Tamil Works of Contemporary Sri Lankan Authors - V maraNattuL vAzvOm (A collection of 82 poems by 31 contemporary authors) in Tamil script, unicode/utf-8 format
மரணத்துள் வாழ்வோம் (31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள்)
Etext Preparation : Mr. Rathina Iyer Padmanabha Iyer, London, UK and Dr. N. Kannan, Kiel, Germany Proof-reading: K. Ramanitharan & Anshiya S. Ahamad, New Orleans, LA, USA Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
மரணத்துள் வாழ்வோம் (31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள்
Source:
maraNattuL vAzvOm (A collection of 82 poems by 31 Sri Lankan authors, compiled by: U. Ceran, A. Yesuraja, I. Padmanaba Iyer & Mayilangkoodalur P. Natarajan) Published by: Vidiyal patippakam, 3, Mariamman Koil Street, Uppilippaalayam, Coimbatore -641 015, India Copyright : Poets. ---- First Edition : Nov.1985, ------- Second Edition : Dec.1996)
தொகுப்பாளர்: உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர் & மயிலங்கூடலு¡ர் பி.நடராசன் வெளியீடு : விடியல் பதிப்பகம், 3, மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிப்பாளையம், கோவை 641 015 )
கவிஞர்களும் கவிதைகளும்
முருகையன்: வாயடைத்துப் போனோம், வேலியும் காவலும் (பக்.15-18) சோ.பத்மநாதன்: எங்கள் நகர் ஏன் எரியுண்டு போகிறது? (பக்.19) மு.பொன்னம்பலம்: வீரத்தைத் தூக்கு, முன்னிரவின் மோகனம், அதிகாரம் புரியாத சமன்பாடு, காலனின் கடைவிரிப்பு (பக்.20-25) எம்.ஏ.நு·மான்: நேற்றைய மாலையும் இன்றைய காலையும், துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும் வரலாற்றுக் குருடர், புத்தா¢ன் படுகொலை (பக்.26-31) சண்முகம் சிவலிங்கம்: இன்று இல்லெங்கிலும் நாளை, பாடாத பாடல்கள் (பக்.32-33) தா.இராமலிங்கம: சாவிளைச்சல், நெஞ்சு பதறுது, அகால மரணங்கள், கருத்து ஒன்றுபடுவோம், கொடியேற்றம் (பக்.34-42) சி.சிவசேகரம்: 52, ஹிற்லர் டயறிகள் (பக்.43-44) அ.யேசுராசா:கல்லுகளும் அலைகளும், சூழலின் யதார்த்தம், புதிய சப்பாத்தின்கீழ் உன்னுடையவும் கதி, எனது வீடு (பக்.45-50) வ.ஜ.ச.¦ஐயபாலன்: உயிர்த்தெழுந்த நாட்கள் (பக்.51-61) சேரன்: ராணுவ முகாமிலிருந்து கடிதங்கள், எல்லாவற்றையும் மறந்துவிடலாம் அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றபோது, யமன், உயிர்ப்பு (பக்.62-76) சு.வில்வரத்தினம்: அகங்களும் முகங்களும், விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும் எங்கள் வீதியை எமக்கென மீட்போம், தூது, புத்தா¢ன் மெளனம் எடுத்த பேச்சுக் குரல் (பக்.77-91) மு.புஷ்பராஜன் : இக் கணத்தில் வாழ்ந்துவிடு, 81 மே 31 இரவு, பலஸ்தீனமும் எமது மண்ணும் பீனிக்ஸ் (பக்.92-96) சாருமதி: சூரியனும் என்னைப் பார்த்துச் சொன்னது (பக்.97-99) ஆதவன் : ஆதரே...!, தத்துவத்தின் தொடக்கம், உனக்கு மட்டுமல்ல இருட்டு (பக்.100-103) ஊர்வசி : இடையில் ஒரு நாள், அவர்களுடைய இரவு, சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம் காத்திருப்பு எதற்கு? நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு? (பக்.104-112) ஹம்சத்வனி : வெளவால்கள், புத்தனின் நிர்வாணம், இறந்த காலங்களும் நிகழ்காலமும் சோலையும் கூவலும் (பக்.113-116) நா.சபேசன் :காலம், ஒரு சினேகிதிக்கு எழுதியது, பதில், பொபி ஸான்ட்ஸின் மரணம் (பக்.117-121) இளவாலை : விஐயேந்திரன், நாளை நாளும் நேற்றைய நேற்றும், சுதந்திர நாட்டின் பிர¨ஐகள் ஆண்ட பரம்பரைக்கு, பாதியாய் உலகின் பா¢மாணம் (பக்.122-126) பாலசூரியன் அமைதி குலைந்த நாட்கள் (பக்.127) மைத்ரேயி :கல்லறை நெருஞ்சிகள், காத்திருத்தல், முகம் மறுக்கப்பட்டவர்கள் (பக்.128-132) ஒளவை :சொல்லாமற் போகும் புதல்வர்கள் (பக்.133) துஷ்யந்தனஅவர்களுக்குத் தொ¢யாது, காலை பற்றிய கவிதை (பக்.134-135) ரஞ்சகுமார் :நான் அனுமதிப்பதேயில்லை (பக்.136-138)
மா.சித்திவினாயகம்பிள்ளை : கடலும் கரையும் (பக்.139-140) கீதப்பிரியன் : எல்லாம் தொ¢ந்தவர்கள், உழவு நடக்காத நிலம் (பக்.141-142) உதயன்: நாம் இப்போதும் எப்போதும் போலவே, பார்த்துக் கொண்டிருக்கிறோம் (பக்.143-148) செழியன் :பயிற்சி முகாமுக்கு ஒரு கடிதம், மரணம், பெர்லினுக்கு ஒரு கடிதம் (பக்.149-156) நிலாந்தன் :கடலம்மா (பக்.157) வண்ணச்சிறகு : விழித்திருக்கும் மரங்கள், சென்று வருகிறேன் ¦ஐன்மபூமியே, விடியல் (பக்.158-163) அருள் : தோழி உனக்குத்தான் (பக்.164-165) விமல் : பாப்பாக்களின் பிரகடனம் (பக்.166-172)
மரணத்துள் வாழ்வோம் முன்னுரை
எமது நிகழ்காலம் கொடூரமான இராணுவ அடக்குமுறைகளின் உச்சங்களையும், அவற்றுக்கெதிராக பல்வேறு வடிவங்களிலும் வெடித்தெழும் போராட்டங்களையும் வரலாறாக்குகிறது.
அநீதி, துயரம், அறிவும் நியாயமும் கூடச் சுமந்து கொள்ளமுடியாத அளவுக்குப் படுகொலைகள், தங்களுடைய சொந்த மண்ணிலிருந்து வேர்கள் பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாய் வெளியேறுகிற மக்கள், எல்லைப்புறங்களில் எரிந்து கொண்டிருக்கும் எமது வீடுகள், வயல்களிலிருந்து இன்னும் அடங்காத புகை, இன்னும் அடங்காத நெருப்பு - இவையே 'சூழலின் யதார்த்தம்'.
'மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள், மனிதனுக்குரிய கெளரவம், வாழ்க்கைக்கான உத்தரவாதம்' - இவற்றை வெறும் வார்த்தைகளாலும் வெற்று ஒப்பந்தங்களாலும் உத்தரவாதம் செய்ய முடியாது என்ற கசந்துபோன அரசியல் வரலாற்றின் தர்க்கா£தியான வளர்ச்சியில் இன்று நமது விடுதலைக் குரல்கள் கண்ணி வெடிகளாகவும் கவிதைக் கண்ணிகளாகவும் ஈழம் பெறுகிற சூழலில் வாழ்கிறோம். இந்தச் சூழல் குறிப்பாக கடந்த பதினைந்து வருடங்களாக அரும்பி வளர்ந்த ஒரு வேகம் மிக்க அரசியல் நெறிப்பாட்டின் ஓர் உச்சநிலை எனலாம். இது எமது மக்களை அவர்களின் சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் வாழ்க்கை அனுபவங்கள் என்ற தளத்திலும் இதுவரை காலம் எதிர்கொண்டிராத வாழ்நிலைகளுக்கு முகங் கொடுக்கப் பண்ணியுள்ளது. அரச பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும் முகங்களைச் சிதைக்க முயன்ற போதெல்லாம் மரணத்துள் வாழும் உயிர்ப்பின் மூலம் புடமிடப்பட்ட முகங்களை எமது மக்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் என்ற வகையில் எமது போராட்டம், தேசத்தை அதனுடைய பெளதீக அம்சங்களில் மட்டுமே மீட்பது என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக, எமது மொழி, எமது நிலம், எமது கலைகள், இலக்கியம், கலாச்சாரம் இவையனைத்தினதும் சுதந்திரமான விகசிப்பை உருவாக்கும் ஒரு போராட்டமாகும். அந்நிய ஒடுக்குமுறை என்பது எமக்கென்றொரு பலமான பாரம்பரிய செழுமைமிக்க கலாச்சார வாழ்வு இருக்கிறவரை வெற்றி பெறவே முடியாது.
தேசிய ஒடுக்குமுறை என்பது ஒட்டுமொத்தமாக ஒரு மக்கள் திரளால் உணரப்பட்டு, விடுதலை வேட்கை பரவலாக கிளர்ந்தெழுவதற்கு முன்பாக, ஒடுக்குமுறையின் ஆரம்ப நிலைகளிலேயே 'அபாயத்தை' இனங்கண்டு கலைஞர்கள் குரலெழுப்பத் தொடங்கி விடுவதை உலகின் பல்வேறு பகுதிகளிலும் நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக, கவிஞர்கள் வருமுன் சொல்பவர்களாக இருந்துள்ளனர். ரம்பத்திலேயே வெளிக்காட்டப்படும் இத்தகைய கலாச்சாரரீதியான எதிர்ப்பே பின்னர் பல்வேறு படிகளூடாக ஆயுதப்போராட்டமாக பா¢ணாமம் பெறுகிறது. இந்தப் பா¢ணாமத்திலிருந்து மறுபடியும் கலைகளும், இலக்கியமும் புதிய எதிர்காலத்திற்கு ஒரு முன்மொழிதலை வழங்கும்.
எமது அரசியல், கலை, இலக்கிய வரலாற்றிலும் இத் தன்மையைக் காணக்கூடியதாயிருக்கிறது. தேசிய ஒடுக்குமுறையின் ஆரம்பநிலைகளில் தமிழ்மொழிக்குரிய உரிமைகள், தமிழ்மொழிப் பயன்பாடு என்பவை மறுக்கப்பட்டபோது அதற்கெதிராக கவிதைக் குரல்கள் நிறையவே எழுந்தன. மஹாகவி, முருகையன், நீலாவணன் உட்பட ஈழத்தின் அனைத்து முக்கியமான கவிஞர்களும் இவைபற்றி வலிவுடன் எழுதியுள்ளனர். தமிழ் மொழி மீதான காதல், இனப்பற்று, இனவிடுதலை என்று 'தமிழ்நிலைப்பட்ட' ஒரு வெளிப்பாடாகவே இவை இருந்தன. அந்தவகையில் தமிழகத்தின் திராவிட இயக்கப் போக்குக்குரிய உணர்வு, உணர்ச்சி அம்சங்களை இவை கொண்டிருந்தாலும் கூட வடிவச்செழுமை, சொற்செட்டு, மொழியைக் கையாளும் முறைமை, பேச்சோசைத் தன்மை போன்ற அம்சங்களில் திராவிட இயக்கப் போக்கை விட முற்றிலும் மாறுபட்ட நல்லியல்புகளில் சிலவற்றையும் இவை கொண்டிருந்தன. இது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட கருத்து அல்லத்தான் என்றாலும், இத்தகைய அம்சங்கள் வெளிப்பட்டிருந்தன என்பதைப் பதிவு செய்தல் அவசியம்.
இனவாதப் பண்புகள் 'கங்கை கொண்ட - கடாரம் வென்ற' மிதப்பில் கிறங்குதல் போன்ற அம்சங்கள் காணப்பட்டாலும் பாரபட்சம், புறக்கணிப்பு, ஒடுக்குமுறை என்பவற்றிற்கெதிரான குரல்கள் என்ற வகையில் இவை வரலாற்று முக்கியத்துவம் உடையவை.
மொழிப்பிரச்சினை என்பது தேசிய ஒடுக்குமுறை என்பதாகக் கருத்தமைவுரீதியிலும், வாழ்நிலையிலும் குணாம்சமாற்றம் பெற்ற ஓர் இடைக்காலத்தில் இத்தகைய குணாம்ச மாற்றம் கலை இலக்கியங்களில் கலாபூர்வமாகப் பதியப்படவில்லை. தமிழரசியல் கட்சி சார்ந்த கவிஞர்கள் மட்டும் 'உணர்ச்சிக்' கவிதைகளாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றிலும் வீரம், செங்களம், வாள் (கவனிக்கவும் துப்பாக்கி அல்ல), குருதி, இறப்பு என்பன இடம்பெற்றாலும், அனுபவம், வீச்சு, உண்மை அற்ற சடங்களாக இருந்தன.
இந்தத் தொகுதியிலுள்ள கவிஞர்கள் பேசும் குருதியும், போர்க்களமும், மரணமும், தியாகமும் உயிர்ப்புள்ளவை; சத்தியமானவை; வாழ்ந்து பெற்றவை. இவற்றிற் பாசாங்கும், போலித்தனமும், செயற்கையும் இல்லை. இந்தத் தர மாற்றம்தான் நமது கவிதைகளை புதியதோர் தளத்தில் விட்டுள்ளது. இந்த மாற்றம் குறிப்பாக 1975 இலிருந்தே நிகழ்கிறது. இடைக்காலத்தில் தமிழ் மொழிப் பிரச்சினை, அரச ஒடுக்குமுறை பற்றி எழுதுவது தீண்டத்தகாத தாகக் கருதப்பட்டது. அந்தக் காலத்தில் பாரம்பரிய இடதுசாரி எழுத்தாளர்கள், விமர்சகர்கள் தேசிய ஜக்கியம் என்ற பெயா¢ல் இவ் வெளிப்பாடுகளை எல்லாத் தளங்களிலும் புறக்கணித்தனர்.
ஒடுக்குமுறையைக் கலாச்சாரரீதியாக எதிர்த்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். இதுகூட பாரம்பரிய இடதுசாரி கலை இலக்கியகாரரால் கணக்கில் எடுக்கப்படவில்லை. 'அலை' சஞ்சிகையும் பிறகு 'புதுசு' சஞ்சிகையுமே கவிதையில் இந்தத் தரமாற்றத்தை அரசியல்ரீதியாகவும், கலாபூர்வமாகவும் உருவாக்கி வளர்த்தெடுத்தவை.
தேசிய ஒடுக்குமுறை பல்வேறு வழிகளிலும் ஸ்திரமாகிக் கொண்டு வருகிறபோது ஒடுக்கப்படும் மக்களுக்கு தமது கலைகள், கலாச்சாரம், நிலம் எல்லாவற்றிலும் மிகுந்த இறுக்கமான பிணைப்புகள் வலிமையுறுகின்றன. ஒடுக்குமுறைக்கு எதிராகத் தேசிய விடுதலைப் போராட்டம் கிளர்ந்தெழுகையில் அக் கிளர்ச்சி தேசத்தின் பல்வேறு அம்சங்களையும் தழுவியதமாகவே இருக்கவேண்டும்.
மேற்குலகின் அடிமைத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்ட பிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களும் சா¢, இன்று வெள்ளை நிறவெறித் தென்னாபிரிக்க அரசிற்கெதிரான பிரிக்க மக்களின் போராட்டமும் சா¢, லத்தீன் அமொ¢க்க மக்களின் போராட்டமும் சா¢ தமது விடுதலைப் போராட்டத்தின் பகைப்புலமாக ஒரு தேசிய கலாச்சார விழிப்புணர்வையும், தமது பாரம்பரியச் செழுமை களிலிருந்து பெற்றுப் புதுக்கிய நவீன கலை வெளிப்பாடுகளையும் கொண்டுள்ளதைப் பார்க்கலாம்.
இவை, அந்நியப் பதிவுகளை எதிர்த்துக் கிளம்புவனளூ இருப்பிற்கெதிரான சவாலுக்குரிய எதிர்வினைகள்; ஒடுக்குமுறைக் கெதிராகத் தமது அடையாளத்தை, தமது வேர்களை, தமது ளுமையை முகத்திலறைந்து பிரகடனம் செய்வன.
நாங்களும் இத்தகையதொரு வரலாற்றுக் கட்டத்தில்தான் இருக்கிறோம். எத்தகைய கொடூரமான ஒடுக்குமுறைக்குள்ளாகவும் நம்பிக்கையினது, வாழ்வை மீட்பதன் அவசியத்தினது, எதிர்காலத்தினது, போராட்டத்தினது அழைப்புக் குரல்களை நமது கலை இலக்கியங்கள் வெளியிடுகின்றன. தடைகளையும், துயரங்களையும், தோல்விகளையும், இழப்புக்களையும் தாங்கி அப்பாற் செல்லக்கூடிய தார்மீக வலுவை இவை தருகின்றன.
தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தின் பிரதிபலிப்புகளும் தாக்கங்களும் நாடகங்களாக, வீதி நாடகங்களாக, விடுதலைப் பாடல்களாக, தெருக்கூத்தாக, விவரணத் திரைப்படங்களாக, கவிதா நிகழ்வுகளாக பல்வேறு கலை ஊடகங்களூடாக வெளிவருகின்றன. எதிர்பார்க்க முடிவதுபோலவே கவிதையில் இவற்றின் வெளிப்பாடு பல உச்சங்களை எட்டுகிறது. சுவரொட்டிகள், இறந்த போராளிகளுக்கான அஞ்சலிப் பிரசுரங்கள், துண்டுப் பிரசுரங்கள் அனைத்திலும் இன்று உயிர்த்துடிப்பு மிக்க கவிதை வா¢கள் இடம்பெறுகின்றன. அரசியல் கவிதைகளின் பரவலை பொதுவாகவே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 'அரசியல் கவிதைகள்' எனும் இந்தத் தோற்றப்பாடு இன்று ஈழத்தில் இருந்து எழுகிறபோது அது நவீன தமிழ்க் கவிதைக்கு புதுவலிமை சேர்ப்பதாக அமைகிறது.
தேசிய ஒடுக்குமுறையின் இராணுவப் பயங்கரவாதம், யுதப் போராட்டம், மரணம் இவையான இரத்தம் சிந்தும் அரசியலே இன்று எமது கவிதையின் பிரதான கூறாக அமைகிறது. இந்தவகையில் இவை தரும் சேதிகள், கிளர்த்தும் அனுபவங்கள், தொற்றவைக்கும் உணர்வுகள் தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் புதிய வாழ்நிலைகளைக் கொண்டுவருகின்றன.
'மரணத்துள் வாழ்வோம்' எனும் இந்தக் கவிதைத் தொகுப்பு எமது காலத்தை, காலங்களைக் கடந்து பதிவுசெய்கிறது.
ஒருவகையில், அரசியல் கவிதைகள் என்று நாம் பிரித்துப் பார்ப்பதுகூட காலத்தின் பகைப்புலத்தில், கலை என்ற முழுமையில் தற்காலிகமான, குறுகிய பிரிப்புத்தான். ஏனெனில் இன்றைய சமூக, அரசியல் நிலைமைகள் நாளை மாற்றமடைந்துவிடப் போகின்றன. அவை முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கலப்புச் சமூக அமைப்பில் இருந்து புதிய ஐனநாயகத்திற்காயினும் சா¢, நவ காலனித்துவத்திலிருந்து சோசலிசத்திற்காயினும் சா¢, வரலாற்று இயக்கத்தில் சமூக, அரசியல் கருத்தமைவுகளும், கட்டமைப்புகளும் மாற்றமுற்று விடும். ஆனால் இத்தகைய காலகட்டங்களில் எழுந்த கலைப் படைப்புக்கள் சமூக, அரசியல் கட்டமைப்பு மாற்றங்களையும் மீறி நிற்கும். அவை எப்போதும் நிகழ்காலத்திற்குரியதாகவே இருந்துகொண்டு இறந்தகாலத்துடனும் எதிர்காலத்துடனும் ஒரு முடிவற்ற உரையாடலைக் கொண்டிருக்கும்.
அரசியலும், நிகழ்ச்சிகளும், வரலாற்றுப் புத்தகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் புதைந்துகொள்ள, கலைப் படைப்புகள் என்றென்றைக் குமாக மக்களோடு இன்றுபோலவே வாழ்ந்து கொண்டிருக்கும்.
கலை இலக்கியங்கள் ஒரே வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சற்றிச் சுழன்று கொண்டிருந்தபோது அவற்றை சில புதிய வழிகளுக்கு ஆற்றுப்படுத்துவது என்ற அம்சத்தில் 'அரசியல் கவிதைகள்' என்ற வற்புறுத்தல் காலத்தின் தேவையென்றே நான் கருதுகிறேன். 'எமது காலத்து மனிதனின் தலைவிதி அரசியல்
மொழியிலேயே எழுதப் படுகிறது' என்ற தோமஸ் மான் (Thomas Mann) எனும் நாவலாசிரியர் எழுதியிருப்பதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமானது.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள முப்பத்தொரு கவிஞர்களும் ஒரே தரத்தினர் அல்லர். ஈழத்தின் மூத்த கவிஞர் என வழங்கப்படும் முருகையனிலிருந்து தமது முதலாவது கவிதையை இத் தொகுதியில் எழுதியிருக்கும் மிக இளம் வயதினரான ஒளவை, கீதப்பிரியன் வரை பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களின் கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஒருவகையில் 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' (க்ரியா, சென்னை, 1984) தொகுதியின் பதினோராவது கவிஞருக்குப் பிறகு சேர்க்கப்படக்கூடிய கவிஞர்கள் இத் தொகுதியில் உள்ளனர் என்றும் சொல்லலாம்.
இந்தத் தொகுதிக்குரிய கவிதைகளைத் தொ¢வுசெய்கையில் ஓர் இறுக்கமான, சீரான கவித் தரத்தைப் பேணுவது என்பது கடினமானதாகவே இருந்தது. பிரதானமாக ஈழத்துத் தமிழ்க் கவிதையின் அரசியல் பா¢மாணங்களை இயன்றவரை வெவ்வேறு தலைமுறைக் கவிஞர்களூடாக சித்தரிக்க விழைந்தமையே இத் தொகுப்பின் நோக்கம் என்பதில், கவிதைத் தொ¢வுகளைப் பொறுத்து ஓரளவு நெகிழ்ச்சி காட்டவேண்டிய தேவையும் இருந்தது.
மைத்ரேயி, ஒளவை, துஷ்யந்தன், மா.சித்திவிநாயகம்பிள்ளை, கீதப்பிரியன், உதயன், செழியன், நிலாந்தன் கியோர் எமது மிகவும் புதிய தலைமுறையின் ஆரம்பக் கவிஞர்கள். இவர்களனைவரும் வயதில் மிகவும் இளையவர்கள் என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.
தமிழ்க் கலாச்சார மரபில் கவிதை எப்பொழுதும் முக்கியமான இடத்தைப் பெற்றுவந்துள்ளது. குறித்த சில காலகட்டங்களில் கவிதை கலையாக மட்டுமன்றி வாழ்க்கை முறையாகவும் இருந்துவந்துள்ளது. சங்ககாலக் கவிதைகளிலிருந்து வள்ளுவர், கம்பர், இளங்கோ, மணிவாசகர், சித்தர்கள், பாரதி என்று ஒரு செழிப்பான கவிதைப் பாரம்பரியம் ஒன்று இன்றைய கவிதைகளுக்கு அடிநாதமாக உள்ளது. இந்தப் பாரம்பரியம் ஈழத்திலும் தமிழகத்திலும் பின்னர் வெவ்வேறு திசைகளில் கிளைபிரிந்தது என்பது முக்கியமான அம்சமாகும். (இது குறித்து விளக்கமான கட்டுரைகளுக்குப் பார்க்கவும் : 'மஹாகவியும் தமிழ்க் கவிதையும்' - சண்முகம் சிவலிங்கம், பின்னுரை, மஹாகவியின் கோடை, 1970; இருபதாம் நு¡ற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், 1979)
ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபின் தனித்துவம், தொடர்ச்சி, இன்றைய அதன் புதிய பா¢மாணங்கள் பற்றி ஏற்கனவே நு·மான், சண்முகம் சிவலிங்கம், முருகையன், செ.யோகராசா போன்றவர்கள் விரிவாக எழுதியுள்ளனர். தமிழகத்திலும் ஞானி, எஸ்.வி.ராஜதுரை, தமிழவன் போன்றவர்களால் இவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. அலங்காரமும் ஆடம்பரமும் அற்று, சொற்செட்டும் இறுக்கமும் மிக்கதான ஒரு நடையிலும், லயத்திலும் இக் கவிதைகள் வீடற்ற நிலை, நிலத்தின் மீதான பிணைப்பு, மனிதம், விடுதலை, துணிவு, வீரம் என்பவற்றைப் பேசுகின்றன. உறுதியும், மனவெழுச்சியும், கோபமும் விரவிய மொழிநடை இதற்குத் துணைபுரிகிறது. இத்தகைய உணர்வு/உணர்ச்சி நிலைகளில் கவிதை பல சந்தர்ப்பங்களில் ஒத்திசைவையும் பேணுவதை இத் தொகுப்பில் அவதானிக்கலாம்.
