Tamil Works of Contemporary Sri Lankan Authors - VIII
kanavin meethi... A collection of Poems by K.P. Aravindan
in Tamil script, unicode/utf-8 format
கனவின் மீதி. . . (ஒரு கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர் : கி. பி. அரவிந்தன்
Etext Preparation : Mr. Rathina Iyer Padmanabha Iyer, London, UK, Dr. N. Kannan, Kiel, Germany and Mr. Ramanitharan Kandiah, New Orleans, USA
Proof-reading: Ms. Geetha Ramaswami, Singapore
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source Acknowledgements: KANAVIN MEEDHI by Ki. Pi. Aravindan, 29 Kannagi Street, Madipakkam, Chennai 600 091, Tamilnadu, India
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font
chosen as the default font for the UTF-8 char-set/encoding view. .
In case of difficulties send an email request to Project Madurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கனவின் மீதி. . . (ஒரு கவிதைத்தொகுப்பு)
கி. பி. அரவிந்தன்
அரவிந்தனின் முப்பரிமாணம்
கடல் தாண்டியிருந்தாலும் சரி, கண்டங்கள் தாண்டியிருந்தாலும் சரி, அரவிந்தன் கரம்பற்றி கருத்துப் பயணம்
செய்வதை யாராலும் பிரிக்க முடியாது என்பதற்கு 'கனவின் மீதி' நூல் வெளியீடே சான்று.
உழவர் குடியில் பிறந்த என்னை வறுமைத்துயர் ஆட்டிப் படைத்தது. அந்த காலத்தில் தஞ்சையில் அறிவுறுவோன்
பேருந்து ஏற்றிவிட அரணமுறுவல் சென்னையில் ஏற்றுக்கொண்டார். ஏற்றுக் கொண்ட அரணமுறுவல் சுந்தர்
என அறியப்பட்ட கி.பி. அரவிந்தனிடம் ஒப்படைத்தார். மிரள வைத்த சென்னையைப் பரிச்சியப்படுத்தியவர்
பழக்கப்படுத்தியவர் அரவிந்தன் தான். இது நடந்தது 1979ஆம் ஆண்டு. அப்போது தொடக்கம் இன்றுவரை
உறவு அறாத நட்பு வட்டத்தின் நெருங்கிய சொந்தக்காரர் அரவிந்தன்.
அரவிந்தனோடு ஒரே மாடியில் உறங்கியிருக்கிறோம். உறக்கமற்று பல இரவுகளில் பேசியிருக்கிறோம்.
அப்போது பார்த்த அரவிந்தனிலிருந்து 85ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுற்றி சுற்றி வந்து சொற்பொழிவாற்றிய
அரவிந்தன் ஆற்றல் மிகுந்த பேச்சாளராக உயர்ந்து நின்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அப்படியே
நான் வியந்து நின்றேன்.
எந்தப் பேச்சிலும் ஒரு விவாதத் தீயை மூட்டிவிடுகின்ற வல்லமை பெற்ற அரவிந்தன் '99களில் நெஞ்சை
உலுக்குகின்ற கவிபுனையும் கவிஞனாக நிமிர்ந்து நிற்கிறார்.
அமைப்பைக் கட்டுகின்ற அமைப்பாளன், ஈழ விடுதலையை முன்னெடுக்கின்ற வலிமைமிக்க பிரச்சாரகன்,
புலம்பெயர்ந்து அயல்நாட்டில் வாழும்போதும் 'தாயகப் பிரிவை' எண்ணியேங்கும் கவிஞன் ஆகிய மூன்று
நிலைகளிலும் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.
தமிழகத்தில் அரவிந்தனின் கவிமனதைக் கண்டு கொண்டவர்களில் கே.எம்.வேணுகோபால் முக்கியமானவர்.
பதிப்பகப் பணியில் என்னை ஊக்கப்படுத்துவதில் முனைவர் இரா.இளவரசு, முனைவர் சுப.வீரபாண்டியன்,
முனைவர் பாரதிபுத்திரன், 'நிலவளம்' க.சந்திரசேகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
'நந்தன்' இதழில் பணியாற்ற வாய்ப்புத் தந்து பதிப்புப் பணியில் ஆர்வப்படுத்தி வளர்த்தெடுக்கும் தந்தை
பெரியார் தமிழிசை மன்றத் தலைவர் திரு.நா.அருணாசலம் அவர்களை மறக்கவியலாது.
இவர்கள் அனைவருக்கும் நன்றி. கனவின் மீதி கவிதைத் தொகுப்பு வெளியிட வாய்ப்புத் தந்த
அரவிந்தனுக்கும், அரவிந்தனின் நட்பு வட்டத்தினருக்கும் நன்றி.
வைகறை
உள்ளுறை
உலக இலக்கிய வாசற் கதவுகளைத் தட்டும் ......7
ஈழத்துத் தமிழ் இலக்கியம்
உயிரொடியும் ஓசை .......13
என்றென்றும் அன்புடன் ......17
1. படி .......23
2. இறக்கம் .......25
3. திசைகள் .......26
4. தூதுரைக்கும் பருவம் .......28
5. மழை .......30
6. அழகியல் .......32
7. நான் .......34
8. அறிதல் .......35
10. சமநிலை .......37
11. தா¢ப்பு .......39
9. வகுப்பு .......40
13. சொல்...யாராக இருக்கலாம் நான்? .......41
14. வயல் .......45
15. பறவையும் பாடலுமாய் .......46
12. இருப்பு .......49
16. சுழல் .......50
17. காணாமல் போவோர் பற்றி .......52
18. வராது போயிற்று காண் .......54
19. விலகும் தொலைவில் .......57
20. வளரும் கனாக்கள் துயிலாத நான் .......59
21. தந்தையும் குழந்தையும் .......63
22. நூலக முன்றிலில் .......66
23. அதிசயம் வளரும் .......70
24. கோடை .......72
25. மதியம் .......76
26. கனவின் மீதி .......79
27. முளைப்பாய் .......83
28. வரும் வழியில் .......85
29. அழைப்பு .......88
30. மொழிவுகள் .......90
31. நெல்லியும் உதிரும் கனிகளும் .......93
===========================
வெளிநாட்டுக் கனவுகளுடன் புறப்பட்டு
பயண முகவர்களின் வழிகாட்டலில்
எல்லைகள் கடக்கும் முயற்சியில்
தம்முயிர் இழந்த தோழர்
மகேஷ் என அறியப்பட்ட அக்கரைப்பற்று விநாயகமூர்த்திக்கும்
என் இரத்த உறவினனும் தோழனுமான
முகில் என அறியப்பட்ட சில்வேஸ்டர் அன்ரன் முகிலுக்கும்
இவர் போன்றே உதிர்ந்து போன
அனைவர்க்கும்....
===========================
உலக இலக்கிய வாசற் கதவுகளைத் தட்டும்
ஈழத்துத் தமிழ் இலக்கியம்
கி.பி.அரவிந்தன் கவிதைகளுடன்....
ஓர் ஆள்நிலைத் துலங்கல்
(A Personal response)
I
கைப்பழக்கத்தில் 'அரவிந்தன் கவிதைகளை வாசிக்கும் பொழுது' என்று தலையங்கத்தை எழுதிவிடுவேனோ
என்ற பயம். இப்பொழுதெல்லாம் வாசித்தல்; சுவைத்தல் என்ற பதப்பிரயே'கங்கள் விமர்சனத்திலிருந்து
விடுபட்டு "பாடத்தோடு ஊடாடுதல்" (Interacting with the next) என்பது வழக்காகி விட்டது.
அதில் ஓரளவு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
பாடம் வாசிப்பிலேயே பூரணப்படுகிறது. அதனுடைய உயிர் ஆயுள் எல்லாமே வாசிப்பில்தான் தங்கியுள்ளன.
தமிழுக்கு இது புதிதும் அல்ல. உண்மையில் உரைகள் என்பவை வாசிப்புகளே. (பரிமேலழகரின் திருக்குறள்
வாசிப்பு - நச்சினார்க்கினியரின் பத்துப்பாட்டு வாசிப்பு - பெரிய வாச்சான் பிள்ளையின் பாசுர வாசிப்பு)
இன்றைய ஊடாட்டத்திலுள்ள சிக்கல் ஆக்கியோன் முக்கியம் பெறுவதில்லை என்கிறார்கள்.
எனது சக தமிழ்ப் பேராசிரியர்கள் பலருக்கு இது புதிதாக இருக்கலாம். "புலவர் எதைக் கூறுகிறார்
எப்படிக் கூறுகிறார் அதிலுள்ள சிறப்புகள் யாவை" என்று நயம்பேசும் வாய்ப்பாடு இப்பொழுது அதிகம் இல்லை.
இவற்றைக் கூறுவதற்குக் காரணம் கி.பி.அரவிந்தனை மையப்படுத்தி மாத்திரம் அரவிந்தன் கவிதைகளை
மதிப்பிட்டுவிட முடியாது என்பதுதான்.
அது உண்மையே. ஆனால் அதற்காக 'ஆசிரியர் இறந்துவிட்டார்' என்று சொல்ல வேண்டியதில்லை.ஆசிரியரும்
வாசகரும் சந்திப்பதுதான் முக்கியம். இன்றைய கட்டவிழ்ப்பு முயற்சிகளெல்லாம் இந்தச் சந்திப்புக்கான பாதைகள்தான்.
சமஸ்கிருதக் கலை விமர்சனத்தில் 'சஹ்ருதய' என்ற ஒரு கோட்பாடு உண்டு. அதாவது இருவரும் ஒரே
மனத்தினர் ஆகுதல். (ச+ஹ்ருதய) அப்பொழுதுதான் "இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்த" முடியும்.
கி.பி. அரவிந்தன் கவிதைகளை வாசிக்கும் பொழுது நான் என்னை வாசிக்கிறேன்.
அகதியாக இருப்பதற்கு மைல் தொலைவு அவசியமில்லை இரண்டு மைல்களே போதும். பழக்கப்பட்ட,
பரிச்சயப்பட்ட மனிதர்களையும் பொருள்களையும் மண்ணையும் வானத்தையும் குடிதண்ணீரையும்
கோயிலையும் இழக்க வேண்டி நேரிடும் பொழுது, இழந்து அதன்பின் தொடர்ந்து வாழுதல் வேண்டும் என்ற
நினைப்பில் தொழிற்படுகிற பொழுது அகதி உருவாகிறான்/ள்.
இவையெல்லாம் நான் சொல்ல விரும்புபவை. என்னிடம் கவித்துவம் இருப்பின்.
கி.பி. அரவிந்தனின் கவிதைகள் ஈழத்து வடபுலத்தின் இந்தக் காலகட்டத்தின் சமூக அனுபவங்களுக்கான
மறக்கமுடியாத கவிதைப் பதிகை ஆகியுள்ளன.
II
இந்த கவிதைகள் கிளறும் சோகம் தணிக்க முடியாதவையாகப் படுகின்றன. அரவிந்தனின் துயரம் எங்களின் துயரமாகிறது.
