறையோடு நடைபெறுகின்றன. அதனால்
செவி நரம்புகளும் ஒழுங்கான ஒலியைக் கேட்கவே விரும்புகின்றன.
ஆகையால், இசையில் பயிற்சி இல்லாதவர்களும் ஒழுங்கான ஒலிகளால்
அமைந்த சொற்களைக் கேட்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட சொற்களையே
பேசவும் விரும்புகிறார்கள்.
உதாரணம் பாருங்கள். நாம் பல வாக்கியங்களைப் பழமொழிகள் என்று சொல்கிறோம்.
'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்','கிட்டாதாயின் வெட்டென மற', 'யானைக்கு
ஒரு காலம், பூனைக்கு ஒருகாலம்', 'யானை வரும் பின்னே, மணியோசை வரும்
முன்னே' முதலான பழமொழிகளை எண்ணிப் பாருங்கள். என்னென்னவோ
கற்றுக்கொண்டு மறந்துவிடுகிறோம். ஆனால் மறக்க வேண்டும் ந்ன்று நாமாகப்
பாடுபட்டாலும் இந்தப் பழமொழிகளை மறக்க முடியவில்லை. காரணம்
தெரியுமா? இந்தச் சொற்களில் உள்ள இசைதான் காரணம். ஒருவகை ஒலி
நயமாக ஒழுங்காகத் திரும்பி வருகின்றது. இந்தப் பழமொழிகளை நீங்களே
சொல்லிப் பாருங்கள். ஒழுங்கான ஒலிமுறை
அமைந்திருக்கிறது அல்லவா? இதைத்தான் சொற்களின் இசை என்று சொல்லவேண்டும்.
இந்தச் சொற்களின் இசைதான் இவற்றை மறக்காமல் இருக்கச் செய்கிறது.
உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் பல சொற்கள் இப்படி இசையோடு
அமைந்திருக்கின்றன. தமிழ்ச் சொற்களிலும் இப்படிப் பல உண்டு.
இப்படிப்பட்ட சொற்களில் வேண்டும் என்றே இசையை யாரும் அமைக்கவில்லை.
பேசும் மக்களின் செவியும் வாயும் தம்மை அறியாமல் இப்படிச் சொற்களில்
இசையை அமைத்துவிடுகின்றன. உதாரணமாகப் பாருங்கள்:'அல்ல' என்பது ஒரு
சொல். 'இல்லை'என்பது மற்றொரு சொல். இலக்கணப்படி பார்த்தால், 'இல்லை'
என்னும் சொல் 'இல்ல' என்றுதான் இருக்கவேண்டும். ஆனால்
'இல்லை' என்று மாறி அமைந்திருக்கிறது. "அல்ல"
என்னும் சொல் 'அல்லை' என்று மாறவில்லை.காரணம் என்ன? 'அல்ல' என்னும்
சொல்லில் முன்னும் பின்னும் 'அ'-ஒலி இருக்கிறது. அதனால் ஒலி ஒத்துப் போகிறது.
'இல்ல' என்று சொன்னால், சொல் முதலில் 'இ'-யும் முடிவில் 'அ'-வும் இருப்பதால்
ஒத்துப் போவதில்லை. அதனால், கடைசியில் உள்ள
'அ', 'ஐ'யாக மாறிவிட்டது. 'இ'-யும் 'ஐ'-யும்
ஒத்துப்போகும் ஒலிகள். அதனால், 'இல்ல'என்று
சொல்வதைவிட,'இல்லை' என்று சொல்வது இனிமையாயிருக்கிறது. இதுபோலவே
எத்தனையோ சொற்கள் இனிய ஒலி வேண்டும் என்று மாறி அமைந்திருக்கின்றன.
'அது' என்பது பெயர்ச்சொல். 'கு' என்பது, உருபு. 'அது+கு' = 'அதுக்கு' என்று
ஆகவேண்டும். ஆனால், இடையிலே ஓர் ஒலியைச் சேர்த்து
'அதற்கு' என்று சொல்லுகிறோம். நாம்+கு=நாம்கு
என்று சொல்லாமல்,நம்கு என்றும் சொல்லாமல்,
நமக்கு என்று சொல்கிறோம். அப்படியே, யான்கு, நீகு என்று ஒலிக்காமல், எனக்கு,
உனக்கு என்று ஒலிக்கிறோம். மரம்+ஐ=மரமை, குளம்+கு=குளக்கு என்று யாரும்
ஒலிப்பதில்லை. மரத்தை, குளத்திற்கு என்று இடையிலே ஒலிகள் சேர்த்து
வழங்குகிறார்கள் இனிய ஒலியாக ஒலிக்க வேண்டும் என்பதை முக்கிய
நோக்கமாகக்கொண்டு இவ்வாறு சொற்களில் சில ஒலிகள் சேர்க்கப்படுகின்றன.
இவைகளைச் சாரியைகள் என்று இலக்கணம் கற்றவர்கள் சொல்வார்கள்.
சொற்களில் இசை பொருந்த வேண்டும் என்று முன்னோர்கள்
செய்த முயற்சியை இவற்றில் பாருங்கள்.
இப்படிப்பட்ட முயற்சி தமிழ்மொழியில் மட்டும் அல்ல, ஏறக்குறைய எல்லா
மொழிகளிலுமே உண்டு. தெலுங்கு மொழியில் சொற்கள் எல்லாம்
இனிமையான இசையை உடையவை என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால்தான்
அந்த மொழி தேன்போன்றமொழி, தேனுகு, தெனுகு, தெலுங்கு
என்று பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.
தமிழர்களாகிய நாமும் நம் தாய்மொழியைப் பற்றி இப்படித்தான் சொல்கிறோம்.
தமிழ் என்றாலே இனிமை என்று பொருள் கூறுகிறோம். ஏறக்குறைய எல்லா
மொழியாரும் இப்படியே தம்தம் மொழியைப் பாராட்டிக்கொள்கிறார்கள்.
நாட்டுக்கு நாடு இசை வேறு வேறாக இருக்கிறது. இசைக் கருவிகளும் வேறு
வேறாக உள்ளன. எவ்வளவு வேற்றுமை இருந்தபோதிலும்
எல்லாம் இசைதான். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் ஒழுங்கான
ஒலி அமைந்திருக்கிறது. தமிழர்களுக்கு விருப்பமானது புல்லாங்குழல் இசை.
