ponniyin celvan
of kalki, part 3E
(in tamil script, unicode format)
அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை
Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai,India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram,Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan,Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. VinothJagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devotedto preparation of electronic texts of tamil literary works and to distributethem free on the Internet. Details of Project Madurai are available atthe website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this headerpage is kept intact.
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - மதுராந்தகன் நன்றி
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - ஜுரம் தௌிந்தது
நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தி மண்டபம்
நாற்பத்துநான்காம் அத்தியாயம் - நந்தி வளர்ந்தது!
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - வானதிக்கு அபாயம்
நாற்பத்தாறாம் அத்தியாயம் - வானதி சிரித்தாள்
நாற்பத்தொன்றாம் அத்தியாயம்
மதுராந்தகன் நன்றி
முதன் மந்திரியின் கரம் மதுராந்தகன் மேல் பட்டதும் அவன் அலறினான்.
"ஐயோ! அப்பா! செத்தேன்! என்னைத் தொட வேண்டாம். என் கால்கள்! போச்சு! போச்சு!"
அநிருத்தர் அவனைத் தூக்குவதை நிறுத்தி விட்டு, "இளவரசே! தங்களுக்கு என்ன நேர்ந்தது? தங்கள் கால்களுக்கு என்ன நேரிட்டது?" என்று கவலையுடன் கேட்டார்.
"என் கால்கள் முறிந்தே போய்விட்டன; நடக்க முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை!"
முதன் மந்திரி திரும்பிப் பார்த்து, "அடே! பல்லக்கை இவ்விடம் கொண்டுவாருங்கள்!" என்றுதம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார்.
பின்னர், "ஐயா! இந்த விபத்து எப்படி நேர்ந்தது? தாங்கள் மழையில் தனியாகக் கிடக்கும்காரணம் என்ன? தங்களோடு வந்த பரிவாரங்கள் எங்கே? தங்களை இவ்விதம் விட்டு விட்டு அவர்கள் எப்படிப்போகத் துணிந்தார்கள்! அவர்களுக்கு என்ன தண்டனை விதித்தாலும் போதாதே?" என்றார்.
"முதன் மந்திரி! யாரையும் தண்டிக்க வேண்டாம்! யார் பேரிலும் குற்றம் இல்லை. மாலைநேரத்தில் குதிரைமேல் ஏறிக்கொண்டு நான்தான் தனியாகக் கிளம்பினேன். நதிக்கரையோரமாகப் போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பெரிய மின்னல் மின்னி இடி இடித்தது. குதிரை மிரண்டு ஓடியது. நான் இந்த மரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டு கீழே விழுந்து விட்டேன். குதிரை எங்கேயோ போய் விட்டது. விழுந்த வேகத்தில் கால் முறிந்து விட்டதோ அல்லது சுளுக்கிக்கொண்டுவிட்டதோ தெரியவில்லை. எழுந்து நிற்கவும் முடியவில்லை, நல்ல வேளையாகத் தாங்கள் இச்சமயம் இங்குவந்தீர்கள்!"
"ஏதோ தங்களுடைய தந்தை, மகானாகிய கண்டராதித்த தேவர் செய்த புண்ணியந்தான், இந்தமட்டும் நான் இங்கே வரும்படி நேர்ந்தது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருங்கள். பல்லக்கில்தங்களை ஏற்றி விடுகிறேன். மற்ற விவரங்கள் எல்லாம், நாதன்கோவிலில் அடியேனின் இல்லத்துக்குப் போனபிறகு கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்" என்றார் அநிருத்தர்.
பல்லக்கு அருகில் கொண்டு வந்து இறக்கப்பட்டதும், முதன் மந்திரி இளவரசரை மெதுவாகப் பிடித்துத்தூக்கி பல்லக்கினுள் கிடத்தினார்.
ஆட்களிடம், பல்லக்கைத் தூக்கிக் கொண்டு மெள்ள, மெள்ள அசங்காமல் போகவேண்டும் என்று கட்டளையிட்டார். தாமும் பல்லக்கின் அருகிலேயே தொடர்ந்தாற்போல் நடந்து சென்றார்.
சிறிது நேரத்துக்கெல்லாம் நாதன்கோவில் என்று வழங்கிய சுந்தர சோழ விண்ணகரத்துக்குஅவர்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த ஊர்ப்பெருமாள் கோயிலுக்கு அருகில் முதன் மந்திரி அநிருத்தரின்மாளிகை ஒன்று இருந்தது. அதற்குள் இளவரசர் மதுராந்தகரைத் தூக்கிச் சென்று அங்கிருந்த கட்டிலில்கிடத்தினார்கள்.
விளக்கு வௌிச்சம் கொண்டுவரச் சொல்லிப் பார்த்ததில் கால் முறியவில்லையென்றும்வெறும் சுளுக்குத்தான் என்றும் தெரிந்தது.
இளவரசர் கொண்டிருந்த பீதியும் சிறிது தௌிந்தது.
பெருமாள் கோவிலிருந்து வந்த பிரசாதங்களை, இருவரும் அருந்தினார்கள்.
பின்னர் முதன் மந்திரி, "இளவரசே! இனி இரவு நிம்மதியாகத் தூங்குங்கள்! பொழுது விடிந்ததும் தங்கள் உசிதம் எப்படியோ அப்படிச் செய்யலாம். நான் தஞ்சைக்குத்தான் போகிறேன். என்னுடன் வருவதாயிருந்தால், தங்களைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்!" என்றார்.
"ஐயா! தாங்கள் எனக்கு எவ்வளவோ தீங்கு செய்திருக்கிறீர்கள். அதற்கெல்லாம் பரிகாரம்இன்று செய்து விட்டீர்கள். இன்று எனக்குச் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். அதற்கு எப்போதும்நன்றி செலுத்துவேன்.ஒருவேளை இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் நான் அமரும்படி நேர்ந்தால்தங்களையே முதன் மந்திரியாக வைத்துக்கொள்வேன்!" என்றான் மதுராந்தகன்.
அநிருத்தர் அதிசயக்கடலில் முழுகிப் போனதாகப் பாவனை செய்து, "இளவரசே! சோழகுலத்துக்குநான் கடமைப்பட்டவன். இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஆலோசனை சொல்வதும் இயன்ற உதவிசெய்வதும் என் கடமை. ஆகையால் தாங்கள் தனிப்பட எனக்கு நன்றி செலுத்த அவசியமில்லை. ஆனால்தங்களுக்கு நான் ஏதோ தீங்கு செய்திருப்பதாகச் சொன்னீர்களே அதுதான் எனக்கு விளங்கவில்லை. நான்தங்களுக்கு மனமறிந்து எந்தத் தீங்கும் செய்ததாக ஞாபகமில்லை. தாங்கள் சற்றுப் பெரிய மனது செய்துதெரியப்படுத்தினால் அதற்குப் பிராயச்சித்தம் என்ன உண்டோ அதைச் செய்து விடலாம்!" என்றார்.
"ஐயா அநிருத்தரே! தாங்கள் மகா கெட்டிக்காரர், அறிவாளி, இராஜதந்திர நிபுணர்என்பதெல்லாம் உலகமறிந்த விஷயம். ஆனால் தங்கள் கெட்டிக்காரத்தனத்தை என்னிடம் காட்ட வேண்டாம். தாங்கள் எனக்குச் செய்திருக்கும் தீங்கு எவ்வளவு கொடுமையானது என்பது எனக்குத் தெரியாது என்றும் எண்ணவேண்டாம். ஆனாலும் இன்று தாங்கள் எனக்குச் செய்த உதவியை முன்னிட்டு அதையெல்லாம் மறந்துவிடப்போகிறேன். என்னுடைய நன்றியைத் தங்களுக்கு எந்த விதத்தில் தெரியப்படுத்தலாம் என்றுசொல்லுங்கள். ஏதாவது பிரதி உபகாரம் செய்யக் கூடியது இருந்தால் கூறுங்கள்."
அநிருத்தர் புன்னகை புரிந்து, "ஆம், இளவரசே! தாங்கள் நன்றி செலுத்த வழி ஒன்று இருக்கிறது.தங்களிடம் இந்தக் கிழவன் கோர வேண்டிய வரம் ஒன்றும் இருக்கிறது. இனி இம்மாதிரி குதிரை ஏறித்தனிவழியே கிளம்ப வேண்டம். முன்னும் பின்னும் பரிவாரங்கள் சூழ ரதத்தில் பிரயாணம் செய்யுங்கள். அதைவிடப் பல்லக்கில் பிரயாணம் செய்வது நலம். காலம் கெட்டிருக்கிறது. பல காரணங்களினால் மக்கள்மனக்கொதிப்பு அடைந்திருக்கிறார்கள். இன்றைக்குப் பழையாறையில் பார்த்தீர்களே! ஆகையால் திறந்தபல்லக்கில் பிரயாணம் செய்வதைக் காட்டிலும், மூடு பல்லக்கில் பிரயாணம் செய்வது நல்லது. பழுவூர் இளையராணியின் பல்லக்காக இருந்தால் ரொம்ப விசேஷமாயிருக்கும். யாரும் சந்தேகிக்கவே மாட்டார்கள்!" என்றார்.
மதுராந்தகன் அசந்து போனான். அவன் முகத்தில் மறுபடியும் பயத்தின் அறிகுறி காணப்பட்டது. சற்றுப் பொறுத்துச் சமாளித்துக் கொண்டு, "முதன் மந்திரி! என்ன வார்த்தை சொன்னீர்! பழுவூர்இளையராணியின் மூடு பல்லக்கில் என்னைப் பிரயாணம் செய்யச் சொல்வதின் கருத்து என்ன? என்னை அவமானப்படுத்துவது உமது நோக்கமா?...." என்றான்.
"இளவரசே! பழுவூர் ராணியின் பல்லக்கில் பிரயாணம் செய்வதைத் தாங்கள் அவமானமாகக்கருதுவதை நான் அறியேன். எப்போதிருந்து இந்த எண்ணம் தங்களுக்கு உண்டாயிற்று? முன்னேயெல்லாம் அடிக்கடி தாங்கள் அவ்விதம் போய்க்கொண்டிருப்பது வழக்கமாயிருந்ததே? கடைசியாக, கடம்பூர் சம்புவரையர்மாளிகைக்குப் போய்த் திரும்பிய பிறகு இந்த நல்ல முடிவுக்குத் தாங்கள் வந்திருக்க வேண்டும்..."
மதுராந்தகன் மேலும் திகில் கொண்டான். அவன் முகத்தில் பயப்பிராந்தியின் சாயல் பரவிற்று.
"முதலாவது மந்திரி! கடம்பூர் மாளிகைக்கு நான்....நான்...." என்று தடுமாற்றத்துடன் ஏதோ சொல்வதற்குஆரம்பித்தான்.
"இளவரசே! கடம்பூர் மாளிகைக்குத் தாங்கள் ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்றுதனாதிகாரி பெரிய பழுவேட்டரையருடன் போயிருந்தீர்கள் அல்லவா? அதைத் தான் சொல்கிறேன். அப்போது தாங்கள் இளைய ராணியின் பல்லக்கிலே போய்விட்டுத் திரும்பினீர்கள். அது எனக்கு அவ்வளவாகப்பிடிக்கவில்லைதான்.பல்லக்குப் பிரயாணம் என்னைப் போன்ற கிழவர்களுக்கு உகந்தது. உங்களை போன்றஇளைஞர்கள் யானைமீதோ, குதிரைமீதோ பிரயாணம் செய்வதுதான் உசிதம். ஆனால் குதிரைப்பிரயாணத்துக்குத் தகுந்த பயிற்சி வேண்டும். தங்களுக்கு உடம்பு சரியானதும் நானே அதற்கு வேண்டிய ஏற்படு செய்கிறேன்..."
"அன்பில் அநிருத்தரே! ஜாக்கிரதை! மேலும் மேலும் என்னை அவமானப்படுத்தும் வார்த்தைகளைச்சொல்கிறீர். இன்றைக்கு ஏதோ இந்த அசந்தர்ப்பம் நேரிட்டு விட்டபடியால் எனக்குக் குதிரை ஏற்றமேதெரியாது என்று முடிவு கட்டி விட்டீர். ஏதோ ஒரு சமயம் பல்லக்கில் சென்றபடியால் எப்போதும் பழுவூர்ராணியின் மூடு பல்லக்கில் நான் போவதாகச் சொல்லுகிறீர். உம்முடைய பிராயத்தையும் இன்றைக்கு நீஎனக்குச் செய்த உதவியையும் நினைத்துப் பொறுத்தேன்..."
"இளவரசே! தங்களுடைய பொறுமை எனக்கு மிக மகிழ்ச்சி தருகிறது. 'பொறுத்தார் பூமிஆள்வார்' என்பது முதுமொழி. தமிழகத்தின் மாபெரும் புலவர் என்ன கூறுகிறார்?
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை'
நிலம் தன்னைத் தோண்டுகிறவர்களைப் பொறுத்துக் கொண்டிருக்கிறது. பொறுத்துக் கொள்வதுமட்டுமா? தோண்டுகிறவர்களுக்குத் தூய தண்ணீரையும் அளித்து உதவுகிறது. பூமிக்கு உள்ள இந்தக் குணம் பூமியை ஆள நினைப்பவர்களுக்கும் இருக்க வேண்டும். என்னைப் போன்ற கிழவன் ஏதாவது அனுசிதமாகச் சொன்னாலும் பூமி ஆள விரும்பும் தாங்கள், பொறுத்துக் கொள்ளுவது தான் உசிதம்."
"ஐயா! என்ன சொல்லுகிறீர்! நான் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆள விரும்புவதாகக் குற்றம்சாட்டுகிறீரா?" என்று கேட்டான் மதுராந்தகன். அவனுடைய உதடுகள் துடித்தன; புருவங்கள் நெறித்தன. பயம் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாறி வந்ததென்பதற்கு அறிகுறிகள் தென்பட்டன.
ஆனால் முதலாவது மந்திரியோ சிறிதும் பதட்டமில்லாமல், "இளவரசே! குற்றம் சாட்டுகிறேன் என்றுஏன் சொல்லுகிறீர்கள்? தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆள விரும்பினால், அது எப்படிக் குற்றமாகும்?வீராதி வீரரான விஜயாலய சோழரின் குலத்தில் உதித்தவர் தாங்கள். மகானாகிய சிவஞானகண்டராதித்தரின் திருப்புதல்வர். இந்தச் சோழ சிம்மாசனம் ஏறுவதற்குத் தங்களுக்குப் பூரண உரிமை உண்டு. அதைத் தாங்கள் விரும்புவது குற்றம் எப்படி ஆகும்? அது குற்றம் என்றும், ஆகையால் அதற்காக இரகசியமான சதி முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்றும் யாராவது தங்களுக்கு யோசனை சொன்னால் அதைத் தாங்கள் நம்ப வேண்டாம். இளவரசே! இந்தக் கிழவனுடைய வார்த்தையைக் கொஞ்சம் செவி சாய்த்துக் கேளுங்கள். தங்களுடைய பெற்றோர்களின் விருப்பம் ஒரு விதமாயிருந்தது. தாங்களும் அதற்கு இணங்கிச் சிவபக்தியில்ஈடுபட்டிருந்தீர்கள். இப்போது தங்கள் மனம் மாறியிருக்கிறது. அதைப் பற்றிக் குற்றம் கூற யாருக்கும்பாத்தியதை இல்லை.தங்களுடைய உரிமையைத் தாங்கள் பகிரங்கமாகக் கோரலாம். சக்கரவர்த்தியிடமேதங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தலாம். அதை விடுத்துக் கேவலம் காலாமுகக் கூட்டத்தாரின் ஆதரவைக்கோருவதற்காக அமாவாசை இருட்டில் தன்னந்தனியாகக் கொள்ளிடக் கரைக்குப் போக வேண்டிய அவசியமில்லை. அல்லது சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரியில் திருடர் கூட்டத்தைப் போல் கூட்டம் போட்டுச் சதிப் பேச்சுப் பேச வேண்டிய அவசியமும் இல்லை. இந்த மாதிரியெல்லாம் தங்களுக்கு யோசனைகூறுகிறவர்கள் தங்களுடைய பரம விரோதிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்!"
மதுராந்தகன் பெருங் குழப்பத்துக்கு உள்ளானான். முதன் மந்திரிக்கு இவ்வளவு விஷயங்களும்தெரிந்திருக்கின்றன என்று எண்ணியபோது அவனுக்கு உண்டான வியப்புக்கு அளவில்லை. அதே சமயத்தில் பீதிஒரு பக்கமும், பீதி காரணமாக ஆத்திரம் ஒரு பக்கமும் பெருகிக் கொண்டிருந்தன.
"ஐயா தங்களுக்கு இவையெல்லாம் எப்படித் தெரிந்தது? எந்தத் துரோகி என்னுடன்சிநேகமாயிருப்பது போல் நடித்துக் கொண்டு தங்களிடமும் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறான்?" என்றுகேட்டான்.
"தாங்கள் அதை அறிய முயல்வதில் பயனில்லை. இந்தப் பரந்தக் இராஜ்யமெங்கும் எனக்குக் கண்கள்இருக்கின்றன! காதுகளுமிருக்கின்றன! நான் அறியாமல் எதுவும் இந்த நாட்டில் நடைபெற முடியாது...."
"அப்படியானால், சக்கரவர்த்திக்கும் இவையெல்லாம் தெரியுமா?" என்று மதுராந்தகன் கேட்டான்.
"இல்லை; அவருக்குத் தெரியாது, என் கண்களும், காதுகளும் தெரிவிக்கும் எத்தனையோ இரகசியங்கள் என் நெஞ்சகத்தில் பதிந்து கிடக்கின்றன. அவசியமும் அவசரமும் நேர்ந்தால் ஒழிய அவை வௌியில் வரவே வரா...."
"ஆம், ஆம்; தங்களுடைய நெஞ்சகத்தில் எவ்வளவோ பயங்கரமான இரகசியங்கள் புதைந்துகிடக்கின்றன. அவை மட்டும் வௌியில் வந்தால், இந்தச் சோழ சாம்ராஜ்யமே நடு நடுங்கிப் போகாதா?"என்றான் மதுராந்தகன். அவனுடைய குரலில் இப்போது இதற்கு முன் இல்லாத கபடமும், வஞ்சகமும் தொனித்தன.
முதன் மந்திரி அதைக் கவனித்தும் கவனியாதவர் போல் கூறினார்:- "சக்கரவர்த்தி என்னுடையஆப்த நண்பர். ஆனால் அவர் அறியாத இரகசியங்களும் என் நெஞ்சில் இருக்கின்றன. சுந்தர சோழர் கொடியநோய் வாய்ப்பட்டிருக்கிறார். பல காரணங்களினால் அவர் மனம் ஏற்கனவே, புண்ணாகியிருக்கிறது. சிற்றரசர்களின் சதிச் செயலைப் பற்றி அவரிடம் சொல்லி மேலும் அவர் நெஞ்சைப் புண்படுத்த நான்விரும்பவில்லை. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. இளவரசே! தங்களுடைய காரியங்களைப் பற்றியவரையில் நான் சக்கரவர்த்தியிடம் ஒரு நாளும் சொல்ல மாட்டேன் தாங்கள் நம்பியிருக்கலாம்."
