patinenkiizkannakku noolkaL -III
kAr nArpathu (madurai kaNNangkUthanAr)
ElAthi (kaNimEthaiyAr)
ciru panja mUlam (kAriyAcAn)
(in tamil script, unicode/UTF-8 format)

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -III
கார் நாற்பது (ஆசிரியர் மதுரைக் கண்ணங்கூத்தனார்)
ஏலாதி -80 (ஆசிரியர் கணிமேதையார்)
சிறு பஞ்ச மூலம் -100 (ஆசிரியர் காரியாசான்)




Etext Preparation (input, proof-reading, webpage) : K. Kalyanasundaram

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

C: Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.

கார் நாற்பது
மதுரைக் கண்ணங்கூத்தனார் அருளியது

(பாட வேற்றுமைகள் @ % & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளது )

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பொழல் தாழ@
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து% 1
@ தீம்பொழல் வீழ ஃ பொழுது

இதுவுமது
கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் கொடுங்குழாய்@
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து. 2
@ கொடுங்குழை

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற் றண்புறவி னாலி - புரள
உருமிடி வான மிழிய வெழுமே@
நெருந லொருத்தி திறத்து. 3
@ இழித்தெழுங் தோங்கும்

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப்@ பூத்தன
பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி
வாடம பசலை மருந்து. 4
@ கவின்கொள்

இதுவுமது
இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு. 5

இதுவுமது
தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்@
சென்றாரை நீடன்மி னென்று. 6
@நெறியிடை

இதுவுமது
நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந்
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல
எச்சாரு மின்னு மழை. 7

இதுவுமது
மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வால்கூறும்
கண்ணிய லஞ்சனங் தோய்ந்தபோற் காயாவும்
நுண்ணுரும் பூழ்த்த புறவு. 8

உருவினை கண்மலர்போற் பூத்தன கார்க்கோற்
றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவு முரைத்து. 9

இதுவுமது
வானேறு வானத் துரற வயமுரண்
ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக்
கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி
மேனி தளிர்ப்ப வரும். 10

இதுவுமது
புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை யீன்ற புறவு. 11

இதுவுமது
மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம்@
நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரும் வலம். 12
@ திண்ணிதால்

இதுவுமது
ஏந்தெழி லல்குலா யேமார்ந்த@ காதலர்
கூந்தல வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிறெறி வாளரவம் போலக்கண் வெளவி
ஒளிறுபு மின்னு மழை. 13
@ ஏமாந்த

இதுவுமது
செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும். 14

இதுவுமது
திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது. 15

இதுவுமது
கருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
செயலை@ யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கூண் கொள். 16
@ அசோகினிளந்தளிர்

இதுவுமது
அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறோடு பெளவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல். 17

இதுவுமது
கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்லிசை யேறொடு வான நடுநிற்பச்
செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற் புல்லென்ற காடு. 18

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது
நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடிபொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு. 19

இதுவுமது
வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
ஆறும் பதமினிய வாயின - |ஏறோ
டருமணி நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற் செல்லு மழை. 20

இதுவுமது
பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே
சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற்
செல்வ மழைந்தடங்கட் சின்மொழிப் பேதைவாய்
முள்ளெயி றேய்ப்ப வடிந்து. 21

இதுவுமது
இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து
புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார்
இளநலம் போலக் கவினி வளமுடையார்
ஆக்கம்போற் பூத்தன காடு. 22

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந்
தண்டுளி யாலி புரளப் புயல்கான்று
கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ
ஒண்டொடி யூடுநிலை. 23

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது
எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்
மெல்லவுந்@ தோன்றும்% பெயல். 24
@ எல்லியும் ஃ செயல்

பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
கருங்கால் வரகின் பொரிப்போ லரும்புவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழிவீ மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று
கூர்ந்த பசலை யவட்கு. 25

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி@
தூதொடு வந்த மழை. 26
@ தோன்றிசின் மென்மொழி

ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற
வற்புறுத்தது
முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப்@
பள்ளியுட் பாயும் பசப்பு. 27
@ பாராட்டில்

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது
இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்@
பொன்செய் குழையிற் றுணர் தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர்
கவ்வை யழுங்கச் செலற்கு. 28
@ குமிழிணைப்பூ & குமிழிணர்ப்பூ

இதுவுமது
பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட
லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி யுடைய கரம். 29

இதுவுமது
வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய றாழ - விரைநாற@
ஊதை யுளரு நறுந்தண்கா பேதை
பெருமட நம்மாட் டுரைத்து. 30
@ திரைநாற

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது
கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந்
தெருமை யெழிலே றெறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி
திருநுதற் கியாஞ்செய் குறி. 31

இதுவுமது
கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
பாடஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு. 32

இதுவுமது
கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்@
இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி யெவ்வங் கெட. 33
@ கொள்ளப் பிறக்கும்

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித்
தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்
பெருவிறல் வானம் பெருவரை சேருங்
கருவணி காலங் குறித்தார் திருவணித்த
ஒண்ணுதல் மாதர் திறத்து. 34

இதுவுமது
சென்றநங்@ காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசி னிரங்கி யெழில்வானம்
நின்று மிரங்கு மிவட்கு. 35

வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது
சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஈர்ந்தண் தளவந் தகைந்தன - சீர்த்தக்க
செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந் தாக நமக்கு. 36

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி
இருங்க லிறுவரை யேறி யியுர்க்கும்
பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன்
அருந்தொழில் வாய்த்த நமர். 37

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை
ஆற்றுவித்தது
புகர்முகம் பூழிப்@ புரள வுயர்நிலைய%
வெஞ்சின் வேழம் பிடியோ டிசைந்தாடுந்&
தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ
ஒண்டொடி யூடு நிலை. 38
@ பூமி புரள ஃ உயர்நிலை & இணைதாழ

இதுவுமது
அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
கருங்குர@ னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கெளவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு. 39
@ கருங்கதிர்

பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித்
தோழி தலைமகளை ஆற்றுவித்தது
வந்தன செய்குறி வாரா ரவரென்று
நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின் கருவண்ணங்@ கொண்டன் றெழில்வானம்
நந்துமென் பேதை நுதல். 40
@ களிவண்ணம் கொண்டது

கார் நாற்பது முற்றிற்று

ஏலாதி
ஆசிரியர் கணிமேதையார்


சிறப்புப் பாயிரம்

இல்லறநூல்ஏற்ற துறவறநூல் ஏயுங்கால்
சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து - நல்ல
அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான் கலந்து.

