பழமொழி விளக்கம் என்னும்
"தண்டலையார் சதகம்"
ஆசிரியர் : படிக்காசுப் புலவர்

pazamozi viLakkam
or
"taNTalaiyAr catakam"
of paTikkAcup pulavar
(in tamil script, TSCII format)




Acknowledgements:
Etext preparation, proof reading & web version : N D LogaSundaram & his daughter L Selvanayagi, Chennai India
PDF and unicode version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

ன Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact

(அறுசீர் விருத்தம்)

காப்பு
விநாயகர் துதி

சீர்கொண்ட கற்பகத்தில் வாதாவி

நாயகனைத் தில்லை வாழுங்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர
கணபதியைக் கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபகன்
தண்டலையெம் பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ
மொழிவிளக்கம் இயம்பத்தானே

இதுவுமது

வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்

விளம்பியசொல் மிகுபுராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல்
இசைந்தபொருள் எல்லாம் நாடி
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ
மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன்
அகத்தெனக்குத் துணைசெய் வானே

அவையடக்கம்

வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள

அரும்பொருளை வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள்
முன்நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ
மொழிவிளக்கம் பரிந்து கூறல்
வெள்ளைமதியினன் கொல்லத் தெருவதனில்
ஊசிவிற்கும் வினைய தாமே

நூல்

திருவிளக்கிடுவதன் பயன்

வரமளிக்குந் தண்டலையார் திருக்கோயி

லுள்புகுந்து வலமாய் வந்தே
ஓருவிளக்கா யினும்பசுவின் நெய்யுடன்தா
மரைநூலில் ஒளிர வைத்தால்
கருவிளக்கும் பிறப்புமில்லை இறப்புமில்லை
கைலாசங் காணி யாகும்
திருவிளக்கிட் டார்தமையே தெய்வமளித்
திடும்வினையுந் தீருந் தானே
1

கடவுள் செய்த நன்றிக்கு பிரதி நன்றி இல்லை

கூன்செய்த பிறையணியுந் தண்டலையார்

கருணைசெய்து கோடி கோடி
யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தால்
உபகாரம் என்னா லுண்டோ
ஊன்செய்த உயிர்வளரத் தவந்தானம்
நடந்தேற உதவி யாக
வான்செய்த நன்றிக்கு வையகமென்
செய்யுமதை மறந்தி டாதே
2

முன்செய்த தருமத்திற்குப் பின் பயன் கிடைக்கும்

அட்டதிசை எங்கணும்போ யலைந்தாலும்

பாதாளம் அதிற்சென் றாலும்
பட்டமென வானூடு பறந்தாலும்
என்னஅதிற் பயனுண் டாமோ
பிட்டுவர மண்சுமந்த தண்டலையா
ரேமுன்னாள் பெரியோர் கையில்
இட்டபடி யேயொழிய வேறாசைப்
படின்வருவ தில்லை தானே
3

அவரவர் செய்கைக்குத் தக்க பலன்

தன்மமதைச் செய்தல் வேண்டும் தண்டலைநீள்

நெறியாரே தயவு செய்வார்
வன்மவினை செயல்வேண்டாம் பொய்வேண்டாம்
பிறரையொன்றும் வருத்தல் வேண்டாம்
கன்மநெறி வரல்வேண்டாம் வேண்டுவது
பலர்க்கும்உப கார மாகும்
நன்மைசெய்தார் நலம்பெறுவர் தீமைசெய்தார்
தீமைபெற்று நலிவார் தாமே
4

இல்லற துறவறத்தின் தன்மை

புல்லறிவுக் கெட்டாத தண்டலையார்

வளந்தழைத்த பொன்னி நாட்டிற்
சொல்லறமா தவம்புரியுஞ் சௌபரியுந்
துறவறத்தைத் துறந்து மீண்டான்
நல்லறமாம் வள்ளுவர் போல் குடிவாழ்க்கை
மனைவியுடன் நடத்தி நின்றால்
இல்லறமே பெரிதாகுந் துறவறமும்
பழிப்பின்றேல் எழில தாமே
5

கற்புடை மங்கையர் மகிமை

முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்

கையர்மகி மைமொழியப் போமோ
ஒக்குமெரி குளிரவைத்தாள் ஒருத்திவில்வே
டனைஎரித்தாள் ஒருத்தி மூவர்
பக்கமுற அமுதளித்தாள் ஒருத்திஎழு
பரிதடுத்தாள் ஒரத்தி பண்டு
கொக்கெனவே நினைத்தனையோ கொங்கணவா
என்றொருத்தி கூறி னாளே
6

நற்பிள்ளை ஒன்றால் குலம் நன்மையடையும்

நன்றிதரும் பிள்ளையொன்று பெற்றாலுங்

குலமுழுதம் நன்மை யுண்டாம்
அன்றியறி வில்லாத பிள்ளையொரு
நூறுபெற்றும் ஆவ துண்டோ
மன்றில்நடம் புரிவாரே தண்டலையா
ரேசொன்னேன் வருடந் தோறும்
பன்றிபல ஈன்றுமென்ன குஞ்சரமொன்
றீன்றதனாற் பலனுண் டாமே
7

நல்லதைப் பெரியோர் நாயகனுக்கு அளிப்பர்

அல்லமருங் குழலாளை வரகுணபாண்

டியயரசர் அன்பாலீந்தார்
கல்லைதனில் மென்றுமிழ்ந்த ஊனமுதைக்
கண்ணப்பர் கனிவால் ஈந்தார்
சொல்லியதண் டலையார்க்குக் கீரையுமா
வடுவும்ஒரு தொண்ட ரீந்தார்
நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக்
கென்றதனை நல்கு வாரே
8

விருந்தில்லா உணவு மருந்து

திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்

இல்வாழ்க்கை செலுத்து நல்லோர்
ஒருவிருந்தா கிலுமின்றி உண்டபகல்
பகலாமோ உறவாய் வந்த
பெருவிருந்துக் குபசாரஞ் செய்தனுப்பி
இன்னமெங்கே பெரியோ ரென்று
வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா
துணுஞ்சோறு மருந்து தானே
9

இன்சொல்லின் உயர்வு

பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியுங்

கொடுப்பதென்ன பொருளே என்று
நற்கமல முகமலர்ந்தே உபசார
மிக்கஇன்சொல் நடந்தால் நன்றே
கற்கரையும் மொழிபாகர் தண்டலையார்
வளநாட்டிற் கரும்பின் வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
பொழிந்துவிடுந் தன்மை தானே
10

ஞானம் வேண்டி இரங்கல்

குறும்பெண்ணா துயர்ந்தநல்லோர் ஆயிரஞ்சொல்

னாலுமதை குறிக்கொ ளாமல்
வெறும்பெண்ஆ சையில்சுழல்வேன் மெய்ஞ்ஞானம்
பொருந்திஉனை வேண்டேன் அந்தோ
உறும்பெண்ணார் அமுதிடஞ்சேர் தண்டலைநீள்
நெறியேயென் உண்மைதேரில்
எறும்பெண்ண்஡ யிரமப்பாற் கழுதையுங்கை
கடந்ததென்றேன் எண்ணந் தானே
11

உப்பிட்டவரை உலகம் நினைக்கும்

துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்

பெரிதாகும் தோற்றம் போல
செப்பிட்ட தினையளவு செய்நன்றி
பனையளவாய் சிறந்து தோன்றும்
கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்
வளநாட்டிற் கொஞ்சமேனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
நினைக்குமிந்த உலகந் தானெ
12

