அறநெறிச்சாரம்
முனைப்பாடியார்

aRaneRiccAram
mun2aippATiyAr

(in tamil- Unicode/utf-8 encoding)





Acknowledgements:

Etext preperation, Proof reading, Web versions in TSCII & Unicode

N D LogaSundaram & his daughter Ms. Selvanayagi - Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
You need to have a Tamil Unicode installed on your computer
and the browser set to display webpages with "utf-8" charset.

© Project Madurai 1998 - 2008

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to
preparation of electronic texts of tamil literary works and to distribute them
free on the Internet. Details of Project Madurai are available at the website

You are welcome to freely distribute this file, provided this header page is
kept intact


அறநெறிச்சாரம்

முனைப்பாடியார்

[[புகுமுன் சிறுகுறிப்பு - சமண சமயத்தைச்சார்ந்தவராக
காணப்படும் முனைப்பாடியார் எனும் நல்லாசிரியரால்
இயற்றப்பெற்ற இவ்வறநூல். சமூகத்திற்கான சீர்கருத்துகளை
நல்ல மேற்கோள்களால், எளிமையான சொற்களால்
விளக்குகின்றன. திருக்குறளின் சொல்லாட்சிகள்
பற்பல இதன் காணபடுகின்றன. புரத்திரட்டு எனும் பழம்
தொகுப்பு நூலில் இதன் கண்ணதான 34 பாடல்கள் உள்ளமை
இத்திரட்டின் அக்காலத்திய சிறப்பு போதரும்.

226 வெண்பாக்களால் ஆன இன்னுல்

பெயர் கொண்டு ஆசிரியர் 'முனைப்பாடி' எனும் இடத்தைச்
சார்ந்தவர் ஆகவேண்டும். இவ்வாறு வழங்கும் அரசாளும்
நாட்டுப் பிரிவினையை சேக்கிழார் தன் திருத்தொண்டர்
புராணத்தில் 18 இடங்களில் குறித்து நாவுக்கரசர் சுந்தரர்
எனும் இரு தேவார ஆசிரியர்களை ஈன்ற பீடுடைய நாடாக
காட்டுகின்றார். இ·து தற்கால தமிழ்நாட்டு பிரிவினதான
கடலூர் விழுப்புரம் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டமையும்]]

நூல்

1
தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவில்
தரித்தீண்டு அறநெறிச் சாரத்தை தோன்ற
விரிப்பன் சுருங்க விரைந்து

2
மறவுரையும் காமத் துறையும் மயங்கிப்
பிறவுரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
கேட்கும் கருத்துடை யோரே பிறவியை
நீக்கும் திருவுடை யார்

3
உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவது
உரைத்தத னாலாயய பயனும் - புரைப்பின்றிய
நான்மையும் போலியும் நீக்கி அவை நாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு

4
அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலங்கள் மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் - துறந்தடக்கி
மன்னுயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற்பட்ட வன்

5
பிள்ளை பேய்ப்பித்தன் பிணியாளன் பின்நோக்கி
வெள்ளைக்களி விடமன் வேட்கையால் - தெள்ளிப்
புகைக்ககப் பொரு ளுணர்வான் என்றிவரே நூலை
உரைத்தற்கு உரிமை யிலாதார்

6
தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை
என்றிருந்தும் கேளாத ஏழை எனயிவர்கட்கு
ஆன்றவர்கள் கூறார் அறம்

7
தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
வடுமாற்றம் அஞ்சித் தற்காப்பான் - படுமாற்றல்
ஒப்புரவு செய்து ஆண்டுறுதிச் சொல் சேர்பவன்
தப்பா¡ன் தருமு ரைக்கு

8
ஆவட்டை போன்று அறியாதாரை மயக்குறித்தி
பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய் - காவிட்டு
இருமைக்கும் ஏமம் பயவா எனவே
தருமத்துப் போலிகள் தாம்

9
வினையுயிர் கட்டு விடின்ன விளக்கி
தினையனைத்தும் தீமையின் றாகி - நினையுங்கால்
புல்லறத்தைத் தேய்தது உலகினொடும் பொருந்துவதாம்
நல்லறத்தை நாட்டு மிடத்து

10
புல்ல உரைத்தல் புகழ்தல் பொருளீதல்
நல்லரிவ ரென்று நட்பால் - சொல்லின்
அறம் கேள்வியால் ஆம்பய னென்றுரைப்பார்
மறங்கேள்வி மாற்றி யவர்

11
காட்சி யொழுக்கொடு ஞானம் தலைநின்ற
மாட்சி மனைவாழ்தல் அன்றியும் - மீட்சில்
வீட்டுலகம் எய்தல் எனயிரண்டே நல்லறம்
கேட்டதனா லாய பயன்

12
அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும்
செவ்விதின் நீக்கி சினம் கடுந்து - கவ்விய
எட்டுறுப்பினா யியல்பின் நற்காட் சியார்
சுட்டறுப்பர் நாற்கதியுட் துன்பு

13
அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்க பாசண்டமே தீத்தெய்வம் - மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றா தவர்

14
மன்னனுடன் வயிறு மாண்புடைத் தாய்தந்தை
முன்னி முடிக்கும் முனி யாசான் - பன்னியங்கு
ஆய குரவரிவர் என்ப வையத்துத்
தூயகுலம் சாதியார்க்கு

15
மாமாங்கம் ஆடல் மணல் குவித்தல் கல் இடுதல்
தாமோங்கு உயர்வரை மேல் சாவீழ்தல் - காமம் கொண்டு
ஆடோடு எருமை அறுத்தல் இவை உலக
மூடம் என உணறற் பாற்று

16
கண்டதனைத் தேறாதவனும் கனாக் கண்டு
பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும் - பண்டிதனாய்
வாழ்விப்பக் கொண்டானும் போல்வாரே வையத்துக்
கோள் விற்பக் கொள்ளா நிற்பர்

17
தோற்காவி சீரைத்துணி கீழ்விட விடுத்தல்
கோற்பாய் கரகம் குடை செருப்பு - வேலோடு
பல்லென்பு தாங்குதல் பல்சண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப் படும்

18
ஆவரண மின்றி யடுவானும் யானைதேர்
மாவரண மின்றி மலைவானும் - தாவில்
கழுதை யிலண்டம் சுமந்தா னும்போல்
பழுதாகும் பாசண்டி யர்க்கு

19
சக்கரன் நான்முகற் சங்கரற் பூரணன்
புத்தற் கபிலன் கணாதனென் - றெத்திறத்து
ஏகாந்த வாதிகள் எண்கெட்ட ஆதன்போல்
ஆகாதாம் ஆத்தற் துணிபு

20
அறியுடைமை மீக்கூற்ற மான குலனே
உறுவலி நற்றவம் ஓங்கிய செல்வம் - பொறி
வனப்பின் எம்போல்வா ரிலென்னு மெட்டும்
இறுதிக்க ணேமாப் பில

21
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய்பழி நீக்கம் நிறுத்தல் - மெய்யாக
அன்புடைமை ஆன்ற அறவிளக்கம் செய்தலொடு
யென்றிவை யெட்டாம் வுருப்பு

