Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the 1902 edition of the pirapantat tiraTTu, thus enabling
the production of the etext.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach
and following persons helped in the preparation and proof-reading of the etext:
S. Anbumani, Kumar Mallikarjunan, Devarajan, K. Kalyanasundaram,
Subra Mayilvahanan, Bavaharan V, Sathish,
Durairaj, Selvakumar, Venkataraman Sriram and Vijayalakshmi Peripoilan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide
initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
1050 |
நேரிசை ஆசிரியப்பா. திருவளர் தெய்வச் சிறப்பொருங் கமைந்த குருவளர் பன்மணிக் கோதில்கோ புரத்தோ டெண்ணீர் மாட மிணைதபுத் தோங்குந் தெண்ணீர் வளங்கூர் திருவா வடுதுறை நம்பல மாக நண்ணிவீற் றிருக்கு மம்பல வாண வருட்பெருங் குரவன் புண்ணியம் பொலியும் புகழ்க்கழற் கட்சுவை கண்ணிய கலம்பகக் கண்ணிபுனைந் தணியத் திருகோட் டன்பர் சிந்தையுண் மலரு மொருகோட் டாம்ப லிருதாட் டாமரை யேரொடு பொலிபொழு திரண்டு நாரொடு கொள்ளுது நலம்பெறற் பொருட்டே. | (1) |
1051 |
(ஒருபோகு மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா.) பார்பூத்த பெருந்தேயம் பற்பலவு மெடுத்தேத்தச் சீர்பூத்த வெண்மகளுஞ் செம்மகளுங் கலந்துறையத் தானமொடு தவமுமொரு தடையின்றித் தழைந்தோங்க மானமொடு புகழ்வயங்க வயங்குபெருஞ் சோணாட்டின் முத்தரெலாங் கொண்டாட மூவாதொன் பதுகோடி சித்தரெலா மகிழ்ந்துறையத் திகழ்திருவா வடுதுறையிற் புண்ணியமே தழைந்ததெனப் பொலிதருசத் துவந்தழைய வெண்ணியவன் பருக்கருள்வா னினிதுவீற் றிருந்தருள்வோய்! (1) (இ·து எட்டடியான்வந்த நேரிசையாசிரியச்சுரிதகம்.) சொல்லாலின் பூற்றரும்பத் துதிநால்வர்க் கருள்செய்வான் கல்லாலி னமர்ந்ததுமுன் கற்றுவிட்ட படிசெய்து திருநோக்காற் பரிசத்தாற் றிகழுமறைப் பொருள்வாக்கா லுருநோக்காப் பாவனைநூல் யோகத்தா லவுத்திரியால் நின்னிய லமைந்து நிகழ்திரு வடிக்கு நாயினுங் கடையே னவிலும்விண் ணப்பந் தாயினுஞ் சிறந்த தயைசா னின்னோ டொன்றியொன் றாதுறு மொன்றே யன்றி வேண்டல னருளுதி யுவந்தே. (2) | (1) |
1052 |
நேரிசைவெண்பா. உவப்பானென் புன்சொ லுவவாதென் பாசஞ் சிவப்பானின் றின்பந் திளைப்பேன் - றவப்பா னலவாணர் சூழ நகுதுறைசை வாழம் பலவாண தேசிகனென் பான். | (2) |
1053 |
கட்டளைக்கலித்துறை. பானலங் கண்ணியர் மாலழுந் தாதெனைப் பார்கழுநீர்த் தேனலங் கண்ணிய வம்பல வாண சிவக்கொழுந்தே மானலங் கண்ணிய சோலையி னூடு மதிநுழைந்து கூனலங் கண்ணிய கோமுத்தி மேய குருமணியே. | (3) |
1054 |
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். குருவளர்தண் பிறைச்சடையாய் வெண்ணெய் நல்லூர்க் குடிகொளும்வை திகமறையோ னாகி நாவ லுருவளர்நா வலன்பித்த போவென் றெள்ள வுவந்தடிமை கொண்டனையா லந்நா ளிந்நாட் டருவளர்வண் பொழிற்றிருவா வடுது றைக்கட் டழைபுகழம் பலவாண குரவ னானாய் திருவளர்பே ரருளினெனை யடிமை கொள்ளாய் தெளியமுன்பெற் றதுபெறவோ தெரித ரேனே. | (4) |
1055 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். தரைகமழ்வண் பொழிற்றிருவா வடுதுறைக்கட் குரவர்பிரான் றானாய்த் தெய்வ விரைகமழம் பலவாண மேலோனுண் மையையுணர்ந்தேன் விளம்பக் கேளீ ருரைகமழ்தண் கயிலாயத் தொருவன்கா ணாலவனத் துறைந்தான் முன்னம் புரைகமழிவ் வரசவனத் துறைவானிப் போதவன்சீர் புகல்வார் யாரே. | (5) |
1056 |
நேரிசைவெண்பா. புகவே தவித்தேனின் பொன்னடிக்கீ ழுண்மை தகவே தவித்தேயான் சன்ம - முகவேபார் வம்பல வாணா வருகென் றருட்டுறைசை யம்பல வாணா வருள். | (6) |
1057 |
கட்டளைக்கலித்துறை. அரியாய் நிராசை யெனுமனை யாளை யவாய்ப்புணர்ந்து பிரியாய் பரிபக் குவமக் களைப்பெறு வாய்துறைசைக் குரியாய் புகழம் பலவாண தேவமிக் கோங்குசெல்வத் திரியாய் சந்யாச நினக்கே யுரித்தென்ப தென்னுரையே. | (7) |
1058 |
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியச்சந்தவிருத்தம். உரிய தென்றொளிர் நீறொன்ற வொன்றின வுறுநர் தம்படர் பாசங் களைந்தன கரிபு னைந்தப டாம்விண் டொளிர்ந்தன கருது கண்டிகை யாரம் புனைந்தன விரித ருங்கழு நீர்நன் றளைந்தன விரவு சுந்தர வேடந் தவழ்ந்தன துரிச றுந்துதி யாவுஞ் சுமந்தன துறைசை யம்பல வாணன் புயங்களே. | (8) |
1059 |
நேரிசைவெண்பா. புயங்கொண்ட செங்கழுநீர்ப் பூவொன்றே வேட்ட நயங்கொண்ட பேதைபல நண்ண - வயங்கொண்டு வேளுமம ரம்பலவாண் மெய்யெனவெய் வான்றுறைசை நாளுமம ரம்பலவா ணா. | (9) |
1060 |
கட்டளைக்கலித்துறை. நாமா தரிக்கு மழும்விழுஞ் சோரு நலியுமெங்கள் பூமா தரிக்கு மதவேளென் றேங்கும் பொருமுமருள் காமா தரிக்கு நலஞ்சார் துறைசைக் கமழ்கழுநீர்த் தாமா தரிக்குமெய் யம்பல வாண தயாநிதியே. | (10) |
1061 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். நிதியமெனத் துறைசைவள ரம்பலவா ணாவன்று நீ மெய் யாள்வா, ருதியமிற வாமெனவுள் ளுணர்ந்துவக்க வுயிர்கடொறு மொளித்த கள்வன், மதியமுத லியகரந்து மானிடன்போ லடைந் தெங்கண் மனங்க வர்ந்தே, பதியவமர் தலினின்று பெருங்கள்வ னென்றுனையாம் பாடு வோமே. (11) | (11) |
1062 |
அம்மானை.