சிந்தனையின் ஆழமும் படைப்பு வீச்சும் ஒருங்கே இணைந்து வரும் கவிதைகளை உயர்ந்தவை என்றும், ஓசை, உணர்ச்சி சார்ந்துவரும் கவிதைகள் ஒருபடி இறங்கியவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எங்களுடைய அனுபவம் இது சா¢யல்ல என்பதையே உணர்த்துகிறது. ஏனெனில் எமது சூழலில் கவிதை மெளன வாசிப்பிற்கும் புத்திஐ£விகளுக்கும் மட்டும் என்றில்லாமல், சாதாரண மனிதனின் உள்ளத்திற்குமானதாக வெளிவரவேண்டிய அவசியம் உள்ளது. இந்தச் சமூக அமைப்பில் கலைகள், இலக்கியம் இலாப நோக்கம் கொண்ட வியாபாரக் கலைகளாகவே இடம்பெறுகின்றன. இவை 'படைப்பு' என்பதாக அல்லாமல் 'உற்பத்திகள்' என்ற தரத்திலேயே வழங்கப்படுகின்றன. எனவே, சுதந்திரமான உண்மைக் கலைப்படைப்புகளுக்கு இச் சமூக அமைப்பு எதிரானது. தன்னை இழந்து அந்நியமாக்கப்பட்டவனாக இந்தச் சமூக அமைப்பில் மனிதன் வாழ்கிறான். இவனுக்காக முதலாளித்துவம் மக்கள் ரசனை, ஐனரஞ்சகக் கலை என்ற பெயா¢ல் போலிக் கலை இலக்கியங்களைப் புனைந்து கொடுக்கிறதுளூ கனவுகளை வியாபாரம் செய்கிறது. அந்நியமாக்கப்பட்ட இத்தகைய போலிக் கலை இலக்கியங்களைப் புசிக்கின்ற மனிதனுக்கு உண்மையான கலை இலக்கியங்கள் எட்டுவதில்லை. இந் நிலையில் கவிஞனுக்கும் மக்கள் திரளுக்கும் இடையில் 'விவாகரத்து' நிகழ்ந்துவிடுகிறது. உண்மையான கவிஞன் தொடர்புகொள்ள முடியாத ஏராளம் மக்கள் இச் சமூகத்தில் உள்ளனர். இதற்காக ஒரு பகுதியினர் கவிஞனையும், வேறொரு பகுதியினர் மக்களையும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பிரச்சினை, எவ்வாறு இந்தத் தொடர்புத் தடையை நீக்குவது என்பதே.
அரசியல் எழுச்சியும் கலாச்சார விழிப்புணர்வும், இருக்கிற சூழ்நிலையில் பிரக்ஞைபூர்வமாக கலாச்சாரத் தளத்தில் இயங்குவதன் மூலம் இத் தொடர்புத் தடையைக் குறைக்கலாம் என்பது எங்களுடைய அனுபவமாக உள்ளது. கவிதையையும் பாடல்களையும் இணைப்பது, நாடகங்களில் கவிதையை இணைப்பது (இவ் இணைப்புகள் அந்தந்த ஊடகத்தின் கலைத்துவமும் தனித்துவமும் பாதிக்கப்படா வகையில் இடம்பெறல்) போன்ற வழிகளில் இது செயல்படும். கவிதைகள் அரங்கில் பின்னணி இசையுடன் நிகழ்த்தப்படுகையில் அரசியல் சார்ந்து வருவதால் கவிதையின் வாசகர்கள், ரசிகர்கள், கேட்பவர்கள் வட்டம் அகலிக்கிறது. இவ்வாறு தரமான கலை இலக்கியங்களின் வட்டங்களை அகலிக்கும் ஒரு கலாச்சார இயக்கமே இங்கு உருவாகியுள்ளது. வாய்மொழி, ஓசை, நாட்டார் வழக்கியலுக்குத் திரும்புதல் எல்லாம் ஒரு முக்கியமான அம்சமாக இங்கு இடம்பெறுகிறது.
அறிவுபூர்வமானது, உணர்வுபூர்வமானது என்ற பிரிப்புகளின்றி எஸ்ரா பவுண்ட் சொல்வதுபோல அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் உட்கலந்துவரும் படிமங்களுடன்' கூடிய கவிதைகளை இத் தொகுப்பில் காணலாம். உதாரணத்திற்கு பின்வரும் கவி வா¢களைப் பார்க்கலாம்:
இருளின் அமைதியில் வெளியில் கரைந்தேன் விழியின் மணிகளில் தீப்பொறி ஏந்தினேன்.
- (இளவாலை விஐயேந்திரன் -'பாதியாய் உலகின் பா¢மாணம்' - பக்.126)
இந்தத் தொகுதியின் முக்கியமான இன்னொரு அம்சம் இதிலுள்ள பெண் கவிஞர்கள். ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை ஆகிய மூன்று பெண் கவிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். எமது வாழ்நிலையின் பெண்நிலைப்பட்ட அனுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வருகின்றன. தமிழில் வரப்போகிற முக்கியமான பெண் கவிஞர்களை இத் தொகுதி இனங்காட்டுகிறது. தேசிய விடுதலைப் போராட்ட உணர்வு அலைகளுடன் இணைந்ததாய் 'பெண்விடுதலை' குரலும், பெண்நிலைவாதமும் வலுவடைந்துவரும் நிலையில் மேலும் பல பெண் படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.
தேசிய விடுதலைப் போராட்டத்தினுள் 'போராட்டத்துள் ஒரு போராட்டமாக' விடுதலைப் போரின் சில பிரச்சினைகள் பற்றிய விமர்சனங்களும் இக் கவிதைகள் சிலவற்றில் வருகின்றன.
சர்வதேச அரசியலுடனும், இந்து சமுத்திரப் பகுதி பூகோள அரசியலுடனும் நிபந்தனையற்றுப் பிணைக்கப்பட்டுவிட்ட எமது விடுதலைப் போராட்டம் (இதற்கு நாமும் பங்காளிகள் என்பதை மறந்துவிட முடியாது) அரைகுறைத் தீர்வுகள்மூலம், அல்லது வல்லரசுப் பின்னணிகளின் விளைவான சமரசங்கள் மூலம் பின்தள்ளப்படுகிற அபாயம் இருந்து கொண்டேயிருக்கிறது. இவ்வாறான ஒரு பின்தள்ளல் நிகழ்ந்து விட்டாலும்கூட இந்தக் கவிதைகள் காலம் காலமாக நின்று எமது துயரங்களையும், சொல்லில் மாளாத இழப்பு களையும், மரணத்துள் வாழ்ந்த கதையையும் சொல்லி உலகின் மனச்சாட்சியை அதிரவைத்துக் கொண்டேயிருக்கும். அந்த அதிர்வுகள், விடுதலைப் போரின் எத்தகைய பின்தள்ளல் களையும் வெறுப்புடன் பார்த்து கவிதா அனல் உமிழ்ந்து கொண்டேயிருக்கும். நமது விடுதலைக்கு மட்டுமல்ல தென்னாசியாவிற்கே ஒரு விடுதலைப் பொறியை அவை ஒருநாள் ஏற்றும்.
உ.சேரன் 'நீழல்' அளவெட்டி 12.10.85 *********
முருகையன்
வாயடைத்துப் போனோம்
'என் நண்பா, மெளனம் எதற்கு?' என்று கேட்டிருந்தாய். வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும். 'திக்' கென்ற மோதல் - திடுக்கிட்டுப் போனோமே!
பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற ஏற்ற வகையில் இதமான நச்செண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல் இத்தனை தீய எரிவு நடைபெறுமா?
எத்தனை தீய எரிவு -தலையுடைப்பு, குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?
சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப் பேசி இருந்த பிராணி சடக்கென்று வாரை இடுப்பாற் கழற்றி, மனங்கூசாமல் ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய் மாறிவிட்ட விந்தை மருமம் என்ன? சுர்ரென்று சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன? கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு, பிள்ளை அரிவு, பிடுங்கல், வதை புரிந்து சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
ஒன்றும் எமக்குச் சா¢யாய் விளங்கவில்லை. 'திக்'கென்ற மோதல் - திக்கிட்டுப் போனோம் நாம். வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.
(1978 / மல்லிகை)
!!!!!
வேலிக்குப் பயிர்கள் மேலே வெறுப்புத்தான் இருக்கும் என்றால் - வேலி ஏன்? காவல் ஏனோ? காவலோ வேலியாலே? - முருகையன்
வேலியும் காவலும்
1 வேலிக்குப் பயிர்கள் மேலே விருப்பமே இல்லைப் போலும்! -சோலிக்கு முடிவு காண்பம்! சுடுவம், என்று எழும்பிச் சென்று தீ வைத்து முடித்த வேலி திருப்தியை அடைந்திருக்கும் - கோபத்தைத் தீர்த்திருக்கும்.
குவிந்ததோ - பயிரின் சாம்பல்!
2 தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு; பயிர் பச்சை நீட்டமாய் நீண்டு நெருங்கி மதாளித்துச் சேட்டமாய் நிற்கிறது, செந்தளிர்ப்பாய். காய் கனிகள், பூக்கள் குலுங்கும் புளுகமுள்ள கொப்புகளைக் காட்டி நிற்கும் கண்குளிர, இன்பச் சிறு செடிகள்.
கற்கள் மலிந்த கலட்டித் தரையிலே புற்கள் படர்ந்து புலுண்டுவது தான் இந்தக் காணி நிலத்தின் இயற்கை. அதை மாற்ற என்று தீர்மானஞ் செய்த செயற் - கை வலிமையினால், கிண்டிக் கிளறி, கிணறிறைத்து நீர் பருக்கிக் கொண்டிருக்கும் செய்கை கொடுத்த பலன்களினால் தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு, மதாளிப்பு!
நீர் இறைப்புத் தீண்டாமல் நிற்கின்ற புல் நுனிகள் காய்ந்து சருகாய்க் கருகி இருந்தாலும், பூச்சி அரித்துவிட்ட பூசணியின் சாம்பல் இலை ஓட்டை பிடித்துத் துவண்டு கிடந்தாலும், நோய்பிடித்த கத்தா¢யின் நு¡றிலையில் தொண்ணு¡று சூம்பிக் குனிந்தபடி தொய்ந்து கிடந்தாலும், அங்கங்கே நல்ல அழகான பச்சை உண்டு. கண் குளிர - இன்பச் சிறு செடிகள் - தோட்டம் எங்கும்!
தோட்டமோ கொஞ்சம் செழிப்பு - மதாளிப்பு!
3 சுற்றி நின்ற வேலி சுருக்கென்று சீறிற்றாம். நட்ட நடு இரவில் - நாலுபேர் காணாத கன்னங்கா¢ இருட்டில் - காற்சட்டை போடாமல், தோட்டத்துள் வேலி நுழையத் தொடங்கியதாம். வேலி பயிரை எல்லாம் மேய என்று போயிற்றாம். மேயத் தொடங்கி விறுக்கென்று சப்பிற்றாம். மென்று மென்று தின்றதாம். மேல் இருந்த கொப்புகளை வாரி இழுத்து வளைத்து, முறித்தெறிந்து, வேரோடு வாங்கிப் பிடுங்கி மிதித்ததாம். ஓங்கி உதைத்துத் துவைத்துப் பொடியாக்கித் தீங்கு பரத்திச் சிதைத்ததாம் தோட்டத்தை. பற்றாத பச்சைப் பயிர்கள் என்றும் பாராமல், பெற்றோலை ஊற்றி நெருப்பும் கொழுத்திற்றாம். வேலி கடித்து மிதித்த பயிர்க் குப்பைகளும் வெந்து பொசுங்கிப் புதைந்து கா¢யாகி நொந்து சுருண்டு - வெறுஞ் சாம்பலாய்ப் போயினவாம்.
4 வேலை நிறுத்தமொன்றை வேலை அற்ற சண்டியர்கள் ஏவற் பேய் ஆகி இழுத்து விழுத்துதல் போல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
காலிப் பயல்கள் கடையை உடைப்பதுபோல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
காடையர்கள் நு¡லகத்திற் கைவா¢சை காட்டுதல்போல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
கொன்று தெருவிற் பிணங்கள் எறிவதுபோல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
5 வேலிக்குப் பயிர்கள் மேலே வெறுப்புத்தான் இருக்கும் என்றால் - வேலி ஏன்? காவல் ஏனோ? காவலோ வேலியாலே?
"தனக்கடாச் சங்கதியில் தலையிடுதல் வீண்; வேலை மினக்கேடு போடா, போ! வேலை எனக்கிருக்கு!"
"பாயில் தொடங்கி நு¡லகமும் பற்றி எங்கள் கோயில் கடையெல்லாம் கொளுத்தப் படலாச்சே!"
"பற்றி எரிவதுயாழ்ப் பாண நகரமல்ல பெற்ற வயிறுந்தான் பேசா திருமகனே!"
!!!!!
மு.பொன்னம்பலம்
ஜந்து துப்பாக்கிக் கொலைஞர் ஜம்பது பேரைக் கொல்ல, கழுத்தைக் கொடுத்து நிற்கும் பலிக்கடாவா மனிதர்? - மு.பொன்னம்பலம்
வீரத்தைத் தூக்கு
துப்பாக்கி தூக்கியவனைக் கண்டதும் தொடை நடுங்காதே! நீ பிறந்தது, என்றைக்கோ ஓர்நாள் சாகத்தான்; அது நிச்சயம்.
அந்த இடைவெளியில் ஆடும் ஆசைகளுக்காய் இன்னும் வாழ ஆசைப்பட்டு, துப்பாக்கி ஏந்தியவனைக் கண்டதும் - அவன் விடுதலைப் பதரானாலும் சா¢ ராணுவக் காட்டுமிராண்டி யானாலும் சா¢ தொடை நடுங்காதே!
துவக்கினால் தான் உனக்குச் சாவுவரும் என்பது என்ன நிச்சயம்? கொலைஞனின் கையில் இருக்கும் துப்பாக்கி அவனுக் கெதிராய் மாறாதென்பது என்ன நிச்சயம்? துவக்கையும் ஒரு பொருளாய்ப் பார் உனக்குப் பழக்கப்பட்ட கத்தி, பொல்லு போலவே அவையும் குணமற்றிருக்கும் பொருட்கள்ளூ நிர்குணிகள்; அவற்றுக்கு குணமேற்றுபவன் மனிதன். கொலைஞன் கையில் இருக்கும் துவக்கு மின்வெட்டுத் தாக்குதலில் உன்கை மாறாதா? கொலைஞா¢ன் துவக்குகள் விடுதலைக்காய் வேட்டு வைக்காதா? குணமேற்றுபவன் நீ!
ஆகவே, துப்பாக்கி தூக்கியவனைக் கண்டதும் தொடை நடுங்காதே! நீ உன் வீரத்தைத் தூக்கு.
உன் வீரத் தூக்கலில் எதிரி வெடவெடக்கட்டும் ஜந்து துப்பாக்கிக் கொலைஞர்* ஜம்பது பேரைக் கொல்ல, கழுத்தைக் கொடுத்து நிற்கும் பலிக்கடாவா மனிதர்? நீ உன் வீரத்தைத் தூக்கு.
உன்னில் ஒருவன் விழலாம், இருவர் விழலாம் மூவர் அல்லது நால்வர் பலியாகலாம் ஆனால் நீ தூக்கிய வீரத் திரட்சியில் கொலைஞா¢ன் கை தொடர்ந்து நீளாமல் அவர்கள் அனைவரும் பந்தாடப்படலாம். உன்னைக் கொல்வது துப்பாக்கியல்ல வாழும் ஆசையில் கிடந்தாடும் கோழைமை ஆகவே,
10.9.84 இல், கொழும்பிலிருந்து தமிழ்ப் பயணிகளை ஏற்றிவந்த பஸ் ஒன்று பூவரசங்குளத்தருகே இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு, மக்கள் கொலைசெய்யப்பட்டதன் எதிரொலி.
!!!!!
முன்னிரவின் மோகனம்
முன்னிரவு. மேற்கில் வீழும் பிறை. வீழும் பிறையோடு சிலந்திவலைபோல் இழுபட்டுக் கொண்டோடும் ஒளித்திரள். ஒடுங்கும் ஒளித்திரளின் ஓரக்கசிவில், மஞ்சள் அப்பி முகத்தைத் துடைத்துக் கொண்ட கருமோகினிபோல் மயலு¡ட்டும் புறஉலகு. இயற்கையின் மோகனம்.
ஏதோ அதன்பின் இழுபடும் அரவம். யார் மோகினியைத் தொடர்வது? யார் வருகிறார்? எந்த அரக்கன்? எங்கும் ஓர் இனம்தொ¢யாத துயா¢ன் எதிர்பார்ப்பு. எல்லாத் திசையும் அதன் வாடையின் அடைவு.
இடைக்கிடை உயிர்த்தெழும் காற்றில் தலையாட்டும் இருள்பூசிய மரக்கிளைகள், திடீரென வடக்கிலிருந்து மேலெழுந்து, தெற்குநோக்கி வந்து கொண்டிருக்கும் சுடலைக் குருவிகளின் விட்டு விட்டுக் கேட்கும் அலறல், நாயன்றின் தூரத்து ஊளை - எல்லாம் அதே துயரை உள்ளலிக்கும் பின்னணி. இயற்கை எடுத்த மோகனம் யாரைக் கொல்லும் ஆயத்தம்? தொட்டதெல்லாம் நீறாக்க நினைக்கும் பஸ்மாசுரர்கள் இன்னும் இருக்கிறார்களா அழிய?
அப்படியானால் மேற்கில் வீழும் பிறை? இன்று கூத்தன் தலைதவறி வீழினும் நாளை, மோகினியாய்ப் பொங்கியெழும் கூர்ப்புடைய எரிகோள்.
(தமிழ்ப் பகுதிகளில் மாலைவேளைகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகத் தொடங்கிய காலப் பின்னணியில் எழுந்தது)
!!!!!
அதிகாரம் புரியாத சமன்பாடு
ஐ£ப் வண்டிகள் உறும சப்பாத்துகள் ஒலிக்க மக்கள் மத்தியில் ஏந்திய ஆயுதங்களுடன் காக்கி உடை ராட்சதர்கள் போல் அவர்கள்.
அவர்கள் ஏந்தும் ஆயுத முனைகளின் மோப்பங்களுக்கு முகம் கொடுக்காது, மெளனமாய் மக்களோடு மக்களாய் இவர்கள் நீட்டிய ஆயுதங்களில் பீதியின் நிழல். மெளன ஊடாட்டத்தில் விடுதலை விரிக்கக் காத்திரக்கும் உள்வாங்கல் வீர்யத்தின் ஒளிச்சிதறல்.
அந்த ஒளிச்சிதறலில் கண்ணிமைப் புருவங்கள் போல் பேச்சற்று உள்நடுங்கும் ஆயுதப் பா¢வாரங்கள்.
அவர்களின் காக்கி முகாம்கள் கூடக் கூட இவர்களின் விடுதலைக் குகைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவர்களின் ஆயுதம் கக்கிய சன்னங்களில் இருவர் கொலையுண்ண, நால்வர் புதிதாக ஐனித்தெழும் இவர்களின் விடுதலை இனவிருத்தி பற்றி அறியாத அதிகாரம். சர்வாதிகாரம் என்பது விடுதலையை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு, தன்னை அறியாமலே அதைப் பிறப்பிக்க யோனிவாயிலில் காத்திருக்கும் மருத்துவச்சி.
சர்வாதிகாரம் சமன் விடுதலை. எத்தனைதரம் சா¢த்திரம் இதைக் கற்பித்துக் கொடுத்தாலும் அதிகார அமர்வுகளுக்கு புரிய முடியாது போய்விட்ட, மர்மச் சமன்பாடு.
(மார்க்சியம் இன்று-2)
!!!!!
தமிழ்நிலத்தில் சாவுஒரு மலிந்த சரக்கு அழிவு ஒரு விலை குறைந்தபொருள் கொத்தும், வெட்டும், கொலையும், களவும் கால் விலைக்குப் போகுது! வாருங்கள், வாருங்கள்... -மு.பொன்னம்பலம்
காலன் கடைதிறந்து விட்டான் எங்கள் பூமியில் காலன் கடைதிறந்து விட்டான்!
தமிழ்நிலத்தில் சாவுஒரு மலிந்த சரக்கு அழிவு ஒரு விலை குறைந்தபொருள் கொத்தும், வெட்டும், கொலையும், களவும் கால் விலைக்குப் போகுது! வாருங்கள், வாருங்கள் காலன் போடும் அங்காடிக் கூச்சல்!
எங்கள் பூமியின் எல்லைகள் எங்கும் கொல்லைப்புறங்கள், தோட்டந்துரவு, பட்டி, தொட்டி எங்கும் காலன் கடைதிறந்து விட்டான்! திருவிழாக் காலங்களில் திரையாக விரியும் பெட்டிக் கடைகள் போல் எங்கள் எழுச்சிவிழா முன்றலில் காலனின் கடை விரிப்பு
திருப்பணி வேலைக்கு ஒரு ஆள் பத்துசதம்! திருப்பணி வேலைக்கு மூன்றாள் ஜந்துசதம்! திருப்பணி வேலைக்கு ஐந்தாள் மூன்றுசதம்! காலன் போடும் அங்காடிக் கூச்சல்.
வல்வெட்டித் துறையில் விலைபோன உயிர்கள் திருமலை முல்லை மன்னார் எங்கும் 'மைலாய் வீதியாய்ரு ஓடிய ரத்தம் காலன் போடும் அங்காடிக் கூச்சல்.
கடலில் மிதந்தவை களத்தில் விழுந்தவை கண்ட கண்ட இடமெல்லாம் வெந்தவை, கிடந்தவை, அழுகிச் சிதைந்தவை... இன்னும் இன்னும் உயிர்கள் மலிய எங்கும் அழிவு சில்லறையாக எங்கள் எழுச்சி தேரென எழுமே! எங்கள் விடுதலை இலக்கினை அடையுமே! அதனால், காலன் கடை விரிக்கட்டும் அது விடுதலை விழாவின் அர்ச்சனைக் கடை.
(1985 / அலை-26)
!!!!!
எம்.ஏ.நு·மான்
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில் காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன. குண்டுகள் பொழிந்தன. உடலைத் துளைத்து உயிரைக் குடித்தன... - எம்.ஏ.நு·மான்
நேற்றைய மாலையும் இன்றைய காலையும்
நேற்று மாலை நாங்கள் இங்கிருந்தோம்.
சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில் வாகன நொ¢சலில் சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.
சந்தைவரையும் நடந்து சென்றோம். திருவள்ளுவர் சிலையைக் கடந்து தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி பண்ணை வெளியில் காற்று வாங்கினோம். 'றீகலின்' அருகே பெட்டிக் கடையில் தேனீர் அருந்தி - சிகரட் புகைத்தோம்.
ஐ¡க் லண்டனின் 'வனத்தின் அழைப்பு' திரைப்படம் பார்த்தோம்.
தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில் சைக்கிளில் ஏறி வீடு திரும்பினோம்.
இன்று காலை இப்படி விடிந்தது. நாங்கள் நடந்த நகரத் தெருக்களில் காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன. குண்டுகள் பொழிந்தன. உடலைத் துளைத்து உயிரைக் குடித்தன.
பஸ்நிலையம் மரணித் திருந்தது. மனித வாடையை நகரம் இழந்தது. கடைகள் எரிந்து புகைந்து கிடந்தன. குண்டு விழுந்த கட்டடம் போல பழைய சந்தை இடிந்து கிடந்தது வீதிகள் தோறும் டயர்கள் எரிந்து கா¢ந்து கிடந்தன.
இவ்வாறாக இன்றைய வாழ்வை நாங்கள் இழந்தோம். இன்றை மாலையை நாங்கள் இழந்தோம்.
(1977 / அலை-10)
!!!!!
உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே மனிதனின் விதியா? அடக்குமுறைக்கு அடிபணிவதே அரசியல் அறமா? - எம்.ஏ.நு·மான்
துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்
நாளையக் கனவுகள் இன்று கலைந்தன. நேற்றைய உணர்வுகள் இன்று சிதைந்தன. காக்கி உடையில் துப்பாக்கி அரக்கர் தாண்டவம் ஆடினர். ஒருபெரும் நகரம் மரணம் அடைந்தது.
வாழ்க்கையின் முடிவே மரணம் என்போம் ஆயின் எமக்கோ மரணமே எமது வாழ்வாய் உள்ளது.
திருவிழாக் காணச் சென்றுகொண்டிருக்கையில் படம்பார்க்கச் செல்லும் பாதி வழியில் பஸ்நிலையத்தின் வா¢சையில் நிற்கையில் சந்தையில் இருந்து திரும்பி வருகையில் எங்களில் யாரும் சுடப்பட்டு இறக்கலாம் எங்களில் யாரும் அடிபட்டு விழலாம்.
உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே மனிதனின் விதியா? அடக்குமுறைக்கு அடிபணிவதே அரசியல் அறமா?
அதை நாம் எதிர்ப்போம்! அதை நாம் எதிர்ப்போம்!! தனிநாடு அல்ல எங்களின் தேவைளூ மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள். மனிதனுக் குரிய கெளரவம் வாழ்க்கைக் கான உத்தரவாதம்.
யார் இதை எமக்கு மறுத்தல் கூடும்? மறுப்பவர் யாரும் எம்எதிர் வருக! காக்கி உடையில் துப்பாக்கி அரக்கர் தாண்டவம் ஆடுக!
போராடுவதே மனிதனின் விதிஎனில் போராட்டத்தில் மரணம் அடைவதும் மகத்துவம் உடையதே.
(1977 / அலை-10)
!!!!!
மயிலாசனத்தின் அரசியல் அநாதையை நீ அறியாயா? நீங்கள் குருடர் பிறவிக் குருடர்...- எம்.ஏ.நு·மான்
வரலாற்றுக் குருடர்
அமுக்கு, அமுக்கு இன்னும் சற்றே அதிகம் அமுக்கு அழுத்தம் அதிகா¢க்கும்! வெடிப்பு நிகழும்!
சுடு சுடு நு¡றுபேர் விழட்டும் துப்பாக்கியைச் சுழற்றிச் சுடு ஆயிரக் கணக்கில் அவர்கள் விழட்டும் பிறகுதான் லெட்சம் லெட்சமாய் அணிகள் திரளும் துப்பாக்கிகள் நொருங்கிச் சிதறும்.
மயிலாசனத்தின் அரசியல் அநாதையை நீ அறியாயா? நீங்கள் குருடர் பிறவிக் குருடர் வரலாறு உமக்குத் தொ¢வதே இல்லை.
(1980. நன்றி : புதுசு-2)
!!!!!
புத்தா¢ன் படுகொலை
நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நு¡லகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவின் இருளில் அமைச்சர்கள் வந்தனர். "எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை பின் ஏன் கொன்றீர்?" என்று சினந்தனர்.