22
நிறுத்தறுத்து சுட்டுரைத்து பொன்கொள்வான் போல
அறத்திறனு மாராய்ந் துள்புக்கால் - பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும் ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு

23
காய்த லுவத்த லின்றி ஒருபொருட்கண்
ஆய்த லறிவுடையார்க் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்

24
இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
அறத்தானு மி·தே சென்றாற்றத் - துறந்தார்கள்
தம்பாலே வாங்கி யுரைத்ததனா லாராய்ந்து
நம்புக நல்ல அறம்

25
ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத் துளெல்லாம்
ஒன்றோடொன் றொவ்வாப்பொருள் தெரிந்து - ஒன்றோடொன்
றொவ்வா உயிரோம்பி உற்றூய்மை பெற்றதே
அவ்வாய தாகும் அறம்

26
துறந்தார் துறந்தில ரென்றறிய லாகா
துறந்தார் கொண்டொழுகும் வேடம் - துறந்தார்
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்றவர்
உள்ளம் கிடந்த வகை

27
இந்தியக்கு ஒல்கா யிருமுத் தொழில்செய்தல்
சிந்தைதீர் அப்பியத்தின் மேலாக்கல் - பந்த
மரிதலிவை யென்றும் ஆறொழுகு வார்க்கே
உரிதாகு மும்ப ருலகு

28
அழலடையப் பட்டா னதற்கு மாறாய
நிழலாதித னியல்பே நாடும் - அழலதுபோல்
காமாதி யாலாம் கடுவினைக் கட்டறுத்துப்
போமாறு செய்வார் புரிந்து

29
வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம்
வெப்பமே என்பார் விதியறிவார் - வெப்பம்
தணிப்பதூஉம் தட்பமே தான்செய் வினையைத்
துணிப்பதுஉம் தூய ஒழுக்கு

30
தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவில் துணிவொடு பக்கம் - மலைவின்றி
நாட்டி யிவ்வாறும் உரைப்பாரே நன்நெறியைக்
காட்டி யறமுறைப் பார்

31
தத்தம திட்டம் அதிட்டம் எனயிவற்றொடு
எத்திறத்தும் மாறாப் பொருளுறைப்பர் - பித்தரவர்
நூல்களும்பொய் யேஅந்நூல் விதியின் நோற்பவரும்
மால்களென உணரற் பாற்று

32
குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டு தம்முன்
தெருட்டி வழிசொல்லிச் சேரல் - திருட்டோட்டம்
மாறுகொள கிடந்த மார்கத்தால் நற்கதியில்
ஏறுதும் என்பார் இயல்பு

33
அற்றறியும் காரணத்தை ஆராய்ந்து அறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே - மற்றதனை
மாட்சி புரிந்த மதியுடை யாளரே
கேட்பர் கெழுமி யிருந்து

34
உருவு மொழுக்கமும் நூலும் பொருளும்
பொருளில் தலைமகனோடு யின்ன - ஒருவாது
கண்டு கருதி கயக்கறத் தேர்ந்தபின்
கொண்டு வீடேற்க அறம்

35
நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும் நொய்யயாம்
சால்பின்மைக் காட்டும் அவர்ச் செய்கை - பால்வகுத்துப்
பட்டிமையா லாகா பரமார்த்தம் பத்திமை
யொட்டுவான் உய்ந்துபோ வான்

36
புனைபடை கொண்டஞ்சித் தற்காப்பான் தன்னை
வினைகடியு மென்று யடிவீழ்தல் - பனையிருட்கண்
பல்லெலி தின்னப் மறைந்திருந்த பூனையை
இல்லெலி காக்குமென் றற்று

37
மாடமும் மண்ணீடும் கண்டடக்கம் இல்லாரைக்
கூடிவழிபடும் கோளமை - ஆடரங்கின்
ஏவகமாய் நினறானோர் கூத்தனை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்ற துடைத்து

38
நாற்றமொன்று இல்லாத பூவொடு சாந்தினை
நாற்றம்தான் வேண்டியது போலும் - ஆற்ற
மறுவறு சீலமும் நோன்பு மில்லாரை
உறுபயன் வேண்டிக் கொளல்

39
மாகடல்சூழ் வையகத்து மையாதாம் காத்தோம்பி
பால்கருதி யன்னது உடைத்தென்பர் - மேல்வகுத்து
மன்னிய நற்குணம் இலாதாரைத் தாம் போற்றிப்
புண்ணியம் கோடும் எனல்

40
உடங்கமிழ்தம் கொண்டா னொருவன் பலரும்
விடம்கண்டு நன்றிதுவே என்றால் - மடம் கொண்டு
பல்லவர் கண்டது நன்றென்று அமிழ்தொழிய
நல்லவனும் உண்ணுமொ நஞ்சு

41
அருள் வட்டமாக அறிவு கதிராய்
பொருள் வட்டமெல்லாம் விளக்கி - இருள் வட்டம்
மாற்று மறிவான ஞான வளரொளியான்
வேற்றுலிங்கம் தோன்றும் வெளிறு

42
தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில்
பன்னியறம் உரைக்க வல்லாரை - மன்னிய
சிட்ரென்ன சிட்டரென் றேத்துவார் அல்லாரைச்
சிட்டரென் றேத்தல் சிதைவு

43
எத்துணைக் கற்பினும் ஏகாந்த வாதிகள்
புத்தியும் சொல்லும் பொலிவிலவா - மிக்க
அறிவன் நூல்கற்றா ரலயென வேநிற்கும்
எறிகதிர்முன் நீள்சுடரே போன்று

44
பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டாம்
அலர்கதிர்ஞா யிற்றைகைக் குடையும்கரத் - திலையோ
கற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்

45
இம்மை யடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் - மெய்மையே
பட்டாங்கு அறமுரைக்கும் பண்புடை யாளரே
நட்டா ரெனப்படு வார்

46
நட்டா ரெனப்படுவார் நாடுங்கால் வையத்து
பட்டால் பலபிறப்புத் துன்பமென் - றொட்டி
அறநெறியை கைவிடா தாசாரங் காட்டி
பிறநெறி போர்க்கிற் பவர்

47
நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்
விட்டாரை யல்லாற் கொளல்வேண்டா - கட்டார்
பொறிசுணங்கு மென்முலைப் பொன்னனாய்
மறிதரவு யில்லாக் கதி

48
காலொடு கையமுக்கி பிள்ளைவாய் நெறித்து
பாலொடு நெய்பெய்யும் தாயனையர் - சால
அடக்கத்தை வேண்டி அறன்வலிந்து நாளும்
கொடுத் தொழுகு வார்

49
காய உரைத்தும் கருமம் சிதையாதார்
தாயரொடு ஒவ்வாரோ தக்கார்க்கு - வாய்பணிந்து
உள்ளமுருக உரைத்துப் பொருள் கொள்வார்
கள்ளரொடு ஒவ்வாரோ தாம்

50
முன்னின்று ஒருவன் முகத்திலும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்து - பின்னின்று
இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையா நின்ற நிலை

51
கயத்திடை உய்த்திடினும் கல்நனையா தென்றும்
கயத்தில் கறிவேவா தற்றால் - இயற்றி
அறவுரை கேட்டிடத்துங் கல்லனையர்
திறவுரை தேறா தவர்

