Works of kumarakurupara cuvAmikaL:
tirucentUr kantar kaliveNpA, cakalakalAvalli mAlai &
nIti neRi viLakkam
(in tamil script, unicode format)

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம்
(ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)




Etext preparation: Mr. S.A. Ramchandar, Bombay, India;
Proof-reading: Mr. S.A. Ramchandar and Dr.K.S.V. Nambi, Bombay, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

1. திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

(ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)


(குறிப்பு: எங்கெங்கு பதம் பிறிப்பதனால் பொருள் மாறுபடவில்லையோ அங்கெல்லாம் பதம் பிறிக்கப்பட்டுள்ளது.)

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த(1) முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத(2) போதமாய் - ஆதிநடு
.1
(1) நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
(2) போதமுங் காணாத

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு
.2

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத .
.3

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியல்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும்
.4

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து .
5

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
.6

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்
7

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய ..
.8

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னுால் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னுால் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால் .
9

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு
சாலோக சாமீப சர்ரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் .
.10

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவா
.11

தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் .
.12

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமுன்றும் - பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் ..
.13

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்த தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் ..
.14

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துஉலவா இன்பம் -மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் .
.15

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து (1)உள்நின்று
ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு ..
.16
(1) கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின்

முன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம் .
.17

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் .
.18

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட .
.19

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் ..
.20

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் .
.21

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்
பாச இருள்துரந்து (1) பல்கதிரில் சோதிவிடும்
.22
(1) பாச விருடுரந்து ப்ல்கதிரிற் சோதிவிடும்

வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்
.23

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
.24

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
.25

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்
.26

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்
.27

புரிநுாலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்
நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி .
.28

இளம்பருதி நுாறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து
.29

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்
30

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி .
31

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ
32

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்
33

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்
34

ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ .
35

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் -சந்ததமும்
36

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்
37

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து
38

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் .
39

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று .
40

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்
41

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய .
42

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி .
43

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து
44

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன்
விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்
45

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்
46

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் துாளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த்
47

தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம்
48

சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய
வீரனைத் துாதாக விடுத்தோனே - காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு .
49

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்
50

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு .
51

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மோலோனே - மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம்
52

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு .
53

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து .
54

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்
கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் .
55

பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
பூதமுந்தீீ நீரும் பொருபடையும் - தீது அகலா .
56

வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத்
57

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் .
58

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை
59

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
60

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.
61

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று


2. சகலகலாவல்லிமாலை
(ஸரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)


கட்டளைக் கலித்துறை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.
3

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தௌிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தௌிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.
9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
10
>


3. நீதிநெறி விளக்கம்
(ஸரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)


காப்பு

நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.

நூல்
அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையு நாட்டும் - உறுங்கவலொன்
றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை.
1

தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்
மடங்கொன் றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம்
முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது.
2

கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச் - சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்தும்
செல்வமு முண்டு சிலர்க்கு.
3

எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை யின்றெனி னென்னாகு மஃதுண்டேற்
பொன்மலர் நாற்ற முடைத்து.
4

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்
அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று.
5

கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்
மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோன் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யு முடம்பு.
6

நெடும்பகற் கற்ற வவையத் துதவா
துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே
நீதென்று நீப்பரி தால்.
7

வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும்
பரிந்துசில கற்பான் றொடங்கல் - கருந்தனம்
கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்
கெய்த்துப் பொருள்செய் திடல்.
8

எனைத்துணைய வேனு மிலம்பாட்டார் கல்வி
தினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம் - மனைத்தக்காள்
பாண்பில ளாயின் மணமக னல்லறம்
பூண்ட புலப்படா போல்.
9

இன்சொல்லன் றாழ்நடைய னாயினுமொன் றில்லானேல்
வன்சொல்லி னல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்
பித்துடைய வல்ல பிற.
10

இவறன்மை கண்டு முடையாரை யாரும்
குறையிரந்துங் குற்றேவல் செய்ப பெரிதுந்தாம்
முற்பக னோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பன்றே கல்லாமை யன்று.
11

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோ ரணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகுசெய் வார்.
12

முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉம்
கற்றன மென்று களியற்க - சிற்றுளியாற்
கல்லுந் தகருந் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால்.
13

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே யிவர்க்குநா மென்று.
14

கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்.
15

ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட
மீச்செலவு காணி னனிதாழ்ப - தூக்கின்
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல
வலிதன்றே தாழுந் துலைக்கு.
16

விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையுந் தீதே - புலப்பகையை
வென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்று
தம்பாடு தம்மிற் கொளின்.
17

தன்னை வியப்பிப்பான் றற்புகழ்த றீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றாற் - றன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம்.
18

பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர்
சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல்.
19

கற்றுப் பிறர்க்குரைத்துத் தாநில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர்
நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல்.
20

பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார்
தமக்குப் பயன்வே றுடையார் திறப்படூஉம்
தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார்
கோவினை வேலை கொளல்.
21

கற்பன வூழற்றார் கல்விக் கழகத்தாங்
கொற்கமின் றூத்தைவா யங்காத்தல் - மற்றுத்தம்
வல்லுறு வஞ்சன்மி னென்பவே மாபறவை
புல்லுறு வஞ்சுவ போல்.
22

போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
மீக்கொ ணகையினார் வாய்ச்சேரா - தாக்கணங்கும்
ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம்
பேடு கொளப்படுவ தில்.
23

கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம்
குற்றந் தமதே பிறிதன்று முற்றுணர்ந்தும்
தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா
ஏதிலரை நோவ தெவன்.
24

வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்
காத்தது கொண்டாங் குகப்பெய்தார் - மாத்தகைய
அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய
கந்துகொல் பூட்கைக் களிறு.
25

குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் - அறவோர்க்
கடிகளே தெய்வ மனைவோர்க்குந் தெய்வம்
இலைமுகப் பைம்பூ ணிறை.
26

கண்ணிற் சொலிச்செவியி னோக்கு மிறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே யாயினும் - தண்ணளியால்
மன்பதை யோம்பாதார்க் கென்னாம் வயப்படைமற்
றென்பயக்கு மாணல் லவர்க்கு.
27

குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால்கொளலு மாண்பே - குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.
28

இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன்
ஆவன கூறி னெயிறலைப்பா னாறலைக்கும்
வேடலன் வேந்து மலன்.
29

முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி
உடுப்ப வுடுத்துண்ப வுண்ணா - இடித்திடித்துக்
கட்டுரை கூறிற் செவிக்கொளா கண்விழியா
நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம்.
30

ஒற்றிற் றெரியாச் சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோ டுணையாத் தெரிதந்தும் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினுங் கேளாமை யன்று.
31

ஏதிலார் யாதும் புகல விறைமகன்
கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு நேர்நின்று
காக்கை வௌிதென்பா ரென்சொலார் தாய்க்கொலை
சால்புடைத் தென்பாரு முண்டு.
32

கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்
குண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி
தான்வாய் மடுப்பினு மாசுணங் கண்டுயில்வ
பேரா பெருமூச் செறிந்து.
33

நட்புப் பிரித்தல் பகைநட்ட லொற்றிகழ்தல்
பக்கத்தார் யாரையு மையுறுதல் - தக்கார்
நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல்
கெடுவது காட்டுங் குறி.
34

பணியப் படுவார் புறங்கடைய ராகத்
தணிவில் களிப்பினாற் றாழ்வார்க் - கணிய
திளையாண் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள்
புணர்முலைப் போகங் கொளல்.
35

கண்ணோக் கரும்பா நகைமுகமே நாண்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை
பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே
சலியாத கற்ப தரு.
36

வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்
றூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்
டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று.
37

மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை
ஈகையி னேக்கழுத்த மிக்குடைய - மாகொல்
பகைமுகத்த வென்வேலான் பார்வையிற் றீட்டும்
நகைமுகத்த நன்கு மதிப்பு.
38

களைகணாத் தம்மடைந்தார்க் குற்றுழியு மற்றோர்
விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடைய
தூனுடம் பென்று புகழுடம் போம்புதற்கே
தானுடம் பட்டார்க டாம்.
39