கடவுள் வணக்கம்

அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு.


சென்ற புகழ்செல்வம் மீக்கூற்றம் சேவகம்
நின்ற நிலைகல்வி வள்ளன்மை - என்றும்
வழிவந்தார் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு. 1

கொலையுரியான் கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த
அலைபுரியான் வஞ்சியான் யாதும் - நிலைதிரியான்
மண்ணவர்க்கும் அன்றி மதுமலிபூங் கோதாய்
விண்ணவர்க்கும் மேலாய் விடும். 2

தவம் எளிது தானம் அரிதுக் கார்க்கேல்
அவம் அரி(து) ஆதல் எளிதால் - அவமிலா
இன்பம் பிறழின் இயைஎளிது மற்றதன்
துன்பம் துடைத்தல் அரிது. 3

இடர்த்தீர்த்தல் எள்ளாமை கீழினஞ்சே ராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்
கண்டவர் காமுறுஞ் சொல்காணின் கல்வியின்கண்
விண்டவர்நூல் வேண்டா விடும். 4

தனக்கென்றும் ஓர்பாங்கன் பொய்யான்மெய் யாக்கும்
எனக்கென்(று) இயையான்யா தொன்றும் - புனர்க்கொன்றை
போலும் இழையார்சொல் தேறான் களியானேல்
சாலும் பிறநூலின் சார்பு. 5

நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே
பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை
வேயன்ன தோளாய் இவையுடையான் பல்லுயிர்க்கும்
தாயன்னன் என்னத் தகும். 6

இன்சொல் அளாவல் இடம்இனிதூண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்தேய்க்கும் முட்போல் எயிற்றினாய் நாளும்
விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து. 7

உடன்படான் கொல்லான் உடன்றார்நோய் தீர்ந்து
மடம்படான் மாண்டார்நூல் மாண்ட - இடம்பட
நோக்கும்வாய் நோக்கி நுழைவானேல் மற்றவனை
ஆக்குமவர் ஆக்கும் அணைந்து. 8

கற்றாரைக் கற்ற துணையார் எனமதியார்
உற்றாரை அன்னணம் ஓராமல் - அற்றார்கட்(கு)
உண்டி உறையுள் உடுக்கை இவைஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று. 9

செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமும் சீரிலா
வெங்கோலான் கீழ்க்குடிகள் வீந்துகவும் - வெங்கோல்
அமைச்சர் தொழிலும் அறியலம்ஒன்(று) ஆற்ற
எனைத்தும் அறியாமை யான். 10

அவாஅறுக்கல் உற்றான் தளரான்அவ் ஐந்தின்
அவாஅறுப்பின் ஆற்ற அமையும் - அவாஅறான்
ஆகும் அவனாயின் ஐங்களிற்றின் ஆட்டுண்டு
போகும் புழையுள் புலந்து. 11

கொலைக்களம் வார்குத்துச் சூதாடும் எல்லை
அலைக்களம் போர்யானை ஆக்கும் - நிலைக்களம்
முச்சா ரிகைஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை
நச்சாமை நோக்காமை நன்று. 12

விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற
உளையாமை உட்குடைத்தா வென்று - களையாமை
நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கின் இவையாறும்
பாற்பட்டார் கொண்டொழும் பண்பு. 13

பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன
செய்யான் சிறியார் இனஞ்சேரான் - வையான்
கயலியல்உண் கண்ணாய்! கருதுங்கால் என்றும்
அயல அயலவாம் நூல். 14

கண்போல்வார்க் காயாமை கற்றார் இனஞ்சேர்தல்
பண்போல் கிளவியார்ப் பற்றாமை - பண்போலும்
சொல்லார்க்(கு) அருமறைசோ ராமை சிறிதெனினும்
இல்லார்க்(கு) இடர்தீர்த்தல் நன்று. 15

துறந்தார்கண் துன்னித் துறவார்(கு) இடுதல்
இறந்தார்க்கு இனிய இசைத்தல் - இறந்தார்
மறுதலை சுற்றம் மதித்தோம்பு வானேல்
இறுதலில் வாழ்வே இனிது. 16

குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பும் ஆற்றல் உடைமை - முடியோம்பி
நாற்றம் சுவைகேள்வி நல்லார் இனஞ்சேர்தல்
தேற்றானேல் தேறும் அமைச்சு. 17

போகம் பொருள்கேடு மான்வேட்டம் பொல்லாக்கள்
சோகம் படுஞ்சூதே சொல்வன்மை - சோகக்
கடுங்கதத்துத் தண்டம் அடங்காமை காப்பின்
அடுங்கதமில் ஏனை அரசு. 18

கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்மனைமேல்
செல்லான் சிறியார் இனஞ்சேரான் - சொல்லும்
மறையின் செவியிலன் தீச்சொற்கண் மூங்கை
இறையில் பெரியாற்கு இவை. 19

மின்னேர் இடையார்சொல் தேறான் விழைவோரான்
கொன்னே வெகுளான் கொலைபுரியான் - பொன்னே
உறுப்பறுத் தன்ன கொடையுவப்பான் தன்னின்
வெறுப்பறுத்தான் விண்ணகத்தும் இல். 20

இளமை கழியும் பிணிமூப்(பு) இயையும்
வளமை வலிஇவை வாடும் - உளநாளால்
பாடே புரியாது பால்போலும் சொல்லினாய்
வீடே புரிதல் வீதி! 21

வாள்அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பஞ்சான்
ஆள்அஞ்சான் ஆம்பொருள் தானஞ்சான் - நாள்எஞ்சாக்
காலன் வரஒழிதல் காணின்வீ டெய்திய
பாவின்நூல் எய்தப் படும். 22

குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமும் நோக்கான்
மணநோக்கான் மங்கலமும் நோக்கான் - கணநோக்கான்
கால்காப்பு வேண்டான் பெரியார்நூல் காலற்கு
வாய்காப்புக் கோடல் வனப்பு. 23

