Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 2
tiruvAnaikkA akilANTanAyaki piLLait tamiz
(in tamil script, Unicode/utf-8 format)

திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி
திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்




Etext Preparation (input & proof-reading) : Distributed Proof Reading Project
Following individuals were involved in this effort: Durairaj, Subra Mayilvahanan,
Kumar Mallikarjunan, K. Kalyanasundaram, Deeptha Thattai, Anbumani Subramanian,
T. Parasuraman, Vassan Pillai, Vijayalakshmi Peripoilan, and P.R. Sivakumar.

Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu


© Project Madurai 1999-2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


சிவமயம்
திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்
பாயிரம்.

விநாயகக்கடவுள் வணக்கம்.

143.
சீருலவு வனசமகள் புரையுமட வார்களிக றீர்ந்தோ மெனக்களிப்பச் -
செறியுடுக் கணமுருவில் புத்தே டிகைப்பவிது தீங்கவள மென்றுததிதோய்,
காருலவு மாகநடு வட்பொலியு மாம்பலங் காதன்மதி மீப்பனையெழில் -
காட்டுங்கை நீட்டுமொரு கோட்டிரு பதத்திரி கடாக்குஞ்ச ரத்தை நினைவாங்,
கூருலவு கவரிலை யயிற்படை சுமந்தவெங் கோமா னுடற்கண்வாமங் -
கொண்ட கொண்டற்குழற் கொவ்வைவாய் வெண்ணகைக் கொம்மைமுலை யம்மை பைப்பூந்,
தாருலவு பொங்கரிற் செங்கதிர் மயங்குமொரு *சம்புவன மமர் தேவியைச் -
சகலவண் டமுமளிக் கும்பிராட் டியையுரைசெய் தண்டமிழ் வளம்பெருகவே. (1)

* திருவானைக்கா

பரமசிவ வணக்கம்

144.
தெள்ளமு துடற்கூன் மதிக்குழவி கொட்டவெந் தீயசஞ் சரவு கொட்டச் -
சேர்த்தசைக் குஞ்சடை முடித்தண்ட மிடியச் சினந்தொலிக் குந்து டித்துப்,
பள்ளவட வைக்கன றூங்குநிரி யாணப் பருங்கறை யடித்துரித்து -
பாயுழைக் கைத்துமுத் தலைசேர் படைத்துவெண் பலிகொளிரு நான்குதோட்டு,
கள்ளவித ழிப்பூந் தொடைத்துநுத னாறுசெங் கட்டுமண் டொட்ட கருமாக் -
காணவரி தாகுமிரு தாட்டெது வதைப்பணிபு கைகுவிப் பேமாறுகாற்,
புள்ளமர் மலர்த்தெரிய லார்தவள மாடமீப் போய்மதியை வான்யாற்றுவெண் -
பூங்குமுத மலரெனக் கைநீட்டு *காவையம் பூந்தோகை யைப்பாடவே. (2)

* திருவானைக்கா

பராசத்திவணக்கம். வேறு.

145.
வெள்ளநெடுஞ் சடைமுடித்தா ருடலப்பாகி வியந்துகவர்ந் துலக மெலா மளித்தன்பானோ,
ருள்ளமுழு வதுங்கவர்ந்து கொள்ளாநிற்கு மொருத்திபொற்றா ளருத்திகொண்டு ளிருந்துநிற்பா.
மள்ளலெழு முள்ளரைப்பூங் கம லக்காட்டி லளிகளிழிந் துழுதுழக்க வழிதேனாறு,
தெள்ளமுதக் கடன்மடுக்குங் காவை மேவுஞ் சிவஞானப் பிராட்டிதமிழ் செழிக்க வென்றே. (3)

விநாயகக் கடவுள் வணக்கம்

146.
கோமேவு மதிலொருமூன் றெரிக்கு ஞான்றெங் குனிமதிசெஞ்
சடைச்செருகும் பெருமா னன்பர்,
நாமேவு தமிழ்க்கொருபூங் கொடிபாற் றூது
நடந்தநா யகன்விநா யகவென் றேத்தி,
மாமேவு கதிர்க்காற்றேர் நடத்துமாறு வருமடிக
டிருவடிகள் வணக்கஞ் செய்வாம்,
பூமேவு திருக்காவை மேவுஞானப் பூங்கோதை
பாடல்வளம் பொலிய வென்றே. (4)

சுப்பிரமணியக்கடவுள் வணக்கம். வேறு

147.
இரசத விலங்கன்மிசை யொழுகருவி புரையவீ ரிருமருப் பாம்பன் மாறா -
திழிமுக் கடாம்பொழிய மென்சினைப் பைந்தரு விளங்காடு நறவு பொழியச்,
சுரபிபல் வளன்பொழிய வேமவுல காளுமொரு தோன்றன்மனை யாட்டி கண்டஞ் -
சூழுமங் கலகா ணறாதுறை கழித்துவே றொட்டவனை யஞ்ச லிப்பா,
முரகம்வல் விலங்குதுடி நவ்விமுத லமலர்மே லுரறிவரு காலை யிற்றன் -
னொளிரவ யவங்களிலொவ் வொன்றுகண் டொவ்வொன் றொதுங்கியவர் கையடையவப்,
பரமரிட மகலா திருந்ததுணை யைப்பைம் பசுந்தோகை யைக்காவைவாழ் -
பச்சைப் பசுங்கிளியை வாழ்த்துமெந் நாவுரைசெய் பாடலில் வளம்பெருகவே. (5)

நந்திதேவர் வணக்கம்.

148.
புள்ளேறு நேமியம் படையுடைக் குரிசிலும் பூந்தவி சுகந்து ளோனும் -
பொதுளுஞ் சினைத்தரு நிழற்கோனு மமரரும் புகலவரு மெங்கோ னவைக்,
குள்ளேறு மாறுத வெனச்சிறிய வாய்மொழி யரைத்தடரும் வேலை யவர்வா -
ளோங்குமணி முடிசிதற வேத்திரப் படையெடுத் தோச்சுவா னைத்துதி செய்வா,
முள்ளேறு தாட்பா சடைக்கமல வாலியின் முழங்கிய வரால்வெடி கொளா -
மோட்டெருமை பாயுமொலி கேட்டுள நடுங்கியலை முந்நீர் மடுத்து மடவார்,
கள்ளேறு பைந்தொடைகொ ளைம்பால் கடுக்கக் கறுத்தமுகில் வரையி னேறுங் -
காவைப் பிராட்டிக் குரைக்குமெஞ் சிறியபுன் கவியவள் செவிக் கேறவே. (6)

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் வணக்கம்.

149.
தீயேறு கைத்தலத் தையரரு ளாற்பொருவில் சிரபுர மறைச் செல்வரிற் -
சிவபாத விருதயர்த மதலையாய் ஞானந் தெவிட்டவுண் டாண் பனையெலாங்,
காயேற வரவின்வாய் முள்ளெயிற் றிழிகொடுங் கடுவேற வீந்த வொருவன் -
கடத்திலுயி ரேறவள வன்றிரு மகட்குட் களிப்பேற மதுரை நகர்வாய்ப்,
பாயேறு மிடையுடை முடைப்பறி தலைச்சமணர் பதறவுடு மேடு கனலிற் -
பைம்பசப் பேறவொரு குடிஞையெதி ரேறவைப் பதகர்வலி யக்கழுவினிற்,
போயேற வினியபதி கம்பாடு மையனடி போற்றுவாம் வெண்ணொவலெம் -
புண்ணிய னிடப்பாக நண்ணிய பிராட்டியைப் புகழுமெங் கவிதழையவே. (7)

திருநாவுக்கரசுநாயனார் வணக்கம்.

150.
அருங்கலை விளங்குதிரு வாமூரி லோங்குவே ளாண்குலப் புகழனாருக் -
கணிதிலத வதியா ருதித்தபி னுதித்தறமி லமணரிடு மலையெறிபெருங்,
கருங்கடல் கடந்துலக முழுதுமொரு கழலாற் கடக்குமொ ரிலச்சினையுடன் -
கவரிலைவை வேலிலச் சினையுமிரு தோட்கட் கலந்திடப் பெற்றனையுமா,
ளிருங்கருணை யார்வீழி மிழலையிற் பொற்பீடமெறிகா செடுத்ததிருவாக் -
கென்கோனடித்தலம் வழுத்துவேன் கோட்டெயிலி லிட்டகொடி முட்டநெடுவான்,
வருங்கலை மதிக்குடல் கிழிந்திழியு மமுதமணி மறுகுபெரு கிக்கிடங்கர் -
வாய்மடுக் குங்காவை யம்மைக் குரைக்குமென் வாய்த்தமிழ் வளம் பெருகவே. (8)

சுந்தரமூர்த்திநாயனார் வணக்கம்

151.
மங்கலம் பொலிநாவ லூர்மறைச் சடையனார் மகவா யுதித்தெமிறைவன் -
மணம்விலக் காவணங் காட்டிட வருட்டுறையுள் வந்தருட் டுறையளவளாய்க்,
கொங்கலர் குழற்பரவை குயமணைந் தினியதமிழ் கூறியுடல் கொண்டு முதலை -
கொண்டபொருண் மீட்டுக் கடாத்திரி நடாத்துமெங் கோமானை யஞ்ச லிப்பாஞ்,
செங்கமல வங்கையி லிலங்கிழைகாண் மங்கையர் திரட்சியம் மனையெடுத்துச்-
செறுசுடர்கொ ணவமணி குயிற்றுமணி மாடமேற் சென்றிருந் தோச்ச வமரர்,
தங்களர சூருமுத் தானமலை கவளமிது தானென நெடுங்கை நீட்டுந் -
தண்காவை யம்பிகைக் கடியே னுரைக்குமொண் டமிழ்வளமிகபெருகவே. (9)

மாணிக்கவாசகசுவாமிகள் வணக்கம்.

152.
கடிமதில் வளைத்தகூ டற்றேன் பிலிற்றுமொண் கண்ணிநிம் பற்கிருமையுங் -
காட்டிவெம் புத்தர்களை யோட்டியெங் கோன்செவி களிக்கவாக்குமத மூட்டி,
முடிவில்பர மானந்த வெள்ளத் திரைக்கடலுண் மூழ்கித் திளைத்திருந்த -
முதல்வர்நந் திருவாத வூரடிக ளடிகளை முடிகணிய தாக்கி நிற்பாந்,
துடியிடை நயங்கண் டொதுங்கிமா சுணமண் சுமக்கமுதி ராவிளமுலைத் -
துணைகண் டுடற்சிலம் புடல்வளைய நெய்த்துநெரி சுரிகுழற் கண்டுததிபோய்ப்,
படியுமுகி லலறிவரை முகடேற விழிகண்டு படையுறை புகுந்தடங்கப் -
பனிமலர்ச் சோலைதிகழ் காவைவரு மிமயநன் பாவைசொற் றமிழ்தழையவே. (10)

தண்டீசநாயனார் வணக்கம்

153.
வாரிசூ ழுலகுபுக ழுந்திருச் சேய்ஞலூர் மறைவாணர் குலம் விளங்க -
வருமெச்ச தத்தர்மரு வானா வுதிதரிய மறைநான்கு மோர்ந்து தௌிவாய்ச்,
சீரிலகு சைவநெறி யொழுகுஞான் றொருஞான்று செங்கோக் குழாமருந்துந் -
தேந்தளவ னொருசுரபி மீபருந் தண்டாற் சினந்தோச்சல் கண்டுதானே,
யூரிலம ராவின மொருங்கவொரு கோலெடுத் தோம்பிவயி றாரவூட்டி -
யொழுகுதீம் பால்கொண்டு வாலுகத் தாலெந்தை யுருவுகண் டாட்டி யொளிர்பைந்,
தாரியைய விட்டஞ் சலித்துவரு நாளில்லத் தந்தைதா ளறவெறிந்தோன் -
றனதா டுதிப்பமுயர் தண்காவை யம்பிகை தமிழ்க்குவளன் மிகவளரவே. (11)

திருத்தொண்டர்கள் வணக்கம்.

154.

காயமன வாக்கொன்ற மும்மல மொரீஇச்சைவ காவியங் கற்றறிந்துங் -
கனசரியை கிரியையோ காதிஞா நந்தேர்ந்க்து கந்துமவ வழிபயின்றுந்,
தீயபிணி யாம்பந்த பாசமூ லங்கெடச் சிதறிஅயெனை யாண்ட முக்கட் -
சென்சடாடவியண்ண றிருவடியின் மருவிய திருத்தொண்ட ரைப்பரவுவாந்,
தோய்நிறை பண்ணையி னறாக்கமல மலரைச் சுரும்பலறி முரலப்பசுஞ் -
சூட்டெகின மேங்கவளை கோட்டெருமை மேய்ந்துநெற் சூற்பயிரை வாய்குதட்டிச்,
சேயகுமு தத்தடம் பாயவத் தடவாளை சேண்முகிற் கீண்டுபாயுந்த் -
தென்காலை மேவும் பிராட்டிக் குரைக்குமெஞ் செந்தமிழ் நலம்பெருகவே. (12)

அவையடக்கம்

155.
பொங்குமலை நீர்பருகு மொருமுனிவ வமர்நறும் பொதியத் திருந்தெழுந்து-
புன்னைவீ யின்றா தளைந்தவிள மென்சிறு புதுதென்றல் வந்தரும்ப,
லெங்குமொளிர் செந்தழ வரும்புதே மாவட ரெழிற்காவை யம்பதியின்மே-
வெம்பிராட் டிக்கியா னுரைசெய்பிள் ளைக்கவியி தென்போ லிருக்குமென்னிற்-
நங்குமூ தறிவுடைய சான்றோ ருறுந்தெய்வ சைவநெறி யொழுகு வோரில் -சங்
கத்து மெய்ப்பொரு ளுணர்த்து நூல் புகலுவது தான்கேட் டெழுந்து தீம்பால்,
செங்குமுத வாயொழுக மந்தமந் தச்சென்று தேருமக் கழகமுற்றோர் -
சிறுமடல்கை பற்றியொரு சிறுகுழவி குழறுஞ் சிறப்பினுக் கொக்குமன்றே. (13)

காப்புப்பருவம்

திருமால்.

