ponniyin celvan
of kalki, part 2F
(in tamil script, unicode format)
அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை
Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai,India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram,Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan,Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. VinothJagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devotedto preparation of electronic texts of tamil literary works and to distributethem free on the Internet. Details of Project Madurai are available atthe website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this headerpage is kept intact.
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - சுழிக் காற்று
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - உடைந்த படகு
ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - அபய கீதம்
ஐம்பத்தொன்றாம் அத்தியாயம்
சுழிக் காற்று
காற்று அசையவில்லை; கடல் ஆடவில்லை; கப்பலும் நகரவில்லை. அலையற்ற அமைதியானஏரியைப்போல் காணப்பட்ட கடலை நோக்கியவண்ணம் வந்தியத்தேவன் சிறிது நேரம் சும்மாயிருந்தான்.அவன்உள்ளத்தில் மட்டும் பேரலைகள் எழுந்து விழுந்தன. திடீரென்று இரு கரங்களையும் கடலை நோக்கி நீட்டிக்கொண்டு, 'ஓம் ஹ்ரீம் ஹ்ராம் வஷட்!' என்று கூவினான். மறுகணத்தில் கையில் கத்தியை எடுத்துக்கொண்டான்.சக்கராகாரமாக இரண்டு தடவை சுழற்றினான்.
"ஆம்! ஆம்! சமுத்திர ராஜன் பலி கேட்கிறான்! இரட்டைப் பலி கேட்கிறான். தூங்குகிறவர்களைத் தாக்கிக் கொல்லும் இரண்டு சூரர்களைப் பலியாகக் கொடு என்று கேட்கிறான்! பலிகொடுத்தால் தான் மேலே இந்த மரக்கலத்தைப் போக விடுவேன் என்கிறான். எங்கே! உடனே அப்படி இரண்டுபேரும் வந்து தலையை நீட்டுங்கள்! சீக்கிரம்!" என்று ஆர்ப்பரித்தான்.
ரவிதாஸன் வந்தியத்தேவனை வியப்புடன் உற்றுப் பார்த்தான். "ஹா! ஹா! ஹா!" என்ற மறுபடியும்பேய் சிரிப்பது போல் சிரித்தான். "தம்பி! இது என்ன விளையாட்டு?" என்றான்.
"அண்ணன்மார்களே! இது விளையாட்டு அல்ல; வினை! சற்று முன் நான் கீழே கட்டப்பட்டுக் கிடந்தபோது சிறிது தூங்கிப் போனேன். அப்போது கனவு கண்டேன். கடலையும் வானத்தையும் ஒன்றுசேர்த்த பூதம் போன்ற நீல நிற உருவம் ஒன்று என் முன்னால் நின்றது. ஏதோ சொல்லியது. அது என்னவென்று அப்போது புரியவில்லை; இப்போதுபுரிந்தது! மந்திர தந்திரங்களில் தேர்ந்த காளி பகதர்கள் இரண்டு பேருடைய உயிர்ப் பலி வேண்டும் என்றுசமுத்திர ராஜன் கோருகிறான்.கொடுக்காவிட்டால் இந்தக் கப்பலை மேலே போக விடமுடியாது என்றும்சொல்லுகிறான். ஆறு முரட்டு அராபியர்களின் உயிர்ப் பலியினால் அவன் திருப்தி அடையவில்லை. வாருங்கள்! சீக்கிரம்!" என்று கூறி, வந்தியத்தேவன் கையில் பிடித்த கத்தியை வானை நோக்கிஉயர்த்தினான்.
ரவிதாஸனும், தேவராளனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ரவிதாஸனும்,"தம்பி! கதை கட்டுவதில் உன்னைப் போன்ற கெட்டிக்காரனை நான் பார்த்ததேயில்லை!" என்றான்.
வந்தியத்தேவன், "ஓ! நான் சொல்லுவதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? கதை கட்டுகிறேனா? சமுத்திரராஜனே இந்த மூடர்களுக்கு நீயே மறுமொழி சொல்!" என்று கூவினான். அவன் அவ்வாறு கூவிய குரல்சமுத்திர ராஜனுடைய காதிலே கேட்பது போலும். அதற்கு மறுமொழி கூறவும் சமுத்திரம் ராஜன்விரும்பினான் போலும்!
கடலில் அப்போது ஒரு விந்தையான காட்சி தென்பட்டது. கண்ணுக் கெட்டிய தூரம் நாலுதிசைகளிலும் கடல் ஒரு சிலிர்ப்புச் சிலிர்த்தது. சிறிய சிறிய சின்னஞ் சிறிய அலைகள்ஆயிரமாயிரம் எழுந்து விழுந்தன. இது ஒரு நிமிரு நேரந்தான். அடுத்த நிமிருத்தில் அவ்வளவு அலைகளும்வெள்ளிய நுரையின் நுண் துளிகளாக மாறின. விரிந்து பரந்த கடற் பிரதேசமெங்கும் அந்த வெண்நுரைத்துளிகள் துள்ளி விளையாடின. விசாலமான பசும்புல் தரையில் கோடி கோடி கோடித் தும்பை மலர்களைஇளங்காற்றில் உருண்டு உருண்டு உருண்டு போய்க் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்! அவ்வாறு இருந்தது அச்சமயம்கடலின் காட்சி!
ஆம்; இலேசான இளங்காற்று, - இனிய குளிர்ந்த காற்று - அந்த மரக்கலத்தையும் ஒரு கணம்தழுவிக்கொண்டு அப்பால் சென்றது. கப்பலில் ஒரு சிலிர்ப்புச் சிலிர்த்தது. வெப்பத்தினால் வறண்டிருந்தவந்தியத்தேவனுடைய உடலும் சிலிர்ழூத்தது. ரவிதாஸனும், தேவராளனும் 'ஹா ஹா ஹா!' என்றுசிரித்தார்கள்!
"தம்பி! சமுத்திர ராஜனே உன் கேள்விக்கு மறுமொழி சொல்லிவிட்டான்! நாங்கள்எங்களைப் பலி கொடுக்க ஆயத்தமாக வேண்டியதுதான்!" என்றான் ரவிதாஸன்.
வந்தியத்தேவன் உள்ளம் கலக்கமுற்று. கடலிலே ஏற்பட்ட அந்தச் சிலு சிலுப்பும் உடனே ஏற்பட்டமாறுதலும் அவனைத் திகைக்கச் செய்திருந்தன. ஆகா! இது என்ன? அவ்வளவு ஆயிரமாயிரம் சிறிய அலைகளும்கோடானு கோடி வெண் நுரைத்துளிகளும் எங்கே போயின? மாயமாய்ப் போய் விட்டனவே? மறுபடியும் கடல்அமைதியுற்றுப் பச்சை நிறத்தகடு போல் காணப்படுகின்றதே! சற்று முன் கண்ட காட்சி உண்மையாகநிகழ்ந்ததா? அல்லது வெறும் பிரமையா? ஒருவேளை இந்த மந்திரவாதி ரவிதாஸனின் மந்திரசக்தியாகத்தான் இருக்குமோ!
"அதோ பார்த்தாயா? தம்பி! கடல் கூறியதை வானமும் ஆமோதிக்கிறது!" என்று ரவிதாஸன்தென்மேற்குத் திசையைச் சுட்டிக் காட்டினான். அவன் காட்டிய திசையில் - பச்சைக் கடலும் நீல வானமும்ஒன்று சேரும் மூலையில், - ஒரு சின்னஞ் சிறு கரியமேகத் துணுக்கு ஒரு சாண் உயரம் எழுந்து நின்றது. அந்தக்கரிய மேகத் துணுக்கின் உச்சிப் பகுதி செக்கச் செவேலென்று இரத்தச் சிகப்பு வர்ணத்துடன் திகழ்ந்தது. சாதாரண நாட்களில் இந்தத் தோற்றத்தை வந்தியத்தேவன் கவனித்திருக்கவே மாட்டான். கடலும் வானும்சேரும் மூலையில் மேகத்திரள் காணப்படுவது ஓர் ஆச்சரியமா, என்ன? இல்லைதான்! ஆயினும் அந்தச் சிறியதோற்றமும் அந்த வேளையில் நம் கதாநாயகனுடைய மனத்தைச் சிறிது கலக்கி விட்டது.
மறு கணத்தில் வந்தியத்தேவன் சமாளித்துக் கொண்டான். இந்த மந்திரவாதியின் வலையில் நாம்விழுந்து விடக்கூடாது. என்று மனத்திற்குள் உறுதி செய்து கொண்டான். ரவிதாஸன் ஒரு தடவையும்தேவராளனை ஒரு தடவையும் விழித்துப்பார்த்து,
"அப்படியானால் ஏன் தாமதம்? வாருங்கள்!" என்று சொல்லிக் கத்தியை வீசினான்.
"அப்பனே! நாங்கள் பலியாவதற்கு முன்னால் எங்கள் குலதெய்வத்தைப் பிரார்த்தனைசெய்ய விரும்புகிறோம். அரை நாழிகை அவகாசம் கொடு!" என்றான் ரவிதாசன்.
"சரி! பிரார்த்தனையைச் சொல்லி விட்டு உடனே வாருங்கள். உங்கள் தந்திர மந்திரம்ஒன்றையும் என்னிடம் காட்டவேண்டாம். காட்டினாலும் பலிக்காது!" என்றான் வந்தியத்தேவன்.
"இதோ வந்துவிடுகிறோம். எங்களுடைய ஆயுதத்தையும் இங்கேயே போட்டுவிட்டுப் போகிறோம்,பார்!" என்றான் ரவிதாஸன். அப்படியே இருவரும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அம்மரக்கலத்தின்இன்னொரு புறத்துக்குச் சென்றார்கள். அந்த அரை நாழிகை, அச்சமயம் வந்தியத்தேவனுக்கும்தேவையாயிருந்தது. கடலிலும் வானிலும் ஏற்பட்ட தோற்றங்களினால் விளக்கமில்லாத கலக்கம் அவனுடையஉள்ளத்தில் எழுந்து அவன் உடம்பையும் சிறிது தளரச் செய்திருந்தது.அவசியம் நேர்ந்தால் ஒரே கத்திவீச்சில் அந்த கிராதகர்கள் இருவரையும் தீர்த்துக்கட்ட அவன் முடிவு செய்திருந்தான். ஆனால் அதற்கு வேண்டியபலம் தன் கையில் அச்சமயம் இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டிருந்தது. ஆகையால் மனத்தைத்திடப்படுத்திக்கொண்டு கையிலும் பூரண பலத்தை வருவித்துக் கொள்ளச் சிறிது அவகாசம் அவனுக்குவேண்டியிருந்தது.
தென்மேற்கு மூலையில் கவனம் மறுபடியும் தற்செயலாகச் சென்றது. சற்றுமுன்னால் சாண் உயரம்தோன்றிய மேகத்திரள் இப்போது முழு உயரமாக வளர்ந்திருந்தது. உச்சியில் இரத்தச் சிகப்பு நிறம்சிறிது மங்கியிருந்தது. மேகத்திரள் மேலும் மேலும் உயர்ந்து வருவதாகத் தோன்றியது.
முதலாவது சிலு சிலுப்புடன் நின்று விட்டிருந்த காற்று மறுபடியும் நிதானமாக வரத்தொடங்கியது. கடலிலும் கலக்கம் காணபட்டது. சிறிய சிறிய அலைகள் நடனமாடத் தொடங்கியிருந்தன. மேகத்திரள்மேலும் மேலும் வானில் உயர்ந்து வந்து கொண்டிருந்தது. காற்றின் வேகமும் அதிகரித்து வருவதாகத்தோன்றியது. கப்பல் இலேசாக அசைய ஆரம்பித்தது.
காற்றின் ரீங்காரத்துக்கும் அலைகளின் சலசலப்புக்கும் இடையில், அது என்ன சத்தம்? கடலில்ஏதோ விழுந்தது போல் சத்தம் கேட்டதே! வந்தியத்தேவன் பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். ரவிதாசனையும் தேவராளனையும் காணவில்லை. அதில் அதிசயமும் இல்லை. கப்பலின் மறுப்பக்கத்திலேஅவர்கள் இருப்பார்கள். பாய்மரங்களும் கப்பலின் மையமேடையும் அவர்களை மறைத்திருக்கின்றன.