"இல்லை ஜயா, தவறுகள் எதுவும் நிகழவே இல்லை இவரைச் சுடாமல் ஒரு ஈயினைக் கூடச் சுடமுடியாது போயிற்று எம்மால் ஆகையினால்தான்...." என்றனர் அவர்கள்.
"சா¢சா¢ உடனே மறையுங்கள் பிணத்தை" என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக. எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக. எங்கள் முதுகில் கசையால் அடிக்குக... - சண்முகம் சிவலிங்கம்
இன்று இல்லெங்கிலும் நாளை
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன. எங்கள் இமைகள் கவிந்துள்ளன. எங்கள் உதடுகள் அண்டியுள்ளன. எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன. நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக. எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக. எங்கள் முதுகில் கசையால் அடிக்குக, எங்கள் முதுகுத்தோல் பிய்ந்தூ¢ந்து போகட்டும்.
தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும். கவிந்த இமைகள் ஒருநாள் உயரும். இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும். கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.
அதுவரை நீங்கள் எங்களை ஆள்க. அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.
(1984 / அலை-24)
!!!!!
பாடாத பாடல்கள்
கன்னி கட்டும் போதே பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. கர்ப்பம் தா¢த்த அடுத்த கணமே கருச்சிதைவு நிகழ்கிறது. முளியாய் சிலவேளை முளைகள் தொ¢ந்தாலும் திடீரென துவாலை இறைத்துக் கட்டி விழுகிறது. ரணவாடை வீசுகிறது. முட்டைக்குள் கோழிக்குஞ்சு சிறகு ரோமங்களுடன் மா¢த்துப் போகிறது. ஆனாலும், நீ என்னைப் பாடச் சொல்கிறாய்.
தெருவில் பிணங்கள் நாறுகின்றன. பூட்டை ரவைகள் உடைக்கும் பொழுதில், வெண் புறாக்கள் தலை கெழிய வீழ்ந்து சிறகொடியச் சுருண்டு துடிக்கின்றன. பையன்கள் சொல்லாமல் போகிறார்கள் கடலில் குருதி தெறிப்பதாகச் சொல்கிறார்கள் கரையில் பிணங்களைத் தேடச் சொல்கிறார்கள் கரையில் ஒதுங்கிய பிணங்கள் கடலில் கொட்டப்பட்டவை என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் நீ என்னைப் பாடச் சொல்கிறாய்.
குருதி உறைந்த பாடல்கள், பிணங்கள் அழுகும் பாடல்கள் இருள், கன்னங் கா¢ய புகையாய் தலைமேல் கவியும் பாடல்கள் கருச்சிதையாமல் மூளியாய் துவாலை இறைத்துக் கட்டி விழாமல் நெஞ்சைப் பிளந்து குரல்வளையில் இடறி நாவில் வெடிக்கின்ற காலம் ஒன்று வரும். அப்போது கேள் -
இப்போது அல்ல.
(மார்க்சியம் இன்று-3)
!!!!!
தா.இராமலிங்கம்
அய்யோ வாடி வீடே நீ வதைகூடம் ஆனாயே! -தா.இராமலிங்கம்
கூறுபட்டுச் சமுதாயம் நு¡று குழுத் தோன்றி மாறுபடச் சிந்தித்தால் வீழ்ச்சிதான்.
பாட்டம் பாட்டமாய் மழைகொட்டப் போவதனை மூடிக்கிடக்கும் முகிற்கூட்டம் காட்டுகுது எமக்கு, ஓலைக்குடிசை என்றாலும் ஒதுங்கி இருக்க இடம் வேண்டும் வாருங்கள் கருத்து ஒன்றுபடுவோம் கைகோர்த்து நிற்போம் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்திக் கொள்வோம்.
பூரசம் குளம், கொடிய ரத்தக்களம் ஆனகதை நவரசத்தில் ஒன்றாக நின்றுவிடக் கூடாது. அந்தக் கொலைகாரன் கோரமாய் நின்றான் அவனது தாடியும் மீசையும் சிங்கத்தின் சாயலைக் காட்டின அவனது பார்வையில் சன்னங்கள் சிதறின அவனது எந்திரத் துப்பாக்கி படம் எடுத்து ஆடியது!
மடக்கி அவனை மண்கவ்வ வைப்பதற்கு துணிந்தெழுந்த இளைஞனும் துணை கிடைக்காததினால் தணிந்துவிட்டான் என்ற விவகாரம் எல்லாம் வெற்றிலை வாயைச் சிவப்பாகிச் சுவையூட்டும் சுண்ணாம்பாய் முடியாது திட்டமிட்ட வாழ்வுக்குத் தூண்டுதலாய் அமையட்டும்.
வாருங்கள் கருத்து ஒன்றுபடுவோம் கைகோர்த்து நிற்போம் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்திக் கொள்வோம்.
10.9.1984 இல் கொழும்பிலிருந்து யாழ்பாணம் வந்து கொண்டிருந்த பஸ் வண்டி திசைதிருப்பப்பட்டு பூவரசங்குளத்தில் பயணிகள் பயங்கரமாக் கொல்லப்பட்டதனை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
!!!!!
அம்மா பதறி மேற்கு உலகு ஓடிநீ உயிர்பிழை என்று நாடியைத் தடவ, பாரதம் போ நீ மேலே படி எனத் தந்தையார் கூற அதுவரை என்னுடன்... -தா.இராமலிங்கம்
கொடியேற்றம்
நேற்றும் கூட இந்தக் கேணியில் தெற்குப் பக்கத்து மேற்கட்டிலிருந்து படிகளினு¡டு பார்வையைச் செலுத்தி தீர்த்த நீரில் தெறித்துத் தொ¢யும் சந்திர ஒளியில் ஒன்றி இருந்தேன்.
இன்றோ கேணி சிதறிவிட்டது.
இளைஞரை இதனுள் கொணர்ந்து நிறுத்தி குண்டால் தகர்த்துப் படிக்கட்டு எல்லாம் பாறிப்பிளந்தன. இரத்தப் பெருக்கில் தீர்த்தம் சிவந்தது.
அம்மா பதறி மேற்கு உலகு ஓடிநீ உயிர்பிழை என்று நாடியைத் தடவ, பாரதம் போ நீ மேலே படி எனத் தந்தையார் கூற அதுவரை என்னுடன் கொழும்பில் வந்திரு ஆள்வோர் தயவில் ஆபத்து இல்லை என்றார் கொழும்பு மாமா.
பதற்றமோ வரவர அதிகா¢த்தது சிறிது நேரம் அடங்கி ஓயும் மறுபடி எழுந்து அடித்துவீசும் புதிதாய் பூத்த மலர்களுங்கூட உதிர்ந்து மண்ணில் சிதறிவீழும். இதனால் அடுத்தஊரில் சிற்றன்னை வீட்டில் தங்கிவருவாய் சிலதினம் என்று நொ¢ந்து சனங்கள் தூங்கிவழிய அரைந்து வந்த இ.போ.ச வசுவில் அம்மா என்னை வழியனுப்பினாள். ஆனால் அதுவோ இடைவழியில் இயங்க மறுத்து நின்றுவிட்டது.
மக்கள் இறங்கி மூட்டை முடிச்சுடன் உள்ளுர் வாகனம் தேடி அலைய நான் ஓர் நிழலில் தங்கியிருந்தேன். அப்பொழுது அங்கு இளைஞர்கள் கூடினர் வேர்த்து வழிய பாறைகள் தூக்கி லொறியில் ஏற்றினர் நானும் சேர்ந்து ஏற்றிக் கொடுத்தேன் லொறியில் ஏறி அமர்ந்து கொண்டனர் நானும் அவர்களோடு ஏறி அமர்ந்தேன். எங்கே போகிறோம் தொ¢யுமா என்று கெள்வியை எழுப்பிச் சொல்லத் தொடங்கினார் அவர்களில் பொ¢யவர்.
போர்த்துக்கேயர் ஆட்சியிலே புதைகுழிக்குப் போய்விட்ட தாயின் திருவுருவம் தோண்டி எடுத்துத் தூய்மைப்படுத்தியுள்ளோம்.
எமது உழைப்பில் எமது மண்ணில் எமது மூலவளங்களில் கோயில் எழுப்பிப் பிரதிட்டை செய்திட சிற்பவல்லுநர் நெறிப்படுத்தலில் பாறை பிளப்பவர் ஒருபுறம் ஏற்றிப்பறிப்பவர் ஒருபுறம் கட்டியெழுப்புவோர் ஒருபுறம் இரவுபகலாய்த் திருப்பணி வேலை தொடர்ந்து நடக்குது.
போர்ப்படகு எரிந்து மூழ்க யுத்தவிமானம் வீழ்ந்து நொருங்க பீரங்கி பிளந்து கவிழ வாயிற்கோபுரம் வளர்ந்து சென்று உச்சியில் கொடியுடன் துலங்கும் என்று முடித்தார்.
லொறி ஓடிக்கொண்டிருந்தது பலமாய்க் காற்று வீசிக்கொண்டிருந்தது.
(1985 / அலை-26) (09.5.1985 இல் வடமராட்சியில் இடம்பெற்ற இராணுவ அட்டூழியங்களை மையமாகக் கொண்டது)
!!!!!
சி.சிவசேகரம்
பகுத்தறிவு ஆளுகிற புதிய யுகம் அற்புதங்கள் ஒருக்கால் நடந்தாலோ ஒப்பார்கள் என்பதனால்...
52*
சற்றே விலகி நந்தி வழி விட்டதுபோல் வெலிக்கடையின் சிறைக்கூட இரும்பு நெடுங்கதவும் தானே திறக்கும் அங்கே காவலர்கள் அறியாமல் கற்சுவர்கள் சூழ்கின்ற அறைகட்குள் கொலை நடக்கும்
பகுத்தறிவு ஆளுகிற புதிய யுகம் அற்புதங்கள் ஒருக்கால் நடந்தாலோ ஒப்பார்கள் என்பதனால் இருகால் நடந்தேறும் கண்டு அலுத்த கற்சுவரோ மெளனிக்கும்.
இந்த மண்ணில் தமிழர்வாழும் ஒவ்வொரு தெருவிலும் வீடு தோட்டம் பள்ளிக்கூடம் பல்கலைக்கழகம், பணிமனை, கோயில் பெருஞ்சிறைக் கூடம் - ஒவ்வோரிடத்தும் குருதியும் தசையும் நிணமும் எலும்பும்
தோலும் மயிரும் தாளாய் விரியும் வாளும் துவக்கும் தீவட்டிகளும் இனவெறி உந்தும் ஆயிரம் கைகள் ஏந்த அழுத்தி எழுதிச் செல்லும்
திரையின் மறைவில் இருந்து இயக்கி எரிகிற வீட்டில் விறகு பொறுக்கும் அரசு, முதலைக் கண்ணீர் உகுக்கும் அல்லது புண்ணில் முள்ளால் செதுக்கும்.
(1983 / படிகள்-18)
!!!!!
அ.யேசுராசா
துயர்நிறை நெஞ்சோடும் மரத்தில் நாம், ஒரு சின்னமெழுப்பினோம்...
1974 தை 10 கல்லும் அலைகளும்
அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன. எங்களது பெண்கள் குழந்தைகள், முதியோர் 'வேட்டைநாய்களால்' விரட்டப்பட்டனர் 'கைப்பற்றப் பட்ட பூமியில் அந்நியப் படைகளாய் அபிநயித்த சக்திகள்' ஒன்பது உயிரின் அநியாய இழப்பு. ஓ....! அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.
மறுபடியும் இரவில் கொடுமை நிகழ்ந்தது செத்த உடலை ஓநாய்கள் சிதைப்பதாய், மரச் சின்னத்தை 'அவர்கள்' அழித்தனர். மக்கள் வலியவர்கள் மறுபடி வெளியிடை எழுப்பினர் கற்று¡ண்; தம் நெஞ்சின் வலிய நினைவுகள் திரண்டதாய்!
மீண்டும் ஓர்முறை 'காக்கியின் நிழல்' கவிந்து படிந்தது. 'அதிகார சக்திகள்' கற்று¡ணை விழுத்தினர் அலைகள் ஓய்வதில்லை. மறுபடியும் மக்கள் எழுப்பினர் சின்னம்; கல்லுகளில் ஒன்பது மெழுகு திரிகள்.
முன்னு¡று ஆண்டுகள் கழிந்தனவாயினும் நிறந்தான் மாறியது, மொழிதான் மாறியது, நாங்கள் இன்றும்,.. - அ.யேசுராசா
புதிய சப்பாத்தின் கீழ்...
சமாந்திரமாய்ச் செல்லும் கா¢ய தார் றோட்டில், நடந்து செல்கிறேன். கண்களில், பிரமாண்டமாய் நிலைகொண்டு கறுத் திருண்ட டச்சுக் கற் கோட்டை; மூலையில், முன்னோரைப் பயமுறுத்திய தூக்குமரமும் தெளிவாய்.
பரந்த புற்றரை வெளியில் துவக்குகள் தாங்கிய காக்கி வீரர்கள்" அரசு யந்திரத்தின் காவற் கருவி. என்றும் தயாராய் வினைத்திறன் பேண அவர், அணிநடை பயின்றனர். சூழ்ந்த காற்றிலும், அச்சம் பரவும்.
முன்னு¡று ஆண்டுகள் கழிந்தனவாயினும் நிறந்தான் மாறியது; மொழிதான் மாறியது; நாங்கள் இன்றும், அடக்கு முறையின் கீழ்...
மெளனம் உறையும்; ஆனால் மக்களின் மனங்களில், கொதிப்பு உயர்ந்து வரும்.
(1980 / அலை-14)
!!!!!
நானும் உணர்கிறேன் இப்போது, இது என்னுடைய தில்லை யென...- அ.யேசுராசா
எனது வீடு
அவர்கள் சொல்லினர், இந்த வீடு எனக்குச் சொந்தமில்லை யென. வெறுப்பு வழியும் பார்வையால், வீசியெறிந்த சொல் நெருப்பினால் பல முறை சொல்லினர், இந்த வீடு எனக்குச் சொந்தமில்லை யென.
நானும் உணர்கிறேன் இப்போது, இது என்னுடைய தில்லை யென; நாளை எனக்கு ஒன்றுமில்லை, இன்றும் நிச்சயமற்றது. எனது வீட்டுக்குச் செல்லவேண்டும்: நான் போவேன்!
(1982 / புதுசு-5)
!!!!!
வ.ஐ.ச.¦ஐயபாலன்
நாம் வாழவே பிறந்தோம். மரண தேவதை இயற்கையாய் வந்து வருக என்னும் வரைக்குமிவ் வுலகில் இஷ்டப்படிக்கு பெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று தனித்தும் கூடியும் உலகவாழ்வில் எங்களின் குரலைத் தொனித்து மூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்.
உயிர்த்தெழுந்த நாட்கள்
அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலைபோல. மீண்டும் காற்றில் மண் வாங்கி மாரி மழைநீர் உண்டு பறவைகள் சேர்த்த செடிகொடி வித்துகள் பூவேலைப்பாட்டுடன் நெய்த பச்சைக் கம்பள பசுமைகள் போர்த்து துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல அமைதியாய்த் தோற்றியது கொழும்பு மாநகரம். சித்தன் போக்காய் தென்பாரதத்தில் திரிதலை விடுத்து மீண்ட என்னை 'ஆய்போவன்' என வணங்கி ஆங்கிலத்தில் தம் உள்ளக் கிளர்ச்சியை மொழி பெயர்த்தனர் சிங்கள நண்பர்கள். கொதிக்கும் தேநீர் ஆறும் வரைக்கும் உணவகங்களிலும் பஸ்தா¢ப்புகளில் காத்திரு பொழுதிலும் வழி தெருக்களிலே கையை அசைக்கும் சிறு சுணக்கடியிலும் திருமலைதனிலே படுகொலை யுண்ணும் தமிழருக்காகப் பா¢ந்துபேசுதலும் பிரிவினைக் கெதிராய் தீர்மானம் மொழிதலும் இன ஒற்றுமைக்கு பிரேரணைகளும் ஆமோதிப்பும் இவையே நயத்தகு நாகா£கமாய் ஒழுகினர் எனது சிங்கள நண்பர்கள்.
வழக்கம்போல வழக்கம்போல அமைதியாய் நிகழ்ந்தது கொழும்புமாநகரம். கொழும்பை நீங்கி இருபது கி.மீ அப்பால் அகன்று கற்கண்டை மொய்த்த எறும்புகள் போன்று ஆற்றோரத்து மசூதிகள் தம்மை வீடுகள் மொய்த்த மல்வானை என்ற சிறு கிராமத்தில் களனி கங்கைக் கரையில் அமர்ந்து பிரவாகத்தில் என் வாழ்வின் பொழுதை கற்கள் கற்கள் கற்களாய் வீசி ஆற்றோரத்து மூங்கிற் புதா¢ல் மனக் குரங்குகளை இளைப்பாறவிட்டு அந்த நாட்களின் அமைதியில் திளைத்தேன். தனித் தனியாக துயில் நீங்கியவர் கிராமமாய் எழுந்து 'இந்தநாளைத் தொடங்குவோம் வருக' என பகலவன்தன்னை எதிர் கொண்டிடுதல் ஏனோ இன்னும் சுணக்கம் கண்டது. கருங்கல் மலைகளில் ஷடைனமைற்ரு வெடிகள் பாதாள லோகமும் வேரறுந்தாட இன்னமும் ஏற்றப் பட்டிடவில்லைளூ இன்னமும் அந்தக் கடமுடா கடமுடா 'கல்நொருக்கி' யந்திரஓட்டம் தொடங்கிடவில்லைளூ பஸ்தா¢ப்புகளில் 'றம்புட்டான்' பழம் அழகுறக்குவிந்த தென்னோலைக் கூடைகள் குந்திடவில்லை. நதியினில் மட்டும் இரவு பகலை இழந்தவர் போலவும், இல்லாமையின் கைப் பாவைகள் போலவும் பழுப்புமணல் குழித்து படகில் சேர்க்கும் யந்திர கதியுடைச் சிலபேர் இருந்தனர். எனினும் சூழலில் மனுப்பாதிப்பு இவர்களால் இல்லை. தூர மிதக்கும் ஏதோ ஒருதிண்மம் நினைவைச் சொறியும். இரு கரைகளிலும் மக்களைக் கூட்டி எழுபத்தொன்று ஏப்பிரல் மாதம் நதியில் ஊர்வலம் சென்றன பிணங்கள்ளூ இளமைமாறாத சிங்களப் பிணங்கள். எழுபத்தேழின் கறுத்த ஆகஸ்டில் குடும்பம் குடும்பமாய் மிதந்து புலம் பெயர்ந்தவைகள் செந்தமிழ்ப் பிணங்கள். (அதன் பின்னர்கூட இது நிகழ்ந்துள்ளதாம்) இப்படி இப்படி எத்தனை புதினம் நேற்று என் முஸ்லிம் நண்பர்கள் கூறினர். வாய்மொழி இழந்த பிணங்களில் கூட தமிழன் சிங்களன் தடயங்கள் உண்டோ! கும்பி மணலுடன் கரையை நோக்கி படகு ஒன்று தள்ளப்பட்டது. எதிர்ப்புறமாய் மரமேடையிலும் ஆற்றங்கரையிலும் குளிப்பும் துவைப்புமாய் முஸ்லிம் பெண்களின் தீந்தமிழ் ஒலித்தது. பின்புற வீதியில் வெண்தொப்பி படுதா மாணவமாணவிகளின் இனிய மதலைத் தமிழ்கள் கடந்தன. காலைத் தொழுகை முடிந்தும் முடியாதும் மசூதியிலிருந்து இறங்கிய மனிதர்கள் என்னை அழைத்தனர். 'கலவரம்' என்று கலவரப்பட்டனர். இலங்கையில் கலவரம் என்பதன் அர்த்தம் நிராயுதபாணி தமிழ்க் குடும்பங்களை சிங்களக் காடையும் படையும் தாக்குதல். சிலசில வேளை முஸ்லிம்களுக்கும் இது நிகழ்ந்திடலாம். தமிழா¢ன் உடைமை எரியும் தீயில் தமிழரைப் பிளந்து விறகாய் வீசும் அணுயுகக் காட்டு மிராண்டிகள் செய்யும் கொடுமைகள் தன்னை எடுத்துச் சொல்லினர். பருந்தின் கொடுநிழல் தோய்ந்திடும் கணத்தில் தாயின் அண்மையைத் தேடிடும் கோழிக் குஞ்சாய்த் தவித்தேன். தமிழ் வழங்குமென் தாய்த் திருப்பூமியின் 'தூர இருப்பே' சுட்டதென் நெஞ்சில் தப்பிச் செல்லும் தந்திரம் அறியா மனம் பதைபதைத்தது. தென்இலங்கை என் மனஅரங்கில் போர்தொடுத்த ஓர் அந்நியநாடாய் ஒரு கணப்பொழுதில் சிதைந்து போனது. ஒருமைப்பாடு என்பது என்ன, அடிமைப்படுதலா? இந்தநாடு எங்கள் சார்பாய் இரண்டுபட்டது என்பதை உணர்ந்தேன். நாம் வாழவே பிறந்தோம். மரண தேவதை இயற்கையாய் வந்து வருக என்னும் வரைக்குமிவ் வுலகில் இஷ்டப்படிக்கு பெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று தனித்தும் கூடியும் உலகவாழ்வில் எங்களின் குரலைத் தொனித்து மூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்.
எமது இருப்பை உயர்ந்தபட்சம் உறுதி செய்யும் சமூக புவியியல் தொகுதியே தேசம். எங்கள் இருப்பை உறுதிசெய்திடும் அடிப்படை அவாவே தேசப்பற்றுளூ நாடுகள் என்று இணைதலும் பிரிதலும் சுதந்திரமாக, மானிட இருப்பை உறுதிசெய் திடவே. இதோ எம் இருப்பு வழமைபோலவே இன அடிப் படையில் இந்த வருடமும் நிச்சயமிழந்தது. நான் நீ என்பது ஒன்றுமே இல்லை; யார்தான் யாரின் முகங்களைப் பார்த்தார்? நாவில் தமிழ் வழங்கியதாயின் தீயில் வீசுவார். பிரிவினை கோரிப் போராடும் தமிழர் ஒருமைப்பாட்டிற்கு உழைக்கும் தமிழர் இராமன் ஆளினும் இராவணன் ஆளினும் நமக்கென்ன என்று ஒதுங்கிய தமிழர் தமிழ்ப் பேரறிஞர், தமிழ்ப்பேதையர் ஆண் பெண் தமிழர்கள் முகத்தை யார் பார்த்தார்? களை பிடுங்குதல் போல தொ¢வு இங்கும் இலகுவாய்ப் போனது. 'சிங்கள பெளத்தர்' 'அல்லாதவர்கள்' என்பதே இங்கு தொ¢வு. கத்தோலிக்க சிங்களர் தம்மை கழுத்தறுக்கும் கடைசி நிலைவரை இணைத்துக் கொள்களூ தற்போதைக்கு முஸ்லிம் மக்களைத் தவிர்க்க என்பதே அடிப்படைத் தந்திரம். மசூதியை விட்டுத் தொழுகையின் நடுவே இறங்கி வந்த மனிதர்கள் என்னை எடுத்துச் சென்றனர்; ஒளித்து வைத்தனர். என்ன குற்றம் இழைத்தனன் ஐயா? தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து என்ன குற்றம் இழைத்தனன் ஐயா? தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து அவர்க்கும் எனக்கும் வேறுபாடேது?
நேற்றுப் பெளர்ணமி. முட்டை உடைப்பதே பெளர்ணமி நாளில் அதர்ம மென் றுரைக்கும் பெளத்த சிங்கள மனிதா சொல்க முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள் அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன? இரத்தம் தெறித்தும் சாம்பல் படிந்தும் கோலம் கெட்ட காவி அங்கியுள் ஒழுங்காய் மழித்த தலையுடன் நடக்கும் பிக்குவே இதுவோ தர்மம்? ஏட்டை அவிழ்க்காதே இதயத்தைத் திறந்து சொல், முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள் அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?
வன வாசத்தில் இல்லாதது போன்ற இருப்பில் கொதிப்புடன் சில நாட் கழிந்தது. எங்கே எங்கே எமது தேசம்? எமது இருப்பைத் தனித்தனியாகவும் எமது இருப்பை அமைப்புகளாகவும் உறுதிப்படுத்தும் புவிப் பரப்பேது? இலங்கை அரச வானொலி சொன்னது 'அகதிகள் முகாம்களில் பாதுகாப்பாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளனர்' அகதிகள் முகாமே எங்கள் தேசமாய் அமைதல் கூடுமோ? இலங்கை அரசின் வானொலி சொன்னது 'அகதிகளான தமிழர்கள் தம்மை பாதுகாப்புக்காய் வடக்குக் கிழக்குப் பகுதிகள் நோக்கி அனுப்பும் முயற்சிகள் ஆரம்ப மென்று' கப்பல்கள் ரயில்கள் பஸ் வண்டிகளில் வடக்குக் கிழக்காய்ப் புலம் பெயர்கின்றோம். எங்கே எங்கே எம்தாய் நாடு? எங்கே எங்கே, நானும் நிமிர்ந்து நிற்கவோர் பிடிமண்? நாடுகளாக இணைதலும் பிரிதலும் சுதந்திரமாக நம் சமூக இருப்பை உயர்ந்தபட்சம் உறுதி செய் திடவே. இங்கு இப்பொழுதில், நான் நீ என்பது ஒன்றுமேயில்லை பிரிவினை வாதிகள் ஒருமைப்பாட்டையே உரத்துப் பேசுவோர் காட்டிக் கொடுப்பவர் அரசின் ஆட்கள் கம்யூனிஸ்டுகள் பூர்சுவாக்கள் யார்தான் முகத்தைப் பார்த்தாரிங்கு. எமது நிலவுகை இப்படியானதே எங்கெம் நாடு எங்கெம் அரசு? எங்கு எம்மைக் காத்திடப் படைகள்? உண்டா இவைகள் உண்டெனில் எங்கே? இல்லையாயின் ஏன் இவை இல்லை?