156.
பூமேவு வெண்ணாவ னீழலமர் முக்கட் புராதனர்க் கின்பவெள்ளம்-
பொங்கித் ததும்பிமீ திட்டுவழி தரவலர் புரத்தொரு புறத்த மர்ந்து,
மாமேவு மண்டம் புரக்குமட மானையெழில் வாய்த்தசெந் தேனை யொளிர் செவ்-
வாயனத் தைக்கருங் குயிலைப் பசுந்தோகை மயிலைப் பரிந்து காக்க,
தேமேவு துளபப் பெருங்கா டளிக்குமிருள் சீத்துத் திசாதிசை தொறுஞ்-
சேயொளி பரப்புங் கவுத்துவத் தொருமார்பு திருமார்பு முலை பொருந்தக்-
கோமேவு மகவான் முதற்புலவர் மார்பலர் குலக்கொடிகண் முலைபொ ருந்தக்,
கொழுமுழுத் திண்கிரியை யேராழி யிடையிட்ட கூராழி யங்கைமுகிலே. (1)

சம்புநாயகர். வேறு.

157.
மதிநதி தும்பை வாச விதழிக ரந்தை நாகம் வனைசடை முன்கு லாவு புண்டரக் கீற்றினர்-
வழுதிமு னந்து வாய நரிபல கொண்டு தாவும் வலியய மென்று கூறி யங்குறத் தோற்றினர்-
மகரம லம்பு நீரி லமரர்க ளஞ்சி வாடி மறுகுற வந்த காரி கண்டமட் டேற்றினர்-
மறையினொ டங்க மாறும் வலவர்க லங்கு றாதொர் வடநிழ லின்பு றாவ மர்ந்துறத் தேற்றினர்,
கொதி கொள் சுரந்தண் மேவ நிழல்விரி பந்த ரூடு குளிர்புனல் கொண்டு சாலின் மொண்டெடுந் தூற்றினர்-
குலமலை நின்று தாழ நறமலை வின்றி மேவு கொடுமுடிதங்கு மேரு விண்டெடுத் தாற்றினர் -
குவிகையு டன்க ணீர்கொ டுருகுவர் துன்பமான குவிதல்கொள் பஞ்சை வாரும் விஞ்சருட் காற்றினர் -
குடபுல வந்திமானு முடனிற கம்ப ரீறில் குணமலி சம்பு நாதர் மென்கழற் போற்றுதும்,
அதிகர சங்கண் மீறி யருமையி தென்று பேசு மமுதையி கந்து பேசி டுங்குயிற் பேட்டினை -
யனுதின மும்ப ராவி வழிபடு மன்ப ரான வடியவர் கண்களார நின்றமெய்க் காட்சியை -
யவிர்கதிர் குன்ற வீசு மணிகள்சு மந்த வாசமலர்தரு கொம்பை யேட விழ்ந்துமிக் கூற்றெழு -
மருநற வுண்டி ராக மிடறுதி றந்து பாடி யளிகளி ருந்து வாழ்சு கந்தநற் றூட்பொதி,
வதியும லங்கன் மேவு மளகவ ரம்பை மாதர் வனசமி ருந்த மாதர் கும்பிடத் தோற்றிய -
மயிலைவ ளங்கு லாவு மணியைவி ளங்கு சோதி வடிவைந றும்ப டீர குங்குமச் சேற்றளை -
வனமுலை கொண்டு லாவு கொடியையி ருண்ட சோலை மதுமடை விண்டு பாயு மம்புயப் பூச்செறி -
மடுவைய லம்பி வாளை கமுகைய டர்ந்து பாய மலிவள மொன்று காவை மங்கையைக் காக்கவே. (2)

விநாயகக்கடவுள். வேறு.

158.
சீர்பூத்த வன்பரிடும் வெள்ளரிக் குவையைத் திரட்டிச் சடைக்கண் வாரித்
தின்றுகரு மாசுண மெனக்கூனன் மதிமுகில் செறியப் புழைக்கை நீட்டித்
தார்பூத்த வச்சடைக் கமலமொண் டுண்டுகட் டழல்கண்டும் வெருவாதுதன்
றந்தையென வெந்தையிட முலவுந் திருக்குஞ் சரக்கன் றினைப் பணிகுவா
நீர்பூத்த முள்ளரைப் பாசடைப் பூங்கமல நிறைநறை யிழிந்து பாய
நெட்டித ழவிழ்க்குமொரு வட்டமலர் மாளிகையு ணீங்கா திருந்து வாழுந்,
தேர்பூத்த வல்குன்மட வாரிரு வருந்தனைச் சிந்திப்பர் கட்பொருந்தத்
திருக்கட் கடைப்பார்வை செய்யுநன் காவையமர் தேவியைக் காக்க வென்றே. (3)

முருகக்கடவுள். வேறு.

159.
கறைவாய கண்டத் தெம்பெருமான் கரகங் கணங்கள் கரந்து சடைக்
காட்டு நுழைய மால்கரச்சங் கத்து ளவன்பாய் புகுந்தொளிக்கச்,
சிறைவாய் மஞ்ஞைப் பரிநடத்தித் தேம்பாய் தருவி னிழற்பிறந்த
தெய்வக் களிற்றை மணஞ்செய்த செவ்வேண் மலர்த்தா டலைக்கொள்வாந்
தரைவாய் மணிமுத் தளைகொழிக்குஞ் சலதி மடுத்த சூன்மேகந்
தவழ்ந்து திரிவ தேய்ப் பமத சலமூன் றுடைமா திரம்பயிலு
நறைவாய் வனத்து ளுயர்ந்தெழும்வெண் ணாவன் மருங்கு முளைத்ததுகிர்
நாகத் தொருபாற் படர்ந்தபச்சை நறுப்பூங் கொடியைப் புரக்கவென்றே. (4)

நான்முகன். வேறு.

160.
ஒலிகெழு மலையலை பருமுத் தாக்குட முறழ்வரி வளைவயி றுமிழ்பொற் பாற்கட
லுவகையொ டெழுமொரு மதியைப் போற்கய லுகண்மடு நடுவெழு பசுமைச் சூட்டனம்
வலியய மெனநனி கடவிச் சீர்ச்சித மலர்மிசை வதியுமொ ரெகினப் பேட்டினை
மறையுறை கடையடை யெனவைத் தாற்றிய மலர்தரு மலர்மக னுலகைப் பூத்தவன்
புலியத ளிடையிடை சுலவக் கூக்குரல் புரிபரி புரமடி யலறப் பாப்பணி
பொலிதர முழவொடு புவிவிட் போற்றிடு பொதுவினி னடமிடு மழுவைத் தூக்கிய,
மலிசடை யவர்மகிழ் துணையைத் தீத்தொழில் வலியவென் முடிமிசை யடியைச் சூட்டிய
மணியைமென் மலர்விரி கொடியைப் பூத்தொளிர் மதகரி வனம்வரு மயிலைக் காக்கவே. (5)

இந்திரன். வேறு.

161.
மோகத்தை யாங்கொண்ட போதெலா மிக்கின்ப முனியா தளித்திடுச்சி
மொய்குழ னுசுப்புமுலை சொற்பகைக் களிவையென முராரிமகிழ் வெய்தவேறி,
மேகத்தை யோட்டித் திசாதிசை திரிந்தலைய மின்னைத் துரத்தி யோங்கும்
வெற்பைத் துணித்தமுதை வாய்பெய்து தருநீழல் மேவுமொரு கடவுள் காக்க
நாகத்தை வாங்கிய பிரானியற் பகைமனையை நண்ணியது மதிலி லங்கை
நாதன்மனை விக்கின்ப நல்கியது மொருபூவ ணத்துடைந்ததுமி ராவித்
பூகத்தை யனையகந் தரமாது பாற்றாது போனதுமு ளோர்ந் திடைவிடாப்
புந்திச் சிறைப் படுத் தொளிர்காவை மேவுநம் புண்ணியப் பூங்கொம்பையே. (6)

திருமகள்

162.
முத்தநகை லிதுமுகப் பொதுவியர் கடப்பான் முழுக்கவன் றாழ்வலித்து
மூடுங்கவாடந் தடிந்துமனை புக்குண முனிந்தவர் பிணித்த டிக்கும்,
மத்தடி பொறுத்துவரு துணைமுகிலை யுண்டுகண் வளர்ந்துறைதி யென்று தன்னை
வயிறுளைந் தீன்றவொரு பாற்கடற் குடியாக்கு மடமானை யஞ்ச லிப்பாங்
கொத்தவிர மத்தமணி வெண்பொற் பிறங்கற் குலாவும் பெருங்க ளிற்றைக்
கூடிப் பயந்தவொரு கோட்டடன் மழக்கன்று கூடிவிளை யாட னாடி
யத்தவுல கக்களிறு பாறாவீ றேறுமத வத்தியா ரணிய மேவு
மமையம் பிறங்கவள ரிமையம் பிறந்தபிடி யைக்காத் தளிக்க வென்றே. (7)

கலைமகள்

163.
வாவியம் போருக மலர்த்தவி சுறுங்கடவுள் வாக்கினுமெ னாக்கினுநறா
வழியுஞ் சிதத்தகட் டேடவிழ்க் குங்குமல மனையினுங் குடிகொண்டு பொற்
றூவியந் தொற்றாட் கருங்கடல் கொழித்தசெந் துகிரனைய வாய்ப்பசும் பொற்
சூட்டெகின மேறும்வெண் பேட்டெகின மலர்மென் றுணைத்தா டுதித்து நிற்பாங்
காவியை முனிந்துசண் பகமீக் குதித்தொளிர் கனங்குழைய மோதி டுங்கட்
கட்பிலிற் றுந்தெரியல் சூழ்ந்தளிகண் முரலக் கனந்கதற வாட்டு மைம்பாற்
றேவியைச் சகலவுல கும்புரக் கும்பெருஞ் செல்வியைக் கருணை பூத்த
திருவைத் தடம்பணைத் தென்காவை யம்மையைத் தினமும் புரக்க வென்றே. (8)

காளி

164.
விரிவுற்ற பையரா நண்ணுலகு மண்ணுலகும் விண்ணுலகு நன்கு காக்க
வெற்றிகொ டெடுத்தெனக் கைத்தலையின் முத்தலைய வேல்பரித் திறுமாந்து நீங்,
கருவிற் பொலப்பெய ரனைத்தெறப் பொற்றறி யகட்டைக் கிழித்தெழும்பே
ராளரி திகைக்கவொரு கோளரி யுகைத்திவரும் யாளிப் பிணாவளிக்க
செருவற் றொடுன்கிக் கருஞ்சுரும் பிட்டவிற் செஞ்சுவைத் தண்டனிறவெண்
டிரிபுண் டரத்தநுதல் வெம்புலிங் கங்கொட்டு சம்புலிங் கப்பெமானை
மருவிப்பன் மான்கண்மதர் நோக்கமறி யச்சூழ மற்றுமொரு மான்வயிற்று
வந்தகுற மான்முறை பொருந்தமுக் கடமான் வனத்துவரு மட மானையே. (9)

சத்தமாதாக்கள். வேறு.

அனமிசை யேறி யுலாவற் றொடுத்தவ ளடுபுலி கீறிய தோலவைத் துடுத்தவ
ளசுரகு லாதிபர் சாயப் படுத்தவ ளலைகட னீரழ லாகக் கடுத்தவ
ளினமடர் பாரையொர் கோடிட் டெடுத்தவ ளிறையொடு மாமலை யேகற் றடுத்தவ-
ளெரிகவர் வேல்கொடு காவற்க டுத்தவ ளெனுமெழு மாதர்க டாளைத் துதிககுதுங்,
கனமலி வாய்வரல் போலச் சினத்தெழு கடமிழி தோல்வர வோதைப் பரிப்படை -
கடலலை போய்வர மேருக் கிரிப்புரை கதிர்விடு தேர்வர வீரப்புயப்படை,
வனம்வர வானவர் பாறக் கறுத்தெதிர் வருமொரு தாருக னோடத் துரத்திய -
மதலையு லாவுக வானுத்தமப்பொழில் வளமலிகாவைநன் மாதைப் புரக்கவே. (10)

முப்பத்துமூவர். வேறு.

166.
வேலையினுத்தவிடம் வைத்தகிரிபத்தனௌி தற்புக்களிப்போடு காணவெதிர்நிற்பவு -
மேவிரதமுக்கனிச ருக்கரைமுதற்சுவைகள் கைப்பத்தமிழ்ப்பாடல் நாநனிகொழிப்பவும் -
வீறுறுசிவத்தலகந டக்கநடைகற்றிலனெ னப்பெற்றநற்றாதை தோளிடைபரிப்பவும் -
வீழிமிழலைப்பதியெ னப்பன்மணியப்புபடி வைத்திட்டபொற்காசு நாடொறுமெடுப்பவு,

மாலைமதிவைத்தகுடி லப்பரனெனச்சிவிகை பெற்றுத்தொனிக்காள மோடுகுநடத்தவு -
மாமறைவனக்கதவ மெய்ப்புகழரெச்சமு னடைப்பச்சிறப்பூறு வாயமுதுகொட்டவும் -
வாரிலைகண்மொய்த்தபுரு டப்பனையிலப்பொழுது கொத்துக்குலைக்காய்கு லாவவருள்வைப்பவு -
மாதரரசிக்குமொர்கு லத்திறைதனக்குமு ளுவப்பப்பொறித்தோலை காணுபுவியப்பவுங்,

காலைவருசெக்கதிர்க டுப்பவொர்கடத்துறுவெ ளெற்புக்குணத்தோடு மாதுருவெடுப்பவுங் -
காணியிதெனக்கொண்மட னிற்செறுநர்வைத்ததம வெப்பத்தழற்சீறி மாறனுடறைப்பவுங் -
காய்சினவழற்குண்மடல் பச்செனவெடுத்துவரை கொட்பப்பெருக்கேறு நீரெதிர்செலுத்தவுங் -
காருடலுடைப்பறித லைச்சமணர்முற்றநெடு விட்டொட்டமுட்டாரு மீயிவரவைப்பவும்,

சோலைபுடைசுற்றமது ரைப்பதிமுதற்பதிமு ழக்கத்தழைத்தோகை நீறுகைகுழைப்பவுந் -
தோமில்புகலிக்குரிசி லுக்கமுதளித்தகுயி லைப்பொற்றகட்டூடு மாமணிகுயிற்றிடுஞ் -
சூழெயின்மதக்கரிவ னத்தமரனத்தையிரு செப்புத்தனப்பார மாமயிலைநித்தலுஞ் -
சூரியர்மருத்துவரு ருத்திரர்வசுக்களெனு முப்பத்துமுக்கோடி தேவர்கள்புரக்கவே. (11)

காப்புப்பருவம் முற்றிற்று.

