கோவை செட்டிபாளையம்
மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது
கார்போலும் மேனியனுங் கஞ்சமலர்ப் புங்கவனும் பார்கீண்டும் விண்பறந்தும் பன்னெடுநாள் - ஆர்வமுடன் தேடி வருந்தித் திரிந்துந் தெரியாமல் நீடுசுட ராவுயர நின்றருள்வோன் - பீடுடைய தக்கன் சிரத்தைத் தகர்த்துத் தகர்ச்சிரத்தை மிக்கத் திருத்தும் விறலாளன் - இக்குதனுக் காமாரி சூலதரன் காரிலகு கந்தரத்தன் தீமைப் புரத்தைச் சிரித்தெரித்த - கோமான் விடையன் நிருத்தமிடு மெய்யன் அலகைப் படையன் உமைக்குப் பதியான் - முடிவிலாச் சங்கரன்வெண் ணீற்றன் சதாசிவன்கங் காளனெரி தங்குங் கரத்தன் சபாபதியன் - கொங்கவிழும் கூவிளமார் கங்கைமதி கோளரவு தும்பைகொன்றைப் பூவறுகு சூடும் புரிசடையான் - காவியும்வெங் காலுஞ்செந் தாமரையும் கார்விடமுஞ் சாகரமும் வேலுங் கருவிளமும் மீனமும் - நீலவண்டும் மானுமம்பும் மாவடுவும் வாளுமொப்பற் றேயகன்று தானே யிரண்டுஞ் சரியாகி - வானுலகில் மண்ணுலகில் உற்பவித்து வாழும் உயிர்க்கெல்லாம் எண்ணில் அருளளித்தும் இன்புற்ற - கண்ணிணைசேர் | 10 | பேதை மரகதமாம் பெண்ணைத்தன் மெய்யிலொரு பாதியிலே வைத்துகந்த பட்டீசன் - தீதணுகாப் பேரைநகர் வாழும் பெருமான்றன் மெய்யழகோர் காரணமாய் உன்னிடத்தே காணுதலுஞ் - சீரிலகு கண்ணாடியின் சிறப்பு சுந்தரங்கள் எல்லாம் தொகுப்பில் ஒருவடிவாய்ச் சுந்தரரைக் காட்டும் தொழிலாடி - அந்தரத்தில் அம்புவியில் உள்ளபொருள் அத்தனையு நீயாடிக் கம்பிதஞ்செய் வித்திடுவாய் கஞ்சனமே - கொம்பனையார் வித்துருமப் பொற்றரள மிக்கபணி பெற்றிடினு மத்தவளை யுற்றிருப்பா யத்தமே - முத்தநகை மானார் கபோல வளத்துவமை பார்க்கிலுனைத் தானே புகழுந் தருப்பணமே - மானேயார் நாட்டங்கம் நாற்றிசையும் நாடிலுமுன் னேயசைய மாட்டாமற் செய்தபடி மக்கலமே - நீட்டுபதி னாறுபசா ரஞ்சிவனுக்கு அன்பினொடு செய்யவதில் மாறிலா தேந்துமொளி வட்டமே - வீறுலகில் தன்னேரி லாதமன்னன் தானிருக்கும் ஆசனத்தின் முன்னே யிருக்கு முகுரமே - துன்னியிடும் பைந்தார் நகரிற் படுதிரவி யங்களினில் ஐந்தா மதில்முதற்கண் ணாடியே - முந்து | 20 | நயமான லோகத்தில் நாடுவாய் நற்கல் நயமாகில் அங்கே நடிப்பாய் - இயல்பான அப்பு வழியே அருஞ்சரக்குக் கொண்டணைவார் கப்பல் நடத்தியிடு கண்மணியே - துப்புறுவார் ஆசையினால் வேதாந்த ஆகமநூல் பார்க்குமவர் நாசியிலே நின்றுணர்த்து நாயகமே - பேசரிய நண்ணுபொறி