மசூதிகளாலே இறங்கி வந்து என்னை எடுத்துச் சென்ற மனிதர்கள் பொறுத்திரு என்றனர். விகாரைப் புறமாய் நடந்துவந்த காட்டு மிராண்டிகள் இன்னும் களைத்துப் போகவில்லையாம். அஞ்சி அஞ்சித் தலைமறைந் திருத்தலே தற்போது சாத்தியம். இதுவே தமிழன் வாழ்வாய்ப் போகுமோ? அப்படியாயின் இதைவிட அதிகம் வாழ்வுண்டே சாவில்! நிலைவரம் இதுவெனில் நாங்கள் எங்கள் தாய்நாட்டில் இல்லைளூ அல்லதெம் தாய்நாடு எம்மிட மில்லை. சாத்தியமான வாழ்வை விடவும் அதிகம் வாழ்வு சாவினில் என்றால் எங்கள் இளைஞர் எதனைத் தொ¢வார்?
* * *
முஸ்லிம்போல தொப்பி யணிந்து விடுதலை வீரனைக் கடத்தி வருதல்போல் கொழும்புக் கென்னைக் கொண்டு வந்தனர். விடுதலை வீரனைப் போல்வதை விடவும் விடுதலை வீரனாய் வாழ்வதே மேலாம்.
கொழும்பில் தொடர்ந்தஎன் வன வாசம் கொடிது கொங்கிறீட் வனம் என்பதனால், அமொ¢க்க நண்பன் ஒருவனின் வீட்டில் என்னைப் பதுக்கி வைத்தனராயின் சொல்க யார்நான் இந்த நாட்டில்? அந்நியன்கூட இல்லைப் போலும்! அந்நியனாகவும், ஏதுமோர் நாட்டின மாதல் வேண்டுமே! அமொ¢க்க நண்பனும் ஐப்பான் தோழியும் இஷ்டம் போல அளந்தனர் கொழும்பை; காட்டு மிராண்டிக் கைவா¢சைகளின் பாதகக் கணங்களைப் புகைப்படச் சுருளில் பதித்துக் கொண்டனர். அங்கு என் வாழ்வின் பொ¢யபகுதி பூனைகளோடும் பறவைகளோடும்!
* * *
வானொலி எனக்கு ஆறுதலானது பாரதத்தின் கண்களாக தமிழகம் விழித்து உலகை உசுப்பும் ஓசையைக் கேட்டேன். சுரங்கமொன்றுள் மூடப்பட்டவர் தலைக்குமேலே நிலம் திறபடும் துளைப்பு ஓசை செவிமடுத்தது போல் புத்துயிர் பெற்றேன். உலகம் உள்ளது, உள்ளது உலகம். உலகின் வலிய மனச்சாட்சியினை வியட்னாம் போரின் பின்னர் உணர்ந்தேன். காட்டு மிராண்டிகள் திடுக்குற எழுந்தது எங்கும் உலகநாகா£கம். இந்தநாட்டில் எனக்கிடமில்லை; இந்த உலகில் எனதிடமுள்ளது. ஆயின், எங்கென் நாடு? எங்கென் நாடு?
* * *
வானொலிப் பெட்டியை வழமைபோல் திறந்தேன் வழமை போலவே ஒப்பாரிவைத்தது தமிழ் அலைவா¢சை. இனவெறிப் பாடலும் குதூகல இசையும் சிங்கள அலையில் தறிகெட எழுந்தது. இதுவே இந்த நாட்டின் யதார்த்தம் சிறைச் சாலையிலே கைதிகளான எங்கள் நம்பிக்கை ஞாயிற்றின் விதைகள் படுகொலைப்பட்ட செய்தி வந்தது கிளாரினட் இசையின் முத்தாய்ப்போடு. யாரோ எவரோ அவரோ இவரோ அவஸ்தையில் இலட்சம் தலைகள் சுழன்ற அந்தநாட்கள் எதிரிக்கும் வேண்டாம்; பாண்டியன் வாயினில் கண்ணகியானது சன்னதம் கொண்ட எனது ஆத்மா.
மறுநாட் காலை அரசு நடத்தும் 'தினச்செய்தி' என்னும் காட்டு மிராண்டிகளின் குரலாம் தினசா¢ 'பயங்கர வாதிகள் கொலை' எனஎழுதி எமது புண்ணில் ஈட்டி பாய்ச்சியது. குற்றம் என்ன செய்தோம் சொல்க! தமிழைப் பேசினோம். இரண்டாம் தடவையும் காட்டுமிராண்டிகள் சிறையுட் புகுந்தனர் கொலைகள் விழுந்தன; கிளாரினட் இசையுடன் செய்தியும் வந்தது.
* * *
உத்தமனார், காட்டுமிராண்டித் தனங்களைத் தொகுத்து உத்தியோக தோரணையோடு 'சிங்கள மக்களின் எழுச்சி' என்றார். தென்னைமரத்தில் புல்லுப் பிடுங்கவே அரசும் படையும் ஏறிய தென்றார். உலகம் உண்மையை உணர்ந்துகொண்டது.
* * *
துப்பாக்கிச் சன்னமாய் எனது ஆத்மாவை ஊடுருவியது, விமலதாசனின் படுகொலைச் செய்தி. ஒடுக்குதற் கெதிராய்ப் போர்க்களம் தன்னில் பஞ்சமர்க்காகவும் தமிழைப் பேசும் மக்களுக்காகவும், உழைப்பவர்க்காகவும் 'ஒருநல்ல கிறிஸ்தவனாய் இறப்பேன்' என்பாய். இப்படி நிறைந்ததுன் தீர்க்க தா¢சனம். விடுதலைப் போரின் மூலைக்கல்லாய் உன்னை நடுகையில், ஒருபிடி மண்ணை அள்ளிப் போடுமென் கடமை தவறினேன் நண்ப, ஆயிரமாய் நீ உயிர்த்தே எழுக!
* * *
"அடக்கினேன் எழுபத்தொன்றில் கிளர்ச்சியை நானும் பி¡¢வினைப் போரை வேரறுத்திடுதல் ஏன் இவ்வரசுக்கு இயலவில்லை? " சிறிமா அம்மையார் திருவாய் மலர்ந்தார். 'நரபலியாக தமிழ் இளைஞரை வீடுவீடேறிக் கொன்று குவிப்பீர்' மறைபொருள் இதுவே - மீண்டும் இளைஞா¢ன் இரத்தம் குடிக்க மனம் கொண்டாரோ, காறி உமிழ்ந்தேன்.
* * *
வீட்டினுள் ஐன்னலால் புகுந்து றைபிள் கலா பரமேஸ்வரனைக் காவு கொண்டதாம்! 'அப்பாவி' என்று முகத்தில் எழுதி ஒட்டிவைத்திருக்குமே! - முகத்தை யார் பார்த்தார்... இப்படியாக ஜம்பது தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் - முத்தமிட்டனர், செம்மண் பூமியை.
* * *
பஸ்தா¢ப்புகளில் தேநீர் சாலையில் வழி தெருக்களில் ஒருமைப்பாட்டை உரத்துப் பேசிய, சிங்கள நண்பரை எதிர்பார்த்திருந்தேன்ளூ முற்போக்கான கோயுங் களோடு கொழும்பு நகர வீதியை நிறைத்த சிவப்புச் சட்டைச் சிங்களத் தோழா¢ன் முகங்களைத் தேடிய படிக்கு, வீதிப்பக்கமாய் மொட்டை மாடியில் கால்கடுக்க நெடுநாள் நின்றேன். எங்கே மறைந்தன ஆயிரம் செங்கொடி? எங்கே மறைந்தன ஆயிரம் குரல்கள்? கொடிகள் மட்டுமே சிவப்பாய் இருந்ததா? குரலில் மட்டுமே தோழமை இருந்ததா? நான் உயிர்பிழைத்தது தற்செயலானது! - முகத்தை யார் பார்த்தார்?
* * *
பா¢தாபமாக எம்முன் நிற்கும் சிங்களத்தோழர் சிறுகுழுவே கலங்கிடல் வேண்டாம். உங்கள் நட்பின் செம்மைச் செழிப்பில் சந்தேகம் நான் கொண்டிடவில்லை! தற்போ துமது வல்லமை தன்னில் நம்பிக்கை கொள்ள ஞாயமும் இல்லை. எம்முயிர் வாழ்க்கை சீர்குலைந்திட்ட இந்தநாளின் பயங்கரத்துக்கு ஏதுமோர் சவாலாய் இல்லையே நீங்கள்! சென்று வருக, எனது உயிர்தப்பும் மார்க்கத்தில் நின்று கதைக்க ஏதுபொழுது? என்றாலும், பின்னொருகால் சந்திப்போம் தத்துவங்கள் பேச...
* * *
தமிழர் உடைமையில் கொள்ளை போனதும் எரிந்ததும் தவிர்த்து எஞ்சிய நிலத்தில் எரிந்த சுவா¢ல் அரசுடைமை எனும் அறிக்கை கிடந்தது. இப்படியாக, உயிர் பிழைத்தவர்கள் பின்புற மண்ணையும் தட்டியபடிக்கு எழுந்தோம், வெறுங்கைகளோடு - உடைந்த கப்பலை விட்டு அகன்ற ரொபின்சன் குரூசோவைப்போல! குலைந்த கூட்டை விட்டு அகன்ற காட்டுப் பறவையைப் போல. நாம் வாழவே எழுந்தோம். சாவை உதைத்து, மண்ணிலெம் காலை ஆழப் பதித்து மரண தேவதை இயற்கையாய் வந்து வருக என்னும் இறுதிக் கணம்வரை, மூக்கும் முழியுமாய் வாழவே எழுந்தோம்!
(1983 / அலை-23)
!!!!!
சேரன்
இப்போதெல்லாம் இரவு மிகவும் கொடுரம் மிக்கது. நிலவொளி படர்கையில் நிழல்கள் அசைவதும் பெயர் தொ¢யாத பறவைகள் திடீரென அலறுவதும் பகல் வரும்வரையில் நரகம்தான்...- சேரன்
ராணுவ முகாமிலிருந்து கடிதங்கள்...
1
அன்பே நந்தா,
இன்று காலைதான் வந்து சேர்ந்தோம். பிரச்சினை இல்லை. மடியில் ரை·பிளை இறுகப் பற்றியிருந்ததில் தூக்கமுமில்லை. கனவுகள்! மிகவும் பயங்கரம் திடீரென விழிப்பு.
ரயில் நிலையத்தில் நீயும் மாமியும் அழுத அழுகையில் நானுமே பயந்தேன். ஆனால், அனைவரும் எனக்குச் சொன்னதுபோல வடக்கு அப்படி ஒன்றும் பயங்கரமாகத் தொ¢யவில்லை. எங்கும் போலவே கடைகள், தெருக்கள், வாகன நொ¢சல். மனிதர்கள்தான் எமைப் பார்ப்பதேயில்லை. தற்செயலாகப் பார்க்கிறபோதும் அவர்கள் எல்லோரது கண்களினு¡டும் ஏதோ ஒன்று;
இனம் புரியாத ஓர் உணர்வு என்னவாயிருக்கும் அது என எனக்குப் புரியவே இல்லை.
நாங்கள் தனித் தனியாகச் செல்வது இயலாது என்பதை நீ அறிவாய் அல்லவா? இரண்டு கவச வாகனங்கள், வேறும் ஐ£ப்புகள் இரண்டு, அல்லது மூன்று, ட்ரக் ஒன்று இவற்றில் குறைந்தது ஜம்பது பேராவது ஒன்றாய்ச் செல்வோம். அது, உண்மையிலேயே ஒரு அணிவகுப்புத்தான்... சுதந்திரதின விழாவில் பார்த்திருப்பாயே அப்படித்தான். ஆனால், ஒரேயரு வித்தியாசம்: சுதந்திர தினத்து அணிவகுப்பில் எங்களுக்கு சுதந்திரம் இருந்தது துப்பாக்கிகளுக்கு குண்டுகள் இல்லை. இங்கோ, துப்பாக்கிகளுக்கு வேண்டுமான அளவு குண்டுகள்; ஆனால், சுதந்திரம் இல்லை...
2
இன்று முழுவதும் மிகுந்த அலைச்சல் பனை மரங்களுடாக வளைந்து வளைந்து செல்லும் தெருக்களில் (அவை மிக மோசம்) கவச வாகனம் குலுங்கக் குலுங்க இடுப்பு எலும்பெல்லாம் பிறகு ஒரே வலி. மத்தியானம் வயல் வெளிகளுக்கு நடுவிலிருந்த ஒரு கிராமத்தில் மூன்று கொழுத்த ஆடுகள் சுட்டோம். இளைஞர்கள் இல்லை; பெண்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். முகாமுக்கு மீள்கிற பாதிவழியில் மேஐருக்குரிய சிகரெட் வாங்க மறந்து போனதை ஒருவன் ஞாபகப்படுத்தவும், பிறகென்ன? அணிவகுப்பாக அவ்வளவு பேரும் நகருக்குத் திரும்ப நேர்ந்தது!
3
இன்று, எதிரிவீரவும் சந்திரசிறியும் மூன்று தமிழரைச் சுட்டுக் கொன்றனர். 'நெருக்கடி மிகுந்த தெருவில் திடீரென இவர்கள் ஓடிச் சென்றதால், கலவரமுற்றுச் சுட்டுவிட்டேன்' என்று சந்திர சொன்னான்ரு பிறகு, விசாரணையின்றியே இரண்டுபேரையும் கொழும்புக்கு அனுப்பினர் இடமாற்றம்தான். (கொடுத்து வைத்தவர்கள்) . . . யாரையாவது சுட்டால் அல்லது சனங்கள்மீது தாக்குதல் நிகழ்த்தினால் வீடுகளைப் பற்றவைத்தால் உடனடியாக மாற்றம் கிடைக்கிறது.(?) . . . நேற்றும் ஜந்துபேர் உடனடியாக மாற்றம் பெற்றனர். நான் வந்ததிலிருந்து மொத்தமாக ஜம்பது பேராவது திரும்பி விட்டனர்; எப்போது எனக்கு மாற்றம் வருமோ நான் அறியேன்.
4
இன்றும் புதிதாக நு¡றுபேர் எங்கள் முகாமுக்கு வந்தனர். சின்னப் பயல்கள்; மீசைகூட அரும்புதான். இயந்திரத் துவக்கை இயக்குவதிலோ திறமையும் குறைவு. . . . இப்போதெல்லாம் பகலில் அலைந்து திரிந்த பின்னரும் இரவில் தூக்கம் பிடிப்பதேயில்லை.
நீண்ட நாளாயிற்று உன்னை நேரே பார்த்து. விடுமுறை என்பது நினைக்கவே இயலாதது... . . .
5
நேற்று இரவு, எமது பிரிவின் பதின்மூன்றுபேரை 'அவர்கள்' கொன்றனர். குறி பிசகாத குண்டு வெடிப்பின் பின் சுற்றி வளைத்தன இயந்திரத் துவக்குகள். நாங்கள், எவருமே இதனை எதிர்பார்க்கவில்லை. தலைமை முகாமுடன் வானொலித் தொடர்பு இடையறாமல் இருந்தும், இருட்டினுள் யமனின் இருப்பை மீற ஒன்றுமே இயலாது போயிருக்க வேண்டும்.
அடுத்தநாட் காலை எந்தத் தெருவிலும் சனங்கள் இல்லை. கடைகள் இல்லை. அர்த்தம் தொ¢யாமல் ஓர் அமைதி என்ன தேசம் இது?
இப்போதெல்லாம் இரவு மிகவும் கொடூரம் மிக்கது. நிலவொளி படர்கையில் நிழல்கள் அசைவதும் பெயர் தொ¢யாத பறவைகள் திடீரென அலறுவதும் பகல் வரும்வரையில் நரகம்தான். . . . அப்புறம், உடனடியாக மாற்றம் கேட்ட எமதுபிரிவு நேற்றுத் தெருவில் இறங்கிற்று... எத்தனைபேரைச் சுட்டுத் தீர்த்தது என்ற விபரம் சா¢யாகத் தொ¢யாது. ஜம்பது அல்லது அறுபது என்று மேஐர் நினைக்கிறார்.
6
அன்பே நந்தா...
ஒரு வழியாக எல்லாம் முடிந்தது நாளை எனக்கு இடமாற்றம்! கடவுளுக்கு நன்றி. இன்று கடைசித் தடவையாக நகருக்குச் சென்றேன். அப்படி ஒன்றும் பயங்கரமாகத் தொ¢யவில்லை. முன்பு போலவே கடைகள், தெருக்கள்... ஆனால் மனிதர்கள்தான் முன்பு போலவும் எம்மைப் பார்ப்பதேயில்லை...
எல்லாவற்றையும் மறந்து விடலாம்; இந்தப் பாழும் உயிரை அநாதரவாக இழப்பதை வெறுத்து ஒருகணப் பொறியில் தெறித்த நம்பிக்கையோடு காலி வீதியில் திசைகளும், திசைகளோடு இதயமும் குலுங்க விரைந்தபோது,
கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில் வெளியே தொ¢ந்த தொடை எலும்பை, ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில் எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து இறுகிப்போன ஒரு விழியை, விழியே இல்லாமல், விழியின் குழிக்குள் உறைந்திருந்த குருதியை, 'டிக்மண்ட்ஸ்' ரோட்டில் தலைக் கறுப்புகளுக்குப் பதில் இரத்தச் சிவப்பில் பிளந்து கிடந்த ஆறு மனிதர்களை, தீயில் கருகத் தவறிய ஒரு சேலைத்துண்டை, துணையிழந்து, மணிக்கூடும் இல்லாமல் தனித்துப்போய்க் கிடந்த ஒரு இடது கையை, எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலிருந்து தொட்டில் ஒன்றைச் சுமக்க முடியாமல் சுமந்துபோன ஒரு சிங்களக் கர்ப்பிணிப் பெண்ணை,
எல்லாவற்றையும், எல்லாவற்றையுமே மறந்துவிடலாம் ஆனால் -
உன் குழந்தைகளை ஒளித்துவைத்த தேயிலைச் செடிகளின் மேல் முகில்களும் இறங்கி மறைத்த அந்தப் பின் மாலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த கொஞ்ச அ¡¢சியைப் பானையிலிட்டுச் சோறு பொங்கும் என்று ஒளிந்தபடி காத்திருந்தபோது பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே, உடைந்த பானையையும் நிலத்தில் சிதறி உலர்ந்த சோற்றையும் நான் எப்படி மறக்க...?
(1984 / யமன்)
!!!!!
கொள்ளையடிக்க வந்த சிங்களவர்மீது துவக்கால் சுடுவதைப் புத்தர்கூட அனுமதிக்க மாட்டார் என்பதை அரசு அறியும், அமைச்சர்கள் அறிவர். அவன் எப்படி அறிவான்?
அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றபோது...
அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றபோது எல்லோருமே பார்த்துக்கொண்டு நின்றார்கள். இன்னும் சா¢யாகச் சொல்வதானால், அவன் சுடப்படுவதைக் காண்பதற்காகவே அவர்கள் நின்றனர்.
அவனுடைய வீட்டைக் கொளுத்த வந்தவர்கள், பெட்டிக் கடையில் பாண் வாங்கவந்த இரண்டு கிழவிகள், கையில் கற்களுடன் ஏராளமான சிறுவர்கள் மற்றும், அன்று வேலைக்குப் போகாத மனிதர்கள், பெண்கள்.
இவர்கள் அனைவா¢ன் முன்னிலையில் நிதானமாக அவன் இறந்து போனான். அவன் செய்ததெல்லாம் அதிகமாக ஒன்றுமில்லை; அவனுடைய வீட்டிலும் அதிகமாக ஒன்றுமிருந்ததில்லை. ஆனால், தமிழர்களுடைய வீட்டைக் கொள்ளையிடுவதை யார்தான் தடுக்க முடிகிறது? அன்று காலையும் அதுதான் நடந்தது.
ஜம்பதுபேர், அவனுடைய வீட்டை உடைக்க வந்தனர். வனத் திணைக்கள அதிகா¡¢யான அவனுடைய அப்பாவின் துவக்கு நீண்ட காலமாய் முன்னறைப் பரணின் மேலே இருந்தது. துவக்கை இயக்க அவனும் அறிவான்.
கொள்ளையடிக்க வந்த சிங்களவர்மீது துவக்கால் சுடுவதைப் புத்தர்கூட அனுமதிக்க மாட்டார் என்பதை அரசு அறியும்! அமைச்சர்கள் அறிவர்; அவன் எப்படி அறிவான்? ராணுவம், கடற்படை, விமானப்படை என, எல்லோருமாக முற்றுகையிட்டு அவனுடைய வீடு எ¡¢ந்துவருகிற புகையின் பின்னணியில் அவனைக் கொல்வதற்குமுன்,
அவன் செய்ததெல்லாம் அதிகம் ஒன்றுமில்லை. இரண்டு குண்டுகள். ஒன்று ஆகாயத்திற்கு அடுத்தது பூமிக்கு...
(1984 / யமன்)
!!!!!
இளைய வயதில் உலகை வெறுத்தா நிறங்களை உதிர்த்தன, வண்ணத்துப் பூச்சிகள் ?
யமன்
காற்று வீசவும் அஞ்சும் ஓர் இரவில் நட்சத்திரங்களுக்கிடையே இருக்கிற அமைதியின் அர்த்தம் என்ன என்று நான் திகைத்த ஓர் கணம்,
கதவருகே யாருடைய நிழல் அது?
நான் அறியேன்; அவர்களும் அறியார். உணர்வதன் முன்பு அதுவும் நிகழ்ந்தது...
மரணம்.
காரணம் அற்றது, நியாயம் அற்றது, கோட்பாடுகளும் விழுமியங்களும் அவ்வவ்விடத்தே உறைந்து போக முடிவிலா அமைதி.
மூடப்பட்ட கதவு முகப்பில், இருளில், திசை தொ¢யாது மோதி மோதிச் செட்டையடிக்கிற புறாக்களை,
தாங்கும் வலுவை என் இதயம் இழந்தது.
இளைய வயதில் உலகை வெறுத்தா நிறங்களை உதிர்த்தன, வண்ணத்துப் பூச்சிகள்?
புழுதி படாது பொன் இதழ் விரிந்த சூரிய காந்தியாய், நீர் தொடச் சூரிய இதழ்கள் விரியும் தாமரைக் கதிராய், நட்சத்திரங்களாய் மறுபடி அவைகள் பிறக்கும்.
அதுவரை, பொய்கைக் கரையில் அலைகளைப் பார்த்திரு!
(சுவர்-1)
!!!!!
நல்லது, கடவுளே நல்லது நீர் அப்படியே இரும் கைகளைக் கட்டி புன்னகை புரிந்து அடிக்கடி புணர்ந்து மலர்களைச் சுமந்து அப்படியே இரும்.
உயிர்ப்பு
நடு இரவு;
நிமிர்ந்து நிற்கவும் நெளிந்து படுக்கவும் இடமற்ற என் 20 ஆம் இலக்கக் கூண்டின் கம்பிகள் திடீரென அதிரும்.
யுஇலக்கம் இருபது இலக்கம் இருபது எழும்படா நாயே எழும்பு. எழும்பு...ரு
யுசமர சிங்ஹ, இந்தக் கதவைத் திற!ரு
எழும்ப இயலாமல் துவளும் உடலில் விழுகிறது உதை. என்ன அது? எஸ் லோன் பைப்பா? இரும்புக் கழியா? குண்டாந் தடியா? தலைக்குள் மின்னல்கள் சிதற நிலை குலைந்து தூங்கும் என் உலகத்திலிருந்து சிறிது விழிப்பு; சிறிது மயக்கம்; மெளனம்.
இதனைத் தொடர்வது மரணமா?
இருள் படர்ந்து வரும் என் கண்களின் மீது ஒரு மிருகப் பிறவி வெளிச்சம் பிடிக்கிறான். எனது உறுதியும் உயிரும் இன்னும் உள்ளது. இருண்ட சித்திரவதைக் கூடத்தின் கதவுகள் மீது இரும்பென அவற்றின் எதிரொலி கேட்கும்.
அன்புள்ள நண்பனே ஐ¤லிஸ் ·பூஸிக், சிறைக்குறிப்புகள் எழுதவும் எனக்கு விரல்களில்லை. நீ கடந்த காலத்திற்குரியவன். நானோ இன்றைய நிகழ்வின் நாயகன்.
துயரம் நமது இறகுகளைப் பலப்படுத்திற்று. கோபம் நமக்கு வலிமை சேர்த்தது.
என்னை இழுத்துச் செல்கிறார்கள் படிகள் - மேலிருந்து கீழாக ஒன்று, இரண்டு, மூன்று... சீமெந்து நிலம் முடிகிறது 'அந்த' அறையைக் கடக்கிறோம் இரத்த வெடிலும் அவலக் குரலும் தீயில் எரிந்த தசையும் மூலைகளுக்குள் தோழர்களும் சுருண்டு கிடந்த 'அந்த' அறையைக் கடக்கிறோம்.
அடுத்தது மரணம்.
சொல்லாமல் செய்வர் பொ¢யர்; சொல்லாமல் கொல்வான் கொடியன் என்னிடம் பெற முடியாத ரகசியங்களுக்காக என்னைப் புதைக்கப் போகிறார்கள்.
அவர்களுக்குக் கவலைப்பட ஒன்றுமேயில்லை தூங்குவது சாப்பிடுவது சிரிப்பது போல அவர்களுக்கு மிகவும் இயல்பாய்ப் பழகிப் போன காரியம் இது.
கொல்வது புதைப்பது அல்லது எரிப்பது.
நல்லது; கடவுளே நல்லது எனக்கு விடுதலை பாதி பிடுங்கப்பட்ட என் கண்களுக்கு விடுதலை துயரத்திலிருந்து அவலத்திலிருந்து உயிர் வாழும் நம்பிக்கையிலிருந்து பிரயோகிக்க முடியாத கோபத்திலிருந்து எனக்கு விடுதலை.
நல்லது; கடவுளே நல்லது நீர் அப்படியே இரும் கைகளைக் கட்டி புன்னகை புரிந்து அடிக்கடி புணர்ந்து மலர்களைச் சுமந்து அப்படியே இரும்.
என்னைக் கொல்லப் போகும் இயந்திரத் துவக்கின் ஒலியே ஒலியின் எதிரொலியே அவளுக்குச் சொல்லு நம்பிக்கை தரும் சொற்கள் பஞ்சாங்கத்தில் இல்லை யென்று
எப்போதாவது அவன் திரும்பி வருவான் என்று கிணற்றடி வைரவருக்கு இப்போதும் செவ்விரத்தம் பூக்கள் வைக்கிற என் அம்மாவுக்குச் சொல்லு.