இது எவ்வாறு நிகழ்கிறது அல்லது நிகழ்த்தப்படுகிறது என்பதுதான் முக்கியமான வினா. முதலில் முக்கியப்படுவது
இந்தக் கவிதைகள் தோற்றுவிக்கும் சோக, ஏக்கச் சூழமைவே.
எந்தக் கவிதையை எடுத்துக்கொண்டாலும் அந்த, தொலைந்துபோன, தனித்துப் போன ஏக்கம் நன்கு தெரிகிறது.
கவிதைகளின் ஊடே வருகின்ற படிமங்களால் இது சாத்தியமாகிறது கவிதையின் ஆரம்பத்திலேயே அரவிந்தன்
அந்த உணர்வுச் சூழலைப் படம்பிடித்து விடுகிறார்.
"பிடிக்கப் பிடிக்க
சறுக்குகின்றது
ஏறிய இடத்திலாயினும்
இறங்கலாமென்றால்
வழுக்கிச் செல்கிறது சரிவு.
ஏறிய இடம் எது...?" (இறக்கம்)
"பேசலாமா வேண்டாமா?
நிலை கொள்ளாதாம் தராசுமுள்" (விலகும் தொலைவில்)
(மேலே உள்ள கவிதை வரிகளின் ஒவ்வொரு சொல்லிலும் உள்ள மனப்படிமங்களை உள்வாங்கிக் கொள்ளத் தவறக்கூடாது.)
அகதி வாழ்க்கையின் சோகம் திசையிழந்த நிலையிலே காணப்படுகிறது. நாங்கள் திசையிழந்து நிற்கிறோம்.
"திசைகள்" என்ற கவிதையில் இது முனைப்புடன் எடுத்துக் கூறப்படுகிறது. மனிதர் மாத்திரமல்ல
இலைகள், தளிர்கள், கொழுந்துகளும்தான்.
"கூடவே
ஒத்திப் பறிபட்ட
பச்சை இலைகள்
தளிர்கள்
கொழுந்துகள்...
எது எந்த மரத்தினது...?
அள்ளுண்டவை அறியுமே'
எற்றுண்ட தம் நிலைபற்றி...! (அறிதல்)
அகதி வாழ்க்கை ஏற்படுத்தும் இந்த அனாதைத் தன்மை, இழப்புநிலை வாழ்க்கையின் ஒவ்வொருகணங்களிலும்
தெரிய வந்துவிடுகிறது. "கோடை" கவிதையில் இது வெளிப்படுகின்ற முறைமை எங்களையும் கி.பி. அரவிந்தனையும்
ஒன்றாக்கி விடுகிறது.
படிமங்கள் நிறைந்த நெஞ்சக் கிளறலோடு தொடங்கும் கவிதைகள் முடியும் முறைமையில் (முடிக்கப்படும்
முறைமையில்) சோகம், இயலாமை, கையறுநிலை ஆகியன பற்றிய கவித்துவ மனநிலை திடீர் முடிவுக்குக்
கொண்டுவரப்படுகிறது, அல்லது படிப்படியே குமிழிகள் கிளம்ப இறக்கிவிடப்படுவதைப் போன்ற ஒரு
உணர்வு ஏற்படுகிறது. குறுங்கவிதையின் ஒரு இயல்பு இது. சொல்லுக்கும் அப்பாலான ஒரு நிசப்தமான
ஒரு சிந்தனைக் கீற்று அல்லது சோக ஆலாபனை அதற்குள் தொக்கி நிற்கும்.
கி.பி. அரவிந்தன் கவிதைகளுக்கு இது இயல்பான பண்பாகிறது.
நாம் அரவிந்தன் ஊடாக கிளப்பிக்கொள்கிற முக்கியமான முதல் சுயசிக்கல், அடையாளம் பற்றியதாகும்.
அடையாளம் என்பதும் ஒருவகைப் பிரிவு உணர்வுதான்.
அதுவாக அதனோடு அதற்குள் இருக்கையில் அடையாளங்கள் தேவைப்படுவதில்லை. அதிலிருந்து
பிரிகிறபொழுதுதான் அது தேவைப்படுகிறது. செல்லும் தூரம் கூடக்கூட அதற்கான தேவையும் கூடிக்கொண்டே
போகிறது. அதுகூட மற்றவர்களுடைய தேவைக்கும் பார்க்க நாம் யாரென்ற நமது தேவைக்கே முக்கியமாகிறது.
இந்த அடையாளத் தேடலின் பரிமாண மாற்றங்களை
"சொல் யாராக இருக்கலாம் நான்?" என்ற சற்று நீண்ட கவிதை மிகத்துல்லியமாகக் கொண்டு வருகிறது.
சாதி, இனம், நாடு என்பவற்றுக்கு அப்பாலே போய் நிறம் முக்கியமாகிறது.
"இனியும் என்ன சொல்வேன்
இறுதிச் சொல்லும் எனக்கில்லை எனும்போது....
அர்த்தங்கள் மாறிப்போன சொற்களும்
நம்பிக்கை தராதபோது
ஆதலால் தயை செய்து
என்னை நெருக்காதே வதைக்காதே....
நீ யாரெனச் சொல் எனக்கேட்டு....
இது ஒரு முக்கிய கட்டம். ஈழத்துத் தமிழ் அகதி என்கின்ற நிலையிலிருந்து அப்பாலே போய் ஒரு
சர்வதேசியத்திற்குச் செல்லுகின்ற தன்மை இதில் காணப்படுகிறது. ஈழத்து அகதி வாழ்க்கையின் பிரக்ஞைநிலை
இன்னொரு தளத்திற்கு மாறுகிறது. இதனை மற்றைய கவிஞர்களும் பேசியுள்ளனர். ஆனால் இந்தத்
துன்பங்களுக்கு அப்பால் உள்ள, இவற்றின் காலான சர்வதேச முதலாளித்துவம் அரவிந்தன் கைக்குள் பிடிபட்டு
விடுகிறது. "அதிசயம் வளரும்" எனும் கவிதையில் அரவிந்தன் அந்த உண்மையைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார்.
ஈழத்துத் தமிழ்க் கவிதை பிரக்ஞை பூர்வமாக சர்வதேசியத்திற்குச் செல்கிறது.
இவ்வாறு இந்த அகதி உலகப்பொது ஆக ஆக, அவன் தன்னுள் தானே தானே ஒளிந்துகொள்ளுகிற, தன்னுள்தானே
அகவயத்தானாகின்ற, தான் தானாக இல்லாது போகின்ற ஒரு மனநிலையும் வந்து விடுகிறது. "தந்தையும் குழந்தையும்"
என்கிற கவிதை இந்தக் கேள்வியை மிகுந்த வன்மையோடு பதிகிறது. 'கனவின் மீதி'யிலும் இது தெரிகிறது.
இந்தச் சுய உள்வாங்கலோடு யாழ்ப்பாணத்தின் நினைவுகள் இணைகின்றன.
இவனுடைய ஆற்றாமைகளெல்லாம் அந்தக் குழந்தையின் முன்னே விஸ்வரூபமெடுக்கின்றன. யுநூலகமுன்றிலில்
ஒருமாலைரு என்னும் கவிதையில் இந்தத் தனிமை மிகத் துல்லியமாகத் தெரிகிறது.
தன்னுடைய நிர்க்கதியைப் புலப்படுத்துவதற்கு அரவிந்தன் கையில் குழந்தை அற்புதமான பாத்திரமாக மேற்கிளம்புகிறது.
அந்தக் குழந்தையின் வினாக்களுள் எங்கள் வரலாறே தொக்கிக் கிடக்கிறது.
கி.பி. அரவிந்தனின் சொற்கையாளுகை பற்றிய ஒரு குறிப்பு அவசியம். தான் வழிபடும் இறைவனை உணர்ச்சிப்
பூர்வமாகக் குறிப்பதற்கு "சொல்பதம் கடந்த சோதி" என்று கூறுவர். சொற்களால் கிளப்பப் பெற்று, ஆனால்
அதன் பின்னர் சொற்களுக்குள் கொண்டுவர முடியாத ஒரு உணர்வுநிலை/சிந்தனைநிலை உண்டு. புதுக்கவிதையின்
சொல் இந்தத் தன்மையது. சந்த நியமங்களுக்கு அப்பாலான ஒரு லயத்தை, லயிப்பை இத்தகைய கவிதைகள்
ஏற்படுத்தும். கி.பி.அரவிந்தனின் கவிதைகளில் சொல்லுக்குள் வரமுடியாத உணர்வோசை கைப்பிடியாகக்
கொண்டு வரப்படுகிறது.
மனோதர்மவளம் மிக்க சங்கீத வித்வானின் ராக ஆலாபனையின் உச்சநிலையில் வரும் தம்புரா சுருதியுடனான
நிசப்தம் போல் இந்தச் சொற்கள் அந்த அனுபவம் தெரிந்தவனை மேலே மேலே கொண்டு செல்லும்.
(ஏற்கனவே தீர்மானிக்கப்படாத லயம் புதுக்கவிதையின் பெரிய ஆஸ்தி)
III
கி.பி. அரவிந்தனுக்கு மாத்திரம் நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரேயானால் அவருடைய வாசகர்
வட்டம் நிச்சயம் விரியும்.
ஒரு நாட்டில் வாழுகின்ற ஒரு இனத்திலுள்ள ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின்
அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ள-தென்றே கருதுகின்றேன்.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் உலக இலக்கிய வாசற்கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது.
'கனவின் மீதி' ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. எங்கள் அண்மைக்கால வரலாற்று அனுபவங்களுக்கான உதாரணம்.
சமூக அனுபவங்கள் ஆழ, அகலமாகி கீழ்நோக்கிச் சென்று உயிர்க்குலையைப் பிடிக்கும் பொழுது மறக்கமுடியாத
கலை இலக்கியங்கள் தோன்றும். இது உலகப் பொதுவிதி.
ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை...?
'பார்த்' எதையும் சொல்லட்டும், நல்ல கவிஞர்கள் என்றும் வாழ்வார்கள்.
5.6.99
கார்த்திகேசு சிவத்தம்பி
வருகை தரு பேராசிரியர்,
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,
தரமணி, சென்னை.
உயிரொடியும் ஓசை
இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளையும் படித்து முடித்தபின் எழுகின்ற உணர்வுநிலை கலவையானது.
அதில் துயரத்தின் அழுத்தமும் சூன்யத்தின் வெறுமையும் எதிர்ப்பின் தகிப்பும் கலந்துள்ள விகிதத்தைப் பிரித்தறிய முடியவில்லை. கைபிசைந்துகொண்டு, உதிரும் கண்ணீரையும் துடைக்க மறந்துவிடத்தான்நேருகிறது.
· · ·
ஒரு கவிதை : 'வளரும் கனாக்கள், துயிலாத நான்'. இரண்டு கனாக்களைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை.
"இறந்து படும் சூரியன்
அலையடங்கும் தொலைகடலில்
வெளிறிவரும் ஆழ்நீலம்....