ஐந்தினையு நாடவறி யாதவென்றன் கண்ணிணைக்கும் கண்மணியாய்க் காட்டிடுவாய் - விண்ணுமண்ணும் எட்டுத் திசையோடு இருந்தவொரு பத்தினையும் கட்டுத் தவிர்த்திடுவாய் காணாதே - மட்டாரும் நூலணிந்த மெய்வலத்தை நொய்தினிட மாக்கியிடப் பாலைவலப் பாலிருத்தும் பக்குவனே - சால இரசமுடன் சேர்ந்திருப்ப தென்றறியார் உன்னை நிரசமென்று சொல்லுவது நேரோ - பரவசமாய்க் கண்ணாடி யுண்டதனங் கண்ணாடி நில்லாமற் கண்ணாடி யேன்விரும்புங் கண்ணாடி - திண்ணமதாய் மின்னார்க்கும் ஆடவர்க்கும் வேண்டுபொருள் வெவ்வேறே சொன்னாலும் உன்னையே சூழ்ந்துகொண்டு - முன்னிருத்திப் பம்பரத்தை வென்றதனப் பைந்தொடியா ருங்கடல்சூழ் அம்புவியைத் தாங்கும் அரசருமே - தம்பல்லைக் | 30 | கெஞ்சிப் பணிந்திட்டுன் கீழ்ப்பட்டார் பாரிலுன்னை மிஞ்சினபேர் ஆருரையாய் மெல்லோனே - அஞ்சீர் அயனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை நிறையுஞ் சராசரங்கள் நீடும் தராதலத்தில் மறைநாலு வாயான மாண்பால் - நிலையாத கஞ்சனம்பேர் காட்டுகையாற் காதலித்தோர்க் கானதினாற் பஞ்சடிசேர் மானாரைப் பண்ணுறலாற் - கஞ்சமலர்த் தேவனே யென்று தெரியும் பெரியோரிப் பூவுலகில் உன்னையே போற்றிடுவார் - மேவிவரு அரிக்கும் கண்ணாடிக்கும் சிலேடை கஞ்சனங் கம்படலாற் கட்டுண் டமைந்ததினால் அஞ்சொலார் தன்கைவசம் ஆனதினால் - மிஞ்ச ஒருவடிவாய் நின்றமையால் உள்ளே தெரிய உருவெடுத்துக் காட்டுகையால் ஓதும் - பெருவானும் மேதினியும் எல்லாந்தன் மெய்யில் அடக்குகையால் ஆதிநா ராயணநீ யாமெனலாம் - கோதிலார் அரனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை பாகத் திருத்தலாற் பன்னீருந் தங்கினதாற் சோகத்தை யார்க்குந் துடைத்தலால் - மாகத்தைத் தந்துள்ளே காட்டுகையால் தக்கவருள் நாட்டுகையாற் சிந்துகே சம்முரித்துச் சேர்ந்தமையால் - முந்தவரும் அம்பலத்தில் ஆடியென்றும் ஆனதினால் பேரைநகர் நம்பனுக்கு நேரான நாயகமே - உம்பருக்கும் | 40 |
எட்டாமே மூவருக்கும் ஏமமாய் நின்றருளும் பட்டீசன் என்றுமனம் பாவிப்போன் - இட்டமுடன் ஆருறினுங் கைசேரு மத்தமே ரூபமதாய்ச் சேருவாய் கீழ்மேல் சிறப்பிலதாய்ப் - பாரிற் கணிகைமா தென்றுன்னைக் காணலாங் கண்ணே இணைபகரா வாழ்வே இனிதே - கணவருடன் ஊடுங் கனங்குழையார்க்கு உற்ற குணந்திருத்த ஆடவர்கை கூப்பி அடிபணிந்தால் - நாடாதே தோயார் கபோலத்தைத் தொட்டுமுத்தம் இட்டவுடன் வேயனைய தோளியர்கள் மேவுவது - மாயிலெல்லாம் ஆடியே யுன்றனெழி லாங்கபோ லங்கணினைக் கூடினதால் அன்றோ குணவானே - நாடியிடும் பெண்ணவர்கள் தங்குணமும் பெட்பும் பெருமையுநீ உண்ணயந்து கண்டிருப்பாய் உத்தமனே - கண்ணிணையாய் உன்னையே நட்புக்கு உறுதியென எண்ணியது முன்னமே வள்ளுவனார் மூதுரையிற் - சொன்ன நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பாம் - புவியிற் புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதாம் நட்பாங் கிழமை தருமாம் - நுணுக்கமாய்ச் | 50 | சொன்ன முறையின் படிநின் தொடர்புளதாற் பின்னை ஒருவரையும் பேசுவனோ - கன்னியர்கள் அந்தக் கரணம் அவருரைக்கு முன்னேநீ சிந்தை தனிலுணர்ந்து தேர்ந்திடுவாய் - பந்தமெலாம் கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்று மாறாநீர் வையக் கணியென்றுங் - கூறாமுன் ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளலென்றும் - வையமெலாம் போற்றுதிரு வள்ளுவனார் பூவுலகோர்க் கேயினிதாய்ச் சாற்றுபொரு ளின்பயனீ தானாமே - ஏற்றரிய ஆடியே என்றன் அருமை நலங்களெலாங் கூடி யிருந்ததிந்தக் கொற்றவனே - மூடியென்னப் பேய்க்குரைத்தால் உண்மையினைப் பேசமனம் நாணினதால் தாய்க்கொழித்த சூலுமுண்டோ தாரணியில் - சேய்க்குப் பசிவருத்தங் கண்டிடின்நல் பாலருத்தித் தாய்தன் சிசுவைப் புரக்குஞ் செயல்போல் - நிசமாக எந்தன் கருத்தில் இருந்த படிமுடித்துத் தந்திடுவாய் நல்ல தருப்பணமே - அந்தரங்கம் பட்டீசுவரப் பெருமான் திருத்தசாங்கம் சொல்லக்கேள் வேத சொரூபவா னந்தனுக்கு வில்லுருவ மாய்வளைந்து மேவலினாற் - பொல்லா | 60 | இடுக்கண் எவர்க்கும் இயற்றும் அரக்கன் எடுக்க இசைக்கும் இயல்பாற் - கடுத்துவரு மாருதத்தைப் போக்கிவிட மாட்டாமல் தன்முடியில் ஓர்முடியைச் சிந்தும் உரத்தினால் - வாரிதியில் வானவருந் தானவரும் வாசுகியி லேபிணித்துத் தானே கடைந்திடுமத் தானமையால் - வானளவு போமேரு மந்தரமும் போகுமோ ஒப்புக்கே ஆமோ எனவே அசைவற்றுப் - பூமியிலே அந்தரத்தோர் போற்ற அதிசயங்கள் சேருநிச மந்தரமதாம் வௌ;ளி மலையினான் - பந்தவினை பிந்திடவே செய்யும் பிரயாகை யாமெனவே வந்துலவு நற்காஞ்சி மாநதியான் - சந்ததமுந் தண்டரளந் தங்குமொளிர் சங்குலவுங் கந்தமலர் வண்டுலவும் கொங்கு வளநாடன் - அண்டர்புகழ் வாசவனும் நான்முகனும் மாயவனும் மாமகிமை பேசரிய போதிவனப் பேரூரன் - ஆசையுடன் துன்றவரி வண்டினங்கள் துங்கநற வுண்டுகொஞ்சு மன்றல்நிறை