செங்கீரைப்பருவம்.

167.
பங்கய மலர்த்திவரு செங்கதிர் நிறத்தவுடல் பனிமதி நிறங்கொளாது -
படரரி மதர்த்தகண் குழியாது நாடிகள் பசந்துநா றாதுநுனைவாய்,
கொங்கைகள் கறாதுமட் சுவைநாப் பெறாதகடு குழையா துறாதி னம்பல் -
குறிபடா தருமையொ டுயிர்த்திமய மாதேவி குளிர்பு னல்பொன் வளைகுளிறிடும்,
அங்கையி லெடுத்தாட்டி நீறிட்டு மட்காப் பணிந்தொழுகு திருமு லைப்பா -
லார்வமொ டருத்தவுண் டயறவழ்ந் தேறிமலை யரையன் புயத்த வன்பொற்,
செங்கைவிரல் சிரமீது பற்றிநின் றாடுமயில் செங்கீரை யாடியருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடியருளே. (1)

168.
காராடு மாடமலி கூடலிற் பொன்மாலை கைநின் றிழிந்த வண்மடிக் -
கட்டவழ்தல் கண்டுவந் தம்மைவா வென்றிரு கரத்துவிர னீட்டு நிம்பத்,
தாராடு மார்பனிரு குழையிருகை பற்றியத் தடமார்பு தாழ்ந்தொ ளிரும்வெண் -
டண்டரள மாலையி னிருந்துமற் றொருமாலை தாளுதைந் தூசலாடி,
வாராடு மிருமுலை சுமந்தமட வார்தொடர வளருமும் முலைசு மந்து -
வானாடு முதலபல நாட்டுங் கயல்கட்டி வடகயிலை சென்று பொதுவிற்,
சீராடு மெந்தையொடு போராடு மொருபூவை செங்கீரை யாடி யருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடி யருளே. (2)

169,
கற்றிணி தடம்புயக் காருடற் றிமிலர்மீன் கையுறை யளிப்ப வாங்கிக் -
காவல்புரி நெய்தலங் கண்ணிய னளாவிக் கடற்றுகிர் படர்ந்த மனையிற்,
பொற்றிகழ் முலைச்சிலை சுமந்திடை நுடங்கவாள் பொருவுதங் டட்பகையெனப் -
புலான்மீ னுணக்குத றணந்துமுக மன்பல புகன்றுமகிழ் குரவை குழறிச்,
சுற்றியெம் பெருமான் குடம்பைதோட் சூட்டச் சுறாவிலைப் பைம்பொற் கலன் -
சூட்டிவலை முடியமுண் மடற்றாழை யம்போது சுரிகுழற் குறமு டித்துச்,
சிற்றிடை யளத்தியர்கள் கொண்டாடு மொருமங்கை செங்கீரை யாடி யருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடியருளே. (3)

170.
அஞ்சியய ருங்கமல மின்றட லுடைத்தா யடர்த்ததென நாணியுடல்கூ -
னாகிய மதிக்கொழு நனைக்கண் டரற்றிடு மரக்காம்பன் மான மணிவாய்,
வெஞ்சினஞ் சிறிதெழலி னாற்சின்மொழி கழற்றுவண் விரவரவு துவள லேய்ப்ப -
மின்னிடை தளாடமந் தாகினி யெனும்பெயரள் வெந்நிடை தவழ்ந்துமாலை,
மஞ்சினொளி பாய்புய வரைக்கட் டவழ்ந்துமகன் மார்பவெண் பொடிக ரைத்தும் -
வண்கைவாழ் கழிதலை புகுந்துமறு கச்சடை வனஞ்சேப்ப வெந்தை முடிமேற்,
செஞ்சிலம் போலிடு மடிக்கமல நீட்டினவள் செங்கீரை யாடி யருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடி யருளே. (4)

171.
நந்தாத செல்வச் சிலம்பரசன் மனையாட்டி நகிலொழுகு பாலுண்டுபுன் -
னகைநாற வவள்வா யுமிழ்ந்துந் துகிர்ப்பாவை நயமொழி மொழிந்தெடுத்து,
வந்தாவல் பூண்டணி யணிந்துந் தருப்பாவை வல்லிடையின் மெல்லிடைத்தான் -
வனையுமென் சிறுசீரை சுற்றியுஞ் சுடராடி மன்னுநிழ லைக்கூவியுஞ்,
சந்தார் திருத்தாதை யகன்மார் புழக்கித் தவழ்ந்தும்விளை யாட்டயர்தல் போற் -
றண்காந்த ளங்கைக ணிலத்துற நிமிர்த்துமந் தாகினிப் புனலலம்புஞ்,
செந்தா மரைச்சரண் கோட்டிப் பிராட்டிநீ செங்கீரை யாடி யருளே -
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடி யருளே. (5)

வேறு.

172.
கெண்டை யிரண்டு மருண்டொரு முளரி கிடந்து நடந்தாடக்
கௌிறொரு பதுநில மகனை விடாது கிளர்ந்து தளர்ந்தாடக்
கொண்ட றிரண்டொளி ருச்சியின் மீது குவிந்து கவிந்தாடக்
குமுத மலர்ந்தபொன் முளரி பிறந்தெழு குறுவெண் மணியாடத்
துண்டு படுங்கலை மதியிற் கட்டிய சுட்டி யசைந்தாடச்
சூழ்ந்திரு காந்த ளடிப்படி வண்டு சுழன்று முரன்றாட
அண்ட மனைத்து முயிர்த்த பொலங்கொடி யாடுக செங்கீரை
அத்தி வனத்தம ரத்த ரிடத்தவ ளாடுக செங்கீரை. (6)

173. பாத சதங்கை புலம்பு சிலம்பு பதிந்து பொதிந்தாடப்
பால்வளை யிற்சுட ராகை குயிற்றிய பல்சுடர் மணியாடக்
காதள வுங்கயன் மோது நறுங்குமிழ் கதுவிய முத்தாடக்
ககனத் திடைபொலி மின்னலின் மின்னிய கனவிரி சிகையாடத்
தாதவிழ் நறுமென் குமுதத் தமுதொடு தழைகுறு நகையாடத்
தழைதரு மரகத நிழல்விரி மேனித் தண்ணெனு மொளியாட
ஆதவ னொளியென வென்னுட் பொலிபவ ளாடுக செங்கீரை
அத்தி வனத்தம ரத்த ரிடத்தவ ளாடுக செங்கீரை. (7)

174. மருங்கணை யாடைகை வெந்நிட் டுதையா மலரடி கன்றாமே
வாயமு தூர லளித்த விரற்படு மண்ணென வெண்ணாமே
கருங்குயின் மென்குரல் விம்மிப் பொருமிக் கம்மிப் போகாமே
கயலீன் முத்தென நுண்டுளி முத்திரு கட்கயல் சிந்தாமே
சுருங்கு மருங்கு றுவண்டற வுந்தித் தொந்தி ததும்பாமே
சூழ்சுடர் மேனிப் புழுதி பொருந்தத் தொட்டும ணளையாமே
அருங்கலை மேகலை யாக வணிந்தவ ளாடுக செங்கீரை
அத்தி வனத்தம ரத்த ரிடத்தவ ளாடுக செங்கீரை. (8)

வேறு.

175. கடல்சுவ றிடவட வுடல்வரை பொடிபடல் கண்டோ டுங்காலன்
கடவிய முதுபக டடியொடி படவெரி கண்கா லும்பீழைப்
படவர வுடலடல் விடநெடு நிலமகள் பண்பா டுங்கீதம்
பயிறுள வுழவனை முனிதர வமரர் பயந்தீ ரென்றோல
மிடவிள முளரியில் வளர்பவன் முதலிய ரெந்தா யெங்கோவே
யெனமுனர் வருமசு ரர்கள்பொடி படவலி யெஞ்சா நின்றோர்வேல்
திடமொடு தொடுமொரு மதலையை யுதவினள் செங்கோ செங்கீரை
சினமுடை மதகரி வனம்வரு மொருமயில் செங்கோ செங்கீரை. (9)

வேறு.

176. நெக்குரு கிக்கசி வுற்றவர் கட்டனி நின்றா டுந்தோகாய்
நெட்டுட லப்பன கத்தலை நிற்குநி லந்தா ழும்பாவாய்
மைக்கரு மெய்ப்புயல் பிற்பொலி வுற்றுவ ரும்பூ மென்கோதாய்
மட்டுவி ரித்தெனு ளக்கம லத்துறும் வண்டே தண்டேனே
அக்கர வப்பணி முக்கணர் பக்கல மர்ந்தீ ரைந்தாறோ
டத்தொகை பெற்றவ றத்தைவ ளர்க்கும ணங்கே கொங்கேறுஞ்
செங்கம லத்தைந கைக்குமு கக்குயில் செங்கோ செங்கீரை
சித்திய ளித்திடு மத்திவ னத்தவள் செங்கோ செங்கீரை. (10)

செங்கீரைப்பருவம் முற்றிற்று.

தாலப்பருவம்

177.
சேற்று மணிகள் சலஞ்சலங்கள் சிதறிச் சிலம்ப ஞிமிறலறச்
செந்தா மரையின் வெள்ளிமுளை சிந்தித் தெறிக்கச் சினைவாளை
நாற்று வயலிற் குதிக்கவளை நடுவட் கயல்க ளொளிக்கநடு
நடுங்கிக் கமடஞ் சுரிக்கவரா னாரம் புரண்டு துடிக்கமது
வூற்றுங் குமுதம் படைச்சாலி னூடே யரையக் கருங்கடைஞ
ருழும்வெம் பகட்டை யுரப்பமலை யும்பர் கரத்தை யவர்செவிக்க
ணேற்றும் பழனச் செழுங்காவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ. (1)

178.
அரும்பு முலைசிற் றிடைநுடங்கி யசையப் பரித்த கடைசியர்க
ளலர்வாய் நறவுங் குயம்பாளை யரியு நறவு மருந்துமள்ளர்
கரும்பு வடித்த தீஞ்சாறு கதலிப் படப்பை புகுந்துநெடுங்
கமுகம் படப்பை யுலவியிளங் கன்னற் படப்பைத் தூரகழ்ந்து
சுரும்புமடுக்கு முளரிமடுச் சுருங்கப்பெருகிச் சலதியுவர்த்
தோயங் கலக்க முகின்மேய்ந்து சொரியும் புவன மினிப்பவறிந்
திரும்பு வனந்தாழ் வயற்காவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ. (2)

179.
நெரிந்து சரிந்து நெய்த்திருண்டு நீண்டு சுருண்டு மகரந்த
நிமிரத் திமிர்ந்து நறியபனி நீரி னனைந்து குழன்மடவார்
பரிந்து குடையு மணமஞ்சட் படுநீர் பாய்ந்து தழைத்தசெழும்
படைப்பைக் கதலிப் பசுங்குருத்தொண் பரிதிக் கடவு டனைமுடுக்கி
விரிந்து படுக்க நிலம்படுத்த மென்பூத் தருந்தேன் மிஞிறருந்தி
மிடறு திறந்து பாண்மிழற்ற விரைப்பங் கயந்துஞ் சனந்துயிலா
திரிந்து மறுகும் வயற்காவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ (3)

180. உடுக்கும் படங்க வுகள்கயலா வொற்றை யாழி வையமுமிந்
தூரு மொளிர்மா னமும்விரைய வோடுங் கலமாச் சலராசி
மடுக்குங் கனங்கள் பச்சொளிச்சை வலமா வொளிகள் சலஞ்சலமா
மருவி மிதப்ப வுடற்கண்ணன் மனையூற் றெடுப்ப வுயர்ந்துமால்
படுக்கும் பாயல் பின்னோடப் பயத்தன் பயத்த னாகவுடற்
பரிய மகரஞ் சரியவலை பாய்ந்து பாரை யகழ்ந்து பெருக்
கெடுக்கும் பொன்னித் தடங்காவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ. (4)

181.
கங்கு லனைய குழல்காட்டுங் கலாபத் தோகை கடுப்பாருங்
கருங்கண் மழவே றனையாருங் கலவிப் பூச லயரவனை
கொங்கு மலிதே மலர்மாலை கொட்டுந் துகளுஞ் சிதறுசுண்ணக்
குவையு நறுங்குங் குமத்தூளுங் குண்டுக் கிடங்கர் நிரைதூர்த்துப்
பொங்கு மதவெண் டிகையானைப் புழைக்கை மடுத்துக் கோட்டெயின்மீப்
பொலியுங் கொடிகள் கிழித்தவழிப் புயல்வான் புகுந்து பொன்னுலக
மெங்கு மணக்குந் திருக்கவை யென்றாய் தாலோ தாலேலோ
எல்லா வுலகுஞ் சராசரமு மீன்றாய் தாலோ தாலேலோ. (5)

வேறு.