ஆ! இது என்ன? துடுப்புகளினால் படகு தள்ளும் சத்தம் அல்லவா கேட்கிறது?.. வந்தியத்தேவன்உடனே ஓடிச் சென்று கப்பலின் மறுபக்கத்தை அடைந்தான்.அவன் அங்கே கண்ட காட்சி உண்மையில் அவனைத்திடுக்கிடச் செய்தது. அப்படி நடக்கக் கூடும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.தன்னைச்சமரசப்படுத்துவதற்காக அவர்கள் கலந்து யோசனை செய்யப் போயிருக்கிறார்கள் என்றே நினைத்தான். ஆனால்அவர்கள் கப்பலின் மறுபக்கத்தில் சேர்த்துக் கட்டியிருந்த சிறு படகை அறுத்துவிட்டுக் கடலிலே, இறங்கிஅதில் ஏறிக்கொண்டிருந்தார்கள்! துடுப்பு வலித்துப் படகைத் தள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள்!
வந்தியத்தேவனைப் பார்த்ததும் ரவிதாஸன் சிரித்தான்."தம்பி! சமுத்திர ராஜனுக்குப்பலியாக எங்களுக்கு விருப்பம் இல்லை.தெரிகிறதா?" என்றான்.
வந்தியத்தேவன் ஒரு நொடியில் தன் நிலையை உணர்ந்தான் அந்தப் பெரிய மரக்கலத்தில் தன்னைத் தனியாக விட்டுவிட்டு, அவர்கள் போகிறார்கள். கப்பல் ஓட்டும் கலையைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது. கடலில் எந்த இடத்தில் கப்பல் நிற்கிறது, எந்தத் திசையாகப் போனால் எங்கே போய்ச்சேரலாம் என்பதொன்றும் அவனுக்குத்தெரியாது. அப்படிப்பட்ட அநாதரவான நிலையில் அவனை விட்டுவிட்டு அவர்கள் போகிறார்கள்.
"பாவிகளே! என்னையும் அழைத்துக்கொண்டு போகக் கூடாதா?" என்று கேட்டான்.
"தம்பி! சமுத்திர ராஜனுக்கு ஒரு பலிகூட இல்லாமற் போகலாமா?" என்றான் ரவிதாசன். படகு கப்பலை விட்டுஅகன்று போய்க்கொண்டேயிருந்தது.
'கடலில் குதித்துப் படகைப் போய்ப் பிடிக்கலாமா?' என்று வந்தியத்தேவன் ஒரு கணம்நினைத்தான். உடனே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். அவனுக்கோ நன்றாக நீந்தத் தெரியாது. கப்பலிலிருந்து குதிப்பதற்கே மனம் திடப்படாது. அப்படிக் குதித்துத் தட்டுத் தடுமாறிச் சென்று படகைப்பிடித்தாலும் அந்தக் கிராதகர்கள் என்ன செய்வார்களோ, என்னமோ? தன்னிடம் அவர்களுடைய இரகசியத்தைவௌியிட்டு விட்டார்கள்! தான் அவர்களுடன் ஒருநாளும் சேரப் போவதில்லையென்பதையும் தெரிந்துகொண்டார்கள். படகைப் பிடிக்கப் போகும் சமயத்தில் அவர்கள் தன்னைத் துடுப்பினால் அடித்துக் கொல்லப்பார்க்கலாம். தான் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டே படகில் உள்ளவர்களுடன் சண்டை போட முடியாதல்லவா?
'போகட்டும்! போய்த் தொலையட்டும்! அந்தச் சண்டாளக் கொலைக்காரர்களுடன் ஒரு படகிலேஇருப்பதைக் காட்டிலும் இந்தப் பெரிய கப்பலில் தன்னந்தனியாக இருப்பதே மேல்! இதற்கு முன்னால் எத்தனையோசங்கடங்களிலிருந்து கடவுளின் கிருபையினால்தான் தப்பிப் பிழைக்கவில்லையா? இந்த அபாயத்திலிருந்துதப்புவதற்கும் கடவுள் ஏதேனும் வழி காட்டுவார்! பாவிகள் போகட்டும்...
ஆனால் அவர்களை உயிருடன் போகவிட்டது சரியா? அவர்கள் எங்கே போய்க் கரை ஏறுவார்களோ?இன்னும் என்னென்ன சூழ்ச்சிகளையும் கோர கிருத்யங்களையும் செய்வார்களோ? கடவுள் இருக்கிறார், நாம் என்னசெய்ய முடியும்? எப்படியாவது இளவரசருடன் மறுமுறை சேர்ந்து விட்டால் போதும்! இருந்தாலும் அவர் இப்படிஎன்னைக் கைவிட்டிருக்கக்கூடாது! பூங்குழலியுடன் என்னையும் யானை மீது ஏற்றி அழைத்துப் போயிருக்கலாம். மறுபடியும் அவரைச் சந்திக்க நேர்ந்தால், கட்டாயம் பலமாகச் சண்டை பிடிக்க வேண்டும். "உங்கள் பழமையானசோழ குலத்தின் சிநேகதர்மம் இதுதானா?" என்று கேட்க வேண்டும். ஆனால் அப்படிக் கேட்கும் சந்தர்ப்பம்வரப்போகிறதா?..இளவரசரை மீண்டும் பார்க்கப் போகிறோமா?... ஏன் பார்க்க முடியாது? நான்இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டதைச் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது செய்யாமலா இருப்பார்கள்? இளவரசரை அவர்கள் சந்தித்திருந்தால் கட்டாயம்சொல்லியிருப்பார்கள் அல்லவா?'
இப்படி வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டு நின்ற நேரத்தில் படகு கடலில் வெகுதூரம்போய்விட்டது என்பதைக் கவனித்தான். படகு அவ்வளவு வேகமாகச் சென்றது. எப்படி? படகு மட்டும்போகவில்லை; தான் ஏறியிருந்த கப்பலும் இலேசாக அசைந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனாலேதான்கப்பலுக்கும் படகுக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் அவ்வளவு தூரம் ஏற்பட்டுவிட்டது! கடலில் அலைகள் பெரிதாகிக்கொண்டு வருவதையும் வந்தியத்தேவன் பார்த்தான். அது மட்டுந்தானா? இது என்ன? பட்டப்பகலில் திடீரென்றுஒரு பக்கம் இருண்டு வருகிறதே!
தென்மேற்குத் திசையை வந்தியத்தேவன் நோக்கினான். சற்று முன்னால் முழ உயரம் தெரிந்தமேகம் அதற்குள் பிரம்மாண்டமாக வளர்ந்து படர்ந்து மேற்கு வானத்தைப் பெரும்பாலும் மறைத்து விட்டதைக்கண்டான்.இன்னும் அம்மேகங்கள் திட்டுத்திட்டாகத் திரண்டு புரண்டு வானத்தில் வெகு வேகமாக மேலேறிவந்தன. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேற்கு வானத்தில் பாதி தூரம் இறங்கியிருந்த சூரியனைமறைத்து விட்டன. பிறகு மேற்குத் திசையும் தெற்குத்திசையும் மேலும் இருண்டு வந்தன. வானத்தின் கரியமேகங்கள் கடலிலும் பிரதிபலித்துக் கடல்நீரையும் கரிய மை நிறமாகச் செய்தன. கடல் எங்கேமுடிகிறது. வானம் எங்கே தொடங்குகிறது என்று கண்டு பிடிக்க முடியாமல் கடலும் வானமும் ஒரே கன்னங்கரியஇருள்நிறம் பெற்றிருந்தன.
மேகத்திரள்கள் மேலும் புரண்டு உருண்டு வந்தியத்தேவனுடைய தலைக்கு மேலே வந்தன. பிறகு கீழ்த்திசையிலும் இறங்கத் தொடங்கின. படகு சென்ற திசையை வந்தியத்தேவன் நோக்கினான். படகு இருந்தஇடமே தெரியவில்லை. அவனுடைய பார்வையின் எல்லைக்கு அப்பால் போய்விட்டது போலும்! காற்றின்மெல்லிய ரீங்காரம் 'ஹோ' என்ற பெரும் இரைச்சலாக மாறிவிட்டது.
அத்துடன், நிமிஷத்துக்கு நிமிஷம் பெரிதாகி வந்த அலைகளின் இரைச்சலும் சேர்ந்தது. கப்பலில் விரித்திருந்த பாய்கள் சடபடவென்று அடித்துக் கொண்டன. மரங்களும் கட்டைகளும் ஒன்றோடொன்றுஉராய்ந்து ஆயிரம் குடுமிக் கதவுகளைக் திறந்து மூடும் சத்தத்தை உண்டாக்கின. பாய்மரங்களை வந்தியத்தேவன்அண்ணாந்து பார்த்தான். அவற்றின் நிலையிலிருந்து கப்பல் ஒரு திசையாகப் போகாமல் சுழன்று சுழன்றுவருகிறது என்று தெரிந்து கொண்டான்.
'சுழிக்காற்று' என்று அடிக்கடி சொன்னார்களே! அந்தச் சுழிக்காற்றுதான் அடிக்கப்போகிறதுபோலும்! சுழிக்காற்று அடிக்கும் போது பாய் மரங்களிலிருந்து பாய்களைச் சுழற்றிச் சுற்றி வைக்க வேண்டும்என்று வந்தியத்தேவனுடைய அறிவுக்குப் புலப்பட்டது. ஆனால் அவன் ஒருவனால் அது எப்படி முடியும்? பத்துப் பேர்சேர்ந்து செய்ய வேண்டிய காரியம் அல்லவா? பத்துப்பேர் இல்லாவிட்டாலும் நாலு பேராவது வேண்டும். ஒருவன்தனியாக என்ன செய்வது? கடவுள் விட்டவழி விடுகிறார். கப்பல் அடைந்த கதியை அடைகிறது என்று சும்மாஇருக்க வேண்டியதுதான்!
கப்பல் அடையப்போகிற கதி என்னவென்று அவனுக்குச் சீக்கிரத்திலேயே தெரிந்து போயிற்று. அப்படியும் இப்படியும் சிறிது நேரம் அலைப் புண்டிருந்து பிறகு கடலில் முழுகிப்போக வேண்டியதுதான்!முழுகுவதற்கு முன்னால் சுக்குச் சுக்காக உடைந்து போனாலும் போகும்! கப்பலின் கதி எப்படியானாலும், தன்னுடையகதியைப் பற்றிச் சந்தேகமில்லை!
நடுக்கடலில் மரணம்! அந்தக் கும்பகோணத்துச் சோதிடன் இதைப்பற்றி ஒரு வார்த்தையும்சொல்லவில்லை. பார்! சோதிடனாம் சோதிடன்! அவனை மறுபடி பார்க்க நேர்ந்தால்... பைத்தியக்காரத்தனம்! அவனை மறுபடி பார்ப்பது ஏது?
திடீரென்று வந்தியத்தேவன் தோளில் கெட்டியான பொருள் ஏதோ விழுந்தது. சடபடவென்று கப்பல்முழுவதும் சிறிய சிறிய கூழாங் கற்கள் விழுந்தன. அந்தக் கூழாங் கற்கள் எப்படிப் பளிங்குபோல்பிரகாசிக்கின்றன! வானத்திலிருந்து இவை எப்படி விழுகின்றன!
இன்னும் இரண்டு மூன்று கற்கள் அவன் தலையிலும் முதுகிலும் தோள்களிலும் விழுந்தன. அவை விழுந்தஇடத்தில் முதலில் வலி; பிறகு ஒரு குளிர்ச்சி. கப்பலில் விழுந்த கற்களைப் பார்த்தால், ஆ! அவைஉருகிக் கரைந்து போய் கொண்டிருக்கின்றனவே? ஆ! அவை உருகிக் கரைந்து போய் கொண்டிருக்கின்றனவே?ஆம்; இதுபனிக்கட்டி மழை; அதுவரை வந்தியத்தேவன் அத்தகைய மழையைப் பார்த்ததுமில்லை;அநுபவித்ததுமில்லை.மடிவதற்கு முன்னால் இந்த அற்புதத்தைப் பார்க்க முடிந்ததே என்ற குதூகலம் அவன்உள்ளத்தில் தோன்றியது.
கப்பல் தளத்தில் உட்கார்ந்து, கரைந்து கொண்டிருந்த பனிக்கட்டிக் கற்களைத் தொட்டுப் பார்த்துமகிழ்ந்தான். அப்பா என்ன சிலிர்ப்பு! தொடும்போது தீயைத் தொடுவதுபோல் அல்லவா இருக்கிறது? ஆனால்தீ தோலைச் சுட்டுத் தீய்ப்பது போல் அது செய்யவில்லை. விரைவில் சூடு குளிர்ச்சியாகி விடுகிறது. கல் மழை எதிர்பாராமல் வந்தது போலவே சட்டென்று நின்றது. பெய்த நேரம் அரைக்கால் நாழிகை கூடஇராது.