பிணிபுறப்பு மூப்போடு சாக்காடு துன்பம்
தணிவில் நிரப்பிவை தாழா - அணியின்
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம்
நிரம்புமேல் வீட்டு நெறி. 24

பாடகஞ் சாராமை பாத்திலார் தாம்விழையும்
நாடகஞ் சாராமை நாடுங்கால் - நாடகம்
சேர்ந்தால் பகைபழி தீச்சொல்லே சாக்காடே
தீர்ந்தால்போல் தீரா வரும். 25

மாண்டமைந்(து)ஆ ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை
ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ். 26

அஃகுநீ செய்யல் எனஅறிந்(து) ஆராய்ந்தும்
வெஃகல் வெகுடலே தீக்காட்சி - வெஃகுமான்
கள்ளத்த அல்ல கருதின் இவைமூன்றும்
உள்ளத்த ஆக உரை. 27

மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே
மெய்யே உணர்ந்தார் மிகஉரைப்பர் - பொய்யே
குறளை கடுஞ்சொல் பயனிலசொல் நான்கும்
மறலையின் வாயினவாம் மற்று. 28

நிலையளவின் நின்ற நெடியவர்தாம் நேரா
கொலைகளவு காமத்தீ வாழ்க்கை - அலையளவி
மையெனநீள் கண்ணாய்! மறுதலைய இம்மூன்றும்
மெய்யள வாக விதி. 29

மாண்டவர் மாண்ட அறிவினால் மக்களைப்
பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால் - பூண்ட
ஓளரதனே கேத்திரசன் காணீனன் கூடன்
கிரிதன்பென கற்பவன் பேர். 30

மத்த மயிலன்ன சாயலாய் மன்னிய சீர்த்
தத்தன் சகோடன் கருத்திரமன் புத்திரி
புத்ரனப வித்தனோடு பொய்யில் உருகிருதன்
இத்திறத்த எஞ்சினோர் பேர். 31

உரையான் குலன்குடிமை ஊனம் பிறரை
உரையான் பொருளொடுவாழ்(வு) ஆயு - உரையானாய்ப்
பூவாதி வண்டுதேர்ந்து உண்குழலாய் ஈத்துண்பான்
தேவாதி தேவனாய்த் தேறு. 32

பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும்
மெய்யுரையான் உள்ளனவும் விட்டுரையான் - எய்யுரையான்
கூந்தல் மயிலன்னாய் ! குழீஇயவான் விண்ணோர்க்கு
வேந்தனாம் இவ்வுலகம் விட்டு. 33

சிதையுரையான் செற்றம் உரைய சீறில்லான்
இயல்புரையான் ஈனம் உரையாள் - நசையவர்க்குக்
கூடுவ(து) ஈவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து. 34

துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்றார்
இறந்தார்ஈ டற்றார் இளையர் - சிறந்தவர்க்கும்
பண்ணாரும் சொல்லாய் பழியில்ஊண் பாற்படுத்தான்
மண்ணாளும் மன்னாய் மற்று. 35

காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்
பாலில்லார் பற்றிய நூலில்லார் - சாலவும்
ஆழப் படும்ஊண் அமைத்தார் இமையவரால்
வீழப் படுவார் விரைந்து. 36

அழப்போகான் அஞ்சான் அலறினால் கேளான்
எழப்போகான் ஈடற்றார் என்றும் - தொழப்போகான்
என்னேஇக் காலன்ஈ(டு) ஓரான் தவமுயலான்
கொன்னே யிருத்தல் குறை. 37

எழுத்தினால் நீங்கா(து)எண் ணால்ஒழியா(து) ஏத்தி
வழுத்தினால் மாறாது மாண்ட - ஒழுக்கினால்
நேராமை சால உணர்வார் பெருந்தவம்
போகாமை சாலப் புலை. 38

சாவ(து) எளி(து)அரிது சான்றாண்மை நல்லது
மேவல் (எளிது)அரிது மெய்போற்றல் - ஆவதன்கண்
சேறல் எளிது நிலையரிது தெள்ளியராய்
வேறல் எளி(து)அரிது சொல். 39

உலையாமை உற்றதற்(கு) ஓடி உயிரை
அலையாமை ஐயப் படாமை - நிலையாமை
தீர்க்கும்வாய் தேர்ந்து பசியுண்டு நீக்குவான்
நோக்கும்வாய் விண்ணின் உயர்வு. 40

குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய்
மறுகான் பிறர்பொருள் வெளவான் - இறுகானாய்
ஈ(டு)அற் றவர்(கு)ஈவா னாயின் நெறிநூல்கள்
பாடிறப்ப பன்னும் இடத்து. 41

கொல்லான் உடன்படான் கொல்வார் இனஞ்சேரான்
புல்லான் பிறர்பால் புலான்மயங்கல் - செல்லான்
குடிப்படுத்துக் கூழ்ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ஆண்(டு) அரசு. 42

சூ(து)உவவான் பேரான் கலா(வு)உரையான் யார்திறத்தும்
வா(து)உவவான் மாதரார் சொல்தேறான் - காதுதாழ்
வான்மகர வார்குழையாய் மாதவர்க்கு ஊண்ஈந்தான்
தான்மகர வாய்மாடத் தான். 43

பொய்யான்பொய் மேவான் புலால்உண்ணான் யாவரையும்
வையான் வழிசீத்து வால்அடிசில் - நையாதே
ஈத்துண்பான் ஆகும் இருங்கடல்சூழ் மண்ணரசாய்ப்
பாத்துண்பான் ஏத்துண்பான் பாடு. 44

இழுக்கான் இயல்நெறி இன்னாத வெஃகான்
வழுக்கான் மனைபொருள் வெளவான் - ஒழுக்கத்தால்
செல்வான் செயிரில்ஊண் ஈவான் அரசாண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து. 45

களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக் காணான்
ஒளியான் விருந்துக்(கு) உலையான் - எளியாரை
எள்ளான்நீத் துண்பானேல் ஏதமில் மண்ணாண்டு
கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து. 46

பெரியார்சொல் பேணிப் பிறழாது நின்று
பரியா அடியார்ப் பறியான் - கரியார்சொல்
தேறான் இயையான் தெளிந்தடிசில் ஈத்துண்பான்
மாறான்மண் ஆளுமாம் மற்று. 47