182.
இரசத வரையமர் பவள விலங்க லிடம்படர் பைங்கொடியே
யிமையவர் மகிழ்வொடு புகழுஞ் சிமயத் திமயம் வரும்பிடியே
சரணினை பவருட் டிமிரஞ் சிதறச் சாரு மிளங்கதிரே
சதுமறை யானு மளப்பரி தான தயங்குபெர் லாமணியே
மரகத வரையிள கியவெழி லெனவெழில் வாய்த்த செழுஞ்சுடரே
மதுரித நவரச மொழுகக் கனியும் வளத்த நறுங்கனியே
தரணி மிசைப்பொலி தருமக் குயிலே தாலோ தாலேலோ
தழையுந் தந்தி வனத்தமர் மயிலே தாலோ தாலேலோ. (6)

183.
அங்கம் புளகுற் றுருகுவ ரிதையத் தலிரும் விளக்கொளியே
யறிதற் கரிய பரஞ்சுட ராயவெ னையர்க் கொருதுணையே
பொங்குங் கதிர்மணி யணிகள் சுமந்தவிர் புண்ணிய மென்கொடியே
பொய்ய ரகத்து மினிக்கு மினிப்புறு புத்தமு தச்சுவையே
கொங்குந் திணர்விரி பைந்தொடை நிம்பர் குலத்துறு செந்தேனே
கோகன கச்சின கரமொரு வாவிரு கோதைய ருக்கரசே
தங்குங் கருணை மலர்ந்தெழு கொம்பே தாலோ தாலேலோ
தழையுந் தந்தி வனத்தமர் மயிலே தாலோ தாலேலோ. (7)

வேறு.

184.
சயிலத் தரசற் கொருபுத் திரியே வானாள் வார்தாயே
தழலைத் தருகட் பரமற் றுணையே நாயேன் மாவாழ்வே
கயலைக் கடுவைக் கணையைக் கவினார் மாகா வார்கார்சேர்
கடலைப் பிணையைக் கடுகிக் குழைதோய் காதொ டேமோதா
வுயர்பொற் குமிழிற் குதியுற் றொளிகூர் கோமா னேதேனே
யுவமித் திடுதற் கருமைக் குயிலே தூயோ ராய்மாயா
மயலற் றவருட் படுமெய்ப் பொருளே தாலோ தாலேலோ
மதவெற் பமற்பொற் பதியுத் தமியே தாலோ தாலேலோ. (8)

வேறு.
185.
தானந தம்படு வெண்கரி தாழா வீழாமே
தானவர் மங்கையர் மங்கல நீணாள் வாழாமே
வானவர் நங்கைய ரங்கைகள் வார்மேன் மோதாமே
வாள்விழி யஞ்சசி வன்றுய ரூடே போதாமே
தேன்மலி பைந்துண ரைந்தரு வார்வேர் காயாமே
தேகம டங்கலு மம்பக னார்போய் மாயாமே
கான்முளை யொன்றருள் பைங்கிளி தாலோ தாலேலோ
காவை யமர்ந்த கருங்குயில் தாலோ தாலேலோ. (9)

வேறு.

186.
இருவர்க் கரியவெ னப்பனிடத்தவள் தாலோ தாலேலோ
விமயத் தலைவனு யிர்த்தமடப்பிடி தாலோ தாலேலோ
கருணைக் கடல்பெரு கப்பொலிகட்குயில் தாலோ தாலேலோ
களகப் பிடரிவ ரத்தியளித்தவள் தாலோ தாலேலோ
பொருநைத் துறையர்கு லத்தைவிளக்கினள் தாலோ தாலேலோ
புணரித் துறைவரு புத்தமுதொத்தவள் தாலோ தாலேலோ
மருமிக் கெழுதுள வற்பினுத்திதவள் தாலோ தாலேலோ
மதவெற் பமரும் வனத்தமர்பொற்கொடி தாலோ தாலேலோ. (10)

தாலப்பருவம் முற்றிற்று.

சப்பாணிப்பருவம்.

187.
செய்யதே மலர்மருவு நீலத்தி னெண்காந்தள் சேர்ந்தெனப் பின்கூழைவாய்ச் -
செங்கையொன் றுறவொருகை யிருகடன் மறைக்கத் தெரிந்தன ளெனப்பொதிகையா,
நெய்யுமோர் பைந்துழாய்க் கோலிருகை சேமித்த தெறுழதன் றொருகையிவ -
ளிருகோன் மறைத்தவலி நன்றுநன் றெனமகிழு மெந்தையொடு மகிழநறவம்,
பெய்யுநாண் முளரிமலர் வலியவொரு கமலம் பிறந்தகீ தத்தையடையும் -
பெற்றிபோற் சிற்றிடை நுடங்கக் கடங்கால் பிறங்கல்வழு திப்பொன்மனையிற்,
றையலார் மைக்கண் புதைக்குங்கை சேர்த்தம்மை சப்பாணி கொட்டியருளே -
தண்ணாவ லோர்புகழும் வெண்ணாவலூரரசி சப்பாணி கொட்டியருளே.(1)

188.
கந்தமலி நெட்டித ழவிழ்க்கும்வெண் டாமரைக் கவின்மயிலி முவரிபடியுங் -
காளமே கத்தினா கத்துமோ கத்தெண கடற்கட் சனித்தகுயிலும்,
வந்திரு மருங்குநின் றைம்பான் முடித்துநறு மாலைசெரு கிக்குனிநுதல -
மணநரந் தந்தூரி யங்கொண்டு தீட்டிமதர் மாழையுண் கட்குமையிட்,
டந்தர மடந்தையர் பணிந்துபுடை சூழமணி யணிபல வணிந்துநெடுவா -
னளவிய மணக்கா வணத்திருத் தத்தழன்மு னாவரைக் கரையனெனுமுன்,
றந்தைதர வெந்தையார் தொட்டகை முகிழ்த்தம்மை சப்பாணி கொட்டியருளே -
தண்ணாவ லோர்புகழும் வெண்ணாவ லூரரசி சப்பாணி கொட்டியருளே. (2)

189.
கலைமணக் குங்கொடிக் கொருபீட மானநாக் கடவுளொரு வாதமர்ந்த -
கமலபீ டமுமகில மகளிடை பொதிந்தபூங் கலைவயி றுளைந்துயிர்த்த,
சிலைமணக் குஞ்சிறு நுதல்சின கரப்பூஞ் செழுங்கபா டந்திறக்குந் -
திறவுகோ லைச்செங் கருங்கரள வரவெனச் சென்றொளி கவர்ந்தபடையா,
னலைமணக்கு திருப் பாற்கடலும் வேற்கணயி ராணியின் பந்திளைக்கு -
மண்ணலைத் தாங்குசிறு கண்ணநாற் கோட்டுவெள் ளருவிச் சிலம்புநின்றா,
டலைமணக்கும்படி வணங்குவோர்க் கருள்கைகொடு சப்பாணி கொட்டியருளே -
தண்ணாவ லோர்புகழும் வெண்ணாவ லூரரசி சப்பாணி கொட்டியருளே. (3)

190.
அருமறைக் கிழவன்முத லைவருக் குந்தொழில்க ளைந்தெண்ண லளவைசெய்ய -
வைவிரல் படைத்தகை யாற்சுட்டி னோடவர்க் கத்தொழில் காட்டுகையாற்,
பருமுலை மருப்புற வளைக்குறி படத்துகிர்ப் பட்டகோ டீரமுடியெம் -
பரமனைத் தழுவுகை யால்வள ரறங்கண்முப் பத்திரண் டும்புரிகையாற்,
குருமணி குயிற்றிய விருங்கங்க ணக்கையாற் கொடியேனை யஞ்சலென்ற -
கோலக்கை யான்மடப் பொய்தற்பி ணாக்களொடு குளிர்பனி வரைச்சோலைதண்,
டருநறவு கொட்டுமலர் கொய்யுங்கை யாலம்மை சப்பாணி கொட்டியருளே -
தண்ணாவ லோர்புகழும் வெண்ணாவ லூரரசி சப்பாணி கொட்டியருளே. (4)

191.
பாகமுற வம்மைநினை வைத்தவெம் மான்கரப் பால்வைத்த மான்மருண்ட -
பார்வைகொண் டதுகொலைச் சிலைவேடு கூடும் பருப்பதந் தோறுமாடு,
மேகமுற ழுங்குழற் சிறுகுறவர் சிறுமிவாய் மிக்கமோ கப்புலவுலாம் -
வேற்குழவி யெனுமருக னருகுறைவ தற்கன்று விரவிநங் கைப்பட்டதா,
லேகவரி தெனநினைத் தன்றுனா லெனவொளி ரிணைக்கணெழு கருணைவெள்ள -
மெங்கும் பரந்தப் பரற்குமீ திட்டடிய ரிருவினையை வாரியோடக்,
கோகனக மதின்முளைத் தாலெனப் பொலிகையாற் கொட்டியருள் சப்பாணியே -
கொடிவிரவு கடிமதிற் காவையிம யப்பாவை கொட்டியருள் சப்பாணியே. (5)

192.
வெள்ளன மெனத்தமிழ்க் கூடல்வாழ் கைதவன் விழுப்பெறவுதித் தெதிர்த்த -
வேளைத் தழற்கணாற் செற்றவெம் மானளவில் வேடிரண் டெனவரச்செய்,
தெள்ளலில் கலாநிலா மேலாக்கி மலயவெற் பீந்ததி னரும்புமென்காற் -
கிறையாக்கி வெம்பா ரிடஞ்சூழு மென்னநற விழிநிம்ப மாலையீந்து,
கள்ளவி ழிலம்பகத் தையலா ராயங் கலந்துபுடை சூழமுடியிற் -
கவின்முடி தரித்தரி யணைக்கண்வைத் திருகயல் களிக்கநோக் காவொருகயல்,
கொள்ளென விரும்பிக் கொடுத்தகை சிவப்புறக் கொட்டியருள் சப்பாணியே -
கொடிவிரவு கடிமதிற் காவையிம யப்பாவை கொட்டியருள் சப்பாணியே. (6)

வேறு

193.
அரவப் பரிபுர மேகலை பம்பி யலம்பிப் பதறமே
அம்போ ருகமொடு வெம்போ ரிடுகர மணிவளை சிதறாமே
யிரவிற் பொலிமதி வகிரிற் சுட்டி யிரிந்தது பிறழாமே
யியல்பன் றியுமிரு கரமலர் சேந்தட லேறிக் கன்றாமே
பரவைக் கடல்சுல வுலகினி லலகில் பவக்கடல் வீழ்ந்துழலும்
பயனில் லாவெனை வழிவழி யடிமை படைத்த பிரான்மகிழுங்
குரவக் குழவி துயின்ற கரங்கோடு கொட்டுக சப்பாணி
கொம்பு படைத்த சிலம்பு வனத்தவள் கொட்டுக சப்பாணி. (7)

194.
எங்கள் பிரானடி வைத்த கருத்த ரிடர்க்கடல் வீழாமே
யெறிதிரை படுமொரு குடிஞையின் மறைமட லெதிரல தேறாமே
வெங்கன றங்கு மடத்துறு தூமம் விரித்து முழங்காமே
மெச்சு குலச்சிறை நட்ட நுனைக்கழு வீணாப் போகாமே
அங்க மலம்பு சிலம்பு கலந்தமெல் லடியல தாகாமே
அரவொலி மலிசிர புரம்வரு குழவிக் கருண்ஞா னங்கலவாக்
கொங்கை சுரந்திழி பாலமு தூட்டினள் கொட்டுக சப்பாணி
கொம்பு படைத்த சிலம்பு வனத்தவள் கொட்டுக சப்பாணி. (8)

வேறு.

195.
முமலக்கருளற வொருவினர் மனனெனு மற்புந றச்சாரு
முளரிச் சததள விளமல ருளிவிள ரிப்பண் மிழற்றோனதப்
பமரக்குலமுடி யடிபடி தரமது மிக்க பெருக்கூறும்
பதிபச் சடையுடை மரைமடல் புரையடி வைப்ப வடுப்பார
மமர்பொற் கிரியென வளரிள முலைகள்ப ரித்தெழு பொற்பாவை
யமலச் சுடரிட மருவிய வொருகொடி புத்தமு தப்பூவை
கமலக் குயில்புணர் குயில்வர வருகுயில் கொட்டுக சப்பாணி
கரடக் கடமுமிழ் கடகரி வனமயில் கொட்டுக சப்பாணி. (9)

வேறு.

196.
மலையெனவளரிரு பாரப்பூண்முலை வனிதையர்குடைபனி நீர்கட்டாமரை
மலிமடுநடுவிரை வோடிப்பாயமி குத்தபெருக்காகி
வரிவளைவயிறுளை வாகிக்கான்மணி நிலவொளியலகினி லாவொப்பாகலின்
மலர்தருகயிரவ வூறற்றேறன்ம ணத்தபணைக்கோடித்
தலைமடையகடுவி ராவிக்கீறிமுண் மடலொடுசுலவிய தாழைத்தூர்முறி
தரவெறியலையொடு வேள்கைச்சாபவ னத்தைநனைத்தேறத்
தனியுருளிரதந டாவற்சார்பில னெழுபரிபசியமெய் கீறித்தோகைக
டழையவிணளவிய தாலக்கானைம டித்துமுறுக்காலை
அலையெறிபிரசமி டாவிற்பாய்பொழு திரிசிறுதுளிபிர வாகக்காவிரி
யலைபடவொழுகிய வோதைக்கேயுண டுக்கமெடுத்தோடி
யருகொருகுளனிள மேதிச்சூன்முகி னிரைவிழவெருவுவ ரானெட்டேடலி
ழயல்வைர்கதலிகள் சாயப்பாசுநி றத்தமடற்பூகக்
குலைமிடறொடிபட வானிற்போயதென் முதிர்பலனுதிர்தர மோதித்தாவொடு
குதிகொளும்வளமலி யானைக்காமயில் கொட்டுகசப்பாணி
குரைகழலடிபடி வாழ்விற்கூடிய மனனுடையவென்முடி மீதிற்சூடிய
குனிமதிவதிசடை யாருக்கோர்துணை கொட்டுகசப்பாணி. (10)

சப்பாணிப்பருவம் முற்றிற்று.

முத்தப்பருவம்.

