ponniyin celvan
of kalki, part 1C
(in tamil script, unicode format)
அமரர் கல்கி அவர்களின்
பொன்னியின் செல்வன்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
நூலடக்கம்
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்
முடிவுரை
Acknowledgements:
Etext donation : AU-KBC Research Center (Mr. Baskaran), Anna University, Chennai,India
Proof-reading: Mr. S. Anbumani, Mr. N.D. Logasundaram,Mr. Narayanan Govindarajan, Ms. Pavithra Srinivasan, Mr. Ramachandran Mahadevan,Ms. Sathya, Mr. Sreeram Krishnamoorthy, Dr. Sridhar Rathinam, Mrs. Srilatha Rajagopal, Mr. Vinoth Jagannathan
Web version: Mr. S. Anbumani, Blacksburg, Virginia, USA
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devotedto preparation of electronic texts of tamil literary works and to distributethem free on the Internet. Details of Project Madurai are available atthe website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this headerpage is kept intact.
முதலாவது பாகம் - புது வெள்ளம்
இருபத்தொன்றாம் அத்தியாயம் - திரை சலசலத்தது!
இருபத்திரண்டாம் அத்தியாயம் - வேளக்காரப் படை
இருபத்து மூன்றாம் அத்தியாயம் - அமுதனின் அன்னை
இருபத்து நான்காம் அத்தியாயம் - காக்கையும் குயிலும்
இருபத்தைந்தாம் அத்தியாயம் - கோட்டைக்குள்ளே
இருபத்தாறாம் அத்தியாயம் - "அபாயம்! அபாயம்!"
இருபத்தேழாம் அத்தியாயம் - ஆஷ்தானப் புலவர்கள்
இருபத்தெட்டாம் அத்தியாயம் - இரும்புப் பிடி
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - "நம் விருந்தாளி"
முப்பதாம் அத்தியாயம் - சித்திர மண்டபம்
இருபத்தொன்றாம் அத்தியாயம்
திரை சலசலத்தது!
ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்குவந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது.
சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த காலம். கணவாய்கள், மதகுகள், மடைகளின் வழியாக வாய்க்கால்களிலும் வயல்களிலும் குபுகுபுவென்று ஜலம் பாய்ந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாயிருந்தது. சோழ தேசத்தை 'வளநாடு' என்றும் சோழ மன்னனை 'வளவன்' என்றும் கூறுவது எவ்வளவு பொருத்தமானது? இப்படி எண்ணியவுடனே சோழ நாட்டுக்குச் சோழ மன்னனுக்கும் ஏற்பட்டிருந்த அபாயங்கள் நினைவுக்கு வந்தன. இந்த நிலைமையில் தன்னுடைய கடமை என்ன? இளவரசர் கரிகாலர் கொடுத்த ஓலையை மட்டும் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பித்து விட்டுத் தன் கடமை தீர்ந்தது என்று இருந்து விடுவதா? இந்த இராஜகுலத் தாயாதிக் காய்ச்சலிலும் பூசலிலும் நாம் எதற்காகத் தலையிட்டு கொள்ள வேண்டும்? சோழ நாட்டுச் சிம்மாசனத்துக்கு யார் வந்தால் தான் நமக்கு என்ன? பார்க்கப் போனால், நம்முடைய குலத்தின் பூர்வீகப் பகைவர்கள்தானே இவர்கள்? சோழர்களும் கங்கர்களும் வைதும்பர்களும் சேர்ந்து கொண்டுதானே வாணகோப்பாடி ராஜ்யமே இல்லாதபடி செய்து விட்டார்கள்? இன்றைக்கு ஆதித்த கரிகாலர் நம்மிடம் அன்பாக இருந்ததினால் அந்த அநீதியெல்லாம் மறைந்து போய்விடுமா?... சேச்சே! அந்தப் பழைய சம்பவங்களை அநீதியென்றுதான் எப்படிச் சொல்ல முடியும்? அரசர்கள் என்றால், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது இயற்கை. அது போலவே வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருவதும் இயற்கை. வென்றவர்கள் மீது தோற்றவர்கள் கோபங்கொள்வதில் பயன் என்ன? நம்முடைய மூதாதைகள் நல்ல நிலைமையில் இருந்த போது அவர்களும் மற்ற அரசர்களைக் கதிகலங்கத்தானே அடித்தார்கள்? அடியோடு அழித்து விடத்தானே பார்த்தார்கள்? ஆ! அது என்ன பாடல்? இதோ ஞாபகம் வந்து விட்டது!
"சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன் பாவேந்தர் தம்வேந்தன் வாணன் பறித்து நட்டான் மூவேந்தர் தங்கள் முடி!"
இப்படியெல்லாம் போர்க்களத்தில் கொடூரமான காரியங்களை நம் முன்னோர்களும்செய்திருக்கிறார்கள். போர்க்களத்தில் தோற்றவர்களின் கதி எப்போதும் அதோகதிதான். இராமரைப்போலவும் தர்ம புத்திரரைப் போலவும் எல்லா அரசர்களும் கருணை வள்ளல்களாக இருந்து விட முடியுமா? அப்படிஅவர்கள் இருந்தபடியினால்தான் காட்டுக்குப் போய்த் திண்டாடினார்கள்! வீர புருஷர்களாயிருந்தும், வீரர்களின்துணையிருந்தும் வெகுவாகக் கஷ்டப்பட்டார்கள். இராஜரீகத்தில் கருணை என்பதே கூடாது. பார்க்கப் போனால்சோழ குலத்தவர்கள் சிறிது கருணையுள்ளவர்கள் என்றே சொல்ல வேண்டும். எதிரிகளையும் முடியுமானால்நண்பர்களாக்கிக் கொள்ளவே பார்க்கிறார்கள். அதற்காகக் குலம் விட்டுக் குலம் கலியாண சம்பந்தமும் செய்துகொள்கிறார்கள். சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சய சோழர் வைதும்பராயன் மகளைத் திருமணம் செய்துகொள்ளவில்லையா? அழகுக்குப் பெயர்போன அந்தக் கலியாணியின் மகனாயிருப்பதினால்தானே சுந்தரசோழரும் அவருடைய மக்களும் கூட சௌந்தரியத்தில் சிறந்து விளங்குகிறார்கள்?... ஆ! அழகி என்றதும்அந்தக் குடந்தை நகரத்து மங்கை... அரிசிலாற்றங்கரைப் பெண்மணியின் நினைவு வருகிறது. நினைவுபுதிதாக எங்கிருந்தோ வந்து விடவில்லை.அவனுடைய உள்ளத்துக்குள்ளேயே கனிந்து கொண்டிருந்த நினைவுகள்.
வந்தியத்தேவனுடைய வௌிமனம் சோழ நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றியும் இராஜரீகக்குழப்பங்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கையில் அவனுடைய உள்மனம் அந்த மங்கையினிடத்திலேயேஈடுபட்டிருந்தது. இப்போது உள்மனம் வௌி மனம் இரண்டும் ஒத்து அம்மங்கையைக் குறித்துப் பட்டவர்த்தனமாகச்சிந்திக்கத் தொடங்கின. பிறகு, வௌியில் எந்த அழகான இயற்கைப் பொருளைப் பார்த்தாலும் அந்தமங்கையின் அவயங்களுடன் ஒப்பிடத் தோன்றின. வழுவழுப்பான மூங்கிலை பார்த்ததும் அவளுடைய தோள்கள்நினைவு வந்தன. ஓடைகளில் மண்டிக் கிடந்த குவளை மலர்கள் அவளுடைய கண்களுக்கு உவமையாயின. பங்கஜமலர்கள் அவளுடைய தங்க முகத்துக்கு இணைதானா என்ற ஐயம் தோன்றியது. நதியோர மரங்களில் குலுங்கிக்கொண்டிருந்த மலர்களில் வண்டுகள் செய்த ரீங்காரத்தை அவள் குரலின் ஒலிக்கு உவமை சொல்வது சரியாகுமா?இப்படியெல்லாம் கவிகள் கற்பித்திருக்கிறார்களே தவிர, உண்மையில் இவையெல்லாம் எங்கே? அந்தமங்கையின் சௌந்தரியம் எங்கே? அவளுடைய திருமுகத்தைப் பார்த்தபோது மெய்சிலிர்த்ததே! இப்போதுநினைத்துப் பார்க்கும்போது கூட நெஞ்சு விம்முகிறதே! இந்தப் பூக்களையும் வண்டுகளையும் பார்த்தால் அத்தகையமெய்சிலிர்ப்பு உண்டாகவில்லையே?.. சேச்சே! முதியோர்கள் நமக்குச் செய்த உபதேசத்தையெல்லாம் மறந்துவிட்டோம்! பெண்களின் மோகத்தைப் போல் உலக வாழ்க்கையில் பொல்லாத மாயை வேறொன்றுமில்லை.
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவோன் பெண்களின் மோக வலையில் விழவே கூடாது;விழுந்தால் அவன் ஒழிந்தான்! கோவலன் கதைதான் அந்த விஷயத்தை அபூர்வமாய் எடுத்துச் சொல்கிறதே!கோவலன் மட்டும் என்ன? இந்த நாளில் வீராதி வீரரும் சோழ நாட்டிலே இணையற்ற செல்வாக்கு உள்ளவருமானபெரிய பழுவேட்டரையரைப் பற்றி மக்கள் பரிகாசம் பேசுங்காரணமும் அதுதானே? ஆனால் மக்கள் உண்மைஅறியாதவர்கள். மூடு பல்லக்கிலே வைத்துப் பழுவேட்டரையர் யாரைக் கொண்டு வருகிறார் என்று மக்களுக்குத்தெரியாது! ஆகையால் மூடத்தனமாகப் பேசுகிறார்கள். ஆனாலும், அந்த மதுராந்தகத் தேவர் தம்மை அவ்வளவுகேவலப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. சீச்சீ! மூடுபல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, பழுவேட்டரையரின்ராணியின் ஸ்தானத்தில் மறைந்து கொண்டு ஊர் ஊராய்ப் போவதா? இதுதான் ஆண்மைக்கு அழகா? இப்படியாவதுஇராஜ்யம் சம்பாதிக்க வேண்டுமா? இப்படிச் சம்பாதித்த இராஜ்யத்தைத்தான் அவரால் காப்பாற்றிக் கொள்ளமுடியுமா? பழுவேட்டரையர் முதலியோரை நம்பி அவர்களுக்கு உட்பட்டுத்தானே இராஜ்ய பரிபாலனம் செய்யவேண்டும்? இந்த விஷயத்தில் சுந்தர சோழ சக்கரவர்த்தி செய்து வருவதே அவ்வளவு சிலாக்கியமில்லைதான்!பழுவேட்டரையர் போன்றவர்களுக்கு இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் அவர் அளித்திருக்கக் கூடாது. அதிலும்மணி மணியாக இரண்டு அருமைப் புதல்வர்கள் இருக்கும்போது? நாடெல்லாம் அதிசயிக்கும் அறிவும் திறனும்உடைய புதல்வி ஒருத்தி இருக்கும் போது...? அந்த மங்கை, சோதிடர் வீட்டில் பார்த்தவள், ஆற்றங்கரையில்பேசியவள், - அவள் முகம் யாருடைய ஜாடையாயிருக்கிறது?..அப்படியும் இருக்கலாமோ? - பைத்தியக்காரத்தனம்! ஒருநாளும் அப்படி இருக்க முடியாது! - ஏன் இருக்க முடியாது? ஒருவேளை அவ்விதம் இருந்தால், நம்மைப் போன்ற அறிவீனன் வேறு யாரும் இல்லை! நம்மைப் போன்ற துரதிர்ஷ்டசாலியும் இல்லை! இலங்கை முதல் விந்திய பர்வதம் வரையில் எந்தப் பெண்ணரசியின் புகழ் பரந்து விரிந்து பரவியிருக்கிறதோ, அவளிடம் நாம் எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டியைப் போல் நடந்து கொண்டோம்! அப்படி இருக்கவே இருக்காது! நாளைக்கு அவளிடம் எப்படி இளவரசரின் ஓலையுடனே சென்று முகத்தைக் காட்ட முடியும்?
இப்படியாக என்னவெல்லாமோ வானத்தையும் பூமியையும் சேர்த்து எண்ணமிட்டுக் கொண்டுவந்தியத்தேவன் காவேரி கரையோடு வந்து திருவையாற்றை அடைந்தான். அந்த ஊரின் வளமும் அழகும் அவன்உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அது திருவையாறுதான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். அந்த அற்புதக்ஷேத்திரத்தின் மகிமையைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் உண்மைக்குக் கொஞ்சம் குறைவாகவேதோன்றியது. ஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ள வர்ணனை இங்கே அப்படியே தத்ரூபமாய்க் காண்கிறது. முந்நூறு ஆண்டு காலத்தில் மாறுதல் ஒன்றுமேயில்லை. அதோ காவேரியின் கரையில் உள்ள மரங்கள் என்னசெழிப்பாய் வளர்ந்திருக்கின்றன! பலா மரங்களில் எவ்வளவு பெரிய பெரிய பலாக் காய்கள் தொங்குகின்றன. இந்த மாதிரி தொண்டை மண்டலத்தில் எங்கும் பார்க்கவே முடியாதுதான்.ஆகா! வளமான இடங்களுக்கென்று குரங்குகள் எங்கிருந்தோ வந்து விடுகின்றன. அவை கிளைக்குக் கிளை தாவுவது எவ்வளவு அழகாயிருக்கிறது? சம்பந்தப் பெருமான் என்ன சொல்லியிருக்கிறார்? இதோ ஞாபகம் வருகிறது?
திருவையாற்று வீதி முனை அரங்கங்களில் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். இந்த ஆடலுக்கேற்ற பாடலோடு மத்தளச் சத்தமும் முழங்குகிறது. அந்த முழக்கத்தைக் கேட்ட குரங்குகள் மேகங்களின் கர்ஜனை என்று எண்ணி உயர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளில் ஏறி மழை வருமா என்று வானத்தைப் பார்க்கின்றன! அடடா! இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது! உயர்ந்த மரங்களில் உச்சாணிக் கிளைகளில் குரங்குகள்ஏறுகின்றன! அது மட்டுமா? ஆடல் பாடல்களுக்குரிய இனிய சத்தங்களும் ஊருக்குள்ளிருந்து வருகின்றன. யாழ்,குழல், முழவு, தண்ணுமை முதலிய கருவிகளின் ஒலியுடன் சதங்கைச் சத்தமும் சேர்ந்து ஒலிக்கின்றன. இங்கேஆடுகிறவர்கள் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஆடியவர்களைப் போல் குரவைக் கூத்தர்கள் அல்ல. ஆகா!இங்கே கேட்பது பண்பட்ட இனிய கானம். கலைச் சிறப்பு வாய்ந்த பரதநாட்டியம் ஆடுவோரின் சதங்கை ஒலி.அதோ, ஆட்டிவைக்கும் நடன ஆசிரியர்கள் கையில் பிடித்த கோலின் சத்தம் கூடச் சேர்ந்து வருகிறதே!
"கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுகையார் முகத்தினின்று சேலோடச் சிலையாடச் சேயிழை யார் நடமாடுந் திருவையாறே!"
ஆகா! சம்பந்த ஸ்வாமிகள் சிறந்த சிவபக்தர்; அதைக் காட்டிலும் சிறந்த ரசிகர்! அவர்அன்றைக்கு வர்ணனை செய்தபடியே இன்றைக்கும் இந்தத் திருவையாறு விளங்குகிறதே! இப்படிப்பட்ட ஊரில் ஒருநாள் தங்கி ஆடல் பாடல் விநோதங்களைப் பார்த்துவிட்டு, ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகி அம்மனையும்தரிசித்து விட்டுத்தான் போக வேண்டும்! அடாடா, காவேரியின் கரையில் எத்தனை பக்தர்கள் உட்கார்ந்துஅனுஷ்டானம் செய்கிறார்கள்? பட்டை பட்டையாக அவர்கள் திருநீறு அணிந்திருப்பது எவ்வளவுகளையாயிருக்கிறது? சில சமயம் ஆடல் பாடல் ஒலிகளை அமுக்கிக் கொண்டு, 'நமச்சிவாய' மந்திரத்தின்ஒலி கேட்கிறதே! ஏன்? அதோ சம்பந்தரின் தேவாரத்தையே யாரோ இனிய குரலில் அருமையாகப்பாடுகிறார்களே? இசைக்கும் கலைக்கும் என்றே இறைவன் பணித்த ஊர் இந்தத் திருவையாறு போலும்! இந்தஊரில் கட்டாயம் ஒரு நாள் தங்கிப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும்! தஞ்சாவூருக்கு அவசரமாகப்போய்த்தான் என்ன பயன்? கோட்டைக்குள் பிரவேசிக்க முடிகிறதோ என்னமோ? அப்படிப் பிரவேசித்தாலும்மகாராஜாவின் பேட்டி கிடைக்குமா? மகாராஜாவைத்தான் இரண்டு பழுவேட்டரையர்களுமாகச் சேர்ந்து சிறையில்வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்களாமே...? காவேரியின் வடகரைக்குப் போக வேண்டியது தான்!
இந்த முடிவுக்கு வந்தியத்தேவன் வந்துவிட்ட தருணத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மேற்குத்திசையிலிருந்து காவேரிக் கரையோடு ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்குக்கு முன்னாலும் பின்னாலும் சில காவல்வீரர்களும் வந்தார்கள். வந்தியத்தேவனுக்கு ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது. பல்லக்கு அருகில் வருகிறவரையில் அங்கேயே நின்று காத்துக் கொண்டிருந்தான்; அவன் நினைத்தபடியே இருந்தது. பல்லக்கை மூடியிருந்தவௌித்திரையில் பனை மரத்தின் இலச்சினைச் சித்திரம் காணப்பட்டது. ஆஹா! கடம்பூரிலிருந்து வருகிறபல்லக்குத்தான் இது! நாம் குடந்தை வழியாக வர, இவர்கள் வேறொரு வழியில் வந்திருக்கிறார்கள்! ஆனால்பழுவேட்டரையரைக் காணோம்! அவர் வேறு எங்கேயாவது வழியில் தங்கிவிட்டார் போலும்.
பல்லக்கு தஞ்சாவூர் இருந்து தென்திசை நோக்கித் திரும்பியது. அவ்வளவுதான், வந்தியத்தேவன்திருவையாற்றில் தங்கும் எண்ணத்தை விட்டு விட்டான். அந்தப் பல்லக்கைப் பின் தொடர்ந்து செல்லத்தீர்மானித்தான். என்ன நோக்கத்துடன் அப்படித் தீர்மானித்தான் என்றால், அது அச்சமயம் அவனுக்கேதெரிந்திருக்கவில்லை. பல்லக்கில் வீற்றிருப்பது மதுராந்தகத் தேவர் என்று மட்டும் அவனுக்கு நிச்சயமாய்த்தெரிந்தது. அவர் மேல் ஏற்பட்டிருந்த அருவருப்பு மேலும் சிறிது வளர்ந்தது. ஆனாலும் பல்லக்கைத் தொடர்ந்துகொஞ்சம் போனால், ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படலாம். பல்லக்கை சுமப்பவர்கள் அதைக் கீழேவைக்கலாம் ஏதேனும் ஒரு காரணத்துக்காக இளவரசர் மதுராந்தகர் வௌிப்பட்டு வரலாம். அச்சமயம் அவருடன்பழக்கம் செய்து கொள்ளலாம். அது தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசிக்கவும், சக்கரவர்த்தியைப்பார்க்கவும் பயன்படலாம். அதற்குத் தகுந்தபடி ஏதாவது கொஞ்சம் பேசி வேஷம் போட்டால் போகிறது. தந்திர மந்திரங்களைக் கையாளாவிட்டால் எடுத்த காரியம் கைகூடாது அல்லவா? அதிலும் இராஜாங்கக்காரியங்களில்?
எனவே, பல்லக்கையும் பரிவாரங்களையும் முன்னால் போக விட்டுச் சற்றுப் பின்னாலேயேவந்தியத்தேவன் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒன்றும் கிட்டவில்லை. காவேரிக்கும் தஞ்சாவூருக்கும் மத்தியிலிருந்து மற்றும் நாலு நதிகளைக் கடந்தாகிவிட்டது. அப்படியும்பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை; ஒரே மூச்சாகப் போய்க் கொண்டிருந்தது. அதோ சற்றுத் தூரத்தில்தஞ்சாவூர்க் கோட்டை மதிலும் வாசலும் தெரியத் தொடங்கிவிட்டன. கோட்டைக்குள் பல்லக்குப்போய்விட்டால், அப்புறம் அவன் எண்ணம் கைகூடப் போவதில்லை. அதற்குள் தைரியமாகவும் துணிச்சலாகவும்ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும். என்னதான் வந்துவிடும்? தலையா போய்விடும்? அப்படிப் போனால்தான்போகிறதே? எடுத்த காரியத்தை முடிக்காமல் உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம்? இதற்கெல்லாம்அடிப்படையில் மதுராந்தகத் தேவர் பேரில் வந்தியத்தேவனுக்கு கோபம் வேறு இருந்தது. பல்லக்கின்மூடுதிரையைக் கிழித்தெறிந்து உள்ளேயிருப்பது பெண்ணல்ல, மீசை முளைத்த ஆண் பிள்ளை என்பதைவௌிப்படுத்த வேண்டும் என்று அவன் கை ஊறியது; அவன் உள்ளம் துடிதுடித்தது.
இதற்கு என்ன வழி என்று அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பல்லக்கோடு சென்றபரிவாரங்களில் ஒருவன், சற்றுப் பின்தங்கி வந்தியத்தேவனை உற்றுநோக்கினான்.
"நீ யார் அப்பா! திருவையாற்றிலிருந்து எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய்?" என்று கேட்டான்.
"நான் உங்களைத் தொடர்ந்து வரவில்லை ஐயா! தஞ்சாவூருக்குப் போகிறேன்! இந்தச் சாலைதானே தஞ்சாவூர் போகிறது!" என்றான் வந்தியத்தேவன்.
"இந்த சாலை தஞ்சாவூருக்குத்தான் போகிறது ஆனால் இதில் முக்கியமானவர்கள் மட்டுமேபோகலாம்; மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது!" என்றான் வீரன்.
"அப்படியா? ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன்தான்!" என்றான் வந்தியத்தேவன்.
அதைக் கேட்ட அவ்வீரன் புன்னகை செய்துவிட்டு, "தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய்?" என்றான்.
"என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார்; அவருக்கு நோய் என்றறிந்து பார்க்கப் போகிறேன்" என்று கூறினான் வந்தியத்தேவன்.
"உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார்? அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா?"
"இல்லை, இல்லை; சத்திரத்தில் மணியக்காரராயிருக்கிறார்!"
"ஓகோ! அப்படியா! சரி, எங்களுக்கு முன்னால் நீ போவதுதானே? ஏன் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறாய்?"
"குதிரை களைத்துப் போயிருக்கிறது ஐயா! அதனாலேதான்! இல்லாவிடில் உங்கள் முதுகைப்பார்த்துக் கொண்டே வருவதில் எனக்கு என்ன திருப்தி?"
இப்படிப் பேசிக் கொண்டே வந்தியத்தேவன் பல்லக்கின் அருகில் வந்து விட்டான். உடனே அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும் புலப்பட்டு விட்டது. குதிரையைக் கால்களால் அமுக்கி, முகக்கயிற்றை இழுத்து, பல்லக்கின் பின் தண்டைத் தூக்கியவர்களின் பேரில் விட்டடித்தான். அவர்கள் பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள்.