52
வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
மெய்கனன்றல் சாலயறிதாம் - அ·தேவை
கல்லும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்கு
பொல்லினும் வல்னெனும் நெஞ்சு

53
பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு தெண்ணீ ரமுதமாம் - ஒம்பற்கு
ஒளியாம் உயர்ந்தார்க்கண் ஞான மதுபோல்
களியாம் கடையாயார் மாட்டு

54
வேட்டவாக் கேட்பர் விரைந்தோடி ஞானத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் - கோட்டில்லா
தோதுமின் ஓதியடங்குமின் என்னும் சொல்
கூதற்குக் கூதிர னைத்து

55
கடம்பன்தான் தன்னொடு காம்படு தோள்வள்ளி
உடம்பினும் கூட்டமதுவந்து கேட்பர் - அடங்கி
கொடுத்து உண்மின் கொண்டொழுக்கம் காணுமின்
அடுப்பேற்றி யாமைதீய்ந் தற்று

56
கல்லா ஒருவனைக் காரணம் காட்டினும்
இல்லை மற்றொன்றும் அறனுணர்தல் - நல்லாய்
நறுநெய் நிறைபுழுக்கல் உய்ப்பினும் மூழை
பெறுமோ சுவையுணரு மாறு

57
கட்டளைக் கோடி திரியின் கருதிய
இட்டிகையும் கோடு மதுபோலு - மொட்டிய
காட்சி திரியின் அறந்திரியு மென்றுரைப்பர்
மாட்சியில் மிக்கவர் தாம்

58
அம்மைத் தான்செய்த அறத்தின் வருபயனை
இம்மைத் துய்த்தின்புறா நிற்பவர் - உம்மைக்கு
அறம் செய்யாதைம்பு லனுமாற்றுதல் நல்லாக்
கறந்துண்ட· தோம்பாமை யாம்

59
முற்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இற்பிறந்து இன்புறா நிற்பவர் - இப்பிறப்பே
இன்னுங் கருதுமேல் ஏதம்கடிந் தறத்தை
முன்னிமுயன் றொழுகற் பாற்று

60
இறந்த பிறப்பில் தாம்செய்த வினையைப்
பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து
செய்யும் வினையா லறிக யினிப்பிறந்
தெய்தும் வினைப் பயன்

61
போற்றிக் கருமம் பிழையாமல் செய்குறின்
பற்றின்கண் நில்லாதறம் செய்க - மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த வூர்நாடி
கன்றுடைத் தாய்போல் வரும்

62
தானத்தில் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தில் மிக்க உசாத்துணையும் - மான
மழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழும் திறம்

63
கொன்றூன் நுகரும் கொடுமையை யுள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் - என்றும்
இடுக்க ணெனயுண்டோ யில்வாழ்க் கைக்குள்ளே
படுத்தானாம் தன்னை தவம்

64
ஒன்றாக நல்லதுயி ரோமபல் ஆங்கதன்பின்
நன்றாய்ந் தடங்கினார்க்கு ஈத்துண்ட - லென்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நினறது வாயில் திறந்து

65
கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப் படுவ தருளே - யடுத்தடுத்து
உன்னப் படுவது நல்ஞானம் எப்பொழுது
மென்னப் படுவது வீடு

66
குறைக்கருமம் விட்டுரைப்பின் கொள்ள உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க - பிறப்பிடைக்கோர்
நெஞ்சேமாப் பில்லாதான் வாழ்க்கை நிரயத்து
துஞ்சாத் துயரம் தரும்

67
திரையவித்து நீராட லாகா உரைப்பர்
உரையவித் தொன்றும் சொல்லில்லை - அரைசராய்
செய்து மறமெனினு மாகாது உளவரையால்
நைதவர்க்கே யாகும் திரு

68
காலத்தே செய்வோமென் றறத்தைக் கடைப்பிடித்து
சாலச் செய்வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தான் எழுத லரிதால் மற்றென்கொல்
அறங்காலை செய்யாத வாறு

69
மறந்தொருவன் வாழும் யிம்மாய மாவாழ்க்கை
அறிந்தொருவன் வாழுமேலில்லை - செறிந்தொருவன்
ஊற்றமிறந் துறுதிக் கொள்ளாக் கால்கொடிதே
கூற்றமிடைக் கொத்த நாள்

70
சென்ற நாளெல்லாம் சிறுவிரல்வைத் தெண்ணலாம்
நின்றநாள் யார்க்கு முணர்வரிது - என்றொருவன்
நன்மை புரியாது நாளுலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம்

71
உள்ளநாள் நல்லறம் செய்கென்னும் சாற்றன்றோ
இல்லைநாள் பேயென்று யிடம்கடிந்து - தொல்லை
இ¨டுக்கடையு மாற்றார் இறந்தார்க்கு நின்றார்
கடைத்தலை வைத்தீயும் புலி

72
பிச்சையும் ஐயமு மிட்டு பிறன்தார
எச்சிலும் நோக்காது போய்யொரீஇ - நிச்சலும்
கொல்லாமைக் காத்து கொடுத்துண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை யென்னு மியல்பு

73
விருந்து புறந்தரான் வேளான்மை செய்யான்
பெருந்தக் கவரையும் பேணான் - பிரிந்து§¡ய்க்
கல்லான் கடுவினை மேற்கொண் டொழுகுமே
லில்வாழ்க்கை யென்பது யிருள்

74
கொடுத்துக் கொணர்ந்து அறஞ்செல்வம் கோடாது
விடுத்துத்தம் வீடழிதல் கண்டார் - கொடுப்பதன்கண்
ஆற்றமு டியாதெனி னும்தா மாற்றுவார்
மாற்றார் மறுமைகாண் பார்

75
உப்புக் குவட்டின்மிசை யிருந்துண்ணினும்
இட்டுண்ணும் கலத்தூ றாதாம் - தொக்க
உடம்பும் பொருளும் உடையான் ஓர்நன்மை
தொடங்காக்கால் என்ன பயன்

76
பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனு ளாற்றுவதொன்
றிற்றைநாள் ஈத்துண்டு யினிதொழுகல் - சற்று
மிதனில் யிலேசுடைக் காணோ மதனை
முதனின்று நிலைதெரியுங் கால்

77
செல்வததைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்
பற்கிளையும் வாடாமல் பார்த்துண்டு - நல்லாம்
தானம் மறவாத தன்மையரேல் அ·தென்பர்
வானகத்து வைப்பதோர் வைப்பு

78
இட்டக் கடைதரார் ஈண்டும் பலிமறீஇப்
பட்டம் வழங்காத பான்மையார் - நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிப தாமாபோல் சுரந்து

79
நுறுங்கு பெய்தாக்கிய கூழார உண்டு
பிறங்கிருங் கோட்டொடன் றியும்வாழும் - அறம்செய்து
வாழ்வதே வாழ்க்கை மற்றெல்லாம் வெறும்
பேழைத் தாழ்கொளீஇ யற்று

80
கெடுப்பான் வினையல்லன் கொள்வானு மல்லன்
கொடுக்கப்படும் பொருளுமன்றால் - அடுத்தடுத்
தல்லவை யாதாம்கொல் நாடியுரை யாய்நீ
நல்லவர் நாப்பண் நயந்து