பிறகு சாதாரண மழை பெய்யத் தொடங்கியது. மழை ஜலம் கப்பலில் விழுந்து சிதறி ஓடிக்கடலில் விழுந்துவிடுவதை வந்தியத்தேவன் கவனித்தான். சோழ நாட்டு மரக்கலத் தச்சர்களின்கெட்டிக்காரத்தனத்தை வியந்தான். எத்தனை மழை பெய்தாலும் எத்தனை பெரிய அலைகள் மோதிக் கடல் ஜலம்கப்பலில் வந்தாலும், மீண்டும் கடலிலேயே தண்ணீர் போய் விழும்படியாக அக்கப்பல் அமைக்கப்பட்டிருந்தது. கப்பலின் கீழ்ப்பகுதி உடைந்து கடல்நீர் உள்ளே புகுந்தாலன்றி அதை மூழ்கடிக்க முடியாது!
இதைப் பார்த்ததும் அவனுக்குச் சிறிதுத் தைரியம் உண்டாயிற்று. உடனே ஒரு நினைவு வந்தது. தன்னைக் கட்டிப் போட்டிருந்த அறைக்கதவு திறந்திருந்தால் அதன் வழியாகத் தண்ணீர் உள்ளே புகுந்துவிடலாம். ஓடிப் போய்ப் பார்த்தான். அவன் நினைத்தபடி கதவு திறந்து காற்றில் அடித்துக் கொண்டிருந்தது. கதவைஇறுக்கிச் சாத்தித் தாளிட்டான்.
மேலே காற்றும் மழையும் பொறுக்க முடியாமற் போனால் அந்த அறைக்குள்ளே புகுந்துகூடத் தான்கதவைத் தாளிட்டுக் கொள்ளலாம். பிறகு கடவுள் விட்ட வழி விடுகிறார் என்று நிம்மதியாக இருக்கலாம்.இவ்வளவு பத்திரமான கப்பலை விட்டு அந்த முட்டாள்கள் இருவரும் படகில் ஏறிப்போய் விட்டதை நினைத்துவந்தியத்தேவன் அநுதாபப்பட்டான். ஆனால் அந்தப் படகில் அமைப்பும் விசித்திரமானது தான். எவ்வளவுகாற்று அடித்தாலும் மழை பெய்தாலும் அதை மூழ்க அடிக்க முடியாது. அப்படிப் படகு உடைந்து முழுகினாலும்பக்கத்தில் அதனோடு சேர்த்துக் கட்டியுள்ள கட்டை ஒன்று இருக்கிறது.அதைப் பிடித்துக்கொண்டு அந்தக் கொலைபாதகர்கள் தப்பிக் கரைசேர்ந்து விடுவார்கள்! அநேகமாகக் கோடிக் கரைக்குச் சமீபமாகப் போய்க்கரைஏறுவார்கள்.
கோடிக்கரையிலிருந்து வந்தியத்தேவனுடைய உள்ளம் பழையாறைக்குத் தாவியது. சக்கரவர்த்திதிருக்குமாரிக்குத் தனக்கு நேர்ந்த கதி எப்படித் தெரியப்போகிறது? அவள் இட்ட பணியை நிறைவேற்றும்முயற்சியிலே தான் நடுக்கடலில் முழுகியதை யார் அவளுக்குத் தெரிவிக்கப் போகிறார்கள்? கடல்தெரிவிக்குமா? காற்று சென்று சொல்லுமா? - கடவுளே! அந்த மாதரசியைச் சந்திப்பதற்கு முன்னாலேயேநான் இறந்து போயிருக்கக்கூடாதா? போர்க்களத்தில் வீரமரணம் எய்தியிருக்கக் கூடாதா? சொர்க்கபூமியைக் கண்ணால் பார்க்கச் செய்துவிட்டு உடனே அதல பாதாளத்தில் தள்ளுவது போல் அல்லவா இருக்கிறது!.
காற்றின் வேகம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடலின் கொந்தளிப்பு மிகுதியாகக்கொண்டிருந்தது. கப்பலின் பாய் மரங்கள் பேய் பிசாசுகளைப் போல் பயங்கரமான சப்தமிட்டுக் கொண்டுஆடின.
இருள் மேலும் மேலும் கரியதாகிக் கொண்டு வந்தது. இருட்டை விடக்கரியதான இருட்டு எப்படிஇருக்க முடியும்? அப்படியும் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. திடீரென்று வானத்தில் ஒரு மின்னல் தோன்றிஒரு மூலையிலிருந்து ஒரு மூலைவரை பாய்ந்தது. அதற்குப்பிறகு தோன்றிய இருட்டு இருளைவிடக்கரியதாயிருந்தது. மின்னலைத் தொடர்ந்து இடிமுழக்கம் கேட்டது; கப்பல் அதிர்ந்தது; கடல் அதிர்ந்தது;திசைகள் அதிர்ந்தன.
இன்னொரு மின்னல் அடிவானத்தில் இருளைக் கிழித்துக்கொண்டு புறப்பட்டது. அது மேலும் மேலும்நீண்டு, கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து, பற்பல ஒளிக்கோலங்கள் ஆகாசமெங்கும் போட்டு வானையும்கடலையும் ஜோதி மயமாகச் செய்துவிட்டு, அடுத்த கணத்தில் அடியோடு மறைந்தது. இடிமுழக்கம் தொடர்ந்தது.அம்மம்மா! அண்டகடாகங்கள் வெடித்து விழுகின்றன என்பதில் சந்தேகமில்லை. மேலும் மின்னல்கள்; இடிமுழக்கங்கள். 'இன்னும் வானம் பிளக்கவில்லையே; இது என்ன அதிசயம்!" என்று வந்தியத்தேவன்எண்ணமிட்டானோ, இல்லையோ, அந்தக் கணமே ஆகாசம் வெடித்துப் பிளந்தது. வெடித்த பிளப்பின் வழியாகப்பிரளய வெள்ளம் பொழிந்தது.
ஆம்; அதை மழை என்றே சொல்வதற்கில்லை. வான வௌியில் ஒரு கடல் குமுறிக் கொண்டிருந்தது.அது திடீரென்று தோன்றிய பிளவின் வழியாகக் கொட்டுவது போலவே இருந்தது.
கடல் அலைகள் ஆவேச தாண்டவமாடின. மின்னல் வௌிச்சத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் ஆடும் மலைச்சிகரங்கள் காட்சி அளித்தன. காற்றின் கும்மாளம் உச்சத்தை அடைந்தது. ஆடும் மலைச் சிகரங்களைஅப்படியே பெயர்த்து எடுத்து வாயு பகவான் வான வௌியில் விசிறி எறிந்து விளையாடினார். வந்தியத்தேவனுடைய கப்பல்மீதும் அந்த நீர்மலைகளில் சில வந்து மோதின.
மேலேயிருந்து மழை வெள்ளம் தொபு தொபுவென்று கொட்டியது; நாலா பக்கமிருந்தும் அலைமலைகள்வந்து மோதித்தாக்கின. விரித்த பாய்மரங்கள் மீது சுழற்காற்று தாக்கிப்படுத்திய பாட்டைச் சொல்லிமுடியாது.இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு அந்தச் சோழ நாட்டுத் தச்சர்கள் கட்டிய அதிசய மரக்கலம் சுழன்றுசுழன்று வந்து கொண்டிருந்தது.
ஆனால் எவ்வளவு நேரந்தான் சுழன்று கொண்டிருக்க முடியும்? எவ்வளவு நேரம் அந்த மாபெரும்பூதங்களின் தாக்குதலைக் கப்பலினால் சமாளிக்க முடியும்? - முடியாது, இந்த வினாடியோ, அடுத்தவினாடியோ, கப்பல் முழுக வேண்டியதுதான். அத்துடன் வந்தியத்தேவனும் முழுக வேண்டியதுதான்!
எனினும், அந்த எண்ணம் அவனுக்கு இப்போது சோர்வை அளிக்கவில்லை. அப்படித் தனக்குநேரப்போகும் மரணம் ஓர் அற்புதமான மரணம் என்று கருதினான். எழும்பிக் குதித்த அலைகளைப்போல் அவன்உள்ளமும் குதூகலத் தாண்டவம் ஆடத் தொடங்கியது. காற்றின் பேரிரைச்சல், அலைகளின் பேரொலி,இடிகளின் பெருமுழக்கம் இவற்றுடனே, வந்தியத்தேவனுடைய குரலும் சேர்ந்தது. "ஹா! ஹா ஹா!" என்றுவாய்விட்டுச் சிரித்தான். அந்தக் காட்சியையெல்லாம் நன்றாய்ப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவன் முன்ஜாக்கிரதையுடன் பாய் மரத்தின் அடித்தண்டுடன் சேர்த்துத் தன்னைக் கட்டிக் கொண்டிருந்தான். கப்பல்சுழன்றபோது பாய்மரமும் சுழன்றது; வந்தியத்தேவனும் சுழன்றான். இப்படி எத்தனை நேரம் கப்பலும் பாய்மரமும்வந்தியத்தேவனும் சுழன்று கொண்டிருந்தார்கள் என்று தெரியாது. பல யுகங்களாகவும் இருக்கலாம், சிலவினாடிகளாகவும் இருக்கலாம். காலதேச வர்த்தமான உணர்ச்சிகளையெல்லாம் கடந்த அமரநிலையைவந்தியத்தேவன் அப்போது அடைந்திருந்தான்.
காற்றின் வேகம் சிறிதும் குறைவதுபோலத் தோன்றியது. பிரளயமாகக் கொட்டிய மழை நின்றுவிட்டது.சிறு தூறல்கள் போட்டுக் கொண்டிருந்தன. மின்னலும் இடியும் நின்றுவிட்டது போலத் தோன்றியது. கடல் கன்னங்கரிய இருள் பிழம்பாகத் தோன்றியது.
வந்தியத்தேவன் சிறிது நேரத்துக்கு முன்னால் மின்னல்களின் ஒளி வீச்சைத் தாங்க முடியாமல்கண்களை மூடிக்கொண்டிருந்தான். இடிகளின் பெரு முழகத்தைக் கேட்க முடியாமல் காதுகளைத் தன் கைகளினால்இறுக்கிப் பொத்திக் கொண்டிருந்தான். இப்போது கண்ணைத்திறந்து பார்த்தான்; கைகளை அகற்றிக்காதுகளையும் திறந்துவிட்டான். 'ஆகா! இவ்வளவு பெரிய சுழிக்காற்று விபத்திலிருந்து நான்தப்பித்துக்கொண்டேனா! கடவுள் காப்பாற்றி விட்டாரா? மீண்டும் பழையாறை அரசிளங்குமரியை இந்தஜன்மத்தில் காணப்போகிறேனா? இளவரசரைச் சந்தித்து அளவளாவப் போகிறேனா?...'
'அதற்குள் அவசரப்படக்கூடாது. இந்தக் கப்பல் இப்போது எங்கே இருக்கிறதோ, யார் கண்டது? இதுபத்திரமாய்க் கரைசேரும் என்று எப்படிச் சொல்ல முடியும்? கப்பல் தப்பினாலும், நான் உயிரோடு தப்பிக்கரையேறுவேன் என்பது என்ன நிச்சயம்?' 'இன்னும் எத்தனை எத்தனை அபாயங்களை இருக்கின்றனவோ...?'
வந்தியத்தேவனுடைய மனத்தில் இந்தக் கேள்வி எழுந்ததும் அதற்குப் பதில் சொல்வதுபோல்வானத்தைக் கீறிக் கொண்டு ஒரு மின்னல் மின்னியது. அதன் பிரகாசம் அவன் கண்ணெதிரே நூறு சூரியனைக்கொண்டுவந்து நிறுத்தியது போலிருந்தது. இருட்டிலாவது கொஞ்சம் பார்க்கலாம்; அந்தப் பயங்கரப்பிரகாசத்தில் ஒன்றுமே பார்க்க முடியவில்லை. தன் கண்களையே அம்மின்னல் பறித்துவிட்டதோ என்றுவந்தியத்தேவன் அஞ்சினான். எரிச்சல் எடுத்த கணத்திலேயே அவன் செவிகளுக்கும் ஆபத்து வந்துவிட்டது. எத்தனையோ இடி முழக்கங்களை வந்தியத்தேவன் முன்னம் கேட்டிருக்கிறான்; இன்றைக்கும் எத்தனையோ கேட்டான். ஆனால் இப்போது இடித்த இடியைப் போல் - சே! அது இடியா? இந்திரனுடைய வஜ்ராயுதம் அவனுடைய காதின்வழியாகப் பிரவேசித்து மண்டைக்குள்ளேயே நுழைந்து தாக்கியது போலிருந்தது.