வந்தியத்தேவன் உடனே, "மஹாராஜா! மஹாராஜா! பல்லக்குத் தூக்கும் ஆள்கள் என் குதிரையை இடிக்கிறார்கள்! ஐயோ! ஐயோ!" என்று கத்தினான். பல்லக்கை மூடியிருந்த திரை சலசலத்தது.
பக்க தலைப்பு
இருபத்திரண்டாம் அத்தியாயம்
வேளக்காரப் படை
முதலில், பல்லக்கின் வௌிப்புறத்திரை - பனை மரச் சின்னம் உடைய துணித் திரை -விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன்பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெரிந்தது. வந்தியத்தேவன் இனி, தான் குதிரை மேலிருப்பதுதகாது என்று எண்ணி ஒரு நொடியில் கீழே குதித்தான்.
சிவிகையின் அருகில் ஓடி வந்து, "இளவரசே! இளவரசே! பல்லக்குச் சுமக்கும் ஆட்கள்..." என்று சொல்லிக் கொண்டே அண்ணாந்து பார்த்தான்.
மீண்டும் உற்றுப் பார்த்தான்; கண்ணிமைகளை மூடித் திறந்து மேலும் பார்த்தான்; பார்த்த கண்கள் கூசின! பேசிய நாக் குழறியது. தொண்டையில் திடீரென்று ஈரம் வற்றியது.
"இல்லை, இல்லை! தாங்கள்.. பழுவூர் இழவரசி!.. பளுவூர் இரவளசி... உங்கள் ஆட்களின் குதிரை என் பல்லக்கை இடித்தது!..." என்று உளறிக் கொட்டினான்.
இதெல்லாம் கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள் நடந்தது. பல்லக்கின் முன்னும் பின்னும் சென்ற வேல்வீரர்கள் ஓடி வந்து, வல்லவரையனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்படி அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள் என்பதுவல்லவரையனுக்கும் தெரிந்தது. அவனுடைய கையும் இயல்பாக உறைவாளிடம் சென்றது. ஆனால் கண்களை மட்டும்பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில் ஒளிர்ந்த மோகனாங்கியின் சந்திர பிம்ப வதனத்தினின்றும்அவனால் அகற்ற முடியவில்லை!
ஆம்; வல்லவரையன் எதிர்பார்த்ததற்கு மாறாக, இப்போது அப்பல்லக்கில் அவன் கண்டது ஒருநிஜமான பெண்ணின் வடிவந்தான்! பெண் என்றாலும், எப்படிப்பட்ட பெண்! பார்த்தவர்களைப் பைத்தியமாகஅடிக்கக்கூடிய இத்தகைய பெண்ணழகு இவ்வுலகில் இருக்கக்கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணியதே இல்லை!நல்லவேளையாக, அதே நிமிஷத்தில் வந்தியத்தேவனுடைய மூளை நரம்பு ஒன்று அசைந்தது. அதிசயமான ஓர்எண்ணம் அவன் உள்ளத்தில் உதயமாயிற்று. அதை உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான்.
ஒரு பெருமுயற்சி செய்து, தொண்டையைக் கனைத்து, நாவிற்குப் பேசும் சக்தியை வரவழைத்துக்கொண்டு, "மன்னிக்க வேண்டும்! தாங்கள் பழுவூர் இளையராணிதானே! தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இத்தனைதூரம் வந்தேன்!" என்றான்.
பழுவூர் இளையராணியின் பால் வடியும் முகத்தில் இளநகை அரும்பியது. அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு சிறிது விரிந்து, உள்ளே பதிந்திருந்த வெண்முத்து வரிசையை இலேசாகப் புலப்படுத்தியது. அந்தப் புன்முறுவலின் காந்தி நமது இளம் வீரனைத் திக்குமுக்காடித் திணறச் செய்தது. அவனருகில் வந்து நின்ற வீரர்கள் தங்கள் எஜமானியின் கட்டளைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்ததாகத் தோன்றியது. அந்தப் பெண்ணரசி கையினால் ஒரு சமிக்ஞை செய்யவே, அவர்கள் உடனே அகன்று போய்ச் சற்றுத் தூரத்தில் விலகி நின்றார்கள். இரண்டு வீரர்கள் பல்லக்கின் மீது மோதிக் கொண்டு நின்ற குதிரையைப் பிடித்துக் கொண்டார்கள்.
பல்லக்கிலிருந்த பெண்ணரசி வந்தியத்தேவனை நோக்கினாள். வந்தியத்தேவனுடைய நெஞ்சில்இரண்டு கூரிய வேல் முனைகள் பாய்ந்தன!
"ஆமாம்; நான் பழுவூர் இளைய ராணிதான்!" என்றாள் அப்பெண்மணி.
இவளுடைய குரலில் அத்தகைய போதை தரும் பொருள் என்ன கலந்திருக்க முடியும்? ஏன் இக்குரலைக் கேட்டு நமது தலை இவ்விதம் கிறுகிறுக்க வேண்டும்?
"சற்று முன்னால் நீ என்ன சொன்னாய்? ஏதோ முறையிட்டாயே? சிவிகை சுமக்கும் ஆட்களைப் பற்றி?"
காசிப்பட்டின் மென்மையும், கள்ளின் போதையும், காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும் ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா?.. அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே!
"பல்லக்கைக் கொண்டு வந்து அவர்கள் உன் குதிரை மீது மோதினார்கள் என்றா சொன்னாய்?"...
பழுவூர் ராணியின் பவள இதழ்களில் தவழ்ந்த பரிகாசப் புன்னகை, அந்த வேடிக்கையை அவள் நன்குரசித்ததாகக் காட்டியது. இதனால் வந்தியத்தேவன் சிறிது துணிச்சல் அடைந்தான்.
"ஆம், மகாராணி! இவர்கள் அப்படித் தான் செய்தார்கள்! என் குதிரை மிரண்டு விட்டது!" என்றான்.
"நீயும் மிரண்டு போய்த்தானிருக்கிறாய்! துர்கையம்மன் கோயில் பூசாரியிடம் போய் வேப்பிலை அடிக்கச் சொல்லு! பயம் தௌியட்டும்!"
இதற்குள் வந்தியத்தேவனுடைய பயம் நன்கு தௌிந்து விட்டது; அவனுக்குச் சிரிப்புச் கூட வந்து விட்டது.
பழுவூர் ராணியின் முகபாவம் இப்போது மாறிவிட்டது; குறுநகையின் நிலவு கோபக் கனலாயிற்று.
"வேடிக்கை அப்புறம் இருக்கட்டும்; உண்மையைச் சொல்! எதற்காகப் பல்லக்கின் மேல் குதிரையைக் கொண்டு வந்து மோதி நிறுத்தினாய்?"
இதற்குத் தக்க மறுமொழி சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்லாவிட்டால்...? நல்லவேளையாக, ஏற்கெனவே அந்த மறுமொழி வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாகியிருந்தது.
சற்றுத் தணிந்த குரலில், பிறர் கேட்கக் கூடாது என்று வேண்டுமென்றே தணித்த அந்தரங்கம் பேசும் குரலில், "தேவி! நந்தினி தேவி! ஆழ்வார்க்கடியார்...அவர் தான், திருமலையப்பர்... தங்களைச் சந்திக்கும்படி சொன்னார். அதற்காகவே இந்தச் சூழ்ச்சி செய்தேன்; மன்னிக்க வேண்டும்!" என்றான்.
இவ்விதம் சொல்லிக் கொண்டே பழுவூர் ராணியின் முகத்தை வந்தியத்தேவன் கூர்ந்து கவனித்தான். தன்னுடைய மறுமொழியினால் என்ன பயன் விளையப் போகிறதோ என்னும் ஆவலுடன் பார்த்தான். கனிமரத்தின் மேல் கல் எரிவது போன்ற காரியந்தான். கனி விழுமா? காய் விழுமா? எறிந்த கல் திரும்பிவிழுமா? அல்லது எதிர்பாராத இடி ஏதாவது விழுமா? பழுவூர் ராணியின் கரிய புருவங்கள் சிறிது மேலேசென்றன.கண்களில் வியப்பும் ஐயமும் தோன்றின. மறுகணத்தில் அந்தப் பெண்ணரசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.
"சரி; நடுச்சாலையில் நின்று பேசுவது உசிதம் அல்ல; நாளைக்கு நம் அரண்மனைக்கு வா! எல்லாவிஷயமும் அங்கே விவரமாகச் சொல்லிக் கொள்ளலாம்" என்றாள். வந்தியத்தேவனுடைய உள்ளம் பூரித்தது. நினைத்த காரியம் வெற்றி பெற்றுவிடும் போல காண்கிறது! ஆனால், முக்கால் கிணறு தாண்டிப் பயனில்லை;மற்றக் காற்பங்குக் கிணற்றையும் தாண்டியாக வேண்டும்.
"தேவி! தேவி! கோட்டைக்குள் என்னை விட மாட்டார்களே! அரண்மனைக்குள்ளும் விட மாட்டார்களே? என்ன செய்வது?" என்று பரபரப்புடன் சொன்னான்.
பழுவூர் ராணி உடனே பல்லக்கில் தன் அருகில் கிடந்த ஒரு பட்டுப் பையைத் திறந்து,அதற்குள்ளிருந்து ஒரு தந்த மோதிரத்தை எடுத்தாள்.
"இதை காட்டினால் கோட்டைக்குள்ளும் விடுவார்கள்; நம் அரண்மனைக்குள்ளும் விடுவார்கள்!" என்று சொல்லிக் கொண்டே கொடுத்தாள்.
வந்தியத்தேவன் அதை ஆவலுடன் வாங்கிக் கொண்டான். ஒருகணம் பனை இலச்சினை பொறித்த அந்தத் தந்த மோதிரத்தைப் பார்த்தான். மறுபடி நிமிர்ந்து ராணிக்கு வந்தனம் கூற எண்ணிய போது பல்லக்கின் திரைகள் மூடிக் கொண்டிருந்தன. ஆகா! பூரண சந்திரனை ராகு கவ்வும் போது சிறிது சிறிதாகக் கவ்வுகிறது. ஆனால் இந்தப் பல்லக்கின் திரைகள் அந்தப் பேசும் நிலா மதியத்தை ஒரு நொடியில் கபளீகரம் செய்து விட்டனவே!
"இனியாவது என்னைப் பின் தொடர்ந்து வராதே! அபாயம் நேரும்; நின்று மெதுவாக வா!" என்று பல்லக்குத் திரைக்குள்ளிருந்து பட்டுப் போன்ற குரல் கேட்டது. பிறகு பல்லக்கு நகர்ந்தது; வீரர்கள் முன்போலவே அதன் முன்னும் பின்னும் சென்றார்கள்.
வந்தியத்தேவன் குதிரையின் தலைக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சாலையோரமாக ஒதுங்கிநின்றான். பழுவூர் ஆள்களில் தன்னை அணுகி வந்து பேசியவன், இரண்டு மூன்று தடவை திரும்பித் திரும்பிப்பார்த்ததை அவனுடைய கண்கள் கவனித்து உள்மனதுக்குச் செய்தி அனுப்பின. ஆம்; அவனுடைய வௌி மனம்பல்லக்கிலிருந்த பழுவூர் ராணியின் மோகன வடிவத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இத்தனைநேரம் கண்டது, கேட்டது எல்லாம் உண்மைதானா? அல்லது ஒரு மாய மனோகரக் கனவா? இப்படியும் ஓர் அழகி,ஒரு சௌந்தரிய வடிவம், இந்தப் பூவுலகில் இருக்க முடியுமா!
அரம்பை, ஊர்வசி, மேனகை என்றெல்லாம் தேவமாதர்கள் இருப்பதாகப் புராணங்களில் சொல்வதுண்டு.அவர்களுடைய அழகு, முற்றும் துறந்த முனிவர்களின் தவத்தையும் பங்கம் செய்ததாகக் கேட்டதுண்டு. ஆனால் இந்தஉலகத்தில்...பெரிய பழுவேட்டரையர் இந்த மோகினியின் காலடியில் அடிமை பூண்டு கிடப்பதாக நாடுநகரங்களில் பேசுவதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம். இருந்தால், அதில் வியப்பு ஒன்றும் இராது! நரைதிரை மூப்புக் கண்டவரும், தேகமெல்லாம் போர்க் காயங்களுடன் கடூரமான தோற்றங் கொண்டவருமானபழுவேட்டரையர் எங்கே? சுகுமாரியும், கட்டழகியுமான இந்த இளம் மங்கை எங்கே? இவளுடைய ஒரு புன்னகையைப்பெறுவதற்காக அந்தக் கிழவர் என்ன காரியந்தான் செய்யமாட்டார்?... வெகு நேரம் சாலை ஓரத்தில்நின்று இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த பிறகு, வந்தியத்தேவன் குதிரை மேல் ஏறிக் கொண்டு மெள்ளமெள்ள அதைத் தஞ்சைக் கோட்டையை நோக்கிச் செலுத்தினான்.
சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பிரதான கோட்டை வாசலை அடைந்தான். கோட்டைக்குச் சற்றுத்தூரத்திலேயே நகரம் ஆரம்பமாகியிருந்தது. விதவிதமான பண்டங்கள் விற்கும் கடை வீதிகளும், பலவகைத்தொழில்களில் ஈடுபட்ட மக்கள் வாழும் தெருக்களும், கோட்டையைச் சுற்றி அடுக்கடுக்காக அமைந்திருந்தன. வீதிகளில் போவோரும் வருவோரும் பண்டங்கள் வாங்குவோரும் விலை கூறுவோரும் மாடு பூட்டிய வண்டிகளும்குதிரை பூட்டிய ரதங்களும் நிறைந்து, எங்கும் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்த வீதிகளுக்குள்ளே புகுந்துசென்று சோழ நாட்டுப் புதிய தலைநகரத்தில் வாழும் மக்களையும், அவர்கள் வாழும் விதத்தையும் பார்க்கவந்தியத்தேவனுக்கு மிக்க ஆவலாயிருந்தது. ஆனால் அதற்கெல்லாம் இப்போது அவகாசம் இல்லை. வந்தகாரியத்தை முதலில் பார்க்க வேண்டும்; வேடிக்கை பார்ப்பதெல்லாம் பிற்பாடு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தத் தீர்மானத்துடன் வந்தியத்தேவன் தஞ்சை நகரின் பிரதான வாசலை அணுகினான். கோட்டைவாசலின் பிரம்மாண்டமான கதவுகள் அச்சமயம் சாத்தியிருந்தன. வாசலில் நின்ற காவலர்கள் மக்களைஒதுங்கச் செய்து, வீதி ஓரங்களில் நிற்கும்படி செய்து கொண்டிருந்தார்கள். மக்களும் ஒதுங்கி நின்றார்கள். ஆம், அவரவர்கள் தங்கள் அலுவல்களைப் பார்த்துக் கொண்டு போவதற்குப் பதிலாக, ஏதோ ஊர்வலம் அல்லதுபவனி பார்ப்பதற்காகக் காத்திருப்பவர்களைப் போல் நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்வயோதிகர் எல்லாருமே ஆவலுடன் நின்றார்கள்.
கோட்டை வாசலுக்கு முன்னால் சிறிது தூரம் வரை வெறுமையாகவே இருந்தது. வாசலண்டைகாவலர்கள் மட்டும் நின்றார்கள். விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் ஆவல் கொண்டான். எல்லாரும் ஒதுங்கி நிற்கும் போது, தான் மட்டும் கோட்டை வாசல் காப்பாளரிடம் சென்று முட்டிக் கொள்ளஅவன் விரும்பவில்லை. அதிலிருந்து வீண் வாதமும் சண்டையும் மூளலாம். இப்போது தனக்குக் காரியம்முக்கியமே தவிர வீரியம் பெரிது அல்ல; வீண் சண்டைகளில் இறங்க இது தருணமல்ல.
எனவே, வந்தியத்தேவன் கோட்டை வாசலைக் கவனிக்கக்கூடிய இடத்தில் வீதி ஓரத்தில் ஒதுங்கிநின்றான். பக்கத்தில் கம்மென்று மலரின் மணம் வீசியது. திரும்பிப் பார்த்தான்; ஒரு வாலிபன்,திருநீறு ருத்திராட்சம் முதலிய சிவச் சின்னங்கள் தரித்தவன், இரண்டு கைகளிலும் இரண்டு பூக்கூடைகளுடன்நிற்பதைக் கண்டான்.
"தம்பி! எல்லாரும் எதற்காக வீதி ஓரம் ஒதுங்கி நிற்கிறார்கள்! ஏதாவது ஊர்வலம் கீர்வலம் வரப் போகிறதா?" என்று கேட்டான்.
"தாங்கள் இந்தப் பக்கத்து மனிதர் இல்லையா, ஐயா?"
"இல்லை, நான் தொண்டை நாட்டைச் சேர்ந்தவன்!"
"அதனால்தான் கேட்கிறீர்கள்; நீங்களும் குதிரை மேலிருந்து இறங்கிக் கீழே நிற்பது நல்லது."
வாலிபனோடு பேசுவதற்குச் சௌகரியமாயிருக்கட்டும் என்று வந்தியத்தேவன் குதிரை மீதிருந்துகுதித்தான்.
"தம்பி! எதற்காக என்னை இறங்கச் சொன்னாய்?" என்று கேட்டான்.
"இப்போது வேளக்காரப் படை அரசரைத் தரிசனம் செய்து விட்டுக் கோட்டைக்குள்ளிருந்து வரப் போகிறது; அதற்காகத்தான் இத்தனை ஜனங்களும் ஒதுங்கி நிற்கிறார்கள்."
"வேடிக்கை பார்க்கத்தானே?"
"ஆமாம்."
"நான் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் என்ன?"
"பார்க்கலாம்; ஆனால் வேளக்காரப் படை வீரர்கள் உங்களைப் பார்த்து விட்டால் ஆபத்து".
"என்ன ஆபத்து? குதிரையைக் கொண்டு போய் விடுவார்களா?"
"குதிரையையும் கொண்டு போவார்கள்; ஆள்களையே கொண்டு போய் விடுவார்கள் பொல்லாதவர்கள்."
"குதிரையையும் ஆளையும் கொண்டு போனால் சும்மா விட்டு விடுவார்களா?"
"விடாமல் என்ன செய்வது? வேளக்காரப் படையார் வைத்ததே இந்த நகரில் சட்டம். அவர்களைக் கேள்வி கேட்பார் கிடையாது. பழுவேட்டரையர்கள் கூட வேளக்காரப்படை விஷயத்தில் தலையிடுவது கிடையாது."
இச்சமயத்தில் கோட்டைக்கு உட்புறத்தில் பெரிய ஆர்ப்பாட்ட ஆரவாரங்கள் கேட்டன. நகரா முழங்கும் சத்தம், பறைகள் கொட்டும் சத்தம், கொம்புகள் ஊதும் சத்தம் இவற்றுடன் பல நூறு மனிதர் குரல்களிலிருந்து எழுந்த வாழ்த்தொலிகளும் கலந்து எதிரொலி செய்தன.
வேளக்கார வீரர் படைகளைப் பற்றி வந்தியத்தேவன் நன்கு அறிந்திருந்தான். பழந்தமிழ்நாட்டில், முக்கியமாகச் சோழ நாட்டில் இது முக்கிய ஸ்தாபனமாக இருந்து வந்தது. 'வேளக்காரர்' என்பவர்அவ்வப்போது அரசு புரிந்த மன்னர்களுக்கு மெய்க்காப்பாளர் போன்றவர். ஆனால் மற்ற சாதாரணமெய்க்காப்பாளருக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இவர்கள் 'எங்கள் உயிரைக் கொடுத்தாவதுஅரசரின் உயிரைப் பாதுகாப்போம்' என்று சபதம் செய்தவர்கள். தங்கள் அஜாக்கிரதையினாலோ, தங்களைமீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத்தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள். அத்தகைய கடூரசபதம் எடுத்துக் கொண்ட வீரர்களுக்கு, மற்றவர்களுக்கு இல்லாத சில சலுகைகள் இருப்பது இயல்புதானே?
கோட்டை வாசலின் கதவுகள் இரண்டும் 'படார், படார்' என்று திறந்து கொண்டன. முதலில் இரண்டுகுதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்கள் தங்களது வலக்கையில் உயரப் பறந்த கொடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கொடியின் தோற்றம் விசித்திரமாக இருந்தது. செந்நிறமான அக்கொடியில்மேலே புலியும், புலிக்கு அடியில் கிரீடமும் சித்தரிக்கப்பட்டிருந்தன. கிரீடத்துக்கு அடியில் ஒருபலிபீடமும், கழுத்து அறுபட்ட ஒரு தலையும், ஒரு பெரிய பலிக் கத்தியும் காட்சி அளித்தன. கொடியைப்பார்க்கச் சிறிது பயங்கரமாகவே இருந்தது. கொடி தாங்கிய குதிரை வீரர்களுக்குப் பின்னால் ஒரு பெரியரிஷபம் இரண்டு பேரிகைகளைச் சுமந்து கொண்டு வந்தது இரண்டு ஆட்கள் நின்று பேரிகைகளை முழங்கினார்கள்.
ரிஜபத்துக்குப் பின்னால் சுமார் ஐம்பது வீரர்கள் சிறுபறை, பெரும்பறை, தம்பட்டம் ஆகியவற்றைமுழக்கிக் கொண்டு வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்னும் ஐம்பது பேர் நீண்டு வளைந்த கொம்புகளை'பாம், பாம், பபாம்' என்று ஊதிக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கும் பின்னால் வந்த வீரர்கள் ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் பின்வரும் வாழ்த்தொலிகளை இடிமுழக்கக் குரலில் எழுப்பிக்கொண்டு வந்தார்கள்.
"பராந்தக சோழ பூமண்டல சக்கரவர்த்தி வாழ்க!" "வாழ்க, வாழ்க!" "சுந்தர சோழ மன்னர் வாழ்க!" "வாழ்க! வாழ்க!" கோழி வேந்தர் வாழ்க!" "வாழ்க! வாழ்க!" "தஞ்சையர் கோன் வாழ்க!" "வாழ்க! வாழ்க!" "வீரபாண்டியனைச் சுரம் இறக்கிய பெருமான் வாழ்க!" "வாழ்க! வாழ்க!" "மதுரையும் ஈழமும் தொண்டை மண்டலமும் கொண்ட கோ இராஜகேசரி வாழ்க!" "வாழ்க! வாழ்க!" "கரிகால் வளவன் திருக்குலம் நீடூழி வாழ்க!" "வாழ்க! வாழ்க!" "துர்க்கை மாகாளி பராத்பரி பராசக்தி வெல்க!" "வெல்க! வெல்க!" "வீரப் புலிக்கொடி பாரெல்லாம் பரந்து வெல்க!" "வெல்க! வெல்க!" "வெற்றிவேல்!" "வீரவேல்!"
நூற்றுக்கணக்கான வலியுள்ள குரல்களிலிருந்து எழுந்த மேற்படி கோஷங்கள் கேட்போரைமெய்சிலிர்க்கச் செய்தன. கோட்டை வாசலின் வழியாக வந்த போது அந்தக் கோஷங்கள் உண்டாக்கியபிரதித்வனிகளும் சேர்ந்து கொண்டன. வீதி ஓரங்களில் நின்ற மக்களில் பலரும் கோஷத்தில் கலந்துகொண்டார்கள். இவ்விதம், (தமிழ்நாட்டின் தெய்வமான முருகனுக்கு 'வேளக்காரன்' என்று ஒரு பெயர் உண்டுஎன்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்; 'பக்தர்களைக் காப்பாற்றுவதாகச் சபதம் பூண்ட தெய்வம்' என்பதால்முருகனுக்கு அப்பெயர் வந்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்). வேளக்காரப் படை வீரர்கள் தஞ்சைக்கோட்டை வாசல் வழியாக வௌிவரத் தொடங்கி, வீதி வழியாகச் சென்று, தூரத்தில் மறையும் வரையில்ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தது.