வீண்செயல்கள்

மேட்டுக்கே விதைத்தவிரை வீணருக்கே

செய்தநன்றி மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்தவிலை பரத்தையர்கே
தேடியிட்ட வண்மை எல்லாம்
பாட்டுக்கே அருள்புரியுந் தண்டலையார்
வீதிதொறும் பரப்பி டாமல்
காட்டுக்கெ எரித்தநிலாக் கானலுக்கே
பெய்தமழை கடுக்குந்தானே
13

சிறியோர் நற்கதி அடையார்

சங்கையறப் படித்தாலுங் கேட்டாலும்

பிறர்குறுதி தனைச்சொன் னாலும்
அங்கணுல கினிற்சிறியோர் தாமடங்கி
நடந்துகதி யடைய மாட்டார்
திங்களணி சடையாரே தண்டலையா
ரேசொன்னேன் சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பெய்ச்சுரைக்காய்
நல்லசுரைக் காயா காதே
14

உலகப் பற்று விடாததற்கு இரங்கல்

உழையிட்ட விழிமடவார் உறவுவிட்டும்

வெகுளிவிட்டும் உலக வாழ்விற்
பிழைவிட்டும் இன்னமின்னம் ஆசைவிடா
தலக்கழியப் பெறேன் அந்தோ
தழையிட்ட கொன்றைபுனை தண்டலைநீள்
நெறியேயென் தன்மை யெல்லாம்
மழைவிட்டுத் தூவானம் விட்டதில்லை
யாயிருந்த வண்ணந் தானே
15

துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்

கொச்சையிற்பிள் ளைக்குதவும் தண்டலையார்

வளநாட்டிற் கொடியாய் வந்த
வச்சிரப்பிள் ளைக்குமுன மாதவனே
புத்திசொன்னான் வகையுஞ் சொன்னான்
அச்சுதப்பிள் ளைக்கும்அந்த ஆண்டவரே
புத்திசொன்னார் ஆத லாலே
துர்ச்சனப்பிள் ளைக்கூரார் புத்திசொல்லு
வாரென்றே சொல்லுவாரே
16

பொறுமையின் பெருமை

கறுத்தவிட முண்டருளுந் தண்டலையார்

வளநாட்டிற் கடிய தீயோர்
குறித்துமனை யாளரையில் துகிலுரிந்து
ஐவர்மனங் கோபித் தாரே
பறித்துரிய பொருள்முழுதுங் கவர்ந்தாலும்
அடிததாலும் பழிசெய் தாலும்
பொறுத்தவரே அரசாள்வார் பொங்கினவர்
காடுறைந்து போவர் தாமே
17

பொறாமை குணத்தவர் இயல்பு

அள்ளித்தெண் ணீரணியுந் தண்டலையார்

வளநாட்டில் ஆண்மை யுள்ளோர்
விள்ளுற்ற கல்வியுள்ளோர் செல்வமுள்ளோர்
அழகுடையோர் ஧ன்மை நோக்கி
உள்ளத்தி லழன்றழன்று நமக்கில்லை
எனஉரைத்திங் குழல்வா ரெல்லாம்
பிள்ளைபெற் றவர்தமைப்பார்த் திருந்துபெரு
மூச்செறியும் பெற்றி யோரே
18

எல்லாம் விதிப்படி நடக்கும்

மண்ணுலகா ளவுநினைப்பார் பிறர்பொருள்மேல்

ஆசைவைப்பார் வலிமை செய்வார்
புண்ணியமென் பதைச்செய்யார் கடைமுறையில்
அலக்கழிந்து புரண்டே போவார்
பண்ணுலவு மொழிபாகர் தண்டலையார்
வகுத்தவிதிப் படியல் லாமல்
எண்ணமெலாம் பொய்யாகு மௌனமே
மெய்யாகும் இயற்கை தானே
19

பகுத்தறிவு இல்லாதார் இயல்பு

சொன்னதைச் சொல்லிளங் கிள்ளையென்பார்

தண்டலையார் தொண்டு பேணி
இன்னத்துக் கின்னதெனும் பகுத்தறிவொன்
றில்லாத ஈன ரெல்லாம்
தன்னொத்துக் கண்டவுடன் காணாமல்
முறைபேசிச் சாடைபேசி
முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன்
றாய்நடந்து மொழிவார் தாமே
20

இடமறிந்து நடக்க வேண்டும்

கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலும்

தெரியாது கொடையில் லாத
மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்
அவர்கொடுக்க மாட்டார் கண்டீர்
படியளக்குந் தண்டலைநீள் நெறியாரே
உலகமெலாம் பரவிமூடி
விடியல்மட்டு மழைபெயினும் மதின்ஒட்டாங்
கிளிஞ்சல்முளை வீசி டாதே
21

தன்பாவந் தன்னைத் தொடரும்

செங்காவி மலர்த்தடஞ் சூழ் தண்டலைநீள்

நெறியேநின் செயலுண் டாகில்
எங்காகிலென் அவரவரெண் ணியதெல்
லாமுடியும் இல்லை யாகில்
பொங்காழி சூழுலகில் உள்ளங்கால்
வெள்ளெலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலுந் தன்பாவந்
தன்னுடனே ஆகுந் தானே
22

மூடர் தமிழின் அருமை அறியார்

தாயறிவாள் மகளருமை தண்டலைநீள்

நெறிநாதர் தாமே தந்தை
ஆயறிவார் எமதருமை பரவையிடந்
தூதுசென்ற தறிந்தி டாரோ
பேயறிவார் முழுமூடர் தமிழருமை
அறிவாரோ பேசு வாரோ
நாயறியா தொருசந்திச் சட்டிபா
னையின்அந்த நியாயந் தானே
23

ஈயார் வாழ்வு உலகிற்கு பயன்படாது

கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

கனிகளுப கார மாகும்
சிட்டருமவ் வணந்தேடும் பொருளையெல்லாம்
இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்
மட்டுலவுஞ் சடையாரே தண்டலையா
ரேசொன்னேன் வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
வாழ்ந்தாலும் என்னுண் டாமே
24

புகழுடன் வாழ்பவனே புருடன்

ஓதரிய தண்டலையா ரடிபணிந்து

நல்லனனென் றுலக மெல்லாம்
போதமிகும் பேருடனே புகழ்படைத்து
வாழ்பவனே புருடனல்லால்
ஈதலுடன் இரக்கமின்றிப் பொன்காத்த
பூதமென இருந்தா லென்ன
காதவழி பேரில்லான் கழுதையோ
டொக்குமெனக் காண லாமே
25

அன்பில்லாது அன்னமிடுதலும் ஊமைகண்ட கனவும்

தமிழ் ஞானமில்லாதவன் அறிவும் ஒன்று

பரியாமல் லிடுஞ்சோறும் ஊமைகண்ட

கனவும்போல் பரிசி லீயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்
இல்லாதான் அறியு மோதான்
கரிகால் பூசைபுரி தண்டலைநீள்
நெறியாரே கதித்த ஓசை
தெரியாத செவிடன்கா தினிற்சங்கு
கறித்ததெனச் செப்ப லாமே
26

