Parnell's "Hermit" in Tamil Prose
(in Tamil, Unicode format)

மனங்குழம்பிய மாதவத்தோன்
தமிழாக்கம்: ஸி. இராமச்சந்திர அய்யர்


Acknowledgements:
This work is Tamil Prose translation of the work "Hermit" of Parnell published in 1904.
Our sincere thanks to the Tamil Heritage Foundation for providing us wit scanned image version of this work and permission to publish this machine-readable version of the etext as part of Project Madurai collections.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai
We thank the following for their help in the preparation of this etext:
S. Karthikeyan, V. Devarajan, S. Govindarajan and V.S. Kannan
This Etext file has the verses in tamil script in Unicode format
So you need to have a Unicode Tamil font and the web browser set to "utf-8" to view the Tamil part properly.
© Project Madurai 2007.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


PARNELL'S HERMIT (IN TAMIL PROSE.)

by C. RAMACHANDRA AIYER, B.A.,B.L.
Pleader, Salem.
Published by:
KALYANASUNDARAM PRESS: G.S.MANIYA & Co.
Tanjore, 1904.

மனங்குழம்பிய மாதவத்தோன்.


இஃது சேலத்திலிருக்கும் வக்கீல்
ஸி. இராமச்சந்திர அய்யர், பீ.ஏ.,பீ.எல்.
என்பவரால் ஆங்கிலேய பாஷையினின்று மொழி பெயர்க்கப்பட்டது.

வெளியிட்டோர்:
கல்யாணசுந்தரம் முத்திராசாலை,
ஜி.எஸ்.மணியா அண்டு கம்பெனி,
தஞ்சாவூர்: 1904.

முகவுரை.

இச்சிறுகதை ஆங்கிலேய பாஷையில் "பார்னெல்" (PARNELL) என்ற கவிஞராலியற்றப்பட்ட "துறவி" என்று அருத்தங்கொள்ளும் "ஹெர்மிட்" (HERMIT) என்னும் கவிதையின் மொழிபெயர்ப்பு.
"எல்லாம் ஈசன் செயல்" "அவனன்றியோரணுவு மசையாது" என்று நம்மவர்க்குள் வழங்கு மூதுரைகளுக் கிணங்கியதாய், அவ்வவர் வினைக் கேற்பப் பயனூட்டுவித்து எக்காலத்தும் கருணைக்கடலாயிலங்கும் கடவுளிடத்து குற்றங்கூறல் கொடிய பாவம் என்று ஒழுகிவரும் நங்கொள்கைக் கொத்ததாய், கவிதை சுருக்கமெனினும் பேரின்பப்பேற்றின் அறிவைப் புகட்டுவதாய், மேற்கூறிய கவிஞரால் சொற்சுவை பொருட்சுவையிரண்டும் கலந்தமைத்தியற்றப் பட்டதை தமிழ்கற்கும் மாணாக்கரினுபயோகத்துக்காக என் சிற்றறிவிலுதித்தவண்ணம் மொழிபெயர்த்தச்சிடத் துணிந்தேன். எவ்விதத் தவறுகளிருப்பினும் கற்றறிந்தோர் கருணைகூர்ந்தெனக்குணர்த்த வேண்டுகின்றேன்.

ஆங்கிலேய பாஷையில் தேர்ச்சியுள்ளோர் ஒத்துப்பார்த்துக் கொள்வதற்காக மூலகிரந்தமும் இத்துடன் சேர்த்து அச்சிடப்பட்டிருக்கிறது.

சேலம்.
ஸி.இராமசந்திர அய்யர்.
1904-வருஷம் பிப்ரவரி மாதம்
-----------------------------------------------------------

மனங்குழம்பிய மாதவத்தோன்.

நாட்டுக்கு வெகுதூரத்திலுள்ளதோர் காட்டில் மனிதர் கண்ணுக்குப் புலப்படாமல் யாவராலும் நன்கு மதிக்கத் தக்கவராய் ஒரு துறவி வாலிபம் முதல் வார்த்திகமீறாக வளர்ந்துவந்தார். பாசிபடர்ந்த பாரே பாயலாகவும் நிலவறையே நிலயமாகவும் கனிவர்க்கங்களே உணவாகவும் தெள்ளிய கிணற்றுத் தண்ணீரே பானமாகவும் கொண்டு மனிதர் கூட்டுறவை நீத்துக் கடவுளே கதியெனக் காலங்கழித்துவந்தார். அவர் செய்யும் தொழில் எல்லாம் கடவுளைப்பிரார்த்திப்பதுதான். அவர் நுகருமின்பமுற்றும் கடவுளை வழுத்தலேதான்.