மேற்கு நாட்டார்க்கு விருப்பமானது பியானோ இசை. மேற்கு நாட்டார்க்கு
விருப்பமானது பியானோ இசை. பியானோ இல்லையே என்று தமிழர்கள்
வருந்தவேண்டிய தில்லை. குழல் இல்லையே என்று மேற்கு நாட்டார்கள்
வருந்த வேண்டியதும் இல்லை. அதுபோலவே, ஒவ்வொரு மொழிக்கும்
தனிச்சிறப்பாக ஒவ்வொருவகை இனிமை அமைந்திருக்கிறது. தமிழ்ச்
சொற்களிலும் அப்படிப்பட்ட தனி இனிமை இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் 'ஓட்' என்று சொல்கிறார்கள். தமிழர்கள் அதை 'ஓட்டு'
என்றுதான் சொல்கிறார்கள்.
தமிழில் பல சொற்கள் இப்படி 'உ' என்று முடிகின்றன. ஆங்கிலச்சொற்கள்
அப்படி முடிவதில்லை. ஆங்கிலத்தில் உள்ள எண்ணுப் பெயர்களைச் சொல்லிப்
பாருங்கள். ஒன் (one), போர் (four), பைவ் (five), சிக்ஸ் (six),
செவன் (seven), எய்ட் (eight), நைன் (nine), டென் (ten) என்று ஆங்கிலத்தில்
சொல்கிறார்கள். இவை மெய்யெழுத்தில் முடிகின்றன. தமிழில் உள்ள எண்ணுப்
பெயர்களைப் பாருங்கள். எல்லாம் 'உ' என்று முடிகின்றன. ஒன்று, இரண்டு, மூன்று,
நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து - இவற்றில் இசை அமைப்பதற்காகவே
இந்த 'உ' ஒலி பயன்படுகிறது. தெலுங்கிலே இந்த ஒலி இன்னும் மிகுதியாகப்
பயன்படுகிறது. கன்னு, மேமு, வாரு, வீரு, வாருலு, நேனு, மீரு, ஒகரு, இத்தரு
முதலாக ஏறக்குறைய எல்லாச் சொற்களிலும் 'உ' ஒலி சேர்த்து நயமாக
ஒலிக்கிறார்கள்.
இதுபோல் எத்தனையோ வழிகளில் சொற்கள் இனிய ஒலி பெற்று வழங்குகின்றன.
'வருபார்கள்' 'உண்வார்கள்' என்று நாம் சொல்கிறோமா? இல்லை. 'வருவார்கள்,
உண்பார்கள்' என்று சொல்கிறோம். சில இடங்களில் 'ப' ஒலி சேர்க்காமல்,
'வ' சேர்க்கிறோம்; வருவார், செய்வார், போவார் என்பவைபோல. வேறு இடங்களில்
'வ' ஒலி சேர்க்காமல், 'ப' ஒலி சேர்க்கிறோம்; உண்பார், தின்பார், இருப்பார், உடுப்பார்
என்பவைபோல. செல் - சென்றார்கள், நில் - நின்றார்கள் என்று
சொல்கிறோம். ஆனால் வில் - வின்றார்கள் என்று
சொல்வதில்லை. விற்றார்கள் என்று சொல்கிறோம்.
போடு - போட்டார்கள் என்று சொல்கிறோம்;
ஆனால் ஓடு - ஓட்டார்கள் என்று சொல்வதில்லை;
ஓடினார்கள் என்று சொல்கிறோம். செய் - செய்தார்கள் என்று சொல்கிறோம்.
ஆனால், உண் - உண்தார்கள், தின் - திந்தார்கள் என்று சொல்வதில்லை; உண்டார்கள்,
தின்றார்கள் என்று சொல்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கான சொற்களை
எடுத்து எண்ணிப் பார்த்தால், இனிய ஒலி வேண்டும் என்ற காரணத்தால்
சொற்கள் வெவ்வேறு வகையாய் அமைந்திருக்கின்றன என்பது தெரியும்.
இதுவரையில், பேச்சு வழக்கில் உள்ள சொற்களைப் பார்த்தோம். இசையோடு
அமைந்த பாட்டுக்களைப் பார்ப்போமானால், சொற்களில் உள்ள
இசை நயம் மிகமிகத் தெளிவாக விளங்கும். "செந்தமிழ் நாடென்ற போதினிலே -
இன்பத் - தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் - தந்தையர் நாடென்ற
பேச்சினிலே - ஒரு - சக்தி பிறக்குது மூச்சினிலே":
போதினிலே - காதினிலே ; பேச்சினிலே - மூச்சினிலே: இந்தச் சொற்களில்
உள்ள இசையைக் கேளுங்கள."கற்க கசடறக் கற்பவை கற்றபின்,
நிற்க அதற்குத் தக": இந்தக் குறளின் சொற்களில் உள்ள இசையையும் கவனியுங்கள்.
வந்த ஒலியே திரும்பத் திரும்ப வந்து ஒழுங்காக அமையும்போது
தானாகவே இசை பிறக்கிறது. இப்படிப்பட்ட
இசை நம்மை அறியாமலே நாம் பேசும் சொற்களில்
அமைந்திருக்கிறது. இதைத்தான் சொல்லின் இசை என்று சொல்கிறோம்.
4.சொல்லின் இலக்கணம்
மண்வெட்டியில் மண்ணை வெட்டுவது இரும்புத் தகடுதான். அதில் உள்ள
மரப்பிடி மண்ணை வெட்டவில்லை.ஆனால், மரப்பிடி இல்லாமல்
மண்ணை வெட்ட முடியுமா? முடியாது. ஆகவே,
மண்வெட்டியில் இரும்புத்தகடும் வேண்டும், மரப்பிடியும் வேண்டும். பயன்
இல்லாதது என்று அந்த மரப் பிடியை விடக்கூடாது. சொற்களிலும் அதேபோல்
பொருள் உள்ள சொற்களும் உண்டு; பொருள்
இல்லாத சொற்களும் உண்டு. பொருள் இல்லாத
சொற்கள் என்று சிலவற்றை நீக்கிவிட்டால் நன்றாகப் பேசவும் முடியாது; எழுதவும்
முடியாது. மொழி பயன் இல்லாமல் போகும். உதாரணம்
பாருங்கள்; 'அண்ணன் தம்பியைக் கண்டான்'
என்பது ஒரு வாக்கியம். அந்த வாக்கியத்தில் மூன்று
சொற்கள் உள்ளன.அண்ணன், தம்பி, கண்டான்
என்பவை அந்த மூன்று சொற்கள். அந்த மூன்று
சொற்களுக்கும் பொருள் உண்டு. ஆனால், 'தம்பியை' என்பதில் உள்ள 'ஐ'
என்பது என்ன? அதற்குப் பொருள் உண்டா? 'ஐ' என்றால்
யானையா, பூனையா? பெயரா? வினையா? ஒன்றும்
சொல்ல முடியாது. அப்படியானால் பயன் இல்லாதது என்று அதை விட்டுவிடலாமா?