கொன்றைமலர் மாலையான் - குன்றிடாப் போகமுறுஞ் சுந்தரர்க்குப் போயொளிக்குஞ் சாலிவயல் பாகமது காட்டுமிட பப்பரியான் - மாகடத்தின் | 70 | வீறுபடும் எண்டிசைசேர் வேழமிரு நான்கினையும் மாறுபடச் செய்யுமத வாரணத்தான் - நீறணிந்த அண்ணலைவந் திப்போர்க்கு அரும்பதந்தந் தோமெனவே விண்ணளந்து காட்டும் விடைக்கொடியான் - எண்ணரிதாய்க் காட்டுஞ் சராசரங்கள் காணுமிவை அத்தனையு மூட்டுவிப்போ மென்றறையு மும்முரசான் - காட்டிமறை செப்பும் இருவினையுஞ் செய்யு முறைபிறழா மப்பொசியு மாறாத வாணையினான் - ஒப்பிலதாம் பாகனைய தேமொழியம் பாமுனைகூர் வேல்விழிதன் பாகனெழில் பேரைவளர் பட்டீசன் - சோகமெனுங் கோதிலாக் காரைக்கால் அம்மை குடியிருக்கும் பாதனெழில் பேரைவளர் பட்டீசன் - ஓதரிய காலனுக்கோர் காலன் கரியினுரி போர்த்திடுகா பாலியெழில் பேரைவளர் பட்டீசன் - கோலமிகு நடராசர் பவனி மீனத் திரவிபுக விள்ளரிய உத்திரநாள் ஆன தினத்தில் அதிசயமாய் - வானுலவு போதிவளர் நீழல்தனில் பொன்றிகழு மன்றிலான் காதற் றிருநடனங் காட்டுதலுங் - கோதிலயன் மாலிந் திரன்கருடன் வானோருங் கின்னரரும் கோலமிகு கந்தருவர் கூறுதவத் - தாலுயர்ந்த | 80 | நாரதனே ஆதியாம் ஞான இருடிகளும் சேரவர சம்பலத்தே சென்றிறைஞ்சி - ஆர்வமுடன் எங்கள்மனக் கண்மணியே எங்கள் தவப்பயனே எங்கள் பவந்தொலைக்கும் எங்கோவே - சங்கரனே கங்கை முடிக்கணிந்த கண்ணுதலே போற்றிநிதம் மங்கை பிரியாத வாமத்தாய் - திங்களோடு ஆற்றைச் சடைக்கணிந்த அண்ணலே போற்றிதிரு நீற்றை அணிந்த நிமலவெனப் - போற்றியிடப் பூதலத்தோர் எல்லாம் புனிதநதி தோய்ந்துதங்கள் நீதி கரும நியமமுற்றி - நாதனடி கண்டிறைஞ்சிப் போற்றிசெய்து காமியமும் ஆணவமும் பண்டுவரு மாயையுமுப் பற்றுவிடக் - கண்டே அரகர என்றேதான் அன்புடன்கை கூப்பி அரகர என்றேநான் அண்டி - அரகனக மன்றிற் றிருநடஞ்செய் மங்கைபங்க னைத்தொழுதேன் குன்றனைய தோள்களுநற் குண்டலமுங் - கொன்றையணி செக்கர்ச் சடையுந் திருநுதலுஞ் செங்கரமும் மிக்கபணி பூண்டிருந்த மெய்யழகும் - ஒக்கவே கண்டுமனங் காதலித்துக் கண்குளிரச் சேவித்துக் கொண்டுநின்றேன் அப்பொழுது கூத்தாடும் - புண்டரிகப் | 90 | பாதத்திற் பூமாரி பத்தரருச் சித்திடவே வேதவொலி எங்கும் மிகவொலிப்ப - வீதியெலாந் துந்துபிக ளேமுழங்கச் சொல்லரிய பல்லியங்கள் இந்தநிலம் எல்லாம் இசைந்தார்ப்பப் - பைந்தொடிமின் பச்சைப்பெண் பாகன் பவனிவந்தான் பின்தொடர்ந்து நச்சுவிழி