பக்க தலைப்பு
இருபத்து மூன்றாம் அத்தியாயம்
அமுதனின் அன்னை
வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில்சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக்கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்குவிநியோகித்தான்.பிறகு வெறும் கூடையைக் கடைக்காரனுடைய தலையிலே கவிழ்த்த போது, வீரர்களும்வீதியில் சென்றவர்களும் 'ஹஹ்ஹஹ்ஹா' என்று இரைந்து சிரித்தார்கள். இன்னொரு வீரன் வழியில்எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டியின் கையிலிருந்த பூக்கூடையைப் பிடுங்கினான். பூவையெல்லாம் வாரி இறைத்துக்கொண்டே "பூமாரி பொழிகிறதடா!" என்றான். அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள்குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள். எதிரில் வந்த ஒரு மாட்டு வண்டியை இன்னொரு வீரன்நிறுத்தி, மாட்டை வண்டியிலிருந்து பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான். மாடு மிரண்டு மக்கள்கூட்டத்திடையே புகுந்து சிலரைத் தள்ளிக் கொண்டு ஓடியது; மீண்டும் ஒரே கோலாகலச் சிரிப்புத்தான்!
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், "ஆகா! பழுவேட்டரையரின் வீரர்களைப்போல் இவர்களும் விளையாடுகிறார்கள். இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது. நல்லவேளை, இவர்களுடைய பார்வை நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம். இல்லாவிடில் ஒரு சண்டைஏற்பட்டிருக்கும். வந்த காரியம் கெட்டுப் போயிருக்கும்" என்று எண்ணிக் கொண்டான்.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசமும் அவனுக்குப் புலனாயிற்று. வேளக்காரப் படை வீரர்களின் விளையாடல்களை இங்குள்ள ஜனங்கள் அவ்வளவாக வெறுக்கவில்லை. அவர்களுடைய கொம்மாளத்தில் ஜனங்களும் சேர்ந்து சிரித்துக் குதூகலித்தார்கள்! இதைப் பற்றிக் கேட்கலாம் என்று திரும்பிப் பார்த்தபோது பூக்குடலைகளுடன் நின்ற சிறுவனை வந்தியத்தேவன் காணவில்லை. கூட்டத்திலும் கோலாகலத்திலும் அந்த வாலிபன் எங்கேயோ போய் விட்டான். ஒருவேளை அவனுடைய வேலையைப் பார்க்கப் போயிருக்கக்கூடும்.
வேளக்காரப் படை மாலையில் கோட்டையிலிருந்து வௌியேறிய பிறகு மற்ற யாரையும் உள்ளேவிடுவதில்லையென்று வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். இரவு பகல் எந்த நேரத்திலும் கோட்டைக்குள்பிரவேசிக்கும் உரிமை பெற்றவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அமைச்சர்களும்,தண்டநாயகர்களுந்தான். பழுவேட்டரையர்களின் குடும்பத்தாருக்கும் அவ்வுரிமை உண்டு என்று வந்தியத்தேவன்தெரிந்து கொண்டான். எனவே, இராத்திரியே கோட்டைக்குள் போக வேண்டும் என்ற உத்தேசம் அவனுக்குமாறி விட்டது. தன்னிடமிருந்த இலச்சினை மோதிரத்தைக் காட்டிச் சோதனை செய்ய வந்தியத்தேவன்விரும்பவில்லை. அதை விட இரவு கோட்டைக்கு வௌியிலேயே தங்கி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டுநாளை உதயத்துக்குப் பிறகு கோட்டைக்குள் செல்வதே நல்லது. இராத்திரியில் அப்படியே கோட்டைக்குள்பிரவேசித்தாலும் அரசரைத் தரிசித்து ஓலை கொடுப்பது இயலாத காரியமேயல்லவா?
கோட்டை மதிலைச் சுற்றிலும் இருந்த வீதிகளின் வழியாக வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக்கொண்டே மெதுவாகச் சென்றான். அன்று பல காத தூரம் பிரயாணம் செய்திருந்த அவனுடைய குதிரை மிகக்களைத்திருந்தது. சீக்கிரத்தில் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியதுதான். இல்லாவிடில் நாளைக்கு அவசியம்ஏற்படும் போது இக்குதிரையினால் பயனில்லாமல் போய் விடும்! வசதியாகத் தங்குவதற்கு ஓரிடம் விரைவில்கண்டுபிடித்தாக வேண்டும்! தஞ்சைபுரி அப்போது புதிதாகப் பல்கிப் பெருகிப் பரந்து வளர்ந்து கொண்டிருந்தநகரம். அதிலும் அப்போது மாலை நேரம்; நூற்றுக்கணக்கான வீதி விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிவீசத்தொடங்கியிருந்தன.
வீதிகளெல்லாம் 'ஜே, ஜே' என்று ஒரே ஜனக் கூட்டம். வௌியூர்களிலிருந்து பல அலுவல்களின்நிமித்தமாக வந்தவர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சோழ நாட்டுப்பட்டணங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வந்தவர்களும் இருந்தார்கள். புதிதாக சோழ சாம்ராஜ்யத்துக்குஉட்பட்டிருந்த நாடுகளிலிருந்து வந்தவர்களும் காணப்பட்டார்கள். பொருணை நதியிலிருந்து பாலாற்றங்கரைவரையிலும் கீழைக் கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரை வரையிலும் பரந்திருந்த தேசங்களிலிருந்துதலைநகருக்குப் பலர் வந்திருந்தார்கள். விந்திய மலைக்கு வடக்கேயிருந்து வந்தவர்களும் கடல் கடந்தநாடுகளிலிருந்து வந்தவர்களுங்கூடச் சிலர் அம்மாநகரின் வீதிகளில் ஆங்காங்கே தோன்றினார்கள்.
ஆப்பம், அதிரசம் முதலிய தின்பண்டங்கள் விற்ற கடைகளில் மக்கள் ஈ மொய்ப்பது போல்மொய்த்து, அப்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். வாழைப் பழங்களும் வேறு பலவிதக் கனிகளும் மலை மலையாகக் குவிந்து கிடந்தன. பூக் கடைகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. முல்லையும்மல்லிகையும் திருஆத்தியும் செண்பகமும் புஷ்பக் குன்றுகளைப் போல் காட்சி தந்தன. அந்த மலர்க் குன்றுகளைச் சுற்றிப் பெண்மணிகள் வண்டுகளைப் போல் ரீங்காரம் செய்து கொண்டு மொய்த்தார்கள்.
புஷ்பக் கடைகளினருகில் சென்றதும் வந்தியத்தேவன் அந்தப் பூக்கார வாலிபனை நினைத்துக்கொண்டான். அவனை மறுபடியும் பார்க்கக்கூடுமானால் எவ்வளவு சௌகரியமாயிருக்கும்? இந்த நகரில்வசதியாகத் தங்குவதற்கு ஓரிடம் அவனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமல்லவா?... இப்படி எண்ணியபோதேசற்றுத் தூரத்தில் அந்த வாலிபன் வந்து கொண்டிருப்பதை வந்தியத்தேவன் கண்டான். குதிரையிலிருந்து இறங்கிஅவனை அணுகினான்.
"தம்பி! பூக்குடலைகளில் ஒன்றையும் காணோமே" பூவெல்லாம் எங்கே? விற்றாகிவிட்டதா?"என்றான்.
"விற்பதற்காக நான் பூக் கொண்டு வரவில்லை. கோயில் பூஜைக்காகப் பூக் கொண்டு வந்தேன்;பூவைக் கொடுத்தாகி விட்டது; வீட்டுக்குத் திரும்பிப் போகிறேன்."
"எந்தக் கோயிலுக்கு நீ இந்தப் புஷ்பக் கைங்கரியம் செய்கிறாய்?"
"தளிக்குளத்தார் ஆலயம் என்று கேட்டதுண்டா?"
"ஓகோ! தஞ்சைத் தளிக்குளத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கோவில் தான் போலிருக்கிறது பெரிய கோவிலா அது?"
"இல்லை; சிறிய கோவில்தான் கொஞ்சகாலமாக இத்தஞ்சையில் துர்க்கையம்மன் கோவிலுக்குத்தான் மகிமை அதிகம். அங்கேதான் பூஜை, பொங்கல், பலி திருவிழா ஆர்ப்பாட்டங்கள் அதிகம். அரச குடும்பத்தாரும் பழுவேட்டரையர்களும் துர்க்கை அம்மன் கோவிலுக்குத்தான் அதிகமாகப் போகிறார்கள். தளிக்குளத்தார் கோவிலுக்கு அவ்வளவு மகிமை இல்லை; தரிசனம் செய்ய ஜனங்கள் அவ்வளவாகவருவதில்லை..."
"நீ இந்தப் புஷ்பக் கைங்கரியம் செய்து வருகிறாயே? இதற்காக ஏதேனும் சன்மானம் உண்டா?"
"எங்கள் குடும்பத்துக்கு இதற்காக மானியம் இருக்கிறது. என் பாட்டனார் காலத்திலிருந்து கண்டராதித்த சக்கரவர்த்தி விட்ட நிவந்தம் உண்டு. தற்சமயம் நானும் என் தாயாரும் இந்தக் கைங்கரியத்தைச் செய்து வருகிறோம்."
"தளிக்குளத்தார் கோயில் செங்கல் திருப்பணியா? அல்லது கருங்கல் பணி செய்திருக்கிறார்களா?" என்று வல்லவரையன் கேட்டான்.
அவன் வருகின்ற வழியில் பல செங்கல் கோயில்களுக்குக் கருங்கல் திருப்பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்திருந்தபடியால் இவ்விதம் கேட்டான்.
"இப்போது செங்கல் கோயில்தான்; கருங்கல் திருப்பணி விரைவில் தொடங்கும் என்று கேள்வி. இந்தத் திருப்பணியை உடனே நடத்த வேண்டும் என்று பழையாறைப் பெரிய பிராட்டியார் விரும்புகிறாராம் ஆனால்.." என்று அந்த வாலிபன் தயங்கி நிறுத்தினான்.
"ஆனால் என்ன?.."
"பராபரியாகக் கேள்விப்பட்டதையெல்லாம் சொல்வதில் என்ன பயன்? பகலில் பக்கம் பார்த்துப்பேசு, இரவில் அதுவும் பேசாதே என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுவோ நாற்சந்தியும் கூடும் இடம்;நம்மைச் சுற்றிலும் ஜனங்கள்..."
"இந்த மாதிரி இடத்திலே நின்றுதான் தைரியமாக எந்த ரகசியமும் பேசலாம். இந்தப் பெருங்கூட்டத்திலும் இரைச்சலிலும் நம்முடைய பேச்சு யார் காதிலும் விழாது."
"பேசுவதற்கு இரகசியம் என்ன இருக்கிறது?" என்றான் அந்த வாலிபன், வந்தியத்தேவனைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்து.
ஆகா! இந்தப் பிள்ளை நல்ல புத்திசாலி! இவனுடன் சிநேகம் செய்து கொள்வதில் லாபம் உண்டு!பல விஷயங்களை அறியலாம்! ஆனால் இவன் மனத்தில் வீண் சந்தேகத்தை உண்டாக்கக் கூடாது - இவ்விதம்வந்தியத்தேவன் எண்ணி, "ஆமாம்; இரகசியம் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லைதான். போனால் போகட்டும்,தம்பி! இரவு எங்கேயாவது நான் நிம்மதியாகத் தூங்க வேண்டும். வெகு தூரம் பிரயாணம் செய்து மிகவும்களைப்படைந்திருக்கிறேன். எங்கே தங்கலாம்? ஒரு நல்ல விடுதிக்கு வழிகாட்டி எனக்கு உதவி செய்யமுடியுமா?" என்று கேட்டான்.
"இந்த நகரில் தங்குவதற்கு இடங்களுக்கு என்ன குறைவு? சத்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன;அயல்நாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கென்று ஏற்பட்ட ராஜாங்க விடுதிகளும் இருக்கின்றன. ஆனால், உங்களுக்குஇஷ்டமாயிருந்தால்..."
"தம்பி! உன் பெயர் என்ன?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"அமுதன்; சேந்தன் அமுதன்."
"அடடா! எவ்வளவு நல்ல பெயர்? கேட்கும்போதே என் நாவில் அமுது ஊறுகிறதே... எனக்குஇஷ்டமாயிருந்தால் உன்னுடைய வீட்டுக்கு வந்து தங்கலாம் என்றுதானே நீ சொல்லத் தொடங்கினாய்?"
"ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?"
"என்னிடம் மந்திர வித்தை இருக்கிறது; அதனால் தெரிந்து கொண்டேன் உன் வீடு எங்கே இருக்கிறது?"
"நகர எல்லையைத் தாண்டிக் கூப்பிடு தூரத்தில் எங்கள் பூந்தோட்டம் இருக்கிறது; தோட்டத்துக்குள்ளேஎங்கள் வீடும் இருக்கிறது" என்றான் அமுதன்.
"ஆகா! அப்படியானால் உன் வீட்டுக்கு நான் வந்தே தீருவேன். இந்தப் பட்டணத்துச் சந்தடியில் என்னால் இன்றிரவைக் கழிக்க முடியாது. மேலும் உன்னைப் போன்ற உத்தமப் புதல்வனைப் பெற்ற உத்தமியைத் தரிசிக்க விரும்புகிறேன்."
"என்னைப் பெற்ற அன்னை உத்தமிதான்; ஆனால் துர்ப்பாக்கியசாலி..."
"அடாடா! ஏன் அவ்வாறு சொல்கிறாய்"
"ஒருவேளை உன் தந்தை..."
"என் தந்தை இறந்துதான் போனார்; ஆனால் அது மட்டுமில்லை என் தாய் பிறவியிலேயே துர்பாக்கியசாலி. பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள் வாருங்கள் போகலாம்."
அரை நாழிகை நேரம் நடந்து அவர்கள் நகர்ப்புறத்துக்கு அப்பாலிருந்த பூந்தோட்டத்துக்கு வந்துசேர்ந்தார்கள். இரவில் மலரும் பூக்களின் இனிய மணம் வந்தியத்தேவனுக்கு அபூர்வ சுகமயக்கத்தைஊண்டாக்கியது. நகரத்தின் வீதிகளில் எழுந்த கோலாகல இரைச்சலும் சந்தடியும் அங்கே அவ்வளவாகக்கேட்கவில்லை. பூந்தோட்டத்தின் மத்தியில் ஓட்டு வீடு ஒன்று இருந்தது. பக்கத்தில் இரு குடிசைகள்இருந்தன.தோட்ட வேலையில் உதவி செய்த இரு குடும்பத்தார் அக்குடிசைகளில் இருந்தார்கள். அவர்களில்ஒருவனை அமுதன் அழைத்து, வந்தியத்தேவனுடைய குதிரைக்குத் தீனி வைத்து மரத்தடியில் கட்டி வைக்கும்படிகூறினான்.
பிறகு, வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். அமுதனுடைய தாயாரைப் பார்த்ததும் வந்தியத்தேவனுக்குஅவளுடைய துர்ப்பாக்கியம் இத்தகையது என்று தெரிந்து விட்டது. அந்த மூதாட்டி பேசும் சக்தியற்ற ஊமை,காதும் கேளாது என்று தெரிந்தது. ஆனால் அந்த மாதரசியின் முகத்தில் கருணையும் அன்பும் நிறைந்துததும்பியதை வந்தியத்தேவன் கண்டான். கூரிய அறிவின் ஒளியும் அம்முகத்திலிருந்து வீசியது. பொதுவாக, ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனமுற்றவர்கள் மற்றபடி சிறந்த அறிவுக் கூர்மையுள்ளவர்களாக விளங்குவதுசிருஷ்டி விசித்திரங்களில் ஒன்று அல்லவா?
அமுதன் சில சமிக்ஞைகள் செய்ததும் அந்த மூதாட்டி வந்திருப்பவன் அயல் தேசத்திலிருந்து வந்தவிருந்தாளி என்று தெரிந்து கொண்டாள். முகபாவத்தினாலேயே தன்னுடைய பரிவையும் வரவேற்பையும்தெரிவித்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் இலை போட்டு அந்த அம்மாள் உணவு பரிமாறினாள். முதலில்இடியாப்பமும் இனிப்பான தேங்காய்ப் பாலும் வந்தன. அந்த மாதிரி இனிய பலகாரத்தை வந்தியத்தேவன் தன்வாழ்நாளில் அருந்தியதில்லை. பத்துப் பன்னிரண்டு இடியாப்பமும், அரைப்படி தேங்காய்ப் பாலும்சாப்பிட்டான். பிறகு புளிக்கறியும் சோளமாப் பணியாரமும் வந்தன; அவற்றையும் ஒரு கை பார்த்தான். அப்படியும் அவன் பசி அடங்கவில்லை; கடைசியாக காற்படி அரிசிச் சோறும் அரைப்படி தயிரும் நுங்கினான்!பிறகுதான் அவன் இலையிலிருந்து எழுந்தான்.
சாப்பிடும்போதே சில விஷயங்களை அமுதனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். தஞ்சைக்கோட்டைக்குள்ளே அப்போது சுந்தர சோழ சக்கரவர்த்தியையும் அவருடைய அரண்மனைப் பரிவாரங்களையும்தவிர, இன்னும் முக்கியமாக யார் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்தான். பெரிய பழுவேட்டரையர்,சின்ன பழுவேட்டரையர் இவர்களின் மாளிகைகளும் பரிவாரங்களும் அங்கு இருந்தன. தன பொக்கிஷம், தானியபண்டாரம் இரண்டும் கோட்டைக்குள் இருந்தபடியால் அவற்றைப் பரிபாலிக்கும் அதிகாரிகளும் கணக்கர்களும்இருந்தார்கள். சுந்தர சோழரின் அந்தரங்க நம்பிக்கைக்கும் அபிமானத்துக்கும் பாத்திரரான அநிருத்தபிரம்மராயர் என்னும் அமைச்சரும், திருமந்திர ஓலை நாயகரும் கோட்டைக்குள்ளேதான் வசித்தார்கள். மற்றும்சின்னப் பழுவேட்டரையரின் தலைமையில் தஞ்சைக் கோட்டையைக் காவல் புரிந்த வீரர்களும் அவர்களுடையகுடும்பத்தாரும் அங்கேயே தங்கியிருந்தார்கள். பொன், வெள்ளி நகை வியாபாரிகளும், நவரத்தினவியாபாரிகளும், பொன்னாசாரிகளும் கோட்டைக்குள் இடம் அளிக்கப்பட்டிருந்தார்கள். பெரிய பழுவேட்டரையரின் கீழ் வரி விதிக்கும் வேலை பார்த்த நூற்றுக்கணக்கான அலுவலர்கள் இருந்தனர். துர்க்கையம்மன் கோயில், கோட்டைக்குள்ளேதான் ஒரு மூலையில் இருந்தது. கோவில் பூசாரிகளும் பணிவிடையாளரும் கணிகையரும் கோவிலுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு, "அமைச்சர்கள் அனைவரும் தற்சமயம் கோட்டையில்இருக்கிறார்களா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"எல்லாரும் எப்படி இருப்பார்கள்? பற்பல காரியமாக வௌியிலே போய்க் கொண்டும் வந்து கொண்டும் தான் இருப்பார்கள்.அநிருத்த பிரமராயர் சில காலமாகவே நகரில் இல்லை. அவர் சேர நாடு சென்றிருப்பதாகக் கேள்வி. பெரிய பழுவேட்டரையர் நாலு தினங்களுக்கு முன்னால் வௌியே சென்றார். கொள்ளிடத்துக்கு வடக்கே நடுநாட்டுக்குச் சென்றதாகக் கேள்வி."
"போனவர் ஒருவேளை திரும்பி வந்திருக்கலாம் அல்லவா? உனக்குத் தெரியாதாக்கும்!"
"இன்று சாயங்காலம் பழுவூர் இளையராணியின் பல்லக்கு வந்தது. கோட்டை வாசலில் நானே பார்த்தேன்; ஆனால் பழுவேட்டரையர் வரவில்லை. ஒருவேளை வழியில் எங்கேனும் தங்கி விட்டு நாளை வரக்கூடும்."
"தம்பி! இளவரசர் மதுராந்தகத் தேவரும் கோட்டைக்குள்ளேதானே தங்கியிருக்கிறார்?"
"ஆமாம்; பழுவேட்டரையர் அரண்மனைக்குப் பக்கத்தில் மதுராந்தகரின் மாளிகை இருக்கிறது. சின்னப் பழுவேட்டரையரின் திருமகளை மணம் புரிந்த மருமகர் அல்லவா?"
"ஓஹோ! அதுவும் அப்படியா? எனக்கு இது வரையில் தெரியாதே?"
"ரொம்பப் பேருக்குத் தெரியாதுதான் சக்கரவர்த்தியின் தேக அசௌகர்யத்தை முன்னிட்டுத்திருமணத்தைக் கோலாகலமாக நடத்தவில்லை."
"நல்லது; மதுராந்தகத்தேவர் இப்போது கோட்டைக்குள்ளேதானே இருக்கிறார்?"
"கோட்டைக்குள்ளேதான் இருக்க வேண்டும்; ஆனால் மதுராந்தகத் தேவர் சாதாரணமாக வௌியில்வருவதில்லை. மக்கள் அவரைப் பார்க்க முடிகிறதும் இல்லை. சிவபக்தியில் ஈடுபட்டுப் பெரும்பாலும்யோகத்திலும் தியானத்திலும் பூஜையிலும் காலம் கழிப்பதாகக் கேள்வி."
"ஆனாலும் இத்தனை நாளைக்குப் பிறகு கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே?"
"ஆமாம்; அது கொஞ்சம் வியப்பான காரியந்தான். கலியாணத்துக்குப் பிறகு மாப்பிள்ளைத் தேவரின் மனமே மாறிப் போயிருப்பதாயும் சொல்கிறார்கள்; நமக்கென்ன அதைப் பற்றி? பெரிய இடத்துப் பேச்சுப் பேசாமலிருப்பதே நல்லது..."
சேந்தன் அமுதனிடம் இன்னும் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆவல்வந்தியத்தேவனுக்கு இருந்தது. ஆனால் அதிகமாக ஏதேனும் கேட்டுச் சந்தேகத்தைக் கிளப்பி விட அவன்விரும்பவில்லை. இத்தகைய சாதுப்பிள்ளையின் சிநேகம் தனக்குப் பேருதவியாயிருக்கும். தஞ்சையில் தங்கஇம்மாதிரி ஒரு வீடு அகப்பட்டதும் தன்னுடைய அதிர்ஷ்டந்தான். அதையெல்லாம் கெடுத்துக் கொள்வானேன்?மேலும், நீண்ட பிரயாணக் களைப்புடன் முதல்நாள் இரவு கண் விழித்ததும் சேர்ந்து கொண்டது. கண்ணைச்சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. சேந்தன் அமுதன் அவனுடைய நிலையை அறிந்து விரைவில் படுக்கைபோட்டுக் கொடுத்தான்.