சற்று நேரம் வந்தியத்தேவன் கண்களையும் திறக்க முடியவில்லை; காதிலோ 'ஓய்' என்ற சப்தம்கேட்டுக்கொண்டிருந்தது. மூடியிருந்த கண்கள் ஏதோ சமீபத்தில் தலைக்கு மேலே புதிய வௌிச்சம்பரவியிருப்பதை உணர்ந்தான். காதிலும் 'ஓய்' சத்தத்துக்கு மத்தியில் வேறொரு விநோத சப்தம் கேட்டது.காட்டில் தீப்பற்றி எரியும்போது, மரங்களில் தீப்பிடிக்கும்போது, உண்டாகும் சப்தத்தைப் போல்தொனித்தது.
வந்தியத்தேவன் கண்ணைத் திறந்து பார்த்தான். அவன் இருந்த கப்பலின் பாய்மரம் உச்சியில்தீப்பற்றி எரிவதைக் கண்டான்.ஆகா! இப்போது புரிகிறது! அந்த மின்னல் ஏன் அவ்வளவுபிரகாசமாயிருந்தது. அந்த இடி ஏன் அவ்வளவு சத்தமாக ஒலித்தது என்று இப்போது விளங்குகிறது.
அந்தக் கப்பல் மேலேயோ அல்லது, வெகு சமீபத்திலோ இடி விழுந்திருக்கிறது! அதனால்பாய்மரத்தில் தீப்பிடித்திருக்கிறது! பஞ்ச பூதங்களில் இரண்டு பூதங்கள் அந்தச் சோழ நாட்டு மரக்கலத்தைத்தாக்கி அழிக்கப் பார்த்தன. நீரும், காற்றும் தோல்வியுற்றன. வருணனும், வாயுவும் சாதிக்க, முடியாகாரியத்தைக் சாதிக்க இப்போது அக்கினி பகவான் தோன்றியிருக்கிறார்!
பக்க தலைப்பு
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம்
உடைந்த படகு
இடி விழுந்ததினால் பாய்மரத்தின் உச்சியில் தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும் இனிஅம்மரக்கலம் தப்பிக்க முடியாது என்று வந்தியத்தேவன் நிச்சயமடைந்தான். எனவே, தானும் உயிரோடுதப்பிக்க முடியாது. வந்தியத்தேவனுக்கு அப்போதும் சிறிதும் மனக்கிலேசம் உண்டாகவில்லை. உற்சாகந்தான்மிகுந்தது. கலகலவென்று சிரித்தான். பாய்மரத்தோடு தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டான். நடுக்கடலில் தீயில் வெந்து சாகவேண்டியதில்லையல்லவா? அதைக் காட்டிலும் குளிர்ந்த நீரில்முழுகிக் கடலின் அடியில் சென்று அமைதியாக உயிர் விடுவது மேல் அல்லவா?
ஆயுளில் மிச்சமுள்ள சிறிது நேரத்தை வீணாக்க வந்தியத்தேவன் விரும்பவில்லை. தீப்பற்றிகப்பலின் வௌிச்சத்தில் சுற்றுமுற்றும் நன்றாகப் பார்த்துக் கொந்தளித்த கடலின் சௌந்தரியத்தை அநுபவிக்கவிரும்பினான். தன் உடல் சமாதி அடையப்போகும் இடத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லதல்லவா?இம்மாதிரி அகால மரணமடைந்தவர்கள், ஆவி உருவத்தில் இறந்த இடத்தைச்சுற்றி வந்து கொண்டிருப்பார்கள்என்று சொல்வார்களே? அம்மாதிரி தன் ஆவியும் இந்தக் கடலின் மேலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்குமோ!காற்றில் மிதக்குமோ? அலைகளின் மேலே உலாவுமோ? சுழற்காற்று அடிக்கும்போது தன் ஆவியும் சுற்றிச்சுற்றி வருமோ?
'ஆகா! எப்போதாவது ஒருநாள் இந்தக் கடலில் அரசிளங்குமரி, கப்பல் ஏறிப்போனாலும்போவாள். கப்பலை ஓட்டும் மாலுமிகள் "வந்தியத்தேவன் கப்பலோடு முழுகிய இடம் இதுதான்!" என்றுகாட்டுவார்கள் அவளுடைய வேல் விழிகளில் கண்ணீர் துளித்து அவளது முழுமதி முகத்தில் முத்து முத்தாகச்சிந்தும், ஆவி வடிவத்திலே அதை அருகிலிருந்து தான் பார்க்கும்படி நேர்ந்தால், அவளுடைய கண்ணீரைத்தன்னால் துடைக்க முடியுமா?...' கப்பல் ஒரு பேரலையின் சிகரத்தின் மேலே ஏறியது. பாய்மரத்தீவர்த்தி போட்ட வௌிச்சத்தில் சுற்றிலும் வெகுதூரம் தெரிந்தது. கரும் பளிங்கு நிறம் பெற்றுத்திகழ்ந்த கடல்நீரில் பாய்மரத் தீயின் ஒளி விழுந்த இடம் மட்டும் பொன் வெள்ளமாகத் திகழ்ந்தது. இந்தஅழகின் அற்புதத்தை வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்து முடிவதற்குள் அவனுடைய கண்ணையும் கவனத்தையும்வேறொன்று கவர்ந்தது.
சற்றுத்தூரத்தில் அவன் ஒரு மரக்கலத்தைப் பார்த்தான். அதில் புலிக்கொடி பறக்கக் கண்டான். 'கடவுளே! உன் விந்தைகளுக்கு எல்லையே இல்லை போலும்! - அந்த மரக்கலத்திலே வருகிறவர் இளவரசர்அருள்மொழி வர்மராகத் தான் இருக்கவேண்டும். தன்னைத் தேடிக் கொண்டுதான் அவர் வருகிறார்;' - என்றுஅவனுடைய உள்ளுணர்ச்சி கூறியது!
வந்தியத்தேவன் ஏறியிருந்த கப்பல் சிக்கிக்கொண்டு தத்தளித்த அதே சுழிக் காற்றில்பார்த்திபேந்திரனுடைய கப்பலும் அகப்பட்டுக் கொண்டது. ஆனால் இந்தக் கப்பலில் அச்சுழிக் காற்றின்தன்மையை அறிந்தவர்களும் கப்பலோட்டும் கலையில் வல்லவர்களுமான மாலுமிகள் இருந்தார்கள். பாய்மரங்களில் விரித்திருந்த பாய்களை அவர்கள் இறக்கிச் சுற்றி வைத்தார்கள். காற்றின் வேகம் முழுவதையும்கப்பல் எதிர்த்து நிற்பது அவசியமில்லாத வண்ணமாகக் கப்பலின் சுக்கானைப் பிடித்து இயக்கி வந்தார்கள். ஒரு நிமிஷம் கப்பல் அடியோடு சாய்ந்து, 'இதோ கவிழ்ந்து விட்டது' என்று தோன்றும்; மறு நிமிஷம்சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கும். மலை போன்ற அலைகள் அந்தக் கப்பலை எத்தனைதான் தாக்கியும்அதில் இணைக்கப்பட்டிருந்த மரங்களும் பலகைகளும் சிறிதேனும் பிளந்து கொடுக்க வேண்டுமே! கிடையவேகிடையாது! சமுத்திரராஜன் அந்தக் கப்பலைப் பந்து ஆடுவதுபோல் தூக்கி எறிந்து விளையாடினான். சுழிக்காற்று அக்கப்பலைப் பம்பரம் சுற்றுவதுபோலச் சுழற்றிச் சுழற்றி அலைத்தது. வானத்திலிருந்து வெள்ளம்பொழிந்து அந்தக் கப்பலைக் கடலில் அமுக்கி அழித்துவிடப் பார்த்தது. சோழநாட்டுத் தச்சுவேலைநிபுணர்கள் கட்டிய அக்கப்பலை, - தமிழகத்தின் புகழ்பெற்ற மாலுமிகள் செலுத்திய அக்கப்பலை - கடலும்மழையும் காற்றும் சேர்ந்து தாக்கியும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
"இதைக் காட்டிலும் கொடிய சுழிக்காற்றுகளையும் சண்டமாருதங்களையும் நான் பார்த்திருக்கிறேன்;சமாளித்திருக்கிறேன். ஆகையால் கவலைப்படத் தேவையில்லை!" என்று கலபதி கூறினான். ஆனால் அவன்பார்த்திபேந்திரனிடம் இளவரசரிடமும் வேறோர் அபாயத்தைப் பற்றித் தன் பயத்தை வௌியிட்டான்.
'கரிய மேகங்கள் திரண்டு வந்த வானை மூடி நாலாபுறமும் இருள் சூழச் செய்துவிட்டன. போதாதற்குச் சோனாமாரியாக மழையும் பெய்தது. கடலில் எழுந்த அலைகளோ வரிசை வரிசையான மலைத்தொடர்களைப்போல் கப்பலைச் சுற்றித் திரையிட்டு மறைத்தன. இந்த நிலையில் அவர்கள் எந்தக் கப்பலைத்தேடிச் சென்றார்களோ அது வெகு சமீபத்தில் வந்தாலும் பார்க்க முடியாது அந்தக் கப்பலும் இதைப் போலத்தான்சுற்றிச் சுழன்று தத்தளித்துக் கொண்டிருக்கும். கப்பல்கள் ஒன்றோடொன்று மோதினால் இரண்டும் சுக்கல்சுக்கலாகிப் போய்விடும். கப்பலில் உள்ளவர்களின் கதி அதோகதிதான்!" 'ஆகவே சுழிக்காற்றின்அபாயத்தைக் காட்டிலும் சுற்றிலும் ஒன்றும் பார்க்க முடியாமலிருப்பதுதான் அதிக அபாயம்' என்று அம்மரக்கலத்தலைவன் கூறினான்.
இது இளவரசருக்குத் தெரிந்த விஷயந்தான். ஆகவே அவர் அத்தனைக் காற்றிலும் மழையிலும்கப்பலின் ஓரமாக நின்று கொண்டு தன் கூரிய கண்களின் பார்வையை நாலாபுறமும் செலுத்திக் கொண்டிருந்தார்.மின்னல் மின்னிய போதெல்லாம் அவருடைய கண்கள் அதிவேகமாகச் சுழன்று சுற்றுப்புறமெங்கும் உற்றுப்பார்த்தன. அவருடைய உள்ளம் எப்படித் தத்தளித்துக் கொண்டிருந்தது என்பதைச் சொல்லி முடியாது. தன்அருமைத் தமக்கை அனுப்பிய தூதன் முரட்டு அராபியர்களிடமும், கொலைகார மந்திரவாதிகளிடமும் அகப்பட்டுக்கொண்டிருக்கிறான். அது போதாது என்று இந்தச் சுழிக்காற்று வேறு வந்து சேர்ந்தது. ஒருவேளை அவ்வீரவாலிபன் ஏறியுள்ள கப்பலைக் கண்டுபிடிக்க முடியாமலே போய்விடுமோ? கண்டுபிடித்தாலும், அவனை உயிரோடுகாண்பது சாத்தியமா? கலபதி அஞ்சுவதுபோல் அவன் ஏறியிருக்கும் கப்பல் மேல் நம் கப்பல் மோதி இரண்டும்கடலில் மூழ்கினால் வேடிக்கையாகத்தானிருக்கும்! ஆனால் தந்தையிடம் சொல்லவேண்டிய செய்தியைச் சொல்லுவதுயார்? பார்த்திபேந்திரனிடம் அந்தக் குடும்ப இரகசியத்தைக் கூறுவது இயலாத காரியம். கூறினால் அந்தப்பல்லவனுக்கு அது கேலியாயிருக்கும்; அதன் முக்கியத்துவத்தை அவன் உணரமாட்டான். இதுகாறும் இளவரசர் செய்யஎண்ணிய காரியம் எதிலும் தோல்வியடைந்ததில்லை. இப்போது தோல்வி ஏற்பட்டுவிடுமோ? - இல்லை,ஒருநாளும் இல்லை. பொன்னியின் செல்வனுக்குத் தீங்கு நேருவதையோ, தோல்வி ஏற்படுவதையோ சமுத்திரராஜன் பார்த்துக் கொண்டிருக்கமாட்டான்!
