http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
பதினொன்றாம் அத்தியாயம் - மண்டபம் விழுந்தது!
பன்னிரண்டாம் அத்தியாயம் - தூமகேது மறைந்தது!
பதிமூன்றாம் அத்தியாயம் - குந்தவை கேட்ட வரம்
பதினான்காம் அத்தியாயம் - வானதியின் சபதம்
பதினைந்தாம் அத்தியாயம் - கூரை மிதந்தது!
பதினாறாம் அத்தியாயம் - பூங்குழலி பாய்ந்தாள்!
பதினேழாம் அத்தியாயம் - யானை எறிந்தது!
பதினெட்டாம் அத்தியாயம் - ஏமாந்த யானைப் பாகன்
பத்தொன்பதாம் அத்தியாயம் - திருநல்லம்
இருபதாம் அத்தியாயம் - பறவைக் குஞ்சுகள்
பதினொன்றாம் அத்தியாயம்
மண்டபம் விழுந்தது!
மின்னல் வௌிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாசனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன் மந்திர வித்தைகளில் தேர்ந்தவன் என்று நந்தினி கூறியதுண்டு. அவருடைய சகோதரன் காலாந்தக கண்டன் இந்த மந்திரவாதியைப் பற்றியே தான் சந்தேகப்பட்டு அவரை எச்சரித்திருக்கிறான். இன்னொருவன், கடம்பூர் அரண்மனையில் வேலனாட்டம் ஆடிய தேவராளன். அவனைத் தாம் பார்த்தது அதுதானா முதல் தடவை? அவனுடைய உண்மைப் பெயர் என்ன?... அப்படியும் ஒரு வேளை இருக்க முடியும? நெடுங்காலத்துக்கு முன்பு அவரால் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்ட பரமேச்சுவரனா அவன்?... இருக்கட்டும்; இவர்கள் மேலும் என்ன பேசுகிறார்கள் கேட்கலாம்.
"ரவிதாசா! நீ இப்படித்தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். `நான் நெருங்கிவிட்டது' `யமன் நெருங்கிவிட்டான்' என்றெல்லாம் பிதற்றுகிறாய்? யமன் வந்து யார் யாரையோ கொண்டு போகிறான்! ஆனால் மூன்று வருஷங்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் சுந்தர சோழனைக் கொண்டு போவதாக இல்லை. அவனுடைய குமாரர்களையோ, யமன் நெருங்குவதற்கே அஞ்சுகிறான். ஈழநாட்டில் நான் இரண்டு பேரும் எத்தனையோ முயன்று பார்த்தோமே?"...
"அதனால் குற்றமில்லை. அப்பனே! யமதமராஜன் உன்னையும் என்னையும் விடப் புத்திசாலி! மூன்று பேரையும் ஒரே தினத்தில் கொண்டு போவதற்காக இத்தனை காலமும் காத்துக் கொண்டிருந்தான். அந்தத் தினம் நாளைக்கு வரப் போகிறது. நல்ல வேளையாக, நீயும் இங்கே வந்து சேர்ந்தாய்! சரியான யம தூதன் நீ! ஏன் இப்படி நடுங்குகிறாய்! கொள்ளிட வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டாயா? படகு கொண்டு வந்து வைத்திருக்கிறாய் அல்லவா?"
"வைத்திருக்கிறேன்.அனால் படகை வெள்ளமும் காற்றும் அடித்துக்கொண்டு போகாமல் காப்பாற்றுவது பெரும் பாடாய்ப் போய்விட்டது! உன்னை இத்தனை நேரம் எங்கெல்லாம் தேடுவது?... ரவிதாசா! ஏன் என் உடம்பு நடுங்குகிறது என்று கேட்டாய் அல்லவா? சற்று முன்னால், யமதர்மராஜனை நான் நேருக்கு நேர் பார்த்தேன். இல்லை, இல்லை; யமனுக்கு அண்ணனைப் பார்த்தேன். அதனால் சற்று உண்மையிலேயே பயந்து போய் விட்டேன்..."
"பரமேச்சுவரா! என்ன உளறுகிறாய்? யமனாவது, அவன் அண்ணனாவது? அவர்களைக் கண்டு உனக்கு என்ன பயம்? அவர்கள் அல்லவோ உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்?"
ரவிதாசன் மற்றவனைப் `பரமேச்சுவரன்' என்று அழைத்ததும் பழுவேட்டரையர் துணுக்குற்றார். தாம் சந்தேகப்பட்டது உண்மையாயிற்று! யமதர்மனுடைய அண்ணன் என்று அவன் குறிப்பிட்டது தம்மைத்தான் என்பதையும் அறிந்துகொண்டார். அவனை உடனே நெருங்கிச் சென்று கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொல்ல வேணுமென்று அவர் உள்ளமும் கைகளும் துடித்தன. மேலும் அவர்களுடைய பேச்சைக் கேட்கவேணும் என்ற ஆவலினால் பொறுமையாக இருந்தார். நந்தினியைப்பற்றி அவர்கள் இன்னும் பேச்சு எடுக்கவில்லை. சுந்தர சோழரின் குடும்பத்துக்கே நாளை யமன் வரப் போகிறான் என்று மந்திரவாதி கூறியதன் கருத்து என்ன? உண்மையிலேயே ஜோதிடம் பார்த்துச் சொல்கிறானா? இவனுடைய மந்திர சக்தியைப் பற்றி நந்தினி கூறியதெல்லாம் உண்மைதானோ? ஒரு வேளை இவன் கூறுகிறபடி தெய்வாதீனமாக நடந்துவிட்டால்?... தம்முடைய நோக்கம் நிறைவேறுவது எளிதாகப் போய் விடும்! சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது! ஆனால் இந்தப் பரமேச்சுவரன்?... இவனுக்கு என்ன இந்த விருயத்தில் கவலை? ஆம்; ஆம்; இருபது வருஷங்களுக்கு முன்னால் `சோழ குலத்தையே அழித்துவிடப் போகிறேன்' என்று சபதம் செய்துவிட்டுப் போனவன் அல்லவா இவன்?... ஆகா! தம்மைப் பற்றித்தான் அவன் ஏதோ பேசுகிறான்! என்ன சொல்லுகிறான் என்று கேட்கலாம்!
"நீ என்னிடம் சொல்லியிருந்தபடி இன்று காலையே இங்கு நான் வந்தேன். ஆனால் உன்னைக் காணவில்லை. காற்றிலும் மழையிலும் அடிபட்டு எங்கேயாவது சமீபத்தில் ஒதுங்கி இருக்கிறாயா என்று சுற்றுப்புறமெல்லாம் தேடி அலைந்தேன். கொள்ளிடத்து உடைப்புக்கு அருகில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அதில் யாரோ படுத்திருப்பதுபோலத் தோன்றியது. ஒரு வேளை நீதான் அசந்து தூங்குகிறாயோ என்று அருகில் போய்ப் பார்த்தேன்...யாரைப் பார்த்தேன் என்று நினைக்கிறாய்? சக்ஷாத் பெரிய பழுவேட்டரையனைத் தான்!..."
மந்திரவாதி, `ஹாஹாஹா' என்று உரத்துச் சிரித்தான். அதைக் கேட்ட வனத்தில் வாழும் பறவைகள் `கீறீச்' `கீறீச்' என்று சத்தமிட்டன. ஊமைக் கோட்ழூடான்கள் உறுமின.
"பழுவேட்டரையனைப் பார்த்தாயா? அல்லது அவனுடைய பிசாசைப் பார்த்தாயா?" என்று ரவிதாசன் கேட்டான்.
"இல்லை; பிசாசு இல்லை. குப்புறப்படுத்திருந்தவனைத் தொட்டுப் புரட்டிப் போட்டு முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தேன். ரவிதாசா! யமனுக்கு அண்ணன்கள் இரண்டு பேர் இருக்கமுடியுமா? பழுவேட்டரையனைப் போலவே, அதே முகம், அதே மீசை, அதே காய வடுக்கள்- இவற்றுடன் மனிதன் இருக்க முடியுமா?"
"நீ பார்த்தவன் பழுவேட்டரையன்தான்! சந்தேகமில்லை. நேற்று மாலை பழுவேட்டரையன் படகில் ஏறிக் கொள்ளிடத்தைத் தாண்டிக் கொண்டிருந்தான். கரையருகில் வந்தபோது படகு காற்றினால் கவிழ்ந்துவிட்டது. அவனுடைய பரிவாரங்களில் தப்பிப் பிழைத்துக் கரையேறியவர்கள் இப்போதுகூடக் கொள்ளிடக் கரையோரமாகப் பழுவேட்டரையனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.அவன் வெள்ளத்தில் மூழ்கிச் செத்துப் போயிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். உடைப்பு வரையில் போய்ப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பி வரும்போது பேசியதை நான் கேட்டேன். ஆகையால், நீ பார்த்தவன் பழுவேட்டரையனாகவே இருக்கக்கூடும். ஒரு வேளை அவனுடைய பிரேதத்தைப் பார்த்தாயோ, என்னமோ!"
"இல்லை, இல்லை. செத்துப்போயிருந்தால் கண் விழிகள் தெரியுமா? நான் புரட்டிப் பார்த்தவனுடைய கண்கள் நன்றாக மூடியிருந்தன. களைத்துப்போய்த் தூங்கிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது?...
"முட்டாளே! நீ என்ன செய்தாய்! அவனைச் சும்மா விட்டு விட்டு வந்தாயா? தலையிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டிருக்கக் கூடாதா?..."
"பழுவேட்டரையன் தலையைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் தலையிலே கல்லைப் போட்டால், கல்தான் உடைந்து தூள்தூளாகும்!"
"அப்படியானால், கொள்ளிடத்து உடைப்பு வெள்ளத்திலாவது அவனை இழுத்துவிட்டிருக்கலாமே?"
"நான்தான் சொன்னேனே? அவனைக் கண்டதும் எனக்கு யமனுடைய அண்ணனைக் கண்டதுபோல் ஆகிவிட்டது. கடம்பூரில் அவன் முன்னால் வேலனாட்டம் ஆடியபோதுகூட என் நெஞ்சு `திக், திக்' என்று அடித்துக் கொண்டுதானிருந்தது. என்னை அவன் அடையாளங் கண்டு கொண்டானானால்..."
"அதை நினைத்து, இப்போது எதற்கு நடுங்குகிறாய்?"
"அவன் உயிரோடிருக்கும் வரையில் எனக்குக் கொஞ்சம் திகிலாய்த்தானிருக்கும். நீ சொன்னபடி செய்யாமற் போனோமே, அவனை வெள்ளத்தில் புரட்டித் தள்ளாமல் வந்து விட்டோமே என்று கவலையாயிருக்கிறது..."
"ஒரு கவலையும் வேண்டாம். ஒரு விதத்தில் பெரிய பழுவேட்டரையன் உயிரோடிருப்பதே நல்லது. அப்போதுதான், சுந்தரசோழனும், அவனுடைய பிள்ளைகளும் இறந்து ஒழிந்த பிறகு சோழ நாட்டுச் சிற்றரசர்கள் இருபிரிவாய்ப் பிரிந்து நின்று சண்டையிடுவார்கள். பழுவேட்டரையர்களும் சம்புவரையர்களும் ஒரு பக்கத்திலும், கொடும்பாளூர் வேளானும் திருக்கோவலூர் மலையமானும் இன்னொரு பக்கத்திலும் இருந்து சண்டையிடுவார்கள். அது நம்முடைய நோக்கத்துக்கு மிக்க அநுகூலமாயிருக்கும். அவர்கள் தங்களுக்குள் சண்டையிடும்போது நாம் பாண்டிய நாட்டில் இரகசியமாகப் படை திரட்டிச் சேர்க்கலாம்..."
"ரவிதாசா! `அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்ற கதையாகப் பேசுகிறாய்! சுந்தர சோழனுக்கும் அவனுடைய இரு புதல்வர்களுக்கும் நாளைக்கு இறுதி நேர்ந்தால் அல்லவா நீ சொன்னபடி சோழநாட்டுத் தலைவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள்? மூன்று பேருக்கும் நாளைக்கே முடிவு வரும் என்பது என்ன நிச்சயம்? உனக்கு ஒரு செய்தி தெரியுமா?..."
"எதைச் சொல்லுகிறாய்?"
"நாகைப்பட்டினத்தில் அருள்மொழிவர்மன் உயிரோடிருக்கிறானாம்! மக்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவனே சோழ நாட்டின் சக்கரவர்த்தி ஆக வேண்டும் என்று ஆர்ப்பரிக்கிறார்களாம்! நீ கேள்விப்படாயா?"
ரவிதாசன் மறுபடியும் சிரித்துவிட்டு, "நான் கேள்விப் படவில்லை. எனக்கே அது தெரியும். அருள்மொழி வர்மனைப் புத்த விஹாரத்திலிருந்து வௌிப்படுத்தியது யார் என்று நினைக்கிறாய்? நம் ரேவதாசக் கிரமவித்தனுடைய மகள் ராக்கம்மாள்தான்! அவள்தான் படகோட்டி முருகய்யனுடைய மனைவி!" என்றான்.
"அதனால் என்ன? அருள்மொழிவர்மன் வௌிப்பட்டதனால் என்ன லாபம்? அவனை இனி எப்போதும் லட்சக் கணக்கான ஜனங்கள் அல்லவா சூழ்ந்து கொண்டிருப்பார்கள்? ஈழ நாட்டில் அவன் இரண்டு மூன்று பேருடன் இருந்தபோதே நம்முடைய முயற்சி பலிக்கவில்லையே" என்றான் தேவராளன்.
"அதுவும் நல்லதுதான் என்று சொன்னேனே? மூன்று பேருக்கும் ஒரே நாளில் யமன் வருவதற்கு இருக்கும்போது..."
"ரவிதாசா! லட்சம் பேருக்கு மத்தியில் உள்ள இளவரசனிடம் யமன் எப்படி நெருங்குவான்? அதை நீ சொல்லவில்லையே?"
"நெருங்குவான், அப்பனே நெருங்குவான்! யானைப் பாகனுடைய அங்குசத்தின் நுனியில் யமன் உட்கார்ந்திருப்பான்! சரியான சமயத்தில் இளவரசனுடைய உயிரை வாங்குவான்! பரமேச்சுவரா! சோழ நாட்டு மக்கள் இளவரசனை யானை மீது ஏற்றிவைத்து ஊர்வலம் விட்டுக் கொண்டு தஞ்சையை நோக்கி வருவார்கள். அந்த யானையை ஓட்டும் பாகனுக்கு வழியில் ஏதாவது ஆபத்து வந்துவிடும். அவனுடைய இடத்தில் நம் ரேவதாசக் கிரமவித்தன் யானைப் பாகனாக அமருவான்? அப்புறம் என்ன நடக்கும் என்பதை நீயே ஒருவாறு ஊகித்துக்கொள்!"
"ரவிதாசா! உன் புத்திக் கூர்மைக்கு இணை இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். கிரமவித்தன் எடுத்த காரியத்தை முடிப்பான் என்று நாம் நம்பியிருக்கலாம். சுந்தரசோழன் விஷயம் என்ன? அவனுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்?" என்றான் தேவராளன்.
"பழுவேட்டரையனுடைய கருவூல நிலவரையில் சோமன் சாம்பவனை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். கையில் வேலாயுதத்துடன் விட்டு வந்திருக்கிறேன். அங்கேயிருந்து சுந்தர சோழன் அரண்மனைக்குச் சுரங்கப் பாதை போகிறது. சுந்தர சோழன் படுத்திருக்கும் இடத்தையே சோமன் சாம்பவனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.இரண்டு கண்ணும் தெரியாத குருடன் கூட நான் குறிப்பிட்ட இடத்தில் நின்று வேலை எறிந்து சுந்தர சோழனைக் கொன்று விடலாம். சோமன் சாம்பவனை `அவசரப் படாதே; நாளை வரையில் பொறுத்துக் கொண்டிரு!' என்று எச்சரித்து விட்டு வந்திருக்கிறேன்..."
"அது எதற்காக? சமயம் நேரும்போது காரியத்தை முடிப்பதல்லவா நல்லது?"
"முட்டாள்! சுந்தரசோழன் முன்னதாகக் கொலை யுண்டால், அந்தச் செய்தி கேட்டதும் அவன் குமாரர்கள் ஜாக்கிரதையாகி விடமாட்டார்களா? அந்த நோயாளிக் கிழவன் இறந்துதான் என்ன உபயோகம்? அது இருக்கட்டும்; நீ என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்? கடம்பூர் மாளிகையில் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள்? அங்கே நாளை இரவு நடக்கப் போகிற காரியம் அல்லவா எல்லாவற்றையும் விட முக்கியமானது?"
"கடம்பூரில் எல்லாம் கோலாகலமாகத்தான் இருந்து வருகிறது. கலியாணப் பேச்சும், காதல் நாடகங்களுமாயிருக்கின்றன. நீ என்னமோ அந்தப் பழுவூர் ராணியை நம்பியிருப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை..."
"பழுவூர் ராணியா அவள்? பாண்டிமாதேவி என்று சொல்! வீர பாண்டியர் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னால் அவளைத் தம் பட்ட மகிஷியாக்கிக் கொண்டதை மறந்து விட்டாயா? வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா? ஒரு வாரத்துக்கு முன்னால் இதே இடத்தில் அவள் பாண்டிய குமாரன் கையிலிருந்து பாண்டிய குலத்து வீரவாளைப் பெற்றுக் கொள்ளவில்லையா...?"
"ஆமாம், ஆமாம்! ஆனால் நேற்று மாலை உன் பாண்டிமாதேவி வீர நாராயண ஏரியில் உல்லாசப் படகு யாத்திரை செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீ பார்த்திருக்க வேண்டும்..."
"உல்லாசமாயிராமல் பின் எப்படியிருக்க வேண்டும் என்கிறாய்? மனத்தில் உள்ளதை மறைத்து வைக்கும் வித்தையை நந்தினியைப் போல் கற்றிருப்பவர் யாரும் கிடையாது. இல்லாவிட்டால், பழுவேட்டரையரின் அரண்மனையில் மூன்று வருரும் காலந் தள்ள முடியுமா? அங்கே இருந்தபடி நம்முடைய காரியங்களுக்கு இவ்வளவு உதவிதான் செய்திருக்க முடியுமா? ஆமாம், பழுவேட்டரையனை நீ சற்று முன் கொள்ளிடக்கரைத் துர்க்கையம்மன் கோவிலில் பார்த்ததாகக் கூறினாயே? அவனை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். பழுவேட்டரையன் எப்போது கடம்பூரிலிருந்து புறப்பட்டான்? ஏன்?..."
"ஏன் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. மதுராந்தகத் தேவனைக் கடம்பூருக்கு அழைத்து வரப் புறப்பட்டதாகச் சொன்னார்கள். நேற்றுக்காலை பழுவேட்டரையன் கிளம்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு இளவரசர்கள் வேட்டையாடச் சென்றார்கள். இளவரசிமார்கள் வீர நாராயண ஏரிக்கு ஜலக்கிரீடை செய்யச் சென்றார்கள். இளவரசர்களும் இளவரசிகளும் திரும்பி வந்த குதூகலமான காட்சியை நீ பார்த்திருந்தாயானால் இவ்வளவு நம்பிக்கையோடு பேசமாட்டாய்!..."
"அதைப் பற்றி நீ கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். பழுவேட்டரையனைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததிலிருந்தே பாண்டிமாதேவியின் மனதை அறிந்து கொள்ளலாமே?"
"பெண்களின் மனதை யாரால் அறியமுடியும்? அந்தக் கிழவனை ஊருக்கு அனுப்பியது பழிவாங்கும் நோக்கத்துக்காகவும் இருக்கலாம், காதல் நாடகம் நடத்துவதற்காகவும் இருக்கலாம்..."
"என்ன உளறுகிறாய், பரமேச்சுவரா! நந்தினி அந்தப் பழைய கதையை அடியோடு மறந்துவிட்டாள். கரிகாலனை அவள் இப்போது விஷம்போலத் துவேஷிக்கிறாள்!"
"கரிகாலனைப்பற்றி நான் சொல்லவில்லை.அவனுடைய தூதன் வந்தியத்தேவனைப் பற்றிச் சொல்லுகிறேன். இரண்டு மூன்று தடவை நந்தினி அவனைத் தப்பிச் செல்லும்படி விட்டதை நீ மறந்துவிட்டாயா?"
மந்திரவாதி கலகலவென்று சிரித்துவிட்டு, "ஆமாம்; வந்தியத்தேவன் எதற்காகப் பிழைத்திருக்கிறான் என்பது சீக்கிரத்திலேயே தெரியும். அது தெரியும்போது நீ மட்டுந்தான் ஆச்சரியப்படுவாய் என்று எண்ணாதே! இன்னும் ரொம்பப் பேர் ஆச்சரியப்படுவார்கள்! முக்கியமாக, சுந்தர சோழரின் செல்வக்குமாரி குந்தவை ஆச்சரியப்படுவாள். அவள் எந்தச் சுகுமார வாலிபனுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறாளோ, அவனே அவளுடைய தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் என்று அறிந்தால் ஆச்சரியப்படமாட்டாளா!" என்றான்.
"என்ன செல்கிறாய், ரவிதாசா! உண்மையாகவே வந்தியத்தேவனா கரிகாலனைக் கொல்லப் போகிறான்? அவன் நம்மோடும் சேர்ந்துவிட்டானா, என்ன?"
"அதெல்லாம் இப்போது கேட்காதே! கரிகாலனைக் கொல்லும் கை யாருடைய கையாக இருந்தால் என்ன? பாண்டிய குலத்து மீன் சின்னம் பொறித்த வீரவாள் அவனைக் கொல்லப் போகிறது. அவனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் தலைமீது விழப்போகிறது! நம்முடைய ராணியின் சாமர்த்தியத்தைப் பற்றி இப்போது என்ன சொல்லுகிறாய்?"
"நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும். பிற்பாடு கேள், சொல்லுகிறேன்".
"வேறு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், கரிகாலனுடைய ஆவி நாளை இரவுக்குள் பிரிவது நிச்சயம். நந்தினி ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றியே தீருவாள். நம்முடைய பொறுப்பையும் நாம் நிறைவேற்ற வேண்டும்..."
"நம்முடைய பொறுப்பு என்ன?"
"நாளை இரவு கடம்பூர் மாளிகையிலிருந்து வௌியேறும் சுரங்கப் பாதையில் ஆயத்தமாக காத்திருக்க வேண்டும். காரியம் முடிந்ததும் நந்தினி அதன் வழியாக வருவாள். அவளை அழைத்துக் கொண்டு இரவுக்கிரவே கொல்லி மலையை அடைந்து விட வேண்டும். அங்கே இருந்து கொண்டு, சோழ நாட்டில் நடைபெறும் அல்லோல கல்லோலத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஒருவேளை சௌகரியப்பட்டால்..."
"சௌகரியப்பட்டால், என்ன?"
"பழுவேட்டரையனின் கருவூல நிலவறையில் சேர்த்து வைத்திருக்கும் பொருள்களையெல்லாம் சுரங்கப் பாதை வழியாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சோழ நாட்டுப் பொக்கிருத்திலிருந்து கொண்டுபோன பொருள்களைக் கொண்டே சோழ நாட்டின்மீது போர் தொடுக்கப் படை திரட்டுவது எவ்வளவு பொருத்தமாயிருக்கும்?" இவ்விதம் கூறிவிட்டு மறுபடியும் ரவிதாசன் சிரித்தான்.
தேவராளனாக நடித்த பரமேச்சுவரன், "சரி, சரி! ஆகாசக் கோட்டையை ரொம்பப் பெரிதாகக் கட்டிவிடாதே! முதலில் கொள்ளிடத்தைத் தாண்டி அக்கரையை அடைந்து, கடம்பூர் போய்ச் சேரலாம். கடம்பூரில் நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும்! பிறகு, பழுவேட்டரையனுடைய பொக்கிருத்தைக் கொள்ளையடிப்பது பற்றி யோசிக்கலாம். என்ன சொல்லுகிறாய்? இப்போதே கிளம்பலாமா? இரவே கொள்ளிடத்தைத் தாண்டி விடுவோமோ?" என்றான்.
"வேண்டாம், வேண்டாம்! பொழுது விடிந்ததும் படகில் ஏறினால் போதும். அதற்குள் காற்றும் நன்றாக அடங்கிவிடும். ஆற்று வெள்ளமும் கொஞ்சம் குறைந்துவிடும்."
"அப்படியானால், இன்றிரவு இந்தப் பள்ளிப்படை மண்டபத்திலேயே படுத்திருக்கலாமா?" ரவிதாசன் சற்று யோசித்தான்.
அப்போது சற்று தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டது. ரவிதாசனுடைய உடல் நடுங்கிற்று.
"ரவிதாசா! கேவலம் நரிகளின் குரலைக் கேட்டு ஏன் இப்படி நடுங்குகிறாய்?" என்றான் தேவராளன்.
"அப்பனே! கோடிக்கரைப் புதை சேற்றில் கழுத்துவரையில் நீ புதைபட்டிருந்து, சுற்றிலும் நூறு நரிகள் நின்று உன்னைத் தின்பதற்காகக் காத்திருக்கும் பயங்கரத்தை நீ அனுபவித்திருந்தால் இப்படி சொல்லமாட்டாய்! சிங்கத்தின் கர்ஜனையையும், மத யானையின் ஓலத்தையும் கேட்டு, எனக்குப் பயம் உண்டாவதில்லை. நரியின் ஊளையைக் கேட்டால் குலை நடுங்குகிறது. வா! வா! இந்தச் சுடுகாட்டில் இராத் தங்கவேண்டாம். வேறு எங்கேயாவது கிராமத்துக்குப் பக்கமாயுள்ள கோவில் அல்லது சத்திரத்தில் தங்குவோம். இல்லாவிட்டால், கொள்ளிடக் கரையிலுள்ள துர்க்கைக் கோவிலைப் பற்றிச் சொன்னாயே? அங்கே போவோம். இன்னமும் அந்தக் கிழவன் அங்கே படுத்திருந்தால், வெள்ளத்தில் அவனை இழுத்து விட்டு விடலாம். அதுவே அவனுக்கு நாம் செய்யும் பேருதவியாயிருக்கும். நாளைக்கு மறுநாள் வரையில் அவன் உயிரோடிருந்தால், ரொம்பவும் மனத்துயரத்துக்கு ஆளாக நேரிடும்!"
மேற்கூறிய சம்பாக்ஷணையை ஏறக்குறைய ஒன்றும் விடாமல் பெரிய பழுவேட்டரையர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருந்தது. அவருடை நெஞ்சு ஒரு பெரிய எரிமலையின் கர்ப்பத்தைப் போல் தீக்குழம்பாகிக் கொதித்தது. தாம் காதலித்துக் கலியாணம் செய்து கொண்ட பெண், வீரபாண்டியன் மரணத்துக்காகச் சோழ குலத்தின்மீது பழி வாங்க வந்தவள் என்பதும், மூன்று வருருங்களாக அவள் தம்மை ஏமாற்றி வருகிறாள் என்பதும் சொல்ல முடியாத வேதனையும் அவமானத்தையும் அவருக்கு உண்டாக்கின.
ஆறு தலைமுறையாகச் சோழர் குலத்துக்கும், பழுவூர் வம்சத்துக்கும் நிலைபெற்று வளர்ந்து வரும் உறவுகளை அச்சமயம் பழுவேட்டரையர் நினைத்துக் கொண்டார். பார்க்கப் போனால், சுந்தர சோழனும் அவனுடைய மக்களும் யார்? சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் வம்சத்தைச் சேர்ந்தவள் அல்லவா? சுந்தர சோழனுடைய மக்கள் மீது தமக்கு ஏற்பட்ட கோபமெல்லாம் சமீப காலத்தது அல்லவா? ஆதித்த கரிகாலன் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான் என்பதற்காகவும், மலையமானை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவும், எவ்வளவு பயங்கரமான சதிச் செயல்களுக்கு இடங் கொடுத்துவிட்டோம்? சோழர் குலத்தின் தீராப் பகைவர்களான பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் நம்முடைய அரண்மனையிலிருந்துகொண்டு, நம்முடைய நிலைவறைப் பொக்கிருத்திலிருந்து திருடிப்போன பொருளைக் கொண்டு சோழ குலத்துக்கு விரோதமாகச் சதிகாரச் செயல்களைச் செய்ய அல்லவா இடம் கொடுத்துவிட்டோம்! ஆகா! இந்தச் சண்டாளர்கள் சொன்னபடி நாளை இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று பயங்கரமான கொலைகள் நடக்கப் போகின்றனவா? நம்முடைய உடலில் மூச்சு இருக்கும் வரையில் முயன்று அவற்றைத் தடுத்தேயாகவேண்டும். இன்னும் அறுபது நாழிகை நேரம் இருக்கிறது. அதற்குள் எவ்வளவோ காரியங்கள் செய்து விடலாம். இரவுக்கிரவே குடந்தை சென்று தஞ்சைக்கும், நாகைப்பட்டினத்துக்கும் செய்தி அனுப்பிவிட்டுக் கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். இந்தப் பாதகர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குள் நாம் போய்விடவேண்டும்!"...
இவர்களைக் கடம்பூருக்கு வரும்படி விடுவதா? இந்த இடத்திலேயே இவர்களைக் கொன்று போட்டு விட்டுப் போய்விடுவது நல்லதல்லவா? நம்மிடம் ஆயுதம் ஒன்றுமில்லை. இல்லாவிட்டால் என்ன? வஜ்ராயுதத்தை நிகர்த்த நம் கைகள் இருக்கும்போது வேறு ஆயுதம் எதற்கு ஆனால் இவர்கள் ஒரு வேளை சிறிய கத்திகள் இடையில் சொருகி வைத்திருக்கக்கூடும். அவற்றை எடுப்பதற்கே இடங்கொடுக்காமல் இரண்டு பேருடைய கழுத்தையும் இறுக்கிப் பிடித்து நெறித்துக் கொன்றுவிட வேண்டும்...
ஆனால் அவ்வாறு இவர்களுடன் இந்த இடத்தில் சண்டை பிடிப்பது உசிதமா? `இவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாகி விட்டது. நாம் வழிபடும் குலதெய்வமாகிய துர்க்கா பரமேசுவரியே படகு கவிழச் செய்து, இந்தப் பயங்கர இரகசியங்களைத் தெரிந்து கொள்ளும்படியாயும் செய்திருக்கிறாள். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்களுக்கும் விபத்து நேரிடாமல் பாதுகாப்பதல்லவா நம்முடைய முக்கியமான கடமை? அதிலும்; கடம்பூரில் கரிகாலனுக்கு எதுவும் நேராமல் தடுப்பது மிக மிக முக்கியமானது. அப்படி எதாவது நேர்ந்து விட்டால் நமக்கும் நமது குலத்துக்கும் அழியாத பழிச் சொல் ஏற்பட்டு விடும். ஆறு தலைமுறையாகச் சோழ குலத்துக்குப் பழுவூர் வம்சத்தினர் செய்திருக்கும் உதவிகள் எல்லாம் மறைந்து மண்ணாகிவிடும். பெண் என்று எண்ணி, நமது அரண்மனையில் கொண்டு வந்து வைத்திருந்த அரக்கியினால் கரிகாலன் கொல்லப்பட்டால், அதைக் காட்டிலும் நமக்கு நேரக்கூடிய அவக்கேடு வேறு ஒன்றுமில்லை.'
`ஆகா! அத்தகைய அழகிய வடிவத்துக்குள்ளே அவ்வளவு பயங்கரமான ஆலகால விஷம் நிறைந்திருக்க முடியுமா? மூன்று உலகத்தையும் மயக்கக் கூடிய மோகனப் புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு வஞ்சகம் மறைந்திருக்க முடியுமா? இந்தச் சண்டாளர்கள் சற்று முன்னால் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்க முடியுமா?...'