தன்னுயிர் போல் மன்னுயிரை நி஡னத்தல்

முன்னறிய மறைவழங்குந் தண்டலையார்

ஆகமத்தின் மோழிகே ளாமல்
பின்னுயிரை வதைத்தவனுங் கொன்றவனும்
குறைத்தவனும் பெற்று ளோனும்
அந்நெறியே சமைத்தவனும் உண்டவனும்
நரகுறுவர் ஆத லாலே
தன்னுயிர்போ லெந்நாளு மன்னுயிருக்
கிரங்குவதுந் தக்க தாமே
27

கடவுளடிபணிய நேரமில்லாததற்கு இரங்கல்

உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்

வளர்க்கஉடல் உழல்வ தல்லால்
மருவிருக்க நின்பாத மலர்தேடித்
தினம்பணிய மாட்டேன் அந்தோ
திருவிளக்கு மணிமாடத் தண்டலைநீள்
நெறியே என்செய்தி யெல்லாம்
சருகெரிக்க நேரமன்றிக் குளிர்காய
நேரமில்லாத் தன்மையானே
28

பொய்வேடம் ஆகாது

காதிலே திருவேடங் கையிலே

செபமாலை கழுத்தின் மார்பின்
மீதிலே தாழ்வடங்கள் மனதிலே
கரவடமாம் வேட மாமே
வாதிலே அயன்தேடுந் தண்டலைநீள்
நெறியாரே மனிதர் காணும்
போதிலே மவுனம்இராப் போதிலே
ருத்ராக்கப் பூனைதானே
29

தானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்

மானென்று வடிவெடுத்து மாரீசன்

போய்மடிந்தான் மானே யென்று
தேனொன்று மோழிபேசிச் சீதைதனைச்
சிறையிருக்கத் திருடிச் சென்றோன்
வானொன்றும் அரசிழந்தான் தண்டலையார்
திருஉளத்தின் மகிமை காணீர்
தானொன்று நினைக்க தெய்வமொன்ற
நினைப்பதுவுஞ் சகசந் தானே
30

பொய் சொன்ன வாய்க்குப் போசனமும் கிடையாது

கைசொல்லும் பனைகாட்டுங் களிற்றுரியார்

தண்டலையார் காணா போலப்
பொய்சொல்லும் வாய்க்குப் போசனமும்
கிநSடயாது பொருள் நில்லாது
மைசொல்லும் காரளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி வாழ்வ துண்டோ
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
வாழ்வதில்லை மெய்மை தானே
31

சிறியோர் பழிஉரையால் பெரியோர்க்குக் குறைவு இல்லை

அந்தணரை நல்லவரை பரமசிவன்

அடியவரை அகந்தையால் ஓர்
நிந்தனைசொன் னாலுமென்ன வைதாலும்
என்னஅதில் நிஷேத முண்டோ
சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள்
நெறியாரே துலங்கும் பூர்ண
சந்திரனைப் பார்த்துநின்று நாய்குரைத்த
போதிலென்ன தாழ்ச்சி தானே
32

பெரியவர்க்குத் தீங்கு செய்வார் தாமே அழிவர்

கோடாமற் பெரியவர்பால் நடப்பதன்றி

குற்றமுடன் குறைசெய் தோர்கள்
ஆடாகிக் கிடந்தவிடத் ததன்மயிருங்
கிடவாமல் அழிந்து போவார்
வீடாநற் கதியதவுந் தண்டலையா
ரேசொன்னேன் மெய்யோ பொய்யோ
கோடாலிக் காம்பேதன் குலத்தினுக்குக்
கேடான கொள்கை தானே
33

நடக்கை குலைந்தவர் பேய்

சின்னமெங்கே கொம்பெங்கே சிவிகையெங்கே

பரியெங்கே சிவியா ரெங்கே
பின்னைஒரு பாழுமில்லை நடக்கை குலைந்
தாலுடனே பேயே யன்றோ
சொன்னவிலுந் தண்டலையார் வளநாட்டிற்
குங்கிலியத் தூபங் காட்டும்
சன்னதமா னதுகுலைந்தால் கும்பிடெங்கே
வம்பரிது தனையெண் ணாரே
34

துறவிக்கு வேந்தன் துரும்பு

சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ்

பொன்னிவளஞ் செழித்த நாட்டில்
குறையகலும் பெருவாழ்வு மனைவியுமக்
களும்பொருளாக் குறித்தி டாமல்
மறைபயில்பத் திரகிரியும் பட்டினத்துப்
பிள்ளையுஞ்சேர் மகிமை யாலே
துறவறமே பெரிதாகுந் துறவிக்கு
வேந்தனொரு துரும்பு தானே
35

மனத்துறவு

பேரிரைக்குஞ் சுற்றமுடன் மைந்தருமா

தருஞ்சூழப் பிரபஞ்சத்தே சத்தே
பாரியை யுற்றிருந்தாலுந் திருநீற்றிற்
கழற்காய்போற் பற்றில் லாமல்
சீரிசைக்குந் தண்டலையார் அஞ்செழுத்தை
நினைக்கில்முத்தி சேர லாகும்
ஆரியக்கூத் தடுகினுங் காரியமேற்
கண்ணாவ தறிவ தானே
36

கடவுளை நம்பினோர் கைவிடார்

இரந்தனையித் தனைநாளும் பரந்தனைநான்

என்றலைந்தா யினிமே லேனும்
கரந்தைமதி சடையணியுந் தண்டலைநீள்
நெறியாரே காப்பா ரென்றும்
உரந்தனைவைத் திருந்தபடி யிருந்தனையேல்
உள்ளவெல் முண்டாம் உண்மை
மரம்தனைவைத் தவர்நாளும் வாடாமல்
தண்ணீரும் வார்ப்பார் தாமே
37

மன்னர் செய்கைக்குத் தக்க பயன்

நாற்கவியும் புகழவரும்ந் தண்டலையார்

வளநாட்டில் நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்து செங்கோல்
புவியாளும் வண்மை செய்த
திர்க்கமுள்ள அரசனையே தெய்வமென்பார்
கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
முர்க்கமுள்ள அரசனுந்தன் மந்திரியும்
ஆழ்நரகில் மூழ்கு வாரெ
38

இதற்கு இது அழகு

ஓதரிய வித்தைவந்தால் உரிய சபைக்

கழகாகும் உலகில் யார்க்கும்
ஈதலுடன் அறிவுவந்தால் இனியகுணங்
களுக்கழகா யிருக்கு மன்றோ
நீதிபெறு தண்டலையார் திருநீறு
மெய்க்கழகாய் நிறைந்து தோன்றும்
காதிலணி கடுக்கனிட்டால் முகத்தினுக்கே
அழகாகிக் காணந் தானே
39

கல்வி இல்லாதார் ஆடம்பரம்

பாரதியார் அண்ணாவி புலவரென்பார்

கல்வியில் பழக்க மில்லார்
சீரறியார் தளையறியார் பல்லக்கே
றுவர்புலமை செலத்திக் கொள்வார்
ஆரணியுந் தண்டலைநீள் நெறியாரே
இலக்கணநூல் அறியா ரேனும்
காரிகையாகிலுங் கற்றுக் கவிசொல்லார்
பேரிகொட்டக் கடவர் தாமே
40

கல்வி கேள்வி இல்லாதார் உபதேசம் பயன்படாது

அருள்மிகுத்த ஆகமநூல் படித்தறியார்

கேள்வியையும் அறியார் முன்னே
இருவினையின் பயனறியார் குருக்களென்றே
உபதேசம் எவர்க்கும் செய்வார்
வரமிகுத்த தண்டலைநீள் நெறியாரே
அவர்கிரியா மார்க்க மெல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
காட்டிவருங் கொள்கை தானே
41