81
கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தின்
கொடுக்கப் படுதல் அமையின் - அடுத்தடுத்து
சென்றாங்க ணைந்து களைவினை யென்பரே
வென்றார் விளங்க விரித்து

82
கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில்
வடுதீர்ந்தார் உண்ணின் பெறலாம் - கொடுத்தாரைக்
கொண்டுய்யப் போவார் குணமுடையார் அல்லாதார்
உண்டீத்து வீழ்வார் கிழக்கு

83
நீத்தாற்றி நின்ற நிலையினார் உண்டாக்கால்
ஈத்தாற் றினாரும் உய்ப்போவார் - நீத்தாற்றில்
பெற்றிப் புனைஅன்னார் போர்த்துண்ணா விட்டக்கால்
எற்றாம் உயப்போம் உலகு

84
அடங்கி அடங்கினார்க்கீ தல்தலையே அடங்காது
அடங்கினார்க்கு ஈதல் யிடையே - நுடங்கிடையாய்
எற்பானும் தானும் அடங்காக்கால் அ·தென்ப
தோற்பாவை கூத்தினுள் போர்

85
நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி - தோற்புடைசூழ்
காழும் கடுகும் போல்நிற்கும் கயக்கினறி
ஆழிசூழ் வையகத்து அறம்

86
அட்டுண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்னும்
அட்டுண்ணா மாட்சி யுடையவர் - அட்டுண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை

87
அறுதொழில் நீத்தாரை மெச்சாது அவற்றோடு
உறுநரைச் சார்ந்து உய்ப்போதல் - இறுவரைமேல்
கண்ணில் முடவன் துணையாக நீள்கானம்
கண்ணிலான் சென்ற து¡டத்து

88
வாழ்நா ளுடம்பு வலிவனப்பு செல்கதியும்
தாழ்மண் நிலை ஒழுக்கம் காட்சியும் - தாமாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண்கொடையோடு
ஒன்றும் கொடையொப்ப தில்

89
மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரால் பூண்டீர்ப்பி னல்லால் - ஒருவரால்
இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான்சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று

90
வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றால்
மனைவாழ்க்கை மிகநன்று தவத்தில் - புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்தோம்பி
சொல்லெதிர் சொல்லா லெனின்

91
கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை - விண்டு
வெறுப்பன செய்யாமை வெ·காமை நீக்கி
உறுப்பெடு ணர்வுடையாள் பெண்

92
கொடுப்பதூஉம் மக்கள் பெறுவதூம் பெண்பால்
முடிப்பதூஉம் எல்லோரும் செய்வர் - படைத்ததனை
இட்டுண்டு இல்வாழ்க்கைப் புரிந்து நல்லறத்தை
நட்டாரே பெண்டி ரென்பர்

93
வனப்பொளி உடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்றுச் செய்தாங்கு - குனித்துரைய
தேற்றுப் பணியுமேல் இல்லாளை ஆண்மகனும்
போற்றிப் புனையும் புரிந்து

94
அயலுர் அவன்போக அம்மஞ்சளாடி
கயலேர் கண்ணார எழுதி - புயலம்பால்
வண்டோச்சி நின்றுலாம் வாளேர் தடங்கண்ணாள்
தண்டோசிப் பின்செல்லும் கூற்று

95
தலைமகனின் தீர்ந்துறைதல் தான்பிறனில் சேர்தல்
நிலைமையில தீப்பெண்டி ரோடூர்தல் - கலையறிந்து
வேற்றூர் புகுந்து விழாக்காண்டல் நோன்பிடுதல்
கோற்றொடியாள் கோளழியு மாறு

96
பிறர்க்கின்னா செய்தலின் பேதமை இல்லை
பிறர்க்கு இன்னாதென்று பேரிட்டு - தனக்கின்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலின்
பித்தும் உளவோ பிற

97
தன்னை ஒருவன்யிகழ்ந் துரைப்பின் தானவனைப்
பின்னை உரையாப் பெருமையான் - முன்னை
வினைப்பயனும் ஆயிற்றா மென்றதன்கண் மெய்ம்மை
நினைத்தொழிய நெஞ்சில்நோய் யில்

98
தம்புண் கழுவி மருந்திடுவார் தாம்பிறிதின்
செம்புண் ணறுத்த வாறிதென்பர் - அந்தோ
நடுநின் றுலக நயனிலா மாந்தர்
வடுவன்றோ செய்யும் வழக்கு

99
ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயன்
வெறுப்பார்க்கும் நானடங் கேனென்பர் - ஒறுத்தியேல்
ஆர்வ மயக்க குரோத மிவைமூன்றும்
ஊர்பகை நின்கண் ணொறு

100
ஒறுக்கிலேன் ஊர்பகை என்கண் பிறரை
ஒறுக்கிற்பே னென்றுரைப் பையாகின் - கறுத்தெறிந்த
கற்கறித்து கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லா
பற்கழல் நாயன்ன துடைத்து

101
கட்டெனச் சொல்லியக்கால் கல்பிளப்பில் தீயேபோல்
பொட்டப் பொடியாக்கும் குரோதத்தை - வெட்டெனக்
காய்த்துவரக் கண்டக்கால் காக்கும் திறலாரே
மாய்க்கும் முடிவெய்து வார்

102
எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் - மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதெனினும் வேண்டா தவம்

103
உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற்றுண்ண
இழந்திழந்து எங்கணும் தோன்ற - கழன்றுழர்ந்து
சுற்றத்தார் அல்லாதார் இல்லையேல் நன்நெஞ்சே
செற்றத்தால் செய்வ துரை

104
பட்டார்ப் படுத்து படாதார்க்கு வான் செறித்து
விட்டொழிவ தல்லால் யவ்வெங்கூற்றம் - ஒட்டிக்
கலாங் கொடுமை செய்யாது கண்டது பார்த்துண்டல்
புலாற்குடி லாலாய பயன்

105
ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி
பூசிப் பொதிந்த புலால் உடம்பு - ஊசல்
கயிறற்றால் போலக் கிடக்குமே கூற்றத்து
எயிறுற்றிடை முரித்தக் கால்

106
மூப்பொட தீப்பிணி முன்னுறீஇ பின்வந்து
கூற்றரசன் குறும் பெறியும் - ஆற்ற
அறஅரண மாராய்ந்து அடையி ன·தல்லால்
பிறவரண மில்லை உயிர்க்கு

107
மின்னு மிளமை உளதா மெனமகிழ்ந்து
பின்னை அறிகு என்றல் பேதைமை - தன்னைத்
துணித்தாலும் தூஙகா தறம் செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு

108
திருத்தப்படுவ தறம் கருமம் தம்மை
வருத்தியும் மாண்புடையார் செய்க - பெருக்க
வரவும் பெருங் கூற்றம் வன்கண் ஞமன்கீழ்
தரவறுத்து மீளாமை கண்டு

109
பாவம் பெருக பழிபெருக தன்ஓம்பி
ஆவதொன் றில்லை அறனொழித்து - பாவம்
பெறாஅ முறைசெய் பொருளில் ஞமன்கீழ்
அறாஉண்ணும் ஆற்றவும் நின்று