இத்தகைய பரிசுத்தமும் நிச்சலமான மனவமைதியுமுள்ள இத்துறவிக்கு ஒரு சந்தேகம உண்டாயிற்று. இந்த சந்தேகம் உண்டாகிறவரையில் இவருடைய வாழ்க்கை மோட்ச சாம்பிராச்சியமென்றே சொல்லலாம். உலகில் "மறம்" மேலிட்டு "அறம்" குன்றி நல்லோர் தீயோரை வணங்கும் படியிருத்தலால், கடவுள் தன் ஆணையைச் சரிவர செலுத்தி வருகின்றனரோ இலரோ என்ற சங்கை இவர் மனதில் குடிகொண்டது. இவருக்குத் தான் கொண்டிருந்த எண்ணங்களில் நிச்சயபுத்தி குன்றி யதால் மனோநிம்மதி சுத்தமா யில்லாமல் போய்விட்டது. எவ்வாறெனில், அமைதியுள்ள நீர்ப்பரப்பில் அதைச் சுற்றியுள்ள கரைகள் மரங்கள் முதலியன தலைகீழாகத் தொங்கிக்காட்டியும் ஆகாயத்தில் தோன்றும் வர்ணங்கள் யாவும் பிரதிபலித்துத் தோன்றியும் நிற்கும் சமயத்தில் அதன்மேல் கல்லெறியப்படின் அமைதியுற்றிருந்த வந்நீர்ப்பரப்பு பகுக்கப்பட்டு கலக்கமுற்றுத் திரைகள் எங்கும் மேன்மேலும் அதிவேகமாய் விருத்தங்களாகச்சுழன்றும் அதில் காணப்படும் சூரியபிம்பம் பலவாறாகக் கூறுபட்டும், கரைகள், மரங்கள், ஆகாயத் தோற்றங்களனைத்தும் ஒன்றாய்க் குழம்புவது போலாயிற்று.

இச்சந்தேகம் தெளிதற்பொருட்டு உலகினரைப்பற்றித் தான் புத்தகங்களில் படித்ததும் குடியானவர்களால் செவியுற்றிருந்ததும் உண்மைதானோவென்று தானே நேரில் கண்ணால் பார்த்தறிந்து கொள்ளத் தன் நிலவறையைவிட்டுப் புறப்பட்டார். (இதுவரையில் இவர் உலகினரைப்பற்றிக் கேட்டிருந்ததெல்லாம் தன்னிடத்தில் இராக்காலத்தில் பனியால் வருந்தி தடுமாற்றம்கொண்டு வழிதப்பிவரும் குடியானவர்களாலேயாம்.) தண்டத்தைத்தரித்தார். ஒட்டை தன் தலைச்சீராவில் முன்னாக மாட்டினார். சூரிய உதயமானவுடன் எதையும் சாந்தமாய் மனதிற் கொள்ளவும் ஒவ்வொரு சம்பவத்தையும் ஜாக்கிரதையுடன் கவனிக்கவும் தீர்மானித்துப் பிரயாணம் போனார்.

புற்கள் செறிந்து பாதையில்லாத தடத்தில் காலைப்பொழுதைக் கழித்தார். தொலைதூரம் துணையாருமின்றி இவ்வனத்திற் சென்றார். என்றாலும் பொழுது ஏறி தென்பாலொளிரும்[1] வெய்யோன் வெப்பமுறைத்தபின் ஒரு வாலிபன் குறுக்குவழியாய் அதிவேகமாய் வந்தான். அவன் நல்லாடையணிந்து சுந்தரவடிவமாய் தலையில் அழகிய சுருட்டை மயிர்கள் மெல்லிய காற்றால் அசையப் பெற்றிருந்தான். சமீபத்தில் வந்து "என்பிதாவே வந்தனம்" என்றான். அதற்கு முதியோரும் "என் குழந்தாய் வாழி" என்றாசி கூறினார். வார்த்தைமேல் வார்த்தை வளர்ந்து ஒருவரை யொருவர் வினவுதலும் விடையளித்தலுமாய் பலவாறாகப் பேசிக்கொண்டு நடையின் வருத்தந்தோன்றாது சென்றனர். முடிவில் இருவருக்குள்ளும் அந்யோந்ய பிரீதியுண்டாகி ஒருவரைவிட்டு மற்றொருவர் பிரிய மனமின்றி வயதில் தாரதம்மியம் இருந்தாலும் ஒரு முதிர்ந்த வனவிருக்ஷமானது படர்கொடியால் கட்டுண்டதுபோல் முதியவரும், இளங்கொடியானது விருக்ஷத்தைத் தழுவியிருப்பதுபோல் வாலிபனும்மனமொருமித்து நடந்தார்கள்.