கரை நக்கும் நுரையின் நுனியில் குருதி
குருதிக்குள் துருத்தும் முலைக்காம்பு
மிதக்கும் துடுப்பைப் பற்றிய பாதிக்கை
எரிந்த பாய்மரத்தண்டில் கருகிய மயிர்-
கடலூதிப் பருந்த முண்டத்தில் வடியும் ஊனம்...
கொட்டிக்கிடக்கும் கடவுளரின் கண்கள்..
அகவய எதார்த்தவாதம் (Surrealism) என்றழைக்கப்பெறும் பாணியிலான இக்கவிதையை மேலைநாட்டு
ஓவியங்களில் நிறையக் காண முடியும். முதல் உலகப்போரின் விளைவாய் உடைந்து சிதறிய சமுக அமைப்பும்
உருக்குலைந்த உறவுகளும் விளைவித்த நம்பிக்கை இழப்பும் அச்சமும் விரக்தியும் ஏற்படுத்திய மன உளைச்சலால்
கனவுகள் இனிமையற்றும் பயங்கரமாயும் இருந்தன.
"நான்
என் காலணிகளைக் கவ்வும் சர்ப்பங்களை
இழுத்துக்கொண்டு...."
என எழுதினார் பௌதலேர் (Baudelaire)
இன்று 20ஆம் நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சமுதாயத்துள் இக்கவிதையின் வரவு எப்படி நேர்ந்தது?
இந்தக் கனவுக்காட்சியின் சொற்களிடை பயணம் செய்தால் இது ஏதோ ஒரு தனிமனிதனின் மனப்பிராந்தியல்ல
என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. அஸ்தமிக்கும் சூரியன், கடலின் ஆழ்நீலம், இரையும் அலை, பாதிக் கை,
பருத்த முண்டம்...
இத்தகைய மனதைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற ஒருவன் தூங்கிவிட முடியுமா? இரவெல்லாம் புரண்டு களைத்து,
எரிகின்ற விழிகளோடு படுக்கையில் அமர்ந்து அரண்டு வெறிக்கும் நாள் ஒன்றே ஒன்றாக இருந்துவிட இயலுமா?
நம்மால் பார்த்தறிந்து விடமுடியாத இந்த பீதியோடு உலகெங்கும் நொறுங்கிக் கிடக்கும் இதயங்களின் ஒற்றை
நாவாகச் சொற்களை உதிர்த்துக் களைக்கின்றது கி.பி.அரவிந்தன் கவிதை.
மீண்டும் இங்கே பதியப்பட வேண்டியதில்லைதான் அந்தத் துயரம். ஏறத்தாழ, கடந்த இருபது ஆண்டுகளில்
மரணத்தின் செய்தி சுமக்காத காற்றில்லை. எத்தனை விதமான சித்திரவதைகளை வரலாற்றின் பக்கங்களில்
கதைகளைப் போல் படித்தோமோ அவை கண்ணெதிரே நேர்ந்தன. மிதிக்கப்பட்ட குழந்தைகளும் அழிக்கப்பட்ட
பெண்களும் துளைக்கப்பட்ட இளைஞர்களுமாக...கண்டுகண்டு மூர்ச்சித்துக் கிடக்கிறது பூமி.
உயிரற்றுச் சாயும் உடல்களைக் கண்டு கலங்கி ஒடுகின்றவர்களைச் சூழ்ந்து ஆர்ப்பரிக்கும் கடலலைகள்.
"சாயும் பக்கம் சாய்ந்தபடி
அல்லோல கல்லோலமாய்
பயணிகள் தத்தளிப்பில்
சாவின் வீச்சு அலையில்
சுழித்து வரும் காற்றில்
திடமற்ற மனதில்
ஒரே பக்கமாய்ச் சாயாதீர்கள்
கூவுகிறான் தண்டேல்
சுக்கானைப் பிடித்தபடி"
மிதந்து மிதந்து ஒதுங்கிய கரைகளில் யாரும் யாரையும் ஆரவாரத்துடன் வரவேற்றுவிடவில்லை. அங்கே
அவர்களுக்கு வேறு'பெயர்':வேறு 'தகுதி'. தனதென்று ஏதுமற்ற புதிய சூழலில் வேறுவகையாக இருக்கின்றன
சித்திரவதைகள். பறவைகள் கூடச் சொந்த ஊர்ப்பெயரால் அழைக்கப்படும் சொற்கள் அவர்களைக் காயப்படுத்துகின்றன.
"இனியும் என்ன சொல்வேன்
இறுதிச் சொல்லும் எனக்கில்லை எனும்போது...
ஆதலால்
தயைசெய்து
என்னை நெருக்காதே வதைக்காதே
'நீ யாரெனச் சொல்' எனக் கேட்டு..."
பனிதாங்கும் பைன்மரங்களைப் பார்க்கப் பிடிக்காமல் ஒற்றைப் பனைத்தோப்பை எண்ணியும் செர்ரிப்பழங்கள்
சுவைக்காமல் கனியுதிர்த்து நிற்குமந்த சிறுநெல்லி மரம் நினைத்தும் வெடித்துவெடித்துச் சீழ்கட்டும் நெஞ்சு.
· · ·
கலைகள் உண்மையைத் தேடுகின்றன அல்லது கண்டடைந்து சொல்லுகின்றன. அத்தனை வடிவங்களும் இந்த
வாழ்க்கையின் அடிமுடியைத்தான் தேடுகின்றன. வாழ்க்கை எது என்பதுதான் வற்றாத கேள்வி. சுட்டெரிக்கும்
கேள்வி. பொருட்கள் வாழ்வுக்குப் புறக்காரணிகள். அவை பயன்கொள்ளத் தக்கனவன்றி நிறைவுகொள்ளத் தக்கனவல்ல.
அதனால்தான் எந்த மண்ணில் இருந்தால் என்ன? எந்த மொழியால் மொழிந்தால் என்ன? எந்த உணவை உண்டாலென்ன?
என்றெல்லாம் இருந்துவிட முடிவதில்லை. தனதென்னும் உரிமையும் விடுதலையுமே ஆன்மாவைச் சமாதானப்படுத்துகின்றன.
எத்தனை குறைபாடுகளிருந்தாலும் அவற்றிக்காக எதனையும் இழக்கத் துணிகிறது இதயம்.
தன் ஆன்ம நிறைவைத் தேடியும், தன் சகமனிதர்களுக்கு அது இல்லையே என ஏங்கியும் எழுகின்ற விசும்பலின்,
கண்ணீரின், அரற்றலின், சினத்தின் வார்த்தைகளாகவே அரவிந்தனின் அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன.
தான் இழந்தவைதாம் 'தான்' என்று கண்டுகொண்ட தகிப்பில் சொற்களாகக் குமைந்து வெடிக்கின்றன.
· · ·
தமிழகத்திலும் பல்பேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்கள் பற்றிப் போராட்டங்கள் எழுந்துள்ளன. அவற்றைச்
சார்ந்து படைப்பாளிகளும் தோன்றியுள்ளனர். ஆயினும் ஈழப் படைப்பாளிகளின் இலக்கியங்கள் நம்மைப் பல்வேறு
வகைகளிலும் திடுக்கிடச் செய்துவிட்டன. அதற்குக் காரணமிருந்தது. இரத்தம் சிந்துவதை எழுதுவதற்கும், இரத்தம்
சிந்திக் கொண்டே எழுதுவதற்குமான வேறுபாட்டின் விளைவு அது. தமிழ்ச் சமுதாயம் கண்டிராத இராணுவ ரீதியிலான
அரசியல் படுகொலைகளும், இன அழிப்பும், மொழியழிப்பும், பண்பாட்டுச் சிதைப்பும் அவர்களது படைப்புகளுக்குப்
புதிய கருத்துக்களையும் புதிய மொழியினையும் புதிய வேகத்தினையும் வழங்கியுள்ளன. அது கண்ணீராயினும்
ஆர்த்தெழும் சினமாயினும் புதிய வடிவங்களில் தெறிக்கின்றன. தமிழ் வாசகர்களுக்குஅன்னிய மண்ணில் பிழைத்து
அடையாளமிழக்கும் நெஞ்சத்தின் இடிபாடுகளைக் காணும் புதிய உள்ளடக்கச் சுவையினையும் தமிழ்க்
கவிஞர்களுக்கு எளிய பதங்களில் உணர்ச்சிகளைப் பொதித்துத் தரும் இலாவகத்தினையும் வழங்குவன கி.பி.
அரவிந்தன் கவிதைகள்.
· · ·
தேசிய இன ஒடுக்குமுறை பல்லாயிரம் உயிர்களைப் பலிகொள்ளும் மண்ணிலிருந்து வெளிவரும் அரசியல் கவிதைகள் விடுதலைக்கான போராட்ட உணர்வை உரத்து முழுங்குகின்றன. தமிழகம் சந்தித்த அரசியல் கலை வடிவங்களிலும் பல பரிமாணங்களில் வேறுபட்டதாகவும் ஆற்றல்மிக்கதாகவும் ஈழக் கவிதைகள் முகிழ்த்தன. அவை இதழ்களில், நூல்களில் மட்டுமன்றி, சுவரொட்டிகளிலும் அஞ்சலி நோக்கில் எழுதப்பட்ட உரைகளிலும் அறிக்கைகளிலும் இடம்பெற்றன. இவையனைத்தும், தேசிய விடுதலை என்பதை வெறும் அரசியல் சுதந்தரம் சார்ந்ததாக, பொருள் மீட்புச் சார்ந்ததாகப் பார்க்காமல் மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகள், ஏன்? வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் அசைவிலும் விடுதலை இருப்பதைப் பேசின. போராளிகளும் போராட்டத்திற்குத் துணைநிற்கும் படைப்பாளிகளும் - அவர்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் - காதல் கவிதைகளையும் விடுதலையோடு இணைத்துள்ளனர். அப்படைப்புகள் 'மானுடன் தன்னைக் கட்டிய தளைகளெல்லாம் சிதறும்' போதுதான் 'மனிதம்' என்பதே சாத்தியம் என உணர்த்தின; எத்தகைய வெளிப்பாட்டு முறையில் நின்ற போதிலும் உலகெங்கும் உள்ள இதயங்களுக்கு நம்பிக்கைகளை எடுத்துச் சென்றன. அரசியல் கவிதைகளைப் பற்றியிருந்த செயற்கைப் பண்புகள் உடைபடுவதற்கும் தங்களது தனித்துவம் மிக்க குரலை இலக்கியத் தளத்தில் கவித்துவம் மிளிரப் படைப்பதற்கும் இன்றைய போர்ச்சூழல் தந்துள்ள உணர்ச்சிவேகமும் உலகம் முழுவதிலிருந்தும் படைக்கப்படும் இனவெழுச்சிக் கலைவடிவங்களின் அறிமுகமும்பயன்பட்டுள்ளன.