197.
கொதிக்குங் கவைச்செங் கொழுந்தழற்கட் குளிக்கு மெழுகொத்துருகியறக் -
குழைந்து கசிந்து கரஞ்சிரமேற் குவித்துக் கொழுநாத் தழும்பேறத்,
துதிக்கு மடியா ருளக்கோயிற் றூண்டாவிளக்கே மெய்ஞ்ஞானச் -
சுடரே யமலச் சுடர்க்கொருவாத் துணையே யிணையின் மணியேய,
திதிக்கு மொருகா சிபற்கும்வருஞ் சிறுவர் மணிந்து கரங்கூப்புஞ் -
சிலந்தி பணிந்த நகரில்வளர் செழும்பூங்கொம்பே சிரபுரச்சந்,
ததிக்கு முலைப்பான் முன்னளித்த தாயே முத்தந் தருகவே -
சயிலத் தரசன் றவத்திலவ தரித்தாய் முத்தந் தருகவே. (1)

198.
கன்னே ருள்ளங் கரைந்துருகக் கரைவித் தொருபைந் தருவறைந்த
கருந்தா தணி யெனக்கசிவு காணக் கடையேன் றனைப்புரந்த
பொன்னே பளகற் றொளிகாலும் பொல்லா மணியே மெய்ஞ்ஞானப்
பொருளே யருளெண் ணாங்கறமும் பூத்த கொடியே பொற்கொம்பே
மின்னே மழலைப் பசுங்கிளியே வெள்ளோ திமமே கருங்குயிலே
வேம்பர் குடிக்கோர் செங்கரும்பே வெள்ளை நாவ லடிமுளைத்த
தன்னே ரிலிக்குத் துணைவருமென் றாயெ முத்தந் தருகவே
சயிலத் தரசன் றவத்திலவ தரித்தாய் முத்தந் தருகவே. (2)

199.
பொங்குங் கருணைப் புதுவெள்ளப் புணரியெழுந்து திரையெறிந்து
பொறிபோ நெறியி லுளஞ்செலித்தாப் புனித வடியர் குழாமடுக்க
வெங்கும் பரந்து பெருக்கேற நெனையாள் வாத வூரடிக
ளியற்செந் தமிழின் னமுதருந்து மெங்கோன் செவிகள் குளிர்தூங்கக்
கொங்குந் திணர்கொள் பொங்கர்வனக் குயினாண் பொருந்த மதர்நோக்கங்
கொள்ளா வதனங் கோட்டிநறுங் குதலை ததும்பப் பேசுநறாத்
தங்குங் குமுத மலர்வாயாற் றாயே முத்தந் தருகவே
தானப் பொருப்பு வனந்தழையத் தழைந்தாய் முத்தந் தருகவே. (3)

200.

போதார் நினது பொன்னடியிற் புரமூன் றெரித்த வெம்மிறைவன்
புலவி தீன்ப்பான் வணங்கமுடிப் பொலியுங் குடிலத் துகிர்க்கொடியுங்
காதார் வளையுங் கமடமுமேற் காணப் பரந்து பெருக்கெடுத்த
கங்கைப் புணரி நாறுமதிக் கலையைச் சிறிது கண்ணுற்று
மீதார் நாணுற் றவண்சிறிது மென்றாட் கமலஞ் சுருங்கமகிழ்
வேரிக் குமுத மலர்கடுப்ப வெள்ளி முறுவல் சிறிதரும்புந்
தாதார் தளவஞ் செறிவாயாற் றாயே முத்தந் தடுகவே
தானப் பொருப்பு வனந்தழையத் தழைந்தாய் முத்தந் தருகவே. (4)

201.
வண்ணங் கரிய முகிலுயிர்த்த மணிமுத் தம்மே நீயுயிர்த்த
மணிமுன் றளைந்து பிணிக்கவுரு மாறிப் போன் முத்தமலை
நண்ணம் புவரி முளைத்தமதி நளிர்முத் தொளிர்முத் தமிழ்க்குரிய
நால்வர்க் கசைக்கு மைந்தலையுன் னாதனடிக டேய்த்தமுத்தம்
வெண்ணந் துமிழ்வெண் முத்துநெடு வேயின் முத்து நின்மு னெச்சில்
விரவி யிருப்ப தவையார்க்கு வேண்டு மடியேம் விரும்பிடநின்
றண்ணங் குமுத மலர்வாயாற் றாயே முத்தந் தருகவே
தானப் பொருப்பு வனந்தழையத் தழைந்தாய் முத்தந் தருகவே. (5)

வேறு

202.
கையடி புடைத்தெழு மருப்புப் பொருப்புக் களிற்ைறைக் கிழித்து நெடிய-
கன்னலிற் கயலிற் கனன்றுநுத னாறுசெங் கட்டழலை யிட்டுமிடைவாய்ப்,
பையடியி னுனிவால் பொருந்திட முறுக்கிவெம் பாம்பைப் பிணித்துமடல்வாய்-
பரியவெறு ழிக்குறுங் சோட்டினை முறித்தும் பயக்குருகி னிறகொடுங்கார்,
மையடி படச்சடைக் காட்டினிடை போட்டுநின் மணவாள னென்னுமுக்கண்-
வானவனிவ் வண்ணம்வெண் டரளங்க ளுக்கொவ்வொர் மாசுறச் செய்தவனால்,
மெய்யடியர் நசையாகி வேண்டுவன வருளுவைநின் வீழிவாய் முத்தமருளே-
வெண்ணாவ லடிவளர் கரும்பினை விரும்புகொடி வீழிவாய் முத்தமருளே. (6)

203.
கடியவிழ் நுனைக்கண்ட கப்பசிய நெட்டிலைக் கண்டலம் போது மதுரக்-
கள்ளூறு புன்னைமல ருங்குறவை யந்தாலி கட்டுங் களச்சிறுமியர்,
முடிமிசை சுமந்துவிலை கூறிட விடைக்கிடை முறங்குழைய வாரிவாரி-
முருகுவிரி குழலருண வல்லிமுலை புல்லுமெழின் மொய்ம்பனதி யரசன்மனையில்,
வெடிபடு வராற்பட வுடற்றிருக நின்றலையில் வீசுவலை யுதையமதியம்-
விரவவமு தளவலாற் றேன்சா றெனச்சொலியம் மீன்சாறு பருகுங்கருஞ்,
செடியுடல ரிறை யருளு முத்தமரு ளம்மையொரு செம்பவள முத்தமருளே-
செம்புநா யகரிடம் விரும்புநா யகிநினது செம்பவள முத்த மருளே. (7)

204.
துடிகொண்ட கொடியிடை துவண்டுகுடி வாங்கச் சுரும்பர்பண் மிழற்றுங்கருஞ்
சுருளோதி யிமயமா தேவிகச் சிட்டுச் சுமந்தமுலை மந்திரத்திற்
கடிகொண்ட வெண்டரள நிலவொளி நிலாவெனக் காலுமொளி கிரண மென்னக்
கருதிச் சகோரம் புகுந்தது கடுப்பவொண் கவினாசி மோதியள்ளும்
படிகொண்ட திவலையென முத்தொன்று தூங்குமப் பைங்குமிழ்த் துண்ட மொளிர்சன்
பகமென நினைந்துவிழி வண்டுகடை பிறழப் பசுங்குதலை வாய்மடுத்துக்
குடிகொண்ட பாலருவி யுண்டசிறு பெண்பிள்ளை கொவ்வைவாய் முத்தமருளே
கொம்புவரை பம்புவன வம்பிகை விரும்பிநின் கொவ்வைவாய் முத்தமருளே. (8)

வேறு
205.
வெப்பவ னற்சினம் வைத்த தரக்கையு ரித்தவ தட்புனையா
விட்பர வப்படி மட்சுவை பெற்றக ணைப்புற னிட்டெழிலார்
தப்பின்ம திக்கலை நெக்குவி திர்த்தமு த்தையு குத்திடவோ
தப்புனல் வெட்கம் ருத்தையெ டுத்தயில் கட்செவி யைப்பிணியாத்
துப்புறழ் பொற்சடை யைச்சுமை கட்டியி றுக்கிமு டித்தொளிகா
றுத்திய ரக்கயி றிட்டுவ ளைத்தொரு பொற்கிரி யைச்சுமவா
முப்புர முற்றெறு முத்தரி டத்தவள் முத்தம ளித்தருளே
முத்திய ளித்திடு மத்திவ னத்தவள் முத்தம ளித்தருளே. (9)


வேறு.

206.
சிரபுரச்சந் ததிதழைக்க முலைகொடுத்த தலைவிமுத்தந் தருகவே
திருமகட்குங் கலைமகட்கு மெழில்சிறக்கு மிறைவிமுத்தந் தருகவே
தரணிமுற்றுந் தனிதழைக்க நனிபுரக்கு மமலைமுத்தந் தருகவே
சடைமுடித்தும் பியைவிருப்ப முடனுயிர்த்த விமலைமுத்தந் தருகவே
மரகதப்பொன் சிமயவெற்பு நிகர்தழைக்கும் வடிவிமுத்தந் தருகவே
மழைமுகிற்கண் டெழுபசுத்த மடமயிற்கு நிகரண் முத்தந் தருகவே
உரகபொற்கங் கணரிடத்து மருவுசத்தி கவுரிமுத்தந் தருகவே
உரலடிக்குஞ் சரவனத்து மெனதுளத்து முறைவள் முத்தந்தருகவே. (10)

முத்தப் பருவம் முற்றிற்று.

வாரானைப்பருவம்.

207.
செம்பொற் பிறங்கலை வலஞ்சூழு மமுதவெண் டிங்கள்செந் தீக்கருங்கட்
செவியஞ்சி யாம்பல்புக் கொளிகால்வ தெனநின்வாய்த் தெண்ணிலா முறுவல்பூப்பக்
கம்பக் களிற்றுரியர் கட்சுடரி லங்கியைக் கைத்தலையிருத்தி மதியைக்
கங்கைமுடி வைத்தல்போல் வையாமை கண்டுசெங் கதிர்நினது செவிபுகுந்தோர்
கும்பத்த னஞ்சடை யிடைக்கரந் தார்நினது கொழுநரென மொழிதலேய்ப்பக்
குழைத்தோ டிலங்கமணி மேகலை சிலம்பக் குழைந்திளங் கொடிதளாட
அம்பொற் சிலம்பலறி முரலவுர லடிவனத் தமரிளம் பிடிவருகவே
அகிலாண்ட முழுவது முயிர்த்துமெழின் முதிரமுதி ராதபூங் கொடிவருகவே. (1)

208.
வெஞ்சின முறுத்திப் பதங்கனொண் கிரணவாள் வீசித் துணிக்க வீந்து
வீந்தெழு மிராக்குல மிகற்களித் திடுபாக்கவ் விரிசுடர்க் குறவுபூண்ட
கஞ்சமலர் முன்பணிபு முறையிடுத லேய்ப்பவவிர் கனகலோ கத்தரிவைமார்
கழல்பெயர்க் குந்தொறு மளிககுல முழக்குதங் காரளக பாரமோதக்
குஞ்சர வதட்பரமர் கோடீர முடிகண்டு கொள்வான் விரும்பியதலாற்
கோலநடை பயில்வதுங் கற்பான் விரும்பியெழில் கூர்மென் சிறைப்பவளவாய்
அஞ்சநின் னடிதொடரும் வண்ணமுர லடிவனத் தமரிளம் பிடிவருகவே
அகலாண்ட முழுவது முயிர்த்துமெழின் முதிரமுதி ராதபூங் கொடிவருகவே. (2)

209.
எண்ணரிய செஞ்சடை முடங்கற் கலாநிலவொ டெறுழிவெண் நோடிணைப்ப
வெழும்வெள்ளி முழுமதி யெனக்கொடிய நெட்டரா வெட்டிக் கழுத்தைநீட்டி
வண்ணமிகு நின்சாயல் கண்டுள நடுங்கிமரை மலரோன் றலைப்புகுங்கால்
வாலினடி யுண்டசிற் றிடையுடைத் தண்ணுமைவிண் மண்செவிடு படவிரட்டத்
தண்ணமுத மதிமான் வெருண்டிட மருண்டுகைத் தனிமானெழுந்து துள்ளத்
தழையறு கெடுத்து நீ வாவெனுமு னின்விழி தனைக்கண் டெடுங்க வெனையாள்
அண்ணலிட மொருவியப் பயருமுர லடிவனத் தமரிளம் பிடிவருகவே
அகிலாண்ட முழுவதுமுயிர்த்துமெழின் முதிரமுதி ராதபூங் கொடிவருகவே. (3)

210.
கடியவிள ஞாயிறு கடுப்பவவிர் மணியணிக் கற்றையொளி சுற்றவற்றாக் -
சட்கடல் பிறந்தகரு ணைப்புணரி நீத்தமெழு கடன்மடை திறந்ததேய்ப்பக்,
கொடியன மருங்குலரு கித்துவண் டெய்த்துநனி குடிவாங்கி யேங்கவீங்குங் -
கொங்கைகள் சுமந்தமட வார்தனி வராருயிர்க் கொழுநர்விட் டென்பதால்வெண்,
பொடிவிரவு செம்புய மலைக்கட் கொலைத்தொழிற் பொங்குவெங் காரிபில்கும் -
புழைவா ளெயிற்றரவு பூண்டமுக் கட்டிரி புராந்தகக் கொழுநர்துணைகொண்,
டடியர்மிடி தீரவரு மமுதமுர லடிவனத் தமரிளம் பிடிவருகவே -
அகிலாண்ட முழுவது முயிர்த்துமெழின் முதிரமுதி ராதபூங் கொடிவருகவே. (4)

211.
கடக்குஞ்ச ரங்கடவு மொலியுமிளை யோர்நடவு கவனவாம் பரியமலையுங் -
கரியவிருள் சரியச் சிவந்துதய மெழுமெழு கடும்பரிக் கவரியேபோ,
னடக்குந் தடந்தே ருருட்டரவ முங்கடி நலங்கெழு மியத்தமாமு -
நளிர்முத் தலைக்கடலு மிடலுடைக் கருமஞ்சு நாணத் தடிக்கும்வேலை,
வடக்குங் குமக்கொங்கை மாதரெழி லானறு மலர்ப்பகழி யானைவென்ற -
மைந்தரோ டூடிச் சினந்தொளிர் மணிப்பணிகண் மறுகெறிய வெழுமோதையே,
யடக்குந் திருப்பொடி வளங்கொளுர லடிவனத் தமரிளம் பிடிவருகவே -
யகிலாண்ட முழுவது முயிர்த்துமெழின் முதிரமுதி ராத பூங்கொடி வருகவே. (5)

வேறு.