"ஐயா! அன்பில் அநிருத்தரே! இந்தப் பேதை மதுராந்தகன் பேரில் தங்களுக்குத் திடீரென்றுஇவ்வளவு அபிமானம் தோன்றக் காரணம் என்ன?" என்று மதுராந்தகன் கேட்டு விட்டு ஏளனச் சிரிப்புச்சிரித்தான்.
"இளவரசே! தங்களிடம் திடீரென்று எனக்கு அபிமானம் பிறந்துவிடவில்லை. சுந்தரசோழரின் புதல்வர்களைப் போலவே தான் தங்களிடமும் நான் எப்போதும் அபிமானம் வைத்து வந்திருக்கிறேன்.அதைக் காட்டிக் கொள்வதற்கு இதற்கு முன்னால் சந்தர்ப்பம் ஏற்படவில்லை...."
"இன்றைக்கு அச்சந்தர்ப்பம் கிடைத்தது! நான் குதிரை மேலிருந்து விழுந்து ஒடித்துக் கொண்டதால்ஏற்பட்டது. ஆனாலும் சில நாளைக்கு முன்னாலேயென்றால், என்னை அந்த மரத்தடியிலேயே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு வந்திருப்பீர்..."
"நாராயணா; நாராயணா! இது என்ன வார்த்தை, இளவரசே!"
"ஐயா! எனக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ண வேண்டாம். ஏதைச் சொன்னாலும் நம்பக்கூடியஅப்பாவி என்று நினைக்க வேண்டாம். நான் என் தாயாரின் கர்ப்பத்தில் இருந்தபோதே எனக்கு எதிராகநீர் சதி செய்யத் தொடங்கினீர். நான் இந்தப் பூமியில் பிறந்ததும் என்னைக் கொன்று விடுவதற்குஏற்பாடு செய்திருந்தீர்.... அதோ, உம்முடைய முகத்தில் ஆச்சரியத்தின் அறிகுறியைக் காண்கிறேன். அதெல்லாம் எனக்கு எப்படித் தெரிந்தது என்று வியப்படைகிறீர், இல்லையா? இந்தச் சோழ நாட்டில் பயங்கரஇரகசியங்கள் பலவற்றை அறிந்தவர் நீர் ஒருவர்தான் என்று எண்ண வேண்டாம்!"
அநிருத்தரின் முகம் இப்போது உண்மையாகவே அதிசயமான காட்சி அளித்தது. அதில் கணத்துக்குஒரு சாயல் தோன்றி மறைந்தது. கடைசியில் வருந்தி வருவித்துக் கொண்ட புன்னகையுடன் முதன் மந்திரி. "ஆம், இளவரசே! நான் அவ்விதம் இறுமாந்திருந்தது உண்மைதான். இன்றைக்குக் கர்வபங்கமாயிற்று. தாங்கள்பிறந்தவுடனே சிசுஹத்தி செய்ய ஏற்பாடு நடந்திருக்கும் பட்சத்தில் தாங்கள் எப்படி பிழைத்தீர்கள்? அந்தஇரகசியத்தையும் கூறி விட்டால் கிருதார்த்தனாவேன்!" என்றார்.
"எனக்கு எவ்வளவுதான் தெரியும் என்று சோதிக்கிறீர் போலும்! நல்லது; சொல்கிறேன். சிசுஹத்தி செய்வதற்கு தாங்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள் குழந்தை பிறந்ததும் ஆணா பெண்ணா என்று கூடப்பாராமல் அவசரப்பட்டு எடுத்துக் கொண்டு போனார்கள் பெண் குழந்தை என்று தெரிந்ததும் தங்களிடம் வந்துசொன்னார்கள். பிழைத்துப் போகட்டும் என்று அக்குழந்தையைக் கோயில் பட்டர் ஒருவரிடம் ஒப்புவித்துவளர்க்கச் சொன்னீர்கள். பெண் குழந்தை பிறந்த அரை நாழிகை நேரத்தில் நான் பிறந்தேன். அதைநீங்கள் எதிர் பார்க்கவேயில்லை. என்னுடைய ஜாதக பலமும் சரியாயிருந்தது. அதனால் நான் உயிர்பிழைத்தேன். தங்களுடைய திட்டம் தவறிப் போனது பற்றி அறிந்த பிறகும், என்னைச் சிம்மாசனம்ஏறவிடாமல் தடுப்பதற்குப் பல சூழ்ச்சிகள் செய்தீர்கள். என்னைச் சிவபக்தனாக, அதாவதுபைத்தியக்காரனாக வளர்ப்பதற்கு ஏற்பாடு செய்தீர்கள். அதிலும் தவறிப் போனீர்கள். நான் தாங்கள்விரும்பியது போல் அவ்வளவு முழுப் பைத்தியக்காரனாகி விடவில்லை. ஐயா! முதன் மந்திரியே! ஏன்இப்படி ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருக்கிறீர்? இவையெல்லாம் உண்மையில்லை யென்று ஒரேயடியாகச்சாதிப்பது தானே?"
முதன் மந்திரி உண்மையில் ஸ்தம்பித்துப் போய்த்தான் உட்கார்ந்திருந்தார். ஒருவாறு பேசும்சக்தியை வருவித்துக் கொண்டு "இளவரசே! தங்களுக்கு இவ்வளவெல்லாம் விவரங்கள் தெரிந்திருக்கும் போதுநான் இல்லையென்று சாதிக்கப் பார்ப்பதில் என்ன பயன்?" என்றார்.
"ஆமாம்; பயனில்லைதான்! என்னிடம் திடீரென்று நீர் பரிவு கொண்டதன் காரணமும் எனக்குத் தெரியும். ஆதித்த கரிகாலனை உமக்குப் பிடிக்காது. அருள்மொழிவர்மனைச் சோழ நாட்டின் சிம்மாசனத்தின் ஏற்றி வைக்க எண்ணியிருந்தீர். அவனைக் கடல் கொண்டு விட்டதனால் இப்போது என்னிடம் பரிவு கொண்டிருக்கிறீர்! ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன். முன்னர் நீர் எனக்குச் செய்த தீங்குகளையெல்லாம் மறந்துவிடப் போகிறேன். இன்று நீர் எனக்குச் செய்த உதவிக்கு நன்றியும் செலுத்துவேன். இன்று முதலாவது நீர் என் கட்சியில் இருப்பதாகச் சொல்லும் பட்சத்தில் நான் சிம்மாசனம் ஏறியதும் உம்மையே முதன் மந்திரியாக வைத்துக் கொள்ளவும் விரும்புகிறேன்!" என்றான் மதுராந்தகன்.
"இளவரசே! தங்களுடைய வார்த்தைகள் என்னைப் புளகாங்கிதம் அடையச் செய்கின்றன!"என்றார் அன்பில் அநிருத்தப் பிரம்மராயர்.
பக்க தலைப்பு
நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
சுரம் தௌிந்தது
நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் ஆச்சாரிய பிக்ஷூவின் அறைக்குப் பக்கத்து அறையில்பொன்னியின் செல்வன் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். மூன்று நாள் அவனுக்குக் கடும் சுரம் அடித்துக்கொண்டிருந்தது; பெரும்பாலும் சுயப் பிரக்ஞையே இல்லாமலிருந்தது. இந்த நாட்களில் பிக்ஷூக்கள் அவனைக்கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு வந்தார்கள். வேளைக்கு வேளை மருந்து கொடுத்து வந்தார்கள். அடிக்கடி வாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஜாக்கிரதையாகப் பார்த்து வந்தார்கள்.
இடையிடையே எப்போதாவது சுயநினைவு தோன்றிய போது, தான் இருக்குமிடத்தைப் பற்றி அவன் எண்ணிப் பார்க்க முயன்றான். அவனுக்கு எதிரில் சுவரில் எழுதியிருந்த சித்திரக்காட்சி அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அந்தச் சித்திரத்தில் தேவர்கள், கந்தவர்கள், யக்ஷர்கள் காணப்பட்டார்கள். அவர்களில் சிலர் பலவித இன்னிசைக் கருவிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் வெண்சாமரங்களையும்,வெண்கொற்ற குடைகளையும் ஏந்திக் கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர் கரங்களில் பல வர்ணமலர்கள் உள்ள தட்டுக்களை ஏந்திக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி தத்ரூபமாக இருந்தது. தேவர்களின் உருவங்கள் எல்லாம் உயிர் உள்ள உருவங்களாகத் தோன்றின. அடிக்கடி அக்காட்சிகளைப் பார்த்த பிறகு பொன்னியின் செல்வன் வானவரின் நாட்டுக்குத் தான் வந்து விட்டதாகவே எண்ணினான். அந்தத் தேவ யட்ச கின்னரர்கள் எல்லாரும் தன்னை வரவேற்க வருவதாகவும் எண்ணினான். சொர்க்க லோகத்துக்குத் தான் வந்து சேர்ந்தது எப்படி என்று யோசித்தான். அடர்த்தியான தாழைப் புதர்களும், அத்தாழைப் புதர்களில் பூத்திருந்த தங்கநிறத் தாழம்பூக்களும் இருபுறமும் நிறைந்திருந்த ஓடையின் வழியாக வான நாட்டுக்குத் தான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த ஓடை வழி நினைவு வந்த போது தாழம்பூக்களிலிருந்து வந்த நறுமணத்தையும் அவன் நுகர்வதாகத் தோன்றியது. ஓடையில் ஒரு படகில் ஏற்றித் தன்னை ஒரு தேவகுமாரனும் தேவகுமாரியும் அழைத்து வந்ததும் இலேசாக நினைவு வந்தது. தேவகுமாரன் சிவபக்தன் போலிருக்கிறது. இனிமையான தேவாரப்பாடல்களை அவன் அடிக்கடி பாடினான். தேவகுமாரி என்ன செய்தாள்? அவள் பாடவில்லை. அவள் அவ்வப்போது இரண்டொரு வார்த்தைகள் மட்டுமே கூறினாள். அதுவே தேவகானம் போலிருந்தது. ஆர்வமும் அன்பும் நிறைந்த கண்களால் தன்னை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்விருவரும் இப்போது எங்கே?
வானவர் நாட்டில் தேவர்கள் யக்ஷர்கள், கின்னரர்களைத் தவிர புத்த பிக்ஷூக்களுக்கும் முக்கியமானஇடம் உண்டு போலும்! அவர்கள்தான் தேவலோகத்து அமுத கலசத்தைப் பாதுகாக்கிறவர்கள் போலும்! அடிக்கடிபுத்த பிக்ஷூ ஒருவர் அவனை நெருங்கி வருகிறார். அவனுடைய வாயில் சிறிது அமுதத்தை ஊற்றி விட்டுப்போகிறார். தேவலோகத்தில் மற்ற வசதிகள் எவ்வளவு இருந்தாலும், தாகம் மட்டும் அதிகமாகவேஇருக்கிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இந்தப் புத்த பிக்ஷூ தன் வாயில் அமுதத்தை ஊற்றிவிட்டுப்போகக் கூடாதோ? தேவலோகத்தில் கூட ஏன் இந்தத் தரித்திர புத்தி!
ஒருவேளை அமுதத்தை ஒரேயடியாக அதிகமாய் அருந்தக் கூடாது போலும்! இது அமுதமா? அல்லது ஒரு வேளை ஏதேனும் மதுபானமா? - சீச்சீ! பிக்ஷூக்கள் கேவலம் மதுவைக் கையினாலும் தொடுவார்களா? தன்வாயிலேதான் கொண்டு வந்து ஊற்றுவார்களா? இல்லையென்றால், ஏன் இப்படித் தனக்கு மயக்கம் வருகிறது? அமுத பானம் செய்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஏன் நினைவு குன்றுகிறது?...
மூன்று தினங்கள் இவ்வாறு பொன்னியின் செல்வன் வானவர் உலகத்திலும் நினைவேயில்லாத சூனியஉலகத்திலும் மாறி மாறிக் காலம் கழித்த பிறகு, நாலாம் நாள் காலையில் தூக்கத்திலிருந்துவிழித்தெழுவது போல எழுந்து, பூரண சுய நினைவு பெற்றான். உடம்பு பலவீனமாய்த் தானிருந்தது; ஆனால்உள்ளம் தௌிவாக இருந்தது. எதிரே சுவரில் இருந்த உருவங்கள் சித்திர உருவங்கள் என்பதை அறிந்தான். அந்தத் தேவ யக்ஷ கின்னரர்கள் தன்னை வரவேற்பதற்காக அங்கே நிற்கவில்லையென்றும், தேவலோகத்துக்கு விஜயம் செய்த பகவான் புத்தரை வரவேற்கிறார்கள் என்றும் அறிந்தான். மற்றொரு சுவரில் மேகங்கள் சூழ்ந்த வானவௌியில் புத்த பகவான் ஏறிவருவது போன்ற சித்திரம் எழுதியிருந்ததையும் கண்டான். புத்த விஹாரம்ஒன்றில் தான் படுத்திருப்பதை அறிந்து கொண்டான். எங்கே, எந்தப் புத்த விஹாரத்தில் என்று சிந்தித்தபோது, இலங்கையிலிருந்து தான் பிரயாணம் தொடங்கியதிலிருந்து நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம்ஒவ்வொன்றாக நினைவு வந்தன. வந்தியத்தேவனும் தானும் அலைமோதிய கடலில் அலைப் புண்டு அலைப்புண்டு கை சளைத்துப் போனது வரையில் ஞாபகம் வந்தது. அப்புறம் ஒரே குழப்பமாக இருந்தது.
அச்சமயம் புத்த பிக்ஷூ ஒருவர் அந்த அறைக்குள் வந்தார். வழக்கம்போல் கையில் அமிர்தகிண்ணத்துடன் வந்தார்! இளவரசன் அருகில் வந்ததும் பிக்ஷூ அவனை உற்றுப் பார்த்தார்! இளவரசன் கையைநீட்டிக் கிண்ணத்தை வாங்கி அதில் இருப்பது என்னவென்று பார்த்தான். அது தேவலோகத்து அமுதம் இல்லையென்று உறுதிப்படுத்திக் கொண்டான். மருந்து அல்லது மருந்து கலந்த பால் என்று தெரிந்து கொண்டான். பிக்ஷூவை நோக்கி, "சுவாமி! இது என்ன இடம்? தாங்கள் யார்? எத்தனை நாளாக நான் இங்கே இப்படிப் படுத்திருக்கிறேன்?" என்று கேட்டான்.
பிக்ஷூ அதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லாமல் திரும்பிச் சென்றார். அடுத்த அறைக்கு அவர்சென்று, "ஆச்சாரியாரே! சுரம் நன்றாய்த் தௌிந்துவிட்டது. நினைவு பூரணமாக வந்து விட்டது!" என்றுகூறியது இளவரசன் காதில் விழுந்தது.
சிறிது நேரத்துக்கெல்லாம் வயது முதிர்ந்த பிக்ஷூ ஒருவர் பொன்னியின் செல்வன் இருந்த அறைக்குள்வந்தார். கட்டிலின் அருகில் வந்து அவரும் இளவரசனை உற்றுப் பார்த்தார். பிறகு மலர்ந்த முகத்துடன்,"பொன்னியின் செல்வ! தாங்கள் இருக்குமிடம் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம். கடுமையான தாபஜ்சுரத்துடன் தாங்கள் இங்கே வந்து மூன்று தினங்கள் ஆயின. தங்களுக்கு இந்தச் சேவை செய்வதற்குக் கொடுத்துவைத்திருந்தோம். நாங்கள் பாக்கியசாலிகள்!" என்றார்.
"நானும் பாக்கியசாலிதான், இந்தச் சூடாமணி விஹாரத்துக்கு வந்து பார்க்க வேண்டுமென்று ஆவல்கொண்டிருந்தேன். எப்போதோ ஒருசமயம் இந்த நகரின் துறைமுகத்துக்குப் போகும் போது வௌியிலிருந்துபார்த்திருக்கிறேன்.தெய்வாதீனமாக இங்கேயே நான் வந்து தங்கியிருக்கும்படி நேர்ந்தது. சுவாமி எப்படிநான் இங்கு வந்து சேர்ந்தேன்? சொல்ல முடியுமா?" என்று அருள்மொழி வர்மன் கேட்டான்.
"இளவரசே! முதலில் தங்களுடைய கையில் உள்ள மருந்தைச் சாப்பிடுங்கள் எனக்குத் தெரிந்தவிவரங்களைச் சொல்லுகிறேன்" என்றார் பிக்ஷூ.
இளவரசன் மருந்தைச் சாப்பிட்டு விட்டு, "ஐயா! இது மருந்து அல்ல; தேவாமிர்தம். என் விஷத்தில் தாங்கள் எவ்வளவோ சிரத்தை எடுத்துச் சிகிச்சை செய்வித்திருக்கிறீர்கள். ஆனால் இதற்காகத் தங்களுக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை" என்றான்.
ஆச்சாரிய பிக்ஷூ புன்னகை புரிந்து, "இளவரசே தாங்கள் நன்றி செலுத்த வேண்டிய அவசியமும்இல்லை. நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வது பரமோத்தம தர்மம் என்று புத்த பகவான்அருளியிருக்கிறார்.நோய்ப்பட்ட பிராணிகளுக்குக் கூடச் சிகிச்சை செய்யும்படி புத்த தர்மம்கட்டளையிடுகிறது. தங்களுக்குச் சிகிச்சை செய்ததில் அதிக விசேஷம் ஒன்றுமில்லை. சோழகுலத்துக்குநாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள். தங்கள் தந்தையார் சுந்தர சோழ சக்கரவர்த்தியும், தங்கள்திருத்தமக்கையார் இளைய பிராட்டியும் புத்த தர்மத்துக்கு எவ்வளவோ ஆதரவு அளித்திருக்கிறார்கள். இலங்கைஅநுராத புரத்தில் புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கட்ட நீங்கள் ஏற்பாடு செய்ததும் எங்களுக்குத்தெரிந்ததே. அப்படியிருக்கும் போது, நாங்கள் செய்த இந்தச் சிறிய உதவிக்காகத் தங்களிடம் நன்றிஎதிர்பார்க்கவில்லை...."
"ஆச்சாரியரே! நன்றி செலுத்துவது பற்றி அந்த முறையில் நான் கூறவில்லை. எனக்குஎப்பேர்ப்பட்ட கடும் சுரம் வந்திருக்க வேண்டும், என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இலங்கையில் இந்தசுரத்தினால் பீடிக்கப்பட்டவர்களின் கதியை நான் பார்த்திருக்கிறேன். நியாயமாக இதற்குள் நான்வானவர் உலகத்துக்குப் போயிருக்க வேண்டும். அங்கே தேவர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள் என்னை வரவேற்றுஉபசரித்திருக்கக்கூடும் அல்லவா? இன்று தேவர் - தேவியர்களுக்கு மத்தியில் உண்மையாகவே அமிர்த பானம்செய்து கொண்டு ஆனந்த மயமாய் இருப்பேன் அல்லவா? அதைத் தாங்கள் கெடுத்து விட்டீர்கள்! வானுலகத்தில்வாசல் வரையில் சென்ற என்னைத் திரும்ப இந்தத் துன்பம் நிறைந்த மண்ணுலகத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்.ஆதலின் எனக்குத் தாங்கள் நன்மை செய்ததாகவே நான் எண்ணவில்லை. ஆகையால்தான் தங்களுக்கு நன்றிசெலுத்தப் போவதில்லை என்று கூறினேன்!"