அதுவும் முடியாது, விட்டுவிட்டால்,'அண்ணன் தம்பி
கண்டான்' என்று சொல்லவேண்டும். அப்படிச் சொல்லும்போது,யார் யாரைக்
கண்டார் என்பது தெரியவில்லை. பேசியும் பயன் இல்லாமல்
போகிறது: எழுதியும் பயன் இல்லாமல் போகிறது.
ஆகவே, இன்னது என்று தெரியாத அந்த 'ஐ'
கட்டாயம் வேண்டியதாக இருக்கிறது. இதுவும்
ஒரு சொல்தான். இதுபோன்ற எத்தனையோ சொற்கள் மொழிக்குப் பயன்படுகின்றன.
இவற்றை எல்லாம் இடைச்சொல் என்று சொல்வார்கள்.
இவற்றைக் கற்றுக்கொடுக்கும் பாடம் இலக்கணம் என்று சொல்லப்படும்.
ஆனால், இலக்கணம் என்ற பெயரைக் கேட்டால், உங்களில் பலர் பயப்படுகிறீர்கள்.
இலக்கணத்தைப் பற்றிக் கேட்டாலும் பயப்பட வேண்டியதில்லை; கண்டாலும்
பயப்படவேண்டியதில்லை. அது நம்மை ஒன்றும் செய்யாது. முன்னோர்கள்
இப்படிப் பேசினார்கள், இப்படி எழுதினார்கள்
என்று நமக்குத் தெரிவிப்பது இலக்கணம். ஆகவே,
அதைத் தெரிந்துகொண்டால் நல்லதுதானே?
வீட்டின் எதிரில் பெண் ஒருத்தி கோலம் போடுகிறாள். அவள் தன் கையில்
இருக்கும் மாவை அவசரக் கோலமாக அள்ளித் தெளிக்கவில்லை.
முன்னமே எண்ணிக்கொண்டு, திட்டமிட்டு, அங்கங்கே புள்ளிகளை வைத்து,
பிறகு வளைவுவளைவாகக் கோடுகளை இழுக்கிறாள். அதன் பிறகு பார்த்தால்,
கோலம் அழகாகத் தெரிகிறது. முன்னமே திட்டம்
இட்டுப் பழகாவிட்டால், அவளால் என்ன செய்ய முடியும்? கொண்டுவந்த
மாவைக் கண்டபடி கொட்டிவிட்டுப் போகவேண்டியதுதான், கோலம்
போடுவதற்கு எப்படித் திட்டம் பயன்படுகிறதோ,
அதேபோல் சொற்களைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இலக்கணம் பயன்படுகிறது.
ஆனால், இலக்கணம் வேண்டுமே என்று கவலைப் பட்டுக்கொண்டிருக்க
வேண்டியதில்லை. மற்றவர்களைப்போல் பேசியும் எழுதியும் பழகிவிட்டால்
இலக்கணம் தானே வந்துவிடும். கோலம் போடுகிற பெண் எப்படிப்
போடுவது என்று கவலையோடு நிற்பதில்லை. மற்றவர்கள் போடுவதைப்
பார்க்கிறாள்.அவர்களைப் போல் தானும் போடுகிறாள். முதலில் கொஞ்சம்
தடுமாறுகிறாள். பிறகு, பழகப் பழகத் திறமை
பெற்று விடுகிறாள். அதன்பிறகு, அவள் அறியாமலே
அவளுடைய கை மாவை எடுத்து அழகான கோலங்களைப் போட்டுவிடுகிறது.
அதுபோலவே, நீங்களும் நன்றாகப் பேசவும் எழுதவும் பழகிவிட்டால்
உங்களை அறியாமலே இலக்கணத்தில் வல்லவர்கள் ஆகிவிடுவீர்கள்.
இன்னொன்று சொல்கிறேன். படித்தவர்களுக்குத்தான் இலக்கணம் தெரியும்
என்று நீங்க்ள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அது தவறு. படிக்காத மக்களூம்
பேசுகிறார்கள் அல்லவா? ஆகவே, அவர்களுக்கும் இலக்கணம் தெரியும்.
"அண்ணனும் தம்பியும் வந்தான்" என்று படிக்காதவர்கள் யாராவது பேசுகிறார்களா?
"அண்ணனும் தம்பியும் வந்தார்கள்" என்றுதான் அவர்களூம் பேசுகிறார்கள்.
"நாளைக்கு வந்தேன்","நேற்று வருவேன்" என்று
படிக்காதவர்களிடம் சொல்லிப் பாருங்கள். அவர்கள் சிரிப்பார்கள். "மரம் விழுந்தான்",
அவர்கள் வந்தது என்று சொல்லிப் பாருங்கள். "உங்களுக்குத்
தமிழே தெரியவில்லை" என்று சொல்லிவிடுவார்கள். திணை, பால், எண்,
இடம் முதலான இலக்கணங்கள் உங்களுக்கு மட்டும் தெரியும் என்று
எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் நீங்கள்
பிழையாகப் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால், இலக்கணத்தில் சில பகுதிகள்,
படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு நன்றாகத் தெரியும். இலக்கணம்
அறிந்தவர்கள் சைக்கில் விடுகின்றவர்களைப் போன்றவர்கள் சைக்கில்
செய்கின்றவர்களைவிடச் சைக்கில் விடுகின்றவர்களுக்கு அதனுடைய அருமை
பெருமைகள் நன்றாகத் தெரியும். உதாரணம் சொல்லட்டுமா? படித்தவர்களில் சில பேர்
எழுதும்போது, "அப்போது ஒருவள் வந்தாள்" என்று எழுதுகிறார்கள். 'ஒருவள்'
என்னும் சொல், தமிழில் இல்லாத சொல்; தவறான சொல். நாட்டுப்புறத்து
மக்கள் யாரும் 'ஒருவள்' என்று பேசவே மாட்டார்கள். இது படித்தவர்கள் சிலர்
செய்யும் தவறு. உதாரணம் இன்னொன்று பாருங்கள், படிக்காதவர்கள் பேசும்
போது,'முயற்சி செய்கிறான்' என்றுதான் பேசுகிறார்கள். படித்தவர்கள் சிலர்
பேசும்போதும் எழுதும்போதும் 'முயற்சிக்கிறான்' என்று குறிப்பிடுகிறார்கள்.