212.
பொன்னைப் புணரு மகன்மார்பப் புயலும் புயறோய் கடலுலகம்
பூத்த சுருதி நாத்தவனும் போற்றி போற்றி யெனத்தோற்றி
மின்னைப்பொருவு நுசுப்பொசிய விலங்கற் பொருவு முலைசுமந்த
மின்னார் மாயக் கடல்வீழ்ந்து வெறும்பொய் யுடலை வேட்டுவந்த
என்னைத் தனது வசமாக்கி யிறப்புப் பிறப்பென் கடல்வீழா
தெடுத்துத் தடுத்தாட் கொண்டவண்ட ரிரைக்கு மிதழி யிலம்பகத்தோர்
மன்னைத் தனது வசமாக்கு மயிலே வருக வருகவே
மதமா தங்க வனத்துமட மானே வருக வருகவே. (6)

213.
பருத்தா ரமுங்குங் குமுச்சேறும் பம்ப விணங்கிச் சுணங்கரும்பப்
பணைத்துத் தடித்துப் புடைத்தமுலைப் பாரஞ் சுமந்த கொடியசையத்
தருத்தா ழுலகு முதலான சகுல வுலகுஞ் சராசரமுஞ்
சற்றே யசைய வசைவில்லான் றானு மசையச் சுரர்க்கமுத
மருத்தா விடமுண் டுவந்தவந்த வையன் கரந்தொட் டிடச்சிலைமே
லலரிபுரையுஞ் சிலம்பவிர வலர்ந்த வடிபோன் முடிக்கேறு
மருத்தா மரைமென் மலர்பெயர்த்து மயிலே வருக வருகவே
மதமா தங்க வனத்துமட மானே வருக வருகவே. (7)

214.
வேலை யலம்பக் கருஞ்சுரும்பர் விளரி யலம்பி முளரிவிட்டு
மென்பூங் குமுத வீயலம்ப விரியஞ் சிறகர்க் குருகினங்கள்
காலை யலம்பப் பொலிகதிர்மேற் கடல்போய் விழவெள் ளியநிலவுக்
கற்றை பரப்பு மதியைமுக கமலங் காட்டி வாட்டியபூஞ்
சோலை யலம்பும் பைங்கிளியே சுகமாரின்பப் பெருங்கடலே
சால்லற் கரிய மறைபொருளே துளிக்கும் பிரத் துளபநறு
மாலை யலம்புங் குயிற்கிளைய மயிலே வருக வருகவே
மதமா தங்க வனத்துமட மானே வருக வருகவே (8)

215.
ஒன்றுந் திமிரக் கருளறவென் னுள்ளத் தொளிரு மொளிவிளக்கே
யுருகிப் பெருகுங் கண்ணீரென் னுததி யழுந்திப் பதைபதைத்துக்
கன்றுமடியா ருளத்தின்பங் கனியக் கனியு மெய்ஞ்ஞானக்
கனியே நனியா நவரசமுங் கலந்து காட்டுஞ் செழுந்தேனே
என்று புரையு மணிப்பொறைகொண் டெழும்பூங் கொம்பே யுரைத்தெடுக்கு
மின்பப் பெருக்கே முருக்கவிர்மெல் லிதழ்ப்பூங் குயிலே யிமைக்குமம்பொன்
மன்று ணடனத் தனையாட்டு மயிலே வருக வருகவே
மதமா தங்க வனத்துமட மானே வருக வருகவே. (9)

216.
பொன்னே வருக மூவுலகும் பூத்தாய் வருக நாயேனைப்
புரந்தாய் வருக வழுதியர்கோன் புதல்வீ வருக முகிற்கிளைய
மின்னே வருக மெய்ஞ்ஞான விளக்கே வருக மறைநான்கின்
விரிவே வருக பேரின்ப விளைவே வருக மிகுங்கருணை
யன்னே வருக வகநெகுவார்க் கணியே வருக வலர்மடவார்க்
கரசே வருக வுரைப்பருஞ்சீ ரம்மே வருக வழற்கரத்து
மன்னே ருடலம் பகிர்ந்தவிள மயிலேவருக வருகவே
மதமா தங்க வனத்துமட மானே வருக வருகவே. (10)

வாரானைப்பருவம் முற்றிற்று.

அம்புலிப்பருவம்.


217.
புன்னைவீ யார்தரு நெடுங்கோட்டு மோதிப் பொருங்கட லுதித்த லானும்
புன்சிறு மதிச்சிறு விதிக்குறவு பூண்டுபின் போதப் பகைத்தலானும்
பின்னைவாழ் செந்தா மரைக்கோயில் சாயவொளி பெறுமுகங் காட்டலானும்
பெட்பினிம மாதிரந் தவழவர லானும்வெம் பேய்க்கூத் குவந்தபெருமான்
மின்னையேய் செஞ்சடை முடிப்பொங்கு கங்கைமகள் வெருவர வுழக்கலானும்
வேம்பர்கள் குலம்புகழ வருதலா னுங்குலவி விளையாட நின்னையெங்கள்
அன்னைவா வென்றன டனக்கொப் பௌக்கருதி யம்புலீ யாடவாவே
அம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுட னம்புலீ யாடவாவே.

218.
தும்பியுரி போர்த்தவ ருடற்பாதி கொள்ளலாற் றுள்ளுமீ னுதரித்துத்
தோன்றலா லத்திரி தவத்திற் பிறத்தலாற் றுகடீர் குணம்பொலிதலால்
வெம்பிவரு செங்கதிர் கரந்திடப் பூணொளி விரித்தலாற் குமுறுசங்க
மேகத் துடன்றோன்றி வருதலாற் குமுதவாய்விரியவெண் ணகைகாட்டலாற்
பம்பிய சுரர்க்கமு தளித்தலால் வெள்ளிப் பரூஉமுத் துயிர்த்தலானூல்
பகரறிஞ னென்சே யளித்தலாற் றண்ணளி பயத்தலாற் கலைநிலாவெம்,
மம்பிகை நினக்குநிக ராகா திராள்குலவி யம்புலீ யாடவாவே
யம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுட னம்புலீ யாடவாவே. (2)

219.
இலைவந்த கமலந் திரட்டலல் லாதுதிரை யெற்று கமலந்திரட்டா
யெழிலாம்பல் பூத்துவரு வாயன்றி யொருமருப் பேராம்பல் பூத்துவாராய்,
கொலைவந்த நாகத்தி னுக்கமுத மல்லாது குளிர்நாக வமுதமாகாய்
கொம்பனைய ருக்காசை தரலன்றி யெண்மருங் குடிகொள்ளு மாசைதாராய்,
கலைவந்த நிறைமதி லெனப்பொலிவை யடியரைக் காக்குநிறை மதியுமுளதோ
கயிரவ நகைக்கவரு கருளொளி நினக்குமிக் காளிவளஃ தறியாய்கொலோ,
அலைவந்த நங்கைதொழு மலைவந்த மங்கையுட னம்புலீ யாடவாவே
அம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுட னம்புலீ யாடவாவே.(3)

220.
மத்தமத வானைமுலை மணமாதர் வாய்பேசு வசைகளேற் றுத்திரிந்தாய்
மாலெச்சி லைச்சுற்று முனியெச்சி றோன்றியொரு மாசுணத் தெச்சிலானாய்,
தத்தம துளப்படி சகம்பேச வாசான் றனக்கும் பிழைத்துநின்றாய்
தண்கலை நிலாவெனப் பலர்வெறுக் கக்கதிர்செல் சமயந் தெரிந்துவருவா,
யித்தனை களங்கநின் பாற்பொதிதல் கண்டுமோ ரேசிலா ரைக்கூவியாங்
கெங்கள் பெரு மாட்டிநினை வாவெனக் கூவிட லியற்றுமா தவமென்முனெம்,
அத்தர்கயி லாசரமு தீசர்மண வாட்டியுட னம்புலீ யாடவாவே
அம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுட னம்புலீ யாடவாவே. (4)

221.
நீரேற்ற தெண்கட லுயிர்த்தபரி வாற்சொரிக ணீரென்ன வாரமிறையா
நெட்டுடல் விடப்பட வராக்கதுவு மேயென நினைந்துவாய் விட்டலறவுஞ்,
சீரேற்ற வெண்சம்பு வின்கொம்பர் வைத்ததீந் தேனிறா லென்றுடனகர்ச்
சிறுபிடிக் குதவப் பெருங்களிறு பற்றவுந் தேவர்கள் பிழிந்தெறியவுங்
காரேற்ற ககனத் துதித்திராக் கதிரெனக் கலைவலோர் புகல்வதுண்மை
காட்டுவா னாட்குநாட் டேய்ந்தொழியு நின்னையுங் கருணையின் வரக்கூவினாள்,
ஆரேற்ற குடிலப் பிரான்மகிழ் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
அம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுட னம்புலீ யாடவாவே. (5)

222.
சுமையாக மாசுண முடித்தூங்கு குவலயஞ் சூழ்தெண் கடற்புகுதியேற்
றோகையிவ ளீன்றவொரு குழலிகதிர் வேற்படை சுவற்றுமென் றுளம்வெருவுவாய்,
கமையார் தவப்பொதியின் முனிவருவ னெனவுங் கலங்குவாய் விண்புகுதியேற்
கருணா லயற்குநிழ லீயும்வெண் ணாவலின் கவடுரிஞ் சத்தேய்குவா,
யிமையாத முக்கணப் பரனோக்கி னுஞ்சடை யினும்பொலிதி யேலிமைக்கு
மிவள்கரங் கால்பட வருந்துவை யிவண்சேர்வை யென்னினிற் கொப்புயார்நிற்,
கமையாத நலனென்று மின்றுதுன் றோதியுட னம்புலீ யாடவாவே
அம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுட னம்புலீ யாடவாவே. (6)

223.
பூவேறு நான்முகப் புத்தே டிலோத்தமை புணர்ந்தமா பாதகமும்வெண்
போதக நடாத்திச் சிலம்புகள் புலம்பவிறை போக்குங்க ணாக்கையற்குங்,
காவேறு மழைமுகில் கடுகுமெழில் வண்ணனென் கண்ணனுக் குங்கொள்பிரம -
கத்தியு மகற்றியவொ?ரித்தலத் தின்பெருமை கருதிலாய் போலுமோரேழ்,
மாவேறு தேர்க்கதிர் திறக்கநின் னொருதங்கை வாழ்மனை யடைக்குநீயிம் -
மாஞான பூமியிடை வருதியே னின்றேய்வு மாறலோர் பெரிதன்றுகாண்,
ஆவேறு கொடியுளார்க் காசையேற் றுங்கொடியோ டம்புலீ யாடவாவே -
அம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுட னம்புலீ யாடவாவே. (7)

224.
மனையார் நெடுங்கொடிக ளாலகல் விசும்புபடு மாசொருவு மித்தலனின்மெய்ம் -
மாசொருவ லரிதன்றொர் குழவியாற் கடல்விட்ட மாலினி துறங்கச் செயுஞ்,
சினையார் நறும்புன்னை நீழல்விரி நின்பெயர்த் தீம்புன லிராமுழுதும்விண் -
டெருவா றலைந்துகண் டுயிலாத நின்குறைவ தீர்ப்பதரி தன்றுதரணி,
தனையா யிரங்கதிர்கொ ளெனவளித் தருண்மூர்த்தி தப்புநின் கதிர்கணிறையத் -
தருவதரி தன்றிவை யுணர்ந்திமய மகளாயொர் சங்கமுகி றங்கையாயென்,
அனையாய் நுனைச்சூலி மனையாய்ப் பொலிந்தவளொ டம்புலீ யாடவாவே -
அம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுடை னம்புலீ ாடவாவே. (8)

225.
சேலையலை யெற்றுநெடு வேலையுல கத்தர்வெஞ் சிகையனற் கொப்புளிக்குஞ் -
செங்கட் கடைத்திறற் சிங்கப் பெயர்ச்செழுந் திங்கட் சிறக்குமொருநாட்,
காலைமுத லாகமறு காலையள வுங்கறைக் காலொரு மருப்புமுக்கட் -
கடவார ணப்பூசை யயராது கண்ணுறக் கடவதன் றென்றிகழ்வதும்,
வேலையடும் விழிமாதர் முறையிடும் போதுசிறு விதிதந்த கயரோகமும் -
விட்டொருவு ஞான்றின் றடுத்தது கயக்காவும் வெறுமையே னுள்ளமுந்தன்,
ஆலைய மெனக்குடி புகுந்தபெரு மாட்டியுட னம்புலீ யாடவாவே -
அம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுடை னம்புலீ யாடவாவே. (9)

226.
வாவென்று கூவுமுனம் வந்திலை யெனச்சினம் வருங்கொலென்றஞ்சி வஞ்சி -
வாண்மணிநி னகைநாணி யோசடை தனக்கொவா மாசுண மெனக்கருதியோ,
தாவென் றுலாயதென வணிமணிப் பணியொளி தழைப்பது தெரிந்தஞ்சியோ -
சற்றிருந் தனனென விலக்கின முனிந்திடிற் தடைசெய்வா ரெவரதன்றிச்,
சோவென்ற புன்னகையர் பின்னக வராவொன்று தூண்டினும் போதுமோதுந் -
துணையடி மறந்தனைகொ லினியெங்கண் மேற்பழி சொலக்கரு திடேலயிலமட்,
காவென்று கொண்டன்முன் வரப்பின்வரு பூங்கொம்பொ டம்புலீயாடவே -
அம்புவன மும்மைதரு சம்புவன வம்மையுடை னம்புலீ யாடவாவே. (10)

அம்புலிப்பருவம் முற்றிற்று.

அம்மானைப் பருவம்.