ஈழக் கவிதைகளுள்ளும் அரவிந்தனின் இத்தொகுப்புத் தனித்தன்மை பெறுவது இவ்விடத்தில்தான். இத்தொகுப்பு ஒடுக்குமுறைக்கெதிரான நேரடிப் போர்க்குரலாக அமையாமல், ஒடுக்கப்பட்ட ஆன்மாவின் துயர ஒலியாகவே பெரும்பாலும் அமைந்துள்ளது. இது அன்னிய மண்ணில் வாழ நேர்ந்து, சொந்த மண்ணை எண்ணியெண்ணி ஏங்கும் ஏக்கத்தின் குரல். இது போராட்டத்தைப் பற்றியதல்லாமல், போராட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதும் ஆத்திரத்தைக் கிளறுவதுமாகும்.
தன் உயிரில் நின்றழும் உணர்வுகளுக்கு வடிவம் தருவதில் படி, பயணம், திசை, மலர், சருகு, காற்று, அலையெனப் பழகிய பொருட்களையே பயன்படுத்தியிருப்பினும் அவற்றைப் புதிய வகைகளில் படிமங்களாக்கியுள்ளார். இவை வெறும் வாழ்வின் சிக்கல்களைச் சொல்வதாக இல்லாமல் அரசியல் வடிவம் கொள்வதற்குப் படைப்பாளியின் வாழ்வுக் களங்களும் காலமும் காரணங்களாகின்றன.
'நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி...'
மடிபற்றி எழுகிறது கேள்வி."
உண்மைதான். நமக்காக மட்டுமின்றி நம் தலைமுறைகளுக்காகவும் போராட வேண்டும் என்ற வரலாற்றுக்
கடமையை உணர்த்தி வீறுகொள்ளச் செய்கின்றன இக்கவிதைகள்.
· · ·
உண்மையே அலங்காரமாகி நிற்கும் கவிதைகளைப் படைத்த கி.பி. அரவிந்தனுக்கு வாழ்த்துச்சொல்வதும்
அவற்றை நம் கைகளில் வழங்குகின்ற வைகறைக்கு நன்றியுரைப்பதும் பண்பு.
பாரதிபுத்திரன்
சென்னைக் கிறித்தவக் கல்லூரி
தாம்பரம்-600 059
19.6.1999
என்றென்றும்
அன்புடன்......
இது எனது கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு, 1991ம் ஆண்டு மார்ச் மாதம் 'இனி ஒரு வைகறை' என்ற முதலாவது
தொகுப்பும்; 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் 'முகம் கொள்' என்ற இரண்டாவது தெ'குப்பும் வெளிவந்திருந்தன.
ஆறாண்டு காலத்தின் பின் 'கனவின் மீதி' என இத்தொகுப்பு வெளி வருகின்றது. இது தொகுக்கப்பட்ட
நிலையிலேயே நல்லதொரு நூல் வெளியீட்டாளரை எதிர்பார்த்து நீண்டநாட்கள் காத்திருந்தது. தேர்ந்த
நூல்களை வெளியிட்ட தமிழியல் சார்பாக இதனை வெளிக்கொணர நட்பார்ந்த முறையில் திரு.பத்மநாப
ஐயர் விரும்பி இருந்தார். ஆயினும், அவருடைய ஓயாத பணிகளுக்கு இடையே மேலும் சுமையைத் தர
விரும்பவில்லை. எனவே அவருடைய விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அத்துடன்
இத்தொகுப்பை ஈழத்தில் இருந்து வெளிக்கொணரவும் விரும்பியிருந்தேன். அங்கிருந்து வெளிக்கொணர
நண்பர்கள் யாரும் தயாராயிருக்கவில்லை. ஆதலால் மீளவும் சென்னையில் இருந்தே வெளிவருகிறது.
ஒருவகையில் கவலைதான். அதனைச் சமன் செய்வதுபோல் ஈழத்தின்பால் நேசங்கொண்ட நெடுநாளைய
தோழரும், நந்தன் வழி இதழின் பொறுப்ப'சிரியருமான நண்பர் வைகறை அவர்கள் தனது பொன்னி
பதிப்பகத்தால் இக்கவிதை நூலைவெளியிடுகின்றார். அவர்தான் எனது முதல் கவிதை நூலான
'இனி ஒரு வைகறை'யையும் வெளியிட்டவர். எனது இரண்டாவது தொகுப்பையும் அவர்தான் வெளியிட்டிருக்க
வேண்டும். கடிதங்கள் கோபமூட்டிகளாய் மாறியபோது, நட்பில் ஏற்பட்ட தொய்வு கனவின் மீதி தொகுப்பின்
மூலம் சீராக்கப்படுகின்றது.
இத்தொகுப்பிலுள்ள அநேகமான கவிதைகள் நண்பன் வரன் அவர்களை வெளியீட்டாளராகக் கொண்டு, திரு.
முகுந்தனுடன் இணைந்து என்னால் தொகுக்கப்பட்ட மௌனம் காலாண்டிதழிலும், நோர்வே நாட்டிலிருந்து
வெளிவந்த 'சுவடுகள்' மாத இதழிலும், கனடா நாட்டிலிருந்து வெளிவந்த 'சக்தி' வார இதழிலும், பிரான்ஸ்
நாட்டிலிருந்து வெளிவரும் 'ஈழமுரசு' வார இதழிலும், லண்டனிலிருந்து வெளிவரும் தமிழர் நலன்புரிச் சங்கத்தின்
ஆண்டு மலரிலும் வெளிவந்தவை. இவற்றில் நூலாக்கத்திற்கென என் வாழ்க்கைத் துணைவி சுமத்திரியால் திரட்டியவற்றை
ஒருசேர மீளப்படித்த போது பலவற்றை செப்பனிட நேர்ந்த்து. சிலவற்றை இருவரும் தள்ளிவிட்டோம். இப்போது
தொகுப்பு ஓரளவு திருப்தி தருகின்றது. இப்படைப்புகளின் கரு மையங்கள் அவற்றின் உருவடிவங்கள் எல்லாம்
ஒரே தரத்துடனும் செய்நேர்த்தியுடனும் கவித்துவத்துடனும் விளங்குகின்றன என்பதே மிகச்சரியானது. அவை
எழுதப்பட்டுள்ளனவா அல்லது செய்யப்பட்டுள்ளனவா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இத்தொகுப்பிற்கு, 'கனவின் மீதி' எனத் தலைப்பிட்டது பல்வேறு வகைகளில் பொருத்தமானது என்றே கருதுகின்றேன்.
எழுபதுகளின் பின்னான எங்கள் புலப்பெயர்வுகள் தனியே அரசியல் சார்ந்தது என்பது எங்களில் சிலரின் வசதிக்குரிய
காரணமே தவிர அது அவ்வாறானதல்ல; உண்மை வேறானது என்பது எனதெண்ணம். அது வெளிநாடென்று படித்த
குழாத்தினரால் வளர்த்தெடுக்கப்பட்ட லண்டன் கனா ஒன்றினதும் தொடர்ச்சியேயாகும். ஆதலால் லண்டன் கனா
ஐம்பது விழுக்காடும், அரசியல் ஐம்பது விழுக்காடும் என்பதே மிகச் சரியானது. பிரித்தானியாவுக்கு வெளியே
ஐரோப்பியப்புலத்தில் வாழ நேர்ந்துள்ள பலரும் இன்றைக்கும் லண்டன் செல்லும் தவத்துடன்தான் வாழ்கின்றனர்
என்பதையும் இதனுடன் பொருத்திப் பார்க்கலாம். அந்த லண்டன் கனா அறுபடா வண்ணம் இன்றுவரை
அரசியல் முண்டுகொடுத்து நிற்கின்றது என்பதுதான் உண்மை. இன்றிந்தப் புலப்பெயர்வுத்தாயகப் போராட்டத்தின்
முன்னெடுப்பிற்குப் பல்வேறு வகைகளில் கைகொடுத்து உதவுவதும், எங்கள் சமூகத்தின் பெறுமானத்தை
விருத்தியுறத் செய்துள்ளதும் நல்ல அம்சங்களும், இதனை ஒருபாவ விமோசனமாகவும் கொள்ளலாம். அந்த
லண்டன் கனாவும், அரசியல் போராட்டமும் உமிழ்ந்த எச்சங்களாகவே இந்தப் புலம் பெயர் வாழ்க்கையை நான்
புரிந்து கொள்கின்றேன். அந்த மீதிகளை உள்ளீடாகக் கொண்டவையே இப்படைப்புகள்.
அறுபதுகளின் இறுதிப்பகுதியில் முகிழ்ந்த ஒரு தலைமுறையின் எழுச்சியுடன் என் கனவுகளும் பின்னிப் பிணைந்திருந்தன.
அத்தலைமுறை எழுச்சிக்கு சிறிலங்கா அரசின் தரப்படுத்தல் என்னும் கல்விக் கொள்கைதான் காரணமென்பது
ஒற்றைப்பரிமாண நோக்காகும். அவ்வெழுச்சியானது, அரசமைப்பு, அவ்வரசமைப்பின் உட்சாரமான இனவாதம் ஆகிய
புறநிலைத்தாக்கங்களில் மட்டுமல்லாது, சமூக அமைப்பின் உள்நிலை முரண்களினதும் அழுத்தங்கனினதும்
வெளிப்பாடுமாகும். பல ஊற்றுக்கண்களின் கசிவுகளில் இருந்தும், சொட்டுச்சொட்டாய்த் தேங்கிய அவமானங்களின்
ஆழ்மனப்படிவுகளிலிருந்தும், மடை உடைத்த வெள்ளந்தான் அந்த தலைமுறை எழுச்சி. அதன் பன்முகப்பரிமாணம்
ஆய்வாளர் பலராலும் புரிந்து கொள்ளப்படவில்லை. அதனால்தான் அந்த எழுச்சியின் உச்சநிலைப்புள்ளி எதுவரையானது
என்பதை யாராலும் இதுவரை கணித்துக்கூற இயலவில்லை. தவறுகளும், தவறுகளிலிருந்து படிப்பினைகளும்,
படிப்பினைகளினூடான முன்னெடுப்புகளும் அந்த எழுச்சியை, ஓர் இலக்கினை நோக்கி நகர்த்துகின்றன. அர்ப்பணிப்பும்,
ஆற்றலும், இன்னுயிர்த் தியாகமும், உறுதியும், சளைக்காத போர்முறை ஓர்மமும் கொண்ட தலைமையன்று
அவ்வெழுச்சியினைப் பொறுப்பெடுத்து நம்பிக்கையுடன் முன்னெடுத்து செல்கின்றது. அது வெற்றியை நோக்கியே
நகர்கின்றது. இந்த நம்பிக்கை மட்டும் நாள்தோறும் என்னுள் வளர்ந்து வருகின்றது. இதில் நான் எங்கு நிற்கிறேன்.
