cittar pAtalkaL Series -part II (paTTinattAr pATalkaL)
in Tamil Script, unicode/utf-8 format

சித்தர் பாடல்கள் தொகுப்பு - II
பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது




Etext Preparation (input) : Mr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
Etext Preparation (proof-reading) : Mr. S. Anbumani, Blacksburg, Virginia, U.S.A.
Etext Preparation (webpage) : Mr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com

© Project Madurai 1998-2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

திருப்பாடல் திரட்டு
பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது


1. திருவேகம்பமாலை

அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந்
துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்;
மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 1

கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே. 2

கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே ! 3

நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்
நன்னாலுமாடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப்போல்
உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்
என்னாலிங் காவதுண்டோ? இறைவா ! கச்சியேகம்பனே ! 4

நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே ! 5

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! 6

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7

அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்
சொன்ன விசாரந் தொலையா விசாரம் நல்தோகையரைப்
பன்னவிசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவா, கச்சியேகம்பனே ! 8

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயும தேநிட்டை, யென்றா னெழிற் கச்சியேகம்பனே. 10

வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே. 11

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே. 12

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. 13

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே. 14

பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்
இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே. 15

பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக்கத் தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர்தமக்கு
வருத்தி யமுதிடமாட்டார், அவரையிம் மாநிலத்தில்
இருத்திக் கொண்டேனிருந்தா யிறைவா! கச்சியேகம்பனே. 16

பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்
வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்,
எல்லாம் விழிமயக் கேயிறைவா, கச்சி யேகம்பனே. 17

வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே. 18

ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே. 19

அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பாய்த்
தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே. 20

நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 21

ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே. 22

பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே. 23

நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்
சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்
போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் பூவையர்க்கு
ஈவார் தலைவிதியோ? இறைவா, கச்சியேகம்பனே. 24

கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே. 25

வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்
தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க்
ஈனமு தச்சுவை நன்று அல்லவோ? கச்சியேகம்பனே. 26

ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே. 27

சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே, 28

முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப்
பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே. 29

பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே. 30

பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங்குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன்அற்றுக்
காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப் பேனிறைவா, கச்சியேகம்பனே. 31

நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லாநற் கோயில்நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே. 32

சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித்துக் கொண்டிறுமாந் திருந்து மிகமெலிந்து
படங்கடித் தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்? கச்சியேகம்பனே. 33

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34

சொக்கிட்டு அரண்மனைப் புக்குள்திருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம்நிந்தித்து, வீடிச்சிக்கும்
எக்குப் பெருந்தவர்க்கென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே. 35

விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக்கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்
இருந்தாவதேது? கண்டாய் இறைவா, கச்சியேகம்பனே. 36

எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே. 37

பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38

கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்
கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள்
நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே. 39

கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன ? பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41

வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே. 42

திருவேகம்பவிருத்தம்

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?


2. திருத்தில்லை

காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக்கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்கரனே. 1

சோறிடும்நாடு, துணிதருங் குப்பை தொண்டன்பரைக்கண்டு
ஏறிடுங்கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்
ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் னுள்ளமுமே. 2

அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகிப் பொன்னம்பலத்தார்
நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்
குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு குற்றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென் விதிவசமே. 3

ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வந் தருவாய், சிதம்பரதேசிகனே. 4

பாராம லேற்பவர்க் கில்லையென்னாமற் பழுதுசொல்லி
வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து
பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரைச்
சேராமற் செல்வந்தருவாய், சிதம்பர தேசிகனே. 5

கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6

முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே. 7

காலையுபாதி மலஞ்சல மாமன்றிக் கட்டுச்சியிற்
சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம்
மாலையுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே
ஆலமுகந்தரு ளம்பலவா, என்னை யாண்டருளே. 8

ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் சென்றாற்
பாயுமிடபங், கடிக்குமரவம், பின்பற்றிச் சென்றாற்
பேயுங்கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்
போயென்செய்வாய் மனமே ! பிணக்காடவர் போமிடமே. 9

ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி, யுலாவிமெள்ள
வீடுகடோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போ
லாடுமருட் கொண்டிங்கு அம்பலத்தேநிற்கு மாண்டிதன்னைத்
தேடுங் கணக்கென்னகாண் ? சிவகாம சவுந்தரியே. 10

ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்றோ டொன்றை
மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வினை
காட்டுவிப்பானு மிருவினைப் பாசக் கயிற்றின்வழி
யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே. 11

அடியார்க் கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்
மடியாமற்செல்வ வரம்பெறலாம், வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனருட்
குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே. 12

தெய்வச் சிதம்பரதேவா, உன்சித்தந் திரும்பிவிட்டாற்
பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்டலீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடகசாலையெங்கே? இது கண்மயக்கே. 13

உடுப்பானும் பாலன்னமுண்பானு முய்வித்தொருவர் தம்மைக்
கெடுப்பானு மேதென்று கேள்விசெய்வானுங் கெதியடங்கக்
கொடுப்பானுந் தேகியென்றேற்பானும் ஏற்கக் கொடாமனின்று
தடுப்பானு நீயல்லையோ? தில்லையானந்தத் தாண்டவனே. 14

வித்தாரம் பேசினுஞ் சோங்கேறினுங் கம்பமீதிருந்து
தத்தாரவென் றோதிப் பவுரிகொண்டாடினுந் தம்முன்தம்பி
யத்தாசைபேசினு மாவதுண்டோ? தில்லையுண்ணிறைந்த
கத்தாவின் சொற்படியல்லாது வேறில்லை கன்மங்களே. 15

பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே. 16

தவியாதிரு நெஞ்சமே, தில்லைமேவிய சங்கரனைப்
புவியார்ந் திருக்கின்ற ஞானாகரனைப் புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை யைந்தெழுந்தாற்
செவியாமல் நீ£செபித்தாற் பிறவாமுத்தி சித்திக்குமே. 17

நாலின் மறைப்பொரு ளம்பலவாணரை நம்பியவர்
பாலிலொருதரஞ் சேவிக்கொணா திருப்பார்க் கருங்கல்
மேலிலெடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர், மீண்டுமொரு
காலினிறுத்துவர், கிட்டியுந் தாம்வந்து கட்டுவரே. 18

ஆற்றோடு தும்பை யணிந்தாடும் அம்பலவாணர்தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளமுண் டேயிந்தப் பூதலத்திற்
சோற்றாவி யற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியுமற்றே
ஏற்றாலும் பிச்சைகிடையாம லேக்கற் றிருப்பார்களே. 19

அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாமசுந்தரி நேசனை, யெம்
கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே. 20


3. முதலாவது கோயிற்றிருவகவல்

(திருமண்டில ஆசிரப்பா)

நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க! 5

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன, 15

தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை, 20

இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள், 25

பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி 30

சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை 35

ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு 40

முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே! 45

சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!


4. இரண்டாவது கோயிற்றிருவகவல்

காதள வோடிய கலகப் பாதகக்
கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங்
காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள்
பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச்
சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந் 5

தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்
ஐவர் கலகமிட் டலைக்குங் கானகம்;
சலமலப் பேழை; யிருவினைப் பெட்டகம்;
வாதபித் தங்கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோ லுதிரக் கட்டளை; 10

நாற்றப் பாண்டம், நான்முழத் தொன்பது
பீற்றத் துண்டம், பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்,
ஆசைக் கயிற்றி லாடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம், ஓரு மரக்கலம்; 15

மாயா விகாரம், மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி, தூற்றம் பத்தம்;
காற்றில் பறக்கும் காணப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை,
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை 20

ஈமக் கனலி லிடுசில விருந்து;
காமக் கனலிற் கருகுஞ் சருகு;
கிருமிக் கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பாவக்கொழுந் தேறுங் கவைக்கொழு கொம்பு
மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25

பிணமாய்க் கிடக்கும் பிண்டம், பிணமேல்
ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி
காலெதிர் குவித்த பூளை, காலைக்
கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத் தியங்கு மிந்திர சாபம்; 30

அதிரு மேகத் துருவி னருநிழல்
நீரிற் குமிழி; நீர்மே லெழுத்து;
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி;
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;
அமையு மமையும் பிரானே, யமையும் 35

இமைய வல்லி வாழியென் றேத்த
ஆனந்தத் தாண்டவங் காட்டி
ஆண்டுகொண் டருள்கைநின் னருளினுக் கழகே. 38

5. மூன்றாவது கோயிற்றிருவகவல்

பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்!
அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலைக் காலனைக்
காலெடுத் தடக்கிய கடவுள்நின் னடைக்கலம்
உலகடங் கலும்படைத் துடையவன் றலைபறித்து 5