இடைமடக்கா யீற்றடிமிக்குவந்த நான்கடிக்கலித்தாழிசை. பாடுந் துறைசைப் பதியம் பலவாண னாடுங் கயிலாய நாதன்கா ணம்மானை நாடுங் கயிலாய நாதனே யாமாயி னீடொன்று மென்பணியை யெங்கொளித்தா னம்மானை யெப்போது மென்பணிகொ லேந்தல்கா ணம்மானை. | (12) |
1063 |
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். மாநலம் பொலிய வளர்பொழிற் றுறைசை மருவிய வம்பல வாணா, பாநலம் பொலியப் பாடுவோ நின்னைப் பரிசிலெங் களுக்கெவன் கொடுப்பா, யூநலம் பொலிய வூட்டுபு வளர்த்த வுடன் முதன் மூன்றையுங் கொள்வா, யாநலம் பொலிய வடியவர் பலர்க்கு மருளுநின் வள்ளன்மை யழகே. | (13) |
1064 |
மதங்கு.- அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். அழலமைகண் கரந்துகுரு வம்பலவா ணன்பொலிவா னவன்றா ளுட்கொண் டுழலமையிந் திரியமவித் தொருதிருவா வடுதுறைக்க ணுறைவோம் யாங்கள் கழலமைதாண் மதன்பணிபூண் டடைமதங்கி யீர்கடகக் கைவா ளோடு சுழலமையு முகவாளு மெவன்செயும்புல் லும்படையாந் துணிவல் லோர்க்கே. | (14) |
1065 |
தவம்.
வலியபெரும் போகியெனக் காலருந்தி யுரைதளர்ந்து வன்கோல்பற்றி, மெலிவறமுக் காலடைந்து மொன்றடையீ ரிதுத வமோ மிளிர்கோ முத்தி, யொலிமலியம் பலவாண குரவன்முனம் யோகியென வுற்றுப் பெற்ற, பொலிகலமுண் டிடுந்தளரா நடையொடு மாந் தவமொன்றும் புணரு வீரே. | (15) |
1066 |
காலம். - மடக்கு. எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். வீரமதன் கறுத்தலரம் பெய்யுங் கால மேகமெலாங் கறுத்தலரம் பெய்யுங் காலம் ஊரவயல் சூழுங்கா விரிக்குங் கால முறைதுறைசை சூழுங்கா விரிக்குங் காலம் ஈரமிகு தளவம்பூ விரிக்குங் கால மேழையர்நொந் தளவம்பூ விரிக்குங் காலம் ஆரமெனத் திருக்கழுநீ ரடையாக் கால மம்பலவா ணன்கழுநீ ரடையாக் காலம். | (16) |
1067 |
மடக்கு. - கட்டளைக்கலிப்பா. காலை யம்புய மஞ்சர ணங்களே காய்ந்த தும்முன மஞ்சர ணங்களே மாலை யாதன் மணத்த வரத்தமே வந்து கூம்பு மணத்த வரத்தமே வேலை கொண்டெங்கட் கீவதங் கொன்றையே விட்டி ருக்கின்ற தாவதங் கொன்றையே சோலை யம்பல வாண வடிகளேய் துறைசை யம்பல வாண வடிகளே. | (17) |
1068 |
நேரிசைவெண்பா. அடியார்சிந் தாமணியே யம்பலவா ணாவன் கொடியார் மதிற்றுறைசைக் கோவே - முடியாநீ யன்றணிவாய் பாதத் தலருங் கருங்குவளை யின்றணிவாய் செங்குவளை யே. | (18) |
1069 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். ஏகமுறு மரைமதியன் றவிர்கடுக்கை யடைந்தசிறப் பெல்லாந் தன்பான், மோகமுறு நறுமலரின் றடையவெய்த்துக் கவிகைமுழு மதியாய் நாளும், யோகமுறு மாவடுதண் டுறைவளரம் பல வாணா வுன்பா லன்பாய்ப், பாகமுறு பவரந்நா ளினுமிந்நாள் விளங்கு வரிப் படியிற் றானே. | (19) |
1070 |
மேற்படி வேறு. படிக்கு மறையோ லிடுந்துறைசைப் பதிவாழ் குருவம் பலவாணா, பிடிக்கும் வயிராக் கியருளக்கே பிரியா தமரு நின்றிருத்தா, டுடிக்கு மடியேன் புன்றலைமேற் சூட்ட வேண்டுஞ் சூட்டினத்தாண், முடிக்குங் கழுநீர் மலச்சேற்றுண் முழுகு மெனக்குக் கழுநீரே. | (20) |
1071 |
கார்விடுதூது.- கட்டளைக்கலித்துறை. நீர்கொண்ட மேக நிரைகாண் மலர்பல நேர்பறித்துப், போர்கோண்ட வேள்செயல் பொங்கரிற் றங்கிய போதுணர்ந்தீர், சீர்கொண்ட கோமுத்தி யம்பல வாணனைச் சேர்ந்தவன்றோட், டார் கொண்ட செங்கழு நீர்கொண்டு வாருந் தகவுரைத்தே. | (21) |
1072 |
தழை. -நேரிசைவெண்பா. உரையம் பலவாண வுத்தமன்கோ முத்தி யரையன் றிருமுகமே யம்மா - கரைய மலைவாநீ தந்தவறா மாதராட் கெங்க டலைவாநீ தந்த தழை. | (22) |
1073 |
நாரைவிடுதூது - கலிநிலைத்தறை. தழையுஞ் சிறைமட நாராய் வாராய் சாராயாய் விழையுந் துறைசையு ளம்பல வாணனை மேவாமே யுழையும் பிறகிடு கண்ணாள் புண்ணா ளுண்ணாளாய்க் குழையுந் திறமது தேறாய் மாறாய் கூறாயே. | (23) |
1074 |
வண்டுவிடுதூது - கலிவிருத்தம் கூறுஞ்சிறை வண்டீர்குழல் கொண்டீர்மது வுண்டீ ராறும்பசி யுடையீரரு கடையீரளி படையீ ரேறும்புகழ்த் துறைசைப்பதி யெழிலம்பல வாணன் றேறும்படி சொல்லீர்மயல் செல்லீர்பொழில் புகுமே | (24) |
1075 |
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் புகழ்மிகு கயிலைப் புண்ணியா வன்று புயறவழ் பொருப்புவிற் குழைத்திட் டிகழ்தொழி லினர்முப் புரம்பொடி படுத்தின் றெழிற்றிரு வாவடு துறையிற் றிகழ்தரு கருணை யம்பல வாண தேவனா யினையடி யேனன் றகழ்மனப் பொருப்பைக் குழைத்துமும் மலச்சோ வரும்பொடி படுத்திடா தென்னே. | (25) |
1076 |