110
கோட்டுநா ளிட்டுக் குறையணர்ந்து வாராதால்
மீட்டொருநாள் யிடையும் தாராதால் - வீட்டுதற்கே
வஞ்சம்செய் கூற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சாது அமைந்திருகப் பாற்று

111
உயிர் வித்தி ஊன் விளைத்து கூற்றுண்ணும் வாழ்க்கை
செயிர் வித்திச் சீலம் தின்றென்னை - செயிரினை
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம்
கூற்றம் குறுகா யிடம்

112
இன்றுளார் இன்றேயு மாய்வர் அவருடைமை
பிறர் யுடைமையாய் யிருக்கும் - நின்ற
கருமத்தர் அல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்
தருமம் தலைநிற்றல் நன்று

113
இன்சொல் விளைநிலனாய் ஈதலே வித்தாக
வன்சொல்களை கட்டுவாய்மை யெருவாட்டி - அன்புநீர்
பாய்ச்சி அறக்கதிர் ஈன்ற தோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்

114
தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவும் துயிலும் ஒரீஇ - பருவத்து
பத்து எட்டு நாளைப் பயன் இலா வாழ்க்கைக்கு
வித்துக்குற்று உண்பார் பலர்

115
முன்னே ஒருவன் முடித்தான் தன் துப்பு எலாம்
என்னே ஒருவன் இகழ்திருத்தல் - முன்னே
முடித்தபடி அறிந்து முன் முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து

116
பெண் விழைவார்க்கு இல்லை பெருந்தூய்மை பேணாது ஊன்
உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும்
மண் விழைவார்க்கு இல்லை மறம் இன்மை மாணாது
தண் விழைவார்க்கு இல்லை தவம்

117
ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட - திருவாளா
வீழ்நாள் படாமை நீ துண்ணம் பொய்யே ஆக
வாழ்நாள் படுவது அறி

118
எண்ணற்குரிய இடையூறு உடையதனைக்
கண்ணினால் கண்டு கருதாதே - புண்ணின்மேல்
வீக்கருவி பாய இருந்தற்றால் மற்று அதன்கண்
தீக்கருமம் சோர விடல்

119
அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து
அங்கே ஒருவண்ணம் கோடலால் என்றும்
அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான்
கழங்காடு தோற்றப் பிறப்பு

120
புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்கண்
தவா வினை வந்து அடையக் கண்டும் - அவாவினைப்
பற்றுச் செய்து என்னை பயம இன்றால் நன்நேஞ்சே
ஒற்றி உடம்பு ஓம்புதற்கு

121
எக்காலும் சாதல் ஒருதலையே யான் உனக்குப்
புக்கில் நிறையத் தருகிலேன் - மிக்க
அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
துறத்தல்மேல் சார்தல் தலை

122
சோரப் பசிக்குமேல் சேற்று ஊர்திப் பாகன்
ஈரப்படினும் அது ஊரான் - ஆரக்
கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல

123
புகாப் பெருக ஊட்டின் புலனங்கள் மிக்கு ஊறி
அவாப் பெருகி அற்றம் தருமால் - புகாவும்
ஓர பெற்றியான் ஊட்டி பெரும் பயன் கொள்வதே
கற்று அறிந்த மாந்தர் கடன்

124
கற்றதுவும் மற்று ஒருபால் நிற்ப கடைப்பிடியும்
மற்று ஒருபால் போக மறித்திட்டு - தெற்றென
நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துள் கல்பட்டாற் போன்று

125
நல்வினைப்பின் அல்லால் நறுந் தாமரையாளும்
செல்லாள் சிறந்தார் பின் ஆயினும் - நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒருபொருதும் இல்

126
சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ
ஏறு யாரும் வைத்து ஏறாரோ - தேறி
உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு

127
தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக்கு உறுதி உயிர் ஓம்பி வாழ்தல்
அறிவிற்கு அறிவு ஆவது எண்ணின் மறு பிறப்பு
மற்று ஈண்டு வாரா நெறி

128
தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை - ஆசு இன்றிக்
கற்றல் கடன் அறிதல் கற்றார் இனத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி

129
குற்றத்தை நன்று என்று கொண்டு குணம் இன்றி
செற்றம் முதலா உடையாரை - தெற்ற
அறிந்தார் என்று ஏத்துமவர்களைக் கண்டால்
துறந்து எழுவர் தூய்க் காட்சியார்

130
ஆதன் பெருங் களியாளன் அவனுக்கு
தோழன்மார் ஐவாராம் வீண் கீளைஞர் - தோழர்
வெறுப்பனவும் உண்டு எழுந்து போனக்கால் ஆதன்
இருக்குமாம் உண்ட கடன்

131
உடன் பிறந்த மூவர் ஒருவனைச் சேவித்து
இடம் கொண்டு சில் நாள் இருப்பர் - இடம் கொண்ட
இல்லத்து இருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன் பின் சிறந்து

132
நல் ஞானம் நற்காட்சி நல் ஒழுக்கம் என்று இவை
தன்னால் முடித்தல் தான் இல்லையேல் - பொன்னே போல்
ஆவட்டம் செய்த அணிகலம் தேய் அகிற் போல்
ஆவட்டம் நில்லாது உடம்பு

133
பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இன் நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர் - குறை கூடாச்
செல்வம் கிளை பொருள் காமம் என்று இன் நான்கு
பொல்லாப் பொறி அறுக்கப் பட்டு

134
மூப்பு பிணியே த¨ல்ப்பிரிவு நல்குரவு
சாக்காடும் எல்லாம் சலம் இலவாய் - நோக்கீர்
பருந்துக்கு இறை ஆம இவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு

135
நீக் அரு நோய் மூப்பு தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடு என்று ஐந்து களிறு உழக்க - போக்க அரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்து எய்தும்
இன்பத்து இயல்பு அறியாதார்

136
வாழ்நாளில் பாகம் துயில் நீங்கி மற்றவற்றுள்
வீழ்நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் - வாழ்நாளுள்
பல் நோய் பரிந்து கவற்ற பரிந்து குறை என்னை
அன்னோ அளித்து இவ் உலகு

137
ஒழுக்கம் இலன் ஆக ஓத்துடையனேனும்
புழுப்பொதிந்த புண்ணில் கொடிது ஆம் - கழுக்கு இரையை
ஓம்பி மற்று என்னை உறுதிகஙகண் நில்லாக்கால்
தேம்பி விடுதலே நன்று

138
நல்வினை நாற்கால் விலங்கு நவை செய்யும்
கொல்வினை அஞ்சி குயக்கலம் - நல்ல
உறுதியும் அல்லசூ,ம் நாட் பேர் மரப்பேர்
இறுதியில் இன்ப நெறி

139
பறவை அரும்பொருள் இன்சோல் முதிரை
உறுதிக்கண் உண் விலங்கு - சிறியன
நீர்ப்புள் குயக்கலம் புல்லவை ஊர்வது
பேர்த்து ஈண்டு வாரா நெறி