நினைத்த போதே அறத்தை செய்வது அறிவுடமை

நேற்றுள்ளார் இன்றிருக்கை நிச்சயமோ

ஆதலினால் நினைந்த போதே
ஊற்றுள்ள பொருளுதவி அறந்தேடி
வைப்பதறி வுடைமை யன்றோ
கூற்றுள்ள மலையவருங் தண்டலையா
ரேசொன்னேன் குடபால் வீசுங்
காற்றுள்ளபோ தெவருந் தூற்றிக்கொள்
வதுநல்ல கருமந் தானே
42

ஞானிகள் பொருள் தேடல் இழிவு

வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தமாய்

மெய்ஞ்ஞான வடிவ மானோர்
கற்கட்டா கியமடமுங் காணியுஞ்செம்
பொனுந்தேடுங் கரும மெலாம்
பொற்கொத்தாஞ் செந்நெல்வயல் தண்டலையா
ரேசொன்னேன் பொன்னா டாகும்
சொர்கத்தே போம்போதுங் கக்கத்தே
ராட்டினத்தைச் சுமந்த வாறே
43

பேரியோரை அடுத்தால் விரோதியும் பணிவான்

ஆம்பிள்ளா யெனக்கொடுக்கும் பெரயோரை

அடத்தவரை அவனிக் கெல்லாம்
நாம்பிள்ளா அதிகமென்பாந் நண்ணாரும்
ஏவல்செய நாளும் வாழ்வார்
வான்பிள்ளா யெனுமேனித் தண்டலையார்
பூடணமாய் வளர்ந்த நாகம்
ஏன்பிள்ளாய் கருடாநீ சுகமோஎன்
றுரைத்த விதம்என லாமே
44

புல்லரை அடுப்பதில் பயனில்லை

வடியிட்ட புல்லார்தமை அடுத்தாலும்

விடுவதுண்டோ மலிநீர்க் கங்கை
முடியிட்ட தண்டலைநா தரைப்புகழிற்
பெருவாழ்வு முழுது முண்டாம்
மிடியிட்ட வினைதீர்க்குந் தெய்வம்இட்டும்
விடியாமல் வீணர் வாயில்
படியிட்டு விடிவதுண்டோ அவரருளே
கண்ணாகப் பற்று வீரே
45

கலக்கண்ணீர் உகுத்தாலும் யமன் விடான்

பொலியவளம் பலதழைத்த தண்டலைநீள்

நெறிபாதம் போற்றி நாளும்
வலியவலஞ் செய்தறியீர் மறஞ்செய்வீர்
நமன்தூதர் வந்து கூடி
மெலியஅறைந் திடுபொழுது கலக்கண்ணீர்
உகுத்தாலும் விடுவ துண்டோ
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித்
ததுவிடுமோ என்செய் வீரே
46

தமிழைக் கரைகண்டவ ரில்லை

மற்றவரோ தமிழ்பாடி நாட்டவல்லார்

நக்கீரர் வலிய ராகி
வெற்றிபுனை மீனாட்சி சுந்தரநா
யகரடுத்து விளம்பும் போதில்
பற்றுளதண் டலைவாழுங் கடவுளென்றும்
பாராமற் பயப் படாமல்
நெற்றிவிழி காட்டுகினுங் குற்றமே
குற்றமென நிறுத்தி னாரே
47

காலம் அறிந்து செய்வதே தர்மம்

சீரிலகுந் தண்டலையார் திருவருளால்

அகமேறித் செழித்த நாளில்
பாரியென ஆயிரம்பேர்க் கன்னதா
னங்கொடுக்கும் பலனைப் பார்க்க
நே஢ரடும்பஞ் சந்தனிலே எவ்வளவா
கிலுங்கொடுத் தாலும்நீதி யாகும்
மாரிபதின் கலநீரிற் கோடைதனில்
ஓர்குடநீர் நண்மை தானே
48

தண்டலையிற் சேராமற் திரிபவர் பயன் பெறார்

பிறக்கும்போ தொருபொருளுங் கொடுவந்த

தில்லைஉயிர் பிறந்து மண்மேல்
இறக்கும்போ திலுங்கொண்டு போவதில்லை
என்றுசும்மா இருந்து வீணே
சிறக்குந்தா யினும்அருள்வார் தண்டலையிற்
சேராமல் தேச மெல்லாம்
பறக்குங்கா கமதிருக்குங் கொம்பறியா
தெனத்திரிந்தோர் பயன்பெ றாரே
49

எல்லாம் தெய்வச்செயல் என நினைக்க வேண்டும்

வைதிடினும் வாழ்த்திடினும் இன்பதுன்பம்

வந்திடினும் வம்பு கோடி
செய்திடினினுந் தண்டலைநீள நெறியார்தஞ்
செயன்றே தெளிவ தல்லால்
மெய்தவிர அவர்செய்தார் இவர்செய்தார்
எனநாடி வெறுக்க லாமோ
எய்தவர்தம் அருகிருக்க அம்பைநொந்த
கருமமென்ன இயம்பு வீரே
50

முடிவு வருமுன் தருமம் செய்ய வேண்டும்

வாங்காலமுண்டசெழுங் தண்டலையார்

அடிபோற்றி வணங் கிநாடிப்
போங்காலம் வருமுன்னே புண்ணியஞ்செய்து
அரியகதி பொருந்து றாமல்
ஆங்காலம் உள்ளதெல்லாம் விபசார
மாகியறி வழிந்து வீணே
சாங்காலஞ் சங்கரா சங்கரா
எனில்வரும் தருமந் தானே
51

இவர்க்கு உதவி செய்தல் நல்லது

சுற்றமாய் நெருங்கியள்ளார் தனையடைந்தார்

கற்றிருந்தார் துணைவே றில்லார்
உற்றவே தியர்பெரியோர்க் குதவியன்றிப்
பிறர்குதவும் உதவி யெல்லாம்
சொற்றநான் மறைபரவுந் தண்டலையா
ரேசொன்னேன் சுமந்தே நொந்து
பெற்றதாய் பசித்திருக்க பிராமணபோ
சனநடத்தும் பெருமை தானே
52

துன்மார்க்கர் நன்மார்க்கர் இயல்பு

துன்மார்க்கர்க் காயிரந்தான் சொன்னாலு

மறந்துவிட்டுத் துடுக்கே செய்வர்
சன்மார்க்கர்க் கொருவார்த்தை சொலுமளவே
மெய்யதனில் தழும்பாக் கொள்வார்
பன்மார்க்க மறைபுகழுந் தண்டலையா
ரேசொன்னேன் பதமே யான
நன்மாட்டுக் கோரடியாம் நற்பெண்டிற்
கொருவார்த்தை நடத்தை யாமே
53

செங்கோலில் வையம் பரப்புவர்க்கு சுவர்க்கம் கிடைக்கும்

கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை

செங்கோலில் கடல்சூழ் வையம்
புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால்
நரகமில்லை பொய்யி தென்றால்
உரப்பார்க்கு நலம்புரியுந் தண்டலை஡
ரேசொன்னென் ஒருமை யாக
இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமுண்டோ
ஒரகாலு மில்லை தானே
54