இருளையும் மழையையும் கிழித்துக்கொண்டு எல்லாத் திசைகளையும் பார்த்துக் கொண்டிருந்த இளவரசரும்அந்தப் பேரிடி முழக்கத்தைக் கேட்டார். அப்போது மின்னிய மின்னலுக்கு அவரும் கண்களைச் சிறிதுமூடிக்கொள்ள வேண்டியதாயிற்று. கண்ணைத் திறந்து பார்த்தபோது மின்னல் வௌிச்சமில்லாத வேறொருவௌிச்சத்தைக் கண்டார். சற்றுத் தூரத்தில் ஒரு கப்பல் விரித்த பாய்மரங்களுடன் பேயாடுவது போல்ஆடிக்கொண்டிருந்தது! அதன் பாய்மரத்தின் உச்சியில் தீப்பற்றி எரிந்தது! அந்தத் தீயின் வௌிச்சத்தில்இளவரசர் அதில் ஒரு மனிதன் பாய்மரத்தோடு சேர்த்து நிற்பதைக் கண்டார்! கடவுளே! இத்தகைய அற்புதமும்நடக்கக் கூடுமா? அவன் அந்த வீர இளைஞனாகிய வந்தியத்தேவன்தான்! அவன் மட்டும் ஏன் தனியாகநிற்கிறான்? மற்றவர்கள் என்ன ஆனார்கள்? அதைப் பற்றியெல்லாம் யோசிப்பதற்கு இப்போது நேரமில்லை. செய்யவேண்டியது இன்னதென்பதை ஒரு நொடிப் பொழுதில் இளவரசர் தீர்மானித்துக் கொண்டார்.
அவர் பார்த்த காட்சியைக் கப்பலில் இருந்த மற்றவர்கள் பலரும் பார்த்தார்கள். "அதோ!" என்றுஅவர்கள் ஏககாலத்தில் எழுப்பிய பெரிய கூச்சல் காற்றின் பயங்கரச் சப்தத்தையும் மீறிக்கொண்டு எழுந்தது. கப்பலோடு சேர்த்துக் கட்டியிருந்த படகண்டை போய் இளவரசர் நின்று கொண்டு, அருகில் நின்ற மாலுமிகளைப்பார்த்து, "உங்களில் யார் என்னுடன் வருவீர்கள்?" என்று உரத்த குரலில் கேட்டார். அவர் செய்யஉத்தேசித்த காரியம் இன்னதென்று ஊகித்தறிந்து மாலுமிகள் திகைத்தார்கள். ஆயினும் பலர் போட்டியிட்டுமுன்வந்தார்கள். பார்த்திபேந்திரனும், கலபதியும் வந்து தடுக்கப் பார்த்தார்கள்.
"இளவரசே! இது என்ன காரியம்! இந்தக் கொந்தளிக்கும் கடலில் படகு எப்படிச் செலுத்த முடியும்?எரிகின்ற கப்பலில் உள்ளவனை எப்படிக் காப்பாற்ற முடியும்? ஆனாலும் முயற்சி செய்து பார்க்கலாம். தாங்கள்போகவேண்டாம். போவதற்கு எங்களில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்" என்றான் பார்த்திபேந்திரன்.
"ஜாக்கிரதை! இச்சமயம் என்னைத் தடுக்கப் பார்க்கிறவர்களை நான் ஒரு நாளும் மன்னிக்கமுடியாது." என்று இராஜகம்பீரமான அதிகார தோரணையில் கூறினார் இளவரசர். அதே சமயத்தில் படகைஅவிழ்த்து விட்டார்."உங்களில் இரண்டு பேர் போதும்; வாருங்கள்!" என்றார்.
படகு கடலில் இறங்கியது. இளவரசர், அவர் குறிப்பிட்ட இருவரும் அதில் குதித்தார்கள்.மறுகணமே படகு கப்பலை விட்டு அகன்று சென்றது. அலைகளின்மேல் ஆவேசக்கூத்து ஆடியது. இளவரசரும் மற்றஇருவரும் துடுப்புகளைப் பலங்கொண்ட மட்டும் வலித்தார்கள். சிறிது சிறிதாகப் படகு எரிகின்ற கப்பலைஅணுகியது. இதற்குள் தீ உச்சியிலிருந்து பாதி பாய்மரம் வரையில் இறங்கிவிட்டிருந்தது. ஆனால்வந்தியத்தேவனோ அங்கே நின்று கொண்டிருந்தான். அவன் தீயின் வௌிச்சத்தில் கப்பலைப் பார்த்தான்;கப்பலிலிருந்து இறக்கப்பட்டு வந்த படகையும் பார்த்தான். அந்த அதிசயத்தில் தன்னை மறந்திருந்தான். தான் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவனுக்குத் தோன்றவில்லை.
"குதி கடலில் குதி!" என்று கத்தினார் இளவரசர். அவன் காதில் அது விழவில்லை. செயலற்ற பதுமையைப்போல் நின்று கொண்டிருந்தான். ஆயிற்று; இன்னும் சிறிது நேரம் தாமதித்தால் கப்பல்அடித்தளத்திற்கு நெருப்பு வந்துவிடும்; கப்பல் முழுகிவிடும். அப்புறம் அவனைக் காப்பாற்றுவது இயலாதகாரியமாகி விடும்.
என்ன செய்யவேண்டும் என்பதை மறுபடியும் இளவரசர் ஒரு நொடியில் முடிவு செய்தார். இத்தகையசந்தர்ப்பங்களுக்கென்று அந்த அபாயப் படகில் சேர்த்துக் கட்டியிருந்த நீளக்கயிற்றின் இன்னொரு நுனியைத்தமது இடுப்பில் சுற்றி இறுக்கிக் கட்டிக் கொண்டார். மாலுமிகள் இருவருக்கும் எச்சரிக்கை செய்துவிட்டுக்கடலில் குதித்தார்.இத்தனை நேரம் படகுடன் விளையாடிய அலைகள் இப்போது இளவரசருடன் விளையாடின. ஒரு கணம் அவரை வானத்துக்கு உயர்த்தின; மறுகணம் பாதாளத்தில் தள்ளின. எனினும் இளவரசர் திசையும்குறியும் தவறாமல் எரிகின்ற கப்பலை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தார்.
ஒரு பெரிய, மிகப் பெரிய அலை வந்தது! இளவரசர் மேலே அது விழுந்திருந்தால் அவரைஅமுக்கிக் கடலின் அடியில் கொண்டு போயிருக்கக் கூடும்! ஆனால் அது நல்ல அலை; இளவரசருக்கு ஏவல் செய்யவந்தது. அவரைத் தன் உச்சியில் வைத்துக் தூக்கிக்கொண்டு போய் எரிகின்ற கப்பலின் மேல் தளத்தில்எறிந்தது.
ஏற்கெனவே கட்டு அவிழ்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இளவரசரைப் பார்த்ததும், 'ஆ' என்றுஅலறி அவரை எடுப்பதற்காகத் தாவிக் குனிந்தான். இளவரசர் அவனுடைய கழுத்தை அப்படியே இறுக்கிக் கட்டிக்கொண்டார். அவன் காதுக்குள் "என்னைப் பிடித்துக்கொண்டு வா! விட்டு விடாதே!" என்றார். சொல்லிமுடிந்த தட்சணமே இருவரும் மறுபடியும் கடலில் மிதந்து அலைகளினால் மொத்துண்டார்கள். மாலுமிகள் துடுப்புத்தள்ளுவதை நிறுத்திக் கயிற்றைப் பிடித்து இழுக்கலானார்கள். இளவரசரும் அவரை உடும்புப் பிடியாகப்பிடித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனும் படகை அணுகினார்கள். படகைப்பிடித்து அதில் ஏறுவது எளியகாரியமில்லை. அலைகளுடன் போராடிக்கொண்டு வந்தியத்தேவனையும் தாங்கிக் கொண்டு படகில் ஏறுவதற்குமுயன்ற ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாக இருந்தது.
இதோ படகு கைக்கு அகப்படுவது போலிருக்கும்; அடுத்த கணம் எட்டாத தூரத்தில் போய்விடும். கடைசியாக, அதற்கும் ஒரு பெரிய அலை உதவி செய்தது. படகின் அருகில் உயரமாக எழுந்த அந்தப்பேரலையோடு அவர்களும் எழுந்தார்கள். மாலுமிகளின் உதவியுடன் படகில் குதித்தார்கள்.
"துடுப்பை வலியுங்கள்! வேகமாய் வலியுங்கள்!" என்றார் இளவரசர். ஏனெனில், எரிகின்றகப்பல் கடலில் முழுகும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்படி முழுகும்போது ஏற்படும் கொந்தளிப்பில்படகு கவிழ்ந்தாலும் கவிழ்ந்துவிடும். அது மட்டுமன்று; கப்பல் முழுகித் தீ அணைந்து விட்டால் பிறகுமற்றொரு கப்பலை அவர்கள் பிடிப்பது அசாத்தியமாகி விடலாம்.
ஆகா! அதோ கப்பல் முழுகத் தொடங்கிவிட்டது. கொழுந்துவிட்டு எரிந்த பாய்மரங்களுடனே அதுகடலில் முழுகிய காட்சிதான் என்ன பயங்கர சௌந்தர்யமாயிருந்தது! அதை அவர்களால் அதிகநேரம்அநுபவிக்க முடியவில்லை. இளவரசர் எதிர்பார்த்தது போலவே கடலில் ஒரு பெரிய கொந்தளிப்பு. வானளாவி மேலெழுந்த அலைகள்.
படகு என்னமோ அலைகளைச் சமாளித்துக் கொண்டது. ஆனால் எரிந்த கப்பல் மூழ்கியதும் சுற்றிலும்சூழ்ந்த இருளில் மற்றொரு கப்பல் இருந்த இடமே தெரியாமல் போயிற்று. திக்குத்திசை ஒன்றுமேதெரியவில்லை. படகும், கப்பலும் ஒன்றையொன்று நெருங்கிக்கொண்டிருக்கின்றனவோ, அகன்று போய்கொண்டிருக்கின்றனவோ, - அதைத் தெரிந்து கொள்ளவும் வழியில்லை. இரண்டிலும் அபாயம் உண்டு.
இருட்டில் கப்பல் இருக்குமிடம் தெரியாமல் அதை நெருங்கிச்சென்று முட்டிக்கொண்டால், படகு துகள்துகளாகும். விலகிப் போய்விட்டால், கேட்பானேன்? நடுக்கடலில், காரிருளில் அந்தச் சின்னஞ்சிறுபடகினால் என்ன செய்ய முடியும்? சமுத்திர ராஜனே! உன் காதலி பொன்னி நதி தந்த அருமைச் செல்வனைநீதான் காப்பாற்றவேண்டும்!
வாயு பகவானுடைய லீலைகள் வெகுவெகு அதிசயமானவை. அந்தப் பெரும் சுழிக்காற்று எவ்வளவுஅவசரமாக வந்ததோ அவ்வளவு அவசரமாகவே போய்விட்டது. போகும் வழியிலெல்லாம் கடலைப் படாதபாடுபடுத்திவிட்டுப் போய் விட்டது.
சுழிக்காற்று போய்விட்டது சரிதான்; ஆனால் அதனால் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு இலேசில்அடங்கிவிடாது. ஒரு இரவும், ஒரு பகலும் நீடித்திருந்தாலும் இருக்கும். அந்தக் கொந்தளிப்பின் வேகம்நெடுந்தூரம் பிரயாணம் செய்யும் கோடிக்கரையில் விஸ்தாரமான மணற் பிரதேசத்தையெல்லாம் கடல்ஏறிமூடிவிடும். நாகப்பட்டினத்தின் கடற்கரைமீது பேரலைகள் மோதி இடித்துக் தகர்க்கப் பார்க்கும். இன்னும்அக்கொந்தளிப்பு காங்கேசன்துறை - திரிகோண மலை வரையில் பரவும். மாதோட்டத்தையும்,இராமேசுரத்தையும் கூட ஒரு கை பார்த்துவிடும்.
இளவரசர் முதலியோர் ஏறியிருந்த படகு அலைகளால் மொத்துண்டு மிதந்து கொண்டேயிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் துடுப்பு வலிப்பதையும் நிறுத்தி விட்டார்கள். திக்கும் திசையும்தெரியாதபோது, கப்பல் எங்கே இருக்கிறதென்றும் தெரியாத போது, துடுப்பு வலித்து ஆவது என்ன? காற்றுஓய்ந்துவிட்டது; மழை ஓய்ந்துவிட்டது; இடியும் மின்னலும் நின்று விட்டன. ஆனால் அலைகளின் ஆங்காரம் மட்டும்சிறிதளவும் குன்றவில்லை.