பழுவேட்டரையருடைய உள்ளத்தில் கோபத் தீ கொழுந்து விட்டு எரியும்படி செய்த அந்தச் சதிகாரர்களின் வார்த்தைகள் ஒருவிதத்தில் அவருக்கு சிறிது திருப்தியையும் அளித்திருந்தன. நந்தினி சதிகாரியாக இருக்கலாம். தம்மிடம் அன்பு கொண்டதாக நடித்து வஞ்சித்து ஏமாற்றி வந்திருக்கலாம். ஆனால் அவள் கரிகாலன் மீதோ கந்தமாறன் அல்லது வந்தியத்தேவன் மீதோ மோகம் கொண்ட காரணத்தினால் தம்மை வஞ்சிக்கவில்லை! அந்த மௌடீகச் சிறுவர்களை அவள் பொருட்படுத்தவில்லை. அவளுடைய அந்தரங்க நோக்கத்துக்கு அவர்களையும் உபயோகப்படுத்துவதற்காகவே அவர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகி வருகிறாள்!
இந்தச் செய்தி பழுவேட்டரையரின் அந்தரங்கத்தின் அந்தரங்கத்துக்குள்ளே அவரையும் அறியாமல் சிறிது திருப்தியை அளித்தது.கரிகாலன் கொல்லப்படாமல் தடுக்க வேண்டியது, தம் குல கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமக்கு என்றென்றைக்கும் அழியாத அபகீர்த்தி நேராமல் தடுத்துக் கொள்ளவும் மட்டும் அல்ல; நந்தினியை அத்தகைய கோரமான பாவகாரியத்திலிருந்து தப்புவிப்பதற்காகவுந்தான். ஒருவேளை அவளுடைய மனத்தையே மாற்றி விடுதல்கூடச் சாத்தியமாகலாம். இந்தச் சண்டாளச் சதிகாரர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பதால் அவள் வேறு வழியின்றி இவர்களுக்கு உடந்தையாயிருக்கலாம் அல்லவா? இவர்களை இங்கேயே கொன்று ஒழித்துவிட்டால் நந்தினிக்கு விடுதலை கிடைக்கலாம் அல்லவா?...
இவ்வாறு எண்ணி அந்த வீரக் கிழவர் தம்மையறியாமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். சிம்ம கர்ஜனை போன்ற அந்தச் சத்தம் சதிக்காரர்கள் இருவரையும் திடுக்கிடச் செய்தது. "யார் அங்கே?" என்றான் தேவராளனாகிய பரமேச்சுவரன். அதற்குமேல் தாம் மறைந்திருப்பது சாத்தியம் இல்லை, உசிதமும் ஆகாது என்று கருதிப் பெரிய பழுவேட்டரையர் வௌிப்பட்டு வந்தார்.
மழைக்கால இருட்டில் திடீரென்று தோன்றிய அந்த நெடிய பெரிய உருவத்தைக் கண்டு சதிகாரர்கள் இருவரும் திகைத்து நின்றபோது, "நான் தான் யமனுக்கு அண்ணன்!" என்று கூறிவிட்டுப் பழுவேட்டரையர் சிரித்தார். அந்தக் கம்பீரமான் சிரிப்பின் ஒலி அவ்வனப் பிரேதசம் முழுவதையும் நடுநடுங்கச் செய்தது. வந்தவர் பழுவேட்டரையர் என்று அறிந்ததும் ரவிதாசன், தேவராளன் இருவரும் தப்பி ஓடப் பார்த்தார்கள்! ஆனால் பழுவேட்டரையர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தம் நீண்ட கரங்கள் இரண்டையும் நீட்டி இருவரையும் பிடித்து நிறுத்தினார். அவருடைய வலது கை ரவிதாசனுடைய ஒரு புஜத்தைப் பற்றியது. வஜ்ராயுதத்தைக் காட்டிலும் வலிமை பொருந்திய அந்தக் கரங்களின் பிடிகள் அவ்விருவரையும் திக்கு முக்காடச் செய்தன.
எவ்வளவுதான் கையில் வலி இருந்தாலும் இருவரையும் ஏக காலத்தில் சமாளிக்க முடியாது என்று எண்ணிப் பழுவேட்டரையர் தேவராளனைத் தலைக்குப்புற விழும்படி கீழே தள்ளினார். கீழே விழுந்தவன் முதுகில் ஒரு காலை ஊன்றி வைத்துக்கொண்டு ரவிதாசனுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் நெறிக்கத் தொடங்கினார். ஆனால் தேவராளன் சும்மா இருக்கவில்லை. அவனுடைய இடுப்பில் செருகியிருந்த கத்தியைச் சிரமப்பட்டு எடுத்துத் தன்னை மிதித்துக் கொண்டிருந்த காலில் குத்தப் பார்த்தான். பழுவேட்டரைய அதை அறிந்து கொண்டார்.இன்னொரு காலினால் அவனுடைய கை மணிக்கட்டை நோக்கி ஒரு பலமான உதை கொடுத்தார். கத்தி வெகு தூரத்தில் போய் விழுந்தது. தேவராளனுடைய ஒரு கையும் அற்று விழுந்து விட்டதுபோல் ஜீவனற்றதாயிற்று. ஆனால் அதே சமயத்தில் அவனை மிதித்திருந்த கால் சிறிது நழுவியது. தேவராளன் சட்டென்று நௌிந்து கொடுத்து வௌியே வந்து குதித்து எழுந்தான்.உதைபடாத கையில் முஷ்டியினால் பழுவேட்டரையரை நோக்கிக் குத்தத் தொடங்கினான்.அந்தக் குத்துக்கள் கருங்கல் பாறைச் சுவர்மீது விழுவன போலாயின.குத்திய தேவராளனுடைய கைதான் வலித்தது.அதுவும் இன்னொரு கையைப்போல் ஆகிவிடுமோ என்று தோன்றியது.
இதற்கிடையில் ரவிதாசன் தன் கழுத்திலிருந்து பழுவேட்டரையருடைய கரங்களை விலக்கப் பெருமுயற்சி செய்தான். ஒன்றும் பலிக்கவில்லை. கிழவருடைய இரும்புப்பிடி சிறிதும் தளரவில்லை. ரவிதாசனுடைய விழிகள் பிதுங்கத் தொடங்கின. உளறிக் குளறிக் கொண்டே "தேவராளா! சீக்கிரம்! சீக்கிரம்! கோயில் மேலே ஏறு! மண்டபத்தைக் கீழே தள்ளு!" என்றான்.
தேவராளன் உடனே பாய்ந்து சென்று பள்ளிப்படைக் கோயிலின் மேல்மண்டபத்தின் மீது ஏறினான். அங்கே மண்டபத்தின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு இனிச் சிறிது நகர்ந்தாலும் கீழே விழக்கூடிய நிலையில் இருந்தது.அதை முன்னமே அவர்கள் கவனித்திருந்தார்கள். ரவிதாஷன் அதைத்தான் குறிப்பிடுகிறான் என்று தேவராளன் தெரிந்து கொண்டான். மண்டபத்தின் இடிந்த பகுதியைத் தன் மிச்சமிருந்த வலிவையெல்லாம் பிரயோகித்து நகர்த்தித் தள்ளினான். அது விழும்போது அதனுடனிருந்த மரம் ஒன்றையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு விழுந்தது.
பழுவேட்டரையர், மேலேயிருந்த மண்டபம் நகர்ந்து விழப்போவதைத் தெரிந்துகொண்டார். ஒரு கையை ரவிதாசனுடைய கழுத்திலிருந்து எடுத்து மேலேயிருந்து விழும் மண்டபத்தைத் தாங்கிக் கொள்ள முயன்றார். ரவிதாசன் அப்போது பெருமுயற்சி செய்து அவருடைய பிடியிலிருந்து தப்பி அப்பால் நகர்ந்தான். மரமும், மண்டபமும் பழுவேட்டரையர் பேரில் விழுந்தன.
பழுவேட்டரையர் தலையில் விழுந்து நினைவு இழந்தார்.
பக்க தலைப்பு
பன்னிரண்டாம் அத்தியாயம்
தூமகேது மறைந்தது!
நெடு நேரத்துக்கு அப்பால் பழுவேட்டரையருக்குச் சிறிது நினைவு வந்தபோது, அவர் ஒரு பயங்கரமான போர்க்களத்தில் இருப்பதைக் கண்டார். வாள்கள் ஒன்றோடொன்று மோதி ஜணஜணவென்று ஓங்கார ஒலி கிளப்பின. ஒரு பக்கத்தில் ஜய பேரிகைகள் முழங்கிக் கொண்டிருந்தன.
அவற்றுடன் சேர்ந்து ஆயிரக் கணக்கான குரல்கள், "மகா ராஜாதிராஜ பாண்டிய மன்னர் வாழ்க! பாண்டிய விரோதிகள் வீழ்க!" என்று கோஷமிட்டான். இன்னொரு பக்கத்தில் ஆயிரக்கணக்கான குரல்கள், "கங்க மன்னன் விழுந்து விட்டான்! ஓடுங்கள்! ஓடுங்கள்" என்று கூக்குரலிட்டன. ஓடுகிறவர்களைத் தடுத்து நிறுத்தும் குரல்கள் சிலவும் கேட்டன.
அப்போது திடீரென்று ஒரு கணம் போர்க்களத்தில் நிசப்தம் நிலவியது. பழுவேட்டரையர் சுற்றுமுற்றும் பார்த்தார். இரண்டு கால்களையும் இழந்த விஜயாலய சோழனை இன்னொரு நெடிதுயர்ந்த ஆஜானு பாகுவான மனிதன் தன் தோள்களிலே தூக்கிக் கொண்டு வந்தான். தோள்மீது அமர்ந்திருந்தவன் இரண்டு கரங்களிலும் இரண்டு ராட்சத வாள்களை ஏந்திக்கொண்டிருந்தான்.
"சோழ வீரர்களே! நில்லுங்கள்! பல்லவர்களே! ஓடாதீர்கள்! ஆறிலும் சாவு! நூறிலும் சாவு! என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்! எதிரிகளைச் சின்னா பின்னம் செய்வோம்!" என்று அவன் கோஷித்தான். ஓடத் தொடங்கியிருந்த சோழ - பல்லவ வீரர்கள் விஜயாலய சோழனைப் பார்த்துவிட்டு, அவன் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு நின்றார்கள். அவர்களுடைய முகங்களிலே சோர்வும் பீதியும் நீங்கி மீண்டும் தீரமும், வீரக்களையும் தோன்றின. பின் வாங்கியவர்கள் முன்னேறத் தொடங்கினார்கள். இந்த அதிசய மாறுதலுக்குக் காரணமாயிருந்த விஜயாலய சோழனை மீண்டும் பழுவேட்டரையர் பார்த்தார். அவனைத் தோளிலே தாங்கிக் கொண்டிருந்த வீரனையும் பார்த்தார். அதிசயம்! அதிசயம்! அப்படி தாங்கிக் கொண்டு நின்ற வீரன் தாமேதான் என்பதைக் கண்டார். அந்தப் பழுவேட்டரையர் ஒரு கையால் தம் தோளின் மீதிருந்த இருகாலும் இல்லாத விஜயாலய சோழனைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் பிடித்திருந்த நீண்ட கத்தியைச் சுழற்றிக் கொண்டே எதிரிகளிடையே புகுந்தார். அவர்கள் இருவரும் போன இடமெல்லாம் பாண்டிய வீரர்களின் தலைகள் தரையில் உருண்டு விழுந்தன.
போர் நிலைமை அடியோடு மாறிவிட்டது. பாண்டிய சைனியம் சிதறி ஓடியது. சோழ, பல்லவர்கள் வென்றார்கள். எட்டுத் திக்கும் அதிரும்படி ஜயபேரிகைகள் முழங்கின. பல்லவ சக்கரவர்த்திக்கு முன்னால் விஜயாலய சோழர் அமர்ந்திருந்தார்! அவருக்கு அருகில் பழுவேட்டரையர் நின்றார்.
பல்லவ சக்கரவர்த்தி, சோழ மன்னரைப் பார்த்து, "வீராதி வீரரே! உம்மாலே இன்று தோல்வி வெற்றியாயிற்று! இனிச் சோழ நாடு சுதந்திர நாடு! நீரும் உமது வீரப் புதல்வன் ஆதித்தனும் உங்கள் சந்ததிகளும் என்றென்றும் சுதந்திர மன்னர்களாகச் சோழ நாட்டை ஆளுவீர்கள்!" என்றார்.
உடனே விஜயாலய சோழர் தமக்கருகில் நின்ற பழுவேட்டரையரைப் பார்த்து, "அத்தான்! தங்களாலேதான் இந்த வெற்றி நமக்குக் கிட்டியது. சுதந்திர சோழ நாட்டின் சேநாதிபதியாகவும், தனாதிகாரியாகவும் உம்மை நியமிக்கிறேன். உமது சந்ததிகளும் சோழ குலத்துக்கு உண்மையாயிருக்கும் வரையில் தனாதிகாரிகளாகவும், சேநாதிபதிகளாகவும் இருப்பார்கள்!" என்றார்.பழுவேட்டரையரின் காயங்கள் நிறைந்த முகம் பெருமிதத்தால் மலர்ந்தது.
திடீரென்று அந்த முகத்தில் கடுங் கோபம் தோன்றியது. அந்தப் பழைய பழுவேட்டரையர் இந்தப் புதிய பழுவேட்டரையரைப் பார்த்தார். "அட பாவி! துரோகி! சண்டாளா! என் குலத்தைக் கெடுக்க வந்தகோடாரிக் காம்பே! ஆறு தலைமுறையாகச் சேர்ந்த அருமையான வீரப் புகழையெல்லாம் நாசமாக்கிக் கொண்டாயே? சிநேகிதத் துரோகம், எஜமானத் துரோகம் செய்தாயே? சோழ குலத்தின் பரம்பரைப் பகைவர்களுக்கு உன்னுடைய வீட்டிலே இடங்கொடுத்தாயே? உன்னுடைய பொக்கிஷத்திலிருந்து பொருள் கொடுத்தாயே? உன்னால் அல்லவோ இன்று சோழ குலத்துக்கு இறுதி நேரப் போகிறது! உற்ற பழி உலகம் உள்ள அளவும் மாறவே மாறாது!" என்று சபித்தார். சபித்த பழுவேட்டரையரின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகியது.
பிறகு மற்றும் பல பழுவேட்டரையர்கள் வந்தார்கள். ஒவ்வொருவரும் தாம் தாம் செய்த வீரச் செயல்களைக் கூறினார்கள். ஒவ்வொருவரும் பழுவேட்டரையரைச் சபித்தார்கள். பின்னர் எல்லாரும் சேர்ந்து சபித்தார்கள். "சண்டாளா! குலத் துரோகமும், ராஜத் துரோகமும் செய்து விட்டாயே? நாங்கள் உயிரைக் கொடுத்துச் சம்பாதித்த வீரப் புகழையெல்லாம் நாசமாக்கி விட்டாயே! உன்புத்தி ஏன் இப்படி போயிற்று?" என்றார்கள்.
பழுவேட்டரையர்கள் மறைந்தார்கள். கொடும்பாளூர் வேளிர்களும், திருக்கோவலூர் மலையமான்களும் வந்தார்கள். தன்னந்தனியே நின்ற பழுவேட்டரையரைச் சூழ்ந்து கொண்டார்கள். "சீச்சீ! நீயும் மனிதனா? சோழர் குலத்தை நீயும் உன் பரம்பரையுந்தான் தாங்கி வந்தது என்று பெருமை அடித்துக் கொண்டாயே? இப்போது என்ன சொல்லுகிறாய்? சோழ குலத்துக்கு நீ யமனாக மாறி விட்டாயே? பாதகா! உன் பவிஷு எங்கே?" என்று கூறி எக்காளம் கொட்டிச் சிரித்தார்கள்.
அவர்களுக்கு பின்னால் கூட்டமாக நின்ற சோழ நாட்டு மக்கள் கல்லையும், மண்ணையும் வாரிப் பழுவேட்டரையர் மீது எறியத் தொடங்கினார்கள். அச்சமயம் சுந்தர சோழ சக்கரவர்த்தி அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பலமற்ற கால்களினால் தள்ளாடி நடந்து வந்தார். வேளிர்களையும், மலையமான் மற்றவர்களையும் கோபமாகப் பார்த்தார். சீச்சீ! என்ன காரியம் செய்கிறீர்கள்? வீராதி வீரரான பழுவேட்டரையர் மீதா கல்லையும் மண்ணையும் எறிகிறீர்கள்? அவரையா துரோகி என்கிறீர்கள்? பழுவேட்டரையரின் துரோகத்தினால் நானும் என் குலமும் அழிந்து போனாலும் போகிறோம்.நீங்கள் யாரும் அவரைக் குற்றம் சொல்ல வேண்டாம்! தனாதிகாரி! வாரும் என்னுடன் அரண்மனைக்கு!" என்றார்.
ஜனக்கூட்டம் கலைந்து போயிற்று. சுந்தர சோழரும் மறைந்தார். தம்பி காலாந்தக கண்டர் மட்டும் பழுவேட்டரையர் முன்னால் நின்றார். "அண்ணா! நம்மிடம் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாரே சக்கரவர்த்தி! அவருக்குத் துரோகம் செய்யலாமா? அவருடைய குலத்தை அழிக்க வந்த பெண் பேயை நம் அரண்மனையில் வைத்துக் கொண்டிருக்கலாமா?" என்றார். உடனே அவரும் மறைந்தார்.
வந்தியத்தேவனும், கந்தமாறனும் அவர்களை யொத்த வாலிபர்களும் பெரிய பழுவேட்டரையரைச் சூழ்ந்து கொண்டார்கள். "மீசை நரைத்த கிழவா! உனக்கு ஆசை மட்டும் நரைக்க வில்லையே? பெண் மோகத்தினால் அழிந்து போனாயே? உன் உடம்பிலுள்ள `அறுபத்து நாலு' புண்களும் இப்போது என்ன சொல்லுகின்றன? அவை வீரத்தின் பரிசான விழுப்புண்களா? அல்லது துரோகத்தின் கூலியான புழுப்புன்களா?" என்று கேட்டுவிட்டுக் கலகல வென்று சிரித்தார்கள்.
அவர்களைக் கொல்லுவதற்காகப் பழுவேட்டரையர் தம் உடை வாளை எடுக்க முயன்றார். ஆனால் உடைவாள் இருக்கவேண்டிய இடத்தில் அதைக் காணவில்லை.
இச்சமயத்தில் குந்தவைப் பிராட்டி வந்தாள். வாலிபர்களை நோக்கிக் கையமர்த்திச் சிரிப்பை நிறுத்தினாள். "பாட்டா! இவர்களுடைய விளையாட்டுப் பேச்சைத் தாங்கள் பொருட்படுத்த வேண்டாம். தங்கள் அரண்மனையில் உள்ள பெண் வேடங்கொண்ட விஷப்பாம்பைத் துரத்தி விடுங்கள்! எல்லாம் சரியாகி விடும்!" என்றாள்.
அவர்கள் மறைந்தார்கள். பழுவேட்டரையர் குலத்தைச் சேர்ந்த பெண்கள் வரத் தொடங்கினார்கள். பத்து பேர், நூறு பேர், ஆயிரம் பேர்; ஆறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வந்து, அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். "ஐயையோ! உனக்கு இந்தக் கதியா நேரவேண்டும்! நம்முடைய வீரக் குலத்துக்கு உன்னால் இந்தப் பெரும் பழியா ஏற்பட வேண்டும்! நாங்கள் எங்கள் கணவன்மார்களையும், அண்ணன்மார்களையும், தம்பிமார்களையும், பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளையும் சோழ நாட்டுக்காகப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தோமே? அவர்கள் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துப் பழுவூர் வம்சத்துக்கு இணையில்லாப் புகழைத் தேடித் தந்தார்களே? அதையெல்லாம் ஒரு நொடியில் போக்கடித்துக் கொண்டாயே?" என்று கதறினார்கள்.
"பெண்களே! வாயை மூடிக்கொண்டு அந்தப்புரத்துக்குப் போங்கள். என்னால் ஒரு பழியும் உண்டாகாது!" என்று பழுவேட்டரையர் கஷ்டப்பட்டுப் பதில் கூறினார். அப்போது அந்தப் பெண்கள் ஒரு திசையில் சுட்டிக் காட்டினார்கள். யமதர்மராஜன் எருமைக்கடா வாகனத்தில் ஏறிக்கொண்டு கையில் வேலும், பாசக் கயிறும் எடுத்துக் கொண்டு வந்தான். பழுவேட்டரையரை நெருங்கினான். போகிற போக்கில், "பழுவேட்டரையா! உனக்கு மிக்க வந்தனம்! சுந்தர சோழனுடைய உயிரையும் அவனுடைய மக்கள் இருவர் உயிரையும் ஒரே நாளில் கொண்டு போக உதவி செய்தாய் அல்லவா? உனக்கு என் நன்றி!" என்று கூறினான் யமதர்மராஜன்.
"இல்லை, இல்லை! நான் உனக்கு உதவி செய்யவில்லை; செய்யமாட்டேன்! உன்னைத் தடுப்பேன்! யமனே! நில்! நில்!" என்று பழுவேட்டரையர் அலறினார். யமனைத் தடுத்து நிறுத்துவதற்காக விரைந்து செல்ல முயன்றார். ஆனால் அவரை ஏதோ ஒரு சக்தி பிடித்து நிறுத்தியது. ஏதோ ஒரு பெரிய பாரம் அவரை அமுக்கியது. நின்ற இடத்திலிருந்து அவரால் நகர முடியவில்லை.
"பார்த்தாயா! நாங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டதே!" என்று கூறிவிட்டுப் பழுவேட்டரையர் குலப் பெண்கள் ஓவென்று சத்தமிட்டுப் புலம்பினார்கள். அவர்களில் பலர் ஓப்பாரி வைத்து அழுதார்கள். அவர்களுடைய அழுகுரலின் சத்தம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகி வந்தது. பழுவேட்டரையரால் அதைச் சகிக்க முடியவில்லை. அவர் பேச முயன்றார்; ஆனால் அழுகைச் சத்தத்தில் அவர் பேச்சு மறைந்து விட்டது. அழுகையும், புலம்பலையும் கேட்கச் சகிக்கவில்லை. இரண்டு கைகளினாலும் செவிகளைப் பொத்திக் கொள்ள முயன்றார். ஆனால் அவருடைய கைகளும் அசைவற்றுக் கிடந்தன. அவற்றை எடுக்கவே முடியவில்லை.
ஒரு பெரு முயற்சி செய்து கரங்களை உதறி எடுத்தார். அந்த முயற்சியிலே அவருடைய கண்ணிமைகளும் திறந்து கொண்டன. சட்டென்று நினைவு வந்தது. அத்தனை நேரமும் அவர் அநுபவித்தவை மனப் பிரமையில் கண்ட காட்சிகள் என்பதை உணர்ந்தார். ஆனால் ஓலக் குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. சற்றுக் கவனித்துக் கேட்டார். அவை பெண்களின் ஓலக் குரல் அல்ல; நரிகளின் ஊளைக் குரல்!
அவர் நினைவு இழந்து கொண்டிருந்த சமயத்தில் இலேசாகக் காதில் விழுந்த சம்பாஷணை ஞாபகத்துக்கு வந்தது.
"கிழவன் செத்துப் போய் விட்டான்!" என்றது ஒரு குரல்.
"நன்றாகப் பார்! பழுவேட்டரையனுடைய உயிர் ரொம்பக் கெட்டி யமன் கூட அவன் அருகில் வரப் பயப்படுவான்!" என்றது மற்றொரு குரல்.
"யமன் பயப்பட்டாலும் நரி பயப்படாது. கொஞ்ச நஞ்சம் உயிர் மிச்ச மிருந்தாலும் நரிகள் சரிப்படுத்திவிடும். பொழுது விடியும்போது கிழவனின் எலும்புகள்தான் மிச்சமிருக்கும்!"
"நல்ல சமயத்தில் நீ பிளந்த மண்டபத்தைத் தள்ளினாய். இல்லாவிடில் நான் அந்தக் கதியை அடைந்திருப்பேன். கிழவன் என்னைக் கொன்றிருப்பான்!"
"எங்கே? மண்டபத்தை நகர்த்த முடியுமா, பார்க்கலாம்!" சற்றுப் பொறுத்து,"துளிகூட அசையவில்லை! ஒரு பகைவனுடைய பள்ளிப் படையைக் கொண்டு இன்னொருவனுக்கும் வீரக்கல் நாட்டி விட்டோம்" என்று கூறிவிட்டு மந்திரவாதி கலகலவென்று சிரித்தான்.
"சிரித்தது போதும், வா! படகு பிய்த்துக் கொண்டு ஆற்றோடு போய் விடப் போகிறது. அப்புறம் கொள்ளிடத்தைக் தாண்ட முடியாது!"
இந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு பழுவேட்டரையர் தம்முடைய நிலை இன்னதென்பதை ஆராய்ந்தார். ஆம்; அவர்மீது பள்ளிப்படை மண்டபத்தின் ஒரு பாதி விழுந்து கிடந்தது. அதன் பெரிய பாரம் அவரை அமுக்கிக் கொண்டிருந்தது. ஆனால் மூச்சுவிட முடிகிறதே, எப்படி?
நல்லவேளையாக, மண்டபத்தோடு விழுந்த மரம் அவர் தோளின் மீது படிந்து அதன் பேரில் மண்டபம் விழுந்திருந்தது. மண்டபத்தையொட்டியிருந்த மரந்தான் அவர் உயிரைக் காப்பாற்றியது. மண்டபம் நேரே அவர் மேல் விழுந்திருந்தால் மார்பும் தலையும் நொறுங்கிப் போயிருக்கும். கிழவனார் தம்முடைய உடம்பின் வலிமையை எண்ணித் தாமே ஆச்சரியப்பட்டார். அந்தப் பெரிய பாரத்தை இத்தனை நேரம் சுமந்தும் தம்முடைய உயிர் போகவில்லையென்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் இவ்வளவு கெட்டியான உயிரை இன்னமும் காப்பாற்றிக் கொள்ள முடியுமா?
ஆம்; எப்படியாவது காப்பாற்றிக் கொண்டேயாக வேண்டும். காப்பாற்றிக் கொண்டு சோழ குலத்துக்கு நேரவிருந்த அபாயத்தைத் தடுக்க வேண்டும். அப்படித் தடுக்காவிட்டால் அவருடைய குலத்துக்கு என்றும் அழியாத பழி இவ்வுலகில் ஏற்படுவது நிச்சயம். வானுலகத்துக்குப் போனால் அங்கேயும் அவருடைய மூதாதையர்கள் அனைவரும் அவரைச் சபிப்பார்கள். ஆகையால், எந்தப் பாடுபட்டாலும் இந்த மரத்தையும் மண்டபத்தையும் அப்புறப்படுத்தி எழுந்திருக்க வேண்டும். ஐயோ! எத்தனை நேரம் இங்கே இப்படி நினைவு இழந்து கிடந்தோமோ என்னமோ தெரியவில்லையே? இதற்குள் ஒரு வேளை நாம் தடுக்க விரும்பும் விபரீதங்கள் நேரிட்டிருக்குமோ?
இதற்கிடையில் நரிகளின் ஊளைக் குரல் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. நரிகள் மூச்சு விடும் சத்தம் அவர் தலைக்கு அருகில் கேட்டது! ஆகா! இந்த நரிகளுக்குக் கூடவா பழுவேட்டரையனைக் கண்டு இளக்காரமாகப் போய்விட்டது? பார்க்கலாம் ஒரு கை!
பழுவேட்டரையர் ஒரு கையினால் மட்டும் அல்ல, இரண்டு கைகளினாலும் பார்க்கத் தொடங்கினார். தம் உடம்பில் மிச்சமிருந்த பலம் முழுவதையும் பிரயோகித்து அவர்மீது விழுந்து கிடந்த மரத்தைத் தூக்க முயன்றார். மரம் சிறிது சிறிதாக உயர உயர, அதன் மேல் நின்ற மண்டபப் பாறை நகர்ந்து சரியத் தொடங்கியது. இடையிடையே அவர் செய்த ஹுகாரங்கள் நெருங்கி வந்த நரிகளை அப்பால் நகரும்படி செய்தன.
ஒரு யுகம் எனத் தோன்றிய ஒரு நாழிகை முயன்ற பிறகு அவரை அமுக்கிக் கொண்டிருந்த மரமும் மண்டபப் பாறையும் சிறிது அப்பால் நகர்ந்து அவரை விடுதலை செய்தன. அந்த முயற்சியினால் அவருக்கு ஏற்பட்ட சிரமம் காரணமாகச் சிறிது நேரம் அப்படியே கிடந்தார். பெரிய நெடுமூச்சுகள் விட்டார்.
ஆகாசத்தை அண்ணாந்து பார்த்தார். மண்டபத்துக்குச் சமீபமாதலாலும், புயலில் மரங்கள் பல விழுந்து விட்டிருந்த படியாலும் வானவௌி நன்றாகத் தெரிந்தது. இப்போது கருமேகங்கள் வானத்தை மறைத்திருக்கவில்லை. வைரப் பொரிகள் போன்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிந்தன. இலேசான மேகங்கள் அவற்றைச் சிறிது மறைத்தும் பின்னர் திறந்துவிட்டும் அதி வேகமாகக் கலைந்துபோய்க் கொண்டிருந்தன.
சட்டென்று வானத்தில் வடதிசையில் தோன்றிய ஒரு விசித்திரமான நட்சத்திரம் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அடடா! சில நாளைக்கு முன்பு அவ்வளவு நீளமான வாலைப் பெற்றிருந்த தூமகேதுவா இப்போது இவ்வளவு குறுகிப் போயிருக்கிறது? அந்த நட்சத்திரத்தின் ஒரு முனையில் சுமார் ஒரு அடி நீளம் வௌிறிய புகைத்திரள் போல நீண்டிருந்தது. பத்து நாளைக்கு முன்புகூட வானத்தின் ஒரு கோணம் முழுதும் நீண்டிருந்த வால் இப்படிக் குறுகிவிட்ட காரணம் என்ன?....
வானத்திலிருந்து பார்வையை அகற்றிச் சுற்று முற்றும் பார்த்தார். நரிகள் இன்னும் போகவில்லையென்பதைக் கண்டார்! பத்து, இருபது, ஐம்பது நரிகள் இருக்கும். அவற்றின் கண்கள் நெருப்புத் தணல்களைப்போல் காட்டின் இருளில் ஜொலித்துக் கொண்டிருந்தன. கிழவன் எப்போது சாகப் போகிறான் என்று காத்துக் கொண்டிருந்தன போலும்! போகட்டும்! போகட்டும்! அவ்வளவு மரியாதை பழுவேட்டரையனிடம் இந்த நரிகள் காட்டுகின்றனவே!...
திடீரென்று வானமும் பூமியும் அந்த வனப்பிரதேசம் முழுவதும் ஒளி மயமாயின. பழுவேட்டரையரின் கண்கள் கூசின. அது மின்னல் அல்ல. வேறு என்னவாயிருக்கக் கூடும்? வானத்தைக் நோக்கினார். ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்த ஒரு தீப்பந்தம் வான வட்டத்திலே ஒரு கோணத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கக் கண்டார். அதன் பிரகாசம் அவருடைய கண்களைக் கூசச் செய்தது. கண்ணை ஒரு கணம் மூடிவிட்டுத் திறந்து பார்த்தார்.அந்தத் தீப்பந்தம் சிறிதாகிப் போயிருந்தது; வர வர ஒளி குறைந்து வந்தது; திடீரென்று அது மறைந்தேவிட்டது. பழையபடி இருள் சூழ்ந்தது.