தம்முடை யாற்றலு மானமுந் தோற்றுத்தம்
இன்னுயி ரோம்பினு மோம்புக - பின்னர்ச்
சிறுவரை யாயினு மன்ற தமக்காங்
கிறுவரை யில்லை யெனின்.
40

கலனழிந்த கற்புடைப் பெண்டிரு மைந்து
புலனொருங்கப் பொய்கடிந் தாரும் - கொலைஞாட்பின்
மொய்ம்புடை வீரரு மஞ்சார் முரண்மறலி
தும்பை முடிச்சூ டினும்.
41

புழுநௌிந்து புண்ணழுகி யோசனை நாறும்
கழுமுடை நாற்றத்த வேனும் - விழலர்
விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்
சுளியார் சுமைபோடு தற்கு.
42

இகழி னிகழ்ந்தாங் கிறைமக னொன்று
புகழினு மொக்கப் புகழ்ப - இகன்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செய்யும்
நீர்வழிப் பட்ட புணை.
43

செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா கவுண்மதத்த
கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே யமைச்சு.
44

கைவரும் வேந்த னமக்கென்று காதலித்த
செவ்வி தெரியா துரையற்க - ஒவ்வொருகால்
எண்மைய னேனு மரியன் பெரிதம்மா
கண்ணில னுள்வெயர்ப்பி னான்.
45

பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
கிழமை பிறிதொன்றுங் கொள்ளார் வெகுளின்மற்
காதன்மை யுண்டே யிறைமாண்டார்க் கேதிலரும்
ஆர்வலரு மில்லை யவர்க்கு.
46

மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்
எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாட்
காத்தவை யெல்லாங் கடைமுறைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செயும்.
47

உறுதி பயப்ப கடைபோகா வேனும்
இறுவரை காறு முயல்ப - இறுமுயிர்க்கும்
ஆயுண் மருந்தொழுக்க றீதன்றா லல்லனபோல்
ஆவனவு முண்டு சில.
48

முயலாது வைத்து முயற்றின்மை யாலே
உயலாகா வூழ்த்திறத்த வென்னார் - மயலாயும்
ஊற்ற மிறுவிளக்க மூழுண்மை காண்டுமென்
றேற்றா ரெறிகான் முகத்து.
49

உலையா முயற்சி களைகணா வூழின்
வலிசிந்தும் வன்மையு முண்டே - உலகறியப்
பான்முளை தின்று மறலி யுயிர்குடித்த
கான்முளையே போலுங் கரி.
50

கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூல மறிந்து விளைவறிந்து - மேலுந்தாம்
சூழ்வன் சூழ்ந்து துணைமை வலிதெரிந்
தாள்வினை யாளப் படும்.
51

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
52

சிறிய பகையெனினு மோம்புத றேற்றார்
பெரிதும் பிழைபா டுடையர் - நிறைகயத்
தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும்
யானை நிழல்காண் பரிது.
53

புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார்
அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப வனைத்துலகும்
சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே
பல்காலுங் காமப் பகை.
54

புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை
வௌியிட்டு வேறாதல் வேண்டுங் - கழிபெருங்
கண்ணோட்டஞ் செய்யார் கருவியிட் டாற்றுவார்
புண்வைத்து மூடார் பொதிந்து.
55

நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் - திட்பமா
நாளுலந்த தன்றே நடுவ னடுவின்மை
வாளா கிடப்பன் மறந்து.
56

மனத்த கறுப்பெனி னல்ல செயினும்
அனைத்தெவையுந் தீயவே யாகும் - எனைத்துணையும்
தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே
மாசின் மனத்தி னவர்.
57

இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார்
கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்
சிங்கிக் குளிர்ந்துங் கொலும்.
58

பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யிற்
புலமைந்துங் காத்து மனமா சகற்றும்
நலமன்றே நல்லா றெனல்.
59

நல்லா றொழுக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற் கொருப்படார் - பல்பொறிய
செங்கட் புலியே றறப்பசித்துந் தின்னாவாம்
பைங்கட் புனத்தபைங் கூழ்.
60

குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை
நலம்விற்றுக் கொள்ளுந் திருவுந் தவம்விற்றாங்
கூனோம்பும் வாழ்வு முரிமைவிற் றுண்பதூஉம்
தானோம்பிக் காத்த றலை.
61

இடைதெரிந் தச்சுறுத்து வஞ்சித் தௌியார்
உடைமைகொண் டேமாப்பார் செல்வம் - மடநல்லார்
பொம்மன் முலைபோற் பருத்திடினு மற்றவர்
நுண்ணிடைபோற் றேய்ந்து விடும்.
62

பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்
சிற்றுயிர்க் காக்க மரிதம்மா - முற்றும்
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா திரா.
63

தத்த நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே
ஒத்த கடப்பாட்டிற் றாளூன்றி -எய்த்தும்
அறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார்
புறங்கடைய தாகும் பொருள்.
64

பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம்
குலமகளே யேனையோர் செல்வம் - கலனழிந்த
கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயார்
செல்வம் பயன்படுவ தில்.
65

வள்ளன்மை யில்லா தான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலு நனிநல்ல கொன்னே
அருளில னன்பிலன் கண்ணறைய னென்று
பலரா லிகழப் படான்.
66

ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர்தல்
ஓஒ கொடிது கொடிதம்மா - நாகொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற்
றாவா விவரென்செய் வார்.
67

சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல்
நல்வினை கோறலின் வேறல்ல - வல்லைத்தம்
ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுபவோ
வாக்கின் பயன்கொள் பவர்.
68

சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப்
பெறுமெனிற் றாழ்வரோ தாழார் - அறனல்ல
எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்
ஒண்மையிற் றீர்ந்தொழுக லார்.
69

செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார்
நயத்தகு நாகரிக மென்னாம் - செயிர்த்துரைப்பின்
நெஞ்சுநோ மென்று தலைதுமிப்பான் றண்ணளிபோல்
எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று.
70

அல்லன செய்யினு மாகுலங் கூழாக்கொண்
டொல்லாதார் வாய்விட் டுலம்புப - வல்லார்
பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங்
கறிமடம் பூண்டுநிற் பார்.
71

பகையின்று பல்லார் பழியெடுத் தோதி
நகையொன்றே நன்பயனாக் கொள்வான் பயமின்று
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போற்
கைவிதிர்த் தஞ்சப் படும்.
72

தெய்வ முளதென்பார் தீய செயப்புகிற்
றெய்வமே கண்ணின்று நின்றொறுக்கும் - தெய்வம்
இலதென்பார்க் கில்லைத்த மின்புதல்வர்க் கன்றே
பலகாலுஞ் சொல்வார் பயன்.
73

தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறல்ல - தீயன
நல்லன வாகாவா நாவின் புறநக்கிக்
கொல்லுங் கவயமாப் போல்.
74

நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்
செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர் - முன்னைத்தம்
ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார்
தீய செயினுஞ் சில.
75

பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறனன்றே யாயினு மாக - சிறுவரையும்
நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே
மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய்.
76

கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே
தருமமுந் தாழ்வு படாமே - பெரிதுந்தம்
இன்னலமுங் குன்றாமே யேரிளங் கொம்பன்னார்
நன்னலந் துய்த்த னலம்.
77

கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமு மோம்பார்
களவொன்றோ வேனையவுஞ் செய்வார் - பழியோடு
பாவமிஃதென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமங் கதுவப்பட் டார்.
78

திருவினு நல்லாண் மனைக்கிழத்தி யேனும்
பிறன்மனைக்கே பீடழிந்து நிற்பர் - நறுவிய
வாயின வேனு முமிழ்ந்து கடுத்தின்னும்
தீய விலங்கிற் சிலர்.
79

கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பே
றென்பதோ ராக்கமு முண்டாயி னில்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு.
80

ஏந்தெழின் மிக்கா னிளையா னிசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - வாய்ந்த
நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க்
கயலார்மே லாகு மனம்.
81