என் பங்களிப்பு என்ன என்பது பற்றியதான கேள்விகளை எப்போதும் என்னுள் எழுப்பிய வண்ணம் உள்ளேன். ஏனெனில்
புறத்தியானாக எட்டி நிற்கவும் முடியாது; பொறுப்பற்றவனாக நடந்துகொள்ளவும் முடியாது. இந்நிலையில்,
"அணில் சுமந்த மண்ணளவாயினும் என்னால் ஏதும் செய்ய முடிந்துள்ளதா?" என்னும் உறுத்தல் என்னை அலைக்
கழிக்கின்றது. அப்படியிருக்க எவ்வகைக் காரணங்களால் நான் தேசம் துறந்தவனானேன். இப்படி தனித்த பயணியாகிப்
போனேன். இன்னும் சொல்வதானால், கானல் நீர்க் கனவுகளுக்கும் அதன் மீதிகளுக்கும் எப்படி நானே சாட்சியமாகிப்
போனேன் என்பவை எல்லாம் இப்படைப்புகளில் உள்ளனவா நான் அறியேன். ஆனால் அச்சாட்சியங்களாகவே, ஒரு
தேசம் துறந்த தவிப்பாகவே இப்படைப்புகள் இருக்கின்றன என்பதை நீங்கள் உணர்வீர்களாயின் அவற்றைப் படைத்தவன்
எனும் வகையில் சிறிது மகிழ்ச்சியே.
தேசம் ஒன்றைத் துறந்து விடுதல் என்பது அத்தனை எளிமையானத்தொன்றல்ல. இது எனக்கு மட்டுமேயான தனித்த
பிரச்சனையுமல்லதான். வரலாறு முழுவதும் ஊர் துறத்தல் மனித சமூகத்தின் விதியாகச் செயற்பட்டு வந்தபோதும் எல்லாச்
சமூகமும் இவ்வியல்பு விதியைச் சொல்லொணா வலியாகவே கருதி வந்துள்ளது. தமிழ்ச சமூகமும் ஊர் துறந்து,
உலகெங்கும் கொத்துக் கொத்தாய்த் சிதறி வலிகளுடன் வாழ்வது இன்று நேற்றல்ல. தமிழ்ச் சமூகத்தின் ஒரு
தொகுதியான இலங்கைத் தீவின் சமூகத்திற்குள்ளதும் அந்த வலிதான். அந்த வலிகளே இன்று அச்சமூகத்தின்
வலிமையாக மாற்றம்பெறுகின்றது என்பது மறு விளைவு. இந்த நூற்றாண்டின் பின் கால்நூற்றாண்டுப் பகுதியில்தான்
எங்களின் ஊர்துறத்தல் வேகம் பெற்றது. ஒரு தேசம், இன்னும் சொல்லப்போனால் ஓர் ஊர் என்பது வெறுமே கல்லாய்,
மண்ணாய், மரஞ்செடி தோப்பாய், ஊமையாய் நிற்குமாப்போல் இருந்தாலும்மனிதரை வாழ்விக்கும் உயிர் அணுக்கள்
அவைதான். ஆதலால் ஓர் ஊர் என்பதனை நம்வாழிவின் தொன்மம் என்றே கருதுகிறேன். அத்தொன்மத் தொடரை
யாராலும் அறுத்துவிட முடியாது. அந்த ஊரென்னும் குறுஞ்சூழல் படிவுகளிலேயே ஒவ்வொரு மனிதரும் வார்க்கப்படுகின்றனர்.
அங்கிருந்தே அவர்தம் உலகமும் வளர்கின்றது. அந்த ஊருக்கு அந்நியமாகாமல் அதன் நேசத்திற்குரிய மகனாக
இருத்தல் எல்லோருக்கும் வாய்த்ததொன்றல்ல. எந்த மனிதரும் இறுதி நாட்களில் தம் ஆணிவேர் தொட்டு நிற்கும்
அந்த ஊரினைச் சென்றடையவே விரும்புகின்றனர். இது எனக்கு வாய்க்குமா நான் அறியேன். இந்த தவிப்புடனேயே
நான் அலைந்து கொண்டிருக்கிறேன் பலரையும் எழுதத் தூண்டிய அந்தத் தவிப்பே என்னையும் எழுதத் தூண்டுகின்றது.
எழுத பல்வேறு வடிவங்கள் உள்ளதாயினும் கவிதையென நான் கருதும் இவ்வடிவமே எனக்கு வசதியாக அமைந்து
விடுகின்றது.
கவிதையை இலக்கிய வடிவங்களின் உச்ச வடிவம் என்கின்றனர் கற்றறிந்தோர். அதனால்தான் அவர்கள் கட்டுரையை,
கதையை, படித்ததும் இது கவிதையைப்போல் இருந்தது. கவித்துவமாக இருந்தது என விதந்துரைக்கின்றனர். எனது
இத் தொகுப்பில் உள்ள பல கவிதைகளின் கருக்கள் கட்டுரைகளாகவும், கதைகளாகவும், நாவல்களாகவும் விருத்தியுறும்
வாய்ப்புகள் கொண்டிருப்பதனை நீங்கள் உணரக்கூடும். இக்கருக்களை சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களில்
சொல்வதற்கு என்னால் இயலாமல் போய்விட்டது. அதற்காக இவை கவிதைகள் இல்லையென நீங்கள் கூறுவீர்களாயின்
அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. ஏனெனில் நாரினில் பூத்தொடுக்கின்றேன். அது பூக்களை விற்பதற்கு அல்ல
என்னும் அழகியல் கோட்பாட்டை எனக்கு நானே வகுத்துள்ளதனால்தான் இலக்கியத்தில் அழகியல் என்பது ஒரு கருவி
மட்டுமே என்பதனை என்னைக் கவர்ந்த இலக்கியங்கள் எனக்கு கற்றுத் தந்துள்ளன. அவை தந்த பாடங்கள்தான்
இப்படைப்புகள்.
இப்பக்கத்தில் மேலும் மேலும் புலம் பெயர் வாழ்வு பற்றி நான் பேசுவதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.ஏனெனில்
எனது படைப்புகள் அவை பற்றித்தான் பேசுகின்றன. ஆதலால் மேலும் தொகுப்புகள் பற்றியே சிறிது பேச விரும்புகிறேன்.
அதிலும் முதலிரு தொகுப்பினிலும் நான் எதுவும் பேசவில்லை. அத்துடன் அதில் யாருக்கும் நன்றி தெரிவிக்கவுமில்லை.
அந்தக் கடமைகளை இந்நேரத்தில் பதிவு செய்யவிரும்புகிறேன். அவ்வகையில் என் கவிதைத் தொகுப்புகளுடன் ஈடுபாடு
கொண்டவர்கள் என்றதும் ஓவியர் மருது அவர்கள்தான் நினைவுக்கு வருகின்றார். ஏனெனில், எனது மூன்று தொகுப்புகளிலும்
தொடர்ச்சியாக அவரது கைவண்ணம் படிந்துள்ளது. முதலாவது தொகுப்பிற்கு அவர் முகப்போவியம் வரைந்தார்.
இரண்டாவது தொகுப்பிற்கு உள்ளீடாகச் சில கவிதைகளுக்கான ஓவியங்கள் வரைந்தார். தற்போது இந்தத் தொகுப்பிற்கு
முகப்போவியமும், உள்ளீடான ஓவியங்களும் வரைந்துள்ளார். அடுத்து என் நினைவிற்கு வருபவர் எனது இரண்டாவது
கவிதை நூலான முகம் கொள் தொகுப்பினை வெளியிட்ட தமிழக - ஈழ நண்பரும், மருத்துவ அறிவியல் மலர்சஞ்சிகையின்
நிர்வாக ஆசிரியரும் என் அன்பிற்குரியவருமான ச.மா.பன்னீர்செல்வம். இந்தத்தொகுப்பில் அவருடைய கைபடாத
போதும் தொடக்கத்தில் அவர் தயாராக இருந்தார். அவருக்குள்ள வேலைப் பளுவினிடையே எனது தொகுப்பின்
பணிசுமையாக அமைந்துவிடுமென நான் கருதியதனால், அவரின் உதவியை என்னால் பெறமுடியாமல் போயிற்று.
இவருடன் அக் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய அறிவுவாதிகளான வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை அவர்களின்
பங்களிப்பும் மிக முக்கியமானது. யுமுகம் கொள்ரு கவிதைத் தொகுப்புக்கு மதுரையில்வெளியீட்டு விழா நடத்திச்
சிறப்பித்தவர் தமிழக - ஈழ நண்பரும், உடன்பிறவா சகோதரருமான இரா.திரவியம். எனது அந்த இரண்டாவது
தொகுப்பான யுமுகம் கொள்ரு வெளிவந்த போது புலம் பெயர் நாடுகளில் பல நண்பர்கள். தோழர்கள் தம் சொந்த
வெளியீடு போன்று பல முனையிலும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். பிரான்சில் எனது நீண்ட நாளைய நண்பன்
நல்லையா, கொடி, க.முகுந்தன், சி.மனோகரன், யேர்மனியில் ஜெமினி, சுவிஸில் திலக், நோர்வேயில் 'சுவடுகள்'
நண்பர்கள், இலண்டனில் வளவன், பாலஸ்கந்தர், கைலாஷ், நவநீதன், அருட்குமரன், கனடாவில் ஜெயபால்...இப்படி
இன்னும் பலர். ஆண்டுகள் பல கடந்த நிலையில் இவர்கள் என் நன்றி கூறலை ஏற்கமாட்டார்களாயினும் நன்றி
மறப்பது நன்றன்று.
அடுத்து புலம் பெயர் வாழ்வில் எனக்குக் கிடைத்துள்ள அருமையான பல இள நண்பர்களில் ஒருவனான கவிஞன்
தா.பாலகணேசனை, அவனது துணைவியை நினைவில் கொள்கிறேன். இத்தொகுப்பைச் சாத்தியமாக்கியதில்
முன் நின்றவர்கள் அவர்கள்.
எனது கவிதைகள் கூறும் புலம் பெயர் வாழ்க்கையின் நெருக்கடிகளில் கரைந்துவிடாமல் என்னைதுலங்கச் செய்வதில்,
என் ஆன்ம உயிர்ப்பைப் பேணுவதில் சலிப்புறாத நண்பனும் தோழனுமான வரனுக்கு என் முதல் மரியாதை.
முகமறியா நிலையிலும் நண்பர் வைகறையின் வேண்டுகோளுக்கிணங்க, இத்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிச்
சிறப்பித்த பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் பாரதிபுத்திரன் ஆகியோருக்கு நூலாசிரியன் எனும் வகையில்
எனது நன்றிகள். இக்கவிதைத் தொகுப்பில் தங்கள் ஓவியங்கள் இடம்பெறும் வகையில் ஈடுபாடு காட்டிய ஓவியப்
படைப்பாளிகளான ஆதிமூலம், வீரசந்தானம் ஆகியோருக்கு என் நன்றிகள். அத்துடன் இத்தொகுப்பை அழகுடன்
வடிவமைத்த நண்பருக்கும் என் நன்றிகள். எல்லாவற்றிற்கும் மேலாக இக்கவிதை தொகுப்பின் வெளியீட்டாளர்
வைகறைக்கு....