கொடுங்கோல் மன்னன் இயல்பு

படுங்கோலம் அறியாமல் தண்டலையார்

திருப்பணிக்கும் பங்கஞ் செய்வார்
நெடுங்கோளுந் தண்டமுமா வீணாக
வீணனைபோல் நீதி செய்வார்
கொடுங்கோப மல்லாமல் விளைவுண்டோ
மழையண்டோ கேள்வி யுண்டோ
கொடுங்கோல்மன் னவன்நாட்டிற் கடும்புலிவா
ழுங்காடு குணமென் பாரே
55

கெடுபவர் கெடாதவர் இன்னர் என்பது

உள்ளவரைக் கெடுத்தோருங் உதவியற்று

வாழ்ந்தோறுங் உறைபெற் றோரும்
தள்ளிவழக் குரைத்தோருஞ் சற்குருவைப்
பழித்தோரும் சாய்ந்தே போவார்
பள்ளவயல் தண்டலையார் பத்தரடி
பணிந்தோரும் பாடி னோரும்
பிள்ளைகளைப் பெற்றோரும் பிச்சையிட்ட
நல்லோரும் பெறுகு வாரே
56

குணத்துக்குத் தக்க செய்கை

விற்பனர்க்கு வாழ்வுவந்தால் மிகவணங்கிக்

கண்ணோட்ட மிகவுஞ் செய்வார்
சொற்பரக்கு வாழ்வுவந்தாற் கண்தெரியாது
இறுமாந்து துன்பஞ் செய்வார்
பற்பலர்க்கு வாழ்வுதருந் தண்டலையா
ரேசொன்னேன் பண்பில் லாத
அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்
திரிகுடைமேலா கும்மே
57

பொருளை அபகரித்து தருமம் செய்வதில் பயனில்லை

விசயமிகு தண்டலையார் வளநாட்டில்

ஓருத்தர்சொல்லை மெய்யா எண்ணி
வசைபெருக அநியாயஞ் செய்துபிறர்
பொருளையெல்லாம் வலிய வாங்கித்
திசைபெருகுங் கீர்த்தியென்றுந் தன்மமென்றுந்
தானமென்றுஞ் செய்வ தெல்லாம்
பசுவினையே வதைசெய்து செருப்பினைத்தா
னங்கொடுக்கும் பண்பு தானே
58

சிறியோர் உயர் பதவி பெற்றாலும் குணமுடையராகார்

சிறியவரா முழுமூடர் துரைத்தனமாய்

உலகாளத் திறம்பெற் றாலும்
அறிவுடையார் தங்களைப்போற் சர்குணமும்
உடையோர்க ளாக மாட்டார்
மறிதருமான் மழுவேந்துந் தண்டலையா
ரேசொன்னேன் வாரிவாரிக்
குறுணிமைதா னிட்டாலுங் குறிவடிவங்
கண்ணாகிக் குணங்கொ டாதே
59

இத்தன்மை உடையார்க்கு இவை இல்லை எனல்

கற்றவற்குக் கோபமில்லை கடந்தவர்க்குச்

சாதியில்லை கருணை கூர்ந்த
நற்றவற்கு விருப்பமில்லை நல்லவருக்
கொருகாலு நரக மில்லை
கொற்றவருக் கடிமையில்ல தண்டலையார்
மலர்பாதங் கும்பிட் டேத்தப்
பெற்றவர்க்கு பிறப்பில்லை பிச்சைசொற்றி
னுக்கில்லை பேச்சு தானே
60

நல்ல பொருளை மட்டிக்குக் கொடுக்கக் கூடாது

பரங்கருணை வடிவாகுந் தண்டலையார்

வளநாட்டிற் பரருஞ் சேர்ந்த
சரங்குலவு காமகலை தனையறிந்த
அதிரூபத் தைய லாரை
வரம்புறுதா ளாண்மையில்லா மட்டிகளுக்
கேகோடுத்தால் வாய்க்கு மோதான்
குரங்கினது கையில் பூமாலை
தானக் கொடத்த கொள்கை தானே
61

நல்ல பெண்களால் நலமுண்டு

பிரசமுண்டு வரிபாடுந் தண்டலையார்

வளநாட்டிற் பெண்க ளோடு
சரசமுண்டு போகமுண்டு சங்கீதம்
உண்டுசுகந் தானே யுண்டிங்கு
உரைசிறந்த வறுமையுண்டோ இடுக்கமுண்டோ
ஒன்றுமில்லை உலகுக் கெல்லாம்
அரிசியண்டேல் வரிசையுண்டாம் அக்காளுண்
டாகில்மச்சான் அன்புண் டாமே
62

வித்தக மந்திரி இல்லாச் சபையில் நீதி இல்லை

தத்தைமொழி உமைசேருந் தண்டலையார்

பொன்னிசேரும் வளந்தழைத்த நாட்டிற்
வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே
நீதியில்லை வேந்தர்க் கெல்லாம்
புத்திநெறி நீதிசொல்லு மந்திரியில்
லாதொருவர் போதிப் பாரோ
நித்தலும்உண் சோற்றில்முழுப் பூசணிக்காய்
மறைத்ததுவும் நிசம தாமோ
63

நிருபர்முன் சமயமறிந்து பேச வேண்டும்

நேசமுடன் சபையில்வந்தால் வேளையறிந்

திங்கிதமா நிருபர் முன்னே
பேசுவதே உசிதமல்லால் நடுவிலொரு
வன்குழறிப் பேச் செல்லாம்
வாசமிகுந் தண்டலைநீள் நெறியாரே
அபிடேக மலிநீராடிப்
பூசைபண்ணும் வேளையிலெ கரடியைவிட்
டொட்டுவது போலுந் தானே
64

கெடுவான் கேடு நினைப்பான்

மண்ணுலகிற் பிறர்குடியை வஞ்சனையிற்

கெடுப்பதற்கு மனதி னாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன்றானே
கெடுவனென் பதுண்மை யன்றோ
தென்னவன்சோ ழன்பணியுந் தண்டலைநீள்
நெறியாரே தெரிந்து செய்யுந்
தன்வினைதன் னைச்சுடும்ஓட் டப்பம்வீட்
டைச்சுடவுந் தான்கண் டோ மே
65

பெரியோர் சென்ற வழியைத் தள்ளலாகாது

முன்பெரியோர் தொண்டுபட்டு நடந்தவழி

தனைப்பழித்து முரணே பேசிப்
பின்பலரை யுடன்கூட்டி நூதனமா
நடத்துவது பிழைபா டெய்தில்
துன்பறியாக் கதியருளுந் தண்டலைநீள்
நெறியாரே தூயா ளாகி
அன்புளத்தா யைபழித்து மகளேதோ
செயத் தொடங்கும் அறிவு தானே
66

கடவுளரைத் தவிர மனதர்மேல் பாடலாகாது

தண்ணமருந் தண்சோலை தண்டலைநீள்

நெறியேநின் தன்னைப் பாடில்
எண்ணமிக இம்மையிலும் மறுமையிலும்
வேண்டியதுண் டிதைஓ ராமல்
மண்ணின்மிசை நரத்துதிகள் பண்ணியலைந்
தேதிரிபா வாண ரெல்லாம்
வெண்ணெய்தம திடத்திருக்க நெய்தேடி
கொண்டலையும் வீணர் தாமே
67

இவற்கு இது துணை

அந்தணர்க்கு துணைவேதம் அரசர்க்குத்

துணைவயவாள் அவனிமீது
மைந்தருக்குத் துணைதாயர் தூதருக்குத்
துணைமதுர வார்த்தை யன்றோ
நந்தமக்குத் துணையான தண்டலைநீள்
நெறியாரே நண்ப ரான
சுந்தரர்க்குத் துணைநாளும் ஏழையர்க்குத்
தெய்வமே துணையென் பாரே
68