[1] ஆங்கிலேய நாடு உத்தர அக்ஷாம்சம் பாகை 50க்கு மேற்பட்டிருத்தலால் அந்நாட்டிலுள்ளோர்க்கு எவ்விடத்தும் யாண்டும் கிழக்கிலுதித்து மேற்கில் மறையும் சூரியன் வான் முகடுறாது அதற்குத் தென்புறமாய்த் தோற்றுமாதலால் "தென்பாலொளிரும் வெய்யோன்" எனமுதனூலாசிரியர் கூறினர்.

இப்படியிருக்கப் பகலவன் குடதிசையில் மூழ்கினான். மாலைப்பொழுது மங்கின வெண்ணிறப் போர்வை போர்த்து மேலெழும்பிவர உலகினர் உறங்கக்கட்டளை யிடப்பட்டது போன்றிருந்தது. அப்பொழுது பாதைக்கணித்ததாக பெரியதோர் அரண்மனையைக் கண்டார்கள். அதைநோக்கி நிலாவெளிச்சத்தில் பாதையினிரு சார்புகளிலும் கீழே புல்முளைத்து மேலே பசுமையாகத் தழைத்தோங்கும் வரிசையாயுள்ள மரங்களினடுவே போனார்கள். அந்த அரண்மனையில் வதியும் பெருமான் என்றும் தன்னில்லத்தை வழிதப்பிவரும் விதேசியின் விடுதியாக்கிவந்தான், என்றாலும் அவனுடைய கருணையானது புகழை விரும்பியதால் ஆடம்பரத்துடன் விசேஷசெலவு செய்துபெற்ற சுகமாய் முடிந்தது. இவ்விருவரும் அங்குற்றவுடன் உடையணிந்த வேலையாட்களாலுபசரிக்கப்பட்டு அன்னோரின் தலைவனால் ஆடம்பரமாகவிருந்த தலைவாயிலிடத்தே நல்வரவு கொண்டாடப் பெற்றார்கள். தீனிமேஜையோ ராஜ போஜனவகைகள் அடுக்கடுக்காய் வைக்கப்பட்டு சுமைதாங்க முடியாமலிருந்தது. ஒன்றுங்குறைவின்றி, சாதாரணமாய் விருந்தினர் மகிழச் செய்யும் ஏற்பாடுகளுக்கு மேலாகவே யிருந்தது. உண்டிகழித்துப் பள்ளியறை சென்று நாள்முழுதும் நடந்த வருத்தம்தீர பட்டுவேய்ந்த பஞ்சணை மெத்தையில் படுத்தயர்ந்துறங்கினார்கள்.

பிறகு பொழுது விடிந்தது. அருணோதயமானவுடன் அகன்ற கால்வாய்களின் வழியாய் இளங்காற்று வீசிவிளையாடி மனோக்கியமான நந்தவனங்களின்மேல் படர்ந்து அருகே நின்ற விருக்ஷங்களையசையச்செய்து தூக்கத்தைத் தொலைக்கக்கட்டளையிடுவது போலிருந்தது. இக்கட்டளைக்குக்கீழ்ப்படிவதுபோல் விருந்தினரிருவரும் துயில் நீத்தெழுந்தனர். உடனே திவ்வியமான போஜனமண்டபமானது விருந்துணவுகளாலலங்கரிக்கப்பட்டது.

ஒரு தங்கக்கிண்ணத்தில் விலையுயர்ந்த மாதுரியமான திராட்ச ரசம் பளபளவென்று பிரகாசித்துக்கொண்டிருந்தது. அதை யன்புடன் அம்மனைக் கிழவன் அவர்களை யருந்தவேண்டினான். போஜன முடித்துச் சந்தோஷத்துடன் வந்தனமளித்து அவ்விடத்தை விட்டு இருவரும் புறப்பட்டார்கள். ஆனாலந்த வீட்டின் எஜமானனுக்குமாத்திரம் துக்காஸ் பதமான செய்கையொன்று நடந்தது. அதென்னவெனில், அவனுடைய தங்கக்கிண்ணம் காணாமற் போய்விட்டது. எப்படியெனில் வாலிபப் பருவமுள்ள விருந்தினன் அதை ரகசியமாய் மறைத்து திருடிக்கொண்டு போய்விட்டான்.