நான் இப்போது இறந்தேன் என் குருதி உறைந்த இம் மண்ணில் இருந்து நாளை நான் உயிர்ப்பேன் மூன்று நாள் என்பது அதிகபட்சம் எனது புதைகுழியின் மீது முதலாவது புல் முளைவிடுமுன்பு நான் உயிர்ப்பேன்.
(1985)
!!!!!
சு.வில்வரத்தினம்
எடுத்துச் செல்லுங்கள் உங்களிதயத்தை உங்களுடனேயே. எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்க முன் உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்.
எழுபத்தியேழு ஓகஸ்டில் தெற்கில் இழந்த உயிர்களுக்கு நினைவுத் தூண்கள் நிறுவுவீரா? உங்கள் இழிமைகளை நினைவூட்ட?
மலர் வளையங்கள், மாலைகள் சாத்தல்: இவை உதவப் போவதில்லை, எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்க மலர்வளையங்களும் மாலைகளும் உதிர்ந்து விழும் உங்கள் சொல்லலங்காரங்கள் போல.
மாலைசாத்திய கைகள் மறுநாளே வாளெடுக்கும் நிகழ்ச்சிகள் பல நடப்பிலே கண்டோம்.
மலர் தூவிய கைகளாலேயே துட்டகெமுனுவின் அஸ்தியும் தூவுவீர் வகுப்புவாத மேகங்கள் இருண்டு குருதி மழை பொழிய.
இரத்தச் சுவடுகள் பதிய ஒளிந்தோடி ஓர்மூலையில் பதுங்கி உடைமாற்றிவந்து ஒப்புக்கழுவீர்.
மஞ்சள் அங்கிகளுக்கும் மழித்த தலைகளுக்கும் புலப்படாது புதைக்கப்பட்டுவிட்ட புத்தா¢ன் அன்பு துலங்கும்வரை செதுக்குங்கள்! உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்!
எடுத்துச் செல்லுங்கள். எங்கள் உபதேசமிதே.
(1981 / அலை-17)
* - 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டின்போது இழக்கப்பட்ட ஒன்பது உயிர்களுக்கான நினைவுச்சின்னம். அவற்றை முந்திய ஆட்சியினர் காலத்தில் பொலிசார் உடைத்து விட்டனர். யூ.என்.பி பதவிக்கு வந்த பின் யாழ் விஐயம் மேற்கொண்ட சிறீலங்கா பிரதமர் அத் தூண்களை எழுப்பி மலர்வளையம் சாத்தியது செய்தி.
** - யாழ் விஐயம் செய்து சிறீலங்கா திரும்புகையில் பிரதமர் சொன்னது.
!!!!!
சிட்டுக்குருவி! எட்டுத்திக்கும் பறந்தொரு சேதிசொல் விட்டு விடுதலையானோம் நம் கட்டுகள் யாவும் அறுந்தன வாமென்று.
விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்
பாரதி, விடுதலை அவாவிய நின் சிட்டுக் குருவி எங்கள் வீட்டு முற்றத்திலும் மேய்தல் கண்டேன்.
விடுதலைத் தாகத்தின் துடிப்புன் குரலென்றால் அதன் இதழ்களிலும் 'விடு விடு' என்ற அதே துடிப்புத்தான்.
முற்றத்தில் மேயும் போதும் திண்ணையில் திரியும் போதும் வீட்டு வளையின் மேலும் விண்ணை அளக்கும் போதும் 'விடு விடு' என்ற ஒரே ஐபம்தான்.
துயிலும் கட்டிலில் தொற்றியும் தூங்கும் குழந்தையின் தொட்டில் கயிற்றினைப் பற்றியும் 'விடு விடு' என்றே அது ஜபிக்கிறது.
தானியம் பொறுக்கும் போதும். கூடுகட்டக் குச்சுப் பொறுக்கும் போதும், 'விடு விடு' என்ற ஐபத்தை அது விடவில்லை. அதன் சிற்றுடலே விடுதலைத்துடிப்புடன் வேக இயக்கமாயிருக்கிறது.
தலையை உருட்டுதலில், சிறகைக் கோதுதலில், காற்று வெளியில் 'ஜிவ்' வென்ற சிறகுதைப்பில் அதே துடிப்பு! சதா துடிப்பு!
நீ நேசித்த தேசத்திலும் அதன் ஒவ்வோர் அங்ககளினதும் - பெண்மையில், ஆண்மையில், பிணைக்கின்ற காதலில் மொழியில், இசையில், கவிதையில், உரைநடையில், அரசியலில், தொழிலில், ஆன்மீகத்தில் -- இதே துடிப்பை நீ உடுக்கொலித்தாய்.
'குடு குடு குடு நல்லகாலம் வருகுது' என்று நாட்டுக்கு நல்ல குறி சொல்ல தூக்கிய நின் உடுக்கின் ஒவ்வொரு முழக்கிலும் விடுதலைக் குருவியின் வீச்சு நிகழ்ந்தது. 'கொட்டு முரசு'வின் அதிர்விலும் அதே விட்டு விடுதலையாகும் வீச்சேதான்.
தூக்கம் எங்கெங்கு கெளவிற்றோ அங்கெல்லாம் துயிலெழுப்ப இந்தத் துடிப்புக் குருவியை நீ தூதுவிட்டாய். உயிர்த்துடிப்பின் உன்னதபடிமம், நின் விடுதலைக்குருவி.
அந்த விடுதலைக்குருவி எங்கள் வீட்டு முற்றத்திலும் மேய்தல் கண்டேன்.
சோம்பித் துயின்ற என்குழந்தைகளை எழுப்பி யுதுரு துருரு வென்ற குருவியைக் காட்டினேன் சோம்பலை உதறிய அவர்களில் தொற்றிய துடிப்பின் உயிரொளி கண்டேன். குருவியின் பின்னால் ஓர் கூட்டமே இயங்கிற்று.
விடுதலைக் குருவியோடு 'சடுகுடு' ஆடும் சிறுவா¢ன் கூத்து. 'விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலை' என்றந் நாளில் 'சடுகுடு' ஆடிய இளமையின் வேகம் என்னுள் புதுநடை பயிலும்.
விடுதலைக் குருவி! வீடுதேடி வந்தாய் நீ வாழி! நின் அலகிதழ் முனையில் எம் இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது. மூலை முடக்குகள், நாடி நரம்புகள் தோறும் விடுதலை வீச்சோட்டம் நிகழ்கிறது
சிட்டுக்குருவி! எட்டுத்திக்கும் பறந்தொரு சேதிசொல் விட்டு விடுதலையானோம் நம் கட்டுகள் யாவும் அறுந்தன வாமென்று. குறி சொன்னானே அந்தக் குடுகுடுப்பை காரன்! அவன் காதிலும் மெல்ல இச் சேதியைப் போடு!
(1983 / அலை-22)
!!!!!
இன்றைய இரவை அவனிடம் இழந்தோம், இனிவரும் பகலும் எமதென்பதில்லை, எங்கள் வீதியை அவனிடம் இழந்தபின் எங்கள் முன்றிலும் எமதென்றில்லை. - சு.வில்வரத்தினம்
எங்கள் வீதியை எமக்கென மீட்போம்
வீதியில் போகும்போது விபத்து நேராதிருக்க விதிமுறை உள்ளன; விதிமுறை உள்ளன.
விதிமுறை இருந்தும், விதிமுறை இருந்தும் ஒதுங்கியே செல்லும் பாதசாரிகளின் உயிர்களுக்கு ஏதும் உத்தரவாதமே இல்லை.
உறுமியே செல்லும் ராணுவ உந்துகளின் உள்ளிருந்து இயங்கும் துவக்குகளாலே எந்தநேரமும் இவர்தலை சிதறலாம் எந்தச் சமயமும் எம்தலை உருளும்.
ஒதுங்கியே செல்லினும் ஒதுங்கியே செல்லினும் எம்முயிர்க்கு இங்கு உத்தரவாதமே இல்லை.
சேதிகள் வருவன நாள் தோறும் வீதியின் நடப்புகள் விபத்துகள் அல்லவே.
'எவரையும் சுடலாம் விசாரணையின்றியே எரிக்கலாம் அன்றிப் புதைக்கலாம்' என்று இயற்றப்பட்ட புதிய விதிகளால் குருதியில் தோயும் நிகழ்வுகள் இங்கே.
இருளுக்கும் இருட்புலையர்க்கும் என்றே விடப்பட்டுப் போன எங்கள் வீதிகளில் வெளிப்படுவோரெல்லாம் சுடப்படலாம் தெருநாய்களைப்போல. எக்கணமேனும் எக்கணமேனும் எமக்கிது நிகழலாம்.
கூனிப் போன கொள்கையர் சொல்கிறார் யுமழை காலத்தில் நுளம்புகளோடு பழக்கப்படுகிறது போல படையினரோடும் பழக்கப்படுவோம்ரு என்று, ஏதோ பொ¢ய பகிடி ஒன்றை உதிர்த்தவர் போல உரக்கச் சிரித்தபடி.
தலைவரும் அவர்கள் சிறுமையும் சிறுமதியும் இன்னும் இருந்தவாறே.
சிறையுளே வதைபடும் விடுதலை நேசர் நிலை கண்டு நெகிழாதார் இவர் செய்கை, நெஞ்சுள் முள்ளாய் நெருடுமே.
நண்ப, நினக்காக நெகிழும் என் நெஞ்சு; நின்னினிய துணைக்காகவுந்தான்.
நின் துயர் நிகழ்வு என் செவியுறு கணத்தில், நான் துணுக்குற்றேன் தொடர்ந்து நடுக்குறலாயிற்றென் நெஞ்சம்.
போ¢னவாத ஒடுக்குமுறை அரசின் இராட்சதக் கரம் இளைஞா¢ல் தொடங்கி மதகுருமார், கலைஞர், புத்திஐ£விகள் மேலும் வீழ்ந்தாயிற்று. இனி என்ன? 'பத்துத் தலைகளும் இருபது கரங்களும் திக்கெல்லாம் தேடிவரும்'
என் செய்தோம்? வெறும் வாய்ச் சொல்லில் வீரராய் வன்துயர் களையும் வலிமை இல்லோமாய் என்புதோல் போர்த்திருந்து என் செய்தோம்? கையில் வெறுமனே எழுதுகோல் தா¢த்தோம்.
நண்ப, நினக்காக நெகிழும் என் நெஞ்சு; நின்டினினிய துணைக்காகவுந்தான்.
அந்தநள்ளிரவில், நட்சத்திரங்களும் நடுங்கித் துயருறும் அந்த நள்ளிரவில் இருளின் புலையர்கள் வந்து கதவைத் தட்டினர்.
கதவைத் திறந்த கணத்தினில் நீட்டிய துவக்குகளின் கத்திமுனை உமது நெஞ்சில் அழுத்தவும், அவர்கள் நையப் புடைக்கையில் எலும்புகள் நறுக்கென்ற போதிலும் நடுக்குற்றிருப்பீரோ நண்ப அந்த நள்ளிரவின் திரட்சியில் நீயும் நின் துணையும்? நானறிவேன் நீவிர் யார்க்கும் அஞ்சா நெஞ்சுரம் உடையீர்; எதையும் எதிர்கொள்ளும் ஆளுமை பெற்றீர்.
எனினும் நடுங்கா நாட்டத்து நண்ப, இது கேள் நினக்கும் துயர் வதையுறும் விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும். குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும் இலாதது ஆத்மா! இருமைகள் அதற்கில்லை என்பது வேதம்.
ஆதலின் நடுங்குதல் தவிர்க ஆத்ம நண்பனே.
வேதம் அபினி என்று நீ வியாக்கியானிப்பாய் எனினும் இங்கு ஓதும் உண்மை உயிர்த் துணையாமே.
நடுங்குதல் வேண்டா நினது சுயேச்சா வலுவின் கெட்டியால் உடல் - மனத் தள வலி கடந்தவன் ஆகுக.
விலங்குகள் உமது கரங்களைப் பிணிக்கலாம் விடுதலை மூச்சை விலங்குகள் என் செயும்?
எனக்குள் கேட்டதே! இதயம் முழுதையும் சாறாய்ப் பிழிந்ததே! ஓ... இதயமே இல்லா உங்களை இந்த எதிரொலி எங்கே உரசிச் செல்லும்? சந்திகள் தோறும் என்னைக் கல்லில் வடித்து வைத்துக் கல்லாய் இருக்கக் கற்றவர் மீது கருணையின் காற்று எப்படி உயிர்க்கும்?
மனச்சாட்சி உயிரோடிருந்தால் வீதியெலாம் மனித இறைச்சிக் கடைகள் விரித்து மானுடத்தை விலை கூறியிருப்பீரா? குருதியால் என்னை அபிஷேகித் திருப்பீரா?
வெலிக்கடை அழுக்குகள் உங்கள் வீரத்தின் பெயரா? ஓ! எத்தனை குரூரம்.
எனது பெயரால்தான் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை. எனது பெயரால்தான் இனப் படுகொலை குருதி அபிஷேகம் இவை எல்லாமும்.
உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இழிநிலை.
நான் போதித்த அன்பு, கருணை எல்லாம் கல்லறைக்குள் போக்கிய புதைகுழி மேட்டில் நின்று என் சிலைகளைப் பூசிக்கிறீர் உங்கள் நெஞ்சில் உயிர்க்காத என்னை கல்லில் உயிர்த்திருப்பதாய்க் காணும் உங்கள் கற்பனையை என்னென்பேன்? நானோ கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல.
கண்டதுண்டமாய் அவர்களை நீங்கள் வெட்டியெறிந்த போதெல்லாம் உதிரமாய் நானே பெருகிவழிந்தேன் நீங்கள் அதனைக் காணவேயில்லை.
கைவேறு கால்வேறாய்க் காட்டிலே கிடந்து யுதாகமாயிருக்கிறேன்ரு என்று கதறியதும் நானே அக் கதறல் உம் செவிகளில் விழவேயில்லை. கல்லாய் இருந்தீர் அப்போதெல்லாம்.
ஆணவந் தடித்த உங்கள் போ¢னவாதக் கூட்டுமனம் எனக்குள் மறைந்து கொண்ட எத்தனிப்பே என்னை வெறுங் கல்லில் மட்டும் கண்டதன் விளைவன்றோ?
நானோ கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல. மாறுதல் இயற்கை நியதி என்ற உயிர்நிலை ஓட்டத்தின் உந்து சக்தி நான் கல்லல்ல; கல்லே அல்ல.
எனது ராஐ¡ங்கத்தையே உதறிநடந்த என்னைக் கல்லாக்கிவிட்டு உங்கள் சிங்கள பெளத்த ராஐ¡ங்கத்துள் சிம்மாசனம் தந்து சிறைவைக்கப் பார்க்கிறீர்.
யாருக்கு வேண்டும் உங்கள் ஆக்கிரமிப்புக் குடைவிரிப்பின்கீழ் சிம்மாசனம்?
நான் விடுதலைக்கு¡¢யவன். நிர்வாணம் என் பிறப்புடன் கலந்தது.
சிங்கள பெளத்தத்துள் சிறையுண்ட உமக்கெலாம் எனது நி¡வாண விடுதலை ராஐ¡ங்கத்தின் விஸ்தீரணம் புரியாது அன்பரே பிரபஞ்சம் மேவி இருந்த என் ராகயம் பேரன்பின் கொலுவிருப்பு என்பதறியீர்; வழிவிடுங்கள் வெளிநடக்க.
நெஞ்சில் கருணைபூக்காத நீங்கள் தூவிய பூக்களிலும் குருதிக்கறை; சூழவும் காற்றிலே ஒரே குருதிநெடில்.
ஓ! என்னை விடுங்கள் நான் வெளிநடக்கிறேன் - என்னைப் பின்தொடராதீர் இரத்தம்தோய்ந்த சுவடுகளோடு.
நான் போகிறேன். காலொடிந்த ஆட்டுக்குட்டியும் நானுமாய் கையடிந்த மக்களின் தாழ்வாரம் நோக்கி, அதுதான் இனி என் இருப்பிடம்.
வருந்தி அழைத்த பெரும் பிரபுக்களை விடுத்து ஓர் ஏழைத்தாசியின் குடிலின் தாழ்வாரத்தில் விருந்துண்டவன் நான்.
'மரணம் - கள்வனைப்போல் வரும்' அதுவும் உங்களுக்கு துப்பாக்கியாலும் சித்திரவதையாலும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
கவனம்! நள்ளிரவில் சப்பாத்தின் ஒலிகளினால் உனது வீட்டின் விளக்கின் ஒளி நடுங்கும்.
இழுத்துச் செல்லப்படுவாய் பிள்ளைகள் கதற மனைவி திகிலில் உறைய இழுத்துச் செல்லப்படுவாய். அக் கணத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவன் தீர்மானித்தால் மனைவியும் இழுத்துச் செல்லப்படுவாள்.
இப்படித்தான் ஒரு பகற் பொழுதில் உனது நண்பனும் மனைவியும் இழுத்துச் செல்லப் பட்டார்கள்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒப்புதல் பத்திரத்தில் கையப்பம் இட்டே ஆகவேண்டும்.
இல்லையென்றால் 'எஸ்லோன்' பைப்பும் தலை கீழாய்த் தொங்க சாக்கின் வழியாய் மிளகாய்ப் புகையும் மலவாசல் நுழையும் இரும்புக் கம்பியும் யாருக்காக...? இவையெல்லாம் இயல்பாய் நீங்கள் அளித்த வாக்கு மூலங்களாய் முனை முறிந்த தராசில் நிறுக்கப் பட்டு தீர்மானித்த இலக்கு நோக்கி நகர்த்தப் படுவீர்.
எனவே யசோதரா நீ இக் கணத்தில் வாழ்ந்துவிடு.
(1983)
!!!!!
81 மே 31 இரவு
றாணி! இன்னும் வரவில்லை யென்று அச்சம் சூழ வாசலைப் பார்த்தபடி எனக்காகக் காத்திருப்பாய்.
ஆதரவிற்கு உன்னருகில் யாருண்டு...? வீட்டினுள்ளே சின்னஞ் சிறுசுகள் மூலைக் கொன்றாய் விழுந்து படுத்திருக்கும்.
வெறிச்சோடிய வீதியில் நாய்கள் குரைக்க விரைந் தோடிய ஒருவனால் செய்திகள் பரவ இன்னும் கலங்குவாய்.
தொலைவில் உறுமும் ஐ£ப்பின் ஒலியில் விளக்கை அணைத்து இருளில் நின்றிருப்பாய்.
உயிரைக் கையில்டி பிடித்தபடி குண்டாந் தடிக்கும், துப்பாக்கி வெடிக்கும், தப்பி யோடிய மக்களில் ஒருவனாய் என்னை நினைத்திருப்பாய்.
ஆணிகள் அடித்த சிலுவைதன்னிலும் கவிழ்ந்து போகுமோ என்சிரம் என்றும் ?- மு.புஸ்பராஐன்
பீனிக்ஸ்
எவ் வகையிலும் நீமுயன்ற போதிலும் அழிவென்பதோ எனக்கு இல்லை.
வல்லமை கொண்ட என்குரல் தன்னை ஏந்திடும் காற்றே! நீள்கட லோடி நெடுமலை தாவி பாருலகெங்கும் பறையாய் முழங்குக.
அன்னை மடியில் தவழ்ந்த போது, சிறுவிழி காட்டிச் சின்ன வாயால் அம்மா வென்று அழைத்ததாலோ நித்தம் நித்தம் முள்முடி சூட்டியும் ஆணிகள் அடித்தும் சிலுவையில் அறைகிறாய்...?
ஆணிகள் அடித்த சிலுவைதன்னிலும் கவிழ்ந்து போகுமோ என்சிரம் என்றும்?
என்முகம் சிதைத்து என்குலம் அழிக்க எரியும் நெருப்பாய் சூழும் போதெலாம் புத்தொளி கொண்டு பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் வானில் பறப்பேன்.
(1984)
!!!!!
சாருமதி
அந்த இரவுகளிலும் நாங்கள் துயில் கொள்ளச் சென்றோம், இரவுகள் அமைதியானவை என்று!
சூரியனும் என்னைப் பார்த்துச் சொன்னது
அந்த இரவுகளிலும் நாங்கள் துயில் கொள்ளச் சென்றோம்; இரவுகள் அமைதியானவை என்று!
பாயின் விளிம்பை விலக்கிச் செல்லும் உடலின் அங்க அசைவுகளை நிமிர்த்தி, ஒடுக்கி, மல்லாந்து, சா¢ந்து அந்த இரவுகளிலும் நாங்கள் துயில் கொண்டோம்; இரவுகள் அமைதியானவை என்று!!
வழமைபோல் கனவுகளும் வந்தன; அவள் வந்தாள்! அவன் வந்தான்; எங்கோ தா¢சித்த அல்லது நினைத்து முடித்த நினைவுகள், காட்சிகள்... உணர்வுக் கூம்பின் அடியில் உறங்கிக் கிடந்தவைகள், கனவுகளாய்ப் பா¢ணமித்தன.
அந்த இரவுகள் அழிந்தன. ஆம்! உதயம் எழுந்தது நாங்களும் விழித்துக் கொண்டோம்.
கோயில் முகப்புகள் எரிந்து கிடந்தன... கொடிகட்டிப் பறந்த கட்சி ஒன்றின் அலுவலகம் கிடையாய்க் கிடந்தது... கடைகள் எல்லாம் குதறி எறியப் பட்ட உடலாய்ச் சிதைவுகளாய்த் தீயில் உருகிக் குவிந்து கிடந்தன...
தெருவில் பிணங்கள் தூக்கி வீசப்பட்டிருந்தன... அவைகளின் உதிரத் தொடர்புகள் துடித்துக் கதறி ஓர் இனத்தின் கோலத்தை தம் ஓலத்தில் உரித்தாக்கிக் கொண்டன.
அறிவுக் களஞ்சியமான அந்த நு¡ல் நிலையமும் அக்கினியால் கற்பழிக்கப்பட்ட தன் மன ஆதங்கத்தைத் தாங்காது சந்திர சூரியருக்கும் வெந்து போன தன் நிலையை விளக்க புகையால் தூது சொல்லிக் கொண்டிருந்தது.
கலைந்த துயில் விழிப்பின் முன்னால் இறந்துபோன நிமிடத் துடிப்புகளின் உயிர்ப்புகளை எழுதிப் பிடித்து விலைக்குத் தரும் செய்திச் சூத்திரமும்* சுட்டொ¢க்கப் பட்டிருந்தது.
கையில் யாழுடன் கல்லில் சிலையாய் அன்னையிவள் இப்பொழுது வாசித்துக்கொண்டிருப்பது எந்த ராகமோ...? முகாரியா - அல்லது முடிந்துபோன கதையன்றின்...?
அந்தச் சிலையருகே அந்தா¢த்து வெம்பிக் குதிக்கும் மன வெகிறுடன் நின்றிருக்கும் என் கால்கள் கொண்டுவிட்ட இறுக்கமேன்...?
தந்தையைப்போல் மூத்த என் துயர் ஒத்த ஒரு தோழர் என் அருகே நின்றார்...
கண்ணில் பனித்த கண்ணீர்த் துளிகள் காலடியின் மண்ணில் சுவற வானத்தின் அந்தகாரத்தைப் பார்த்து என்ன நினைவுகளுடன் அவர் தன்னிரு கை நீட்டினாரோ?
அண்ணாந்து நானும் பார்த்தேன். சூரியனும் என்னைப் பார்த்துச் சொன்னது நீ ஒரு தமிழனென்று!
எங்கோ ஓர் இடத்தில் உச்சிக்கேறிய வெறியில் காக்கிச் சனாதனிகளின் வெற்றிக் களிப்பு ஆரவாரங்கள்... என் மண்டைக் கபாலத்துள் சித்திரமாய்த் தெறித்தன.
(1982 / தீர்த்தக்கரை) * ஈழநாடு
!!!!!
ஆதவன்
எனது குரலை நீ கேட்டல் கூடுமா? இதயத்தின் அடியிலிருந்து நான் கதறும் ஓலம் உனக்குக் கேட்கிறதா ரன் மெனிக்கே? - ஆதவன்
ஆதரே...!
ரன் மெனிக்கே...! எனது குரலை நீ கேட்டல் கூடுமா? இதயத்தின் அடியிலிருந்து நான் கதறும் ஓலம் உன் செவிகளுக்கு எட்டுமா நண்பி?
நீ 'ரைப்' அடிக்கும் மேசை எனக்கு முன்னால் இருந்ததால் மட்டுமா நீ எனக்கு நண்பியானாய்? ஒவ்வொரு காலையும் மாலையும் யந்திரமாய் ஒன்றாய் ஓடிக் களைத்து நொ¢சலான பஸ்சினுள் பயணம் செய்வதாலா? அலுவலக நண்பர் குழாமுடன் 'பிக்னிக்' போகையிலும் சிறீபாத மலையின் படிகளிலும் ஒன்றாய்க் குடித்த 'கொக்கோக்கோலா'வா எம்மை நண்பர்களாக்கியது?
மனித உறவுதான் மனிதம் படைத்த உன்னத உறவுதான் உனது காதலையும் எனது காதலையும் ஒளிர்வித்தது. 'ஆதரே' என்ற உனது ஒவ்வொரு சொல்லிலும் மனிதம் மிளிர்ந்தது நண்பி.
அன்று - எரிந்த என் உடைமைகளுடன் உனது மணிமணியான கடிதங்களுந்தான் சாம்பராயிற்று. ஒரே கா¢க்குவியல் நண்பி. நெருப்புச் சுவாலைகளுக்கும் புகைமண்டலங்களுக்கும் நடுவே இறுதியாய் நான் பாதுகாத்து வைத்திருந்த எனது பிறந்தநாளுக்கு நீ தந்த 'சேட்'டையும் இழந்து உள்ளங்கியுடன் மட்டும் ஒவ்வொரு காலையும் மாலையும் நீயும் நானும் யந்திரமாய் ஓடுகின்ற பம்பலப்பிட்டித் தெருவில் ஓடியபோது...