140
உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே
நட்கப்படும் எழுத்தும் அத்துணையே - ஒட்டி
இழுக்கா எழுத்து ஒன்று இமிழ் கடல் தண் சேர்ப்ப
விழுச் சார்பு வேண்டுபவர்க்கு

141
முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்துத்
தப்பிய பின்றைத் தம் பேர் ஒழத்து - அப்பால்
பெறு பெயரைக் காயப் பெறுபவேல் வையத்து
உறும் அவனை எல்லாம் ஒருங்கு

142
அருளால் அறம் வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள் வளரும் நாளும் - தெருளா
விழைவு இன்பத்தால் வளரும் காமம் அக்காமம்
விழைவு இன்மையால் வளரும் வீடு

143
எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவர்க்கு
மக்கட் பிறப்பின் பிரிதில்லை - அப்பிறப்பில்
கற்றலும் கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்

144
தாய் தந்தை மக்கள் உடன் பிறந்தார் சுற்றத்தார்
ஆய் வந்து தோன்றி அருவினையால் - மாய்வதன் கண்
மேலைப் பிறப்பும் இது ஆனால் மற்று என்னை
கூலிக்கு அழுத குறை

145
உடம்பும் பொருளும் கிளையும் பிறவும்
தொடர்ந்து பின் செல்லாமை கண்டும் - அடங்கித்
தவத்தொடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தின் கழிகின்ற நாள்

146
ஒளியும் ஒளி சான்ற செய்கையும் சான்றோர்
தெளிவு உடையார் என்று உரைக்கும் தேசும் - களி என்னும்
கட்டுரையால் கோதப் படுமேல் இவை எல்லாம்
விட்டு ஒழியும் வேறாய் விரைந்து

147
இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும்
கை விளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின்
நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை நெய் பயந்த
பால் போல் ஒழுக்கத்தவரே பரிவு இல்லா
மேல் உலகம் எய்துபவர்

148
ஈட்டிய ஒண்பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் - மூட்டும்
எரியின் உடம்பு ஒழியும் ஈர்ங்குன்ற நாட
தெரியின் அறமே துணை

149
ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் - சூது
பொரும் என்னும் சொல்லினால் புலப்படுமேல்
இருளாம் ஒருங்§ இவை

150
அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர்
தறன் உடையன் என்று யரைக்கும் தேகம் - பிறன் இல்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப் படுமேல்
இழுக்கு ஆம் ஒருங்கே இவை

151
கல்லான் கடை சிதயும் காமுகன் கண் காணான்
புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் - நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக்கண்ணும்
நடுக்கமும் நல் மகிழ்வும் இல்

152
குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார்
நினைக்குஙகால் நின்றுழியே மாய்வர் - வினைப் பயன்கொல்
கல்லார் குலம் இல்லார் பொல்லார் தறுகட்பம்
இல்லார் பின் சென்ற தலை

153
பொய் மேல் கிடவாத நாவும் புறன் உரையைத்
தன் மேல் படாமல் தவிரப்பானும் - மெய்ம்மேல்
பிணிப் பண்பு அறியாமை பெற்ற பொழுதே
தணிக்கும் மருந்து தலை

154
தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
ஆய பொழுது ஆற்றும் ஆற்றலும் - காய்விடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இம் மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை

155
கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து
பழியொடு பாவம் படாமை - ஒழுகினார்
உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
துய்க்கும் பொருளெல்லாம் தொக்கு

156
ஆற்றாமை ஊர அறிவு இன்றி யாது ஒன்றும்
தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் - மாற்றி
மனையின் அகன்று போய் மா பொருங் காட்டில்
நனை இல் உடம்பு விடுதல் நன்று

157
பற்றொடு செற்றம் பயம் இன்றி பல் பொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன - கற்றும்
கடையாய் செய்து ஒழுகும் கார் அறிவினாரை
அடையார் அறிவுடையார்

158
தனக்கு தகவு அல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றல்
உணற்கு விரும்பு குடரை - வனப்புற
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி
தேம்பத் தாம் கொள்வது அறிவு

159
ஒருநாளும் நீ தரியாய் ஊண் என்று சொல்லி
இருநா¨ளுக்கு ஈந்தாலும் ஏலாய் - திருவாளா
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே
நின்னொடு வாழ்தல் அரிது

160
தனக்குத் துணை ஆகி தன்னை விளக்கி
இனத்துள் இறைமையும் செய்து - மனக்கு இனிய
போகம் தருதலால் பொன்னே அறத்துணையோடு
ஏகம் ஆம் நண்பு ஒன்றும் இல்

161
நல் அறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும்
கல்வி என் தோழன் துணிவு எம்பி - அல்லாத
பொய் சுற்றத்தாரும் பொருளோ பொருள் ஆய
இச் சுற்றத்தாரில எனக்கு

162
மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை
ஒக்க உடன் பிறந்தார் என்றிவர்கள் - மிக்க
கடும் பகையாக உழலும் உயிர்தான்
நெடுந் தடுமாற்றத்துள் நின்று

163
விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீங்கி
கதிப்பட்ட நூலினைக் கையிகந்து ஆக்கி
பதிப்பட்டு வாழ்வார் பழி ஆய செய்தல்
மதிப் புறத்தில் பட்ட மறு

164
போற்றியே போற்றியே என்று புதுச் சொல்வம்
தோற்றியார்கண் எலாம் தொண்டே போல் - ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பல உரைப்பது எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு

165
தண் காமம் பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்று
ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப - பண்பாளா
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல் கற்று
ஆய்தல் அறிவார் தொழில்

166
இக் காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித் தாம் நோற்பாரை - மெச்சாது
அலந்து தம் வாய் வந்த கூறுமவரின்
வில்ங்குகள் நல்ல மிக

167
ஆர்வமும் செற்றமும் நீங்கி அடங்குதல்
சீர் பெறு வீட்டு நெறி என்ப - நீர் புகப்
பட்டினம் புக்கான் அடங்கினான் என்பது
கெட்டார் வழி வியக்குமாறு

168
அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரணம் என்னை - மறந்து ஒருவன்
ஆட்டு விடக்கு ஊர்தி அச்சு இறும் காலத்துக்
கூட்டும் திறம் இன்மையால்

169
இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி
முறையின் நரம்பு எங்கும் யாத்து - நிறைய
அவாப் பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
புகாச் சுருக்கின் பூட்டா விடும்

170
உணர்ச்சி அச்சு ஆக உசா வண்டி ஆக
புணர்ச்சிப் புலன் ஐந்தும் பூட்டி - உணர்ந்ததனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடையன் ஆகுமேல்
பேர்கின்றது ஆகும் பிறப்பு

171
பேறு இழவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று
ஆறு உள அந்நாள் அமைந்தன - தேறி
அவை அவை வந்தால் அழுங்காது விம்மாது
இவை இவை எஎன்று உணரற்பாற்று

172
தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை தான் தன்னைப்
பின்னை மனம் அறப் பெற்றானேல் - என்னை
எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டு ஆங்கு
அருட் கண்ணே நிற்பது அறிவு

173
தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாய்ச் செய்வானும் தானே தான் தன்னைச்
சிறுவனா செய்வானும் தான்