என்றென்றும் அன்புடன்,
கி.பி. அரவிந்தன்
11.6.1999
தொலைபேசி-தொலைநகல் : 33-1-34 50 62 56
மின்னஞ்சல் : kipian@free.ft
: kipian@hotmail.com
1. படி
படிகளில் நான்
ஏறும்படியில் ஒருதடவையும்
இறங்கும் படியில் மறுதடவையுமாய்
பதட்டத்துடன்.
உயிர்ப்பிண்டங்கள் பிதுங்கும்
நியான்ஓளி கசிந்த தா¢ப்பிடத்தில்
திரும்பும் முகம்
ஒவ்வொன்றிலும் சாக்களை.
எ·கு
சாறு உறிஞ்சித் துப்பும்
நிறமற்ற சக்கைகள்,
காணும் முகமெல்லாம் கலங்கல்.
ஓடியும் துரத்தியும்
பிடிபடாமல் போமோ வாழ்க்கை.
நொ¢சலின் சுழற்சியில்
உதறப்படுவேனோ நானும்...?
நனையாத ஆடையுள்
மறைந்து தி¡¢யும் மனிதருள்
இந்த மழையை
ஏன்தான் நான் நோக்குகிறேன்.
கானல் நீர் தேடி
பாலையாகிறவன் நான்
அழகுறுமோ மழைநாள்
எனக்கு.
அடிபிய்ந்த என் சப்பாத்துள்
சளசளப்பாய்
நாசமாய்ப் போன மழை.
குதித்தோடும்
மழைநாள் ஊ¡¢ல்
வெறுங்கால் வெறும்மேல்
சில்லிடப் பூக்கும்
நிலம்.
அந்த மழை எப்போது விடும்
என்னை...?
சன. 1994, பா¡¢ஸ்.
6. அழகியல்
நா¡¢னில் பூத்தொடுக்க
மாலை வரும்.
மாலையில் பூவுதிர
நா¡¢ழை எஞ்சும்
நா¡¢னைக் கடைவி¡¢த்தால்
கொள்வாரும் உளரோ
தேடிப் பலவண்ணத்தில்
பூக்கொய்யலாம்
நா¡¢ன்றேல்...!
என்னிடத்தே நாருண்டு
எப்பூவையும் நான் தொடுப்பேன்
ஆனால் அது
பூக்களை விற்பதற்கல்ல....
7. நான்
தெறிக்கின்றேன்
ஒளிக்கதிர்களாய்
உங்கள் கண் கூச
நான் கண்ணாடியுமல்லன்....
மறுபதிப்பாகின்றேன்
எழுத்துக்களாய்
உங்கள் வேர் கிளற
புத்தகமுமல்லன்...
ஏற்றப்படுகின்றேன்
அகல்விளக்குகளாய்
உங்கள் உள் ஒளிர
நான் நெருப்பனுமல்லன்...
நீங்கள் உள் நானும்
நான் உள் நீங்களும்
உங்கள் சொல்போல் நானும்
நான் போல் நீங்களும்
ஒன்றுள் ஒன்றாகி
ஒன்றொன்றும் ஒன்று இல்லாகி
மானிட உருவாகி
நானெனும் நாங்களாகி....
இளவேனில், 1993
8. அறிதல்
வீசும் திசைக்கு
அள்ளிச்செல்லும்
சிலபல வேளையில்
மகரந்தம் காவும்
வேறொரு நேரம்
திசைமாறி விரையும்
அண்டங்கள் கண்டங்கள்
துழாவித் துருவும்
பேதங்கடந்த காற்று அது
ஏதுமது அறியாது
அக்காற்றில்
அள்ளுண்டு வருகின்றன
மரத்தில் செத்ததும்
வாடி உதிர்ந்ததுமான
சருகுகள்.
கூடவே
ஒத்திப் பறிபட்ட
பச்சை இலைகள்
தளிர்கள்
கொழுந்துகள்....
எது எந்த மரத்தினது...?
அள்ளுண்டவை அறியுமோ
எற்றுண்ட தம்நிலை பற்றி...!
கதிர்முற்றும் பயிர் தேடி
காட்டு விலங்கும் புகக்கூடும்
பரண் வேண்டும்
இருட்டு விழி வேண்டும்
பொறி அமைக்கும் மதி வேண்டும்
பொறியில் அகப்பட்டதை
கச்சிதமாய் பதனமிடும்
கலையும் அறிய வேண்டும்
இத்தனைக்கும் நெஞ்சிலுரம் வேண்டும்
வயல் காக்கும் ஓர்மம் வேண்டும்
அறுவடை உணவாக
உயிர்வாழ
உயிர்களிடத்தே
அன்பு செய்ய...!
தைப் பொங்கல், 1994, பா¡¢ஸ்.
14. பறவையும் பாடலுமாய்
தமிழின் புதுக்கவியாளர்
எடுத்தியம்பும் பீனிக்ஸ் பறவையுமல்ல
பாலையும் நீரையும் பி¡¢க்குமாமென
பழந்தமிழ் கூறிடும் அன்னப்பறவையுமல்ல
இது.
வசந்தத்தை எதிர்பார்க்கையில்
கூவெனக் கூவி குயிலாகி
மழைமேகம் காண்கையில்
தோகை வி¡¢த்தாடி மயிலாகி
துணைக்கு இணை தேடுகையில்
குரல் இரங்கிக்கேவி செண்பகமாகி
வானில் என்னை ஏற்றியும்விட்டீர்
இங்கெதுதான் தொலைந்தது
காலநிலைதான் மாறியது
ஐயாவே அம்மாவே...
இவைகளை எல்லாம் வெளியே சொல்லாதீர்
ரூபாயால் அளக்கும் உயரமட்டமும்
வெள்ளையா தேச இருப்பு மகிமையும்
குறைஞ்சு போய்விடும்
மலிஞ்ச கூலியாய் அடிச்சுக் கொடுக்கிறேன்
பொலிஞ்ச கூலியை உறிஞ்சிக் கொள்கிறான்
தோலைத் தள்ளி சுளையை முழுங்குகிறான்
அதெல்லாம் போக
முன்னம் நாளில் நம்ம ஊ¡¢ல்
வேலைக்கார அடிமைகள் தேடி
தோட்டக்காட்டில் பிள்ளை பிடித்த
பொ¢யவளவு ஆண்டைகளெல்லாம்
அடிமை குடிமை கூலிகளாய்
நாளும் பொழுதும் பெருமை பொங்க...!
கோள்களும்தான் சுழல்கின்றது.
17. காணாமல் போனோர் பற்றி
மகனே மகளே
என் உதிரத்துதித்தோரே
எங்கே தான் சென்றீர்
என்னையேன் மறந்தீர்
என்ன குற்றம் செய்தேன்
எனதரும் பிள்ளைகாள்
கொடிப்பந்தலிட்ட முற்றத்தில்
ஊரடங்கிய சாமத்தில்
நாம் அணைந்தொ¢ந்த தாபத்தில்
பிய்ந்துதிர்ந்ததே அந்த மல்லிகை இதழ்
மற்றவர் கண்கட்டி விரல் முகர்ந்து
விழியுள் பிணைந்த இளஞ்சூட்டில்
நீ பருகத் தந்த தேநீர் கரைசலிடை
தேயிலையுடன் நசிந்த அக்கிண்ணம்
வராத நாளில், வந்து சேரும் மடல்களில்,
மையாய் கசிந்து நீ நெகிழ்கையில்
என் முத்த எச்சில் படிந்ததே
அக்காதல் தாளின் கிழிசலொன்று
இப்படி
ஒரு பிறை நிலவு
ஒது துண்டு வானம்
ஒரு பிய்ந்த இதழ்
ஒரு நசிந்த கிண்ணம்
ஒரு கிழிசல் தாள்
கறள் கட்டியும் உருக்குலைந்தும்
இறைபடும் சேற்றிடை துரத்தியபடி
இதையெல்லாம் பொறுக்கியெடுக்கவும்
அடையாளம் கண்டு அசைபோடவும்
எனக்கு இலகுவாய் வாய்க்கையில்
வராது போயிற்று காண்
புள்ளியாய் நெருடிய உந்தன் முகம்
புள்ளிகள் தேடி அவிந்து போன நீ
அமைதி காணாது போனதாம்
அகதி நாங்களும் ஆ னோமாம்
இனிமே போகவும் ஏலாதாம்
இங்கே கதையும் முடிந்ததாம்
இல்லை இல்லை இல்லையாம்
இன்னும் கதை வேணுமாம்
ஒன்றாய் வீட்ட போவமாம்
அப்பா என்ர செல்லமாம்
3
பிடிபட்ட தாளலயம்
விடாப்பிடியில் குழந்தை
குட்டிக்கதையையும் நீட்டும்
கெட்டித்தனம் அதன் கண்ணில்
ஆறாத மனம் போலும்
என்னையே வெறிக்கின்றது
நிரையோ மெல்ல ஊர்கின்றது
இரைச்சல் காதைப் பிளக்கின்றது
குழந்தை தோளில் சா¢கின்றது
நெஞ்சுள் ஏதோ குமைகின்றது
நீங்க அகதியானது உங்களுக்குச் சா¢
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி....
மடிபற்றி எழுகின்றது கேள்வி
ஓ....என் குழந்தைகளே....
குளிர்காலம், 1993
22. நூலக முன்றிலில்
1
வி¡¢ந்த கல் பதித்த முன்றிலில்
சப்பை மூக்கு கூர்நாசி
தடித்தசொண்டு உட்குவிந்த வாய்
சிறுத்தவிழிகள் நீலக்கண்கள்
உப்பியகன்னம் ஒட்டியசொக்கு
இரட்டைநாடி ஓரல்முகம் எனவாய்
வி¡¢யும் கலைக்களஞ்சியம்
நா¡¢ தொடும் குழலைப் பின்னிவிட்டுள்ளனர்
அந்தீஸ் மலையிருந்து
இறங்கி வந்த கலைஞர்
அவர் சொல்லக்கூடும்
தாயகம் நாம் துறந்தவா¢ல்லை
எம் தேசம்தான் தொலைந்து போனது
மாயா இன்கா எனத் தொல்கதையாய்
நான் இதைக்கொள்வேனா
என்பாடல் பொருளென்று...?
3
கிட்டார் நரம்புகளில்
விரல் நுனியின் கட்டறுப்பில்
உயிர்பெற்றழுகின்றான்
அழுகைக்குரலாளன் பொப் மார்லி
சுருண்ட மயிரை வா¡¢ நிமிர்த்தி
பயற்றங்காய் அளவில்
பின்னலிட்ட சுருள்கள்
காற்றின் வெளியில் திமிறுகின்றன
றேகே இசையில் வடிகின்றது குருதி
பொப்பல்லோ சோல்ஜர்...