அதுவும் தமிழுக்கு ஒத்துவராத பிழையான சொல்தான். இப்படி எத்தனையோ
உதாரணம் சொல்லலாம்.
"படிக்காதவர்களுக்கும் இலக்கணம் தெரிகிறதே, அது எப்படி?" என்று
நீங்கள் கேட்கலாம். பலரும் பேசிப் பேசி, இந்தச் சொல்லை இன்ன
இடத்தில் இப்படித்தான் வழங்கவேண்டும் என்று ஓர் அமைப்பு ஏற்பட்டு
விடுகின்றது. அந்தச் சொற்களைப் பேசக் கற்றுக்கொள்ளும்போதே,
அவற்றின் அமைப்பும் மனத்தில் பதிந்துவிடுகின்றது. அந்த அமைப்புத்தான்
இயற்கையான இலக்கணம். 'அவர்கள்' என்னும் சொல் பலரைக்
குறிக்கின்றது. அதோடு வினைச்சொல்லைச் சேர்க்கும்போது, பலரை
உணர்த்தும் வினைச்சொல்லையே சேர்க்கிறார்கள். அதனால்தான் 'அவர்கள்
வந்தது' என்று சொல்லாமல்,'அவர்கள் வந்தார்கள்' என்று சொல்கிறார்கள்.
இவற்றை எல்லாம் தெளிவுபடுத்துவதற்குத்தான் இலக்கணம் எழுதியிருக்கிறார்கள்.
திணை, பால், எண், இடம், வேற்றுமை, காலம், முற்று, எச்சம், எழுவாய்,
பயனிலை முதலான பெயர்களைவைத்துச் சொற்களின்
இலக்கணத்தை ஆராய்கின்றார்கள். எழுவாயின் திணைபால், பயனிலையின்
திணை பாலோடு ஒத்திருக்கவேண்டும் என்றும், இன்ன வேற்றுமை உருபு
இப்படி முடியவேண்டும் என்றும், எச்சம் இவ்வாறு முற்றோடும் பெயரோடும்
முடியவேண்டும் என்றும் பலவாறு விரிவாக எழுதியிருக்கிறார்கள். இவற்றை
எல்லாம் கற்றுக்கொண்டால் நல்லதுதான். சைக்கில் ந்ன்றாக ஓட்டக் கற்றுக்
கொண்டவன், சைக்கில் எப்படிச் செய்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ள
ஆசைப்படுகிறான் அல்லவா? அதுபோல், நீங்கள் பேசியும் எழுதியும்
பழகிய தமிழ்ச்சொறகள் என்ன இலக்கணத்தோடு அமைந்திருக்கின்றன
என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுங்கள். ஒவ்வொரு மொழிக்கும்
இலக்கணம் ஒவ்வொரு வகையாக இருக்கும்.மொழிகளை ஒப்பிட்டுப்
பார்க்கும்போது எவ்வளவோ வேடிக்கையான உண்மைகள் எல்லாம்
தோனறும்.
அவைகள் இருக்கட்டும். குழந்தைகள் பேசுகிற பேச்சையும் நாம் பேசுகிற
பேச்சையும் ஒப்பிட்டுப்பாருஙகள். நாம் 'எனக்கு' என்று சொல்கிறோம்.
குழந்தை 'நானுக்கு' என்று சொலகிறது. நாம் 'உனக்கு' என்று சொல்வதை
குழந்தை 'நீக்கு' என்று சொல்கிறது. அதே குழந்தை வளர்ந்த பிறகு,
நானுக்கு நீக்கு முதலான சொற்கள் தவறானவை என்று தெரிந்து கொள்கிறது.
மற்றவர்கள் 'எனக்கு, உனக்கு' என்று பேசுவதைக் கவனிக்கிறது.
தன்னைத்தானே திருத்திக்கொள்கிறது.பிறகு, நம்மைப் போலவே 'எனக்கு,
உனக்கு' என்று தவறு இல்லாமல் பேசுகிறது.அந்தத் தவறு எப்படித்
திருந்தியது? இலக்கணம் படித்து அதனால் திருந்த வில்லை. மற்றவர்கள்
பேசுவதைக் கேட்டு அவர்களைப் போல் பேசி மதிப்புப் பெற வேண்டும்
என்ற ஆசையால் திருந்தியது. சின்ன குழந்தை தலைமயிரைச் சரியாக
வாரிக்கொள்வ தில்லை. முகத்தையும் நன்றாகக் கழுவிக்கொள்வ தில்லை.
ஆனால் வளர்ந்த பிறகு, மற்றவர்கள் ஒழுங்காக அழகுபடுத்திக்கொள்வதைப்
பார்த்துத் தானும் தலைமயிரை வாரிக்கொள்கிறது; முகத்தையும் அழகு
படுத்திக் கொள்கிறது. மற்றவர்களைப் போல் ஒழுங்காக, மதிப்போடு
வாழவேண்டும் என்ற பழகிய தமிழ்ச் சொற்கள் என்ன இலக்கணத்தோடு
அமைந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுங்கள். ஒவ்வொரு
மொழிக்கும் இலக்கணம் ஒவ்வொருவகையாக இருக்கும். மொழிகளை
ஒப்பிட்டுப் பார்க்கும்போது எவ்வளவோ வேடிக்கையான உண்மைகள்
எல்லாம் தோன்றும்.
அவைகள் இருக்கட்டும். குழந்தைகள் பேசுகிற
பேச்சையும் நாம் பேசுகிற பேச்சையும் ஒப்பிட்டுப்
பாருங்கள். நாம்'எனக்கு' என்று சொல்கிறோம்.