கற்பின் மகளி னலம்விற் றுணவுகொளும்
பொற்றொடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தம்
கேள்வற்கு மேதிலர்க்குந் தங்கட்குந் தங்கிளைஞர்
யாவர்க்குங் கேடுசூ ழார்.
82

முறையுங் குடிமையும் பான்மையு நோக்கார்
நிறையு நெடுநாணும் பேணார் - பிறிதுமொரு
பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம்
கற்பின் மகளிர் பிறப்பு.
83

பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார்
கண்ணோடு நெஞ்சுறைப்ப நோக்குறார் - பண்ணோடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்
வீடில் புலப்பகையி னார்.
84

துயிற்சுவையுந் தூநல்லார் தோட்சுவையு மெல்லாம்
அயிற்சுவையி னாகுவவென் றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர்.
85

அன்பொ டருளுடைய ரேனு முயிர்நிலைமற்
றென்பியக்கங் கண்டும் புறந்தரார் - புன்புலாற்
பொய்க்குடி லோம்புவரோ போதத்தாற் றாம்வேய்ந்த
புக்கில் குடிபுகுது வார்.
86

சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில்.
87

எவ்வினைய ரேனு மிணைவிழைச் சொன்றிலரேற்
றெவ்வுந் திசைநோக்கிக் கைதொழூஉம் - அவ்வினை
காத்த லிலரே லெனைத்துணைய ராயினும்
தூர்த்தருந் தூர்ப்பா ரலர்.
88

பரபரப்பி னோடே பலபல செய்தாங்
கிரவுபகல் பாழுக் கிறைப்ப - ஒருவாற்றான்
நல்லாற்றி னூக்கிற் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றா னுய்வா ரிவர்.
89

இளய முதுதவ மாற்றுது நோற்றென்
றுளைவின்று கண்பாடு மூழே - விளிவின்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேற் காண்பாரும்
தாழாமே நோற்பார் தவம்.
90

நல்லவை செய்யத் தொடங்கினு நோனாமே
அல்லன வல்லவற்றிற் கொண்டுய்க்கும் - எல்லி
வியனெறிச் செல்வாரை யாறலைத் துண்பார்
செலவு பிழைத்துய்ப்ப போல்.
91

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது.
92

வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தே மென்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கு முளனொருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு.
93

மறைவழிப் பட்ட பழமொழி தெய்வம்
பறையறைந்தாங் கோடிப் பரக்குங் கழிமுடைப்
புன்புலா னாற்றம் புறம்பொதிந்து மூடினும்
சென்றுதைக்குஞ் சேயார் முகத்து.
94

மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப
வலியார்மற் றொன்றானு முய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமா லுய்யா பிற.
95

இசையாத போலினு மேலையோர் செய்கை
வசையாகா மற்றையோர்க் கல்லாற் - பசுவேட்டுத்
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே
ஊனோம்பி யூன்றின் பவர்.
96

எவரெவ ரெத்திறத்த ரத்திறத்த ராய்நின்
றவரவர்க் காவன கூறி - எவரெவர்க்கும்
உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான்
எப்பாலு நிற்ப தென.
97

மெய்யுணர்ந்தார் பொய்ம்மேற் புலம்போக்கார் மெய்யுணர்ச்சி
கைவருதல் கண்ணாப் புலங்காப்பார் - மெய்யுணர்ந்தார்
காப்பே நிலையாப் பழிநாண னீள்கதவாச்
சேப்பார் நிறைத்தாழ் செறித்து.
98

கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் - முற்றத்
துறந்தார்க்கு மெய்யுணர்விற் றோன்றுவதே யின்பம்
இறந்தவெலாந் துன்பமலா தில்.
99

கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்
பெற்றது கொண்டு மனந்திருந்திப் - பற்றுவதே
பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து
நிற்பாரே நீணெறிச்சென் றார்.
100

ஐயந் திரிபின் றளந்துத் தியிற்றௌிந்து
மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவார் தம்முளே
காண்பதே காட்சி கனவு நனவாகப்
பூண்பதே தீர்ந்த பொருள்.
101

நீதிநெறி விளக்கம் முற்றிற்று.



This page was first put up on March 5, 2002
Please send your comments and corrections to the Webmaster(s) of this site