ஆபி¡¢க்காவிலிருந்து
கட்டி இழுத்துவரப்பட்டாய் நீ
கண்ணீர்க் கதறலில்
ஆபி¡¢க்கர் இதைச் சொல்லலாம்
நான் சொல்லத் துணிவேனா
என் பாடலும் இதுதானென்று....?
4
தடித்த உதடுகளால்
சொற்களை விசிறுகிறான்
குந்தொன்றில் நின்றபடி ஒரு கறுவல்
...என்னைப் போய்விடு என்கிறாய்
அதுவும் சா¢தான்
நான் வந்ததும் தப்புத்தான்
மின்னணுத் தொலைபேசி
மின்சார விரைவூர்தி
மின்னொளிக் குளிப்பில் நகரம்
கண்வெட்டும் நேரத்திடை கா¡¢யங்கள்
உன்னிடத்திருந்தது வந்துவிட்டேன்
மன்னித்துக் கொள்
என்னிடத்தே
மின்னொளி மின்னூர்தி
தொலைபேசி தொலைக்காட்சி
ஏன்
அறிவியல் எதுவுமே இருந்ததில்லை
அப்படித்தான்...!
பின்னேன்
காட்டுவிலங்காண்டியான என்னிடம்
முன்னம் நீ வந்தாய்
எந்தன் கோவணத்துடன்
உயிர்க்குலையையும்
உருவிவந்தாய்....?
காதைப் பொத்தியறைந்தாற்போல்
நூலகத் தொடர்மாடியை உலுக்கியும்
கண்ணாடித் தடுப்புச் சுவா¢ல்
மோதி எதிரொலித்தும்
காற்றில் பிதுங்குகின்றன சொற்கள்
தேசங்கள் கடந்து உலகத்தை அளந்து
அடிமுடி அறிந்த வல்லமையாலே
ஆத்மாக்கள் புசித்து மகாத்மாக்களாகி
உண்ணவும் உடுக்கவும் உறையவுமான
ஆதி உயி¡¢ன டைனோசர்களின்
சாம்பலில் உயிர்த்து உலவிடுமிந்த
புதிய உலக கோட்பாட்டாளரே
வாழ்க நீவிர்!
உங்கள் பாத திருவடி போற்றி
பாடல்கள் புனைந்து
ஒருவெண்கொற்றக் குடைநிழலில்
இவ்வுலகாள் வேந்தன் வாழியவே" என்று
ஒழுங்காய் கோட்பாடாய் கடப்பாடாய்
நிமிர்ந்து இசைப்பீர்
ரொபோக்களாய்
ஆணைகளேற்று
என்றென்றைக்குமாய்
அதிசயம் வளரும்
இலையுதிர் காலம், 1994.
24. கோடை
என்னைப் பார்
என் ஒளிர் மஞ்சள் அழகைப் பார்
உமிழும் வெம்மை தகிப்பைப் பார்
உறைந்த உலகின் சிலிர்ப்பைப் பார்
முடிந்தால் என்னைச் சுகித்துப் பார்
எனவாய் என்தன் சுயம் சீண்டி
வலுச்சண்டைக்கு அறைகூவும்
இந்தக் கோடை.
போதாதற்கு
தன்னை எழுதென்றும் அடம் பிடிக்கும்
தான் வரும்போதெல்லாம்
நீள்கின்ற பகலையும்
கூடவே நெடிய விடுமுறையையும்
அழைத்து வந்திடும் கோடை.
உச்சி வெயிலை உயர்த்திப்பிடித்தபடி
உலாவரும் இக்கோடையுடன்
பொருதும் பலம் எனக்கில்லையாதலால்
அழலும் வெறுப்பும்
அதன் மீதான சினமும் மீதூர
பல்லைக்கடித்தபடி வெறித்திருப்பேன்.
தாயகம் நீங்கிய என் சுயம் சீண்டும்
ஆறாவது கோடை இது.
அசைவேனா நான்
பாசாங்கு காட்டும் இக்கோடையின்
பசப்பல்களுக்கு...
கண்கூசும் ஒளியின் பிரகாசப்பரவலால்
சிற்சில அழுக்குகள் கறைகள் நிழல்களை
வெளித்தொ¢யாதபடிக்கு
தன்னுக்குள் அமுக்கி கொள்வது போலவே
குளிர்வலையச் சமூகத்தின்
ஏற்றமும் இறக்கமும் பிளவுண்ட வெளிகளும்
சமன் செய்தாற்போல் காட்டும்
கோடை தன்நாட்களில்.
வாகனம் தழும்ப தழும்ப பொருட்களை ஏற்றி
தார்ப்பாயினால் சுற்றிக்கட்டி
தங்கள் குஞ்சுகுருமான்களை வாகனத்துள்
அடைத்தபடி
ஊர்ப்பயணம் கிளம்புகிறார்கள்
விடைகொடுத்து அனுப்புகிறேன்
என்ன களிப்பு? அவர்கள், பாக்கியவான்கள்
பொறாமை கொப்பளிக்கிறது என்னுள்
இதற்கு முன்னான கோடையிலும்
அவர்கள் பயணம் போனார்கள்
நாங்கள் பறவையைப் போன்றவர்
என இசைத்தபடியே
ஜித்தோன்களின் காரவன்களும்
பயணமாகி நாளாயிற்று.
தாயகம் இல்லாப்பயணம் அவர்களது
ஓராயிரமாண்டு ஓடித்தாண்டியும்
முடிவற்ற நாடோடிப்பயணம் அவர் வாழ்வு.
கோடை எல்லோரையும் அருட்டிவிட
அயலெல்லாம் மெல்ல
வெறிச்சோடிப் போகின்றது.
தனித்துப்போகும் நான்
என்னையே தேற்ற முயல்கின்றேன்
நெஞ்சடியில் இருந்து
பீறிட்டெழுகின்றது ஒருகாலம்
ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே"
இதுவும் கோடைதான்
கூடிக்குலாவிடும் விழாக்க்காலந்தான்
எல்லாக்காலமும் எங்கோ ஒரு தொலைவில்
ஆழ்மனப்படிவிலும் உயிர்த்தடம் அழிய
கோடை எறிக்க
நீர்வற்றிப் போகும் ஏ¡¢த்திடலிடை
துடிதுடித்துழலும் மீன்கிளைகளென
என்சனம் மெல்ல அழிந்துபடுவதாய்
புலம்பும் உள்மனம்.
இல்லை அழைப்பார் யாருமில்லை
மண்டைக்குள் நரம்புகள் முறுகி திருகி
அறுந்துவிடப் போகிறது போலும்
அறட்டும்
மரத்துப் போயிற்றென்றால்
இடம் காலம் அற்று சொரணை கெட்டு
ஒளிபெற்று விடலாம்
அல்லது போனால்
பெருங்காயம் வறுத்த சட்டியென
மண்மணம் மாறாமல் அல்லாடி
வேக்காட்டில் வறுபட்டபடியே
ஒண்டிக் கொண்ட இடமெல்லாம்
தன்தேசமெனக் கொள்ளும்
எம்மவர் மூடத்தனம் பற்றியும்
அதனையவர்கள் நிறுவிக்காட்டும்
வெட்கம் கெட்ட சாகசம் பற்றியும்
நினைத்து நினைத்து வதையுற நோ¢டும்
இப்படி....
5
அறைக்குள் மண்டும் சிகரெட் புகையென
மூட்டத்துள் மலைத்தொடர் தொலைவில்
சூ¡¢ய தகிப்பிற்கு நிழல்தரும் நிறத்தில்
பார்வை முறியும் வான விளிம்பாயும்
இரவாடை மாற்றும் அந்தப்புரமாயும்
மடிந்தெழும் அலையாய் அடுக்காயும்
ஒன்றுக்குள் ஒன்றாய் நீளப்படிந்தும்
முலையென கூம்பியும் குழிந்தும்
வி¡¢யும் சித்தா¢ப்பின் முடிச்சுகளை
அவிழ்த்துப் பார்ப்பதில்தான்
ஆற்றுப்படுத்த முடிகிறது மனத்தை
வெயில் தாளாத இம் மதியப் பொழுதில்...
கோடை, 1994.
26. கனவின் மீதி.....
அம்மாவென
குழந்தை திடுக்கிட்டழுதது
கனவெனப்பட்டது.
மிச்சமென்ன சொல்லுங்கப்பா
மிச்சமென்னப்பா....?
நுளம்பின் ¡£ங்கா¢ப்பில்
குழந்தையின் சிணுக்கம்
காதைக் குடைகின்றது.
பாருங்கள்
நான் மாட்டிக்கொண்ட நேரத்தை
வெறிச்சென்ற தெருக்களினதும்
தெருவோர கட்டிடங்களினதும்
ஆசுவாச பெருமூச்சை
நெட்டிமுறிப்பை
ஏன் விசும்பலையும் கூட
செவிப்பறையால் உள்வாங்கியபடி
தாண்டித் தாண்டி ஓடிவந்து
படுக்கையில் விழுந்தால்
கொக்கி போடுகிறது குழந்தை.
இப்போ எதை நான் சொல்வதாம்
அடி நுனி பு¡¢யாது
இந்தக் குழந்தைகளிடம்
மாட்டிக்கொண்டாலே இப்படித்தான்
திக்குமுக்காடிப் போகின்றது அறிவு.
குளிர் வாட்டி எடுக்கும்
பின்னிரவுப் பொழுது
உணவகத்தில் கையைக் காலை
அடிச்ச களை
கண்ணுறங்கும் அசதி...
அப்பா நாங்க எங்க
பயணம் போறம்?
வீச்சா மேலெழும்பிற்று பிளேன்
தேடித் தேடிப் பார்த்தன்
உங்களைக் காணவில்லையே
நான் பயந்திட்டன்
ஏனப்பா முழிப்பு வந்தது
மிச்சமென்னப்பா
எங்கேயப்பா போனனீங்க
சொல்லுங்கப்பா...
அப்பா...பா...
சுள்ளென குண்டியிலொன்று
அல்லது
உயர்த்திய தொனியிலொரு சொல்
இது போதும் குழந்தை அடங்க
நான் கொஞ்சம் கண்ணயர
வேண்டாம் அது
பெருவிரலைச் சூப்பி
கதிர்சேர்க்க தலைமயிரைச் சுருட்டி
என் வாய்ச்சொற்களுக்காய்
அகலத் திறந்திருக்கும்
சிறு விழிகள் இரண்டிலும்
சுடரும் தீ
இருட்டிலும்....
நான்தான் சொன்னேன் போலும்
வீடுவிட்டு வந்த பயணம்
மீண்டும் போக வேணும்தானே
பிளேன் பறக்க வேண்டுமென்றால்
உந்தி வீச்சா எழும்பும்தானே
வானில் மூட்டம் படிந்திருந்தால்
பயணம் தடைப்படும்தானே
கண்முழிப்பும் வரும்தானே
இன்னொருக்கா புறப்படலாம்
இப்போ நீ கண்ணுறங்கு.
அப்பா எங்க போனீங்க
அதை இன்னும் சொல்லலையே
அதுதானே அதுதானே
நான் எங்க தொலைந்து போனேன்
நானாய்த் தான் தொலைந்தேனா?