ஆச்சாரிய பிக்ஷூவின் முகம் ஆனந்தப் பூரிப்பினால் மலர்ந்தது.
"பொன்னியின் செல்வ! தாங்கள் வானுலகத்துக்குப் போக வேண்டிய காலம் வரும்போதுதேவேந்திரனும் பிற தேவர்களும் விமானங்களில் வந்து தேவ துந்துபிகள் முழங்க மலர்மாரி பொழிந்துதங்களை அழைத்துச் செல்வார்கள். ஆனால் அந்தக் காலம் இன்னும் நெடுந் தூரத்தில் இருக்கிறது. இந்தமண்ணுலகில் தாங்கள் செய்ய வேண்டிய அரும்பெரும் காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன! அவற்றை முடித்து விட்டல்லவா வானுலகம் செல்வது பற்றி யோசிக்க வேண்டும்?" என்றார்.
இது காறும் சாய்ந்து படுத்திருந்த பொன்னியின் செல்வன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுடையதிருமுகத்தில் அபூர்வமான களை பொலிந்தது. அவனுடைய விசாலமான நயனங்களிலிருந்து மின் வெட்டுப்போன்ற ஒளிக் கிரணங்கள் அலை அலையாகக் கிளம்பி அந்த அறையையே ஜோதி மயமாகச் செய்தன.
"ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்கவிரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்தைஒரு சமயம் வௌியிலிருந்து பார்த்தேன். அநுராத புரத்திலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்தேன்.அங்கேயுள்ள அபயங்கிரி விஹாரத்தைப் போலப் பெரிதாக இந்தச் சூடாமணி விஹாரத்தைப் புனர் நிர்மாணம்செய்யப் போகிறேன். அநுராத புரத்தில் உள்ள பெரிய பெரிய புத்தர் சிலைகளைப் போன்ற சிலைகளைஇந்த விஹாரத்திலும் அமைத்துப் பார்க்கப் போகிறேன், இன்னும் இந்தச் சோழ நாட்டிலுள்ள சிவாலயங்களைஅம்மாதிரி புதுப்பித்துக் கட்டப் போகிறேன். இலங்கையிலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்துவிட்டு இச்சோழ நாட்டிலுள்ள ஆலயங்களையும் நினைத்துப் பார்த்தால் எனக்கு உடலும் உள்ளமும் குன்றுகின்றன. வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத்தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன். ஆச்சாரியரே! இந்தச்சோழ நன்னாட்டில் புத்த ஸ்தூபங்களும், சிவாலயங்களில் கோபுரங்களும் ஒன்றோடொன்று போட்டியிட்டு மேகமண்டலத்தை எட்டப் போகின்றன. ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ் நாட்டில்பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்...."
இவ்வாறு ஆவேசம் கொண்டவன்போல் பேசி வந்த இளவரசன் உடலில் போதிய பலமில்லாமையால்கட்டிலில் சாய்ந்தான். உடனே ஆச்சாரிய பிக்ஷூ அவனுடைய தோள்களைப் பிடித்துக் கொண்டு, கட்டிலில் தலைஅடிபடாமல் மெள்ள மெள்ள அவனைப் படுக்க வைத்தார். நெற்றியில் கையினால் தடவிக் கொடுத்து,"இளவரசே! தாங்கள் உத்தேசித்த அரும்பெரும் காரியங்களையெல்லாம் காலா காலத்தில் செய்து முடிப்பீர்கள்.முதலில், உடம்பு பூரணமாய்க் குணமடைய வேண்டும். சற்று அமைதியாயிருங்கள்!" என்றார்.
பக்க தலைப்பு
நாற்பத்துமூன்றாம் அத்தியாயம்
நந்தி மண்டபம்
மறுநாள் பிற்பகல் மீண்டும் பெரிய பிக்ஷூ பொன்னியின் செல்வனைப் பார்ப்பதற்கு வந்தார். அவரிடம் பல கேள்விகள் கேட்பதற்கு இளவரசன் துடித்துக் கொண்டிருந்தான். சின்ன பிக்ஷூவிடம் அவன் கேள்விகேட்டு விவரம் அறிந்து கொள்ளச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. "ஐயா! எல்லாம் குருதேவர்தெரிவிப்பார்" என்று ஒரேவித மறுமொழிதான் திரும்பத் திரும்ப வந்தது.
குருதேவர் வந்ததும், "இளவரசே! இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.
"ஐயா உடம்பு என்னை மிகவும் தொந்தரவு படுத்துகிறது. 'எதற்காக சோம்பிப் படுத்திருக்கிறாய்? எழுந்து ஓடு! குதிரை மேல் ஏறு! நதியில் குதித்து நீந்து! யானையுடன் சண்டைபோடு! வெறுமனே படுத்திராதே!' என்கிறது. வயிறும் வெகு சுறுசுறுப்பாயிருக்கிறது. சின்ன பிக்ஷூ கொண்டு வந்துகொடுத்த உணவெல்லாம் போதவில்லை. ஆச்சாரியரே! இத்தனை நாள் நான் கடும் சுரம் நீடித்து நினைவுதவறியிருந்தேன் என்பதையே நம்ப முடியவில்லை. தங்களுடைய மருந்து அவ்வளவு அற்புதமான வேலைசெய்திருக்கிறது!" என்று சொன்னான் பொன்னியின் செல்வன்.
"ஐயா! உடம்பின் பேச்சை ரொம்பவும் நம்பிவிடக் கூடாது. சுரம் தௌிந்ததும் அப்படித்தான்இருக்கும்; கொஞ்சம் அசட்டையாயிருந்தது, இரண்டாந் தடவை சுரம் வந்துவிட்டால் உயிருக்கே ஆபத்தாகப்போய்விடும்!"
"குருதேவரே! என்னுடைய உயிருக்கு வரக்கூடிய ஆபத்தைப் பற்றி நான் அவ்வளவாகப் பயப்படவில்லை...."
"தாங்கள் கவலைப்படவில்லை; சரிதான்! ஆனால் இந்தச் சோழ நாட்டில் உள்ள கோடி மக்கள்சென்ற நாலைந்து தினங்களாக எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், தெரியுமா? நாடுநகரங்களெல்லாம் அல்லோலகல்லோலப் படுகின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் முதலாவது வயோதிகர்கள் வரையில் கண்ணீர் விடுகிறார்கள்...."
"ஐயா! தாங்கள் சொல்லுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. ஜனங்கள் எதற்காக அவ்வளவுவருத்தப்பட வேண்டும்? ஒருவேளை நான் இந்தச் சுரம் குணமாகிப் பிழைக்க மாட்டேன் என்ற எண்ணத்தினாலா?சூடாமணி விஹாரத்தில் தாங்கள் எனக்குச் சிகிச்சை செய்து வருகிறீர்கள் என்று தெரிந்திருக்கும் போதுஜனங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?"
"இளவரசே! தங்களுக்குச் சுரம் என்பதும், தாங்கள் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதும்ஜனங்களுக்குத் தெரியாது. இந்த நகரத்தின் மாந்தர்களுக்கு அது தெரிந்திருந்தால், இந்த விஹாரத்தில்இவ்வளவு அமைதி குடி கொண்டிருக்குமா? மதில் சுவர்களையெல்லாம் இடித்துத் தகர்த்துக்கொண்டு அத்தனை ஜனங்களும் தங்களைப் பார்க்க இங்கு வந்திருக்க மாட்டார்களா? அன்று காலையில் தாங்கள் கடலில் மூழ்கிவிட்டதாகச் செய்தி வந்தபோது இந்த நகரின் மாந்தர் எழுப்பிய ஓலத்தையும் பிரலாபத்தையும் தாங்கள்கேட்டிருந்தால்.... ஏன் இந்த விஹாரத்துக்குள்ளேயே அன்று காலை கண்ணீர்விட்டுக் கதறாதவர் யாரும்இல்லையே?"
பொன்னியின் செல்வன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, "குருதேவரே! இது என்ன சொல்கிறீர்கள்?எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே? நான் கடலில் முழுகிவிட்டதாகச் செய்தி வந்ததா? எப்போது வந்தது?யார் அத்தகைய பயங்கரச் செய்தியைக் கொண்டு வந்தது? எதற்காக?" என்று கேட்டான்.
"யார் கொண்டு வந்தார்களோ, தெரியாது! ஒருநாள் காலையில் அந்தச் செய்தி இந்தநகரமெங்கும் பரவிவிட்டது. தங்களை இலங்கையிலிருந்து கோடிக் கரைக்கு ஏற்றி வந்த கப்பல் சுழல்காற்றில் அகப்பட்டு மூழ்கி விட்டதாக ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். கோடிக்கரையோரமாகதனாதிகாரி பழுவேட்டரையர் தங்களை எவ்வளவோ தேடியும் தங்கள் உடல்கூட அகப்படவில்லையென்றும், ஆகையால் கடலில் முழுகிப் போயிருக்க வேண்டும் என்றும் பராபரியாகச் செய்தி பரவிவிட்டது. அதைக் கேட்டு விட்டு நான்கூட இந்த விஹாரத்தின் வாசலில் நின்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இன்னொரு பிக்ஷூ வந்து, நோயாளியை ஏற்றிக் கொண்டு ஒரு படகு விஹாரத்தின் பின்புறத்துக் கால்வாயில் வந்திருப்பதாகத் தெரிவித்தார். நான் உடனே வந்து பார்த்த போது படகில் உள்ள நோயாளி தாங்கள்தான் என்பதைக் கண்டேன் பிறகு மூன்று நாட்களாகச் சிகிச்சை செய்து வந்தோம். நேற்றுத்தான் தங்களுக்கு நினைவு வந்தது."
"ஆச்சாரியரே! என்னைப் படகில் ஏற்றிக்கொண்டு வந்தது யார்? சொல்ல முடியுமா?"
"ஒரு இளைஞனும், ஒரு யுவதியும் படகு தள்ளிக்கொண்டு வந்தார்கள்."
"ஆம், ஆம்; எனக்குக்கூட கனவில் கண்டது போல் நினைவுக்கு வருகிறது. அந்த இளைஞனும் யுவதியும் யார் என்று தெரியுமா? இளைஞன் வாணர் குலத்து வந்தியத்தேவனா?"
"இல்லை, ஐயா! அவன் பெயர் சேந்தன் அமுதன் என்று சொன்னான். சிவ பக்தி மிக்கவன் என்றுதோன்றியது. பெண்ணின் பெயரை நான் அறிந்து கொள்ளவில்லை. தேக திடமும் மனோவலியும் வாய்ந்தவள்..."
"அவன் யார் என்று நான் ஊகிக்க முடியும். ஓடக்காரப் பூங்குழலி; தியாக விடங்கரின் மகள். அவர்கள் என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று சொல்லவில்லையா?"
"இல்லை! இளவரசே! நான் அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்கவும் இல்லை."
"நான் இங்குப் பத்திரமாயிருக்கிறேன் என்று தாங்கள் யாருக்கும் தெரியப்படுத்த வில்லையா?"
"இல்லை, ஐயா! யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று தங்களை அழைத்து வந்தவர்கள் சொன்னார்கள். தங்கள் உடல் நிலையை முன்னிட்டுச் சொல்லாமலிருப்பதே நல்லது என்று நானும் எண்ணினேன்."
"ஆச்சாரியரே! இதில் ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது. என்னைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி என் தந்தை மும்முடிச்சோழ மகாராஜா கட்டளையிட்டிருந்தார். அதற்கிணங்கவே நான் இலங்கையிலிருந்து புறப்பட்டேன். நடுவில் ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. சக்கரவர்த்தியின் கட்டளைக்கு விரோதமாக நான் நடந்தேன் என்று குற்றம் சாட்டுவதற்காக இந்தச் சூழ்ச்சி நடந்திருப்பதாகவும் தோன்றுகிறது. நான் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் கதை கட்டி விட்டிருக்கிறார்கள். குருதேவரே! என்னைத் தாங்கள் இந்தச் சூடாமணி விஹாரத்தில் ஏற்றுக்கொண்டதே இராஜத் துரோகமான காரியம். மேலும் வைத்திருப்பது பெருங்குற்றமாகும். உடனே என்னைத் தஞ்சாவூருக்கு அனுப்பி விடுங்கள்...."
"இளவரசே! தங்களுக்கு இடங் கொடுத்ததற்காக எனக்கு இராஜ தண்டனை கிடைப்பதாயிருந்தால்அதைக் குதூகலத்துடன் வரவேற்பன். அதன் பொருட்டு இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்தை இடித்துத் தள்ளி மண்ணோடு மண்ணாக்கி விடுவதாயிருந்தாலும் பாதகம் இல்லை..."
"தங்களுடைய பரிவைக் குறித்து மகிழ்கிறேன், குருதேவரே! ஆனாலும், என்னைக் கொண்டு வந்தவர்களிடம் ஒன்றும் விசாரியாமல் எப்படி என்னை ஏற்றுக் கொண்டீர்கள்?"
"விசாரிப்பதற்கு அவசியம் என்ன? கடும் சுரத்தோடு வந்த தங்களை வரவேற்றுச் சிகிச்சை செய்வதைக் காட்டிலும் என்னைப் போன்ற பிக்ஷூக்களுக்கு வேறு என்ன உயர்ந்த கடமை இருக்க முடியும்?மேலும் தங்களுடைய திருத்தமக்கையார், குந்தவை தேவியார், தாங்கள் இங்கு வந்து சிலநாள் தங்கக்கூடும்என்று முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள்."
"ஓ! அப்படியா! இளைய பிராட்டியா அவ்விதம் சொல்லி அனுப்பியிருந்தார்? எப்போது?"
"தாங்கள் இங்கு வருவதற்கு சில நாளைக்கு முன்பு தங்களைக் கொண்டு வந்த சேந்தன் அமுதனும், 'இளைய பிராட்டியின் விருப்பம்' என்றுதான் கூறினான்."
"குருதேவா! என்னை அழைத்து வந்தவர்கள் இருவரும் உடனே திரும்பி போய்விட்டார்களா? அவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா? அவர்களைப் பார்த்தாவது, சில விவரங்கள் எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும்."
"ஐயா! பதட்டம் வேண்டாம். அவர்கள் இருவரும் இந்த நரகத்திலேதான் இருக்கிறார்கள். தினம் ஒருமுறை வந்து தங்கள் உடல் நிலையைப் பற்றி விசாரித்துப் போகிறார்கள். இன்றைக்கு ஏனோ இதுவரையில் வரக் காணோம்...."
அச்சமயத்தில் சின்ன பிக்ஷூ வந்து குருதேவரைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தார். ஆச்சாரியபிக்ஷூ, "இதோ வந்து விட்டேன், ஐயா!" என்று கூறிவிட்டு வௌியே சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம்அவர் திரும்பி வந்தபோது இளவரசன் அருள்மொழிவர்மனுடைய பரபரப்பு மேலும் அதிகமாகியிருப்பதைக்கண்டார்.
"ஆச்சாரியரே! இனி ஒரு கணமும் நான் இங்கே தங்கியிருக்க முடியாது. சக்கரவர்த்தியின்கட்டளையை மீறி நான் இங்கே வந்து ஒளிந்திருந்தேன் என்ற பழியை ஏற்க நான் விரும்பவில்லை. என்னால்இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கு எந்த விதமான தீங்கு நேரிடுவதையும் விரும்பவில்லை" என்றான்இளவரசன்.
பெரிய பிக்ஷூ மலர்ந்த முகத்துடன், "உண்மையில் அத்தகைய பெரும் பொறுப்பை நானும் இனிவகிக்க முடியாது. தங்களுடைய விருப்பத்துக்கு விரோதமாக ஒரு கணமும் தங்களை நான் இங்கு வைத்திருக்கவிரும்பவில்லை இந்தக் கணமே தாங்கள் புறப்படலாம். கால்வாயில் படகு ஆயத்தமாய்க் காத்திருக்கிறது!"என்றார்.
"எங்கே போவதற்கு?"
"அது தாங்கள் தீர்மானிக்க வேண்டிய காரியம். தங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்த இருவரும் படகுடன் தங்களை அழைத்துப் போக வந்திருக்கிறார்கள்."
இளவரசன் சிறிது தயங்கினான். ஆச்சாரிய பிக்ஷூவின் முகத்தில் மர்மமான புன்னகை பொலிவதைக் கண்டு, "இதில் இன்னும் ஏதேனும் சூழ்ச்சி இருக்கக்கூடுமோ?" என்று வியந்தான்.
"அவர்கள் இருவருமே திரும்ப வந்திருக்கிறார்களா? எதற்காக என்று சொல்லவில்லையா?"
"சொன்னார்கள். இந்த விஹாரத்திலிருந்து ஒரு நாழிகை தூரத்தில், கால்வாயின் கரையில் நந்தி மண்டபம் ஒன்று இருக்கிறது. அதில் தங்களைப் பார்ப்பதற்காக இரண்டு பெண்மணிகள் வந்து காத்திருக்கிறார்களாம்."
இளவரசன் அவசரமாகக் கட்டிலிலிருந்து இறங்கினாள். "ஆச்சாரியரே! உடனே படகுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்! இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே" என்றான்.
பிக்ஷூ இளவரசனைக் கையினால் தாங்கிக் கொண்டு கால்வாய்க்கரை வரையில் சென்றார். ஆனால்இளவரசனுடைய நடையில், நாலு நாளைக்கு மேலாகக் கடுஞ்சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்ததின் அறிகுறி ஒன்றும்தென்படவில்லை. ஏறுபோல் நடந்து பொன்னியின் செல்வன் கம்பீரமாக வருவதைக் கண்டு சேந்தன் அமுதன்,பூங்குழலி இருவருடைய முகங்களும் மலர்ந்தன.
அருள்மொழிவர்மன் படகில் ஏறி உட்கார்ந்ததும் பிக்ஷூ அவனைப் பார்த்து, "ஐயா! தங்களுக்குஏதேனும் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அதை இந்தச் சூடாமணி விஹாரத்துப் பிக்ஷூக்கள் அனைவரும்பெரும் பாக்கியமாகக் கருதுவோம். தாங்கள் திரும்பவும் இங்கு வந்து ஒருவாரம் தங்கி உடல் வலிவு பெற்றுப்போவது நலம்!" என்றார்.
"குருதேவரே! நான் திரும்பி வருவேன் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இல்லாவிடில் இவ்வாறு மற்ற பிக்ஷூக்களிடம் சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டிருக்க மாட்டேன்! என்றான் இளவரசன்.