வேற்றரவம் சேரான் விருந்தொழியான் தன்இல்லுள்
சோற்றரவம் சொல்லியுண் பானாயின் - மாற்றரவம்
கேளான் கிளைஓம்பின் கேடில் அரசனாய்
வாளான்மண் ணாண்டு வரும். 48

யானை குதிரைபொன் கன்னியே ஆணிரையோ(டு)
ஏனை ஒழிந்த இவையெல்லாம் - ஆன்நெய்யால்
எண்ணனாய் மாதவர்க்(கு) ஊண்ஈந்தான் வைசிர
வண்ணனாய் வாழ்வான் வகுத்து. 49

எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை
வள்ளே துணியே இவற்றோடு - கொள்ளென
அன்புற்(று) அசனம் கொடுத்தான் துணையினோ(டு)
இன்புற்(று) வாழ்வான் இயைந்து. 50

உண்ணீர் வளம்குளம் கூவல் வழிப்புரை
தண்ணீரை அம்பலந்தான் பாற்படுத்தான் -பண்ணீர
பாடலோ(டு) ஆடல் பயின்றுயிர் செல்வானாய்க்
கூடலொ(டு) ஊடலுளான் கூர்ந்து. 51

இல்லிழந்தார் கண்ணிழந்தார் ஈண்டியசெல் வம்இழந்தார்
நெல்லிழந்தார் ஆணிரை தான்இழந்தார்க்(கு) -எல்உழந்து
பண்ணியூண் ஈந்தவர் பல்யானை மன்னராய்
எண்ணிஊண் ஆர்வார் இயைந்து. 52

கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான்
முடம்பட்டார் மூத்தார்மூப் பில்லார்க்(கு) - உடம்பட்(டு)
உடையராய் இல்லுள்ஊண் ஈத்துண்பார் மண்மேல்
படையராய் வாழ்வார் பயின்று. 53

பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
கார்ப்பார் தமையாதும் காப்பிலார் - தூப்பால
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண்ணாண்டு
பண்டாரம் பற்றவாழ் வார். 54

ஈன்றார்ஈன் கால்தளர்வார் சூலார் குழவிகள்
மான்றார் வளியான் மயங்கினார்க்கு - ஆனார்என்(று)
ஊண்ஈய்த்(து) உறுநோய் களைந்தார் பெருஞ்செல்வம்
காண்ஈய்த்து வாழ்வார் கலந்து. 55

தலையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டீர்
உயை஡ளர் ஊண்ஒன்றும் இல்லார் - கிளைஞராய்
மாவலந்த நோக்கினாய் ஊண்ஈய்ந்தபர் மாக்கடால்சூழ்
நாவலம்தீ(வு) ஆள்வாரே நன்கு. 56

கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி காயும்
பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க்(கு) - அருஞ்சிரமம்
ஆற்றிஊண் ஈத்(து)அவை தீர்த்தார் அரசராய்ப்
போற்றிஊண் உண்பார் புரந்து. 57

காமாடார் காமியார் கல்லார் இனஞ்சேரார்
ஆமாடார் ஆயந்தார் நெறிநின்று -தாமாடா(து)
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார்முன் இம்மையான்
மாற்றாரை மாற்றிவாழ் வார். 58

வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கியநூல் நோக்கி நுழையா - இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழிஇல்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து. 59

பெருமை புகழ்அறம் பேணாமை சீற்றம்
அருமைநூல் சால்பில்லார் சாரின் இருமைக்கும்
பாவம் பழிபகை சாக்காடே கேடச்சம்
சாபம்போல் சாருஞ் சலித்து. 60

ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால்
ஒர்வமே செய்யும் உலோபமே - சீர்சாலா
மானமே மேய உயிர்க்(கு)ஊனம் என்னுமே
ஊனமே தீர்ந்தவர் ஒத்து. 61

கூத்தும் விழவும் மணமும் கொலைக்களமும்
ஆர்த்த முனையுள்ளம் வேறிடத்தும் - ஒத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின்
இழுக்கம் இழவும் தரும். 62

ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திலை மாணொடு
கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்(கு)ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து. 63

உயர்ந்தான் தலைவனென்(று) ஒப்புடைத்தான் நோக்கி
உயர்ந்தான்நூல் ஓதி ஒடுங்கி - உயர்ந்தான்
அருந்தவம் ஆற்றச் செயின்வீடாம் என்றார்
பெருந்தவம் செய்தார் பெரிது. 64

காலனார் ஈடறுத்தால் காண்குறின் முற்றுணர்ந்த
பாலனார் நூலமர்ந்து பாராது - வாலிதா
ஊறுபா(டு) இல்லா உயர்தவம் தான்புரியின்
ஏறுமோ மேலுலகம் ஓர்ந்து. 65

பொய்தீர் புலவர் பொருள்புரிந்து ஆராய்ந்த
மைதீர் உயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர்
சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்(று)
இடரின்(று) இனிதுயிலும் இன்று. 66

கூரம்பு வெம்மணல் ஈர்மணி தூங்கலும்
ஈரும் புகையிரு ளோ(டு)இருள்நூல் - ஆராய்ந்(து)
அழிகதி இம்முறையான் ஆன்றார் அறைந்தார்
இழிகதி இம்முறையான் ஏழு. 67

சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல் புணர்வுலத்தல்
நோதல் பிரிவில் கவறலே - ஓதலின்
அன்புடையார்க்(கு) உள்ளன ஆறு குணமாக
மென்புடையார் வைத்தார் விரித்து. 68

எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே
படுத்தலோ(டு) ஆடல் பகரின் - அடுத்துயிர்
ஆறு தொழிலென்(று) அறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து. 69

ஐயமே பிச்சை அருந்தவர்க்(கு) ஊண்ஆடை
ஐயமே இன்றி அறிந்(து) ஈந்தான் - வையமும்
வானும் வரிசையால் தானாளும் நாளுமே
ஈனமே இன்றி இனிது. 70

நடப்பார்க்(கு) ஊண் நல்ல பொறைதாங்கி னார்க்(கு)ஊண்
கிடப்பார்க்(கு)ஊண் கேளிர்க்(கு)ஊண் கேடின்று உடல்சார்ந்த
வானகத்தார்க்(கு) ஊணே மறுதலையார்க்கு ஊண்அமைத்தான்
தானகத்தே வாழ்வான் தக. 71