குழந்தை' நானுக்கு' என்று சொல்கிறது. நாம்
'உனக்கு' என்று சொல்வதைக் குழந்தை'நீக்கு'
என்று சொல்கிறது. அதே குழந்தை வளர்ந்த
பிறகு, 'நானுக்கு' 'நீக்கு' முதலான சொற்கள்
தவறானவை என்று தெரிந்துகொள்கிறது. மற்றவர்கள் 'எனக்கு, உனக்கு' என்று
பேசுவதைக் கவனிக்கிறது. தன்னைத் தானே திருத்திக்கொள்கிறது. பிறகு,
நம்மைப் போலவே 'எனக்கு, உனக்கு' என்று தவறு இல்லாமல் பேசுகிறது.
அந்தத் தவறு எப்படித் திருந்தியது? இலக்கணம் படித்து அதனால்
திருந்தவில்லை. மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு
அவர்களைப் போல் பேசி மதிப்புப் பெறவேண்டும்
என்ற ஆசையால் திருந்தியது. சின்ன குழந்தை
தலை மயிரைச் சரியாக வாரிக்கொள்வ தில்லை.
முகத்தையும் நன்றாகக் கழுவிக்கொள்வ தில்லை.
ஆனால், வளர்ந்த பிறகு, மற்றவர்கள் ஒழுங்காக
அழகுபடுத்திக்கொள்வதைப் பார்த்துத் தானும் தலைமயிரை வாரிக்கொள்கிறது;
முகத்தையும் அழகு படுத்திக்கொள்கிறது. மற்றவர்களைப் போல்
ஒழுங்காக, மதிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசைதான் அதற்குக் காரணம்.
சொற்களைப் பேசும்போதும், இந்த ஆசைதான் திருத்தமாகப்
பேசச் செய்கிறது. அதனால்தான் சொற்களின்
இலக்கணம் மக்களுக்கு இயல்பாகத் தெரிந்ததாகி விடுகிறது.
சொற்களின் இலக்கணத்தைப் பொறுத்த
வரையில், இன்னொன்று கவனிக்கவேண்டும். குழந்தைகளின் பேச்சில் தவறு உண்டு
என்றும்,வளர்ந்த மக்களின் பேச்சில் தவறு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
அவர்-அவர்க்கு,இவர்-இவர்க்கு, தாய்-தாய்க்கு என்பவை போல, நீ-நீக்கு, நான்-
நானுக்கு என்று சொல்லவேண்டும். அதுதான்
பொருத்தம். குழந்தை ஒன்று பேசும்போது பிழை
கண்டு பிடிக்கிறோம். உனக்கு,எனக்கு என்று
சொல்லித் திருத்துகிறோம். உண்மையாகப் பார்த்தால், உனக்கு,எனக்கு என்ற
சொற்கள் தவறாக மாறிவிட்ட சொற்கள் என்பதை உணரலாம்.
ஆஙகில நாட்டிலும் 'கோ' (go), பய்(buy)
முதலான சொற்களின் இறந்த காலமாக வெண்ட் (went), பாட்(bought) என்று
சொல்லாமல் கோய்ட்(goed), பய்ட்(buyed) என்று ஆங்கிலேயக் குழந்தைகள்
பேசுகின்றனவாம். வளர்ந்த மக்கள் பேசும் வெண்ட்,பாட் என்னும் சொற்கள்
ஒழுங்கு இல்லாமல் தோன்றியபோதிலும், அவை
களையே குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 'வல்லான் வகுத்ததே
வாய்க்கால்.' செல்வாக்கு உள்ளவர்கள் பேசும் சொறகளே
சொற்கள். கஜக்கோல்,படி முதலியவை போலச் சொற்களின் இலக்கணத்தை
அளந்து தரக்கூடிய பொதுவான கருவி ஒன்று இல்லை. இங்கே, பெரும்பாலோர்
இட்டதே சட்டம்.அதைத்தான் ‘மரபு' என்று சொல்கிறார்கள். இது இலக்கணத்தில்
ஒரு முக்கியமான பகுதி. நாய்க்கன்று, பசுக்குட்டி என்று சொல்லாமல்
நாய்க்குட்டி, பசுங்கன்று என்று சொல்லியாகவேண்டும்.
இப்படிச் சொற்களின் இலக்கணத்தில் எவ்வளவோ கற்றுக்கொள்ள
வேண்டியவை உள்ளன. ஆனால் நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. கற்றவர்கள்
பேசுவதைப் பார்த்துப் பேசுங்கள்; கற்றவர்கள் எழுதுவதைப் பார்த்து எழுதுங்கள்.
உங்களை அறியாமலே இலக்கணம் உங்கள் மனத்தில் பதிந்துவிடும்.
5. இடப்பேச்சுக்களும் கொச்சை மொழிகளும்
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குப் புதியவராக வந்தார் ஒருவர். ஒரு
கடைக்கு போனார். ஒரு பொருளைக் காட்டி, “இது என்ன விலை அய்யா?”
என்றார். கடைக்காரனுக்குக் கோபம் வந்தது. “என்ன அப்பா, பெரிய சீமான்
என்று நினைத்துக்கொண்டு பேசுகிறாயோ?” என்றான். தஞ்சாவூராக்கு
ஒன்றுமே விளங்கவில்லை. பேசாமல் நின்றார். அவருக்கும் கோபம் வந்தது.
சிறிது அமைதிக்குப் பிறகு கடைக்காரன் அவரைப் பார்த்து, “மனிதனுக்கு
மனிதன் சமமாக எண்ணிப் பேசு அப்பா. அய்யா கிய்யா என்று இப்படிப்
பேசுகிறாயே?” என்றான். பக்கத்திலிருந்த ஒருவர் அப்போது குறுக்கே
வந்து தஞ்சாவூர்க்காரரைப் பார்த்து, “நீங்கள் வெளியூர்க்காரர்போல்
தெரிகிறது. இங்கே அய்யா என்று கூப்பிட்டால் கோபம் வரும். அப்படிப்
பேசாதீர்கள்” என்றார். உடனே தஞ்சாவூர்க்காரர் இவரைப் பார்த்து,
“கடைக்காரர்மட்டும் என்னை அப்பா கிப்பா என்று ஒருவகையாகப்
பேசுகிறாரே அதுமட்டும் தகுமா?” என்றார். அப்போதுதான் ஒருவர்கொருவர்
கொண்ட கோபத்தின் காரனம் விளங்கியாது.