யாருடனே நான்போந்தேன் - பச்சிமத்து வீதியிலோர் பாதியிலே மேவுதலும் பச்சையுமை காதலினால் அங்கோர் கலகமிட்டு - நாதனுடன் ஊடித் திருக்கோயி லுட்புகுந்தாள் சூலதரன் ஓடித் திருப்ப உபாயமின்றி - வாடிமனங் கன்றினதைக் கண்டிருந்த காமன் சரந்தொடுத்தே இன்றுபழி தீர்ப்பன் எனவிசைந்தான் - குன்றவில்லி பாகம் பிரியாத பச்சைமயி லைப்பிரிந்த மோகக் கனல்குழித்து முன்போந்தான் - சோகமுறல் கண்டென்னைக் கண்டானே கையசைத்தான் புன்முறுவல் கொண்டான் புருவநெற்றி கோட்டினான் - வண்டுலவுங் கொன்றைமலர் மாலையிற்கை கொண்டெடுத்துக் காட்டினான் குன்றனைய தோளிற்கை கொண்டணைத்தான் - நின்றவெனைப் பாதாதி கேசமுதற் பார்த்தான் புறம்போந்தான் நீதான் எனது நிலைகுறித்தே - ஓதரிய | 100 | நாண மடமச்சம் நற்பயிர்ப்பு நான்கினையும் வீணிலே சூறைகொண்டு மேவிடுதல் - நீணிலத்தில் உன்னைப்போல் வாருளரோ ஒண்டொடியார் தங்கள்முன் என்னைமயல் செய்வதுனக்கு ஏற்குமோ - உன்னரிய அம்பலவா மாரனர சம்பலவா எந்தனுடல் அம்பளவா கத்தோணும் ஆசையினால் - நம்பும் உடையும் வளையும் உனக்கீந்தேன் உள்ள முடையும் வளையு முரித்தானே - அடியாள் அறைவதெலாங் கேட்டுங்கே ளாதவன்போற் போதல் முறைதானோ சொல்லாய் முதல்வா - சிறிதுநாள் உண்ணச்சோ றின்றி உடுக்கப் புடவையின்றி எண்ணிலகந் தோறும் இரக்குநாள் - நுண்ணிடையார் பிச்சையிட வந்தவர்க்கும் பேசரிய மாலுதவ நிச்சயமாய் கையறிவாய் நின்றனக்கு - உச்சவநா ளாகியொரு பெண்ணைவரும் அங்கசனம் புக்கிறை யாகக் கொடுத்தல் அறமாமோ - ஆகமதிற் பிச்சையிட வந்ததனப் பேதையர்க்கும் பேறுதரும் உச்சவத்தில் வந்துதொழும் ஒண்டொடிக்கும் - நிச்சயமா ஆசை கொடுக்கவென்றே ஆய்ந்தறிந்தா யாமென்றே ஏசிவிட்டேன் காதினிற்கொண்டு ஏகுதலும் - பாசவினை | 110 | நீக்கி அருள்தந்து நிட்டையினால் முன்சென்மப் பாக்கியத்தைத் தேர்ந்தறியப் பண்ணுவித்துத் - தாக்குபவ மாற்றுந் திருவா வடுதுறைநற் றேசிகன்றாள் போற்று முனிக்குழுவும் பூதலத்தே - தோற்றுந் தரும புரக்குருவின் தாள்பரவி நெஞ்சில் ஒருமைபெற நிற்பாரும் ஓங்கி - அருமையுறு சாந்தலிங்க மூர்த்தி சரணமலர் தான்துதித்துப் போந்த அடியார்கள் போற்றிசைத்துத் - தீந்தமிழில் மூவர் தமிழும் முதிர்ந்த பெருந்துறையார் தூவு தமிழுந் தொலையாத - ஆவலுடன் பண்ணோ டிசைத்திடலும் பாரிலெவ ரும்போற்றுந் தண்ணார்சொல் ஞானசிவாச் சாரியர்தான் - எண்ணரிய வேதம் உரைத்திடவும் மேலோன் அதுவுமொரு