உணராமை யால்குற்றம் ஒத்தான் வினையாம்
உணரான் வினைப்பிறப்புச் செய்யும் - உணராத
தொண்டுஇருந் துன்பம் தொடரும் பிறப்பினால்
மண்டிலமும் ஆகும் மதி. 72

மனைவாழ்க்கை மாதவம் என்றிரண்டும் மாண்ட
வினைவாழ்க்கை யாக விழைப - மனைவாழ்க்கை
பற்றுதல் இன்றி விடுதல்முன் சொல்லுமேல்
பற்றுதல் பாத்தில் தவம். 73

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு. 74

அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறான நீக்கி - மறுவரவின்
மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியன(து) அமைவு. 75

ஒல்லுவ நல்ல உருவவேற் கண்ணினாய்
வல்லுவ நாடி வகையினால் - சொல்லின்
கொடையினார் போகம் சுவர்க்கம் தவத்தால்
அடையாத் தவத்தினால் வீடு. 76

நாற்கதியும் துன்ப நவைதீர்த்தல் வேண்டுவான்
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூற்கதியின்
எல்லை உயர்த்தார் தவமுயலின் மூன்(று) ஐந்(து) ஏழ்
வல்லைளீ(டு) ஆகும் வகு. 77

தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி
வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார்
கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க்(கு) ஈந்தார்
வைத்து வழங்கிவாழ் வார். 78

சாக்காடு கேடு பகைதுன்பம் இன்பமே
நாக்காடு நாட்டறை போக்குமென - நாக்காட்ட
நட்டார்க்(கு) இயையின் தமக்கியைந்த கூ(று) உடம்
பட்டார்வாய்ப் பட்டது பண்பு. 79

புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார் போக்கில்
நிலையாளர் நீர்மை இழந்தார் - தலையாளர்க்கு
ஊண்கொடுத்(து) ஊற்றாய் உதவினார் மன்னராய்க்
காண்கொடுத்து வாழ்வார் கலந்து. 80

ஏலாதி முற்றிற்று

சிறு பஞ்ச மூலம்
ஆசிரியர் காரியாசான்

கடவுள் வாழ்த்து

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து - முழுதேத்தி
நண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா
வெண்பா உரைப்பன் சில. 1

நூல்
ஒத்த ஒழுக்கம் கொலைபோய் புலால்களவோ(டு)
ஒத்த இவையல வோர்நாலிட்(டு) - ஒத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்
சிறுபஞ்ச மூலஞ் சிறந்து. 2

பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான் கண்ணதே ஆகும் - அருளுடையான்
செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து. 3

கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னான்அமிர்து
நற்புடைய நாடமிர்து நாட்டுக்கு - நற்புடைய
மேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து. 4

கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும் - இல்லாதான்
ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈந்தளியான் என்றலும்
நல்லவர்கள் கேட்பின் நகை. 5

உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றீண்டு
இடம்பொழிய வேண்டுமேல் ஈகை - மடம்பொழிய
வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனை
யீண்டின் இயையும் திரு. 6

படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாம் - நடைதனக்குக்
கோடா மொழிவனப்புக் கோற்(கு)அதுவே சேவகர்க்கு
வாடாதா வன்கண் வனப்பு. 7

பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்
முற்றினான் ஆகும் முதல்வன்நூல் - பற்றினால்
பாத்துண்பான் பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன்
காத்துண்பான் காணான் பிணி. 8

கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன்(று) என்றல் கிளர்வேந்தன் தன்நாடு
வாட்டான் நஞ்றென்றல் வனப்பு. 9

கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரிபோ வான்நாச்சாம்
நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம் - ஒன்றானும்
கண்டுழி நாச்சாம் கடவான் குடிப்பிறந்தான்
உண்டுழி நாச்சாம் உணர்ந்து. 10

சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை. 11

நாணிலான் சால்பும் நடையிலான் நன்னோன்பும்
ஊணிலான் செய்யும் உதாரதையும் - ஏணிலான்
சேவகமும் செந்தமிழ் தேற்றான் சுவிச்செயலும்
நாவகமே நாடின் நகை. 12

கோறலும் நஞ்சூனைத் துய்த்தல் கொடுநஞ்சு
வேறலும் நஞ்சுமா(று) அல்லானைத் - தேறினான்
நீடாங்கு செய்தலும் நஞ்சாம் இளங்கிளியை
நாடாதே தீதுரையும் நஞ்சு. 13

இடரின்னா நட்டார்கண் ஈயாமை இன்னா
தொடர்பின்னா நள்ளார்கண் தூயார்ப் - படர்பின்னா
கண்டல் அவர்பூங் கதுப்பினாய் இன்னாதே
கொண்ட விரதம் குறைவு. 14

கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்
தண்டான் வழியொழுகல் தன்கிளையஃது - அண்டாதே
வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
கோல்வழி வாழ்தல் குணம். 15

பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்ததீங்(கு) எண்ணி யிருத்தல் - இழைத்த
பகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று. 16

கதநன்று சான்றாண்மை தீது கழிய
மதநன்று மாண்பில்லார் முன்னர் - விதநன்றால்
கோய்வாயிற் கீழுயிர்க்(கு)ஈ துற்றுக் குரைத்தெழுந்த
நாய்வாயுள் நல்ல தசை. 17

நட்டாரை யாக்கிப் பகைபணித்து வைஎயிற்றுப்
பட்டார் அகல்அல்கு லார்படிந்து - ஓட்டித்
தொடங்கினார் இல்லகத்து அன்பில் துறவா
உடம்பினான் ஆய பயன். 18

பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார்
வையாமை வார்குழலார் நச்சினும் - நையாமை
ஓர்த்துடம்பு பேருமென்று ஊனவாய் உண்ணானேல்
பேர்த்துடம்பு கோடல் அரிது. 19

தேவறே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
பூதரே முன்பொருள் செய்யாதார் - ஆதரே
துன்பம் இலேம்பண்டு யாமே வனப்புடையேம்
என்பார் இருகால் எருது. 20

கள்ளான்கு தென்றும் கழுமான் கரியாரை
நள்ளான் உயிரிங்க நாவாடான் - நள்ளானாய்
ஊன்மறுத்துக் கொள்ளானேல் ஊனுடம்(பு) எஞ்ஞான்றும்
தான்மறுத்துக் கொள்ளான் தளர்ந்து. 21

பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா
விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. 22

பூத்தாலும் காயா மரமுள நன்றறிவார்
மூவாது மூவர்நூல் தேற்றதார் - பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
உரைத்தாலும் செல்லா(து) உணர்வு. 23

வடி(வு)இளமை வாய்த்த வனப்பு வணங்காக்
குடிகுலமென்(று) ஐந்தும் குறித்து - முடியாத்
துளங்கா நிலைகாணார் தொக்(கு)ஈர் பசுவால்
இளங்கால் துறவா தவர். 24

கள்ளுண்டல் காணில் கணவன் பிரிந்துறைதல்
வெள்(கு)இல ளாய்ப்பிறர் இல்சேறல் - உள்ளிப்
பிறர்கருமம் ஆராய்தல் தீப்பெண் கிளைமைத்
துறமதுதீப் பெண்ணின் தொழில். 25

பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள்வெள வன்மின்
கருங்குணத்தார் கேண்மை கழிமின் - ஒருங்குணர்ந்து
தீச்சொல்லே காமின் வருங்காலன் திண்ணிதே
வாய்ச்சொல்லே யன்று வழக்கு. 26

வான்குருவிக் கூ(டு)அரக்கு வால்உலண்டு கோல்தகுதல்
தேன்புரிந்து யார்க்கும் செயலாகா - தாம்புரீஇ
வல்லவர் வாய்ப்பன என்னார் ஒரோஒருவர்க்(கு)
ஒல்காதோர் ஒன்று படும். 27

அறன்நாட்டான் நன்னெறிக்கண் நிற்க அடங்காப்
புறன்நாட்டான் புன்னெறிப் போகாது - புறன்நட்டான்
கண்டெடுத்துக் கள்களவு சூது கருத்தினால்
பண்டெடுத்துக் காட்டும் பயின்று. 28

ஆண்ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்(கு)இயைந்த
மாணாக்கன் அன்பான் வழிபடுவான் - மாணாக்கன்
கற்பனைத்தும் மூன்றுங் கடிந்தான் கடியாதான்
நிற்பனைத்தும் நெஞ்சிற்கோர் நோய். 29

நெய்தல் முகிழ்த்துணை யாம்குடுமி நேர்மயிரும்
உய்தல் ஒருதிங்கள் நாளாகும் - செய்தல்
துணங்குநூல் ஓதுதல் கேட்டல்மா ணாக்கர்
வணங்கி வலங்கொண்டு வந்து. 30

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் ஒருவன்
குணன்அடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்
கணன்அடங்கக் கற்றானும் இல். 31

உயிர்நோய்செய் யாமை உறுநோய் மறத்தல்
செயீர்நோய் பிறன்கண்செய் யாமை - செயிர்நோய்
விழைவு வெகுளி இவைவிடுவா னாயின்
இழிவன்(று) இனிது தவம். 32

வேட்பவன் பார்ப்பான் விளங்கிழைக்குக் கற்புடைமை
கேட்பவன் கேடில் பெரும்புலவன் - பாட்டவன்
சிந்தையான் ஆகும் சிறந்தது உலகினுள்
தந்தையான் ஆகும் நலம். 33

வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்
உய்ப்பானே ஆசான் உயர்கதிக்கு - உய்ப்பான்
உடம்பினார் வேலி ஒருப்படுத்(து)ஊன் ஆரத்
தொடங்கானேல் சேறல் துணிவு. 34

வைததனால் ஆகும் வசைவணக்கம் நன்றாகச்
செய்ததனால் ஆகும் செழுங்குலமுன் - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம். 35

இல்இயலார் நல்லறமும் எனைத் துறவறமும்
நல்லியலின் நாடி உரைக்குங்கால் - நல்லியல்
தானத்தால் போதும் தவத்தால் சுவர்க்கமாம்
ஞானத்தால் வீடாக நாட்டு. 36

மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு. 37

தொழீஇ அடஉண்ணார் தோழரில் துஞ்சார்
வழீஇய பிறர்பொருளை வெளவார் - கெழீஇக்
கலந்தபின் கீழ்காணார் காணாய் மடவாய்
புலந்தபின் போற்றார் புலை. 38

பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்குங்கால் - பல்லார்முன்
பேணாமை பேணும் தகைய சிறிதெனினும்
மாணாமை மாண்டார் மனம். 39

பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார்
உண்டார் அடிசிலே தோழரில் - கொண்டாரா
யாக்கைக்குத் தக்க அறிவில்லார்க் காப்படுப்பின்
காக்கைக்குக் காப்படுத்த சோறு. 40

உடையிட்டார் புல்மேய்வார் ஓடுநீர் புக்கார்
படையிட்டார் பற்றேதும் இன்றி - நடையிட்டார்
இவ்வகை ஐவரையும் என்றும் அணுகாரே
செவ்வகைச் சேவகர் சென்று. 41

பூவாதான் பூப்புப் புறங்கொடுத் தாள்இலிங்கி
ஓவாதான் கோலம் ஒருபொழுதும் - காவாதாள்
யார்யார் பிறர்மனையாள் உள்ளிட்டில் ஐவரையும்
சாரார் பகைபோல் சலித்து. 42

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெகுவாமை வீழ்ந்துவிருந் தோம்பித் - திருவாக்கும்
தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு. 43

நாள்கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றாம்அக்
கோள்கூட்டம் யோகம் குணன்உணர்ந்து - தோள்கூட்டல்
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வானால்
பெற்றால்நாள் கொள்க பெரிது. 44

பேண்அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை
நாண்ஒடுக்கம் என்றைந்தும் நண்ணின்றாப் - பூண்ஒடுக்கம்
பொன்வரைக்கோங் கேர்முலைப் பூந்திருவே யாயினும்
தன்வரைத் தாழ்த்தல் அரிது. 45

வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்
நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்ற
தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும்
ஓவா(து) உரைக்கும் உலகு. 46

அழியாமை எத்துவமும் சார்ந்தாரை ஆக்கல்
பழியாமை பாத்தல்யார் மாட்டும் - ஒளியாமை
கன்றுசா வப்பால் கறவாமை செய்யாமை
மன்றுசார் வாசு மனை. 47

நசைகொல்லார் நச்சியார்க்(கு) என்றும் கிளைஞர்
மிசைகொல்லார் வேளாண்மை கொல்லார் - இசைகொல்லார்
பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார்
என்பெறினும் கொல்லார் இயைந்து. 48