தஞ்சாவூர் தமிழ்நாட்டில் உள்ள நகரம். சென்னை தமிழ்நாட்டின்
தலைநகரம்.அப்படி இருந்தும், 'அய்யா' என்றால் சென்னைத்
தமிழர்க்குக் கோபம் வருகிறது. 'அப்பா' என்றால் தஞ்சாவூர்த் தமிழர்க்குக்
கோபம் வருகிறது. இருவரும் பேசுவது ஒரே மொழியாக இருந்தபோதிலும்,
இப்படி இடத்துக்கு இடம் பேச்சில் வேறுபாடு இருப்பதைக் காணலாம்.
திருநெல்வேலியில்,"ஒரு குவளையில் குடிக்கத் தண்ணீர் கொண்டுவா"
என்பார்கள்;"வாளியால் தண்ணீர் கொண்டுவா'"என்பார்கள். வட ஆர்க்காடு,
தென் ஆர்க்காடு,செஙகல்பட்டு ஆகிய ஜில்லாக்களில் வாழும் தமிழர்களுக்குக்
'குவளை' என்றாலும் தெரியாது; 'வாளி' என்றாலும் தெரியாது. 'டம்ளர்',
'பக்கெட்' என்று ஆங்கிலச்சொற்களைச் சொன்னால்தான் தெரியும். தமிழ்
நாட்டின் தெற்குப் பகுதியில் குடிநீர்க்குப் பயன்படும் நீர் நிலையை 'ஊருணி'
என்று சொல்வார்கள், வயல்களில் பயிருக்குப் பயன்படுமாறு நீர் தருவதைக்
குளம் என்று சொல்வார்கள். மற்றப் பகுதிகளில் குடிதண்ணீர் தருவதைக்
குளம் என்றும், பயிருக்குப் பயன்படுவதை ஏரி என்றும் சொல்வார்கள்.
இப்படி இடத்துக்கு இடம் சில சில சொற்கள் வேறு வேறு பொருளில்
பேசப்படுவதைக காணலாம். நூற்றுக்கு 90,95 சொற்கள் எல்லா இடங்களுக்கும்
பொதுவாக ஒத்திருக்கும்.
ஆனால், நூற்றுக்கு 10 அல்லது 5 சொற்கள் வெவ்வேறாக இருக்கும்.
இப்படி வெவ்வேறாக உள்ள சொற்களை என்ன என்று சொல்வது?
அவைகளையே இடப்பேச்சுக்கள்(dialects) என்று சொல்வார்கள்.
ஒரு மலைக்கு இந்தப் பக்கம் ஓர் ஊரும் அந்தப் பக்கம் ஓர் ஊரும்
இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஊரிலும் உள்ளவர்கள்
ஒரே மொழி பேசுகின்றவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நாளடைவில் இவர்களுடைய பேச்சில் ஒற்றுமை இருந்த போதிலும்
சில வேறுபாடுகள் அமைந்து விடும். இதற்குக் காரணம் அந்த ஊர்களுக்கு
இடையில் மலை நின்று போக்குவரவுக்குத் தடையாய்ப்பிரித்த பிரிவே
ஆகும். ஆறு முதலியவைகளாலும் இப்படிப் பிரிவு ஏற்பட்டு, இடப்பேச்சு
வேறு வேறாக அமைவது உண்டு. ஒரு ஜில்லாவுக்கும் மற்றொரு
ஜில்லாவுக்கும் உள்ள பேச்சிலும் இப்படியே இடம் காரணமாக வேறுபாடு
ஏற்படும்.
மலையாள மொழி ஒரு காலத்தில் தமிழாகவே இருந்ததுதான். ஆனால்,
மேற்குத் தொடர்ச்சிமலை பிரித்தபடியாலும், அரசாங்கம் வேறாக
இருந்ததாலும், அந்த நாட்டு மக்கள் பேசும் பேச்சு மெல்ல மெல்ல
மாறிவிட்டது. நூற்றுக்கு ஐந்து பங்காக இருந்த வேறுபாடு நூற்றுக்கு
ஐம்பதாக ஆகிவிட்டது. அதனால் அங்கே தமிழ் மறைந்து வேறு
தனிமொழியாக ஏற்பட்டுவிட்டது. இடப் பேச்சாக உள்ள ஒரு மொழியின்
பிரிவு, நாளைடைவில் இப்படி வேறொரு மொழியாகவே மாறுவது உண்டு.
தெலுங்கும் கன்னடமும் ஒரு காலத்தில் இப்படி இடப்பேச்சுக்களாக இருந்து
மாறி ஏற்பட்டவைதான். நாம் இப்போது தமிழ்நாட்டில் பேசும் பேச்சும்
ஒருவகையாக இல்லை. ஆனால், புத்தகங்கள், பத்திரிகைகள், வானொலி
முதலிய காரணங்களால், எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவான தமிழ்
ஒன்று இருந்துவருகிறது. அதனால் தமிழர் ஒர் இனமாய்ப் பழகமுடிகிறது.
இவ்வாறு, இடப்பேச்சு ஏற்படுவதற்கு இடம் காரணமாக இருப்பது தவிர,
வேறு சில காரணங்களும் உண்டு. வியாபாரிகள் பேசுகின்ற பேச்சில் சில
தனிப்பண்புகள் உண்டு. வழக்கறிஞர்கள் சட்டத்தில் பழகிப் பேசும் பேச்சில்
சில வேறுபாடுகள் உண்டு. சமயத்துறையிலும் இப்படிப்பட்ட
இடப்பேச்சுக்களைக் காணலாம். சைவர், வைணவர், கிறிஸ்தவர், முகமதியர்
எல்லோரும் தமிழரே ஆனபோதிலும், இவர்களின் சமயத்துறையில்
வெவ்வேறு சொற்கள் பேசப்படுகின்றன. பதி, பசு என்றால் சைவர்களுக்குப்
பொருள் வேறு. அமுது, திருவடி என்பவற்றை வைணவர்கள் குறிப்பிட்ட
பொருளீல் வழங்குகிறார்கள். இவைகளும் இடப் பேச்சுக்களே. அரசியல்
வைத்தியம் முதலிய மற்றத்துறையிலும் இடப்பேச்சுக்களைக் காணலாம்.