இடக்கையி லடக்கிய இறைவ! நின் னடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் னடைக்கலம்!
ஐய! நின் னடைக்கலம்! அடியநின் னடைக்கலம்;
மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும் 10

ஆணவ மலத்துதித் தளைந்ததி னுளைத்திடும்
நிணவைப் புழுவெனத் தெளிந்தெடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
தவறும் அழுக்காறும் இவறுபொய்ச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் 15

இகலும், கொலையும், இழிப்புறு புன்மையுங்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையும், ஐம்பொறி மயக்கமும்
இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை
உயிரெனுங் குருருவிட் டோடுங் குரம்பையை 20

எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் குடிலைச்
செம்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடற் குடத்தைப் பலவுடற் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25

கொலைபடைக் கலம்பல கிடக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக்
கோள்சரக் கொழுகும் பீறல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தை 30

புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றி லாடுபம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயங்குங் திகிரியைக்
கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் 35

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக் கலங்கிக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை
நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் 40

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடைக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்டத் திறையே! அடைக்கலம். 45

அடியார்க் கெளியாய்! அடைக்கல மடைக்கலம்;
மறையவர் தில்லை மன்று நின் றாடிக்
கருணை மொண்டலையெறி கடலே! அடைக்கலம்;
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப்
பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50

எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்;
அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!

6. நான்காவது கச்சித் திருவகவல்


திருமால் பயந்த திசைமுக னமைத்து
வருமேழ் பிறவியு மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகா தவமே
மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும் 5

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,
முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10

துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும்
தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென வியம்பும்
நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15

மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25

அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பு மூத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30

அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத் 40

தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்
தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45

காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,
நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50

இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;
திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
புண்ணிது வென்று புடவையை மூடி
உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55

மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60

மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்
இத்தை நீங்க ளினிதென வேண்டா
பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65

முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70
- - - - - - - - - - - - - - -- - - - -
திருச்செங்கோடு

நெருப்பான மேனியர் செங்கோட்டி லாத்தி நிழலருகே
இருப்பார் திருவுள மெப்படியோ இன்னமென்னை யன்னைக்
கருப்ப சாயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
திருப்பாதமே தருமோ தெரியாது சிவன்செயலே.
- - - - - - - - - - - - - - - - - - - - -
திருவொற்றியூர்

ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1

சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே. 2
- - - - - - - - - - - - - - - - -
திருவிடைமருதூர்

காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. 1

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே. 2
- - - - - - - - - - - - -- - - - - - - -
திருக்கழுக்குன்றம்

காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த
வீடோ? புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.
- - - - - -- - - - - - - - - - - - - -
திருக்காளத்தி

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 1

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு; பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு? அத்தன்மையைப்போ
உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டுஉனைப் பணியும்
என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி யீச்சுரனே! 2

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3

முப்போது மன்னம் புசிக்கவுந் தூங்கவு மோகத்தினாற்
செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவன்விடு
மப்போது கண்கலக்கப் படவும் வைத்தா யையனே,
எப்போது காணவல்லேன்? திருக்காளத்தி யீச்சுரனே. 4

இரைக்கே யிரவும் பகலுந் திரிந்திங் கிளைத்துமின்னார்
அரைக்கே யவலக் குழியரு கேயசும் பார்ந்தொழுகும்
புரைக்கே யுழலுந் தமியேனை யாண்டருள், பொன்முகலிக்
கரைக்கேகல் லால நிழற்கீ ழமர்ந்தருள் காளத்தியே. 5

நாறுங் குதிரைச் சலதாரை தோற்புரை நாடொறுஞ்சீழ்
ஊறு மலக்குழி காமத்துவார மொளித் திடும்புண்
தேறுந் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு
ஏறும் பதந்தரு வாய் திருக்காளத்தி யீச்சுரனே. 6
- - - - - - - - -- - - - - - - - - ---
திருக்கைலாயம்

கான்சாயும் வெள்ளி மலைக்கரசே, நின்கழல் நம்பினேன்
ஊன்சாயுஞ் சென்ம மொழித்திடு வாய், காவூரனுக்காய்
மான்சாயுச் செங்கை மழுவலஞ் சாய வனைந்தகொன்றைத்
தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக்கொழுந்தே. 1