நேரிசைவெண்பா என்னா னினக்குறுவ சென்னுண்டு மன்னுமரு ளுன்னா லெனக்குறுவ தொன்றுண்டே - பொன்னாரன் மஞ்சார் துறைசை வளரம் பலவாணா வஞ்சா றலவே யருள். | (26) |
1077 |
கட்டளைகலித்துறை அருவிய றாவரை போன்முத்த மாலை யவிரிலஞ்சூழ் பொருவிய லோவு திருவா வடுதுறைப் புண்ணியமா சொருவிய வம்பல வாணா வடிய னுடன்முதலா மருவிய மூன்றுங்கொண் டொன்றீ வதர்கும் வருத்தமென்னே. | (27) |
1078 |
சம்பிரதம் எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம் வருந்தாது கமலவட் டப்பூ வெடுத்துமுடி வைப்பனோ திமமனைத்தும் வானம் பறந்திட வெடுத்தெறிவ னறியபூ மணமாலை யாத்துவிடுவன் கருந்தாது கைக்கொடு பிசைந்தூது வன்பெருங் கரியையும வாறுசெய்வன் காட்டிலுறை புற்கொண்டு புலிசெய்வ னின்னுமறு கைக்கொண்டு யாளிசெய்வன் பொருந்தாது வாய்திறந் தவணின்று புவனம்வெளி போதப் புரிந்துவிடுவன் பொங்கியெழு மாலமும் பருகுவன் பெருகுமிவை புல்லியன வேறுமுண்டா வருந்தாது நீர்கொள்கட லாடையுல கத்துயி ரடங்கவா னந்தவெள்ளத் தாவடு துறைக்கணம் பலவாண தேவனரு ளன்றியு மழுத்திடுவனே. | (28) |
1079 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். அழுவா ரயர்ந்து விழுவார்நின் றாடிப் பாடி யரவென்று தொழுவார் துதிப்பார் பெருங்கருணை சுரக்குமாறு நினதடியா, ருழுவார் செறியுங் கோமுத்தி யொருவா வருளம் பலவாணா, வழுவார் கடையே னின்னெதிரெவ் வலிகொண் டடையக் கடவேனே. | (29) |
1080 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் - வேறு. கடிமலர் கைக்கொண் டன்பு கனியவம் பலவா ணன்பொன், னடியருச் சனை கோமுத்தி யம்பல வாணா செய்வாய், தடிதலில் விதியான் முன்னந் தன்னைத்தா னருச்சித் தேத்தும், படிநினைந் தனைகொல் யார்க்கும் பழக்கவா தனைவி டாதே. | (30) |
1081 |
எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம். விடரடை வரிய வாவடு துறையுண் மேவிய வம்பல வாண விமலநீ யென்றோ யானுமன் றுன்பான் மேவிலே னருளென வந்நா ளிடர்தபு குழவி யறுத்தருத் தியுங்கற் பெழின்மனை யாட்டியைக் கொடுத்து மீன்றவற் செகுத்துங் கடும்பினைத் தடிந்து மிடந்துகண் ணப்பியும் விடாது படரொரு சூளா லிளமையைத் துறந்தும் பயந்தபெண் கருங்குழ லரிந்தும் பசையற முன்கை தேய்த்துமற் றின்னும் பலசெயற் கரியசெய் தார்க்கே தொடர்புற வருள்செய் தாண்டனை யிந்நாள் சொற்றவக் கொடுமைவேண் டாது துதிசெய வாளூந் திறமுணர்ந் தடைந்தேன் றுணிபிலே னாதலி னருளே. | (31) |
1082 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். அருந்தவருக் கரசுகலை யறுபத்து நான்கினுக்கு மரசு ஞானம் பொருந்தவருக் கரசுகுர வருக்கெல்லா மரசுநெடும் பொன்மா மேருப் பெருந்தவருக் கரசுதுறை சைப்பதியம் பலவாண பிரானீ யென்றே வருந்தவருக் கரசுபெறா நினைநிழற்றுந் திருவரசு மகிழ்ந்து தானே. | (32) |
1083 |
ஈற்றடிமிக்குவந்த நான்கடிக்கலித்தாழிசை. தானமொடு தவமோங்குந் தமிழ்த்திருவா வடுதுறைமெய்ஞ் ஞானமுதல் வனைக்கருணை நமச்சிவா யனைப்பவஞ்ச வூனமறுத் தொளிர்பரம யோகியைமிக் கோங்கொளியே யானவனை வழுத்தாதா ரறிவென்ன வறிவே யம்பலவா ணனைவழுத்தா ரறிவென்ன வறிவே. | (33) |
1084 |
எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம். அறிவரும் பெருமை யாவடு துறைவா ழம்பல வாண மெய்க் குரவ, னனைத்தினுங் கலந்துங் கலப்புறா மையினா லடலுடைத் துறவியே தானே, செறிபல புவன நடத்தலி னரசே சிவானந்த னாத லிற் சுகியே, திகழ்சிவ யோகந் தனையடுக் கிரகஞ் செய்தலின் யோகி யே நாளுங், குறிபடு பசுபோ தங்களை விழுங்கிக் கோடலிற் போகியே கருணை, கூர்சிவ தரும வடிவமா யிருக்குங் கொள்கையி னறவனே யடைந்தோர், முறிவரு மலங்கண் முழுமையு முருக்கு முறைமையின்மறவனே யிவனை, முழுதுணர்ந் தவரு மின்னனே யென்றோர் முடி புற மொழிந்திட லரிதே. | (34) |
1085 |
சிலேடை. அரியவன் றுறைசை யம்பல வாண வமலதே சிகனுத னோக்கம், புரியவிழ் கழுநீர் மாலைநா லொண்டோள் பொறியரி தொடர் மலர்ப் பாதம், பிரியந லங்கை யுழைநலம் பரசு பெற்றிமுத் திரை யிவை யுடையா, னுரியயா னுணர்ந்தே னிவன்பா சிவனே யுண்மை யா சங்கையொன் றின்றெ. | (35) |
1086 |
நேரிசைவெண்பா. இன்றி யமையாத வின்பம் பெறச்சிறிது நன்றி யமையாத நான்முயன்றேன் - றுன்றி யலரளிசார் வான்றுறைசை யம்பலவா ணாநின் னலரளிசார் வானன் கருள். | (36) |
1087 |
கட்டளைக்கலித்துறை. அருண்மலி கோமுத்தி யம்பல வாண வமலநினக், கிருண்மலி கண்ட மெனவுப மானமு மில்லையென்றேன், பொருண்மலி யன்னதுண் டேலுண்டு போலும் புகறியென்றான், வெருண்மலி யானுண் டெனயா ரெனநீமெய் யென்றனனே. | (37) |