இவர் இதற்கு அஞ்சார்

போரஞ்சார் அதிவீரர் பொருளஞ்சார்

விதரணஞ்சேர் புருடர் தோயும்
நீரஞ்சார் மறைமுனிவர் நெருப்பஞ்சார்
கற்புடைய நிறைசேர் மின்னார்
வாரஞ்சா முலையிடஞ்சேர் தண்டலையா
ரேசொன்னேன் மதமா வென்னுங்
காரஞ்சா திளஞ்சிங்கங் கனத்தவலி
யாந்தூதன் காலஞ் சானே
69

எது நேரிடினும் அவர் செய்கை ஓழியாது

உபசாரஞ் செய்பவரை விலக்கிடினும்

அவர்செய்கை ஒழிந்துபோ காது
அபசாரஞ் செய்வாரை அடித்தாலும்
வைதாலும் அதுநில் லாது
சுபசாரத் தண்டலையார் வளநாட்டிற்
திருடருக்குத் தொழில் நில்லாது
விபசாரஞ் செய்வாரை மெனியெல்லாம்
சுட்டாலும் விட்டி டாரெ
70

இழிந்த பிரபுக்கள் தரத்துக்குத் தகுந்த பரிசு கொடார்

சகமிக்க தண்டலையா ரடிபோற்று

மகராசர் சபையில் வந்தால்
சுகமிக்க வேசையற்குப் பொன்நூறு
கொடுப்பர் தமிழ்சொன்ன பேர்க்கோ
அகமிக்க சோறிடுவர் அந்தணருக்
கெனில்நாழி அரிசி ஈவார்
பகடுக்கோ பணம்பத்துத் திருப்பாட்டுக்
கொருகாசு பாலிப் பாரே
71

பணத்தின் உயர்வு

பணந்தானே அறிவாகும் பணந்தானே

வித்தையுமாம் பரிந்து தேடும்

பணந்தானே குணமாகும் பணமில்லா
தவர்பிணமாம் பான்மை சேர்வர்
பணந்தானே பேசுவிக்குந் தண்டலைநீள்
நெறியாரே பார்மீதிற் றான்
பணந்தானே பந்தியிலே குலந்தானே
குப்பையிலே படுக்குந் தானெ
72

அடியார் எவர்க்கும் பயப்படார்

புனங்காட்டுமன் னும்விண்ணும் அஞ்சவருங்

காலனையும் போடா என்றே
இனங்காட்டு மார்கண்டன் கடிந்துபதி
னாறுவய தென்றும் பெறறான்
அனங்காட்டுந் தண்டலையார் அடியாரெல்
லாமொருவர்க் கஞ்சு வாரோ
பனங்காட்டு நரிதானுஞ் சலசலப்புக்
கொருநாளும் பயப் படாதே
73

ஊரில் ஒருவனே தோழன் ஆரும் அற்றவளே தாரம்

சீரிலகுந் தண்டலையார் வளநாட்டில்

ஒருதோழன் தீமை தீர
வாரமிகும் பிள்ளைதனை அரிந்துண்டான்
ஒருவேந்தன் மணந்து கொண்ட
ஆர்வமிகு மனைக்கிழத்தி ஆண்டிச்சி
வடிவுகொண்டா ளாத லாலே
ஊரிலொரு வன்தோழன் ஆரும் அற்ற
தேதாரம் உண்மை தானே
74

அகத்துறவு

தானவனா கியஞானச் செயலுடையார்

மாதர்முலை தழுவினாலும்
ஆனதொழில் வகைவகையாச் செய்தாலும்
அனுபோகம் அவர்பா லுண்டோ
கானுறையுந் தண்டலையாரடி போற்றுஞ்
சுந்தரனார் காமி போலாய்
மேனவினுஞ் சுகம்படுக்கை மெத்தையறி
யாதெனவெ விளம்பி னாரே
75

சோறு எல்லாம் செய்யும்

சோறென்ன செய்யு மெல்லாம் படைத்திடவே

செய்யும்அருள் சுரந்து காக்கும்
சோறென்ன செய்யு மெல்லாம் அழித்தடவே
செய்யும் அதன் சொரூப மாக்கும்
சோறென்ன எளியதோ தண்டலையார்
தம்பூசை துலங்கச் செய்யும்
சோறென்ன செய்யுமெனிற் சொன்னவண்ணஞ்
செயும்பழமை தோன்றுந் தானே
76

பித்தருக்கு தன்குணமே சிறந்ததாம்

எத்தாருக்கும் உலுத்தருக்கும் ஈனருக்கும்

மூடருக்கும் இரக்கம் பாரா
மத்தருக்குங் கொடிதாமவ் வக்குணமே
நற்குணமா வாழ்ந்து போவார்
பத்தருக்கு நலங்காட்டு தண்டலையா
ரேயறிவார் பழிப்பா ரேனும்
பித்தருக்கு தன்குணமே நூலினுஞ்செம்
மையதான பெற்றி யாமே
77

அவரவர் இயற்கைக்கு தக்கபடி நடக்க வேண்டும்

பன்னகவே ணிப்பரமர் தண்டலையார்

நாட்டிலுள்ள பலபேருங் கேளீர்
தன்னறிவு தன்நினைவு தன்மகிமைக்
கேற்றநடை தகுமே யல்லால்
சின்னவரும் பெரியவர்போல் நடந்தால்
உள்ளதுபோம் சிறிய காகம்
அன்னநடை நடக்கப்போய்த் தன்னடையுங்
கெட்டவகை யநகுந் தானே
78

பெரியோரைப்போல் சிறியோரும் தொழில் நடத்த ஆரம்பிப்பர்

பேரான கவிராய ருடன்சிறிய

கவிகளும்ப்ர பந்தஞ் செய்வார்
வீராதி வீரருடன் கோழைகளும்
வாள்பிடித்து விருது சொல்வார்
பாராளுந் தண்டலைநீள் நெறியாரெ
இருவகையமு பகுத்துக் காணில்
ஆராயுமகதேவ ராடிடத்துப்
பேய்களு நின்றாடு மாறே
79

இவரேல்லாம் கள்ளர்

செழுங்கள்ளு நிறைசோலைத் தண்டலைநீள்

நெறியாரே திருடிக் கொண்டே
எழுங்கள்ளர் நல்லகள்ளர் பொல்லாத
கள்ளரினி யாரோ என்றால்
கொழுங்கள்ளர் தம்மிடங்கும் பிடுங் கள்ளர்
திருநீறு குழைக்கங் கள்ளர்
அழுங்கள்ளர் தொழுங்கள்ளர் ஆசாரக்
கள்ளரிவர் ஐவர் தாமே
80

பெரியோர் சொல்லும் எண்ணமும் ஒன்றாயிருக்கும்

தனத்திலெ மிகுத்தசெழுங் தண்டலையார்

பொனினிவளந் தழைத்த நாட்டில்
இனத்திலே மிகும்பெரியோர் வாக்குமனம்
ஒன்றாகி எல்லாஞ் செய்வார்
சினத்திலெ மிகுஞ் சிறியோர் காரியமோ
சொல்வதொன்று செய்வ தொன்று
மனத்திலே பகையாகி உதட்டிலே
உறவாகி மடிவார் தாமே
81