உதாரணம் பாருங்கள்: பொதுவான தமிழில் 'வரவு' என்றால் வருதல் என்று
பொருள். 'செலவு' என்றால் செல்லுதல் என்று பொருள். ஆனால் வியாபாரிகள்
பேச்சில் 'வரவு', 'செலவு' என்றால் வந்த பணம், செலவான பணம்
என்று பொருள். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த வேறு உதாரணங்கள்
கேளுங்கள்: பொதுவான தமிழில் 'பெயர்' என்றால் என்ன என்று உங்களுக்குத்
தெரியும். ஆனால், இலக்கணத்தில் 'பெயர்' என்றால், நால்வகைச் சொல்லில்
ஒருவகை என்று அறிவீர்கள். 'வினை' என்றால், பொதுவான தமிழில்,
தொழில்,செயல், வேலை என்று பொருள்படும். ஆனால் சமயத்துறையில்
'வினை' என்றால், ஊழ்வினை என்று பொருளாகிறது. இலக்கணத்தில்
'வினை' என்றால், ஒரு வகைச்சொல்லைக் குறிக்கிறது. இப்படியே ஒவ்வோர்
இடத்திலும் ஒவ்வொரு துறையிலும், சில சொற்கள் வெவ்வேறாகப்
பொருள் உணர்த்தக் காண்கிறோம். இவைகளே இடப்பேச்சுக்கள்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் பேசுவதும் தமிழே. ஆனால் இடப்பேச்சாக
அவர்களின் தமிழிலும் சில வேறுபாடுகள் உண்டு. ஓய்வாக என்று நாம்
சொல்வதை அவர்கள் 'ஆறுதலாக' என்பார்கள். ஆறுதலாக என்றால் நமக்குப்
பொருள் வேறு. 'நாங்கள்' என்பது தன்மைப் பன்மையான சொல். அதில்
எதிரில் உள்ளவர்களைச் சேர்த்துப் பேசும் கருத்து இல்லை. 'நாம்' என்பது
அப்படி அல்லாமல், எதிரில் உள்ளவர்களையும் சேர்த்துப் பேசும் கருத்து
உடையது. ஆனால் இலங்கைத் தமிழில், 'நாங்கள்' என்பதே வழங்குகிறது.
அதற்கு நாம் என்பதே பொருளாக உள்ளது.
இடப்பேச்சுக்களில், சொற்கள் வேறுபொருள் உணர்த்துவது மட்டும் அன்று.
வேறு வேறு வகையாகவே ஒலிக்கப்படுவதும் உண்டு. 'வாழைப்பழம்'
என்பதைச் சில இடங்களில் 'வாயப்பழம்' என்று ஒலிக்கிறார்கள். வேறு
சில இடங்களில் 'வாளப்பளம்' என்கிறார்கள். இப்படி ஒலி வேறுபடுவதும்
இடப் பேச்சாகவே கொள்ள வேண்டும். நிரம்ப நல்லவர் என்பதைச் சில
இடங்களில் 'ரொம்ப நல்லவர்' என்பார்கள். சில இடங்களில்
'ரம்ப நல்லவர்' என்பார்கள்.
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் பேசும் சொற்கள்
ஒருவகையாக ஒலிக்கப்படும். சாதியை ஒட்டித் தொழில் அமையும்
இடங்களில், ஒவ்வொரு சாதியும் வெவ்வேறு வகையாக ஒலிப்பது உண்டு.
'இருக்குது' என்று சிலர் பேசுவார்கள். 'இருக்கு' என்று சிலர் சொல்வார்கள்.
'கீது' என்று சிலர் ஒலிப்பார்கள். இவைகளும் இடப்பேச்சுக்களில் சேர்க்கப்பட
வேண்டியவைகளே. இவைகளில் எவ்வளவோ தவறுகள் உண்டு.
ஒவ்வொரு வகையார் ஒவ்வொரு வகையான தவறு செய்வார்கள்.
புத்தகங்களில் உள்ளபடி சொற்களை ஒலிக்காமல், வெவ்வேறு வகையாகக்
குறைத்தும் மாற்றியும் ஒலித்தால் அவைகள் கொச்சை ஒலிகள் என்று
கூறப்படும். 'ஏன் அடா', 'மூன்று' முதலியவைகளை 'ஏண்டா', 'மூணு'
என்றெல்லாம் ஒலிப்பது கொச்சையே ஆகும். 'வந்தது', 'போனது',
இழுத்துக்கொண்டு' முதலான சொற்களை 'வந்துச்சி', 'போச்சி',
'இசுத்துக்கினு' என்று கொச்சையாக ஒலிப்பார்கள். இந்தக் கொச்சை
ஒலிகளில் சில படிப்படியாகச் செல்வாக்குப் பெற்று நல்ல மொழியாக
மாறிவிடுவதும் உண்டு.பாய்கிறது என்பதைப் பாயுது என்றும்,
பிறக்கிறது என்பதைப் பிறக்குது என்றும் பாரதியார் பாட்டில்
கேட்கிறோம் அல்லவா? இவைகளை இலக்கணத்தில் மரூஉ என்று
குறிப்பிடுவார்கள். ஆனால் நாகரிகம் குறைந்த தாழ்வான மக்கள்
பேசும் பேச்சின் ஒலிகள் இவ்வாறு மரூஉ என்று கொள்ளப்படுவதில்லை.
உயர்ந்தவர்கள் - பெரும்பான்மையோர் - கொச்சையாக ஒலிக்கும்
ஒலிகளே நாளடைவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்தக் கொச்சைத் தன்மை சொற்களின் ஒலியில் ஏற்படாமல்,
சொற்களின் பொருளில் ஏற்பட்டால், அவைகள் கொச்சைமொழிகள்
(slang) எனப்படும். "பணம் இருந்தால் நடக்கும்" என்று ஒருவன்
சொல்ல விரும்புகிறான். ஆனால் அப்படிச்சொல்வதில் புதுமை
இல்லை, சுவை இல்லை; ஆகையால் கேட்போரின் கருத்தைக்
கவர்வதற்காக அவன் என்ன சொல்கிறான் தெரியுமா? எல்லோரும்
நெடுங்காலமாகச் சொல்லி வந்த 'பணம்' என்னும் சொல்லைச்
சொல்வதில்லை. அந்தச் சொல்லால் பயன் குறைவு என்று உணர்ந்து,
அதற்குப் பதில் 'வெள்ளையப்பன்' என்கிறான். "வெள்ளையப்பன்
இருந்தால் நடக்கும்" என்று அவன் மாற்றிச் சொல்லும்போது
கவர்ச்சியாக இருக்கிறது. "அடி கொடுப்பேன்", "உதை கொடுப்பேன்"
என்று சொல்லாமல், "பூசை கொடுப்பேன்" என்று சொல்லும்போது
புதுமையின் கவர்ச்சி இருக்கிறது. வியாபாரத்தில் நஷ்டமாகிவிட்டது
என்னும்போது, "மொட்டையாய் விட்டது" என்று சொல்வதும் அப்படியே.