படகு அந்த அலைகளில் தத்தளித்துக் கொண்டேயிருந்தது. சற்றும் எதிர்பாராத ஓர் அபாயம் அதைநெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதோ வந்துவிட்டது! எரிந்த கப்பல் முழுகிற்றல்லவா! அப்போதுமுழுதும் எரியாத ஒரு பாய்மரம் அதிலிருந்து பிரிந்தது. கடலில் அது மிதந்து மிதந்து படகுக்கு அருகில்வந்தது. இருட்டின் காரணமாக வெகு சமீபத்தில் வரும்வரையில் அதை ஒருவரும் பார்க்கவில்லை.
பார்த்தவுடனே, "துடுப்பு வலியுங்கள்! துடுப்பு வலியுங்கள்!" என்று இளவரசர் கூவினார். அவர்கூவி வாய் மூடுவதற்குள் அந்தப் பாய்மரம் படகின் அடிப்பகுதியில் இடித்தது. இடித்த வேகத்தில் படகு'படார்' என்று பிளந்தது. முதலில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது. பிறகு சிறிய சிறிய பலகைத்துண்டுகளாகப் பிளந்து சிதறியது. "நண்பா! பயப்படாதே! இந்தப் படகைக் காட்டிலும் அந்தப் பாய்மரம்பத்திரமானது. தாவி அதைப் பற்றிக்கொள்!" என்றார் இளவரசர்.
பக்க தலைப்பு
ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம்
அபய கீதம்
இளவரசர் அருள்மொழிவர்மர் பார்த்திபேந்திரனுடைய கப்பலுக்குப் போய்ச்சேரும் வரையில்,தொண்டைமான் நதியின் முகத்துவாரத்தில் நின்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கப்பலில் இளவரசர்ஏறிக்கொண்ட உடனே அவரை ஏற்றிச் சென்ற படகு திரும்பியது. சேநாதிபதி பூதி விக்கிரமகேசரிகுதூகலம் அடைந்திருந்தார் என்று அவருடைய முகக்குறி காட்டியது. "ஆண்டவன் நம் கட்சியில் இருக்கிறார்;சந்தேகமில்லை. இளவரசரின் திருமேனியில் உள்ள சங்குசக்கரச் சின்னங்கள் பழுதாகப் போய்விடுமா?பார்த்திபேந்திரன் அவரைப் பத்திரமாகக் காஞ்சி கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவான். நாமும் நம்படைகளுடன் தஞ்சையை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்!" என்று தமக்குத்தாமே சொல்லுகிறவர் போல்கொடும்பாளூர் வேளார் உரத்துச் சொல்லிக் கொண்டார்.
உடனே பக்கத்திலிருந்த ஆழ்வார்க்கடியானைப் பார்த்தார். "வைஷ்ணவனே! நீ இங்குநிற்கிறாயா? அதனால் பாதகம் இல்லை. முதன் மந்திரியின் அந்தரங்க ஒற்றனுக்குத் தெரியாதது என்னஇருக்கிறது? சரி, நீ என்ன செய்யப் போகிறாய்? மாதோட்டத்துக்கு என்னுடன் வரப் போகிறாயா?" என்றுகேட்டார்.
"இல்லை, ஐயா! முதன் மந்திரி எனக்கு இட்ட இன்னும் ஒரு வேலை நான்செய்யவேண்டியிருக்கிறது..."
"அது என்ன, அப்பா?"
ஆழ்வார்க்கடியான் சற்றுத் தூரத்தில் ஊமைராணியும் பூங்குழலியும் நின்ற இடத்தை நோக்கினான்.
"அந்தப் பெண்களைப் பற்றிய விஷயமா?" என்றார் சேநாதிபதி.
"அவர்களில் ஒருவரைப் பற்றியதுதான்; இலங்கையில் இத்தகைய ஊமை ஸ்திரீ ஒருத்தியைப்பார்க்க நேர்ந்தால் அவளை எப்படியாவது தஞ்சாவூருக்கு அழைத்து வரும்படி முதன் மந்திரிகட்டளையிட்டிருக்கிறார்."
"நல்ல வேலை உனக்குக் கொடுத்தார். அதைக் காட்டிலும் இலங்கைக் கடல்களில் அடிக்கும் புயற்காற்றுகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு வரும்படி உனக்குச் சொல்லியிருக்கலாம்.அந்த ஊமை ஸ்திரீயைப்பிடித்துக்கொண்டு போவது அவ்வளவு சுலபமாயிருக்கும். அவள் யாரோ தெரியவில்லை. நம் இளவரசரிடம்மிக்க அபிமானம் வைத்திருக்கிறாள். உனக்கு ஏதாவது அவளைப்பற்றித் தெரியுமா?"
"அவள் ஊமை என்பதும், பிறவிச்செவிடு என்பதும் தெரியும். அவளை அழைத்துச் செல்வதைக்காட்டிலும் புயற்காற்றைக் கூண்டில் அடைத்துக்கொண்டு போவது சுலபம் என்றும் தெரியும். ஆயினும் என் எஜமானர்சொல்லியிருக்கிற படியால் ஒரு பிரயத்தனம் செய்து பார்ப்பேன்."
"இந்த ஓடக்காரப் பெண்ணுக்கும் அவளுக்கும்கூடச் சிநேகம் போலிருக்கிறது. இரண்டு பேரும் ஜாடைகளினால் பேசிக்கொள்வதைப் பார்! அந்தப் பெண்ணை இங்கே கூப்பிடு! அவளுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும்!..."
ஆழ்வார்க்கடியான் அந்தப் பெண்களின் அருகில் சென்று பூங்குழலியிடம் சேநாதிபதி அழைப்பதைக்கூறினான். பூங்குழலி ஊமை ராணியை விட்டுப் பிரிந்து சேநாதிபதியை அணுகினாள். "இதோ பார்,பெண்ணே! நீ வெகு புத்திசாலி! நல்ல சமயத்தில் வந்து, முக்கியமான செய்தி சொன்னாய். சோழகுலத்துக்குப் பெரிய உதவி செய்தாய். இதை நான் என்றும் மறக்க மாட்டேன். தக்க சமயத்தில் தகுந்தபரிசில் கொடுப்பேன்" என்றார்.
பூங்குழலி, "வந்தனம், ஐயா! எனக்குப் பரிசில் எதுவும் தேவையில்லை" என்று பணிவுடன்சொன்னாள்.
"தேவையில்லை என்றால் யார் விடுகிறார்கள்? இந்தக் குழப்பமெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும். பிறகு...பிறகு சோழ நாட்டுச் சைன்யத்தில் வீராதி வீரனாகப் பார்த்து உனக்குத் திருமணம் செய்துவைக்கிறேன். உனக்கு வாய்க்கின்ற கணவன் அற்ப சொற்பமானவனாய் இருந்தால் போதாது. பீமசேனனாகஇருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவனைக் கண்ணிலே விரலைக் கொடுத்து ஆட்டி வைத்துவிட மாட்டாயா?" என்றுசேநாதிபதி கூறிப் புன்னகை புரிந்தார்.
பூங்குழலி தரையைப் பார்த்தபடி நின்றாள். அவள் உள்ளத்தில் கோபம் பொங்கியது. ஆனால்அதை அச்சமயம் காட்டிகொள்ள விரும்பவில்லை. இந்த முரட்டுக் கிழவரிடம் சண்டை பிடிப்பதில் பயன் என்ன?கோபத்தை அடக்கிக் கொள்ள முயன்றான்.
"ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள், இளவரசருக்கு ஏதோ உதவி செய்துவிட்டபடியால், அவர் பேரில் பாத்தியதை கொண்டாடலாம் என்று எண்ணாதே! கடலில் வலை போட்டு மீன்பிடிப்பதோடு நிறுத்திக்கொள்! இளவரசரை வலை போட்டுப் பிடிக்கலாம் என்று ஆசைப்படாதே! ஜாக்கிரதை,பெண்ணே! இனி அவர் அருகில் நெருங்கினாலும் உனக்கு ஆபத்து வரும்!" என்றார் சேநாதிபதி.
அவருடைய குரல் அப்போது மிகக் கடுமையாக இருந்தது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் காய்ச்சிய ஈயத்துளியைவிடுவது போல் பூங்குழலியின் காதில் விழுந்தது. அந்தக் கிழவனாருக்குப் பதிலுக்குப் பதில் காரசாரமானவார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று பூங்குழலி விரும்பினாள். ஆனால் பேச இயலவில்லை. தொண்டையைஅடைத்தது. காதில் விழுந்த காய்ச்சிய ஈயத் துளிகள் கண் வழியாக வௌி வந்தன போல் வெப்பமானகண்ணீர்த்துளிகள் தோன்றிக் கண்களை எரியச்செய்தன.
குனிந்த தலை நிமிராமல் பூங்குழலி திரும்பினாள். கடற்கரைக்கு எதிர்ப்பக்கம் நோக்கிநடந்தாள். நடை மெதுவாக ஆரம்பமாயிற்று. வரவரவேகம் அதிகரித்தது. ஊமை ராணி இருந்த திசையைஒரு கணம் கடைக்கண்ணால் பார்த்தாள். அவள் அருகில் ஆழ்வார்க்கடியான் நின்று ஏதோ அவளிடம் தெரிவிக்கமுயன்று கொண்டிருப்பதைக் கண்டாள். மனிதர்கள் உள்ள இடத்திலேயே தான் இருக்கக்கூடாது என்ற எண்ணம்அவளுக்குத் தோன்றியது. மனிதக் குரலையே கேட்கப் பிடிக்கவில்லை. ஆ! மனிதர்கள் எத்தனைகொடூரமானவர்கள்? எதற்காக இவ்வளவு குரூரமான சொற்களைப் பேசுகிறார்கள்! எல்லாரும் ஊமைகளாகவேஇருந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
சிறிது தூரம் காட்டில் புகுந்து சென்ற பிறகு, தொண்டைமானாற்றின் கரையை அடைந்தாள். அந்தக்கரையோடு உள்நாட்டை நோக்கி நடந்தாள். அவளுடைய படகை விட்டிருந்த இடத்தைக் குறி வைத்து நடந்தாள்.ஆம். சீக்கிரம் அந்தப் படகைப்போய்ச் சேரவேண்டும். படகில் ஏறிக் கொள்ளவேண்டும். தன்னந்தனியாகக் கடலில் செல்ல வேண்டும். மனிதர்களுடைய குரல் காதில் விழ முடியாத நடுக்கடலுக்கேபோய்விட வேண்டும்.துடுப்பைச் சும்மா வைத்துவிடவேண்டும். அலைகளில் மொத்துண்டு படகு மிதந்து மிதந்துபோகவேண்டும். தானும் அதில் போய் கொண்டிருக்க வேண்டும். எல்லையில்லாத கடலில் முடிவில்லாமல்போய்க் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அலைபட்ட தன் உள்ளம் அமைதி பெறும். சேநாதிபதியின்வார்த்தைகளினால் நொந்த உள்ளத்தின் வேதனை தீரும். ஆத்திரம் தணிந்து ஆறுதல் உண்டாகும்.
அந்தப் பொல்லாத கிழவன் என்ன சொன்னான்! "வலை போட்டுக் கடலில் மீன் பிடிப்பதோடுநிறுத்திக் கொள்! இளவரசருக்கு வலை போடாதே!" என்றான். நானா இளவரசருக்கு வலை போடுகிறேன்!சீச்சீ! அந்தக் கிழவனின் புத்தி போன போக்கைப் பார்!... ஆம்; தரையில் வாழும் மனிதர்களைக்காட்டிலும் கடலில் வாழும் மீன்கள் எவ்வளவோ நல்ல ஜந்துக்கள். அவை இப்படியெல்லாம் கொடூரமாகப்பேசுவதில்லை. ஆழ்கடலில் நீந்தியும் மிதந்தும் எவ்வளவு ஆனந்தமாகக் காலங்கழிக்கின்றன! அவற்றுக்குக்கவலை ஏது? துயரம் ஏது? ஆகா! நான் கடலில் வாழும் மீனாகப் பிறந்திருக்கக்கூடாதா? அப்படிப்பிறந்திருந்தால், இந்த உலகத்தின் துயரங்கள், துவேஷங்கள், ஆசாபாசங்கள், கோபதாபங்கள், இவற்றில்அகப்பட்டுக் கொள்ளாமல் சதா சர்வ காலமும் ஆழ்கடலில் நீந்தி நீந்திப் போய்க் கொண்டிருக்கலாம்அல்லவா? அப்போது தன்னையும் இளவரசரையும் பிரிப்பதற்கோ வஞ்சகம் செய்வதற்கோ விஜமமாகப்பேசுவதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா?... இல்லை, இல்லை! அதுவும் நிச்சயமில்லை. அங்கேயும் இந்தப் பொல்லாத மனிதர்கள் வந்து வலை போட்டுப் பிடித்துக் கொண்டு போகப் பார்ப்பார்கள்!இரண்டு மீன்களில் ஒன்றை மட்டும் கொண்டு போனாலும் போவார்கள்! பாதகர்கள்!..."