படகு நகரத் தொடங்கியதும் சேந்தன், பூங்குழலி இருவரையும் மாறி மாறிப் பார்த்து,"இக்கால்வாயின் வழியாக நீங்கள் என்னை அழைத்துக்கொண்டு வந்தபோது நீங்கள் தேவலோகத்தவர்கள் என்றும், சொர்க்கத்துக்கு என்னை அழைத்துப் போகிறீர்கள் என்றும் எண்ணியிருந்தேன். என்னை ஏமாற்றி விட்டீர்கள். சந்நியாசி மடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள்! போனால் போகட்டும்; கடலில் நீந்திக் கை சளைத்து நினைவிழந்து போனதிலிருந்து நடந்ததையெல்லாம் உங்களிடம் கேட்க வேண்டும். அதற்கு முன்னால், நந்தி மண்டபத்தில் எனக்காகக் காத்திருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள்" என்றான் இளவரசன்.
இருவரையும் பார்த்து அருள்மொழிவர்மன் கேட்ட போதிலும், பூங்குழலி வாய் திறக்கவில்லை. சேந்தன் அமுதன்தான் மறுமொழி கூறினான். குந்தவைப் பிராட்டியும் கொடும்பாளூர் இளவரசியும்ஆனைமங்கலத்துக்கு வந்திருப்பதையும், அங்கிருந்த நந்திமண்டபத்துக்கு வந்து காத்திருப்பதையும் தெரிவித்தான். "ஆகா! எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் அந்தப் பெண்ணை எதற்காக இளையபிராட்டி இங்கேயும்அழைத்து வந்திருக்கிறார்?"
சேந்தன் அமுதன், "ஐயா! தமிழ்நாட்டுப் பெண்களிடையே இப்போது ஒரு சுரம் பரவிக்கொண்டிருக்கிறது. புனிதமான சைவ சமயத்தை விட்டுவிட்டுப் புத்த மதத்தைச் சேர்ந்து பிக்ஷூணிகள் ஆகப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்" என்றான்.
"அப்படி யார், யார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?"
"கொடும்பாளூர் இளவரசி அவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இதோ இந்தப் பெண்ணரசியும் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறாள்!"
"இரண்டு பேர்தானே, அமுதா! அதனால் சைவ சமயத்துக்கு நஷ்டம் வந்துவிடாது! இலங்கையில்பிக்ஷூணிகள் தவ வாழ்க்கை நடத்தும் மடங்கள் பலவற்றை நான் அறிவேன். வேண்டுமானால் நானே இவர்களைஅழைத்துப் போய்ச் சேர்த்து விடுகிறேன்!" என்று பொன்னியின் செல்வன் கூறவும் சேந்தன் அமுதன் நகைத்தான்.
பின்னர் கடலிலிருந்து இளவரசனும், வந்தியத்தேவனும் கரையேறியதிலிருந்துநிகழ்ந்தவற்றையெல்லாம் சேந்தன் அமுதன் தான் அறிந்தவரையில் கூறினான். பொன்னியின் செல்வன்ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு வந்ததுடன், தன்னுடைய ஞாபகங்களையும் ஒத்துப் பார்த்துக் கொண்டு வந்தான். 'அதோ நந்தி மண்டபம்!" என்று பூங்குழலி கூறியதும், இளவரசன் அவள் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினான்.
பக்க தலைப்பு
நாற்பத்துநான்காம் அத்தியாயம்
நந்தி வளர்ந்தது!
படகு அப்போது சென்று கொண்டிருந்த இடத்தில் கால்வாயின் கரைகள் இருபுறமும் ஓங்கிஉயர்ந்திருந்தன. பூங்குழலி சுட்டிக் காட்டிய இடத்தில் கால்வாயின் ஓரமாகப் படித்துறை மண்டபம் ஒன்றுகாணப்பட்டது. படிகள் முடிந்து மண்டபம் தொடங்கும் இடத்தில் இரண்டு ஓரங்களிலும் இரண்டு நந்திவிக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறந்த வேலைப்பாட்டுடனும் ஜீவகளையுடனும் விளங்கிய அந்தநந்திபகவானுடைய சிலைகளை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இந்தச் சிலைகளின்முக்கியம் பற்றியே அம்மண்டபத்துக்கு 'நந்தி மண்டபம்' என்ற பெயர் ஏற்பட்டிருந்தது. வருஷத்துக்கு ஒரு முறைவஸந்த உற்சவத்தின் போது திருநாகைக் காரோணத்துக் காயாரோகண சுவாமியும் நீலாயதாட்சி அம்மனும்அந்த மண்டபத்திற்கு விஜயம் செய்து கொலு வீற்றிருப்பது வழக்கம். அப்போது மக்கள் திரள் திரளாகஅங்கே வந்து சேர்வார்கள். உற்சவம் பார்த்துவிட்டு நிலா விருந்தும் அருந்தி விட்டுத் திரும்பிச்செல்வார்கள். நகரத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தபடியால், மற்ற சாதாரண நாட்களில் இங்கே ஜனங்கள்அதிகமாக வருவதில்லை.
படகு, மண்டபத்தை நெருங்கியது. மண்டபத்தில் இருந்த இரு பெண்மணிகளையும் பார்த்த பிறகுஇளவரசனுக்கு வேறு எதிலும் பார்வையும் செல்லவில்லை; கவனமும் செல்லவில்லை.படகு நெருங்கி வந்தபோது, இளையபிராட்டி குந்தவை படிகளில் இறங்கிக் கீழ்ப்படிக்கு வந்தாள். வானதியோ மண்டபத்திலேயே தூண் ஒன்றின் பின்னால் பாதி மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள்.
படித்துறை அருகில் வந்து படகு நின்றது. இளவரசன் இறங்குவதற்குப் படகிலிருந்தபடி சேந்தன்அமுதனும், படியில் நின்றபடி இளைய பிராட்டியும் உதவி செய்தார்கள்.
சேந்தன் அமுதனும், பூங்குழலியும் படகைப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டு போய்ச் சிறிது தூரத்தில் நிறுத்தினார்கள்.
"தம்பி! எப்படி மெலிந்து விட்டாய்!" என்று குந்தவை கூறியபோது, அவளுடைய கனிந்த குரலிலே கண்ணீர் கலந்து தொனித்தது.
பொன்னியின் செல்வன் "என் உடம்பு மெலிவு இருக்கட்டும், அக்கா! உன் முகம் ஏன் இப்படிவாடியிருக்கிறது? என்னைக் கண்டதும் உன் முகம் தாமரைபோல் மலருவது வழக்கமாயிற்றே? இன்றைக்கு ஏன் உன் முக சந்திரனை மேகம் மறைத்திருக்கிறது? உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன? ஆகா! உன் உள்ளத்தைப் புண்படுத்தி வேதனையளித்த எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். இல்லாவிடில் எனக்கு அவ்வளவு அவசரமான ஓலை அனுப்பியிருக்கமாட்டாய்!" என்றான்.
"ஆம், தம்பி! எத்தனையோ அவசரமான விஷயங்கள் சொல்ல வேண்டும்; கேட்க வேண்டும். இலங்கையின் தங்கச் சிம்மாசனத்தை வேண்டாமென்று தள்ளிய வள்ளலே! இந்தக் கருங்கல் சிம்மாசனத்தில்சிறிது நேரம் உட்கார்ந்து கொள்!" என்றாள்.
பொன்னியின் செல்வன் உட்காரும் போது தமக்கையில் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டான். குந்தவை அவனுடைய தலையைக் கரத்தினால் தொட்டு, உச்சி முகர்ந்தாள். அவளுடைய கண்களில் மேலும் கண்ணீர் ததும்பியது.
இருவரும் உட்கார்ந்த பிறகு குந்தவை, "தம்பி! உன்னை இன்றைக்கு நான் இங்கு வருவித்திருக்கவேகூடாது. சூடாமணி விஹாரத்தின் தலைவர் உனக்கு உடம்பு நன்றாகக் குணமாகி விட்டது என்று செய்திஅனுப்பினார். அது சரியல்ல; சுரம் உன்னை வாட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உன்னைப் பார்க்காமலிருக்கவும்என்னால் முடியவில்லை. ஆனைமங்கலம் வந்த பிறகு ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது!" என்றாள்.
"அக்கா! என்னை இங்கு வருவித்தது பற்றி நீ கவலைப் பட வேண்டாம். நீ மட்டும் படகுஅனுப்பாமலிருந்தால் நான் இத்தனை நேரம் பழையாறைக்கே புறப்பட்டிருப்பேன். கடுமையான சுரத்திலேயுங்கூடஉன்னுடைய ஓலைதான் என் மனதை வருத்திக் கொண்டிருந்தது. அந்த ஓலையை ஒருவரிடம் அனுப்பியிருந்தாயே? அந்த வாணர் குலத்து வந்தியத்தேவரைப் போன்ற தீரரை நான் பார்த்ததேயில்லை. எத்தனையோ விதமாக அவரைச் சோதித்தேன்; எல்லாவற்றிலும் தேறிவிட்டார். அவர் இப்போது எங்கே அக்கா?"
குந்தவையின் முக சந்திரனை மறைந்திருந்த மேகத்திரை சிறிது அகன்றது. பவள இதழ்கள் முத்துப்பற்கள் தெரியும்படி புன்னகை பூத்து, "தம்பி! அவரைப் பற்றி இப்போது என்ன கவலை? வேறு எவ்வளவோவிஷயங்கள் இருக்கின்றன!" என்றாள்.
"என்ன அப்படிப் பேசுகிறாய், அக்கா! உனக்கு அதிருப்தி அளிக்கும்படி நடந்து கொண்டாரா?"
"இல்லை, இல்லை! நான் ஏன் அதிருப்தி அடைய வேண்டும்? உன்னை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை அவர் நிறைவேற்றி விட்டார்....!"
"அதற்காக அவர் செய்த தந்திர மந்திரங்களையும், கைக்கொண்ட சூழ்ச்சி வித்தைகளையும்நினைக்க நினைக்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது, அவர் எங்கே, அக்கா! நீ இங்கு வந்திருக்கிறாய் என்றுதெரிந்ததும், வந்தியத்தேவரும் உன்னுடன் வந்திருப்பார் என்று எண்ணினேன். எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சைபோட்டு விழும் இந்த பெண்ணரசி அல்லவா வந்திருக்கிறாள்?"
"இவள் எவ்வளவு தைரியசாலி ஆகிவிட்டாள் என்பது உனக்குத் தெரியாது, தம்பி! நேற்று நமது முதன் மந்திரியின் யானை இவளைத் தன் துதிக்கையால் தூக்கி எறிந்தது. மேலே அம்பாரியில் இருந்த என் மடியிலேதான் எறிந்தது. ஆனால் அது அவளுக்குத் தெரியாது! அப்போது எவ்வளவு தைரியமாக இருந்தாள் என்பதை நீ பார்த்திருந்தால்...."
"போதும், உன்னுடைய தோழியின் புகழை நிறுத்திக் கொள்! என் நண்பரைப் பற்றிச் சொல்!"
"அவரைப் பற்றி என்ன சொல்வது? அவர் வந்த காரியம் ஆகிவிட்டது. திரும்பி அவருடைய எஜமானன்ஆதித்த கரிகாலனிடம் போய்விட்டார்."
"அப்படியானால், அவர் வாக்குத் தவறிவிட்டார். தாம் காஞ்சிக்குப் போகப் போவதில்லையென்றும், சோழ நாட்டிலேயே இருந்துவிடப் போவதாகவும் கூறினாரே?"
"அது எப்படிச் சாத்தியம்? சோழ நாட்டில் இருந்து அவர் என்ன செய்வது? இங்கே உள்ளவர்களின் கதியே நாளைக்கு என்ன ஆகும் என்று தெரியாமலிருக்கிறது. அவர் பேரில் உனக்கு அவ்வளவு பிரியமாயிருந்தால், சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவருடைய முன்னோர்கள் ஆண்ட சிற்றரசை அவருக்குத் திருப்பிக் கொடுக்கும்படி செய்துவிட்டால் போகிறது!"
"சிற்றரசை வைத்துக்கொண்டு அந்த மகாவீரர் என்ன செய்வார், அக்கா?"
"எல்லாச் சிற்றரசர்களும் என்ன செய்கிறார்களோ, அதை அவரும் செய்கிறார்! நீ தான் இலங்கா ராஜ்யம் வேண்டாம் என்று மறுத்தாய்; அதுபோல் அவரும் வேண்டாம் எனச் சொல்லுவார் என நினைக்கிறாயா?"
இளவரசன் இளநகை புரிந்த வண்ணம், "அக்கா! இலங்கை இராஜ்யம் வேண்டாம் என்று நான் சாட்சிகள்வைத்துக் கொண்டு மறுத்திருக்கிறேன். அப்படியிருந்தும் என்மீது குற்றம் சாட்டிச் சிறைப்படுத்திக் கொண்டுவரத் தந்தை கட்டளையிட்டிருக்கிறார்...."
"தம்பி! நீ இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் உன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு வரக் கட்டளை பிறந்திருக்காது! நீ சுதந்திர மன்னன் ஆகியிருப்பாய்! அப்போது உன்னை யார் சிறைப்படுத்த முடியும்?"
"தந்தையின் விருப்பத்துக்கு விரோதமாக அவ்விதம் நான் நடந்து கொண்டிருக்க வேண்டுமா?"
"பொன்னியின் செல்வா! நீ இலங்கை இராஜ்யத்தை ஒப்புக்கொண்டிருந்தால் தந்தை மகிழ்ச்சிஅடைந்திருப்பார்! மிச்சமுள்ள சோழ சாம்ராஜ்யத்தை உன் தமையனுக்கும், மதுராந்தகனுக்கும் பிரித்துக்கொடுத்து மன நிம்மதி அடைந்திருப்பார். இப்போதும் அதற்குத்தான் முயற்சி நடக்கிறது. தம்பி!கொள்ளிடத்துக்கு வடக்கே ஒரு ராஜ்யமாகவும், தெற்கே ஒரு இராஜ்யமாகவும் பிரித்து விடப் பிரயத்தனம்நடக்கிறது. நீ வந்தால் இது விஷயத்தில் தந்தைக்கு உதவியாயிருப்பாய் என்று அவருக்கு நம்பிக்கை. முன்னால் உனக்குச் சொல்லி அனுப்பி நீ வராதபடியால் இப்போது சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னார். இலங்கை இராஜ்யத்தை நீ மறுத்துவிட்டாய் என்பது சக்கரவர்த்திக்கு நன்றாய்த் தெரியும்."
"இராஜ்யத்தைப் பிரிப்பதற்கு நான் ஒருநாளும் உதவியாயிருக்க மாட்டேன். அதைப்போல் பெரியகுற்றம் வேறொன்றுமில்லை. அதைவிடச் சித்தப்பா மதுராந்தகருக்கே முழுராஜ்யத்தையும் கொடுத்து விடலாம்."
"அப்படியானால் முதன் மந்திரியும் நீயும் ஒரே மாதிரி அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள்!"
"ஆம்; முதன் மந்திரியும் அப்படித்தான் கருதுகிறார். இலங்கைக்கு அவர் வந்ததே இதைப்பற்றிஎன்னுடன் கலந்து பேசுவதற்காகத்தான். அக்கா! இலங்கை இராஜ்யத்தை நான் வேண்டாம் என்று மறுத்ததின்உண்மைக் காரணத்தைச் சொல்லட்டுமா?"
"என்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வாய் தம்பி?"
"ஆம்; என் அந்தரங்கத்தைச் சொல்வதற்கு வேறு யாரும் இல்லைதான். இலங்கைக்குப் போவதற்குமுன்னால் அந்நாட்டைப் பற்றிப் பிரமாதமாக எண்ணியிருந்தேன். போன பிறகுதான் அது எவ்வளவு சிறியநாடுஎன்று தெரிந்தது. குதிரையில் அல்லது யானையில் ஏறிப் புறப்பட்டால் ஒரே நாளில் அந்நாட்டின் மேற்குக்கடற்கரையிலிருந்து, கிழக்கு கடற்கரைக்குப் போய்விடலாம்."
"சோழநாடு மட்டும் அதைவிடப் பெரிதா, தம்பி? இந்த நாட்டையும் அப்படி ஒரேநாளில் குதிரைஏறிக் கடந்துவிட முடியாதா?"
"சோழநாடும் சிறியதுதான், ஆகையினால் சோழாநாட்டுக் கிரீடத்தை எனக்கு யாரேனும் அளித்தாலும், வேண்டாம் என்றுதான் சொல்வேன். இந்தத் தெய்வத் தமிழகத்தைச் சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு என்று பிரித்தார்களே! அவர்கள் பெரிய குற்றம் செய்தார்கள். அதனாலேதான்தமிழகத்தில் வீராதி வீரர்கள் பிறந்தும், இந்த நாடு சோபிப்பதில்லை. வட நாட்டிலே சந்திரகுப்தர்என்ன, அசோகர் என்ன சமுத்திர குப்தர் என்ன, விக்கிரமாதித்தியர் என்ன, ஹர்ஷவர்த்தனர் என்ன! இப்படிமகா சக்கரவர்த்திகள் தோன்றி, மகா சாம்ராஜ்யங்களை ஆண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்விதம்யாரேனும் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஆண்டது உண்டா? காஞ்சி பல்லவர் குலத்தில் மகேந்திரசக்கரவர்த்தியும், மாமல்லரும் இருந்தார்கள். பிறகு அந்தக் குலமும் க்ஷீணித்துவிட்டது. அக்கா, நான்இராஜ்யம் ஆளுவதாயிருந்தால், இந்த மாதிரி சின்னஞ் சிறு இராஜ்யத்தை ஆளமாட்டேன். இலங்கை முதல்கங்கை வரையில் பரவி நிலைபெற்ற இராஜ்யத்தை ஆளுவேன். மாலத் தீவிலிருந்து சாவகத் தீவு வரையில்தூர தூர தேசங்களில் புலிக்கொடி பறக்கும் மகா சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில்வீற்றிருப்பேன்!... என்னைப் பைத்தியக்காரன் என்றுதானே எண்ணுகிறாய்!"
"இல்லை, அருள்வர்மா! என்னைப்போல் ஆகாசக் கோட்டைகள் கட்டுவதற்கும் கற்பனைக் கனவுகள்காண்பதற்கும் நீயும் ஒருவன் இருக்கிறாயே என்று எண்ணி மகிழ்கிறேன். நீ பைத்தியக்காரனாயிருந்தால்,நான் உன்னைவிடப் பெரிய பைத்தியக்காரி. நம்முடைய தந்தையின் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்திஅப்படியெல்லாம் மனோராஜ்யம் செய்திருந்தார் என்பதை நான் அறிவேன். அவர் காலத்தில் அது பூரணமாய்நிறைவேறவில்லை. ஆனால் என்னுடைய ஆயுட்காலத்தில் நான் அதைப் பார்க்கப் போகிறேன். சோழசாம்ராஜ்யம் இலங்கை முதலாவது கங்கை வரையிலும் மாலத்தீவு முதலாவது சாவகம் வரையிலும் பரந்து விஸ்தரிப்பதைப்பார்த்து விட்டுத்தான் நான் சாகப் போகிறேன். இந்த என் எண்ணம் நம் தமையன் ஆதித்த கரிகாலனால்நிறைவேறும் என்று ஒரு காலத்தில் நம்பினேன். அந்த நம்பிக்கை எனக்கு இப்போது போய் விட்டது. ஆதித்த கரிகாலன் மகாவீரன்; ஆனால் மனத்தைக் கட்டுபடுத்தும் ஆற்றல் அவனிடம் இல்லை. அதனால் அவன்பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.என் மனோரதம் உன்னால் நிறைவேறும் என்ற ஆசை எனக்கு இன்னும் இருக்கிறது. ஒருவேளை அதுவும் கைகூடாமல் போகலாம். அதனாலும் நான் நிராசை அடைய மாட்டேன். உன்னால் கை கூடாவிட்டால் உனக்குப் பிறக்கும் பிள்ளையினால் கைகூடும் என்று உறுதி கொண்டிருக்கிறேன். உனக்குப் பிறக்கும் புதல்வனை, பிறந்த நாளிலிருந்து நானே எடுத்து வளர்ப்பேன். அவனை இந்த உலகம் கண்டறியாத மகாவீரன் ஆக்குவேன். அற்ப ஆசைகளில் அவன் மனத்தைச் செலுத்தவிடாமல் அற்புதங்களைச் சாதிக்கக்கூடிய புருஷ சிங்கமாக்குவேன்."