நீண்டநீர் காடு களர்நிவந்து விண்தோயும்
மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு - மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி. 49

பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு
முற்றாமை கேடு முரண்கேடு - தெற்றத்
தொழில்மகன் தன்னோடு மாறாயின் என்றும்
உழுமகற்குக் கேடென்(று) உரை. 50

கொல்லாமை நன்று கொலைதீ(து) எழுத்தினைக்
கல்லாமை தீது கதந்தீது - நல்லார்
மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி. 51

உண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா(று)
எண்ணாமை நன்றிகழல் தீதெளியார் - எண்ணின்
அரியரா வார்பிறரிற் செல்லாரே உண்ணார்
பெரியரா வார்பிறர் கைத்து. 52

மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை
ஒக்க உடனுறைதல் ஊண்அமைவு - தொக்க
அலவலை அல்லாமை பெண்மகளிர்க்(கு) ஐந்து
தலைமகனைத் தாழ்க்கு மருந்து. 53

கொண்டான் கொழுநன் உடன்பிறந்தான் தன்மாமன்
வண்டார்பூந் தொங்கல் மகன்தந்தை - வண்தாராய் !
யாப்பார்பூங் கோதை அணிஇழையை நன்கியையக்
காப்பார் கருது மிடத்து. 54

ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவம் என்றைந்தும்
தாம்பல்வா யோடி நிறைகாத்தல் - ஓம்பார்
நெடுங்கழைநீண் மூங்கில் எனஇகழ்ந்தார் ஆட்டும்
கொடுங்குழை போலக் கொளின். 55

பொன்பெறுங் கற்றான் பொருள்பெறும் நற்கவி
என்பெறும் வாதி இசைபெறும் - முன்பெறக்
கல்லார்கற் றாரினத்தார் அல்லார் பெறுபவே
நல்லார் இனத்து நகை. 56

நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்து
ஒல்லை உயிர்க்(கு)ஊற்றம் கோலாகி - ஒல்லுமெனின்
மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தான்
ஆயின் அழிதல் அறிவு. 57

தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்
இல்நிலையும் ஈடில் இயல்நிலையும் - துன்னி
அளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்
பிளந்தறியும் பேராற்ற லான். 58

பொருள்போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போந்த
அருள்போகா ஆரறம்என்(று) ஐந்தும் - இருள்தீரக்
கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்
தேறப் படுங்குணத்தி னான். 59

நன்புலத்து வையடக்கி நாளும்மா டோ போற்றிப்
புன்கலத்தைச் செய்(து) எருப் போற்றியபின் - இன்புலத்தின்
பண்கலப்பை என்றிலை பாற்படுப் பான்உழவோன்
நுண்கலப்பை நூலோது வார். 60

ஏலாமை நன்றீதல் தீதுபண்(பு) இல்லார்க்குச்
சாலாமை நன்றுநூல் சாயினும் - சாலாமை
நன்று தவநனி செய்தல்தீ(து) என்பாரை
இன்றுகா(று) யாம்கண் டிலம். 61

அரம்போல் கிளையடங்காய் பெண்வியக்கத் தொண்டு
மரம்போல் மகன்மாறாய் நின்று - கரம்போலக்
கள்ளநோய் காணும் அயல்ஐந்தும் ஆகுமேல்
உள்ளநோய் வேண்டா உயிர்க்கு. 62

நீர்அறம் நன்று நிழல்நன்று தன்இல்லுள்
பார்அறம் நன்றுபாத்(து) உண்பானேல் - பேரறம்
நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சால வுடன். 63

பிடிப்பிச்சை பின்னிறை ஐயங்கூழ் கூற்றோ(டு)
எடுத்திரந்த உப்(பு)இத் துணையோ(டு) - அடுத்துச்
சிறுபயம் என்னார் சிதவலிப்(பு) ஈவார்
பெறுபயன்பின் சாலப் பெரிது. 64

வெந்தீங்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்உப்(பு)
அந்த மகன்சார்ந்த தந்தையென்(று) - ஐந்தினுள்
ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிதெனினும்
குன்றுபோற் கூடும் பயன். 65

குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) இனிது. 66

போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்
ஓர்த்(து) பால்மறைத்(து) உண்பான்மேய் - ஓர்த்த
அறமாம்மேல் சொல்பொறுக்க அன்றேல் கலிக்கண்
துறவறம்பொய் இல்லறமே வாய். 67

தான்பிறந்த இல்நினைந்து தன்னைக் கடைப்பிடித்துத்
தான்பிற ரால்கருதற் பாடுணர்ந்து - தான்பிறரால்
சாவ எனவாழான் சான்றேரால் பல்யாண்டும்
வாழ்க எனவாழ்தல் நன்று. 68

நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல்
வடுத்தீர் பகல்வாய் உறையே - வடுத்தீரா
ஆகும்அந் நான்கொழிந்(து) ஐந்தடக்கு வானாநின்
வேகும்பம் வேண்டான் விடும். 69

கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது
கொன்றதனைக் கொண்டான் கொழுக்குங்கால் - கொன்றதனை
அட்டான் இடவுண்டான் ஐவரினும் ஆகுமெனக்
கட்டெறிந்த பாவம் கருது. 70

சிறைக்கிடந்தார் செந்தார்க்கு நோற்பார் பலநாள்
உறைக்கிடந்தார் ஒன்றிடையிட்(டு) உண்பார் - பிறைக்கிடந்து
முற்றனைத்தும் உண்ணா தவர்க்கீந்தார் மன்னவராய்க்
கற்றனைத்தும் வாழ்வார் கலந்து. 71

ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை
ஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை - ஆன்ற
அழிந்தானை இல்வைத்தல் பேரறமா ஆற்ற
மொழிந்தார் முதுநூலார் முன்பு. 72

வலியிழந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்
நலி(பு)அழிந்தார் நாட்(டு)அறைபோய் நைந்தார் - மெலிவொழிய
இன்னவராம் என்னாராய் ஈந்த ஒருதுற்று
மன்னவராய்ச் செய்யும் மதித்து. 73

கலங்காமைக் காத்தல் கருப்பஞ் சிதைந்தால்
இலங்காமை பேரறத்தால் ஈற்றம் - விலங்காமைக்
கோடல் குழவி மருந்து வெருட்டாமை
நாடின் அறம்பெருமை நாட்டு. 74