1088 |
வேற்றொலிவெண்டுறை. என்றுமொரு தன்மையனா யாவடுதண் டுறையிலமர்ந் திருக்கு மூர்த்தி, நன்றுமகிழ்ந் தடியவருக் கருள்புரியம் பலவாண நமச்சி வாயன், சிற்பரம் பொருளெனச் சின்மயத் திரளெனச், சொற் பதத் தளவிடத் தொலைவில்செஞ் சுடரெனக், கற்பகத் தருவெனக்கருணையங் கடலெனத், தற்பெறக் கருதுவார் தங்குணக் குன்றெனப், பொற்புறப் பொலிவதெம் புண்ணியப் பெருமையே. | (38) |
1089 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். புண்ணியவா வடுதுறையம் பலவாணன் பரசிவனேபொருந்து வேடங், கண்ணியமற் றவன்மறைத்து முகத்தருட்கண் மறைக்குமவை காண்டோ றன்பர், தண்ணியகைத் தாமரைகூம் புந் திருநீ றேற்கமலர் தரும்வா யாம்ப, லண்ணியதோத் திரஞ்செயவிண் டிடுங்கூம்பு மமைத்தபணி யடைத லானே. | (39) |
1090 |
ஒருபொருண்மேன் மூன்றடுக்கிவந்த ஆசிரியத்தாழிசை. ஆன்ற துறைசை யருளம் பலவாணன் றோன்ற மொழியுந் துசடீர் திருவாய்ச்சொ லேன்ற பவநோய்க் கிடுமருந்தே யென்பரால் (1) அன்பார் துறைசை யருளம் பலவாண னின்பார் தருமா றிசைக்குந் திருவாய்ச்சொ றுன்பார் பவக்கடற்கோர் சூழ்வடவை யென்பரால் (2) அண்ணுந் துறைசை யருளம் பலவாண னெண்ணும் பலர்க்கு மிசைக்குந் திருவாய்ச்சொல் கண்ணும் பவமலைக்கோர் காய்குலிச மென்பரால். (3) | (40) |
1091 |
நேரிசைவெண்பா. ஆலன்றி ஞான வரசமர்ந்து மேவுபரி பாலன் றிருவம் பலவாணன் - மாலன்றிக் கோலரியா னென்றுமயல் கொண்டாய் பெரும்பேதாய் மாலரியாற் கேது மயல். | (41) |
1092 |
கட்டளைக்கலித்துறை. மயல்கொண்ட பேதைக் குரைதோழி யம்பல வாணனுகள், கயல்கொண்ட வாவித் திருவா வடுதுறைக் கண்ணுயரி, லயல்கொண்ட வீதி யுலாப்போத நேர்தொழு தாசைப்பட்டே, னியல்கொண்ட யானென நீயலை யானென்ற தெப்பொருட்டே. | (42) |
1093 |
அறிசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். பொருவிறுறை சையிற்குருவம் பலவாணன் றிருவுலாப் புறம்போந் தானங், கொருவிலிவன் மானிடன்றா னேயென்றேன்றோழியன்னை யோடி வந்து, மருவிலக லாவிவன்முன் மானிடன்றா னெனத்தார்தா வாங்கி யெனறேன், கருவிலெச்ச தத்தனுக்குப் பிற வென்றாள் பயனுணரேன் கரைவாய் நீயே. | (43) |
1094 |
நேரிசைவெண்பா. நீயாக மத்தடைவு நீதி யுணர்த்தியருட் டாயாக மத்தடைவு தானொழிவேன் - மாயா வலத்துறைசை யம்பலவா மாளிகையா வென்னு நலத்துறைசை யம்பலவா ணா. | (44) |
1095 |
கட்டளைக்கலித்துறை. நாடுந் துறைசைந மம்பல வாண நகுகுரவன் பாடுந் தொழிலர் பவமாய்த் திடலிற் பவமிலியே யாடும் பிறரடைந் தார்பசு போத மறாவகைசொற் றூடும் பவம்விளைக் குந்திறத் தாலவ ருள்ளவரே. | (45) |
1096 |
எழுசீர்க்கழிநெடிலடி இரட்டைஆசிரியவிருத்தம். வரையகம் பொலியுங் காழகிற் றுணியும் வரைக்கருஞ்சந்தனக் குறடு - மாமணித் திரளு மதகரிக் கோடும் வளமயிற் பீலி யும் வரன்றித், திரையெடுத் தெறிந்து கடலைக் கலக்குத் திருப்பெ ருங் காவிரித் தென்பாற்- றிகழ்தரு திருவா வடுதுறை யமருந் தேசிகனம்பல வாணன், புரைதபு சரணத் தடியவர் குழுமிப் பொங்குபே ரன்புபூண் டேத்திப் - பொலிமலர்க் கமல முதன்மல ரிடவப் பூப் பொதிந் தவிர்பெருங் காட்சி, விரைமலர்க் கணைவேள் பழம்பகைகுறித்து விட்டபல் வாளியு மடிமேல் - வீழ்ந்துறப் பற்றித் தஞ்செய லின்மை விளக்குபு கிடத்தலொத் தனவே. | (46) |
1097 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். வேளிற் பொலிவார் செறிதுறைசை விமலா குருவம் பலவாணா, தோளிற் கழுநீர் திருவரையிற் சூழுங் காவி யுடையாய் முன், றாளிற் புனைந்தாய் கருங்குவளை தணந்தா யெனதுட் டாமரை யான், பீளிற் படாம லங்கணிந்தாற் பிழையுண் டாமோ பேசாயே. | (47) |
1098 |
கலி விருத்தம். ஆயமர் கருணைமிக் கமைந்த கோமுத்தி வாயம ரம்பல வாண தேவமுன் சாயம ரரைமதி தலைக்கொண் டாயின்றென் காயமர் முழுமதி காற்கொண் டாலென்னே. | (48) |
1099 |
மேற்படி / வேறு. நேயன் ஞானத் துறைசை நிமலன்செவ் வாய னம்பல வாண குருபரன் றூயன் யானல னென்னவுந் தொட்டிழுத் தாயன் பாளரி லாண்ட தருண்மையே. | (49) |
1100 |
கலிநிலைத் துறை. மைய ளாம்பொழிற் றுறைசையி னம்பல வாணன் பொய்ய ளாமெனை யுந்தடுத் தாண்டனன் புகலி னைய ளாங்கொடி யோன்மகா பாதக னண்ணச் செய்ய ளாமது ரையின்முனாண் டதுபொரூஉந் தெளிவே. | (50) |
1101 |