இந்த அதிசயம் என்னவாயிருக்கும் என்று பழுவேட்டரையர் சிந்தித்துக் கொண்டே மீண்டும் வானத்தை நோக்கினார். குறுகிய தூமகேது சற்றுமுன் இருந்த இடத்தைப் பார்த்தார். அங்கே அதைக் காணவில்லை. ஆகா! தூமகேதுதான் விழுந்து விட்டது! இதன் கருத்து என்ன? இதன் விளைவு என்ன? உலகத்தில் ஏதேனும் விபரீதம் நடக்கப் போவதற்கு அறிகுறிதான். ராஜகுடும்பத்தினர் யாருக்காவது விபத்து நேரிடுவதற்கு அடையாளம். வால் நட்சத்திரம் மறையும்போது அரச குலத்தைச் சேர்ந்த யாரேனும் மரணம் அடைவார்கள். இது வெகுகாலமாக மக்களிடையே பரவியிருக்கும் நம்பிக்கை அப்படியெல்லாம் கிடையாது என்று சொல்லுவோரும் உண்டு. அதன் உண்மையும் பொய்மையும் நாளைக்குத் தெரிந்து விடும்.நாளைக்கா? இல்லை! இன்றைக்கே தெரிந்து போய் விடும்...! அதோ கீழ் வானம் வெளுத்துவிட்டது! பொழுது புலரப் போகிறது! இன்று இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று விபரீத பயங்கர நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். அவை நடக்கப்போகும் விவரம் நமக்கு மட்டும் தெரியும். அவற்றைத் தடுக்கும் சக்தியும் நமக்குத்தான் உண்டு. தடுப்பதில் வெற்றி பெற்றால் தூமகேது விழுந்த அபசகுனத்தைக்கூட வெற்றி கொண்டதாகும். இல்லாவிடில்... அதைப்பற்றி எண்ணவே பழுவேட்டரையரால் முடியவில்லை. தடுத்தேயாக வேண்டும்! சோழர் குலத்தைச் சேர்ந்த மூவரையும் காப்பாற்றியேயாக வேண்டும்.
தமது முதல் கடமை - மிக முக்கியமான கடமை ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றுவதுதான்! அவனுக்கு விபத்து வந்தால் அதன் பழி தன் தலையில் நேராக விழும். ஆகையால் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்கு உடனே போய்ச் சேரவேண்டும். அதற்கு முன்னால், குடந்தைக்குச் சென்று, தஞ்சைக்கும், நாகைக்கும் எச்சரிக்கை அனுப்பிவிட்டுப் போவது நல்லது. பின்னர், விதிவசம் போல் நடந்துவிட்டுப் போகிறது. தாம் செய்யக்கூடியது அவ்வளவு தான்!
பழுவேட்டரையர் எழுந்திருக்க முயன்றார். உடம்பெல்லாம் ரணமாக வலித்தது. மரம் விழுந்திருந்த இடம் மார்பில் பொறுக்க முடியாத வேதனையை உண்டாக்கிற்று. ஒரு கால் முறிந்து விட்டது போல் தோன்றியது. தேகம் முழுவதும் பல்வேறு காயங்கள் பட்டிருந்தன.
அவற்றையெல்லாம் அந்த வீரக் கிழவர் பொருட்படுத்தவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு பெரு முயற்சி செய்து எழுந்து நின்றார். சுற்று முற்றும் பார்த்தார். நல்ல வேளையாக, அவருடைய மரணத்துக்காகக் காத்திருந்த நரிகள் அதற்குள் ஓடிப் போய்விட்டிருந்தன. தூமகேது விழுந்தபோது உண்டான ஒளி வெள்ளத்தைக்கண்டு மிரண்டு அவை ஓடிப் போயின போலும்!
குடந்தை நகரம் அங்கிருந்து எந்தத் திசையில் இருக்கலாம் என்பதை ஒருவாறு நிர்ணயித்துக் கொண்டு புறப்பட்டார். திடமாகக் கால்களை ஊன்றி வைத்து நடக்கத் தொடங்கினார். வழியெல்லாம் புயல் அடித்து மரங்கள் விழுந்து கிடந்தன. பெருமழையினாலும் கொள்ளிடத்து உடைப்பினாலும் வெள்ளக் காடாக இருந்தது. இந்த இடையூறுகளையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் பழுவேட்டரையர் நடந்தார். உள்ளத்தின் கொந்தளிப்பு உடலின் சிரமங்களையெல்லாம் மறந்து விடச் செய்தது. ஆனாலும் நேரம் போய்க் கொண்டே இருந்தது.பொழுது விடிந்து இரண்டு ஜாம நேரம் ஆன சமயத்தில் குடந்தை நகரை அவர் அணுகினார். அந்த மாநகரின் மத்தியப் பிரதேசத்துக்குப் போக அவர் விரும்பவில்லை. அவரை இந்தக் கோலத்தில் பார்த்தால் ஜனங்கள் வந்து சூழ்ந்து கொள்வார்கள். என்ன, ஏது என்று கேட்பார்கள். அவர் செய்ய விரும்பிய காரியத்தைத் துரிதமாகவும் திறமையாகவும் செய்ய முடியாமற் போய்விடும்.
ஆகையினால் நகரின் முனையிலேயே, ஜன நெருக்கமில்லாத இடத்தில், யாரையாவது பிடித்து, தஞ்சைக்கும் நாகைக்கும் ஓலை அனுப்ப வேண்டும். பிறகு ஒரு வாகனம் சம்பாதித்துக் கொண்டு கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள ஜோதிடர் ஞாபகம் அவருக்கு வந்தது ஆம்; அது தனிப்பட்ட பிரதேசம் அக்கம் பக்கத்தில் வேறு வீடுகள் இல்லை. ஜோதிடர் தகுந்த மனிதர்; இனிய இயல்பு படைத்த மனிதர். இராஜ குடும்பத்துக்கும் முதன் மந்திரிக்கும் வேண்டியவர். அதனால் என்ன? யாராயிருந்தாலும் இந்தக் காரியத்தைச் செய்வார்கள். இராஜ குடும்பத்துக்கு வேண்டியவராகயிருப்பதால் இன்னும் ஆர்வத்துடன் செய்வார். ஆகா! ஜோதிடருக்கு உண்மையில் ஜோதிடம் தெரியுமா, ஜோதிட சாஸ்திரத்தில் உண்மை உண்டா என்பதையும் இச்சமயத்தில் பரிசோதித்துப் பார்த்து விடலாம்.
அம்மன் கோவிலையும், ஜோதிடர் வீட்டையும் பழுவேட்டரையர் அணுகிச் சென்றார். கோவிலுக்கு முன்னாலிருந்த நெடிய பெரியம் மரம், புயலில் முறிந்து விழுந்து கிடந்தது. முதலில் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அடுத்தாற் போல் கோவிலை அடுத்து நின்ற இரட்டைக் குதிரை பூட்டிய ரதத்தின் பேரில் அவருடைய பார்வை விழுந்தது. அது விசித்திரமான அமைப்புள்ள ரதம். அந்த ரதத்தின் மேற்பகுதி ஓர் ஓடத்தைப் போல் அமைந்திருந்தது. வெள்ளம் வரும் காலங்களில் அவசரமாகப் பிரயாணம் செய்ய நேர்ந்தால் இம்மாதிரி ரதங்களை உபயோகப் படுத்துவார்கள். பெரிய நதிகளைக் கடக்கும் போது, திடீரென்று நதியில் வெள்ளம் அதிகமாகி விட்டால் ஓடத்தை ரதத்திலிருந்து தனியாகக் கழற்றி விடலாம் குதிரைகளை அவிழ்த்து விட்டால் அவை நீந்திப் போய்க் கரை ஏறி விடும். ரதத்தில் வந்தவர்கள் ஓடத்தைக் தள்ளிக் கொண்டு போய்க் கரை சேரலாம்.
இத்தகைய ரதங்கள் சோழ நாட்டின் அபூர்வமாகத் தான் உண்டு. இது யாருடைய ரதமாயிருக்கும்? அரண்மனை ரதமாயிருக்க வேண்டும்; அல்லது முதன் மந்திரியின் ரதமாக இருக்கவேண்டும். இதில் வந்தவர்கள் இப்போது ஜோதிடர் வீட்டுக்குள் ஜோதிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலும்! அவர்கள் யாராக இருக்கும்? ரத சாரதியைக் கேட்கலாமா? வேண்டாம்! அவன் தம்மைப் பார்த்து மிரண்டு போனாலும் போவான். ஜோதிடர் வீட்டுக்குள் நேரே பிரவேசித்துப் பார்த்து விடுவதே நலம். அங்கே வந்திருப்பவர்கள் யாராயிருந்தாலும் இந்த ரதத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டால், கடம்பூர் திரும்பிச் செல்ல வசதியாக இருக்கும் அல்லவா?
ஜோதிடர் வீட்டு வாசலுக்குப் பழுவேட்டரையர் வந்த போது உள்ளே பெண் குரல்கள் கேட்டன. கிழவருக்கு தூக்கி வாரிப் போட்டது. யாருடைய குரல்? ஏன்? இளைய பிராட்டி குந்தவை குரல் போல அல்லவா இருக்கிறது? அவள் எதற்காக இங்கே வந்தாள்? இந்தச் சமயம் பார்த்தா வரவேண்டும்?... முதலில் இப்படி எண்ணியவர் உடனே மனத்தை மாற்றிக் கொண்டார். அவ்விதமானால், இளைய பிராட்டியாக இருந்தால், ரொம்ப நல்லதாய்ப் போயிற்று.பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. குந்தவை தேவியின் காதில் விஷயத்தைப் போட்டு விட்டால் தம்முடைய பாரமே நீங்கியது போலாகும். அவளுடைய தந்தைக்கும், தம்பிக்கும் நிகழக் கூடிய ஆபத்தைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லிவிட்டால், பிறகு அந்தச் சாமர்த்தியசாலியான பெண் வேண்டிய முன் ஜாக்கிரதை எடுத்துக் கொள்வாள். பிறகு தாம் நிம்மதியாகத் திரும்பிக் கடம்பூருக்குப் போகலாம். அங்கேயல்லவா தம்முடைய முக்கியமான கடமை இருக்கிறது?
பழுவேட்டரையர் ஜோதிடர் வீட்டு வாசலில் பிரவேசித்த போது, முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கும் அதே காவல்காரன், - ஜோதிடரின் சீடன்- அவரைத் தடுத்து நிறுத்தினான். பழுவேட்டரையர் அப்போதிருந்த கோலத்தில் அவரை அவனால் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. ஆகையினாலேயே "நில்!" என்று அதட்டும் குரலில் கூறிவிட்டுத் தடுத்தான். பழுவேட்டரையர் ஒருமுறை ஹூங்காரம் செய்துவிட்டு அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். சீடன் குட்டிக் கரணம் அடித்துக் கொண்டு போய் வீதியில் விழுந்தான். பழுவேட்டரையர் மதயானையைப் போல் பூமி அதிர நடந்து ஜோதிடரின் வீட்டுக்குள் புகுந்தார்.
பக்க தலைப்பு
பதிமூன்றாம் அத்தியாயம்
குந்தவை கேட்ட வரம்
ஜோதிடரின் வீட்டுக்குள் பழுவேட்டரையர் பிரவேசித்த போது அங்கு உண்மையாகவே குந்தவைப் பிராட்டியும், வானதியும் இருந்தார்கள். ஈழத்து ராணியைப் பொழுது விடிந்ததும் காணாததிலிருந்து குந்தவையின் மனம் அமைதியை இழந்துவிட்டது. அதே சமயத்தில் பூங்குழலியும் காணாமற் போனது அவளுடைய கலக்கத்தை அதிகமாக்கிற்று. முதன் மந்திரி அநிருத்தரைப் பார்க்கச் சென்றாள். அச்சமயத்தில் அங்கே அருள்மொழிச் சோழனைப் பற்றிச் செய்தி வந்திருந்தது. நாகைப்பட்டினத்தில் அடித்த புயலின் காரணமாக அவன் வௌிப்பட நேர்ந்ததென்றும் திரளான மக்கள் கூடி அவனை வெற்றி முழக்கத்துடன் தஞ்சைக்கு அழைத்து வருகிறார்கள் என்றும் அறிந்தாள். குந்தவையின் பரபரப்பு எல்லையைக் கடந்துவிட்டது. இதனால் ஏதோ விபரீதம் வரப்போகிறது என்று கருதினாள். பொன்னியின் செல்வனை வழியில் சந்தித்துப் பேசித் தஞ்சையில் நடந்ததையெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினாள். அவன் பெரும் ஜனக் கூட்டம் புடை சூழத் தஞ்சைக் கோட்டையில் பிரவேசிக்க விரும்பினால், பழுவேட்டரையரின் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்த முயலுவார்கள். இதற்கிடையில் பூதி விக்கிரம கேசரி தென் பிரதேசத்துப் படைகளுடனே கொடும்பாளூர் வரைக்கும் வந்துவிட்டார் என்று தெரிய வந்திருந்தது.இரண்டு படைகளும் தஞ்சைக் கருகில் மோதிக் கொள்ளும்படி நேரிடலாம். அதனால் தந்தையின் உள்ளம் புண்படும் என்பது நிச்சயம். அதனால் அவருடைய உயிருக்கே அபாயம் நேர்ந்து விடலாம். மேலும் என்னென்ன விளையுமோ, யாருக்குத் தெரியும்? புயற்காற்றின் காரணமாகக் குடிமக்களின் உள்ளங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு வியாஜம் ஏற்பட வேண்டியதுதான்; சோழ நாடே அழியும்படியான பெரும் உள் நாட்டுக் கலகம் மூண்டு விடக் கூடும். பிறகு அதை நிறுத்துவது எப்படி? வந்த பின்னர் நிறுத்த முயலுவதைக் காட்டிலும், முன்னாலேயே தடுக்கப் பார்ப்பது அவசியம் அல்லவா? இல்லாவிடில் இத்தனை காலமும் செய்த முயற்சியெல்லாம் வீணாகிவிடுமே? ஆதலின் அருள் மொழிச் சோழனை வழியிலேயே சந்தித்துப் பழையாறையில் சிறிது காலத்துக்கு நிறுத்திக் கொள்ள வேண்டும். கடம்பூரிலிருந்து பெரிய பழுவேட்டரையரையும் தருவிக்க வேண்டும். அருள்மொழிக்கு இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை என்பதை அவருக்குத் தெரிவித்து, அவருடைய சம்மதம் பெற்ற பிறகுதான், தஞ்சைக்கு அவனை அழைத்துப் போக வேண்டும்...
இவ்விதம் தனக்குள் சிந்தித்து முடிவு செய்துகொண்டு, தந்தையிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல், அன்னையிடமும் அநிருத்தரிடமும் மட்டும் சொல்லிவிட்டு, இணை பிரியாத வானதியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டாள். பழையாறைக்குப் போகுமுன்பு குடந்தை ஜோதிடரை இன்னொரு தடவை பார்த்து விட விரும்பினாள். கவலை அதிகம் ஏற்படும்போது வருங்காலத்தைப் பற்றி ஜோதிடம் பார்த்து அறிய விரும்புவது மனித இயல்பு அல்லவா?
வழக்கம் போல் அம்மன் கோவிலுக்கு அருகில் ரதத்தை விட்டு விட்டு, ஜோதிடர் வீட்டுக்குள் புகுந்தாள். ஜோதிடரிடம் அவளுடைய கவலையைத் தெரிவிக்கத் தொடங்கிச் சிறிது நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் வீட்டு வாசலில் ஏதோ தடபுடல் நடைபெறும் சத்தம் கேட்டது. முக்கியமாக, பழுவேட்டரையரின் ஹூங்காரம் அவளுக்கு ரோமாஞ்சனம் உண்டு பண்ணியது. அந்த மாதிரி கம்பீரமாக ஹூங்காரம் செய்யக் கூடியவர் பெரிய பழுவேட்டரையர் ஒருவர்தான். தடுக்க முயன்ற ஜோதிடரின் சீடனைத் தள்ளிவிட்டுப் பழுவேட்டரையர் உள்ளே வருவதாகக் காணப்பட்டது. அவர் எப்படி இங்கே வந்தார்? எதற்காக வருகிறார்? அதுவும் இந்த வேளையில்?
ஆகா! ஒருவேளை ஜோதிடம் கேட்கத்தான் வருகிறார் போலும்! அவர் ஜோதிடருடன் பேசுவதைக் கேட்டால் ஒரு வேளை அவருடைய மனத்தில் உள்ள எண்ணங்கள் தெரியக் கூடும். இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பெரிய நெருக்கடி நேர்ந்திருக்கும் இச்சமயத்தில், பெரிய பழுவேட்டரையரின் மனப்போக்குத் தெரிந்தால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும். அதைத் தெரிந்து கொள்ள இப்போது ஒரு சந்தர்ப்பம் நேர்ந்திருக்கிறது. மேலும், தானும், வானதியும் அங்கு இருப்பதைப் பார்த்தால், அவர் என்ன எண்ணிக் கொள்வாரோ என்னமோ ஏன்? தவறாகத்தான் எண்ணிக் கொள்வார்! சந்தேகமில்லை. ஆகையால் அவர் கண்ணில் படாமல் மறைந்திருப்பது தான் நல்லது...
குந்தவை, ஜோதிடரிடம் ஜாடையினால் தனது நோக்கத்தைத் தெரிவித்துவிட்டு வானதியையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவசரமாக அடுத்த அறைக்குள்ளே சென்றாள்.அவர்கள் புகுந்த அறையின் கதவு சாத்தப்பட தட்சணமே பழுவேட்டரையர் உள்ளே பிரவேசித்தார். பர பரப்புடன் எழுந்து நின்று கும்பிட்ட ஜோதிடரை உற்றுப் பார்த்துவிட்டுச் சுற்று முற்றும் நோக்கினார். அவர் முகத்தில் வியப்புக்கும், ஏமாற்றத்துக்கும் அறிகுறி தென்பட்டது. இது ஒரு கண நேரந்தான். உடனே சமாளித்துக்கொண்டு, "ஜோதிடரே! நான் யார் தெரிகிறதா? தனாதிகாரி பெரிய பழுவேட்டரையனே தான்! ஏன் இவ்வாறு பேந்த விழிக்கிறீர்? அவ்வளவு உருமாறிப் போயிருக்கிறேனா? உம்மால் எனக்கு ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டியிருக்கிறது! ஒரு பெரிய உதவி நீ எனக்குச் செய்ய வேண்டும். முதலில் சாப்பிடுவதற்கு ஏதேனும் இருந்தால் கொண்டு வாரும். ரொம்பப் பசியாயிருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன்" என்றார்.
ஜோதிடர் தட்டுத் தடுமாறி, "ஐயா! இந்த ஏழை எளியவனால் தங்களுக்கு என்ன பெரிய உதவி தேவையாயிருக்க முடியும்? இந்தக் குடிசையைத் தேடித் தாங்கள் வந்தது என் முன்னோர் செய்த பாக்கியம். தங்களுடைய அந்தஸ்துக்கு தக்கபடி விருந்து அளிக்க என்னால் இயலாது.ஆனாலும் இந்தக் குடிசையில் உள்ளவையெல்லாம் தங்களுடையவைதான். தயவு செய்து அமருங்கள். நின்று கொண்டிருக்கிறீர்களே? தங்களைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுப் போனேன். அதனால் தங்களைத் தக்கபடி வரவேற்று உபசரிப்பதற்குத் தவறிவிட்டேன். ஆகா! இந்த எளியவனுடைய குடிசையில் தாங்கள் அமருவதற்குத் தகுதியான ஆசனம் கூட இல்லை. பெரிய மனது செய்து அந்தப் பலகையிலே உட்கார வேண்டும்" என்று சற்று முன் குந்தவையும் வானதியும் உட்கார்ந்திருந்த பலகைகளைச் சுட்டிக் காட்டினார்.
பழுவேட்டரையர் அப்பலகைகளையும் அவற்றின் அருகில் சிந்தியிருந்த மலர்களையும் உற்றுப் பார்த்துவிட்டு, "ஜோதிடரே! இல்லை; எனக்கு உட்கார நேரமில்லை. ஏதாவது சாப்பிடுவதற்குக் கொடுக்கக் கூடியது இருந்தால் இலையிலே சுற்றிக் கையிலே கொடுத்து விடுவீர். தஞ்சைக்கு அவசரமாக ஒரு செய்தி அனுப்ப வேண்டும் என் சகோதரன் காலாந்த கண்டனுக்கு...ஓலையும், எழுத்தாணியும் தருகிறீரா?....வேண்டாம்! ஓலை எழுதிக் கொடிருக்க நேரமில்லை. என் முத்திரை மோதிரத்தைக் கொடுக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு நீர் தஞ்சாவூர் உடனே போக முடியுமா? அல்லது வாசலில் நின்றானே உமது சீடன், நல்ல தடியனாக இருக்கிறான். அவனை அவசரமாக அனுப்ப முடியுமா?" என்று கேட்டார்.
"தங்கள் கட்டளை எதுவோ, அப்படியே செய்கிறேன். நானும், என் சீடனும், இரண்டு பேரும் வேணுமானாலும் போகிறோம். ஆனால், தனாதிபதி! பெரிய மனது செய்து சிறிது நேரம் இந்த ஏழையின் குடிசையில் அமர்ந்து, இந்த எளியவன் அளிக்கும் அமுதைத் தாங்கள் அருந்திவிட்டுப் போக வேண்டும்!"
"ஜோதிடரே! எதற்காக உம்மை ஏழை என்றும் எளியவன் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறீர்? உம்முடைய வீட்டைத் தேடி அரசர்களும், அரசிளங்குமரிகளும் அடிக்கடி வருவதுண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நான் ஒருவனே உம்மிடம் ஜோதிடம் கேட்க வராதவன். அது தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். ஒருவேளை உம்மிடம் கேட்டிருந்தால் இம்மாதிரி பயங்கர விபத்துகள் ஏற்படாமலிருந்திருக்கலாம்..."
"ஐயா! தங்கள் மொழிகள் எனக்குப் பெரிதும் கவலையைத் தருகின்றன. என்ன விபத்து நேர்ந்தது? தங்களை இந்தக் கோலத்தில் பார்த்ததும் நான் திடுக்கிட்டது சரிதான். புயலிலும், வெள்ளத்திலும் சிக்கிக்கொண்டீர்களா? கொள்ளிடம் உடைப்பு எடுத்துக்கொண்டது என்று கேள்விப்பட்டேன். ஒருவேளை, அதனால்...? தனாதிபதி!...
"பழுவூர் இளையராணி சௌக்கியமாயிருக்கிறார்கள் அல்லவா?" என்று ஜோதிடர் கேட்டது, பழுவேட்டரையர் பயங்கரத்தொனியில் சிரித்தார். "இல்லை, இல்லை! பழுவூர் இளையராணிக்கு ஒன்றும் நேரவில்லை. அவள் கொள்ளிடத்தில் முழுகிச் செத்துப் போய் விடவில்லை. இது வரையில் கடம்பூர் அரண்மனையில் சௌக்கியமாகவே இருக்க வேண்டும். ஆனால் அந்தச் சண்டாளி நாளை இந்த நேரம் வரையில் உயிரோடு இருப்பாளா என்று நான் சொல்லமுடியாது. ஜோதிடரே! நீர் சொல்ல முடியுமா? இராஜ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாருடைய ஜாதகங்களும் உம்மிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா? நந்தினியின் ஜாதகம், நான் கிழ வயதில் அறிவு கெட்டு மணந்து கொண்ட மோகினிப் பேயின் ஜாதகம் இருக்கிறதா?"
ஜோதிடர் மேலும் பதறிப் போனவராய், "தனாதிபதி! இது என்ன சொல்கிறீர்கள்? என்னைச் சோதனை செய்கிறீர்களா? இளைய ராணியின் ஜாதகம் என்னிடம் இல்லை. அவர் பிறந்த நாளும் வேளையும் தாங்கள் தெரிவித்தால் ஜாதகம் கணிக்க முடியும்" என்றார்.
"வேண்டாம்; வேண்டாம். நந்தினியின் ஜாதகத்தை நானே கணித்துக் கொள்வேன். அவளுடைய ஆயுளை நானே, என் கையினாலேயே, முடிவு கட்டத் தீர்மானித்து விட்டேன். மற்றவர்களுடைய ஜாதகத்தைப் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள். சக்கரவர்த்தியின் ஆயுர்ப் பாவம் எப்படியிருக்கிறது?... ஆகா! தலையை அசைக்கிறீர்! நீர் சொல்ல மாட்டீர். உம்மை நான் சோதிப்பதாகவே எண்ணுவீர். அல்லது உம்முடைய ஜோதிட சாஸ்திரம் எல்லாமே வெறும் புரட்டோ, என்னமோ, யார் கண்டது?... ஜோதிடரே! ஜாதகம் ஒருபுறம் இருக்கட்டும். சில காலமாக வானத்தில் தோன்றிக் கொண்டிருந்த தூமகேது இன்று காலையில் வானத்திலிருந்து பூமியில் விழுந்து மறைந்ததே, அது உமக்குத் தெரியுமா? தெரிந்தால், அதன் பொருள் என்ன என்று சொல்லக் கூடுமா? அது ஏதேனும் பெரிய உற்பாதத்தைக் குறிப்பிடுகிறதா? சக்கரவர்த்திக்கோ, அவருடைய மக்களுக்கோ நேரப் போகிற விபத்தைக் குறிப்பிடுகிறதா? இதைக்கூட நீர் சொல்ல மறுப்பதாயிருந்தால் உம்முடைய ஜோதிடம் வெறும் புரட்டுத்தான்!"
"தனாதிபதி! அப்படி முடிவு கட்ட வேண்டாம். இராஜாங்க சம்பந்தமான காரியங்களில் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்பது எங்கள் தொழிலின் பரம்பரை மரபு. இன்று காலையில் தூமகேது விழுந்ததை நான் கண்ணால் பார்க்கவில்லை. ஏதோ ஜகஜ்ஜோதியான வௌிச்சம் தோன்றியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு உடனே எழுந்து வௌியில் சென்று பார்த்தேன். சில நாளாக வால் குறுகி வந்து கொண்டிருந்த தூமகேதுவைக் காணவில்லை. தூமகேது தோன்றுவதும் விழுவதும் அரசகுலத்தினர்க்கு அரிஷ்டத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்லுவார்கள், ஆனால் அது ஜோதிட சாஸ்திரத்தைச் சேர்ந்ததல்ல. ஜனங்களின் தொன்று தொட்ட நம்பிக்கை.அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. இன்று காலையில் கூடச் சக்கரவர்த்தி சௌக்கியம் என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்."
"அது நமது அதிர்ஷ்டந்தான். இன்றிரவு சக்கரவர்த்திக்கு ஒன்றும் நேரிடாமலிருக்க வேண்டும். நாளை வரையில் அவர் சும்மாயிருந்தால் அப்புறம் கவலையில்லை. பொன்னியின் செல்வனைப் பற்றி ஏதேனும் தெரியுமா?...
"நேற்றிரவு வெகு நேரத்துக்குப் பிறகு இளவரசர் திருவாரூர் வந்து சேர்ந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். தனாதிபதி! பதினாயிரம், லட்சம் மக்கள் அவரைச் சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்களாம். அவருடைய விருப்பத்துக்கு விரோதமாக அவரைத் தஞ்சைக்கு அழைத்து வருகிறார்களாம்."
"ஆகா! அவர்கள் மட்டும் இளவரசரைத் தஞ்சையில் கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டால் எவ்வளவோ நன்றாயிருக்கும். ஆனால் முடியுமா? லட்சக்கணக்கானவர்கள் சூழ்ந்திருந்தாலும், யமனைத் தடுத்து நிறுத்த முடியுமா? சொல்லும், ஜோதிடரே, சொல்லும்! நீர் ஜோதிடம் சொல்லாவிட்டாலும் நான் சொல்லுகிறேன். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்கள் இருவருக்கும் இன்றைக்குப் பெரிய கண்டம் காத்திருக்கிறது. யமதர்மன் அவர்களை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். சக்கரவர்த்தியின் யமன் பழுவூர் மாளிகையைச் சேர்ந்த பொக்கிரு நிலவறையில் மறைந்திருக்கிறான். அருள் மொழியின் யமன் யானைப் பாகனுடைய அங்குசத்திலே ஒளிந்திருக்கிறான். அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திச் சக்கரவர்த்தியையும் பொன்னியின் செல்வனையும் காப்பாற்றுவது உம்முடைய பொறுப்பு. என் முத்திரை மோதிரத்தை எடுத்துக்கொண்டு உம் சீடன் தஞ்சைக்குப் போகட்டும். நீர் திருவாரூர் சென்று இளவரசருக்கு எச்சரிக்க வேண்டும். செய்வீரா? உடனே புறப்படுவீரா?"
ஜோதிடர் தத்தளித்துப் போனார். பழுவேட்டரையருக்கு சித்தப் பிரமை பிடித்துவிட்டதா என்ற சந்தேகம் அவன் மனத்தில் தோன்றியது. ஆனால் அப்படியும் நிச்சயமாகச் சொல்லுவதற்கில்லை. கூறுவதெல்லாம் அறிவுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது.ஆத்திரத்துடனும் பரபரப்புடனும் பேசினாலும், உண்மையைச் சொல்லுகிறவராகவே தோன்றுகிறது. இந்தப் பேச்சையெல்லாம் இளைய பிராட்டியும் கேட்டுக் கொண்டிருப்பார். அவளுடைய கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.எப்படியாவது இந்தக் கிழவரை இங்கிருந்து உடனே அனுப்பி விட வேண்டும்.
"துர்க்கா பரமேசுவரியின் அருளினால் தங்களுடைய கட்டளையை என்னால் இயன்றவரை நிறைவேற்றி வைப்பேன்?" இப்படி ஜோதிடர் கூறியபோது உள்ளேயிருந்து பெண்கள் அணியும் பாதச் சிலம்பின் ஒலி கேட்டது.
"ஆகா! துர்க்கா பரமேசுவரி பாதங் சதங்கையை ஒலித்து அருள் புரிகிறாள். இனி, நான் கடம்பூருக்குத் திரும்பலாம். இதோ புறப்படுகிறேன்...."
"தனாதிபதி! பசியாயிருக்கிறது என்றீர்களே? இந்த எளியவன் வீட்டில் அமுது செய்து விட்டு..."
"வேண்டாம், வேண்டாம்! என் பசி, தாகம் எல்லாம் பறந்து போய்விட்டன. நானும் கடம்பூருக்குப் பறந்து போகவேண்டும். ஆலயத்துக்கு அருகில் ரதம் ஒன்று நிற்கிறதே. அது யாருடையது, ஜோதிடரே? அதை நான் எடுத்துச் செல்லப் போகிறேன். கொள்ளிடக்கரை சென்றதும் திருப்பி அனுப்பி விடுகிறேன். ஓடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு...."
"ஐயா! அந்த ரதம்... அந்த ரதம்... என் பேரில் கருணை கூர்ந்து அதை எடுத்துப் போக வேண்டாம்..."
"ஜோதிடரே! நீர் வீணாகக் கவலைப்படாதீர். சோழ நாட்டின் பட்டத்து இளவரசருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக நான் அந்த ரதத்தை எடுத்துப் போகிறேன். துர்க்கா தேவியே அதற்குச் சம்மதம் தருவாள். மறுபடியும் பாதச் சிலம்பை ஒலிக்கச் செய்து தேவி அருள் புரிந்தால், சம்மதம் கிடைத்ததாக அறிந்து கொள்வேன் அதோ, கேளும்."
இவ்விதம் பெரிய பழுவேட்டரையர் கூறிக் கொண்டிருக்கையில், இளைய பிராட்டி குந்தவை பக்கத்து அறையின் கதவைத் திறந்து கொண்டு இலேசாகப் பாதச் சிலம்பு ஒலிக்க நடந்து வந்தாள். பெரிய பழுவேட்டரையர் அவளைப் பார்த்து வியப்படையவில்லை; திடுக்குறவும் இல்லை. "தாயே! நான் ஊகித்தது சரிதான். அடுத்த அறையில் நீ இருக்க வேண்டும் என்று கருதினேன். உன் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு எனக்குத் தைரியம் இல்லை. ஆகையினாலேயே உன் காதில் விழட்டும் என்று இவ்வளவு சத்தம் போட்டுப் பேசினேன்; ஜோதிடரிடம் நான் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டாய் அல்லவா?"
"ஐயா! மன்னிக்க வேண்டும். நான் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். இந்த வீட்டில் தாங்கள் திடீரென்று பிரவேசித்த போது, தாங்கள்தான் என்பதை என்னால் நிச்சயமாக அறிய முடியவில்லை. அதனால் தங்களுடைய பேச்சை ஒட்டுக் கேட்கும்படி நேர்ந்தது. மன்னிக்க வேண்டும்!" என்றாள் குந்தவை.