மறுபடி வழிநடந்து வெகுதூரம் சென்றபிறகுக் கபடமுள்ள வாலிபத் தோழன் தான் திருடிக் கொண்டுவந்த தகத்தகாயமான பொற்கிண்ணத்தைத் துறவிக்குக் காட்டினான். அதைக்கண்டஉடன் எவ்வண்ணம் ஒரு பிரயாணி வழியில் பளபளப்புடன் சூரிய கிரணத்தின் வெப்பத்தில் குளிர்காய்ந்து கொண்டு படுத்திருக்கும் ஒரு சர்ப்பத்தைக் கண்டால் நடுக்கமுற்று ஒன்றுந் தோன்றாது கிட்டின ஆபத்தினின்று தன்னை விலக்கிக்கொள்ள சற்றுநின்று பிறகு பயந்தவனாய்ச் சோர்வுற்று மெல்ல நடந்த போவனோ அவ்வண்ணமாய்ப் பெரியவரும் வாய் பேசாமல்சற்று நின்று பிறகு மனநடுக்கத்துடன் நடந்து சென்றார். அவ்வாலிபனைவிட்டு விலகிப்போகவேண்டுமென்று அவர் மனதில் இச்சைகொள்ளினும் அவனுடன் சொல்ல அஞ்சினார். தனக்குள் முறுமுறுத்துக்கொண்டு வானத்தை நோக்கி, உதாரமான செய்கைகள் இழிவான கைம்மாறடையலாயிற்றே என்ன கஷ்டமென்றேங்கினார்.

இவ்வண்ணமிருவரும் செல்லுகையில் கதிரோன் தன் னொளியை மறைத்தான். மாறுபட்ட ஆகாயங்களில் நீலமேகங்கள் தோன்றின. வானத்தில் இடிமுழக்கம் உண்டாகவே மழைவரும் போலிருந்தது. விலங்குகள் வேகமாய் உறைவிடத்தை நோக்கிச் சென்றன. இக்குறிகளைக்கண்ட பிரயாணிகளிருவரும் சமீபத்திலுள்ள ஒரு வீட்டில் புகலிடம் தேடிச்சென்றனர். அந்த வீடோ பலமுள்ளதாயும் பெரிதாயும் சுற்றிலும் திருத்தப்படாததாயும் சிகரங்கள்வைத்து ஒரு மேட்டுப் பூமியில் கட்டப்பட்டிருந்தது. அதற்குரியவனோபயங்காளி; கடினசித்தமுள்ளவன்; இரக்கமற்றவன். எவ்விததானும் பணம் சேர்ப்பதி லெண்ணமுடையவன். ஆகையால் அவ்விடம் பாழ்நிலமாயிருந்தது.

கனத்த கதவுகளால் அடைபட்டிருந்த இந்தக் கிருபணனுடைய வீட்டைநோக்கி அவ்விருவரும் வந்து கொண்டிருக்கையில் திடீரென்று பெருங்காற்று அடித்தது. பளீரென்று வானம் மின்னிக்கொண்டு மழைபெய்ய வாரம்பித்தது. பயங்கரமாய் இடிகள் இடித்தன. பிரயாணிகளிருவரும் வீட்டுக்குவந்து கதவை வெகுநேரம் இடித்தார்கள். உரக்கக் கூப்பிட்டார்கள். என்னசெய்தும் கேள்விமுறையில்லை. காற்றடிப்பதாலும் மழை பொழிவதாலும் மெத்த வருந்தினார்கள். வெகுநேரம்கழித்து வீட்டு எஜமானனுக்கு மனதிளகிற்று. அவன் வீடு விருந்தினரைக்கண்டது அவன் ஆயுளில் இதுதான் முதல்தடவை. சமுசயத்துடன் அதிஜாக்கிரதையாய் கிறிச்சென்று கதவு சத்திக்க மெல்லெனக் கதவைத்திறந்து குளிராலும் மழையாலும் நடுங்கி நிற்குமிருவரையும் அரைமனதுடனுள்ளேயழைத்தான். எரிந்துகொண்டிருந்த ஒரேஒரு விறகு குச்சியால் வெற்றுச்சுவர்கள் வெளியாயின. உள்ளே போனதும் இவர்களுக்கு சரீரத்தில் இயற்கையாயுள்ள உஷ்ணம் பரவிநின்றது. வீட்டு எஜமானன் விதியில்லாமல்கொடுத்த மிகவும்மட்ட தினுசு ரொட்டியும் புளித்த திராட்சரஸமுந்தான் இவர்களுக்கு உணவாக உதவின. காற்றும் மழையும் கொஞ்சம் தணியவே "நீங்கள் போய்வரலாம்" என்று வீட்டுக்காரன் எச்சரித்தான்.

