சைவ சித்தாந்த நூல்கள் - VII சங்கற்ப நிராகரணம் (நூலாசிரியர் : உமாபதி சிவாசாரியார்)
அறிமுக உறை: சுபாஷினி கனகசுந்தரம்
இந்நூல் பிற சமயக் கொள்கைகளை கூறி அவற்றை மறுக்கும் வகையில் எழுதப்பட்ட ஒன்று. இங்கு பிற சமயங்கள் எனக் குறிப்பிடப்படுபவை நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றன:
புறச்சமயம் என்பது வேத ஆகமங்களையும் திருமுறைகளையும் ஏற்றுக் கொள்ளாத சமயத்தவர்களைக் குறிப்பது. இவ்வகையினர் ஆறு வகையாவர்: 1.உலகாயதர், 2.சமணர், 3.சௌத்திராந்திகர், 4.யோகசாரர், 5.மாத்மியர், 6.வைபாடிகர் ஆகியோர்.
புறச்சமயம் எனபது வேதங்களை மட்டுமே ஒப்புக் கொள்கின்றவர்கள் அனுஷ்டிக்கின்ற கொள்கையைக் குறிப்பது. இதில்
1.நியாயம், 2. சாங்கியம், 3.யோகம், 4.மீமாம்சை, 5.வேதாந்தம், 6.வைணவம் ஆகியவை அடங்குகின்றன.
அகப்புறச் சமயத்தைச் சார்ந்தோர் வேத சிவாகமங்களை ஒப்புக் கொள்கின்ற கொள்கையைச் சார்ந்தோர். இவ்வகைச் சமயம் ஆறு. அவை
1.பாசுபதம், 2.மாவிரதம், 3.காபாலம், 4.வாமம், 5.பைரவம்,
6.ஐக்கியவாத சைவம் என்பவை
அகச்சமயம் எனும் சமயக்கொள்கை சைவ சித்தாந்தத்தோடு மிகவும் நெருங்கிய ஒன்று. முப்பொருள் உணமையான பதி பசு பாசம் ஆகியவற்றோடு ஒத்துப் போகினும், முத்தி நிலை விளக்கத்தில் மாறு பட்டு நிற்பவை. இவ்வகைச் சமயங்கள் ஆறு: 1.பாடாணவாத சைவம், 2.பேதவாத சைவம், 3. சிவசமவாத சைவம், 4.சிவசங்கிராந்தவாத சைவம், 5. ஈசுவர அவிகாரவாத சைவம், 6.சிவாத்துவித சைவம் ஆகியவை.
ஆக சங்கற்ப நிராகரணம் எனும் இந்நூலில் மேற்கூறிய கொள்கைகளில் ஒன்பது கூறப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது. எடுத்தாளப்பட்டுள்ள சமயங்கள் மாயாவாதம், ஐக்கியவாதம், பாடாணவாத சைவம், பேதவாதம், சிவசம்வாதம், சிவசங்கிராந்த வாதம், ஈசுவரவவிகாரவாதம், சிவாத்துவித சைவவாதம், நிமித்தகாரணபரினாமவாதம் ஆகியவை.