காதிலே கேட்டகன்றான் காசினியில் - தீதகலும் கோயில்முன் னேநின்றான் கொம்பனைக்குத் தூதுவிட்டான் ஆயிழையும் ஊடல்தவிர்ந் தங்குவந்து - தூயவனைப் பாதம் பணிந்தாள் பதியும் எடுத்தணைத்துக் காதலுடன் போந்து கனகசபை - ஓதரிய ஆசனத்தில் வீற்றிருந்தான் நான்சென் றடிபணிந்துன் ஆசைவலைக் கென்னை அகப்படுத்திப் - பாசமிகு | 120 | மாலையிட்டாய் கொன்றைமலர் மாலையிட வேநினைந்து மாலைதனில் என்மனைக்கு வாவென்று - சாலவே கண்ணாரக் கையாலே காட்டினேன் சாடையெலாங் கண்ணாலே கண்டான் கழல்பணிந்தேன் - பண்ணார்சொல் மாதருடன் கோபுரத்து வாயிலின்முன் வந்திறைஞ்சிப் போதுமென என்மனைக்குப் போதலுமே - தேடியப்போ தாய் செய்கை வந்தனையே காணமிகு வந்தனையே செய்துவந்தேன் வந்தனையே என்று மடியிருத்திச் - சுந்தரஞ்சேர் செங்கரங்கள் தங்குவளை சிந்தினமெய் துன்றுகலை பங்கமுறு கின்றவென்றன் பைந்தொடிக்கு - யங்க மிகுந்து கனன்று வெதும்பு தனங்கள் சுகந்தம் உலர்ந்து துலங்கச் - சகந்தனிலே பெண்களிலை யோவென்றன் பெண்ணையார் பார்த்தனரோ கண்பட்ட தென்றுநுதற் காப்பிட்டாள் - தண்மலர்ப்பூஞ் சேக்கைத் துகள்போக்கிச் சேர்க்கவுடல் வேர்க்குமனல் தீய்க்கவென் தாய்க்குமனந் தேக்கிடவே - நோய்க்குப்பனி நீரிறைத்து வீசியுமின் னேரிழைக்குக் கண்ணூறு தீரிதெனக் காணிக்கை செப்பனிட்டாள் - சூரியன்தேர் மேலைப் புணரிதனில் மேவுதலுங் கீழ்த்திசைசேர் வேலைதனில் வட்டமதி மேற்றோன்ற - மாலையிலே | 130 | வந்தெனது மையல்தனை மாற்றிடவே வாரனென்றே அந்தரங்கஞ் சொல்லிவந்தார் ஆதலினால் - தந்தியுரி போர்த்துச் சபாபதியார் புன்முறுவல் கொண்டணையிற் சேர்த்த வருவான் திரமென்றே - பார்த்திருந்தேன் மன்மதன் முதலியோர் அப்போது மாரன் அளிநாண் கருப்புவில்முல் லைப்போது கொண்டுவந்தே ஆர்ப்பரித்தான் - எப்போதும் ஆண்மைசெய் பேதையர்பால் அல்லால்மற் றோரிடத்தில் தாண்மை வருமென்றே தலைப்பட்ட - கீண்மையனே உன்னையன்று கொன்றவன்பால் உன்வலிமை காட்டாதே என்னையின்று வென்றதனால் என்னபயன் - முன்னவன்றாள் காமாரி என்றொருபேர் காட்டுபட்டி நாதனைப்போய்ப் பூமாரி செய்திடுதல் பொற்பாமே - மாமதனாம் உன்றனுக்கும் ஆண்மை உளதாகு முன்னாலே என்றனுக்கு மெத்த இனிதாமே - என்று பிரித்துரைக்கக் கேட்டுப் பிரதிசொல்லா தென்னை வருத்தக் கரும்பை வளைத்துத் - திரித்தளிநாண் பூட்டிமலர் வாளியெலாம் பொற்குடத்தை வென்றுகரிக் கோட்டினையுங் காட்டிலே