இல்லந் துறந்து பசிவந்த போதங் கிரந்துநின்று
பல்லுங் கரையற்று வெள்வாயுமாய், ஒன்றிற் பற்றுமின்றிச்
சொல்லும் பொருளு மிழந்து சுகானந்தத் தூக்கத்திலே
யல்லும் பகலு மிருப்பதென்றோ? கயிலா யத்தனே. 2

சிந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய்கையற்று
நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலி லென்றிருப் பேனத்தனை! கயிலாயத்தனே. 3

கையார ஏற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துணியைத்
தையா துடுத்து நின் சந்நிதிக்கே வந்துசந்ததமு
மெய்யார நிற்பணிந் துள்ளே யுரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயா வென்று ஓலமிடுவது என்றோ? கயிலாயத்தனே. 4

நீறார்த்த மேனி யுரோமஞ்சிலிர்த், துளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே யுருகி, நின்சீரடிக்கே
மாறாத் தியானமுற் றானந்த மேற்கொண்டு மார்பிற்கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே. 5

செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயிலாயத்தனே. 6

மந்திக் குருளையத் தேனில்லை, நாயேன் வழக்கறிந்துஞ்
சிந்திக்குஞ் சிந்தையையான் என்செய்வேன் எனைத் தீதகற்றிப்
புந்திப் பிரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்
எந்தைக் குரியவன் காண் அத்தனே, கயிலாயத்தனே. 7

வருந்தேன் பிறந்து மிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயலஞ்செழுத்தாம்
அருந்தேன் அருந்துவ நின் அருளால், கயிலாயத்தனே. 8
- - - - - - - - - - - - - - - - - - -
மதுரை

விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பிப்
படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.

7. அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு

கன்னிவனநாதா, கன்னிவனநாதா

மூலமறியேன், முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா; 1

அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதற் கெட்டனடா !
பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா. 2

தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
மனுவாதி சத்தி வலையி லகப்பட்டனடா 3

மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா. 4

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே. 5

மக்கள்சுற்றத் தாசை மறக்கேனே யென்குதே
திக்கரசாம் ஆசையது தீரேனே யென்குதே. 6

வித்தைகற்கு மாசையது விட்டொழியே னென்குதே
சித்துகற்கு மாசை சிதையேனே யென்குதே. 7

மந்திரத்தி லாசை மறக்கேனே யென்குதே
சுந்தரத்தி லாசை துறக்கேனே யென்குதே. 8

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
கட்டுவர்க்கத் தாசை கழலேனே யென்குதே
செட்டுதலில் ஆசை சிதையேனே யென்குதே. 9

மாற்றுஞ் சலவை மறக்கேனே யென்குதே
சோற்றுக் குழியுமின்னந் தூரேனே யென்குதே. 10

ஐந்து புலனு மடங்கேனே யென்குதே
சிந்தை தவிக்கிறதுந் தேறேனே யென்குதே. 11

காமக் குரோதம் கடக்கேனே யென்குதே
நாமே அரசென்று நாடோறு மெண்ணுதே. 12

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே
கைச்சு மின்னுமான் கழலேனே யென்குதே. 13

நீர்க்குமிழி யாமுடலை நித்தியமா யெண்ணுதே
ஆர்க்கு முயராசை அழியேனே யென்குதே. 14

கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணுந் திரமா யிருப்போமென் றெண்ணுதே. 15

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
அநித்தியத்தை நித்தியமென் றாதரவா யெண்ணுதே
தனித்திருக்கே னென்குதே தனைமறக்கே னென்குதே. 16

நரகக் குழியும்இன்னும் நான்புசிப்பே னென்குதே
உரகப் படத்தல்கு லுனைக்கெடுப்பே னென்குதே. 17

குரும்பை முலையுங் குடிகெடுப்பே னென்குதே
அரும்புவிழியு மென்ற னாவியுண்பே னென்குதே. 18

மாதருருக் கொண்டு மறலிவஞ்ச மெண்ணுதே
ஆதரவு மற்றிங் கரக்கா யுருகிறண்டா. 19

கந்தனை யீன்றருளுங் கன்னிவன நாதா!
எந்த விதத்தினா னேறிப் படருவண்டா. 20

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ? 21

கீரியாய்க் கிடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ? 22

பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனைசெய் தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ? 23

அன்னை வயிற்றி லழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ? 24

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ? 25

நோயுண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேயுண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ? 26

ஊனவுடல் கூன்குருடா யுற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பு லிளைத்தநாள் போதாதோ? 27