தூக்க மயக்கத்தில் கடைசியாக வந்தியத்தேவனுடைய மனத்தில் பழுவூர் இளையராணியின் திருமுகம்வந்தது. அப்பப்பா! என்ன அழகு! என்ன ஜொலிப்பு! அந்த மாயமோகன வடிவத்தைத் திடீரென்று அவன்பார்த்ததும் அடியோடு செயல் இழந்து கண் கொட்டாமல் திகைத்து நின்றது இன்னொரு அனுபவத்தை அவனுக்குநினைவூட்டியது.
சிறுபிராயத்தில் ஒரு சமயம் காட்டு வழியாய்ப் போய்க் கொண்டிருக்கையில் திடீரென்றுபடமெடுத்து ஆடிய பாம்பு ஒன்று அவன் முன் எதிர்பட்டது. அதன் அழகே அழகு! கவர்ச்சியே கவர்ச்சி!வந்தியத்தேவனால் பாம்பின் படத்திலிருந்து கண்ணை அகற்றவே முடியவில்லை; கண் கொட்டவும் முடியவில்லை. பார்த்தது பார்த்தபடி நின்றான்; பாம்பும் ஆடிக் கொண்டேயிருந்தது! பாம்பு ஆடிய போது அதற்கிணங்க, இவன்உடம்பும் ஆடியது - இதன் முடிவு என்ன ஆகியிருக்குமோ தெரியாது. திடீரென்று ஒரு கீரிப்பிள்ளை வந்துபாம்பின் மீது பாய்ந்தது. இரண்டும் துவந்த யுத்தம் தொடங்கின. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வந்தியத்தேவன் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டான்!....
சீச்சீ! என்ன உதாரணம்! இந்தப் புவன மோகினியான சுந்தராங்கியைப் படமெடுத்த பாம்புக்காஒப்பிடுவது? இவளுடைய பால்வடியும் முகத்தை ஒரு தடவை பார்த்தாலும் பசி தீர்ந்து விடுமே?... நாளைக்குஅவளை மறுபடி காணப்போகிறோமல்லவா! அவளுடைய குரலிலேதான் என்ன மதுரம்! இவள் ஓர் அபூர்வமானஅழகிதான். ஆனால் குடந்தை சோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் பார்த்த அந்த இன்னொருபெண்?... அவளுடைய முகத்திலும் காந்தி ஒளி விட்டது! அழகு சுடர் விட்டது!... இரண்டு முகங்களும்சுந்தர முகங்களாயினும் அவற்றுக்குள் எத்தனை வேற்றுமை! அதில் கம்பீரமும் பெருந்தன்மையும்; இதில் மோகனமும்கவர்ச்சியும்!.. இப்படி அவன் உள்ளம் அந்த இரு மங்கையரின் முகங்களையும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தபோது,மற்றொரு மங்கை வந்து குறுக்கிட்டாள். சர்வாதிகாரக் கொடுங்கோல் அரசியான நித்திராதேவிவந்தியத்தேவனைப் பரிபூரணமாக ஆட்கொண்டாள்.
பக்க தலைப்பு
இருபத்து நான்காம் அத்தியாயம்
காக்கையும் குயிலும்
இரவெல்லாம் கட்டையைப் போல் கிடந்து தூங்கிவிட்டுக் காலையில் சூரியன் உதித்த பிறகேவந்தியத்தேவன் துயிலெழுந்தான். விழித்துக் கொண்ட பிறகும் எழுந்திருக்க மனம் வராமல் படுத்திருந்தான். மேலக்காற்று விர்ரென்று வீச, மரஞ்செடிகளின் கிளைகளும் இலைகளும் ஒன்றோடொன்று உராய்ந்து 'சோ' என்றசத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அந்தச் சுருதிக்கிணங்க, ஓர் இளம் பிள்ளையின் இனிய குரல்சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடலைப் பண்ணுடன் பாடியது.
"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!"
இதைக் கேட்ட வந்தியத்தேவன் கண்ணை விழித்துப் பார்த்தான். அவனுக்கெதிரே பூந்தோட்டத்தில்கொன்னை மரங்கள் சரஞ்சரமாகப் பொன் மலர்களைத் தொங்கவிட்டுக் கொண்டு காட்சியளித்தன. சேந்தன்அமுதன் ஒரு கையில் குடலையும் இன்னொரு கையில் அலக்கும் வைத்துக் கொண்டு, வாயினால் பாடிக் கொண்டே,கொன்றை மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அதிகாலையிலே எழுந்து ஸ்நானம் செய்து திருநீறுபுனைந்திருந்த சேந்தன் அமுதன், சிவபக்தனாகிய மார்க்கண்டனைப் போல் தோன்றினான். இப்படிஇனிமையாகவும் அழகாகவும் பாடும் பிள்ளையின் குரலைக் கேட்க அவனுடைய அன்னை கொடுத்து வைக்கவில்லையே என்ற எண்ணத்துடன் வந்தியத்தேவன் எழுந்தான். அமுதனைப் போல் தானும் பூந்தோட்டம் வளர்த்துச் சிவ கைங்கரியம் செய்து கொண்டு ஏன் ஆனந்தமாய்க் காலங் கழிக்கக் கூடாது? எதற்காகக் கையில் வாளும் வேலும் ஏந்திக் கொண்டு ஊர் ஊராக அலைய வேண்டும்? எந்த நேரமும் பிறரைக் கொல்லுவதற்கும் பிறரால் கொல்லப்படுவதற்கும் ஆயத்தமாக ஏன் திரிய வேண்டும்? இத்தகைய எண்ணங்கள் அவன் மனத்தில் உதித்தன. ஆனால் சிறிது நேரத்தில் மனம் மாறியது. சேந்தன் அமுதனைப் போல் உலகில் எல்லாருமே சிவபக்தர்களாயிருந்து விடுவார்களா? திருடர்களும் கொள்ளைக்காரர்களும் வஞ்சகர்களும் எளியவர்களைத்துன்புறுத்துவதில் களிப்படைகிறவர்களும் இருக்கத்தான் இருப்பார்கள். இவர்களையெல்லாம் அடக்கி,நியாயத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட அரசாங்கம் வேண்டும். அரசாங்கம் நடத்த அரசர்களும் அமைச்சர்களும்வேண்டும்.இவர்களுக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேளக்காரப் படைகளும் வேண்டும். தன்னைப் போல்அரசர்களும் ஓலை கொண்டு போகவும் ஆட்கள் வேண்டும்.... ஆம்! இன்று சுந்தர சோழ சக்கரவர்த்தியைப்பார்த்தே தீரவேண்டும். பெரிய பழுவேட்டரையர் திரும்பி வருவதற்குள் சக்கரவர்த்தியைப் பார்த்தால்தான்பார்த்தது. அவர் வந்து விட்டால் அது சாத்தியமில்லாமலே போகலாம்....
பூந்தோட்டத்துக்குப் பக்கத்திலேயிருந்த தாமரைக் குளத்தில் குளித்து விட்டு வந்து, வல்லவரையன்ஆடை ஆபரணங்கள் அணிந்து தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டான். சக்கரவர்த்தியைத் தரிசனம் செய்யப்போகும்போது சாதாரணமாகப் போகலாமா? இதற்காகத் தான் அலங்கரித்துக் கொண்டானா, அல்லது பழுவூர்இளையராணியை அன்று மீண்டும் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமும் அவன் மனத்திற்குள் இருந்ததா என்றுநாம் சொல்ல முடியாது.
காலை உணவுக்குப் பிறகு சேந்தன் அமுதன் உச்சிவேளை பூஜைக் கைங்கரியத்துக்காகப் பூக்குடலையுடன்கிளம்ப, வந்தியத்தேவன் சக்கரவர்த்தியின் தரிசனத்துக்காகப் புறப்பட்டான் இருவரும் நடந்தே சென்றார்கள். கோட்டைக்குள் குதிரையைக் கொண்டு போக வேண்டாம் என்று வல்லவரையன் முன்னமேயே தீர்மானித்திருந்தான். குதிரை நன்றாக இளைப்பாற அவகாசம் கொடுப்பது அவசியம். சீக்கிரத்தில் அக்குதிரையை, தான் துரிதப்பிரயாணத்துக்கு உபயோகப்படுத்த வேண்டி வரலாம், யார் கண்டது? எப்படியானாலும், அது இங்கே இருப்பதுதான்நல்லது. கோட்டை வாசல் போய்ச் சேரும் வரையில் அமுதனுடன் பேச்சுக் கொடுத்து இன்னும் சில விவரங்களைத்தெரிந்து கொண்டான்.
"உன் அன்னையைத் தவிர உனக்கு வேறு உற்றார் உறவினர் யாரும் கிடையாதா?" என்று வல்லவரையன்கேட்டதற்கு அமுதன் கூறியதாவது; "இருக்கிறார்கள், என் அன்னையுடன் கூடப் பிறந்த ஒரு தமக்கையும் தமையனும்உண்டு. தமக்கை காலமாகி விட்டாள்; தமையனார் கோடிக்கரைக் குழகர் கோயிலில் புஷ்ப கைங்கரியம்செய்கிறார். அத்துடன் இரவு நேரங்களில் கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றிப் பாதுகாக்கும் பணியும்செய்து வருகிறார்... அவருக்கு ஒரு புதல்வனும் புதல்வியும் உண்டு; புதல்வி..." என்று நிறுத்தினான்.
"புதல்விக்கு என்ன?"
"ஒன்றுமில்லை எங்கள் குடும்பத்திலேயே ஒரு விசித்திரம். சிலர் ஊமையாகப் பிறப்பார்கள்; மற்றவர்கள் இனிய குரல் படைத்திருப்பார்கள்; நன்றாய்ப் பாடுவார்கள்..."
"உன் மாமனின் மகள் ஊமை இல்லையே?" என்றான் வந்தியத்தேவன்.
"இல்லை, இல்லை!"
"அப்படியானால் நன்றாய்ப் பாடக் கூடியவள் என்று சொல்லு, உன்னைக் காட்டிலும் நன்றாய்ப் பாடுவாளா?"
"அழகாயிருக்கிறது உங்கள் கேள்வி 'குயில், காக்கையை விட நன்றாய்ப் பாடுமா?' என்றுகேட்பது போலிருக்கிறது. பூங்குழலி பாடினால், சமுத்திர ராஜா அலை எறிந்து ஓசை செய்வதை நிறுத்திவிட்டு அமைதியாகக் கேட்பார்.ஆடு மாடுகளும் காட்டு மிருகங்களும் மெய் மறந்து நிற்கும்..."
"உன் மாமன் மகளின் பெயர் பூங்குழலியா? அழகான பெயர்!"
"பெயர் மட்டுந்தானா அழகு?"
"அவளும் அழகியாகத்தான் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், நீ இவ்வளவு பரவசமடைவாயா?"
"மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்."
சேந்தன் அமுதனுடைய உள்ளம் சிவபக்தியிலேயே பூரணமாக ஈடுபடவில்லையென்பதை வல்லவரையன்கண்டு கொண்டான்.
"அப்படியானால் உனக்குத் தகுந்த மணப் பெண் என்று சொல்லு.மாமன் மகளாகையால் முறைப் பெண்ணுங் கூடத்தானே? கல்யாணம் எப்போது?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.
"எனக்குத் தகுந்தவள் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டேன். நான் அவளுக்கு எவ்விதத்திலும் தகுதியில்லாதவன்.பழைய நாட்களிலே போலப் பூங்குழலிக்குச் சுயம்வரம் வைத்தால் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து போட்டி போடுவார்கள்! தமயந்தியை மணந்து கொள்வதற்கு வானுலகத்திலிருந்து தேவர்கள் வந்தது போல் வந்தாலும் வருவார்கள். ஆனால் இந்தக் கலியுகத்தில் அவ்விதமெல்லாம் ஒருவேளை நடவாது..."
"அப்படியானால் உன்னை மணந்து கொள்ள அவள் விரும்பினாலும் நீ மறுத்து விடுவாய் என்று சொல்லு!"
"நன்றாயிருக்கிறது; இறைவன் என் முன்னால் தோன்றி, 'நீ சுந்தரமூர்த்தியைப் போல் இந்தஉடம்போடு கைலாசத்துக்கு வருகிறாயா? அல்லது பூலோகத்திலிருந்து பூங்குழலியுடன் வாழ்கிறாயா?" என்றுகேட்டால் 'பூங்குழலியுடன் வாழ்கிறேன்' என்றுதான் சொல்லுவேன்; ஆனால் நான் சொல்லி என்ன பயன்?"
"ஏன் பயன் இல்லை? உனக்குச் சம்மதமாயிருக்கும்போது அநேகமாகக் கல்யாணம் ஆனது போலத்தானே? எல்லாரும் பெண்களைக் கேட்டுக் கொண்டுதானா கலியாணம் செய்கிறார்கள்? உதாரணத்துக்கு, பெரிய பழுவேட்டரையர் அறுபத்தைந்து வயதுக்கு மேல் கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே! அந்த ராணியின் சம்மதத்தின் பேரிலா திருமணம் நடந்திருக்கும்!..."
"அண்ணா! அது பெரிய இடத்துச் சமாசாரம், நாம் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும்? முக்கியமாக, உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் கோட்டைக்குள் போகிறீர்கள்; கோட்டைக்குள் பழுவேட்டரையர்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் பேசினால் ஆபத்து வரும்!..."
"ஏது தம்பி, ஒரேயடியாகப் பயமுறுத்துகிறாயே?"
"உண்மையைத்தான் சொல்கிறேன் மெய்யாக, இரண்டு பழுவேட்டரையர்களுந்தான் இப்போது சோழ சாம்ராஜ்யத்தையே ஆளுகிறார்கள். அவர்களுடைய அதிகாரத்துக்கு மிஞ்சிய அதிகாரம் வேறு கிடையாது."
"சக்கரவர்த்திக்குக் கூடவா அவர்களை விட அதிகாரம் இல்லை?"
"சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். பழுவூர்க்காரர்கள் போட்ட கோட்டை அவர் தாண்டுவதில்லை என்று ஜனங்கள் சொல்லுகிறார்கள். அவருடைய சொந்தப் புதல்வர்களுடைய பேச்சுக் கூடக்காதில் ஏறுவதில்லை என்கிறார்கள்."
"அப்படியா சமாசாரம்! பழுவேட்டரையர்களுடைய செல்வாக்கு அபாரமாய்த்தான் இருக்க வேண்டும். இரண்டு வருஷத்துக்கு முன்னால் அவர்களுக்கு இத்தனை செல்வாக்கு இல்லை அல்லவா?"
"இல்லை; அதிலும் சக்கரவர்த்தி தஞ்சைக்கு வந்த பிறகு பழுவேட்டரையர்களுடைய அதிகாரம்எல்லையில்லாமல் போய் விட்டது. அவர்களைத் தட்டிப் பேசுவதற்கே யாரும் கிடையாது. அநிருத்தபிரமராயர் கூட வெறுப்படைந்துதான் பாண்டிய நாட்டுக்குப் போய்விட்டார் என்று கேள்வி."
"பழையாறையிலிருந்து சக்கரவர்த்தி தஞ்சாவூருக்கு எதற்காக வந்தார்? உனக்குத் தெரியுமா,தம்பி!"
"நான் கேள்விப்பட்டதைச் சொல்லுகிறேன்; மூன்று வருஷத்துக்கு முந்தி வீரபாண்டியன் போரில்மாண்டான். அச்சமயம் சோழர் படைகள் பாண்டிய நாட்டில் சில கொடூரங்களைச் செய்ததாகக் கேள்வி;யுத்தமென்றால் அப்படித்தானே? மதுரை சோழ ராஜ்யத்துக்கு உட்பட்டு விட்டது. ஆனால் வீரபாண்டியனுக்குஅந்தரங்கமான சிலர், எப்படியாவது பழிக்குப் பழி வாங்குவதென்று சபதம் எடுத்துக் கொண்டு சதிசெய்கிறார்களாம். பழையாறையில் மன்னர் இருந்தால் அவரைப் பாதுகாக்க முடியாது என்று தான் அவரைப்பழுவேட்டரையர்கள் தஞ்சைக்கு அழைத்து வந்து விட்டார்கள். இங்கே கோட்டையும் வலிவுள்ளது; கட்டுக் காவலும்அதிகம்.அதோடு சக்கரவர்த்தியின் உடம்பு நலத்துக்கும் பழையாறையைக் காட்டிலும் தஞ்சாவூர் நல்லது என்றுவைத்தியர்கள் சொன்னார்கள்.
"சுந்தர சோழரின் உடம்பைப் பற்றி எல்லாரும் சொல்லுகிறார்கள். ஆனால் என்ன நோய் என்றுமட்டும் யாருக்கும் தெரிவதில்லை."
"தெரியாமல் என்ன? சக்கரவர்த்திக்குப் பக்கவாதம் வந்து இரண்டு கால்களும் சுவாதீனம் இல்லாமல் போய் விட்டன."
"அடடா! அதனால் அவரால் நடக்கவே முடிவதில்லையோ?"
"நடக்க முடியாது; யானை அல்லது குதிரை மீது ஏறவும் முடியாது; படுத்த படுக்கைதான். பல்லக்கில் ஏற்றி இடத்துக்கு இடம் கொண்டு போனால்தான் போகலாம் அதிலும் வேதனை அதிகம். ஆகையால் சக்கரவர்த்தி அரண்மனையை விட்டு வௌிக் கிளம்புவதே இல்லை. சில காலமாகச் சித்தம் அவ்வளவு சுவாதீனத்தில் இல்லையென்றும் சொல்கிறார்கள்."
"ஆஹா! என்ன பரிதாபம்!"
"பரிதாபம் என்று கூடச் சொல்லக் கூடாது, அண்ணா! அதுவும் ராஜ நிந்தனை என்று சொல்லிப் பழுவேட்டரையர்கள் தண்டனை விதிப்பார்கள்."
பழுவேட்டரையர்! பழுவேட்டரையர்! - எங்கே, யாரிடம் பேசினாலும் பழுவேட்டரையர்களைப்பற்றியே பேச்சு! அவர்கள் எவ்வளவு பராக்கிரமசாலிகளாய் இருந்தால்தான் என்ன? தன பொக்கிஷம்;தானியக் களஞ்சியம், தஞ்சை நகர்க் காவல், ஒற்றர்படை எல்லாம் அவர்களுடைய வசத்தில் இருக்கும்படிசக்கரவர்த்தி விட்டிருக்கக் கூடாது. இவ்வளவு அதிகாரத்தையும் அவர்களிடம் விட்டதனால் அல்லவாசக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்யத் தொடங்கி விட்டார்கள்? இவர்களுடைய சதி எவ்வளவு தூரம்பலிக்குமோ? அது பலிக்காமல் போக நம்மால் இயன்ற பிரயத்தனம் செய்ய வேண்டும். சந்தர்ப்பம்கிடைத்தால் சக்கரவர்த்திக்கும் எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும்!... இதற்குள் கோட்டை வாசல் வந்துவிட்டது.சேந்தன் அமுதன் தனது புதிய நண்பனைப் பிரிந்து தளிக்குளத்தார் ஆலயத்தை நோக்கிச் சென்றான்.வந்தியத்தேவனோ எத்தனையோ மனக்கோட்டைகளுடன் அந்தக் கோட்டை வாசலை நெருங்கினான்.
பக்க தலைப்பு
இருபத்தைந்தாம் அத்தியாயம்
கோட்டைக்குள்ளே
பனை இலச்சினை தாங்கிய மோதிரம் கதைகளில் வரும் மாய மோதிரத்தைப் போல் அபாரமானமந்திர சக்தி வாய்ந்ததாயிருந்தது. காலை நேரத்தில் பால், தயிர் விற்பவர்கள், பூக்கூடைக்காரர்கள்,கறிகாய் விற்பவர்கள், பழக் கடைக்காரர்கள், மற்றும் பல தொழில்களையும் செய்வோர், கணக்கர்கள்,உத்தியோகஸ்தர்கள் முதலியோர் ஏகக் கூட்டமாகக் கோட்டைக்குள் பிரவேசிக்க முயன்று கொண்டிருந்தார்கள். கோட்டைக் கதவின் திட்டிவாசலைத் திறந்து அவர்களை ஒவ்வொருவராக உள்ளே விடுவதிலே கோட்டை வாசற்காவலர்கள் தங்கள் படாடோப அதிகாரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் இளம் வீரன்பனை இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டியதுதான் தாமதம், காவலர்கள் மிக்க மரியாதை காட்டி,கோட்டைக் கதவுகளில் ஒன்றைத் திறந்து விட்டார்கள்; வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தான்.
ஆகா! தஞ்சைபுரிக் கோட்டைக்குள் அவன் கால் வைத்த வேளை என்ன வேளையோ தெரியாது!அதிலிருந்து எத்தனை எத்தனை முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்தன! சோழ சாம்ராஜ்யத்தின்சரித்திரத்திலேயே அது ஒரு முக்கிய சம்பவமாகவல்லவா ஏற்பட்டது! கோட்டைக்குள் பிரவேசித்துச் சிறிதுநேரம் வரை வந்தியத்தேவன் ஒரே பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான். காஞ்சி பழைய பல்லவ சாம்ராஜ்யத்தின்தலைநகரம். பல தடவை பகைவர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டது.அங்கிருந்த மாளிகைகளும் மண்டபங்களும் மற்ற கட்டடங்களும் பழைமையடைந்து சிதிலமாகிப் பூஞ்சக் காளான் பூத்திருந்தன. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கட்டடங்கள்தான். ஆனாலும் பல பகுதிகள் இடிந்தும் சிதைந்தும் கிடந்தன. ஆதித்த கரிகாலர் வந்த பிறகு புதுப்பித்துக் கட்டிய சில மாளிகைகள் மட்டும், பட்ட மரத்தில் ஒவ்வோரிடத்தில் தளிர்த்திருக்கும் மலர்களைப் போல் விளங்கி, நகரத்தின் பாழடைந்த தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டின.
இந்தத் தஞ்சையின் தோற்றமோ நேர்மாறாக இருந்தது. எல்லாம் புதிய மாளிகைகள்; புதியமண்டபங்கள். வெண் சுண்ண மாளிகைகளுக்கு மத்தியில் செம்மண்ணில் சுட்ட செங்கற்களினால் கட்டிய சிற்சிலகட்டடங்கள் வைரங்களுக்கும் முத்துக்களுக்கும் இடையிலே இரத்தினங்களைப் பதித்தது போல் ஒளி வீசித்திகழ்ந்தன. ஆங்காங்கு அரண்மனைத் தோட்டங்களில் வளர்ந்திருந்த விருட்சங்கள் செம்மண் பூமியின் சத்தைஉண்டு, கொழு கொழுவென்று செழித்து ஓங்கியிருந்தன. புன்னை, தென்னை, அசோகம், அரசு, ஆல், பலா,வேம்பு முதலிய மரங்களில் அடர்ந்து தழைத்திருந்த இலைகள் மரகதப் பச்சையின் பல சாயல்களுடன் கண்ணுக்குஇனிமையையும் மனத்துக்கு உற்சாகத்தையும் அளித்தன. அதிசய சக்தி வாய்ந்த மந்திரவாதியான மயன்புதிதாக நிர்மாணித்த நகரம் இது. இந்தப் புதிய நகருக்குள் பிரவேசிக்கும் போதே ஒரு புதிய உற்சாகம்பிறந்தது; உள்ளம் பூரித்துப் பொங்கியது; காரணம் தெரியாத கர்வம் நிறைந்தது.