உலகத்தோடு ஓட்டி நடக்க வேண்டும்

தேரோடு மணிவீதித் தண்டலையார்

வளங்காணும் தேச மெல்லாம்
போரோடும் வில்படைத்து வீராதி
வீரரென்னும் பகழே பெற்றார்
நேரோடும் உலகத்தோ டொன்றுபட்டு
நடப்பதுவே நீதி யாகும்
ஊரோட உடனோட நாடோ ட
நடுவோடல் உணர்வு தானே
82

இதைவிட இது சிறந்தது

இழைபொருத்த முலைபாகர் தண்டலையார்

வளநாட்டில் எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதின் மௌனமா
யிருப்பதுவே தக்க தாகும்
குழகுழத்த கல்வினுங் கேள்வியினுங்
கல்லாமை குணமெ நாளுங்
வழுவழுத்த உறவதனின் வயிரம்பற்
றியபகையே வண்஡மதானே
83

சிவனடியாரல் உயர்வு தாழ்வு இல்லை

அருப்பயிலுந் தண்டலைவாழ் சிவனடியார்

எக்குலத் தோரானா லென்ன
உருப்பயிலும் திருநீறுஞ் சாதனமும்
கண்டவுடன் உகந்து போற்றி
இருப்பதுவே முறைமையல்லால் ஏழையென்றுஞ்
சிறியறேன்றும் இகழ்ந்து கூறின்
நெருப்பினையே சிறிதொன்று முன்றானை
தனில்முடிய நினைத்த வாறே
84

பெண்ணாசை ஆகாது

உரங்காணும் பெண்ணாசை கொடிதாகும்

பெண்புத்தி உதவா தாகும்
திரங்காணும் பெண்வார்த்தை தீதாகும்
பெண்சென்மம் சென்ம மாமோ
வரங்காணுந் தண்டலைநீள் நெறியாரே
பெண்ணிடத்தின் மயக்கத் தாலே
இரங்காத பேர்களுண்டோ பெண்ணென்ற
உடன் பேயும் இரங்குந் தானே
85

பரத்தையர் சேர்க்கை கூடாது

மையிலே தோய்ந்தவிழி வஞ்சியரை

சேர்ந்தவர்க்கு மறுமையில்லை
மெய்யிலே பிணியுமுண்டாங் கைப்பொருளுங்
கேடாகி விழல ராவார்
செய்யிலெ வளந்தழைத்த தண்டலையார்
வளநாட்டில் தெரிந்த தன்றோ
கையிலெ புண்ணிருக்க கண்ணாடி
பார்ப்பதென்ன கருமந் தானே
86

பெரியோர் தகாத இடத்தில் எதையுஞ் செய்யார்

காலமறி தண்டலையார் வளநாட்டிற்

கொலைகளவு கள்ளே காமம்
சாலவரு குருநிந்தை செய்வர்பால்
மேவியறஞ் செய் தற்குச்
சீலமுடையோர் நினையார் பனையடியி
லேயிருந்து தெளிந்த ஆவின்
பாலினையே குடித்தாலுங் கள்ளென்பார்
தள்ளென்பார் பள்ளென் பாரே
87

சூதினால் துன்பமே வரும்

கைக்கெட்டா தொருபொருளுங் கண்டவர்க்கு

நகையாகுங் கனமே யில்லை
இக்கட்டாம் வருவதெல்லாம் லாபமுண்டோ
கவறுகையி லெடுக்க லாமோ
திக்கெட்டே றியகீர்த்தித் தண்டலையார்
வளநாட்டிற் சீசீ யென்னச்
சொக்கட்டா னெடுத்த வர்க்குச் சொக்கட்டான்
சூதுபொல்லாச் சூதுதானே
88

இடத்துக்கேற்க மண் சிறக்கும்

தனமேவும் புற்றடிமண் குருந்தடிமண்

பிரமகுண்டந் தன்னி லேய்மண்
மனமேவு மணியுடனே மந்திரமும்
தந்திரமும் மருந்து மாகி
இனமேவுந் தண்டலையார் தொண்டருக்கு
வந்தபிணி யெல்லாந் தீர்க்கும்
அனுபோகந் தொலைந்தவுடன் சித்தியாம்
வேறும்உள அவிழ்தந் தானே
89

உயிரைவிட மானம் பெரிது

கான்அமருங் கவரிஓரு மயிர்படினும்

இறக்குமது கழுதைக் குண்டோ
மானமுடன் வாழ்பவனே மாபுருடன்
சுயோதனனை மறந்தா ருண்டோ
ஆனகஞ்சேர் ஒலிமுழங்குந் தண்டலையா
ரேசொன்னேன் அரைக்கா சுக்குப்
போன அபிமானம் இனி ஆயிரம் பொன்
கொடுத்தாலும் பொருந்திடாதே
90

துரைகளை அடுத்திருப்பவர்களுக்கு நன்மையுண்டு

நிலைசேரும் அதிகவித ரணசுமுக

துரைகளுடன் நேசமாகிப்
பலநாளு மேயவரை அடுத்தவர்க்குப்
பலனுண்டாம் பயமு மில்லை
கலைசேருங் திங்களணி தண்டலையா
ரேசொன்னேன் கண்ணிற்காண
மலைமீதி லிருப்பவரை வந்துபன்றி
பாய்வதெந்த வண்ணந் தானே
91

பெரியவர் சிறியவர் இயல்பு

பொறுமையுடன் அறிவுடையார் இருந்தஇடம்

விளக்கேற்றி புகுத வேண்டும்
கெருவமுள்ளார் அகந்தையுடன் இறுமாந்து
நடந்துதலை கீழா வீழ்வார்
வறுமையினும் மறுமையினுங் காணலாம்
தண்டலையார் வாழுநாட்டில்
நிறைகுடமே தளும்பாது குறைகுடமே
கூத்தாடி நிற்ப தாமே
92

நல்லோர் செல்வம் பலர்க்கும் பயன்படும்

ஞாலமுறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்

எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்
காலமறிந் தருமையயுடன் பெருமையறிந்
துதவிசெய்து கனமே செய்வார்
மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே
அவரிடத்தே வருவார் யாரும்
ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால்
சீட்டெவரே அனுப்பு வாரே
93

நாணம் இல்லாத தன்மை

சேணிலகு மதிசடையார் தண்டலையார்

வளநாட்டிற் சிறந்த பூணிற்
காணவாரு நாணுடையார் கனமுடையார்
அல்லாதார் கரும மெல்லாம்
ஆணவலம் பெண்ணவலம் ஆடியகூத்
தவலமென அலைந்து கேடாம்
நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும்
வாயிலெனு நடத்தை யாமே
94

அடக்கமில்லா மனைவி பிடாரி

அடுத்தமனை தொறும்புகுவாள் கணவனுணு

முனமுண்பாள் அடக்க மில்லாள்
கடுத்தமொழி பேசிடுவாள் சிறுதனந்தே
டுவள்இவளைக் கலந்து வாழ்தல்
எடுத்தவிடைக் கொடியாரே தண்டலையா
ரேஎவர்க்கும் இன்பமாமோ
குடித்தனமே பெறவேண்டிப் பிடாரிதனைப்
பெண்டுவைத்துக் கொண்ட தாமே
95