பட்ட களைப்பபும் பரிதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டே னென்றுகேளாதும் போதாதோ? 28

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
நில்லாமைக்கே யழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரு மென்பார மெடுத்தநாள் போதாதோ? 29

காமன் கணையாற் கடைப்பட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் நாலுமிடியுண்டல் போதாதோ? 30

நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன்துளபத் தான்நேமி தேக்குண்டல் போதாதோ? 31

உருத்திரனார் சங்காரத் துற்றநாள் போதாதோ?
வருத்த மறிந்தையிலை, வாவென் றழைத்தையிலை 32

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
பிறப்பைத் தவிர்த்தையிலை; பின்னாகக் கொண்டையிலை,
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை; 33

பாச மெரித்தையிலை; பரதவிப்பைத் தீர்த்தையிலை;
பூசிய நீற்றைப் புனையென் றளித்தையிலை. 34

அடிமையென்று சொன்னையிலை, அக்கமணி தந்தையிலை;
விடுமுலகம் நோக்கி யுன்றன்வேட மளித்தையிலை. 35

உன்னி லழைத்தையிலை, ஒன்றாக்கிக் கொண்டையிலை,
நின்னடியார் கூட்டத்தில் நீயழைத்து வைத்தையிலை; 36

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
ஓங்கு பரத்துள் ஒளித்தவடி யார்க்கடியான்
ஈங்கோ ரடியா னெமக்கென்று உரைத்தையிலை; 37

நாமந் தரித்தையிலை, நானொழிய நின்றையிலை,
சேம வருளி லெனைச்சிந்தித் தழைத்தையிலை. 38

முத்தி யளித்தையிலை; மோனங் கொடுத்தையிலை;
சித்தி யளித்தையிலை; சீராட்டிக் கொண்டையிலை; 39

தவிர்ப்பைத் தவிர்த்தையிலை; தானாக்கிக் கொண்டையிலை;
அவிப்பரிய தீயாமென் னாசை தவிர்த்தையிலை; 40

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
நின்ற நிலையில் நிறுத்தியெனை வைத்தையிலை;
துன்றுங் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை; 41

கட்டவுல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை;
நிட்டையிலே நில்லென்றுநீ நிறுத்திக் கொண்டையிலை; 42

கடைக்கண் ணருள்தாடா, கன்னிவன நாதா!
கெடுக்கு மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா! 43

காதல் தணியேனோ! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடந்தான் தீரேனோ! 44

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
உன்னைத் துதியேனோ, ஊர்நாடி வாரேனோ,
பொன்னடியைப் பாரேனோ, பூரித்து நில்லேனோ ? 45

ஓங்காரப் பொற்சிலம்பி னுல்லாசம் பாரேனோ ?
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ ! 46

வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ !
சூரர்கண்டி போற்றுமந்தச் சுந்தரத்தைப் பாரேனோ ! 47

இடையில் புலித்தோ லிருந்தநலம் பாரேனோ !
விடையி லெழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ ! 48

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ !
மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ ! 49

மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ;
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ ! 50

கண்டங் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ !
தொண்டர் குழுவினின்ற தோற்றமதைப் பாரேனோ ! 51

அருள்பழுத்த மாமதியா மானனத்தைப் பாரேனோ !
திருநயனச் சடையளிருஞ் செழுங்கொழுமை பாரேனோ ! 52

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
செங்குழியின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ ?
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ ! 53

முல்லை நிலவெறிக்கு மூரலொளி பாரேனோ !
அல்லார் புருவத் தழகுதனைப் பாரேனோ ! 54

மகரங் கிடந்தொளிரும் வள்ளைதனைப் பாரேனோ !
சிகர முடியழகுஞ் செஞ்சடையும் பாரேனோ ! 55

கங்கையோடு திங்கள் நின்றகாட்சிதனைப் பாரேனோ !
பொங்கு அரவைத்தான்சடையிற் பூண்டவிதம் பாரேனோ 56

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ ;
எருக்கறுகு ஊமத்தையணி யேகாந்தம் பாரேனோ ! 57

கொக்கிறகுக் கூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ !
அக்கினியை யேந்திநின்ற ஆனந்தம் பாரேனோ ! 58

தூக்கிய காலுந் துடியிடையும் பாரேனோ !
தாக்கு முயலகன் தாண்டவத்தைப் பாரேனோ ! 59

வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ !
ஆசை அளிக்கு மபயகரம் பாரேனோ ! 60