துறவியானவர் ஒன்றும் பேசாமல் மௌனமாயிருந்து "இவ்வளவு பணக்காரன் தரித்திரனைப் போலும் நாகரீகம் கொஞ்சமேனுமின்றி வாழ்கின்றனனே. அநேகமாயிரம் ஏழைஜனங்க்ள் பிழைக்கக் கூடிய இச்செல்வத்தை இவன் யாதுகாரணம் பற்றி பூட்டிவைத்துப் பாழாக்குகின்றான்." என்று தனக்குள்ளே ஆலோசித்தனர். இப்படியிருக்கையில் புதிதானதோ ராச்சரியத்தின் குறிகள் இவர் முகத்தில் விளங்கின. அதாவது அவ்வுதார சீலனுடைய விலையுயர்ந்த கிண்ணத்தை இவ்வாலிபன் தன்னுடைக்குள்ளிருந்து வெளியிலெடுத்து வெடுவெடுப்புள்ள அந்த லோபி தீராது பாராட்டின அன்புக்குக்கைம்மாறாக அவனுக்கு கொடுத்துவிட்டான்.

இதற்குள் மேகங்கள் கலைந்து சூரியன் வெளிப்படவே ஆகாயம் நீலவர்ணம் பொருந்தி நிர்மலமாய்விட்டது. வாசனையுள்ள இலைகள் புதிய பசுமை பூண்டு அசையுந்தோறும் பளபளவென்று துலங்கிப் பார்க்க உல்லாசகரமாயிருந்தன. காலநிலையும் இவர்களைப் புகலிடத்திருந்து வெளியேவரும்படி விளிப்பது போன்றிருந்தது. இவர்கள்வெளிப்பட்டதும் அந்த கிரகஸ்தன் சந்தோஷத்துடன் ஜாக்கிரதையாய்க் கதவைச்சாத்தித் தாளிட்டுக்கொண்டான்.

இருவரும் அவ்விடம்விட்டுப்போய்க்கொண்டிருக்கையில் துறவி தன்னுடைய தோழன் செய்தகாரியங்களின் காரணம் நிச்சயமாய்த்தெரியாமல் மனங்குழம்பிப் பிரசவ வேதனையைப்போன்ற வருத்தமடைந்தார். அவன் அங்குசெய்தது பாவச்செய்கை. இங்கியற்றியதோ பைத்தியக்காரனுடைய செய்கை. முந்தியதை வெறுத்துக்கொண்டு பிந்தியதைக் குறித்து பரிதபித்துத் தன்கண்ணுக்குப் புலப்படும் நானாவிதத் தோற்றங்களால் மதிமயங்கி ஒன்றுந்தோன்றாது சென்றனர்.

மறுபடிகங்குற்பொழுது வானத்தைக் கவர்ந்தது. பிரயாணிகளுக்கு உறைவிடம் வேண்டுமே என் செய்வார்? மறுபடி தேடிச்சென்று சமீபத்திலொரு விடுதியைக்கண்டார்கள். அது சுற்றிலும் பூமி நன்றாய்த் திருத்தப்பட்டு, மாளிகையானது கேவலம் தரித்திரமின்றியும் விசேஷ ஆடம்பரமின்றியும் பரிசுத்தமாய்க் காணப்பட்டு புகழைவிரும்பாது அன்புடன் அறம்பூண்டொழுகி திருப்தியுடனிருக்கும் தன் எஜமானனுடைய மனோதர்மம் இன்னதெனக் காட்டுவது போலிருந்தது. இவ்வில்லத்தைநோக்கி வழி நடப்போரிருவரும் வருந்திவந்து மாளிகையை வாழ்த்தி எஜமானனைக்கண்டு வணக்கத்துடன் உசிதமான உபசாரவார்த்தைகள் சொல்ல அதை அவன் விநயத்துடன் கேட்டுப் பின்வருமாறு மறுமொழி கூறலுற்றான்.