செல்வருக்கு வலிமை உண்டு

களித்துவரும் செல்வருக்கு வலிமையுண்டு

மிடியருக்குக் கனகந்தா னுண்டோ
வளைத்தமலை எனுஞ்சிலையார் தண்டலைசூழ்
தரும்உலக வழக்கம் பாரீர்
ஒளித்திடுவர் தம்மனையிற் பெண்டீரை
கண்டவரும் ஒன்றும் பேசார்
இளைத்தவன்பெண் டீரென்றால் எல்லார்க்கு
மைத்துனியாய் இயம்பு வாறே
96

பிறர் வருத்தம் அறியாதவர்

நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும்

விரகினரும் நோயுள் ளோரும்
தந்தமது வருத்தமல்லார் பிறருடைய
வருத்தமது சற்றும் எண்ணார்
இந்துலவு சடையாரே தண்டலையா
ரேசொன்னேன் ஈன்ற தாயின்
அந்தமுலைக் குத்துவலி சவலைமக
வோசிறிதும் அறிந்தி டாதே
97

எவ்வளவு செழித்தாலும் இரவலர்க்குச் சுகமில்லை

ஆழியெல்லாம் பாலாகி அவனியெல்லாம்

அன்னமய மானா லென்ன
சூழவரும் இரவலர்க்குப் பசிதீர
உண்டிருக்குஞ் சுகந்தானுண்டோ
ஏழுலகும் பணியவரும் தண்டலையா
ரேசென்னேன் எந்தநாளும்
நாழிநெல்லுக் கொருபுடவை விற்றாலும்
நிருவாணம் நாய்க்குத் தானே
98

அற்பருக்கு எங்கும் உயர்வு கிடையாது

கொச்சையிலே பாலுமுண்டோ கூத்தியர்கள்

தம்மிடத்திற் குணந்தா னுண்டோ
துச்சரிடத் தறிவு ண்டோ துச்ச ரெங்கே
போனாலுந் துரையாவரோ
நச்சரவத் தெடையாரே தண்டலையா
ரேயிந்த நாட்டல் லாமல்
அச்சியிலே போனாலும் அகப்பையரைக்
காசதன்மேல் கொள் வாரே
99

கயவர் தங் குணத்தை விடார்

நித்தம்எழு நூறுநன்றி செய்தாலும்

ஓருதீது நேர வந்தால்
அத்தனையுந் தீதென்பார் பழிதருமக்
கயவர்குணம் அகற்ற லாமோ
வித்தகஞ்சேர் தண்டலையார் வளநாட்டிற்
சாம்பவிட்டி விளக்கி னாலும்
எத்தனை செய்தாலுமென்ன பித்தளைக்குத்
தன்நாற்றம் இயற்கை தானே
100

சிலபிரதிகளில் காணப்படும் அதிகப் பாடல்கள்

வம்பர் அதிகாரம் இருப்பதும் இல்லாததும் ஒன்று

வம்பரெல்லாம் ஆதிக்க மிகுந்திருந்தால்

என்னவது மாறி ஓய்ந்த
பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால்
என்ன ளதிற் பலனுமுண்டோ
கமபுலவும் தண்டலையார் வளநாட்டில்
வருந்துபல கழுதை தாமும்
அம்புவியிற் கிடந்ததென்ன பாதாளந்
தனிற்கிடந் தாகுந் தானே
101

பொருள் தேடும் முறை

தண்டலையா ரடிபணிந்து தவந்தானம்

உபகாரந் தருமஞ் செய்து
கொண்டபொருள் விலைவாசி காணிதே
டிக்கோடி கொடுப்ப தல்லால்
வண்டருமா யொன்றுபத்து விலைகூறி
அநியாய வட்டி வாங்கிக்
கண்டவர்தந் கடுந்தேட்டுக் கண்ணையறக்
கொடுக்குமிது கருமந் தானே
102

ஒன்று சொன்னால் ஒன்று செய்தல்

இது கருமம் இதனாலே இதைமுடிப்பா

யெனத்தொழிலை எண்ணிச் செய்தால்
அதுகருமம் பாராமல் திருடியும் அள்
ளியும்புரட்டா யலைவ தெல்லாம்
மதியணியுந் தண்டலையார் வளநாட்டில்
நீராடு மாந்தர் தங்கள்
முதுகிளைத்தே யெனச் சொன்னால் முலைமீது
கையிட்ட முறைமை தானே
103

சிறியொர் எப்படி நடந்தாலும் பெரியோர் ஆகமாட்டார்

பார்க்குளறி விருந்தாலும் படித்தாலுங்

கேட்டாலும் பணிந்து வேத
மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்
பெரியவர்தம் மகிமையுண்டோ
ஆர்க்கும்அருங் கதியுதவுந் தண்டலையா
ரேசொன்னேன் ஆகா யத்தில்
ஊர்க்குருவி தானுயரப் பறந்தாலும்
பருந்தாகா துண்மை தானே
104

எல்லாம் தெய்வச்செயல்

வல்லமையால் முடிவதுண்டோ தலைகீழாய்

நின்றாலும் வருவ துண்டோ
அல்லதுதான வன்செயலே யல்லாமல்
தன்செயலால் ஆவ துண்டோ
புல்லறிவால் மயங்காமல் தண்டலையார்
அடிபணிந்து புத்தி யுண்டாய்
இல்லதுவா ராதுநமக் குள்ளதுபோ
காதெனவே யிருக்க லாமே
105

காரியமறியார் செய்கையின் இழிவு

பேருரைகண் டறியாது தலைச்சுமைஏ

டுகள்சுமந்து பிதற்று வோனும்
போரில்நடந் தறியாது பதினெட்டா
யுதஞ்சுமந்த புல்லி யோனும்
ஆரணிதண் டலைநாதரக மகிழாப்
பொருள்சுமந்த அறிவிலேனும்
காரியமொன் றறியாக்குங்கு மஞ்சுமந்த
கழுதைக்கொப் பாவர் தாமே
106

பூமியில் பிறந்தோர் அனைவரும் மக்களாகார்

கற்பூரவல்லியொரு பாகர்செழுந்

தண்டலையார் கடல் சூழ்ந்த
நற்பூமிதனிற் பிறந்தோர்ரெல் லோரு
மக்களென நாட்ட லாமோ
அற்பூரும் பண்புடையார் நற்குணமும்
பண்பிலார் அழகுங் காணிற்
பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்
பூவுமெனப் புகல லாமே
107

தருமப் பயன்

சலியாமல் தண்டலையில் நாயகனார்

அருள்கொண்டு தருமஞ் செய்யப்
பொலிவாகிக் கொழுமீதில் வந்தபொருள்
ஈந்தவைதாம் போக மீந்தால்
மலிவாகிச் செல்வமுண்டாம் வயல்முழுதும்
விளைந்திடுநன் மாரி யாகும்
கலியாணப் பஞ்சமல்லை களப்பஞ்சம்
இல்லையொரு காலுந் தானே
108

இரத்தலிலும் ஒழங்கு

இரக்கத்தா லுலகாளுந் தண்டலையா

ரேசிவனே யெந்த நாளும்
இரக்கத்தான் புறப்பட்டீ ரென்தனைய,ம்
இரக்கவைத்தீ ரிதனா லென்ன
இரக்கத்தா னதிபாவம் இரப்பதுதீ
தென்றாலு மின்மை யலே
இரக்கப்போ னாலுமவர் சிறக்கப்போ
வதுகரும மென லாமே
109


This webpage was last updated on 1 Dec. 2004
Please send your comments to the webmasters of this website