கண்ணீரும் வற்றிய நிலையில், மெனிக்கே மனிதம் - மனித உறவு - உறவுகளின் உன்னதம் காதல் - ஆதரே
ஒரு கணப்பொழுதில் மெனிக்கே கையில் அலா¢ப் பூக்கொத்துடன் - வெள்ளைச் சேலையுடன் - நீயும், வெள்ளை உடுப்புடன் நானும், 'பன்சலை' போனது நினைவில் ஓடியது. சாந்தமான புத்த பகவானின் புனித முகமும் நீ வணங்கிய விதமும்... அந்த இனிய மாலை.
'மகே ஆதரே' ரன் மெனிக்கே என் நெஞ்சினுள் மனிதம் - மனிதஉறவு சந்தேகமானது என உணர்கிறேன் எனது குரலை நீ கேட்டல் கூடுமா? இதயத்தின் அடியிலிருந்து நான் கதறும் ஓலம் உனக்குக் கேட்கிறதா ரன் மெனிக்கே?
(1983 / புதுசு-8)
!!!!! தத்துவத்தின் தொடக்கம்
நானும் நண்பனும் நடந்து களைத்தோம் கதைத்தோம். நீண்ட கால இடை வெளியில், இந்த இனிமைச் சந்திப்பில் படித்திருந்த, பதிந்திருந்த தத்துவங்களை மீட்டோம். பேட்டன் ரஸ்ஸலும் விற்கின்சைனும் வெளியே வந்தார்கள்.
முரண்பட்ட கருத்துக்கள் மோதுகின்ற உச்சத்தில் 'ரஸ்ஸலின் புத்தகத்தில் இதோ காட்டுகிறேன் வா என்னுடன்' என நண்பன் எழுந்து நின்றான். பின்னர், மூச்செறிந்துவிட்டு மெளனித் தமர்ந்தான்.
நந்தவனங்களில் மலராத இந்தச் சுதந்திரப் பூக்கள் ஒவ்வொன்றாய்... ஒவ்வொரு இருட்டிலும்... உன்னைப் போல் ரகசியமாய்...
இன்றும் சில பூக்களைக் காணவில்லையாம். நேற்றுப் போல இன்றும் வானம் இருண்டு கொண்டு போகிறது...
!!!!!
ஊர்வசி
விடியலில், கருக்கல் கலைகிற பொழுதில் எனக்குக் கிடைத்த தற்காலிக அமைதியில் நான் உறங்கும் போது..- ஊர்வசி
இடையில் ஒரு நாள்
எப்பொழுதாவது ஒரு மாலையில் அது நடக்கலாம் :
ஒரு மதகுரு அல்லது முக்காடு அணிந்த ஒரு மாது ஒரு தாடி மீசைப் பிச்சைக்காரன் இப்படி, இன்னும் வேறு யாராவது என் வீட்டு வாசலில் கதவைத் தட்டலாம்...
நான் அவர்களைச் சட்டென அடையாளம் கண்டு கொள்கிறேன்... அந்த இரவு முழுவதும் நீ என்னருகில் இருப்பாய்... வாய் திறந்து பேச விரும்பாத மெளனம் இடையே கவிந்துள்ளது... உனக்கு மிகவும் பா¢ச்சயமான துப்பாக்கியை, துண்டுப் பிரசுரங்களை, அடர்ந்த காட்டை, இன்னும் எதையெதை யெல்லாமோ மறந்து போய் உனது உடலும், மனமும் எனக்குள் அடைக்கலமாகும்.
விடியலில், கருக்கல் கலைகிற பொழுதில் எனக்குக் கிடைத்த தற்காலிக அமைதியில் நான் உறங்கும் போது, ஒரு முரட்டுத்தனமான கதவுத் தட்டலுக்குச் செவிகள் விழிக்கும்.
ராணுவக் கும்பல் அல்லது பொலிஸ் படை பிறகு கூந்தல் அவிழ்ந்து விழுகிற வரையில் விசாரணை என்னருகே அம்மாவும் கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட ஒரு அணில் குஞ்சைப்போல...
நீ போய்விட்டாய்; நாள் தொடர்கிறது...
(1982 / புதுசு-6)
!!!!!
நீட்டிய துவக்குகள் முதுகில் உறுத்த அவன் நடந்தான் அவர்களுடன் அந்த இரவில். - ஊர்வசி
அவர்களுடைய இரவு
நிழலே இன்றி வெயில் தகிக்க நீளும் பகல் பொழுதில் தனியாக ஒரு காகம் இரங்கி அழும்.
வேலி முருங்கையும் மெளனமாய் இலையுதிர்க்கும் அரவமொடுங்கிய நள்ளிரவுகள். ஆள்காட்டி மட்டும் ஒற்றையாய்க் கூச்சலிடும் சேலைக் கொடியில் அவனது வேட்டி ஆடும்... நெஞ்சில் திகில் உறையும் விழித்தபடி தனித்திருத்தலில் மனம் வெந்து தவிக்கும்.
அன்றைய முன்னிரவில் நெஞ்சில் ஆழப் பதிந்தவை மீண்டும் கருக் கொள்ளும்; அச்சம் சுண்டியிழுக்கும். அந்த இரவில் இருள் வெளியே உறைந்து கிடந்தது ஐந்து ஜீப்புகள் ஒன்றாய்ப் புழுதி கிளப்பின சோளகம் விசிறி அடித்தது என் ஆழ்மனதில் அச்சம் திரளாய் எழுந்து புரள அவனை இழுத்துச் சென்றனர்.
பல்லிகள் மட்டும் என்னவோ சொல்லின கூரைத்தகரமும் அஞ்சி, அஞ்சி மெதுவாய்ச் சடசடத்தது. காலைச் சுற்றிய குழந்தை வீரிட்டழுதது. விடுப்புப் பார்க்க அயலவர் கூடினர்.
நீட்டிய துவக்குகள் முதுகில் உறுத்த அவன் நடந்தான் அவர்களுடன் அந்த இரவில் ஐம்பது துவக்குகள் ஏந்திய கரங்கள் என்னுள் பதித்த சுவடுகள் மிகவும் கனத்தவை.
அந்த இரவு அவர்களுடையது.
(1982 / புதுசு-6)
!!!!!
சிறுதுண்டு மேகம் மேலே ஊர்ந்து செல்வதில் இன்னும் மரக்கிளையின் நுனி அரும்பித் தளிர்ப்பதில் எப்போதாவது ஒரு குருவி நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத் தாண்டிப் பறப்பதில், நான் இதுவரை வாழ்ந்த உலகில் என் மனிதரைக் காண்பேன். - ஊர்வசி
சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்
ஜயா, என்னை அடைத்து வைக்கிறீர்கள் நான் ஆட்சேபிக்க முடியாது சித்திரவதைகளையும் என்னால் தடுக்க முடியாது ஏனெனில், நான் கைதி. நாங்கள் கோருவது விடுதலை எனினும் உங்களது வார்த்தைகளில் பயங்கரவாதி.
உரத்துக் கத்தி அல்லது முனகி எனது வேதனையைக் குறைக்கக்கூட முடியாதபோது எனது புண்களில் பெயர் தொ¢யாத எரிதிராவகம் ஊற்றப்படும் போது எதையும் எதிர்த்து எனது சுண்டுவிரலும் அசையாது. மேலும் அது என்னால் முடியாதது என்பதும் உங்களுக்கு நன்றாகத் தொ¢யும்.
அதனால்தான் ஐயா, ஒரு தாழ்மையான விண்ணப்பம் என்னை அடைக்கிற இடத்தில் எட்டாத உயரத்திலாயினும் ஒரு சிறு சாளரம் வேண்டும். அல்லது, கூரையில் இரண்டு கையகல துவாரம் வேண்டும் சத்தியமான வார்த்தை இது. தப்பிச்செல்லத் தேடும் மார்க்கமல்ல தகிக்கும் எனது ரணங்களில் காற்று வந்து சற்றே தடவட்டும் சிறுதுண்டு மேகம் மேலே ஊர்ந்து செல்வதில் இன்னும் மரக்கிளையின் நுனி அரும்பித் தளிர்ப்பதில் எப்போதாவது ஒரு குருவி நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத் தாண்டிப் பறப்பதில், நான் இதுவரை வாழ்ந்த உலகில் என் மனிதரைக் காண்பேன்.
பைத்தியமென்று நீங்கள் நினைக்கலாம் ஆனால், எதைத்தான் இழப்பினும் ஊனிலும் உணர்விலும் கொண்ட உறுதி தளராதிருக்க அவர்களுக்கு நான் அனுப்பும் செய்தி இவைகளிடம்தான் உள்ளது ஐயா.
(1984)
!!!!!
காத்திருப்பு எதற்கு?
எதற்காக இந்தக் காத்திருப்பு?
வயல் தழுவிய பனியும் மலை மூடிய முகிலும் கரைவதற்காகவா? இல்லையேல் காலைச் செம்பொன் பா¢தி வான் முகட்டை அடைவதற்காகவா?
அதுவரையிலும் என்னால் காத்திருக்க முடியாது. என் அன்பே, எத்தனை பொழுதுகள் இவ்விதம் கழிந்தன?
காதல் பொங்கும் கண்களை மதியச் சூரியன் பொசுக்கி விடுகிறான் கடலலைகள் அழகு பெறுவதும் தென்னோலையில் காற்று கீதம் இசைப்பதும் காலையில், அல்லது மாலையில் மட்டுமே!
ஆனால், எமது பூமி, எமது பொழுதுகள் எதுவுமே எமக்கு இல்லையென் றானபின் இதுபோல் ஒரு பொழுது கிடைக்காமலும் போகலாம்... தொடரும் இரவின் இருளில் எதுவும் நடக்கலாம்.
ஆதலால் அன்பே, இந்த அதிகாலையின் ஆழ்ந்த அமைதியில் நாம் இணைவோம்...
(1983 / புதுசு-8)
!!!!!
உங்களுடைய அம்மாவின் கடிதங்களை நான் பி¡¢க்கவேயில்லை. அவை சுமந்துள்ள புத்திர சோகத்தை என்னால் தாள முடியாது. -
நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?
யாழ்ப்பாணம் 10-11-83
எனக்குத் தொ¢ந்த எந்த விலாசத்திற்கும் இக் கடிதத்தை அனுப்பிப் பிரயோசனமில்லை. ஆனாலும் இதை எப்படியும் உங்களிடம் சேர்ப்பித்தே ஆகவேண்டும். உங்களிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னுள் உறுதியாக உள்ளது.
இங்கே முற்றத்து மல்லிகை நிறையவே பூத்துள்ளது. பகலில் தேன் சிட்டுக்களும் இரவுகளில் பூமணம் சுமக்கின்ற காற்றும் எங்கள் அறை வரையிலும் வருகின்றன. அடிக்கடி எனக்குத் தொ¢யாத யாரெல்லாமோ வீட்டுப்பக்கம் வந்து போகிறார்கள். ஆயினும் இன்றுவரை விசாரணை என்று யாரும் வரவில்லை.
சின்ன நாய்க்குட்டி காரணமில்லாமலே வீட்டைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறது. வாலைக் கிளப்பியபடி, எதையோ பிடித்துவிடப் போவது போல. விழித்திருக்க நேர்ந்துவிடுகிற இரவுகளில் உங்களுடைய புத்தகங்களை தூசி தட்டி வைக்கிறேன். அதிகமானவற்றைப் படித்தும் முடித்துவிட்டேன். உங்களுடைய அம்மாவின் கடிதங்களை நான் பிரிக்கவேயில்லை. அவை சுமந்துள்ள புத்திர சோகத்தை என்னால் தாள முடியாது.
மேலும், அன்பே எங்கள் மக்களின் மீட்சிக்காகவே நீங்கள் பிரிந்திருக்க நேர்ந்துள்ளது என்பதே எனக்கு ஆறுதல் தருவது. இந்தத் தனிமைச் சிறை தரும் துயர் பொ¢து ஆயினும் உங்களைப் பிரிந்தபின் எதையும் தாங்கப் பழகியிருக்கிறேன்.
மேலும் இன்னொன்று, இதுதான் மிகவும் முக்கியமாக நான் எழுத நினைத்தது நான் ஒன்றும் மிகவும் மென்மையானவளல்ல முன்புபோல் அவ்வளவு விஷயம் புரியாதவளுமல்ல நடப்பு விஷயங்களும் எதுவும் நல்ல அறிகுறிகளாக இல்லை. நீண்ட காலம் நாங்கள் பிரிந்திருக்க வேண்டும் என்பது என்னவோ நிச்சயமானதே. பின்னரும் ஏன் இன்னமும் நான் வீட்டுக்குள் இங்கே இருக்க வேண்டும்? என்ன, நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?
பனைகளின் கீழே அறிவுக் கதிரவன் ஆடி அடங்கும் அந்தி வேளை,
எங்கள் சாம்ராச்சியத்தின் எண்ண வானத்தில் மேற்கே தலைவைத்து வடக்கே பறக்கும் வெளவால்கள்.
அந்நியம் தான்
எங்கள் கிராமத்திற்கு சொந்தமில்லாத யுகறுப்புக் கோட்ரு வெளவால்கள்.
எங்கள் இத்திகள் இலுப்பைகளின் இளைய தளிர்களை பூக்கள் ஓலமிட, சப்பி, துப்பி சக்கையாக்கும்.
அடுத்த பருவத்திலும் வெளவால்கள் அலைகடல் தாண்டி பறந்து வரும் அப்போதும் இலுப்பைகள் மணம் நிறைந்து பூப்பூக்கும் இத்திகளிலே இளந்தளிர்கள் எண்ணிக்கையற்று நிறைந்திருக்கும்.
இனி சுழன்று வீசும் காற்றில் களைத்துப் போய் ஒதுங்கிக் கொள்ளும் வெளவால் கூட்டம்.
எனது நாடும் சோலையும் எரிந்த புகைக்காடு இன்னும் அடங்கவில்லை.
சாம்பல் மேட்டில் நின்றபடி எந்தக் கடலிலோ நிற்கும் உனக்கு எழுதுகின்றேன்
நண்பா! நீயும் அறிந்திருப்பாய் கலங்கியும் இருப்பாய் வானத்தை வெறித்து பார்ப்பதைத் தவிர நீ வேறு என்ன செய்யப் போகிறாய்?
நீ திரும்பி வரும் போது நாடும் சோலையும் இருக்கும் என்பதில்லை.
உனக்கு இது எல்லாம் சாதாரணம் என்கிறாயா?
என்னால் அப்படி இருக்கமுடியாது.
எனது சோலை எனக்கு வேண்டும் எனது கூவல் நிறைய வேண்டும்.
(சிறையிலிருந்து)
!!!!!
நா.சபேசன்
காலம்
மஞ்சளாய்ப் பழுத்த இலைகள் சொரியும் பூவரச வேலிகளும், வயல் வெளியெலாம் ஓரங்கட்டும் பனைகளும் நிறைகிற எனதூரில் காகங்கள் கூட சுதந்திரமாய் திரிந்த காலமொன்றுண்டு.
செம்பாட்டு மண்ணிலும் மிளகாயும், வெண்காயமும் நிறைய நிறைய விளைந்திருக்கும். சாமம்வரையும் திருவிழா நடக்கும் கலகலத்தபடி நடந்து செல்வர் எமது பெண்கள். நிலாமுற்றத்தில் எமதன்னையர் பாடலிசைத்தனர்.
நிழலையும் பூவையுந் தந்திருந்த குடைவாகை மரத்தின் கீழொருநாள் - இளைஞர் இருவர் குருதியில் கிடந்தனர் அவர்களின் உடல்களை கொம்புலுப்பிப் பூக்கள் அஞ்சலி செய்தன.
சுவாமி காவிய பக்தர்கள் மீதும் திருக்கைவால் பட்டது வாகனத்தினது தலை தூரவிழுந்தது திருவிழாபோய் பூசை மட்டுமே நடக்கத் தொடங்கியது. அதுவும் போயிற்றுப் போ.
(1982 / வானம்பாடி-21)
!!!!!
ஒழுங்கை முடக்குகளில் காதலர்களோடு நின்று சல்லாபிக்கும் உன்வயதுப் பெண்களை காண நேர்கையில் என்னரும் சிநேகிதி உனது நினைவு பிரமிப்பாகும். - நா.சபேசன்
'இனமத பேதமற்று இன்று உண்ணா விரதம்' பத்திரிகையில் படித்து தொ¢ந்து கொண்டேன் நீயும் அங்கிருப்பாய் என்றும் நினைத்தேன்.
வயல்கள் நிறையும் கிராமத் தெருக்களில் சைக்கிளில் திரியும் உனது நினைவு சந்தோஷமளிக்கும் எனக்கு ரியூஷனுக்கு செல்லும் பெண்களை, ஒழுங்கை முடக்குகளில் காதலர்களோடு நின்று சல்லாபிக்கும் உன்வயதுப் பெண்களை காண நேர்கையில் என்னரும் சிநேகிதி உனது நினைவு பிரமிப்பாகும்.
'எல்லோரும் படித்தால் என்னரும் மக்களை, தங்களைப்பற்றியே தொ¢யாதிருக்கும் எங்கள் பெண்களை உணரச் செய்வது யாராம்? ' அன்றொருகால் என்னைக் கேட்டாய் யாழ்ப்பாணத்தில்.
திரும்பவும் உனைக் கண்டது கிராமத்திலே தான். என்னரும் மக்களை, தங்களைப் பற்றியே தொ¢யாதிருக்கும் எங்கள் பெண்களை தட்டியெழுப்பும் உன்னைக் கண்டேன்.
ஒரு சைக்கிள் போதுமுனக்கு எமது மக்களை தட்டியெழுப்ப. ஊரிலிருந்து நீ கொணர்ந்ததும் இவைதான் செருப்பு, ஒரு சைக்கிள், புத்தகங்கள் கொஞ்சம், இரண்டு சோடி உடுப்புகள்.
என்னரும் சிநேகிதி இன்று தான் ஒருவர் சொன்னாரிதனை கண்ணீர்ப்புகையின் பின்னர் உனது கூந்தலை பிடித்து உதைத்தனராம்.
கண்ணீர்ப்புகைகளும் குண்டாந்தடிகளும் உன்னை இன்னும் வளர்க்கும் என்பதை அவர்கள் அறியார்!
(சுவர்-1)
!!!!!
பதில்
ஆறுமணிச் செய்தி - முடிகையிலேதான் கேட்டேன். பூமி பிளந்து என்னையே விழுங்குவதாய் உணர்வு வந்தது.
முகமறிந்த சிலரதும் முகமறியாப் பலரதுமாய் ஐம்பத்து நால்வா¢ன் நினைவும் முகிழ்த்தது... ஒளிமிகுந்த நாட்களை எமது மண்ணில் நிறுவ துயர் மிகுந்த நாட்களை உறுதியோடு கடந்தீர்...
'விடுதலை பெறும் எனது நாட்டை பார்க்க அந்தகன் ஒருவனுக்கு அளியுங்கள் விழிகளை...' அந்நிய நீதிமன்றில் முழங்கீனீர்கள் தோழர்காள்!
நீங்களும் இன்றில்லை உங்கள் குரல்களும் இன்றில்லை துவக்கெடுத்த உங்கள் கரங்களும் துண்டிக்கப்பட்டு விட்டன...
ஒப்பாரிகளும் ஓலங்களும் எழும் எமது நாட்டில் இன்னும் நாங்கள் எஞ்சியுள்ளோம்!
துயா¢னை அறிவோம் அழுகையை அறிவோம் மரணத்தை அறிவோம் அதனை மீறி எங்களின் வலிமையும் அறிவோம்!
அழுகுரல் இனி அடங்கும் எங்கள் கரங்கள் பேசத்தொடங்கும்.
(1984)
!!!!!
பொபி ஸான்ட்ஸின் மரணம்
'பொபி ஸான்ட்ஸ்' உலகின் நரம்புகளை ஓர்கணம் அதிரச் செய்ததுன் மரணம்! முகமிழந்த மனிதா¢ன் மத்தியிலிருந்த என் உரோமங்கள் சிலிர்ப்புற்றன, தோழ!
வாழ்க்கை என்பது கடவுளின் தீர்மானமாகக் கொண்டவர் மத்தியில் உன்னைப் போன்ற எண்ணம் கொண்ட நாங்களும் இருந்தோம். 'வாழ்க்கை என்பது மனிதனின் சிருஷ்டி' என்ற படிக்கு மிகச் சில பேராய் ஓங்கிய குரலில் நாங்கள் கத்தினோம்!
வாழ்வு இல்லை என்பதை உணர்ந்து இன்றைக் கெங்கள் மக்கள் எழுந்து வருகிறார்.
எங்களால் இயன்ற வழிகளில் நாங்கள் மானிடர் என்பதை உரத்துக்டி கத்துவோம்.
நியூயோர்க் நகரத்துப் பூங்காவில் காதலி மார்பில் துவளும் மனிதனும் 'ஹேக்' நகர நீதவான்களும் இன்னும் எஞ்சிய எல்லா மனிதரும் எங்கள் உறுதி உணர்வர்.
அலையலையாய் மக்கள் எழுந்துவரும் காலைப் பொழுதிலும் பனி உறைகிறது... யுபொபி ஸான்ட்ஸ்ரு உந்தன் நினைவில் வாழ்வை மீட்பதன் வலிமை உணர்கிறேன்!
(1984)
!!!!!
இளவாலை விஜயேந்திரன்
எமக்கென நிலவு பால் வீசும் எத்தனை பொழுதுகள் செத்திருக்கும்...! நினைக்க வியர்க்கும் - எனினும் முனைப்பு முடிவிடத்தில் சுவர்கள் வீழ்ந்தன. - இளவாலை விஜயேந்திரன்
நாளைய நாளும் நேற்றைய நேற்றும்
முன்னே - முகிழ்க்கின்ற பனிப் போர்வையிலும் தோளின் சால்வை தூக்குதலை இன்னும் நாங்கள் பேணவில்லை.
'அவர்கள்' தாமே மனிதரென்றார் 'நாமும் நாமும்' என்றார்த்தோம். சுவர்கள் - சுற்றி எழுந்திருந்தன தகர்த் தெறிந்தோம்.
சுவர்கள் தகர்க்கப் படும் போதில் கற்களெம் மீதில் விழுந்தனதாம் ஓய்வுக்குள் தலைபுதைக்க மறுத்துவிட்டு தொடர்ந்து தகர்த்தோம்! தகர்த்தோம்.
எமக்கென நிலவு பால் வீசும் எத்தனை பொழுதுகள் செத்திருக்கும்..! நினைக்க வியர்க்கும் - எனினும் முனைப்பு முடிவிடத்தில் சுவர்கள் வீழ்ந்தன.
நேற்றும் தலையுயர்த்தி நடந்த தெருக்கள் தான் இப்போது நெஞ்சிடிக்க எவனெவனோ கைகொண்டு கழுத்தை நொ¢க்கும் கனவுகள் நேற்றல்ல, இன்றல்ல நாளைக்கென் வீட்டில் அதிரும் என்றுய்த்தபறை செவிக்குள் அதிர்கிறது.
மலங்க விழித்தபடி இருண்ட கண்களினால் எதுவோ தேடும் நாங்களும், எங்கள் பொழுதும்.
(1981 / புதுசு-4)
!!!!
பாவம், ஊர் முழுக்கக் குலுங்கியதில் ஒப்பாரி வைத்தழுது பிறகும், வீசுகிற எலும்புக்காய் விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும் சாகாமல் உயிர் வாழ்ந்தார். - இளவாலை விஜயேந்திரன்
ஆண்ட பரம்பரைக்கு
எமதூரின் மன்னவரை எங்கேனும் கண்டீரோ?
வான முகட்டில் வழி தொ¢யாச் சேனைப் புலத்தில் காடுகளில் ஊர்ப் புறத்துத் திண்ணைகளில் அவருலவும் அந்தப் புரங்களில்.
பாவம், ஊர் முழுக்கக் குலுங்கியதில் ஒப்பாரி வைத்தழுது பிறகும், வீசுகிற எலும்புக்காய் விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும் சாகாமல் உயிர் வாழ்ந்தார்.
கோடிப் புறமிருக்கும் குதிரை லாயங்களில் இரவுகளில் வந்து தங்குவாரோ? பிடியும், சேணம் இட்டுவையும்.
தொலைநீளக் கடற்பரப்பில் நீந்தித் தொலைத்தாரோ? மறுகரையில், இன்னும் ஒருதடவை அழுது தொலைத்தாரோ?
கடல் குடைந்து மீன்தேடும் மனிதர்களே! அக்கரையில் அவருடைய தலைதொ¢ந்தால் உரத்துச் சொல்லுங்கள், 'உங்கள் கி¡£டம் எங்களிடம் இருக்கிறது. தின்று கொழுத்தும், சிந்தித்தும் உம்முடைய மண்டை பெருத்திருக்கும் வரவேண்டாம், அளவுள்ளவன் சூடிக்கொள்ளட்டும்.'
(1985)
!!!!!
இருளின் அமைதியில் வெளியில் கரைந்தேன் விழியின் மணிகளில் தீப் பொறி ஏந்தினேன். - இளவாலை விஜயேந்திரன்
பாதியாய் உலகின் பா¢மாணம்
இளமையோ நெருப்பை விழுங்கிய ஒவ்வொரு கணமாய் ஊரும் என்று சாபமிட்டாய், உழன்றேன். காற்றும் இல்லாத அறையில் மூடச் சொல்லி விழிகள் கெஞ்சவும் மூச்சற்றுக் கிடந்தேன் கன்னங்கள் நனைந்தபடி.
வாழ்வைச் சிறிதாய் அர்த்தப்படுத்தி 'பார் இதோ உன் உலகம்' என்று மனதிடம் சொல்லி வெளிக் கொணர்ந்தேன். வீதியெல்லாம் குருதி கிடந்தது வேலியெல்லாம் எரிந்திருந்தது. தொலைவில் துவக்கு வெடிகளின் சத்தம் கேட்க நெஞ்சோ மறுபடி உறைந்தது. கழுகுகளா தரையிறங்கியது?
மறுபடி உறக்கம் கலைத்தாயிற்று. இருளின் அமைதியில் வெளியில் கரைந்தேன் விழியின் மணிகளில் தீப்பொறி ஏந்தினேன். ஒன்று சொல்லாமல் போய்விட்ட உனக்கு மற்றது சொல்லாமல் வந்துவிட்ட அவர்களுக்கு.