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம்வளர் பேரழகைப் பாரேனோ ! 61

சுந்தர நீற்றின் சொகுகதனைப் பாரேனோ !
சந்திர சேகரனாய்த் தயவுசெய்தல் பாரேனோ ! 62

கெட்டநாள் கெட்டாலுங் கிருபையினிப் பாரேடா !
பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ ? 63

நற்பருவ மாக்குமந்த நாளெனக்குக் கிட்டாதோ ?
எப்பருவ முங்சுழன்ற ஏகாந்தங் கிட்டாதோ ? 64

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
வாக்கிற்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்குமந்தத் தற்சுத்தி கிட்டாதோ ? 65

வெந்துயரைத் தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ ?
சிந்தையையுந் தீர்க்குமந்தத் தேறலது கிட்டாதோ ? 66

ஆன அடியார்க் கடிமைகொளக் கிட்டாதோ ?
ஊனமற வென்னை வுணர்த்துவித்தல் கிட்டாதோ ? 67

என்னென்று சொல்லுவண்டா? என்குருவே? கேளேடா !
பின்னை எனக்குநீ யல்லாமற் பிறிதிலையே. 68

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!
அன்ன விசாரமது வற்றவிடங் கிட்டாதோ?
சொன்ன விசாரந் தொலைந்தவிடங் கிட்டாதோ? 69

உலக விசார மொழிந்தவிடங் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதுங் கிட்டாதோ? 70

ஒப்புவமை பற்றோ டொழிந்தவிடங் கிட்டாதோ?
செப்புதற்கு மெட்டா தெளிந்தவிடங் கிட்டாதோ? 71

வாக்கு மனாதீத வசோகசத்திற் செல்லவெனைத்
தாக்கு மருட்குருவே, நின்தாளிணைக்கே யான்போற்றி. 72


8. அருட்புலம்பல் - மகடூ முன்னிலையாக உள்ளது

ஐங்கரனை தெண்டனிட்டே னருளடைய வேண்டுமென்று
தங்காமல் வந்தொருவன் தன்சொரூபங் காட்டியெனை. 1

கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம்
கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி 2

ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும்
சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் துரிசறவே. 3

மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
தத்துவங்க ளெல்லாந் தலைகெட்டு வெந்ததடி. 4

என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள்;
தன்னந் தனியே தனித்திருக்க மாட்டேண்டி. 5

எல்லாரும் பட்டகள மென்று தொலையுமடி
சொல்லி யழுதாற் றுயரமனெக் காறுமடி. 6

மண்முதலா மைம்பூத மாண்டுவிழக் கண்டேண்டி !
விண்முதலா மைம்பொறிகள் வெந்து விழக் கண்டேண்டி. 7

நீங்காப் புனல்களைந்து நீறாக வெந்ததடி
வாக்காதி ஐவரையும் மாண்டுவிழங் கண்டேண்டி. 8

மனக்கரண மத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரணத் தோடே யெரிந்துவிழக் கண்டேண்டி. 9

ஆத்துமத் தத்துவங்கள் அடுக்கழிய வெந்ததடி !
போற்றும்வகை யெப்படியோ போதமிழந் தானை. 10

வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி !
சுத்தவித்தை ஐந்தினையுஞ் சுட்டான் துரிசறவே. 11

முன்று வகைக்கிளையு முப்பத் தறுவரையும்
கான்றுவிழச் சுட்டுக் கருவே ரறுத்தாண்டி. 12

குருவாகி வந்தானோ? குலமறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உருவழிக்க வந்தானோ? 13

கேடுவரு மென்றறியேன், கெடுமதிகண் டோற்றாமல்
பாடுவரு மென்றறியேன், பதியாண்டு இருந்தேண்டி. 14

எல்லாரும் பட்டகள மின்னிட மென்றறியேன்;
பொல்லாங்கு தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி. 15

உட்கோட்டைக் குள்ளிருந்தா ரொக்க மடிந்தார்கள்,
அக்கோட்டைக் குள்ளிருந்தா ரறுபதுபேர் பட்டார்கள். 16

ஒக்க மடிந்ததடி ! ஊடுருவ வெந்ததடி !
கற்கோட்டை யெல்லாங் கரிக்கோட்டை யாச்சுதடி. 17

தொண்ணூற் றறுவரையுஞ் சுட்டான் துரிசறிவே
கண்ணேறு பட்டதடி கருவே ரறுத்தாண்டி. 18

ஓங்காரங் கெட்டதடி, உள்ளதெல்லாம் போச்சுதடி
ஆங்காரங் கெட்டதடி, அடியோ டறுத்தாண்டி. 19

தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி !
இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி. 20

முன்னை வினையெல்லா முழுது மறுத்தாண்டி
தன்னை யறியவே தானொருத்தி யானேண்டி. 21

என்னையே நானறிய இருவினையு மீடழித்துத்
தன்னை யறியத் தலமெனக்குச் சொன்னாண்டி. 22

தன்னை யறிந்தேண்டி ! தனிக்குமரி யானேண்டி !
தன்னந் தனியே தனியிருக்கும் பக்குவமோ. 23

வீட்டி லொருவரில்லை வெட்டவெளி யானேண்டி !
காட்டுக் கெறித்திநிலா கனவாச்சே கண்டதெல்லாம். 24

நகையாரோ கண்டவர்கள்? நாட்டுக்குப் பாட்டலவோ?
பகையாரோ கண்டவர்கள்? பார்த்தாருக் கேச்சலவோ? 25

இந்நிலமை கண்டாண்டி, எங்கு மிருந்தாண்டி !
கன்னி யழித்தாண்டி, கற்பைக் குலைத்தாண்டி. 26

கற்புக் குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும்
பொற்புக் குலைத்தமையும், போத மிழந்தமையும். 27

என்ன வினைவருமோ? இன்னமெனக் கென்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் பலித்ததடி, சோர்வறவே. 28

கங்குல்பக லற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி !
பங்க மழித்தாண்டி, பார்த்தானைப் பார்த்திருந்தேன். 29

சாதியிற் கூட்டுவாரோ? சாத்திரத்துக் குள்ளாமோ?
ஓதி யுணர்ந்தெல்லா முள்ளபடி யாச்சுதடி ! 30

என்னகுற்றஞ் செய்தேனோ? எல்லாரும் காணாமல்,
அன்னைசுற்ற மெல்லா மறியாரோ வம்புவியில்? 31

கொன்றாரைத் தின்றேனோ? தின்றாரைக் கொன்றேனோ?
எண்ணாதெல் லாமெண்ணு மிச்சை மறந்தேனோ? 32

சாதியிற் கூட்டுவரோ? சமயத்தோ ரெண்ணுவரோ?
பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக் கிடமாச்சுதடி ! 33

கண்டார்க்குப் பெண்ணல்லவோ? காணார்க்கும் காமமடி
உண்டார்க ளுண்டதெலா மூணல்ல துண்பர்களோ? 34

கொண்டவர்கள் கொண்டதெல்லாங் கொள்ளாதார் கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ? 35

பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ?
தொண்டாய தொண்டருளந் தோற்றி யடுங்குமதோ? 36

ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?
பேதமற எங்கும் விளங்கும் பெருமையன்காண். 37

வாக்கு மனமுங் கடந்த மனோலயன்காண் !
நோக்க அரியவன்காண், நுண்ணியரில் நுண்ணியன்காண். 38

சொல்லுக் கடங்கான்காண் ! சொல்லிறந்து நின்றவன்காண் !
கல்லு ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண் ! 39

சூட்டிறந்த பாழதனிற் கசிந்திருக்கச் சொன்னவன்காண் !
ஏட்டி லெழுத்தோ? எழுதினவன் கைப்பிழையோ? 40

சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா ! பொருளிதென வடைய விழுங்கினண்டி ! 41

பார்த்த விடமெல்லாம் பரமாகக் கண்டேண்டி !
கோத்த நிலைகுலைந்த கொள்கை யறியேண்டி ! 42

மஞ்சனமாட்டி மலர்பறித்துச் சாத்தாமல்
நெஞ்சுவெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி ! 43

பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்,
ஓடித் திரியாம லுருக்கெட்டு விட்டேண்டி ! 44

மாணிக்கத் துள்ளளிபோல் மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் பேசாப் பெருமையன்காண் 45

அன்றுமுத லின்றளவு மறியாப் பருவமதில்
என்றும் பொதுவா யிருந்த நிராமயன்காண் 46

சித்த விகாரத்தாலே சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே 47

பத்தி யறியாமற் பாழில் கவிழ்ந்தேண்டி !
ஒத்தவிட நித்திரையென் றொத்து மிருந்தேண்டி? 48


திருச்சிற்றம்பலம்


This page was first put up on August 22, 2000
Please send your comments and corrections to the Webmaster(s) of this site