கோட்டையின் கட்டுக்காவலையும் கோட்டைக்குள் பிரவேசிப்பதில் உள்ள நிர்ப்பந்தங்களையும்கவனித்திருந்த வந்தியத்தேவன், உள்ளே அதிக ஜனநடமாட்டமே இல்லாமல் வெறிச்சென்று இருக்கும் என்றுஎண்ணியிருந்தான். ஆனால் அதற்கு நேர்மாறாக, தெருக்களெல்லாம் 'ஜேஜே' என்று கூட்டமாயிருந்தது. குதிரைகளும் குதிரை பூட்டிய ரதங்களும் பூமி அதிரும்படி சத்தமிட்டுக் கொண்டு சென்றன. கரிய குன்றுகள்அசைந்து வருவது போல் நிதானமாகவும் கம்பீரமாகவும் நடந்து வந்த யானைகளின் மணி ஓசைநாலாபுறங்களிலும் கேட்டது! பூ, கறிகாய், பழம், பால், தயிர் விற்போரின் கூச்சல்கள் செவிகளைத்தொளைத்தன. அவ்வப்போது காலத்தை அறிவிக்கும் ஆலாட்சி மணிகளின் ஓசையுடன் பேரிகையின் முழக்கமும்கலந்தது.இசைக்கருவிகள் எழுப்பிய இன்னிசைகளுடன் மங்கையர் பாடிய மதுர கீதங்கள் கலந்தன. எல்லாம்ஒரே திருவிழாக் கோலாகலமாகவே இருந்தது.
நகரம் என்றால் இதுவல்லவா நகரம்! நாளுக்கு நாள் விரிந்து பரந்து வரும் ஒரு சாம்ராஜ்யத்தின்தலைநகரம் இப்படித்தான் இருக்கும் போலும்! தான் இத்தகைய நகரத்துக்கு முற்றிலும் புதியவன் என்று காட்டிக்கொள்ள வந்தியத்தேவன் விரும்பவில்லை. யாரையாவது வழி கேட்டால் தன்னை ஏற இறங்கப் பார்த்து, "நீஇந்த ஊருக்குப் புதியவனா?" என்று அலட்சியமாகப் பேசுவார்கள். அரண்மனைக்கு வழி கேட்கிறவனைவௌியூரிலிருந்து வந்த பட்டிக்காட்டான் என்று கூட நினைத்து விடுவார்கள். ஆகையால், யாரையும் வழிகேட்காமலேயே சக்கரவர்த்தியின் அரண்மனையைக் கண்டுபிடித்துப் போய்விட வேண்டும்; அது அப்படியொன்றும்முடியாத காரியமாயிராது...
எந்தப் பக்கம் நோக்கினாலும் மாடமாளிகைகளின் மீது மகர தோரணங்களும் கொடிகளும்தோன்றின. வேகத்துடன் வீசிய மேலக்காற்றுடன் அவை துவந்த யுத்தம் செய்து சடசட படபடவென்று சத்தம்செய்து கொண்டு பறந்தன. புலிக் கொடிகளும் பனைக்கொடிகளுமே அதிகமாகக் காணப்பட்டன. மற்ற எல்லாக்கொடிகளையும் தாழ்த்திக் கொண்டு மேக மண்டலத்தை அளாவிக் கம்பீரமாக ஒரு பெரிய புலிக்கொடிபறந்தது.அதுவே சக்கரவர்த்தி தங்கும் அரண்மனையாக இருக்க வேண்டும் என்று வல்லவரையன் ஊகித்துக் கொண்டு,அக்கொடி பறந்த திக்கை நோக்கித் தான் மேலே செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு நடந்தான்.
சக்கரவர்த்தியை நேரில் சந்தித்து ஓலையைக் கொடுப்பது முதற்காரியம். அதோடு ஆதித்தகரிகாலர் நேரில் வாய்மொழியாகத் தெரிவிக்கச் சொன்னதையும் சொல்ல வேண்டும். சின்னப்பழுவேட்டரையரின் அனுமதியின்றிச் சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாது. அவருடைய அனுமதியை எப்படிப்பெறுவது? கோட்டைக்குள் பிரவேசிப்பதற்குத் தெய்வம் துணை செய்தது. ஆனால் முழுதும் தெய்வம் வழிகாட்டும்என்றே இருந்து விடலாமா? சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு நாமேதான் யுக்தி கண்டுபிடித்தாக வேண்டும்! அதுஎன்ன யுக்தி! வாணர் குலத்தில் வழிவழியாக வந்த மூளையே! கொஞ்சம் வேலை செய், பார்க்கலாம்! சிறிதுஉன் கற்பனா சக்தியைத் தட்டி விடு! காவியம், கவிதை எழுதுவோருக்கு மட்டும் கற்பனா சக்தி தேவைஎன்பதில்லை. உன்னைப் போல் இராஜாங்க காரியங்களில் ஈடுபட்டவர்களுக்கும் கற்பனா சக்தி வேண்டும்;எங்கே, உன் கைவரிசையைக் காட்டு, பார்க்கலாம்!...
பெரிய பழுவேட்டரையர் இன்னும் கோட்டைக்கு வந்து சேரவில்லை என்பதை வந்தியத்தேவன்உறுதிப்படுத்திக் கொண்டான்.
கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே வந்ததும், அங்கே உட்புறத்தில் நின்ற காவலன் ஒருவனிடம், "ஏன் அப்பா! பழுவேட்டரையர் திரும்பி வந்து விட்டாரா?" என்று கேட்டான்.
"யாரைக் கேட்கிறாய், தம்பி! சின்னவர் அரண்மனையில்தான் இருக்கிறார்."
"அது எனக்குத் தெரியாதா? நடுநாட்டுக்குச் சென்றிருந்த பெரியவரைப் பற்றித்தான் கேட்கிறேன்."
"ஓ! பெரியவர் நடுநாட்டுக்கா சென்றிருந்தார்? அது எனக்குத் தெரியாது. நேற்று மாலை இளையராணியின் பல்லக்குத் திரும்பி வந்தது. பெரிய அரசர் இன்னும் வரவில்லை; இன்று இரவு திரும்பக்கூடும் என்று செய்தி வந்திருக்கிறது!" என்றான் காவலன்.
இது நல்ல செய்திதான் பெரிய பழுவேட்டரையர் திரும்பி வருவதற்குள்ளே எப்படியும்சக்கரவர்த்தியைப் பார்த்து ஓலையைக் கொடுத்தாக வேண்டும், அதற்கு என்ன வழி?... வந்தியத்தேவனுடையமூளையில் ஒரு யோசனை உதயமாகிவிட்டது. அந்தக் கணமே அவன் முகத்தில் கவலைக்குறி மறைந்தது; குறும்புப் புன்னகையும் குதூகல மலர்ச்சியும் தோன்றின.
சக்கரவர்த்தியின் அரண்மனையை அணுகுவதற்கு அவன் அதிகமாக அலைந்து திரியவேண்டியிருக்கவில்லை. பெரிய புலிக் கொடியைப் பார்த்துக் கொண்டே போனான். விரைவிலேயேஅரண்மனை முகப்பை அடைந்து விட்டான். ஆகா! இது எத்தகைய அரண்மனை! தேவலோகத்தில் தேவேந்திரனுடையஅரண்மனையையும் உஜ்ஜயினி நகரத்து விக்ரமாதித்யனுடைய அரண்மனையையும் போல அல்லவா இருக்கிறது? அந்தமுன்வாசல் மண்டபத்துத் தூண்களில் செய்திருக்கும் சிற்ப வேலைகளின் அற்புதந்தான் என்ன! ஒவ்வொரு தூணிலும்செதுக்கியிருக்கும் குதிரை, முன்கால்களைத் தூக்கிக் கொண்டு அப்படியே பாய்வது போல இருக்கிறதே!
அரண்மனையை அடைவதற்குப் பல பாதைகள் நாலா திசைகளிலிருந்தும் வந்தன. ஒவ்வொரு பாதைமுடிவிலும் இரண்டு குதிரை வீரர்களும் சில காலாள் வீரர்களும் நின்றார்கள். அவர்களண்டை நெருங்கிவராமலே அவ்வீதிகளில் நடமாடிய ஜனங்களில் பலர் திரும்பிப் போய் விட்டார்கள். ஒருசிலர் அவர்கள்கிட்டே வந்து சற்றே நின்று அரண்மனை முகப்பை எட்டிப் பார்த்துவிட்டும், புலிக் கொடியை அண்ணாந்துபார்த்துவிட்டும் போனார்கள். அதிக நேரம் நின்று கூட்டம் சேரும்போலிருந்தால் காவலர்கள் கையினால்சமிக்ஞை செய்து அவர்களைப் போகும்படி செய்தார்கள். கூட்டங்கூடி நின்றவர்களும் இரைந்து பேசாமல் காதோடுமெள்ளப் பேசிக் கொண்டார்கள்.
வந்தியத்தேவன் மற்றவர்களைப் போல் சிறிதும் தயங்கி நிற்கவில்லை. வேகமாகவும்மிடுக்காகவும் நடந்து சென்று அரண்மனைப் பாதைக் காவலர்களை நெருங்கினான். உடனே இரு குதிரைகளும்முகத்தோடு முகம் உராயும்படி வழி மறித்து நின்றன. குதிரை மேலிருந்தவர்கள், கீழே நின்றவர்கள்,அனைவருடைய வேல்களும் முனையோடு முனை பொருந்தி வழியை அடைத்தன.
வந்தியத்தேவன் தன்னுடைய மந்திர மோதிரத்தை நீட்டினான். அவ்வளவு தான்; அதைப்பார்த்தவுடனே அவ்வீரர்களின் முடுக்கும் பெருமிதமும் அடங்கின. ஒருவர் பின் ஒருவராக மூன்று பேர்மோதிரத்தை உற்றுப் பார்த்தார்கள்.
"சரி; வழி விடுங்கள்!" என்று ஒருவன் சொன்னான். இரண்டு வேல்கள் உடனே அகன்று நின்று வழிவிட்டன; வந்தியத்தேவன் மிடுக்குடன் நடந்து சென்றான். ஆயினும், என்ன? இன்னும் எத்தனை காவல்கள் இப்படி உண்டோ? சின்னப் பழுவேட்டரையர் எங்கே இருக்கிறாரோ? எப்படி விசாரிப்பது? யாரிடம் கேட்பது? சின்னப் பழுவேட்டரையரின் அனுமதியின்றிச் சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாது; இந்தப் பெரிய விஸ்தாரமான அரண்மனையில் நோயாளியான சக்கரவர்த்தி எந்த இடத்தில் இருக்கிறாரோ? அதைத் தான் எவ்விதம் தெரிந்து கொள்வது?...
தனக்குப் பின்னால் சிலர் கூட்டமாக வருவதை அறிந்து வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். ஆம்; பத்துப் பதினைந்து பேர் கும்பலாக வந்து, காவலர்களருகில் நின்றார்கள். அவர்கள் உயர்ந்த பட்டுப்பீதாம்பரங்கள் தரித்திருந்தார்கள். முத்து மாலைகள், மகர கண்டிகள், காதில் குண்டலங்கள்அணிந்திருந்தார்கள்.சிலர் நெற்றியில் திருநீறும் மற்றவர்கள் சந்தனம், குங்குமம், சவ்வாதுப் பொட்டும்இட்டிருந்தார்கள்! ஆ! இவர்களைப் பார்த்தால் புலவர்களைப் போல அல்லவா இருக்கிறது!.. ஆம், புலவர்களின்கூட்டந்தான் என்று மறுகணமே தெரிந்து விட்டது.
காவலர்களில் ஒருவன் - அவர்களுடைய தலைவனாயிருக்க வேண்டும், "கவிராயர்கள்வந்திருக்கிறார்கள்! வழி விடுங்கள்!" என்று சொன்னதுடன் ஒரு வீரனைப் பார்த்து, "சின்னப் பழுவேட்டரையர்ஆஸ்தான மண்டபத்தில் இருக்கிறார் அவரிடம் கொண்டு போய்விடு!" என்றான்.
"புலவர்களே! ஏதாவது பரிசு கிடைத்தால் போகும்போது இந்த வழியாகவே திரும்பிச் செல்லுங்கள்! பரிசு கிடைக்காவிட்டால் வேறு வழியாகப் போய்விடுங்கள்!" என்று மேலும் அவன் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தார்கள்! சற்று நின்று இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன், "பழம் நழுவிப் பாலில் விழுந்தது!" என்று எண்ணிக் கொண்டான். இந்தப் புலவர்களுடனே போனால் சின்னப் பழுவேட்டரையர் இருக்குமிடம் போய்ச் சேரலாம். யாரையும் வழி விசாரிக்க வேண்டியதில்லை. பிறகு, நமது சாமர்த்தியம் இருக்கிறது; அதிர்ஷ்டமும் இருக்கிறது! இவ்வாறு எண்ணியபடியே புலவர் கூட்டத்துடன் சென்றான்.
பக்க தலைப்பு
இருபத்தாறாம் அத்தியாயம்
"அபாயம்! அபாயம்!"
ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களுக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர் கைகட்டி வாய் புதைத்து நின்றார்கள். அன்று வந்த ஓலைகள்பலவற்றை வைத்துக் கொண்டு ஒருவர் நின்றார். கணக்காயர் கணக்குச் சொல்வதற்குக் காத்திருந்தார். காவல்படைத் தலைவர்கள் சின்னப் பழுவேட்டரையருடைய அன்றாடக் கட்டளைகளை எதிர்பார்த்து நின்றார்கள். ஏவிய வேலைகளைச் செய்வதற்குப் பணியாளர்கள் காத்திருந்தார்கள். சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்றுசில ஏவலாளர் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். கையில் வெற்றிலைப் பெட்டியுடன் ஒருவன் ஆயத்தமாயிருந்தான்.
மிடுக்கிலும் பெருமிதத்திலும் யாருக்கும் பின்வாங்காதவனான வந்தியத்தேவன் கூடச் சிறிது அடக்க ஒடுக்கத்துடனேதான் சின்னப் பழுவேட்டரையரிடம் அணுகினான்.
பெரியவரைக் காட்டிலும் சின்னவர் வீரகம்பீரத்தில் இன்னும் ஒருபடி உயர்ந்தவராகவே காணப்பட்டார். நமது வீரனைப் பார்த்ததும் அவர் முகமலர்ச்சியுடன், "யார், தம்பி, நீ! எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார்.
வீர வாலிபர்களைக் கண்டால் சின்னப் பழுவேட்டரையரின் கடுகடுத்த முகம் மலர்ந்து விடும். நாடெங்கும் உள்ள வாலிப வீரர்களைத் தம்முடைய காவல் படையில் சேர்த்துக்கொள்வதில் அவருக்கு மிக்க ஆர்வம்.
"தளபதி! நான் காஞ்சீபுரத்திலிருந்து வந்தேன்! இளவரசர் ஓலை கொடுத்து அனுப்பினார்!" என்று பணிவான குரலில் வந்தியத்தேவன் மறுமொழி சொன்னான்.
காஞ்சீபுரம் என்றதும் சின்னப் பழுவேட்டரையரின் முகம் கடுத்தது.
"என்ன? என்ன சொன்னாய்?" என்று மீண்டும் கேட்டார்.
"காஞ்சீபுரத்திலிருந்து இளவரசர் கொடுத்த ஓலையுடன் வந்தேன்!"
"எங்கே? இப்படிக் கொடு!" என்று அலட்சியமாய்க் கேட்டபோதிலும் அவருடைய குரலில் சிறிது பரபரப்புத் தொனித்தது.
வல்லவரையன் அடக்க ஒடுக்கத்துடன் ஓலைச் சுருளை எடுத்துக் கொண்டே, "தளபதி! ஓலை சக்கரவர்த்திக்கு!" என்றான்.
அதைப் பொருட்படுத்தாமல் சின்னப் பழுவேட்டரையர் ஓலையை வாங்கி ஆவலுடன் பார்த்தார். பக்கத்தில் நின்றவனிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னார். கேட்டுவிட்டு, "புதிய விஷயம் ஒன்றுமில்லை!" என்று தமக்குத் தாமே முணுமுணுத்துக் கொண்டார்.
"தளபதி! நான் கொண்டு வந்த ஓலை..."என்றான் வந்தியத்தேவன்.
"ஓலைக்கு என்ன? நான் கொடுத்து விடுகிறேன் சக்கரவர்த்தியிடம்!"
"இல்லை; என்னையே நேரில் சக்கரவர்த்தியின் கையில் கொடுக்கும்படி..."
"ஓகோ! என்னிடம் நம்பிக்கை இல்லையா? இளவரசர் ஆதித்தர் அப்படி உன்னிடம் சொல்லி அனுப்பினாரோ?" என்ற போது, தஞ்சைக் கோட்டைத் தளபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
"இளவரசர் அவ்வாறு சொல்லவில்லை; தங்கள் தமையனார்தான் அவ்விதம் கட்டளையிட்டார்!"
"என்ன? என்ன? பெரியவரை நீ எங்கே பார்த்தாய்?"
"வழியில் கடம்பூர் சம்புவரையர் வீட்டில் ஒருநாள் இரவு தங்கியிருந்தேன். அங்கேதான் பார்க்க நேர்ந்தது. இந்த மோதிரத்தையும் அவர்தான் கொடுத்தனுப்பினார்..."
"ஆகா! இதை நீ ஏன் முன்னமே சொல்லவில்லை? கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா? இன்னும் யார் யார் வந்திருந்தார்கள்?"
"மழநாடு, நடுநாடு, திருமுனைப்பாடி நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்..."
"இரு, இரு! பிறகு சாவகாசமாகக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் நீயே இந்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டு வா! அப்புறம் தமிழ்ப் புலவர்கள் வந்து விடுவார்கள். வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள்... இந்தப் பிள்ளையைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போ!" என்று அருகில் நின்ற வீரன் ஒருவனுக்குச் சின்னப் பழுவேட்டரையர் கட்டளையிட்டார்.
அந்த வீரனைத் தொடர்ந்து வந்தியத்தேவன் மேலும் அரண்மனையின் உட்புறத்தை நோக்கிச் சென்றான்.
மூன்று பக்கங்களில் அலைகடல் முழக்கம் கேட்கும்படியாகப் பரந்திருந்த சோழ சாம்ராஜ்யத்தின் சிங்காசனம் சில காலமாக நோய்ப் படுக்கையாக மாறியிருந்தது. அந்தச் சிம்மாசனத்தில் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி சாய்ந்து படுத்திருந்தார். இராஜ்யாதிகாரங்களையெல்லாம் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருந்தாராயினும் சிற்சில முக்கியமான சந்தர்ப்பங்களில் முக்கியமான மனிதர்களுக்கு அவர் தரிசனம் அளித்தே தீரவேண்டியிருந்தது. அமைச்சர்களும்தளபதிகளும் வேளக்காரப் படை வீரர்களும் அவரைத் தினந்தோறும் வந்து தரிசித்து விட்டுப் போவது இராஜ்யத்தின் நன்மைக்கு அவசியமாயிருந்தது.
எத்தனையோ போர் முனைகளில் செயற்கரும் வீரச் செயல்கள் புரிந்து அசகாய சூரர் என்று பெயர் பெற்றவரும், நாடு நகரமெல்லாம் 'சுந்தர சோழர்' என்று அழைக்கப்பட்டவரும், அழகில் மன்மதனுக்கு ஒப்பானவர் என்று புகழ் பெற்றவருமான சக்கரவர்த்தியின் நோய்ப்பட்டு மெலிந்த தோற்றத்தைக் கண்டதும் வந்தியத்தேவனால்பேசவே முடியாமற் போய் விட்டது. அவனுடைய கண்களில் நீர் ததும்பியது. அருகில் சென்று அடிபணிந்து வணங்கிப் பயபக்தியுடன் ஓலையை நீட்டினான்.
சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக் கொண்டே, "எங்கிருந்து வந்தாய்? யாருடைய ஓலை?" என்று ஈனஸ்வரத்தில் கேட்டார்.
"பிரபு! காஞ்சியிலிருந்து வந்தேன். இளவரசர் ஆதித்தர் தந்த ஓலை!" என்று வந்தியத்தேவன் நாத் தழுதழுக்கக் கூறினான்.
சக்கரவர்த்தியின் முகம் உடனே பிரகாசம் அடைந்தது. அவர் அருகில் திருக்கோவலூர் மலையமான் புதல்வியான சக்கரவர்த்தினி வானமாதேவி வீற்றிருந்தாள். அவளைப் பார்த்து, "தேவி! உன் புதல்வனிடமிருந்து ஓலை வந்திருக்கிறது!" என்று சொல்லிவிட்டுப் படித்தார்.
"ஆகா! இளவரசன் காஞ்சியில் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். நீயும் நானும் அங்கு வந்து சில நாள் தங்கியிருக்க வேண்டுமாம்!" என்று சொல்லிய போதே, சக்கரவர்த்தியின் முகம் முன்னைவிடச் சுருங்கியது.
"தேவி! உன் புதல்வன் செய்கையைப் பார்த்தாயா? என் பாட்டனார், உலகமெல்லாம் புகழ்பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, அரண்மனையில் சேர்ந்திருந்த தங்கத்தையெல்லாம் அளித்துத் தில்லை அம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து, பொன்னம்பலம் ஆக்கினார். நம்முடைய குலத்தில் தோன்றிய பெரியவர்கள் யாரும்தாங்கள் வசிக்கும் அரண்மனையைப் பொன்னால் கட்டியதில்லை. அரண்மனை கட்டுவதைக் காட்டிலும் ஆலயம் எடுப்பதையே முக்கியமாகக் கருதினார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் இப்படிச் செய்திருக்கிறான்! ஆகா! இந்தத் தெய்வ நிந்தனைக்கு என்ன பரிகாரம் செய்வது?" என்றார். மகனிடமிருந்து ஓலை வந்தது என்பதைகேட்டுச் சிறிது மலர்ச்சியடைந்த தேவியின் முகம் மறுபடி முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது; மறுமொழி ஒன்றும் அவளால் சொல்ல முடியவில்லை.
அச்சமயத்தில் வந்தியத்தேவன் தைரியமும், துணிவும் வரவழைத்துக் கொண்டு, "பிரபு! தங்கள் திருக்குமாரர் செய்தது அப்படியொன்றும் தவறில்லையே? உசிதமான காரியத்தையே செய்திருக்கிறார். மகனுக்குத் தாயும் தந்தையுமே முதன்மையான தெய்வங்கள் அல்லவா? ஆகையால் தாங்களும், தேவியும் வசிப்பதற்காகத் தங்கள் புதல்வர் பொன் மாளிகை கட்டியது முறைதானே? என்றான்.
சுந்தர சோழர் புன்னகை பூத்து, "தம்பி! நீ யாரோ தெரியவில்லை. மிக்க அறிவாளியாயிருக்கிறாய்; சாதுர்யமாகப் பேசுகிறாய். ஆனால் மகனுக்குத் தாய் தந்தை தெய்வமே என்றாலும், மற்றவர்களுக்கு இல்லைதானே? எல்லாரும் வழிபடும் தெய்வத்துக்கு அல்லவா பொன் கோயில் எடுக்க வேண்டும்!" என்றார்.
"பிரபு! மகனுக்குத் தந்தை தெய்வம்; மக்களுக்கெல்லாம் அரசர் தெய்வம். அரசர்கள் திருமாலின் அம்சம் பெற்றவர்கள் என்று வேத புராணங்கள் சொல்லுகின்றன. ஆகையால் அந்த வகையிலும் தங்களுக்குப் பொன்மாளிகை எடுத்தது பொருத்தமானதே!" என்றான் நம் வீரன்.