"தாயே! நான் உன்னை மன்னிப்பதற்கு ஒரு காரணமும் ஏற்படவில்லை.உன்னிடந்தான் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும். மன்னிப்புக் கோரத் தகுதியுடையவனா என்பதே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. இன்றிரவுக்குள் கடம்பூர் சென்று, பட்டத்து இளவரசருக்கு எதுவும் நேராமல் தடுத்தேனானால், உன்னிடம் மன்னிப்புக் கோருவதற்கு நான் தகுதி பெறுவேன். மூன்று வருஷங்களாக இந்தக் கிழவனின் கண்கள், மோகாந்தகாரத்தினால் மூடியிருந்தன. என் கண்களைத் திறப்பதற்கு நீ எவ்வளவோ பிரயத்தனம் செய்தாய். எத்தனையோ குறிப்புகள் சொன்னாய். ஒன்றும் என் காதில் ஏறவில்லை. என் சகோதரன் காலாந்தக கண்டனும் என் கண்களைத் திறக்க முயன்றான். அவன் முயற்சியும் பலிக்கவில்லை. நேற்றிரவு துர்க்கா பரமேசுவரியின் கருணையினால் பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் இருவரின் சம்பாருணையை ஒட்டுக் கேட்க நேர்ந்தது. அதன் பலனாகவே உண்மையை அறிந்தேன். அந்தச் சண்டாளியை, சதிகாரியை, விஷநாகத்தை, என் அரண்மனையிலேயே வைத்திருந்து பாலூட்டிச் சீராட்டி வளர்த்தேன். அவள் என்னைக் குலத்துரோகியாக்கினாள்; இராஜத் துரோகியாக்கினாள். சோழநாட்டுப் பொக்கிருத்திலிருந்த பொருளை எடுத்துப் பாண்டியநாட்டுச் சதிகாரர்களுக்குக் கொடுத்தாள்.அந்தப் பாதகி நந்தினியை இன்று இரவு கழிவதற்குள் என் கையினாலேயே கொன்றாலொழிய என் நெஞ்சில் கொழுந்துவிடும் நெருப்பு அணையாது..."
இவ்வாறு பழுவேட்டரையர் கூறி வந்தபோது அவர் சற்று எதிர்பாராத ஒரு காரியத்தைக் குந்தவை செய்தாள். திடீரென்று அவர் காலடியில் விழுந்து வணங்கினாள். பழுவேட்டரையர் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோது, இளையபிராட்டி எழுந்து நின்று, "ஐயா! எனக்கு ஒருவரம் கொடுத்து அருள வேண்டும்!" என்றாள்.
"இளவரசி என்னைச் சோதிக்கிறாய் போலத் தோன்றுகிறது. வேண்டாம்! என்னுடைய பாவச் செயல்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை நான்கு உணர்ந்து கொண்டேன். அவற்றுக்கு என்ன பிராயச்சித்தம் செய்து கொள்வது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னால், இன்றையக் கண்டத்திலிருந்து சோழ குலத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் தப்புவித்தாக வேண்டும். உன் தந்தைக்கும், சகோதரர்களுக்கும் இன்று தீங்கு ஒன்றும் நேரிடாமலிருக்க வேண்டும். அதற்கு எனக்கு உதவி செய். இன்று ஒருநாள் போகட்டும். நாளைக்கு நானே உன்னிடம் வந்து, "எனக்கு தண்டனை என்ன?" "பிராயசித்தம் என்ன?" என்று கேட்பேன்!" என்றார்.
"ஐயா! தங்களுக்குத் தண்டனை கொடுக்கவோ, பிராயச் சித்தம் சொல்லவோ, நான் முற்பட மாட்டேன். தாங்கள் என் பாட்டானாரின் ஸ்தானத்தில் உள்ளவர். என் தந்தையின் போற்றுதலுக்கு உரியவர். உண்மையாகவே, தங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன்..."
"அப்படியானால், உடனே கேள் அம்மா! வெறும் பேச்சுப் பேசுவதற்கு இப்பொழுது நேரமில்லை."
"கொடுப்பதாக வாக்கு அளியுங்கள்!"
"உனக்கும், உன் குடும்பத்துக்கும் நான் செய்து விட்ட துரோகத்துக்கு நான் கொடுக்கக் கூடியது எதுவும் ஈடாகாது. நீ எது கேட்டாலும் கொடுக்கிறேன். சீக்கிரம் கேள்!"
"இளையராணி நந்தினி தேவியைத் தாங்கள் ஒன்றும் செய்வதில்லை என்று வாக்கு அளிக்க வேண்டும். அதுதான் நான் கோரும் வரம்!"
"அம்மா! இது எது என்ன விளையாட்டா? விளையாட இதுதானா சமயம்? என் முதுமைப் பிராயத்தில் நான் புத்திகெட்டுப்போனது உண்மைதான். அதற்காக என்னை முழுப் பைத்தியக்காரனாக்கி விடப் பார்க்கிறாயா? அந்தச் சதிகாரிக்கு நான் தக்க தண்டனை கொடுக்காவிட்டால், மற்ற சதிகாரர்களை எப்படித் தண்டிக்க முடியும்? என் கையினால் அவளைக் கொன்றுவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன். என் மனத்திலுள்ளதையெல்லாம் சொல்லி விட்டு, இந்தக் கிழவனை அவளால் கடைசி வரையில் ஏமாற்ற முடியவில்லையென்பதை எடுத்துக் காட்டிவிட்டு, அவனை என் வாளினாலேயே வெட்டிக் கொல்லுவேன். அதற்குக் குறைந்த தண்டனை எதுவும் அவளுக்குக் கொடுத்தால் நியாயம் செய்தவனாக மாட்டேன். அதற்குப் பிறகு, எனக்கு என்ன நியாயமான தண்டனை என்பதையும் யோசிப்பேன். போ! அம்மா! போ! உன் தந்தையையும், தம்பியையும் இன்று வரப்போகும் கண்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு வேண்டிய பிரயத்தனம் செய்!..."
"செய்கிறேன், ஐயா! ஆனால் என் சகோதரியைப் பாதுகாக்கவும் முயற்சி செய்ய வேண்டாமா? இளைய ராணி நந்தினி என் சகோதரி. அவருக்குத் தாங்கள் என்ன தீங்கு செய்தாலும், அதுவும் சோழ குலத்துக்குச் செய்த துரோகமாகும்!"
பழுவேட்டரையர் எல்லைக் கடந்த திகைப்பில் ஆழ்ந்தார்.
"நான் இன்னமும் கனவு கண்டு கொண்டிருக்கிறேனா?" என்று அவர் உதடுகள் முணு முணுத்தன.
"இல்லை, இல்லை! தாங்கள் கனவு காணவில்லை. தாங்கள் காண்பதும் கேட்பதும் உண்மைதான். சிறிது யோசித்துப் பாருங்கள்.பழைய சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். என் சகோதரன் அருள்மொழிவர்மனைக் காவேரியில் முழுகிப் போகாமல் ஒரு மாதரசி காப்பாற்றியது நினைவிருக்கிறதா? அவள்தான் இளையராணி நந்தினியின் தாயார். இளைய ராணியைத் தாங்கள் மணம் புரிந்து அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்த நாளில், என் தந்தை நினைவிழந்து விழுந்தது நினைவிருக்கிறதா? இளைய ராணியின் அன்னையைக் காண்பதாக நினைத்தே சக்கரவர்த்தி மூர்ச்சை அடைந்தார். அவள் இறந்து விட்டதாக வெகுகாலம் எண்ணிக் கொண்டிருந்தார். ஆகையால் திடீரென்று இளைய ராணியைப் பார்த்ததும் ஞாபகத்தை இழந்தார்...."
பழுவேட்டரையருக்கு வேறு சில சம்பவங்களும் நினைவுக்கு வந்தன. நள்ளிரவில் நந்தினியை அவர் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தியதும், அவளைக் கண்டு சக்கரவர்த்தி அலறியதும் அதற்கு நந்தினி கற்பித்துக் கூறிய கரணங்களும் அவருக்கு அப்பொழுது நினைவு வந்தன.
"தாயே! நீ பேசுவது விளையாட்டு அல்ல என்பதை உணர்கிறேன். விதியின் விளையாட்டுத்தான் மிக விசித்திரமாயிருக்கிறது. இளையராணி உன் தமக்கை என்றால், ஆதித்த கரிகாலனுக்கும் அவள் சகோதரியாகிறாள். இந்த உறவு உனக்கு மட்டுந்தான் தெரியுமா, இன்னும் யார் யாருக்கெல்லாம் தெரியும்? சக்கரவர்த்திக்குத் தெரியுமா?
"சக்கரவர்த்தி இரண்டு நாளைக்கு முன்பு வரையில் என்னுடைய பெரியன்னை இறந்துவிட்டதாகவே எண்ணிக் கொண்டிருந்தார். முந்தாநாள் அந்த மூதாட்டி நேரில் வந்தபோது கூடப் பேய் என்று எண்ணி விளக்கை விட்டு எறிந்தார். பிறகுதான் நம்பினார்..."
"அதைப்பற்றிக் கேட்கவில்லை, அம்மா! இளைய ராணி தன் சகோதரி என்பது கரிகாலனுக்குத் தெரியுமா?"
"அவனுக்கு இதற்குள் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு அவன் வாணர்குலத்து வீரர் ஒருவரிடம் ஓலை கொடுத்து அனுப்பியிருந்தான்.அவரிடம் நான் சொல்லி அனுப்பினேன்..."
"ஆகா! வந்தியத்தேவன் வல்லவரையனை சொல்கிறாயாக்கும்!"
"ஆம், ஐயா!"
"அவன் கரிகாலனிடம் சொல்லியிருப்பான் என்று தோன்றாவில்லை. சொல்லியிருந்தாலும், கரிகாலன் நம்பியிருக்க மாட்டான். எனக்கே நம்பிக்கை உண்டாகவில்லையே? அவன் எப்படி நம்புவான்? இளைய ராணிக்கு இச்செய்தி தெரிந்திருக்க முடியாது. தெரிந்திருந்தாலும் பயனில்லை. சதிகாரர்கள் வேறு விதத்தில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். இன்றிரவு அதற்குக் கட்டாயம் முயற்சி செய்வார்கள். அம்மா! நீ தெரிவித்த செய்தி என்னுடைய பொறுப்பை இன்னும் பயங்கரமாக்குகிறது. இளையராணி நந்தினி, சகோதர ஹத்தி செய்யாமல் பாதுகாக்கும் கடமை எனக்கு ஏற்படுகிறது. நான் உடனே கடம்பூர் போகிறேன். நீங்கள் வந்த ரதத்தை எடுத்துக் கொண்டு போகிறேன். சக்கரவர்த்திக்கும், பொன்னியின் செல்வனுக்கும் ஒன்றும் நேராமல் பாதுகாப்பது உன்னுடைய பொறுப்பு!" என்றார்.
"ஐயா! தாங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இதோ தஞ்சைக்குப் புறப்படுகிறேன். பழையாறையிலிருந்து வாகனம் தருவித்துக் கொண்டு போகிறேன். பொன்னியின் செல்வனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படத் தேவையில்லை. அவன் பிறந்த நாளும் வேளையும் அவனைப் பாதுகாக்கும்!" என்றாள்.
"பெண்ணே! ஜோதிடத்தை நம்பி அஜாக்கிரதையாக இருந்துவிடாதே! ஜோதிடர்கள் மனத்திற்குள் உண்மை தெரிந்திருந்தாலும் வௌிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்! இரண்டு பொருள் தொனிக்கும்படி ஏதேனும் கூறி வைப்பார்கள். காரியம் நடந்த பிறகு `முன்னமே சொல்லவில்லையா?' என்பார்கள். ஜோதிடத்தை நம்பினாலும் ஜோதிடக்காரர்களை நம்ப வேண்டாம்!" என்று போகிற போக்கில் ஒரு சொல்லம்பைப் போட்டு விட்டுப் பழுவேட்டரையர் வௌியேறினார்.
அவர் அப்பால் சென்ற சில வினாடி நேரத்துக்கெல்லாம் ஆழ்வார்க்கடியான் உள்ளே பிரவேசித்தான். "ஆம், ஆம்! தனாதிகாரி கூறியதை நான் ஆமோதிக்கிறேன். ஜோதிடத்தை நம்பினாலும், ஜோதிடக்காரர்களை நம்பவே கூடாது!" என்றான்.
பக்க தலைப்பு
பதினான்காம் அத்தியாயம்
வானதியின் சபதம்
திடும் பிரவேசமாக உள்ளே புகுந்த ஆழ்வார்க்கடியானைப் பார்த்துக் குந்தவை, "திருமலை, நீ எப்படி இங்கே வந்து முளைத்தாய்? எதற்காக வந்தாய்?" என்று கேட்டாள்.
"அம்மணி! எல்லாம் இந்த ஜோசியருடைய மோசடி வார்த்தையினால்தான்! இன்று காலையில் இவரிடம் `நான் போகும் காரியம் வெற்றிகரமாக முடியுமா?' என்று கேட்டேன். `முடியும்' என்று சொன்னார். ஆனால் இந்த இடத்தை விட்டுச் சிறிது தூரம் போகக் கூட முடியவில்லை. காரியம் வெற்றி பெறுவது எப்படி? ஆகையினால்தான் சற்று முன் பழுவேட்டரையர் கூறியதை நான் ஆமோதிக்கிறேன். இவருடைய ஜோதிட சாஸ்திரமே ஏமாற்றா அல்லது இவர்தான் வேண்டுமென்று ஏமாற்றினாரா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு போக வந்தேன். பழுவேட்டரையரின் குரலை இங்கே கேட்டதும், இவர் பேரிலேயே எனக்கு சந்தேகம் ஊர்ஜிதப்பட்டது.ஆனால் தங்களை இங்கு நான் எதிர் பார்க்கவேயில்லை" என்றான்.
"என்னை நீ எதிர்பார்த்திருக்க முடியாதுதான். நீ எதற்காக வந்தாய்? என்ன காரியம் வெற்றி அடையுமா என்று ஜோதிடரைக் கேட்டாய்? இரகசியம் ஒன்றுமில்லையே" என்றாள் இளவரசி.
"தங்களுக்குத் தெரிய முடியாத இரகசியம் இருக்க முடியும்? சக்கரவர்த்தியின் கட்டளைப்படி நேற்றிரவே முதன் மந்திரி என்னை நாகப்பட்டினத்துக்குப் போகும்படி ஏவினார் இளவரசரைக் கையோடு அழைத்து வருவதற்காகத்தான். வழியில் செம்பியன் மாதேவியைப் பார்த்து அவரிடமும் ஓர் ஓலையைக் கொடுத்துப் போகும்படி ஏவினார்.... தாங்கள் எப்போது தஞ்சையிலிருந்து கிளம்பினீர்கள், தேவி?"
"பொழுது விடிந்து சிறிது நேரத்துக்குப் பிறகு கிளம்பினோம். இதை ஏன் கேட்கிறாய், திருமலை?"
"கொடும்பாளூர்ப் படைகள் தஞ்சைக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டு விட்டனவா என்று தெரிந்து கொள்வதற்காகக் கேட்டேன்."
"என்ன? என்ன?"
"ஆம், தேவி! தங்களுக்குத் தெரியாதா, என்ன? நேற்றிரவு சக்கரவர்த்தியைப் பார்த்து விட்டு முதன் மந்திரி அவருடைய மாளிகைக்குத் திரும்பி வந்தபோது இரண்டு செய்திகள் காத்திருந்தன. ஒன்றுதான், நாகைப்பட்டினத்திலிருந்து இளவரசர் புறப்பட்டு வருகிறார்; பெரும் ஜனக்கூட்டம் புடைசூழ வந்து கொண்டிருக்கிறார் என்பது..."
"அதை நானும் இன்று காலை அறிந்தேன். என் தம்பியை இங்கே தடுத்து நிறுத்திக் கொள்வதற்காகவே புறப்பட்டு வந்தேன். இன்னொரு செய்தி என்றாயே, அது என்ன?"
ஆழ்வார்க்கடியான் வானத்தியைச் சுட்டிக்காட்டி, "அம்மா! இந்தக் கொடும்பாளூர் இளவரசியை எதற்காக அழைத்து வந்தீர்கள்?" என்று கேட்டான்.
"அவள் எப்போதும் வருவது போல் இப்போதும் வந்தாள்; அழைத்து வந்தேன். எதற்காகக் கேட்டாய்?"
"இரண்டாவது செய்தியை இந்த இளவரசி இருக்கும்போது சொல்லத் தயக்கமாய் இருக்கிறது."
"சொல், திருமலை! இவள் எனக்கு எவ்வளவு அந்தரங்கமானவள் என்பது உனக்குத் தெரியாதா? எனக்குத் தெரியக் கூடியது எதுவும் இவளுக்கும் தெரியலாம்..."
"ஆனாலும் இந்த இளவரசிக்குச் சம்மந்தப்பட்ட காரியம் அது தென்திசைச் சேனாதிபதி பூதி விக்கிரம கேசரி ஒரு மாபெரும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு தஞ்சைக் கோட்டையை நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்று நேற்றிரவு முதன் மந்திரிக்குச் செய்தி வந்தது. சேனாதிபதியிடமிருந்து ஓர் ஓலையும் முதன் மந்திரிக்கு வந்தது. சக்கரவர்த்தியைத் தஞ்சைக் கோட்டையிலும், சின்ன இளவரசரை ஏதோ ஓர் இரகசிய இடத்திலும் பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தி வைத்திருப்பதாக அதில் குற்றம் சாட்டியிருந்தது. பழுவேட்டரையர்கள், தனாதிகாரி பொறுப்பையும், தஞ்சைக் காவல் பொறுப்பையும், உடனே விட்டு நீங்க வேண்டும் என்றும், இளவரசரைக் கொண்டு வந்து ஒப்புவிக்க வேண்டும் என்று எழுதியிருந்தது. இல்லாவிட்டால் இன்று மாலைக்குள் தஞ்சைக் கோட்டையைச் சுற்றி முற்றுகை ஆரம்பமாகி விடும் என்று எழுதியிருந்தது. அம்மணி! தஞ்சைக்குத் தெற்குத் திசையிலும், மேற்குத் திசையிலும் ஏற்கனவே கொடும்பாளூர் படைகள் நெருங்கி வந்து விட்டனவே? தங்களுக்குத் தெரியாதா?"
"தெரியாது. முதன் மந்திரி இதைப்பற்றி ஒரு வார்த்தையும் என்னிடம் சொல்லவில்லையே?"
"சொல்லியிருந்தால், நீங்கள் ஒருவேளை தஞ்சைக் கோட்டையை விட்டுப் புறப்பட்டிருக்க மாட்டீர்கள். முக்கியமாக, கொடும்பாளூர் இளவரசியை உடனே வௌியேற்றிவிட முதன் மந்திரி விரும்பியிருக்கலாம்..."
"அது ஏன்? இவள் அங்கு இருந்தால் என்ன நேர்ந்து விடும்?"
"இந்த இளவரசியைச் சின்னப் பழுவேட்டரையர் ஒருவேளை சிறைப்படுத்தினாலும் படுத்தி விடுவார்..."
"அவ்வளவு துணிச்சல் அவருக்கு வந்து விடுமா? மெய்யாகவே இதை நீ சொல்லுகிறாய்?"
"ஆம், தேவி! மேலும் தென்திசைச் சேனாதிபதி சொல்லி அனுப்பிய செய்தியைக் கேட்டால், தாங்களே அறிந்து கொள்வீர்கள்..."
"என்ன? மேலும் என்ன?"
"இளவரசர் அருள்மொழிவர்மருக்கும், கொடும்பாளூர் இளவரசி வானதி தேவிக்கும் உடனே திருமணம் நடத்தியாக வேண்டும். ஆதித்த கரிகாலர் தமக்கு இராஜ்யம் வேண்டாம் என்று சொல்வதால் அருள்மொழிச் சோழரையே அடுத்த பட்டத்துக்கு உரியவராக யுவராஜ பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். இதற்கெல்லாம் சம்மதிக்காவிட்டால் தஞ்சைக் கோட்டையை மூன்றே நாளைக்குள் தரை மட்டமாக்கி விடுவேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். சோழநாட்டு மக்கள் தம்மை ஆதரிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்..."
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வானதி. "அக்கா! என் பெரியப்பாவுக்குத் திடீரென்று பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன?" என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.
"ஏன் வானதி அப்படிச் சொல்கிறாய்? வெகு காலமாகப் பலர் மனத்தில் இருந்த விஷயத்தையே உன் பெரியப்பா இப்போது பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். பழுவேட்டரையர்கள் `மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட வேண்டும்' என்ற முயற்சி தொடங்கியிருப்பதினால் கொடும்பாளூர் மன்னரும் திருக்கோவலூர் மலையமானும் இவ்விதம் வௌிப்படையாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்..."
"ஆம், தாயே! திருக்கோவலூர் மலையமான் கூட இதற்குள் ஒரு பெரிய சைன்யத்துடன் கடம்பூர் கோட்டைக்குச் சமீபம் வந்திருப்பார். என்னிடம் அவர் பேசியதிலிருந்தே அவ்வாறு தான் ஊகித்தேன். முதன் மந்திரிக்கும் தகவல் கிடைத்திருக்கிறது..."
"ஆனால் இப்போது நான் அறிந்திருக்கும் செய்திகள் அவர்கள் இருவருக்கும் தெரியாது. அவர்கள் இரண்டு பேருடனும் நான் பேசி உள்நாட்டுச் சண்டை நேராமல் தடுத்தாக வேண்டும்.எப்படிச் செய்யப் போகிறேனோ, தெரியவில்லை..."
"தாயே ! நிலைமை இப்போது மிகவும் முற்றிப் போய் விட்டது. இனிமேல் ஒரு பெரிய பாரத யுத்தம் நடந்தே தீரும் போலிருக்கிறது..."
"இதைப் பாரத யுத்தம் என்று கூறியது ரொம்ப சரி, திருமலை! இப்போது யுத்தம் மூண்டால் அது ஒரு சகோதரச் சண்டையாகத்தான் இருக்கும். உற்றார் உறவினருக்குள்ளே நிகழும் சர்வ நாச யுத்தமாக இருக்கும்.வானதி! இதைக் கேள்! என் பாட்டானாரின் தகப்பனார் புகழ்பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, பழுவேட்டரையர் குலத்தில் பெண் கொண்டார். அவருடைய மகள், - என் சிறிய பாட்டி, - கொடும்பாளூரின் அரசரை மணந்து கொண்டார். என் பாட்டனார் அரிஞ்சயர் கொடும்பாளூர்ப் பெண்ணை மணந்து கொண்டார். என் தந்தையோ திருக்கோவலூர் மலையமான் மகளை மணந்திருக்கிறார். இப்படி இந்த மூன்று குல மன்னர்களும் எங்கள் குலத்துடன் நெருங்கிய உறவு பூண்டவர்கள். ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து போனவர்கள். ஆயினும் அவர்கள் இப்போது கச்சை கட்டிக் கொண்டு சண்டைக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்! இந்த விதியை என்னவென்று சொல்கிறது - இவர்களுடைய சண்டையினால் சோழ ராஜ்யமே அழிந்துவிடும் போலிருக்கிறது!"
"அக்கா! எனக்குப் அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. எப்படியாவது சண்டை போட்டுக் கொண்டு சாகட்டும். ஆனால் இதில் என் பெயரை என் பெரிய தகப்பனார் எதற்காக இழுக்க வேண்டும்? உடனே திரும்பிப்போய் என் பெரியப்பாவைப் பார்த்து சண்டை பிடிக்கவேண்டும் என்று தோன்றுகிறது..."
"அதனால் என்ன பயன், கண்ணே? நீ சொல்வதை உன் பெரிய தகப்பனார் கேட்க மாட்டார். நீயும் நானும் சேர்ந்து மன்றாடினாலும் பயன்படாது. சிறு வயதுப் பெண்களாகிய நாம் சொல்வதை உன் பெரியப்பாவைப் போன்ற கிழவர்கள் கேட்க மாட்டார்கள். என் தம்பி அருள்மொழிவர்மன் மூலமாகத்தான் இந்தச் சண்டை நேராமல் தடுக்கமுடியும். திருமலை! நீ போனவன் ஏன் திரும்பி வந்தாய்? அருள் மொழி இப்போது எங்கே இருக்கிறானாம்?"
"திருவாரூரிலிருந்து நேற்றிரவே புறப்பட எண்ணியதாகக் கேள்வி. ஆனால் வழியெல்லாம் ஒரே வெள்ளக்காடாக இருப்பதால் வர முடியவில்லையாம். நானும் பழையாறைக்கு அப்பால் போகப் பார்த்து முடியாமல் திரும்பி வந்தேன். குடமுருட்டி உடைப்பெடுத்து ஒரே சமுத்திரமாகச் செய்திருக்கிறது..."
"எப்படியும் வெள்ளம் வடியும். அதற்குப் பிறகு அருள்மொழி இந்த வழியாக வந்துதானே ஆகவேண்டும்? அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். அதற்குள் தஞ்சையில் ஏதேனும் விபரீதம் நேர்ந்து விடப்போகிறதே என்று கவலையாயிருக்கிறது. திருமலை! நீ உடனே தஞ்சாவூர் திரும்பிப் போய்க் கொடும்பாளூர் மன்னரைக் கண்டு நான் சொல்லும் செய்தியைச் சொல்ல முடியுமா? அருள்மொழி வரும் வரையில் தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட வேண்டாம் என்று தெரிவிப்பாயா?"
"அக்கா! நானும் இவருடன் தஞ்சைக்குப் போகட்டுமா?"
"நீ இந்த மனிதருடன் போய் என்ன செய்வாய், என் கண்ணே?"
"போய் என் பெரிய தகப்பனாருடன் சண்டை பிடிப்பேன்."
"என்னவென்று சண்டை பிடிப்பாய்? உன் பேச்சை அவர் கேட்டுச் சண்டையை நிறுத்தி விடுவாரா?"
"சண்டையை நிறுத்தினால் நிறுத்தட்டும்; நிறுத்தாவிட்டால் எப்படியாவது நாசமாகப் போகட்டும். என் பெயரை இதில் இழுக்க வேண்டாம் என்று வற்புறுத்துவேன்."
"உன் பெயரை இழுக்கிறார்களா? அது எதற்காக?"
"சற்று முன் இந்த வீர வைஷ்ழூணவர் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா, அக்கா?" என்று வானதி கூறி வெட்கத்தினால் தலை குனிந்தாள்.
"உன்னைப் பற்றி யார் என்ன சொன்னார்கள்? திருமலை! நீ இந்தப் பெண்ணைப்பற்றி என்ன சொன்னாய்?"
"இவரைப் பொன்னியின் செல்வருக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று சேனாதிபதி வற்புறுத்துவதைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அதைக் குறிப்பிடுகிறார் போலிருக்கிறது!"
"வானதி! அதில் என்ன உனக்கு ஆட்சேபம்? பொன்னியின் செல்வனை மணந்து கொள்வதற்கு உனக்குப் பிரியம் இல்லையா?"
"பிரியம் இருக்கிறதோ, இல்லையோ. அதைப்பற்றி இப்போது என்ன பேச்சு? கல்யாணத்தையும், பட்டங்கட்டுவதையும் என் பேரில் தந்தை சேர்த்துப் பிரஸ்தாபிப்பதைத்தான், நான் ஆட்சேபிக்கிறேன். என்னைச் சோழ சிம்மாசனத்தில் ஏற்றுவிப்பதற்காகவே என் பெரிய தந்தை இந்தச் சண்டையை ஆரம்பிக்கிறார் என்றல்லவா ஏற்படுகிறது?..."
இச்சமயத்தில் ஒரு பெண்ணின் குரல், "கொடும்பாளூர் இளவரசிக்குச் சிம்மாசனம் ஏறுவது என்றாலே ரொம்ப வெறுப்புப் போலிருக்கிறது!" என்று கூறியதைக் கேட்டு எல்லாரும் அக்குரல் வந்த இடத்தைப் பார்த்தார்கள். அங்கே ஓடக்காரப் பெண் பூங்குழலி நின்று கொண்டிருந்தாள்.
குந்தவை அவளை வியப்புடன் பார்த்து, "பெண்ணே! நீ எப்படி இங்கே வந்தாய்? இன்று காலை உன்னையும், ஈழத்து ராணியையும் காணாமல் நாங்கள் தேடி அலைந்தோமே? உன் அத்தை எங்கே?" என்று கேட்டாள்.
"தேவி! மன்னிக்க வேண்டும்! என் அத்தை என்னைப் பலவந்தமாகப் பழுவூர் அரண்மனையின் சுரங்க வழியாகப் பிடித்து இழுத்துக் கொண்டுவந்து கோட்டைக்கு வௌியே அனுப்பி விட்டாள். நான் தஞ்சை அரண்மனையில் ஒருநாள் இருப்பது கூட என் அத்தைக்குப் பிடிக்கவில்லை! எனக்கும் அரண்மனை வாழ்வு பிடிக்கவில்லைதான்! கொடும்பாளூர் இளவரசிக்குச் சிம்மாசனமே வெறுத்துப் போயிருக்கும்போது, என்னைப் போன்றவர்களுக்கு அரண்மனையில் வசிக்க எப்படிப் பிடிக்கும்?" என்றாள் பூங்குழலி.
"பெண்ணே! எதையோ கேட்டால், எதையோ சொல்லுகிறாயே? உன் சித்தம் சரியான நிலையில் இல்லை போலிருக்கிறதே?" என்றாள் குந்தவை.
"அக்கா! அவள் சித்தம் சரியாகத்தான் இருக்கிறது. என்னைக் கேவலப்படுத்துவதற்காக வேண்டுமென்று இப்படிப் பேசுகிறாள். நான் சோழநாட்டின் சிம்மாதனம் ஏறி மகாராணி ஆகவேண்டும் என்ற ஆசை கொண்டிருக்கிறேனாம்! அதற்காகத் தான் தங்கள் தம்பியை - பொன்னியின் செல்வரை - மணக்க விரும்புகிறேனாம்! இவளுடைய மனசு எனக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது" என்றாள் வானதி.
"பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பழமொழி பொய்யாகப் போகுமா?" என்றாள் பூங்குழலி.
"பெண்களே! நிறுத்துங்கள்! எந்தச் சமயத்தில் என்ன பேசுவது என்றே உங்களுக்குத் தெரியவில்லை. பூங்குழலி! உன் அத்தை இப்போது எங்கே இருக்கிறாள்?" என்று குந்தவை கேட்டாள்.
"பழுவூர் மாளிகையைச் சேர்ந்த பொக்கிஷ நிலவறையில் இருக்கிறாள்..."
"எதற்காக?"
"அங்கே ஒரு கொலைகாரன் கையில் வேலுடன் ஒளிந்து கொண்டிருக்கிறான். ஆகா! அவனை நாங்கள் இருவரும் இன்று அதிகாலையில் படுத்தி வைத்த பாட்டை நினைத்தால்! எங்கள் இருவரையும் இரண்டு பெண் பேய்கள் என்று நினைத்துக் கொண்டு அவன் மிரண்டு போய் அங்குமிங்கும் ஓடியதை எண்ணினால்...!" என்று கூறிவிட்டுப் பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.
இந்தப் பெண்ணுக்குச் சித்தப் பிரமைதான் என்று குந்தவை மனதில் எண்ணிக்கொண்டு, "அப்புறம் சொல்! அவன் யார்? எதற்காக ஒளிந்திருக்கிறான்? உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது, தேவி! என் அத்தைக்கு வாய் பேச முடியவிட்டாலும் காது கேளாவிட்டாலும், நமக்கெல்லாம் தெரியாத விருயங்களைத் தெரிந்துகொள்ளும் அதிசயமான சக்தி உண்டு. அரண்மனையில் உள்ள யாரோ ஒருவரைக் கொல்லுவதற்காக அவன் அங்கே காத்திருக்கிறான் என்று எப்படியோ அறிந்து கொண்டாள். தேவி! பத்துத் தலை இராவணேசுவரனுடைய கைகளை உடைப்பதற்கு என் அத்தைப் பிரயத்தனப்பட்டாளே? அது எதற்கு என்று தெரியுமா?"
"தெரியாது; உனக்குத் தெரிந்தால் உடனே சொல்லு!"