பூங்குழலியின் மனத்தில் பொங்கிய ஆத்திரம் அவளுடைய கால்களுக்கு அளவில்லாத விரைவைக்கொடுத்தது. சூரியன் உச்சிவானுக்கு வந்த சமயம் அவள் படகை விட்டிருந்த இடத்தை அடைந்துவிட்டாள்.நல்லவேளை; படகு விட்டிருந்த இடத்தில் கட்டிப் போட்டபடியே இருந்தது.அவளுடைய ஆருயிர்த்தோழி அந்தப்படகுதான். அவளுடைய அடைக்கல ஸ்தானம் அந்தப் படகுதான். துன்பமும், துரோகமும் சூழ்ந்த இந்தப் பொல்லாதஉலகத்தில் தனக்கு அமைதியும் ஆனந்தமும் அளிப்பது அந்தச் சாண் அகலத்துப் படகுதான். அதை யாரும்அடித்துக்கொண்டு போகாமல் விட்டு வைத்தது பெரிய காரியம்.
'இனி எது எப்படியாவது போகட்டும். இளவரசரை அந்தக் கிழச் சேநாதிபதி காவல்புரியட்டும். கொடும்பாளூர் வீட்டுப் பெண்ணையே அவர் கழுத்தில் கட்டிவிடட்டும். அதனால் எனக்கு என்ன? என்படகு இருக்கிறது; துடுப்பு இருக்கிறது; கையில் வலிவு இருக்கிறது; விசாலமான கடலும் இருக்கிறது. சமுத்திர ராஜனே! உன் அருமைப் புதல்வியை வேறு யார் கைவிட்டாலும் நீ கைவிட மாட்டாய் அல்லவா?"சமுத்திர குமாரி" என்று இளவரசர் திருவாயினால் கூறியதைப் பொய்யாக்க மாட்டாய் அல்லவா?
பூங்குழலி படகில் ஏறிக்கொண்டாள். கடலை நோக்கிப் படகைச் செலுத்தினாள். நதியின்ஓட்டத்தோடு சென்றபடியால் சீக்கிரத்திலேயே தொண்டைமானாற்றின் முகத்துவராத்தை அடைந்துவிட்டாள். பின்னர் கடலில் படகைச் செலுத்தினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் சுழிக்காற்று அடிக்கப் போகிறது என்றுஅவளுக்குத் தெரிந்து போயிற்று.சுழிக்காற்றின் முன் அறிகுறிகளை அவள் நன்கு அறிந்திருந்தாள். முதல்நாள் இரவு சந்திரனைச் சுற்றிச் சாம்பல் நிற வட்டம் காணப்பட்டது. இன்றைக்குப் பகலெல்லாம் ஒரேபுழுக்கமாயிருந்தது. மரங்களில் இலை அசையவில்லை. அதோ தென்மேற்கு மூலையில் கரிய மேகத்திட்டுக்கள்கிளம்பிவிட்டன. சீக்கிரத்தில் சுழிக்காற்று அடிக்கப்போவது நிச்சயம். கடலின் கொந்தளிப்பு அற்புதக்காட்சியிருக்கும். ஆனால் சுழிக்காற்று அடிக்கப் போவது நிச்சயம். கடலின் கொந்தளிப்பு அற்புதக்கடலில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. பூதத் தீவுக்குப் போய்த் தங்கியிருப்பது நல்லது. அங்கேதங்கியிருந்தால் சுழிக்காற்றினால் கடலிலே உண்டாகும் அல்லோல கல்லோலத்தை நன்றாகப் பார்த்துக்களிக்கலாம். காற்று அடித்துவிட்டுப் போன பிறகு, கடலிலும் கொந்தளிப்புச் சிறிது அடங்கிய பிறகு,படகைக் கடலில் செலுத்திக்கொண்டு கோடிக்கரைக்குப் போகலாம். இப்போது என்ன அவசரம்? கோடிக்கரைக்குஇப்போது அந்த மரக்கலம் அநேகமாகப் போயிருக்கும். நல்லவேளை சுழிக்காற்றில் அது அகப்பட்டுக்கொண்டிராது. இளவரசர் இத்தனை நேரம் பத்திரமாகப் போய் அங்கே இறங்கியிருப்பார்.அல்லது ஒருவேளைமாமல்லபுரத்துக்கே போயிருந்தாலும் போயிருப்பார். எங்கே போயிருந்தால் நமக்கு என்ன? சுழிக்காற்றில்அகப்பட்டுக் கொண்டிருக்கமாட்டார்; அந்த வரைக்கும் திருப்தி அடையலாம்.
சுழிக்காற்றுத் தொடங்குவதற்கு முன்னால் அடியோடு காற்று நின்று போயிருந்தபடியால் மரக்கலங்கள்பாய் விரித்திருந்தும் கடலில் போக முடியவில்லை என்பது பூங்குழலிக்குத் தெரியாது. ஆகையால் இத்தனைநேரம் அக்கரை போய்ச் சேர்ந்திருக்கும் என்றே நினைத்தாள். சேநாதிபதி, "இளவரசருக்கு வலைபோடாதே!" என்று சொன்னது அடிக்கடி அவளுடைய மனத்தில் தோன்றி துன்புறுத்திக் கொண்டிருந்தது. ஆகையால், கோடிக்கரைக்குத் தானும் உடனே போகவேண்டாம் என்று எண்ணினாள். பூதத் தீவிலேதங்கியிருந்தது. சுழிக்காற்றின் அட்டகாசங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகுசாவகாசமாகப் புறப்படத் தீர்மானித்தாள்.தொண்டைமானாற்றின் முகத்துவாரத்திலிருந்து பூதத்தீவு அதிகதூரத்தில் இல்லை ஆகையால் புறப்பட்ட ஒரு நாழிகை நேரத்துக்குள் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டாள். பூங்குழலி பூதத்தீவைச் சேர்ந்ததற்கும் சுழிக்காற்று அடிக்கத் தொடங்கியதற்கும் சரியாயிருந்தது.
படகைக் கரையில் ஏற்றிக் குப்புறக் கவிழ்த்துப் பத்திரமாய்க் கட்டிப் போட்டுவிட்டு, பூங்குழலிஅத்தீவில் இருந்த ஒரு சிறிய புத்த ஸ்தூபத்தை அடைந்தாள். முதலில் சற்று நேரம் அதன் அடிவாரத்துக் குகைஅறையில் காற்றிலும் மழையிலும் அடிபடாதிருந்து பார்த்தாள். அதிக நேரம் அவளால் அப்படி இருக்கமுடியவில்லை. வாயு பகவானின் கோலாகலத் திருவிளையாடல்களைப் பார்க்கும் ஆசை உண்டாயிற்று. குகையிலிருந்து வௌிவந்து படிக்கட்டில் ஏறி ஸ்தூபத்தின் உச்சியை அடைந்தாள்.அப்போது சுற்றுப்புறத்துச்சூழ்நிலை அவள் உள்ளத்தின் நிலைக்கு ஒத்ததாக இருந்தது. பூதத்தீவில் ஒங்கி வளர்ந்திருந்த நூற்றுக்கணக்கானதென்னை மரங்கள் தலைவிரி கோலமாக ஊழிக் காலத்தில் சம்ஹார மூர்த்தியைச் சுற்றி நின்று பூதகணங்கள்ஆடுவது போல் ஆடின. கடல் அலைகள் அத்தென்னை மரங்களின் உயரம் சில சமயம் எழும்பி இமயமலையின்பனிச் சிகரங்களைப்போல் ஒரு வினாடி காட்சி அளித்து, மறு வினாடி நூறு கோடி நுரைத் துளிகளாகச்சிதறி விழுந்தன. சுழன்று சுழன்று அடித்த காற்றின் சப்தமும் அலைகளின் பேரொலியும் இடையிடையே கேட்டஇடிமுழக்கமும் சேர்ந்து திக்குத் திகாந்தங்கள் எல்லாம் இடிந்து தகர்ந்து விழுகின்றன என்று எண்ணச் செய்தன. வானத்தை வெட்டிப் பிளப்பதுபோல் அவ்வப்போது தோன்றிக் கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து ஓடி மறைந்தமின்னல்கள் ஒரு வினாடி நேரம் கொந்தளித்த அலை கடலையும், பேயாட்டம் ஆடிய மரங்களையும், வௌிச்சம்போட்டுக் காட்டிவிட்டு மறுவினாடி கன்னங்கரிய காரிருளில் ஆழச் செய்தன.
இவ்வளவு அல்லோலகல்லோலங்களையும் பார்த்துக் கொண்டு பூங்குழலி வெகுநேரம் நின்றாள். அவள்உடம்பு காற்றில் ஆடிய மரங்களைப் போல் ஆடியது. அவள் கூந்தல் அவிழ்ந்து காற்றில் பறந்தது. மழை அவள்உடலை நனைத்தது. இடிமுழக்கம் அவள் செவிகளைப் பிளந்தது. மின்வெட்டு அவள் கண்களைப் பறித்தது. இதையெல்லாம் அவள் பொருட்படுத்தவேயில்லை. வெகு நேரம் அக்காற்றிலும் மழையிலும் அவள் நின்றாள். அவள் உள்ளம் வெறி கொண்டு கொந்தளித்தது. தன்னைச் சுற்றிலும் நடைபெறும் அற்புத கோலாகலமெல்லாம்தான் பார்த்துக் களிப்பதற்காகவே நடப்பதாக எண்ணிப் பெருமிதத்துடன் அநுபவித்துக் கொண்டிருந்தாள்.
இடையிடையே அவளுக்கு இளவரசர் அருள்மொழிவர்மரின் நினைவு வந்துகொண்டிருந்தது. அச்சமயம்அவர் கோடிக்கரை சேர்ந்து பத்திரமான இடத்தில் தங்கியிருப்பார் என்று எண்ணினாள். ஒரு வேளை தன்பெற்றோர் வீட்டிலே கூடத் தங்கியிருக்கலாம்; அல்லது நாகப்பட்டினம் சென்று அங்கே இராஜ மாளிகையில்தங்கியிருக்கலாம். ஒரு வேளை கடலில் கப்பலிலேயே இருந்திருப்பாரோ? இருந்தால் என்ன? அவர் ஏறிச்சென்ற பெரிய மரக்கலத்தை எந்தச் சுழிக்காற்றுதான் என்ன செய்துவிடும்? அவரைப் பாதுகாக்க எத்தனையோபேர் சுற்றிலும் சூழ்ந்திருப்பார்கள். தன்னைப் பற்றி அவர் ஞாபகப்படுத்திக் கொள்ளுவாரா? 'அந்தப் பேதைபூங்குழலி இச்சமயம் எங்கிருக்கிறாளோ? என்று எண்ணிக் கொள்வாரா? ஒரு நாளும் மாட்டார். அவளுடையசகோதரி அனுப்பிய வந்தியத்தேவனைப் பற்றி நினைத்துக் கொள்வார். கொடும்பளூர்க் கோமகளைப்பற்றியும்நினைத்துக் கொள்ளலாம். இந்த ஏழைக் கரையர் குலப் பெண்ணை அவருக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது?
இரவு வெகு நேரம் சுழிக்காற்றின் கோலாகலத்தை அநுபவித்து விட்டுப் பூங்குழலி ஸ்தூபத்தின்அடிவாரக் குகைக்குச் சென்று கண்ணயர்ந்தாள். தூக்கத்தில் அவள் அமைதியடையவில்லை. ஏதேதோ கனவுகள்கண்டு கொண்டிருந்தாள். கடலில் படகில் சென்று வலை வீசுவது போலவும், அதில் இளவரசர் அகப்படுவதுபோலவும் ஒரு தடவை கனவு கண்டாள். மற்றொரு சமயம் அவளும் இளவரசரும் மீன்களாக மாறிக் கடலில்அருகருகே நீந்திப் போவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு கனவின் போதும் நடுவில் விழித்தெழுந்து, "இதுஎன்ன பைத்தியக்காரத் தனம்?" என்று எண்ணி மனத்தைத் தௌிவாக்கிக் கொள்ள முயன்று மறுபடியும்உறங்கினாள்.