174
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்த்தலால்
தானே தனக்கு கரி

175
தோற்றமும் சம்பிரதம் துப்புரவும் சம்பிரதம்
கூற்றங் கொள்ளுங்கால் சம்பிரதம் - தோற்றம்
கடைபட்டவாறு அறிந்து கற்று அறிந்தார் துஞ்சார்
படைப்பட் நாயகனே போன்று

176
தடுமாற்றம் அஞ்சிய தம்மை உடையார்
விடு மாற்றம் தேர்ந்து அஞ்சித் துஞ்சார் - தடுமாற்றம்
யாதும் அறியாரும் துஞ்சார் தம் ஐம்புலனும்
ஆரும்வகை யாதாம் கொல் என்று

177
மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்
செம்மை ஒன்று இன்மை துறவுடைமை - நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
அறம் பத்தும் ஆன்ற குணம்

178
அளற்றகத்து தாமரை ஆய்மலர் ஈன்றாங்கு
அளற்று உடம்பு ஆம் எனினும் நன்று ஆம் - அளற்று உடம்பின்
நன்ஞானம் நற்காட்சி நல்ஒழுக்கம் என்று இவை
தன்னால தலைப்படுதலான்

179
உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி
செயிரும் சினமும் கடிந்து - பயிரிடைப்
புல் களைந்து நெல் பயன் கொள்ளும் ஒருவன் போல்
நற் பயன் இருக்கற் பாற்று

180
தேற்றம் இல்லாத ஒருவனைப் பின் நின்று ஆங்கு
ஆற்ற நலிவர் ஒரு நால்வர் - ஆற்றவும்
நல்லார் போல் ஐவர் பகை வளர்ப்பர் மூவரால்
செல்லும் அவன் ஒ¢ன் சிறந்து

181
செய்வினை அல்லால் சிறந்தார் பிறிது இல்லை
பொய்வினை மற்றைப் பொருள் எல்லாம் - மெய் வினவில்
தாய் ஆர் மனைவி ஆர் தந்தை ஆர் மககள் ஆர்
நீயார் நினை வாழி நெஞ்சே

182
புலங்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே
சலங்களை சால ஒழுகல் - புலங்கள்
ஒறுக்கும் பருவத்து உசாத்துணையும் ஆகா
வெறுத்து நீ உண்டல் கடன்

183
பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா
மறந்தேயும் மாண்பு ஒழியும் நெஞ்சே - சிறந்த
ஒழுக்கத்தோடு ஒன்றி உயப் போதி அன்றே
புழுக்கூட்டு பொச்சாப்பு உடைத்து

184
முடையுடை அங்கணம் நாள்தோறும் உண்ட
கடைமுறை வாய் போதரக் கண்டும் - தடுமாற்றில்
சாவாப் பிறவா இச் சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய் கண்டார் நெஞ்சு

185
அற்ற பொழுதே அறம் நீனைத்தி யாது ஒன்றும்
பெற்ற பொழுதே பிற நினைத்தி - எற்றே
நிலை இலா நெஞ்சமே நின்னோடு வாழ்க்கை
பூலை மயங்கி அன்னது உடைத்து

186
முன்செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால்
பின் செய் வினையின் பின் போகலால் - நற்செய்கை
ஆற்றும் துணையும் அறம் மறவேல் நன்நெஞ்சே
கூற்றம் குடில் பிரியா முன்

187
பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நனநெஞ்சே
அரிந்து என்னை ஆற்றவும் தின்னல் - புரிந்து நீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
பூண்டேன் பொறி இலி போ

188
சாவாய் நீ நெஞ்சே சல்லிய என்னை நீ
ஆவதன்கண் ஒன்றானும் நிற்க ஒட்டாய் - ஓவாதே
கட்டு அழித்து காமக் கடற்கு என்னை ஈர்ப்பாயோ
விட்டு எழுங்கால் என ஆவாய் சொல்

189
பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றி
கழிபெருங் காம நோய் வாங்கி - வழிப்படாது
ஓடும் மன்னே விடுத்து என்னை விரைந்து நீ
நாடிக் கொள் மற்றோர் இடம்

190
அஞ்சினாய் ஏனும் அடைவது அடையும் காண்
துஞ்சினாய் என்று வினைவிடா - நெஞ்சே
அழுதாய் எனக்கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
தொழுதேன் நிறை உடையாய் ஆகு

191
புழுப்போல் உவர்ப்பு ஊறி பொல்லாங்கு நாறும்
அழுக்கு உடம்பு தன்னுள் வளர்த்தாய் - விழுந்து உமிழ்ந்து
இன்ன நடையாய் இறக்கும் வகையிலை
நன்நெஞ்சே நாடாய்காண் நற்கு

192
நின்னை அறப் பொருக்கிலேன் நல்நெஞ்சே
பின்னை யாரை நான் பொறுக்கிற்பேன் - நின்னை
அறப் பொற்கிப்பேனேல் பெற்றேன் மற்று ஈண்டே
துறக்கம் திறப்பது ஓர் தாழ்

193
இந்திரக் குஞ்சரத்தை ஞான இருங் கயிற்றால்
சிந்தனைத் தூண் பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பார்
இம்மைப் புகழும் இனிச் செல் கதிப் பயனும்
தம்மைத் தலைப் படுத்துவார்

194
ஆர்வு இல் பொறி ஐந்திற்கு ஆதி இரு வினையால்
தீர்வு இல் நிகோதாதி சேர்விக்கும் தீர்வு இல்
பழி இன்மை எய்தின் பறையாத பாவம்
வழியும் வருதலும் உண்டு

195
புண் ஆகப் போழ்ந்து புலால் வழியப் தாம் வளர்ந்து
வண்ணப் பூண் பெய்வ செவி அல்ல - நுண்நூல்
அறவுரை கேட்டு உணர்ந்து அஞ்ஞானம் நீக்கி
மற உரை விட்ட செவி

196
பண்அமை யாழ் குழல் கீதம் என்று இன்னலை
நண்ணி நயப்ப செவி அல்ல - திண்ணிதின்
வெட்டெனச் சொல் நீக்கி விண் இன்பம் வீட்டோடு
கட்டுரை கேட்ப செவி

197
கண்டவர் காமுறூஉம் காமரு சீர்க் காதில்
குண்டலம் பெய்வ செவி அல்ல - கொண்டு உலகில்
மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றிச்
சூன்று சுவைப்ப செவி

198
பொருள் எனப் போழ்ந்து அகன்று பொன்மணி போன்று எங்கும்
இருள் அறக் காண்பன கண் அல்ல - மருள் அறப்
பொய்க்காட்சி நீக்கி பொருஅறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண்

199
சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும்
மோந்து இன்பறுவன மூக்கு அல்ல - ஏந்து இன்
அலங்கு சிங்காதனத்தின் அண்ணல் அடிக்கீழ்
இலங்கு இதழ் மோப்பது ஆம் மூக்கு

200
கைப்பன கார்ப்ப்பு துவர்ப்பு புளி மதுரம்
உப்பு ரதம் கொள்வன நா அல்ல - தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டு உவந்து எப்பொழுதும்
நின்று துதிப்பது ஆம் நா