"என் அத்தை இராவணன் கரங்களைத் தகர்க்க முயன்றதைப் பார்த்தபோது நீங்கள் எல்லாரும் அவளைப் பிச்சி - பைத்தியக்காரி என்று நினைத்தீர்கள். ஆனால் என் அத்தை பிச்சி அல்ல. அந்த இராவணன் கைகளுக்கு மத்தியிலேதான் பழுவேட்டரையரின் நிலவறைப் பொக்கிஷத்துக்குப் போகும் சுரங்கப்பாதை இருக்கிறது."
"ஆகா! அப்படியா?" என்று குந்தவை அதிசயித்தாள்.
"ஈழத்து ஊமை ராணி சக்கரவர்த்தியின் அரண்மனைக்கு எப்படி வந்தாள் என்பதும் தெரிகிறது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"இத்தனை நாளும் அரண்மனையிலிருந்த நமக்கு அப்படி ஒரு சுரங்க வழி இருப்பது தெரியாமற் போயிற்றே? இருக்கட்டும், நீ ஏன் உடனே அரண்மனைக்கு வந்து எங்களிடம் இதையெல்லாம் சொல்லவில்லை? உன் அத்தையைத் தனியாக விட்டுவிட்டு ஏன் வந்துவிட்டாய்?" என்றாள் இளையபிராட்டி.
"அத்தையின் பிடிவாதந்தான் காரணம். அங்கே ஒளிந்திருப்பவனைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி என்னை வௌியே அனுப்பிவிட்டாள்!"
"ஏன்? ஏன்? அதைவிட முக்கியமான காரியம். எதற்காகவாவது உன்னை அனுப்பினாளா?"
"ஆம், அம்மணி!"
"அது என்ன பெண்ணே?"
"பொன்னியின் செல்வருக்கும் ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று என்னுடைய அத்தை தன் அதிசய சக்தியினால் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் இருக்குமிடத்துக்குப் போகும்படி என்னை அனுப்பினாள்!"
"ஆகா! பொன்னியின் செல்வன் இருக்குமிடத்தை தேடித் தான் நீ போய்க்கொண்டிருந்தாயா? அப்படியானால் ஏன் நின்று விட்டாய்?"
"இல்லை, தேவி! உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அரண்மனைக் காரியங்களில் இனிமேல் தலையிடுவதில்லையென்று தீர்மானித்து விட்டேன். கோடிக்கரைக்குப் போய்க் கொண்டிருந்தேன். வழியில் இந்த வீர வைஷ்ழூணவன் என்னைச் சந்தித்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தான்!... நீங்கள் இருப்பது தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்!"
"பெண்ணே! அரண்மனை உனக்கு ஏன் அவ்வளவு வெறுத்துப் போய்விட்டது? எங்களை ஏன் பிடிக்காமல் போய் விட்டது? உன்னை யார் என்ன செய்துவிட்டார்கள்?" என்று இளையபிராட்டி குந்தவை கேட்டாள்.
"என்னை யாரும் எதுவும் செய்துவிடவில்லை. யார் பேரிலும் எனக்குக் குறையும் இல்லை. சில பேருக்குச் சிம்மாதனம் பிடிக்காமலிருப்பதுபோல் எனக்கும் அரண்மனை வாழ்வு பிடிக்கவில்லை, அவ்வளவுதான்!" என்று பூங்குழலி கூறிவிட்டு, வானதியைக் கடைக் கண்ணால் பார்த்து நகைத்தாள்.
அதைக் கவனித்து வானதி ஆவேசம் வந்தவள் போல் ஓர் அடி முன்னால் வந்து கூறினாள்:- "அக்கா! இவள் மறுபடியும் என்னைத் தான் ஏசிக் காட்டுகிறாள். நான் சொல்கிறேன். கேளுங்கள். தங்கள் திருப்பாதங்களின்மீது ஆணையாகச் சொல்கிறேன். ஆகாசவாணி, பூமாதேவி சாட்சியாகச் சபதம் செய்கிறேன். பொன்னியின் செல்வர் இந்தக் கண்டத்திலும் தப்பிப் பிழைத்தாரானால், அவர் மனமுவந்து என்னைக் கரம் பிடித்து மணந்து கொண்டாரானால், அத்தகைய பெரும் பேறு எனக்குக் கிடைத்ததானால், தஞ்சை அரண்மனைச் சிம்மாதனத்தில் நான் ஒருநாளும் உட்காரவே மாட்டேன். இது சத்தியம்! சத்தியம்!"
பக்க தலைப்பு
பதினைந்தாம் அத்தியாயம்
கூரை மிதந்தது!
அச்சந்தர்ப்பத்தில் கொடும்பாளூர் இளவரசி இம்மாதிரி ஒரு சபதத்தைச் செய்வாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதைக் கேட்டு அனைவரும் திகைத்துப் போனார்கள். இளையபிராட்டி கோபமும் பரிதாபமும் கலந்து பொங்கிய குரலில், "பெண்ணே! இது என்ன சபதம்? எதற்காகச் செய்தாய்? இப்படியும் ஒரு மூடத்தனம் உண்டா? ஏதோ வெறி பிடித்தவள் போல அல்லவா பிதற்றிவிட்டாய்?" என்றாள்.
"இல்லை, அக்கா! இல்லை! எனக்கு வெறி இல்லை. என் அறிவு தௌிவாயிருக்கிறது. பல நாளாக யோசித்து என் மனத்திற்குள் முடிவு செய்து வைத்திருந்ததையே இப்போது பலர் அறியக் கூறினேன்" என்றாள் வானதி.
அதற்குக் குந்தவை மறுமொழி சொல்வதற்குள் பூங்குழலியின் சிரிப்பு அவள் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே இப்போது வெறி பிடித்துவிட்டது போலத் தோன்றியது. முதலில் கலகலவென்று சிரித்தாள். பிறகு முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். பின்னர் திடீரென்று அழுகையை நிறுத்திவிட்டு மெல்லிய குரலில், "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?" என்று பாடத் தொடங்கினாள்.
குந்தவை ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "இந்த இரண்டு பெண்களும் சேர்ந்து என் மனத்தையும் குழப்பிப் பைத்தியமாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. திருமலை! இளவரசரைப் பார்க்கப் புறப்பட்டவன் இவளை எதற்காக இங்கு அழைத்துக் கொண்டு திரும்பி வந்தாய்?" என்று கேட்டாள்.
"தேவி! பொன்னியின் செல்வரைச் சந்திப்பதற்குத்தான் புறப்பட்டுச் சென்றேன். வழியெல்லாம் ஒரே வெள்ளமாயிருந்தபடியால் போக முடியவில்லை. என்னைப் போலவே இவளும் தடைப்பட்டு நின்றதைப் பார்த்தேன். படகு சம்பாதித்துக் கொடுத்தால் தள்ளிக்கொண்டு போய்த் திருவாரூர் சேர்ப்பதாகச் சொன்னாள். அதற்காக ஜோதிடரிடம் திரும்பி வந்தேன். கோயிலுக்குப் பக்கத்தில் தங்கள் ரதப் படகைப் பார்த்ததும் சந்தோஷமாயிற்று. தங்களிடம் கேட்டுப் படகு வாங்கிச் செல்லலாம் என்று நினைத்தேன்.ஆனால் பழுவேட்டரையர் ரதத்தோடு படகையும் கொண்டு போய் விட்டார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"இப்போது என்ன யோசனை சொல்கிறாய்? பழுவேட்டரையர் கூறியதையெல்லாம் நீயும் கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா?" என்றாள் குந்தவை.
"ஆம் தாயே! அதைக் கேட்ட பிறகு இங்கே வீண்போகும் ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாகத் தோன்றுகிறது. இந்தப் பெண் சொல்வதிலிருந்தும் சக்கரவர்த்தியை உண்மையிலேயே பயங்கரமான அபாயம் நெருங்கியிருப்பதாகத் தெரிகிறது. அது முதன் மந்திரிக்குக் கூடத் தெரியாது. ஆகையால் தாங்கள் கொடும்பாளூர் இளவரசியை அழைத்துக் கொண்டு உடனே தஞ்சாவூருக்குச் செல்லுங்கள். கொடும்பாளூர் படைகள் ஒருவேளை கோட்டையை முற்றுகையிட்டிருந்தால் தங்களைத் தவிர யாராலும் அப்படைகளைத் தாண்டிக் கொண்டு போக முடியாது. வானதி தேவியும் தங்களுடன் வந்தால் அதிக வசதியாகப் போய்விடும். நான் இந்த ஓடக்காரப் பெண்ணைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு, ஒரு படகு சம்பாதித்துக் கொண்டு பொன்னியின் செல்வரிடம் போகிறேன். ஜோதிடரின் சீடனைப் படகு கொண்டு வருவதற்காக ஏற்கனவே அனுப்பி விட்டேன்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
வானதி திடுக்கிட்டு எழுந்தவள் அவனை வெறிக்கப் பார்த்து, "முடியாது! முடியாது! பொன்னியின் செல்வரிடந்தான் போவேன்! செத்தாலும் அவர் காலடியிலேதான் சாவேன்!" என்றாள்.
அதைக் கேட்ட பூங்குழலி, `கிறீச்' என்ற குரலில், "வைஷ்ணவரே! நான் உம்முடன் வரமுடியாது! கோடிக்கரையில் என் காதலர்கள் என்னை அழைத்திருக்கிறார்கள்! நள்ளிரவில் நெருப்பைக் கக்கும் என் காதலர்கள் என்னை அழைக்கிறார்கள்! இளவரசி ஓலை கொடுத்து அனுப்பினாரே, அந்த வாணர்குல வீரருக்குக்கூட என் காதலர்களை நான் காட்டினேன். அவர்களிடம் நான் போகவேண்டும்!" என்று கூவினாள்.
இதுவரையிலும் இவர்களுடைய சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு திகைத்து நின்ற ஜோதிடர் இப்போது குறுக்கிட்டார். "அம்மா! அம்மா! எல்லாரும் சற்றுச் சும்மா இருங்கள்!" என்று இரைந்து கத்தினார்.
ஒரு நிமிடம் அங்கே பேச்சின் ஒலி நின்றிருந்தது. அப்போது வேறோர் ஒலி, - ரோமாஞ்சனத்தை உண்டாக்கும்படியான பேரொலி, - புயல் அடிக்கும்போது அலை கடலில் உண்டாகும் இரைச்சலையொத்த பேரோசை - கேட்டது.
"தாய்மார்களே! இந்தச் சந்தர்ப்பம் பார்த்து நீங்கள் இந்தப் பாவியின் குடிசைக்கு வந்தீர்களே! நான் நாட்டுக்கெல்லாம் ஜோதிடம் சொல்லி வந்தவன். உங்களுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பாமல் இருந்து விட்டேனே?" என்று ஜோதிடர் புலம்பினார்.
"ஐயா! இது என்ன? புதிய அபாயம் எங்களுக்கு என்ன வருகிறது?" என்று குந்தவை கேட்டாள்.
"தாயே! அரசலாற்றில் வெள்ளம் பெருகி வடகரையை உடைத்துக் கொள்ளும் போலிருக்கிறது என்று காலையிலேயே என் சீடன் சொன்னான். அரசலாறு உடைத்துக் கொண்டால் அந்த ஜலமெல்லாம் காவேரியில் வந்து விழும். காவேரி கரை புரண்டால் இந்த ஏழையின் வீடு அடியோடு முழுகிப் போய்விடும். காவேரிக்கு வெகு சமீபத்தில் இந்த வீடு இருக்கிறது.வாருங்கள்! வாருங்கள்! வௌியே வாருங்கள்!" என்று ஜோதிடர் கதறிக் கொண்டு, வீட்டை விட்டு வௌியே ஓடினார்.
எல்லாரும் அவரைத் தொடர்ந்து வௌியேறினார்கள். பீதி கொண்ட முகத் தோற்றத்துடன் ஜோதிடர், "அதோ!" என்று சுட்டிக் காட்டினார்.
அவர் சுட்டிக் காட்டிய தென்மேற்குத் திசையில் ஓர் அபூர்வமான காட்சி தென்பட்டது. அரைத் தென்னை மரம் உயரமுடைய ஒரு பசுமையான சுவர், - நீண்டு படர்ந்து ஓரளவு வளைந்திருந்த விசாலமான சுவர், - அந்த வீட்டை நோக்கி இரைச்சலிட்டுக் கொண்டு வந்ததைக் கண்டார்கள். காவேரியின் கரை உடைந்து நீர் வெள்ளம் அப்படிச் சுவரைப் போல் நகர்ந்து வருகிறது என்பதை அங்கிருந்த அனைவரும் ஒரு நொடியில் அறிந்து கொண்டார்கள்.
"அம்மா! வாருங்கள்! எல்லாரும் ஓடி வாருங்கள்! அம்மன் கோவில் மண்டபத்தின் மீது ஏறி நிற்கலாம்! வேறு தப்ப மார்க்கம் இல்லை! திருமலை என் சீடனைப் படகு கொண்டுவர அனுப்பியதே நல்லதாய்ப் போயிற்று! `ஓடி வாருங்கள்!' என்று சொல்லிக் கொண்டே ஜோதிடர் வழி காட்டினார்.
மற்றவர்களும் அவரைப் பின்பற்றினார்கள். பூங்குழலியின் வெறியெல்லாம் இப்போது போய் விட்டது."தேவி! தாங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம். இதைக் காட்டிலும் எத்தனையோ பெரிய வெள்ளங்களை நான் சமாளித்திருக்கிறேன்!" என்று கூறிக் கொண்டே அவள் ஓடினாள். எல்லாருக்கும் முன்னதாகக் கோவில் மண்டபத்தை அடைந்து அதில் தாவி ஏறினாள்.
இதற்குள் வெள்ளம் கோவில் அருகிலும் வந்து சூழ்ந்து கொண்டு விட்டது. கீழே நின்றவர்களின் முழங்கால் வரை ஏறிவிட்டது. ஜோதிடரும், ஆழ்வார்க்கடியானும் தத்தித் தடுமாறி மண்டபத்தின் மீது ஏறினார்கள். குந்தவையும், வானதியும் மட்டும் இன்னும் கீழே நின்றார்கள்.
இருவரும் ஏற முயன்றார்கள். மேலேயிருந்த பூங்குழலி இளையபிராட்டியின் கைகளைப் பிடித்துத் தூக்கி விட்டாள். வானதி மட்டும் கீழே நின்றாள். அவள் இரண்டு தடவை ஏற முயன்று இரண்டு தடவையும் கைதவறி விட்டு விட்டாள்.
மேலே இருந்த இரு பெண்மணிகளும் அவளைப் பிடித்து மண்டபத்தில் தூக்கிவிட முயன்றார்கள். பூங்குழலி ஒரு கரத்தையும் இளைய பிராட்டி குந்தவை ஒரு கரத்தையும் பிடித்துத் தூக்கினார்கள். வானதி சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய ஒரு கரத்தைப் பூங்குழலி பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. உடனே அந்தக் கையை உதறினாள். அவள் பிடியிலிருந்து கையை விடுவித்துக் கொண்டாள்.
அந்த வேகத்தில் குந்தவை பிடித்திருந்த கரமும் நழுவி விட்டது. வானதி தொப்பென்று விழுந்தாள்; தண்ணீரிலேதான் விழுந்தாள். அதற்குள் தண்ணீர் அவளுடைய கழுத்துவரையில் ஏறி விட்டது. கால் நிலை கொள்ளவில்லை. வானதி தண்ணீரில் மிதந்தாள். வெள்ளம் அவளை அடித்துக் கொண்டு போயிற்று.
இவ்வளவும் ஒரு கணத்தில் நடந்து விட்டது; மண்டபத்தின் மேலேயிருந்தவர்கள், "ஆ! என்று பரிதாபமாகக் கதறினார்கள். சில கண நேரத்துக்குள் வெள்ளம் வானதியை ஜோதிடர் வீட்டுக் கூரைமேல் கொண்டு போய்ச் சேர்ந்தது. அந்தக் கூரை மேல் அவள் ஏறிக்கொண்டாள்.
"நல்ல வேளை! அபாயம் ஒன்றுமில்லை!" என்று எண்ணினாள்.
மண்டபத்தின் மேலிருந்தவர்களும் அவளைப் பார்த்தார்கள். வீட்டுக் கூரை மீது தொத்திக் கொண்டதைப் பார்த்தார்கள். அவர்களும், `நல்ல வேளை! அபாயம் ஒன்றுமில்லை. படகு வந்ததும் அவளை எப்படியும் தப்புவிக்கலாம்!" என்று கருதினார்கள்.
"கூரையை விட்டுவிடாதே! கெட்டியாகப் பிடித்துக் கொள்!" என்று பலமாகக் கத்தினார்கள்.
வானதி ஜோதிடர் வீட்டுக் கூரையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தக் கூரையே அசைவது போலத் தோன்றியது. `அடடா! வீடு இடிந்து விழுகிறதா, என்ன?' ஆம்; ஜோதிடர் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்து விட்டன. ஆனால் கூரை மட்டும் விழவில்லை! கூரை, வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கி விட்டது.
வானதி அந்தக் கூரையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மிதந்தாள். கோவில் மண்டபத்தை நோக்கித் திரும்பிப் பார்த்தாள். "அக்கா! நான் அவரைப் பார்க்கப் போகிறேன். பொன்னியின் செல்வரைப் பார்க்கப் போகிறேன். காவேரித்தாய் என்னை அவரிடம் கொண்டு போகிறாள்!" என்று கூவினாள்.
அவள் கூறியது அவர்கள் காதில் விழுந்திருக்கும். முக்கியமாகப் பூங்குழலியின் காதில் விழுந்திருக்கும், என்று மனப்பூர்வமாக நம்பினாள். ஜோதிடர் வீட்டுக் கூரை வெள்ளத்தில் மிதந்து சென்று கொண்டிருந்தது. வானதியும் போய்க்கொண்டிருந்தாள்.
பக்க தலைப்பு
பதினாறாம் அத்தியாயம்
பூங்குழலிபாய்ந்தாள்!
சோழ நாட்டில் பிரயாணம் செய்துள்ளவர்கள் அந்நாட்டின் இயற்கை அமைப்பில் ஒரு விசித்திரத்தைக் கவனித்திருப்பார்கள். சோழ நாட்டைச் சோறுடை வளநாடாகச் செய்யும் நதிகளில் வெள்ளம் வரும்போது, வெள்ளத்தின் மேல் மட்டம் நதிக்கு இருபுறங்களிலுமுள்ள பூமி மட்டத்துக்கு மிக்க உயரமாயிருக்கும். இவ்விதம் இருப்பதினாலேதான் நதிகளில் வரும் வெள்ளம் வாய்க்கால்களின் வழியாக வயல்களுக்குப் பாய்வது சாத்தியமாகின்றது.
இந்த நிலையில் வெள்ளத்தை நதிப் படுகையோடு போகச் செய்வதென்பது மிகவும் சிரமமான காரியம் அல்லவா? நதிகளுக்கு இருபக்கங்களிலும் உயரமான கரைகள் உறுதியாக அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடில், வெள்ளம் நதியோடு போவதற்குப் பதிலாக, மழை நீர் நாலா புறமும் பாய்ந்து ஓடுவதுபோல் ஓடிச் சோழ நாட்டைத் தண்ணீர் தேங்கிய சதுப்பு நிலமாக்கி ஒன்றுக்கும் பயனற்றதாகச் செய்துவிடும்.
இதை முன்னிட்டு ஆதிகாலத்திலிருந்து சோழமன்னர்கள் காவேரிக்கும், காவேரியின் கிளை நதிகளுக்கும் கரைகள் அமைப்பதில் மிக்க கவனம் செலுத்தினார்கள். கரிகால் வளவன் ஈழ நாட்டிலிருந்து யுத்தத்தில் தோற்றவர்களைச் சிறைப்படுத்தி வந்து, காவேரிக்குக் கரையெடுக்கும் வேலையில் அவர்களை ஈடுபடுத்தினான் என்னும் வரலாற்றை நேயர்கள் அறிந்திருப்பார்கள். காவேரியின் கிளை நதிகளில் தண்ணீர் நல்ல மேல் மட்டத்தில் வருவதற்கு உதவியாகவே ஸரீரங்கத்துக்கு ஒரு காத தூரம் கிழக்கே சோழ மன்னர்கள் கல்லணை கட்டினார்கள். அந்த அணையின் மூலம் தண்ணீர் மட்டம் மேலும் உயர்ந்து கிளை நதிகளில் நிறையத் தண்ணீர் பாய்வது சாத்தியமாயிற்று. இவ்விதம் இயற்கை அமைப்போடு இடைவிடாத செயற்கை முயற்சிகளும் சேர்ந்தே சோழ நாட்டைப் பண்டை நாளிலேயே நீர் வளத்தில் இணையில்லாத நாடாகச் செய்திருந்தன.
சோழ வள நாட்டுக்கு இவ்விதம் இயற்கை, விசேஷ உதவிகள் செய்தது போலவே, சில சமயம் விபரீதமான அபாயங்களையும் உண்டாக்கி வந்தது. சோழ மண்டலத்துக் கடற்கரைக்குக் கிழக்கே கடலில் அடிக்கடி சுழிக் காற்றுகளும், புயற்காற்றுகளும் தோன்றுவது உண்டு. இக்காற்றுகள் சில சமயம் கடற்கரை யோரமாக வடக்கு நோக்கிச் சென்று கிருஷ்ணை - கோதாவரி முகத்துவாரங்களிலோ அல்லது கலிங்க நாட்டிலோ, உள்ளே பிரவேசித்துப் பெருமழை கொட்டச் செய்து கடுமையான சேதங்களை விளைவிக்கும். வேறு சில சமயங்களில் சோழ நாட்டுக்குள்ளேயே நேரடியாகப் பிரவேசித்து மேற்கு நோக்கி விரைந்து செல்லும். கோடிக்கரைக்கும், கொள்ளிடக் கரையின் முகத்துவாரத்துக்கும் மத்தியில் இவ்விதம் சுழிக்காற்று உள்நாட்டில் பிரவேசிப்பது சரித்திரத்தில் பலமுறை நடந்திருக்கும் சம்பவம். சில சமயம் அச்சுழிக் காற்றுகள் கோரபயங்கர ரூபங்கொண்டு கடலையே பொங்கி எழச் செய்து கடற்கரையோரமுள்ள ஊர்களையே அழித்துவிடும்!
பூம்புகார் என்று வழங்கிய காவேரிப்பட்டினத்தைக் கடல் கொண்டது வெறுங்கதையன்று; சரித்திர ஆதாரங்களினால் நிரூபிக்கக் கூடிய உண்மை நிகழ்ச்சியேயாகும். நதிகளில் வெள்ளம் அதிகமாக வரும்போது சில சமயம் கரைகள் உடைந்து விடுவதும் உண்டு. நதிகளின் நீர்மட்டத்தைக் காட்டிலும் பூமி மட்டம் தாழ்வாயிருக்கும் காரணத்தினால் உடைப்பு எடுத்தாலும் சுற்றுப்புறமெல்லாம் ஒரே தண்ணீர் மயமாகிவிடும். நதிகளுக்கு அருகிலுள்ள ஊர்கள் முழுகிப் போய்விடும். அப்போதெல்லாம் ஜனங்கள் உயிர் தப்புவதற்கு அக்கம்பக்கத்திலுள்ள கோயில்கள் உதவியாயிருக்கும்.
விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் காவேரி உற்பத்தியாகும் ஸஹஸ்ய மலையிலிருந்து அந்த மாநதி கடலில் சங்கமமாகும் இடம் வரையில் நூற்றெட்டு ஆலயங்களை எடுப்பித்தான் என்று சரித்திரம் கூறுகிறது. சாதாரண காலங்களில் கோயில்கள் கடவுளை ஆராதிப்பதற்குப் பயன்படுவது போலவே, பெருவெள்ளம் வந்து உடைப்பெடுக்கும் காலத்தில் மக்கள் கோயில் மண்டபங்களின் மீது ஏறி உயிர் தப்புவதற்கும் உபயோகமாயிருக்கட்டும் என்பது ஆதித்த சோழனின் நோக்கமாக இருக்கலாம் அல்லவா? நதிக்கரைகளில் உடைப்பு உண்டாவதன் காரணமாகச் சில சமயம் நதிகளின் போக்கே மாறிவிடுவது உண்டு. அரிசிலாறும், குடமுருட்டி முதலிய நதிகள் இப்படி பலமுறை இடம்மாறி, திசை மாறியிருக்கின்றன என்பதைப் பழைய வரலாறுகளிலிருந்து அறியலாம்.
இனி நம்முடைய வரலாறு நடந்த காலத்துக்கு வருவோம். இலங்கைத் தீவிலிருந்து சோழ நாட்டுக்குப் பார்த்திபேந்திரனுடைய கப்பல் வந்து கொண்டிருந்தபோது உண்டான சுழிக்காற்று, வந்தியத்தேவனை முன்னிட்டு இளவரசர் அருள்மொழிவர்மரைக் கடலில் குதிக்கச் செய்தபிறகு, கடலோரமாகவே சென்று கலிங்க நாட்டை அடைந்து மறைந்தது. ஆனால் அருள்மொழிவர்மர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் தங்கியிருந்தபோது உண்டான சுழிக்காற்று, சோழ நாட்டுக்குள்ளேயே புகுந்து பற்பல அட்டகாசங்களைச் செய்து கொண்டு மேற்கு நோக்கிச் சென்றது. ஒரே இரவில் அது காவேரியின் இருபுறங்களிலும் தன் லீலைகளை நடத்திக் கொண்டு போய் மறுநாள் கொங்குநாட்டை அடைந்து தேய்ந்து மறைந்தது. அது பிரயாணம் செய்த இடங்களிலெல்லாம் பற்பல சேதங்களை விளைவித்தது மட்டுமன்று; அதைத் தொடர்ந்து பெருமழை கொட்டும்படியாகவும் செய்து கொண்டு போயிற்று. மேற்கே போகப்போக மழை அதிகமாகப் பெய்தது. ஆகவே காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றிலிருந்து பிரிந்த கிளை நதிகளிலும் மறுநாள் முதல் வெள்ளம் அபரிமிதமாக வந்தது. பல நதிகள் கரைகளை உடைத்துக் கொண்டன. மழையினாலும், நதிகளின் உடைப்பினாலும் சோழ நாடெங்கும் வெள்ளக் காடாகிவிட்டது.
ஆனால் இவ்வளவு இயற்கை விபரீதங்களும் சோழநாட்டு மக்களைப் பீதிகொண்டு செயலிழந்து செய்துவிடவில்லை. இவை அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சிகளாதலால், அம்மாதிரி நிலைமைகளில் என்ன செய்யவேண்டும் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள். அப்போதைக்குக் கோயில் மண்டபங்களிலோ வேறு உயரமான இடங்களிலோ ஏறிக்கொண்டு உயிர் தப்புவார்கள். வெள்ளம் எவ்வளவு அவசரமாக வந்ததோ, அவ்வளவு துரிதமாக வடிந்து போய்விடும். வீடுகளை இழந்தவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியைக் கொண்டு உடனே வீடு கட்டிக்கொள்வார்கள். "ஐயோ! போய் விட்டதே!" என்று தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடமாட்டார்கள். சோர்வு சோம்பல் என்பதையே அறியாத தன்னம்பிக்கை கொண்ட மக்கள் அக்காலத்தில் சோழ நாட்டில் வாழ்ந்திருந்தார்கள். இல்லாவிடில் இன்றைக்கும் உலகம் கண்டு வியக்கும் படியான அற்புதங்களை அவர்கள் சாதித்திருக்கமுடியாது அல்லவா?
வானதி கோயில் மண்டபத்தின் மீது ஏறாமல் தவறித் தண்ணீரில் விழுந்ததும் முதலில் மண்டபத்தின் மேல் ஏறியிருந்தவர்கள் கவலை அடைந்தார்கள். ஆனால் உடனடியாக அந்தக் கவலை மாறியது. வானதி, ஜோதிடர் வீட்டுக் கூரைமீது தொத்திக் கொண்டதைப் பார்த்து அவர்களுக்குத் தைரியம் உண்டாயிற்று. இளையபிராட்டி ஓரளவு குதூகலமே அடைந்தாள். வானதியை அபாயகரமான நிலைமைகளில் சிக்க வைப்பதிலும், அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்று பார்ப்பதிலும் குந்தவைதேவிக்கு எப்போதும் உற்சாகம் இருந்தது. வீராதி வீரனான தம்பியை மணந்து கொள்ளப் போகிறவள் நெஞ்சுத் துணிவுள்ள தீர மங்கையாக வேண்டுமென்பதில் இளைய பிராட்டிக்குச் சிரத்தை இருந்தது. அத்தகைய தீரத்தை வானதியின் உள்ளத்தில் வளர்க்கும் பொருட்டுத் குந்தவை பல உபாயங்களையும் தந்திரங்களையும் கையாண்டு வந்தாள். அந்த உபாயங்கள் நல்ல பலன் அளித்திருக்கின்றன என்ற நம்பிக்கையும் அவளுக்கு ஏற்பட்டிருந்தது.
சில காலமாக வானதி மூர்ச்சையடைந்து விழும் வழக்கத்தை விட்டுவிட்டிருந்தாள் அல்லவா? இப்போது குந்தவையின் தந்திரம் ஒன்றுமின்றித் தெய்வாதீனமாகவே வானதியின் தீரத்தைச் சோதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருக்க, ஓர் ஓட்டுக் கூரையின் மேல் வானதி தொத்திக் கொண்டிருந்தாள். அவள் பயப்படாதிருப்பாளா? ஜோதிடரின் சீடன் படகு கொண்டு வந்து அவளைத் தப்புவிக்கும் வரையில் தைரியத்தைக் கைவிடாது இருப்பாளா?- ஆம்; இருப்பாள்! சந்தேகமில்லை! இத்தனை காலமும் அளித்து வந்த பயிற்சி இச்சமயம் பயன் படாமலா போய்விடும்?
இவ்விதம் குந்தவை எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது, ஆழ்வார்க்கடியான், "தாயே! இது என்ன? கூரை நகர்வதாகத் தோன்றுகிறதே?" என்றான்.
"உன் கண்ணிலே ஏதோ கோளாறு! வெள்ளம் நகர்ந்து செல்கிறது; கூரை நகர்வதாகத் தோன்றுகிறது!" என்றாள் குந்தவை. இப்படிச் சொல்லும்போதே அவளுடைய உள்ளத்திலும் சந்தேகம் உதித்து விட்டது. அதன் அறிகுறி முகத்திலும் காணப்பட்டது.
"அம்மா! நன்றாகப் பாருங்கள்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"ஐயோ! இது என்ன விபரீதம்?"என்றாள் இளைய பிராட்டி.
"ஜோதிடரே! உம்முடைய சீடன் சீக்கிரம் படகுடன் வருவானா?" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"போதும்! போதும்! ஜோதிடரையும் அவருடைய சீடனையும் நம்பியது போதும்! திருமலை! உன்னால் வானதியைக் காப்பாற்ற முடியுமா என்று பார்; இல்லாவிட்டால், நானே வெள்ளத்தில் குதிக்க வேண்டியதுதான்! வானதிக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், அப்புறம் நான் ஒரு கணமும் உயிர் வைத்திருக்கமாட்டேன்!" என்றாள்.
"தாயே! அபாயம் நேரும் காலத்திலேதான் நிதானத்தை இழக்கக்கூடாது. இது தங்களுக்கு தெரியாதது அல்ல. கொடும்பாளூர் இளவரசிக்கு உதவி செய்வதற்காக என் உயிரைக் கொடுக்கவும் சித்தமாயிருக்கிறேன்; அதனால் பயன் ஏற்பட வேண்டுமே? படகு இல்லாமல் நான் மட்டும் நீந்திச் சென்றால் அந்தக் கூரையில் போய் நானும் தொத்தி ஏறிக் கொள்ளலாம். கொடும்பாளூர் இளவரசியைத் தாங்கும் கூரை என்னையும் சேர்த்துத் தாங்குமா? அல்லது இரண்டு பேரையும் வெள்ளத்தில் அமுக்கிவிட்டுக் கூரையும் கீழே போய்விடுமா? இதைப்பற்றி சிறிது யோசிக்க வேண்டும்..."
பூங்குழலியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு அவளை இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். "இந்த வீர வைஷ்ணவர் யோசித்து முடிப்பதற்குள் கொடும்பாளூர் இளவரசியின் வாழ்க்கை முடிந்துவிடும்!" என்றாள் பூங்குழலி.