பொழுது விடிந்து அவள் நன்றாய் விழித்தெழுந்த போது சுழிக்காற்றின் கோலாகலம் ஒருவாறுஅடங்கி விட்டிருந்தது. இடியில்லை; மின்னல் இல்லை; மழையும் நின்று போயிருந்தது. எழுந்து கடற்கரைக்குச்சென்றாள். நேற்றிரவு போல் அவ்வளவு பெரிய அலைகள் இப்போது கடலில் அடிக்கவில்லை. ஆயினும் கடல்இன்னும் கொந்தளிப்பாகவே இருந்தது. முன்னாளிரவு சுழிக்காற்று அத்தீவை என்ன பாடுபடுத்திவிட்டதுஎன்பதற்கு அறிகுறியான காட்சிகள் நாலாபக்கமும் காணப்பட்டன. வேருடன் பெயர்ந்து தரையில் விழுந்துகிடந்த மரங்களும், முடிகள் வளைந்து தாழ்ந்திருந்த நெடிய பெரிய மரங்களும் காட்சி அளித்துக்கொண்டிருந்தன.
பூங்குழலி அக்காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது கடலில் சற்றுத் தூரத்தில் ஒருகட்டுமரம் மிதப்பது போல் தெரிந்தது. அது கடற்கரையோரத்து அலைகளினால் பல தடவை அப்படியும்இப்படியும் அலைப்புண்ட பிறகு கடைசியாகக் கரையில் வந்து ஒதுங்கியது. அப்போதுதான் அதிலே ஒரு மனிதன்இருப்பதைப் பூங்குழலி கவனித்தாள். ஓடிப் போய்ப் பார்த்தாள். கட்டுமரத்தில் கட்டப்பட்டிருந்த அந்தமனிதன் குற்றுயிராயிருந்தான். அவனைக் கட்டு அவிழ்த்து விட்டு ஆசுவாசப்படுத்தினாள். அவன் ஈழத்துக்கடற்கரைக் கிராமம் ஒன்றைச் சேர்ந்த வலைஞன். மீன் பிடிக்கபோன இடத்தில் சுழிக்காற்றில் அகப்பட்டுக்கொண்டதாகக் கூறினான். தன்னுடன் இருந்த தோழனைக் கடல் இரையாக்கிக் கொண்டதாகவும் தான் பிழைத்ததுபுனர்ஜன்மம் என்றும் தெரிவித்தான். இன்னும் முக்கியமான ஒரு செய்தியையும் அவன் கூறினான்.
"முன்னிரவு நேரத்தில், கடுமையான சுழிக்காற்று அடித்துக் கொஞ்சம் நின்றது போலிருந்தது. எங்களைச் சுற்றிலும் காரிருள் சூழ்ந்திருந்தது. திடீரென்று ஒரு பேரிடி இடித்தது. அப்போது தோன்றியமின்னல் வௌிச்சத்தில் இரண்டு மரக்கலங்கள் தெரிந்தன. ஒரு மரக்கலம் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அந்தப் பயங்கரமான காட்சியைச் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில்மனிதர்கள் அவசர நடமாட்டமும் தெரிந்தது. பிறகு தீப்பிடித்த கப்பல் கடலில் முழுகிவிட்டது. மற்றொருமரக்கலம் இருட்டில் மறைந்து விட்டது!" என்று அம்மனிதன் தட்டுத் தடுமாறிக் கூறினான்.
இதைக் கேட்டவுடனே பூங்குழலிக்கு இளவரசரை ஏற்றிச் சென்ற கப்பல் அவற்றில் ஒன்றாயிருக்குமோஎன்ற ஐயம் உதித்தது. அப்படி இருக்க முடியாது என்று நிச்சயம் அடைந்தாள். கடலில் எத்தனையோ கப்பல்கள்வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அதைப்பற்றி நமக்கு என்ன கவலை? ஆனாலும் தீப்பிடித்தகப்பலில் இருந்தவர்களில் சிலர் கடலில் விழுந்திருக்கக் கூடும். இந்தக் கட்டுமரத்து வலைஞனைப் போல்அவர்களில் யாராவது கையில் அகப்பட்டதைப் பிடித்துக்கொண்டு தத்தளிக்கக் கூடும். அவர்களுக்கு ஏன் நாம்உதவி செய்யக்கூடாது? படகில் ஏறிச் சென்று அப்படித் தத்தளிக்கிறவர்களை ஏற்றிக்கொண்டு வந்து ஏன் கரைசேர்க்கக் கூடாது? பின்னே, இந்த ஜன்மம் எதற்காகத்தான் இருக்கிறது?...
அவ்வளவுதான்; இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, பூங்குழலி படகைக் கட்டவிழ்த்துநிமிர்த்திக் கடலில் தள்ளி விட்டாள். தானும் ஏறிக் கொண்டாள். அவளுடைய இரும்புக் கரங்களின் பலம்முழுவதையும் உபயோகித்துத் துடுப்பை வலித்தாள். கரையில் வந்து மோதிய அலைகளைத் தாண்டி அப்பால்போகும் வரையில் மிகக் கடினமான வேலையாயிருந்தது. அப்புறம் அவ்வளவு கஷ்டமாக இல்லை வழக்கம்போல்சர்வசாதாரணமாக அவளுடைய கரங்கள் துடுப்பை வலித்தன. படகு உல்லாஸமாக ஆடிக் கொண்டு மெள்ள மெள்ளநகர்ந்து சென்றது.
பூங்குழலியின் உள்ளத்தில் குதூகலமும் பொங்கியது. அவள் படகிலே வழக்கமாகப் பாடும் பழையகீதம் தானாகவே புதிய உருவம் கொண்டது. அலைகளின் இரைச்சலை அடக்கிக் கொண்டு அந்தக் கீதம்அவளுடைய கம்பீரமான இனிய குரல் வழியாக வௌிவந்து நாற்றிசையும் பரவியது:-
"அலைகடல் கொந்தளிக்கையிலே அகக்கடல்தான் களிப்பதுமேன்? நிலமகளும் துடிக்கையிலே நெஞ்சகந்தான் துள்ளுவதேன்? இடி இடித்து எண்திசையும் வெடிபடும் அவ்வேளையிலே நடனக் கலைவல்லவர்போல் நாட்டியந்தான் ஆடுவதேன்?"
பாய்மரக் கட்டையைப் பிடித்துக்கொண்ட இளவரசரும், வந்தியத்தேவனும் அலைகடலில் மொத்துண்டுமொத்துண்டு மிதந்து கொண்டிருந்தார்கள். அன்று ஓர் இரவுதான் அவர்கள் அவ்வாறு கடலில் மிதந்தார்கள். ஆனால் வந்தியத்தேவனுக்கு அது எத்தனையோ யுகங்கள் எனத் தோன்றியது. அவன் சீக்கிரத்திலேயே நிராசைஅடைந்து விட்டான்; பிழைத்துக் கரையேறுவோம் என்ற நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டான்.
ஒவ்வொரு தடவை அலை உச்சிக்கு அவன் போய்க் கீழே வந்த போதும், "இத்துடன் செத்தேன்" என்றுஎண்ணிக் கொண்டான். மறுபடியும் உயிரும் உணர்வும் இருப்பதைக் கண்டு வியந்தான். அடிக்கடி இளவரசரைப்பார்த்து, "என்னுடைய அவசர புத்தியினால் தங்களையும் இந்த ஆபத்துக்கு உள்ளாக்கினேனே" என்று புலம்பினான்.இளவரசர் அவனுக்கு ஆறுதல் கூறித் தைரியம் ஊட்டி வந்தார். "மூன்று நாள், நாலு நாள் வரையில் கடலில்இம்மாதிரி மிதந்து பிழைத்து வந்தவர்கள் உண்டு" என்று அடிக்கடி சொல்லி வந்தார்.
"நாம் கடலில் விழுந்து எத்தனை நாள் ஆயின?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"இன்னும் ஒரு ராத்திரிகூட ஆகவில்லையே?" என்றார் இளவரசர்.
"பொய்! பொய்! பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும்" என்றான் வந்தியத்தேவன்.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவனுக்கு இன்னொரு கஷ்டம் ஏற்பட்டது. தொண்டைவறண்டுபோய்த் தாகம் எடுத்தது. தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருந்தான்; ஆனால் தாகத்துக்குக் குடிக்கத்தண்ணீர் இல்லை. இது பெரிய சித்திரவதையாயிருந்தது. இளவரசரிடம் கூறினான்.
"கொஞ்சம் பொறுமையாயிரு! சீக்கிரம் பொழுது விடியும்! எங்கேயாவது கரையிலே போய்ஒதுங்குவோம்" என்றார் இளவரசர்.
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தான்; முடியவில்லை.
"ஐயா! என்னால் இந்தச் சித்திரவதையைப் பொறுக்க முடியாது. கட்டை அவிழ்த்து விடுங்கள்! கடலில் முழுகிச் சாகிறேன்!"என்றான்.
இளவரசர் மீண்டும் தைரியம் கூற முயன்றார். ஆனால் பலிக்கவில்லை. வந்தியத்தேவனுக்கு வெறிமூண்டது. தன்னுடைய கட்டுக்களைத் தானே அவிழ்த்துக் கொள்ள முயன்றான். இளவரசர் அதைப் பார்த்தார். அருகில் நெருங்கிச் சென்று அவனுடைய தலையில் ஓங்கி இரண்டு அறை அறைத்தார். வந்தியத்தேவன் உணர்வைஇழந்தான்!
அவன் மறுபடி உணர்வு பெற்றபோது பொழுது விடிந்து வௌிச்சமாயிருப்பதைக் கண்டான். அலைகளின்ஆரவாரமும் சிறிது அடங்கியிருந்தது. சூரியன் எங்கேயோ உதயமாகியிருக்க வேண்டும். ஆனால் எங்கேஉதயமாகியிருக்கிறது என்று பார்க்க முடியவில்லை. இளவரசர் அவனை அன்புடன் நோக்கி, "தோழா!சமீபத்தில் எங்கேயோ கரை இருக்கவேண்டும். தென்னை மரம் ஒன்றின் உச்சியைச் சற்று முன் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரு!" என்று சொன்னார்.
"இளவரசே! என்னைக் கைவிட்டுவிடுங்கள்! தாங்கள் எப்படியாவது தப்பிப் பிழையுங்கள்!" என்றான்வந்தியத்தேவன்.
"வேண்டாம்! அதைரியப்படாதே! உன்னை அப்படி நான் விட்டுவிடமாட்டேன்! ஆகா! அதுஎன்ன! யாரோ பாடுகிற குரல்போல் தொனிக்கிறதே!" என்றார் இளவரசர்.
ஆம்; அப்போது அவர்களுடைய காதில் பூங்குழலி படகிலிருந்து பாடிய பாட்டுத்தான் கேட்டது.
"அலைகடல் கொந்தளிக்கையிலே அகக்கடல்தான் களிப்பதுமேன்?" என்ற கீதம் அவர்களுடைய காதில் அபய கீதமாகத் தொனித்தது. உடற்சோர்வும் மனச்சோர்வும் உற்று, முக்கால் பிராணனை இழந்திருந்த வந்தியத்தேவனுக்குக்கூட அந்தக் கீதம்புத்துயிர் அளித்து உற்சாகம் ஊட்டியது.
"இளவரசே! பூங்குழலியின் குரல்தான் அது! படகு ஓட்டிக்கொண்டு வருகிறாள். நாம் பிழைத்துப்போனோம்!" என்று சொன்னான்.
சிறிது நேரத்துக்கெல்லாம் படகு அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது. நெருங்கி நெருங்கி அருகில் வந்தது.
பூங்குழலி , "இது உண்மையில் நடப்பதுதானா?" என்று சந்தேகித்துச்செயலிழந்து நின்றாள். இளவரசர், வந்தியத்தேவனைக் கட்டு அவிழ்த்து விட்டார். முதலில் தாம் படகிலேதாவி ஏறிக்கொண்டார். பின்னர் வந்தியத்தேவனையும் ஏற்றி விட்டார். பூங்குழலி கையில் பிடித்ததுடுப்புடனே சித்திரபாவையைப் போல் செயலற்று நின்றாள்.
பக்க தலைப்பு
This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmastersof this website.