நேரிசை ஆசிரியப்பா. தெளிவளர் கருணைச் சின்மய குரவ னளிவளர் துறைசை யம்பல வாணன் வெண்மதிக் கவிகை மீமிசை நிழற்ற வுண்மதித் திடுவிரு துலப்பல வோங்கப் பல்லிய முழுதும் பரவையின் முழங்கச் (5) சொல்லிய செந்தமிழ்ச் சுருதிமிக் கார்ப்பத் தண்ணிய வடியார் சயசய வென்னப் புண்ணிய முனிவர் புகழ்ந்தனர் வாழ்த்தத் திகழ்மணி மறுகிற் சிவிகை யூர்ந்து புகழ்தரு திருவுலாப் போந்தன னாகக் (10) குலவுநீ ராசனங் கொண்டெதி ரணையு நிலவுநல் லாரொடு நேரிழை யாயுஞ் சென்றன ளியானுஞ் சென்றெதிர் தாழ்ந்து நின்றுகை குவித்து நேரும் நோக்கி யாவன் பால னிவன்புக லென்றேன் (15) மேவன் பாநகை மேவுறப் புரிந்து முன்னிவன் பெருமறை மொழிக்கப் பாலன் மன்னிவன் பராரையின் வளர்கப் பாலன் மூர்த்தி முதலா மொழிமுப் பாலன் சீர்த்திகொ ணீற்றோடு திகழ்கட் பால னறுவகைச் சமயத் தறுவகைப் பாலன் (20) மறுவகை சுருதி மணத்தக பால னாறா றாய வவைக்கப் பாலன் மாறா தியற்றி வயக்குகா பாலன் வளர்தரு தெய்வ மனுச்சா பாலன் (25) றளர்வரு கௌரி தனக்கழும் பாலன் தழைதரு மிந்நாட் சைவபரி பாலன் பிழைதரு தன்மையில் பெருந்தவப் பாலன் பிறவா னிறவான் பிறப்பிறப் பொழிப்பான் மறவா னினையான் வரவிலன் போக்கிலன் (30) பேதாய் நீயோ பேசினு முணர்வாய் கோதா யாதமெய்க் கூற்றிது கண்டா யடங்குதி யென்றன ளன்னை தொடங்குதி தோழியிச் சொற்பொருள் சொலற்கே. | (51) |
1102 |
தாழிசை சொல்லரும்பகழி தூவுவான்விழி சுரந்தவங்கியுண வாயவேள் சுடுசினத்துழுவை போன்றுபாயுமணி துத்திநாகவுண வாயகால் கொல்லும்வெந்தழலை வீசுமிட்டியடி கொண்டுதேய்த்தவொரு திங்கடான் குரையெறிந்துசெவி சுடுமடங்குகொடி தாயநஞ்சமு னெழுங்கட லல்லுநண்பகலு மம்பறூற்றுவ ரநங்கனுக்குதவி யாயவ ரளவிடற்கருநி னுண்மைமுற்றுமு ளறிந்துபோலுமக ளென்செய்வாள் வல்லுமஞ்சுமுலை யணையுமாறருள்செய் மாலைவான்றுறைசை யம்பல வாணதேசிக தயாகராவிமல வான்பெருங்கருணை வள்ளலே. | (52) |
1103 |
சித்து. / அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். வள்ளலருட் குருராயன் றுறைசையினம் பலவாணன் மலர்ப்பொற் பாதங் கள்ளலரிட் டருச்சிக்குஞ் சித்தரியாஞ் செந்தாது கஞ்சங் காட்ட வுள்ளலமப் பாவிரும்பு நாவாய்கொண் டீழமின்னே யுறச்செய் வேமற் றெள்ளலர்நேர்ந் தமுதுதவிற் செம்புதனை மறுநாட்பொன் னெனச்செய்வாமே. | (53) |
1104 |
இதுவுமது. மேதகைய நவகோடி சித்தர்கள்வீற் றிருக்குநகர் விளங்கா நின்ற, மாதகையம் பலவாண மாசிலா மணிமலர்த்தாள் வணங்கி யேத்திக், கோதகையுஞ் சித்தருக்குங், குறையுளதோ புளித்தகூழ் கொடுவா வப்பா, தீதகைய வடுவழற்றீண் டுறுபொழுதே வேங்கையெனச் செய்வோம் பாரே. | (54) |
1105 |
இதுவுமது. / எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். பார்பரவு மாவடுதண் டுறைக்கண் மேய பரமகுரு வம்பலவா ணப்பேர் வள்ளல் சீர்பரவு திருமடத்தி லியார்க்கு நல்குந் திருவமுது கறியமுது நெய்பால் போல வேர்பரவு மாறுபடை யின்றே லுன்னா லியன்றனசெய் முடியாதே லிடுகூ ழேனும் வேர்பரவுன் வறுமிதரித் திரமே யென்ன மேவுசெம்பைச் சுவணமா விளக்கு வோமே. | (55) |
1106 |
இதுவுமது. /பதினான்குசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். விள்ளரும் புகழ்சா லாவடு துறையுண்மேவிய வம்பல வாண வித்தகன் றிருமு னொருதினஞ் சென்று மெய்யுறப் பணிந்தன மனையான் றள்ளருங் கருணை கூர்ந்துவேண் டுவதென் சாற்றுக வென்றுநீ றளித்தான் றளர்விலாப் படைவீங் கிடவுணல் வேண்டுந் தயைபுரி யென்ற· தேற்றோ மெள்ளருஞ் சுவைய வடிசின்முன் னளித்தா னிலைதவிர்த் தியாவையு முண்டோ மிவன்செய்பே ருதவிக் கினிச்செய லியாதென் றெண்ணினோஞ் சாமியாய் விளங்க வுள்ளரு மனையான் றிருமட முழுது முஞற்றினோ நமதுசித் தருமை யுணர்பவ ரியாரே யாவயிற் சென்றா லுணரலா மோதுவார் பலரே. | (56) |
1107 |
கொச்சகக்கலிப்பா. ஒதுவார் சூழ்துறைசை யோங்கம் பலவாணா காதுவார் வாளிபல காமன் றொடுத்தடலாற் போதுவார் கூந்தல் புழுங்கு மழும்விழுநின் றாதுவார் செங்கழுநீர் தாராமை தண்ணளியே. | (57) |
1108 |
நேரிசைவெண்பா. தண்ணந் துறைசைத் தமிழம் பலவாணன் வெண்ணந் துறைகையான் விண்டுவல - னெண்ணரிய வன்னக் கொடியா னலரோ னலன்சிவனே யென்னக் கொடியான மே. | (58) |
1109 |
கட்டளைக்கலித்துறை. யானென தென்னுஞ் செருக்கொழி யானின் னெதிர்ப் படினவ், வானென தென்னுமொண் கோமுத்தி யம்பல வாணபொதி, யூனென தென்னும் படியா னெழாதொழித் துன்னடிப்பூந், தேனெனதென்னும் படிபே ரருளென்று செய்குவையே. | (59) |
1110 |
கைக்கிளை: மருட்பா. வைய மடிசூடும் வாட்க ணிமைகூடு மைய மினியென் னணங்கல்லள் - வெய்ய கலர்புக ழாத காமரு துறைசை மலர்புக ழம்பல வாணன் பலர்புகழ் கயிலை பயில்குலக் கொடியே. | (60) |
1111 |