"அக்கா! நீ என்னைவிடப் பெரிய பைத்தியம் என்பது நிச்சயம். எனக்குக் கலியாணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை. எனக்குப் பிறக்கப் போகும் புதல்வனைப் பற்றி நீ பேச ஆரம்பித்து விட்டாய். நீ செல்லம் கொடுத்து வளர்க்கும் தோழிகளில் யாருக்காவது அத்தகைய எண்ணமிருந்தால், என்னை மணந்துகொண்டு மணிமகுடம் சூடிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்ற ஆசை இருந்தால், அது ஒருநாளும்நிறைவேறப் போவதில்லை. இதை நிச்சயமாய் அவர்களுக்குச் சொல்லி விடு!" என்று பொன்னியின் செல்வன்கூறியபோது அவனுடைய பார்வை ஒரு கணம், மண்டபத்தின் தூணுக்குப் பின்னால் நின்றிருந்த வானதியின் பால்சென்றது.மறுகணம் அவன் திரும்பியபோது, அவனுக்கெதிரே இருந்த படித்துறை நந்தி விக்கிரகத்தைப்பார்த்தான்.
"அக்கா! ஒரு செய்தி! இலங்கை சிறிய இராஜ்யமாயிருந்தாலும் அந்த இராஜ்யத்தை முற்காலத்தில்ஆண்ட மன்னர்கள் மகாபுருஷர்கள்; பெரிய உள்ளங்களைப் படைத்தவர்கள். அவர்கள் பெரிய பெரியதிட்டங்களைப் போட்டுப் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தார்கள். செங்கல்களைக் கொண்டு மலைபோன்ற மேக மண்டலத்தை அளாவிய புத்த ஸ்தூபங்களை நிர்மாணித்தார்கள். ஆயிரம் இரண்டாயிரம் அறைகள்உள்ள புத்த விஹாரங்களைக் கட்டினார்கள். பதினாயிரம் தூண்கள் உள்ள மண்டபங்களை எழுப்பினார்கள். புத்தபகவான் எவ்வளவு பெரியவர் என்பதைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் படியாக, அதோ அந்தத் தென்னை மர உயரமுள்ள புத்தர் சிலைகளை அமைத்தார்கள். அக்கா! இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்கிரகத்தைப்பார்! எவ்வளவு சின்னஞ்சிறியதாயிருக்கிறது! அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகியநந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும்? கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்தப் பூதகணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர்நந்திதேவர். அவர் இவ்வள்வு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்?அதோ பார் அக்கா! என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்துபெரிதாகிறது. பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூரை இப்போதுபோய்விட்டது. நந்திபகவான் வானமளாவி நிற்கிறார்; பூத கணகங்கள் வருகிறார்கள்! நந்தி பகவானைப்பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனைத் தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள்; நந்திபகவான் அவ்வளவுபெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும்? தக்ஷிண மேரு என்றுசொல்லும்படி வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா? அதற்குத் தக்கபடி பிராகாரங்கள் இருக்கவேண்டாமா? இப்போது சோழ நாட்டில் உள்ள கோயில்கள் அகஸ்திய முனிவர் கோயில் கொள்வதற்குத் தான்ஏற்றவை.சிவபெருமானுக்கு உகந்தவை அல்ல. எனக்கு இராஜ்யமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். சோழசிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் ஆலயத் திருப்பணி அதிகாரியாக என்னை நியமிக்கும்படி கேட்டுக்கொள்வேன்..."
"தம்பி! நம் இரண்டு பேரில் பைத்தியம் யாருக்கு அதிகம் என்று போட்டி போட வேண்டியதுதான். தற்சமயம் இந்தச் சோழ நாட்டைப் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது. உட்பகைவர்களாலும் வௌிப்பகைவர்களாலும்,சிநேகிதர்கள் போல் நடிக்கும் பகைவர்களாலும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சில காலமாக நான் அடிக்கடிஒரு பயங்கரமான கனவு காண்கிறேன். மின்னலென ஒளிவீசும் கூரிய கொலைவாள் ஒன்று என் அகக்கண் முன்னால் தோன்றுகிறது. அது யார் மேலேயோ விழப்போகிறது. அது யார் என்பது எனக்குத் தெரியவில்லை. சோழ குலத்தைச் சேர்ந்த யாராவது அந்தக் கொலை வாளுக்கு இரையாகப் போகிறார்களா அல்லது இந்த சோழஇராஜ்யத்தை இரண்டாகத் துண்டு செய்து நாசமாக்கப் போகும் கொலைவாளா அது என்று தெரியவில்லை. நீயும்நானும் யோசித்து முயற்சி செய்துதான் அத்தகைய அபாயம் இந்நாட்டுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும்!" என்றாள் இளைய பிராட்டி.
"ஆம், அக்கா! வல்லவரையர் கூறிய விவரங்களிலிருந்து எனக்கும் அவ்வாறுதான் தோன்றுகிறது. முக்கியமான அபாயம், சோழ குலத்துக்கு யாரிடமிருந்து வரப் போகிறது என்பதை அறிவாய் அல்லவா?"என்றான் இளவரசன்.
"பழுவூர் இளையராணி நந்தினியைத்தானே குறிப்பிடுகிறாய், தம்பி?"
"ஆம், அக்கா! அவள் யார் என்பதையும் அறிவாய் அல்லவா?"
"வந்தியத்தேவர் கூறிய விவரங்களிலிருந்து அதையும் அறிந்து கொண்டேன். ஆகையினாலேயே இவ்வளவு அவசரமாக உன்னைப் பார்க்க வந்தேன்!" என்றாள் குந்தவை.
பக்க தலைப்பு
நாற்பத்தைந்தாம் அத்தியாயம்
வானதிக்கு அபாயம்
"அக்கா! ஐந்து வயதில் நான் காவேரி வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கிறதா? காவேரித்தாய் என்னை எடுத்துக் காப்பாற்றிப் படகிலே விட்டு விட்டு மறைந்தது நினைவிருக்கிறதா?" என்றுஅருள்மொழிவர்மன் கேட்டான்.
"இது என்ன கேள்வி, தம்பி! எப்படி அதை நான் மறந்து விடமுடியும்? 'பொன்னியின் செல்வன்' என்று உன்னை அழைத்து வருவதே அந்தச் சம்பவத்தின் காரணமாகத் தானே?" என்றாள் குந்தவை.
"என்னைக் காப்பாற்றிய காவேரித் தாயை இலங்கையில் நான் கண்டேன், அக்கா!.. என்ன,பேசாதிருக்கிறாயே? உனக்கு ஆச்சரியமாயில்லை?"
"ஆச்சரியமில்லை, தம்பி. ஆனால் ஆர்வம் நிறைய இருக்கிறது. அவளைப் பற்றி எல்லா விவரங்களையும் சொல்!"
"ஒரு நாளில், ஒரு தடவையில், சொல்ல முடியாது. முக்கியமானதை மட்டும் சொல்லுகிறேன். காவேரி வெள்ளத்திலிருந்து என்னை அவள் காப்பாற்றியது மட்டுமல்ல; இலங்கையில் பல தடவை என் உயிரைக்காப்பாற்றியிருக்கிறாள். உயிரைக் காப்பாற்றியது பெரிதல்ல, அக்கா! எத்தனையோ பேர் தற்செயலாகப்பிறர் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். அவள் என்னிடத்தில் வைத்துள்ள அன்பு இருக்கிறதே, அதற்கு இந்தஈரேழு பதினாலு உலகங்களும் இணையாகாது... ஏன்? நீ என்னிடம் வைத்துள்ள அன்பைக் கூட,அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்!"
"அதைச் சொல்வதற்கு நீ தயங்க வேண்டாம். உன்னிடம் என் அன்பு அவ்வளவு ஒன்றும் உயர்ந்ததுஅல்ல; சுயநலம் கலந்தது. உண்மையைச் சொல்கிறேன், தம்பி! எனக்கு இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின்மேன்மைதான் முதன்மையானது. அதற்கு நீ பயன்படுவாய் என்றுதான் உன்பேரில் அன்பு வைத்திருக்கிறேன்.அந்த நோக்கத்துக்கு நீ தடையாயிருப்பாய் என்று தெரிந்திருந்தால், என் அன்பு வெறுப்பாக மாறினாலும்மாறிவிடும். ஆனால் அந்த ஊமைச் செவிட்டு ஸ்திரீயின் அன்பு அத்தகையதல்ல. நம்முடைய தந்தையிடம்இருபது வருஷங்களுக்கு மேலாக அவள் உள்ளத்தில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அத்தனை அன்பையும் உன் பேரிலே சொரிந்திருக்கிறாள். அதற்குப் பதினாலு உலகமும் இணையில்லைதான்!"
"உனக்கு அது எப்படி தெரிந்தது, அக்கா?"
"எதைச் சொல்கிறாய், தம்பி!"
"அவள் நம்முடைய பெரிய தாயார் என்பது?"
"தந்தை சொன்னதிலிருந்தும், வந்தியத்தேவர் சொன்னதிலிருந்து ஊகித்துக் கொண்டேன், தம்பி!அவள் உன்னைத் தன் சொந்த மகன் என்று எண்ணியிருக்கிறாளா? அல்லது சக்களத்தியின் மகன் என்றுஎண்ணியிருக்கிறாளா?"
"அந்த மாதிரி வேற்றுமையான எண்ணம் என் மனத்திலும் உதிக்கவில்லை; அவள் மனதில் எள்ளளவும் இருப்பதாகத் தெரியவில்லை. நீ ஏன் அம்மாதிரி வேற்றுமைப் படுத்திப் பேசுகிறாய்?"
"தம்பீ, அந்த ஊமை ஸ்திரீ வீற்றிருக்க வேண்டிய சிங்காசனத்தில் நம் தாயார்வீற்றிருக்கிறாள். அது தெரிந்திருந்தும் அவள் உன்னிடம் அத்தனை அன்பு வைத்திருந்தால், அது மிக்கவிசேஷமல்லவா?"
"நான் அவள் வயிற்றில் பிறந்த மகனல்ல என்பது அவளுக்குத் தெரிந்து தானிருக்க வேண்டும்.வயது வித்தியாசம் தெரியாமலா போகும்? அவளால் பேச முடியாது; மனதில் உள்ளதைச் சொல்ல முடியாது. ஏதோ சித்திரங்கள் எழுதிக் காட்டியதைக் கொண்டு எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ, அவ்வளவு தெரிந்துகொண்டேன். என்னிடம் அவளுடைய அன்பு இருக்கட்டும்; நம் தந்தையிடம் அவள் எத்தகைய அன்பு வைத்திருக்க வேண்டும் என்பதை நினைத்தால் என் நெஞ்சு உடனே உருகிவிடுகிறது. அக்கா! என்னுடைய பிராயத்தில் அப்பா என்னைப் போல இருப்பாரா?"
"இல்லை, தம்பி, இல்லை! உன்னுடைய பிராயத்தில் நம் தந்தை மன்மதனைத் தோற்கடிக்கும் அழகுடன்விளங்கினார். நம்முடைய சோழ குலம் வீரத்துக்குப் பெயர் போனதே தவிர அழகுக்குப் பெயர் போனதல்ல. நம் பாட்டனார் அரிஞ்சய தேவர் அழகில் நிகரற்ற வைதும்பராயன் குலத்தில் பிறந்த கல்யாணியை மணந்தார்.கல்யாணியை அரிஞ்சயர் மணந்த போது அவள் பத்தரை மாற்றுப் பசும் பொன்னொத்த மேனியும், பூரணசந்திரனை யொத்த முகமும் கொண்ட புவன மோஹினியாக விளங்கினாள். தற்சமயம் இத்தனை வயதானபிறகும் கல்யாணிப்பாட்டி எவ்வளவு அழகாயிருக்கிறாள் என்பதை நீயே பார்த்திருக்கிறாய். அதனால் நமதுதந்தையும் அவ்வளவு அழகுடன் இருந்தார். 'சுந்தரசோழர்' என்ற பட்டப் பெயரும் பெற்றார். நாம் நம்முடையதாயாரைக் கொண்டு பிறந்திருக்கிறோம். திருக்கோவலூர் மலையமான் வம்சத்தில் பிறந்தவர்கள் அழகைவெறுப்பவர்கள்; அழகு வீரத்துக்குச் சத்துரு என்று நினைப்பவர்கள்..."
"அழகுக்கும், வீரத்துக்கும் என்ன சம்பந்தம் உண்டோ என்னமோ, எனக்குத் தெரியாது. ஆனால்அழகுக்கும், அன்புக்கும் சம்பந்தமில்லை என்பதை அறிவேன். இல்லாவிடில்..."
"இல்லாவிடில் இந்தப் பெண் வானதி எதற்காக உன்னைத் தூண் மறைவிலிருந்து கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்? அதோ அந்தப் படகில் சேந்தனஅமுதன் பூங்குழலியை ஏன் கண் கொட்டாமல் பார்த்துப் பரவசமடைந்து கொண்டிருக்கிறான்?"
இளவரசன் புன்னகை புரிந்து, "அக்கா! நீ எதிலிருந்தோ எதற்கோ போய்விட்டாய்! என் பெரியன்னை என்னிடம் வைத்துள்ள அன்பைக் குறித்துச் சொன்னேன். அது போனால் போகட்டும்; இவ்வுலகில்ஒருவரைப்போல் இன்னொருவர் தத்ரூபமாக இருப்பதென்பது சாத்தியமா, அக்கா?"
"ஏன் சாத்தியமில்லை? இரட்டைப் பிள்ளைகளாயிருந்தால் அது சாத்தியம், அல்லது தாயும் மகளும்ஒரு பிராயத்தில் ஒரே மாதிரி இருப்பது சாத்தியம்தான். இதைத் தவிர பிரம்ம சிருஷ்டியில்ஒருவருக்கொருவர் சம்பந்தமேயில்லாதவர்கள், அபூர்வமாகச் சில சமயம் ஒரே மாதிரி இருப்பதும் உண்டு."
"பழுவூர் இளையராணியும், இலங்கையில் நான் பார்த்த நம் பெரியன்னையும் ஒரே மாதிரி இருப்பதாகவந்தியத்தேவர் சொல்வது உண்மையாயிருக்க முடியுமா? நந்தினி சிறு பெண்ணாயிருந்த போதுதான் நான்பார்த்திருக்கிறேன். பழுவூர் இளையராணியான பிறகு நன்றாய்ப் பார்த்ததில்லை. உனக்கு என்னதோன்றுகிறது?"
"நான் பழுவூர் ராணியைப் பார்த்திருக்கிறேனே தவிர, நம் பெரியம்மாவைப் பார்த்ததில்லை. ஆனால் வந்தியத்தேவர் கூறியது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். என் தந்தை கூறிய வரலாற்றிலிருந்துஅதைத் தெரிந்து கொண்டேன். தம்பி!"
"தந்தையே கூறினாரா, உன்னிடம்? என்ன கூறினார்? எப்போது கூறினார்?"
"சில நாளுக்கு முன்பு நானும் வானதியும் தஞ்சைக்குப் போயிருந்தோம். அப்போது தம் இளம்பிராயத்தில் நடந்த சம்பவத்தைக் கூறினார். இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு தீவில் தாம் தனியாகஒதுக்கப்பட்டதையும், அத்தீவில் ஒரு ஊமைப் பெண் தம்மிடம் காட்டிய அன்பைப் பற்றியும் கூறினார். பராந்தகர் அனுப்பிய ஆட்கள் தம்மை அத்தீவில் கண்டுபிடித்து அழைத்து வந்ததைப் பற்றிச் சொன்னார். தமக்குஇளவரசுப் பட்டம் சூட்டிய அன்று அரண்மனையின் வாசலில் நின்ற கூட்டத்தில் அவளைப் பார்த்தாராம். அடுத்தகணம் அவள் மறைந்து விட்டாளாம். அவளைத் தேடி அழைத்துவர முதன் மந்திரி அநிருத்தரையேஅனுப்பினாராம். ஆனால் அந்தப் பெண் கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து கடலில் குதித்து இறந்துவிட்டாள் என்று அநிருத்தர் வந்து கூறினாராம். இந்தச் சம்பவம் நம் தந்தையின் உள்ளத்தில் இருபத்து நாலுவருஷங்களாக இருந்து அல்லும் பகலும் வேதனை அளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தேன். அவள்இறந்துவிட்டதாகவே தந்தை நினைத்துக் கொண்டிருக்கிறார். தம்மால், தமது குற்றத்தால், அவள் மனம் புண்பட்டுஉயிரை விட்டுவிட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார். தம்பி! சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி நம்மனக்கோட்டையெல்லாம் ஒருபுறம் இருகட்டும். நீயும், நானுமாக முயன்று நம் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. நீ எப்படியாவது இலங்கையிலிருந்து அந்த மாதரசியைத் தஞ்சைக்கு அழைத்து வர வேண்டும். தந்தையிடம் அவள் இறந்துவிடவில்லை; உயிரோடிருக்கிறாள் என்பதை நேரில் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், நம் தந்தைக்கு இந்த ஜன்மத்திலும் மனச்சாந்தி இல்லை, மறுஜன்மத்திலும் அவருக்கு நிம்மதியிருக்க முடியாது!"
"அக்கா! சமீபத்தில் நான் இரண்டு மூன்று தடவை மரணத்தின் வாசல் வரையில் சென்றுதிரும்பினேன். அப்போதெல்லாம் என் மனத்தில் தோன்றிய எண்ணம் என்ன தெரியுமா? பெரியம்மாவைத்தந்தையிடம் அழைத்துப் போய் விடாமல் செத்துப் போகிறோமே என்ற ஏக்கந்தான். அக்கா! அந்தமாதரசியை நினைத்தாலும் என் உள்ளம் குமுறுகிறது. வாயிருந்தால் மனதிலுள்ள குறைகளையும் வேதனைகளையும் வௌியிட்டுச் சொல்லி அறுதல் அடையலாம். காது இருந்தால் பிறர் கூறும் ஆறுதல் மொழிகளை கேட்டுத் துக்கம் தீரலாம். வாயும் செவியும் இல்லாத ஒருத்தியினுடைய நிலையை எண்ணிப் பார்! உள்ளத்தில் குமுறும் அன்பையும், ஆர்வத்தையும், துன்பத்தையும், வேதனையையும், கோபத்தையும், தாபத்தையும் எல்லாவற்றையும் மனத்திற்குள்ளே அடக்கி வைத்திருக்கவேண்டும். அதிலும் நம் பெரியன்னையைப்போல் ஆசாபங்கம் அடைந்தவளின் மனோ நிலையைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? அவள் பைத்தியக்காரியைப் போல் இலங்கைத் தீவின் காடுகளில் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதில் வியப்பென்ன? அதையெல்லாம் நினைக்க நினைக்க, என் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. அவளை எப்படியாவது அழைத்து வந்து தந்தையிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. ஆனால் நம் தந்தை அதை விரும்புவார் என்று நினைக்கிறாயா, அக்கா?"