" 'யான்' 'எனது' என்ற செருக்கற்று

மனதிலழுக்காறின்றி நம்மனோர்க்கு எல்லாம்தரவல்ல கடவுளுக்கு என்னிடத்திலிருப்பதை அர்ப்பணம் செய்வேன். நீவிர் அக்கடவுளிடத்திருந்துவருகின்றி ராதலானவருக்காக யான் நிஷ்கபடமாயும் சாதுவாயும் ஆனதுபற்றி அதிகபொருட்செலவுடன் கூடிய களியாட்டுக்கும் மேம்பட்டதாயும் வழங்குவதை நீவிர் அங்கீகரிக்கவேண்டும்." அவன் இவ்வண்ணமுரைத்துத் தீனிமேஜையைப்பரப்பி உண்டி கழிந்தபிறகு படுக்கப்போகும்வரையில் அறநெறிகளைப்பற்றிப் பேசிவந்தான். பேரியல்புள்ள அவ்வில்லத்தோரனைவரும் மணியடித்தவுடன் எஜமானனிருக்குமிடம் வந்து கடவுளை வாழ்த்தித் தத்தமுறைவிடம்புக்கனர்.

பொழுதுவிடிந்தபிறகு அனைவரும் நல்லநித்திரையால் களைதீர்ந்து வேலைக்கு உற்சாகத்துடன் கிளம்பினார்கள். புள்ளிக்குறியிட்டு காலைப்பொழுது எழுந்தது. பிரயாணிகளும் புறப்பட்டார்கள். புறப்படுமுன் சிறுவன் அங்குமூடியிருந்த ஒருதொட்டிலின் சமீபம் நகர்ந்துசென்று அதனுள் படுத்துறங்கிக் கொண்டிருந்த ஒருகுழந்தையைப்பிடித்துக் கழுத்தைத் திருகிவிட்டான். அக்குழந்தையோ அவ்வீட்டு எஜமானனுடைய செல்வக்குழந்தை. ஓகோ, என்ன கைம்மாறு! குழந்தை கரேலென்று கறுத்து மூச்செறிந்து உயிர்நீத்தது என்ன கொடுமை! அவனுக்கு ஒரே குழந்தையாயிற்றே! கொடிது கொடிது!
இச்செய்கையைக் கண்டபொழுது நந்துறவி எப்படி மனம் துடித்திருப்பாரோ? நரகமே ஆவென வாயைத்திறந்து எரிநெருப்பையுமிழ்ந்து தாக்கினாலும் அவருக்குமனம் அவ்வளவு பதைத்திராது.

ஒன்றுந் தோன்றாது திகைத்திச் செய்கையைக்கண்டு வாய்பேசமுடியாமல் துறவி ஓடினார். என்றாலும் வேகமாய் ஓட பயத்தால் கால் எழவில்லை. வாலிபன் அவர் பின்றொடர்ந்தான். போகும் வழியில் மூலைக்குமூலை பாதைகளிருந்தபடியால் வழியறிந்து செல்வது கஷ்டமாயிருந்தது. ஒரு ஆள் வழி காட்டினான். நடுவில்ஓர் ஆறு. அதைக்கடந்து போவது கஷ்டமாயிருந்தது. ஆள் முன்னால் நடந்து போனான். அசோகமரங்களின் நீண்ட கிளைகளால் கட்டப்பட்ட வாராவதி ஒன்றிருந்தது. அதன்கீழ் அதிகவாழமாக ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தீச்செயல் புரியக்காலம் பார்ப்பவன்போல் காணப்பட்ட வாலிபன் கவலையற்று நடந்து கொண்டிருக்கும் வழிகாட்டியையணுகி ஆற்றில் தள்ளிவிட்டான். அவன் விழுந்து முழுகி மறுபடிகிளம்பி திரும்பி முழுகிக் கடைசியாய் மாண்டுபோனான்.

இதைக்கண்டவுடன் துறவிக்கு அடங்காத கோபமுண்டாயிற்று. கண்களில் நெருப்புப்பொறிகள் பறந்தன. இதுகாறும் தனக்கிருந்தபயத்தை உதறிவிட்டு உன்மத்தனைப்போலக் கூவி "ஹே, துராத்மா, மகாபாபி!" என்று சொல்லி வாய்மூடுமுன் அவ்வற்புதத் தோழன் மானிட உருவமாறி வாலிபத்தோற்றம் வரவர வனப்பெய்தி பார்க்கப் பார்க்க மனோக்கியமான பரமசாந்தத்தை யடைந்தவனாகி விட்டான். அவன் ஆடை வெண்ணிறமாக மாறிப் பாதம் வரையில் தழைத்துத்தொங்கியது. தலைமயிரோ முழுதும் பளீரென்று பிரகாசித்தது. தேவயோக்கியமான சுவாசனைகள் எங்கும் குமுகு மாயமாய்ப் பரவிற்று. பகற்காலத்தில் பளிச்சென்று விளங்கும் வர்ணபேதங்களுடன் கூடின இறகுகள் அவன் முதுகின்புறத்தில் முளைக்க வாரம்பித்தன. தேவ உருவம் கண்ணுக்குத்தோன்றி எங்கும் மகத்தான தேஜோமயமாயசைந்து நின்றது.