பரீட்சையில் தவறிவிட்டான் என்று சொல்லாமல் "பரீட்சையில்
கோட் அடித்தான்", "பல்டி போட்டான்" என்று சொல்வதும்
அப்படியே. உணவு விடுதியை ஓட்டல் என்று சொல்லாமல்
"மாமியார் வீடு" என்று கூறுவதும் அந்த வகையே ஆகும்.
ஆனால், இப்போது சொன்ன இந்தப் புதுச்சொற்களைப் பாருங்கள்.
இவைகளை இடப்பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. இடப்
பேச்சாக இருந்தால், ஒரு ஜில்லாவில், அல்லது ஓர் ஊரில்,
அல்லது ஒரு துறையில், அல்லது ஒரு கூட்டத்தாரிடத்தில் வழங்க
வேண்டும். ஆனால் 'வெள்ளையப்பன்', 'பூசை', 'மொட்டை', 'மாமியார்
வீடு' முதலானவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது துறையில்
பேசப்படுகின்றவை அல்ல. பழக்கப்பட்டுப்போன பழஞ் சொற்களுக்குப்
புதிய உயிர், புதிய கவர்ச்சி தரவேண்டும் என்று நினைக்கிறவர்கள்
எல்லாரும் இந்தச் சொற்களைப் பேசுகிறார்கள். ஆகையால் இவைகள்
இடப்பேச்சில் அடங்காமல், கொச்சைமொழிகள் என்று குறிக்கப்படும்.
இடப்பேச்சுக்களைப் பேசுகின்றவர்கள், வேறு பாடுகளை அறியாமலே
பேசுகின்றார்கள். அவர்களை அறியாமலே ஊருக்கு ஊர், துறைக்குத்
துறை, கூட்டத்துக் கூட்டம் சொற்கள் மாறியிருக்கின்றன.
ஆனால், மேலே குறிக்கப்பட்ட கொச்சைமொழிகள் அப்படிப்பட்டவை அல்ல.
பேசுவோர் தாங்களாகவே புதுமையாகப் படைத்துப் பேசுகின்ற
சொற்களாகும். இடப்பேச்சுக்கள், இயல்பாக மக்களிடையே ஏற்படுகின்றவை.
கொச்சைமொழிகள், மக்கள் வேண்டும் என்றே கவர்ச்சிக்காக
ஏற்படுத்துகின்றவை. ஆகையால் அவைகள் வேறு, இவைகள் வேறு.
கொச்சைமொழிகளை முதலில் பேசுகின்றவர்கள் யார்? ஒரு கூட்டத்தார்
அல்லது ஓர் இடத்தார் அல்ல. கவர்ச்சியிலும் புதுமையிலும் ஈடுபட்டவர்கள்
யாரோ, அவர்களே இப்படிக் கொச்சை மொழிகளைப் பேசத்தொடங்குகிறார்கள்.
அவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. வாழ்க்கையில் விளையாட்டு உணர்ச்சி
உடைய இளைஞர்களே இப்படிப் புதிய கவர்ச்சியான சொற்களைப் படைத்துப்
பேசுகின்றார்கள். இவற்றைப் படைப்பதில் ஒருவகை இன்பம் இருக்கின்றது.
கேட்பதில் ஒரு வகையான ஊக்கம் இருக்கின்றது. அதனால் இந்தச்சொற்கள்
வேகமாக மக்களிடையே பரவுகின்றன. சில சொற்கள் மிகவும் இழிவான,
மட்டமான போக்கில் அமைந்துவிடும். அப்படி அமையாமல் காத்துக்கொண்டால்,
இவற்றை யாரும் வெறுக்க மாட்டார்கள்.
ஆனால் ஒன்று, இடப்பேச்சுக்கு நீண்ட வாழ்வு உண்டு. கொச்சைமொழிகள்
நெடுங்காலம் வாழ்வதில்லை.காரணம் தெரியுமா? இன்று, கவர்ச்சியான
புதுமை வேண்டும் என்று "அவனுக்குப் பூசை விழுந்தது" என்கிறார்கள்.
இதையே பலமுறை பல ஆண்டுகள் சொல்லிப் பழகிவிட்டால் கவர்ச்சியும்
புதுமையும் இல்லாமற் போகின்றன. பழக்கம் எதையும் எப்படிப்பட்டதையும்
பழையதாக்கிவிடும் அல்லவா? நேற்றுப் புதிதாக இருந்த சொல், இன்று
பழைய சொல் ஆகிவிட்டால், நாளைக்கு வேறொரு புதுச்சொல் வேண்டியதாக
ஏற்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பழைய சொல் மறந்து கைவிடப்படுகிறது.
அதனால்தான், கொச்சைமொழிகள் நீண்ட காலம் வாழமுடியாமல்
அவ்வப்போது மறைந்து போகின்றன.
ஆசிரியரின் மற்ற நூல்கள்:
இலக்கியம்
நெடுந்தொகை விருந்து
முல்லைத்திணை
கண்ணகி
மாதவி
திருக்குறள் தெளிவுரை
தமிழ் நெஞ்சம்
மணல் வீடு
ஓலச் செய்தி
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்.
கதை
கள்ளோ? காவியமோ?
பெற்ற மனம்
பாவை
மலர் விழி
கி.பி.2000
விடுதலையா?
அந்த நாள்
செந்தாமரை
அல்லி
வரலாறு
காந்தி அண்ணல்
கவிஞர் தாகூர்
அறிஞ்ர் பெர்னாட் ஷா
நாடகம்
இளங்கோ
பச்சையப்பர்
மனச்சான்று
காதல் எங்கே?
பிற
எழுத்தின் கதை
மொழியின் கதை
மொழி நூல்
அரசியல் அலைகள்
அறமும் அரசியலும்
அன்னைக்கு
யான் கண்ட இலங்கை
This file was last updated on 25 December 2008.
Feel free to send corrections to the Webmaster.