"தந்தை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நம்முடைய கடமை அது, தம்பி! இறந்துபோனவளின் ஆவி வந்து அவரைத் துன்புறுத்துவதாக எண்ணி இரவு நேரங்களில் நம் தந்தை அலறுகிறார். இதனாலேயே அவர் உடம்பும் குணமடைவதில்லை."
"இது எப்படி உனக்குத் தெரிந்தது, அக்கா! இதுவும் தந்தை சொன்னாரா?"
"தந்தையும் சொன்னார்; என் தோழி வானதியும் சொன்னாள்."
"வானதி சொன்னாளா? அவளுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் அக்கா! நீ அவளிடம் சொன்னாயா, என்ன?"
"இல்லை, இல்லை! தஞ்சை அரண்மனையில் ஒருநாள் நிகழ்ந்ததை அவள் வாய் மொழியாகவேசொல்லச் சொல்கிறேன். இருந்தாலும், நீ ரொம்பப் பொல்லாதவன், தம்பி! சோழர்குலத்தின்பண்பாட்டையே மறந்துவிட்டாய்! கொடும்பாளூர் இளவரசியிடம் ஒரு வார்த்தை பேசவும் இல்லை! சௌக்கியமாகஇருக்கிறாயா என்று கேட்கக்கூட இல்லையே? மகாவீரரான சிறிய வேளாரின் புதல்விக்கு நீ செய்யும்மரியாதை இதுதானா? அழகாயிருக்கிறது!"
"அக்கா! வானதியைக் கவனித்துக் கொள்ள நீ இருக்கும் போது கவலை என்ன? சௌக்கியமா என்றுநான் விசாரிப்பது தான் என்ன?"
"ரொம்ப சரி, சற்று வாயை மூடிக்கொண்டிரு! வானதி! இங்கே வா! உன்னை இளவரசன் நன்றாய்ப் பார்க்க வேண்டுமாம்!" என்றாள் குந்தவை.
வானதி அருகில் வந்தாள். இளவரசனைப் பார்த்தும் பாராமலும் நின்றுகொண்டு, "அக்கா!எதற்காகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள்! தங்கள் தம்பி என்னைப் பார்க்க விரும்பவில்லை. அவர்பார்வையெல்லாம் அதோ ஓடையில் இருக்கும் ஓடத்தின் மேலேயே இருக்கிறது. அவசரமாகத் திரும்பிப் போகவேண்டும் போலிருக்கிறதே!" என்று பட்டுப் போன்ற மிருதுவான குரலில் கூறினாள். ஓடத்தில் இருந்தபூங்குழலியை நினைத்துக்கொண்டு ஓடத்தைக் குறிப்பிட்டாள் போலும்!
இளவரசன் நகைத்துக் கொண்டே, "அக்கா! உன் தோழிக்குப் பேசத் தெரிகிறதே; நம்குடும்பத்தைச் சேர்ந்த ஊமைகளுடன் இவளும் ஒரு ஊமையோ என்று பயந்து போனேன்!" என்றான்.
"அக்கா! இவரைப் பார்த்தால் எனக்குப் பேச வருகிறதில்லை. எனக்கே நான் ஊமையாய்ப் போய்விட்டேனோ என்று பயம் உண்டாகிறது" என்றாள் வானதி.
"அது ரொம்ப நல்லது. கோடிக்கரையில் ஒருவன் இருக்கிறான்; பூங்குழலியின் தமையன். அவன் மற்றவர்களிடம் ஒருவாறு தெத்தித் தெத்திப் பேசுகிறான்.ஆனால் அவன் மனைவியைக் கண்டால் ஊமையாகி விடுகிறான். அதனால் அவனை அவன் வீட்டார் ஊமை என்றே வைத்து விட்டார்கள்" என்றான் இளவரசன்.
"இந்தக் கொடும்பாளூர்ப் பெண் கொஞ்சம் அந்த மாதிரி தான். முன்னேயெல்லாம் இவளைச் சற்றுநேரம் பேசாமல் சும்மா இருக்கச் சொன்னால் இவளால் முடியவே முடியாது. பேச ஆரம்பித்தால் நிறுத்தவேமாட்டாள். நீ முதன் முதலில் இலங்கைக்குப் போனாயே, அது முதலாவது இவளுடைய பேச்சுக் குறைந்துவிட்டது. தனியாகத் தனியாகப் போய் உட்கார்ந்து கொண்டு எதையோ எண்ணிக் கொண்டிருக்கிறாள். அது போனால்போகட்டும், வானதி! அன்று இரவு தஞ்சை அரண்மனையில் நடந்ததையெல்லாம் இளவரசனுக்கு விவரமாகச்சொல்லு" என்றாள் குந்தவை.
"கொடும்பாளூர் இளவரசி உட்கார்ந்து கொண்டு சொல்லட்டும் அக்கா! இவள் இத்தனை நேரம்நிற்பதைப் பார்த்தால் இவளுடைய பெரிய தந்தை உருகிப் போய் விடுவார். தென்திசைச் சேனாதிபதிஎன்னைப் பார்க்கும் போதெல்லாம் இவளைப் பற்றி விசாரிப்பார். நீயோ இவளைப் பற்றி ஒன்றுமேசொல்லி அனுப்புவதில்லை. ஆகையால், நான் அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் திண்டாடுவேன்" என்றான்இளவரசன்.
"வாணர் குலத்து வீரரிடம் இவளைப்பற்றி விவரமாய்ச் சொல்லி அனுப்பினேனே, அவர் ஒன்றும்உன்னிடம் சொல்லவில்லையா?"
"அவர் சொல்லித்தான் இருப்பார், அக்கா! இவர் காதில் ஒன்றும் விழுந்திராது. இவருக்கு எத்தனையோ ஞாபகம்!" என்றாள் வானதி.
"அதுவும் உண்மைதான், உன்னுடைய ஓலையைப் பார்த்த பிறகு வேறு ஒன்றிலும் என் மனதுசெல்லவில்லை. இந்தச் சுரத்திற்குப் பிறகு என் காது கூடக் கொஞ்சம் மந்தமாயிருக்கிறது. உன் தோழியைஉரக்கப் பேசச் சொல்லு!" என்றான் அருள்வர்மன்.
பிறகு, வானதி தஞ்சை அரண்மனையில் குந்தவை துர்க்கை கோயிலுக்குப் போன பிறகு தான்தனியே மேன் மாடத்தில் உலாவச் சென்றதையும், சக்கரவர்த்தியின் அபயக்குரல் கேட்டதையும், அந்தஇடத்துக்குத் தான் சென்று கீழே எட்டிப் பார்த்ததையும், அங்கே தான் கண்ட காட்சியையும் கூறினாள். இடையிடையே வானதி இளவரசனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் மெய்மறந்து நின்றுவிட்டாள். இளையபிராட்டி அவளை ஒவ்வொரு தடவையும் தூண்டிப் பேசும்படி செய்வது அவசியமாயிருந்தது.
எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த இளவரசன், கடைசியாகத் தமக்கையை நோக்கி, "அக்கா! உன் தோழி முக்கியமான ஒரு சம்பவத்தை விட்டுவிட்டாள் போலிருக்கிறதே! இவ்வளவையும் பார்த்துக் கேட்ட பிறகு இவள் மூர்ச்சை அடைந்து விழுந்திருக்க வேண்டுமே?" என்றான்.
குந்தவை சிரித்தாள்; வானதி நாணத்துடன் தலை குனிந்து நின்றாள்.
குந்தவை அவளை அன்பு ததும்பிய கண்களினால் பார்த்து "வானதி! சற்று நேரம் ஓடைக் கரையோடுஉலாவிவிட்டு வா, இல்லாவிட்டாலும் நம் பரிவாரங்கள் இருக்குமிடத்துக்குப் போயிரு. அருள்வர்மன் இன்னும்சில நாள் இங்கேயே தான் இருப்பான்; மறுபடியும் சந்திக்கலாம்!" என்றாள்.
"ஆகட்டும் அக்கா! உலாவிவிட்டு வருகிறேன்!" என்று சொல்லிக் கொண்டு வானதி துள்ளிக் குதித்துச் சென்றாள். திடீரென்று அவ்வளவு குதூகலம் அவளுக்கு எப்படி ஏற்பட்டதோ, தெரியாது.
மலர்ந்த முகத்தோடும், விரிந்த கண்களோடும் அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தஅருள்வர்மன், அவள் மறைந்ததும், தமக்கையை நோக்கினான். "அக்கா! தந்தையின் புலம்பலின் காரணம்எனக்குத் தெரிகிறது. ஆனால் அவர் கண்ட காட்சியைப் பற்றி உன் கருத்து என்ன? அவர் முன்னால் காணப்பட்ட தோற்றம் என்ன வாயிருக்கக்கூடும்? தந்தையின் மனப் பிரமையை? அப்படியானால் உன் தோழிக்கும் பிரமைஎப்படி ஏற்பட்டிருக்கும்?"
"தந்தை கண்டதும் பிரமை அல்ல; வானதி கண்டதும் மாயத்தோற்றம் அல்ல; தந்தை முன் நடந்ததுநள்ளிரவு நாடகம். அதில் முக்கிய பாத்திரமாக நடித்தவள் பழுவூர் இளையராணி நந்தினி. இதைஅப்போதே நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். வந்தியத்தேவரும் நீயும் சொன்ன விவரங்களுக்குப் பிறகுஅது உறுதியாயிற்று....!
"அந்த நாடகத்திற்குக் காரணம் என்ன? பழுவூர் ராணி எதற்காக அப்படிச் செய்ய வேணும், அக்கா?"
"நந்தினிக்குத் தன் பிறப்பைக் குறித்துச் சந்தேகம் உண்டு. சக்கரவர்த்தி தன்னைப் பார்த்து,முன்னொரு தடவை நினைவிழந்ததை அவள் அறிவாள். அதற்குப் பிறகு அவள் தந்தை முன்னால் வருவதே இல்லை. இப்படி ஒரு நாடகம் நடத்தினால் ஏதாவது உண்மை கண்டறியலாம் என்று செய்திருக்கிறாள்...."
"தெரிந்திருக்குமா, அக்கா?"
"அதை நான் அறியேன்! நந்தினியின் உள்ளத்தை அவளைப் படைத்த பிரம்மதேவனாலும் கண்டறியமுடியாது.பழுவேட்டரையர் அவளிடம் படும்பாட்டை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது; தம்பி!சற்று முன் அழகைப் பற்றிப் பேசினோம் அல்லவா? பெண்களில் அழகி என்றால் நந்தினி தான் அழகி. நாங்கள் எல்லாரும் அவள் கால் தூசி பெற மாட்டோம். நந்தினி முன்னால் எதிர்ப்பட்ட புருஷர்களும் அவளுக்குஅக்கணமே அடிமையாகி விடுகிறார்கள். பழுவேட்டரையர், மதுராந்தகர், திருமலையப்பன், கந்தன்மாறன்,கடைசியாக பார்த்திபேந்திரன்! அவளுடைய அழகுக்குப் பயந்து கொண்டு முதன் மந்திரி அநிருத்தர் அவள்பக்கத்திலேயே போவதில்லை. ஆதித்த கரிகாலன் அதனாலேயே தஞ்சைக்கு வருவதில்லை. தம்பி!நந்தினியின் சௌந்திரயத்துக்கு அஞ்சாமல், அவளிடம் தோற்றுப் போகாமல் மிஞ்சி வந்தவர், ஒரே ஒருவர்தான்..."
"வாணர் குலத்து வீரரைத்தானே சொல்லுகிறாய்?"
"ஆம்! அவர்தான்! அதனாலேயே அவரைக் காஞ்சிக்கு ஆதித்த கரிகாலனிடம் அனுப்பியிருக்கிறேன்."
"எதற்காக?"
"பழுவூர் ராணி கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி நம் தமையனுக்குச் சொல்லியனுப்பியிருக்கிறாள். அவர்களுடைய சந்திப்பைத் தடுப்பதற்காக அனுப்பியிருக்கிறேன். அப்படிச் சந்தித்தாலும், விபரீதம் எதுவும் நேராமல் பாதுகாப்பதற்கு அனுப்பியிருக்கிறேன். கரிகாலனுக்கு நந்தினி நம் தமக்கை என்று தெரியாது. நந்தினி நம் உறவைக் கண்டு கொண்டாளா என்பதையும் நான் அறியேன்."
"அவள் நம் தமக்கை என்பது நிச்சயந்தானா, அக்கா?"
"அதில் என்ன சந்தேகம்? தம்பி! அதை நான் அறிந்ததிலிருந்து என்னுடைய மனத்தை அடியோடு மாற்றிக் கொண்டு விட்டேன். நாம் குழந்தைகளாயிருந்த போது நந்தினியை நான் வெறுத்தேன், அவமதித்தேன். அவள் அழகைக் கண்டு பொறாமைப்பட்டேன். நீயும், கரிகாலனும் அவளோடு பேசவுங் கூடாது என்று திட்டம் செய்தேன். அவள் பாண்டியநாட்டுக்குப் போன பிறகும் அவளிடம் நான் கொண்டிருந்த அசூயையும் வெறுப்பும் அப்படியே இருந்தன. பழுவூர்க் கிழாரை மணம் செய்து கொண்டு திரும்பி வந்த பிறகு எத்தனையோ தடவை அவளைப் பரிகசித்து அவமானப்படுத்தினேன். அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன்..."
"எப்படி, அக்கா! என்ன மாதிரிப் பிராயச்சித்தம்?"
"அடுத்த தடவை அவளைச் சந்திக்கும்போது அவள் காலில் விழுந்து என்னுடைய குற்றங்களை யெல்லாம்மன்னிக்கும்படி கேட்டுக் கொள்வேன். அதற்காக என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்வேன்..."
"அதை நான் தடுப்பேன். நீ ஒரு குற்றமும் செய்யவில்லை நீ யாரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. இந்த ஈரேழு பதினாலு உலகத்தில் உனக்குத் தண்டனை கொடுக்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. நீ பழுவூர் இளைய ராணி நந்தினியைப் பார்த்து அசூயைப்படவில்லை. அவள்தான் உன்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டாள்.அவள்தான் உன்னை வெறுத்தாள்..."
"தம்பி! இலங்கையில் பைத்தியக்காரியைப்போல் திரியும் நம் பெரியம்மாவை நினைத்து நீநெஞ்சம் குமுறுவதாகச் சொன்னாய். அரண்மனையில் சகல சுக போகங்களுடன் வாழ்ந்திருக்க வேண்டிய நந்தினிஎப்படியெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாள் என்பதை நினைக்கும்போது என் இதயம் பிளந்து போகும்போலிருக்கிறது. யாரோ, எப்பொழுதோ செய்த தவறுகளின் காரணமாக, எனக்கு முன் பிறந்த தமக்கைஇந்தக் கிழவர் பழுவேட்டரையரை மணக்க நேர்ந்துவிட்டது...."
"அக்கா! இதெல்லாம் எப்படி நேர்ந்திருக்கும் என்று உனக்கு ஏதாவது தெரிகிறதா? நம்பெரியம்மா இறந்து விட்டதாகத் தந்தை எண்ணுவதற்குக் காரணம் என்ன? நந்தினி அநாதையைப் போலஎங்கேயே, யார் வீட்டிலோ வளர்ந்து, இந்த நிலைமைக்கு வருவதற்குக் காரணம் என்ன....?"
"அதைப்பற்றியெல்லாம் நான் இரவும், பகலும் யோசித்து வருகிறேன். ஆனால் இன்னமும்நிச்சயமாய்க் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த இரகசியங்களை அறிந்தவர்கள் இப்போது இரண்டு பேர்நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நம்முடைய பாட்டி செம்பியன்மாதேவிக்கு ஏதோ விஷயமும்தெரிந்திருக்கிறது.முதலாவது மந்திரி அநிருத்தருக்கு எல்லா விஷயம் தெரிந்திருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் இரண்டு பேரிடமிருந்தும் நாம் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அநிருத்தருடைய சீடன்ஆழ்வார்க்கடியானுக்கும் ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். அவன் குருவை மிஞ்சியவன்! வாயைதிறக்கமாட்டான். தம்பி! அதையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு இப்போது அவசரமும் இல்லை. நந்தினியினால்நம் குலத்துக்கு விபரீதமான அபாயமும், அபகீர்த்தியும் ஏற்படாமல் தடுப்பதுதான் இப்போது முக்கியம். வந்தியத்தேவர் சொன்னார், 'பழுவூர் ராணி மீன் சின்னம் பொறித்த, மின்னலைப்போல் ஒளிரும் வள் ஒன்றைவைத்துப் பூஜை செய்து கொண்டிருக்கிறாள்' என்று. அதைக் கேட்டதிலிருந்து என் நெஞ்சு பதைத்துக்கொண்டேயிருக்கிறது. தான் பிறந்த குலம் சோழ குலம் என்பதை அறியாமல் பழுவூர் ராணி ஏதாவதுசெய்துவிடப் போகிறாளே என்று கவலையாயிருக்கிறது."
"பழுவூர் ராணியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் என்ன?"
"சொன்னாலும் என்ன பயன் ஏற்படுமோ, தெரியாது. நம்மிடமெல்லாம் அவளுடைய கோபம் அதிகமானாலும் ஆகும். ஆனால் நமது கடமையை நாம் செய்துவிட வேண்டியது தான்!"
"அதற்காக வந்தியத்தேவரை நீ அனுப்பியிருப்பது சரிதான் ஆனால் தந்தையிடமும் தெரிவிக்கவேண்டாமா? அவர் எதற்காக உடல் வேதனை போதாதென்று, மனவேதனையும் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாம் உடனே, தஞ்சைக்குப் புறப்படலாம் அல்லவா?"
"கூடவே கூடாது, தம்பி! இரண்டு நாளில் தஞ்சைக்கு நான் புறப்படுகிறேன். ஆனால் இந்தச்சூடாமணி விஹாரத்தில்தான் நீ இன்னும் சில காலம் இருக்கவேண்டும்."
"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? தந்தையின் கட்டளையை மீறி என்னை இங்கே இன்னமும் ஒளிந்து, மறைந்து வாழச் சொல்கிறாயா?"