துறவிக்குவந்த கோபம் அடங்காதெனினும் திடீரென்று தோன்றின உருவத்தைக் கண்ணுற்று செயற்பாலதியாதெனத் தெளியாது விம்மிதங்கொண்டு சொல்லப்புகுந்த வார்த்தைகளைத் தன்னுளடக்கி மனதை ஒருவழிப்படுத்தி மௌனத்தையடைந்தனர். இப்படியிருக்க சௌந்தரியமுள்ள அந்த தேவதூதன் யாவரும் பரவசமடையும்படியான திவ்விய நாதம் பூண்ட இனியகுரலொடு பேசத்துவக்கினான்.

"உன்னுடைய பிரார்த்தனை, உன்னுடைய வழுத்தல், பாபம் இத்தன்மைத்தென்றே தெரியாத உன்னுடைய ஒழுக்கம், இவையெல்லாம் பரமபதத்தில் விளங்கும் பகவத் சன்னிதானத்தில் வெகுரமணீயமாய் விக்ஞாபனம் செய்யப்பட்டுவருகின்றன. இவற்றால் தேஜோமயமான எங்களுலகம் வசீகரிக்கப்பட்டு உன்னுடைய மனக்குழப்பத்தை மாற்ற ஒரு தேவன் கீழிறங்கிவரும்படியாயிற்று. இதற்காகவேதான் நான் விண்ணகத்தைவிட்டுவந்தேன். நீ என்னை முழந்தாட்படியிட்டு வணங்கவேண்டாம். நானும் உன்னைப்போல் பகவத்கைங்கரியம் பூண்ட வேலைக்காரன். ஸர்வக்ஞனுடைய காரியங்களின் உண்மையைச் சொல்லுகிறேன் கேள். அதையறிந்து இனிமனதில்யாதொரு சமுசயத்தையும் அடையாதிருப்பாயாக. தான் படைத்திட்ட உலகத்தை நடத்த உரிமை தனக்கேயன்றி மற்றெவர்க்குங் கூடாதென கர்த்தர் நியாயமாய் உரிமை பாராட்டுகிறார். அவருடைய சுதந்திரம் இதிலேதான் ஊன்றியிருக்கிறது. அதின் மகத்துவத்தை யாவற்றிலும் பரவச்செய்து இதர சாதனங்களைக்கொண்டு தன்னுடைய காரியங்களை முடித்துக்கொள்ளுகிறார். மானிடர் கண்ணுக்குத் தோற்றாது பரமபதத்திலிருந்தே தன் குணவைபவங்களால் உலகத்தை இயக்கிவருகின்றார். நீ செய்யும் காரியங்களனைத்தையும் தனக்கு உபகரணங்களாக வைத்துக்கொள்ளுகிறார். என்றாலும் உன்னுடைய சுவேச்சாவிஹாரத்தை கட்டுப்படுத்துகிறதில்லை. இவ்விதமாக மானிடர் மனத்தில் குடிகொள்ளும் மயக்கையறுத்து மனவமைதி உண்டுபண்ணுகின்றார். சமீபகாலத்தில் நீ ஆச்சரியப்படும்படி உன்னுடைய கண்முன்பாக நடந்த செயல்களைவிட அதிக ஆச்சரியப்படத்தக்கினவை வேறு எவை? ஆயினும் இந்த சம்பவங்களால் உண்மையறிந்து கடவுள் நிஷ்பக்ஷபாதியென ஒப்புக்கொண்டு எந்த விஷயத்தில் உனக்கு சமாதானம் ஏற்படவில்லையோ அதைக்குறித்து ஈசுவரசங்கற்பமென்று நம்பியிருக்க வேண்டியது.

"விசேஷ பொருட்செலவுசெய்து ராஜபோஜனமுண்டு செல்வத்திலாழ்ந்த காரணத்தால் வாணாளைவறிதேகழித்து தந்தபீடங்களில் பொற்கிண்ணங்கள் பிரகாசிக்கச்செய்து வரும் விருந்தினர்களைக் காலையில் திராட்சரஸம் பானம் பண்ணும்படி வேண்டின அந்த வீண் ஆடம்பரக்காரன் கிண்ணம் காணாமற்போகவே ஒழுங்கற்ற வழக்கத்தைத் துறந்து இப்பொழுது உசிதம்போல் செலவுசெய்து விருந்தினரை உபசரித்துவருகிறான்.