சுந்தர சோழர் மறுபடியும் மலையமான் திருமகளை நோக்கி, "தேவி! இந்தப் பிள்ளை எவ்வளவு புத்திசாலி, பார்த்தாயா? நம்முடைய ஆதித்தனுக்கு இவனையொத்தவர்களின் உதவியிருந்தால், அவனைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவனுடைய அஜாக்கிரதை சுபாவத்தைப் பற்றியும் விசாரப்பட வேண்டியதில்லை!" என்றார்.
பிறகு, வந்தியத்தேவனைப் பார்த்து, "தம்பி! பொன் மாளிகை கட்டியது உசிதமானாலும் உசிதமில்லாவிட்டாலும் நான் காஞ்சிக்கு வருவது சாத்தியமில்லை. நீதான் பார்க்கிறாயே! எப்போதும் படுத்த படுக்கையாக இருந்து வருகிறேன். நெடுந்தூரப் பிரயாணத்தை மேற்கொள்ளுதல் இயலாத காரியம். ஆதித்தன் தான் என்னைப் பார்ப்பதற்கு இங்கே வந்தாக வேண்டும். அவனைக் காண்பதற்கு எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. நாளைக்கு மீண்டும் வா! மறு ஓலை எழுதி வைக்கும்படி சொல்லுகிறேன்!" என்றார்.
இச்சமயத்தில், கூட்டமாகப் பலர் தரிசன மண்டபத்தை நெருங்கி வருவதை வந்தியத்தேவன் அறிந்தான். ஆகா! அந்தப் புலவர் கூட்டம் வருகிறது போலும்! அவர்களுடன் ஒருவேளை சின்னப் பழுவேட்டரையரும் வருவார். அப்புறம் தான் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியாமலே போய் விடலாம்! நாலு வார்த்தையில் சுருக்கமாக இப்போதே சொல்லிவிட வேண்டியதுதான்! --இவ்விதம் சில விநாடிப் பொழுதில்சிந்தித்து முடிவு செய்து, "சக்கரவர்த்தி! தயவு செய்யுங்கள்! கருணைகூர்ந்து என் விண்ணப்பத்தைக் கேளுங்கள். தாங்கள் அவசியம் இந்தத் தஞ்சையிலிருந்து கிளம்பிவிட வேண்டும். இங்கே தங்களை அபாயம் சூழ்ந்திருக்கிறது! அபாயம்! அபாயம்!..." என்றான்.
அவன் இவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சின்னப் பழுவேட்டரையர் தரிசன மண்டபத்துக்குள் பிரவேசித்தார். அவரைத் தொடர்ந்து புலவர்கள் வந்தார்கள்.
வந்தியத்தேவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் கோட்டைத் தளபதியின் காதில் விழுந்தன. அவருடைய முகத்தில் கோபக் கனல் ஜ்வாலை விட்டது!
பக்க தலைப்பு
இருபத்தேழாம் அத்தியாயம்
ஆஸ்தான புலவர்கள்
பராக்! பராக்! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள்! கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப்பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்! தொல்காப்பியம் முதலிய சங்கநூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப்படித்தவர்கள்! தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை பார்த்தவர்கள்! இலக்கியம் கண்டதற்குஇலக்கணம் அறிந்தவர்கள்! இலக்கணம் கூறியதற்கு இலக்கியம் தெரிந்தவர்கள்! தாங்களே சுயமாகவும் கவி பாட வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய கவிகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகள் கோடானு கோடிகரையான்களுக்குப் பல்லாண்டு உயிர் வாழ்வதற்கு உணவாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
புலவர் பெருமக்கள் அவ்வளவு பேரும் கும்பலாகச் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள். "வாழ்க! வாழ்க! ஏழுலகமும் ஒரு குடையின் கீழ் ஆளும் சுந்தர சோழ மகா சக்கரவர்த்தி வாழ்க! பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான் வாழ்க! புலவர்களைப் புரக்கும் பெருமான் வாழ்க! கவிஞர்களின் கதியான கருணை வள்ளல் வாழ்க! பண்டித வத்ஸலராகிய பராந்தக சக்கரவர்த்தியின் திருப் பேரர் நீடூழி வாழ்க!" என்று வாழ்த்தினார்கள்.
இந்தக் கோஷங்களையும் கூச்சல்களையும் சுந்தர சோழர் அவ்வளவாக விரும்பவில்லை. எனினும் அதை வௌியில் காட்டிக் கொள்ளாமல், தமது நோயையும் மறந்து, வந்தவர்களை வரவேற்பதற்காக எழுந்திருக்க முயன்றார்.
உடனே, சின்னப் பழுவேட்டரையர் முன் வந்து, "பிரபு, புலவர்கள் தங்களைத் தரிசித்து மரியாதை செலுத்திவிட்டுப் போக வந்திருக்கிறார்களேயன்றித் தங்களுக்குச் சிரமம் கொடுக்க வரவில்லை. ஆகையால் தயவு செய்து தங்களைச் சிரமப்படுத்திக் கொள்ளக் கூடாது!" என்றார்.
"ஆம், ஆம்! அரசர்க்கரசே! சக்கரவர்த்திப் பெருமானே! தங்களுக்குச் சிறிதும் சிரமம் கொடுக்க நாங்கள் வந்தோமில்லை!" என்றார் புலவர்களின் தலைவராகிய நல்லன் சாத்தனார்.
"உங்களையெல்லாம் நெடுநாளைக்குப் பிறகு பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் அமர வேண்டும்; சில பாடல்கள் சொல்லிவிட்டுப் போக வேண்டும்!" என்றார் தமிழன்பரான சக்கரவர்த்தி.
தரையில் விரித்திருந்த ரத்தின ஜமக்காளத்தில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். அதுதான்சமயமென்று நமது வீரன் வல்லவரையனும் புலவர் கூட்டத்துடன் கலந்து உட்கார்ந்து கொண்டான். தான் சொல்ல விரும்பியதை முழுதும் சக்கரவர்த்தியிடம் சொல்லாமல் போக அவனுக்கு மனம் இல்லை. சந்தர்ப்பம் ஒருவேளை மறுபடி கிடைத்தால் சொல்லிவிட்டுப் போகலாம் என்று எண்ணி உட்கார்ந்தான்.
இதைச் சின்னப் பழுவேட்டரையர் கவனித்தார். அவருடைய மீசை துடித்தது. முதலில் அவனை வௌியில் அனுப்பி விடலாமா என்று நினைத்தார். பிறகு, அவன் அங்கே தம்முடைய கண்காணிப்பில் இருப்பதே நலம் என்று தீர்மானித்தார். எனவே, அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். இந்தப் புலவர்கள் சென்ற பிறகு அவனை வௌியே அழைத்துச் சென்று அவன் மகாராஜாவிடத்தில் சொன்ன செய்தி என்னவென்பதை நன்கு தெரிந்து கொள்ள விரும்பினார். "அபாயம்! அபாயம்!" என்ற அவனுடைய குரல் அவர் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
*******************
"புலவர்களே! தமிழ்ப் பாடல்கள் கேட்டு அதிக காலமாயிற்று. என் செவிகள் தமிழ்ப் பாடலுக்குப் பசித்திருக்கின்றன.உங்களில் எவரேனும் புதிய பாடல் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று சக்கரவர்த்தி சுந்தர சோழர் கேட்டார்.
உடனே ஒரு புலவர் சிகாமணி எழுந்து நின்று, "பிரபு! உலகபுரத்தில் தங்கள் திருப்பெயரால் விளங்கும் சுந்தர சோழப் பெரும்பள்ளியிலிருந்து அடியேன் வந்தேன். சிவநேசச் செல்வராகிய தாங்கள் பௌத்த மடாலயத்துக்கு நிவந்தம் அளித்து உதவியதை இந்தத் தமிழகமெங்கும் உள்ள பௌத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள் தாங்கள் உடல் நோயுற்றிருப்பது அறிந்தது முதல், பிக்ஷுக்கள் மிக்க கவலை கொண்டு தங்கள் உடல்நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். அந்தப் பிரார்த்தனைப் பாடலை இவ்விடம் சொல்ல அருள் கூர்ந்து அனுமதி தரவேண்டும்!" என்றார்.
"அப்படியே சொல்லவேணும்; கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் சக்கரவர்த்தி.
புலவரும் பின்வரும் பாடலை இசையுடன் பாடினார்.
"போதியந் திருநிழல் புனித! நிற்பரவுதும் மேதகு நந்திபுரி* மன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே!"
(* அந்நாளில் பழையாறை நகருக்கு நந்திபுரி என்னும் பெயரும் உண்டு. சில காலத்துக்கு முன்பு சோழ மண்டலம் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த போது நந்திபுரி என்னும் பெயர் பிரபலமாய் விளங்கியது. ஆகையினாலேயே இந்தப் பழம் பாடலில் நந்திபுரி மன்னர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது)
பாடலைக் கேட்டதும் புலவர்கள் அத்தனை பேரும் "நன்று! நன்று!" என்று கூறித் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள்.
"புத்தர்கள் இவ்வளவு நன்றியுடையவர்களாயிருப்பது வியப்பு, வியப்பு!" என்றார் ஒரு வீர சைவக்கவிராயர்.
"ஆம்; அது வியப்பான காரியந்தான்; உலகபுரம் புத்தமடத்துக்கு நான் செய்த சேவை மிகஅற்பம். அதற்கு இவ்வளவு பாராட்டு வேண்டுமா?" என்றார் மன்னர்.
"சக்கரவர்த்தியின் வண்மைத் திறத்தை அனுபவித்தவர் யார்தான் என்றென்றைக்கும் நன்றி செலுத்திப் பாராட்டாதிருக்க முடியும்? இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடத் தங்களுடைய வண்மையின் பயனை அனுபவித்திருக்கிறார்கள்!" என்றார் மற்றொரு புலவர் சிரோமணி.
சுந்தர சோழர் முகத்தில் புன்னகை தவழ, "அது என்ன? இந்திரனும் சூரியனும் சிவபெருமானும்கூடவா? அவர்கள் எதற்காக என்னிடம் நன்றி செலுத்த வேண்டுமாம்?" என்று கேட்டார்.
"ஒரு பாடல் சொல்ல அனுமதி தரவேண்டும்!" என்றார் அப்புலவர்.
"அப்படியே நடக்கட்டும்!" என்றார் மன்னர்.
புலவர் கையில் கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரித்துப் படிக்கலுற்றார்:
"இந்திரன் ஏறக் கரி அளித்தார், பரிஏ ழளித்தார் செந்திரு மேனித் தினகரற்கு, சிவனார் மணத்துப் பைந்துகி லேறப் பல்லக்களித்தார், பழையாறை நகர்ச் சுந்தரச்சோழரை யாவரொப்பார்கள் இத் தொன்னிலத்தே!"
பாடலைப் புலவர் படித்து முடித்ததும் சபையிலிருந்த மற்றப் புலவர்கள் எல்லாரும் சிரக்கம்ப கரக்கம்பம் செய்தும், 'ஆஹாகாரம்' செய்தும், "நன்று!நன்று!" என்று கூறியும் தங்கள் குதூகலத்தை வௌியிட்டார்கள்.
சுந்தர சோழர் முகமலர்ச்சியுடன், "இந்தப் பாடலின் பொருள் இன்னதென்பதை யாராவது விளக்கிச் சொல்ல முடியுமா?" என்றார்.
ஒரே சமயத்தில் பலர் எழுந்து நின்றார்கள்.பிறகு நல்லன் சாத்தனாரைத் தவிர மற்றவர்கள்அனைவரும் உட்கார்ந்தார்கள்; நல்லன் சாத்தனார் பாடலுக்குப் பொருள் கூறினார்:--
"ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனாருடைய ஐராவதம் இறந்து போய் விட்டது. அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் அவன் வந்து 'ஐராவதத்துக்கு நிகரான ஒரு யானை வேண்டும்' என்று யாசித்தான். 'ஐராவதத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை. அதைவிடச் சிறந்த யானைகள்தான் இருக்கின்றன!' என்று கூறி, இந்திரனைத் தமது யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக்கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்துவிட்டு, 'எதைக் கேட்பது?' என்று தெரியாமல் திகைத்து நின்றான். அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர், தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார். 'அந்த யானையை எப்படி அடக்கி ஆளப் போகிறோம்? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!' என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தை விட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்...
"பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும்ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும் போர் மூண்டது. ராகு, தினகரனை விழுங்கப் பார்த்தான் முடியவில்லை! தினகரனுடைய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்து விட்டது. ஆனால் சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவின் காலகோடி விஷத்தினால் தாக்கப்பட்டு இறந்தன. சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில், அவனுடைய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தர சோழர், ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, 'ரதத்தில் இந்த குதிரைகளைப் பூட்டிக் கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். தன் குலத்தில் வந்த ஒரு சோழ சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்.
"பின்னர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது. பெண்வீட்டார் கலியாணச் சீர்வரிசைகளுடன் வந்திருந்தார்கள். ஆனால் பல்லக்குக் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள். இதை அறிந்த சுந்தர சோழச் சக்கரவர்த்தி உடனே பழையாறை அரண்மனையிலிருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டுவரச் சொன்னார். பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப்பல்லக்கை அளித்தார். அப்படிப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக்கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த, அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்?..."
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி 'கலீர்' என்று சிரித்தார். நோயின் வேதனையினால் நெடுநாள் சிரித்தறியாத சக்கரவர்த்தியின் சிரிப்பு அவருடையஇணைபிரியாப் பத்தினியான மலையமான் மகள் வானவன்மாதேவிக்கும் தாதியர்களுக்கும் அரண்மனைவைத்தியருக்கும் கூடச் சிறிது உற்சாகத்தை அளித்தது.
கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையர் இத்தனை நேரமும் நின்று கொண்டேயிருந்தவர்,சக்கரவர்த்தியைக் கைகூப்பி வணங்கி, "பிரபு! நான் பெரிய தவறு செய்து விட்டேன்; பிழை பொறுத்துமன்னிக்க வேண்டும்!" என்றார்.
"ஆ! தளபதியா பேசுகிறது? நீர் என்ன பிழை செய்தீர்? எதற்காக மன்னிப்பு? ஒருவேளை இந்திரனுக்கு நான் அளித்த வெள்ளை யானையையும் சூரியனுக்கு அளித்த குதிரைகளையும்திரும்பப் பறித்துக் கொண்டு வந்து விட்டீரோ? சிவபெருமானிடமிருந்து சிவிகையையும் பிடுங்கிக் கொண்டுவந்து விட்டீரோ? செய்யக்கூடியவர்தான் நீர்!" என்று சுந்தர சோழர் சொல்லி மீண்டும் சிரித்ததும்,சக்கரவர்த்தியுடன் சேர்ந்து புலவர்களும் சிரித்தார்கள். எல்லாரையும் காட்டிலும் அதிகமாக வந்தியத்தேவன்சிரித்தான். அதைச் சின்னப் பழுவேட்டரையர் கவனித்து அவனை நோக்கிக் கடுமையாக ஒரு பார்வைபார்த்தார். உடனே, சக்கரவர்த்தியின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கூறினார்:
"அரசர்க்கரசே! நான் செய்த பிழை இதுதான். இத்தனை காலமும் நான் இவர்களைப் போன்றபுலவர் சிகாமணிகளைத் தங்களிடம் வரவொட்டாமல் தடை செய்து வைத்திருந்தேன். அரண்மனை மருத்துவர் சொற்படி செய்தேன்.ஆனால் இப்போது அது பிழை என்று உணர்கிறேன். இந்தப் புலவர்களின் வரவினால் தங்கள் முகம் மலர்ந்தது. இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தாங்கள் வாய்விட்டுச் சிரித்தீர்கள். அந்தக் குதூகலச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு உடைய பிராட்டியின் (பட்டத்து அரசியை 'உடைய பிராட்டி' என்று குறிப்பிடுவது அக்காலத்து மரபு) முகமும் தாதியரின் முகங்களும் மலர்ந்தன; நானும் மகிழ்ந்தேன். இவ்வளவு குதூகலம் தங்களுக்கு அளிக்ககூடியவர்களை இத்தனை நாள் தங்கள் சந்நிதானத்துக்கு வரவொட்டாமல் தடுத்தது என்னுடைய பெரும் பிழைதானே?..." என்றார்.
"நன்று சொன்னீர், தளபதி! இப்போதாவது இதை நீர் உணர்ந்தீர், அல்லவா? 'வைத்தியர் சொல்லுவதைக் கேட்க வேண்டாம்; புலவர்கள் வருவதைத் தடுக்க வேண்டாம்' என்று உமக்கு நான் அடிக்கடி சொன்னதின் காரணம் தெரிகிறது அல்லவா?" என்றார் சக்கரவர்த்தி.
அரண்மனை வைத்தியர் எழுந்து கைகட்டி வாய் புதைத்து ஏதோ சொல்லத் தொடங்கினார். அதைச் சுந்தர சோழர் சட்டை செய்யாமல் புலவர்களைப் பார்த்து "இந்த அருமையான பாடலைப் பாடிய புலவர் யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்ல வேணும்!" என்றார்.
நல்லன் சாத்தனார், "அரசர்க்கரசே! அதுதான் தெரியவில்லை! நாங்களும் அதைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டுதானிருக்கிறோம். கண்டுபிடித்து அந்த மாபெரும் புலவருக்குக் 'கவிச் சக்கரவர்த்தி' என்று பட்டம் சூட்டவும் சிவிகையில் ஏற்றி அவரை நாங்கள் சுமந்து செல்லவும் சித்தமாயிருக்கிறோம். இதுகாறும் எங்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை" என்று சொன்னார்.
"அதில் வியப்பு ஒன்றுமில்லை; நாலுவரி கொண்ட பாடலில் இவ்வளவு பெரும் பொய்களைஅடக்கக்கூடிய மகா கவிஞர் தமது பெயரை வௌிப்படுத்திக் கொண்டு முன்வர விரும்ப மாட்டார்தானே?" என்று மகாராஜா கூறியதும், புலவர்களின் திருமுகங்களைப் பார்க்க வேண்டுமே! ஒருவர் முகத்திலாவது ஈ ஆடவில்லை; என்ன மறுமொழி சொல்லுவது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.
இந்த நிலைமையில் நமது வந்தியத்தேவன் துணிச்சலாக எழுந்து, "பிரபு! அப்படி ஒரே அடியாகப்பொய் என்று தள்ளி விடக்கூடாது. இல்லாத விஷயத்தைச் சாதாரண பாமர மக்கள் சொன்னால் அது பொய்; இராஜாங்க நிர்வாகத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விதம் சொன்னால், அது இராஜதந்திர சாணக்கியம்; கவிகள் அவ்வாறு கூறினால் அது கற்பனை, அணி அலங்காரம், இல்பொருள் உவமை.." என்றான்.
புலவர்கள் அத்தனை பேரும் அவன் பக்கமாகப் பார்த்து "நன்று! நன்று!" என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள்.
சக்கரவர்த்தியும் வந்தியத்தேவனை உற்று நோக்கி, "ஓ! நீ காஞ்சியிலிருந்து ஓலை கொண்டுவந்தவன் அல்லவா? கெட்டிக்காரப் பிள்ளை! நன்றாக என்னை மடக்கி விட்டாய்!" என்றார். பிறகு சபையைப் பார்த்து, "புலவர்களே! பாடல் மிக அருமையான பாடலாக இருந்தாலும், அதைப் பாடியவரைக் கண்டுபிடிக்க வேண்டிய சிரமமும், அவருக்குக் கவிச்சக்கரவர்த்தி என்னும் பட்டம் சூட்டவேண்டிய அவசியமும் இல்லை. இதைப் பாடிய புலவரை எனக்குத் தெரியும். ஏற்கெனவே அவருடைய சிரஸின் பேரில் தூக்க முடியாத கனமுடைய சோழ சாம்ராஜ்ய மணிமகுடம் உட்கார்ந்து அழுத்திக் கொண்டிருக்கிறது. 'புவிச் சக்கரவர்த்தி', 'திரிபுவனச் சக்கரவர்த்தி', 'ஏழுலகச் சக்கரவர்த்தி', என்னும் பட்டங்களையும் அந்தக் கவிராயர் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறார்!" என்றார் சுந்தர சோழர்.
இதைக் கேட்ட புலவர்கள் அத்தனை பேரும் ஆச்சரியக் கடலில் முழுகித் தத்தளித்தார்கள் என்று கூறினால், அதை வாசகர்கள் பொய் என்று தள்ளி விடக் கூடாது!ஆசிரியரின் கற்பனை, அணி அலங்காரம், இல்பொருள் உவமை --என்று இவ்விதம் ஏதாவது ஒருவகை இலக்கணம் கூறி ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!
பக்க தலைப்பு
இருபத்தெட்டாம் அத்தியாயம்
இரும்புப் பிடி
திடீரென்று பொங்கிய புது வெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர்தலைவரான நல்லன் சாத்தனார், "பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி..." என்றுதயங்கினார்.
"உங்கள் முன்னால், கால்களின் சுவாதீனத்தை இழந்து, நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும்புவிச் சக்கரவர்த்திதான்!" என்றார் சுந்தர சோழர்.
புலவர்களிடையே பலவித வியப்பொலிகளும் ஆஹாகாரமும் எழுந்தன. சிலர் தங்களுடைய மனோநிலையை எவ்விதம் வௌியிடுவது என்று தெரியாமல் தலையையும் உடம்பையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தங்களுடைய மனோநிலை இன்னதென்று தங்களுக்கே தெரியாமல் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள்!
சுந்தர சோழர் கூறினார்: "புலவர் பெருமக்களே! ஒரு சமயம் பழையாறையில் புலவர்களும்கவிஞர்களும் என்னைப் பார்க்க வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் உங்களில் சிலரும் இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் சோழ குலத்தின் வள்ளல் தன்மையைக் குறித்து ஒவ்வொரு பாடல் சொன்னார்கள்; என்னைப்பற்றியும் பாடினார்கள். நான் 'இவருக்கு அதைக் கொடுத்தேன்', 'அவருக்கு இதை அளித்தேன்' என்றெல்லாம் பாடினார்கள். அச்சமயம் இளையபிராட்டி குந்தவையும் என் அருகில் இருந்தாள். புலவர்கள் பரிசில்கள் பெற்றுச் சென்ற பிறகு அவர்கள் பாடிய பாடல்களை அரசிளங்குமரி புகழ்ந்து பாராட்டினாள்.குந்தவையிடம் நான் 'புலவர்களையெல்லாம் விட என்னால் நன்றாகப் பாட முடியும்' என்று சபதம் கூறினேன்.பிறகு தான் வேடிக்கையாக இந்தப் பாடலைப் பாடினேன். 'எனக்குப் பரிசு கொடு!' என்று கேட்டேன். குழந்தை என் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, 'இந்தாருங்கள் பரிசு' என்று கன்னத்துக்கு இரண்டு அறை கொடுத்தாள்! அது நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கிறது; ஆனால் ஆண்டு எட்டுக்கு மேல் ஆகிறது!..." என்றார்.
"விந்தை! விந்தை!" என்றும், "அற்புதம்! அற்புதம்!" என்றும் புலவர்கள் கூறி மகிழ்ந்தார்கள்.