"அப்படி நேர்ந்தால் இந்த ஓடக்காரப் பெண் சந்தோஷப்படுவாள்!" என்று ஆழ்வார்க்கடியான் கூறியதும் பூங்குழலியின் முகத்தில் ஆத்திரம் கொதித்தது.
திருமலை மேலும் தொடர்ந்து கூறினான்:- "ஆனால், தேவி! அவ்விதம் ஒன்றும் நேரப் போவதில்லை! ஆலிலை மேல் பள்ளி கொண்டு அகிலமெல்லாம் காப்பாற்றும் திருமால், வானதியையும் காப்பாற்றுவார். மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள் எடுத்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றிய ஸரீமந்நாராயணன் கொடும்பாளூர் இளவரசியையும் காப்பாற்றுவார்!... அதோ பாருங்கள்! ஜோதிடர் சீடன் படகுடன் வருகிறான்!"
ஆழ்வார்க்கடியான் சுட்டிக்காட்டிய திசையில் உண்மையாக படகு வந்து கொண்டிருந்தது. அப்படகு வெள்ளத்தின் வேகத்தை எதிர்த்து இவர்கள் இருந்த கோயில் மண்டபத்தை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. வானதி ஏறியிருந்த கூரையோ வெள்ளத்தோடு போய்க் கொண்டிருந்தது.
படகு இங்கே வந்து இவர்களே ஏற்றிக் கொண்டு போவதற்கு வெகு நேரம் ஆகிவிடும். அதற்குள் வானதி அதிக தூரம் போய் விடுவாள். கண்ணுக்கு மறைந்தாலும் மறைந்து விடுவாள்.
இதையெல்லாம் எண்ணி மண்டபத்தில் மேல் நின்றவர்கள் படகில் வந்த ஜோதிடர் சீடனைப் பார்த்து உரக்கக் கத்தினார்கள். சமிக்ஞைகளும் செய்து பார்த்தார்கள். தன்னைச் சீக்கிரம் வரச் சொல்லுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு அவன் படகை விரைவாகச் செலுத்தி வர முயன்றான்.
பூங்குழலி அப்போது குந்தவையைப் பார்த்து, "தேவி! எனக்கு அனுமதி கொடுங்கள்! நான் நீந்திப்போய் படகை வழிமறிந்து அழைத்துச் சென்று கொடும்பாளூர் இளவரசியை ஏற்றி வருகிறேன்!" என்றாள்.
குந்தவை சிறிது தயங்கினாள். பூங்குழலி கையைக் கொடுக்கப் போய்த்தான் வானதி வெள்ளத்தில் விழுந்தாள் என்பது அவளுக்கு நினைவு இருந்தது.
"தேவி என்னை நம்புங்கள். என்னுடைய அஜாக்கிரதையினால் தான் இளவரசி வெள்ளத்தில் விழுந்தாள். ஆகையால் அவரை மீட்பது என்னுடைய கடமை!" என்று பூங்குழலி கூறினாள்.
"பெண்ணே! உன்னை நான் நம்புகிறேன். ஆனால் வானதியைத் தான் நம்பவில்லை!" என்றாள் குந்தவை.
"ஆகா! நான் இருக்கும் படகில் ஒருவேளை ஏற மறுத்து விடுவார் என்கிறீர்களா? அப்படியானால் அவரை ஏற்றிவிட்டு நான் இறங்கிக் கொள்வேன்!" என்று சொல்லிக் கொண்டே பூங்குழலி வெள்ளத்தில் பாய்ந்தாள். படகை நோக்கி விரைந்து சென்றாள்.
குந்தவை ஜோதிடரைப் பார்த்து, "ஐயா! ஜோதிடரே! உம்முடைய சாஸ்திரத்தில் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தேன்; இன்றைக்கு அந்த நம்பிக்கையை இழந்து விட்டேன்!" என்றாள்.
"ஆனால் எனக்கு இன்றைக்குத்தான் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. தேவி! கொடும்பாளூர் இளவரசியின் ஜாதகப் பிரகாரம் அவருக்கு இன்று பெரிய கண்டம் வரவேண்டும். பழுவேட்டரையர் மூலம் அது வருமோ என்று நினைத்தேன். அப்படி வராமற் போகவே ஆச்சரியமடைந்தேன். வேறு விதமாகக் கண்டம் வந்தது. இளவரசி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைப்பார்! ஆகா! அவருடைய அபூர்வமான கை ரேகைகள்! அவர் விஷயமாக நான் சொல்லியிருப்பதெல்லாம் நிறைவேறும், அதைப் பற்றி சந்தேகமில்லை!" என்றார்.
"அழகாய்த்தானிருக்கிறது. அது எப்படி நிறைவேறும்? வானதி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தாலும் உம் ஜோசியம் நிறைவேறப் போவதில்லை. சற்றுமுன் உம்முடைய வீட்டில் அந்தப் பெண் செய்த சபதத்தை நீர் கேட்கவில்லையா?" என்றாள் குந்தவை.
"யார் என்ன சபதம் செய்தாலும், என் ஜோசியம் நிறைவேறியே தீரும். அப்படி நிறைவேறாவிட்டால், என்னிடமுள்ள ஜோதிட ஏடுகளையெல்லாம் காவேரி நதியில் எறிந்து விடுகிறேன்! இது என் சபதம்!" என்றார் ஜோதிடர்.
அப்போது ஆழ்வார்க்கடியான், "ஜோதிடரே! உமது ஏடுகளை நீரே எறியும் வரையில் காவேரி மாதா காத்திருக்கவில்லை. அவளே கொண்டுபோய் விட்டாள்!" என்றான்.
ஜோதிடர் அவன் கூறியதன் உண்மையை உணர்ந்து திகைத்து நின்றார். "ஆயினும், என் ஜோதிடம் பலிக்காமற் போகாது!" என்று தம் வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.
பக்க தலைப்பு
பதினேழாம் அத்தியாயம்
யானை எறிந்தது!
சென்ற அத்தியாயகளில் கூறிய சம்பவங்கள் நடந்த அன்றைக்கு முதல் நாள், நாகைப்பட்டின நகர மாந்தரின் விருந்தினராக இளவரசர் அருள்மொழிவர்மரை நாம் விட்டு விட்டு வந்தோம். விருந்தெல்லாம் முடிந்த பிறகு அலங்கரித்த யானைமீது ஏறி இளவரசர் புறப்பட்டார். எண்ணற்ற மக்கள் அவரைத் தொடர்ந்து 'தஞ்சைக்கு வருவோம்' என்று கிளம்பினார்கள். அன்றிரவு இளவரசரும் அவருடன் வந்த ஜனங்களும் திரு ஆரூர் வந்து சேர்ந்தார்கள்.
திரு ஆரூர் மக்கள் இளவரசர் வருகையை முன்னதாக அறிந்திருந்தபடியால், அவருக்கு இராஜரீக வரவேற்பு அளித்து இராஜோபசாரங்கள் செய்தார்கள். பழம் பெரும் பதியான திரு ஆரூரின் குணவாசலிலிருந்து குடவாசல் வரையில் மக்கள் திரண்டு நின்றார்கள். நாலு இராஜ வீதிகளும் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி ஜனக்கூட்டம் நிறைந்திருந்தது. வீடுகளின் முகப்புக்கள் எல்லாம் தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. திரு ஆரூர்ச் சோழ மாளிகையையும் அதிகாரிகள் அலங்கரித்திருந்தார்கள். இளவரசருக்கு மட்டுமின்றி அவருடன் வரும் திரளான மக்களுக்கும் விருந்தளிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
முதல் நாளிரவு திரு ஆரூர் வழியாகவும் கொடும் புயல் சென்றிருந்தது. ஆனால் இளவரசர் வருகையில் உண்டான குதூகல கோலாகலப் புயல், முதல் நாள் அடித்த புயலை அடியோடு மறக்கச் செய்துவிட்டது. வீதிகளிலெல்லாம் வாத்திய முழக்கங்களும், ஆடல் பாடல்களும், குரவைக் கூத்துக்களும், பொம்மையாட்டங்களும், வீர முழக்கங்களுடன் கூடிய கத்தி விளையாட்டு - கழி விளையாட்டுக்களும் நடந்து கொண்டிருந்தன.
தஞ்சாவூர்ச் சோழ குலத்தினர் தில்லையம்பலத்தில் ஆடும் நடராஜப் பெருமானின் கோயிலுக்கு அடுத்தபடியாகத் திரு ஆரூரில் உள்ள தியாகராஜப் பெருமானின் ஆலயத்திடம் விசேஷ பக்திகொண்டு, ஏராளமான மானியங்கள் அளித்திருந்தார்கள். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் மட்டும் அது வரையில் திரு ஆரூர் வந்ததில்லை. ஆகையால் கோயிலுக்கு இளவரசர் அவசியம் வரவேண்டுமென்று ஆலயத்தார் வற்புறுத்தினார்கள். இளவரசரும் கோயிலுக்குப் போனார். பல காரணங்களினால் அவருடைய உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தபடியால் இறைவனுடைய திருக்கோலங்களில் அவருடைய மனம் பூரணமாக ஈடுபட முடியவில்லை. அர்ச்சனை ஆராதனைகள் முடிந்து இறைவனுடைய பிரசாதங்களும் பெற்றுத் திரும்பும் சமயத்தில், ஆலயத்தார்களைப் பார்த்து இளவரசர் "இந்தக் கோயிலின் இறைவருக்குத் தியாகராஜர் என்று ஏன் பெயர் வந்தது?" என்று கேட்டார்.
தேவர்களுக்குள் மகாதேவரும், மூவர்களில் முதல்வருமான சிவபெருமான் மூன்று உலகங்களிலும் வாழும் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்த தியாகங்களை ஆலயத்தார் எடுத்துச் சொன்னார்கள். மூன்று உலகங்களையும் ஆக்கவும், அழிக்கவும் வல்ல பெருமான் தம்முடைய பக்தர்களுக்கு அருள்புரியுமாறு மேற்கொண்ட கஷ்டங்களைப்பற்றிக் கூறினார்கள். உயிர்கள் உய்யும் பொருட்டுத் தவக்கோலம் பூண்டு மயானத்தில் தவம் புரிந்ததைப் பற்றிச் சொன்னார்கள். அந்தத் தவத்தையும் கைவிட்டுத் தேவர்களின் நன்மைக்காக உமையை மணந்தது பற்றிக் கூறினார்கள். எல்லா உலகங்களும் இறைவர், பிக்ஷாடன மூர்த்தியாகத் தோன்றிப் பிச்சை எடுத்த வரலாற்றைக் கூறினார்கள். தில்லை அம்பலத்தில் வந்து ஆடியது பற்றிச் சொன்னார்கள். பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பினால் அடிபட்டது பற்றியும் கூறினார்கள். அத்தகைய தியாகராஜப் பெருமான், கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திரு ஆரூரில் பழைய காலத்தில் அருள்மொழிவர்மரின் முன்னோர்கள் வசித்து வந்ததையும், மனுநீதிச் சோழன் பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டுத் தன் அருமை மகனையே தியாகம் செய்த அற்புதத்தையும் நினைவூட்டினார்கள்.
இவையெல்லாம் அருள்மொழி வர்மரின் உள்ளத்தில் நன்கு பதிந்தன. இதுகாறும் புத்த பகவானுடைய தியாகத்தை நினைந்து நினைந்து வியந்து கொண்டிருந்த இளவரசர், தேவ தேவரான சிவபெருமானைத் தியாக மூர்த்தியாகச் சித்தரிக்கும் வரலாறுகளைப் பற்றி எண்ணி எண்ணி வியக்கத் தொடங்கினார். மேலைத் தேசங்களிலே கடவுளின் திருப்புதல்வராகப் போற்றப்படும், அவதார புருஷர் மக்களின் நலத்துக்காகச் சிலுவையில் அறையப்பட்டு மாண்டார் என்ற வரலாறும் அவர் காதுக்கு எட்டியிருந்தது. இவற்றையெல்லாம் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, மனிதனுக்குத் தெய்வத்தன்மை அளிக்கக் கூடியது தியாகந்தான் என்னும் எண்ணம் அவர் மனதில் வேர் ஊன்றியது. ஆதலின் அவரைச் சூழ்ந்துள்ள மக்கள் அனைவரும் தம் மீதுள்ள அன்பின் மிகுதியினால் தம்மைத் தஞ்சைச் சிங்காதனத்தில் அமர்த்திப் பட்டம் சூட்ட விரும்புவது பற்றி அவர் மனம் அளவில்லாத வேதனை அடைந்தது. இவர்களுடைய அன்புச் சிறையிலிருந்து தப்புவது எப்படி என்பது பற்றியும் தீவிரமாக யோசிக்கலானார்.
ஆலய வழிபாட்டுக்குப் பிறகு திரு ஆரூர் மக்கள் இளவரசருக்குப் பெருவிருந்து அளித்தார்கள். அவரை உபசரிக்கும் பொருட்டுப் பற்பல கேளிக்கைகளை நடத்தினார்கள். அவற்றிலெல்லாம் இளவரசரின் உள்ளம் ஈடுபடாவிட்டாலும் வௌிப்படையாக உற்சாகம் காட்டி ஏற்றுக் கொண்டார்.
பின்னர் ஏறக்குறைய நடுநிசியில் இளவரசர் சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கே சில விபரீதமான செய்திகள் காத்திருந்தன. தஞ்சைக்கு மேற்கே பலமான மழை பெய்தபடியால் காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றின் கிளை நதிகளிலும் பெரு வெள்ளம் வந்து பல இடங்களில் கரை உடைத்துக் கொண்டதாகவும், ஒரே வெள்ளக் காடாக இருப்பதால் மேற்கொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்துவது கஷ்டமாயிருக்குமென்றும் சொன்னார்கள். இரண்டு நாள் திரு ஆரூரில், தங்கி, வெள்ளம் வடிந்த பிறகு புறப்படுவது உசிதம் என்று தெரிவித்தார்கள். இதற்கு இளவரசர் இஷ்டப்படவில்லை. தஞ்சையை உடனே அடைய வேண்டுமென்ற பரபரப்பு அவர் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. நதி உடைப்புக்களும், வெள்ளமும் அவருடைய அந்த ஆர்வத்தைத் தடை செய்துவிடக்கூடுமா, என்ன? ஆம்; இத்தனை ஜனங்களும் பரிவாரங்களும் புடை சூழப் போவதாயிருந்தால் பிரயாணம் தடைப்படத்தான் செய்யும். தாம் மட்டும் தனியே யானை மீது ஏறிச் சென்றால் பிரயாணம் தடைப்படவேண்டிய அவசியமில்லை. யானைக்கு அண்டாத ஆழம் உடைய நதி எதும் தஞ்சைக்குப் போகும் வழியில் இல்லை. அப்படியிருந்தாலும் இளவரசருக்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தண்ணீரிடத்தில் அவருக்கு எப்போதும் அச்சம் ஏற்பட்டதில்லை. பொன்னி நதி அவருடைய அன்னைக்கு மேலான அன்புடையவள் ஆயிற்றே? சின்னஞ்சிறு குழந்தைப் பிராயத்தில் தான் முழுகிப் போகாமல் காப்பாற்றிய காவேரித் தாய் இப்போது தன்னைக் காப்பாற்ற மாட்டாளா?
இந்தப் பெருந் திரளான மக்களிடமிருந்து எப்படித் தப்பித்துச் செல்வது என்பதுதான் கேள்வி. அயோத்தியின் மக்களிடமிருந்து இராமர் இரவுக்கிரவே தப்பிச் சென்றது பொன்னியின் செல்வருக்கு நினைவு வந்தது. அவ்விதமே அவரும் இரவில் ஜனங்கள் தூங்கும் சமயத்தில் போய்விட்டால் என்ன? எல்லாவற்றுக்கும் யானைப் பாகனிடம் எந்த நேரத்திலும் புறப்பட ஆயத்தமாயிருக்கும்படி சொல்லி வைப்பது நல்லது.
இந்த எண்ணம் தோன்றியதும் யானைப்பாகனை அழைத்து வரும்படி அரண்மனைச் சேவகனுக்கு இளவரசர் கட்டளையிட்டார். சேவகன் வீதிக்குச் சென்று பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்தான். யானை மட்டும் வாசலில் கட்டியிருக்கிறதென்றும் யானைப் பாகனைக் காணோம் என்றும் தெரிவித்தான்.
"ஒருவேளை வீதிகளில் நடைபெறும் ஆடல்பாடல் களியாட்டங்களைப் பார்க்கப் போயிருப்பான். அவன் திரும்பி வந்ததும் அழைத்து வா! அல்லது யாரையாவது சிலரை அனுப்பித் தேடிப் பார்க்கச் சொல்!" என்று இளவரசர் கட்டளையிட்டார்.
"ஆகட்டும், அரசே! படகோட்டி முருகய்யன் என்பவன் ஒருவன் மாளிகை வாசலில் வந்து காத்திருக்கிறான். தங்களை அவசரமாகப் பார்க்கவேண்டும் என்று அவன் பிடிவாதம் பிடிக்கிறான்!" என்றான் சேவகன்.
படகோட்டி முருகய்யனை இத்தனை நேரம் மறந்திருந்தது பற்றி இளவரசர் பச்சதாபங்கொண்டார். தாம் இரகசியமாகத் தப்பிச் செல்வதற்கு அவன் ஒருவேளை உதவியாயிருந்தாலும் இருப்பான். அவனை உடனே தம்மிடம் அனுப்பும்படி அரண்மனைச் சேவகனுக்குக் கட்டளையிட்டார்.
முருகய்யன் இளவரசரிடம் வந்ததும் அவருடைய காலில் விழுந்து, தேம்பி அழத் தொடங்கினான் இந்த மூட பக்தனைச் சமாதானப்படுத்துவதும் அவனிடம் விஷயங்களைக் கிரஹிப்பதும் சிரமமான காரியந்தான். ஆயினும் செய்யவேண்டும். முருகய்யன் தனது துயரத்தின் காரணத்தைக் கூறினான் அதன் விவரமாவது;
முருகய்யன் நாகைப்பட்டினத்திலேயே தன் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டான். திரு ஆரூர் வந்து சேர்ந்த பிறகு அவளும் அங்கு வந்திருக்கிறாளா என்று பார்ப்பதற்காக ஜனக் கூட்டத்தினிடையில் அலைந்து சுற்றினான். ஒரு ஜாம நேரம் தேடிய பிறகு இராஜ வீதியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சந்தின் முனையில் அவன் மனைவியும், இளவரசர் ஏறிவந்த யானையைச் செலுத்திய யானைப்பாகனும் போவதைக் கண்டான். அவர்கள் சந்தில் புகுந்ததும் மிக வேகமக நடந்து சென்றார்கள். முருகய்யனும் தொடர்ந்து போனான்.கடைசியாக ஒரு வீட்டின் வாசலில் நின்றார்கள். அங்கே இன்னொரு மனிதன் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அவனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான். பிறகு மூன்று பேரும் சேர்ந்து போனார்கள். முருகய்யனுக்கு ஏதேதோ சந்தேகங்கள் உதித்தன. தன் மனைவியின் ஒழுக்கத்தைப் பற்றியே ஐயம் கொண்டான். உண்மையைக் கண்டுபிடிக்க ஆத்திரம் அடைந்தான். ஆகையால் அவர்களைப் போய்ப் பிடித்துவிடாமல் பின்னாலேயே போனான். அவர்கள் ஊரைத் தாண்டி வாய்க்கால் - வயல் வரப்புகள் வழியாகச் சென்று கடைசியில் ஒரு மயானத்தை அடைந்தார்கள்.முருகய்யனுடைய உள்ளம் பயங்கரத்தை அடைந்தது. ஆயினும் அவன் விடாமல் சென்று மயானத்தில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான்.
ராக்கம்மாளுடனும், யானைப்பாகனுடனும் வழியில் சேர்ந்து கொண்ட மனிதன், மயானத்தில் சாம்பலைப் பூசிக்கொண்டு ஏதேதோ பயங்கரமான மந்திரங்களை உச்சரித்தான். பிறகு யானைப்பாகனைப் பார்த்து, "நாளைக் காலையில் உன் உயிருக்கு ஆபத்து வரப்போகிறது! ஜாக்கிரதையாயிருந்து பிழை!" என்றான்.
யானைப்பாகன் கதி கலக்கத்துடன், "என்ன ஆபத்து? எவ்விதம் வரும்? தெரிந்தால் அல்லவா பிழைக்கலாம்?" என்றான்.
மந்திரவாதி "யானைத்துத் திடீர் என்று மதம் பிடிக்கும்! நீ அருகில் சென்றதும் உன்னைக் கீழே தள்ளிவிட்டு ஓடும்! உன்னால்தான் யானைக்கு மதம் பிடித்தது என்று ஜனங்கள் எண்ணுவார்கள். உன் கையிலுள்ள அங்குசத்தைப் பிடுங்கி உன்னைக் கொன்று விடுவார்கள்!" என்றான் மந்திரவாதி.
"ஐயையோ! தப்புவதற்கு வழி என்ன?" என்று யானைப்பாகன் கேட்டான்.
"நாளைக் காலையில் யானையிடம் நெருங்காமலிருந்து விடு!" என்றான் மந்திரவாதி.
"அது எப்படி முடியும்? பின்னால் இராஜ தண்டனைக்கு உள்ளாக நேரிடுமே?" என்று யானைப்பாகன் அலறினான்.
"அப்படியானால், என் வீட்டுக்கு வா! மந்திரித்த கவசம் தருகிறேன். அதை அணிந்து கொண்டு போ! கையில் அங்குசத்தைக் கொண்டு போகாதே!" என்றான் மந்திரவாதி.
"அப்படியே ஆகட்டும், ஐயா! இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து நேருமா?" என்று யானைப்பாகன் கேட்டான்.
"அது எப்படிச் சொல்ல முடியும்? இளவரசர் வந்து கேட்டால் அல்லவோ சொல்லலாம்?" என்றான் மந்திரவாதி.
முருகய்யன் அதற்குமேல் அங்கே நிற்க மனமில்லாமல் ஓடி வந்துவிட்டான். நாளைக் காலையில் யானைக்கு மதம் பிடிக்கப்போகும் செய்தியை இளவரசரிடம் சொல்லி எச்சரிப்பதற்காக்வே முக்கியமாக ஓடி வந்தான்... இதையெல்லாம் கூறிவிட்டு முருகய்யன் மீண்டும் தேம்பி அழுதான். "அப்பனே! ஏன் அழுகிறாய்? நீதான் சமயத்தில் வந்து எச்சரிக்கை செய்துவிட்டாயே? இனி, நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்றார் பொன்னியின் செல்வர்.
"ஐயா! இதிலெல்லாம் என் மனைவி சம்பந்தப்படுவது பற்றித் தான் வருந்துகிறேன். ராக்கம்மாளைப் பற்றி என்ன நினைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. அவளைப்பற்றிய பழைய சந்தேகங்கள் திரும்பி வருகின்றன!" என்றான் முருகய்யன்.
"அவளை நான் திருத்திவிடுகிறேன். நீ கவலைப்படாதே! உடனே திரும்பிப் போ! யானைப்பாகனை எப்படியாவது தேடிப் பிடித்து அழைத்துக்கொண்டு வா!" என்றார் இளவரசர்.
படகோட்டி முருகய்யன் போன பிறகு பொன்னியின் செல்வர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். முருகய்யன் கண்டது, கேட்டது இவற்றின் பொருள் என்னவாயிருக்கும் என்று ஊகத்தினால் அறிய முயன்றார். பழுவேட்டரையர்களின் உத்தேசம், பாண்டி நாட்டுச் சதிகாரர்களின் முயற்சி,- இவற்றைக் குறித்து இளையபிராட்டி கூறியதை இளவரசர் நினைவு படுத்திக் கொண்டார். அந்தச் சதிகாரர்களின் முயற்சியில் இது ஒன்றாயிருக்கலாம். அல்லது வெறும் அசட்டுத்தனமாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், காலையில் தாம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஒரு முடிவுக்கு வந்தார். பிறகு, நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தார்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து பிரயாணத்துக்கு ஆயத்தமானார். மாளிகை வாசலுக்கு வந்தார். அங்கே கட்டியிருந்த யானை இளவரசரைப் பார்த்ததும் ஆதரவோடு துதிக்கையை நீட்டி அவரைத் தடவிக் கொடுத்துக் கொஞ்சியது. "யானைக்கு மதம் பிடிக்கும்" என்று மந்திரவாதி கூறியதாக முருகய்யன் சொன்னது இளவரசருக்கு நினைவு வந்தது. மதம் பிடிக்கும் என்பதற்கு அறிகுறி எதுவும் இல்லை.
"யானைப்பாகன் எங்கே?" என்று இளவரசர் உரத்த குரலில் கேட்டார். உடனே பல குரல்கள் "யானைப்பாகன் எங்கே?" என்று எதிரொலி செய்தன. இளவரசரைப் போலவே அதிகாலையில் பிரயாணத்துக்கு ஆயத்தமாக ஜனங்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களிடையே அகப்பட்டுக்கொண்டு முன்னால் வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்த முருகய்யனைப் பார்த்தார். அவனை நோக்கிச் சமிக்ஞை செய்யவே ஜனங்கள் அவனுக்கு வழிவிட்டார்கள். முருகய்யன் அருகில் வந்து இரவில் வெகுநேரம் தேடிய பிறகு தன் மனைவியை மாத்திரம் கண்டு பிடித்ததாகவும், அவள் தான் மயானத்துக்குப் போனதையெல்லாம் அடியோடு மறுத்து, முருகய்யனுக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்று கூறியதாகவும், யானைப்பாகன் அகப்படவே இல்லை என்றும் சொன்னான்.
"அதைப்பற்றிக் கவலை இல்லை, முருகய்யா! யானையின் காலைக் கட்டியுள்ள சங்கிலியை அவிழ்த்து விடு!" என்றார் இளவரசர்.
முருகய்யன் அவ்வாறு அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கும் போதே, "இதோ யானைப்பாகன் வந்துவிட்டான்!" என்று ஒரு குரல் கேட்டது. "வந்துவிட்டான்! வந்துவிட்டான்!" என்று பல குரல்கள் ஒலித்தன.
கையில் அங்குசத்துடன் யானைப்பாகன் ஓடிவந்து கொண்டிருந்தான். கூட்டத்திலிருந்தவர்கள் அவசர அவசரமாக விலகிக் கொண்டு அவனுக்கு வழிவிட்டார்கள். பொன்னியின் செல்வரும் "நல்ல வேளை!" என்று பெருமூச்சு விட்டு, யானைப்பாகன் ஓடி வந்துகொண்டிருந்த திசையை நோக்கினார்.
பாவம்! ஒருநாள் இரவு அநுபவத்தில் அவன் எவ்வளவு மாறிப் போயிருக்கிறான்? பயப்பிராந்தி கொண்டவனாக அல்லவா தோன்றுகிறான்? ஒரு கையில் அங்குசம் வைத்துக்கொண்டிருந்த யானைப் பாகன், யானையின் அருகில் வந்து அதன் துதிக்கையை இன்னொரு கையால் தொட்டான்.
யானை உடனே அவனைத் துதிக்கையால் சுழற்றிப் பிடித்துத் தலைக்கு மேலே தூக்கியது. கேட்டவர்கள் பீதி கொள்ளும்படியாகப் பிளறிவிட்டு, யானைப்பாகனை வீசி எறிந்தது! யானைப்பாகன் வெகு தூரத்திலே போய் விழுந்தான். அவன் கையில் வைத்திருந்த அங்குசம், இன்னும் அப்பாலே போய் விழுந்தது. "யானைக்கு மதம் பிடித்துவிட்டது!" என்ற பயங்கரம் நிறைந்த குரல் அந்த ஜனக் கூட்டத்திலே எழுந்தது. ஜனங்கள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள்!
பக்க தலைப்பு
பதினெட்டாம் அத்தியாயம்
ஏமாந்த யானைப் பாகன்
"சந்தர்ப்பம் என்பது கடவுளுக்கு ஒரு புனை பெயர்" என்பதாகத் தற்கால அறிஞர் ஒரு கூறியிருக்கிறார். கடவுள் தாம் செய்யும் காரியத்தைத் தாம் செய்தது என்று காட்டிக் கொள்ள விரும்பாத போது "சந்தர்ப்பம்" என்னும் புனை பெயரைச் சூட்டிக் கொள்ளுகிறாராம்! உலக சரித்திரத்தில் மிகப் பிரசித்திபெற்ற வீரர்கள், அரும் பெரும் காரியங்களைச் சாதித்த மகான்கள், - இவர்களுடைய வரலாறுகளைப் பார்க்கும்போது, சந்தர்ப்பம் இவர்களுக்கு மிக்க உதவி செய்திருக்கிறது என்பதை அறியலாம். அவர்களிடம் கடவுள் விசேஷ கருணை காட்டி அத்தகைய சந்தர்ப்பங்களை அனுப்புவதாகச் சிலர் கூறுவர். அவரவர்கள் பிறந்த வேளையின் மகிமை; ஜாதகத்தின் பலன், பிரம்மா எழுதிய, பூர்வஜன்ம சுகிர்தம், -என்றெல்லாம் வாழ்க்கையில் ஏற்படும் அநுகூலமான சந்தர்ப்பங்களுக்குக் காரணங்கள் கற்பிப்போரும் உண்டு.
நம் காலத்தில் காந்தி மகான் தென்னாப்பிரிக்கா போவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படாதிருந்திருந்தால் அவர் மனித குல சிரேஷ்டர் என்றும், அவதார புருஷன் என்றும் மக்களால் போற்றப்படும் நிலையை அடைந்திருக்க முடியுமா? சந்திரகுப்தன் விக்கிரமாதித்தன், ஜூலியஸ் ஸீஸர், நெப்போலியன், டியூக் ஆப் வில்லிங்டன், ஜார்ஜ் வாஷிங்டன், ஜோஸப் ஸ்டாலின் போன்ற மகா வீரர்களின் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் எவ்வளவோ உதவி செய்திருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறோம். இதிலிருந்து, ஆண்டவன் அவ்வளவு பாரபட்சமுள்ளவர் என்று முடிவு கட்டுதல் தவறாகும். சரித்திரத்தில் புகழ்பெற்ற மகான்களையும் வீரர்களையும் தவிர இன்னும் எத்தனையோ பேருக்கும் ஆண்டவன் சந்தர்ப்பங்களை அனுப்பிக் கொண்டுதானிருக்கிறார்.
ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வது மனிதனுடைய சமயோசித அறிவையும், சரியான சமயத்தில் சரியான முடிவு செய்யும் ஆற்றலையும் பொறுத்தது. சந்தர்ப்பங்களைக் கை நழுவ விடுகிறவர் கோடானுகோடிப் பேர் பெயரும் புகழும் இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து உலகைவிட்டுச் செல்கிறார்கள். சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் சரித்திரத்தில் தங்கள் பெயரை நிலைநாட்டிவிட்டுச் செல்கிறார்கள். ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறக்கிறவர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவோ வித்தியாசமாயிருப்பதற்குக் காரணம் வேறு என்ன சொல்லமுடியும்?
இளவரசர் அருள்மொழிவர்மரின் வாழ்க்கையில் இப்போது அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. தன் அருகில் நெருங்கிய யானைப் பாகனைத் தூக்கி எறிந்தபோது, "யானைக்கு மதம் பிடித்துவிட்டது!" என்ற கூச்சல் கிளம்பியபோது, அந்தச் சந்தர்ப்பம் அவரை வந்தடைந்தது. அதை அவர் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டிருந்தால், இந்த வரலாறு வேறுவிதமாகப் போயிருக்கும். தமிழ் நாட்டின் சரித்திரத்தில் இராஜராஜ சோழர் உன்னத ஸ்தானத்துக்கு வந்திருக்கவும் முடியாது.
அதிர்ஷ்டவசமாக அந்தச் சந்தர்ப்பத்தைத் தெரிந்து கொண்டு அதை உபயோகப்படுத்திக் கொள்ளும் சமயோசித அறிவாற்றல் அவரிடம் இருந்தது. படகோட்டி முருகய்யன் முதல் நாள் கூறிய வரலாற்றை நினைவுபடுத்திக்கொண்டார். யானையை நெருங்கி வந்தவன் உண்மையான யானைப்பாகன் அல்ல, ஏதோ தீயநோக்கத்துடன் வந்தவன், அதனாலேதான் யானை அவனைத் தூக்கி எறிந்திருக்கிறது என்பதையும் ஒரு நொடியில் ஊகித்துக்கொண்டார்.