"வழிதடுமாறிவரும் வறுநரிடத்தில் கொஞ்சமேனுமிரக்கமின்றிக் கதவைத் தாளிட்டுக்கொள்ளும் சந்தேகப் பிரகிருதியுள்ள அந்த நீசப்பாதகனுக்குக் கிண்ணத்தை நான் கொடுத்தது, மனிதர் அன்பு பாராட்டுவரேல் கடவுள் அருள்புரிவார் என்று அவனுக்கு உணர்த்தும்பொருட்டேயாம். அக்கிண்ணத்தையடைய தனக்கு யோக்கியதையில்லையெனத்தெரிந்து அதைப்பார்த்து நன்றியுள்ளவனாய் கம்மாளர் களிம்புள்ள ஈயத்தை உருக்குவதற்கு அதன்மேல் குப்பலாகக் கரித்தணல் கொட்ட அதன் வெப்பத்தால் உலோகமானது தகதகவெனப் பிரகாசித்து களிம்பினின்றும் நீங்கி வெள்ளியாகக் கீழே உருகியோடுவதுபோல் மனமுருகி நிற்கின்றான்.

"தெய்வபக்தியுள்ள நமது நண்பர் வெகுகாலம் அறநெறியில் ஒழுகிநின்றார். ஆயினும் குழந்தையின் மோகத்தால் இப்பொழுது கடவுளைப்பாதி மறந்தார். அக்குழந்தைக்காகத்தான் சுகப்படாமல் கஷ்டப்பட்டு மேன்மேலும் பேரின்பப் பேற்றைக் கருதாம லிம்மண்ணுலக வாழ்க்கையை மதிப்பவரானார். ஆ! அந்தக்குழந்தையை அவர் கொண்டாடினதற்களவேயில்லை. அதுபற்றித் தந்தையைக்காக்க வெண்ணிக் கடவுள் தநயனை வாங்கிக்கொண்டார். உனக்கன்றிமற்றெவர்க்கும் அக்குழந்தை ஏதோ வலிப்பு வந்து மாண்டதுபோல் தோன்றிற்று. அதைக்கொல்ல நான் நியமிக்கப்பட்டு வந்தேன். அதனிடத்திலாசை வைத்திருந்த தந்தையானவர் தனக்குற்ற தண்டனை தகுமென்று ஒப்புக்கொள்ளுகிறார். இதுநிற்க, அந்த மோசக்கருத்துள்ள வழிகாட்டி உயிருடன்திரும்பிப் போவனேல் அவருடைய ஆஸ்தியெல்லாம் கொள்ளைபோய்விடுமே! ஏனெனில் இன்றிரவு அவருடைய நிதிக்குவியல்களை அவன் திருட உத்தேசித்தான். அவ்வாறாயின் ஸத்விஷயத்தில் விநியோகமாகக் கூடிய எவ்வளவு சொத்து தவறிவிடும்? இவ்விதமாகக் கடவுள் உனக்கு கற்பிக்கின்றனர். இப்பொழுது நடந்த சோதனையைக்கண்டு இனி எல்லாம் ஈசன்செயலெனத்துணிந்து மனவமைதிகொண்டு உன்னிருப்பிடம்போய் பாபரகிதனாயிரு" என்று இவ்வாறாகச் சொல்லி தன்னுடைய இறகுகளைச் சத்தங்கேட்கவடித்துக்கொண்டு வாலிபன் மறைந்தான். தேவதூதன் வானத்தில் படர்ந்ததைக் கண்ணுற்றுத்துறவி விம்மிதவேலைக்கண் ஆழ்ந்தனர். தன்னுடைய தேசிகன் விமான மூர்ந்தாகாயத்திற் செல்ல "எலைஷா" என்னும் தீர்க்கதரிசியார் அவரைப்பார்த்து நின்று விண்ணகத்தை நோக்கிச் சென்ற தேஜோரூபம் கண்ணுக்கு மறைய கண்கொட்டாது பார்த்துதானும் பின் பற்றிச்செல்ல இச்சித்ததுபோலாயினார். தலைவணங்கிநின்ற துறவி கடவுளை நினைந்துத் "தேவலோகத்திலேப்படியோ அப்படியே இங்கும் உன்கட்டளைப்படிதான் நடக்கும்" எனவழுத்தி சந்தோஷத்துடன் திரும்பி தொன்றுதொட்டுள்ள தனதுறைவிடம் சென்று தெய்வபக்தியுடனும் மனவமைதியுடனும் காலங்கழித்து வந்தனர்.

முற்றிற்று.
------------

This webpage was last updated on 8 August 2007.
Feel free to send corrections to the webmaster.