201
சொல்வதூஉம் கள்வதூஉம் இன்றி பிறர் மனையில்
செல்வதூஉம் செய்வன கால் அல்ல - தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர்பால் சென்று
அறவுரையைக் கேட்பிப்ப கால்

202
குற்றம் குறைத்து குறைவின்றி மூஉலகின்
அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி - முற்ற
உணர்ந்தானை பாடாத நா அல்ல அல்ல
சிறந்தான் தாள் சேராத் தலை

203
அறம் கூறும் நா என்ப நாவும் செவியும்
புறங்கூற்றுக் கேளாத என்பர் - பிறன் தாரத்து
அற்றத்தை நோக்காத கண் என்ப யார் மாட்டும்
செற்றத்தைத் தீர்த்ததாம் நெஞ்சு

204
உள்ளப் பெருங் குதிரை ஊர்ந்து வயப்படுத்தி
கள்ளப் புலன் ஐந்தும் காப்பு அமைத்து - வெள்ளப்
பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத்தாரைத்
துறவித்துணை பெற்றக்கால்

205
வெம்மை உடையது அடிசில் விழுப்பொருட்கண்
செம்மை உடையதாம் சேவகம் - தம்மைப்
பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை இம்மூன்றும்
உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு

206
அறிவு மிகப் பெருக்கி ஆங்காரம் நீக்கி
பொறி ஐந்தும் வெல்லும் வாய் போற்றி - செறிவினால்
மன் உயிர் ஓம்பும் தகைத்தேகாண் நன்ஞானம்
தன்னை உயர் கொள்வது

207
ஒரு பாகன் ஊரும் களிறு ஐந்தும் நின்ற
இருகால் நெடுங்குரம்பை வீழின் - தரு காலால்
பேர்த்து ஊன்றலாகாப் பெருந்துன்பம் கண்டாலும்
ஓர்த்து ஊன்றி நில்லாது உலகு

208
தன்னைத் தன் நெஞ்சம் கரி ஆகத் தான் அடங்கின்
பின்னைத் தான் எய்தா நலன் இல்லை - தன்னைக்
குடி கெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்
பிடி படுக்கப்பட்ட களிறு

209
நெடுந்தூண் இருகாலா நீள் முதுகு தண்டா
கொடுங்கால் விலா எலும்பு கோலி - உடங்கு இயன்ற
புன் தொலால் வேய்ந்த புலால் வாய்க் குரம்பையை
இன்புறுவர் ஏழையவர்

210
என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா
ஒன்பது வாயிலும் ஊற்று அறாத் - துன்பக்
குரம்பை உடையார் குடிபோக்கு நோக்கி
கவர்ந்து உண்ணப் போந்த கழுகு

211
வயிறு நிறைக்கு மேல் வாயின் மிகக் கூறிச்
செயிரிடைப் பாடு எய்துமாம் சிவன் - வயிறும் ஓர்
பேற்றியால் ஆர்த்தி பெரும் பயன் கொள்வதே
கற்று அறிந்த மாந்தர் கடன்

212
மக்களும் மக்கள் அல்லாரும் என இரண்டு
குப்பைத்தே குண்டுநீர் வையகம் - மக்கள்
அளக்கும் கருவி மற்று ஒண் பொருள் ஒன்றோ
துளக்கு அறு வெள்வளையார் தோள்

213
மக்கள் உடம்பு பெறற்கு அரிது பெற்ற பின்
மக்கள் அறிவும் அறிவு அரிது - மக்கள்
அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார்
நெறிதலை நின்று ஒழுகுவார்

214
நம்மைப் பிறர் சொல்லும் சொல் இலை நாம் பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கு இல்லை - என்று எண்ணி
உரைகள் பரியாது உரைப்பாரில் யரே
களைகணது இல்லாதவர்

215
அலைபுனலும் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண் நீர் நிலாதாகும் - அலைவின்
புலன்களில் நிறபினும் பொச்சாப்பு இலரே
மனம் கடிவு ஆகளாதவர்க்கு

216
உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல்
கள் அவிழ் சோலை ஆம் காட்டு உளார் - காட்டுள்ளும்
உள்ளம் அறப் பெறுகல்லாரேல் நாட்டுள்ளும்
நள்ளி நடு ஊர் உளார்

217
உயிர் திகிரி ஆக உடம்பு மண் ஆக
செயிர் கொள் வினை குயவன் ஆக - செயிர்தீரா
எண்ண அரு நல யாக்கைக் கலம் வனையும் மற்று அதனுள்
எண்ண அரு நோய் துன்பம் அவர்க்கு

218
அருவினையும் ஆற்றும் அரும் பயனும் ஆக்கும்
இருவினையும் நின்று விளையும் - திரிவு இன்றிக்
கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டதரும் நாட்டதரும்
கொண்டு உரைப்பான் நிற்றல் குதர்

219
நார்இல் இறகில் கண் இலது எனினும் நன் பொருளின்
பேர் இறையான் நுண் பெயரின் பின் சிறக்கும் - ஓர் இரண்டு
இறகிற்கண் உள்ளது எனினும் அதனை
வெருண்டு விலங்காமல் கா

220
நீத்து ஒழிந்த ஆறு ஐந்து அடக்கி பின் நிச்சயமே
வாய்த்து அமைத்த வாயில் பெண் ஆனையும் - கூத்தற்கு
வாள் ஏறோடு ஓசை விளைநிலம் இவ் அல்லால்
கேள் ஆய் உடன் வருவது இல்

221
பரப்பு நீர் வையகத்து பல் உயிர் கட்கு எல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை - இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப் பயனும்
தம்மைத் தலைப் படுத்தலால்

222
ஈவாரின் இல்லை உலோபர் உலகத்துள்
யாவரும் கொள்ளாத ஆறு எண்ணி - மேவ அரிய
மற்று உடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை
பற்று விடுதல் இலர்

223
ஆதியின் தொல் சீர் அறநெறிச் சாரத்தை
ஓதியும் கேட்டும்உணர்ந்தார்க்குச் - சோதி
பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது

224
எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
பொய்நூல் அவற்றின் பொருள் தெர்¢ந்து - மெய்ந்நூல்
அறநெறிச்சாரம் அறிந்தான் வீடு எய்தும்
திற நெறிச்சாரம் தெளிந்து

225
அவன்கொல் இவன் கொல் என்று ஐயப் படாதே
சிவன் கண்ணே செய்மின்கள் சிந்தை - சிவன் தானும்
நின்று கால் சீக்கும் நிழல் திகழும் பிண்டிக் கீழ்
வென்ற சீர் முக்குடையான் வேந்து

226
முனைப்பாடியானை சூர் முக்குடைச் செல்வன்
தனைப்பாடி வந்தோர்க்குத் தந்த பரிசில்
வினைப்படு கட்டழித்து வீட்டு இன்பம் நல்கி
நினைப்பாடி வந்தோர்க்கு நீம் ஈக என்றான்
நிறை விளக்குப் போல இருந்து

அறநெறிச்சாரம் முற்றும்


This webpage was last updated on 12 February 2008
Please send your comments to the webmasters of this website.