துயரத்தை காற்று விழுங்கும் - தெருவில் குருதி நிறையும்! தரையில் வற்றி உலர இலையான் விழும் சிலவேளை வாலாட்டி முகருகிற தெரு நாய்.
இருப்பினும், உலகம் அமைதி தழுவி நிற்கும்.
ஒரு பொழுதில் வேட்டொலிகள் தீரும் அமைதி குலையும். இலையானும் சிலவேளை தெருநாயும் படையெடுக்கும்.
துயரத்தை நிறைத்த காற்று அதிரும். 'இடையே இப்படித்தான் என'
(1981 / புதுசு-3)
!!!!!
மைத்ரேயி
உழைத்து ஓடான அம்மாவின் நம்பிக்கை அண்ணாவின் வரம்பில்லாக் கற்பனைகள்- தரப்படுத்தப் பட்டு தரைமட்டமான போது... மைத்ரேயி
கல்லறை நெருஞ்சிகள்
'அவர்கள்' கூறுகிறார்கள் - எங்களை நெருஞ்சிகள் என்று. நெருஞ்சி விதை தூவியதே அவர்கள் தான். பிறகென்ன நித்திய கல்யாணியா முளைக்கும்?
அவர்களின் மொழி படிக்காமல் ஓய்வு பெற்ற அப்பா - வாழ்வின் பொருளாதார அத்திவாரம் ஆடியதால் நிரந்தர ஓய்வு பெற, அவருடன் எம் வசந்தங்களும் புதைக்கப்பட்ட போதே... நெருஞ்சிகள் விதைக்கப்பட்டன.
உழைத்து ஓடான அம்மாவின் நம்பிக்கை, அண்ணாவின் வரம்பில்லாக் கற்பனைகள் - தரப்படுத்தப் பட்டு தரைமட்டமான போது... நெருஞ்சிகள் முளை கொண்டன.
வலைவீசி மீன் வாரி 'ட்றக்'குள் போட்டு அடித்துதைத்து உடல் நொ¢த்துக் கருவாடாக்கி கதறக் கதறக் கற்பழித்து, கைவேறு கால் வேறு உடல்கள் வேறாய் மண் உண்ட தீயணைத்த சடலங்கள் மீதில் சிறு நெருஞ்சி தலைநிமிர்ந்து கிளை கொண்டன.
நெருஞ்சிமுள் அவர்காலைக் குத்தும், அவருடலைக் கிழிக்கும், நெருஞ்சிகள் தாம் முளைத்த கல்லறையின் பக்கலில் அவர்கட்கும் நிலையான சமாதிகளைக் கட்டும்.
பந்தலைப் பிரிக்குமுன், வந்த உறவினர் போகுமுன் நீதான் போய்விட்டாய்.
என் மன ஆழத்திற்கு இது தொ¢ந்து தானிருந்தது இருந்தும், திருமணம் சிலவேளை உனை மாற்றலாமென... பலவந்தமாக - ஆம், பலவந்தமாகத்தான் உன்னை மணந்தேன். எனக்கு அப்போது உன் லட்சியத்தின் களபா¢மாணமோ உன்னைத் தடைசெய்ய முடியா தென்பதோ விளங்கியிருக்கவே யில்லை.
இப்போது துக்கப்படுகிறேன் - அன்று உன்னைத் தடைசெய்ய நினைத்ததற்கு. உன் லட்சியத்தின் நியாயம் இப்போதுதானே புரிகிறது.
எனினும் ஒரு சந்தோசம் மனைவியான படியால் தானே உன் சாதனைகளில் மகிழ்தலும் உனை நினைத்து அழுதலும் சாத்தியமாயின.
காத்திருந்த இரவுகள் கணக்கு வைக்க முடியாமற் பெருகி விட்டன கல்யாணத்தன்று நட்ட முருக்கு கொப்பும் கிளையுமாய் சிவப்பாய்ப் பூத்திருக்கு.
பாலர் வகுப்புக்குச் செல்லும் மகன் கேட்கிறான்: 'ஏனம்மா எங்கட வீட்டுப் பின்கதவை - நீ பூட்டுறேல்ல? '
'முன்கதவு திறந்திருந்தா மட்டும் கண்டவன் எல்லாம் நுழைவான் பூட்டு பூட்டு எண்டுவாய்.'
எனது காத்திருத்தல்கள் அவனுக்குப் புரிய இன்னும் சில காலமாகாலாம். அதன் பின், அவன் கேள்வி கேட்க மாட்டான்.
!!!!!
பெற்ற தாயாரால் அடையாளம் கண்ட பின்னும் காட்டிக் கொள்ளப் படாதவர்கள். இதனால் இவர்கள்... - மைத்ரேயி
முகம் மறுக்கப்பட்டவர்கள்
இவர்கள் நகா¢ன் யந்திரமயத்தில் முகமிழந்த மனிதரல்ல.
வீதியில் சென்ற வீட்டினில் இருந்த சுருங்கக் கூறின் இம்மண்ணில் பிறந்த சாதனைக்காகச் சன்னங்களால் பா¢சளிக்கப் பட்டவர்கள் அத்துடன், தீச் சுவாலை போர்த்திக் கெளரவிக்கப் பட்டவர்கள் இதனால் - முகம் மறைக்கப்பட்டவர்கள்!
ஆஸ்பத்திரிச் சவச்சாலையில் அடையாளம் காணப்படாதவர்கள் உற்றாரால்... பெற்ற தாயாரால் அடையாளம் கண்ட பின்னும் காட்டிக் கொள்ளப் படாதவர்கள். இதனால் இவர்கள் முகமிருந்தும் மறுக்கப் பட்டவர்கள்.
(1985 / அலை-25)
!!!!!
ஒளவை
சொல்லாமற் போகும் புதல்வர்கள்
மார்கழி மாதத்தின் முன் இரவில் ஓர்நாள் - அவன் நேரமாகியும் வீடு திரும்பவில்லை. வழமையாக கோயில் மணி ஒன்பதடிக்க வாசலில் அவன் வருவது தொ¢யும். எழுந்து சென்று கதவைத் திறந்து அவனை அழைத்து உணவு போடவும் அப்போதும் அவன் மெளனம்தான். எப்பொழுதும் அவன் அப்படித்தான் சாப்பிடும்போது எதுவும் பேசான். என்மகன் - நள்ளிரவாகியும் வரவேயில்லை எங்கே போனான்?
அன்று தங்கை அயர்ந்து தூங்கியிருந்தாள் நானும் அவனைத் தேடி இருந்தேன் அதன் பின் வரவேயில்லை. நீ எங்கு போனாய் என்பதை அறியேன்.
ஆனால், இன்று அறிந்தேன் வேறொரு கதை உனது நண்பன் சொன்னான் மீசை அரும்பும் இந்த வயதில் நாட்டுப்பற்று வந்ததா உனக்கு! அப்படியானால் கடமைகள் இருக்கும் வீரனாய் இருந்து வீடு திரும்பு.
நேற்று ஒருவன் இறந்தான்; அது நானல்ல, நீயல்ல. இன்று ஒருவன் இறந்தான்; அது நானோ நீயோ அல்ல. நாளை ஒருவன் இறந்தால் அது நான் அல்லது நீ. நிச்சயமாக எம்மில் ஒருவர்தான் தோழா!
அப்போது நான் அல்லது நீ நிச்சயமாகக் கைதுசெய்யப்படலாம் அல்லது, சுட்டுக் கொல்லப்படலாம். நானும் நீயும் மனிதர்களென்று அவர்களுக்குத் தொ¢யாது.
அவர்களுக்குத் தொ¢ந்த தெல்லாம் நானும் நீயும் மனிதர்கள் அல்ல என்பதுதான்.
(1984)
!!!!!
பகலினைப் போல ஒளிக்கதிர் வீசி சூரியன் இருந்தால் எவ்வளவு இனிமை இரவு
காலை பற்றிய கவிதை
காலை பற்றிய கவிதையைச் சொல்வேன் நட்சத்திரங்கள் சந்திரன் காரிருள் எதுவுமே எனக்குப் பிடிப்பதில்லை என்னைப் போலவே எனது மக்களும் அவற்றினை வெறுப்பர்.
நடுநிசிப் பொழுதில் பல முகங்கள் காணாது போவதும் விடிந்ததும் ஒருசில வீதியில் கிடப்பதும் இன்னும் ஒருசில கடலில் மிதப்பதும் எஞ்சிய மீதி முகவா¢யின்றி தனித்து நிற்பதும் ஆரம்பமான அன்றிலிருந்தே இரவினை வெறுத்தோம். பகலினைப்போல ஒளிக்கதிர் வீசி சூரியன் இருந்தால் எவ்வளவு இனிமை இரவு.
காலை பற்றிய கவிதையை சொல்லென மக்கள் என்னிடம் திரும்பக் கேட்டனர் காலையே நீ வெற்றிகொள் இரவின் கொடிய தனங்களும் அந்நியக் கூச்சலும் அழிந்துபோக காலையே, நீ இரவினை வெற்றிகொள்!
(1984 / புதுசு-9)
!!!!!
ரஞ்சகுமார்
பூக்களை கல்யாணம் செய்து கொண்ட காற்று இப்போ இல்லை பிணங்களுடன் புணர்ந்து விட்டு நீசத்தனமாகவே வருகிறது காற்று - ரஞ்சகுமார்
நான் அனுமதிப்பதேயில்லை
இப்படித்தான் நான் அப்போ நினைப்பேன், எதுவும் சுலபமானதென்று. முகத்தில் காற்று அறையுமாறு நின்றபடி நான் நினைப்பேன், எல்லாம் நல்லவையே என்று. எல்லோரும் திருப்தியுடனேயே வாழ்ந்தார்கள் என்றுதான் நான் நினைப்பேன். யாரும் குரலெடுத்து அழுதுபுலம்ப நான் கேட்டதில்லை! பாருங்கள்! இளஞ்சூரியன் எவ்வாறு அந்நாட்களில் தன்னம்பிக்கையால் முகஞ்சிவந்தபடி 'ஜிவ்' என்று கிழக்கைவிட்டு விரைந்து எழுவான்! அப்போ, அந்நாட்களில்...
இரட்டை மாட்டுவண்டிகள் தார் ரோட்டுக்களில் கரகரத்துச் செல்லும்! தலைப்பாகையுடன் இருப்பான் முன்னணியத்தில் உழவன். மணிகளுடன் யுகணகணருத்தவாறு 'ஹேய்' என்று அவன் அதட்டுவது கேட்கும். பின்னே செல்லும் ஏரும் சாக்கு நிறைந்த வைக்கோலும். சின்னஞ்சிறு மகனும் இருப்பான் சிமிட்டும் கண்களால் §ஐ¡டிப்புறாக்கள் 'குறுகுறு'த்துப் பறப்பதைப் பார்ப்பான். சைக்கிளன்றின் பின்னே பாரம் நெளிய மீனவனொருவன் காற்றைக் கிழித்தவாறு செல்வான். அவனைச் சுற்றி மீன் வீச்சம் இருக்கும். கரகரத்த குரலில் மகனைத் திரும்பிப்பார்த்துக் கத்துவான்! 'பள்ளிக்குப் போடா!'
இப்படித்தான் அந்நாட்களில் இருந்தனயாவும். பாருங்கள், நான் பொய்யுரைத்தேனா? நீங்களும் அறிவீர்கள் யாவும் நேர்த்தியாகவே நடந்து வந்தன. வயல் விளைந்தது, மீன் நிறைந்தது. சுறுசுறு வென்று திரியும் சனக்கூட்டத்தின் தலைக்கு மேலே நகைத்தவாறு சூரியன் போவான்.
சந்திரனோவெனில், பெண்குணம் கொண்டு நாணி முகில்களுக்குள் மறைந்து நோக்குவான் காற்று பூக்களுக்குச் சாமரம் வீசும். தென்றலென மலர் மணக்க என்முகத்தில் காற்று அறையுமாறு நின்றபடி நான் நினைப்பேன்.
இப்போ, பாருங்கள்! தார் ரோட்டு கிழடுதட்டிக்கிடக்கிறது, தன்னந்தனியனாய் வெயிலில் காய்ந்தபடி. இரட்டை மாட்டு வண்டிகள் கரகரத்தபடி சென்றகாலம் எங்கே? 'ஹேய்' என்று மாட்டை அதட்டிய குரல் கேட்பதேயில்லை. எங்கோ தூரத்தில் ஒரு கிழவி மகனுக்காக அழுகிறாள்.
தார்ரோட்டு தனித்துக் காய்ந்தபடி, எழும்பிக் குதித்து நிலம் அதிருமாறு செல்லும் அழுக்குப் பச்சை யுட்ரக்ருகுகளைக் தவிர எந்தச் சிநேகிதனும் அதற்குக் கிடையாது! 'ட்ரக்'குகளிலிருந்து முட்டாள்தனமாக தலையை நீட்டுகின்றன துப்பாக்கிகள்! ஆம், மிக முட்டாள்தனமான துப்பாக்கிகள்! அவற்றுக்கு மூளையே கிடையா, மிகவும் மடத்தனமாக அவை உயிர்களை உறிஞ்சும். இன்றும்கூட, அந்தக் கிழவியியன் மகன்... ம் எங்கோ தூரத்திலிருந்து ஒரு கிழவி மகனுக்காக அழுகிறாள்!
பாருங்கள்! எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று. நான் பொய்யுரைக்கின்றேனா? நீங்களே காண்கின்றீர்கள். உழவனின் மகனும், அந்தச் செம்படவனின் மகனும் எங்கோ கண்காணாத இடத்திற்கு ஓடிப்போனார்கள். கிழவிகள் அவர்களைப்பற்றிக் கிசுகிசுத்துக் கதைக்கிறார்கள்: 'அவர்கள் துப்பாக்கி சுடுவார்களாம்!' துப்பாக்கிகள்..! துப்பாக்கிகளுக்கு மூளையே கிடையாது.
எல்லாவற்றையும் நாசம் செய்வன அவை சூரியனைக் கூட! பாருங்கள்... அவனுங்கூட தயங்கித் தயங்கி பனைவட்டுக்குள் மறைந்தபடி திரிகிறான் சந்திரனைப்பற்றி நான் இப்போ அறியேன்! இரவுகளில் நான் சுவர்களுக்குள்ளேயே முடங்குகிறேன். சந்திரன் வெட்கம் கெட்டபடி நிர்வாண வலம் வருகின்றான்.
முகத்திலறையும்படி காற்றை நான் இப்போ அனுமதிப்பதே இல்லை! பூக்களை கல்யாணம் செய்து கொண்ட காற்று இப்போ இல்லை. பிணங்களுடன் புணர்ந்து விட்டு நீசத்தனமாகவே வருகிறது, காற்று.
காற்றை நான் முகத்தில்பட அனுமதிப்பதே இல்லை.
(1984 / புதுசு-9)
!!!!!
மா.சித்திவினாயகம்பிள்ளை
இந்தக் கடலின் நீண்ட பரப்பில் நீந்திப் பழகி இறால்கள்- மீன்கள் - கடல்படு திரவியம் சுதந்திரமாகப் பெற்ற ஓர் காலம் தாத்தாவோடு அற்றுப் போயிற்று!
கடலும் கரையும்
அலையடிக்கும் கடல் அதனருகே நீண்ட பெரு மணற்காடு.
குருஷேத்திரத்துப் போர்க்காட்சி போல விம்மித் தணிந்த அலைகளோ தரையை ஓர் முறை தழுவி, வெட்க முற்றுப் பின்னே வேகமாய்த் திரும்பின.
இந்தக் கரையின் மணற் பரப்பினிலே இலந்தை மரங்கள். இந்த மரங்களின் உச்சியில் ஏறினால் இராமேஸ்வரத்தின் ஓர் முடி தொ¢யுமாம். அவ்வளவு நெருக்கம். இதுவும் அதுவும் ஒன்றாய் இருந்து இடையே கடலால் அரியுண்டு போனதாய் பூமிசாத்திர வல்லுனன் ஒருவன் போல் தாத்தா, அனுபவ முதிர்ச்சியில் சொல்லுவார். இந்தக் கடலின் நீண்ட பரப்பில் நீந்திப் பழகி இறால்கள் - மீன்கள் - கடல்படு திரவியம் சுதந்திரமாகப் பெற்ற ஓர் காலம் தாத்தாவோடு அற்றுப் போயிற்று!
காட்டுக் குதிரை கனைக்கும் வேளை வயிற்றுப் பிழைப்பை மனதிற் கொண்டு மனைவியைத் கரையே காவல் வைத்து,
கடலில் சென்ற காளைகள் எல்லை தாண்டிய புலிகளாய் மீண்டும் திரும்புதல் இல்லை.
தாத்தா, அவரது தாத்தா அதற்கு முன்பு இருந்த பரம்பரை நிமிர்ந்து கிடக்கும் இந்தக் கடலிற் தான் நம்பிக்கையுற்றுக் கிடந்தது.
இன்று, கொலம்பஸ் கண்ட யுஅத்திலாந்திக்ருகாய் 'சமுத்திர விழுங்கிகள்' நிறைந்து,
இப்போதெல்லாம் இலந்தை மரத்தின் உச்சியிலேறினால் இராமேஸ்வரத்தின் முடி தொ¢யாது; நீல நிறத்தில் கடற்படைக் கப்பல்கள்.
(1983 / புதுசு-8)
!!!!!
கீதப்பிரியன்
எல்லாம் தொ¢ந்தவர்கள்
தோழா, இன்னமும் உயிர் போகவில்லை இறுதி மூச்சில் ஒரு வார்த்தை உன் படத்தைக் காட்டி, தொ¢யுமா? என்று கேட்கிறார்கள் இந்த மடையர்கள் கேட்டுக் கேட்டுக் களைத்து விட்டனர் என்மனமும் இன்னமும் களைக்கவில்லை.
என்ன புன்னகை உன் படத்தில்! இதனை யார் இவர்களுக்குக் கொடுத்தது? யார் காட்டிக் கொடுத்தது? புலப்படவில்லை.
'எல்லாமே எங்களுக்குத் தொ¢யும்' என்று விட்டு, என்னை 'சொல்! சொல்!!' என்கிறார்கள்.
யார் சொன்னது? யார் காட்டிக் கொடுத்தது? புலப்பட வில்லை. ஆனால் ஒன்று இன்று நான்! நாளை நீ! இந்தக் கழுகுகள் நாளை உன்னையும் சிதைக்கலாம்.
நான் ஒன்றும் சொல்லவில்லை - நீயும் ஒன்றும் சொல்லாதே ஏனெனில் அவர்களுக்குத்தானே எல்லாம் தொ¢யுமாம்!
(1985 / அலை-25)
!!!!!
தோட்டங்களைத் தோட்டாக்கள் நிரப்புகின்றன அங்கு உழவு நடக்கவில்லை இழவு வீட்டில் அழுகை கேட்கிறது... கீதப்பிரியன்
உழவு நடக்காத நிலம்
ஒன்றுமே புரியவில்லை இது என்ன வாடை?
இடம்மாறி வந்து விட்டோமோ? இல்லை... அதே இடம்தான்!
அந்த இனிய களனிகள், பச்சைப் பயிர்கள்... அதோ.
இல்லை! அவை காக்கிகள் அதோ மாட்டுக்குளம்பு அடையாளங்கள் இல்லை... பூட்ஸ் அடையாளங்கள்! ஏர் அடையாளங்களுக்குப் பதில் போர்ச் சுவடுகள்!
அது என்ன? புதிய உழவு யந்திரமா? அல்ல - கவச வாகனம் தானிய விதைகளும் இல்லை - தன்னியக்கத் துப்பாக்கி ரவைகள்.
தோட்டங்களைத் தோட்டாக்கள் நிரப்புகின்றன. அங்கு உழவு நடக்கவில்லை இழவு வீட்டில் அழுகை கேட்கிறது...
(1984)
!!!!!
உதயன்
குறுகிய காலத்தில் விழுதுகள் ஊன்றி சொந்தமாய் எமக்கென ஓர் இடம் வரும் கூடிக் கதைத்து நிம்மதியுடனே ஆறுதல் கொள்ளலாம். கனவுகள் கண்டோம், கற்பனை செய்தோம்.
நாம் இப்போதும் எப்போதும் போலவே பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்!
நான் நீ அவன் அன்று அதைப்பார்த்த பொழுது எப்படி இருந்தது? பரந்த குளத்தின் இடக்கோடியில் குவிந்த குப்பையின் நிலமேட்டருகே மெல்லியதாய் நீண்டு இலை பல துளிர்த்து எப்படி இருந்தது?
குறுகிய காலத்தில் விழுதுகள் ஊன்றி சொந்தமாய் எமக்கென ஓர் இடம் வரும் கூடிக் கதைத்து நிம்மதியுடனே ஆறுதல் கொள்ளலாம். கனவுகள் கண்டோம், கற்பனை செய்தோம்.
ஒரு நாள் ஒன்று திரண்ட வெறியர் கூட்டம் மரத்தை அழிப்பதாய் சுற்றி இருந்த வீட்டினை எரித்தது கடைகளை எரித்தது மரத்தை நாட்டியோர் தப்பி ஓடினர்.
மற்றொரு நாள்,
தனிமரம் பற்றிக் கதைப்போர் அனைவரும் 'பயங்கரவாதிகள்' என்று சொல்லி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றது கூலிக் கும்பல்.
நேற்று அழைத்துச் செல்லப்பட்டவர் வீதியில், கடல் கண்காணிப்பு வலயங்களில், சிறைகளில் கொலை செய்யப்பட்டனர்!
இன்று ஒன்று திரண்ட மக்கள் கூட்டம் மரத்தைச் சுற்றி காவலுக்காய் நிற்க குண்டினை வைத்து கலையச் செய்து சுட்டுக் கொன்று...
நான் நீ அவன் இப்பொழுதும் அதைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றோம். பரந்த குளத்தின் இடக்கோடியில் துளிர்த்த மரத்தை நடுவால் முறித்து
குளத்தின் நீரும் சிவப்பாய் மாறி நாட்டிய மரத்தை அபிஷேகம் செய்கின்றது.
இத்தனைக்கும் பின்னர் நாம் எப்போதும் போல் இப்போதும் அதைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்.
எமக்குத் தொ¢யாதது ஒன்று உண்டு மரத்தின் வேர்கள் ஆழப் புதைந்து வேர்பல விட்டுள்ளது நுனியால் கருகல் குப்பைகள் மறைத்தல் தற்காலிகமானவையே சிறிய இடைவெளிகளின் பின்னர் மீண்டும் மீண்டும் துளிர்த்துக் கொண்டேயிருக்கும்.
ஒருநாள் அது முற்றாய் முழுதாய் கிளைபல விட்டே நிழல் தரும் மரமாய் மாறும் அதுவே நிச்சயமானதும் கூட.
!!!!!
செழியன்
மக்களை நேசித்த எங்கள் கண்களில் கண்ணீர்ப் பூக்கள் உதிர்வதை நான் வெறுக்கிறேன். மகிழ்ச்சிக்காய் வாழ்ந்து மகிழ்ச்சிக்காய் இறந்து போய்விட்ட எங்கள் தோழர்கள் மத்தியில் அமையும் என் சமாதியில் அழுகையின் ஒலி கேட்கவே கூடாது. - செழியன்
பயிற்சி முகாமிற்கு ஓர் கடிதம்
கார்த்திகா! என் நினைவுகளோடும் உடலோடும் என்னுடையவளாகிவிட்டவளுக்கு!
இப்போதெல்லாம் இங்கு பூக்கள் வாசனை வீசுவதில்லை கருவண்டுகளெல்லாம் தெருக்களில் செத்துச் செத்துக் கிடக்கின்றன. நிலவு பெய்கின்ற இரவுகளெல்லாம் இப்போ இனிப்பதேயில்லை.
நேற்று - என்னுடைய துப்பாக்கிக்கு நான் எண்ணெய் தடவும்போது அந்த நாட்களில் என் மார்பில் சாய்ந்திருந்து நீ செய்த குறும்புகளெல்லாம் என் நினைவுக்கு வந்தன.
கார்த்திகா! கடந்துபோனவையை நினைப்பதிலும் ஒரு சுகம் இருக்கின்றது.
கார்த்திகா! போன தடவை எழுதியிருந்தேனே என் கூடவே இருக்கின்ற எனக்கும் பிரியமான முரட்டுத் தோழனைப்பற்றி நன்றாகவே சண்டை போடுவான்.
என் துப்பாக்கிக்கு சில வேளைகளில் அவன்தான் எண்ணெய் போட்டு வைப்பான். உன்னைப்பற்றி அவனிடம் நிறையவே பேசியிருக்கிறேன். அவனுக்கும் ஒரு இளம் காதலி இருக்கிறாள் அவன் ஆரம்பத்தில் படித்த புத்தகங்களெல்லாம் இப்போ அவளுக்கு கொடுத்து வருகிறான்.
கார்த்திகா! என்னவென்று அதை நான் எழுதுவது சென்ற வாரம் நடைபெற்ற தாக்குதலின் போது அவன் செத்துப் போய்விட்டான். அவனது பிரியமான துப்பாக்கியில் இப்போ அவனது காதலி சுடுவதற்குப் பழகி வருகிறாள்.
கார்த்திகா! மரணத்தை எதிர்கொண்டு நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் துப்பாக்கிகளுக்காக புதிய தோழர்கள் காத்திருக்கின்றனர். பயிற்சி முடிந்து விரைவில் நீ திரும்பி வருவாயென எதிர்பார்க்கிறேன். நீ வரும்போது ஒருவேளை நான் இல்லாமற் போகலாம்.
கார்த்திகா! மக்களை நேசித்த எங்கள் கண்களில் கண்ணீர்ப் பூக்கள் உதிர்வதை நான் வெறுக்கிறேன். மகிழ்ச்சிக்காய் வாழ்ந்து மகிழ்ச்சிக்காய் இறந்து போய்விட்ட எங்கள் தோழர்கள் மத்தியில் அமையும் என் சமாதியில் அழுகையின் ஒலி கேட்கவே கூடாது.
கார்த்திகா! என்னவளே! என் சமாதியில் முட்களைத் தாங்கி அழகிய பூச்செடி ஒன்று துளிர்விட்டு வளரும். நான் நம்புகிறேன்.