மடக்கு. /பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். குலவு கழிநீர் மருங்கரும்பே குழைக்கு மதன மருங்கரும்பே - குளிர்செவ் வழியே பொழிவண்டே கொடிய லவனன் பொழிவண்டே, நிலவு மணல்வெண் ணந்தினமே நிகழின் புறவெண்ணந்தினமே - நெஞ்ச முவந்து வருமலவா நிலவே யுயிர்க வருமலவா, புலவு படுநீர்ச் சிறைக்குருகே பொல்லேன் படுநீர்ச் சிறைக்குருகேபோகு - மியலார் நாவாயே புழுக்குமியலார் நாவாயே, சுலவு சீரம் பல வாணன் றுறைசைச் சீரம் பலவாணன - றுணைத்தோ டாங்கு கழுநீரே தோயி னறுமிக் கழுநீரே. | (61) |
1112 |
களி. - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். நீருறையும் வயற்றிருவா வடுதுறையம் பலவாண நிம லன் கண்டங், காருறையும் படிகலவான் கழல்புகழ்ந்து பாடிவரு களிய ரேம்யாம், பாருறையு மானிடர்காண் மாரியின்றி யுலகிலென்ன பய னுண் டாகு, நாருறையு மாதவமில் லாமலெவர் பரகதியை நண்ணு வாரே. | (62) |
1113 |
இதுவுமது. நண்ணரிய புகழ்த்துறைசை நாயகனம் பலவாண நமச்சிவாய, னெண்ணரிய புகழ்பாடு களியர்யாம் வேம்புவப்பா ரிக்கு நீப் பார், மண்ணரிய வாம்பன்முழு மதியுவக்குஞ் சாலிதவ வசிட்டனோம்புங், கண்ணரிய மேதைகொளா ரெடுத்தபிறப் பாற்பயனென்கைக்கொள் வாரே. | (63) |
1114 |
இதுவுமது. /எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். வாரிபுடை சூழுலகின் முளைத்து நாளும் வயங்குபெரும் பாதவங்க ளனைத்துந் தாழச் சீரியவான் பனைதெங்கே யுயர்ச்சி வாய்ந்து திகழுநறுங் கள்ளருள்கா ரணத்தா லன்றோ பூரியர்ச்சா ராததிருத் துறைசை மேவும் புண்ணியனம் பலவாண புனித ஞான வாரியன்சே வடியடைந்தா ரன்றி மற்றோ ரருஞ்சாதிப் பற்றிலரென் றறைதல் வம்பே. | (64) |
1115 |
வஞ்சித்துறை. வம்பலர் துறைசை யம்பல வாண னம்பல ரடிசூ ழும்பலர் பொருளே. | (65) |
1116 |
வஞ்சிவிருத்தம். பொருளி லாரைப் புகழ்ந்திடீர் மருளி லம்பல வாணனே யருளி னுண்டுமக் கானந்தம் வெருளில் கோமுத்தி மேவுமே. | (66) |
1117 |
குறளடிவஞ்சிப்பா. மேவும்பவம் யாவுந்தப மலமூன்றற நல்மூன்றுற நாவருமறை யோவருமுறை தெருண்மலிதர வருள்புரிமதி, நாளுந் துன்னிய மிகுபுகழ்த் துறைசை மன்னிய வம்பல வாணதே சிகனே. | (67) |
1118 |
குறம். / எழுசீர்க்கழிநெடிலடி இரட்டைஆசிரியவிருத்தம். சிகைபடு செந்தீ வளர்த்தவி நாளுந் தேவருக் கருத்து வே தியர்வாய்த் - திருமறை முழக்கஞ் சேணுல களக்குந் தென்றிருவாவடு துறையிற், பகைபடு தகையி லம்பல வாணப் பண்ணவ னடி யடைந் தார்க்குப்- பழங்கலை யருளப் பதுக்கலை மறைக்க படியெனப் பசுநற வூற்று, முகைபடு குழலாய் நீயுமவ் வாறே முன்னிய புதுக்கலை மறைத்து - முதுபழங் கலையே யெனக்களித் தனைநின் முகக்குறி கைக்குறி நன்று, தகைபடு மனையான் றடம்புயக் கழிநீர் தரப்பெறு வாயிது பொய்க்கிற் - சாற்றியான் குறப்பெ ணாவலோ கரத்திற் றகுகுறக் கூடையு மெடேனே. | (68) |
1119 |
கலிவிருத்தம். எடுப்பான்கழை மடுப்பானளி தொடுப்பானல ரிகல்வே ளடுப்பானிம கரன்கோமுத்தி யருளம்பல வாணா விடுப்பானுளங் குறியேலொளி மிகுசெங்கழு நீரே கொடுப்பனமை யின்றேமகள் குன்றாவகை நன்றே. | (69) |
1120 |
ஊசல். /ஈற்றடிமிக்குவந்த நான்கடிக்கலித்தாழிசை. நல்லார் துறைசை நகுமம் பலவாணன் பல்லார் வணங்கப் பரிந்தருளுஞ் சீர்பாடி வல்லார் முலைகுலுங்க வண்கை வளையார்ப்ப வல்லார் குழன்மடவீ ராடுகபொன் னூச லணிமே கலையிடையீ ராடுக பொன் னூசல். | (70) |
1121 |
வெளிவிருத்தம். ஊருஞ் சகடென யானுழல் வதுதப வருளாயோ பாரும் பிறவு மறுத்தெழு பண்புற வருளாயோ தேருந் திறமிது வென்று தெளிந்திட வருளாயோ வாருந் துறைசையு ளம்பல வாணமெய் யருளாயோ. | (71) |
1122 |
மறம். / எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். அருள்விர வுருவ னம்பல வாண னாவடு தண்டுறை யரசே, பொருள்விர வொருவா னரசுமற் றரசு பூவர செனத்தெளி தூத, வெருள்விர வாத மறமுனு மரசின் மெய்த்திரு முகமுறு மதன்கண், மருள்விர வாத குழைபல வுண்டே மறிக்குள காமெனின் வையே. | (72) |
1123 |
இதுவமது. / எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம். வையகம் புகழு மாவடு துறைக்கண் மன்னிய வம்பல வாணன் - மலரடிக் கோதை மற்றவ னடியார் மார்பொடு தோளுறத் தழுவுஞ், செய்யமற் றவன்முன் புனைந்தருள் கோதை சேய்ஞலூர்ப் பிள்ளை தோடழுவுஞ் - சேரல நாட்டுச் சிறந்தவோர் கோதை செறியு மே காலியுந் தழுவும், வெய்யவெங் கோதை வீரர்கை யனைத்தும் வெளி வரு கோதைகஞ் சாறர்- மென்மகள் கோதை யாவையு நகுமா விரதியர் மார்பையுந் தழுவுங், குய்யமொன் றின்றி யுரைத்தன மறவர் கோதைசீ ரற்றன்று தூத - குலவுநங் குலத்துக் கோதைவேட் டவர்கள் கோதையே யடைவது மெய்யே. | (73) |