227.
விரிநறை யிதழ்ப்பொலி மரைகட் பெருக்கெழு விரைக்கட் குடித்தெழுந்த -
மென்சிறைப் பமரங்கண் மேற்கடி தழுக்காறு மேவிமற் றோர்கமலம் வாழ்,
வரியிறைத் தும்பிக டொடர்ந்தென முகத்தவிர்நின் வாள்விழி தொடர்ந்திடப்பொன் -
வளர்சடை முடிக்கூ னிலாப்புனையு மெம்பிரான் வளரிர சதப்பொருப்பும்,
பரியவுர லடியுடைப் பொன்னுலகு வாழ்வீர பட்டப் பொருப்பு நீலப் -
பைம்பொருப் பாகவொளி பம்பவெகி னஞ்சிகிப் பண்புறக் கருடிரண்டோர்,
அரியொளிதன் மேற்பாய்வ போலநீ லங்குயிற் றம்மானையாடியருளே -
அத்திவன வுத்தம ரிடத்தமர் பசுத்தகொடி யம்மானை யாடியருளே. (1)

228.
பங்கய மலர்ப்பொலியும் வெள்ளிமணி துள்ளிமீப் பாய்ந்ததுகடுப் பவமார்
பைந்தருவி லரிதுகொளு மென்றுநா வற்கனி பறித்தெறித லேய்ப் பவலைவெண்,
சங்கலர் பெருஞ்சலதி மங்கையிடை தங்கியொரு தண்சுடரெழுந்த தொப்பச் -
சலிலந் திரட்டியது விரியாது தெரியத் தடக்கைமாற் றுதனிகர்ப்பக்,
கொங்கலர் செழுங்கற் பரும்பா லசைத்தவொளி குலவுபந் தாடலுறழக் -
கூட்டவிரு ளோட்டுத றெரிந்திரவி வெப்பங்க் கொளப்பயனி லெனையஞ்சலென்,
அங்கையி னெடுத்துநித் திலமன்றி மற்றிலா வம்மானை யாடியருளே -
அத்திவன வுத்தம ரிடத்தமர் பசுத்தகொடி யம்மானை யாடியருளே. (2)

229.
பன்னக நெடும்பாய்க் கருஞ்சூன் முகிற்கதிர்ப் படலைமார் பத்துமணியும் -
பரியவுர லடிமுக் கடாத்தவள யானையான் பதிவதியு மணியும் வாங்கி,
மன்னருட் பொலிபுமுப் பத்துமுக் கோடிநப வாணர்மா நவர்யாரெனு மனநசை -
யுடைத்தெனிற் கொண்மின்கொண் மின்னென வழங்குதல் கடுப்பவன்னை,
நின்னயன விணையோடு மேல்சென்று கீழ்படிய நெடியகோ டீரப்பிரானெஞ்சக் -
கலன்றரு மணிக்குவை திரட்டியெறி நீர்மைபோன் மென்னடையைவெள்,
அன்னமறி யத்தனி நடக்குமயில செக்கர்மணி யம்மானை யாடியருளே -
அத்திவன வுத்தம ரிடத்தமர் பசுத்தகொடிய் யம்மானை யாடியருளே. (3)

230.
கம்பமிட றுங்கடக் கரியுரியை யங்கக் கபாயெனக் கண்டவெண்டோட் -
கண்ணுதல் சடாடவிச் செம்மைநிக ராயினுங் காற்சிவப் பானநீநம்,
வம்பலரு மாம்பற் சிவப்பிணை யெனப்பொறா வாய்க்குமிரு கைவரிற்கு -
மானமாட்டாயென் றெடுத்தெறிவ போலவும்வெள் வளைமருவு குணகடலெனுங்,
கொம்பனநி னம்மனை நினக்கருளம் மனையெனக் குலவிப் படர்ந்தபவளக் -
கொடியினை விலக்கியெழு செங்கதிர் கடுப்பவுங் குழையினை யடர்ந்துமோதும்,
அம்பன கருங்கட் பசுந்தோகை செம்பவள வம்மானை யாடியருளே -
அத்திவன வுத்தம ரிடத்தமர் பசுத்தகொடி யம்மானை யாடியருளே. (4)

231.
எங்கள்பெரு மானடி முடிக்காண்ப லெனவும்ப ரெட்டிமுட் டிப்பறந்து -
மிருநில மிடந்துநனி யெய்த்தவரை யேய்த்தன ரெனப்பல ருரைப்பமுளரி,
மங்கைநின தம்மனைகை பற்றமுடி யாமையால் வாளாவிருப்பமறைமின் -
வாக்குடைய ளாதலிற் கைப்படா முன்னமிது வவ்வினே னெனவுரைத்துச்,
செங்கையி லுறப்பற் றிடாதுவெங் காமமுஞ் சினமுமொரு வாவொருதவன் -
றௌிவந்த மாதவர்மு னாணல்போ னாணிய திருப்பெணுட னாண்கொள்ளநின்,
அங்கையி னுறத்தோ டசைந்தாட வளையாட வம்மாளை யாடியருளே -
அத்திவன வுத்தம ரிடத்தமர் பசுத்தகொடி யம்மானை யாடியருளே. (5)


வேறு.

232.
குரும்பை யனைய பொம்மன்முலைக் கொடிநுண் ணிடையார் கொழுநரொங்
கூடிக்கலவி யயர்ந்துவிரைக் கொழுநாண் மலர்மென் மாலையொடு
மிரும்பை யரவ முயிர்த்தசுட ரெறியு மணிமா லையும்வெறுப்புற்
றெறியச் சிதறி மறுகினிடை யிமைக்கு மணியைக் குரீஇயினங்கள்
சுரும்பை யகலாமலர்த்தருவிற் றொடுத்த சிறுகூட் டுய்க்கவெழுஞ்
சுடர்போய்த் தூய்மா னதவாவி துன்னுஞ் செழும்பா சடைக்கமல
அரும்பை மலர்த்தும் பெருஞ்சோணாட் டரசா டுகபொன் னம்மனையே
அமுதப் பெருமா னொடுவரும்பெண் ணமுதா டுகபொன் னம்மனையே. (6)

233.
கள்ள முளரிப் போதின்முகங் கருகிப் படுத்த செம்மல்கழீஇக்
கவினா ணறவ மலர்மேய்ந்து கடைவரய் குதட்டும் புனிற்றெருமை
வள்ள மனைய வாய்க்குமுத மடுவை யுழக்கி நெடுங்கோட்டு
வளர்தென் னருகுற் றுடற்றினவு மாற்ற வுரிஞ்ச வுதிர்பழமாத்
துள்ள வுருளொன் றுடைக்கவரி துளங்க வருணன் றலைமோதித்
துடித்து விழக்கூன் குலைசாய்த்துத் தோட்டுக் கதலி தலைசாய்க்கும்
அள்ளல் வயல்சேர் பெருஞ்சோணாட் டரசா டுகபொன் னம்மனையே
அமுதப் பெருமா னொடுவரும்பெண் ணமுதா டுகபொன் னம்மனையே. (7)

234.
பாரப் புறமுட் கனியிழிந்த பசுந்தேன் சாறு திரையெறிந்து
பரவை புரையப் பெருகிநெடும் படப்பை தொறும்புக் குலவமட
லீரக் கதலிக் குலமுமிடற் றேந்துங் குலைச்செங் காய்ப்பசிய
விளமென் கமுகு முதிர்சுவைநெட் டிலைக்கன் னலும்வா னெட்டியப்பால்
வீரக் குலிசப் படைக்கடவுள் வெய்ய தழல்கட் கடைக்காட்டும்
விறன்மா மடங்க லாதனத்து வியன்மண் டபத்துக் கலங்காரம்
ஆரப் பொலியும் பெருஞ்சோணாட் டரசா டுகபொன் னம்மனையே
அமுதப் பெருமா னொடுவரும்பெண் ணமுதா டுகபொன் னம்மனையே. (8)

235.
வாக்கும் பிரசச் செழுங்கொழுநாண் மலர்பெய் நறவ மலர்கொய்யும்
வண்மைத் தருமென் மலர்த்தேன்வாய் வைத்துக் குடித்துக் குமட்டளிகள்
காக்குந் தகரக் கரியகுழற் கடவுட் சாதி மகளிர்முலை
கழுவி யிழிந்து நெற்சூட்டுக் கழனி புகுந்து வண்டலிட்டுப்
போக்கும் வரவு நீக்குமலைப் புனற்செங் கமல முகுத்ததுகட்
பொதியுங் கரைத்துக் கால்வழிபோய்ப் புணரி நான்கு மூன்றையுமே
டாக்கும் பொழிலார் பெருஞ்சோணாட் டரசா டுகபொன் னம்மனையே
அமுதப் பெருமா னொடுவரும்பெண் ணமுதா டுகபொன் னம்மனையே. (9)

236.
புடைக்குங் களபக் குரும்பைமுலைப் பொலம்பூங் கொம்ப ரன்னமின்னார்
பொலியுங் கனக வெயில்பரப்பிப் புரவு மணிநின் றௌிர்மனைமீக்
கிடைக்குங் கடவுண் மயன்மதவெண் கிரிநா டமைத்துத் தௌிந்தமைத்த
கிளர்கொள் பளிக்கு வேதிகைமேற் கெழும விருந்தஞ் சனம்விழிவாட்
படைக்கு நறுஞ்சிந் துரநுதற்கும் பம்ப வெழுதி யெழுங்கமஞ்சூற் -
பசுஞ்செல்லளக முதறமணப் பலகுப் பையும்வீழ்ந் தொருவான்யா,
றடைக்கும் வளமைப் பெருஞ்சோணாட் டரசா டுகபொன் னம்மனையே -
அமுதப்பெருமா னொடு வரும்பெண் ணமுதா டுகபொன் னம்மனையே. (10)

அம்மானைப்பருவம் முற்றிற்று.

நீராடற்பருவம்.


237.
வேதமொரு நான்குநெடு நாட்டுருவி யுந்தெரிவில் மெய்ப்பரம் பொருள்வடிவமா -
விரிபுனன் மலிந்துள வெனச்செங் காங்கொடு வியப்பிற் றிரட்டிடாமே,
மாதவனென் முன்னவற் காமென்ன மூரிவளை வாரிக் குவித்திடாமே -
மழைமத மொழுக்குகர டக்கறை யடிக்கென்றொர் வண்கோடு நாடிடாமே,
தாதவி ழலங்கலர மாதர்மான் மதநாறு தண்டரள மாலைசூட்டித் -
தத்தங் குயத்தைநனி யெள்ளக் குரும்பைகொடு தாழைவா னோங்கிநிற்கும்,
போதக வனங்குடி புகுந்தமென் காமர்பிடி பொன்னிநீ ராடியருளே -
பொருமானை வைத்தகைப் பெருமானை மருவுமான் பொன்னிநீ ராடியருளே. (1)


238.
நிகரறு பிறங்கற் பிறந்துமந் தாகினி நெடுங்கவலை யுறவெழுந்து -
நிரைமலர்க் கொன்றைதா ளுந்திக் கயற்கொடிவி ணேசிக்க விபுலைநடவா,
மகரமுல வும்கடலி னுஞ்சென்று விளையாடி வனசநீ லங்குமுதமென் -
மலர்பூத்து நின்போ லிருந்தது மலாலம்மை வரவேற்று நின்றவதனாற்,
பகரரிய செங்கதிர்ப் புத்தேள் வலஞ்சூழ் பசும்பொற் பிறங்கலென்னப் -
பரவிவலம் வரவெண்டிகைத்தலை விழுங்கிவிண் பாய்ந்துபொலி யுங்கோபுரப்,
புகர்முக வனங்குடி புகுந்தமென் காமர்பிடி பொன்னிநீ ராடியருளே -
பொருமானை வைத்தகைப் பெருமானை மருவுமான் பொன்னிநீ ராடியருளே. (2)

239.
கயலார் மணிக்குவை கொழித்துச் சுழித்துவரு கங்கா நதிக்கு நினது -
காறோய வீறாய துன்மேனி முழுதுமென் கண்டோய யான்பெறுவதான்,
மயலார் மலப்பகை யலப்பிய தலைப்பொதி மலைக்குறு முனிக்குமின்று -
மகிழ்வெய்து மெனல்போ லிரைத்துத் திரைக்கைகொடு வம்மென வழைத்தவதனால்,
வயலார் மலர்த்தட னுழக்கிப் பழுக்குலை மரத்துத் தகட்டகட்டு -
வாளைதாய் வானதிச் சுறவொடுற வாகும்வள மதழ்மதக் கரடகும்பப்,
புயலார் வனங்குடி புகுந்தமென் காமர்பிடி பொன்னிநீ ராடியருளே -
பொருமானை வைத்தகைப் பெருமானை மருவுமான் பொன்னிநீ ராடியருளே. (3)

240.
முறைபுகும் வழக்கா றிழுக்காது கோலோச்சு முருகாத்தி யபயன்மகிழ -
முடியலவெள் ளென்பையே கொத்தார மிட்டவரை முத்தாரமிட்ட வதனான்,
மறைபுகு மணித்தாலர் முக்குறும் பற்றவர் மருந்துண வறாதவாயர் -
வாழ்த்துவது மன்றிநின் னொருகளி றுளத்துள்ளும் வழியொழுகி நிற்பதாற்செந் ...
நறைபுகு மலங்கலசை திண்டோளர் மந்தர நகும்பரூஉ மார்பமுருவு -
நகிற்கொடியர் மாடத் துகிற்கொடிகள் போய்வா னதிப்புனலை நக்குமொருகைப்,
பொறைபுகும் வனங்குடி புகுந்தமென் காமர்பிடி பொன்னிநீ ராடியருளே -
பொருமானை வைத்தகைப் பெருமானை மருவுமான் பொன்னிநீ ராடியருளே. (4)

241.
மழைமா நறுங்குழற் கடவுண்மட வார்புடை வளைந்துசூ ழப்பெருந்தா -
மரைமல ரிருந்தநறு விரைமல ரலங்கலிரு மாதர்நின் பாதமேத்தக்,
குழைமா நறுங்கலவை காசறைச் சாந்தினொடு குங்கும மளாயதோயங் -
குணகடல் கலந்ததி னெழும்பருதி சேப்பமென் கொம்பர்போ லிடைநுடங்கத்,
தழைமா வுறுங்கனி நறுங்கனி யுகுத்ததேஞ் சாறுபாய் நாறுநெடுவான் -
றடவிப் பசும்புரவி கடலிச் செலுங்கதிர்ச் சாமரை யெனப்படுங்கைப்,
புழைமா வனங்குடி புகுந்தமென் காமர்பிடி பொன்னிநீ ராடியருளே -
பொருமானை வைத்தகைப் பெருமானை மருவுமான் பொன்னிநீ ராடியருளே. (5)

வேறு.