(1985 / இல்லாமல் போன தோழனுக்கு)
!!!!!
மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை ஒரு அனாதைப் பிணமாய் ஒரு அடிமையாய் புதிய எஜமானர்களுக்காக தெருக்களில் மரணிப்பதை நாம் வெறுக்கிறோம் !
மரணம்
எங்கே இருக்கின்றாய்? எம் உண்மைத் தோழ!
முகம் தொ¢யாத கா¢ய இருளில் திசை தொ¢யாத சம வெளிகளில் உன் முகத்தை எங்கே என்று கால்களை இழந்த நாம் தேடுவது?
நசுக்கப்பட்டவைதான் எம் குரல்கள் பால்நிலவு தெறிக்க குமுறி எழுந்துவரும் கடல் அலையாய் சடசடத்து இலை உதிர்க்கும் பசுமரங்களை அதிரவைத்து அசைந்து செல்லும் காற்றாய் எங்கள் குரல்வளைகள் அறுக்கப்படும்வரை உண்மைக்காக குரல் கொடுப்போம்!
தோழ! மரணத்தின் நாட்களை நாங்கள் எண்ணுகிறோம் இப்போதெல்லாம் உணர்கிறோம் மரணம் - கடினமானதல்ல.
மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை ஒரு அனாதைப் பிணமாய் ஒரு அடிமையாய் புதிய எஜமானர்களுக்காக தெருக்களில் மரணிப்பதை நாம் வெறுக்கிறோம்!
மகிழ்ச்சிக்காய்ப் போராடி மக்களுக்காக மரணிப்பதற்கு நாம் அஞ்சவில்லை.
தோழ! நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம். துளிர் விட்டு வளரும் பூச்செடியில் புதிதாய் அரும்பும் பூக்களுக்காக.
சிறகு முளைத்த இளம் பறவைகள் சிறகடித்துப் பறக்கும் ஒலிகளுக்காக.
எங்களை நெருங்கி வருகின்ற மரணத்துக்காக நம்பிக்கையோடு நாங்கள் காத்திருக்கிறோம்!
(1985)
!!!!!
கறை படிந்துபோன பாடங்களின் முடிவில் மக்கள் எப்போதும் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.
பெர்லினுக்கு ஒரு கடிதம்!
தொலைதூர தேசத்தில் குளிர் உறைக்கும் இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்து அவள் எழுதிய கடிதம் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு...
எங்கள் முற்றத்து மாமரத்தோடு எங்கள் கிராமத்து செம்மண்ணோடு எங்கள் தேசத்து பனைவடலிகளோடு வளர்ந்து மலர்ந்த அந்த உடன்பிறவா இனிய நேசத்தை இன்னமும் அவள் மறந்துவிடவில்லை.
நீனா! நாம் ஏன் உடன்பிறக்கவில்லையென தினமும் சபித்துக் கொண்டும் எவரையுமே கேட்காமல் கூடித்திரிந்த நாட்களுக்குப் பின்
அடுத்து வந்த ஒரு குறுகிய அரசியல் வாழ்க்கைக்குப் பின் அரசியல் இல்லாத துப்பாக்கிகளைக் கண்டு நீ சகிக்க முடியாமல் விட்டுப் பிரிந்து சென்றதும்...
அதற்கும் பின்னால் எங்கே என்றே தொ¢யாமல் சிலகாலம் தேசமெங்கும் திரிந்து நான் திடீரென உனைக் காணவந்தபோது நீ எனக்காக எழுதிவைத்த கடிதமும்
அந்நிய தேசமொன்றில் மிக்க மோசமான மரங்களிடையே புன்னகைக்க நீ மறந்து உன் கணவனோடு கைகோர்த்து அனுப்பிவைத்த புகைப்படமும் எனக்காகக் காத்திருந்தன.
நீனா இப்போதெல்லாம் நீ ஏன் சிரிப்பதேயில்லை?
உனது கடிதத்தில் கேட்டிருந்தாய் பிரியமான உனது சினேகிதி பற்றி உனக்கும் பின்னால் விடுதலைக்காய் வீட்டை விட்டு புறப்பட்டவள்தான் வெகு நாட்களாய் அவளைப் பற்றி செய்தி எதுவும் தொ¢யவில்லை.
பின்னர் அறிந்து கொண்டோம் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவனின் தகவலின் பின்னால் கிளறப்பட்ட ஆறு புதைகுழிகளில் இருந்து சடலமாய் மீண்டாள்.
உனது பழைய நண்பர்கள் பலரையும் விசாரித்திருந்தாய் நீ கேட்டதாக அவர்களிடம் கூறும்படி எழுதி இருந்தாய்.
நீ கேட்டவர்களில் பலர் இன்று இல்லை. பலருக்கு என்ன நிகழ்ந்ததென்றே தொ¢யவில்லை.
என்னதான் இருந்தபோதும் மக்கள் மட்டும் முன்புபோல இப்போ இல்லை.
நீயே நிரம்ப ஆச்சா¢யப்பட்டுப்போவாய் நீண்டு விரிந்து கிடக்கும் வானத்தில் இருந்து, அதன் பின்னால் கூட்டம் கூட்டமாய்
எங்களைப் பார்த்துச் சிரிக்கின்ற நட்சத்திர மண்டலங்களிலிருந்து
எப்போதும் போராடிக் கொண்டேயிருக்கும் கருங்கடல்களுக்கு அப்பால்
ஏதோ பெயர்தொ¢யாத அந்நிய தேசமொன்றில் இருந்து
திடீரென எங்களை மீட்க மீட்பர்கள் வருவார்கள் என முன்பு போல இப்போதெல்லாம் மக்கள் நம்புவதில்லை.
இப்போதெல்லாம் மக்கள் சந்தேகிக்கின்றனர், அடிக்கடி கேள்விகள் கேட்கின்றனர், தமக்குள் நீண்ட நேரம் பேசிக் கொள்கின்றனர்.
இவற்றையெல்லாம் பார்க்கையில் என்ன ஏது என்று புரியாவிட்டாலும் ஒன்றுமட்டும் நிச்சயமாக எனக்குத் தொ¢கின்றது, மக்கள் ஏதோ செய்யப் போகின்றார்கள்.
அது, முன்பு நடந்தது போல இருக்காது. எங்கள் மண்ணில் ஒரு புதிய வரலாற்றை நானும் நீயும் திட்டித் தீர்த்த, அதே சனங்கள் எங்கள் மக்கள் படைக்கப் போகின்றனர்.
நேசமானவளே! இதுவரை சோவியத்திலும் சீனாவிலும் வியட்னாமிலும் உள்ள மக்களால்தான் முடியுமென நானும் நீயும் நம்பி இருந்தது நமது தேசத்திலும் நிகழப் போகிறது.
நிரம்ப ஆச்சா¢யம்தான்!
புத்தகங்களை புரட்டிடிப் பார்த்தேன் மனித வரலாறு அப்படித்தான் நடக்கும் என்று கூறுகிறது. நீயும் உன் இனிய குழந்தையும் இப்போ வாழ்கிற தேசத்திலும் நிகழுமாம்.
இது இன்னமும் ஆச்சா¢யமான விடயமாய் உனக்கு இல்லையா?
சகோதா¢! இந்நிலையில் எரிகின்ற எங்கள் தேசத்தில் எழுகின்ற எங்கள் மக்களின் கரங்களுடன் மெலிந்துபோன என் கரங்களை இணைத்துக் கொள்வதற்காய்
நான் எங்கள் தேசத்தில் வாழவிரும்புகிறேன்.
எங்கள் தேசத்து நகரங்களை எரித்த தீச்சுவாலைகள் அணைந்து போக முன்னரே எங்கள் தெருக்களில் படர்ந்த எம்மவர் குருதியின் சுவடுகள் உறைந்துபோக முன்னரே மனித வேட்டையரால் கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்ட எங்கள் தேசத்து இளைஞர்களின் சடலங்களின் மேல் நடந்து
பெர்லின் விமான நிலையத்தில் வந்து இறங்கும் அகதிகள் கூட்டத்தில் என்னைத் தேடி நீ அலையாதே.
கறை படிந்துபோன பாடங்களின் முடிவில் மக்கள் எப்போதும் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.
எப்போதாவது மீண்டும் நீ எங்கள் தேசத்திற்கு வந்தால்
மக்கள் எங்கள் தேசத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
(1985)
!!!!!
நிலாந்தன்
கடலம்மா...!
கடலம்மா... நீயே சொல் யுகுமுதினிரு ஏன் பிந்தி வந்தாள்?
எம்மவா¢ன் அவலங்களைச் சடலங்களாய்ச் சுமந்துகொண்டு யுகுமுதினிரு குருதி வடிய வந்தாள். கடலம்மா கண்டாயோ கார்த்திகேசு என்னவானான்? எந்தக் கரையில் உடலு¡திக் கிடந்தானோ? ஓ...! சோழகக் காற்றே நீ, வழம்மாறி வீசியிருந்தால்... யுகுமுதினிரு வரமாட்டாள் என்று நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய். பாவம் மரணங்களின் செய்தி கூடக் கிட்டாத தொலைதீவில், ஏக்கங்களையும் துக்கங்களையும் கடலலைகளிடம் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் மக்கள்...
கடலம்மா நீ மலடி ஏனந்தத் தீவுகளை அனாதரவாய்த் தனியே விட்டாய்?
கடலம்மா... உன் நீள் பரப்பில் அனாதரவாய் மரணித்த எம்மவரை புதிய கல்லறைகளை எழுப்பி யுஅனாதைக் கல்லறைகள்ரு என நினைவூட்டு. ஆனால், இனிவருங் கல்லறைகள் வெறும் இழப்புக்களின் நினைவல்ல, எமது இலட்சியங்களின் நினைவாகட்டும்!
(1985 / அலை-26)
!!!!!
வண்ணச்சிறகு
தூரப் பயணங்களுக்காகவோ, துப்பாக்கி ஏந்தி திரிவதற்காகவோ அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கவில்லை. - வண்ணச்சிறகு
விழித்திருக்கும் மரங்கள்
கிடுகு வேலிகளுக்கு மேலாக கிளை விட்டு நிற்கும் முள் முருங்கை மரங்கள் புதிதாய் பூக்க விழித்திருக்கும்.
குடில்களில் வயோதிக ஜீவன்கள் தன் புத்திரர்கள் இன்று வரலாம் நாளை வரலாம் என்ற கனவில் மிதந்திருக்கும்.
தூரப் பயணங்களுக்காகவோ, துப்பாக்கி ஏந்தி திரிவதற்காகவோ அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கவில்லை.
காலம் தன் நடையில் சில கதைகளை சிருஷ்டிக்கும். நேற்றுவரை சின்னஞ் சிறிசுகளாக திரிந்தவர்கள் இன்று மக்கள் ராணுவமாக மாறியது விந்தையல்ல!
இன ஒடுக்கல் இராணுவம் எல்லா வீதிகளிலும் பேயாக அலைகையில் துப்பாக்கிக் குண்டுகளால் சொந்த பூமியின் மண்கட்டிகளை அபகா¢க்கையில் இளசுகள் புயலாகாமல் புல்லாகவா மாறும்?
கிடுகு வேலிகளுக்கு மேலாக பார்த்திருக்கும் வயோதிப கண்கள் குத்திக் கிழிக்கப்படலாம் ஆனால் என்ன? கிடுகு வேலிகளுக்கு மேலாக கிளை விட்டு நிற்கும் முள் முருங்கை மரங்கள் இனியும் புதிதாய் பூக்க விழித்திருக்கும்.
(வண்ணச்சிறகு கவிதைகள்)
!!!!!
சென்று வருகிறேன் ஜென்ம பூமியே!
நக்கிள்ஸின் தொடர்களை நான் நாளெல்லாம் பார்க்கிறேன். 'நீ பார்த்துச் சலிக்காத பொருளென்ன' என்று நீர் எனைக் கேட்டால் நான் சொல்லும் பதிலிதுதான் - 'குளிர்மேகம் வாடியிடும் நக்கிள்ஸின் தொடர்கள்தான் நான் பார்த்துச் சலிக்காத நல்ல பொருள்' என்பேன் நான்!
மக்களென்னும் சமுத்திரத்தில் நானுமோர் துளி; மனம் விட்டு நேசிக்கும் பழக்கம் எனக்குண்டு தாம் பிறந்த நாடுகளை நேசிக்காத மக்களில்லை இயற்கையெனும் பெரும் கலைஞன் செதுக்குகிற சிற்பங்களை ரசிக்காத கவிஞனில்லை
நக்கிள்ஸின் தொடர்களை நான் நாளெல்லாம் பார்க்கிறேன் வயது ஜந்திருக்கும்; இத் தொடா¢ல் - வந்து குடியேறினேன்! அன்றிருந்து என் கண்கள் நக்கிள்ஸின் தொடர்களை நாளெல்லாம் - ஆயிரம் தடவைகள் அழகுறக் காணுமே! இருபது வருடங்கள் ஓடி மறைந்தன; என்றாலும் இன்றைக்கும் இத் தொடர்கள் இதயத்தில் குளிரூட்டும் பொருளாகும்!
இந்நாட்டு மக்களை நான் இதயத்தில் நேசித்து, நக்கிள்ஸின் தொடர்களிலே சில காலம் நாளெல்லாம் ஏறி இறங்கியுள்ளேன் இன்றைக்கும் அந்நாட்கள் இதயத்தில் குறுகுறுக்கும்!
நாட்கள் கழிகின்றன; நாடுகடக்கும் வேளை நெருங்குகின்றது; பிரிவு என் வாசலைத் தட்டுகிறது. பிரிவு வேதனையின் பிரதிநிதி விழி வாசலை முட்டுகிறான். அழுது விடுவேனோ என்ற பயம் என்னை அமுக்குகிறது...
நம்மிணைப்பு, நம்நேசம் நம் இயக்க விளைபொருளே; நம் இயக்கம், நம் வர்க்க செயல்பாட்டின் விளைபொருளே! நாமெல்லாம் - எங்கெங்கு இருந்தாலும், இதயத்தால், எடுத்த லட்சியத்தால் உலக இயக்க மெனும் அணியினிலே ஓர்மணியாய் தானிருப்போம்! என்றாலும் - நான் பிறந்த நாட்டினிலே நான் இருக்க விதியில்லை; என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை என்றக்கால் - வேதனைகள் முட்டாதோ! சொல்லுங்கள் தோழர்களே உங்களுக்கும் ஒரு நாள் உங்களது நாட்டை பிரிகின்ற நிலை வந்தால் உங்களது மனநிலையில் உவப்பா மேலோங்கும்? இல்லை, இல்லை, ஓர் துயர் அலை நெஞ்சில் மேவிவருமன்றோ!
ஓ! என்னருமைத் தோழர்களே! இறுதியாக கப்பலிலே நான் நின்று கையசைத்து விடை சொல்லும் போதினிலே - என் கண்கள் மாத்திரமா? உங்களது கண்களும்தான் உணர்ச்சிமிக்க ஒரு பாஷையினை வெளிப்படுத்தும் நானறிவேன்! ஏனெனில் என் கவிதைப் பொருள்களை நான் இன்று பிரிகின்றேன் இதயத்தின் சுமையோடு தேசம் கடக்கின்றேன்.
சென்று வருகின்றேன் மலைத்தொடர்களே; திரும்பவும் நான் உன்னை என்று காண்பேனோ? சென்று வருகிறேன் தோழர்களே! திரும்பவும் நாம் ஒன்றாய் என்று மலையேறுவோமோ? சென்று வருகின்றேன் கொற்ற கங்கையே! திரும்பவும் உன் மேனியில் என்று நீராடுவேனோ? சென்று வருகின்றேன் வெகுஜனங்காள்; திரும்பவும் நான் இதயமகிழ்வோடு என்று கரம் குலுக்குவோமோ? சென்று வருகின்றேன் ஜென்ம பூமியே! திரும்பவும் உன் வெளிகளில் என்று ஓடிமகிழ்வேனோ?
(வண்ணச்சிறகு கவிதைகள்)
!!!!!
இந்த இரவில் நாம் எரியாதிருந்தால்...
விடியல்
நிச்சயமற்றுப் போயின நம் இரவுகள். அன்பே! படுக்கைக்குப் போகுமுன் இறுதி அர்த்தங்களுடன் பார்த்துக் கொள்வோம்!
குழந்தைகளின் கன்னங்களில் அழுத்தமான உன் உதடுகளை ஒருமுறை பதித்துவை, அப்புறமாய், நம் உறவுகளை ஒருமுறை நினைத்துக் கொள்வோம்!
இறுதியாக மாறி, மாறி நம் கண்ணீர்த்துளிகளை நாமே துடைத்துக் கொள்வோம்!
இந்த இரவில் நாம் எரியாதிருந்தால் விடியலில், பனி முத்துக்கள் தாங்கும் தேயிலைத் தளிர்களில் விரல்கள் பதிப்போம்!
(வண்ணச்சிறகு கவிதைகள்)
!!!!!
அருள்
தோழமை நிலவுகள் மண்ணில் புதைவது இங்கும் நிகழலாம். அருள்
தோழி உனக்குத்தான்
"நம் இரவுகள் உடையுமா? நம் சூ¡¢யன் நமக்கென ஒளிருமா? நம் வாழ்க்கை நம்முடையதாகவே இருக்குமா? நாங்களும் சுதந்திரமாய் நடந்து செல்ல வாய்க்குமா? நானும் வருகிறேன் தோழனே சொல்!"
கிடுகு வேலிக்குள் கிளர்ந்த புயலே! உன் கனவுகள் பனைகளுக்கு மேலாக பரவியது உன் பாதங்கள் பூமிக்கு மேலாக முளைத்தது. கைகளில் நகம் வளர்க்க கடல் கடந்தாய் எங்களுடன்.
தோழி! நீ விரல்களுக்கு சொந்தம் கொண்டாடு. வளர்த்த நகங்களுக்கும் சொந்தம் கொண்டாடு.
பார்! நம் கிடுகு வேலிக்குள்ளும் கள்ளப் பூனைகள்.
உன் நகங்களுக்கு அது வண்ணந் தீட்டும். அதனை வாழ்க்கையென்று நினைக்காதே!
இன்றெமது போராட்டம் இன விடுதலைக்கானது மட்டுமல்ல.
தோழமை நிலவுகள் மண்ணில் புதைவது இங்கும் நிகழலாம்.
ஆடை கிழிவதும் நகத் தீண்டலும் அங்கே மட்டுமல்ல! இங்கேயும்!
அடைகாத்த புயல் முட்டை உடையட்டும். நம் கரங்கள் இருந்த இடத்தில் சிறகு முளைக்கட்டும்!
(1985 / தீப்பொறி)
!!!!!
விமல்
நாங்கள் எல்லாம் இப்போ அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவதில்லை. ஆமியும் பெடியளும் என்ற புதிய விளையாட்டை கண்டு பிடித்துள்ளோம். - விமல்
பாப்பாக்களின் பிரகடனம்
எங்களுக்காய் எங்கள் எதிர்கால வாழ்வுக்காய் பாதயாத்திரையில் பங்கு கொண்ட எங்கள் பாச அண்ணாக்களே...! அக்காக்களே...!
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ பயங் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" என்ற பாரதி பாடலை பாடி மகிழும் பாப்பாக்கள் நாங்கள் 20ம் நு¡ற்றாண்டின் புரட்சி யுகத்தில் நடப்பதை...! எம் பிஞ்சு மனதிலே பதிய வைத்துள்ளோம்.
எத்தனை கொலைகள்...! எத்தனை கொடுமைகள்...!! ஓ...! வெலிக்கடையின் இருட் சிறைக்குள்ளே பசித்த வயிற்றுடன் பட்டினி கிடந்து எங்களுக்காக எங்கள் எதிர்கால வாழ்வுக்காக இறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்கள் ஆசை அண்ணாக்களே!
சிறையில் உங்கள் நகங்கள் பிடுங்கப்படுவதை வாய்க்குள் பாம்புகள் திணிக்கப்படுவதை கட்டி அடிப்பதை சிறுநீர் பருக்குவதை பக்கத்து வீட்டு மாமா சொல்வதைக் கேட்டு எங்கள் பிஞ்சுமனம் வெஞ்சினம் கொள்கிறது.
அன்று உங்கள் அண்ணாவும் அக்காவும் அப்பாவும் அம்மாவும் போராடியிருந்தால் இன்று நீங்கள் சித்திரவதைப்பட்டிருப்பீர்களா?
இன்றும் சில அண்ணாக்கள், அப்பாக்கள் அக்காக்கள், அம்மாக்கள் எங்கள் வீடு எங்கள் காணி எங்கள் சொத்து எங்கள் பிள்ளை என இடித்த புளியைப்போல் இருக்கத்தான் செய்கிறார்கள்!
மற்றவா¢ன் தியாகத்திலே நல்வாழ்வு தேடும் நா¢க் கூட்டங்கள் சில பறந்து சென்று வெளிநாடுகளிலே பார்வையாளர் வா¢சையிலே.
ஓ...! இவர்கள் எல்லாம் எளிய சனியன்கள்; எங்கள் எதிர்காலம் பற்றி எள்ளளவும் சிந்திக்காத முழியன்கள்.
ஆனாலும் எங்களுக்காக எங்கள் ஆசை அண்ணாக்கள் சிறையிலே சித்திரவதைப்படுகிறார்கள். எங்கள் பாச அண்ணாக்களும் அக்காக்களும் பாத யாத்திரையிலே.
ஓ...!! எட்டு நாட்கள் தொடர்ந்து நடக்கும் எங்கள் அண்ணாக்களின் கால்கள் வலிக்கும் என்பதை நாங்கள் அறிவோம்...!
நல்லு¡ருக்கு நடந்து போனபோது எங்கள் கால்களும் வலித்ததுதானே...!
பக்கத்து வீட்டு அம்மாக்களின் பசபசப்பையும் குசுகுசுப்பையும் பொருட்படுத்தாமல் பாதயாத்திரையிலே தொடர்ந்து வரும் எங்கள் அக்காக்களில் எங்களுக்கு சா¢யான ஆசை.
எங்கள் அன்பான அக்காக்களே! உங்கள் கால்கள் வலிக்கிறதா? அப்படியானால் சொல்லுங்கள் எங்களுக்காக நடந்து வீங்கிய உங்கள் கால்களை எங்கள் பிஞ்சுக் கரங்களால் தடவி விடுகிறோம்.
உங்கள் களைப்பை எல்லாம் போக்க கட்டி அணைத்து முத்தமழை பொழிகின்றோம்.
ஓ...!! எங்கள் அன்புக்குரிய அண்ணாக்களே! உங்களுக் கொன்று தொ¢யுமா? நாங்கள் எல்லாம் இப்போ அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவதில்லை யுஆமிருயும் பொடியளும் என்ற புதிய விளையாட்டை கண்டு பிடித்துள்ளோம்.
எம்மை அடக்கும் காடையருக்கு எங்கள் அண்ணாக்கள் தெருவினிலே கண்ணிவெடி வைப்பதுபோல் மணலுக்குள் ஊமல் கொட்டையை நாங்களும் தாட்டு வைத்து எங்கள் நண்பர்களை ஆமிக்காரர்போல் ஓடவைத்து ஊமல் கொட்டையை வெடிக்கச் செய்வதுபோல் பாசாங்கு செய்து அந்த வெடியினிலே ஆமிக்கு வரும் எங்கள் நண்பர்கள் சிக்கிச் சாவதுபோல் விளையாடுவதைப் பார்த்து மகிழ்ச்சி பொங்க நாங்கள் ஆர்ப்பா¢க்கின்றோம்.
பள்ளிக்கூடம் விட்டதும் நாங்கள் பறந்தோடிவந்து எங்கள் வீட்டு கோடிக்குள்...! வேப்ப மரத்திற்கும் வெலிக்குமிடையிலே கட்டப்பட்ட கயிற்றிலே பாய்ந்து! விழுந்து...! தவழ்ந்து...! எழுந்து...! 'பிஸிக்கல் ட்ரெயினிங்' எடுக்கிறோம்.
ஓ...! இந்த முறை நல்லு¡ரிலே பொம்மைகள் எங்கள் கவனத்தை திருப்பவில்லை; முஸ்லிம் கடையிலே தூங்கிய துப்பாக்கிகளும் போர் விமானங்களும் காற்றாடிக் கப்பல்களுமே எங்கள் கவனத்தைக் கவர்ந்தன.
எங்கள் சின்னத் தம்பிக்கும் அப்பா ஒரு துப்பாக்கி வாங்கிக் கொடுத்திருக்கிறார்; எங்கள் படலையிலே எந்தநாள் பின்னேரமும் அவன்...! அந்த...! துப்பாக்கியுடன் 'சென்றி'க்கு நிற்கிறான்.
இப்போதெல்லாம் விளையாட்டில் அவனுக்கு ஆர்வமில்லை; தன் பிஞ்சுக் கரங்களிலே துப்பாக்கி ஏந்தி 'சென்றி'க்கு நிற்பதே இன்று அவனது விளையாட்டு.
இன்று எங்கள் அண்ணாக்கள் நடாத்தும் போர் எங்களுக்கு நல்வாழ்வு தேடித் தரவில்லை யெனில் உங்கள் குரல்வளையை நொ¢த்த அந்தக் கொடியவர்களுக்கு எதிராக நாளை எங்கள் கரங்கள் உயரும்! இதை நம்புங்கள்!!
சிறீலங்கா வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை "விசாரணை செய் அல்லது விடுதலை செய்" என கோரி யாழ். பல்கலைக் கழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட வேளை, 1985 செப். 26 முதல் ஒக்.3ம் திகதி வரை எட்டு நாட்கள் பாதயாத்திரையும் நிகழ்ந்தது. ஏழாம் நாளான ஒக்.2ம் திகதி பாதயாத்திரைக் குழு இருபாலைக்கு வந்த சமயம் கோப்பாய் விழிப்பு மன்றத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட வரவேற்பின்போது பல குழந்தைகள் குழுமி நிற்க ஒரு குழந்தையினால் வாசிக்கப்பட்ட கவிதை இது. இத் தொகுதிக்காக, தலைப்பு எம்மால் இடப்பட்டது. - தொகுப்பாளர்.
This page was first put up on October 5, 2000 Please send your comments and corrections to the Webmaster(s) of this site