1124 |
இதுவமது. /அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். மெய்யனா வடுதுறையம் பலவாணன் விடுவதுபோல் விடுக்கி னென்னாம், வையமா ளரசர்திரு முகமெனிற்பெண் கொடுக்குங்கொன் மறவர் சாதி, வெய்யவா ளவரெங்கள் பெண்ணாசைப் பட்டெ திர்ந்தால் விண்பூப் பில்லாத், தையலார் முலைதழுவத் தடிந்துதுரந் திடுவமிது சரதந் தானே. | (74) |
1125 |
விறலிவிடுதூது. /அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். தான மால்களிற் றண்ணனின் பான்மிகு தண்ணளி யின னென்றே, யீன மார்தரப் புகழுவை விறலிநீ யி·தொரீஇ யின்னே போய், மான வாவடு தண்டுறை யம்பல வாணனைப் புகழ்வாயேற், போன நாண்மது ரையிலவ னருள்பெறு பூவைநே ராவாயே. | (75) |
1126 |
பாண். /அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். வாய்ந்தவிசை நீலகண்டப் பெரும்பாணர் தமரென்று வருவாய் பாணா, வேய்ந்ததலை வன்பரத்தை யவாவினனின் பாலன்ப னென்பா யோர்வல், வேய்ந்தபுக ழாவடுதண் டுறைவளரம் பலவாண விமலன் பாற்போய்த், தோய்ந்தவிசை பாடுகழல் சூடுபெரு வீடுபெறு துணிபீ தோரே. | (76) |
1127 |
எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம். துணிபிறை வெண்மை யெலும்பணி வெண்மை சூடுகங் காளமும் வெண்மை துரோணமும் வெண்மை கபாலமும் வெண்மை துவலைசால் கங்கையும் வெண்மை பணிதரு கொக்கின் றூவலும் வெண்மை பயில்குழை யருக்கமும் வெண்மை பரவுறு கயிலை வாகனந் துவசம் பரிக்குமக் கிவைகளும் வெண்மை மணியொளி நீறு வாளிதுஞ் சாவம் வயங்குதேர்ப் பாகிலா ளில்லம் மதம்பொழி யயிரா வணமிவை வெண்மை மற்றியன் மேனியும் வெண்மை யணிகிளர் முந்நா ணினக்கெனி னிந்நா ளவிர்புகழ் நீர்றொடு துறைசை யம்பல வாண வாரிய வடியே னறிவுவெண் மையுங்கொளல் வழக்கே. | (77) |
1128 |
நேரிசைவெண்பா. வழியென்னா தம்பல வாணாகோ முத்தி யுழியெந்நா ளுஞ்சார்ந் துறைவாய் - மொழியுங் குறைமதியு மன்றுவந்து கொண்டா யடியேன் குறைமதியு மின்றுவந்து கொள். | (78) |
1129 |
கட்டளைக்கலித்துறை. கொள்ளுந் தமரிலை தாயிலை தந்தையுங் கூடவிலை விள்ளும் புதல்வர் மனையா தியுமிலை மேலுலகை யெள்ளுந் துறைசையு ளம்பல வாணனை யெய்தினர்க்குந் துள்ளுஞ் சிறுமகள் சார்வானுட் கொண்ட துணிபெவனே. | (79) |
1130 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். எவர்பரவு பெருவெளியை வாள்கொண்டு வெட்டிவடு வியற்ற வல்லா, ரவர்நினது கருணையன்றி மலமாயை கன்மமறுத் தடைவார் முத்தி, பவர்படுசெஞ் சடைமுனிவர் பணிந்தேத்தப் பெருந் துறைசைப் பதிவாழ் வாய்கற் றவர்வரைகைத் தாமரையம் பலவாண குரவவரு டரவல் லோயே. | (80) |
1131 |
வலைச்சியார்./ அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். வலைகொடுமுன் மீன்படுத்தோன் றுறைசையினம் பல வாணன் வயங்கா னந்த, வலைகடலா னருள்வலையா லெங்கண்மன மீன்படுக்கு மதா அன்றுநாளு, முலையைவரா லச்சுறவே திருக்கையடித் தின்பயிரை யூட்டு மிந்நாட், கொலையமையு முங்கண்மீன் பரவாதிங் ககலும்வலைக் குலக்கொம் பீரே. | (81) |
1132 |
இடைச்சியார்./ எழுசீர்க்கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம். குலவுபல புவனத்து மிருவகை யுறும்பசுக்குலம்விரா வுறவி ரித்துக் கோதில்பரி பாலனஞ் செய்தழும் பிள்ளைகள் குடிக்கவின் பாலு முதவி நிலவுமெழு விடையொடும் பொருதமுழு விடையுடைய நின்மலப் பே ரண்டனெ. நிகழுமா வடுதுறையின் மேயவம் பலவாண நெடியபேர்த் தோன்ற லாகிக் கலவுவழி யாறுணர்பு மற்றுமொரு வகையிற்ச கலபசுக் களையு மோம்பிக் கருதுஞா னப்பால் பெருக்கியமர் வெண்ணெய்மெய் கண்டானிந் நாளி லுணர்வீ ருலவுபுகழ் சாலுமிவ் வூரினும் மோர்தயி ருவந்துகொள் வாரும் யாரே யொத்தபாற் கலையமோ ரிரண்டும்வேண் டாரகலு மொள்ளிழை யிடைச்சி யீரே. | (82) |
1133 |
இன்னிசைவெண்பா. இடையான் கடையானா யென்று முழல்வா னடையா னொருதற் கடுத்ததனை யுய்க்கு முடையான் றுறைசை யொருவனியன் ஞான நடையாள னம்பலவா ணன். | (83) |
1134 |
குறள்வெண்பா நமக்காயு மம்பலவா ணன்றுறைசை யுற்றார் தமக்காயுந் தாள்சூட்டித் தான். | (84) |
1135 |
ப·றொடைவெண்பா. தானந் தவந்தழைக்குந் தண்டுறைசை யம்பதிவா ழானந்த போத னருளம் பலவாணன் றேனந்த வுண்டு தெவிட்டிக் குமட்டெடுத்து மோனந் தலைசிறந்த முத்த ரொடுகூட்டி யீனந் தபுத்தான்மற் றென்முதன்மை யுந்தபுத்தா னானந்தத் தானே நகுமுதன்மை யாயினா னூனந்த ராதினியொன் றும். | (85) |
1136 |