வந்தவன் யார், எதற்காக வந்தான் என்பதையெல்லாம் அச்சமயம் கண்டு பிடிக்க முயன்றால், கிடைத்த சந்தர்ப்பம் தவறிபோய்விடும். "யானைக்கு மதம் பிடித்துவிட்டது!" என்ற கூச்சலினால் மக்களிடையே உண்டான குழப்பத்தைப் பின்னர் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அந்த ஜனக்கூட்டத்தினிடையிலிருந்து தப்பிச் சென்று கூடிய விரைவில் தஞ்சையை அடைவது அச்சமயம் அவருடைய பிரதான நோக்கமாயிருந்தது. அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இதைக் காட்டிலும் சரியான சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.
ஆதலின், முருகய்யனைத் தம் அருகில் அழைத்து, அவன் காதோடு ஏதோ சொல்லிவிட்டு, அவன் தோள்மீது ஏறி யானையின் மீது தாவினார். அப்படித் தாவும்போதே யானை மேலிருந்த அம்பாரியைத் தட்டிவிட்டார். அம்பாரி கீழே விழுந்து உருண்டது. பின்னர், யானையிடத்திலும் அதன் பாஷையில் ஏதோ சொன்னார். உடனே யானை பிய்த்துக் கொண்டு கிளம்பியது. முன்போல, பயங்கரமான குரலில் பிளிறிக் கொண்டே விரைவாக நடந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஓடவே தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் முருகய்யன், "ஐயோ! யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடுங்கள்! உடனே ஓடுங்கள்" என்று பெருங்கூச்சலிட்டான்.
ஜனங்கள் முனைக் காட்டிலும் அதிக பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அக்கம் பக்கத்திலிருந்து குறுக்கு வீதிகளிலும் சந்துகளிலும் புகுந்து ஓடினார்கள். திறந்திருந்த வீடுகளுக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டார்கள். வேறு எதற்கும் அஞ்சாத தீர நெஞ்சமுள்ளவர்களும் மதங்கொண்ட யானை என்றால் ஓடத்தான் வேண்டும். எப்பேர்ப்பட்ட வீராதி வீரனானாலும் மதங்கொண்ட யானையை எதிர்க்க முடியாது. ஆயுதங்களுடனே எதிர்த்து நிற்பதும் இயலாத காரியம். நிராயுதபாணிகளான ஜனங்கள், ஆண்களும், பெண்களும், முதியோர்களும், பாலர்களும், மதயானைக்கு முன்னால் சிதறி ஓடாமல் வேறு என்ன செய்ய முடியும்?
திரு ஆரூர் நகரத்தைத் தாண்டியது, இளவரசர் யானையை நேரே தஞ்சாவூர்ச் சாலையில் செலுத்துவதற்குப் பதிலாக, வடமேற்குத் திசையை நோக்கித் திருப்பினார். முதலிலேயே அவருக்கு வழியில் பழையாறையை அடைந்து அங்கே தம் திருத்தமக்கையார் இருந்தால், அவரைப் பார்த்துப் பேசிவிட்டுத் தஞ்சை போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அது ஊர்ஜிதம் ஆயிற்று. மதம் பிடித்த யானை குறுக்கே விழுந்து ஓடுவதுதான் இயற்கையாயிருக்கும். தஞ்சைச் சாலையில் சென்றால் மக்கள் தம்மை விடாமல் தொடர்ந்து வரக்கூடும். வழியில்லாத வழியில் யானை போய்விட்டால், ஜனங்கள் தொடர்ந்து வரமுடியாது!
இவ்விதம் அதி விரைவில் சிந்தித்து முடிவுசெய்து, யானையை வடமேற்குத் திசையில் குறுக்கு வழியில் செலுத்தினார். வயல்கள், வரப்புகள், வாய்க்கால்கள், நதிகள், அவற்றின் உடைப்புகள் - இவை ஒன்றையும் பொருட்படுத்தாமல் யானை ஜாம் ஜாம் என்று மனம் போன போக்கில் சென்றது. இளவரசரின் உள்ளமும் இனந்தெரியாத உற்சாகத்தை அடைந்து, கூண்டிலிருந்து விடுதலை அடைந்த பறவையைப் போல் ஆகாச வௌியில் வட்டமிட்டுத் திரிந்தது. தம்முடைய வாழ்நாளில் ஒரு முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றும் உள்ளுணர்ச்சியிலிருந்து உற்சாகமும் பரபரப்பும் பொங்கிக் கொண்டிருந்தன.
யானை ஓடத் தொடங்கிய அதே சமயத்தில் முருகய்யனும் "யானைக்கு மதம் பிடித்துவிட்டது!" என்று கூச்சலிட்டுக் கொண்டு ஓடினான். யானையினால் தூக்கி எறியப்பட்ட பாகன் விழுந்த இடத்தைச் சுமாராகக் குறி வைத்துக்கொண்டு சென்றான். இளவரசர் தங்கியிருந்த சோழ மாளிகைக்குச் சற்றுத் தூரத்தில் நாடெங்கும் புகழ் பெற்ற கமலாலயம் என்றும் தடாகம் இருந்தது. அந்தக் குளக்கரையின் அருகில் சென்று பார்த்தான். யானைக்குப் பயந்தவர்கள் பலர் குளக்கரையில் இறங்கி நின்றார்கள்.சிலர் குளத்தில் தண்ணீரிலே கூட இறங்கியிருந்தார்கள். ஒரு மனிதன் தட்டு தடுமாறி நீந்திக் கரையேறிக் கொண்டிருந்தான். அவனை முருகய்யன் உற்றுப் பார்த்தான். முதல் நாளிரவு யானைப்பாகனையும், ராக்கம்மாளையும் அழைத்துக்கொண்டுபோன மந்திரவாதிதான் அவன்! அதிர்ஷ்டக்காரன்! ஆயுள் ரொம்பக் கெட்டி! யானை தூக்கி எறிந்ததும் உயிர் பிழைத்திருக்கிறான் அல்லவா? கையில் அங்குசத்துடன் சற்றுமுன் யானையை நோக்கி ஓடி வந்தவன் இவனேதான்...! அங்குசம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அதுவும் குளத்தில் விழுந்து விட்டதா?
முருகய்யன் அவன் அருகில் சென்று, "யானைப்பாகா! நல்ல வேளை பிழைத்து எழுந்து வந்தாய்! அங்குசம் எங்கே?" என்று கேட்டான்.
ரேவதாஸன் என்னும் கிரமவித்தன் முருகய்யனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "என்னப்பா கேட்கிறாய்? நீ யார்? நான் இப்போது தான் குளத்தில் குளித்துவிட்டுக் கரை ஏறுகிறேன்!" என்று சொன்னான்.
"ஓகோ! அப்படியா? நீ யானைப்பாகன் இல்லையா? யானை தூக்கி எறிந்தது உன்னை அல்லவா? அப்படியானால், யானைப்பாகன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான்.
கிரமவித்தன் மேலும் திகைப்புடன், "நான் என்ன கண்டேன்? என்னை ஏன் கேட்கிறாய்?" என்றான்.
"மந்திரவாதி! என்னை ஏன் ஏமாற்றப் பார்க்கிறாய்? நேற்றிரவு யானைப்பாகனை இடுகாட்டுக்கு அழைத்துப்போய் `இளவரசர் ஏறும் யானைக்கு மதம் பிடிக்கும்' என்று எச்சரிக்கை செய்தாயே? அப்படியிருக்க, அந்த எச்சரிக்கையை நீயே மறந்துவிட்டு யானையிடம் அகப்பட்டுக் கொண்டாயே? அது உன் பாடு! யானைப்பாகன் எங்கே? என் மனைவி ராக்கம்மாள் எங்கே?" என்று கேட்டான் முருகய்யன். கிரமவித்தனின் முகத்தில் முன்னைவிடத் திகைப்பும் பீதியும் அதிகமாயின.
"யானைப் பாகனாவது? ராக்கம்மாளாவது? உனக்கு என்ன பைத்தியமா?" என்று சொல்லிக்கொண்டே கிரமவித்தன் சுற்று முற்றும் பார்க்கலானான்.
"ஆம், ஆம்! யானைக்கு மதம் பிடித்தது போலத்தான் எனக்கும் பைத்தியம் பிடித்திருக்கிறது! யானைப்பாகன் எங்கே என்று மட்டும் சொல்லிவிடு! இல்லாவிடில்..." என்று முருகய்யன் சிறிது அதிகார தோரணையில் அவனிடம் பேசத் தொடங்கினான்.
சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்த ரேவதாஸன் இப்போது முருகய்யனைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். "நீ என்னை `மந்திரவாதி' என்கிறாய்! நீ என்னைவிடப் பெரிய மந்திரவாதியாயிருக்கிறாயே! உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது! உன்னிடம் மறைப்பதில் பயனில்லை. 'யானைக்கு மதம் பிடிக்கப் போகிறது! அதன் பேரில் ஏறவேண்டாம்' என்று இளவரசருக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே ஓடி வந்தேன். அதன் பலன் இப்படி ஆயிற்று. உன் மனைவியும் யானைப் பாகனும் அங்கே ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அவர்களை நீ பார்க்க விரும்பினால், நானே அழைத்துப் போகிறேன். இளவரசருக்கு ஒன்றும் நேரவில்லையே! சௌக்கியமாயிருக்கிறார் அல்லவா?" என்றான்.
"இளவரசர் சௌக்கியம். அவர்தான் உன்னையும், யானைப் பாகனையும் அழைத்துக்கொண்டு வரும்படி எனக்குக் கட்டளையிட்டார்..."
"இளவரசரிடம் எனக்கு நல்ல பரிசு வாங்கித் தரவேண்டும்! பார்க்கப் போனால், அவரை நான் காப்பாற்றியது உண்மைதானே? ஆ! அதோ...!" என்று மந்திரவாதி வியப்புடன் கூறி நிறுத்தினான்.
மந்திரவாதி உற்று நோக்கிய இடத்தில், குளத்தின் கரையோரமிருந்த அரளிச் செடிப் புதர்களில் வேல் முனை போன்ற ஒன்று சிறிது தெரிந்தது. "ஆ! அங்குசம்!" என்று சொல்லிக்கொண்டே மந்திரவாதி அந்த அரளிச் செடிப்புதரை நோக்கி ஓடினான். முருகய்யன் அவனைவிட விரைந்து ஓடி அரளிச் செடிப் புதர்களில் புகுந்து அங்குசத்தின் அடிப்பிடியைப் பிடித்து ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டான்.
பின்னர், திரும்பிப் பார்த்தான். மந்திரவாதியைக் காணவில்லை. "அடடா ஏமாந்து போய்விட்டோமே?" என்ற துணுக்கத்துடன் அங்குமிங்கும் ஓடிப் பார்த்தான். பயனில்லை. குளக்கரையில் கூடியிருந்த பெரும் ஜனக் கூட்டத்தின் மத்தியில் புகுந்து மந்திரவாதி கிரமவித்தன் மாயமாய் மறைந்து விட்டான். மதயானை ஓடிப்போன பிறகு, ஜனங்கள் மறுபடியும் திரும்பிச் சோழ மாளிகையை நெருங்கி வந்து கொண்டிருப்பதை முருகய்யன் கண்டான். ஆனால் அங்கே அவன் நிற்கவில்லை.
முதல் நாள் மந்திரவாதியை அவன் பார்த்த வீடு எந்தத் திசையில் இருந்தது என்பதை நினைத்துப் பார்த்துக்கொண்டு, அதை நோக்கிச் சென்றான். வழியெல்லாம் இராஜ வீதிகளிலெல்லாம், ஜனங்கள் ஆங்காங்கு கூடிக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.மதயானை ஓடியதைப் பார்த்தவர்களில் சிலர், "யானையில் பேரில் யாரோ ஆள் இருந்ததாகச் தோன்றியது" என்றார்கள். மற்றும் சிலர் அதை மறுத்தார்கள். "அது எப்படி இருக்க முடியும்? யானைப்பகனைத் தூக்கி எறிந்தவுடனேதான் யானை ஓடத் தொடங்கி விட்டதே? அதன் பேரில் யார் ஏறியிருக்க முடியும்" என்றார்கள். எல்லாரும் இவ்வாறு விவாதித்துக்கொண்டே சோழ மாளிகையை நோக்கித் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். தங்கள் இதயங் கவர்ந்த இளவரசருக்கு அபாயம் ஒன்றும் நேரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஜனங்கள் அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.
முருகய்யன் ஜனங்கள் வந்த திசைக்கு எதிர்த் திசையைச் சென்று குறிப்பிட்ட சந்தை அடைந்தான். அங்கே அப்போது ஜன நடமாட்டமே இருக்கவில்லை. எல்லாரும் இராஜ வீதிகளுக்குப் போய்விட்டார்கள். இரவில் பார்த்த வீட்டைப் பகலில் அவ்வளவு சுலபமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. உற்றுப் பார்த்துக்கொண்டே முருகய்யன் போனான். ஒரு வீடு மட்டும் வௌிப்புறம் பூட்டப்பட்டிருந்தது.உள்ளேயிருந்தது ஏதோ முனகல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பாழும் வீடு இருந்தது. முருகய்யன் அந்தப் பாழும் வீட்டில் புகுந்து அடுத்த வீட்டின் மேற்கூரையில் ஏறி முற்றத்தில் குதித்தான். அவன் எதிர்பார்த்தபடியே அங்கே யானைப்பாகன் தென்பட்டான். அவன் வெறி கொண்டவனைப்போல் தோன்றினான். அவனுடைய கால்களையும், கைகளையும் கட்டியிருந்ததுமல்லாமல் ஒரு தூணோடும் அவனைச் சேர்த்துக் கட்டியிருந்தது. யானைப்பாகன் தன் கைக்கட்டுக்களைப் பல்லால் கடித்து அவிழ்க்கப் பெரு முயற்சி செய்து கொண்டிருந்தான்.நடு நடுவில் கடிப்பதை நிறுத்தி விட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டுமிருந்தான்.
முருகய்யனைப் பார்த்ததும் அவன் முகத்தில் சிறிது தௌிவு ஏற்பட்டது. நாகைப்பட்டினத்திலேயே அவன் முருகய்யனைப் பார்த்திருந்தான். இளவரசருக்கு வேண்டியவன் என்பதையும் அறிந்துகொண்டிருந்தான். ஆகையால் இப்போது பரபரப்புடன், "முருகய்யா! அவிழ்த்து விடு! அவிழ்த்து விடு! சண்டாளர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்! இளவரசருக்கு அபாயம் ஒன்றும் நேரவில்லையே?" என்றான்.
முருகய்யன் கட்டுக்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டே காலையில் நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறிவிட்டு, யானைப் பாகனிடம் அவனுக்கு நேர்ந்தது என்னவென்று விசாரித்தான். யானைப்பாகனும் ஒருவாறு தட்டுத்தடுமாறிக் கூறினான். யானைக்கு மதம் பிடித்தாலும் தனக்கு ஒன்றும் நேராமல் மந்திரகவசம் தருவதாகச் சொல்லி, இந்த வீட்டுக்கு அழைத்து வந்தார்கள் என்றும், இங்கே வந்ததும் சாம்பிராணிப் புகை போட்டுக் கொண்டே மந்திரவாதி மந்திரம் ஜபித்தான் என்றும், அப்போது தனக்கு மயக்கமாக வந்து தூங்கி விழுந்து விட்டதாகவும், கண் விழித்துப் பார்த்தபோது தன்னைத் தூணோடு கட்டிப் போட்டிருந்ததாகவும் கூறினான்.
இருவரும் அந்த வீட்டை விட்டு வௌியேறிச் சோழ மாளிகையை நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்கள் அம்மாளிகையை அடைந்தபோது அங்கே முன்னைவிடப் பெருங்கூட்டம் கூடியிருப்பதையும் ஜனங்கள் மிக்கக் கவலையோடு பேசிக் கொண்டிருப்பதையும் கண்டார்கள். ஜனங்களின் கவலைக்குக் காரணம், இளவரசரைக் காணோம் என்பதுதான். அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைத் திட்டமாக அறிந்தவர்கள் அங்கு யாரும் இல்லை. யானைமேல் ஒருவர் இருந்ததைப் பார்த்ததாக மட்டும் சிலர் கூறினார்கள். அவர் ஒருவேளை இளவரசராக இருக்கலாம் என்று ஊகித்தார்கள்.
இளவரசர் யானைகளைப் பழக்கும் வித்தையில் மிகத் தேர்ந்தவர் என்பதும், யானைகளின் பாஷைகூட அவருக்குத் தெரியும் என்பதும் சோழ நாட்டில் பிரசித்தமாயிருந்தன. ஆகையால், மதங்கொண்ட யானையினால் ஒருவருக்கும் தீங்கு நேரிடாமல் அதன் மதத்தை அடங்கும் பொருட்டுப் பொன்னியின் செல்வர் யானைமேல் ஏறிச் சென்றிருக்க வேண்டும் என்று சிலர் தங்கள் உறுதியான நம்பிக்கையைத் தெரிவித்தார்கள். இச்சமயத்திலே அங்கே முருகய்யனும், யானைப் பாகனும் வந்தார்கள். யானைப்பாகனுக்கு நேற்றிரவு நேர்ந்தது அங்குள்ளவர்களுக்குத் தெரிந்தபோது, அவர்களுடைய வியப்பும் திகைப்பும் பன்மடங்கு அதிகமாயின.
யானைப் பாகனைக் கட்டிப் போட்டுவிட்டு, அங்குசத்தை எடுத்துக் கொண்டு ஓடிவந்தவன் சோழ குலத்தின் விரோதிகளால் அனுப்பப்பட்டவனாயிருக்க வேண்டும். "ஒருவேளை பழுவேட்டரையர்களே அனுப்பியிருக்கக்கூடும்!" என்று சிலர் ஊகித்துக் கூறியதைப் பெரும்பாலான மக்கள் நம்பினார்கள். அதனால் பழுவேட்டரையர்களின் மீது அவர்களுடைய கோபம் அதிகமாயிற்று. அந்தக் கோபவெறியுடனே பலர் உடனே தஞ்சையை நோக்கிக் கிளம்பினார்கள். யானை போன வழியை விசாரித்துக் கொண்டு ஒரு பகுதியினரும், தஞ்சாவூருக்கு நேரே போகும் சாலையில் மற்றவர்களும் கோபாவேசத்துடன் புறப்பட்டுச் சென்றார்கள்.
பக்க தலைப்பு
பத்தொன்பதாம் அத்தியாயம்
திருநல்லம்
ஜோசியர் வீட்டின் ஓடுக் கூரையையும், அதனுடன் தன்னுடைய உயிரையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த வானதி, காவேரி நதியின் உடைப்பு வெள்ளத்தில் மிதந்து மிதந்து போய்க் கொண்டிருந்தாள். வெள்ளம் அவளை மேலே மேலே அழைத்துக் கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றது. சில சமயம் மெதுவாகச் சென்றது. சிலசமயம் வேகமாக இழுத்துச் சென்றது. வேறு சில போது பெரிய சுழல்களிலும் அந்த வீட்டுக் கூரை அகப்பட்டுக்கொண்டு சுற்றிச் சுழன்று தடுமாறிக் கொண்டு சென்றது.
வெள்ளத்தின் ஆழம் அதிகமில்லாத மேட்டுப்பாங்கான இடங்களில் சிலபோது சென்றது. அது, மரங்களில் அடியில் வெள்ளம் எவ்வளவு தூரம் ஏறியிருக்கிறது என்பதைப் பார்த்ததும், ஆங்காங்கு காவேரிக் கரை ஓரமிருந்த மண்டபங்கள் எவ்வளவு தூரம் முழுகியிருக்கிறது என்பதைப் பார்த்ததும் தெரிந்தது. மேட்டுப் பாங்கான இடங்களில் கீழே இறங்கலாமா என்று வானதி யோசிப்பதற்குள் ஆழமான இடங்களுக்குச் சுழல்கள் இழுத்துப் போய்விட்டன.
இறங்குவதற்கும் வானதிக்கும் அவ்வளவாக மனம் இல்லை. ஏனெனில், பொன்னி நதியின் அவ்வெள்ளம் அவளைப் பொன்னியின் செல்வர் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வதாக அவளுடைய மனதில் ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தது. இளவரசருக்கு ஏற்படப் போகும் அபாயத்தைப் பழுவேட்டரையர் மூடு மந்திரமாக கூறியது அவள் உள்ளத்திலும் பதிந்திருந்தது. அவரை அந்த அபாயத்திலிருந்து பாதுகாக்கவே காவேரி நதி தன்னை அழைத்துப் போவதாக அவள் எண்ணிக் கொண்டாள்.
ஆகா! அந்தப் பூங்குழலிக்குத்தான் எவ்வளவு கர்வம்? இளவரசர் விஷயத்தில் எவ்வளவு உரிமை கொண்டாடுகிறாள்? ஆயினும், உரிமை கொண்டாடுவதற்குக் காரணம் உண்டு. இன்று இளவரசர் பிழைத்திருப்பதே பூங்குழலியினால் தானே? - ஒரு நாளும் இல்லை! - அந்தக் குடந்தை ஜோதிடர் கூறியதைத்தான் வானதி கேட்டிருந்தாளே! இளவரசர் பிறந்த வேளை அப்படி! அவருக்கு இம்மாதிரி கண்டங்கள் பல வரக்கூடும்! ஆனால் அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்து வராது! உலகத்தை ஆளப் பிறந்தவரைக் கேவலம் கடலும் புயலும், நதி வெள்ளமும் என்ன செய்துவிடும்? அவர் அவ்விதம் உயிர் தப்புவதற்கு யாரேனும் ஒரு வியாஜமாகவேண்டும்! பூங்குழலிக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்திருக்கிறது! அதற்காக அவள் உரிமை எப்படிக் கொண்டாடலாம்? - எனினும், அம்மாதிரி பாக்கியம் தனக்கும் ஒரு தடவை கிட்டக்கூடாதா என்ற ஏக்கம் வானதியின் இதய அந்தரங்கத்தில் நீண்ட காலமாக இருந்து கொண்டிருந்தது.
சில சமயம் கூரை சுழன்று திரும்பியபோது, பின்னால் வெகு தூரத்தில் படகு ஒன்று வருவதை வானதி பார்த்தாள்.அதில் பெண் ஒருத்தியும் புருஷன் ஒருவரும் இருப்பதும் தெரிந்தது. யார் என்று நன்றாய்த் தெரியவில்லை. பெண், படகு செலுத்தியதைப் பார்த்ததும் அவள் ஒரு வேளை பூங்குழலியாயிருக்கலாம் என்று தோன்றியது. தன்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றத்தான் வருகிறாளா? இளைய பிராட்டி அனுப்பி வைத்திருக்கிறாரா? போதும், போதும்! அவளுக்கு இளவரசர் கடமைப்பட்டிருப்பதே போதும்.தானும் வேறு நன்றிக்கடன் பட வேண்டாம்! கூடவே கூடாது! தான் அவளால் இந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றப் படுதலே கூடாது.
சில சமயம் படகு அவளுக்கு அருகில் நெருங்கி வந்து விட்டது போலிருந்தது. சில சமயம் கூரை வேகமாகச் சென்று படகை வெகு தூரம் பின்னால் விட்டுவிட்டுச் சென்றது. இவ்விதம் படகு கண்ணுக்கு மறைந்திருந்த ஒரு சமயத்தில் வீட்டுக் கூரை திசை திரும்பித் தெற்கு நோக்கிச் செல்லுவது போலத் தோன்றியது. இவ்வாறு வெகு தூரம் போயிற்று. காவேரியின் தென் கரையைத் தாண்டி, தெற்கே ஒரே சமுத்திரம் போலத் தோன்றிய வெள்ளப் பிரதேசத்தில் சென்றது. கடைசியில், அந்தத் தண்ணீர் வெள்ளத்தின் எல்லை கண்ணுக்குப் புலப்பட்டது. ஆகா! இது ஒரு நதியின் கரைபோல அல்லவா காணப்படுகிறது. ஆம், ஆம்! இது அரசலாற்றங்கரைதான்! காவேரி உடைப்பு வெள்ளம் நடுவில் பல பிரதேசங்களை முழுக அடித்துக்கொண்டு வந்து இந்த ஆற்றில் விழுந்து கலந்திருக்கிறது. இதன் தென்கரை சிறிது மேடாக இருப்பதால் அதற்குள் அடங்கிச் செல்லுகிறது.அந்த நதிக்கரை, அதன் மரங்களடர்ந்த தோற்றம், அவளுக்குப் பழக்கப்பட்ட இடமாகத் தோன்றியது. பூர்வ ஜனம் வாசனையைப்போல் ஞாபகம் வந்தது. இல்லை, இல்லை! இந்த ஜன்மத்தில் இரண்டு மூன்று தடவை பார்த்த இடந்தான்! அவள் திருநல்லம் என்னும் க்ஷேத்திரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கவேண்டும். அங்குள்ள ஆலயத்தை மழவரையர் மகளார், செம்பியன் மாதேவி, தம் அருமைக் கணவரான கண்டராதித்த சோழரின் ஞாபகமாகக் கருங்கல் திருப்பணியாகச் செய்ய ஆவல்கொண்டிருக்கிறார். அங்கே நதிக்கரையில் சோழ குலத்தார்கள் தங்குவதற்கு வசந்த மாளிகை ஒன்றும் இருக்கிறது. செம்பியன் மாதேவி ஒரு சமயம் இளைய பிராட்டியை அவ்விடத்துக்கு அழைத்துச் செல்ல, அவருடன் தானும் போனதுண்டு! அந்த வஸந்த மாளிகையையொட்டியிருந்த தோட்டங்களிலே சென்று பறவைகளின் இனிய கீதங்களைக் கேட்பதில் தனக்கு எவ்வளவு ஆர்வமிருந்தது! ஆகா! அப்போது அங்கு நடந்த ஒரு சம்பவம், வானதியின் உள்ளத்தில் என்றும் மறக்கமுடியாதபடி ஆழ்ந்து பதிந்திருந்தது.
பக்க தலைப்பு
இருபதாம் அத்தியாயம்
பறவைக் குஞ்சுகள்
கொடும்பாளூரிலிருந்து வானதி பழையாறை நகருக்கு வந்த புதிதில், சோழநாட்டின் நீர்வளம் அவளை ஒரே ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியிருந்தது. கொடும்பாளூர்ப் பக்கத்தில் நதி ஒன்றும் கிடையாது. ஏரிகள் உண்டு. மழை பெய்யும் காலங்களில் ஏரிகள் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும். கோடைக் காலத்தில் காய்ந்துவிடும். இம்மாதிரி இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ததும்பிச் சுழிகளும் சுழல்களுமாய் ஓடும் நதிகளும், வாய்க்கால்களும், கண்ணிகளும் அங்கே இல்லை. தாமரையும் செங்கழு நீரும் தழைத்துப் பூத்துக் கொழித்த தடாகங்களை வானதி பிறந்த ஊரில் பார்க்க முடியாது. இவற்றையெல்லாம் வானதி பார்த்துப் பார்த்து மெய்ம்மறந்து உட்கார்ந்திருப்பாள். குளத்து மீனுக்குக் குடைபிடித்த தாமரை இலைகளின் மீது முத்துக்கள் போன்ற நீர்த்துளிகள் அங்கு மிங்கும் ஓடிக் களிப்பதைப் பார்த்து மகிழ்வாள். கமல மலர்களையும் அல்லிப் பூக்களையும் கருவண்டுகள் சுற்றிச் சுழன்று வந்து ஆடிப்பாடுவதைக் கண்டதும் பரவசமாகி விடுவாள். பொழுது போவதே தெரியாமல் போய்விடும்.
ஒரு சமயம் வானதியும், குந்தவையும் செம்பியன் மாதேவி அழைத்ததின் பேரில் திருநல்லத்துக்குப் போயிருந்தார்கள். (இக்காலத்தில் திருநல்லத்துக்குக் கோனேரிராஜபுரம் என்று பெயர் வழங்குகிறது.) வசந்த மாளிகையில் தங்கியிருந்தார்கள். செம்பியன் மாதேவியும் குந்தவையும் அடிக்கடி சைவ சமயக் குரவர்களின் வரலாறுகளைப் பற்றியும், அவர்களுடைய பதிகங்களில் கனிந்துச் சொட்டும் பக்திரஸத்தைப் பற்றியும், பேசத் தொடங்கிவிடுவார்கள். அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில் வானதிக்குச் சிரத்தை இருப்பதில்லை. அதைக் காட்டிலும் வசந்த மாளிகையை யொட்டியிருந்த தோட்டங்களிலே சென்று பறவைகளின் இனிய கீதங்களைக் கேட்பதிலும், தடாகத்திலே பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களைச் சுற்றி வந்து கொண்டிருந்த கரு நீல வண்டுகளின் இன்ப ரீங்காரத்தைக் கேட்பதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகமாயிருந்தது. இன்னும் மாளிகையின் ஒரு பக்கமாகச் சென்று கொண்டிருந்த நதிவெள்ளம் சுழி போட்டுக் கொண்டு ஓடுவதையும், அந்தச் சுழிகளில் அழகிய செக்கச் சிவந்த கடம்ப மலர்கள் சுழன்று கொண்டிருப்பதையும் பார்க்க அவளுக்கு மிக்க ஆர்வம் இருந்தது. கொடும்பாளூர்ப் பகுதிகளில் இம்மாதிரி மனோரம்யமான காட்சிகளைப் பார்க்க இயலாதல்லவா?
ஒரு நாள் மழவரையர் மகளாரும், இளைய பிராட்டி குந்தவையும் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். வானதி அவர்கள் அருகில் சென்றபோது, இளைய பிராட்டி "வானதி! நீ தோட்டத்திற்குப் போ! சற்று நேரத்துக்கெல்லாம் நானும் வருகிறேன்!" என்றார். வானதி குதூகலத்துடன் துள்ளிக் குதித்து ஓடினாள். தோட்டத்தில் சற்று நேரம் சுற்றி அலைந்து விட்டுத் தாமரைக் குளக்கரைக்குச் சென்றாள். குளக்கரையில் வானை மறைத்துக் கொண்டு வளர்ந்திருந்த மரங்கள் பல இருந்தன. அவற்றில் நெடி துயர்ந்து பல்கிப் பரவித் தழைத்திருந்த இலுப்பை மரம் ஒன்றிருந்தது. இலுப்பைப் பூக்கள் உதிர்ந்து பூமியை அடியோடு மறைத்துக் கொண்டிருந்தன. அவற்றின் நறுமணம் கம்மென்று வீசித் தோட்டம் முழுவதும் பரவியிருந்தது. அந்த மரத்தடியில் ஒரு பெரிய வேரின் பேரில் வானதி உட்கார்ந்தாள். அடிமரத்தில் சாய்ந்து கொண்டு மேலும் கீழும் நாலாபுறமும் பார்த்துக் கொண்டிருந்தாள். பறவை இனங்களின் இனிய கீதங்கள் அவளுடைய செவிகளில் அமுத வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தன. அவள் அந்த நாள்வரை அநுபவித்திராத இன்ப உணர்ச்சி அவள் இதயத்தில் தோன்றியது. அந்த உள்ளக் களிப்பு அடிக்கடி பொங்கித் ததும்பி அவள் மேனியெல்லாம் பரவியது. வாழ்க்கை இவ்வளவு ஆனந்த மயமாக இருக்கக்கூடும் என்று வானதி அன்று வரை கனவிலும் கருதியதில்லை.