"ஆம்! நீ இப்போது தஞ்சைக்கு வந்தால் நாடெங்கும் ஒரே குழப்பமாகிவிடும். மக்கள்மதுராந்தகர் மீதும், பழுவேட்டரையர்கள் மீதும் ஒரே கோபமாயிருக்கிறார்கள். உன்னைச் சிறைப்படுத்திக்கொண்டுவரச் சொன்னதற்காகச் சக்கரவர்த்தி மீதுகூட ஜனங்கள் கோபமாயிருக்கிறார்கள். உன்னை இப்போது கண்டால் மக்களின் உணர்ச்சி வெள்ளம் பொங்கிப் பெருகும். அதன் விளைவுகள் என்ன ஆகுமோ தெரியாது. உடனே உனக்குப் பட்டம் கட்டவேண்டும் என்று ஜனங்கள் கூச்சல் போட்டாலும்போடுவார்கள். தஞ்சைக் கோட்டையையும், அரண்மனையையும் முற்றுகை போடுவார்கள். ஏற்கெனவே மனம்புண்பட்டிருக்கும் தந்தையின் உள்ளம் மேலும் புண்ணாகும். தம்பி! இராஜ்யத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது என்றுஉன்னை நான் வரச்சொல்லி ஓலை எழுதினேன். அதே காரணத்துக்காக இப்போது நீ திரும்பி இலங்கைக்குப்போய்விட்டால் நல்லது என்று நினைக்கிறேன்..."
"அக்கா! அது ஒருநாளும் இயலாத காரியம். நம் தந்தையைப் பார்க்காமல் நான் திரும்பிப்போகமாட்டேன். தஞ்சைக்கு நான் இரகசியமாக வருவது நல்லது என்று நினைத்தால் அப்படியே செய்கிறேன். ஆனால் சக்கரவர்த்தியை நான் பார்த்தேயாக வேண்டும். அவரிடம் என்னைக் காப்பாற்றிய காவேரி அம்மன்யார் என்பதைச் சொல்லவேண்டும்."
"அதையெல்லாம் நானே சமயம் பார்த்துச் சொல்லி விடுகிறேன். நீ வந்துதான் தீரவேண்டுமா?"
"நேரில் பார்த்த நானே சொன்னால், தந்தைக்குப் பூரண நம்பிக்கை ஏற்படும்! என் மனமும் அறுதல் அடையும். பெரியம்மாவை அழைத்துக்கொண்டு வருவதற்கு அவருடைய அநுமதியையும் பெற்றுக் கொள்வேன்...."
"அருள்வர்மா! உன் இஷ்டத்துக்கு நான் குறுக்கே நிற்க வில்லை. ஆனால் இன்னும் ஒரு வாரகாலம்சூடாமணி விஹாரத்தில் இரு. நான் முன்னதாகத் தஞ்சைக்குப் போகிறேன். நீ வந்திருப்பதாகத்தந்தையிடம் அறிவித்துவிட்டுச் செய்தி அனுப்புகிறேன். தம்பி! நான் இங்கே உன்னைத் தேடி வந்தது உன்னைப்பார்ப்பதற்காக மட்டுமல்ல; உன்னிடம் ஒரு வரம் கோரிப் பெறுவதற்காக வந்தேன். அதை நிறைவேற்றிவைத்து விட்டால், பின்னர் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன். ஆண்பிள்ளைகள் அபாயத்துக்குஉட்படவேண்டியவர்கள்தான். வீர சௌரிய பராக்கிரமங்களின் இணையில்லாதவன் என நீ புகழ் பெற வேண்டும்என்பது தான் என் ஆசை. ஆனால் மறுபடி நீ உன்னை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்வதற்கு முன்னால் என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்..."
"இவ்வளவு பெரிய பீடிகை எதற்கு, அக்கா! நீ சொல்லுவதை என்றைக்காவது நான் மறுத்ததுண்டா?"
"மறுத்ததில்லை; அந்த நம்பிக்கையோடுதான் இப்போதும் கேட்கிறேன் ஆதித்த கரிகாலன் கலியாணம் செய்து கொள்ளவில்லை; கலியாணம் செய்து கொள்வான் என்றும் தொன்றவில்லை; சுந்தர சோழரின் குலம் உன்னால்தான் விளங்க வேண்டும். என் விருப்பத்தை இந்த விஷயத்தில் நீ நிறைவேற்றி வைக்க வேண்டும்..."
"உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் சம்மதித்தால், எனக்குப் பிரியமான பெண்ணை மணந்துகொள்ள நீ சம்மதம் கொடுப்பாய் அல்லவா?"
"இது என்ன இப்படிக் கேட்கிறாய்? இருபது ஆண்டுகளாக நம் விருப்பங்கள் மாறுபட்டதில்லை. இதிலே மட்டும் தனியாக எதற்குச் சம்மதம் கேட்கிறாய்?"
"அக்கா அதற்குக் காரணம் இருக்கிறது. நான் மணந்து கொள்ளும் பெண், நான் காணும் பகற் கனவுகளை நிறைவேற்றுவதற்கு ஒத்தாசையாயிருக்கவேண்டும் அல்லவா?"
"தம்பி! உன் பகற் கனவுகளை ஒரு பெண்ணின் ஒத்தாசை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளவாஆசைப்படுகிறாய்?" என்றாள் குந்தவை.
அச்சமயத்தில், 'ஐயோ! ஐயோ! அக்கா! அக்கா!' என்ற அபயக்குரல் கேட்டது. குரல் வானதியின் குரல் தான்.
பக்க தலைப்பு
நாற்பத்தாறாம் அத்தியாயம்
வானதி சிரித்தாள்
நந்தி மண்டபத்தில் அமர்ந்து இளவரசனும், குந்தவைதேவியும் பேசிக்கொண்டிருந்தபோது - வானதிதூண் ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்தபோது, - கால்வாயில் படகில் காத்துக் கொண்டிருந்தபூங்குழலிக்கும், சேந்தன் அமுதனுக்கும் முக்கியமான சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.
"அமுதா! ஒன்று உன்னை நான் கேட்கப் போகிறேன். உண்மையாகப் பதில் சொல்வாயா?" என்றாள் பூங்குழலி.
"உண்மையைத் தவிர என் வாயில் வேறு ஒன்றும் வராது பூங்குழலி! அதனாலேதான் நாலு நாளாக நான் யாரையும் பார்க்காமலும், பேசாமலும் இருக்கிறேன்" என்றான் அமுதன்.
"சில பேருக்கு உண்மை என்பதே வாயில் வருவதில்லை. இளவரசருக்கு ஓலை எடுத்துக் கொண்டு இலங்கைக்குப் போனானே, அந்த வந்தியத்தேவன் அப்படிப்பட்டவன்."
"ஆனாலும் அவன் ரொம்ப நல்லவன். அவன் யாரையும் கெடுப்பதற்காகப் பொய் சொன்னதில்லை."
"உன்னைப் பற்றி அவன் ஒன்று சொன்னான். அது உண்மையா, பொய்யா என்று தெரிந்து கொள்ளவிரும்புகிறேன்..."
"என்னைப் பற்றி அவன் உண்மையில்லாததைச் சொல்வதற்குக் காரணம் எதுவும் இல்லை. இருந்தாலும்,அவன் சொன்னது என்னவென்று சொல்!"
"நீ என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதாகச் சொன்னான்."
"அது முற்றும் உண்மை".
"நீ என்னிடம் ஆசை வைத்திருப்பதாகச் சொன்னான், என்னை நீ மணந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னான்...."
"அவ்விதம் உண்மையில் அவன் சொன்னானா?"
"ஆம், அமுதா!"
"அவனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்."
"எதற்காக?"
"நானே உன்னிடம் என் மனதைத் திறந்து தெரிவித்திருக்க மாட்டேன்; அவ்வளவு தைரியம் எனக்கு வந்திராது. எனக்காக உன்னிடம் தூது சொன்னான் அல்லவா? அதற்காக அவனுக்கு நன்றிசெலுத்த வேண்டும்."
"அப்படியானால் அவன் சொன்னது உண்மைதானா?"
"உண்மைதான் பூங்குழலி! அதில் சந்தேகமில்லை."
"உனக்கு ஏன் என்னிடம் ஆசை உண்டாயிற்று, அமுதா?"
"அன்பு உண்டாவதற்குக் காரணம் சொல்ல முடியுமா?"
"யோசித்துப் பார்த்துச் சொல்லேன், ஏதாவது ஒரு காரணம் இல்லாமலா இருக்கும்?"
"அன்பு ஏன் ஏற்படுகிறது, எவ்வாறு ஏற்படுகிறது என்று இதுவரை உலகில் யாரும் கண்டுபிடித்துச் சொன்னதில்லை, பூங்குழலி!"
"ஒருவருக்கொருவர் அழகைப் பார்த்து ஆசை கொள்வதில்லையா?"
"அழகைப் பார்த்து ஆசை கொள்வதுண்டு; மோகம் கொள்வதும் உண்டு. ஆனால் அதை உண்மையான அன்பு என்று சொல்ல முடியாது அது நிலைத்திருப்பதும் இல்லை. சற்று முன் வந்தியத்தேவன் என்று சொன்னாயே, அவன் என்னைப் பார்த்தவுடன் என்னிடம் சிநேகம் கொண்டு விட்டான். அவனுக்காக நான் என் உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருந்தேன். என் அழகைப் பார்த்தா, என்னிடம் அவன் சிநேகமானான்?"
"ஆனால் உன் சினேகிதன் என் அழகைப் பற்றி ரொம்ப, ரொம்ப வர்ணித்தான் இல்லையா?"
"உன் அழகைப் பற்றி வர்ணித்தான். ஆனால் உன்னிடம் ஆசை கொள்ளவில்லை. பழுவூர்ராணியின் அழகைப்பற்றி நூறு பங்கு அதிகம் வர்ணித்தான், அவளிடம் அன்பு கொள்ளவில்லை."
"அதன் காரணம் எனக்குத் தெரியும்."
"அது என்ன?"
"அதோ இளவரசருடன் பேசிக் கொண்டிருக்கும் இளைய பிராட்டியிடம் அந்த வீரனின் மனம் சென்றுவிட்டதுதான் காரணம்."
"இதிலிருந்தே அழகுக்கும் அன்புக்கும் சம்பந்தமில்லையென்று ஏற்படவில்லையா?"
"அது எப்படி ஏற்படுகிறது? இளையபிராட்டியைவிட நான் அழகி என்றா சொல்லுகிறாய்?"
"அதில் என்ன சந்தேகம், பூங்குழலி! பழையாறை இளையபிராட்டியைக் காட்டிலும், அதோ தூண் மறைவில் நிற்கும் கொடும்பாளூர் இளவரசியைக் காட்டிலும், நீ எத்தனையோ மடங்கு அழகி. மோகினியின் அவதாரம் என்று பலரும் புகழும் பழுவூர் இளையராணியின் அழகும் உன் அழகுக்கு இணையாகாது. இப்படிப்பட்ட தெய்வீகமான அழகுதான் எனக்குச் சத்துருவாயிருக்கிறது. அதனாலேயே என் மனத்தில் பொங்கிக் குமுறும் அன்பை என்னால் உன்னிடம் வௌியிடவும் முடியவில்லை. வானுலகத் தேவர்களும் மண்ணுலகத்தின் மன்னாதி மன்னர்களும் விரும்பக்கூடிய அழகியாகிய நீ, எனக்கு எங்கே கிட்டப்போகிறாய் என்ற பீதி என் மனத்தில் குடி கொண்டிருக்கிறது!"
பூங்குழலி சற்று யோசனையில் ஆழ்ந்திருந்து விட்டு "அமுதா! உன் பேரில் எனக்கு ஆசை இல்லைஎன்று நான் சொல்லிவிட்டால், நீ என்ன செய்வாய்?" என்று கேட்டாள்.
"சில நாட்கள் பொறுமையுடன் இருப்பேன். உன் மனம் மாறுகிறதா என்று பார்ப்பேன்."
"அது எப்படி மாறும்?"
"மனிதர்கள் மனது விசித்திரமானது. சிலசமயம் நம் மனத்தின் அந்தரங்கம் நமக்கேதெரியாது. புறம்பான காரணங்களினால் மனம் பிரமையில் ஆழ்ந்திருக்கும். பிரமை நீங்கியதும் உண்மைமனம் தெரிய வரும்..."
"சரி பொறுத்திருந்து பார்ப்பாய். அப்படியும் என் மனதில் மாறுதல் ஒன்றும் ஏற்படாவிட்டால்..."
"உன்னிடம் வைத்த ஆசையை நான் போக்கிக் கொள்ள முயல்வேன்..."
"அது முடியுமா?..."
"முயன்றால் முடியும்; கடவுளிடம் மனத்தைச் செலுத்தினால் முடியும். நம் பெரியோர் பகவானிடம் பக்தி செலுத்தித்தான் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள்..."
"அமுதா! நீ என்னிடம் வைத்திருக்கும் அன்பு உண்மையான அன்பு என்று எனக்குத் தோன்றவில்லை."
"ஏன் அப்படிச் சொல்கிறாய்? உண்மை அன்பின் அடையாளம் என்ன?"
"என்னிடம் உனக்கு உண்மை அன்பு இருந்தால், நான் உன்னை மறுதளித்ததும் என்னைக் கொன்று விட வேண்டும் என்று உனக்குத் தோன்றும். உனக்குப் பதிலாக நான் வேறு யாரிடமாவது அன்பு வைப்பதாகத் தெரிந்தால் அவரையும் கொன்றுவிட வேண்டுமென்று நீ கொதித்து எழுவாய்...."
"பூங்குழலி! நான் கூறியது தெய்வீகமான, ஸத்வ குணத்தைச் சேர்ந்த அன்பு. நீ சொல்வது அசுரகுணத்துக்குரிய ஆசை; பைசாச குணத்துக்குரியது என்று சொல்லலாம்..."
"தெய்வீகத்தையும் நான் அறியேன்; பைசாச இயல்பையும் நான் அறியேன். மனித இயற்கைதான் தெரியும். அன்பு காரணமாக இன்பம் உண்டாக வேண்டும். அதற்குப் பதிலாகத் துன்பம் உண்டானால் எதற்காக அதைச் சகித்திருப்பது? நாம் ஒருவரிடம் அன்பு செய்ய, அவர் பதிலுக்கு நம்மிடம் அன்பு செய்யாமல் துரோகம் செய்தால் எதற்காக நாம் பொறுத்திருக்க வேண்டும்? பழிவாங்குவது தானே மனித இயல்பு?"
"இல்லை, பூங்குழலி! பழிவாங்குவது மனித இயல்பு அல்ல. அது ராட்சஸ இயல்பு. ஒருவரிடம்நாம் அன்பு வைத்திருப்பது உண்மையானால் அவருடைய சந்தோஷம் நமக்கும் சந்தோஷம் தர வேண்டும்.அவர் நம்மை நிராகரிப்பது முதலில் கொஞ்சம் வேதனையாயிருந்தாலும் பொறுத்துக்கொண்டு பதிலுக்கு நன்மையே செய்தோமானால் பின்னால் நமக்கு ஏற்படும் இன்பம், ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகியிருக்கும்..."
"நீ சொல்வது மனித இயல்பே அல்ல; மனிதர்களால் ஆகக் கூடிய காரியமும் அல்ல. வந்தியத்தேவனுடன் வைத்தியர் மகன் ஒருவன் வந்தான். அவன் என்னைப் பார்த்ததும் ஆசை கொண்டான். அது நிறைவேறாது என்று அறிந்ததும், அவனுடைய ஆசைக்கு குறுக்கே நிற்பதாக அவன் எண்ணி வந்தியத்தேவனைப் பழுவேட்டரையர் ஆட்களிடம் காட்டிக் கொடுக்க முயன்றான். என்னையும் அவன் கொன்றுவிட முயன்றிருப்பான்."
"அப்படியானால் அவன் மனித குலத்தைச் சேர்ந்தவன் அல்ல; கொடிய அசுர குலத்தைச் சேர்ந்தவன்."
"அதோ கொடும்பாளூர் இளவரசி நிற்கிறாள். அவள் பொன்னியின் செல்வருக்குத் தன் உள்ளத்தைப்பறிகொடுத்திருக்கிறாள். பொன்னியின் செல்வர் அவளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவள் என்ன செய்வாள்?நிச்சயமாகப் பொன்னியின் செல்வருக்கு விஷம் வைத்துக் கொல்ல முயல்வாள். அவருடைய மனத்தை வேறு எந்தப் பெண்ணாவது கவர்ந்து விட்டதாக அறிந்தால் அவளையும் கொல்ல முயல்வாள்."
"ஒரு நாளும் நான் அப்படி நினைக்கவில்லை, பூங்குழலி; சாத்வீகமே உருக்கொண்ட வானதி அப்படிஒருநாளும் செய்ய முயல மாட்டாள்."
"இருக்கலாம்; நானாயிருந்தால் அப்படித் தான் செய்ய முயலுவேன்."
"உன்னைக் கடவுள் மன்னித்துக் காப்பாற்ற நான் பிரார்த்தித்து வருவேன்...."
"கடவுள் என்ன என்னை மன்னிப்பது! நான் தான் கடவுளை மன்னிக்க வேண்டும்!"
"நீ தெய்வ அபசாரம் செய்வதையும் கடவுள் மன்னிப்பார்!"
"அமுதா! நீ உத்தமன், என் பெரிய அத்தையின் குணத்தைக் கொண்டு பிறந்திருக்கிறாய்..."
"அது என்ன விஷயம்? திடீரென்று புதிதாக ஏதோ சொல்கிறாயே?"
"என் பெரிய அத்தை இறந்துபோய் விட்டதாக நம் குடும்பத்தார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?"
"யாரைச் சொல்கிறாய்? என் தாய்க்கும், உன் தந்தைக்கும் உடன் பிறந்த மூத்த சகோதரியைத்தானே?"
"ஆம்! அவள் உண்மையில் இறந்து விடவில்லை."
"நானும் அப்படித்தான் பராபரியாகக் கேள்விப்பட்டேன்."
"அவள் இலங்கைத் தீவில் இன்றைக்கும் பைத்தியக்காரியைப் போல அலைந்து கொண்டிருக்கிறாள்...."
"குடும்பச் சாபக்கேட்டுக்கு யார் என்ன செய்ய முடியும்?"
"அவள் இன்று பைத்தியக்காரியைப் போல் அலைவதற்குக் குடும்பச் சாபம் மட்டும் காரணம் அல்ல. சோழகுலத்தைச் சேர்ந்த ஒருவனின் நம்பிக்கைத் துரோகம்தான் அதற்குக் காரணம்."
"என்ன? என்ன?"
"இளம்பிராயத்தில், என் அத்தை இலங்கைக்கு அருகில் ஒரு தீவில் வசித்து வந்தாள். அவளைச் சோழராஜகுமாரன் ஒருவன் காதலிப்பதாகப் பாசாங்கு செய்தான், அவள் நம்பிவிட்டாள். பிறகு அந்த இராஜகுமாரன் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டதும் அவளை நிராகரித்து விட்டான்...."
"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது, பூங்குழலி?"