உருவற்றுப் போனேனா?
என்னை யாரும் தொலைத்தாரா?
மாயம் என்ன நிகழ்ந்தது
நான் எங்கே?
நான் எங்கே?
எங்கே நான்?
என்னங்க
குழந்தைகளுக்கு நா¢விரட்டுகிற மாதி¡¢
சுழிக்கிறீங்க சி¡¢க்கிறீங்க
கனாக் கண்டீங்களா...?
என்ன நானா?
கனவா?
அப்படியானால் மீதி...?
கோடை, 1994, பிரான்ஸ்
27. முளைப்பாய்
சப்த நாடிகளும்
ஒடுங்கித்தான் போனது
எனக்கு.
எனது இளநண்பனே
ஆசைத்தம்பியே
மெட்டிட்டு பாட்டொன்று
கட்டி இசைக்கு முன்னம்
இவ்வாறாய் உறைந்ததோ
உன் துடிப்பு.
என்னைப் போன்றே
உன் எழுத்தில்
மையல் கொண்டு
காதல் வயமாகி நின்ற
பாடல் மறந்த பலா¢டத்தும்
இசை நுரைத்துத் ததும்புகையில்
கொடிதடா கொடிது
உன் மரணம்.
போய்விட்டாய் பார்
இன்னுந்தான்
நம்ப முடியவில்லை.
ஆலையில்லா ஊ¡¢ல்
இலுப்பைப்பூ சர்க்கரையாய்
விலைப்பட்ட வேளையிலே
கனன்றதே உன்னுள்ளும்
ஓர் சூ¡¢யன்.
முரண்பாடு அரசியலிலா?
விட்டுவிடுங்கள்
இலக்கியம்...
நாம் செய்யலாம் அண்ணன்'
ஓராண்டின் முன்னர்தான்
உன்னை நான் கண்டுகொண்டேன்.
ஒரு சிறு மெழுகுவர்த்தியாய்
அது போதும் என்றே
சிறுத்திருந்த எந்தன் தீ
உன்னிடத்தே அது
நெருப்பென மூண்டொ¢ய
நான் கண்டேன்.
எப்படிப் பற்றிற்று காண்
நம் காதல்.
எழுத்தாளனாய் நீ
இதழாளனாய் நீ
கலையாளனாய் நீ
செயலாளனாய் நீ
எந்தக் கண் பட்டதோ
எல்லாமே ஒரு மின்வெட்டாய்
என் இளநண்பனே
சதைப் பிண்டத்தைத்தான்
குண்டெட்டும்,
உயிர்த்தலத்தையல்ல'.
உனைத் தொட்டு
பிரகடனம் செய்யும்
வலிமையும் எனக்கில்லை
ஏனெனில் நான் சாதாரணன்
முளைப்பதென்பது
இயல்விளைவு
பலர் முளைப்பர்
அவர்களில் உனைக்காண்பேன்
காதல்வயப்படுவேன்.
28. வரும் வழியில்
1.
உள்ளங் கைக்குள் உலகம்
எல்லாமும் கணப்பொழுதில்
எத்தகைய பொய் இது.
எப்போதேனும் சந்திக்கலாம்
என்றிருந்த நண்பர்கள்
நினைவுச் சுழற்சிக்குள்
கனவுப் பொருளாகிப் போயினர்.
சந்திக்காமலேயே
எனக்கும் அவர்க்குமான
இடைப்பட்ட பயணமோ
உயிர் துறக்கும் தூரம்
யார் அறிவார் இதனை?
கிரேக்கக் கடலில் மூழ்கியும்,
ஹங்கேரி நெடுஞ்சாலையில்
பாரவண்டியுள் மூச்சு முட்டியும்,
பாதிவழியில் வழிந்தது
அவர் கனவின் மீதி...!
2
முகில்!
விமான நிலையம் வரையில்
வழியனுப்ப வந்திருந்தாய்
போகுமிடத்தில் பத்திரமாய் இரு
நலமாக நாளை நீ திரும்பி வா"
என்றுதானே சொன்னாய்.
இங்கு நான் வந்த பின்பு
திரும்பும் நாள் குறித்துள்ளேன்
என்றதை நீ நம்பாமலா
நானிருக்கும் இடம் நாடிப் புறப்பட்டாய்?
உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கியது
அகதிகளுக்கல்ல மச்சான்!
கிரேக்க கடல் மடியில்
குளிரில் நீ விறைக்கையில்
என்னை நீ நினைத்தாயோ!
உன் பெயரை நான்
பத்திரிகையில்தான் கண்ணுற்றேன்
கொப்பளித்து பொருமியது,
வெடிக்காமல் போயிற்று நெஞ்சு!
3
மகேஷ்!
இந்தப் பெயர் உனக்கு
நான்தான் சூட்டியிருக்கக்கூடும்
அப்பெயர் என்னை ஈர்த்ததில்லை
அக்கரைப்பற்று வினாயகமூர்த்திதான்
என் நினைவில் வருகிறான்.
கால் எலும்பின் மச்சைவரை
ஆறாக்காயம் பட்டிருந்தும்
சிறையிருந்து மீண்ட நீ
களப்பணியில் முன்நின்றாய்.
நாம் தோழமை கண்ட மையம்
உளுத்துப்போனதால்
தனியராய் கலைந்து போனோம்.
அப்போதோ இல்லையேல்
அதற்கும் முன்போகூட
மயிரிழையில் பலமுறை
மரணத்தை எட்டி உதைத்திருந்தாய்
நான் அறிவேன்.
ஆனால் ஆறாயிரம் மைல் தொலைவில்
அதன் பொறியில் அகப்பட்டாய் பார்
ஆச்சரியந்தான்.
மாயமான் வேட்டையில்
உன்னைப்போல் எத்தனையோபேர்
தோழா!
ஹங்கேரி நெடுஞ்சாலையில்
பலருடன் மூச்சிழந்தாய்
உலுக்கிவிட்டாய்
நான் பனிப்பாளமாகாமல்
உயிர்த்தேன்
பணியின் திசையறிவித்தாய்.
29. அழைப்பு
யாரழைத்தார் என்னை?
எங்கிருந்து வருகின்றது
உயிர்யாசிக்கும் இந்த அழைப்பு
குரல்வளை நசிபட பிசிறும் ஈனத்திடை
அக்குரல் எதுவென
எப்படி அடையாளம் கொள்வேன்
தலைகள் திரண்ட கடலிடை
யாரென்றுதான் தேடுவேன்
மூன்றாம் சாமத்தில்தான் கண்விழித்தேன்
பனிப்பாலையில்தான் எனது இருப்பு
புகாரிருளில் குளிர்வெளியில் விறைத்த நான்
வேர்த்து விதிர்விதிர்த்தேன்
நாடி நாளங்கள் புடைத்து அறுபட
நெஞ்சக்கூட்டுக்குள் ஒடுங்குகின்றது ஆவி
ஐயகோ...!
எனது மொழியில்தான் அழைக்கப்பட்டேனா?
அல்லது அழைப்பை
எனது மொழியால் புரிந்துகொண்டேனா?
நெல்லி
இலைக்காம்புகளை
ஒன்றொன்றாய் நீ பொறுக்கி
மடக்கென்று மொக்கொடிக்கும்
மெல்லொலியிலும்
கேட்டது பார்
நம் சுற்றமெல்லாம்
உயிரொடியும் ஓசை
அறியாயா?
அறிந்தோமா நாம்
ஊரொடிந்து
ஊரோடிணைந்த
உறவொடிந்து
உறவின் ஊற்றான
குடும்ப அலகொடிந்து
உதிர்ந்த கனிகளாய்
வேறாகி வேற்றாளாகி
அந்நியமாகும் கதை
காலவெளிதனில் கரைந்தது
ஒரு பத்தாண்டானாலும்
நெல்லி உண்ட அவ்வையின்
பழங்கதையைச்
சிதறி உருண்டோடும்
நம் வயிற்றுக் கனிகளுக்கு
ஒப்புவிக்கும் போதினிலே
உயிர் பின்னிக் கிடக்குமெம்
காதல்தனை இசைக்கின்றது
கண் நிறைத்து வீற்றிருக்கும்
நெல்லி
சித்திரை, 1998
கி. பி. அரவிந்தன்
ஈழத்தமிழர் பிரச்சினையில் ஈடுபாடுள்ள தமிழகத் தமிழர்களிடையே பரவலாக அறிமுகமான பெயர் யுசுந்தர்ரு. அந்தச்
சுந்தரின் சொந்தப்பெயர் கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ். தேசிய இன விடுதலைப்போரைத் தலைநிமிர்ந்து நடத்தும் அதே
நேரத்தில் சமுதாய ஏற்றத்தாழ்வும் வைதீக முரண்பாடுகளும் முற்றாக நீங்க வேண்டும் என்பதிற் செயற்பற்று மிக்கவர்.
பதினேழு வயதுடைய இளம்பருவத்திலேயே வீட்டைத் துறந்து போராட்டத்தில் மூழ்கியவர். முப்பத்தாறு வயதில்
மீண்டும் வீடு திரும்பினார்.
பதினான்கு வயதில் பெரியாரின் கருத்துக்களில் மனம் பதித்தவர். இறுக்கமிகு கத்தோலிக்க மதகுரு ஏற்படுத்திய
மனக்கசப்பால் வழிபாட்டைத் துறந்தார்; மதத்தையும் துறந்தார்; பெரியாரியத்தையும் சமூக மாற்றத்தை வழிநடத்தும்
மாற்றுச்சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு தம் வாழ்க்கையிலும் பின்பற்றுபவர்.
கத்தோலிக்க மதவழிக்குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் சைவமத வழிக்குடும்பத்தைச் சேர்ந்த
சுமத்திரியை, தாலி அணிதல் போன்ற சடங்குகளை மறுத்து திருமணம் செய்து கொண்டவர்.
இவர்களுடைய குடும்ப நிறுவனத்தில் மதத்தை நுழைய அனுமதித்ததில்லை. சாதி, மதம் கடந்த நண்பர்களையே
உறவு வட்டமாக்கிக் கொண்டவர்.
தற்போது தீவிர அரசியல் தவிர்த்த சமூகப் பொறுப்புணர்வு மிக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
புலம்பெயர் வாழ்வில் 'மௌனம்' காலாண்டிதழின் தொகுப்பாளர்; 'ஈழமுரசு' வார இதழ் ஆசிரியர் குழுவிற் பணியாற்றியவர்.
இயற்பெயர் கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்.
இலக்கியப்பெயர் கி. பி. அரவிந்தன்.
'கனவின் மீதி', இவரின் மூன்றாவது கவிதைத்தொகுப்பு. முதலிரண்டு தொகுப்புக்கள்: 'இனியரு வைகறை', 'முகம் கொள்'.
தற்போது குடும்பத்தோடு பிரான்சில் வசித்து வருகின்றார்.
This page was first put up on Jan 29, 2001
Please send your comments and corrections to the Project _Madurai