அந்த மரத்தடியிலிருந்து பார்த்தால் சற்றுத் தூரத்தில் ஆற்று வெள்ளம் தெரிந்தது. அவ்வப்போது நதி ஓட்டத்தின் இனிய காட்சிகளையும் அவள் மரங்களின் இடைவௌி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருமுறை, யாரோ ஒரு வாலிபன் ஆற்றில் நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. செந்நிற நீர்ப் பிரவாகத்தில் அவனுடைய பொன்னொளிர் மேனி பாதி தண்ணீரிலும் பாதி மேலேயும் மிதந்த வனப்பு மிக்க காட்சி அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. சீச்சீ! யாரோ இளம்பிள்ளை ஒருவனுடைய தோற்றத்தில் தனது கவனம் செல்வது என்ன அசட்டுத்தனம்? - நாணம், மடம் என்னும் இயல்புகளைத் தன் உடன் பிறந்த செல்வங்களாகக் கொண்டிருந்த வானதிக்கு அந்த எண்ணம் மிக்க கூச்சத்தை உண்டாக்கியது. அவளுடைய உள்ளக் கட்டுப்பாட்டையும் மீறிக் கண்கள் மீண்டும் இரண்டொரு தடவை நதிப்பக்கம் சென்றன.
வானதிக்குத் தன் பேரில் கோபமே உண்டாயிற்று. அங்கிருந்து எழுந்து போய்விடலாமா என்று எண்ணினாள். அச்சமயம் வேறொரு நிகழ்ச்சி அவளுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.
அவள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகாமையில், தலைக்கு மேலே பறவைக் குஞ்சுகளின் கூக்குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளுக்கு ஏக காலத்தில் பரிதாபத்தையும் திகிலையும் உண்டாக்கின. ஒரு மரக்கிளையில் கவணை போலப் பிரிந்த இடத்தில் பட்சிக் கூடு ஒன்று இருந்தது. அதில் சில பறவைக் குஞ்சுகள் தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. அவைதாம் `கிறீச்' என்று மெல்லிய குரலில் சத்தமிட்டன. அந்தச் சத்தத்தில் பயமும், அபாய அறிவிப்பும், பரிதாபமான அடைக்கல விண்ணப்ப முறையீடும் கலந்திருந்தன. அவ்விதம் கலந்திருந்ததாக வானதியின் செவிகளில் ஒலித்தது. கூட்டுக்கு அருகில் மரக்கிளையில் ஒரு காட்டுப் பூனை ஏறிக் கொண்டிருந்தது. மெள்ள மெள்ள அது கூட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தது!
அதைப் பார்த்த வானதி, "ஐயோ! ஐயோ!" என்று சத்தமிட்டாள்.அடுத்த கணத்தில் "என்ன? என்ன?" என்று ஒரு குரல் கேட்டது. யாரோ விரைந்து ஓடி வரும் காலடிச் சத்தமும் கேட்டது. வானதி அந்தப் பக்கம் பார்த்தாள். சற்று முன் நதி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த வாலிபன்தான் கரையேறி ஓடி வந்து கொண்டிருந்தான் என்பதை அவள் அறிந்தாள்.
அதே சமயத்தில் எங்கிருந்தோ இரண்டு பெரிய பறவைகள் வந்து விட்டன. கூட்டைச் சுற்றி அவை கராபுராவென்று கத்திக் கொண்டு வட்டமிட்டன. அவை அக்குஞ்சுகளின் தாயும் தகப்பனுமாகவே இருக்க வேண்டும். குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகவே அவை அவசரமாக வந்திருக்க வேண்டும் என்பதை வானதி உணர்ந்தாள். இரண்டும் நீள மூக்குகள் உள்ள பறவைகள். மரங்கொத்திப் பறவைகள் என்பவை இவைதாம் போலும். ஒரு பறவை கூட்டைச் சுற்றி அதிகமாக வட்டமிட்டது. இன்னொன்று பூனையை நெருங்கி அதை மூக்கினால் கொத்தித் தாக்கும் பாவனையுடன் சத்தமிட்டது! பூனையை அந்தப் பறவையினால் ஒன்றும் செய்துவிட முடியாது. பூனையின் வாயில் அகப்பட்டால் மறுகணம் அதன் வயிற்றுக்குள்ளேயே போய்விட வேண்டியதுதான். ஆயினும் தன் குஞ்சுகளைக் காப்பதற்காக அந்தப் பறவை அப்படித் தீரத்துடன் போராடியது. தாயையும் தகப்பனையும் இளம் பிராயத்திலேயே இழந்துவிட்ட வானதிக்கு அந்த காட்சி மிக்க மனக்கசிவை உண்டாக்கியது.
பூனை சற்றுச் சும்மா இருந்துவிட்டுத் திடீரென்று முன்னங்கால் ஒன்றைக் கூட்டின் பக்கம் நீட்டியது. பறவைக் குஞ்சுகள் இருந்த கூட்டின் ஒரு முனையையும் தொட்டுவிட்டது. வானதி மறுபடியும் அலறினாள். இதற்குள் அந்த வாலிபன் நெருங்கி விட்டான். அவனை அருகில் பார்ப்பதற்கு வானதிக்கு மிக்க கூச்சமாயிருந்தது. மறுமொழி சொல்ல வரவில்லை. பேசுவதற்கு நா எழவில்லை. சமிக்ஞையினால் பட்சியின் கூட்டைச் சுட்டிக் காட்டினான்.
அதுவரையில் அந்தப் பெண்ணுக்குத்தான் ஏதோ அபாயம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். வானதி சுட்டிக் காட்டிய இடத்தை அண்ணாந்து பார்த்தான். மறுபடியும் வானதியை நோக்கிப் புன்னகை புரிந்தான். அவனுடைய பார்வையும், புன்னைகையும் வானதியின் நெஞ்சத்தை நெகிழச் செய்து, பறவைக் குஞ்சுகளின் நிலையைக் கூட மறந்துவிடச் செய்தன.
ஆனால் வாலிபன் உடனே அங்கிருந்து விரைந்து ஓடி, மரக்கிளையின் பறவைக்கூடு இருந்த இடத்துக்கு நேர் கீழே சென்று நின்றான். காட்டுப் பூனையை அதட்டினான். அது கீழே குனிந்து பார்த்து உருமியது. "பொல்லாத பூனையாயிருக்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே தரையிலிருந்து ஒரு கல்லைப் பொறுக்கி வேகமாக விட்டெறிந்தான். கல் பூனையின் மீது படாமல் அதன் அருகில் மரக்கிளையைத் தாக்கியது. பூனை உடனே தாவி வேறு கிளையில் பாய்ந்து, அங்கிருந்து இன்னொரு அடர்ந்த மரத்துக்குச் சென்று பின்னர் மறைந்துவிட்டது.
ஆனால் இதற்குள் வேறொரு விபரீதம் நேர்ந்துவிட்டது. பூனையில் ஒரு கால் பறவைக் கூட்டின் முனையைப் பற்றி இழுத்ததல்லவா? அதனால் சிறிது ஆடிப் போயிருந்த கூடு வாலிபனின் கல்லெறி மரக்கிளையில் தாக்கிய வேகத்தினால் அதிகமாக நிலை குலைந்து, சிறிது சிறிதாக அந்தக் கூடு கிளையின் கப்பிலிருந்து நழுவியது. முழுதும் நழுவி விழுந்திருந்தால் காட்டுப் பூனை வாயிலிருந்து தப்பிய குஞ்சுகள் தரையில் விழுந்து மாண்டிருக்கும்! நல்ல வேளையாகக் கூட்டின் ஒரு முனை கிளையைக் கவ்விக் கொண்டிருந்தது. கூடு அதில் இருந்த குஞ்சுகளுடன் கீழே தொங்கி ஊசலாடியது. குஞ்சுகளின் உயிர்களும் ஊசலாடின. மரங்கொத்திப் பறவைகள் முன்னை விடப் பீதியுடன் அலறிக்கொண்டு குஞ்சுகள் இருந்த கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்தன. காற்று கொஞ்சம் வேகமாக அடித்தால் கூடு தரையில் விழுந்து விடும். அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால் குஞ்சுகள் பிழைப்பது துர்லபந்தான்.
வாலிபன் ஒரு கணநேரம் யோசித்தான். முதலில் மரத்தின் மேல் தாவி ஏற அவன் எண்ணியதாகத் தோன்றியது. மறு கணத்தில் மனத்தை மாற்றிக் கொண்டதாகக் காணப்பட்டது.
வானதியைப் பார்த்து, "பெண்ணே! சற்று இங்கே வா! கூடு கீழே விழுந்தால் உன் சேலைத் தலைப்பினால் பிடித்துக் கொள்! இதோ நான் ஒரு நொடியில் திரும்பி வருகிறேன்!" என்று சொல்லிவிட்டு ஓடினான்.
அவன் சொன்னபடியே மிகச் சொற்ப நேரத்தில் திரும்பி வந்தான். ஆனால் இப்போது அவன் நடந்து வரவில்லை. யானை மீது ஏறிக்கொண்டு வந்தான். வானதிக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்பது ஒருவாறு தெரிந்துவிட்டது. ஆகையால் அங்கிருந்து தாமரைக் குளத்தின் படிக்கட்டை அடைந்தாள். சில படிகள் இறங்கி உட்கார்ந்து கொண்டு யானை மேல் வந்த வாலிபன் என்ன செய்கிறான் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
யானை மரத்தடிக்கு வந்ததும் நின்றது. அதன் முதுகில் இருந்தபடி வாலிபன் பறவைக் கூட்டைக் கையினால் தாங்கி முன்னால் அது இருந்த கிளைப் பொந்திலே ஜாக்கிரதையாக வைத்தான்.தாய்ப் பறவையும், தகப்பன் பறவையும் இப்போது முன்னைவிட அதிகமாகக் கூச்சலிட்டன. ஆனால் அந்தக் கூச்சலில் இப்போது குதூகல த்வனி மேலிட்டிருப்பதாகத் தோன்றியது.
வாலிபன் பின்னர் திரும்பிச் சுற்று முற்றும் பார்த்தான். "பெண்ணே! எங்கே போனாய்?" என்று கூவினான். வானதி பெரிதும் நாணம் அடைந்து மௌனமாயிருந்தாள். வாலிபன் யானையின் மீதிருந்து கீழிறங்கினான். பின்னர் மறுபடியும் சுற்று முற்றும் பார்த்தாள்.
வானதி மனதில் எதையோ நினைத்துக்கொண்டாள். அந்த நினைவு அவளுக்குப் பெரும் வேடிக்கையாயிருந்தது. அவளை அறியாமல் சிரிப்பு வந்தது. உரத்த சத்தத்துடன் கலகலவென்று சிரித்தாள்.
அதைக் கேட்டுவிட்டு வாலிபன் குளத்தின் படிக்கட்டுக்கு வந்தான். வானதியைப் பார்த்து, "பெண்ணே! ஏன் சிரிக்கிறாய்? நீ இவ்வளவு பலமாகச் சிரிக்கும்படியாக இப்போது என்ன நேர்ந்து விட்டது?" என்றான்.
வாலிபன் குரல் வானதியின் செவிகளில் விழுந்ததும் மறுபடியும் முன்போல அவளுடைய நெஞ்சம் நெகிழ்ந்து பொங்கிற்று. கூச்சம் முன்னிலும் அதிகமாயிற்று. அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாதபடியால், அப்புறமும், இப்புறமும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"பெண்ணே! ஏன் சிரித்தாய்? சொல்ல மாட்டாயா?" என்று மீண்டும் வாலிபன் கேட்டான்.
வானதி மனத்தைக் திடப்படுத்திக்கொண்டு, "ஒன்று மில்லை. நீ பெரிய வீரனாயிருக்கிறாயே என்று எண்ணிச் சிரித்தேன். பூனையோடு சண்டை போடுவதற்கு யானையின் பேரில் வந்தாய் அல்லவா?" என்றுகேட்டாள். அதைக் கேட்டு வாலிபனும் சிரித்தான்.
"பெண்ணே! அது பூனைதானா? நீ போட்ட கூக்குரலைக் கேட்டுப் புலியோ என்று பயந்துவிட்டேன்!" என்று சொன்னான்.
வானதிக்கு இதற்குள் துணிவு வந்துவிட்டது; அவளிடமிருந்த கூச்சமும் குறைந்துவிட்டது. "ஆகா! அப்படியா? புலிக்கொடி பறக்கும் சோழ நாட்டில் புலியைக் கண்டுதான் எதற்காகப் பயப்படவேணும்? நீ பாண்டிய நாட்டனா?" என்றாள்.
அதைக்கேட்ட வாலிபனின் முகம் முன்னைக் காட்டிலும் சற்று அதிகமாக மலர்ச்சி அடைந்தது.
"பெண்ணே! நான் வேற்று நாட்டவன் அல்ல; இந்தச் சோழநாட்டைச் சேர்ந்தவன்தான்! யானை மீது ஏறி வேறு போர்க்களங்களுக்கும் சென்றிருக்கிறேன். நீ யார்? எந்த ஊர்ப் பெண்? பெரிய வாயாடிப் பெண்ணாக இருக்கிறாயே?" என்றான்.
"யானைப்பாகா! மரியாதையாகப் பேசு! நான் யாராயிருந்தால் உனக்கு என்ன? எதற்காக அதைப்பற்றிக் கேட்கிறாய்?" என்றாள் வானதி.
"சரி அப்படியானால் நான் கேட்கவில்லை. பெரிய இடத்துப் பெண் போலிருக்கிறது! போகிறேன்!" என்று சொல்லிவிட்டு அந்த வாலிபன் படியேறி மேலே போகலானான்.
வானதி மறுபடியும் விளையாட்டு பரிகாசம் தொனித்த குரலில், "யானைப்பாகா! யானைப்பாகா! என்னையும் உன் யானையின் மேல் ஏற்றிக்கொண்டு போகிறாயா?" என்றாள்.
"சரி; ஏற்றிக்கொண்டு போகிறேன். எனக்கு என்ன கூலி தருவாய்?" என்று கேட்டான்.
"கூலியா? என் பெரியப்பாவிடம் சொல்லி உனக்குக் கொடும்பாளூர் அரண்மனையில் உத்தியோகம் வாங்கித் தருகிறேன். இல்லாவிட்டால், யானைப் படைக்குச் சேநாதிபதியாக்கச் செய்கிறேன்!" என்றாள் வானதி.
"ஓகோ! கொடும்பாளூர் இளவரசியா தாங்கள்?" என்றான் அந்த வாலிபன்.
இதுவரையில் மலர்ந்திருந்த அவனது முகம் இப்போது சுருங்கியது. புன்னகை மறைந்தது. புருவங்கள் நெறிந்தன.
"ஏன்? கொடும்பாளூர் இளவரசி என்றால் அவ்வளவு மட்டமா? உன் யானை மேல் ஏறக்கூடாதா?" என்றாள் வானதி.
"இல்லை, இல்லை! கொடும்பாளூர் அரண்மனைக் கொட்டாரத்தில் எவ்வளவோ யானைகள் இருக்கின்றன; எத்தனையோ யானைப் பாகர்களும் இருக்கிறார்கள். நான் என்னத்திற்கு?" என்று சொல்லிவிட்டு அந்த வாலிபன் விடுவிடு என்று நடந்து போனான். அவன் ஒருவேளை திரும்பிப் பார்ப்பானோ என்று சற்று நேரம் வரையில் வானதி எதிர் பார்த்தாள். ஆனால் அவன் திரும்பியே பாராமல் நடந்து சென்று யானை மேல் ஏறிப் போய்விட்டான்.
இந்தச் சம்பவம் வானதியின் உள்ளத்தில் வெகுவாகப் பதிந்துவிட்டது. அடிக்கடி அது அவளுடைய ஞாபகத்துக்கு வந்தது. அந்த யானைப்பாகனுடைய உருவத் தோற்றமும் மலர்ந்த முகமும் இனிய குரலும் நினைவுக்கு வந்தபோதெல்லாம் உள்ளத்தில் இனந் தெரியாத இன்ப உணர்ச்சி உண்டாயிற்று. அவன் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்ற யானைமேல் ஏறி வந்ததை நினைத்தபோதெல்லாம் அவளையறியாமல் நகைப்பு வந்தது. தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். பிறகு அதற்காக வெட்கமும் அடைந்தாள். அந்த யானைப்பாகனின் அகம்பாவத்தையும், கொடும்பாளூர் என்ற வார்த்தையைக் கேட்டவுடனே அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு போய்விட்டதையும் எண்ணியபோதெல்லாம் அவன் பேரில் கோபம் உண்டாகி வளர்ந்தது. மொத்தத்தில், அந்த யானைப்பாகனைப் பற்றி அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. இது தவறோ என்ற சந்தேகமும் கூடத் தோன்றி அவளை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது.
திருநல்லத்துக்கு தமது தமக்கையைப் பார்க்கப் பொன்னியின் செல்வர் வரப்போகிறார் என்று அரண்மனையில் பேச்சாக இருந்தது. சோழநாட்டின் கண்மணியாக விளங்கிய இளவரசரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அரண்மனைப் பெண்கள் எல்லாருக்கும் இருந்ததுபோல் வானதிக்கும் இருந்தது. அதற்குச் சந்தர்ப்பம் எளிதில் கிடைக்கவில்லை. இளவரசர் வந்துவிட்டார் என்று பேச்சாக இருந்ததே தவிர, அவர் அந்தப்புரத்துக்குள் வரவேயில்லை. இயற்கையில் சங்கோசம் நிறைந்த வானதியோ மற்றத் தோழிப் பெண்களைப் போல் சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டு போய் அவரைப் பார்க்க விரும்பவில்லை.திருநல்லத்தை விட்டு இளவரசர் புறப்பட்ட அன்றைக்குத்தான் அரண்மனை மேல் மாடத்தில் நின்று வானதி பொன்னியின் செல்வரைப் பார்க்க நேர்ந்தது. அவர் யானையின்மீது ஏறிப் பிரயாணமாகிக் கொண்டிருந்தார். வானதி தன் கண்களை நம்பமுடியவில்லை என்றால், அது சம்பிரதாய வார்த்தையன்று. யானைப்பாகன் என்று தான் எண்ணிக் கேலிப் பேசிச் சிரித்து அதிகாரம் செய்யவும் துணிந்த வாலிபனே இந்த மாநிலம் போற்றும் இளவரசர் அருள்மொழிவர்மன் என்று கண்டால், வானதிக்கு அவளுடைய கண்களை எப்படி நம்பமுடியும்? பின்னர், பக்கத்திலிருந்த பெண்களைப் பலமுறை கேட்டுத்தான் அதை நிச்சயம் செய்துகொண்டாள். இதனால் அவள் அடைந்த அவமானத்தையும், மனவேதனையும் சொல்லிச் சாத்தியமில்லை.
உலகம் ஆளப் பிறந்தவருக்குத் கொடும்பாளூர் அரண்மனையின் யானைக் கொட்டாரத் தலைவன் உத்தியோகம் செய்துவைப்பதாகத் தான் சொன்னதை அவள் நினைத்தபோது ஒரு பக்கம் சிரிப்பு வந்தது! அதே சமயத்தில் கண்களில் கண்ணீர் வந்தது. தன்னுடைய மூடத்தனத்தை நினைத்து வருந்தினாள். அப்போது அவருடைய முகம் சுருங்கியதன் காரணம் அவரை, "யானைப்பாகா!" என்று அழைத்ததுதான் என்று நம்பினாள். நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்களில் ஒன்றும் இல்லாத பெண் என்று தான் தன்னைப்பற்றி அவர் எண்ணியிருப்பார்! இதை நினைத்தபோது வானதியின் உள்ளம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. ஆற்றிலோ, குளத்திலோ விழுந்து உயிரையே விட்டு விடலாமா என்று கூடப் பலமுறை எண்ணினாள். இளையபிராட்டி குந்தவையிடம் தான் செய்த குற்றத்தைச் சொல்லிவிடப் பலமுறை முயன்றாள்.ஆனால் அதற்குத் துணிவு வரவில்லை; நா எழவில்லை. இளவரசரே குந்தவை தேவியிடம் சொல்லியிருந்தால் அவரே தன்னிடம் கேட்டிருப்பார். குந்தவை தேவி கேளாததினால் இளவரசர் சொல்லவில்லை என்று முடிவு செய்தாள். எத்தனையோ மனவேதனைக்கு மத்தியில் இந்த எண்ணம் அவளுக்குச் சிறிது ஆறுதல் அளித்தது. என்றைக்காவது ஒருநாள் பொன்னியின் செல்வரிடம் நேரில் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகு உயிரை விட்டு விடலாம் என்று கருதினாள். ஆனால் அதற்கும் தைரியம் வரவில்லை.
பழையாறைக்குப் போன பிறகு இளவரசரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் நேரலாம் என்று தோன்றியபோதெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டாள். இளவரசரின் முன்னால் போவதைக் காட்டிலும் உயிரையே விட்டுவிடலாம் என்று கருதலானாள். திருநல்லத்தில் நடந்ததை அறியாத இளையபிராட்டியும் அவளுடைய தோழிமார்களும், "இந்தப் பெண் இவ்வளவு கூச்சப்படுகிறாளே!" என்று மட்டும் ஆச்சரியப்பட்டார்கள்! அவளுடைய பயந்த சுபாவத்தோடு இதுவும் சேர்ந்தது என்று நினைத்தார்கள்.
பொன்னியின் செல்வர் தன்னிடம் அருவருப்புக் கொள்வதற்கு வேறு முக்கிய காரணமும் உண்டு என்பதை வானதி விரைவில் அறிந்து கொண்டாள். இளவரசர் அருள்மொழிவர்மன் ஒரு காலத்தில் உலகமாளும் சக்கரவர்த்தியாவார் என்று பலரும் நம்பியதுபோல அவளுடைய பிறந்த வீட்டிலும் நம்பினார்கள். அதனால் அவளை அருள்மொழிவர்மருக்கு மணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவளுடைய பெரிய தகப்பனார் திட்டமிட்டிருந்தார் என்பது வானதிக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அந்த நோக்கத்துடனேயே அவளைப் பழையாறைக்குப் பூதி விக்கிரம கேசரி அனுப்பி வைத்திருப்பதாகக் குந்தவை தேவியின் மற்றத் தோழிப்பெண்கள் அடிக்கடி ஜாடைமாடையாகப் பேசிக் கொள்வார்கள். சில சமயம் வானதியிடமே சொல்லிப் பரிகசிப்பார்கள். "ஆகையினாலேதான் நீ இளவரசர் முன்னாலேயே போகமாட்டேன் என்கிறாய்! எங்களுக்குத் தெரியாதா உன் கள்ளத்தனம்?" என்பார்கள். இந்த வார்த்தைகள் வானதியின் காதில் நாராசமாக விழுந்தன. தான் கொடும்பாளூர்ப் பெண் என்று அறிந்ததும் யானைப் பாகனுடைய முகம் சுருங்கியதன் காரணம் இதுவாகவே இருக்கலாம் அல்லவா?
இவ்வாறெல்லாம் வானதியின் இளம் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்த நிலைமையிலேதான் ஒருநாள் பொன்னியின் செல்வர் ஈழத்துப் போருக்குப் புறப்பட்டார். அன்றைக்கு அரண்மனையிலிருந்து எல்லாத் தோழிப் பெண்களும் கையில் மங்கள தீபங்களுடன் நின்று அவரை வாழ்த்தி அனுப்ப ஏற்பாடாயிருந்தது. இந்தச் சமயத்திலும் வரமுடியாது என்று மறுக்க வானதியினால் இயலவில்லை.போருக்குப் புறப்படும் இளவரசரை ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வமும் அவள் உள்ளத்தில் பொங்கியது. வாய் திறந்து பேசாவிட்டாலும் தன் முகபாவத்தைக் கொண்டும் நயன பாஷையினாலும் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற சபலமும் இருந்தது. ஆனால் அவள் எண்ணியதற்கெல்லாம். மாறான சம்பவம் நடந்துவிட்டது. இளவரசர் அருகில் வந்து அவளை ஏறிட்டுப் பார்த்ததும் வானதி உணர்விழந்து, தீபத்தையும் போட்டுவிட்டுத் தரையில் விழுந்து மூர்ச்சையானாள். இதன் பிறகு நிகழ்ந்தவையெல்லாம் வாசகர்கள் அறிந்தவைதாம் அல்லவா?
ஓட்டுக் கூரை ஓடத்தில் மிதந்து சென்றுகொண்டிருந்த வானதி திருநல்லத்தை அணுகியபோது அவளுடைய உள்ளத்தில் மேற்கூறிய சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சென்றன. பொன்னியின் செல்வருக்குத் தன் மீது அநுதாபமும் உண்டு என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அதை அவர் இளைய பிராட்டி மூலமாகவும் நேரிலேயும் தெரிவித்ததும் உண்டு. ஆனால் அவருடைய அன்பு பூரணமடையாத வண்ணம் அவ்வப்போது தடைசெய்த முட்டுக் கட்டை ஒன்றும் இருந்தது. அது இன்னதென்பதையும் அவள் அறிந்திருந்தாள். இளவரசர் ஒரு காலத்தில் சக்கரவர்த்தியாகலாம் என்னும் எண்ணத்தின் பேரில் அவளை அவர் கழுத்தில் கட்டிவிடப் பார்க்கிறார்கள் என்று இளவரசர் நம்பியதுதான் அந்த முட்டுக்கட்டை. இவ்விதம் அவர் நம்புவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. வானதியின் பெரிய தந்தை இதைப்பற்றிப் பலமுறை பேசியதுண்டு. ஏன்? இளையபிராட்டி குந்தவை தேவியே அந்தச் சதியாலோசனையில் சம்பந்தப்பட்டவர்தாம். அது இன்னும் பலருக்கும் தெரிந்திருந்தது. அந்த ஓடக்காரப் பெண் பூங்குழலிகூட அதைக் குறிப்பிட்டுப் பரிகாசம் செய்யவில்லையா? ஆகையால் இளவரசர் மனத்தில் அந்த எண்ணம் தங்கி நின்று அவருடைய அன்புக்கே ஒரு முட்டுக்கட்டையாக இருந்ததில் வியப்பில்லைதானே!
ஆனால் சற்று முன்பு வானதி செய்த சபதத்தை இளவரசர் அறிய நேரும்போது அந்த முட்டுக்கட்டை நீங்கிவிடும் அல்லவா? அதை அவர் அறியுமாறு நேரிடுமா? தானே அவரிடம் சொல்லிவிட்டால் என்ன? அடி அசட்டு வானதி! உனக்குத்தான் அவர் முன்னால் நின்றால் வாய் அடைத்துவிடுகிறதே! அவரை யானைப்பாகன் என்று நீ எண்ணியபோது, இந்தத் திருநல்லத்தில் சக்கரவட்டமாகப் பேசி அவரிடம் `வாயாடிப் பெண்' என்ற பெயரும் பெற்றாய்! அதற்குப் பிறகு அவரை முகம் எடுத்துப் பார்க்கவும், வாய் திறந்து பேசுவும் உன்னால் முடியவில்லையே? அநாதை வானதி! மறுமுறை நீ இளவரசரைப் பார்க்க நேரும்போது அப்படி மோசம் போய்விடாதே! துணிச்சலுடன் உன் மனத்தில் உள்ளதைச் சொல்லிவிடு! "நீங்கள் சிங்காதனம் ஏறினாலும் நான் ஏறமாட்டேன்! அவ்வாறு சபதம் செய்திருக்கிறேன்! தாங்கள் வெறும் யானைப்பாகனாகவே இருந்து, என்னையும் தங்களுடன் யானைமீது ஏற்றிக்கொண்டு ஒரு தடவை சென்றால், அதையே சொர்க்க வாழ்விலும் மேலாகக் கருதுவேன்" என்று தைரியமாகச் சொல்லிவிடு!
எல்லாம் சரிதான்! ஆனால் அவ்விதம் சொல்லுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்குமா? இந்த வெள்ளம் என்னை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கப்போகிறது? கரை சேராமலே முழுகிச் செத்துப் போய்விடுவேனோ! ஒருநாளும் அவ்விதம் நேராது. அதோ கரை தெரிகிறதே! திருநல்லத்து வசந்த மாளிகையின் மகுட கலசம் தெரிகிறதே! ஆஹா! இளவரசர் யானைமேல் ஏறி வந்து பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியதும், என்னுடன் இதமாகப் பேசியதும் நேற்று நடந்ததுபோல் அல்லவா; தோன்றுகின்றன?
இது என்ன? அதோ ஒரு யானை! அதன்பேரில் ஒரு யானைப்பாகன்! வெள்ளத்தின் வேகத்தை அந்த யானை எவ்வளவு அலட்சியமாக முண்டிக்கொண்டு குன்று நகருவது போல் நகருகிறது! அதோ கரை ஏறிவிட்டது! கரையோடு மேற்கு நோக்கிச் செல்கிறது!
யானையின் மேல் கம்பீரமாக உட்கார்ந்திருப்பவன் யாராயிருக்கும்? ஒருவேளை...சீச்சீ! இது என்ன பைத்தியக்கார எண்ணம்? இளவரசர் இங்கே எதற்காக இப்படித் தனியாக யானை மீது வருகிறார்?
ஒரு முறை யானைமீது வந்த இளவரசரை யானைப் பாகன் என்று நான் எண்ணிவிட்டால், அப்புறம் எந்த யானைப் பாகனைக் கண்டாலும் இளவரசராயிருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டுமா? என்ன அறிவீனம்! இருந்தாலும், இவன் வெறும் யானைப்பாகனாகவே இருந்தாலும், எனக்கு ஒருவேளை உதவி செய்யக்கூடும் அல்லவா? என்னை இந்த ஓட்டுக்கூரை இடத்திலிருந்து, இந்தப் பெரு வெள்ளத்திலிருந்து, கரையேற்றிவிடலாம் அல்லவா? நான் யார் என்று சொன்னால் என்னை யானை மேல் ஏற்றிப் பொன்னியின் செல்வரிடம் அழைத்துக்கொண்டு போகவும் கூடும் அல்லவா?
இத்தகைய எண்ணம் தோன்றியதும், வானதி, "யானைப்பாகா! யானைப்பாகா!" என்று கூவி அழைத்தாள். அது அவன் காதில் விழவில்லையோ, அல்லது விழுந்ததும் அவன் இலட்சியம் செய்யவில்லையோ, தெரியாது. யானை நிற்கவும் இல்லை; யானைப்பாகன் திரும்பிப் பார்க்கவும் இல்லை! யானையின் நடை வேகமாகிக் கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் நதிக்கரையின் வளைவு ஒன்றில் திரும்பி யானையும் யானைப்பாகனும் மறைந்து விட்டனர்.
வானதி இந்த ஏமாற்றத்தைப்பற்றி எண்ணமிடுவதற்குள் பெரும் பீதிகரமான மற்றொரு எண்ணம் அவள் மனதில் உதித்தது. ஓட்டுக்கூரை திடீரென்று அதிவேகமாக சுழன்று செல்லத் தொடங்கியதாகத் தோன்றியது. ஆம், ஆம்! ஆற்று வெள்ளம் அங்கே அதிகமான வேகத்தை அடைந்திருந்தது. நதிக்கரையும், அதன் ஓரத்தில் வளர்ந்திருந்த பிரம்மாண்டமானா விருட்சங்களின் தடிமனான வேர்களும் அவளுடைய சமீபத்தில் விரைந்து வந்து கொண்டிருந்தன. ஓட்டுக்கூரை ஓடம் மரங்களின் வேர்களில் மோதிக்கொள்ளப் போவது நிச்சயம். மோதிக் கொண்டதும் தூள் தூளாகித் தண்ணீரில் மூழ்கிவிடும். பிறகு தன்னுடைய கதி என்ன? தப்பிப் பிழைத்துக் கரை ஏற முடியுமா? சுழல்களில் சிக்கி மரங்களின் வேர்களில் அடிபட்டுச் சாக நேரிடுமா?
ஐயோ! இது என்ன? அந்த மரங்களின் வேர்களுக்கு மத்தியில் பயங்கரமான முதலை ஒன்று வாயைப் பிளந்து கொண்டிருக்கிறதே! அது உண்மை முதலையா? அல்லது பொம்மையா! அல்லது என் உள்ளத்தின் பிரமையா?
இதோ கரை நெருங்கிவிட்டது! மரங்களின் வேர்களின் மேல் ஓட்டுக் கூரை மோதிக்கொள்ளப் போகிறது! வானதி தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்! "தாயே! துர்க்கா பரமேசுவரி! தாய் தந்தையற்ற இந்த அநாதைப் பெண்ணுக்கு நீதான் கதி! என்னை உன் பாதங்களில் சேர்த்துக் கொள்!" என்று பிரார்த்தனை செய்தாள்.
பக்க தலைப்பு
This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmasters of this website.