பிச்சியார் / அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் ஒன்றியமெய்ப் பொருளன்பர்க் குபதேசஞ் செய்யவந்த வொருவன் போல வென்றியவெம் படைகரந்த கள்ளவிழி யோடுசிவ வேடந் தாங்கி நன்றியலம் பலவாணன் புகழ்பாடி னெவன்சுவண நகுவா னாடும் பின்றியவண் டுறைசைநகர் மணிமறுகில் வந்துலவு பிச்சி யீரே. | (86) |
1137 |
கொற்றியார் / இதுவுமது ஈரஞ்சார் வனமணிமா லிகைமுதலா கியபலவு மெடுத்துப் பூண்டு கூரஞ்சார் படைநெடுமாற்கடிமையென வெளிவந்துங்கொற்றி யீரே யாரஞ்சார் கழுநீர்த் தோட்டுறைசை யுளம்பலவாண னருள வாவி, லாரஞ்சார் தரப்பாடு வீரரொருசாக் கியர்போன்றீர் மகிழ்ந்தாம் யாமே. | (87) |
1138 |
வெறிவிலக்கல் / நேரிசைவெண்பா மேலாய வான்றுறைசை மேவம் பலவாணன் பாலாய வாசை பகர்வார்யார் - சாலாய்கே டாளா லியங்கவெழு தாலத்தான் மையறினோ வேளா லியங்கே விடும். | (88) |
1139 |
கட்டளைக்கலித்துறை விடலருங் கோமுத்தி யம்பல வாணமெய் யாசிரிய கெடலரு நின்றடந் தோளலர் வேட்டவென் கேழ்கிளர்மான் படலரும் வீர மதவேடன் கையலர் பற்பலரா யடலரு மூருறை வார்வா யலர்மிக் கடைந்தனளே. | (89) |
1140 |
நேரிசைவெண்பா அடையார் புரஞ்சுட்டா யன்றடையு மாசை யுடையார் புரஞ்சுடு வானுற்றாய் - தடையாரே செய்வார் துறைசைத் திருவம் பலவாணா வெய்வாரே நீத்தின்றீ தென். | (90) |
1141 |
கட்டளைக்கலித்துறை எனக்கானந் தத்தை யருள்செயுங் காலமெக் காலமிகு கனக்கானந் தத்தை யவாய்க்கேட்கப் பாடறு காலுளர்சந் தனக்கானந் தத்தை யலராடு மாவடு தண்டுறையாய் முனக்கானந் தத்தைய வம்பல வாண முதலவனே. | (91) |
1142 |
காப்பியக்கலித்துறை முத்த னாயினு மினியவன் கோமுத்தி முதல்வ னத்த னாயினு மாசிலா னம்பல வாணன் பித்த னாயினு முழல்பவன் றீவினை பெருக்க சத்த னாயினுங் கடையனை யாண்டதுந் தகவே. | (92) |
1143 |
நேரிசைவெண்பா தகரம் படுங்குழனெஞ் சந்தளர வேள்வித் தகரம் படுங்கழு நீர்தந்தான் - மகர மடையாத் தவத்துறைசை யம்பலவா ணாகை யடையாத் தவத்துறைமெய் யாம். | (93) |
1144 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் ஆமலியும் வயற்பொதுவி னின்றருளி நடிக்குமிளைப் பாறுமாறு தேமலியும் பொழிற்றுறைசை யிருந்தருளி யொருநடிப்புச் செய்யா நிற்கு நாமலியு மித்தகுகா ரணங்குறித்தே துறைசைவா ணனையெஞ் ஞான்று மேமலியும் பெரும்புலமை யினர்தாமம் பலவாண னென்பார் மெய்யே. | (94) |
1145 |
வேறு மெய்யே பெருமை யுடையார்பால் விரவிப் புகுநம் பெருங்கருணை பொய்யே புரிந்து மிகச்சிறுமை பூண்டாய் பாலும் புகுங்கொலெனிற், செய்யே மலியும் புகழ்த்துறைசைச் செல்வா திருவம் பலவாண, வையே கடலன் றியுமுறவி யளையும் புகுங்காண் பிரளயமே. | (95) |
1146 |
மேகம் பொலியுங் குழன்மடவாள் விடாது தன்மேற் பழம்பகைபூண், டேகம் பொலியு நின்கூட்ட மிச்சித் தனளென் றுடன்றடும்வே, ணாகம் பொலியும் பொழிற்றுசை நம்பா நகுமம் பலவாணா, மோகம் பொலியுஞ் செங்குவளை முருக்குங் கருங்கு வளைகெதிரே. | (96) |
1147 |
கட்டளைக்கலித்துறை. எதிருற்ற யானுநின் பொற்றா மரையடி யெய்தப்பெற்று மதிருற்ற சிந்தையி னோடுழல் வேன்கொலவ் வாறுழன்றாற் கதிருற்ற கோமுத்தி யம்பல வாணமுற் காலத்திலன் புதிருற்ற நெஞ்சட்தொ டீதுற்ற கூற்றத்தை யொப்பவனே. | (97) |
1148 |
இன்னிசைச்சிந்தியல்வெண்பா. ஒப்பிலான் கோமுத்தி யுள்ளா னொளிர்சடையோ டப்பிலா னெங்க ளருளம் பலவாணன் றப்பிலான் மாக்களுக்கோர் தாய். | (98) |
1149 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். தாயனையாய் முன்னநினைச் சார்ந்தாரைச் சார்ந்தார்க்குந் தந்தாய் முத்தி, பேயனையாய் வருதியென்று நினைச்சார்ந்த வெனக் கருளாப் பெற்றியென்ன, நாயனையா யகலென்றாற் கதியேதா வடுதுறையாய் நமக்கான் சாடுந், தீயனையாய் திகழ்திருவம் பலவாண மெய்ஞ்ஞானச் செல்வக் கோவே. | (99) |
1150 |
நேரிசைவெண்பா. வேதனைசெய் மும்மலமும் வேரோ டறுத்தருளா யேதனையென் றொன்றியொன்றா வின்பமுறக் - கோதில் குலவாணா மெய்ஞ்ஞானக் கோமுத்தி வாழம் பலவாணா நீகடைக்கண் பார். | (100) |
1151 |
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். நலமன்னு கைலாய பரம்பரையி னருட்டுறைசை நமச்சி வாயன், குலமன்னு சூரியனம் பலவாண தேசிகன்மேற் குணத்தான் மிக்க, நிலமன்னு பெரும்புலவர் விரும்புகலம் பகம்புனைந்தானிகழுங் கீர்த்தி, வலமன்னு சிராமலைவாழ் மீனாட்சி சுந்தரநா வலவரேறே. This file was last updated on 20 April 2006. Please send your comments and corrections to the webmaster. |