242.
படைவிழி கண்டு மருண்டு வெருண்டு பதுங்கிக் கயலொழியப்
பணியணி கண்டங் கண்ட கமஞ்சூற் பணில முரன்றொழியக்
குடைதொறு மொருபிடி யிடையு மிலங்கு குழைக்கா தும்பாராக்
கொள்ளைக் கொடிகண்மென் வள்ளைக் கொடியொடு கூடி வணங்கல்கொளக்
கடைவிழி விடையவர் சடையிவர் மாதைக் காதும் போதுறுதல்
காட்டத் துப்பன வோட்டம் விளர்ப்பக் கருணைக் கொடிநின்றார்த்
தொடையலர் சென்னிச் சென்னிப் பொன்னித் துறைநீ ராடுகவே
தும்பி வனத்துறை யம்பிகை பொன்னித் துறைநீ ராடுகவே. (6)

243.
தூவி யனம்பல சூழ்தர நின்றவொர் தோகை மயில்போன்றுஞ்
சுடரு முடுக்க ணடுக்க ணடுத்தவொர் தூமதி யம்போன்றுங்
காவி நெடுங்க ணடுண்கு மருங்குற் கடவுட் சாதியின்வாழ்
கவின்மட வார்புடை சூழ மலர்ந்தொளிர் கருணைக் கொடிநின்றேர்
மேவிய துங்கக் கொங்கைகள் கண்டு மிகும்புற் புதமுடையா
விரியச் சுரிகுழல் சரியப் பிரிய மிகுங்கலை வல்லோர்செந்
நாவிரி பாவிரி பூவிரி காவிரி நன்னீ ராடுகவே
நாகா டவியமர் தோகாய் காவிரி நன்னீ ராடுகவே. (7)

244.
மாமயின் மணியுமிழ் சுரிவளை நின்கர வரிவளை போற்குளிற
மண்குழை யும்படி வருநீர்ப் பூங்குழை வண்குழை போலாடக்
காமர் திருக்கை யெனப்பஃ றிருக்கை கவந்த முழக்கல்செயக்
காஞ்சி யொதுங்குதல் போலத் தழைகெழு காஞ்சி யொதுங்கல்கொளத்
தேமல ரிதழென் வெண்ணகை யொளியாற் செம்மல ரிதழ்வௌிறச்
செறிகா ரோதி யெனப்புன லுண்டு செழுங்கா ரோதியுறப்
பூமக ணாமகள் கோமகள் பொன்னிப் புதுநீ ராடுகவே
பூவலர் சம்பு வனத்தவள் பொன்னிப் புதுநீ ராடுகவே. (8)

வேறு.

245.
சேற்று முளைத்த மரைமலர்த்துஞ் செங்கே ழிரவி வரவுகவாச்
செறியுஞ் சுடர்க்காஞ் சனநாட்டுத் தெய்வச் சாதி மகளிர்நறா
வூற்று மலர்க்கற் பகமாலை யுயர்தோட் கொழுந ருடன்பவனி
யுலவும் பொழுதம் மடமாத ருடுத்த நுண்டு சொருங்கநனை
வேற்று நிதம்ப முதலவுறுப் பெல்லா மௌிது வௌிப்படலா
லிருகண் புதைக்க வெடிவாளை யெறிநீர்த் திவலை யெழுப்புநல்லோர்
போற்றும் வளவர் நாட்டரசே பொன்னிப் புதுநீ ராடுகவே
புழைக்கை யடவி தழைக்கவந்தாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (9)

246.
காரார் கங்குற் பொங்கர்நெடுங் கமுகிற் றரளத் தாம்பசைத்துக்
காசு குயிற்று முடலூசல் கதுவப் பூட்டிக் கழல்வீரர்
வாரார் களபத் தனத்தியரை மருவி யிருந்தத் தாம்பசைக்க
வான மளவக் கமுகசைந்தவ் வானத் தருக்கொம் பசைப்பதனாற்
றாரார் குழனின் புகழ்பாடித் தழைந்தா டுவர்க ளெனநினைந்தத்
தருநாண் மலர்க ணனிபொழியத் தண்டேன் பெருகுங் கடிவடிவாட்
போரார் வளவர் நாட்டரசே பொன்னிப் புதுநீ ராடுகவே
புழைக்கை யடவி தழைக்கவந்தாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (10)

நீராடற்பருவம் முற்றிற்று.

பொன்னூசற்பருவம்.

247.
வெள்ளிக் கொழுங்கதிர் விரிக்கும்வயி ரக்கால் வெயிற்றொட நிறுத்தியதன்மீ
வித்துரும விட்டமிட் டொட்டியெட் டித்தரள வெண்டாம் பிசைத்தசைத்துத்
துள்ளித் தழைக்கவுமிழ் செங்கேழ் மணிப்பலகை தூக்கிமலர் மாலைவீக்கிச்
சொற்குயின் மலர்க்குயின் முதற்குயின் மொழிச்சியர்கள் சூழ்ந்துநின் றனரன்பர்நாத்
தெள்ளிக் கொழிக்குநய மதுரமொழி யொடுகொடு ஞ்சிறியேன்சொல் வறியபுன்சொற்
செவியிட்டு நின்றகரு ணைப்பூங் கொழுங்கொம்பு செம்புநா யகரிடைக்கட்
புள்ளித் தடந்தோ லுடுத்தாட வாட்டினவள் பொன்னூச லாடியருளே
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளே. (1)

248.
கொடிபூத்த துடியிடை துவண்டாட நறவுவிரி கோதைவண் டாடவண்டோல்
கொண்டாட வயிரச் செழுங்கால் பசப்புறு கொழுங்கால தாநின்மேனிக்
கடிபூத்த பச்சொளி மலர்ந்தாட வெண்ணகை கலந்தாட விருகுழையுலாங்
காதாட வூசலா டுந்தொறுவெம் மையன் கருத்துநின் றூசலாடப்
படிபூத்த வெள்ளப் பரப்பென விரைத்துப் பரந்தெழுங் கருணைவெள்ளப்
பரவையுட்பாடிக் கரங்குவித் தாடியழல் பட்டமெழு கொத்துருகும்வெண்,
பொடிபூத்த மேனியடி யாரைநன் காட்டுமயில் பொன்னூச லாடியருளே -
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளே. (2)

249.
மாவந்த மணிமுடி யனந்தநா மத்தரவின் வாருடற் றளர்வதென்ன -
வாங்குநுண் ணிடைபுவனம் யாவுமசை யத்துவள மதுரம் பழுத்தொழுகுசெந்,
நாவந்த சொற்கொடு பழிச்சுவர் பவக்கடலை நக்குகரு ணைக்கடலுள்விண் -
ணாடளவ வெண்டிரை யெழுந்தென வரம்பையர்கை நறுமலர்க் கவரிதுள்ளக்,
காவந்த தொல்புவி யியற்றவு நிறுத்தவுங் கட்கரிய தாயதுகளாக் -
காணவு மயக்கவு மளிக்கவுஞ் சற்றே கடைக்கணித் தேவலர்களாப்,
பூவந்த வொருவன்முத லைவரையு மாட்டுபவள் பொன்னூச லாடியருளே -
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளெ. (3)

250.
கூராடு மொள்ளொளி யயிற்படை பரித்துவெண் குறுநகை நிலாவிரித்துக் -
குதைவரிச் சிலைவா ளெடுத்துக் கடுத்தமர் குறித்திகழ் கறித்துவருசூற்,
காராடு செடியுடல் கடைக்கனற் றூங்குகட் கடையுடைப் படையவுணார் -
கவபூமி யுட்சிர கரந்தறி படப்பல கவந்தநின் றாடவன்னார்,
தாராடு மார்பந் திறந்தொழுகு செங்குருதி சலராசி யேழுமொன்றாத் -
தடவிப் புறப்புணரி யுங்கோப்ப வண்டத் தலப்பித்தி தத்திவிழவெம்,
போராடு மொருகுழவி தொட்டிறொட் டாட்டினவள் பொன்னூச லாடியருளே -
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளே. (4)

251.
தெள்ளார் பெருந்திரைத் தோன்றமுது கைப்பச் செழுங்குயி றிடைப்பகவிலுந் -
தெய்வதச் சைவச் செழும்பூங் கொழுங்கொம்பு செங்கே ழெறிக்குமணியாற்,
கள்ளார் மலர்த்தொடைய னாற்றிச் சமைத்தபல கைக்கணூற் றாடுதோற்றங் -
கதிர்மண்ட லம்புக்க வமுதமய மானதண் கதிர்மண்ட லத்தையேய்ப்ப,
நள்ளா ரெனுஞ்சமணர் தழையாது குழையாது நட்டதரு வேறமடலோர் -
நதியேற வுயிர்கள்சிவ கதியேற மதியேற நகிலேறு பான்மராளப்,
புள்ளார் புனற்புகலி வள்ளற் கருத்தினவள் பொன்னூச லாடியருளே -
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளே. (5)

252.
தங்கும் பெருங்குரற் கொண்டலைத் தாங்குமின் றண்டலைப் பசியபூகத் -
தருவிணை நடுப்படுங் கவிழிணர்ச் சூதமென் சந்தனக் காலரும்ப,
வெங்குங் கொழுந் தழற் செந்நிற மரும்பிய தெனத்தளி ரரும்பநோக்கி -
யினிதுவந் தொருகுழை யிருந்தசைந் தாடுமொ ரிளங்கருங் குயில்கடுப்பச்,
செங்குங் குமச்சே றளாவிய குயப்பொறைச் சிற்றிடை நுடங்கநெற்றிச் -
செங்கட் கருங்களச் செக்கர்வா னுட்களி சிறந்திடக் கருணைவெள்ளம்,
பொங்கும் படிக்கினி துலாவுங் கலாபமயில் பொன்னூச லாடியருளே -
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளே. (6)

253.
தாதார் கடுக்கையணி யெம்பிரா னபவாணர் தம்பிரான் முடியன்றுபூந் -
தாமரை யிடத்தன்முழு விண்ணாளி முதலோர் தரித்தமணி முடிகளன்னா
ராதார நீயென வணங்கினார் கொம்மைமுலை யம்மைபொன் னூசலையுகைத்
தாடுமம யத்துநி னனிச்சமலர் நச்சடிக ளம்முடிக ளிற்படாமே,
காதார் குழைத்தோ டிளம்பருதி பொலியவொண் கமலமுக மலரநாசிக்
கவின்முத்த நிலவுமிழ வாயாம்பன் மலரக் கரந்திரு சுடர்க்குமஞ்சிப்
போதார் குழற்கருட் கற்றைசுவல் சுற்றிடப் பொன்னூச லாடியருளே
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளே. (7)

254.
பண்ணியற் கும்பிழை யளித்தினிய தெள்விளிப் பாண்முரலும் வரிமிடற்றுப்
பைஞ்சிறை யளிக்குல முழக்கவர மாதர்கைப் பங்கயம் பொழிமலர்நறாக்
கண்ணியிற் சூழக் கிடப்பதென் னம்மைநின் கழன்மென்மை கவர்தலேய்ப்பக்
கயல்பசிய வள்ளையொடு முட்டிமீண் டாலெனக் கண்குழையை முட்டிமீள
வெண்ணில்பொற் பூவின மிருப்பமூ டித்திறந் திகுளையர் மனைக்கு நாளு
மின்னா விழைக்கின்ற துன்னியஞ் செங்கர விதழ்க்கமல மலர்கொடெங்கள்
புண்ணியர் திருக்கண் புதைத்துத் திறந்தபெண் பொன்னூச லாடியருளே
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியடிளே. (8)

255.
குரவுகமழ் குழலூச லாடுமெழி னோக்கிமுக் குடுமிப் படைக்கை யெம்மான்
கோலச் சடாமுடி துளக்கக் கலங்கிக் குதித்தோடு மதுபொழுதரா
விரவுகர முந்தனி விதிர்த்திட வதிற்பதியும் வெண்டலை யிமைக்கவிமையா
விழியாள னீத்தல்கண் டெனைநகைக் கின்றதென விரிபகீ ரதியுணாண
விரவுமதி தவழிமய வரைமக ளெனப்பிறந் தெப்பொருப் புங்கைக்கொளா
தெள்ளுதலில் வெள்ளிமலை கனகமலை மகிழ்நர்க்கு மேனைமா மலைகள்யாவும்
புரவுமணி யனவிளைய மைந்தற்கு மீந்தபெண் பொன்னூச லாடியருளே
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளே. (9)

256.
வழியுநற வாறுபட் டறுகா லுழக்கமலர் மாலைபுனை சீறடியமா
மணிநூ புரம்புலம் புஞ்சிலம் புங்கட்டு மறுகிடைச் சேந்தபட்டுஞ்
சுழியமுவ ரெழுகழிய சலதிவயின் வருமணி தொடுத்தமணி மேகலையும்விற்
றோன்றொட்டி யாணமுந் தொகையில்செங் கதிரெனச் சுடராதனப்பணிகளுங்
கழியுமொளி யுமிழ்வயிர வளைபரித் தடியார் கலக்கநீக் கபயவரதக்
கையுமொண் டரளமணி நாசியு மணிக்குழைக் காதுமிரு கண்ணுமருளே
பொழியுமலர் முகமும்வடி வழகுபொலி தரவம்மை பொன்னூச லாடியருளே
பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளே. (10)

பொன்னூசற்பருவம் முற்றிற்று.

அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ் முற்றிற்று.


This web page was first put up on 2 sept 2003
Please send your comments and corrections to the
Webmaster(s) of this site