குந்தவை என்ற பெயரைக் கேட்டதுமே வந்தியதேவனுக்கு மெய்சிலிர்த்தது. சோழ குலத்தில்பிறந்த அந்த இணையில்லாப் பெண்ணரசியின் எழிலையும் புலமையையும் அறிவுத்திறனையும் பற்றி அவன்எவ்வளவோ கேள்விப்பட்டதுண்டு. அத்தகைய அதிசய அரசகுமாரியைப் பெற்றெடுத்த பாக்கியசாலியான தந்தை இவர்; தாய் அதோ பக்கத்தில் அமர்ந்திருக்கும் மூதாட்டி. சுந்தர சோழர் தம் செல்வப் புதல்வியைக்குறித்துப் பேசும் போது எவ்வளவு பெருமிதத்துடன் பேசுகிறார்? அவர் குரல் எப்படித் தழுதழுத்து உருக்கம்பெறுகிறது?...
வந்தியத்தேவனுடைய வலக்கரம் அவனுடைய இடையைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டுத் துணிச் சுருளைத் தடவிப் பார்த்தது. ஏனெனில் குந்தவைப்பிராட்டிக்கு அவன் கொண்டு வந்திருந்த ஓலை அச்சுருளுக்குள் இருந்தது. தடவிப் பார்த்த கை திகைப்படைந்து செயலிழந்து நின்றது; அவனுடைய உள்ளம் திக்பிரமை கொண்டது. 'ஐயோ! இது என்ன? ஓலையைக் காணோமே? எங்கே போயிற்று? எங்கேயாவது விழுந்து விட்டதோ? சக்கரவர்த்தியின் ஓலையை எடுத்தபோது அதுவும் தவறி விழுந்திருக்குமோ? எங்கே விழுந்திருக்கும்? ஒருவேளை ஆஸ்தான மண்டபத்தில் விழுந்திருக்குமோ? அப்படியானால் சின்னப் பழுவேட்டரையரின் கையில் சிக்கி விடுமோ? சிக்கிவிட்டால் அதிலிருந்து ஏதேனும் அபாயம் முளைக்குமோ? அடடா? என்ன பிசகு! எத்தனை பெரிய தவறுதல்! இதிலிருந்து எப்படிச் சமாளிப்பது?...'
குந்தவை தேவிக்கு கொணர்ந்த ஓலை தவறிவிட்டது என்று அறிந்த பிறகு வந்தியத்தேவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. மேலே நடந்த பேச்சுவார்த்தைகளும் அவன் காதில் சரியாக விழவில்லை; விழுந்ததும் மனத்தில் நன்கு பதியவில்லை.
சுந்தர சோழர் வியப்புக் கடலில் மூழ்கியிருந்த புலவர் கூட்டத்தைப் பார்த்து மேலும் கூறினார்:--
"நான் விளையாட்டாகச் செய்த பாடலைக் குந்தவை யாரிடமாவது சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை பழையாறை திருமேற்றளி ஆலயத்தின் ஈசான்ய பட்டாச்சாரியாரிடம் சொல்லியிருக்கலாம். அவர் இப்பாடலை நாடெங்கும் பரவும்படி செய்து என்னை உலகம் பரிகசிப்பதற்கு வழி செய்து விட்டார்!..."
"பிரபு! தாங்களே பாடியிருந்தால் என்ன? பாடல் அற்புதமான பாடல்தான்! சந்தேகமே இல்லை. தாங்கள் 'புவிச் சக்கரவர்த்தி'யாயிருப்பதோடு 'கவிச் சக்கரவர்த்தி'யும் ஆவீர்கள்!" என்றார் நல்லன் சாத்தனார்.
"ஆயினும், இச்சமயம் அதே பாடலை நான் பாடியிருந்தால் இன்னொரு கொடையையும்சேர்த்திருப்பேன். இந்திரனுக்கு யானையும், சூரியனுக்குக் குதிரையும், சிவனாருக்குப் பல்லக்கும்கொடுத்ததோடு நிறுத்தியிருக்க மாட்டேன்.மார்க்கண்டனுக்காக மறலியைச் சிவபெருமான் உதைத்தார்அல்லவா? அந்த உதைக்கு யமன் தப்பித்துக் கொண்டான். ஆனால் அவனுடைய எருமைக்கடா வாகனம் சிவபெருமான் கோபத்தைத் தாங்காமல் அங்கேயே விழுந்து செத்து விட்டது. வாகனமில்லாமல் யமன் திண்டாடிக் கொண்டிருந்ததையறிந்து பழையாறைச் சுந்தர சோழர் யமனுக்கு எருமைக்கடா வாகனம் ஒன்றை அனுப்பினார்!...இப்படி ஒரு கற்பனையும் சேர்த்திருப்பேன். அந்த எருமைக்கடாவின் பேரில் ஏறிக் கொண்டுதான் யமன் இப்போது ஜாம்ஜாம் என்று என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறான். நமது தஞ்சைக் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரால் கூட யமதர்ம ராஜனையும், அவனுடைய எருமைக்கடா வாகனத்தையும் தடுத்து நிறுத்திவிட முடியாது அல்லவா?"
இப்படிச் சுந்தர சோழர் சொன்ன போது அவர் அருகில் வீற்றிருந்த உடைய பிராட்டி வானவன்மாதேவியின் கண்களில் நீர் அருவி பெருகிற்று. அங்கிருந்த புலவர்கள் பலர் விம்மி அழத்தொடங்கிவிட்டார்கள்.
சின்னப் பழுவேட்டரையர் மட்டுமே மனோதிடத்துடன் இருந்தார்.
"பிரபு! தங்களுடைய சேவையில் யமனுடன் போர் தொடுக்கவும் நான் சித்தமாயிருப்பேன்!" என்றார்.
"அதற்கு ஐயமில்லை, தளபதி! ஆயினும் யமனுடன் போர் தொடுக்கும் சக்தி மானிடர் யாருக்கும் இல்லை. யமனைக் கண்டு அஞ்சாமலிருக்கத்தான் நாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். புலவர்களே! 'நமனை அஞ்சோம்' என்று தமிழகத்தில் தவப்புதல்வர் ஒருவர் பாடினார் அல்லவா?" என்றார் சக்கரவர்த்தி.
ஒரு புலவர் எழுந்து அப்பாடலைப் பாடினார்:
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம் ஏமாப்போம் பிணியறியோம்..."
சக்கரவர்த்தி இந்த இடத்தில் குறுக்கிட்டு, "ஆகா! இறைவனைப் பிரத்யட்சமாகத் தரிசித்த மகானைத் தவிர வேறு யாரால் இவ்வளவு துணிச்சலாகப் பாட முடியும்? அப்பர் சுவாமிகளுக்குக் கொடிய சூலை நோய் இருந்தது; இறைவன் அருளால் நோய் நீங்கிற்று எனவே,'பிணியறியோம்' என்று பாடியிருக்கிறார். புலவர்களே! என்னைப் பற்றியும் என் கொடைகளைப் பற்றியும் பாடுவதை நிறுத்திவிட்டு, இனி இத்தகைய அருள் வாக்கைப் பாடுங்கள்! அப்பரும், சம்பந்தரும், சுந்தரமூர்த்தியும் இதுபோல் ஆயிரக்கணக்கான பக்திமயமான தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அப்பாடல்கள் எல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? படித்தும் பாடியும் பரவசம் அடைவதற்கு ஓர் ஆயுட் காலம் போதாது அல்லவா?" என்றார்.
"அரசர்க்கரசே! தாங்கள் அனுமதித்தால் அந்தத் திருப்பணியை இப்போதே தொடங்குகிறோம்!"
"இல்லை; என்னுடைய காலத்தில் நடக்கக்கூடிய திருப்பணி அல்ல அது.எனக்குப் பின்னால்..." இவ்விதம் கூறித் தயங்கி நின்ற சுந்தர சோழர் சிந்தனையில் ஆழ்ந்தார்.
அரண்மனை மருத்துவர், சின்னப் பழுவேட்டரையரின் அருகில் வந்து அவர் காதில் ஏதோ சொன்னார்.
அதைக் கவனித்த சுந்தர சோழர் தூக்கிவாரிப் போட்டவரைப் போல் கண்ணை நன்கு விழித்துச் சபையோரைப் பார்த்தார். வேறொரு உலகத்திலிருந்து, மரணத்தின் வாசலிலிருந்து, யமனுலகக் காட்சியிலிருந்து, திடீரென்று திரும்பி வந்தவரைப் போல் சக்கரவர்த்தி தோன்றினார்.
"பிரபு! சங்கப் பாடல் ஒன்றைக் கேட்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தீர்கள். அதை மட்டும் சொல்லி விட்டு இவர்கள் போகலாமல்லவா?" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.
"ஆம், ஆம்; மறந்து விட்டேன் என்னுடைய உடல் மட்டும் அல்ல; உள்ளமும் சுவாதீனத்தை இழந்து வருகிறது. எங்கே? சங்கப் பாடலைச் சொல்லட்டும்!" என்றார் மன்னர்.
சின்னப் பழுவேட்டரையர் நல்லன் சாத்தனாருக்குச் சமிக்ஞை செய்தார். புலவர் தலைவர் எழுந்துகூறினார்; "அரசே! தங்களுடைய முன்னோர்களில் மிகப் பிரபலமானவர் கரிகால் பெருவளத்தார். இமயமலையில் புலிக் கொடியைப் பொறித்த மாவீரர்.அவருடைய ஆட்சிக் காலத்தில் பூம்புகார் -காவேரிப்பட்டினம் - சோழ மகாராஜ்யத்தின் தலைநகரமாயிருந்தது. பற்பல வௌிநாடுகளிலிருந்தும் பற்பலபொருள்கள் மரக்கலங்களில் வந்து இறங்கியவண்ணமிருந்தன. பூம்புகாரின் செல்வப் பெருக்கையும் வளத்தையும் வர்ணிக்கும் சங்கப் புலவர் ஒருவர் இன்னின்ன நாட்டிலிருந்து இன்னின்ன பொருள்கள் வந்தன என்பதைத் தௌிவாகச் சொல்லியிருக்கிறார். அந்தப் பாடல் பகுதி இது:
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த வாரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்..."
பாடலில் இந்த இடம் வந்தபோது சுந்தர சோழர் கையினால் சமிக்ஞை செய்யவே, புலவர் நிறுத்தினார்.
"தளபதி! கரிகால் வளவர் காலத்தில் ஈழநாட்டிலிருந்து தமிழகத்துக்கு உணவுப் பொருள் வந்து கொண்டிருந்தது என்று இப்பாடல் சொல்கிறது. அதை நான் அறிவதற்காகத்தானே இப்புலவர்களைஅழைத்து வந்தீர்?"
"ஆம், அரசே!" என்று கோட்டைத் தளபதி கூறியது சிறிது ஈனஸ்வரத்தில் கேட்டது.
"அறிந்து கொண்டேன்; இனி இப்புலவர்களைப் பரிசில்கள் கொடுத்து அனுப்பி விடலாம்!" என்றார் மன்னர்.
"புலவர்களே! நீங்கள் இப்போது விடைபெற்றுக் கொள்ளலாம்!" என்றார் கோட்டைத் தளபதி.
புலவர்கள், மன்னருக்கு "வாழி!" கூறிக் கோஷித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
குந்தவை தேவிக்குக் கொண்டு வந்த ஓலையைக் காணாததால் மனக்கலக்கம் அடைந்திருந்த வல்லவரையன், அப்புலவர்களுடனே தானும் நழுவி விடலாம் என்று எண்ணி எழுந்து கூட்டத்தின் நடுவில் நடந்து சென்றான்.
ஆனால், அவன் எண்ணம் நிறைவேறவில்லை. வாசற்படியை நெருங்கியபோது ஒரு வலிய இரும்புக் கை அவனுடைய கையின் மணிக்கட்டை இறுகப் பிடித்தது. வல்லவரையன் நல்ல பலசாலிதான்! ஆயினும் அந்த வஜ்ரப் பிடியின் வேகம் அவன் உச்சந்தலை முதலாவது உள்ளங்கால் வரையில் ஒரு குலுக்குக் குலுக்கி அவனைச் செயலிழந்து நிற்கும்படி செய்துவிட்டது.
அவ்விதம் பிடித்த இரும்புக்கரம் சின்னப் பழுவேட்டரையரின் கரந்தான் என்பதை நிமிர்ந்து பார்த்துத் தெரிந்து கொண்டான்.
புலவர்கள் தரிசன மண்டபத்திலிருந்து வௌியேறினார்கள்.
பக்க தலைப்பு
இருபத்தொன்பதாம் அத்தியாயம்
"நம் விருந்தாளி"
புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள்.
அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார்.
"பிரபு! புது மருந்தினால் ஏதாவது பலன் தெரிகிறதா?" என்று கேட்டார்.
"பலன் தெரிகிறதாக மருத்துவர் சொல்லுகிறார்; தேவியும் சொல்கிறார்; ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கை உண்டாகவில்லை.உண்மையைச் சொன்னால், தளபதி! இதெல்லாம் வீண் முயற்சி என்றே தோன்றுகிறது. என் விதி என்னை அழைக்கிறது. யமன் என்னைத் தேடிக் கொண்டு பழையாறைக்குப் போயிருக்கிறான் என்றே நினைக்கிறேன்.அங்கே நான் இல்லையென்று அறிந்ததும், இவ்விடம் என்னைத் தேடிக் கொண்டு வந்து சேருவான்!..."
"பிரபு! தாங்கள் இப்படி மனமுடைந்து பேசக் கூடாது. எங்களையெல்லாம் இப்படி மனங்கலங்கச் செய்யக் கூடாது. தங்கள் குல முன்னோர்கள்..."
"ஆ! என் குல முன்னோர்கள் யமனைக் கண்டு அஞ்சியதில்லையென்று சொல்லுகிறீர்! எனக்கும் என் குல முன்னோர்கள் பலரைப் போல் போர்க்களத்தில் முன்னணியில் நின்று போர் செய்து உயிர் விடும் பாக்கியம் கிடைக்குமானால், அத்தகைய மரணத்துக்குச் சிறிதும் அஞ்ச மாட்டேன்; சோர்வும் கொள்ள மாட்டேன். உற்சாகத்துடன் வரவேற்பேன். என்னுடைய பெரிய தகப்பனார் இராஜாதித்தியர் தக்கோலத்தில் யானை மேலிருந்து போர் புரிந்தபடியே உயிர் நீத்தார். சோழ குலத்தின் வீரப் புகழைத் தக்கோலம் போர்க்களத்தில் என்றென்றும் நிலைநாட்டினார். 'யானை மேல் துஞ்சிய தேவர்' என்று புகழ்பெற்றார். நான் என்ன புகழைப் பெறுவேன்? 'நோய்ப் படுக்கையில் துஞ்சிய சுந்தர சோழன்' என்றுதானே பெயர் பெறுவேன்? என்னுடைய இன்னொரு பெரிய தகப்பனார், கண்டராதித்த தேவர் சிவபக்தியில் ஈடுபட்டு மரண பயத்தை விட்டிருந்தார். ஸ்தல யாத்திரை செய்வதற்கு மேற்குக் கடற்கரை நாடுகளுக்குப் போனார். அங்கேயே காலமானார். 'மேற்கெழுந்தருளிய தேவர்' என்று அவரும் பெயர் பெற்றார். அவரைப் போன்ற சிவபக்தனும் அல்ல நான்; ஸ்தல யாத்திரை செய்யவும் இயலாதவனாகி விட்டேன். இப்படியே எத்தனை நாள் படுத்திருப்பேன்? என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பாரமாக!...ஆனால் என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. அதிக காலம் நான் இந்தப் பூவுலகில் இருக்க மாட்டேன் என்று..."
"சக்கரவர்த்தி! அரண்மனை வைத்தியர் தங்களுக்கு அபாயம் ஏதும் இல்லை என்று கூறுகிறார். சோதிடர்களும் அபாயம் இல்லையென்றே சொல்கிறார்கள். ஆனால் இந்தச் சிறு பிள்ளை தங்களிடம் ஏதோ அபாயத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்...."
"ஆ! இவன் காஞ்சி நகரிலிருந்து வந்த பிள்ளைதானே? ஆமாம், ஏதோ அபாயம் என்று சொன்னான்; எதைப் பற்றிச் சொன்னாய், தம்பி? என்னுடைய நிலையைப் பற்றியா?"
வல்லவரையனுடைய மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. 'அபாய'த்தைப் பற்றித் தான் எச்சரித்ததாக ஒப்புக் கொண்டால் சந்தேகங்கள் ஏற்பட்டுத் தனக்கு அபாயம் நேருவது நிச்சயம். அந்த இக்கட்டிலிருந்து தப்ப வேண்டும். நல்லது; ஓர் உபாயம் செய்து பார்க்கலாம். இலக்கணத்தைத் துணையாகக்கொண்டு நெடிலைக் குறில் ஆக்கலாம்!
"சக்கரவர்த்திப் பெருமானே! அபாயத்தைப் பற்றிச் சொல்வதற்கு நான் யார்? நம் வீர தளபதிசின்னப் பழுவேட்டரையரும், அரண்மனை வைத்தியரும், சாவித்திரி அம்மனையொத்த மகாராணியும் இருக்கும் போது என்ன அபாயம் வந்துவிடும்? 'அபயம்' 'அபயம்' என்று தங்களிடம் நான் முறையிட்டுக் கொண்டேன். பழைய வாணர் குலத்துக்கு நான் ஒரு அறியா சிறுவன்தான் இப்போது பிரதிநிதியாக மிஞ்சியிருக்கிறேன். தங்கள் திருப்புதல்வர் மனம் மகிழும்படி சோழப் பேரரசுக்குத் தொண்டு புரிந்து வருகிறேன். எங்கள் பழைய பூர்வீக ராஜ்யத்தில் ஒரு சிறு பகுதியையாவது அடியேனுக்குத் திருப்பிக் கொடுக்க அருள்புரிய வேண்டும். அரசர்க்கரசே! அபயம்! அபயம்! இந்த அறியாச் சிறுவன் தங்கள் அபயம்!" என்று வல்லவரையன் மூச்சு விடாமல் படபடவென்று பேசி நிறுத்தினான்.
இதைக் கேட்ட பழுவேட்டரையரின் முகம் சுருங்கியது. சுந்தர சோழரின் முகம் மீண்டும் மலர்ந்தது. மகாராணியின் முகத்தில் கருணை ததும்பியது.
"இந்தப் பிள்ளை பிறந்தவுடனே சரஸ்வதி தேவி இவனுடைய நாவில் எழுதி விட்டாள் போலும்! இவனுடைய வாக்குவன்மை அதிசயமாயிருக்கிறது!" என்றாள் தேவி.
இதுதான் சமயம் என்று வந்தியத்தேவன், "தாயே! தாங்கள் எனக்காகப் பரிந்து ஒரு வார்த்தை சொல்லவேணும். நான் தாய் தந்தையற்ற அநாதை; வேறு ஆதரவு அற்றவன்.என்னுடைய வேண்டுகோளை நானேதான் வௌியிட்டாக வேண்டும். பக்தனுக்குப் பரிந்து பார்வதி தேவி பரமசிவனாரிடமும், லக்ஷ்மிதேவி மகாவிஷ்ணுவிடமும் பேசுவது போல் தாங்கள் எனக்காகப் பேச வேண்டும். எங்கள் பூர்வீக அரசில் ஒரு பத்துக் கிராமத்தை திரும்பக் கொடுத்தாலும் போதும் நான் மிகவும் திருப்தி அடைவேன்!" என்றான்.
இதையெல்லாம் கேட்கக் கேட்கச் சுந்தர சோழருக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியுமாயிருந்தது. அவர் சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்து, "தளபதி! இந்த இளைஞனை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. தேவியின் முகத்தைப் பார்த்தால், இவனை மூன்றாவது பிள்ளையாகச் சுவீகாரம் எடுத்துக் கொண்டுவிடலாமா என்றே யோசிப்பதாகத் தெரிகிறது. இவனுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கலாம் அல்லவா? அதில் ஒன்றும் கஷ்டம் இராதே? உமது அபிப்பிராயம் என்ன?" என்றார்.
"இதில் அடியேனுடைய அபிப்பிராயத்துக்கு இடம் என்ன இருக்கிறது? இளவரசர் கரிகாலரின் கருத்தையல்லவோ அறிய வேண்டும்?" என்றார் தஞ்சைக் கோட்டைத் தளபதி.
"சக்கரவர்த்தி! இளவரசரைக் கேட்டால், பழுவூர்த்தேவரைக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். பழுவூர்த்தேவரோ இளவரசரைக் கேட்க வேண்டும் என்கிறார். இரண்டு பேருக்கும் நடுவில் என் கோரிக்கை..."
"பிள்ளாய்! நீ கவலைப்படாதே! இரண்டு பேரையும் சேர்த்து வைத்துக் கொண்டே கேட்டு விடலாம்!" என்றார் சக்கரவர்த்தி.
பிறகு சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்து, "தளபதி! இளவரசனிடமிருந்து இந்தப் பிள்ளைஓலை கொண்டு வந்தான். பழையபடி காஞ்சிக்கு நான் வரவேண்டும் என்றுதான் ஆதித்தன் ஓலையில்எழுதியிருக்கிறான்.அங்கே புதிதாய்ப் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். அதில் நான் சில நாளாவதுதங்க வேண்டுமாம்!" என்றார்.
"தங்கள் சித்தம் எப்படியோ, அப்படியே செய்கிறது!" என்றார் கோட்டைத் தளபதி.
"ஆ! என்னுடைய சித்தம் எப்படியோ அப்படி நீர் நடத்துவீர். ஆனால் என் கால்கள் மறுக்கின்றன. காஞ்சிக்குப் பிரயாணம் செய்வது இயலாத காரியம். அரண்மனைப் பெண்டுகளைப் போல் பல்லக்கில் ஏறித் திரைபோட்டுக் கொண்டு யாத்திரை செய்வதென்பதை நினைத்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கிறது. ஆதித்த கரிகாலனை இங்கே வந்து விட்டுப் போகும்படிதான் மறு ஓலை எழுதிக் கொடுக்க வேண்டும்..."
"இளவரசர் இச்சமயம் காஞ்சியை விட்டு இங்கு வரலாமா? வடதிசையில் நம் பகைவர்கள் இன்னும் பலசாலிகளாக இருக்கிறார்களே!"
"பார்த்திபேந்திரனும் மலையமானும் அங்கிருந்து பார்த்துக் கொள்வார்கள். இளவரசன் இச்சமயம்இங்கே என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று என் உள்ளத்தில் ஏதோ சொல்கிறது. அது மட்டுமல்ல; ஈழ நாட்டுக்குச் சென்றிருக்கும் இளங்கோவையும் உடனே இங்கு வந்து சேரும்படி அழைப்பு அனுப்ப வேண்டும். இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்ய விரும்புகிறேன். அருள்மொழி இங்கு வரும்போது ஈழப் படைக்கு உணவு அனுப்புவது பற்றி உங்கள் ஆட்சேபத்தையும் அவனிடம் தெரிவிக்கலாம்..."
"சக்கரவர்த்தி! மன்னிக்க வேண்டும். ஈழத்துக்கு உணவு அனுப்புவதை நான் ஆட்சேபிக்கவில்லை.தனதான்யாதிகாரியும் ஆட்சேபிக்கவில்லை.சோழ நாட்டுக் குடிமக்கள் ஆட்சேபிக்கிறார்கள். சென்றஅறுவடையில் சோழ நாட்டில் விளைவு குறைந்து விட்டது. நம்முடைய மக்களுக்கே போதாமலிருக்கும்போது,இலங்கைக்குக் கப்பல் கப்பலாக அரிசி அனுப்புவதை மக்கள் ஆட்சேபிக்கிறார்கள்! தற்போது வாய்க்குள்முணுமுணுக்கிறார்கள். கொஞ்ச நாள் போனால், மக்களின் கூச்சல் பலமாகும். தங்கள் உடல்நிலையைப்பாதிக்கும்படி இந்த அரண்மனைக்குள்ளேயும் அவர்களுடைய கூச்சல் வந்து கேட்கும்!..."
