அணிந்துரை
[பெருமழைப் புலவர் திரு.பொ.வே.சோமசுந்தரனார்]
சூளாமணி என்பது செந்தமிழ் மொழியின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்று.
இது ஆருகத சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசைப் புலவரால் இயற்றப்பட்டது.
கடைச்சங்க காலத்திற்குப் பின்னரும் தேவாரக் காலத்திற்கு முன்னரும் நிகழ்ந்த காலத்தில்
நம் தமிழகத்தின் கண் ஆருகத சமயம் என்னும் சமண சமயம் யாண்டும் பரவி மிகவும் செழிப்புற்றிருந்தது.
அக்காலத்தே அம்மதச் சார்புடைய நல்லிசைப் புலவர் பலர் அம் மதத்திற்கு ஆக்கமாக இயற்றிய
பெருங்காப்பியங்கள், நிகண்டுகள் பல.
சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியமாம்.
சூளாமணி, யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், நீலகேசி இவை ஐஞ்சிறுகாப்பியமாம்.
இலக்கண வகையாலன்றிக் காப்பியப் பண்பு வகையாலும் தலை சிறந்த காவியம் சிந்தாமணியாகும்.
இதை அடியொற்றி அதற்குப் பின் தோன்றிய பெருங்காப்பியமே இச் சூளாமணியாகும்.
எனினும், சிந்தாமணியின் செய்யுளைக் காட்டிலும் சூளாமணியின் செய்யுட்கள் இனிய ஓசையுடையனவாய்ச்
சிறந்திருக்கிறது.
சூளாமணி என்னும் இவ் வனப்பியல் நூல் ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில்
கூறப்பட்ட பழைய கதை ஒன்றினை பொருளாகக் கொண்டு எழுந்த நூலாகும். இந்நூலிற்கு
அமைந்த சூளாமணி என்னும் இப் பெயர் ஆசிரியரால் இடப்பட்ட பெயராகத் தோன்றவில்லை,
தன்மையால் வந்த பெயரே ஆகும்.
நூலாசிரியர் வரலாறு
சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை.
இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்'
இனிய அழகிய சொற்றொடரை வழங்கி யிருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத்
தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் என பெரியோர்கள் கருதுகின்றனர்.
இவர் கார்வெட்டியரசன் விசயன் என்பவனுடைய காலத்தவர் ,தருமதீர்த்தங்கரரிடத்தே பெரிதும்
ஈடுபாடுடையவர் என்றும் மன்னன் விசயன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றினார் என்பதும்
சில செய்யுட்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. கடைச் சங்க காலத்திற்குப் பின்னர்ச் சமண
சமயம் செழிப்புற்றிருந்த காலத்தே அச் சமயக் கணக்கர்கள் அதை பரப்பும் பொருட்டு அங்கங்கே
சங்கங்கள் பல நிறுவினர் ,அதில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்சங்கம் [திரமிள சங்கம் ] மிகவும்
சிறப்புற்றிருந்தது. இச் சங்கங்களுக்கு அரசர்கள் தலைமை தாங்கினர்.இச் சூளாமணி, அரசன் விசயன்
சேந்தன் அவையின்கண் அமைந்த சான்றோர்களால் கேட்கப்பட்டு அவர்களால் நல்லநூல் என ஏற்றுக்
கொள்ளப்பட்டும் இருக்கிறது.
இனி, தோலாமொழித்தேவர் வாழ்ந்த காலத்தை இதுகாறும் யாரும் வரையறுத்துக் கூறவில்லை.
அச் சூளாமணிக்கு முற்பட்ட சிந்தாமணியின் காலம் கி.பி. 897 க்குப் பின்னாதல் வேண்டும்.
எங்ஙனமாயினும், சிந்தாமணி ஆசிரியருக்குத் தோலாமொழித் தேவர் பிற்காலத்தவர் என்பதை மறுப்பார்
யாருமில்லை. எனவே, இவர் கடைச்சங்ககால்த்திற்குப் பின்னிருந்த சிந்தாமணி ஆசிரியராகிய
திருத்தக்கதேவர் காலத்திற்கு அணித்தாய்த் தேவாரக் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்தே
வாழ்ந்தவர் என்பது ஒருவாறு பொருந்துவதாம்.
------