கூட்டிவிடப் - போட்டிசெயும் பந்துத் தனங்களிற்புண் பட்டிடவே எய்துவிட்டான் இந்துவுமப் புண்ணில் எரியைவிட்டான் - சந்தங் | 140 | கலந்துவரு தென்றலதற் காற்றாதே உள்ளங் குலைந்து மிகவருத்தங் கொண்டேன் - மெலிந்ததுடல் மெத்தப் பரவசமாய் வெய்துயிர்த்தேன் கண்ணிணைக்கு நித்திரையும் அற்றேன் நினைவற்றேன் - புத்தியெலாம் போதிமன்றி லேநடஞ்செய் புண்ணியன்பா லன்றியுறுந் தாதைதாய் சுற்றத்தார் தான்வேண்டேன் - மேதினியில் தூது உன்னைப்போல் தூதாங்கு உரைப்பாரோ உற்றுரைத்து நன்னயங்கள் காட்டி நவிலுதற்குக் - கன்னியரே தங்கள் வருத்தம் தவிர்ப்பாரல் லாலெனது கொங்கை வருத்தங் குறிப்பாரோ - பைங்கிளியும் அன்னமும்வண் டுங்குயிலும் அன்றிலுந்தா ராவுமயில் இன்ன பிறவும் எதிர்நின்று - சொன்னதையே சொல்லும் பிரிதுரைத்துச் சொல்லும் வகையுணர்ந்தது இல்லையலாது அங்கிரைகண்டு ஏகுமே - வல்லை தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூதாய் - சகத்தினிலே கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாந் தூதென்று - மிக்க கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலையே - படிமீதில் | 150 | வள்ளுவனார் சொன்னமொழி வாய்மையெல்லாம் நின்றனக்கே உள்ளதுதான் வேறார் உணர்ந்தவர்காண் - ஔ;ளியநாள் உத்திரத்தின் பின்வந் துறுநாள் உனதுபெயர் எத்திசையும் போற்ற இசைக்குமே - உத்திரமும் சித்திரையுங் கன்னியிடஞ் செம்பாதி நட்பிசையும் நித்தியமா இந்நாள் நிறைந்திருக்கும் - தத்தையெனும் பச்சையுமை யாள்மெய்யிற் பட்டீசன் சேர்ந்ததுவும் நிச்சையமாய் அத்தமன்றோ நீதியாய் - உச்சிதமாய் பட்சமுறும் உன்றனுக்கும் பட்டீச னார்தனக்கும் நட்புச் சரிதானே நன்றிசெயும் - மத்திமத்திற் சென்றுரைக்கில் அத்தனுக்குச் சித்தமதில் அத்தமுறும் நன்றென்றே நாடி நலனுரைப்பார் - இன்றேதான் சுத்த தருப்பணமே தூயவொளி வட்டமே அத்தமே கஞ்சனமே ஆடியே - எத்துபடி மக்கலமே பார்கை வழுத்து முகுரமே மிக்க வருத்தமெலாம் விள்ளுதற்குத் - தக்கவனே நீயன்றி வேறுலகில் நேயத்தார் இல்லையெங்கள் நாயகன்முன் நீசென்று நண்ணுவையேல் - ஆயிழையாள் பாலையரன் பால்காட்டிப் பானுவளித் தன்னைமதி போலவே காட்டியதார் போதியில்வாழ் - மேலவன்றான் | 160 | அன்றுசெயுஞ் சித்துவிளை யாடலைப்போ லேநீயும் இன்றுசெய்தாய் என்றுமிக இன்புறுவேன் - சென்றதனால் வெல்வாய் மருமாலை மேலவன்றான் தந்திடவே சொல்வாய்கண் ணாடியே தூது. | 162 |