சூலாமை சூலிற் படுந்துன்பம் ஈன்றபின்
ஏலாமை ஏற்றால் வளர்ப்பருமை - சால்பவை
வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை
கொல்லாமை நன்றால் கொழித்து. 75

சிக்கர் சிதடர் சிதலைபோல் வாயுடையார்
துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க
வருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்
ஒருநோயும் இன்றிவாழ் வார். 76

பக்கம் படாமை ஒருவர்க்குப் பாடேற்றல்
தக்கம் படாமை தவமல்லாத் - தக்கார்
இழியினர்க்கே யானும் பசித்தார்க்(கு)ஊண் ஈதல்
கழிசினங் காத்தல் கடன். 77

புண்பட்டார் போற்றுவார் இல்லாதவர் போகுயிரார்
கண்கெட்டார் காலிரண்டும் இல்லாதார் -கண்கண்பட்(டு)
ஆழ்ந்து நெகிழ்ந்தவர்க்கு ஈந்தார் கடைபோக
வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து. 78

பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்
அஞ்சா(து) உடைபடையுள் போந்தெறிவான் - எஞ்சாதே
உண்பதுமுன் ஈவான் குழவி பலிகொடுப்பான்
எண்பதின் மேலும்வாழ் வாண். 79

வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற்(று) ஏறார்
புரையில்லார் நள்ளார்போர் வேந்தன் - வரைபோல்
கடுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்
கொடும்புலி கொட்கும் வழி. 80

தக்கார் வழிகெடாது ஆகுந் தகாதவர்
உக்க வழியராய் ஒல்குவர் - தக்க
இனத்தினான் ஆகும் பழியும் புகழும்
மனத்தினான் ஆகும் மதி. 81

கழிந்தவை தானிரங்கான் கைலாரா நச்சான்
இழிந்தவை இன்புறான் இல்லார் - மொழிந்தவை
மென்மொழியால் உள்நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால்
இன்மொழியால் ஏத்தப் படும். 82

காடுபோல் கட்கினிய இல்லம் பிறர்பொருள்
ஓடுபோல் தாரம் பிறந்ததாய் - ஊடுபோய்க்
கோத்தின்னா சொல்லானாய்க் கொல்லானேல் பல்லவர்
ஒத்தினால் என்ன குறை. 83

தோல்கன்று காட்டிக் கறவார் கறந்தபால்
பாற்பட்டார் உண்ணார் பழிபாவம் - பாற்பட்டார்
ஏற்றவாது இன்புற்று வாழ்வன வீடழியக்
கூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து. 84

நகையொரு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொரு பாட்டுரையென்(று) ஐந்தும் - தொகையொடு
மூத்தோர் இருந்துழி வேண்டார் முதுநூலுள்
யாத்தார் அறிந்தவர் ஆய்ந்து. 85

சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே
வித்தகர் கண்டவீ(டு) உள்ளிட்டாங்(கு) - அத்தகத்து
அந்தஇவ் ஐந்தும் அறிவான் தலையாய
சிந்திப்பிற் சிட்டன் சிறந்து. 86

கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு
எண்ணுங்கால் சாந்தே இலைநறுக்கிட்(டு) - எண்ணுதல்
இட்டஇவ் ஐந்தும் அறிவான் இடையாய
சிட்டனென்(று) எண்ணப் படும். 87

நாணிலன் நாய்நன்கு நள்ளாதான் நாய்பெரியார்ப்
பேணிலன் நாய்பிறர் சேவகன்நாய் - ஏணில்
பொருந்திய பூண்முலையார் சேரிகைத்(து) இல்லான்
பருத்தி பகர்வழி நாய். 88

நாண்எளிது பெண்மை நகையெளிது நட்டானேல்
ஏண்எளிது சேவக னேல்பெரியார் - பேண்எளிது
கொம்பு மறைக்கும் இடையாய் அளியன்மீ(து)
அம்பு பறத்தல் அரிது. 89

இன்சொலான் ஆகும் கிளமை இயல்பில்லா
வன்சொல்லின் ஆகும் பகைமைமன் - மென்சொல்லின்
ஓய்வில்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்
வீவில்லா விடாய் விடும். 90

தக்க(து) இளையான் தவம்செல்வன் ஊண்மறுத்தல்
தக்கது கற்புடை யாள்வனப்புத் - தக்க(து)
தழல்தண்என் தோளான் அறிவிலன் ஆயின்
நிழற்கண் முயிறாய் விடும். 91

பொய்யால் சுவர்க்கம்வா யால்நிர யம்பொருள்
மையார் மடந்தையால் வாழ்வினிது - மெய்யென்றால்
மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய் தீதன்றால்
எத்தவ மானும் படல். 92

புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தே
நல்லறத்தா ரோடு நடக்கலாம் - நல்லறத்தார்க்(கு)
அட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே இம்மையில்
அட்டிட்டுண் டாற்றவாழ் வார். 93

ஈவது நன்றுதீ(து) ஈயாமை நல்லவர்
மேவது நன்றுமே வாதாரோ(டு) - ஓவாது
கேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே
ஓட்டுத் தவநிற்கும் ஊர்ந்து. 94

உண்இடத்தும் ஒன்னார் மெலிவிடத்தும் மந்திரங்கொண்(டு)
எண்இடத்தும் செல்லாமை தான்தலையே - எண்ணி
உரைப்பூசல் கோறல் உயர்தவமேல் கங்கைக்
கரைப்பூசை போற்றக் கடை. 95

பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசி
பொத்தில் பொருள்திறத்துச் செவ்வியான் - பொத்தின்று
வைத்தார் அதுவழக்குஞ் சான்றவர் தம்செம்மை
செத்தால் அறிக சிறந்து. 96

வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை
குறிப்படரல் தீக்சொற்க ளோடு - மொழிப்பட்ட
காய்ந்து விடுதல் களைந்(து)உயக் கற்றவர்
ஆய்ந்து விடுதல் அறம். 97

பாயிரம்
மல்லிவர் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்
பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால் - கல்லா
மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி யாசான்
சிறுபஞ்ச மூலம்செய் தான். 98

சிறுபஞ்சமூலம் முற்றிற்று
--------------------------