"என் ஊமை அத்தையின் சமிக்ஞை பாஷை மூலமாகவே தெரிந்து கொண்டேன். இன்னொன்று சொல்கிறேன் கேள்! சில காலத்துக்கு முன்பு பாண்டிய நாட்டார் சிலர் இங்கே வந்திருந்தார்கள். என் அத்தையை வஞ்சித்த இராஜ குலத்தினரை பழிக்குப்பழி வாங்குவதற்கு என் உதவியைக் கோரினார்கள். அப்போதுதான் என் அத்தையின் கதையை அறிந்திருந்த எனக்கு இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர்களுடன் சேருவதென்றே முடிவு செய்துவிட்டேன். அச்சமயம் என் பெரிய அத்தையின் மனப்போக்கை அறிந்து கொண்டேன். அவள், தனக்குத் துரோகம் செய்தவனை மன்னித்ததுமில்லாமல், அவனுக்கு இன்னொரு மனைவி மூலம் பிறந்த பிள்ளையைப் பல தடவை காப்பாற்றினாள் என்று அறிந்தேன். பிறகு பாண்டிய நாட்டாருடன் சேரும் எண்ணத்தை விட்டுவிட்டேன். நீ சொல்கிறபடி, என் அத்தையின் அன்பு தெய்வீகமான அன்புதான். ஆனால் என் அத்தையைப் போல் நான் இருக்க மாட்டேன்."
"பின்னே என் செய்வாய்?"
"என்னை எந்த இராஜகுமாரனாவது வஞ்சித்து மோசம் செய்தால், பழிக்குப்பழி வாங்குவேன். அவனையும் கொல்வேன்; அவனுடைய மனத்தை என்னிடமிருந்து அபகரித்தவளையும் கொல்லுவேன். பிறகு நானும் கத்தியால் குத்திக் கொண்டு செத்துப் போவேன்!"
"கடவுளே! என்ன பயங்கரமான பேச்சுப் பேசுகிறாய்?"
"அமுதா! இரண்டு வருஷமாக என் மனத்திலுள்ள கொதிப்பை நீ அறிய மாட்டாய். அதனால் இப்படிச் சாத்வீக உபதேசம் செய்கிறாய்!"
"உன் அத்தைக்கு இல்லாத கொதிப்பு உனக்கு என்ன வந்தது!"
"அது என் அத்தையின் சமாசாரம்; இது என் சமாசாரம்!"
"உன்னுடைய சமாசாரமா? உண்மைதானா, பூங்குழலி! நிதானித்துச் சொல்!"
"ஆம், அமுதா! என் உடம்பிலிருந்து கொஞ்சம் இரத்தத்தையும், அந்த வானதியின் உடம்பிலிருந்து கொஞ்சம் இரத்தத்தையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால், ஏதாவது வித்தியாசம் இருக்குமா?"
"ஒரு வித்தியாசமும் இராது."
"அவள் எந்த விதத்திலாவது என்னைவிட உயர்ந்தவளா? அறிவிலோ, அழகிலோ, ஆற்றலிலோ?"
"ஒன்றிலும் உன்னைவிட உயர்ந்தவள் அல்ல. நீ அலை கடலில் வளர்ந்தவள். அவள் அரண்மனையில் வளர்ந்தவள். நீ காட்டு மிருகங்களைக் கையினால் அடித்துக்கொல்லுவாய்! கடும் புயற்காற்றில் கடலில் ஓடம் செலுத்துவாய்! கடலில் கை சளைத்துத் தத்தளிக்கிறவர்களைக் காப்பாற்றுவாய்! வானதியோ கடல் அலையைக்கண்டே பயப்படுவாள்! வீட்டுப்பூனையைக் கண்டு பீதிகொண்டு அலறுவாள்! ஏதாவது கெட்ட செய்தி கேட்டால் மூர்ச்சையடைந்து விழுவாள்!"
"அப்படியிருக்கும்போது இளையபிராட்டி என்னைத் துச்சமாகக் கருதக் காரணம் என்ன? வானதியைச்சீராட்டித் தாலாட்டுவதின் காரணம் என்ன?"
"பூங்குழலி! இளையபிராட்டியின் மீது நீ வீண்பழி சொல்லுகிறாய். அவருக்கு வானதி நெடுநாளையத் தோழி. உன்னை இப்போதுதான் இளைய பிராட்டிக்குத் தெரியும். இளவரசரைக் கடலிலிருந்து காப்பாற்றி இங்கே கொண்டு வந்து சேர்த்ததற்காக உனக்கு எவ்வளவோ அவர் நன்றி செலுத்தவில்லையா?"
"ஆம்! அந்த அரண்மனைச் சீமாட்டியின் நன்றி இங்கே யாருக்கு வேணும்? அவளே வைத்துக்கொள்ளட்டும். அமுதா! இளவரசரைப் படகில் ஏற்றிக்கொண்டு திரும்ப புத்த விஹாரத்துக்குப் போகவேண்டுமாயிருந்தால், நீ மட்டும் படகைச் செலுத்திக் கொண்டுபோ! நான் வந்தால், ஒரு வேளை வேண்டுமென்றே படகைக் கவிழ்த்தாலும் கவிழ்த்து விடுவேன்..."
"ஒருநாளும் நீ அப்படிச் செய்யமாட்டாய், பூங்குழலி! இளவரசர் என்ன குற்றம் செய்தார், அவர் ஏறியுள்ள படகை நீ கவிழ்ப்பதற்கு?"
"அமுதா! எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. என் சித்தம் என் சுவாதீனத்தில் இல்லை. என் அத்தைக்கு இவர் தந்தை செய்த துரோகத்தை நினைத்துப் படகைக் கவிழ்த்தாலும் கவிழ்த்து விடுவேன். நீயே படகை விட்டுக் கொண்டுபோ!"
"அப்படியே ஆகட்டும்; நானே இளவரசரைக் கொண்டு போய் விட்டு வருகிறேன். நீ என்ன செய்வாய்?"
"நான் வானதியைப் பின் தொடர்ந்து சென்று, அவள் தலையில் ஒரு கல்லைத் தூக்கிப் போடுவேன்!"
இவ்விதம் கூறிக்கொண்டே பூங்குழலி குனிந்து கால்வாயின் கரையில் கிடந்த ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். அச்சமயம் கால்வாயின் கரையில் இருந்த அடர்த்தியான தென்னந் தோப்புக்குள்ளிருந்து கம்பீரமான ராஜ ரிஷபம் ஒன்று வௌியேறி வந்தது. அதைப் பார்த்த பூங்குழலி தன் கோபத்தை அக்காளையின் மேல் காட்டஎண்ணிக் கூழாங்கல்லை அதன் பேரில் விட்டெறிந்தாள்.
அந்தக் கூழாங்கல் ரிஷபராஜனின் மண்டைமீது விழுந்தது.
காளை ஒரு தடவை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது. கல் வந்த திசையை உற்றுப் பார்த்தது.
"ஐயோ பூங்குழலி! இது என்ன காரியம்? மாட்டின் மீது கல்லை விட்டெறியலாமா?" என்றான் அமுதன்.
"எறிந்தால் என்ன?"
"வாயில்லாத ஜீவன் ஆயிற்றே! அதற்குத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தெரியாதே?"
"என் குலத்தில் வாயில்லாத ஊமைப் பெண் ஒருத்தி இருந்தாள்! அவளுடைய மனத்தைப்புண்படுத்தியவர்களை என்ன செய்வது? அவள் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாமையால்தானே, அவளை அரசகுமாரன் ஒருவன் வஞ்சித்து அவளுடைய வாழ்க்கையைப் பாழாக்கினான்?"
"உன் அத்தைக்கு யாரோ செய்த அநீதிக்கு இந்த மாடு என்ன செய்யும்?"
"இந்த மாடு அப்படியொன்றும் நிராதரவான பிராணி அல்ல. இதற்குக் கூரிய கொம்புகள்இருக்கின்றன. தன்னைத் தாக்க வருபவர்களை இது முட்டித் தள்ளலாம்.காது கேளாத பேச முடியாதஉலகமறியாத ஏழைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? என்னிடம் அப்படி ஒரு இராஜகுமாரன் நடந்து கொண்டால் நான் அவனை இலேசில் விடமாட்டேன்!"
"இலேசில் விடமாட்டாய்! காளைமாட்டின் மேல் கல்லை எடுத்தெறிவாய்! அதுவும் கால்வாயில்படகில் இருந்து கொண்டு மாடு உன்கிட்டே வந்து உன்னைமுட்ட முடியாதல்லவா?"
"என்னை முட்ட முடியாவிட்டால் வேறு யாரையாவது அந்தக் காளை முட்டித் தள்ளட்டுமே!"
"உனக்கு யார்மேலோ உள்ள கோபத்தை இந்தக் காளையின் பேரில் காட்டியதுபோல்; அல்லவா?"
இவர்களுடைய சம்பாஷணையை என்னவோ அந்த ரிஷபத்தினால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பூங்குழலி கூறியது போலவே கிட்டத்தட்ட அது செய்துவிட்டது. கால்வாயில் இறங்கிப் படகிலிருந்துபூங்குழலியின் மீது அது தன் கோபத்தைக் காட்ட முடியவில்லை. திரும்பித் துள்ளிக் குதித்துக் கொண்டுசென்றது.அச்சமயம் வானதி தென்னந்தோப்பின் மறுபுறத்தில் இருந்த பல்லக்கை நோக்கித் தனியாகப் போய்கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளம் குதூகலத்தினால் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. எதிரில் துள்ளிக்குதித்துக் கொண்டு வந்த ரிஷபராஜனைப் பார்த்ததும் முதலில் அவள் குதூகலம் அதிகமாயிற்று. ஆனால்ரிஷபராஜன் தலையைக் குனிந்து கொண்டு, கொம்பை நீட்டிக்கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு தன்னைநோக்கி வருவதைக் கண்டதும் பயந்து போனாள். கால்வாய்க் கரையை நோக்கித் திரும்பி ஓடிவருவதைத்தவிர வேறு வழியில்லை. நந்தி மண்டபத்துக்கு வெகு சமீபத்தில் கால்வாய்க் கரைக்கு அவள் வந்துவிட்டாள். அப்புறம் மேலே செல்லமுடியவில்லை. ஏனெனில், கரையிலிருந்து கால்வாய் ஒரே கிடுகிடுபள்ளமாயிருந்தது. கரையோரமாக நந்தி மண்டபத்துக்கு வரலாம் என்று திரும்பினாள். அச்சமயம் ரிஷபம்அவளுக்கு வெகு சமீபத்தில் வந்திருந்தது. பின்புறமாக நகர்ந்து கால்வாயில் விழுவதைத் தவிர வேறுமார்க்கம் ஒன்றும் இல்லை. அப்போதுதான், "ஐயோ! ஐயோ! அக்கா! அக்கா!" என்று அவள் கத்தினாள்.
வானதியின் அந்த அபயக்குரல் பொன்னியின் செல்வன், குந்தவை இவர்களின் காதில் வந்து விழுந்தது.
வானதியின் அபயக் குரல் வந்த திசையைப் பொன்னியின் செல்வனும் குந்தவையும் திடுக்கிட்டுநோக்கினார்கள். அவர்கள் இருந்த நந்தி மண்டபத்துக்குச் சற்றுத் தூரத்தில், கால்வாயின் உயரமான கரையில்வானதி தோன்றினாள். கால்வாயின் பக்கம் அவள் முதுகு இருந்தது. அவள் தனக்கு எதிரே ஒரு பயங்கரமானபொருளைப் பார்ப்பவள் போலக் காணப்பட்டாள். அவளை அவ்விதம் பயங்கரப்படுத்தியது என்னவென்பது மறுகணமே தெரிந்து விட்டது "அம்ம்ம்ம்மா!" என்ற கம்பீரமான குரல் கொடுத்துக் கொண்டு, அவளுக்கு எதிரில் ரிஷப ராஜன் தோன்றினான்.
இன்னும் ஒரு அடி வானதி பின்னால் எடுத்து வைத்தால் அவள் கால்வாயில் விழ வேண்டியதுதான். பின்னால் நகருவதைத் தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லை. இதையெல்லாம் அருள்வர்மன் பார்த்த தட்சணமே அறிந்து கொண்டான். உடனே நந்தி மண்டபத்தின் படிக்கட்டிலிருந்து கால்வாயில் குதித்து மின்னலைப்போல் பாய்ந்து ஓடினான். வானதி கால்வாயின் கரையிலிருந்து விழுவதற்கும், அருள்வர்மன் கீழே ஓடிப் போய்ச் சேர்வதற்கும் சரியாக இருந்தது. கால்வாயின் தண்ணீரில் வானதி தலைகுப்புற விழுந்து விடாமல், இருகரங்களாலும் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
வானதிக்கு நேருவதற்கு இருந்த அபாயத்தை அறிந்து ஒரு கணம் குந்தவை உள்ளம்பதைத்துத்துடிதுடித்தாள். மறுகணம் அருள்மொழிவர்மன் அவளைத் தாங்கிக் கொண்டதைப் பார்த்து மகிழ்ச்சிக் கடலில்ஆழ்ந்தாள். வேலும் வாளும் வீசி, வஜ்ராயுதம் போல் வலுப்பெற்றிருந்த கைகளில் துவண்ட கொடியைப் போல்கிடந்த வானதியைத் தூக்கிக் கொண்டு அருள்வர்மன் குந்தவையின் அருகில் வந்தான்.
"அக்கா! இதோ உன் தோழியை வாங்கிக்கொள்! கொடும்பாளூர் வீரவேளிர் குலத்தில் இந்தப்பெண் எப்படித் தான் பிறந்தாளோ, தெரியவில்லை!" என்றான்.
"தம்பி! இது என்ன காரியம் செய்தாய்? கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்ணை நீ இப்படிக் கையினால் தொடலாமா?" என்றாள் குந்தவை.
"கடவுளே! அது ஒரு குற்றமா? பின்னே, இவள் தண்ணீரில் தலைகீழாக விழுந்து முழுகியிருக்க வேண்டும் என்கிறாயா? நல்ல வேளை! இவளை நான் தாங்கிப் பிடித்தது இவளுக்குத் தெரியாது. விழும்போதே மூர்ச்சையாகி விட்டாள்! இந்தா, பிடித்துக்கொள்!" என்றான் அருள்வர்மன்.
வானதி கலகலவென்று சிரித்தாள். சிரித்துக்கொண்டே அவன் கரங்களிலிருந்து தன்னைவிடுவித்துக்கொண்டு கரையில் குதித்தாள்.
"அடி கள்ளி! நீ நல்ல நினைவோடுதான் இருந்தாயா?" என்றாள் குந்தவை.
"கண்ணை மூடிக்கொண்டு மூர்ச்சையடைந்ததுபோல் ஏன் பாசாங்கு செய்தாள் என்று கேள், அக்கா!" என்றான் பொன்னியின் செல்வன்.
"நான் ஒன்றும் பாசாங்கு செய்யவில்லை, அக்கா! இவர் என்னைத் தொட்டதும் எனக்குக் கூச்சமாய்ப்போய்விட்டது. வெட்கம் தாங்காமல் கண்களை மூடிக்கொண்டேன்!"
"அது எனக்கு எப்படித் தெரியும்? மூர்ச்சை போட்டு விழுவது உன் தோழிக்கு வழக்கமாயிற்றே என்று பார்த்தேன்."
"இனிமேல் நான் மூர்ச்சை போட்டு விழமாட்டேன். அப்படி விழுந்தாலும் இவர் இருக்குமிடத்தில் விழமாட்டேன். அக்கா! இன்று இவருக்கு நான் செய்த உதவியை மட்டும் இவர் என்றைக்கும் மறவாமலிருக்கட்டும்!" என்றாள் வானதி.
"என்ன? என்ன? இவள் எனக்கு உதவி செய்தாளா? அழகாயிருக்கிறதே?" என்றான் அருள்வர்மன்.
குந்தவையும் சிறிது திகைப்புடன் வானதியை நோக்கி "என்னடி சொல்கிறாய்? என் தம்பி உனக்குச் செய்த உதவியை என்றும் மறக்கமாட்டேன் என்று சொல்கிறாயா?" என்றாள்.
"இல்லவே இல்லை. அக்கா! நான்தான் உங்கள் தம்பிக்குப் பெரிய உதவி செய்தேன். இவர்அதற்காக என்னிடம் என்றைக்கும் நன்றி செலுத்தியே தீரவேண்டும்!"
"நான் இவளைக் கால்வாயில் விழாமல் காப்பாற்றியதற்காக இவளுக்கு நான் நன்றி செலுத்த வேண்டுமா? உன் தோழிக்கு ஏதாவது சித்தக் கோளாறு உண்டா அக்கா?" என்றான் பொன்னியின் செல்வன்.
"என் சித்தம் சரியாகத்தான் இருக்கிறது! இவருக்குத்தான் மனம் குழம்பியிருக்கிறது. புரியும்படிசொல்லுகிறேன், இவர் சிறு வயதில் ஒரு சமயம் காவேரியில் விழுந்தார் என்றும், ஒரு பெண் இவரை எடுத்துக்காப்பாற்றினாள் என்றும் சொன்னீர்கள். மறுபடி இவர் கடலில் விழுந்து தத்தளித்தார்! அங்கேயும் ஒருஓடக்காரப் பெண் வந்து இவரைக் காப்பாற்றினாள். இப்படிப் பெண்களால் காப்பாற்றப்படுவதே இவருக்குவழக்கமாகப் போய்விட்டது. அந்த அபகீர்த்தி மறைவதற்கு நான் இவருக்கு உதவி செய்தேன். கால்வாயில்விழப்போன ஒரு பெண்ணை இவர் தடுத்துக் காப்பாற்றினார் என்ற புகழை அளித்தேன் அல்லவா! அதற்காக இவர் என்னிடம் நன்றி செலுத்த வேண்டாமா?"
இவ்விதம் கூறிவிட்டு வானதி சிரித்தாள். அதைக் கேட்ட குந்தவையும் சிரித்தாள். பொன்னியின் செல்வனும் சிரிப்பை அடக்கப் பார்த்து முடியாமல் 'குபீர்' என்று வாய்விட்டுச் சிரித்தான்.
அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சிரித்த சிரிப்பின் ஒலி நந்தி மண்டபத்தைக் கடந்து, வான முகடு வரையில் சென்று எதிரொலி செய்தது.
படகில் இருந்தவர்களின் காதிலும் அந்தச் சிரிப்பின் ஒலி கேட்டது. "அமுதா! அந்த மூன்றுபைத்தியங்களும் சிரிப்பதைக் கேட்டாயா?" என்று சொல்லிவிட்டுப் பூங்குழலியும் சிரித்தாள். அமுதனும்அவளுடன் கூடச் சிரித்தான்.
தென்னந்தோப்பில் வாசம் செய்த பட்சிகள் 'கிக்கிளு கிளுகிளு' என்று ஒலி செய்து சிரித்தன.
இத்தனை நேரமும் கால்வாயின் கரைமீது கம்பீரமாய் நின்ற காளையும் ஒரு ஹூங்காரம் செய்துசிரித்து விட்டுச் சென்றது.
கடல் அலைகள் கம்பீரமாகச் சிரித்தன.
கடலிலிருந்து வந்த குளிர்ந்த காற்றும் மிருதுவான குரலில் சிரித்து மகிழ்ந்தது.
பக்க தலைப்பு
This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmastersof this website.