"குடிமக்கள் ஆட்சேபிக்கிற காரியத்தைச் செய்ய அருள்மொழி ஒரு நாளும் விரும்ப மாட்டான். எல்லாவற்றுக்கும், அவன் ஒரு தடவை இங்கு வந்து விட்டுப் போகட்டும். பெரிய பழுவேட்டரையர் வந்ததும் இலங்கைக்கு ஆள் அனுப்புவது பற்றி முடிவு செய்யலாம்; அவர் எப்போது திரும்புகிறார்?"
"இன்று இரவு கட்டாயம் வந்து விடுவார்!"
"காஞ்சிக்கும் நாளைய தினம் ஓலை எழுதி அனுப்பலாம். இந்தப் பிள்ளையினிடமே அந்த ஓலையையும் கொடுத்தனுப்பலாம் அல்லவா?"
"இந்தச் சிறுவன் காஞ்சியிலிருந்து ஒரே மூச்சில் வந்திருக்கிறான். சில நாள் இவன் இங்கேயேதங்கி இளைப்பாறி விட்டுப் போகட்டும். வேறு ஆளிடம் ஓலையைக் கொடுத்தனுப்பலாம்."
"அப்படியே செய்க. இளவரசன் வருகிற வரையிலே கூட இவன் இங்கேயே இருக்கலாம்!"
இச்சமயம் மலையமான் மகள் எழுந்து நிற்கவே, சின்னப் பழுவேட்டரையர், "இன்று அதிக நேரம் தங்களுக்குப் பேசும் சிரமம் கொடுத்து விட்டேன். மன்னிக்க வேணும். தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது!" என்று சொன்னார்.
"தளபதி! இந்தப் பிள்ளை நம் விருந்தாளி. இவனுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுங்கள். சக்கரவர்த்திக்கு மட்டும் உடம்பு சரியாயிருந்தால், இவனைத் தமது அரண்மனையிலேயே இருக்கச் சொல்லியிருக்கலாம்!" என்றாள் மலையமான் மகள்.
"நான் கவனித்துக் கொள்கிறேன், தாயே! தங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நன்றாய்க்கவனித்துக் கொள்கிறேன்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர். அப்போது அவரை அறியாமலே அவருடையஒரு கை மீசையைத் தொட்டு முறுக்கிற்று.
பக்க தலைப்பு
முப்பதாம்அத்தியாயம்
சித்திர மண்டபம்
சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப் பற்றி அவன் சொன்ன சமாதானம் அவருக்கு அவ்வளவாகப் பூரண திருப்தி அளிக்கவில்லை. சக்கரவர்த்தியைத் தனியாகப் போய்ப் பார்க்கும்படி அவனுக்கு அனுமதி அளித்தது ஒருவேளை தவறோ என்றும் தோன்றியது. ஆதித்த கரிகாலரிடமிருந்து வந்தவனாதலால், அவனைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியது முறை. ஆனால் தமையனார் முத்திரை மோதிரத்துடன் அனுப்பியுள்ளபடியால் சந்தேகிக்க இடமில்லை. ஆகா! இம்மாதிரி காரியங்களில் பெரியவருக்கு வேறொருவர் ஜாக்கிரதை சொல்லித்தர வேண்டுமா, என்ன? ஆனாலும், தாம் திடீரென்று தரிசன மண்டபத்துக்குள் சென்ற பொழுது அவ்வாலிபன் தயங்கி நின்று பயந்தவன் போல் விழித்தது அவர் கண் முன்னால் தோன்றியது. "அபாயம்! அபாயம்!" என்று அவன் கூவியது நன்றாகக் காதில் விழுந்ததாக ஞாபகம் வந்தது. "அபயம்" என்று சொல்லியிருந்தால், அது தம் காதில் "அபாயம்" என்று விழுந்திருக்கக்கூடியது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் இவனை உடனே திருப்பி அனுப்பாமலிருப்பது நல்லது. தமையனார் வந்த பிறகு இவனைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொண்டு பிறகு உசிதமானதைச் செய்யலாம். இம்மாதிரி தீரனாகிய வாலிபனை நாம் நம்முடைய அந்தரங்கக் காவற் படையில் சேர்த்துக் கொள்ளப் பார்க்க வேண்டும். சமயத்தில் உபயோகமாயிருப்பான். ஏன்? இவனுக்கு இவனுடைய முன்னோர்களின் பழைய அரசில் ஒரு பகுதியை வாங்கிக் கொடுத்தாலும் கொடுக்கலாம். இம்மாதிரி பிள்ளைகளுக்கு ஒருமுறை உதவி செய்து விட்டால், அப்புறம் என்றைக்கும் நமக்குக் கட்டுப்பட்டு நன்றியுடனிருப்பார்கள். ஒருவேளை, இவன் உறுதியான விரோதி என்று ஏற்பட்டு விட்டால், அதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; எதற்கும் தமையனார் வந்து சேரட்டும் பார்க்கலாம்.
ஆஸ்தான மண்டபம் சென்றதும் வந்தியத்தேவன் அப்புறமும் இப்புறமும் ஆவலுடன் பார்க்கத்தொடங்கினான். தளபதியிடம் தான் ஓலையை எடுத்துக் கொடுத்த இடத்தில் உற்று உற்று நன்றாகப்பார்த்தான். தப்பித் தவறி இன்னொரு ஓலை,-- அந்த முக்கியமான ஓலை கிடக்கிறதா என்றுதான். அதைமட்டும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், தன்னைப் போன்ற மூடன் வேறு யாரும் இருக்க முடியாது! உலகமே புகழும் சோழ குலத்து அரசிளங்குமரியைத் தான் பார்க்க முடியாமலே போய்விடும். ஆதித்த கரிகாலர் தன்னிடம் ஒப்புவித்த பணியில் சரி பாதியைச் செய்ய முடியாமலே போய்விடும்.
சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்த ஏவலாளர்களில் ஒருவனைப் பார்த்து, "இந்தப் பிள்ளையை நமது அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ! விருந்தாளி விடுதியில் வைத்து வேண்டிய வசதிகள் செய்து கொடுத்துப் பார்த்துக்கொள்! நான் வரும் வரையில் அங்கேயே இரு!" என்றார்.
வந்தியத்தேவனும் ஏவலாளனும் வௌியே சென்ற உடன், இன்னொருவன் தளபதியிடம் பயபக்தியுடன் நெருங்கி, ஒரு ஓலைச் சுருளை நீட்டினான். "இங்கிருந்து தரிசன மண்டபத்துக்குப் போகும் வழியில் இது கிடந்தது. இப்போது சென்ற அந்தப் பையனுடைய மடியிலிருந்து விழுந்திருக்கக்கூடும்!" என்று சொன்னான்.
தளபதி அதை ஆர்வத்துடன் வாங்கிப் பிரித்துப் பார்த்தார். அவருடைய புருவங்கள் நெற்றியின் சரிபாதி வரையில் உயர்ந்து நெரிந்தன. அவருடைய முகத்தில் கொடூரமான மாறுதல் ஒன்று உண்டாயிற்று.
"ஆஹா! இளையபிராட்டிக்கு ஆதித்த கரிகாலர் எழுதிய ஓலை. 'அந்தரங்கமான காரியங்களுக்குஉண்மையான வீரன் ஒருவன் -- நினைத்த காரியத்தை முடிக்கக் கூடிய தீரன்,-- வேண்டும் என்று கேட்டிருந்தாயல்லவா? அதற்காக இவனை அனுப்பியிருக்கிறேன். இவனைப் பூரணமாக நம்பி எந்த முக்கியமான காரியத்தையும் ஒப்புவிக்கலாம்' என்று இளவரசர் தம் கைப்பட எழுதியிருக்கிறார்.ஆ! இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்த ஓலையைப் பற்றிப் பெரியவருக்குத் தெரியுமோ, என்னவோ? இவன் விஷயத்தில் இன்னும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!" என்று கோட்டைத் தளபதி தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். ஓலையைப் பொறுக்கிக் கொண்டு வந்தவனை அழைத்துக் காதோடு சில விஷயங்களைக் கூறினார்; அவனும் உடனே புறப்பட்டுச் சென்றான்.
****************
சின்ன பழுவேட்டரையரின் மாளிகையில் வந்தியத்தேவனுக்கு ஆசார உபசாரங்கள் பலமாக நடந்தன. அவனைக் குளிக்கச் செய்து, புதிய உடைகள் அணிந்து கொள்ளக் கொடுத்தார்கள். நல்ல உடைகள் அணிந்து கொள்வதில் பிரியமுள்ள வந்தியத்தேவனும் குதூகலத்தில் ஆழ்ந்தான். காணாமற்போன ஓலையைப் பற்றிய கவலையைக் கூட மறந்து விட்டான். புது உடை உடுத்திய பின்னர் இராஜபோகமான அறுசுவைச் சிற்றுண்டிகளை அளித்தார்கள். பசித்திருந்த வந்தியத்தேவன் அவற்றை ஒரு கை பார்த்தான். பின்னர், அவனைச் சின்னப் பழுவேட்டரையர் மாளிகையின் சித்திர மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள். "தளபதி வருகிற வரையில் இந்த மண்டபத்திலுள்ள அபூர்வ சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்!" என்றார்கள். இவ்விதம் சொல்லிவிட்டு, காவலர்கள் மூன்று பேர் மண்டபத்தின் வௌியில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே சொக்கட்டான் ஆடத் தொடங்கினார்கள்.
சோழ குலத்தின் புதிய தலைநகரமான தஞ்சைபுரி அந்த நாளில் சிற்ப சித்திரக் கலைக்குப்பெயர் பெற்றதாயிருந்தது. திருவையாற்றில் இசைக் கலையும் நடனக் கலையும் வளர்ந்தது போல் தஞ்சையில் சிற்ப சித்திரக் கலைகள் வளர்ந்து வந்தன.
முக்கியமாக, சின்னப் பழுவேட்டரையர் மாளிகையில் இருந்த சித்திர மண்டபம் மிகப் பிரசித்தி அடைந்திருந்தது. அந்த மண்டபத்துக்குள் இப்போது வந்தியத்தேவன் பிரவேசித்தான். சுவர்களில் பல அழகிய வர்ணங்களில் தீட்டியிருந்த அற்புதமான சித்திரங்களைப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தான். அந்த ஆனந்தத்தில் தன்னை மறந்தான்; தான் வந்த முக்கியமான காரியத்தையும் கூட மறந்தான்.
சோழ வம்சத்தின் பூர்வீக அரசர்களையும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் சித்தரிக்கும் காட்சிகள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்து பரவசமடையச் செய்தன. முக்கியமாக, சென்ற நூறு வருஷத்துச் சோழர்களின் சரித்திரம் அந்தச் சித்திர மண்டபத்தின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருந்தன. வந்தியத்தேவனுக்கு அதிகமான ஆர்வத்தை உண்டாக்கிய சித்திரங்களும் அவைதாம்.
இந்தக் கட்டத்தில், சென்ற நூறு வருஷமாகப் பழையாறையிலும் தஞ்சையிலும் இருந்து அரசு புரிந்த சோழ மன்னர்களின் வம்ச பரம்பரையை வாசகர்களுக்குச் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இனி இந்தக் கதையில், மேலே வரும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதற்கு இதைத் தெரிந்து கொள்வது மிக்க உபயோகமாயிருக்கும்.
தொண்ணூற்றாறு போர்க் காயங்களைத் தன் திருமேனியில் ஆபரணங்களாகப் பூண்ட விஜயாலய சோழனைப் பற்றி முன்னமே கூறியிருக்கிறோம்.
சோழ மன்னர்கள் பரகேசரி, இராஜகேசரி என்னும் பட்டங்களை மாறி மாறிப் புனைந்து கொள்வது வழக்கம்.பரகேசரி விஜயாலயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் ராஜகேசரி ஆதித்த சோழன் பட்டத்துக்கு வந்தான். அவன் தந்தைக்குத் தகுந்த தனயனாக விளங்கினான். முதலில் அவன் பல்லவர் கட்சியில் நின்று பாண்டியனைத் தோற்கடித்துச் சோழ ராஜ்யத்தை நிலைப்படுத்திக் கொண்டான். பிறகு, பல்லவன் அபராஜிதவர்மனோடு போர் தொடுத்தான். யானை மீது அம்பாரியில் இருந்து போர் புரிந்த அபராஜிதவர்மன் மீது ஆதித்த சோழன் தாவிப் பாய்ந்து அவனைக் கொன்று தொண்டை மண்டலத்தை வசப்படுத்தினான். பிறகு கொங்கு மண்டலமும் இவன் ஆட்சிக்குள் வந்தது. ஆதித்தன் சிறந்த சிவபக்தன். காவிரி ஆறு உற்பத்தியாகும் ஸஹ்ய மலையிலிருந்து அப்புண்ணிய நதி கடலில் கலக்கும் இடம் வரையில் ஆதித்த சோழன் பல சிவாலயங்களை எடுப்பித்தான்.
இராஜகேசரி ஆதித்த சோழனுக்குப் பிறகு பரகேசரி பராந்தகன் பட்டத்துக்கு வந்தான். நாற்பத்தாறு ஆண்டு காலம் அரசு புரிந்தான். இமயத்தில் புலிச் சின்னம் பொறித்த கரிகால் பெருவளத்தானுக்குப் பின்னர் சோழ வம்சத்தில் மாபெரும் மன்னன் பராந்தகன்தான். வீரநாராயணன், பண்டிதவத்சலன், குஞ்சரமல்லன், சூரசிகாமணி என்பன போன்ற பல பட்டப் பெயர்கள் அவனுக்கு உண்டு. "மதுரையும் ஈழமும் கொண்டவன்" என்ற பட்டமும் உண்டு. இந்த முதற் பராந்தகன் காலத்திலேயே சோழ சாம்ராஜ்யம் கன்யாகுமரியிலிருந்து கிருஷ்ணாநதி வரையில் பரவியது. ஈழ நாட்டிலும் சிறிது காலம் புலிக்கொடி பறந்தது. தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து புகழ்பெற்ற பராந்தகனும் இவனேதான். இவனுடைய ஆட்சியின் இறுதி நாட்களில் சோழ சாம்ராஜ்யத்துக்குச் சில பேரபாயங்கள் வந்தன. அந்த நாளில் வடக்கே பெருவலி படைத்திருந்த இராஷ்டிரகூடர்கள் சோழர்களுடைய பெருகி வந்த பலத்தை ஒடுக்க முனைந்தார்கள். சோழ சாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்து வந்து ஓரளவு வெற்றியும் அடைந்தார்கள்.
பராந்தகச் சக்கரவர்த்திக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. இவர்களில் வீராதி வீரனாக விளங்கியவன் மூத்த புதல்வனாகிய இராஜாதித்யன் என்பவன். வடநாட்டுப் படையெடுப்பை எதிர்பார்த்து இராஜாதித்யன் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் சைன்யத்துடன் பல காலம் தங்கியிருந்தான். தன் தந்தையின் பெயர் விளங்கும்படி வீரநாராயண ஏரி எடுத்தான். அரக்கோணத்துக்கு அருகில் தக்கோலம் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும் இராஷ்டிரகூடப் படைகளுக்கும் பயங்கரமான பெரும் போர் நடந்தது. இந்தப் போரில் எதிரிப் படைகளை அதாஹதம் செய்து தன் வீரப் புகழை நிலைநாட்டிய பிறகு, இராஜாதித்யன் போர்க்களத்தில் உயிர் துறந்து வீர சொர்க்கம் அடைந்தான். இவனும் பல்லவ அபராஜிதவர்மனைப் போல் யானை மீதிருந்து போர் புரிந்து யானை மேலிருந்தபடியே இறந்தபடியால், இவனை "ஆனைமேல் துஞ்சிய தேவன்" என்று கல்வெட்டுச் சாஸனங்கள் போற்றிப் புகழ்கின்றன.
இராஜாதித்யன் மட்டும் இறந்திராவிட்டால், அவனே பராந்தக சக்கரவர்த்திக்குப் பிறகு சோழசிம்மாசனம் ஏறியிருக்க வேண்டும். இவனுடைய சந்ததிகளே இவனுக்குப் பின்னர் முறையாகப் பட்டத்துக்குவந்திருக்க வேண்டும்.
ஆனால் இளவரசன் இராஜாதித்யன் பட்டத்துக்கு வராமலும் சந்ததியில்லாமலும் இறந்துவிடவே, இவனுடைய இளைய சகோதரர் கண்டராதித்த தேவர் தந்தையின் விருப்பத்தின்படி இராஜகேசரிபட்டத்துடன் சிங்காதனம் ஏறினார்.
இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார். 'திருவிசைப்பா' என்று வழங்கும் இப்பாடல்களில் கடைசிப் பாட்டில் இவர் தம்மைப் பற்றியே பின்வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்:
"சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லார் பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!"
விஜயாலயனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்தபோதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் "கோழி வேந்தர்" என்று சொல்லிக் கொண்டார்கள்.
கண்டராதித்த தேவர் சிம்மாசனத்திலிருந்து பெயரளவில் அரசு புரிந்தபோதிலும், உண்மையில்அவருடைய இளைய சகோதரனாகிய அரிஞ்சயன் தான் இராஜ்ய விவகாரங்களைக் கவனித்து வந்தான். இராஜாதித்யனுக்குத் துணையாக அரிஞ்சயன் திருநாவலூர் முதலிய இடங்களில் சைன்யங்களுடன் தங்கியிருந்தான். இராஷ்டிரகூடர்களுடன் வீரப் போர் நடத்தினான். தக்கோலத்தில் சோழ சைன்யத்துக்கு நேர்ந்த பெருந்தோல்வியை விரைவிலேயே வெற்றியாக மாற்றிக் கொண்டான். இராஷ்டிரகூடர் படையெடுப்பைத் தென்பெண்ணைக்கு அப்பாலேயே தடுத்து நிறுத்தினான்.
எனவே, இராஜகேசரி கண்டராதித்த சோழர் தம் தம்பி அரிஞ்சயனுக்கு யுவராஜ பட்டம் சூட்டி, அவனே தமக்குப் பின் சோழ சிங்காதனத்துக்கு உரியவன் என்றும் நாடறியத் தெரிவித்து விட்டார்.
இவ்விதம் கண்டராதித்தர் முடிவு செய்ததற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்தது. இவருடைய மூத்த மனைவி இவர் பட்டத்துக்கு வருவதற்கு முன்பே காலமாகி விட்டாள். பிறகு வெகு காலம் கண்டராதித்தர் மணம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இவருடைய தம்பி அரிஞ்சயனுக்கோ அழகிலும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வன் இருந்தான். பாட்டனாரின் பராந்தகன் என்னும் பெயரையும், மக்கள் அளித்த சுந்தர சோழன் என்னும் காரணப் பெயரையும் சூட்டிக் கொண்டிருந்தான். எனவே, தமக்குப் பிறகு தமது சகோதரன் அரிஞ்சயனும் அரிஞ்சயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் சுந்தர சோழனும் பட்டத்துக்கு வரவேண்டும் என்று கண்டராதித்தர் திருவுளங்கொண்டார். இந்த ஏற்பாட்டிற்குச் சாமந்த கணத்தினர், தண்டநாயகர்கள் பொது ஜனப் பிரதிநிதிகள் எல்லாருடைய சம்மதத்தையும் ஒருமனதாகப் பெற்றுப் பகிரங்கமாக உலகறியத் தெரிவித்தும் விட்டார்.
இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு கண்டராதித்தரின் வாழ்க்கையில் ஓர் அதிசயசம்பவம் நிகழ்ந்தது.மழவரையன் என்னும் சிற்றரசன் திருமகளை அவர் சந்திக்கும்படி நேர்ந்தது. அந்தமங்கையர் திலகத்தின் அழகும் அடக்கமும் சீலமும் சிவபக்தியும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முதிர்ந்தபிராயத்தில் அந்தப் பெண்மணியை மணந்து கொண்டார். இந்தத் திருமணத்தின் விளைவாக உரிய காலத்தில் ஒரு குழந்தையும் உதித்தது. அதற்கு மதுராந்தகன் என்று பெயரிட்டுப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தார்கள். ஆனால் அரசர், அரசி இருவருமே இராஜ்யம் சம்பந்தமாக முன்னம் செய்திருந்த ஏற்பாட்டை மாற்ற விரும்பவில்லை. தம்பதிகள் இருவரும் சிவபக்தியிலும், விரக்தி மார்க்கத்திலும் ஈடுபட்டவர்களாதலால் தங்கள் அருமைப் புதல்வனையும் அந்த மார்க்கத்திலேயே வளர்க்க விரும்பினார்கள். கேவலம் இந்த உலக சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் சிவலோக சாம்ராஜ்யம் எவ்வளவோ மேலானது என்று நம்பியவர்களாதலால், அந்தச் சிவலோக சாம்ராஜ்யத்துக்கு உரியவனாக மதுராந்தகனை வளர்க்க ஆசைப்பட்டார்கள். ஆகையால் கண்டராதித்தர் தமக்குப் பிறகு தம் சகோதரன் அரிஞ்சயனும் அவனுடைய சந்ததிகளுமே சோழ சாம்ராஜ்யத்துக்கு உரியவர்கள் என்ற தமது விருப்பத்தைப் பகிரங்கப்படுத்தி நிலைநாட்டினார். எனவே, இராஜாதித்தன், கண்டராதித்தர் என்னும் இரு உரிமையாளர் வம்சத்தைத் தாண்டி அரிஞ்சயன் வம்சத்தாருக்குச் சோழ சிங்காதனம் உரிமையாயிற்று.
கண்டராதித்தருக்குப் பிறகு அதிக காலம் பரகேசரி அரிஞ்சயன் ஜீவிய வந்தனாக இருக்கவில்லை. ஒரு வருஷத்திலேயே தமையனாரைப் பின் தொடர்ந்து தம்பியும் கைலாச பதவிக்குச் சென்று விட்டான்.
பின்னர், இளவரசர் சுந்தர சோழருக்கு நாட்டாரும் சிற்றரசர்களும் பிற அரசாங்க அதிகாரிகளும் சேர்ந்து முடிசூட்டி மகிழ்ந்தார்கள். இராஜகேசரி சுந்தர சோழரும் அதிர்ஷ்டவசத்தினால் தமக்குக் கிடைத்த மகத்தான பதவியைத் திறம்படச் சிறப்பாக வகித்தார். ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் பல வீரப் போர்கள் புரிந்து பாண்டிய நாட்டையும் தொண்டை மண்டலத்தையும் மீண்டும் வென்றார். இராஷ்டிரக்கூடப் படைகளைத் தென்பெண்ணைக் கரையிலிருந்து விரட்டி அடித்தார். சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வர்களான ஆதித்த கரிகாலரும் அருள்மொழிவர்மரும் தந்தையை மிஞ்சக்கூடிய இணையற்ற வீரர்களாயிருந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தைக்குப் பரிபூரண உதவி செய்தார்கள். அவர்கள் மிகச் சிறுபிராயத்திலேயே போருக்குச் சென்று முன்னணியில் நின்று போர் புரிந்தார்கள்; அவர்கள் சென்ற போர்முனைகளிலெல்லாம் விஜயலக்ஷ்மி சோழர்களின் பக்கமே நிலைநின்று வந்தாள்.
பக்க தலைப்பு
This file was last revised on Apr. 12, 2003
Please send your comments to the webmastersof this website.